clone demo
ஜெயத்ரதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயத்ரதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 16, 2017

காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 22

Creatures dragging Jayadratha's body to jungle! | Stri-Parva-Section-22 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 07) [ஸ்திரீ பர்வம் - 13]


பதிவின் சுருக்கம் : அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)

புதன், செப்டம்பர் 14, 2016

ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 145

Arjuna killed Jayadratha! | Drona-Parva-Section-145 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 60)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் துணிச்சலோடு போரிட்ட ஜெயத்ரதன்; ஜெயத்ரதனின் கொடிமரத்தை வெட்டி, அவனது சாரதியைக் கொன்ற அர்ஜுனன்; வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட ஜெயத்ரதன்; யோக சக்தியால் சூரியனை மறைத்த கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்ட அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; மனித சக்திக்கு அப்பாற்பட்ட அர்ஜுனனின் வீரம்; விருத்தக்ஷத்திரனின் கதையை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்டிய அர்ஜுனன்; விருத்தக்ஷத்திரனின் தலை சுக்குநூறாகச் சிதறியது; இருளை விலக்கியக் கிருஷ்ணன்; பயங்கரக் கூச்சலால் யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்பிய பீமசேனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் வில்லை வளைத்தபோது யமனின் உரத்த அழைப்புக்கோ, இந்திரனுடைய வஜ்ரத்தின் பயங்கர முழக்கத்துக்கோ ஒப்பான நாணொலியைக் கேட்ட அந்த உமது படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீன்கள் மற்றும் மகரங்களுடன் கூடிய கடல் நீரானது, யுக முடிவில் எழும் சூறாவளியால் சீற்றத்துடன் அடிக்கப்பட்டு, மலை போன்ற அலைகளாக உடைவதைப் போல மிகவும் கலங்கியது. அப்போது பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரே நேரத்தில் திசைகள் அனைத்திலும் இருப்பவனைப் போலத் தன் அற்புத ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(1-3) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுக்கிறான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்துகிறான், எப்போது வில்லை வளைக்கிறான், எப்போது அவற்றை விடுகிறான் என்பதை நாங்கள் காண முடியாத அளவுக்கு அவனது கரநளினம் {கரலாகவம்} இருந்தது. பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, வெல்லப்பட முடியாத ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்துப் பாரதர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். தெய்வீக ஆயுதங்களின் சக்தியுள்ள மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, நெருப்பு போன்ற வாய்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுடர்மிக்கக் கணைகள் அதிலிருந்து {அந்த ஐந்திராஸ்திரத்தில் இருந்து} பாய்ந்தன. நெருப்புக்கோ, சூரியனின் கதிர்களுக்கோ ஒப்பான அந்தக் கணைகள், கடும் மூர்க்கத்துடன் விரைந்ததால், மின்னும் எரிக்கோள்களால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் காண முடியாததாக ஆனது.(4-7)


கௌவர்களின் கணைகளால் உண்டானதும், மற்றவரால் கற்பனையிலும் கூட அகற்றப்பட முடியாததுமான அந்த இருளை {சஸ்திராந்தகாரத்தை}, களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியபடி திரிந்து கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அதிகாலையில் சூரியன் இரவின் இருளைத் தன் கதிர்களால் விரைவாக அகற்றுவதைப் போலத் தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தன் கணைகளால் {அந்த இருளை} அழித்தான்.(8, 9) , சூரியன் தன் வெப்பக் கதிர்களால் குளங்கள் மற்றும் தடாகங்களில் உள்ள நீரை உறிஞ்சுவதைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன், சுடர்மிக்கத் தன் கணைகளால் உமது போர்வீரர்களின் உயிர்களை உறிஞ்சினான்.(10) உண்மையில், சூரியனின் கதிர்கள் பூமியை மறைப்பதைப் போல (அர்ஜுனனால் ஏவப்பட்ட) தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய அந்தக் கணைகளின் மாரி அந்தப் பகைவரின் படையை மறைத்தன.(11) (தனஞ்சயனால்) ஏவப்பட்ட கடுஞ்சக்தி கொண்ட பிற கணைகள் உயிர் நண்பர்களைப் போல (பகை) வீரர்களின் இதயங்களுக்குள் வேகமாக நுழைந்தன.(12) உண்மையில், அந்தப் போரில் அர்ஜுனனுக்கு எதிரில் வந்த அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அனைவரும், சுடர்மிக்க நெருப்பை அணுகிய பூச்சிகளைப் போல அழிந்தனர்.(13) இப்படித் தன் எதிரிகளின் உயிர்களையும், அவர்களது புகழையும் நசுக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, உடல் கொண்டு வந்த யமனைப் போலவே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(14)

