clone demo
சந்தனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 28, 2015

"நீ மன்னனின் மகனில்லை!" என்ற திருதராஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 149

"You're not the son of a king" said Dhritarashtra! | Udyoga Parva - Section 149 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –78)

பதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, "ஓ! துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ! மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.


உயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ! ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.

அவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.

இதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ! ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.

பெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.

அவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.

எனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, "உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.

உறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.

இவ்வழியிலும், ஓ! பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம்? பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.

உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.

நீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ! இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும்? இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ! மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]" என்றார் {திருதராஷ்டிரர்}."

[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.


ஞாயிறு, ஜூன் 23, 2013

கௌதமரை மயக்கிய ஜனபதி - ஆதிபர்வம் பகுதி 130

Janapadi seduced Gautama | Adi Parva - Section 130 | Mahabharata In Tamil


(சம்பவ பர்வத் தொடர்ச்சி)

ஜனமேஜயன், "ஓ அந்தணரே, கிருபரின் பிறப்பு குறித்து எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள். நாணல் கற்றையிலிருந்து அவர் எப்படி உண்டானார்? ஆயுதங்களை எவ்வாறு அவர் அடைந்தார்?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா, பெரும் முனிவர் கௌதமருக்கு சரத்வத் {சரத்வன் என்றும் கௌதமர் என்றும் சொல்லப்பட்டவர்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். அந்த சரத்வத் பிறக்கும்போதே (கைகளில்) கணைகளுடன் பிறந்தார். ஓ எதிரிகளை அழிப்பவனே, கௌதமரின் மகன் மற்ற அறிவியல்களில் (வேத கல்வியில்) நாட்டம் கொள்ளாமல் அஸ்திர அறிவியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். கடும் நோன்புகளால் மாணவ பருவத்தில் வேத ஞானத்தை அடையும் அந்தணர்களைப் போல சரத்வத் ஆயுதங்களை அடைந்தார். கௌதமர் (கோதமரின் மகன்) ஆயுத அறிவியலில் நாட்டம் கொண்டு கடும் நோன்புகளால் இந்திரனைப் பெரிதும் அச்சமூட்டினார். ஓ குரு பரம்பரையில் வந்தவனே, பிறகு தேவர்கள் தலைவன், ஜனபதி என்ற தேவலோக மங்கையை அழைத்து, "கௌதமரின் தவத்தை கலைக்க உன்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்." என்று சொல்லி கௌதமரிடம் அனுப்பினான்.


அவள் அந்த சரத்வத்தின் அழகான ஆசிரமத்திற்குச் சென்று, வில் மற்றும் அம்புகளுடன் இருந்த அந்தத் துறவியை மயக்கினாள். உலகில் ஈடு இணை சொல்லமுடியாத வடிவழகுடன் கானகத்தில் தனிமையில் ஒற்றையாடையுடன் இருந்த அந்த அப்சரசைக் கண்ட சரத்வத்தின் கண்கள் பெரு மகிழ்ச்சியால் அகல விரிந்தன. அந்த மங்கையைக் கண்டதால், அவரது கைகளில் இருந்த வில்லும் கணைகளும் நழுவின, அவரது உடல் முழுவதும் உணர்ச்சியால் ஆட்டம் கண்டது. இருப்பினும், அவரது உயர்ந்த ஆன்மிகத் திறனாலும், ஆன்ம பலத்தாலும், அத்துறவி உணர்வுகளை எதிர்த்து பொறுமை காத்தார். இருப்பினும் விரைவாக அவர் அடைந்த மாற்றங்களால், அவரை அறியாமல் அவரது உயிர் நீர் வெளியேறியது. அவர் தனது வில்லையும் கணைகளையும், மான் தோலையும் அங்கேயே விட்டுவிட்டு, அந்த அப்சரசை விட்டு அகன்று ஓடினார். இருப்பினும், அவரது உயிர் நீர் நாணற்கற்றையில் வீழ்ந்து, இருகூறாகப் பிரிந்து, இரட்டைப் பிள்ளைகள் அதிலிருந்து உற்பத்தியாயின.

அப்போது, சந்தனுவின் படையில் பணியாற்றுபவர்களில் ஒருவன் தற்செயலாக அந்த இரட்டையர்களைக் கண்டான். தரையில் வில்லும் அம்புகளும் மான் தோலும் இருப்பதைக் கண்டு, அவர்கள் யாரோ போர்க்கலையில் திறன்வாய்ந்த அந்தணரின் பிள்ளைகள் என்று நினைத்தான்.

இப்படித் தீர்மானித்து, அந்தப் பிள்ளைகளை வில் அம்புடன் எடுத்துக் கொண்டு சென்று காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த மன்னனிடம் காட்டினான். இதைக் கண்ட மன்னன் இரக்கங்கொண்டு, "இவர்கள் எனது பிள்ளைகளாகட்டும்" என்று சொல்லி, அரண்மனைக்குக் கொண்டுவந்தான். மனிதர்களில் முதன்மையான பிரதீபனின் மகன் சந்தனு, கௌதமரின் இரட்டையர்களை தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அறம் சார்ந்த சடங்குகளைச் செய்வித்தான். அவன் அவர்களை வளர்க்க ஆரம்பித்து,  கிருபன் என்றும் கிருபி என்று அவர்களை அழைத்தான். தனது இரக்கத்தினால் (கிருபை) அவர்களை வளர்த்ததால் அவர்களுக்கு அப்பெயர்களை வைத்தான். கோதமரின் மகன் தனது ஆசிரமத்தை விட்டகன்று, தொடர்ந்து ஆயுத அறிவியலை உறுதியுடன் பயின்றார். பிறகு தனது தெய்வீகப் பார்வையால் தனது மகனும் மகளும் சந்தனுவின் அரண்மனையில் வளர்வதைக் கண்டார். இதன்காரணமாக அவர் அந்த ஏகாதிபதியிடம் சென்று, தனது குலம் முதல் எல்லாவற்றையும் சொன்னார். அதன்பிறகு கிருபருக்கு ஆயுத அறிவியலின் நான்கு* கிளைகளையும், ஞானத்தின் பல கிளைகளையும் அதன் புதிர்களையும் விவரமாக எடுத்துரைத்தார். குறுகி காலத்திற்குள் கிருபர் அந்த அறிவியலில் நிபுணத்துவம் பெற்றார். திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், பாண்டவர்களும் யாதவர்களும், விருஷ்ணிகளும் மற்றும் பல நாடுகளில் இருந்து பல இளவரசர்களும் அவரிடம் இருந்து ஆயுத அறிவியலில் பாடங்கள் கற்க வந்தனர்.
___________________________________________________________________________
* நான்கு வகை போர் = 1. ப்ரயோகம் - பயன்படுத்துவது, 2. சம்ஹாரம் - அழிப்பது 3.கல்பம் - ஆயுதத்துக்கு மந்திர பலம் கொடுப்பது 4. ரஹஸ்யம் - மறைமுக வித்தை {இது திரு.ம.வீ.ராமானுஜசாரியார் அவர்களின் புத்தகத்திலுள்ள மேற்கோள். அவர் இன்னும் அதிகமாக கொடுத்திருக்கிறார். நாம் சுருக்கிக் கொடுத்திருக்கிறோம்}

