clone demo
காண்டவ தகா பர்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காண்டவ தகா பர்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 05, 2013

இந்திரன் அர்ஜுனன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 229

The fight between Indra and Arjuna | Adi Parva - Section 229 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

இந்திரனுக்கும் அர்ஜுனனுக்கு நடந்த மோதல்; இந்திரன் அர்ஜுனனை நினைவை இழக்கச் செய்தது; தக்ஷகன் மனைவியின் தந்திரம்; இந்திரன் தனது நண்பனின் மகனைக் காக்க நினைப்பது; தக்ஷகன் மகன் தப்பிப்பது; நாகர்கள், கருடர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதியது; தேவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணனுடன் அர்ஜுனனுடனும் மோதியது; தேவர்கள் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தது; இந்திரன் மீண்டும் தாக்கியது;

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு பாண்டுவின் மகனான பீபத்சு {பீபத்சு} {Vibhatsu-அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான். அளவற்ற ஆன்மா கொண்ட அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போல தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான். அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம்  இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை. அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவன் தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.

 ஆனால், தக்ஷகனின் பெரும் பலம் வாய்ந்த மகன் அஸ்வசேனன் {Aswasena} அங்கிருந்தான். அவன் நெருப்பில் இருந்து தப்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்தான்., ஆனால் அர்ஜுனனின் கணைகளால் அடைக்கப்பட்டதால், எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பாம்பின் மகளாகிய அவனது தாய், அவனை முதலில் விழுங்கி அவனைக் காக்க நினைத்தாள், அவனது தாய் முதலில் அவனது தலையை விழுங்கினாள். பிறகு அவனது வாலை விழுங்கினாள். தனது மகனின் வாலை விழுங்கிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கடற்பாம்பு {அஸ்வசேனனின் தாய்} (பூமியில் இருந்து} எழுந்தாள். ஆனால் அவள் தப்புவதைக் அர்ஜுனன் கண்டு, தனது கூரிய நுணுக்கமான கணையால் அவளது உடலில் இருந்து தலையைக் கொய்தான். இவற்றையெல்லாம் கண்ட இடியைத் தாங்கும் இந்திரன், தனது நண்பனின் மகனைக் காக்க எண்ணி, கடும் காற்றை எழுப்பி, அர்ஜுனனை நினைவு தவற வைத்தான். கிடைத்த அந்த கணநேரத்தில் அஸ்வசேனன் தப்புவதில் வெற்றியடைந்தான். மாயசக்தியின் வெளிப்பாட்டைக் கண்ட அர்ஜுனன், பாம்பால் ஏமாற்றப்பட்டு பெரும் கோபம் அடைந்தான். முன்னும் பின்னுமாக உடன் சென்று வான் வழியாகத் தப்பிக்க நினைத்த அனைத்து விலங்குகளையும், இரண்டாகவும், மூன்றாகவும், பல துண்டுகளாகவும் வெட்டிப் போட்டான். கோபம் கொண்ட பீபத்சு {பீபத்சு}வும் {அர்ஜுனனும்}, அக்னியும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ஏமாற்றுத் தனமாகத் தப்பிய அந்தப் பாம்பை, "நீ எப்போதும் புகழடைய மாட்டாய்", என்று சபித்தனர். 

தன்னை ஏமாற்றிய அந்த நிகழ்வை நினைத்த ஜிஷ்ணு {Jishnu-அர்ஜுனனன்} மிகுந்த கோபம் கொண்டு கணைகள் எனும் மேகத்தால் வானத்தை மறைத்து, ஆயிரம் கண்கள் உடையவனிடம் {இந்திரனிடம்} மோத முற்பட்டான். தேவர்கள் தலைவனும் அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு, அவனுடன் மோத முற்பட்டு, தனது கடும் ஆயுதங்களை வீசி, வானத்தின் பெரும் பகுதியை மறைத்தான். பிறகு மிகுந்த கர்ஜனையோடு இருந்த காற்று, பெருங்கடல்களைக் கலக்கி, வேகமான நீரோட்டம் கொண்ட பெரும் மேகத் திரள்களை மொத்தமாகக் கொண்டு வந்தது. அந்த மேகத்திரள்கள் இடியையும், பயங்கரமான மின்னல்வெட்டுகளையும் வெளியிட்டன.
பிறகு, காரணங்களின் அறிவு கொண்ட அர்ஜுனன், அந்த மேகங்களை விலக்க, வயவ்யா {Vayavya} என்ற அற்புதமான ஆயுதத்தை அதற்கு உரிய மந்திரங்களுடன் செலுத்தினான். அந்த ஆயுதத்தால், இந்திரனுடைய இடியின் சக்தியும் மற்றும் அந்த மேகங்களும் அழிக்கப்பட்டன. வேகமான நீரோட்டம் கொண்ட மழையால் நிறைந்த அந்த மேகங்கள் அனைத்தும் வற்றச் செய்யப்பட்டன. அங்கே விளையாடிக் கொண்டிருந்த மின்னலும் அகற்றப்பட்டது. சிறிது நேரத்திலேயே வானம் தூசுகள் மற்றும் இருள் அற்று காணப்பட்டது. அருமையான குளிர்ந்த தென்றல் அங்கு வீசியது. சூரியத்தட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

பிறகு தெளிந்த நெய்யை உண்பவன் {அக்னி}, தடை செய்ய யாரும் இல்லாததால், பல உருவங்களை எடுத்து, உயிரினங்களின் உடலில் இருந்து கசிந்த கொழுப்புகளை தெறிக்க வைத்து, அவனது அனைத்துச் சுடர்களையும் வெளியிட்டு பிழம்பாக எரிந்து, அண்டத்தையே தனது கர்ஜனையால் நிறைத்தான். அற்புதமான இறகுகள் கொண்ட கருட குலத்தைச் சேர்ந்த எண்ணிலடங்கா பறவைகள், அந்தக் காடு கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படுவதைக் கண்டு, அந்த வீரர்களைத் தங்கள் இடிபோன்ற இறக்கைகளாலும், அலகுகளாலும், கூரிய நகங்களாலும் அடிக்க விரும்பி பெருமையுடன் வானில் இருந்து கீழிறங்கின. நெருப்பைக் கக்கும் முகம் கொண்ட எண்ணிலடங்கா நாகர்களும் மேலிருந்து கீழிறங்கி அர்ஜுனனை அணுகி, எந்நேரமும் கொடும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.

அவர்கள் அணுகுவதைக் கண்ட அர்ஜுனன் தனது கோபத்தால் உண்டான நெருப்பில் வாட்டப்பட்ட கணைகளைக் கொண்டு அவர்களை துண்டுகளாக வெட்டிப் போட்டான். பிறகு உயிரிழந்த அந்தப் பறவைகளும் பாம்புகளுடன் கீழே எரிந்து கொண்டிருந்த பூதத்தில் {ஐம்பூதத்தில் ஒன்றான நெருப்பில்} விழுந்தன. அங்கே போர்புரிய விரும்பி எண்ணற்ற அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், நாகர்களும் உரக்கக் கத்திக் கொண்டே வந்தனர். அவர்கள் பெரும் கோபத்தால் தங்கள் சக்தியும் வீரமும் தூண்டப்பட்டு, தனது தொண்டைக்குழியில் இருந்து (வாயிலிருந்து) இரும்பு குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் கக்கும் இயந்திரங்களையும், பெரிய கற்களை உந்தித் தள்ளும் கவண்களையும் {cataputs}, ஏவுகணைகளையும் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனையும் பார்த்தனையும் தாக்க வந்தனர்.

