clone demo
கிருபர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருபர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 29, 2017

சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்! - கர்ண பர்வம் பகுதி – 75

Sushena slained by Uttamaujas! | Karna-Parva-Section-75 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட போரின் தன்மையைத் திருதராஷ்டிரனுக்கு விளக்கிய சஞ்சயன்; அர்ஜுனன் ஏற்படுத்திய அழிவு; எவரெவர் எவரெவரோடு மோதினர் என்ற குறிப்பு; கர்ணனின் மகனான சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்; உத்தமௌஜஸைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கிருபரின் குதிரைகளைத் தாக்கிவிட்டு சிகண்டியின் தேரில் ஏறிக் கொண்ட உத்தமௌஜஸ்; தேரிழந்த கிருபரைக் கொல்லாமல் விட்ட சிகண்டி; கிருபரை மீட்ட அஸ்வத்தாமன்; பீமனின் ஆவேசத் தாக்குதல்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், என் படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், பயங்கரமானதும், நிலைகாண முடியாததுமான அம்மோதலில் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடச் சென்ற போது, உண்மையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது?” என்று கேட்டான்.(1)

வெள்ளி, மார்ச் 24, 2017

சுகேதுவைக் கொன்ற கிருபர்! - கர்ண பர்வம் பகுதி – 54

Kripa killed Suketu! | Karna-Parva-Section-54 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)

புதன், பிப்ரவரி 08, 2017

பாஞ்சால இளவரசர்களின் தோல்வி! - கர்ண பர்வம் பகுதி – 26

The defeat of the Panchala Princes! | Karna-Parva-Section-26 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நேரந்த போர்; பீமனை நோக்கி ஓடிய திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனை வென்ற கிருபர்; சிகண்டியின் வில்லை வெட்டிய கிருதவர்மன்; கிருதவர்மனின் வில்லை வெட்டிய சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருதவர்மன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “செருக்குமிக்கச் சிங்கமொன்றைக் காட்டில் தடுக்கும் ஒரு சரபத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரேயொரு எட்டு {நடையடி} கூட முன்னேற முடியவில்லை.(2) கௌதமரின {கிருபரின்} தேரானது திருஷ்டத்யும்னனின் தேருக்கும் முன்பு இருப்பதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து, பின்னவன் {திருஷ்டத்யும்னன்} அழியும் சமயம் வந்துவிட்டதெனக் கருதின.(3)


உற்சாகமிழந்தவர்களான தேர்வீரர்கள் மற்றும் குதிரைவீரர்கள், “வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், மனிதர்களில் முதன்மையானவருமான சரத்வான் மகன் {கிருபர்}, துரோணரின் மரணத்தால் சினத்தால் நிறைந்திருக்கிறார். இன்று திருஷ்டத்யும்னன், கௌதமரின் {கிருபரின்} கைகளில் இருந்து தப்ப முடியுமா?(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா? இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா?(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணரைப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இருபடை போர்வீரர்களாலும் பேசப்படும் இது போன்ற பல்வேறு பேச்சுக்களைக் கேட்டபடியே அந்த இருவீரர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(9)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவரும், சரத்வான் மகனுமான கிருபர், செயல்படாமல் நின்றிருந்த பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பீடிக்கத் தொடங்கினார்.(10) அந்தப் போரில் சிறப்புமிக்கக் கௌதமரால் {கிருபரால்} தாக்கப்பட்டுப் பெரிதும் கலக்கமடைந்த திருஷ்டத்யும்னன் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(11) அப்போது அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} அவனது சாரதி, “ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா? போரில் இதற்கு முன்னர் இதுபோன்ற பேரிடரில் நீ சிக்குவதை நான் கண்டதில்லை.(12) உன் முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் {கிருபரால்} ஏவப்படுபவையும், முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையுமான இந்தக் கணைகள் உன்னைத் தாக்காமல் இருப்பது நல்லூழ் தரும் ஒரு வாய்ப்பாலேயே.(13) கடலால் திருப்பப்படும் ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போல, இப்போது நான் இந்தத் தேரைத் திருப்பப்போகிறேன். உன் ஆற்றலை அழிக்கும் அந்தப் பிராமணர் {கிருபர்}, உன்னால் கொல்லப்பட முடியாதவர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருஷ்டத்யும்னனின் சாரதி}.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன் மெதுவாக, “ஓ! ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக அர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ! ஐயா, அவ்விடத்தில் இருந்து திருஷ்டத்யும்னனின் தேர் விலகிச் செல்வதைக் கண்ட கௌதமர் {கிருபர்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடையே அதைப் பின்தொடர்ந்து சென்றார்.(19) அந்த எதிரிகளை அழிப்பவர், மீண்டும் மீண்டும் தன் சங்கையும் முழங்கினார். உண்மையில் அவர் {கிருபர்}, தானவன் நமுசியை {நமூச்சியை} முறியடித்த இந்திரனைப் போலவே, அந்தப் பிருஷதன் மகனை முறியடித்தார்.(20)

பீஷ்மரின் மரணத்திற்குக் காரணனும், வெல்லப்பட முடியாதவனுமான சிகண்டி, தன்னோடு சிரித்துக் கொண்டே போரிட்டுக் கொண்டிருந்த ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} அந்தப் போரில் தடுக்கப்பட்டான்.(21) எனினும் சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகனோடு {கிருதவர்மனோடு} மோதி, ஐந்து கூரிய கணைகளாலும், அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்} அவனது {கிருதவர்மனது} தோள்பூட்டைத் தாக்கினான்.(22) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த அறுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு ஒற்றைக்கணையொன்றால் அவன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே அவனது {சிகண்டியின்} வில்லை வெட்டினான்.(23) அந்த வலிமைமிக்கத் துருபதன் மகனை {சிகண்டி}, கோபத்தால் நிறைந்து மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(24) பிறகு அந்தச் சிகண்டி, ஓ! ஏகாதிபதி, பெரும் வேகம் கொண்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான தொண்ணூறு கணைகளைத் தன் எதிரியின் {கிருதவர்மனின்} மீது ஏவினான். எனினும் அந்தக் கணைகள் அனைத்தும் கிருதவர்மனின் கவசத்தில் இருந்து எதிர்விசை கொண்டு விழுந்தன.(25)

அக்கணைகள் எதிர்விசை கொண்டு பூமியின் பரப்பில் இறைந்து கிடப்பதைக் கண்ட சிகண்டி, ஒரு கத்தி தலைக் கணையால் கிருதவர்மனின் வில்லை அறுத்தான்.(26) கோபத்தால் நிறைந்த அவன் {சிகண்டி}, கொம்புகளற்ற காளைக்கு ஒப்பாக வில்லற்றவனாக இருந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் எண்பது கணைகளால் தாக்கினான்.(27) நீரால் நிரம்பிய கொள்கலனொன்று நீரைக் கொப்பளிப்பதைப் போலக் கணைகளால் கிழித்துச் சிதைக்கப்பட்டிருந்த கிருதவர்மன், சினத்தால் நிறைந்திருந்தாலும், தன் அங்கங்களின் ஊடாகக் குருதியைக் கக்கினான்.(28) குருதியில் குளித்த அந்தப் போஜ மன்னன் {கிருதவர்மன்}, மழைக்குப் பிறகு செஞ்சுண்ண நீரோடையைக் கீற்றுகளாக வெளியிடும் மலையொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(29)

அப்போது, நாணேற்றப்பட்டதும், கணையொன்று பொருத்தப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்கக் கிருதவர்மன், சிகண்டியின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(30) தோள்ப்பூட்டில் இக்கணைகளால் தைக்கப்பட்டிருந்த சிகண்டி, கிளைகளும், கொப்புகளும் பரப்பிய பெரிய மரம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(31) ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டே குருதியில் குளித்து அவ்விரு போராளிகளும், கொம்புகளால் ஒன்றையொன்று குத்திக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர்.(32) கவனமாக ஒருவரையொருவர் கொல்ல முயன்ற அவ்வரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்த அரங்கத்தில் ஓராயிரம் வளையங்களில் நகர்ந்து சென்றனர்.(33)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரனிடம்}, அம்மோதலில் கிருதவர்மன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் பிருஷதன் மகனை {சிகண்டியைத்} துளைத்தான்.(34) பிறகு தாக்குபவர்களில் சிறந்தவனான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, பெரும் சுறுசுறுப்புடன் பயங்கரமான ஒரு மரணக் கணையைத் தன் எதிரியின் {சிகண்டியின்} மீது ஏவினான்.(35) அதனால் தாக்கப்பட்ட சிகண்டி, விரைவில் மயக்கமடைந்தான். மலைப்புக்கு ஆட்பட்ட அவன் {சிகண்டி}, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டே தன்னைத் தாங்கிக் கொண்டான்.(36) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுடைய சாரதி, விரைவாக அவனைப் {சிகண்டியைப்} போரில் இருந்து கொண்டு சென்றான். ஹிருதிகன் மகனின் கணையால் எரிக்கப்பட்ட அவன் {சிகண்டி},மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டான்.(37) துருபதனின் வீரமகன் {சிகண்டி} தோற்ற பிறகு, ஓ! தலைவா, அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, களத்தில் இருந்து வெளியே ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(38)
----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 26-ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

வெள்ளி, டிசம்பர் 02, 2016

அஸ்வத்தாமனிடம் பேசிய கிருபர்! - துரோண பர்வம் பகுதி – 194

Kripa spoke to Ashwatthama! | Drona-Parva-Section-194 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டு கௌரவர்கள் ஓடியபோது, அஸ்வத்தாமன் மட்டுமே ஓடாமல் இருந்தது; அஸ்வத்தாமனுக்கு உண்மையைத் தெரிவிக்கும்படி கிருபரிடம் சொன்ன துரியோதனன்; துரோணரின் மரணம் குறித்து அஸ்வத்தாமனிடம் சொன்ன கிருபர்; துரோணரின் மரணத்தைக் கேட்ட அஸ்வத்தாமனின் சீற்றம்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் வீழ்ந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களால் பீடிக்கப்பட்ட குருக்கள், தங்கள் தலைவரை இழந்து, அணி பிளந்து, முறியடிக்கபட்டு துயரால் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(1) தங்கள் எதிரிகள் (பாண்டவர்கள்) தங்களைவிட விஞ்சி நிற்பதைக் கண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் நடுங்கினர். அவர்களது கண்கள் கண்ணீரால் நிரம்பின; இதயங்கள் அச்சங்கொண்டன, ஓ! மன்னா, துயரின் மூலம் சக்தியை இழந்த அவர்கள், துக்கத்தை அடைந்து, உற்சாகத்தை இழந்து, முயற்சியற்றவர்களானார்கள்.(2,3) புழுதியால் மறைக்கப்பட்டு, (அச்சத்தால்) நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் வெறுமையாகப் பார்த்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் கூடிய அவர்கள், பழங்காலத்தில் ஹிரண்யாக்ஷனின் வீழ்ச்சிக்குப் பிறகான தைத்தியர்களுக்கு ஒப்பாக இருந்தனர்.(4) சிறு விலங்குகளைப் போன்ற அவர்கள் அனைவராலும் சூழப்பட்ட உமது மகனோ {துரியோதனனோ}, அவர்களுக்கு மத்தியில் நிற்கமுடியாமல் அங்கிருந்து சென்றான்.(5)