ஞாயிறு, மே 19, 2013

சந்தனுவின் மைந்தர்கள் | ஆதிபர்வம் - பகுதி 101

The sons of Santanu | Adi Parva - Section 101 | Mahabharata In Tamil(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதியே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் சந்தனு, அந்த அழகான மணமகளை தனது இல்லத்தில் அமர்த்தினான். விரைவில் சத்தியவதிக்கு புத்திக்கூர்மையுள்ள வீர மைந்தனாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சந்தனு, சித்திராங்கதன் என்று பெயரிட்டான். அவன் பெரும் சக்தியுடன் திறமை வாய்ந்தவனாக இருந்தான்.


பெரும் வீரமிக்க தலைவன் சந்தனு, சத்தியவதியிடம் மற்றொரு மகனையும் பெற்று அவனுக்கு விசித்திரவீரியன் என்று பெயரிட்டான். அவன் பெரும் வில்லாளியாக இருந்து, தனது தந்தைக்குப் பிறகு மன்னனான். விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான். சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னை சத்தியவதியின் தலைமையின் கீழ் நிறுத்தி, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான். சித்திராங்கதன் எதிரி மன்னர்களை எல்லாம் அழித்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று உணர்ந்தான். தன்னால் மனிதர்களையும், அசுரர்களையும், ஏன் தேவர்களையும் வெல்ல முடியும் என்று நினைத்த சித்திராங்கதன், பெரும் பலம் வாய்ந்த மன்னனான கந்தர்வ மன்னனைப் போருக்கு அழைத்தான். பெரும் பலசாலிகளான அந்த கந்தர்வனும், குருபரம்பரையின் முன்னவனும் குருக்ஷேத்திரத்தில் உக்கிரமாக போர் செய்தனர். அந்தப் போர் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று முழு வருடங்களுக்கு உக்கிரமாக நடந்தது. அந்த பயங்கரப் போரில் அடர்ந்த கணைகள் மழையைப் போலப் பொழிந்தன. அவர்களிருவரில் அதிக தந்திரம் கொண்ட கந்தர்வன் குருக்களின் இளவரசனைக் கொன்றான். மனிதர்களில் முதன்மையான, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனைக் கொன்றுவிட்டு கந்தர்வன் மேலுலகம் சென்றான். ஓ மன்னா, மனிதர்களில் புலி போன்ற பெரும் வீரமிக்க சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களை முடித்து, பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனை குருக்களின் அரியணையில் அமர்த்தினான். விசித்திரவீரியன் பீஷ்மனின் அதிகாரத்தின் கீழ் இருந்து, பிதுர்வழி வந்த தனது நாட்டை ஆண்டான். அறத்தின் விதிகளிலிலும் அனைத்து சட்டங்களிலும் ஞானம் கொண்ட பீஷ்மனை அவன் வழிபட்டு நின்றான். பீஷ்மனும் தனது கடமைகளுக்குக் கட்டுப்பட்டு அவனைக் காத்து வந்தான்.

பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100

The Terrible one | Adi Parva - Section 100 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயனர் சொன்னார், "தேவர்களாலும் அரச முனிகளாலும் புகழப்பட்ட அந்த ஏகாதிபதி சந்தனு, தனது ஞானத்திற்காகவும், அறச்செயல்களுக்காகவும், உண்மை நிறைந்த பேச்சுக்காகவும் எல்லா உலகங்களிலும் அறியப்பட்டிருந்தான். தன்னடக்கம், தயாளம், மன்னிக்கும் குணம், புத்திகூர்மை, அதிகாரத்தில் மென்மை, பொறுமை, அதீத சக்தி ஆகிய குணங்கள் அந்த மனிதர்களில் காளையிடம் (சந்தனுவிடம்) இருந்தன. அறம், பொருள் ஆகியவற்றில் சரளமாக இருந்து, பரத குலத்தையும், மனித குலத்தையும் காத்து வந்தான் அந்த {சந்தனு} ஏகாதிபதி. அவனின் {சந்தனுவின்} கழுத்தில் சங்கில் (சங்கு) உள்ளது போல மூன்று கோடுகள் இருந்தன. அவனின் {சந்தனுவின்} தோள் அகலமாக இருந்தது. மதங்கொண்ட யானையின் வீரத்தை அவன் {சந்தனு} பிரதிபலித்துக் கொண்டிருந்தான்.


