clone demo
Showing posts with label அங்காரபர்ணன். Show all posts
Showing posts with label அங்காரபர்ணன். Show all posts

Friday, August 09, 2013

யார் அந்த வசிஷ்டர்? - ஆதிபர்வம் பகுதி 175

Who is that Vasishta? | Adi Parva - Section 175 | Mahabharata In Tamil

(சைத்ரரத பர்வத் தொடர்ச்சி)

கந்தர்வன் தொடர்ந்தான், "இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.

அவனது அமைச்சர்களும் தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடி, கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். அந்த தனிமையான இடத்தில் வானத்திலிருந்து விழுந்த வானவில்லைப் போல கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது பிரதம மந்திரி நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனை தூக்கினார். வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், அந்த ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, அந்த மன்னனிடம் "ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!" என்று சொல்லி இனிமையாகப் பேசத் துவங்கினார். பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார். பிறகு அந்த வயது முதிர்ந்தவர், அந்த ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்து, தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார். 


மெதுவாக சுயநினைவை அடைந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, தனது அமைச்சர் ஒருவரைத் தவிர மற்ற பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான். அப்படி அந்தப் பணியாட்கள் சென்றதும். அந்த மன்னன் மலையின் மார்பில் அமர்ந்தான். தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட அம்மன்னன், மலைகளில் முதன்மையான மலையில் அமர்ந்து, தனது கரங்களைக் குவித்து, முகத்தை உயர்த்தி சூரியனை வழிபட்டான்.  எதிரிகளைத் தாக்கும் அந்த மன்னன் சம்வர்ணன், முனிவர்களில் சிறந்த தனது தலைமைப் புரோகிதர் வசிஷ்டரையும் நினைத்தான். அந்த மன்னன் இரவும் பகலுமாகத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் அங்கேயே அமர்ந்து தியானித்தான். பனிரெண்டாவது நாளில் அந்த அந்தண முனிவர் வசிஷ்டர் அங்கே வந்தார். தபதியினால் உணர்விழந்த அந்த ஏகாதிபதியின் நிலையைத் தனது ஞானப்பார்வையால் உணர்ந்தார் அந்தப் பெரும் முனிவர். எப்போதும் நோன்பு நோற்கும் அந்த ஏகாதிபதிக்கு நன்மை செய்ய விரும்பிய முனிவர்களில் சிறந்த அந்த அறம்சார்ந்தவர் அவனிடம் அனைத்து உறுதிகளையும் அளித்துப் பேசினார்.

அச்சிறப்புமிகுந்த முனிவர், அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேலே எழும்பி வானத்தில் பிரகாசத்துடன் இருந்த சூரியனிடம் பேசினார்.  
ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனை, அந்த அந்தணர் அணுகி, மகிழ்ச்சிகரமாக, "நான் தான் வசிஷ்டன்." என்றார்.

பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த விவஸ்வத் {சூரியன்} அந்த முனிவர்களில் சிறந்தவரிடம், "ஓ பெரு முனியே, நீர் வரவேற்கப்படுகிறீர் {உமது வரவு நல்வரவாகட்டும்}, உமது மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குச் சொல்லும். ஓ பெரும் நற்பேறுபெற்றவரே, நீர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர், நாநலமிக்கவர்களில் முதன்மையானவரே, நீர் எவ்வளவு கடுமையான ஒன்றைக் கேட்டாலும் நான் அதை உமக்கு அளிக்கிறேன்!" என்றான். இப்படி சூரியனால் சொல்லப்பட்ட அந்த பெரும் ஆன்மத்தகுதி கொண்ட அந்தப் பெரும் முனிவர், அந்த ஒளிக்கடவுளை வணங்கி, "ஓ விபாவசு, இது உனது மகளான தபதி, இவள் சாவித்ரியின் இளைய சகோதரி, நான் இவளை சம்வர்ணனுக்காக உன்னிடம் கேட்கிறேன்! அந்த ஏகாதிபதி பெரும் சாதனைகள் செய்தவன், அறம் தவறாத உயர்ந்த ஆன்மா கொண்டவன். ஓ விண்ணதிகாரியே, சம்வர்ணன் உனது மகளுக்குத் தகுதியுடைய கணவனாக இருப்பான்." என்றார்.