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பசியாலும் தாகத்தாலும் பீடிக்கப்பட்டு, சூரியனால் சுடப்பட்ட உமது போர்வீரர்களோ மிகவும் உற்சாகமற்றவர்களாக ஆனார்கள்.(6) சூரியன் பூமியில் விழுவதையோ, பெருங்கடல் வற்றிப் போவதையோ, மேரு தடம்புரள்வதையோ, வாசவனின் {இந்திரனின்} தோல்வியையோ போன்ற அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} வீழ்ச்சியைக் கண்டு, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாத கௌரவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் ஏற்பட்ட பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள்.(7,8)

தங்கத் தேரைக் கொண்ட துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட காந்தாரர்களின் ஆட்சியாளன் (சகுனி), தன் படைப்பிரிவைச் சேர்ந்த தேர்வீரர்களுடன் சேர்ந்து, பெரும் வேகத்துடன் தப்பி ஓடினான்.(9)

சூதனின் மகனும் {கர்ணனும்} கூட, கொடிமரங்கள் அனைத்துடன் கூடியதும், பெரும் வேகத்துடன் பின்வாங்கிக் கொண்டிருந்ததுமான தனது பரந்த படைப்பிரிவையும் அழைத்துக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினான்.(10)

மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியனும் கூட, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்த தனது படைப்பிரிவை அழைத்துக் கொண்டு, சுற்றிலும் வெறுமையாகப் பார்த்தபடியே அச்சத்தால் தப்பி ஓடினான்.(11)

சரத்வானின் மகனான கிருபரும் கூட, பெரும்பகுதி கொல்லப்பட்டிருந்த தனது யானைப்படைப்பிரிவையும், காலாட்படைப்பிரிவையும் அழைத்துக் கொண்டு, "ஐயோ, ஐயோ" என்று சொல்லிக் கொண்டே தப்பி ஓடினான்.(12)

கிருதவர்மனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது போஜ, கலிங்க, ஆரட்ட, பாஹ்லீக துருப்புகளில் எஞ்சியோரால் சூழப்பட்டு வேகமாகச் செல்லும் குதிரைகளில் தப்பி ஓடினான்.(13)

உலூகனும், ஓ! மன்னா, துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காலாட்படைவீரர்களுடைய பெரும்பகுதியின் துணையோடு பெரும் வேகத்துடன் தப்பி ஓடினான்.(14)

அழகனும், இளமை கொண்டவனும், துணிச்சலுக்காக அறியப்பட்டவனுமான துச்சாசனனும் கூட, தனது யானைப்படையால் சூழப்பட்டுப் பெரும் துயரத்துடன் தப்பி ஓடினான்.(15)

தன்னுடன் பத்தாயிரம் தேர்களையும், மூவாயிரம் யானைகளையும் அழைத்துச் சென்ற விருஷசேனன், துரோணரின் வீழ்ச்சியைக் கண்ட மாத்திரத்தில் வேகமாகத் தப்பி ஓடினான்.(16)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது யானைகள், குதிரை, தேர்கள் ஆகியவற்றின் துணையுடன் கூடியவனும், காலாட்படை வீரர்களால் சூழப்பட்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனும் தப்பி ஓடவே செய்தான்.(17)

துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட {திரிகர்த்த மன்னன்} சுசர்மன், ஓ! மன்னா, அர்ஜுனனால் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த சம்சப்தகர்களை அழைத்துக் கொண்டு தப்பி ஓடினான்.(18)

தங்கத்தேர் கொண்ட துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட கௌரவப் போர்வீரர்கள் அனைவரும், யானைகளிலும், தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி, களத்தில் இருந்து தப்பி ஓடினர்.(19) சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் தாய்மாமன்களையும், சிலர் தங்கள் மகன்களையும், சிலர் தங்கள் நணபர்களைத் தூண்டியபடியே அந்தக் கௌரவர்கள் தரப்பில் தப்பி ஓடினர்.(20) தங்கள் சகோதரர்களையோ, தங்கள் சகோதரிகளின் மகன்களையோ, தங்கள் சொந்தங்களையோ ஆயுதமெடுக்கத் தூண்டிய பிறர் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(21) கலைந்த கேசங்களுடனும், ஆடைகள் தளர்ந்த நிலையிலும், ஒன்றாகச் சேர்ந்து ஓடும் இருவர் என எவரும் தென்படாதவகையில் அவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். “குரு படை முற்றாக அழிந்தது” என்பதே அனைவரின் நம்பிக்கையாகவும் இருந்தது.(22) உமது துருப்புகளில் பிறர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கவசங்களை வீசி எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் உரக்க அழைத்த படைவீரர்கள்,(23) “நில்லுங்கள், நில்லுங்கள், ஓடாதீர்கள்” என்றனர். ஆனால் அப்படிச் சொன்னவர்களில் கூட எவரும் களத்தில் நிற்கவில்லை. ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களையும் தேர்களையும் கைவிட்ட போர்வீரர்கள்,(24) குதிரைகளில் ஏறியோ, தங்கள் கால்களைப் பயன்படுத்தியோ பெரும் வேகத்துடன் தப்பி ஓடினர்.

சக்தியை இழந்த துருப்புகள் இப்படிப் பெரும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த போது,(25) நீரோட்டத்தை எதிர்த்து வரும் பெரும் முதலையொன்றைப் போலத் துரோணரின் மகனான அஸ்வத்தாமன் மட்டுமே தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். சிகண்டியின் தலைமையிலான போர்வீரர்கள் பலர், பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் மற்றும் கைகேயர்கள் ஆகியோருக்கும் அவனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையில் கடும்போர் நடைபெற்றது. எளிதில் வீழ்த்தமுடியாத பாண்டவப் படையின் போர்வீரர்கள் பலரைக் கொன்று,(27) போரின் நெருக்கத்தில் இருந்து கடினத்துடன் தப்பித்தவனும், யானையின் நடையைக் கொண்டவனுமான அந்த வீரன் {அஸ்வத்தாமன்}, தப்பி ஓடுவதில் தீர்மானமாக இருந்த (அந்தக் கௌரவப்) படையானது ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(28)

துரியோதனனை நோக்கிச் சென்ற அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் குரு மன்னனை அணுகி, “ஓ! பாரதா {துரியோதனா}, அச்சத்திலிருப்பதைப் போலத் துருப்புகள் ஏன் ஓடுகின்றன?(29) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவர்கள் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் நீ அவர்களை அணிதிரட்டாமல் இருக்கிறாயே. ஓ! மன்னா {துரியோதனா}, நீயே கூட வழக்கமான மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.(30) ஓ! ஏகாதிபதி, தேர்வீரர்களில் சிங்கமான எவர் கொல்லப்பட்டதால் உனது படை இப்படிப் பீதியடைந்திருக்கிறது? ஓ! கௌரவா {துரியோதனா}, இதை நீ எனக்குச் சொல்வாயாக.(31) கர்ணனால் தலைமைதாங்கப்பட்ட இவர்கள் அனைவரும் (கூட) களத்தில் நிற்கவில்லையே. இதற்கு முன் மோதிய எந்தப் போரிலும் இந்தப் படை இப்படி ஓடியதில்லையே. ஓ! பாரதா, உனது துருப்புகளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்திருக்கிறதா?” என்று கேட்டான் {அஸ்வத்தாமன்}.

அந்தச் சந்தர்ப்பத்தில் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், மன்னர்களில் காளையுமான துரியோதனன்,(33) அந்தத் துக்கச் செய்தியைச் சொல்ல இயலாதவனாகத் தன்னை உணர்ந்தான். உண்மையில் உமது மகன் {துரியோதனன்}, துன்பக்கடலில் மூழ்கும் ஒரு படகைப் போலவே காணப்பட்டான்.(34) துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அவனது தேரில் கண்ட மன்னன் {துரியோதனன்} கண்ணீரால் குளித்தவனானான். அவமானத்தால் நிறைந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சரத்வானின் மகனிடம் {கிருபரிடம்},(35) “நீர் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் படை ஏன் இப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பிறருக்கு முன்னிலையில் சொல்வீராக” என்றான். பிறகு சரத்வானின் மகன் {கிருபர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் மீண்டும் பெரும் கவலையையடைந்து, துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} அவனது தந்தை {துரோணர்} எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதைச் சொன்னார்.(36)

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “பூமியின் தேர்வீரர்களில் முதன்மையான துரோணரை எங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாஞ்சாலர்களோடு மட்டுமே நாங்கள் போரிடத் தொடங்கினோம்.(37) போர் தொடங்கியபோது, குருக்களும், சோமகர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து, ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி, தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தத் தொடங்கினர்.(38) அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, தார்தராஷ்டிரர்கள் குறையத் தொடங்கினர். இதைக் கண்ட உன் தந்தை {துரோணர்}, சினத்தால் நிறைந்து ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்பு அழைத்தார்.(39) உண்மையில், மனிதர்களில் காளையான அந்தத் துரோணர், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றார்[1].(40)

[1] “மந்திரங்களால் இருப்புக்கு அழைக்கப்படும் தெய்வீக ஆயுதங்களைக் குறித்து முந்தைய குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அழைப்பவர் விரும்பியபடி அனைத்து வகைகளிலான உறுதியான ஆயுதங்களை உண்டாக்கும் சக்திகளே தெய்வீக ஆயுதங்கள். இங்கே இந்தப் பிரம்மாயுதம், அகன்ற தலைக் கணைகளின் {பல்லங்களின்} வடிவை ஏற்றது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

விதியால் உந்தப்பட்ட பாண்டவர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவனே {அஸ்வத்தாமனே}, துரோணரை அணுகி அழியத் தொடங்கினர்.(41) துரோணர், தமது பிரம்மாயுதத்தைக் கொண்டு, துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் ஓராயிரம் பேரையும், ஈராயிரம் குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தார்.(42) கரிய நிறத்தவரும், காதுவரை தொங்கிக் கொண்டிருக்கும் நரைத்த குழல்களைக் கொண்டவரும், முழுமையாக எண்பத்தைந்து வயதான கிழவருமான[2] அந்தத் துரோணர், பதினாறு வயது இளைஞனைப் போலப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(43) எதிரியின் துருப்புகள் பீடிக்கப்பட்டு மன்னர்கள் இப்படிக் கொல்லப்பட்ட போது, பாஞ்சாலர்கள் பழிதீர்க்கும் விருப்பத்தால் நிறைந்திருந்தாலும், போரில் புறமுதுகிட்டனர்.(44) எதிரி புறமுதுகிட்டு ஒரு பகுதியில் தங்கள் நிலையை இழந்த போது, அந்த எதிரிகளை வெல்பவர் (துரோணர்), தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தார்.(45)

[2] வேறொரு பதிப்பில், “காதுவரையில் நரைத்தவரும், கரிய நிறமுடையவரும், நானூறு பிராயமுள்ளவரும் கிழவருமான துரோணர் பதினாறு வயதுள்ள வாலிபன் போல யுத்தத்தில் நான்குபுறத்திலும் சஞ்சரித்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. முந்தைய பகுதியிலும் துரோணரின் வயது பற்றிய குறிப்பு வருகிறது. அங்கேயும் இந்தப் பதிப்புகளில் இதுபோன்ற வேறுபாடுகளே இருக்கின்றன.