அரசகளுக்கான எல்லா அதிர்ஷ்ட குறிகளும் அவனிடம் {சந்தனுவிடம்} இருந்தன. தேவலோகம் செல்வதற்கு முழுத்தகுதி வாய்ந்த பூமியின் முதல்வனாக அவன் {சந்தனு} இருந்தான். பெரும் சாதனைகள் செய்த அந்த ஏகாதிபதியின் நடத்தையைக் கண்ணுற்ற மனிதர்கள், இன்பத்தையும், பொருளையும் விட அறம்தான் உயர்ந்தது என்பதை அறிய வந்தனர். இந்த குணங்களே, மனிதர்களில் காளையான சந்தனுவிடம் வசித்து வந்தன. உண்மையாக, சந்தனுவைப் போன்று வேறு எந்த மன்னனும் இதுவரை இருந்ததில்லை. அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அம்மன்னனைக் {சந்தனுவைக்} கண்ட பூமியின் மற்ற மன்னர்கள், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான அவனுக்கு {சந்தனுவுக்கு} மன்னாதி மன்னன் (King of Kings (சக்கரவர்த்தி)) என்ற பட்டத்தைக் கொடுத்தனர். அந்த பரத குலத்தைக் காக்கும் தலைவனின் {சந்தனுவின்} காலத்தில் பூமியில் இருந்த மன்னர்கள் அனைவரும் துயரில்லாமல், பயமில்லாமல், எந்த குறையும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் அனைவரும் அமைதியுடன் உறங்கி, அதிகாலையில் எழுவதற்கு முன்னர் மகிழ்வானக் கனவுகள் கண்டு எழுந்தனர். அற்புதமான சாதனைகளைச் செய்து மற்றொரு இந்திரனைப் போல் இருந்த அந்த ஏகாதிபதியின் {சந்தனுவின்} கட்டுப்பாட்டில் இருந்த பூமியின் மன்னர்கள் அனைவரும், நன்னடத்தையுள்ளவர்களாகவும், தயாளர்களாகவும், அறம் சார்ந்தவர்களாகவும், வேள்விகள் செய்து கொண்டும் இருந்தனர். சந்தனு பூமியை ஆண்டு கொண்டிருந்த போது, அவனை {சந்தனுவைப்} போன்ற மற்ற ஏகாதிபதிகள் அனைவரின் அறத்தகுதிகளும் பெரும் அளவில் முன்னேறின. க்ஷத்திரியர்கள் அந்தணர்களுக்குச் சேவை செய்தார்கள்; வைசியர்கள் க்ஷத்திரியர்களுக்குச் சேவை செய்தார்கள்; சூத்திரர்கள் அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும் வழிபட்டு வைசியர்களுக்குச் சேவை செய்தார்கள்.

சந்தனு குருக்களின் தலைநகரான மகிழ்ச்சிமிகு ஹஸ்தினாபுரத்தில் வசித்து, கடல்களால் சூழப்பட்ட முழு உலகத்தையும் ஆண்டான். அவன் உண்மையுள்ளவனாக, சூதுகளற்றவனாக, தேவர்களின் மன்னனைப் போல அறங்களின் விதிக்குட்பட்டு வாழ்ந்து வந்தான். தயாளம், அறம், ஆன்மிகம் ஆகியவற்றின் கலவையோடு இருந்த அவன், பெரும் நற்பேறு பெற்றான். அவன் {சந்தனு} கோபத்தையும், தீயவற்றையும் நீக்கி, அழகான சோமனைப் போல் இருந்தான். சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், வாயுவைப்போன்ற வீரத்துடனும், கோபத்தில் யமனைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும் இருந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, சந்தனு இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருந்த போது, மான்களோ, பன்றிகளோ, பறவைகளோ அல்லது வேறு எந்த மிருகமோ தேவையேற்பட்டாலொழிய கொல்லப்பட்டதில்லை.

அவனின் {சந்தனுவின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில், அறத்தில் தலைசிறந்ததான அன்பு, கருணையுடன், ஆசை மற்றும் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா உயிர்களிடத்திலும் பாரபட்சமற்ற முறையில் செலுத்தப்பட்டது. தேவர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேள்விகள் நடத்தப்பட்டன. பாவம் வரும் வகையில் எந்த உயிரினத்தின் உயிரும் எடுக்கப்படவில்லை. சந்தனு, துயரத்திலிருந்தோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், பறவைகள் மற்றும் மிருகங்களுக்கும் மற்றும் ஏனைய உயிரனங்களுக்கும் மன்னனாக மட்டுமில்லாமல் தந்தையாகவும் இருந்தான். குரு பரம்பரையில் வந்த அந்த சிறந்தவனின் {சந்தனுவின்} ஆட்சியில் மக்கள் உண்மையுடன் ஒன்றிணைந்த பேச்சுடனும், தயாளமாகவும், அறம் சார்ந்தும் இருந்தனர். இல்லற இன்பத்தை முப்பத்தாறு ஆண்டுகள் அனுபவித்த சந்தனு {36}, பிறகு கானகத்திற்கு சென்றான்.

சந்தனுவின் மகனான கங்கைக்குப் பிறந்த வசு, தேவவிரதன் என்று அழைக்கப்பட்டான். அவன் {தேவவிரதன்}, மிகுந்த அழகாலும், அவனது பழக்க வழக்கங்களாலும், நடத்தையாலும், கல்வியாலும், அப்படியே சந்தனுவைப் பிரதிபலித்தான். உலகம் சார்ந்த அறிவிலும், ஆன்மிகத்திலும் அதனதன் கிளைகளிலும் அவன் {தேவவிரதன்} பெற்றிருந்த ஞானம் பெரியதாக இருந்தது. அவனது பலமும், சக்தியும் இயல்புக்கு மிக்கதாக இருந்தது. அவன் {தேவவிரதன்} பெரும் ரத வீரனானான். உண்மையில் அவன் {தேவவிரதன்} பெரும் மன்னனாக இருந்தான்.

"ஒரு நாள், மன்னன் சந்தனு, தனது கணையால் அடிபட்ட மான் ஒன்றை கங்கைக்கரை ஓரமாக தேடிக்கொண்டிருந்த போது, கங்கை மிகவும் வற்றிப் போயிருப்பதைக் கண்டான். ஓ மனிதர்களில் காளையே, சந்தனு இந்தக் காட்சியைக் கண்டு வியந்து நின்றான். அவன் {சந்தனு} தனது மனதிற்குள்ளேயே, ஆறுகளில் முதன்மையான {கங்கை} ஆறு எப்படி இவ்வளவு வேகமாக வற்றிப் போயிற்று? என்று கேட்டுக் கொண்டான். அந்த சிறப்பு மிக்க ஏகாதிபதி {சந்தனு}, காரணத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, திடகாத்திரமான, இனிமையான ஒரு இளைஞன் {தேவவிரதன்}, தனது கூரிய தெய்வீக ஆயுதங்களால் நதியின் ஓட்டத்தைத் தடுத்து இந்திரனைப் போல நின்று கொண்டிருப்பதைக் கண்டான். பிரம்மாண்டமான கங்கையின் நீரோட்டம், ஒரு இளைஞனால் தடுக்கப்பட்டத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தான். அந்த இளைஞன் {தேவவிரதன்}, சந்தனுவின் மகனைத் தவிர வேறு யாருமில்லை. சந்தனு, தனது மகனை {தேவவிரதனை}, அவன் பிறந்த போது பார்த்ததுதான். அதன் பிறகு பார்த்ததேயில்லை ஆகையால் அந்த இளைஞனை {தேவவிரதனை} அவனால் {சந்தனுவால்} நினைவுகூரமுடியவில்லை. அந்த இளைஞன் {தேவவிரதன்} தனது தந்தையை {சந்தனுவைப்} பார்த்தவுடனேயே கண்டுகொண்டான் எனினும், மன்னனை {சந்தனுவை} நெருங்காமல், தனது தெய்வீக மாய சக்திகளைப் பயன்படுத்தி, மேகத்தால் பார்வையை மறைத்து, அவன் {சந்தனு} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனான் { அந்த இளைஞன் தேவவிரதன்}.