அந்த முனிவரால் இப்படிச் சொல்லப்பட்ட விபாகரன் {சூரியன்}, தனது மகளைச் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்து, அந்த முனிவரை வணங்கி, "சம்வர்ணன் ஏகாதிபதிகளில் சிறந்தவனாவான், நீர் முனிவர்களில் சிறந்தவராவீர், தபதி பெண்களில் சிறந்தவளாவாள். சம்வர்ணனுக்கு அவளை அளிப்பதைத் தவிர, இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?" என்று சொன்ன தேவன் தபனன் {சூரியன்}, களங்கமற்ற தனது மகள் தபதியை சம்வர்ணனுக்கு அளிப்பதற்காக, சிறப்புமிகுந்த வசிஷ்டரிடம் கொடுத்தான். அந்தப் பெரும் முனிவர், அந்த மங்கை தபதியை ஏற்றுக் கொண்டு, சூரியனிடம் விடைபெற்றுக் கொண்டு, குருகுலத்தின் காளை {சம்வர்ணன்} அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார். காதலால் கட்டுண்டு, தபதியிடம் இதயத்தை நிலைக்கச் செய்து இருந்த அம்மன்னன் சம்வர்ணன், வசிஷ்டருடன் வந்து கொண்டிருந்த அந்த தேவமங்கையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான். அழகான புருவங்கள் கொண்ட அந்த தபதி மேகத்திலிருந்து மின்னல் இறங்குவது போல வானத்திலிருந்து  சொர்க்கத்தின் பத்து புள்ளிகளையும் கிறங்கடித்து இறங்கினாள். அந்த ஏகாதிபதியின் பனிரெண்டு இரவு நோன்பு முடிந்ததும், புனிதமான ஆன்மா கொண்ட அந்த சிறப்பு மிகுந்த முனிவர் வசிஷ்டர் அவனை அணுகினார். இப்படியே மன்னன் சம்வர்ணன் முழு மதியைப் போல வணங்கிய பிறகு தனது மனைவியை அடைந்தான்." என்றான் கந்தர்வன்.

குரு பரம்பரையின் முதன்மையான அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளி {அர்ஜுனன்}, கந்தர்வனிடமிருந்து வசிஷ்டரின் ஆன்ம சக்தியைக் கேட்டறிந்த பிறகு, அது குறித்து மேலும் அறிய ஆவல் கொண்டான். அந்த ஆவலால், கந்தர்வனிடம், "வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல். ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்கு புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்." என்று கேட்டான்.

அதற்கு அந்தக் கந்தர்வன், "வசிஷ்டர் பிரம்மனின் ஆன்ம மகனும் (மனதால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றி கொண்டு, அவை {ஆசையும் கோபமும்} அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர். விசுவாமித்ரர் செய்த குற்றத்தினால் அவரது கோபம் தூண்டப்பட்டாலும், அந்த உயர் ஆன்ம முனிவர் கௌசிகர்களைக்  (மன்னன் விசுவாமித்ரரின் இனக்குழுவை{குலத்தை}) கொல்லாதிருந்தார். தனது மகன்களை இழந்து துயருற்ற போதும், தன்னை சக்தியற்றவராகக் கருதிக் கொண்டு, தான் அப்படியில்லையென்றாலும், விஸ்வாமித்ரருக்கு அழிவு உண்டாகும்படி எக்காரியத்தையும் செய்யாமல், சமுத்திரம் கலங்கினாலும் கண்டங்கள் கலங்காததுபோல இருந்தார். வசிஷ்டர் தனது பிள்ளைகளை மரணதேவன் பகுதியில் இருந்து மீட்டு யமனை (யம {தர்ம} நீதியை) மீறிச் செயல்படவில்லை. தன்னையே வெற்றி கொண்ட அந்தச் சிறப்பு மிகுந்தவரை அடைந்ததால்தான், இக்ஷவாகுவாலும் மற்ற பெரும் ஏகாதிபதிகளாலும் முழு உலகத்தையும் அடைய முடிந்தது.