ஆனால், அவர்கள் ஆயுதங்களை மழையெனச் சரியாகப் பொழிந்தாலும், பீபத்சு {பீபத்சு} அவர்களுக்கு நிந்தனை செய்யும் வகையில் பதில் சொல்லி, அவர்களது தலையைத் தனது கூரிய கணைகளால் அடித்தான்.

எதிரிகளைக் கொல்லும், பெரும் சக்தி கொண்ட கிருஷ்ணனும் தைத்தியர்களையும், தானவர்களையும் தனது சக்கரத்தால் படுகொலை செய்தான். அளவிலா பலம் கொண்ட பல அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டும், சக்கரத்தின் வலுவால் தாக்கப்பட்டும், தனித்து விடப்பட்டு வழிதவறி கிடக்கும் அனாதைக் குழந்தையைப் போல அலைகளின் கடுமை கொண்ட கரையில் அசைவற்று கிடந்தனர். பிறகு தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, தனது வெள்ளைக் குதிரையில் ஏறி. அந்த வீரர்களிடம் விரைந்து, பொய்க்காத தனது இடி ஆயுதத்தை எடுத்து பெரும் பலத்துடன் வீசினான். பிறகு அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தேவர்களிடம், "இந்த இருவரும் கொல்லப்பட்டனர்", என்று சொன்னான். கடுமையான இடி ஆயுதத்தை இந்திரன் வீசப்போவதைக் கண்ட தேவர்கள் ஆளாளுக்கு அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, யமன் {Yama} மரணத்தைக் கொடுக்கும் கதாயுதத்தையும், குபேரன் {Kuvera} முள் கதாயுதத்தையும், வருணன் {Varuna} சுருக்கு கயிறையும், அழகிய ஏவுகனையையும், ஸ்கந்தன் (கார்த்திகேயன்) {முருகன்} தனது வேலும் எடுத்துக் கொண்டு மேரு மலையென அசையாது நின்றார்கள். அஸ்வினி {Aswins} தேவர்கள் தங்கள் கரங்களில் பிரகாசமிக்க செடிகளுடன் நின்றனர். தத்ரி {Dhatri} தனது கையில் வில்லுடனும், ஜெயா {Jaya} தனது கையில் கதையுடனும், பெரும் பலம் கொண்ட துவஷ்திரி {Tvashtri} கோபம் கொண்டு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டும், சூரியன் {Surya} பிரகாசமான கணையுடனும், மிரித்யு {Mrityu} போர்க்கோடரியுடனும், ஆர்யமான் {Aryaman} கூர்முனை கொண்ட கனத்த தடியுடனும், மித்ரன் {Mitra} கத்தி போன்ற கூர்மையுடைய சக்கரத்துடனும் அங்கே நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, புஷா {Pusha}, பகா {Bhaga}, சாவித்ரி {Savitri} ஆகியோர் கைகளில் விற்களும், வளைந்த பட்டா கத்திகளும் கொண்டு, கோபத்துடன் கிருஷ்ணனிடமும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடமும்} விரைந்தனர். ருத்ரர்களும், வசுக்களும், பலம்வாய்ந்த மருதர்களும், விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் தங்கள் சக்தியாலேயே பிரகாசமாக இருக்கும் மற்ற பல தேவர்களும் கைகளில் பல ஆயுதங்களுடன் அந்த உயர்ந்த மனிதர்களான கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} அவர்களை அடித்து வீழ்த்த விரைந்தனர். விரைவில் ஏதோ நிகழப் போவதை முன்னறிவிக்குமாறு அந்தப் பெரும் மோதல் இருந்தது. பல உயிர்களின் உணர்வுகள் அங்கே கொள்ளை போவது தெரிந்தது. அண்ட கலைப்புக்கான நேரம் வந்ததைப் போல அப்போது காட்சியளித்தது. ஆனால், அச்சமற்ற போரில் தோல்வியுறாத அர்ஜுனனும் கிருஷ்ணனும், மோதத் தயாராக இருக்கும் சக்ரனையும் {இந்திரனையும்} தேவர்களையும் கண்டு,  கைகளில் வில்லுடன் அமைதியாகக் காத்திருந்தனர்.

போரில் நிபுணத்துவம் பெற்ற அந்த வீரர்கள், பெரும் கோபம் கொண்டு அந்த தேவர்களை நோக்கி முன்னேறி, இடியைப் போன்ற தங்கள் கணைகளைத் தொடுத்தனர். தொடர்ச்சியாக கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் தாக்கப்பட்ட அந்தத் தேவர்கள், கடைசியாக அச்சமுற்று போர்க்களத்தை விட்டு அகன்று, இந்திரனின் பாதுகாப்பைக் கோரினர். வானில் சாட்சிகளாக நின்று கொண்டிருந்த முனிவர்கள், மாதவனிடமும் {கிருஷ்ணனிடமும்} அர்ஜுனனிடமும் தோல்வியுற்ற தேவர்களைக் கண்டு அச்சரியமடைந்தனர். அவர்களது வீரத்தைத் தொடர்ச்சியாக சாட்சியாகக் கண்ட சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் பெரும் திருப்தி கொண்டு, மீண்டும் தாக்குதல் நடத்த விரைந்தான். பிறகு, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} இடது கையாலும் வில்லின் நாண் இழுக்க வல்ல அர்ஜுனனின் வீரத்தை உறுதி செய்ய நினைத்து, கற்களை மிக அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பெரும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது கணைகளை அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பிறகு, நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்},  தனது கல் மழை தடுக்கப்பட்டதைக் கண்டு, இன்னும் அடர்த்தியாகக் கற்களைப் பொழிந்தான். ஆனால் பகனைத் தண்டித்தவனின் மகன் (அர்ஜுனன்) அந்தக் கல் மழையைத் தனது வேகமான கணைகளால் தடுத்து தனது தந்தையைத் திருப்தி செய்தான்.
வானிலிருந்து விழுந்த கற்கள்
 பிறகு பாண்டுவின் மகனை அடிக்க நினைத்த சக்ரன் {இந்திரன்}, மந்தர மலையின் சிகரம் ஒன்றைத் தனது கையால் பெயர்த்தெடுத்து, அவன் {அர்ஜுனன்} மீது வீசினான். ஆனால், அர்ஜுனன், நெருப்பு வாய் கொண்ட தனது வேகமான கணைகளால், அந்த மலைச் சிகரத்தை ஆயிரம் துண்டுகளாக ஆக்கினான். வானிலிருந்து விழுந்த அந்த மலைத்துண்டுகளைப் பார்ப்பதற்கு, ஏதோ சூரியனும், சந்திரனும், கோள்களும் தங்கள் இடத்திலிருந்து நகர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. அந்தப் பெரும் சிகரம் அந்த கானகத்தில் விழுந்து, காண்ட வனத்தில் வசித்த எண்ணிலடங்கா உயிரினங்களை அழித்தது.