மன்னன் சந்தனு, தான் கண்ட காட்சியை நினைத்து வியந்து, ஒரு வேளை அந்த இளைஞன் தனது மகனாக இருப்பானோ என்றெண்ணி கங்கையிடம், "எனது மகனைக் காட்டு" என்றான். இப்படிக் கேட்கப்பட்ட கங்கை, அழகான உரு கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையைத் தனது வலக் கரத்தில் பற்றி வந்து, சந்தனுவிடம் காட்டினாள். சந்தனு, ஏற்கனவே அவளை {கங்கையை} அறிந்திருந்தாலும், இப்போது ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணிற ஆடையுடன் வந்த அந்த அழகான பெண்ணை {கங்கையை} அவனால் {சந்தனுவால்} அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கங்கை, "மனிதர்களில் புலி போன்றவரே {சந்தனுவே}, சிறிது காலத்திற்கு முன், என்னால் எட்டாவதாகப் {8} பெறப்பட்ட மகன் இவன்தான் {தேவவிரதன்}. இவன் {தேவவிரதன்} எல்லா ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளும். ஓ ஏகாதிபதியே {சந்தனுவே}, இவனை {தேவவிரதனை} இப்போது நீர் கூட்டிச் செல்லலாம். அவனை {தேவவிரதனை} நான் கவனத்துடன் வளர்த்திருக்கிறேன். ஓ மனிதர்களில் புலி போன்றவரே, உமது இல்லத்திற்கு இவனையும் {தேவவிரதனையும்} அழைத்துச் செல்லுங்கள். உயர்ந்த புத்திகூர்மையுடன், வசிஷ்டரிடம் முழு வேதத்தையும் அதன் கிளைகளையும் கற்று வந்திருக்கிறான். எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்ற சிறந்த வில்லாளியான இவன் {தேவவிரதன்}, போர்க்களத்தில் இந்திரனைப் போன்றவன். ஓ பரதரே (பரத குலத்தில் வந்தவரே), தேவர்களும் அசுரர்களும் இவனுக்கு {தேவவிரதனுக்கு} நல்லதையே செய்ய நினைப்பர். உசானஸ் (சுக்ரன்) அறிந்த ஞானத்தின் கிளைகள் அத்தனையையும் இவனும் {தேவவிரதனும்} அறிவான். தேவர்களாலும், அசுரர்களாலும் வழிபடப்பட்டும் பிருஹஸ்பதி அறிந்த எல்லா சாத்திரங்களிலும் இவன் நிபுணத்துவம் பெற்றிருக்கிறான்.

கங்கை-தேவவிரதன்{பீஷ்மன்}-சந்தனு
ஜமதக்னியின் மைந்தன் ஒப்பற்ற ராமன் (பரசுராமன்), அறிந்த எல்லா பலம்வாயந்த ஆயுதங்களையும், சிறப்பு வாய்ந்த, பெரும்பலம் கொண்ட உமது மகன் {தேவவிரதன்} அறிவான். ஓ மன்னா, உயர்வான வீரத்தைக் கொண்ட, இந்த வீர மைந்தனை {தேவவிரதனை} உமக்கு நான் கொடுக்கிறேன்.இவன் {தேவவிரதன்} சிறந்த வில்லாளன். மன்னர்களின் கடமைகளையும், அவர்களுக்குள்ளான ஒப்பந்தங்கள் அனைத்தையும் இவன் அறிவான்." என்றாள். இப்படி கங்கையால் சொல்லப்பட்ட சந்தனு, சூரியனைப் போன்ற தனது மைந்தனை {தேவவிரதனை} தனது தலைநகருக்கு அழைத்துச் சென்றான். தேவர்களின் தலைநகரைப் போல இருந்த தனது தலைநகரை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்ததும், அந்த புருவின் வழியில் வந்த ஏகாதிபதி {சந்தனு}, தன்னை பெறும் அதிர்ஷ்டசாலியாக நினைத்தான்.

எல்லா பௌரவர்களையும் அழைத்து, அரசாங்கத்தைக் காக்க, தனது மகனை {தேவவிரதனை} தனது வாரிசாக அறிவித்தான். ஓ பாரத குலத்தில் காளையே {ஜனமேஜனே}, தனது நடத்தையால் அந்த இளவரசன் {தேவவிரதன்} விரைவாக தனது தந்தையையும் {சந்தனுவையும்}, மற்ற பௌரவர்களையும் அரசாங்கத்துக்குட்பட்ட அனைத்துக் குடிகளையும் திருப்திப்படுத்தினான். அதன்பிறகு, ஒப்புயர்வற்ற வீரம் கொண்ட மன்னன் {சந்தனு}, தனது மகனுடன் {தேவவிரதனுடன்}  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