ஓ குருகுல இளவரசனே {அர்ஜுனா}, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரை புரோகிதராக அடைந்ததால்தான், அந்த ஏகாதிபதிகளால் பெரும் வேள்விகளைச் செய்ய முடிந்தது. ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, மறுபிறப்பாளரான அந்த முனிவர், தேவர்களுக்கு பிருஹஸ்பதி உதவுவது போல, அந்த ஏகாதிபதிகள் வேள்வி செய்யத் துணை புரிந்தார். ஆகையால், இதயத்தில் அறம் நிலைத்த, வேதமறிந்த நல்ல அந்தணனைப் புரோகிதனாக உங்களுக்கு நியமித்துக் கொள். ஓ பார்த்தா {அர்ஜுனா}, பூமியை வெற்றி கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் நல்ல குலத்தில் பிறந்த க்ஷத்திரியன், முதலில் நல்ல புரோகிதரை நியமித்துக் கொள்ள வேண்டும். உலகத்தை வெற்றிகொள்ள நினைப்பவன் எவனோ, அவன் ஒரு பிராமணனைத் தன் முன் கொண்டிருக்க வேண்டும். ஆகையால், ஓ அர்ஜுனா, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்து, புலன்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு தகுதிவாய்ந்த கற்ற பிராமணரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்." என்று சொன்னான்.

Monday, August 05, 2013

அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172

Angaraparna and Arjuna | Adi Parva - Section 172 | Mahabharata In Tamil

அங்காரபர்ணனை {சித்ரரதனை}
 வீழ்த்திய அர்ஜுனன்
(சைத்ரரத / சித்ரரத பர்வத் தொடர்ச்சி (Chaitraratha Parva continued))

வைசம்பாயனர் சொன்னார், "வியாசர் சென்ற பிறகு, அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், அந்த அந்தணரை {வியாசரை} வழியனுப்பிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்கள் தாயை {குந்தியை} தங்கள் முன்பு விட்டு (பாஞ்சாலம் நோக்கி) முன்னேறினர். அந்த எதிரிகளை அழிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய வடக்கு நோக்கி இரவும் பகலுமாகப் பயணித்தனர். புருவத்தில் பிறை குறி தாங்கியிருக்கும் சிவனின் புனிதமான நகரத்தை அடையும்வரை பயணித்தனர். அந்த மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மைந்தர்கள், கங்கையின் கரையை வந்தடைந்தனர். அந்தப் பெரும் ரத வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கையில் விளக்குடன் {எரிகொள்ளி} முன் நடந்து அவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களைப் (காட்டு விலங்குகளிடம் இருந்து) பாதுகாத்து வந்தான். அப்போது, அந்த கங்கையின் நீரில் தனிமையான அந்த சூழ்நிலையில், தனது மனைவியருடன் ஒரு கந்தர்வன் கர்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்த நதியை அணுகும் பாண்டவர்களின் பாத அடியோசைகள் அந்தக் கந்தர்வ மன்னனுக்குக் கேட்டது. பாத அடியோசையைக் கேட்ட அந்த பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன் மிகுந்த சினம் கொண்டு, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களைக் கண்டான். அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் தாயாருடன் {குந்தியுடன்} வருவதைக் கண்டு அவர்களை {பாண்டவர்களை} அணுகி, தனது பயங்கரமான வில்லை வட்டமாக வளைத்து, "முதல் நாற்பது வினாடிகளைத் தவிர்த்து மாலையும் இரவும் சந்திக்கும் சந்திப்பொழுது முழுவதும், தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் எங்கும் செல்லக்கூடிய யக்ஷர்களும், கந்தர்வர்களும் மற்றும் ராட்சசர்களும் உலாவுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. மீத நேரமனைத்தும் மனிதன் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால், அந்த நேரத்தில் லாபத்தின் மீதிருக்கும் பேராசையின் காரணமாக மனிதர்கள் எங்கள் அருகில் வந்தால், நாங்கள் இருவரும் (யக்ஷ, கந்தர்வர்கள்) ராட்சசர்களும் அந்த முட்டாள்களை {மனிதர்களைக்} கொன்றுவிடுவோம். ஆகையால், மன்னர்களைத் தலைமையாகக் கொண்டு இந்த நேரத்தில் குளங்களை அணுகினாலும் வேதங்களை அறிந்த மனிதர்கள் அவர்களை மெச்சுவதில்லை. தூரத்தில் நில், என்னை அணுகாதே. நாங்கள் பகீரதியின் நீரில் {கங்கையின்} குளித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா? சுயபலத்தில் நம்பிக்கையுள்ள கந்தர்வன் அங்காரபர்ணன் {Angaraparna} நான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் பெருமையும், கர்வமும் கொண்டவனும் குபேரனின் {Kuvera} நண்பனும் ஆவேன். இது எனது புலனுணர்வுகளைத் தணித்துக் கொள்ள நான் விளையாடும் எனது கானகமாகும். கங்கைக்கரையிலுள்ள இக்கானகம் அங்காரபர்ணம் என்ற எனது பெயர் கொண்டதாகும். இங்கே தேவர்களோ, கபாலிகர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ கூட வர முடியாது. குபேரனின் கிரீடத்தில் உள்ள பிரகாசமான அணிகலனான என்னை அணுகுவதற்கு எப்படி நீங்கள் துணிந்தீர்கள்?" என்று கேட்டான் {அங்காரபர்ணன்}.