புதன், செப்டம்பர் 04, 2013

களத்தில் இறங்கிய இந்திரன் - ஆதிபர்வம் பகுதி 228

Indra entered the field | Adi Parva - Section 228 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

அக்னி காண்டவ வனத்தை எரிக்க ஆரம்பித்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் கானகத்தில் எதிர் எதிர் பக்கங்களில் நின்று கொண்டு தப்பிக்க நினைத்த உயிரினங்களைக் கொன்றது; நெருப்பு விண்ணுலகை எட்டியது; தேவர்கள் துயருற்றது; தேவேந்திரனிடம் அவர்கள் முறையிட்டது; இந்திரன் களத்தில் இறங்கி கானகத்தைக் காக்கத் துணிந்தது; அக்னியிடம் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையைப் பொழிந்தது....

மழையை ஏவும் இந்திரன்
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு அந்த ரதவீரர்களில் முதன்மையானவர்கள், தங்கள் ரதங்களில் ஏறி, கானகத்தின் எதிர் எதிர் புறங்களில் தங்களை நிறுத்திக் கொண்டு, அந்தக் காண்டவ வனத்தில் வசித்த அனைத்து உயிரினங்களையும் படுகொலை செய்யத் தொடங்கினர். காண்டவ வனவாசி உயிரினங்கள் எந்த இடத்திலெல்லாம் தப்ப நினைத்தனவோ அங்கெல்லாம் அந்தப் பெரும் வீரர்கள் விரைந்தனர் (அவை தப்புவதைத் தடுக்க). நிச்சயமாக அந்த இரு ரதங்களும் ஒன்றாகவே தெரிந்தன. அந்த இருவீரர்களும் கூட ஒருவராகவே தெரிந்தனர். அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருந்த போது, நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் உயிரினங்கள் பயங்கரமான கதறல்களை எழுப்பி எல்லா திசைகளிலும் ஓடின. சிலவற்றிற்கு குறிப்பிட்ட உறுப்புகள் எரிந்திருந்தன. சில அதிகமான வெப்பத்தால் பொசுங்கிப் போயின. சில வெளியே வந்தன, சில பயத்தால் ஓடின. 
சில உயிரினங்கள் தங்கள் குட்டிகளையும், சில பெரும் பாசத்தால் தங்கள் தாய் தந்தையரையும், தமையன்களையும் கட்டிப் பிடித்துக் கொண்டு, யாரையும் கைவிட முடியாமல், தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து அமைதியாக இறந்தன. பல மிருகங்கள் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு மேலெழுந்தவாரியாக எழுந்து, விரைவில் நெருப்பாக கீழே விழுந்தன. சில தரையில் உருண்டு இறக்கைகளும், கண்களும், பாதங்களும் பொசுங்கப்பட்டு எரிந்து இறந்தன. இந்த உயிரினங்கள் அனைத்தும் விரைவில் அழிந்து கொண்டிருந்தன. அந்தக் கானகத்தின் குளங்களும் ஏரிகளும் நெருப்பால் சுடப்பட்டு கொதிக்க ஆரம்பித்தன; அதிலிருந்த மீன்களும் ஆமைகளும் அனைத்தும் அழிந்தன. அந்த கானகவாழ் உயிர்களின் பெரும் படுகொலையைக் கண்ட போது, எரிந்த பல மிருகங்களின் உடல்கள் அனைத்தும், நெருப்பே பல ரூபம் எடுத்ததனால் அப்படி ஆனது போல இருந்தது. இறகுகளைக் கொண்டு பறந்து தப்பிக்க நினைத்த பறவைகள், அர்ஜுனனின் கணைகளால் துண்டுகளாக அறுக்கப்பட்டு, தரையில் எரியும் பூதத்தில் விழுந்தன. அர்ஜுனனின் கணைகளால் துளைக்கப்பட்ட பறவைகள் எல்லாபுறங்களில் இருந்தும் எரியும் காட்டுக்குள் சத்தமான ஓலங்களுடன் விழுந்தன. கணைகளால் தாக்குண்ட அக்கானக வாசிகள் மிகுந்த சத்தமாக ஓலமிடவும் கதறவும் ஆரம்பித்தன. அங்கே எழுந்த ஓலம் (பழங்காலத்தில்) பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட பயங்கரமான ஓலம் போல இருந்தது. சுடர் விட்டும் எரியும் அந்தப் பெரும் நெருப்பின் சுடர்கள் வானத்தை எட்டின. அப்படி வானத்தை எட்டிய சுடர்களால் தேவர்களும் பெருந்துன்பத்துக்கு உள்ளாகினர். பிறகு அந்த சிறப்புவாய்ந்த சொர்க்கவாசிகள் அனைவரும் சேர்ந்து உடலெல்லாம் ஆயிரம் கண் கொண்டவனும், நூறு வேள்விகள் செய்வனும், அசுரர்களைக் கொன்றவனுமான தங்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} சென்றனர். பிறகு இந்திரனை அணுகிய அந்தத் தேவர்கள், "ஓ மரணமற்றவர்களின் தலைவா, ஏன் அக்னி கீழிருக்கும் உயிரினங்களை எரிக்கிறான்? உலகத்தின் முடிவுக்கான நேரம் வந்துவிட்டதா?" என்று கேட்டனர்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அக்னியின் செயலை தானே கண்ட விரித்திரனைக் {Vritra} கொன்றவன் {இந்திரன்}, காண்ட வனத்தைப் பாதுகாக்கக் கிளம்பினான். பிறகு தேவர்களின் தலைவனான வாசவன் {Vasava-இந்திரன்}, முழு வானத்தையும் அனைத்து வகையான மேகங்களாலும் மறைத்து, அந்த எரியும் காட்டின் மேல் மழையைப் பொழிய ஆரம்பித்தான். இந்திரனால் கட்டளையிடப்பட்ட அந்த நிறை அதிகமான மேகங்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வந்து, போர் ரதங்களில் இருக்கும் கொடிக்கம்பத்தைப் போன்ற கனமுடைய அடர்த்தியான மழையை காண்டவ வனத்தின் மீது பொழிந்தன. ஆனால் அந்த மழையும் பாதி வானத்தில் வந்து கொண்டிருக்கும் போதே, அந்தக் காட்டிலிருக்கும் நெருப்பின் வெப்பத்தால் மிகவும் வற்றியது. ஆகையால் அந்த மழையின் நீர் கீழே இருக்கும் நெருப்பை அடையவே இல்லை. பிறகு நமுச்சியைக் {Namuchi} கொன்றவன் {இந்திரன்}, அக்னியிடம் கோபம் கொண்டு, பெரும் நிறை கொண்ட மேகங்களை அங்கே சேகரித்து, கடும் மழையை அங்கே பொழிந்தான். பிறகு அந்த அடர்த்தியான மழையால், நெருப்பு கட்டுக்குள் அடங்கியது. மேலே மேகங்களுடன் அந்தக் கானகமே புகையாலும், மின்னல் வெட்டாலும், நிறைந்து பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.


கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227

The Chakra got by Krishna | Adi Parva - Section 227 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

அக்னி, வருணனை வரவழைத்து, சோமனிடம் வருணன் பெற்ற குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், காண்டீவத்தையும், அம்பறாத்தூணிகளையும் அர்ஜுனனுக்குப் பெற்றுக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு அக்னி சக்கரத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு வருணன் கௌமோதகி என்ற கதாயுதத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் திருப்தியடைந்தது; அக்னி கானகத்தை எரிக்க ஆரம்பித்தது..