இப்படியே நான்கு {4} வருடங்கள் ஓடின. ஒரு நாள் மன்னன் {சந்தனு} யமுனைக் கரையில் இருந்த ஒரு கானகத்திற்குச் சென்றான். அங்கே அந்த மன்னன் {சந்தனு} உலவிக் கொண்டிருந்த போது, திக்கற்ற இடத்திலிருந்து நறுமணம் பரவி வருவதை உணர்ந்தான். அதன் காரணத்தை அறிந்து கொள்ள விருப்பம் கொண்டு, அந்த மன்னன் {சந்தனு} அப்படியும் இப்படியும் தேடிக் கொண்டிருந்தபோது, மீனவ மகளான தெய்வீக அழகுடன் கூடிய கருங்கண் மங்கையொருத்தியை {சத்தியவதியை} கண்டான். அவளிடம், "ஓ மருட்சியுடையவளே, நீ யார்? நீ யாருடைய மகள்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான். அவள் {சத்தியவதி}, "ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பீராக! நான் *மீனவர்த்தலைவனின் மகள். அவரது உத்தரவின் பேரில், ஆன்மத் தகுதிகளை அடைய, வழிப்போக்கர்கள் இந்த நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல இந்தப் படகின் மூலம் உதவுகிறேன்", என்றாள். தெய்வீக அழகும், இனிமையும், நறுமணமும் கூடிய அந்த மங்கையைக் கண்டு, அவளை {சத்தியவதியை} தனது மனைவியாக அடைய எண்ணினான் மன்னன். அவளது தந்தையிடம் {மீனவர்த் தலைவனிடம்} சென்று, தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மீனவர்த்தலைவன், "ஓ மன்னா {சந்தனு}, உயர்ந்த நிறத்துடன் எனது மகள் {சத்தியவதி} பிறந்தவுடனேயே, அவளுக்கேற்ற கணவனை அடைய வேண்டுமே என்று உணர்ந்தேன். ஆனால், எனது இதயத்தில் குடியிருக்கும் விருப்பத்தைக் கேளும். ஓ பாவமற்றவரே, நீர் உண்மையானவர், இந்த மங்கையை {சத்தியவதியை} என்னிடம் இருந்து பரிசாக அடைய நீர் விருப்பம் கொண்டால், ஓர் உறுதியை ஏற்றுக் கொள்ளும். அந்த உறுதியை நீர் கொண்டால், உண்மையாக நான் எனது மகளை {சத்தியவதியை} உமக்கு அளிக்கிறேன். உமக்குச் சமமான வேறு கணவனை இவளுக்கு என்னால் அளிக்க முடியாது", என்றான் {மீனவர்த் தலைவன்}.

"இதைக் கேட்ட சந்தனு, "நீர் கேட்கும் உறுதி என்ன என்பதை நான் கேட்ட பிறகே, அதை என்னால் தர முடியுமா என்று சொல்ல முடியும். என்னால் தரக்கூடியது என்றால், நிச்சயம் தருவேன். இல்லையென்றால் என்னால் முடியாது." என்றான். மீனவன், "ஓ மன்னா {சந்தனு}, நான் உம்மிடம் என்ன கேட்கிறேன் என்றால், இந்த மங்கை மூலமாகப் பிறக்கும் மகனே, உமக்குப் பிறகு உமது அரியணையை ஏற வேண்டும். வேறு யாரும் உனக்கு வாரிசாகக் கூடாது." என்றான்.

"வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பரதா, இதைக் கேட்ட சந்தனுவால், அவன் {மீனவன்} கேட்ட வரத்தைக் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் ஆசை  அவனுக்குள்ளே இருந்து அவனை {சந்தனுவை} எரித்துக் கொண்டிருந்தது. அந்த மன்னன் இதயத்தில் துயர் கொண்டு, வழியெல்லாம் மீனவன் மகளை {சத்தியவதியை} நினைத்துக் கொண்டே ஹஸ்தினாபுரம் திரும்பினான். இல்லம் திரும்பி வேதனை நிறைந்த தியானத்தில் தனது நேரத்தைப் போக்கினான் அந்த ஏகாதிபதி. ஒரு நாள், துயரத்தில் இருந்த தனது தந்தையிடம் {சந்தனுவிடம்} தேவவிரதன் சென்று, "உம்மிடம் எல்லா செல்வமும் இருக்கிறது. எல்லா தலைவர்களும் உமக்குக் கீழ்ப்படிகிறார்கள், பிறகு ஏன் நீர் இப்படித் துயரத்திலிருக்கிறீர்? உமது சிந்தனையிலேயே லயித்துக் கொண்டு என்னிடம் ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாமல் இருக்கிறீரே.

நீர் குதிரையில் வெளியே எங்கும் செல்வதில்லை; சோகத்துடனும் மெலிந்தும் காணப்படுகிறீர். சுறுசுறுப்பையும் இழந்துவிட்டீர். நீர் என்ன நோயால் அவதிப்படுகிறீர்? என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அப்படி அறிந்து கொண்டால்,  அதற்கேற்ற தீர்வை என்னால் செய்ய முடியும்." என்றான். சந்தனு, தனது மகனிடம் {தேவவிரதனிடம்}, "நான் துயரத்திலிருக்கிறேன் என்று நீ உண்மையைச் சொல்கிறாய் மகனே. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். ஓ பரத குலத்தில் வந்தவனே {தேவவிரதனே}, இந்தப் பெரும் பரம்பரைக்கு நீ ஒருவனே கொழுந்தாக இருக்கிறாய். நீ எப்போதும், வீர விளையாட்டுகளிலும், வீர சாதனைகள் செய்வதிலுமே இருக்கிறாய். ஓ மகனே {தேவவிரதனே}, ஆனால் நான், மனித வாழ்வின் நிலையில்லாமையை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஓ கங்கையின் மைந்தனே {தேவவிரதனே}, உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், நான் மகனற்றவனாகிவிடுவேன். உண்மையில் நீ ஒருவனே எனக்கு நூறு மகன்களுக்குச் சமம். ஆகையால், இனிநான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.