உண்மையில், வீரமிக்க உன் தந்தை {துரோணர்}, பாண்டவர்களின் மத்தியை அடைந்து, தன்னில் எழுந்த கதிர்களைப் போன்ற கணைகளுடன், எவராலும் பார்க்கப்பட முடியாத நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாக இருந்தார். சுடர்மிக்கச் சூரியனால் எரிக்கப்படுவதைப் போலத் துரோணரால் எரிக்கப்பட்ட அவர்கள் தங்கள் உற்சாகத்தை இழந்து, தங்கள் சக்தியையும், புலன் உணர்வுகளையும் இழந்தனர்.(47) துரோணரின் கணைகளால் இப்படிப் பீடிக்கப்படும் அவர்களைக் கண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, பாண்டு மகன்களின் வெற்றியை விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(48) “ஆயுதந்தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், தேர்ப்படைத் தலைவர்களின் தலைவருமான இவர் {துரோணர்}, விருத்திரனைக் கொன்றவனாலேயே {இந்திரனாலேயே} கூடப் போரில் வெல்லப்பட முடியாதவராவார். பாண்டுவின் மகன்களே, தங்கத் தேர் கொண்ட துரோணர், போரில் உங்கள் அனைவரையும் கொல்ல முடியாதவாறு, அறத்தை விட்டுவிட்டு வெற்றியில் கவனம் கொள்வீராக. அஸ்வத்தாமனின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர் போரிடமாட்டார் என்று நான் நினைக்கிறேன். போரில் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்று எவனாவது ஒருவன் அவரிடம் பொய் சொல்லட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)

இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை ஏற்கவில்லை. எனினும், மற்ற அனைவரின் ஏற்பையும், ஏன் சிறிது கடினத்துடன் {தயக்கத்துடன்} யுதிஷ்டிரனுடைய ஏற்பையே கூட அவை பெற்றன.(52) பிறகு, மருந்தளவே நாணம் கொண்ட பீமசேனன், உனது தந்தையிடம் {துரோணரிடம்}, “அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்றான். எனினும் உனது தந்தையோ அவனை {பீமனை} நம்பவில்லை.(53) அந்தச் செய்தி தவறானது என ஐயங்கொண்டவரும், உன்னிடம் மிகுந்த பாசத்தைக் கொண்டவருமான உனது தந்தை {துரோணர்}, நீ உண்மையில் இறந்துவிட்டாயா? இல்லையா? என்று யுதிஷ்டிரனிடம் விசாரித்தார்.(54) பொய் சொல்லும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனும், அதே வேளையில் வெற்றியை வேண்டியவனுமான யுதிஷ்டிரன், மாலவத் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்று அழைக்கப்பட்டதும், மலை போன்று பெரியதுமான வலிமைமிக்க யானையொன்றைக் களத்தில் பீமன் கொல்வதைக் கண்டு, துரோணரை அணுகி அவரிடம்,(55,56) “எவனுக்காக நீர் ஆயுதம் தரித்திருக்கிறீரோ, எவனுக்காக நீர் வாழ்ந்து கொண்டிருக்கிறீரோ, எப்போதும் அன்புக்குரியவனான அந்த உமது மகன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்.(57) உயிரை இழந்த அவன், இளம் சிங்கத்தைப் போல வெறுந்தரையில் கிடக்கிறான்” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}. பொய்மையின் தீய விளைவுகளை முற்றாக அறிந்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, (அஸ்வத்தாமன் என்ற) யானையைத் தெளிவில்லாமல் சேர்த்து, இந்த வார்த்தைகளை அந்தப் பிராமணர்களில் சிறந்தவரிடம் {துரோணரிடம்} சொன்னான்[3].

[3] துரோண பர்வம் பகுதி 194ல் பீமன் சொன்னதாக உள்ள வார்த்தைகள் இங்கே யுதிஷ்டிரன் சொல்வதாக வருகின்றன. நாம் ஒப்பிட்டு வரும் மூன்று பதிப்புகளிலும் இப்படியே சொல்பவர்களின் பெயர்கள் பகுதிக்குப் பகுதி முரண்பட்டே இருக்கின்றன. மேற்கண்ட வார்த்தைகளில் யானை என்ற வார்த்தைகளைக் கலந்து சொன்னால் துரோணரால் அஃதை எப்படி நம்பியிருக்க முடியும்? எனவே இங்கே சொற்கள் குழம்பியிருக்கின்றன என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை மேற்கண்ட வாக்கியங்கள் கீழ்க்கண்டவாறு, “பொய் சொல்லும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனும், அதே வேளையில் வெற்றியை வேண்டியவனுமான யுதிஷ்டிரன், மாலவத் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்று அழைக்கப்பட்டதும், மலை போன்று பெரியதுமான வலிமைமிக்க யானையொன்றைக் களத்தில் பீமன் கொல்வதையும், அவன் {பீமன்} துரோணரை அணுகி அவரிடம்,(55,56) “எவனுக்காக நீர் ஆயுதம் தரித்திருக்கிறீரோ, எவனுக்காக நீர் வாழ்ந்து கொண்டிருக்கிறீரோ, எப்போதும் அன்புக்குரிய அந்த உமது மகன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்.(57) உயிரை இழந்த அவன், இளம் சிங்கத்தைப் போல வெறுந்தரையில் கிடக்கிறான்” என்ற வார்த்தைகளை {பீமன்} சொல்வதையும் கண்டான் {யுதிஷ்டிரன்}. பொய்மையின் தீய விளைவுகளை முற்றாக அறிந்த அந்த மன்னன், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரிடம் (அஸ்வத்தாமன் என்ற) யானையைத் தெளிவில்லாமல் சேர்த்துப் பேசினான்” என அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தமது மகனின் {அஸ்வத்தாமனின்} வீழ்ச்சியைக் கேட்ட அவர் {துரோணர்}, துயரால் பீடிக்கப்பட்டு உரக்க ஓலமிடத் தொடங்கினார்.(58,59) தன் தெய்வீக ஆயுதங்களை (அவற்றின் சக்தியைக்) குறைத்துக் கொண்ட அவர் {துரோணர்}, முன்பு போலப் போரிடவில்லை. கவலையால் நிறைந்து, துயரால் கிட்டத்தட்ட தமது புலன் உணர்வுகளை இழந்திருந்த அவரைக் கண்டவனும்,(60) கொடூரச் செயல்களைச் செய்பவனுமான பாஞ்சால மன்னன் மகன் {திருஷ்டத்யும்னன்}, அவரை நோக்கி விரைந்தான். தம்மைக் கொல்ல விதிக்கப்பட்டவனான அந்த இளவரசனைக் கண்டவரும், மனிதர்கள் மற்றும் பொருட்களைக் குறித்த உண்மைகள் அனைத்தையும் அறிந்தவருமான துரோணர்,(61) தமது தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டுப் போர்க்களத்தில் பிராயத்தில் அமர்ந்தார்.

அப்போது துரோணரின் தலையைத் தன் இடது கையால் பிடித்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, வீரர்கள் அனைவரின் உரத்த அறிவுரைகளையும் அலட்சியம் செய்துவிட்டு அந்தத் தலையை வெட்டினான். “துரோணர் கொல்லப்படக்கூடாது” என்பதே அனைத்துப் பக்கங்களிலும் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தன.(62,63) அதே போல அர்ஜுனனும், தன் தேரில் இருந்து கீழே குதித்து, பிருஷதன் மகனை நோக்கி கரங்களை உயர்த்திக்கொண்டு வேகமாக ஓடிய படியே,(64) “ஓ! அறநெறிகளை அறிந்தவனே {திருஷ்டத்யும்னனே}, ஆசானை உயிருடன் கொண்டுவா, கொல்லாதே” என்று மீண்டும் மீண்டும் சொனான். கௌரவர்களாலும், அர்ஜுனனாலும் இப்படித் தடுக்கப்பட்டாலும்,(65) ஓ! மனிதர்களில் காளையே {அஸ்வத்தாமனே}, கொடூரனான திருஷ்டத்யும்னனால் உனது தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். இதனால் அச்சத்தில் பீடிக்கப்பட்ட துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடுகின்றன. அதே காரணத்திற்காகவே, ஓ! பாவமற்றவனே {அஸ்வத்தாமனே}, உற்சாகத்தை மிகவும் இழந்த நாங்களும் கூட அதையே செய்கிறோம் {ஓடுகிறோம்}” என்றார் {கிருபர்}.(66)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரில் தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, காலால் மிதிபட்ட பாம்பொன்றைப் போலக் கடுங்கோபத்தை அடைந்தான்.(67) சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பெரும் அளவு விறகுகளால் எரியும் நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான்.(68) தன் கரங்களைப் பிசைந்தும், தன் பற்களை நற நறவெனக் கடித்தும், பாம்பொன்றைப் போல மூச்சுவிட்டுக் கொண்டும் இருந்த அவனது கண்கள் குருதியைப் போலச் சிவப்பாகின” {என்றான் சஞ்சயன்}.(69)
----------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 194-ல் உள்ள சுலோகங்கள்: 69 

ஆங்கிலத்தில் | In English

ஞாயிறு, அக்டோபர் 23, 2016

சகுனியை மயக்கமடையச் செய்த நகுலன்! - துரோண பர்வம் பகுதி – 169

Nakula made Sakuni to swoon! | Drona-Parva-Section-169 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : சகுனிக்கும் நகுலனுக்கும் இடையில் நடந்த மோதல்; மயக்கமடைந்த நகுலன்; நினைவு மீண்டு சகுனியின் வில்லை அறுத்த நகுலன்; நகுலனால் துளைக்கப்பட்டுக் கீழே விழுந்து மயக்கமடைந்த சகுனி; சிகண்டிக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்; கிருபரின் வில்லை அறுத்த சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருபர்; சிகண்டிக்காகவும், கிருபருக்காகவும் திரண்ட போர்வீரர்களுக்கிடையில் நடந்த பயங்கரப் போர்; பயங்கரமான அந்த இரவு போரில் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாமலே உறவினர்களைக் கொன்ற போர்வீரர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படையைத் தாக்கிக் கொண்டிருந்த நகுலனை எதிர்த்து, கோபத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் விரைந்து சென்ற சுபலனின் மகன் (சகுனி), அவனிடம் {நகுலனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(1) ஒருவர் மேல் ஒருவர் சினங்கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு வீரர்களும், தங்கள் விற்களை முழுமையாக வளைத்து, கணைகளை ஏவி, ஒருவரையொருவர் தாக்கினர்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி}, கணைமாரி ஏவுவதில் நகுலன் வெளிப்படுத்திய அதே அளவு திறனை அம்மோதலில் வெளிப்படுத்தினான்.(3) அந்தப்போரில் கணைகளால் துளைத்துக் கொண்ட அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்களது உடலில் முட்கள் விறைத்த இரு முள்ளம்பன்றிகளைப் போல அழகாகத் தெரிந்தனர்.(4)


நேரானமுனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்டவர்களும், குருதியில் குளித்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் பயங்கரப் போரில், அழகான, பிரகாசமான இரண்டு கல்ப மரங்களைப் போலவோ, அந்தப் போர்க்களத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலவோ பிரகாசமாகத் தெரிந்தனர்.(5,6) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கணைகளால் துளைத்த அவ்விரு வீரர்களும், முள் கொண்ட சால்மலி {இலவ} மரங்கள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.(7) கண்கள் சினத்தால் விரிந்து, கடைக்கண் சிவந்து, ஒருவர் மேல் ஒருவர் சரிந்த பார்வைகளை வீசிய அவர்கள், அந்தப் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரிக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(8)

அப்போது உமது மைத்துனன் {சகுனி}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, கூர்முனைகொண்ட முள்கணை {கர்ணி} ஒன்றால் மாத்ரியின் மகனுடைய {நகுலனின்} மார்பைத் துளைத்தான்.(9) பெரும் வில்லாளியான உமது மைத்துனனால் {சகுனியால்} ஆழத்துளைக்கப்பட்ட நகுலன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயங்கிப் போனான்.(10) செருக்குமிக்கத் தன் எதிரியின் {நகுலனின்} அந்த அவல நிலையைக் கண்ட சகுனி, கோடை முடிவின் மேகங்களைப் போல உரக்க முழங்கினான்.(11) சுயநினைவு மீண்டவனான பாண்டுவின் மகன் நகுலன், வாயை அகல விரித்த காலனைப் போலவே மீண்டும் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்து விரைந்தான்.(12) சினத்தால் எரிந்த அவன் {நகுலன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அறுபது {60} கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஒரு நூறு நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அவனை {சகுனியை} மார்பில் துளைத்தான்.(13) பிறகு அவன் {நகுலன்}, கணை பொருத்தப்பட்ட சகுனியின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, இரண்டு துண்டுகளாக்கினான். கணப்பொழுதில் அவன் {நகுலன்}, சகுனியின் கொடிமரத்தையும் வெட்டி, அதைக் கீழே பூமியில் விழச் செய்தான்.(14)

பாண்டுவின் மகனான நகுலன், அடுத்ததாக, கூர்முனை கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான கணை ஒன்றால் சகுனியின் தொடையைத் துளைத்து, வேடன் ஒருவன், சிறகு படைத்த பருந்தொன்றை பூமியில் விழச் செய்வதைப் போல, அவனை {சகுனியை} அவனது தேரில் கீழே விழச் செய்தான்.(15) ஆழத்துளைக்கப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காமவயப்பட்ட ஒரு மனிதன் {காமுகன் ஒருவன்} தன் தலைவியை {காமுகியைத்} தழுவிக் கொள்வதைப் போலக் கொடிக்கம்பத்தைத் தழுவி கொண்டு, தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) கீழே விழுந்து, சுயநினைவை இழந்த உமது மைத்துனனை {சகுனியைக்} கண்ட அவனது சாரதி, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, விரைவாக அவனைப் போர் முகப்பை விட்டு வெளியே கொண்டு சென்றான்.(17) அப்போது, பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் உரக்க முழங்கினர்.(18) தன் எதிரிகளை வென்றவனும், எதிரிகளை எரிப்பவனுமான நகுலன், தன் சாரதியிடம், “துரோணரால் நடத்தப்படும் படைக்கு என்னைக் கொண்டு செல்வாயாக” என்று சொன்னான்.(19) மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(20)

துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை எதிர்த்து, சரத்வானின் மகனான கிருபர், உறுதியான தீர்மானத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் முன்னேறிச் சென்றார்.(21) எதிரிகளைத் தண்டிப்பவனான சிகண்டி, சிரித்துக் கொண்டே, துரோணரின் அருகாமையை நோக்கிச் செல்லும் தன்னை, இப்படி எதிர்த்து வரும் கௌதமர் மகனை {கிருபரை} ஒன்பது கணைகளால் துளைத்தான்.(22) உமது மகன்களுக்கு நன்மை செய்பவரான அந்த ஆசான் (கிருபர்), முதலில் சிகண்டியை ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் அவனை இருபதால் துளைத்தார்.(23) அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதலானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் {அசுரன்} சம்பரனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(24) வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் இருவரும், கோடையின் முடிவில் ஆகாயத்தை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் ஆகாயத்தை மறைத்தனர்.(25) பயங்கரமான அந்த இரவு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, போரிட்டுக் கொண்டிருந்த வீரப் போராளிகளால் மேலும் பயங்கரமடைந்தது.(26) உண்மையில், அனைத்து வகை அச்சங்களையும் தூண்டும் பயங்கரத்தன்மைகளைக் கொண்ட அந்த இரவு, (அனைத்து உயிரினங்களுக்குமான) மரண இரவாக {காலராத்திரி} ஆனது.

அப்போது சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கௌதமர் மகனின் {கிருபரின்} பெரிய வில்லை அறுத்து, கூர்த்தீட்டப்பட்ட கணைகளைப் பின்னவர் {கிருபரின்} மீது ஏவினான். கோபத்தால் எரிந்த கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனையையும், தங்கக் கைப்பிடியையும் கொண்டதுமான கடுமையான ஓர் ஈட்டியைத் தன் எதிராளியின் {சிகண்டியின்} மீது ஏவினார். எனினும் சிகண்டி, தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியை}, பத்து கணைகளால் வெட்டினான்.(27-29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஈட்டி (இப்படி வெட்டப்பட்டு) கீழே பூமியில் விழுந்தது. அப்போது மனிதர்களில் முதன்மையான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்த்தீட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் சிகண்டியை மறைத்தார்.(30) இப்படி அந்தப் போரில் கௌதமரின் சிறப்புமிக்க மகனால் {கிருபரால்} மறைக்கப்பட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிகண்டி தன் தேர்தட்டில் பலவீனமடைந்தான்.(31) சரத்வானின் மகனான கிருபர் அவன் பலவீனமடைந்ததைக் கண்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனைக் {சிகண்டியைக்} கொல்லும் விருப்பத்தால் பல கணைகளால் அவனைத் துளைத்தார்.(32) (பிறகு சிகண்டி தன் சாரதியால் வெளியே கொண்டு செல்லப்பட்டான்). வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த யக்ஞசேனன் மகன் {துருபதன் மகனான சிகண்டி} போரில் பின்வாங்குவதைக் கண்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும் (அவனைக் காப்பதற்காக) அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(33) அதே போல உமது மகன்களும், பெரும்படையுடன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரை (கிருபரைச்) சூழ்ந்து கொண்டனர்.(34) அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கு இடையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(35)

ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தி விரைந்து செல்லும் குதிரைவீரர்கள், யானைகள் ஆகியவற்றின் காரணமாக எழுந்த ஆரவாரமானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.(36) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது மிகவும் கடுமையானதாகத் தெரிந்தது. விரைந்து சென்ற காலாட்படையின் நடையால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அச்சத்தால் நடுங்கும் ஒரு பெண்ணைப் போலப் பூமியானவள் நடுங்கத் தொடங்கினாள்.(37) தேர்வீர்கள் தங்கள் தேர்களில் ஏறி மூர்க்கமாக விரைந்து, சிறகு படைத்த பூச்சிகளைப் பிடிக்கும் காக்கைகளைப் போல, ஆயிரக்கணக்கான எதிராளிகளைத் தாக்கினர்.(38) அதே போல, தங்கள் உடல்களில் மதநீர் வழிந்த யானைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதே போன்ற யானைகளைப் பின்தொடர்ந்து அவற்றோடு சீற்றத்துடன் மோதின. அதே போலவே, குதிரைவீரர்கள், குதிரைவீரர்களோடும், காலாட் படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும் கோபத்துடன் அந்தப் போரில் மோதிக் கொண்டனர்.(39,40)

அந்த நள்ளிரவில், பின்வாங்குபவை, விரைபவை மற்றும் மீண்டும் மோதலுக்கு வருபவை ஆகிய துருப்புகளின் ஒலி செவிடாக்குவதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றில் வைக்கப்பட்ட சுடர்மிக்க விளக்குகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கற்களைப் போலத் தெரிந்தன.(41,42) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த இரவானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் பகலைப் போலவே இருந்தது.(43) அடர்த்தியான இருளுடன் மோதி, அதை முற்றாக அழிக்கும் சூரியனைப் போலவே, அந்தப் போர்க்களத்தின் அடர்த்தியான இருளானது, அந்தச் சுடர்மிக்க விளக்குகளால் அழிக்கப்பட்டது.(44) உண்மையில், புழுதியாலும், இருளாலும் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம், பூமி, முக்கிய மற்றும் துணைத் திசைகள் ஆகியவை மீண்டும் அந்த வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்டன.(45) ஆயுதங்கள், கவசங்கள், சிறப்புமிக்க வீரர்களின் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஒளி சுடர்மிக்க அந்த விளக்குகளின் மேலான வெளிச்சத்தில் மறைந்தது.