சக்கரம் மற்றும் கௌமோதகி
கதாயுதத்துடன் கிருஷ்ணன்

வைசம்பாயனர் சொன்னார், "இப்படி அர்ஜுனனால் சொல்லப்பட்ட, புகையைக் கொடியாகக் கொண்ட ஹூதாசனன் {Hutasana-அக்னி}, வருணனிடம் {Varuna} பேச விரும்பி, அந்த அதிதியின் மகனை {வருணனை} நினைத்துப் பார்த்தான். அந்த வருணன் விண்ணுலகின் ஒரு புறத்தைக் காத்து வருபவனாவான். நீரில் தனது வீடாகக் கொண்டு, அந்த பூதத்தை {பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் என்ற பூதத்தை} ஆண்டான். பவகனால் {Pavaka - அக்னியால்} தான் நினைக்கப்படுகிறோம் என்பதை அறிந்த வருணன், உடனடியாக அக்னியின் முன்பு வந்தான். புகையைக் கொடியாகக் கொண்ட அந்த தேவன் {அக்னி} நீரை ஆள்பவனை {வருணனை} மரியாதையுடன் வரவேற்றான். அந்த நான்காவது லோகபாலன் {அக்னி}, அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் {வருணனிடம்}, "நேரத்தைக் கடத்தாமல் மன்னன் சோமனிடம் பெற்ற வில்லையும் {வில் -காண்டீவம் - Gandiva}, அம்பறாத்தூணியையும் {quiver அம்பினை வைக்கும்  பேழை (கூடை)யையும்} , குரங்கு கொடி கொண்ட ரதத்தையும் எனக்குக் கொடு.


பார்த்தன் {அர்ஜுனன்} காண்டீவத்தைக் கொண்டும், வாசுதேவன் {கிருஷ்ணன்} சக்கரத்தைக் கொண்டும் பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடு," என்றான் {அக்னி}. இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன் பவகனிடம் {அக்னியிடம்}, "நன்று, நான் அவற்றைக் கொடுக்கிறேன்," என்று சொன்னான். பிறகு அவன், அந்த அற்புதமான, விற்களில் ரத்தினமான, பெரும் சக்தியுடைய வில்லை {காண்டீவத்தைக்} கொடுத்தான். அந்த வில் புகழையும் சாதனைகளையும் அதிகரிப்பதாகவும், எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது. அது ஆயுதங்களில் தலைமையானதாகவும், எல்லா ஆயுதங்களையும் அழிப்பதாகவும் இருந்தது. எதிரிப்படைகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அது ஒன்றே நூறு {100} விற்களுக்குச் சமமானதாகவும் இருந்தது. அது நாடுகளை அளவில் பெரியாக்குவதாகவும், பல அற்புதமான நிறங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் இருந்தது. அது நன்கு அலங்கரிக்கப்பட்டு ஒரு பலவீனக்குறியும் இல்லாமல் எந்தக் காயமும் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அது எப்போதும் தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடத்தக்கதாக இருந்தது. இரண்டு வற்றாத அம்பறாத்தூணிகளையும் வருணன் கொடுத்தான். பிறகு ஒரு பெரும் குரங்கைக் கொடியில் கொண்டு தெய்வீக ஆயதங்களால் நிரம்பிய ஒரு ரதத்தையும் கொடுத்தான். அந்த ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள், பஞ்சு போன்ற மேகக்கூட்டங்களின் வெள்ளியைப் போன்ற வெண்மையான நிறத்தில், கந்தர்வ லோகத்தில் பிறந்து, தங்க சேணத்தால் அலங்கரிக்கப்பட்டு, வேகத்தில் காற்றுக்கும் மனத்திற்கும் ஈடாக இருந்தன. போருக்காகவே தயார் செய்யப்பட்டு, ஆயுதங்களால் நிரப்பப்பட்டு, தேவர்களாலும், அசுரர்களாலும் அழிக்க முடியாதபடி அந்த தேர் இருந்தது. அது பெரும் பிரகாசம் கொண்டதாக இருந்தது. அதன் சக்கரங்களின் ஒலி மிகச்சிறந்ததாக இருந்தது. அதைக் கண்ட அனைத்து உயிர்களின் இதயங்களையும், மகிழ்ச்சியால் நிறைத்தது.

அது படைப்புத் தலைவர்களில் ஒருவரும், அண்டத்தின் வடிவமைப்பாளனுமான விஸ்வகர்மாவால் கடும் ஆன்ம தவத்திற்குப் பிறகு செய்யப்பட்டது. அது யாராலும் நெடுநேரம் பார்க்கத்தகாதவாறு சூரியனைப் போன்ற பெரும் பிரகாசத்துடன் இருந்தது. இந்த ரதத்தில் இருந்துதான் தலைவன் சோமன் தானவர்களை அழித்தான்.

மாலை நேர மேகம் மறையும் சூரியனின் ஒளியைக் கொண்டு பிரகாசிப்பது போல அது ஒளிரும் அழகுடன் இருந்தது. அது தங்க நிறத்துடன் அழகும் கூடிய அற்புதமான கொடி மரத்தைக் கொண்டிருந்தது. அந்தக் கொடி மரத்தில் ஒரு தெய்வீகக் குரங்கு {அனுமன்}, சிம்மத்தைப் போன்றோ அல்லது புலியைப் போன்றோ பயங்கரமாக அமர்ந்திருந்தது.

அந்தக் குரங்கு, உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு சற்று குனிந்து, கண்டது அனைத்தையும் எரிப்பது போல இருந்தது. மேலும் அந்தக் (மற்ற) கொடிகளில் பல பெரும் மிருகங்கள் இருந்தன, அதன் கர்ஜனைகளும் கதறல்களும் எதிரி வீரர்களை மயக்கமடையச் செய்யும் வகையில் இருந்தன. பிறகு அர்ஜுனன், போர்க்கவசம் அணிந்து, கையில் வாளை எடுத்துக் கொண்டு, விரல்களுக்கு தோலாலான கையுறைகளை அணிந்து, பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த ரதத்தை வலம் வந்து, தேவர்களுக்குப் பணிந்து, அறம் சார்ந்த மனிதன், தெய்வீக ரதம் சொர்க்கத்திற்குச் கொண்டு செல்வது போல அதன்மீது ஏறி சென்றான். பிறகு ஹூதாசனனைப் {அக்னியைப்} பணிந்த பெரும் சக்தி கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, வில்லை {காண்டீவத்தை} எடுத்து, அதன் நாணை பலமாகச் சுண்டிவிட்டான். அதனால் {காண்டீவத்தால்} ஏற்பட்ட ஒலி, அதைச் சுண்டிய பாண்டவனையே {அர்ஜுனனையே} பயத்தால் நடுங்க வைத்தது.