கந்தர்வனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "மரமண்டையே {மடையனே} பகலாகட்டும், இரவாகட்டும், சந்திப் பொழுதாகட்டும், சமுத்திரத்திலிருந்தும், இமயத்தின் பகுதிகளிலிருந்தும், இந்த நதியிலிருந்தும் மற்றவர்களைத் தடுக்க யாரால் முடியும்? ஓ விண்ணதிகாரியே, வயிறு காலியாக இருந்தாலும், நிறைந்திருந்தாலும், அது இரவானாலும் பகலானாலும், நதிகளில் முதன்மையான கங்கைக்கு வருவதற்கென்று குறிப்பிட்ட நேரமெல்லாம் கிடையாது. அதன் காரணமாக, பலம் வாய்ந்த நாங்கள், உன்னைத் தொந்தரவு செய்வதை மதிக்க மாட்டோம். தீயவனே, போரில் பலவீனமானவர்களே உன்னை வழிபடுவார்கள்.

இமயத்தின் பொன் முகடுகளிலிருந்து வெளிவரும் இந்த கங்கை, ஏழு நீரோடைகளாகப் பிரிந்து சமுத்திரத்தின் நீரில் கலக்கிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, விதஷ்தா, சரயு, கோமதி மற்றும் கண்டகி ஆகிய இந்த ஏழு நீரோடைகளில் {ஆறுகளில்} நீரெடுத்து குடிப்பவர்கள், தங்களது அனைத்துப் பாவங்களையும் துடைத்தெறிகிறார்கள்.