இரவில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போராளிகளில் எவராலும் தங்கள் தரப்பின் போர்வீரர்களையே அறிந்து கொள்ள முடியவில்லை.(46,47) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அறியாமையால், தந்தை மகனையும், மகன் தந்தையையும், நண்பன் நண்பனையும் கொன்றனர்.(48) உறவினர்கள், உறவினர்களையும், தாய்மாமன்கள் தங்கள் சகோதரிகளின் மகன்களையும், போர்வீரர்கள் தங்கள் தரப்பின் போர்வீரர்களையும் கொன்றனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளும் கூடத் தங்கள் ஆட்களையே கொன்றனர்.(49) அந்தப் பயங்கர இரவு மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் அனைவரும் சீற்றத்துடன் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(50)
-----------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 169-ல் வரும் மொத்த சுலோகங்கள்-50

ஆங்கிலத்தில் | In English

செவ்வாய், அக்டோபர் 11, 2016

துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 158ஆ

Aswatthama prevented Duryodhana! | Drona-Parva-Section-158b | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று அவனையும் வில்லற்றவனாக்கிய அர்ஜுனன்; கிருபரின் தேரில் தஞ்சமடைந்த கர்ணன்; கர்ணனை வென்ற அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் உயிரைக் காக்க அஸ்வத்தாமனைத் தூண்டிய கிருபர்; அர்ஜுனனுடன் மோதுவதிலிருந்து துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கொல்ல அஸ்வத்தாமனைத் தூண்டிய துரியோதனன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, யுக முடிவின்போது தோன்றும் அந்தகனைப் போலத் தெரிந்தவனும், வெறியால் தூண்டப்பட்டவனுமான பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட பிறகு, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் அடுத்து என்ன செய்தான்?(48) உண்மையில், வலிமைமிக்கத் தேர்வீரனும், வைகர்த்தனன் மகனுமான கர்ணன் எப்போதும் பார்த்தனை {அர்ஜுனனை} அறைகூவி அழைப்பவனாக இருக்கிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, பயங்கரமான பீபத்சுவை {அர்ஜுனனை} வெல்லத்தக்கவன் என்று எப்போதும் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். ஓ! சூதா, எப்போதும் தனக்குக் கொடிய எதிரியாக இருப்பவனை {அர்ஜுனனை} இப்படித் திடீரெனச் சந்தித்தபோது, அந்தப் போர்வீரன் {கர்ணன்} என்ன செய்தான்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(49,50)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “எதிரி யானையை நோக்கி வரும் மற்றொரு யானையைப் போலத் தன்னை நோக்கி வரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட கர்ணன், அச்சமில்லாமல் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(51) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, இப்படிப் பெரும் வேகத்தோடு வரும் கர்ணனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான கணைகளின் மழையால் விரைவாக மறைத்தான். கர்ணனும் தன் கணைகளால் விஜயனை {அர்ஜுனனை} மறைத்தான்.(52) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீண்டும் கணை மேகங்களால் கர்ணனை மறைத்தான். அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான்.(53) கர்ணனின் கர நளினத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எதிரிகளை அழிப்பவனான அவன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையுமான நேரான முப்பது கணைகளைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். பெரும் வலிமையையும், சக்தியையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, மற்றொரு நீண்ட கணையால் அவனது {கர்ணனின்} இடக்கரத்தின் மணிக்கட்டையும் துளைத்தான். அப்போது, பெரும் பலத்துடன் இப்படித் துளைக்கப்பட்ட அந்தக் கரத்தில் இருந்து கர்ணனின் வில் விழுந்தது.(54-56) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வில்லை எடுத்துக் கொண்ட வலிமைமிக்கக் கர்ணன், மீண்டும் பல்குனனை {அர்ஜுனனைக்} கணை மேகங்களால் மறைத்து பெரும் கரநளினத்தை வெளிபடுத்தினான்.(57) அப்போது சிரித்தபடியே தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்தக் கணை மாரியைத் தன் கணைகளால் கலங்கடித்தான். ஒருவரையொருவர் அணுகிய பெரும் வில்லாளிகளான அவர்கள் இருவரும், ஒருவர் செய்த சாதனைகளுக்கு மற்றவர் எதிர்வினையாற்ற விரும்பி, தொடர்ந்து ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்தனர்.(59) கர்ணன் மற்றும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரானது, பருவகாலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு காட்டு யானைகளுக்கு இடையில் நடக்கும் போரைப் போல மிக அற்புதமானதாக இருந்தது.(60)

அப்போது, வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு, விரைவாகப் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(61) மேலும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பிவைத்தான். பிறகும் அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்}, கர்ணனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(62) பாண்டு மற்றும் பிருதையின் மகனான அவன் {அர்ஜுனன்}, வில்லற்றவனாக, குதிரையற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த கர்ணனை நான்கு கணைகளால் துளைத்தான்.(63) மனிதர்களில் காளையான அந்தக் கர்ணன், அக்கணைகளால் பீடிக்கப்பட்டு, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துக் கிருபருடைய தேரில் ஏறிக் கொண்டான்.(64)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} வெல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(65) அவர்கள் ஓடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன் அவர்களைத் தடுத்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(66) “வீரர்களே, ஓடாதீர். க்ஷத்திரியர்களில் காளையரே போரில் நிலைப்பீராக. போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நானே இப்போது செல்லப் போகிறேன்.(67) கூடியிருக்கும் பாஞ்சாலர்களோடு சேர்த்துப் பார்த்தனை {அர்ஜுனனை} நானே கொல்லப் போகிறேன். காண்டீவதாரியோடு {அர்ஜுனனோடு} இன்று நான் போரிடும்போது,(68) யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பான என் ஆற்றலைப் பார்த்தர்கள் காணப் போகின்றனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்திற்கு ஒப்பாக ஏவப்படும் என் ஆயிரக்கணக்கான கணைகளை இன்று பார்த்தர்கள் காண்பார்கள். கோடை காலத்தின் முடிவில் மேகங்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போன்ற அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடி, கையில் வில்லுடன் இருக்கும் என்னைப் போராளிகள் காணப் போகின்றனர். நான் இன்று பார்த்தனை {அர்ஜுனனை}, என் நேரான கணைகளால் வெல்லப் போகிறேன்.(69-71) வீரர்களே, பல்குனன் {அர்ஜுனன்} மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை விட்டு விட்டுப் போரில் நிலைப்பீராக. மகரங்களின் வசிப்பிடமான கடலால், தன் கரைகளை மீற முடியாதததைப் போல, என் ஆற்றலுடன் மோதப் போகும் பல்குனனால் {அர்ஜுனனால்} அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது” என்றான் {துரியோதனன்}.(72) இப்படிச் சொன்ன மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் படையால் சூழப்பட்டு, பல்குனனை {அர்ஜுனனை} நோக்கிச் சினத்துடன் சென்றான்.

இப்படிச் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனனைக் கண்ட சரத்வான் மகன் {கிருபர்},(73,74). அஸ்வத்தாமனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “அதோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனன், கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து,(75) சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரைய விரும்பும் பூச்சி ஒன்றைப் போல, பல்குனனுடன் போரிட விரும்பி செல்கிறான். மன்னர்களில் முதன்மையான இவன் {துரியோதனன்}, நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} இந்தப் போரில் தன் உயிரை விடுவதற்கு முன் (மோதலுக்கு விரைவதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக. பார்த்தனின் கணைகள் செல்லும் தொலைவுக்குள் இல்லாதவரை மட்டுமே துணிவுமிக்க குரு மன்னனால் {துரியோதனனால்} இந்தப் போரில் உயிருடன் இருக்க முடியும். சற்று முன்பே சட்டையுரித்த பாம்புகளுக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} பயங்கரக் கணைகளால் சாம்பலாக எரிக்கப்படுவதற்கு முன் மன்னன் {துரியோதனன்} தடுக்கப்பட வேண்டும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, நாம் இங்கே இருக்கும்போது, தனக்கெனப் போரிட எவரும் இல்லாதவனைப் போல மன்னனே {துரியோதனனே} போரிடச் செல்வது பெரிதும் முறையற்றதாகத் தெரிகிறது. புலியோடு மோதும் யானையைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுடன் (அர்ஜுனனுடன்} போரில் ஈடுபட்டால், இந்தக் குரு வழித்தோன்றலின் {துரியோதனனின்} உயிரானது பெரும் ஆபத்துக்குள்ளாகும்.” என்றார் {கிருபர்}.

தன் தாய்மாமனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(76-81) துரியோதனனிடம் விரைந்து சென்று அவனிடம் இந்த வார்த்தகளைச் சொன்னான்: “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, நான் உயிரோடு இருக்கையில், உனது நன்மையை எப்போதும் விரும்புபவனான என்னை அலட்சியம் செய்துவிட்டு, போரில் நீ ஈடுபடுவது உனக்குத் தகாது. பார்த்தனை வெல்வது குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. பார்த்தனை {அர்ஜுனனை} நான் தடுப்பேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, இங்கேயே நிற்பாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(82,83)

துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான், “ஆசான் (துரோணர்), பாண்டுவின் மகன்களைத் தமது மகன்களைப் போலவே எப்போதும் பாதுகாக்கிறார். நீரும் என் எதிரிகளான அவர்களிடம் எப்போதும் தலையிடுவதில்லை.(84) அல்லது, என் தீப்பேற்றால் கூடப் போரில் உமது ஆற்றல் எப்போதும் கடுமைடையாது இருந்திருக்கலாம். யுதிஷ்டிரன், அல்லது திரௌபதி மீது உமக்குள்ள பாசமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையான காரணத்தை அறியாதவனாக நான் இருக்கிறேன்.(85) என்னை மகிழ்விக்க விரும்பிய என் நண்பர்கள் அனைவரும் வெல்லப்பட்டுத் துயரில் மூழ்குவதால், பேராசை கொண்டவனான எனக்கு ஐயோ {என்னை நிந்திக்க வேண்டும்}.(86) ஓ! கௌதமர் மகளின் {கிருபியின்} மகனே {அஸ்வத்தாமரே}, ஆயுதங்களை அறிந்தவர்களுள் முதன்மையானவரும், போரில் மகேஸ்வரனுக்கு ஒப்பானவருமான உம்மைத் தவிர, எதிரியை அழிக்கத்தகுந்த போர்வீரன் வேறு எவன் இருக்கிறான்?(87) ஓ! அஸ்வத்தாமரே, என்னிடம் மகிழ்ச்சி {கருணை} கொண்டு, என் எதிரிகளை அழிப்பீராக. உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் நிற்க தேவர்களோ, தானவர்களோ கூடத் தகுந்தவர்களல்லர்.(88)

ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோருடன் சேர்த்துக் கொல்வீராக. எஞ்சியோரைப் பொறுத்தவரை, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள் அவர்களைக் கொல்வோம்.(89) ஓ! பிராமணரே, பெரும் புகழைக் கொண்ட சோமகர்களும், பாஞ்சாலர்களும் காட்டு நெருப்பைப் போல அதோ என் துருப்புகளுக்கு மத்தியில் திரிகின்றனர்.(90) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டால், கைகேயர்கள் நம் அனைவரையும் அழித்துவிடுவார்கள் என்பதால் அவர்களையும் {கைகேயர்களையும்} தடுப்பீராக.(91) ஓ! அஸ்வத்தாமரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, வேகமாக அங்கே செல்வீராக. அந்த அருஞ்செயலை இப்போது நிறைவேற்றுவீரோ, பிறகு நிறைவேற்றுவீரோ, ஓ! ஐயா, அஃது உம்மால் நிறைவேற்றப்பட வேண்டும்.(92) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பாஞ்சாலர்களின் அழிவுக்காகவே பிறந்தவர் நீர். உமது ஆற்றலை வெளிப்படுத்தி, இவ்வுலகைப் பாஞ்சாலர்களற்றதாகச் செய்யப் போகிறீர்.(93) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மரியாதைக்குரியவர்கள் இப்படியே {உம்மைக் குறித்துச்} சொல்லியிருக்கின்றனர். அவர்கள் சொன்னபடியே அஃது ஆகட்டும். எனவே, ஓ! மனிதர்களில் புலியே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களை, அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வீராக.(94)

வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களே கூட, உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் வந்தால் நிலைக்க முடியாது எனும்போது, பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் குறித்து என்ன சொல்வது? இந்த எனது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.(95) ஓ! வீரரே {அஸ்வத்தாமரே}, சோமகர்களுடன் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள், போரில் உமக்கு ஈடாக மாட்டார்கள் என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(96) செல்வீர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, செல்வீராக. எந்தத் தாமதமும் வேண்டாம். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பிளந்து ஓடும் நமது படையைப் பாரும்.(97) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {அஸ்வத்தாமரே}, தெய்வீக சக்தியின் துணையுடன் கூடிய நீர் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் பீடிக்கத் தகுந்தவராவீர்” என்றான் {துரியோதனன்}.(98)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 158ஆ-வில் வரும் மொத்த சுலோகங்கள்-51 (47லிருந்து 98)

ஆங்கிலத்தில் | In English

திங்கள், அக்டோபர் 10, 2016

கோபம்நிறைந்த அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 158அ

The wrathful Aswatthama! | Drona-Parva-Section-158a | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : சினம் கொண்ட அஸ்வத்தாமன் கத்தியை ஓங்கி கர்ணனை நிந்திப்பது; அஸ்வத்தாமனைத் தணிவடையச் செய்த துரியோதனன்; கர்ணனைச் சீற்றத்துடன் தாக்கிய பாண்டவர்கள்; தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்; கர்ணனுடன் மோத விரைந்து வந்த அர்ஜுனன்; கர்ணனைக் காக்க கௌரவர்களை ஏவிய துரியோதனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் மாமன் {கிருபர்}, கடுமையான மற்றும் அவமதிக்கும் வகையிலான வார்த்தைளில் சூதனின் மகனால் {கர்ணனால்} இப்படிச் சொல்லப்படுவதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் கத்தியை உயர்த்திக் கொண்டு, பின்னவனை {கர்ணனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(1) சீற்றத்தால் நிறைந்திருந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, குரு மன்னன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மதங்கொண்ட யானையை நோக்கிச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணனை நோக்கி விரைந்தான்.(2)

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் இழிந்தவனே {கர்ணா}, அர்ஜுனனிடம் உண்மையில் உள்ள குணங்களையே கிருபர் சொல்லிக் கொண்டிருந்தார். எனினும், தீய புரிதல் கொண்டவனான நீ, துணிவுமிக்க என் மாமனை {கிருபரை} வன்மத்துடன் {கெட்ட நோக்கத்துடன்} நிந்திக்கிறாய்.(3) செருக்கும், துடுக்கும் கொண்ட நீ, உலகத்தின் வில்லாளிகள் எவரையும் போரில் கருதிப்பாராமல் {மதிக்காமல்} உன் ஆற்றலை இன்று தற்புகழ்ச்சி செய்கிறாய்.(4) போரில் உன்னை வென்ற அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, நீ பார்த்துக் கொண்டிருந்த போதே ஜெயத்ரதனைக் கொன்றபோது, உன் ஆற்றல் எங்கே சென்றது? உன் ஆயுதங்கள் எங்கே சென்றன?(5) ஓ! சூதர்களில் இழிந்தவனே, முன்னர்ப் போரில் மகாதேவனையே எதிர்த்தவனை {அர்ஜுனனை} வெல்லப்போவதாக உன் மனதில் வீணான நம்பிக்கை கொள்கிறாய்.(6) தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு வந்த போதும், கிருஷ்ணனை மட்டுமே தன் கூட்டாளியாகக் கொண்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனை வெல்ல முடியவில்லை.(7) ஓ! சூதா {கர்ணா}, இந்த மன்னர்களுடன் கூடிய நீ, உலக வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படாதவனுமான அர்ஜுனனை போரில் வெல்வாய் என எவ்வாறு நம்பிக்கை கொள்கிறாய்?(8) ஓ! தீய ஆன்மா கொண்ட கர்ணா, இன்று (நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்பதைப்) பார். ஓ! மனிதர்களில் இழிந்தவனே, ஓ! இழிந்த அறிவு கொண்டவனே, நான் இப்போது உன் உடலிலிருந்து உன் தலையை வெட்டப் போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(9)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொன்ன அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அப்போது, பெரும் சக்தி கொண்ட மன்னனும் {துரியோதனனும்}, மனிதர்களில் முதன்மையானவரான கிருபரும் அவனை {அஸ்வத்தாமனைப்} பிடித்துக் கொண்டனர்.(10)

அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “தீய புரிதல் கொண்டவனான இந்த இழிந்த பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன்னைத் துணிச்சல்மிக்கவனாக நினைத்துக் கொண்டு, போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்புகழ்ச்சி செய்கிறான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனை {அஸ்வத்தாமனை} விடு. அவன் என் வலிமையைச் சந்திக்கட்டும்” என்றான்.(11)

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, ஓ! தீய புரிதல் கொண்டவனே, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றான்.(12)

துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} , “ஓ! அஸ்வத்தாமரே, உமது கோபத்தைத் தணிப்பீராக. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நீர் கோபங்கொள்ளக் கூடாது.(13) உம் மீதும், கர்ணன், கிருபர், துரோணர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியர்}, சுபலனின் மகன் {சகனி} ஆகியோர் மீதும் பெரும் சுமை இருக்கிறது. ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {அஸ்வத்தாமரே}, உமது கோபத்தை விடுவீராக.(14) அதோ, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட விரும்பி பாண்டவத் துருப்புகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! பிராமணரே, அதோ நம் அனைவரையும் அறைகூவி அழைத்துக் கொண்டே அவர்கள் வருகின்றனர்” என்றான் {துரியோதனன்}.(15)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடுஞ்சினம் கொண்டிருந்தவனும், இப்படி மன்னனால் தணிக்கப்பட்டவனுமான அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு (கர்ணனை) மன்னித்தான்.(16) அமைதியான மனநிலையையும், உன்னத இதயத்தையும் கொண்ட கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மென்தன்மை கொண்டவராததால், மீண்டும் அவனிடம் {கர்ணனிடம்} வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(17) கிருபர், “ஓ! தீய இதயம் கொண்ட சூதன் மகனே {கர்ணா}, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றார்.(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது பாண்டவர்களும், ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும் ஒன்று சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டபடியே ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தனர்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனைப் போல முதன்மையான குருவீரர்கள் பலரால் சூழப்பட்டவனுமான கர்ணனும், தன் கரங்களின் வலிமையை நம்பி வில்லை வளைத்துக் கொண்டு காத்திருந்தான். உரத்த சிங்க முழக்கங்களால் வகைப்படுத்தப்படுவதும், மிகப் பயங்கரமானதுமான ஒரு போர் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் அப்போது தொடங்கியது.(20,21)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், தங்கள் ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும்,(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனைக் கண்டு, “அதோ கர்ணன் இருக்கிறான்”, “இந்தக் கடும் போரில் கர்ணன் எங்குப் போனான்”,(23) “ஓ! தீய புரிதல் கொண்டவனே, ஓ! மனிதர்களில் இழிந்தவனே, எங்களுடன் போரிடுவாயாக” என்று உரத்தக் கூச்சலிட்டனர். ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட பிறர், கோபத்தால் தங்கள் கண்களை அகல விரித்துக் கொண்டு,(24) “சிறு மதியும், திமிரும் கொண்ட இழிந்தவனான இந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூடியிருக்கும் மன்னர்களால் கொல்லப்பட வேண்டும். இவன் வாழ வேண்டிய அவசியம் இல்லை.(25) பாவம் நிறைந்த இந்த மனிதன், பார்த்தர்களுடன் எப்போதும் மிகுந்த பகையுடன் இருக்கிறான். துரியோதனனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும் இவனே இந்தத் தீமைகள் அனைத்திற்கும் வேராக இருப்பவன்.(26) இவனைக் கொல்வீராக” என்றனர்.

இத்தகு வார்த்தைகளைச் சொன்ன பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகனால் தூண்டப்பட்டு, அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்காக அவனை நோக்கி விரைந்து, அடர்த்தியான கணைமாரியால் அவனை மறைத்தனர். வலிமைமிக்கப் பாண்டவர்கள் அனைவரும் வருவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்} அப்போது நடுங்காதவனாகவும், அச்சங்கொள்ளாதவனுமாக இருந்தான்.(27,28) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யமனுக்கு ஒப்பான துருப்புகளின் அற்புதக் கடலைக் கண்டவனும், வலிமைமிக்கவனும், வேகமான கரங்களைக் கொண்டவனும், போரில் வெல்லப்படாதவனும், உமது மகன்களுக்கு நன்மை செய்பவனுமான அந்தக் கர்ணன், கணைகளின் மேகங்களால் அந்தப் படையை அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கத் தொடங்கினான். பாண்டவர்களும், கணைமாரியை ஏவியபடி அந்த எதிரியுடன் போரிட்டனர்.(29-31) நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் தங்கள் விற்களை அசைத்து வந்த அவர்கள், பழங்காலத்தில் சக்ரனுடன் போரிட்ட தைத்தியர்களைப் போலவே அந்த ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டனர்.(32) எனினும், வலிமைமிக்கக் கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் பூமியின் தலைவர்களால் பொழியப்பட்ட கணைகளை, அடர்த்தியான தன் கணைமாரியால் விலக்கினான்.(33) ஒவ்வொருவரின் அருஞ்செயல்களுக்கும் எதிர்வினையாற்றிய அந்த இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற பெரும்போரில் சக்ரனுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒப்பாக இருந்தது.(34)

தன் எதிரிகள் அனைவரும் உறுதியுடன் போரிட்டாலும், போரில் அவனைத் {கர்ணனைத்} தாக்க முடியாத அளவுக்குப் போரிட்ட சூதனின் மகனிடம் அப்போது நாங்கள் கண்ட கரநளினம் மிக அற்புதமானதாக இருந்தது.(35) (பகை) மன்னர்களால் ஏவப்பட்ட கணைகளின் மேகங்களைத் தடுத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, (தன் எதிரிகளின்) நுகத்தடிகள், ஏர்க்கால்கள், குடைகள், கொடிமரங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் மீது தன் பெயர் பொறிக்கப்பட்ட பயங்கரக் கணைகளை ஏவினான். பிறகு கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த மன்னர்கள் தங்கள் பொறுமையை இழந்து,(36,37) குளிரால் பீடிக்கப்பட்ட பசு மந்தையைப் போலக் களத்தில் திரியத் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், யானைகள் ஆகியவையும், தேர்வீரர்களும் கர்ணனால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது அங்கே காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாத வீரர்களுடைய தலைகள் மற்றும் கரங்களால் அந்த மொத்தக் களமும் விரவி கிடந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர், ஓலமிடும் போர்வீரர்கள் ஆகியோருடன் கூடிய அந்தப் போர்க்களம், யமனின் ஆட்சிப் பகுதிக்குரிய  தன்மையை ஏற்றது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்ட துரியோதனன்,(39-41) அஸ்வத்தாமனிடம் சென்று அவனிடம், “கவசம் பூண்ட கர்ணன், (பகை) மன்னர்கள் அனைவருடனும் போரில் ஈடுபடுவதைப் பாரும்.(42) கர்ணனின் கணைகளால் பீடிக்கப்படும் பகைவரின் படை, கார்த்திகேயனின் {முருகனின்} சக்தியால் மூழ்கடிக்கப்பட்ட அசுரர்களின் படையைப் போலவே முறியடிக்கப்படுவதைப் பாரும்.(43) நுண்ணறிவு கொண்ட கர்ணனால் போரில் தன் படை வெல்லப்படுவதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன் அதோ வருகிறான்.(44) எனவே, நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான இந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.(45)