ரதத்தையும், வில்லையும், இரு வற்றாத அம்பறாத்தூணிகளையும் அடைந்த பிறகு அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} மிகவும் மகிழ்ந்து அந்தக் காரியத்திற்குத் துணை புரியத் தன்னைத் தகுதிவாய்ந்தவனாக நினைத்தான். பிறகு பவகன் {அக்னி}, சக்கரத்தின் நடுவில் உள்ள துளையில் இரும்பு கழியை இணைந்து, அந்தச் சக்கரத்தைக் கிருஷ்ணனுக்குக் கொடுத்தான். அது நெருப்பு உமிழும் ஆயுதமாக {சக்கராயுதமாக} இருந்தது. அது அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான ஆயுதமானது. அந்த ஆயுதத்தை அடைந்த கிருஷ்ணனும் அந்தப் பணியை முடிக்க சமமானவனாக இருந்தான். பிறகு பவகன் {அக்னி} கிருஷ்ணனிடம், "ஓ மதுவைக் கொன்றவனே, இதைக் கொண்டு நீ மனிதர்களாக இல்லாத பெரும் எதிரிகளையும் சந்தேகமற அழிக்க முடியும். இந்த {சக்கர} ஆயுதத்தைக் கொண்டு, சந்தேகமற, போர்க்களத்தில் இருக்கும் மனிதர்களையும், தேவர்களையும், ராட்சசர்களையும், பிசாசங்களையும், தைத்தியர்களையும், நாகர்களையும் விட மேன்மையுடையவனாக இருப்பாய். இதைக் கொண்டு நீ யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும். ஓ மாதவா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் உன்னால் உனது எதிரிகள் மேல் ஏவப்படும் இந்த ஆயுதம், பொறுக்க முடியாததாக இருந்து, அந்த எதிரியைக் கொன்று மீண்டும் உனது கைகளுக்கே திரும்பும்," என்றான். பிறகு வருணன், கிருஷ்ணனிடம் கௌமோதகி {Kaumodaki} எனும் கதாயுதத்தைக் கொடுத்தான். அது அனைத்து தைத்தியர்களையும் கொல்லும். ஏவப்படும் போது அது இடியைப் போன்ற பெரும் ஒலியை எழுப்பும். பிறகு, அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்} பவகனிடம் {அக்னியிடம்} பெரும் மகிழ்ச்சியுடன், "ஓ மேன்மையானவனே, இந்த ஆயுதங்களைத் தரித்து, இதன் பயனை உணர்ந்து, கொடிகளும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய ரதங்களைப் பெற்ற நாங்கள் இப்போது, நாகனைக் {தனது நண்பன் தக்ஷகனைக்} காக்க சண்டையிட விரும்பும் இடியைத் தாங்குபவனைத் {இந்திரனைத்} தவிர்த்து மற்ற அனைத்து தேவர்களையும் அசுரர்களையும் (ஒன்றாக சேர்த்து) எதிர்க்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். மேலும் அர்ஜுனன், "ஓ பவகா {அக்னியே}, அளவிடமுடியா சக்தி கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்} தனது கையில் சக்கரத்துடன் போர்களத்தில் உலவும்போது, மூவுலகில் எதையும் அவனால் இந்த ஆயுதத்தைக் கொண்டு பொசுக்க முடியும். இந்தக் காண்டீவம் எனும் வில்லையும், வற்றாத இந்த இரட்டை அம்பறாத்தூணிகளையும் அடைந்த பிறகு, மூவுலகத்தையும் வெல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆகையால், ஓ தலைவா {அக்னி}, நீ விரும்பியவாறு, உனது நெருப்பை இந்தக் கானகத்தின் அனைத்துப் புறமும் செலுத்தி அனைத்தையும் உட்கொள். நாங்கள் இங்கு உனக்கு உதவி செய்ய இருக்கிறோம்," என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி தாசார்ஹாவாலும் {Dasarha - கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் சொல்லப்பட்ட அந்த சிறப்பு மிக்க தேவன் {அக்னி}, தனது சக்திக்குகந்த உருவத்தைக் கொண்ட, அந்தக் கானகத்தை எரிக்கத் தாயாரானான். தனது ஏழு சுடர்களால் அதனை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து, யுகத்தின் முடிவில் அனைத்தையும் உட்கொள்ளும் பெரும் உருவத்துடன் அந்த காண்டவ வனத்தை உட்கொள்ள ஆரம்பித்தான். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தக் கானகத்தைச் சூழ்ந்து அனைத்துப் புறங்களையும் பற்றி மேகங்களைப் போலக் கர்ஜனை செய்த அக்னி அனைத்து உயிரினங்களையும் நடுங்கச் செய்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, மலைகளின் அரசனான மேரு, தனது மேல்விழும் சூரியனின் கதிர்களால் ஒளிர்வது போல எரியும் அந்தக் கானகமும் ஒளிர்ந்தது.


செவ்வாய், செப்டம்பர் 03, 2013

ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226

Arjuna asked for weapons | Adi Parva - Section 226 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

அக்னிக்கு வழி காட்டிய பிரம்மன்; அக்னி கிருஷ்ணனிடமும் அர்ஜுனனிடமும் வந்தது; அக்னியிடம் பேசிய அர்ஜுனன்; அக்னியிடம் வில்லும், குதிரைகளுடன் கூடிய தேரும்; வற்றாத அம்புகளும் கேட்ட அர்ஜுனன்

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு ஹாவ்யவாகனன் (அக்னி) கோபமும், ஏமாற்றமும் கொண்டு, தனது பிணி போக்கப்படாமல் {நோய் குணமாகாமலேயே}, பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சென்றான். அவன் பிரம்மனிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். அந்த சிறப்புவாய்ந்த தெய்வம், சிறிது நேரம் யோசித்துவிட்டு, அவனிடம் {அக்னியிடம்}, "ஓ பாவமற்றவனே, இந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நீ காண்டவ வனத்தை இன்றே உண்ணும் வழியை நான் கண்டுவிட்டேன். பழங்காலத்தின் தெய்வங்களான நரனும் நாராயணனும், இந்த மனித உலகத்தில் தேவர்களின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் அர்ஜுனன் என்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இப்போது காண்டவ வனத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். 

அந்தக் கானகத்தை எரிக்க அவர்களின் துணையை நீ அவர்களிடம் வேண்டிக் கொள். அதன் பிறகு, அந்த வனத்தை  தேவர்களே காத்தாலும், நீ அதை உண்டுவிடலாம். அவர்கள் நிச்சயமாக காண்டவ வனத்தின் உயிரினங்கள் தப்பிப் போகாதவாறு இந்திரனை (யாரும் தப்பிப் போக இந்திரன் உதவினால் அவனை) முறியடிப்பார்கள். இதில் எனக்கு சந்தேகமே இல்லை." என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அக்னி, விரைவாக கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறப்பு மிகுந்த அந்த இருவரிடமும் அவன் {அக்னி} என்ன பேசினான் என்பதை நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். 

ஓ மன்னர்களில் புலி போன்றவனே {ஜனமேஜயனே}, இந்திரனின் விருப்பத்திற்கு எதிராக காண்டவ வனத்தை எரிக்கும் விருப்பம் கொண்ட அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, அந்தச் சந்தர்ப்பத்திற்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனிடம் {அக்னியிடம்}, "என்னிடம் எண்ணிலடங்கா அற்புதமான தெய்வீக ஆயுதங்கள் இருக்கின்றன. அதைக் கொண்டு இடியைத் தாங்குபவர்களை {இந்திரர்களை} எதிர்த்தும் நான் போரிட முடியும். ஆனால், ஓ உயர்ந்தவரே {அக்னியே}, போர்க்களத்தில் எனது சக்தியை நான் செலுத்துவதற்கு வேண்டிய எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வில் என்னிடம் இல்லை. எனது கரங்களின் லகுவான தன்மைக்கு ஏற்ற வகையில் என்னிடம் வற்றாத கணைகள் {அம்புகள்} இல்லை. 