நமது பேரரசை வழிநடத்திச் செல்லும் வளமை எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதலும் விருப்பமும் ஆகும். ஒரே மகன் உள்ளவன் மகனற்றவனே என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். நெருப்பின் முன்பாக செய்யப்படும் வேள்விகளும், மூன்று வேதங்களின் ஞானமும் அதனதன் பலனாக நிரந்தர அறத்தகுதித் தரும் என்பது உண்மையாக இருந்தாலும், ஒரு மகனின் பிறப்பால் ஏற்படும் அறத்தகுதியில் பதினாறில் ஒரு பகுதிக்குக் கூட அது சமமாக இருக்காது. உண்மையில் இவ்வகையில் பார்த்தால், மனிதனுக்கும், கீழ்மையான விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை. ஓ ஞானியே, ஒரு மகனைப் பெறுவதால் ஒருவன் சொர்க்கத்தை அடைவான், என்ற நம்பிக்கையில் உள்ள சந்தேகத்தை நான் ஊக்குவிக்கவில்லை. ஏனென்றால், தேவர்களும் ஏற்கும் புராணங்களின் வேராக இருக்கும் வேதங்களில், இதற்கு எண்ணற்ற சாட்சிகள் இருக்கின்றன. ஓ பரத குலத்தில் வந்தவனே {தேவவிரதனே}, நீயோ எப்போதும் வீரவிளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீரன். நீ போர்க்களங்களில் வீழக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. அப்படி நடந்தால், இந்த பரதப் பேரரசு என்ன ஆகும். அந்த நினைப்பே என்னைத் துயரடைய வைக்கிறது. எனது துயருக்கான காரணத்தை உன்னிடம் முழுமையாகச் சொல்லிவிட்டேன்", என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும் புத்திகூர்மைவாய்ந்த தேவவிரதன், மன்னனிடம் எல்லாவற்றையும் கேட்டு, சிறிது நேரம் யோசித்தான். பிறகு, தனது தந்தையின் {சந்தனுவின்} நலனில் அக்கறையுள்ள, தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு முதிர்ந்த அமைச்சரை அழைத்து, மன்னனின் துயரத்துக்கான காரணத்தைக் கேட்டான். ஓ பரத குலத்தில் காளையே {ஜனமேஜயனே}, இப்படி இளவரசனால் கேட்கப்பட்ட அமைச்சர், காந்தவதிக்காக (சத்தியவதி) மீனவன் கேட்ட வரத்தைப் பற்றிச் சொன்னார். பிறகு தேவவிரதன், வயதால் மதிக்கத்தக்க க்ஷத்திரிய தலைவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, நேரடியாக மீனவர்த் தலைவனிடம் சென்று, தனது மன்னனின் {சந்தனுவின்} சார்பாக அவனது மகளை {சத்தியவதியைக்} கேட்டான். மீனவர்த்தலைவன் அவனுக்கு {தேவவிரதனுக்கு} மரியாதைகள் செய்து அழைத்து, இளவரசன் அமர ஆசனம் கொடுத்து, "ஓ பரத குலத்தின் காளையே, நீ ஆயுதம் தாங்கியவர்களின் முதன்மையானவனும், சந்தனுவின் ஒரே மகனுமாவாய். உனது பலம் பெரியது. இருப்பினும் உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது. மணமகளின் தகப்பனாக இந்திரனே இருந்தாலும், அவனும் {இந்திரனும்} இப்படிப்பட்ட மதிப்பான விரும்பக்கூடிய சம்பந்தத்தை நிராகரிக்க வருத்தப்படுவான். இந்தக் கொண்டாடப்படும் மங்கை சிறந்த விதைக்குச் சொந்தக்காரர், உனக்கு நிகரான அறத்தகுதி வாய்ந்தவர். அவர் என்னிடம் உனது தந்தையின் அறங்களைப் பற்றி பல முறை பேசியுள்ளார். இந்த மன்னன் ஒருவனே சத்தியவதியின் கரத்தைப் பற்ற தகுதி வாய்ந்தவன் என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறார். சிறந்த பிரம்ம முனிவரான அசிதர் எனது மகள் சத்தியவதியின் கரத்தை மணத்திற்காகக் கேட்ட போதும் நான் மறுத்திருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இந்த மங்கையைக் குறித்து சொல்ல என்னிடம் ஒரு வார்த்தைதான் உள்ளது. சக்காளத்தியின் மகன் {கங்கையின் மகன்-தேவவிரதன்} எதிரியாக இருப்பதுதான் இந்தத் திருமணத்திற்குப் பெரும் தடையாக இருக்கிறது. ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, ஒருவன் அசுரனானாலும், கந்தர்வனானாலும் தனக்குள்ளேயே எதிரியை வைத்திருப்பவனுக்குப் பாதுகாப்பில்லை. இதுதான் இந்தத் திருமணத்திற்குத் தடை. வேறெதுவும் இல்லை. நீ ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய். ஆனால், சத்தியவதி குறித்தும், அவளது திருமணம் குறித்து நான் சொல்ல இதுதான் உள்ளது." என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பரத குலத்தில் வந்தவனே {ஜனமேஜயனே}, தேவ விரதன் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} நன்மை செய்ய விரும்பி அங்கிருந்த தலைவர்கள் மத்தியில், "ஓ உண்மை பேசுவபவர்களில் முதன்மையானவரே, நான் உச்சரிக்கப் போகும் உறுதியைக் கேளும்! இதைப் போன்ற உறுதியை ஏற்கும் துணிவு இதுவரை பிறந்த மனிதர்களிலும் இல்லை, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிடத்திலும் இருக்காது. நீர் எதிர்பார்க்கும் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இந்த மங்கை மூலமாகப் பிறக்கும் மைந்தனே எங்களது அடுத்த மன்னனாவான்." என்றான். இப்படிச் சொல்லப்பட்ட மீனவர்த்தலைவன், அரசாட்சியில் விருப்பங்கொண்டு (தனது மகள் வயிற்றுப் பிள்ளைக்காக), அடைய முடியாததை அடைய எண்ணி, "ஓ அற ஆன்மா கொண்டவனே, நீ அளவற்ற புகழ்வாய்ந்த உனது தந்தை சந்தனுவின் சார்பாக வந்திருக்கிறாய். நீயே எனது மகளின் {சத்தியவதியின்} திருமணத்தை என் சார்பாக இருந்து ஏற்பாடு செய். ஆனால், ஓ இனிமையானவனே {தேவவிரதனே}, உன்னிடம் சொல்ல வேறொன்றும் இருக்கிறது. நீ வேறு ஒரு உறுதியும் கொடுக்க வேண்டுமே. ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, மகளைப் பெற்று வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் நான் கேட்பது போலவே கேட்க வேண்டும். ஓ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனே, நீ சத்தியவதிக்காக செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தைக் கொடுக்க நீ தகுதிவாய்ந்தவன்தான். ஓ பெரும் கரங்களுக்குச் சொந்தக்காரனே, நீ உனது உறுதியை மீறுவாய் என்று நான் சந்தேகம் கொள்ளவில்லை. இருப்பினும், உன்னால் பெறப்படும் குழந்தைகள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது." என்றான்.

சத்தியவதி_மீனவன்_பீஷ்மன்

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, மீனவர்த் தலைவனின் சந்தேகங்களுக்கு விடையளித்திருந்த உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்த கங்கையின் மைந்தன் {தேவவிரதன்}, தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} நன்மையைச் செய்ய விருப்பம் கொண்டு, "ஓ மீனவர்த்தலைவனே, ஓ மனிதர்களில் சிறந்தவரே, இங்கே கூடியிருக்கும் மன்னர்களின் முன்னிலையில் நான் ஏற்கும் உறுதியைக் கேளும். மன்னர்களே, ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன். ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். நான் மகனற்று இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்." என்றான்.