(இப்படிச் சொல்லப்பட்டவர்களான) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், பெரும் தேர்வீரனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோர் அனைவரும், தைத்திய படையை நோக்கிச் சக்ரன் {இந்திரன்} வருவதைப் போலவே (தங்களை நோக்கி) வரும் குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, சூதனின் மகனைக் {கர்ணனைக்} காப்பதற்காகப் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர். அதே வேளையில், பாஞ்சாலர்களால் சூழப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருத்திராசுரனை எதிர்த்துச் சென்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே கர்ணனை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(46,47)
------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 158அ-வில் வரும் மொத்த சுலோகங்கள்-47

ஆங்கிலத்தில் | In English

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

“உமது நாவை அறுப்பேன்!” என்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 157

“I shall cut off thy tongue!” said Karna! | Drona-Parva-Section-157 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை வீழ்த்த கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்ல சபதமேற்ற கர்ணன்; கர்ணனைக் கண்டித்த கிருபர்; கர்ணனின் மறுமொழி; பாண்டவர்களின் பலத்தை எடுத்துரைத்த கிருபர்; இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கிருபருக்கு நினைவுப் படுத்திய கர்ணன்; கிருபரின் நாவை அறுப்பேன் என்று சொன்ன கர்ணன்; மேலும் கிருபரை நிந்தித்த கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தில் பெருகியிருந்த பாண்டவர்களின் அந்தப் பரந்த படையைக் கண்டு, அதைத் தடுக்கப்பட முடியாததாகக் கருதிய உமது மகன் துரியோதனன், கர்ணனிடம் இவ்வார்த்தைகளில் பேசினான்:(1) “ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே, உன் நண்பர்களைப் பொறுத்தவரை இப்போது (உன் உதவி மிகவும் தேவைப்படும்) நேரம் வந்துவிட்டது. ஓ! கர்ணா, என் போர்வீரர்கள் அனைவரையும் போரில் காப்பாயாக.(2) சினத்தில் நிறைந்தவர்களும், சீறும் பாம்புகளுக்கு ஒப்பானவர்களுமான பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவராலும் இப்போது நமது போராளிகள் அனைத்துப்பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கின்றனர்.(3) அதோ {பார்}, வெற்றியை விரும்பும் பாண்டவர்கள் மகிழ்ச்சியில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். பாஞ்சாலர்களின் பரந்த தேர்ப்படையானது சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டுள்ளதாகும்” என்றான் {துரியோதனன்}.(4)


கர்ணன் {துரியோதனனிடம்}, “பார்த்தனை {அர்ஜுனனைக்} காப்பதற்காகப் புரந்தரனே {இந்திரனே} இங்கு வந்தாலும், வேகமாக அவனையும் {இந்திரனையும்} வென்று, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்.(5) {இதை} நான் உண்மையாகவே சொல்கிறேன். ஓ! பாரதா {துரியோதனா}, உற்சாகங்கொள்வாயாக. பாண்டுவின் மகன்களையும், கூடியிருக்கும் அனைத்துப் பாஞ்சாலர்களையும் நான் கொல்வேன்.(6) பாவகனின் {அக்னியின்} மகன் {கார்த்திகேயன்} வாசவனுக்கு {இந்திரனுக்கு} வெற்றியைப் பெற்றுத் தருவதைப் போலவே நானும் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன். எதிர்வந்திருக்கும் இந்தப் போரில் உனக்கு ஏற்புடையது எதுவோ, அதையே நான் செய்வேன்.(7) பார்த்தர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} பலவானாவான். சக்ரனின் {இந்திரனின்} கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்ட மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} அவன் மீது வீசுவேன்.(8) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்} இறந்ததும், அவனது சசோதரர்கள் உன்னிடம் சரணடைவார்கள், அல்லது மீண்டும் காட்டுக்குச் செல்வார்கள்.(9) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நான் உயிரோடிருக்கையில் எந்தத் துயரிலும் ஒருபோதும் ஈடுபடாதே. ஒன்று சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரையும் போரில் நான் வெல்வேன். என் கணைமாரிகளின் மூலம் அவர்களை முள்ளம்பன்றிகளாக்கி, பூமியை நான் உனக்கு அளிப்பேன்” என்று மறுமொழி கூறினான் {கர்ணன்}.(11)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணன் இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சரத்வான் மகன் {கிருபர்}, சிரித்துக் கொண்டே சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(12) “ஓ! கர்ணா, உன் பேச்சு நன்றாக இருக்கிறது. வார்த்தைகள் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னைப் பாதுகாவலனாகக் கொள்ளும் இந்தக் குருக்களில் காளை {துரியோதனன்}, போதுமான அளவு பாதுகாப்பு கொண்டவனாகவே கருதப்படுவான்.(13) ஓ! கர்ணா, குரு தலைவனின் {துரியோதனனின்} முன்னிலையில் நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய். ஆனால் உண்மையில் உன் ஆற்றலோ, (தற்புகழ்ச்சி நிறைந்த உனது பேச்சுகளின்) எந்த விளைவுகளோ எப்போதும் காணப்பட்டதில்லை.(14) பாண்டுவின் மகன்களுடன் போரில் நீ மோதுவதைப் பல நேரங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், ஓ! சூதனின் மகனே {கர்ணா}, பாண்டவர்களால் நீ வெல்லப்பட்டாய்.(15) கந்தர்வர்களால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} (கைதியாகக்) கொண்டு செல்லப்பட்ட போது, அந்தச் சந்தர்ப்பத்தில் முதல் ஆளாக ஓடிய ஒரே ஆளான உன்னைத் தவிரத் துருப்புகள் அனைத்தும் போரிடவே செய்தன [1].(16)

[1] வேறொரு பதிப்பில், “கந்தர்வர்களால் திருதராஷ்டிர புத்திரன் கவரப்பட்ட காலத்தில் எல்லாச் சேனைகளும் போர்புரிந்தன. அப்போது நீ ஒருவன் மாத்திரம் முந்தி ஓடிவிட்டாய்” என்றிருக்கிறது.

விராடனின் நகரத்திலும், நீயும், உன் தம்பியும் உள்பட ஒன்று சேர்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் போரில் பார்த்தனால் வெல்லப்பட்டனர்.(17) பாண்டுவின் மகன்களில் பல்குனன் {அர்ஜுனன்} என்ற ஒரே ஒருவனுக்குக் கூடப் போர்க்களத்தில் நீ இணையாகமாட்டாய். அப்படியிருக்கையில், கிருஷ்ணனைத் தங்களின் தலைமையில் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் நீ எவ்வாறு வெல்லத் துணிவாய்?(18) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ மிகவும் அதிகமாகத் தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். எதையும் சொல்லாமல் நீ போரில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வாயாக. தற்பெருமையில் ஈடுபடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவதே நல்லோரின் கடமையாகும்.(19) ஓ! சூதனின் மகனே, ஓ! கர்ணா கூதிர்காலத்தின் வறண்ட மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டு, பொருட்படுத்த தகாதவனாகவே உன்னை நீ காட்டிக்கொள்கிறாய். எனினும், இதை மன்னன் {துரியோதனன்} புரிந்து கொள்ளவில்லை.(20)

ஓ! ராதையின் மகனே {கர்ணா}, பிருதையின் மகனை {அர்ஜுனனைக்} காணும்வரைதான் நீ முழங்கிக் கொண்டிருப்பாய். பார்த்தன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்டதும் உன் முழக்கங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.(21) உண்மையில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் அடையும் தொலைவுக்கு வெளியே இருக்கும் வரையே முழங்கிக் கொண்டிருக்கிறாய். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் நீ துளைக்கப்படும்போது, இந்த உனது முழக்கங்கள் மறைந்துவிடுகின்றன.(22) க்ஷத்திரியர்கள் தங்கள் கரங்களின் மூலம் தங்கள் மாண்பைக் காட்டுவர். பிராமணர்கள் பேச்சு மூலமாக {தமது மாண்பைக் காட்டுவர்}; அர்ஜுனன் தன் வில்லின் மூலமாக {தன் மாண்பைக்} காட்டுவான்; ஆனால் கர்ணனோ, ஆகாயத்தில் அவன் கட்டும் கோட்டைகளின் மூலம் {தன் மாண்பைக்} காட்டுவான்.(23) (போரில்) ருத்ரனையே மன நிறைவு கொள்ளச் செய்த அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தடுக்கவல்லவன் எவன் இருக்கிறான்?” என்றார் {கிருபர்}.

இப்படிச் சரத்வான் மகனால் {கிருபரால்} கோபம் தூண்டப்பட்டவனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான கர்ணன், கிருபருக்குப் பின்வரும் விதத்தில் பதிலளித்தான்:(24) “வீரர்கள் எப்போதும் மழைக்காலத்து மேகங்களைப் போல முழங்கி, நிலத்தில் இடப்பட்ட விதைகளைப் போல வேகமாகக் கனிகளை {பலன்களைத்} தருவார்கள்.(25) போர்க்களத்தில் பெரும் சுமைகளைத் தங்கள் தோள்களில் ஏற்கும் வீரர்கள், தற்புகழ்ச்சி நிறைந்த பேச்சுகளில் ஈடுபடுவதில் நான் எக்குறையும் காணவில்லை. சுமையைத் தாங்கிக் கொள்ள மனதால் தீர்மானிக்கும் ஒருவனது செயல் நிறைவேறுவதில் விதியே அவனுக்கு உதவி செய்கிறது.(26,27) பெரும் சுமையைச் சுமக்க இதயத்தால் விரும்பும் நான், போதுமான உறுதியை எப்போதும் ஒன்றுதிரட்டுகிறேன்.(28)