நான் எடுத்துச் செல்ல விரும்பும் எனது கணைகளின் சுமையை எனது ரதத்தால் தாங்க முடியாது. காற்றின் வேகம் கொண்ட தெய்வீக வெண்ணிற குதிரைகளும் மேக கர்ஜனையை எழுப்பும் சக்கரங்களும் பூட்டப்பட்ட சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட ரதத்தை நான் விரும்புகிறேன். மேலும், கிருஷ்ணனின் சக்திக்கு ஏற்றவகையில் நாகர்களையும் பிசாசங்களையும் கொல்லும் எந்த ஆயுதமும் மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} இல்லை. ஓ உயர்ந்தவரே, இந்திரன் இந்த அகன்ற கானகத்தில் மழையைப் பொழியும் போது அதைத் தடை செய்யவும், இந்த காரியத்தில் நாங்கள் வெற்றி அடையவும் நீரே எங்களுக்கு வழி காட்ட வேண்டும். ஓ பாவகா {அக்னியே}, நாங்கள் ஆண்மையினாலும், வீரத்தாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓ உயர்ந்தவரே, அதற்குத் தேவையானப் பொருட்களை நீர்தான் எங்களுக்குக் கொடுக்க வேண்டும்." என்றான் {அர்ஜுனன்}. 

அக்னியின் செரியாமை - ஆதிபர்வம் பகுதி 225

Agni suffering from surfeit | Adi Parva - Section 225 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…

பிரம்மனும் அக்னியும்
வைசம்பாயனர் சொன்னார், "அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர். அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.

இப்படி அந்த பிராமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} அவனிடம், "எந்த வகையான உணவு உம்மை மனநிறைவுகொள்ளச் செய்யும் என்று சொன்னால் நாங்கள் அஃதை உமக்குக் கொடுக்க முயல்வோம்" என்றனர்.

இவ்வாறு பதில் உரைக்கப்பட்ட அந்தச் சிறப்பு மிகுந்த பிராமணன், ’எந்த வகையான உணவு உமக்குத் தேவைஎன்று அந்த வீரர்கள் கேட்டதால், அவர்களிடம், "நான் சாதாரண உணவை உண்ண விரும்புவதில்லை. நான் அக்னி என்பதை அறிவீராக! உகந்த உணவை எனக்குக் கொடுப்பீராக. இந்தக் காண்டவக் காடு {காண்டவவனம்} இந்திரனால் எப்போதும் காக்கப்படுகிறது. இஃது அந்தச் சிறப்பு வாய்ந்தவனால் காக்கப்படுவதால், நான் இஃதை எப்போதும் உண்ணத் தவறுகிறேன். இந்தக் கானகத்தில் இந்திரனின் நண்பனும், நாகனுமான தக்ஷகன் தன்னைத் தொடர்பவர்களுடனும், தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறான். அவனுக்காகவே {தஷகனுக்காகவே} அந்த வஜ்ரதாரி {இந்திரன்} இந்தக் கானகத்தைக் காக்கிறான். பல உயிரினங்களும் தக்ஷகனின் பொருட்டு இங்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் கானகத்தை உண்ண நினைத்தாலும், இந்திரனின் ஆற்றலின் காரணமாக எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் நெருப்புச் சுடர்களை வீசியதும் அவன் மேகத்திலிருந்து நீரைப் பொழிகிறான். எனவே, நான் காண்டவ வனத்தை உட்கொள்வதைப் பெரிதும் விரும்பினாலும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இப்போது நான் ஆயுதத்திறன்மிக்க உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் நிச்சயம் இந்த வனத்தை உட்கொள்வேன் {எரித்துவிடுவேன்}. இதுவே நான் விரும்பும் உணவாகும். சிறந்த ஆயுதங்களில் திறன்மிக்க நீங்கள், மழைத் துளிகள் கீழே பொழியப்படுவதையும், உயிரினங்கள் தப்புவதையும் தடுத்தால், நான் இந்த வனத்தை உட்கொள்ள {எரிக்கத்} தொடங்குவேன்" என்றான் {அக்னி}".

ஜனமேஜயன், "தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} காக்கப்பட்டுப் பல உயிரினங்களுடன் இருந்த அந்தக் காண்ட வனத்தை உட்கொள்ள அந்தச் சிறப்பு மிகுந்த அக்னி ஏன் விரும்பினான்? அக்னி கோபத்துடன் காண்டவ வனத்தை உட்கொள்ளப் பெரிய காரணம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. பிராமணரே {வைசம்பாயனரே}, இதை விவரமாக அறிய நான் விரும்புகிறேன். முனிவரே {வைசம்பாயனரே}, பழங்காலத்தில் காண்டவ வனம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்லும்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் சொன்னார், " மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் புராணங்களில் சொல்லியபடிக் காண்டவனத்தில் மூண்ட பெருந்தீயைப் பற்றிச் சொல்கிறேன். மன்னா {ஜனமேஜயா}, புராணங்களில் பலமும் ஆற்றலும் பொருந்தியவனும், இந்திரனுக்கு நிகரானவனும், ஸ்வேதகி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வேள்விகளிலும், தானங்களிலும், புத்திசாலித்தனத்திலும் அவனுக்கு நிகராக யாரும் உலகத்தில் இல்லை. ஸ்வேதகி ஐந்து பெரும் வேள்விகளையும் மற்ற பல வேள்விகளையும் செய்து, பிராமணர்களுக்குப் பரிசுகள் பலவும் கொடுத்தான். மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இதயம் எப்போதும் வேள்விகளிலும், அறச் சடங்குகளிலும், பரிசு பொருட்களைக் கொடுப்பதிலுமே நிலைத்திருந்தது. பெரும் நுண்ணறிவைக் கொண்ட ஸ்வேதகி, பல வருடங்கள் நீடிக்கும் வேள்விகளைச் செய்தான். தனக்கு வேள்வி செய்ய உதவி செய்த ரித்விக்குகள், தொடர்ந்து புகைபட்டுக் கண்கள் பாதிப்படைந்து, பலவீனமாகி தன்னைவிட்டுப் போகும்வரை அம்மன்னன் தொடர்ந்து வேள்விகளைச் செய்து வந்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் தங்களால் வேள்விகளில் உதவ முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும், அம்மன்னன் {ஸ்வேதகி}, தொடர்ந்து அந்த ரித்விக்குகளைத் தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், கண்கள் வலி கொண்ட அவர்கள் {ரித்விக்குகள்} அவனது வேள்விக்கு வரவில்லை.