ஓ கந்தர்வா, இந்தப் புனிதமான கங்கை, அளகநந்தை என்ற தேவலோகப் பகுதியிலிருந்து பாய்கிறது. அது பித்ருகளின் உலகத்தில், பாவிகளால் கடக்க முடியாத வைதரணீ ஆகிறது என்று கிருஷ்ண துவைபாயனரே {வியாசரே} சொல்லியிருக்கிறார். இந்த அதிர்ஷ்டமான தேவலோக நதி {கங்கை}, ஒருவனை அனைத்து ஆபத்துகளிலிருந்து காத்து அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது. அப்படியிருக்கும் போது எங்களைத் தடுக்க நீ ஏன் விரும்புகிறாய்? உனது இந்த செயல் நித்திய அறச்செயலுக்கு இசைவாயில்லை. அனைத்து ஆபத்துகளிலிருந்தும் விடுதலை அடைய வந்திருக்கும் எங்களை யாரும் தடுக்க முடியாது. உனது வார்த்தைகளைப் புறக்கணித்து, பகீரதியின் இந்தப் புனிதமான நீரைத் தொடாமல் இருப்போமா?." என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அங்காரபர்ணன் பெருஞ்சினம் கொண்டு, தனது வில்லை வட்டமாக வளைத்து, கொடும்பாம்புகளைப் போன்ற அவனது அம்புகளை பாண்டவர்கள் மீது அடிக்க ஆரம்பித்தான். பிறகு பாண்டுவின் மைந்தனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு கையில் {தோல்} கவசத்துடனும், ஒரு கையில் விளக்கு பந்தத்துடனும் அந்த அம்புகள் அனைத்தையும் விலக்கி அந்த கந்தர்வனிடம், "ஓ கந்தர்வா, ஆயுதங்களின் நிபணத்துவம் வாய்ந்தவர்களை பயமுறுத்த எண்ணாதே, அப்படி நீ வீசும் ஆயுதங்கள் நீர்க்குமிழி போல மறைந்து போகும். ஓ கந்தர்வா, நீ மனிதர்களை விட {வீரத்தில்} உயர்ந்தவன் என்று நான் கருதுகிறேன். ஆகையால் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு நான் போரிடுவேன். கபடப் போர் செய்ய மாட்டேன். (நான் உன் மீது இப்போது வீசப்போகும்) இந்த நெருப்பாலான ஆயுதத்தை, இந்திரனின் மரியாதைக்குரிய குருவான பிருஹஸ்பதி பரத்வாஜருக்குக் கொடுத்தார், அவரிடம் {பரத்வாஜரிடம்} இருந்து அதை அக்னிவேஸ்யர் {Agnivesya} அடைந்தார். அக்னிவேஸ்யரிடமிருந்தும், அந்தணர்களில் முதன்மையான எனது குரு துரோணர் அடைந்தார். அவர் {துரோணர்} அதை {நெருப்பாலான ஆயுதத்தை} எனக்குக் கொடுத்தார்."

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்}, தனது நெருப்பாலான ஆயுதத்தை அந்த கந்தர்வன் மீது ஏவினான். அவ்வாயுதம் அந்த கந்தர்வனின் ரதத்தை ஒரு நொடிப்பொழுதில் எரித்தது. அந்த ஆயுதத்தின் வல்லமையால் உணர்விழந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன், அந்த ரதத்திலிருந்து தலைகீழாக விழுந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்} மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது தலைமுடியைப் பற்றி, உணர்விழந்து கிடந்த அந்த கந்தர்வனைத் தனது சகோதரர்களிடம் இழுத்துச் சென்றான். இதைக்கண்ட கந்தர்வனின் மனைவியான கும்பீனசி, தனது கணவனை {அங்காரபர்ணனைக்} காக்க விரும்பி, யுதிஷ்டிரனிடம் ஓடி, அவனின் {அங்காரபர்ணனின்} பாதுகாப்பை வேண்டினாள். அந்த கந்தர்வி, "ஓ மேன்மைமிக்கவரே, உமது பாதுகாப்பை எனக்கு அருளும்! எனது கணவரை விடுவியும்! ஓ தலைவா, எனது பெயர் கும்பீனசி {Kumbhinasi}, இக்கந்தர்வரின் மனைவி, நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன்!" என்று கேட்டாள். (இப்படித் துயருற்ற) அவளை {கும்பீனசியை} கண்ட யுதிஷ்டிரன் அர்ஜுனனிடம், "ஓ எதிரிகளை அழிப்பவனே, ஓ குழந்தாய், வீரமற்று, பெண்ணின் பாதுகாப்பை அடைந்து, புகழை இழந்து,  போரில் தோற்றவனை யார்தான் கொல்வார்கள்?" என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், "ஓ கந்தர்வா, உனது உயிரைப் பெற்றுக்கொண்டு செல். வருத்தப்படாதே. குருக்களின் மன்னர் யுதிஷ்டிரன் உனக்கு கருணை காட்டச் சொல்லி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார்.." என்றான்.