ஓ! பிராமணரே {கிருபரே}, போரில் கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்களைக் கொன்ற பிறகு இத்தகு முழக்கங்களில் நான் ஈடுபட்டால் உமக்கென்ன?(29) வீரர்கள் எவரும் கூதிர்க்காலத்து மேகங்களைப் போலக் கனியற்ற {பலன்றற} வகையில் முழங்குவதில்லை. தன் சொந்த வலிமையை அறிந்தே விவேகிகள் முழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.(30) ஒன்றாகச் சேர்ந்து, உறுதியுடன் போரிட்டு வரும் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனை {அர்ஜுனனை} இன்றைய போரில் வெல்ல என் இதயத்தில் தீர்மானித்திருக்கிறேன். ஓ! கௌதமரின் மகனே {கிருபரே}, அதற்காகவே நான் முழங்குகிறேன்.(31) ஓ! பிராமணரே {கிருபரே}, என் இந்த முழக்கங்களின் கனியைப் பார்ப்பீராக. போரில் தங்களைப் பின்தொடர்பவர்கள் {தொண்டர்கள்}, கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்கள் ஆகிய அனைவரோடும் சேர்ந்த பாண்டுவின் மகன்களைக் கொன்று, ஒரு முள்ளும் {எந்த எதிரியும்} இல்லாத முழுப் பூமியை நான் துரியோதனனுக்கு அளிப்பேன்” என்றான் {கர்ணன்}. (32)

கிருபர் {கர்ணனிடம்}, “செயல்கள் இல்லாமல் உன் சிந்தனைகளையே கண்டுபிடித்துச் சொல்லும் உனது இந்தப் பிதற்றல்களை நான் சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை. நீ எப்போதும் கிருஷ்ணர்கள் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மதிப்பு குறைவாகவே பேசுகிறாய்.(33) ஓ! கர்ணா, போரில் திறம்பெற்ற அவ்விரு வீரர்களைத் தன் தரப்பில் எவன் கொண்டிருக்கிறானோ, அவன் வெற்றி அடைவது உறுதி. உண்மையில், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், நாகர்கள், பறவைகள் ஆகிய அனைவரும் கவசம் பூண்டு வந்தாலும், கிருஷ்ணனும், அர்ஜுனனும் வீழ்த்தப்பட முடியாதவர்களே. தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாவான். அவன் உண்மைநிறைந்த பேச்சு கொண்டவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும் இருக்கிறான். பித்ருக்களையும், தேவர்களையும் அவன் துதிக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உண்மை மற்றும் அறப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.

மேலும் அவன் {யுதிஷ்டிரன்} ஆயுதங்களில் திறம்பெற்றவனாகவும் இருக்கிறான். பெரும் நுண்ணறிவு கொண்ட அவன், நன்றியறிவுள்ளவனாகவும் இருக்கிறான்.(34-36) அவனது {யுதிஷ்டிரனது} தம்பியர் அனைவரும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும், அனைத்து ஆயுதங்களையும் நன்கு பயின்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூத்தோரின் சேவையில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். ஞானமும், புகழும் கொண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாக {அறவோராக} இருக்கின்றனர்.(37) அவர்களது சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்திரனின் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தாக்குவதில் திறமையான அவர்கள் அனைவரும் பாண்டவர்களிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.

திருஷ்டத்யும்னன், சிகண்டி, துர்முக்ஷன் மகனான ஜனமேஜயன் {தௌர்முகி}(38), சந்திரசேனன், மத்திரசேனன், கீர்த்திவர்மன், துருவன், தரன், வசுசந்திரன், சுதேஜனன்,(39) துருபதனின் மகன்கள், வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான துருபதன், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, அவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} உறுதியுடன் போராடும் அவனது {விராடனின்} தம்பியர்(40) அனைவரும், கஜானீகன், சுருதானீகன், வீரபத்திரன், சுதர்சனன், சுருதத்வஜன், பலானீகன், ஜயானீகன், ஜயப்பிரியன்,(41) விஜயன், லப்தலாக்ஷன், ஜயாஸ்வன், காமராஷன், விராடனின் அழகிய சகோதரர்கள்,(42) இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் (ஐவர்), ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் அனைவரும் பாண்டவர்களுக்காகவே போரிடுகின்றனர். எனவே, பாண்டுவின் மகன்கள் அழிவைச் சந்திக்கமாட்டார்கள்.(43)

இவர்களும், இன்னும் பிற (வீரர்களின்) கூட்டத்தினர் பலரும் பாண்டுவின் மகன்களுக்காகவே போரிடுகின்றனர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடியதும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் குழுக்கள் அனைத்துடன் கூடியதும், யானைகள், பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்துடன் கூடியதுமான மொத்த அண்டமே, பீமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோரின் ஆயுத ஆற்றலில் அழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.(44,45) யுதிஷ்டிரனைப் பொறுத்தவரை, கோபம் நிறைந்த தன் கண்களால் மட்டுமே அவனால் மொத்த உலகையும் எரித்துவிட முடியும். ஓ! கர்ணா, அளவிலா வலிமை கொண்ட சௌரியே {கிருஷ்ணனே} யாவருக்காகக் கவசம் பூண்டானோ அந்த எதிரிகளை எவ்வாறு நீ வெல்லத் துணிவாய்? ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ எப்போதும் சௌரியுடன் {கிருஷ்ணனுடன்} போரில் மோதத் துணிகிறாய் என்பது உன் பங்குக்குப் பெரும் மடமையாகும்” என்றார் {கிருபர்}.(46,47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(கிருபரால்) இப்படிச் சொல்லப்பட்ட ராதையின் மகனான கர்ணன், ஓ! குரு குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே சரத்வானின் மகனான ஆசான் கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(48) “ஓ! பிராமணரே {கிருபரே}, பாண்டவர்களைக் குறித்து நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. இவையும், இன்னும் பிற நற்குணங்களும் பாண்டு மகன்களிடம் காணப்படவே செய்கின்றன.(49) பார்த்தர்கள், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும், தைத்தியர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.(50) ஆனாலும், வாசவன் {இந்திரன்} என்னிடம் கொடுத்துள்ள ஈட்டியின் {சக்தியின்} உதவியால் நான் பார்த்தர்களை வெல்வேன். ஓ! பிராமணரே {கிருபரே}, சக்ரனால் {இந்திரனால்} எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈட்டியானது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதை நீர் அறிவீர்.(51) அதைக் கொண்டு போரில் நான் சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்வேன். அர்ஜுனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிருஷ்ணனும், அர்ஜுனனோடு பிறந்த சகோதரர்களும், அர்ஜுனன் (அவர்களுக்கு உதவி செய்ய) இல்லாமல் பூமியை {பூமியின் அரசுரிமையை} அனுபவிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள்.(52) எனவே, அவர்கள் அனைவரும் அழிவையே அடைவார்கள். கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானவள், குருக்களின் தலைவன் {துரியோதனன்} எந்த முயற்சியையும் செய்யாமலேயே அவனுடைய உடைமையாகவே இருப்பாள்.(53) {நல்ல} கொள்கையால் இவ்வுலகில் அனைத்தும் அடையத்தக்கதே என்பதில் ஐயமில்லை.(54) ஓ! கௌதமரே {கிருபரே}, இதை அறிந்தே நான் இந்த முழக்கங்களில் {கர்ஜனைகளில்} ஈடுபடுகிறேன்.

உம்மைப் பொறுத்தவரை, நீர் முதியவராகவும், பிறப்பால் பிராமணராகவும், போரில் திறனற்றவராகவும் இருக்கிறீர்.(55) பாண்டவர்களிடம் நீர் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறீர். இதன் காரணமாகவே நீர் என்னை இப்படி அவமதிக்கிறீர். ஓ! பிராமணரே, மீண்டும் இதுபோன்ற வார்த்தைகளை என்னிடம் சொன்னீரெனில், ஓ! இழிந்தவரே {கிருபரே}, என் கத்தியை உருவி உமது நாவை அறுத்துவிடுவேன்.(56) ஓ! பிராமணரே {கிருபரே}, ஓ! தீய புரிதல் கொண்டவரே, துருப்புகள் அனைத்தையும், கௌரவர்களையும் அச்சுறுத்தவே நீர் பாண்டவர்களைப் புகழ விரும்புகிறீர்.(57) ஓ! கௌதமரே {கிருபரே}, இதைப் பொறுத்தவரை, நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேளும்.(58) போரில் திறனுடையவர்களான துரியோதனன், துரோணர், சகுனி, துர்முகன், ஜயன், துச்சாசனன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்}, {கிருபராகிய} நீர், சோமதத்தர், பீமன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி ஆகிய அனைவரும் இங்கே கவசமணிந்து நிற்கின்றனர்.(59,60) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருந்தாலும், போரில் இவர்களை வெல்லத்தக்க எந்த எதிரி இருக்கிறான்? நான் பெயர் சொன்ன வீரர்கள் அனைவரும், ஆயுதங்களில் திறனுடையவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்களும் [2], அறநெறியறிந்தவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமாவர்.(61) போரில் அவர்கள் தேவர்களையே கொல்லவல்லவர்களாவர். வெற்றியை விரும்பும் துரியோதனனுக்காகக் கவசமணிந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் போர்க்களத்தில் தங்கள் நிலைகளை இவர்கள் ஏற்பார்கள்.(62) வலிமைமிக்க மனிதர்களின் வழக்கில் கூட வெற்றியென்பது விதியைச் சார்ந்தே இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.(63)

[2] போர்க்களத்தில் வீழ்ந்து சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமெனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கிறார் எனும்போதும், விகர்ணன், ஜெயத்ரதன்,(64) பூரிஸ்ரவஸ், ஜயன், ஜலசந்தன், சுதக்ஷிணன், தேர்வீரர்களில் முதன்மையான சலன், பெரும் சக்தி கொண்ட பகதத்தன்(65) ஆகிய இவர்களும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களும், (பாண்டவர்களைவிட) வலிமைமிக்கவர்களுமான வீரர்கள் அனைவரும், பாண்டவர்களால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கின்றனர்(66) எனும்போதும், ஓ! மனிதர்களில் இழிந்தவரே, இவையாவும் விதியின் விளைவு என்பதைவிட நீர் வேறு என்ன நினைக்கிறீர்? ஓ! பிராமணரே, யாரை நீர் புகழுகிறீரோ, அந்தத் துரியோதனனின் எதிரிகளைப் பொறுத்தவரையும் கூட, அவர்களில் துணிச்சல்மிக்க வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(67) குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு படைகளும் எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.(68) நான் இதில் பாண்டவர்களின் ஆற்றலைக் காணவில்லை. ஓ! மனிதர்களில் இழிந்தவரே, யாரை நீர் வலிமைமிக்கவர்களாக எப்போதும் கருதுகிறீரோ,(69) அவர்களுடன் நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தித் துரியோதனனின் நன்மைக்காகப் போரில் போராடுவேன். வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைச் சார்ந்ததே” என்றான் {கர்ணன்}.(70)
------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 157-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-70


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திர்கதமஸ் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 
Creative Commons License
முழுமஹாபாரதம் by முழுமஹாபாரதம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Based on a work at http://mahabharatham.arasan.info.
Permissions beyond the scope of this license may be available at http://mahabharatham.arasan.info.
mahabharatham.arasan.info. Blogger இயக்குவது.
Back To Top