எனவே, அந்த மன்னன் {ஸ்வேதகி}, தன் ரித்விக்குகளின் சிபாரிசில் அந்த ரித்விக்குகளைப் போன்றே உள்ள மற்ற ரித்விக்குகளைக் கொண்டு தான் தொடங்கிய அவ்வேள்வியை முடித்தான். சில நாட்கள் கடந்தது, மன்னன் ஸ்வேதகி நூறுவருடங்கள் செய்வதற்கான மற்றொரு வேள்வியைத் திட்டமிட்டான். ஆனால் அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதிக்கு ஒரு ரித்விக்கும் கிடைக்கவில்லை. அந்தக் கொண்டாடப்பட்ட மன்னன் {ஸ்வேதகி}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து, சோம்பலை விடுத்துத் தனது புரோகிதர்களை, சமாதானப் பேச்சுகள் மூலமும், பரிசுகள் மூலமும், வணங்கியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அளவில்லாச் சக்தி கொண்ட அம்மன்னனின் {ஸ்வேதகியின்} நோக்கத்தைச் சாதிக்க அனைவரும் மறுத்து விட்டனர். கோபம் அடைந்த அந்த அரசமுனி {ஸ்வேதகி}, ஆசிரமங்களில் அமர்ந்திருந்த பிராமணர்களிடம், "பிராமணர்களே நான் வீழ்ந்த மனிதனாக இருந்தாலோ, உங்களுக்குத் தரும் மரியாதையையோ சேவையையோ குறைத்து வழங்குபவனாக இருந்தாலோ உங்களாலோ அல்லது மற்ற பிராமணர்களாலோ இப்படிக் கைவிடப்பட்ட கதியை அடையத் தகுதி வாய்ந்தவனாவேன். ஆனால் நான் உங்களை அவமதிக்கவும் இல்லை, தரம் தாழ்த்தவும் இல்லை. எனவே, பிராமணர்களில் முதன்மையானவர்களே, தகுந்த காரணமில்லாமல் நீங்கள் என்னைக் கைவிட்டு எனது வேள்விக்குத் தடை செய்யக் கூடாது. பிராமணர்களே, நான் உங்கள் பாதுகாப்பைக் கோருகிறேன்! நீங்கள் எனக்கு நன்மை செய்ய வேண்டுகிறேன். ஆனால் பிராமணர்களில் முதன்மையானவர்களே, பகையால் மட்டுமே அல்லது சரியற்ற நோக்கத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கைவிடுவதாக இருந்தால், எனது வேள்விக்குத் துணைபுரிய மற்ற புரோகிதர்களை நாடி, அவர்களிடம் சமாதானமாகவும் இனிமையாகவும் பேசி அவர்களுக்குப் பரிசு கொடுத்து இந்த வேலையை அவர்கள் கையில் கொடுப்பேன்" என்று சொல்லி அந்த ஏகாதிபதி அமைதியடைந்தான்.

எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, பிறகு, தங்களால் மன்னனின் வேள்விக்குத் துணை புரிய முடியாது என்பதை அறிந்த அந்தப் புரோகிதர்கள், தாங்கள் கோபம் கொண்டதாக நடித்து, அந்த மன்னனிடம் {ஸ்வேதகியிடம்}, " மன்னர்களில் சிறந்தவனே, உனது வேள்விகள் இடைவிடாது தொடர்ச்சியாக நடக்கின்றன. உனக்குத் தொடர்ந்து துணை புரிந்து வருவதால், நாங்கள் களைப்படைந்திருக்கிறோம். உழைப்பால் எங்களுக்கு நேர்ந்த களைப்பால், நீ எங்களுக்கு விடுப்பு அளிப்பதே தகும். பாவமற்றவனே, நீதியை இழந்ததால், உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . நீ ருத்ரனிடம் {சிவனிடம்} செல்! அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான்!" என்றனர். கோபத்தால் வந்த அந்தக் கண்டிக்கும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஸ்வேதகி மிகுந்த கோபம் கொண்டான். அந்த ஏகாதிபதி கைலாச மலைக்குச் சென்று, துறவுக்குத் தன்னை அர்ப்பணித்தான். மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதி நிலைத்த கவனத்துடன் மகாதேவனை {சிவனை} வழிபடத் தொடங்கினான்.

அவன் மிகுந்த கடுமையான தவத்தில் ஈடுபட்டான். உணவு உட்கொள்வதைத் தவிர்த்துப் பல காலங்களைக் கடத்தினான். அந்த ஏகாதிபதி {ஸ்வேதகி}, நாள் முழுவதும், சில வேளைகளில் பனிரெண்டாவது மணி நேரத்திலும், சில வேளைகளில் பதினாறாவது மணி நேரத்திலும் பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்டான். மன்னன் ஸ்வேதகி தொடர்ந்து ஒரு காலை உயர்த்தியபடி ஆறுமாதங்களுக்கு நிலைத்த கண்களுடனும், நிலைத்த கவனத்துடனும் ஒரு தூண் தரையில் ஊன்றப்பட்டது போலவும், ஒரு நெடும் மரம் நிற்பது போலவும் நின்றான். பாரதா {ஜனமேஜயா}, இறுதியாக சங்கரன் {சிவன்} கடும் தவம் இருந்த அந்த மனிதர்களில் புலியானவனிடம் மனநிறைவை அடைந்து, அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அந்தத் தேவன் {சிவன்} ஏகாதிபதியிடம் {ஸ்வேதகியிடம்} அமைதியானதும் கடுமையானதுமான குரலில், " மன்னர்களில் புலியே, எதிரிகளைத் தண்டிப்பவனே, உன் தவத்தால் நான் மனநிறைவடைந்தேன். நீ அருளப்பட்டிரு! மன்னா, இப்போது நீ விரும்பிய வரத்தைக் கேள்" என்று கேட்டான்.

அளவற்ற சக்தி கொண்ட ருத்திரனின் {சிவனின்} வார்த்தைகளைக் கேட்ட அரச முனி, அந்தத் தேவனைப் பணிந்து அவனிடம் {சிவனிடம்}, " சிறப்பு மிகுந்தவனே, மூன்று உலகத்தாலும் வழிபடப்படுபவனே, நீ என்னிடம் மனநிறைவடைந்தாய் என்றால், தேவர்களுக்குத் தேவா, தேவர்களுக்குத் தலைவா, எனது வேள்விகளில் நீ எனக்குத் துணை புரிவாயாக" என்று கேட்டான். ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்} பெரும் மனநிறைவு கொண்டு, புன்னகைத்து, "{தேவர்களாகிய} நாங்கள் வேள்விகளுக்குத் துணை புரிவதில்லை; ஆனால், மன்னா, கடுந்தவங்களை இயற்றிய நீ வரமாக இதை விரும்புவதால், இச்சூழ்நிலையில், எதிரிகளைத் தண்டிப்பவனே, நான் உனது வேள்விக்குத் துணை புரிகிறேன்" என்றான். ருத்திரன் மேலும் தொடர்ந்து, " மன்னர் மன்னா! தொடர்ந்த பனிரெண்டு வருடங்களுக்கு நீ இடைவிடாமல் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு நிலைத்த கவனத்துடன் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால், நீ என்னிடம் கேட்பதை அடைவாய்" என்றான் {சிவன்}.