அதற்கு அந்த கந்தர்வன் {அங்காரபர்ணன்}, "நான் உன்னால் தோற்கடிக்கப்பட்டேன். ஆகையால், நான் எனது அங்காரபர்ணன் (ஒளிரும் வாகனம் என்ற பொருள் கொண்ட) என்ற எனது பெயரைக் கைவிடுகிறேன். ஓ நண்பா, எனது பலம் ஒடுக்கப்பட்ட பிறகு, கர்வங்கொண்ட பெயரை வைத்திருக்கக்கூடாது. தெய்வீக ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் ஓ அர்ஜுனா, உன்னை அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கந்தர்வர்கள் மட்டுமே அறிந்த மாய சக்திகளை (மாயத்தை உற்பத்தி செய்யும் நுணுக்கம்) நான் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். தோற்றத்தில் வித்தியாசமான அற்புதமான எனது ரதம் உனது நெருப்பாயுதத்தால் எரிக்கப்பட்டது. இதற்கு முன்பு எனது அழகான தேருக்காக அந்தப் பெயரால் அழைக்கப்பட்ட நான் {சித்திர ரதன்}, இப்போது எரிந்த அந்த தேரின் பெயரைக் கொள்ள வேண்டும். மாயையை உற்பத்தி செய்யும் அறிவியலை முன்பு நான் எனது துறவு நோன்புகளால் அடைந்தேன். அந்த அறிவியலை நான் எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு இன்று அளிக்கிறேன். ஒருவன் தனது எதிரியை பலத்தால் வென்ற பிறகு, அந்த எதிரி கேட்கும்போது அவனது உயிரைத் திருப்பித் தருபவன், என்ன அதிர்ஷ்டத்திற்குத்தான் தகுதியில்லாதவன்? இந்த அறிவியலுக்குப் பெயர் சாக்ஷுஷி {Chakshushi} என்பதாகும். இது மனுவால் {Manu} சோமனுக்கும் {Soma}, சோமனால் விஸ்வவசுக்கும் {Viswavasu}, கடைசியில் விஸ்வவசுவால் எனக்கும் உரைக்கப்பட்டது.

ஒரு சக்தியும் இல்லாத என்னிடம், எனது குரு {விஸ்வவசு} மூலமாக வந்தடைந்த அந்த அறிவியல், என்னிடம் வந்ததால் கனியற்றிருக்கிறது. நான் அதன் தோற்றத்தையும், மாற்றங்களையும் விவரித்தேன். இப்போது அதன் சக்தியைக் கேள்! ஒருவன், (இதன் துணை கொண்டு) அவன் விரும்பியதைப் பார்க்கலாம். அதேபோல் விரும்பியவாறும் (பொதுவாகவும், குறிப்பாகவும்) பார்க்கலாம். ஒருவன் இந்த அறிவியலை, ஆறுமாதங்கள் ஒற்றைக் காலில் நின்றால் அடையலாம். இருப்பினும் நான் உனக்கு இந்த அறிவியலை எந்த கடினமான நோன்பும் நோற்காமல் கொடுக்கிறேன். ஓ மன்னா, இந்த அறிவாலேயே {கந்தர்வர்களாகிய} நாங்கள் மனிதர்களை விட மேன்மையாக இருக்கிறோம். ஆன்ம பார்வை கொண்டு எதையும் நாங்கள் பார்க்க முடிவதால் நாங்கள் தேவர்களுக்குச் சமமானவர்களாகவும் இருக்கிறோம். ஓ மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நான் உனக்கும் உனது சகோதரர்களுக்கும் கந்தர்வர்களின் நாட்டில் பிறந்த நூறு {100} குதிரைகளைக் கொடுக்க விரும்புகிறேன். தெய்வீக நிறத்துடன், மனோ வேகம் கொண்ட அக்குதிரைகள் தேவர்களையும் கந்தர்வர்களையும் சுமக்க நியமிக்கப்பட்டிருந்தன. அவை சதையற்று ஒல்லியாக இருந்தாலும் அவை களைப்படைவதில்லை, எக்காரணம் கொண்டும் துயரடைவதில்லை. பழங்காலத்தில் வஜ்ராயுதம் {இடியுடன் கூடிய மின்னலான இந்திரனின் ஆயுதம்} தேவர்கள் தலைவனால் (விரித்தாசுரனால்) விரிதனைக் கொல்ல உருவாக்கப்பட்டது. ஆனால், அது அவன் மீது ஏவப்பட்டபோது, விரிதாசுதரின் தலைபட்டு அது நூறு துண்டுகளாக உடைந்தது. அந்த துண்டுகளைத் தேவர்கள் மரியாதையுடன் வணங்குகின்றனர். அவை மூவுலகத்திலும், வஜ்ராயுதத்தின் பகுதிகளாக அதன் புகழுக்காக அறியப்படுகிறது. வேள்வித்தீயில் தெளிந்த நெய்யை விடும் அந்தணர்களின் கரங்களும், க்ஷத்திரியர்கள் போர் புரியும் ரதங்களும், வைசியர் செய்யும் தானமும், சூத்திரர் செய்யும் சேவையும் அந்த வஜ்ரத்தின் சிதறிய பாகங்களே. ஆகையால், க்ஷத்திரியர்களின் ரதத்தின் ஒரு பகுதியாக குதிரைகள் இருப்பதால், அவை அழிக்கப்பட முடியாதவை என்று நம்பப்படுகிறது. க்ஷத்திரியனின் தேரை அலங்கரிக்கும் குதிரை, வடவனின் வாரிசாகிறது. கந்தர்வர்களின் பகுதியில் பிறந்த இக்குதிரைகள், அதன் முதலாளிகள் விரும்புவது போல எந்நிறத்தையும்  எவ்வேகத்தையும் கொள்ளும்.  நான் கொடுக்கும் இந்த எனது குதிரைகள், உங்கள் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றும்.