வைசம்பாணர் தொடர்ந்தார். "கங்கை மைந்தன் {தேவவிரதன்} உதிர்த்த வார்த்தைகளைக் கேட்ட மீனவனின் உடலில் இருந்த ரோமங்கள் சந்தோஷத்தால் விறைத்து நின்றன. அவன், "எனது மகளை அளிக்கிறேன்" என்றான். உடனே, அப்சரஸ்களும், தேவர்களும், முனிவர் குலத்தைச் சேர்ந்தவர்களும் அந்தரத்தில் இருந்து தேவ விரதனின் தலையில் பூ மழை பொழிந்து, "இவன் பீஷ்மன் (பயங்கரமானவன்)." என்றனர்.


பீஷ்மன் பிறகு, தனது தந்தைக்கு சேவை செய்ய அந்த அழகான மங்கையிடம் {சத்தியவதியிடம்}, "தாயே, ரதத்தில் ஏறுங்கள், நமது இல்லத்திற்குச் செல்வோம்", என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவற்றைச் சொல்லிவிட்டு, பீஷ்மன், அந்த அழகான மங்கை {சத்தியவதி} ரதமேற உதவி செய்தான். அவளுடன் ஹஸ்தினாபுரம் வந்து, சந்தனுவிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்த செயற்கரிய செயலைப் பாராட்டி "இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, "நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்", என்றான் {சந்தனு}.

----------------------------------------------------------------------

* http://pkhari.blogspot.in/2011/11/glimpses-from-mahabharata-3-story-of.html-ல் அந்தச் செம்படவர்த் தலைவனின் பெயர் தசராஜா என்று இருக்கிறது.