ருத்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் ஸ்வேதகி, அந்தத் திரிசூலம் தாங்கியவன் {சிவன்} வழிகாட்டியபடியே நடந்து கொண்டான். பனிரெண்டு வருடங்கள் கடந்தன, அங்கே மகேஸ்வரன் {சிவன்} மீண்டும் வந்தான். உலகத்தை உண்டாக்கிய அந்தச் சங்கரன், அந்த அற்புதமான ஏகாதிபதியான ஸ்வேதகியைக் கண்டு பெரும் மனநிறைவு அடைந்து உடனடியாக அவனிடம், "நான் உனது செயல்களால் மனநிறைவடைந்தேன். ஆனால், மன்னர்களில் சிறந்தவனே, வேள்விகளில் துணைபுரிவது பிராமணர்களின் கடமையாகும். எனவே, எதிரிகளைத் தண்டிப்பவனே, நானே வந்து உனது வேள்வியில் இன்று துணை புரிய மாட்டேன். இந்தப் பூமியில் எனது சுயத்தின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த பிராமணன் இருக்கிறான். அவன் துர்வாசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். பெரும் சக்தி கொண்ட அந்த பிராமணன் {துர்வாசன்} உனது வேள்வியில் உனக்குத் துணையாக இருப்பான். எனவே, வேள்விக்கான தயாரிப்புகள் தொடங்கட்டும்" என்றான் {சிவன்}.

ருத்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தனது தலைநகருக்குத் திரும்பி, தேவையானவற்றைச் சேகரித்தான். அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த மன்னன் {ஸ்வேதகி} மறுபடியும் ருத்திரனிடம் சென்று, "அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாகிவிட்டது. உனது கருணையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. தேவர்களுக்குத் தேவா, நாளை வேள்வியில் நீ நிறுவப்பட்டிருப்பாயாக" என்றான். அந்தச் சிறப்புவாய்ந்த மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட ருத்திரன், துர்வாசரை அழைத்து, அவரிடம், " துர்வாசரே, இந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஸ்வேதகி என்று அழைக்கப்படுகிறான். பிராமணர்களில் சிறந்தவரே {துர்வாசரே}, எனது கட்டளையின் பேரில், நீர் இந்த மன்னனுக்கு அவனது வேள்வியில் துணை புரியும்" என்று சொன்னார். அதற்குத் துர்வாச முனிவர் ருத்திரனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்.

மன்னன் சுவேதகியின் ஏற்பாடுகள் முடிந்து வேள்வி நடந்தது. அந்தச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதி தகுந்த காலத்தில் விதிப்படி வேள்வியைச் செய்தான். அந்த நேரத்தில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் அதிகமாக இருந்தன. அந்த ஏகாதிபதியின் வேள்வி முடிவுக்கு வந்ததும் துணை புரிய வந்த புரோகிதர்கள் அனைவரும் துர்வாசருடன் சென்று விட்டார்கள். வேள்வியில் இருந்த அளவிடமுடியாத சக்தி கொண்ட மற்ற அனைத்து சத்யஸ்யர்களும் சென்று விட்டார்கள். அந்த உயர்ந்த ஏகாதிபதி! வேதங்களை அறிந்த உயர்ந்த பிராமணர்களாலும் வழிபடப்பட்டுக் குடிமக்களால் பாராட்டப்பட்டு, வாழ்த்துப்பா பாடப்பட்டு, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். இதுதான் ஏகாதிபதிகளில் சிறந்த அரசமுனி ஸ்வேதகியின் வரலாறு. பூமியில் பெரும் புகழ் கொண்ட அவனுக்கு நேரம் வந்ததும் தனக்கு வாழ்க்கையில் உதவிய ரித்விக்குகளுடனும், சத்யஸ்யர்களுடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்".

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஸ்வேதகியின் அந்த வேள்வியில் அக்னி தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்குச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் குடித்திருந்தான்.  நிச்சயமாக அந்தக் காலத்தில், தூய்மையாக்கப்பட்ட நெய் அக்னியின் வாயில் தொடர்ந்து உற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு அதிகமாகக் குடித்த அக்னிக்கு நெய் மிகவும் தெவிட்டி, இனி யார் கையிலும் எந்த வேள்வியிலும் நெய் உண்ணக்கூடாது என்று விரும்பினான். அக்னி தனது நிறத்தையும் பளபளப்பையும் இழந்து மங்கிப் போனான். அளவுக்கு அதிகமாக {நெய்யை} உண்டு தெவிட்டும் நிலையை அடைந்ததால் அவன் பசியற்ற {ஜீரணிக்காத} நிலையை உணர்ந்தான். அவனுக்கு சக்தி குறைந்து, நோயால் பாதிக்கப்பட்டான். வேள்வி நெய்யைக் குடிப்பவன் {அக்னி}, தனது சக்தி சிறுகச் சிறுக குறைவதைக் கண்டு, அனைவராலும் வழிபடப்படும் பிரம்மனின் புனிதமான வசிப்பிடம் சென்றான்.  தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அந்தத் தேவனை {பிரம்மனை} அணுகிய அக்னி அவனிடம் {பிரம்மனிடம்}, " உயர்ந்தவனே, ஸ்வேதகி {தனது வேள்வியில்} என்னை அளவுக்கதிகமாக மனநிறைவு கொள்ளச் செய்தான். தவிர்க்க முடியாத தெவிட்டும் நிலையால் இன்னும் நான் பாதிப்படைந்திருக்கிறேன். அண்டத்தின் தலைவா {பிரம்மா}, நான் பிரகாசத்தாலும் சக்தியாலும் குறைந்து வருகிறேன். உமது கருணையால் நான் எனது இயல்பான தன்மையை மறுபடி அடைய விரும்புகிறேன்" என்று கேட்டான். ஹூதவாஹனின் {அக்னியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறப்புமிகுந்த படைப்பாளி {பிரம்மன்}, அவனிடம் {அக்னியிடம்} புன்னகைத்து, " உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது. ஆனால் அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையைப் போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய எதிரிகளின் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அஃது இப்போது எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு இல்லமாகி இருக்கிறது. அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களை உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்" என்றான் {பிரம்மன்}.

இந்த வார்த்தைகளை உயர்ந்த தேவனின் உதடுகளில் இருந்த அறிந்த அந்த ஹூதசானன் {அக்னி}, பெரும் வேகத்துடன் சென்றான். விரைவாகவும், பெரும் உற்சாகத்துடனுடம் அந்தக் காண்டவப் பிரஸ்தத்தை அடைந்து, காற்றின் {வாயுவின்} உதவியுடன் அதை முழு வீரியத்துடன் எரிக்கத் தொடங்கினான். அவன் காண்டவ வனம் பற்றி எரிவதைக் கண்ட அந்தக் கானக வாசிகள், பெரும் முயற்சி எடுத்து அந்தப் பெருந்தீயை அணைக்க முயன்றனர். நூறாயிரம் {ஒரு லட்சம்} யானைகள், கோபம் கொண்ட வேகத்துடன், தங்கள் துதிக்கைகளில் நீர் கொண்டு வந்து நெருப்பின் மீது இரைத்தன. கோபத்தால் வெறியை அடைந்தவையும்,  ஆயிரக்கணக்கானவையும், பல தலைகளைக் கொண்டவையுமான நாகங்கள், தங்கள் பல தலைகளிலும் இருந்தும் நீரை இரைத்து அந்த நெருப்பை அணைக்க முயன்றன. பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா} மற்ற கானகவாழ் உயிரினங்கள், பல்வேறு வழிகளிலும், பலவிதமான முயற்சிகளிலும் அந்த நெருப்பை அணைத்தன. இதே போல அக்னி ஏழு முறை அந்தக் காண்டவ வனத்தை எரித்தான். இப்படியே கானகத்தில் சுடர்விட்டெரிந்த அந்த நெருப்பு, அக்கானக வாசிகளால் அணைக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.

.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top