கந்தர்வனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "ஓ கந்தர்வா, ஆபத்து காலத்தில் உனது உயிரை அடைந்ததால் நீ இந்த அறிவியலையும், குதிரைகளையும் கொடுப்பதாய் இருந்தால், நான் அவற்றைக் கொடையாகக் கொள்ள மாட்டேன்." என்றான். அதற்கு அந்த கந்தர்வன், "ஒரு சிறப்பு வாய்ந்த மனிதரைச் சந்திப்பது எப்போதும் திருப்தியின் ஊற்றுக்கண்ணாகும். அதுவும் தவிர்த்து நீ எனக்கு எனது உயிரை அளித்திருக்கிறாய். உன்னால் திருப்தியடைந்து, நான் இந்த அறிவியலை உனக்குக் கொடுக்கிறேன். எனினும் அக்கடமை அனைத்தும் ஒரு புறம் மட்டும் இருக்காது. ஓ பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனா}, ஓ பரத குலத்தின் காளையே, நான் உனது அற்புதமான தெய்வீக ஆயுதமான நெருப்பாயுதத்தை {அக்னேயாவை} உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்." என்றான்.

அர்ஜுனன், "நான் உனது குதிரைகளை எனது ஆயுதத்துக்கான பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்கிறேன். நமது நட்பு நிலைத்திருக்கட்டும். ஓ நண்பா, மனிதர்களாகிய நாங்கள் கந்தர்வர்கள் முன் பயந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சொல். எதிரிகளைத் தண்டிப்பவர்களான நாங்கள் அறம்சார்ந்தவர்கள். வேதமறிந்தவர்கள். ஓ கந்தர்வா, இரவு நேரத்தில் பயணம் செய்யும் எங்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்", என்று கேட்டான்.