புதன், மே 15, 2013

உண்மையை வெளிப்படுத்தினாள் கங்கை - பகுதி 99

Ganga told the truth | Adi Parva - Section 99 | Mahabharata In Tamil(சம்பவ பர்வ தொடர்ச்சி)சந்தனு, "வசுக்களின் குற்றம் என்ன? அபர்வா என்பது யார்? யாருடைய சாபத்தால் வசுக்கள் மனிதர்கள் மத்தியில் பிறந்தனர்? இந்த உனது குழந்தை கங்கதத்தன், மனிதர்களுடன் வாழும்படி என்ன செய்தான்? ஜானுவின் மகளே, எனக்கு முழுமையாகச் சொல்." என்றான்.வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட ஜானுவின் தெய்வீக மகள் கங்கை, தனது கணவனான, மனிதர்களில் எருதைப் போன்ற அந்த ஏகாதிபதியிடம், " பரத குலத்தில் சிறந்தவரே, வருணனால் மகனாகப் பெறப்பட்டவரே வசிஷ்டர், அந்த முனிவர் பிற்காலத்தில் அபர்வர் என்று அறியப்பட்டார். அவரது ஆசிரமம், மலைகளின் மன்னன் மேருவின் மார்பில் வீற்றிருந்தது. அந்த இடம் பல பறவைகளுடனும், மிருகங்களுடனும் புனிதமானதாக இருந்தது. அங்கே எல்லா காலங்களிலும், அந்தந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பரதகுலத்தில் சிறந்தவரே, அறம்சார்ந்த மனிதர்களில் முன்னவரான அந்த வருணனின் மகன், தனது ஆன்மிக நோன்புகளை இனிய கிழங்குகளும் நீரும் நிறைந்திருந்த அந்தக் கானகத்திலேயே செய்து வந்தார்.
தக்ஷனுக்கு, சுரபி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பரத குலத்தில் எருதைப் போன்றவரே, அவள் உலகத்தின் நன்மைக்காக காசியபருடன் கூடி ஒரு மகளை (நந்தினி) பசுவின் உருவில் பெற்றாள். அந்த பசுக்களில் முதன்மையான நந்தினி அனைத்தும் உடைய (விரும்பிய அனைத்தையும் கொடுக்கும் திறன் கொண்டவளாக) பசுவாக இருந்தாள். வருணனின் அறம்சார்ந்த மகன் {வசிஷ்டர்}, நந்தினியைத் தனது ஹோம காரியங்களுக்காக அடைந்தார். முனிவர்களால் வழிபடப்பட்ட அந்த ஆசிரமத்திலேயே நந்தினியும் வசித்து வந்தாள். அப்படி வசித்து வரும்போது, அச்சமற்று மகிழ்ச்சியுடன் அந்த புனிதமான இடத்தில் அவள் உலவிக் கொண்டிருந்தாள்."ஒரு நாள், பரத குலத்தில் எருதைப் போன்றவரே, அந்தக் கானகத்திற்கு, தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் வழிபடப்படும் வசுக்கள், பிருதுவைத் தலைமையாகக் கொண்டு அங்கு வந்தனர். அங்கே தங்கள் மனைவியருடன் அந்த மலைகளுடன் கூடிய அழகான கானகத்தில் உலவித் திரிந்து மகிழ்ச்சியாக இருந்தனர். இந்திரனின் வீரத்தைக் கொண்டவரே, அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், வசுக்களின் கொடியிடை மனைவியருள் ஒருத்தி, அந்தக் கானகத்தில் உலவிக் கொண்டிருந்த, எல்லாம் உடைய நந்தினியைக் கண்டாள். அவள், பெரிய கண்களுடன், மடி கனத்து, மெலிதான வாலுடன், அழகான கால்களுடன், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளும், நிறைந்த பாலும், அனைத்து செல்வங்களும் கொண்டிருந்த அந்தப் பசுவைத் தனது கணவன் தியுவுக்குக் காட்டினாள். முதன்மையான யானைகளின் வீரத்தைக் கொண்டவனே {ஜனமேஜயா}, தியு அந்தப் பசுவைக் கண்டு, அதன் சிறப்புகளை ஆராய்ந்து ரசித்து தனது மனைவியிடம், " அழகான தொடைகளையுடைய கருங்கண் பெண்ணே, இந்த அழகான ஆசிரமத்திற்கு உரிமையாளரான முனிவருக்கு சொந்தமானதே இந்தப் பசு. கொடியிடையாளே, சாகப் பிறந்தவன் இதன் பாலை அருந்தினால், பத்தாயிரம் வருடங்களுக்கு இளமை மாறாமல் இருப்பான்." என்றான். ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இதைக்கேட்ட களங்கமற்ற குணம் கொண்ட கொடியிடை தேவதை, தனது பிரகாசமிக்க தலைவனிடம், "இந்த உலகத்தில் ஜிதவி என்ற பெயரில் எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவள் பேரழகும் இளமையுமுடையவள். அவள் மனிதர்களில் தேவனாக இருக்கும் அரசமுனி உசீநராவின் மகள். அவள் மிகுந்த புத்திசாலியாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புடனும் இருக்கிறாள். சிறப்புமிக்கவரே, அந்த எனது தோழிக்காக இந்தப் பசுவை அதன் கன்றுடன் பெற விரும்புகிறேன். ஆகையால், தேவர்களில் சிறந்தவரே, எனது தோழி அதன் பாலைக் குடித்து, இந்த உலகத்தில் நோய்களும் பலவீனமும் அடையாமல் இருக்க, நீர் அதை இங்கே கொண்டு வாரும். சிறப்பமிக்கவரே, பழியற்றவரே, எனது விருப்பத்தை நீர் நிறைவேற்ற வேண்டும். அதைத் தவிர நான் வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்." என்றாள். தனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தியு, அவளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க விருப்பங்கொண்டு, தனது சகோதரன் பிருது மற்றும் ஏனையோர் துணையுடன் அதைத் திருடினான். அந்தப் பசுவைக் கொண்ட முனிவரின் பெரும் ஆன்மத்தகுதிகளை மறந்த தியு, நிச்சயமாக அந்த தனது தாமரைக் கண் மனைவியின் உத்தரவின் பேரிலேயே அதைச் செய்தான். அந்நேரத்தில் அவன், பசுவைத் திருடிய பாவத்திற்காக நாம் விழுந்துவிடுவோம் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை."மாலையில் பழங்களைச் சேகரித்துக் கொண்டு, வருணனின் மகன் தனது ஆசிரமத்திற்கு வந்த போது, பசுவும் கன்றும் காணவில்லை என்பதைக் கண்டார். அவர் கானகத்திற்குள் தேடத் துவங்கினார், உயர்ந்த புத்திகூர்மை உடைய அந்த முனிவர், தனது பசுக்களைக் காணவில்லை என்றவுடன், தனது ஆன்மிகப் பார்வையில் வசுக்கள் அவற்றைத் திருடிவிட்டனர் என்பதைக் கண்டார். அவருக்கு உடனே கோபம் மூண்டது. வசுக்களை, " இனிமையான பால் தரும், அழகான வால் கொண்ட எனது பசுவை வசுக்கள் திருடியதால், அவர்கள் உண்மையாக பூமியில் பிறக்கட்டும்" என்று சபித்தார்.பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த சிறப்புவாய்ந்த முனிவர் அபர்வர் {வசிஷ்டர்} கோபத்தால் வசுக்களை அப்படிச் சபித்தார். அப்படிச் சபித்துவிட்டு, மீண்டும் தனது ஆன்மிகத் தவத்தில் முழு இதயத்துடன் மூழ்கினார். மன்னா, அந்தப் பெரும் சக்திவாய்ந்த, ஆன்மச் செல்வம் கொண்ட பிரம்மரிஷி கோபங்கொண்டு தங்களைச் சபித்ததை வசுக்கள் அறிந்தனர். அவர்கள் வேகமாக அந்த ஆசிரமத்திற்கு வந்து அந்த முனிவரைக் குளிர்விக்க முயன்றனர்.ஆனால், மனிதர்களில் புலி போன்றவரே, அறத்தின் எல்லா விதிகளையும் அறிந்த அந்த முனிவர் அபர்வரின் அருளைப் பெறுவதில் அவர்கள் தோற்றனர். அந்த அறம்சார்ந்த அபர்வர், "தவாவுடன் (அவர்களில் ஒரு வசுவின் பெயர்) கூடிய வசுக்களே, நீங்கள் என்னால் சபிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் மனிதர்களுள் பிறந்து ஒரு வருடத்திற்குள் உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் யாருடைய செயலால் நீங்கள் சபிக்கப்பட்டீர்களோ, அவன் (தியு) அவனது பாவச் செயலிற்காக, நீண்ட காலத்திற்கு உலகத்தில் வசிப்பான். நான் கோபத்தால் உதிர்த்த வார்த்தைகளைப் பயனற்றதாக்க மாட்டேன். தியு பூமியில் வசித்தாலும், அவன் பிள்ளைகளைப் பெற மாட்டான். இருப்பினும், அவன் அறம் சார்ந்தவனாகவும், சாத்திர அறிவுடனும் இருப்பான். அவன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பான். பெண் துணையின் இன்பத்திலிருந்து அவன் விலகியே இருப்பான்." என்று சொன்னார்.வசுக்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அந்த பெருமுனிவர் சென்று விட்டார். பிறகு வசுக்கள் அனைவரும் கூடி என்னிடம் வந்தனர். மன்னா, அவர்கள், தாங்கள் பிறந்தவுடன், தங்களை நீரில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று வரம் தருமாறு என்னிடம் கெஞ்சினர். மன்னர்களில் சிறந்தவரே, அவர்களை உலக வாழ்விலிருந்து விடுவிப்பதற்காக, நான் அவர்கள் விருப்பப்படியே நடந்தேன்.. மன்னர்களில் சிறந்தவரே, அந்த முனிவரின் சாபப்படி, இந்தக் குழந்தையே (தியு) பூமியில் சில காலத்திற்கு வாழ்வான்." என்றாள்.வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லிவிட்டு, அந்த தேவதை மறைந்தாள். அவள் தனது பிள்ளையுடன் தான் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டாள். அந்த சந்தனுவின் மகன் கங்கேயன் என்றும் தேவவிரதன் என்றும் பெயரிடப்பட்டான். அவன் எல்லா சாதனைகளிலும் அவனது தந்தையை மிஞ்சினான்.சந்தனு, தனது மனைவி மறைந்தவுடன், தனது தலைநகருக்குத் துயரத்துடன் சென்றான். இனி அந்த சிறந்த மன்னன் சந்தனுவின் பல அறங்களையும், பெரும் நற்பேறுகளையும் விவரிக்கிறேன். நிச்சயமாக இந்த வரலாறே மஹாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திர்கதமஸ் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 
Creative Commons License
முழுமஹாபாரதம் by முழுமஹாபாரதம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Based on a work at http://mahabharatham.arasan.info.
Permissions beyond the scope of this license may be available at http://mahabharatham.arasan.info.
mahabharatham.arasan.info. Blogger இயக்குவது.
Back To Top