அதற்கு கந்தர்வன், "மனைவிகளற்றவர்கள் நீங்கள் (கல்வி காலம் நிறைந்த பிறகும்), நீங்கள் எந்தக் குறிப்பிட்ட ஆசிரமத்தையும் (வாழ்க்கை முறையையும்) ஏற்றுக் கொள்ள வில்லை {பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு வாழ்க்கைமுறைகள்}. கடைசியாக, நீங்கள் அந்தணரை முன்கொண்டு நடக்கவில்லை. ஆகையால், பாண்டு மைந்தர்களே, நீங்கள் என்னால் கண்டிக்கப்பட்டீர்கள். யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், பிசாசங்களும், உரகங்களும், தானவர்களும் குரு பரம்பரையினரின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். அதில் ஞானமும் கொண்டுள்ளனர். ஓ வீரர்களே, நாரதரிடமிருந்தும், மற்ற தெய்வீக முனிவர்களிடமிருந்தும் உங்கள் மூதாதையர்களின் நற்செயல்களை அறிந்து வைத்திருக்கிறேன். கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த உலகை நான் சுற்றி வரும்போது உனது குலத்தின் வீரத்தைக் கண்டிருக்கிறேன். ஓ அர்ஜுனா, மூன்று உலகங்களின் அவரது ஆயுத அறிவுக்காவும், வேத அறிவுக்காகவும் புகழப்படும் பரத்வாஜரின் மகனான உனது குருவையும் {துரோணரையும்} நான் அறிவேன். ஓ குரு குலத்தின் புலியே, ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தனே, நான் தர்மன், வாயு, சகரன், அஸ்வினி இரட்டையர்கள், மற்றும் பாண்டுவாகிய குருகுலத்தை என்றும் நிலைக்க வைத்திருக்கும் ஆறு மூலங்களையும் அறிவேன். இவர்கள் உங்கள் குலத்தை தழைக்க வைக்கும் தேவர்களும் மனிதர்களும் ஆவர். நீங்கள் ஐந்து சகோதரர்களும், கல்வி கற்று, உயர்ந்த ஆன்மா கொண்டு, அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையடைந்த அறம்சார்ந்தவர்கள் என்பதையும் அறிவேன். உங்கள் நல்ல இதயங்களையும், களங்கமற்ற நடத்தைகளையும் அறிந்தே நான் உங்களைக் கண்டித்தேன். ஓ குரு குலத்தவரே, பலம் நிறைந்த எந்த மனிதனும் தனது மனைவின் எதிரில் தவறாக நடத்தப்பட்டால் பொறுமையாக இருக்க மாட்டான். ஓ குந்தியின் மைந்தா {அர்ஜுனா}, குறிப்பாக ஒருவனுக்கு இருளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது கரத்தின் பலம் அதிகரிக்கும்போது, அதுவும் அவனது மனைவி அவனுடன் இருக்கும்போது பொறுமையாக இருக்க மாட்டான். ஆகவேதான் நான் கோபம் கொண்டேன். ஓ நோன்பு நோற்பவர்களின் சிறந்தவர்களே, இருப்பினும் நான் உங்களால் போரில் வீழ்த்தப்பட்டேன். நான் ஏன் இந்த இழிந்த நிலையை அடைந்தேன் என்பதைக் குறித்து கேளுங்கள். பிரம்மச்சரியமே வாழ்க்கை முறையில் உயர்ந்தது. இப்போது நீங்கள் அந்த அந்த முறையிலேயே இருக்கிறீர்கள். அதனால்தான், ஓ பார்த்தா {அர்ஜுனா}, நான் போரில் உங்களால் வீழ்த்தப்பட்டேன். ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, மணம்புரிந்த எந்த க்ஷத்திரியன் எங்களுடன் இரவில் போரிட்டாலும், அவன் உயிருடன் தப்பவே முடியாது.

ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஒரு அந்தணனால் சுத்திகரிக்கப்பட்ட மணம் புரிந்த க்ஷத்திரியன், தனது மாநிலத்தின் புரோகிதரை நன்றாக கவனித்துக் கொள்பவன் இரவில் உலவுபவர்களைத் தனது பலத்தால் அழிப்பான். ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, ஆகையால் மனிதர்கள், எப்போதும் கற்ற புரோகிதர்களை தாங்கள் செய்ய விரும்பும் அனைத்து நற்காரியங்களிலும் நியமித்துக்கொள்ள வேண்டும். வேதங்களை அதன் ஆறு கிளைகளுடன் அறிந்து, சுத்தமாகவும், உண்மையாகவும், அறம்சார்ந்த ஆன்மாக கொண்டு, சுயகட்டளை கொண்ட அந்தணன், ஒரு மன்னனுக்கு புரோகிதனாக இருக்கத் தகுதி வாய்ந்தவன்.

நீதிகளின் விதிகளை அறிந்த அந்தணனைப் புரோகிதனாக அடைந்த ஒரு ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான். கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும். தனது வளமையை விரும்பும் ஒருவன் எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான். ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, அந்தணன் இல்லாத ஒரு மன்னன், தனது வீரத்தால் நிலத்தையோ அல்லது, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது. ஆகையால், ஓ குரு குலத்தை தழைக்க வைப்பவனே, அந்தணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்", என்றான் {சித்ரரதன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Powered by Blogger.
Back To Top