பார்த்தன் {அர்ஜுனன்}, கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரிகளின் தலைகள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் பருத்த கரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகள் ஆகியவற்றைத் தன் கணைகளால் அறுத்தான்.(15) யானைப்பாகர்களின் ஈட்டிகளுடன் கூடியவையும், குதிரைவீரர்களின் வேல்களுடன் கூடியவையும், காலாட்படைவீரர்களின் கேடயங்களுடன் கூடியவையும், தேர்வீர்களின் விற்களுடன் கூடியவையும், தேரோட்டிகளின் சவுக்கு மற்றும் சாட்டைகளுடன் கூடியவையுமான கரங்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(16, 17) உண்மையில், தன்னொளியுடன் சுடர்விடும் முனை கொண்ட கணைகளுடன் கூடிய அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இடையறாத பொறிகள் மற்றும் எழுதழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18)  ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} இணையான வீரனும், மனிதர்களில் காளையும், ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடியே தன் தேரில் தான் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடி காணப்படுபவனும், தன் வில்லின் நாண்கயிறாலும் உள்ளங்கைகளாலும் செவிடாகும்படி ஒலியெழுப்பக்கூடியவனும், எரிக்கும் கதிர்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பானவனுமான அந்தத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைத்} தங்கள் பலம் அனைத்தையும் திரட்டிக் கொண்ட பகை மன்னர்கள் அனைவராலும்,பார்க்க கூட முடியவில்லை.(19-21)

சுடர்மிக்க முனைகளைக் கொண்ட தன் கணைகளுடன் கூடியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மழைக்காலங்களில் வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மழைநிறைந்த மேகங்களின் வலிமைமிக்கத் திரளைப் போல அழகாகத் தெரிந்தான்.(22) வலிமைமிக்க ஆயுதங்களின் அந்தப் பலமான வெள்ளத்தை ஜிஷ்ணு {அர்ஜுனன்} பாயச் செய்த போது, போர்வீரர்களின் காளையரான பலர் தாங்க முடியாத அந்தப் பயங்கரமான வெள்ளத்தில் மூழ்கினர்.(23) துதிக்கைகளோ, தந்தங்களோ வெட்டப்பட்ட மதங்கொண்ட யானைகள், குளம்புகளையோ, கழுத்துகளையோ இழந்த குதிரைகள், துண்டு துண்டாகக் குறைந்து போன தேர்கள், குடல்கள் வெளியேறிய போர்வீரர்கள், கால்களோ, பிற அங்கங்களோ வெட்டப்பட்ட பிறர், முற்றிலும் அசையாமலோ, சுயநினைவின்றி அசைந்து கொண்டோ கிடந்த நூற்றுக்கணக்கான, ஆயிரகணக்கான உடல்கள் ஆகியவை விரவி கிடந்ததும், பார்த்தன் {அர்ஜுனன்} போரிட்டுக் கொண்டிருந்ததும், யமனே ஆசைப்படும் இடத்துக்கு ஒப்பானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், பழங்காலத்தில் ருத்ரன் {சிவன்} உயிரினங்களை அழித்த போது, அவன் {சிவன்} விளையாடிய மைதானம் போன்றதுமான அந்தப் பரந்த களத்தை நாங்கள் கண்டோம்.(24-27) க்ஷுரப்ரங்களில் {கத்தி போன்ற முனை கொண்ட கணைகளில்} வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக் கிடந்த அந்தக் களத்தில் சில பகுதிகள், பாம்புகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. அதே போல வெட்டப்பட்ட போர்வீரர்களின் தலைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள், தாமரை மலர் மாலைகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. பல வண்ணங்களிலான அழகிய தலைக்கவசங்கள், மகுடங்கள், கேயூரங்கள், அங்கதங்கள், காது குண்டலங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டட கவசங்களுடனும், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் {தங்க} இழைகள், பிற ஆபரணங்களுடனும், அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான கிரீடங்களுடனும் பூமியானவள் புதுமணப்பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தாள்.

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, அச்சமிக்கப் பொருள்களால் நிறைந்து, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் வைதரணீக்கு ஒப்பாகப் பாய்வதும், சீற்றமிக்கதுமான ஒரு பயங்கர ஆற்றை {நதியை} அங்கே உண்டாக்கினான். (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மஜ்ஜையும் கொழுப்பும் அதன்  சகதியாகின. குருதி அதன் ஓடையாகியது. உறுப்புகளாலும், எலும்புகளாலும் நிறைந்திருந்த அஃது அடியற்ற ஆழம் கொண்டதாக இருந்தது. உயிரினங்களின் மயிர்கள் அதன் பாசிகளும், புற்களுமாகின. சிரங்களும், கரங்களும் அதன் கரைகளில் உள்ள கற்களாகின. கொடிமரங்கள், பலவண்ணங்களிலான கொடிகள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடைகளும், விற்களும் அதன் அலைகளாகின. உயிரிழந்த பெரும் யானைகளின் உடல்களால் அது நிறைந்திருந்தது. தேர்க்கூட்டங்கள் அதன் பரப்பில் மிதக்கும் நூற்றுக்கணக்கான தெப்பங்களாகின. கணக்கிலடங்கா குதிரைகளின் சடலங்கள் அதன் கரைகளாகின. பாம்புகளைப் போலத் தெரிந்த தேர்களின் அக்ஷங்கள், கூபரங்கள், தோமரங்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகள், கணைகள் ஆகியவற்றின் விளைவால் அது கடப்பதற்குக் கடினமானதாக இருந்தது. அண்டங்காக்கைகளும், கங்கப் பறவைகளும் அதன் முதலைகளாகின. நரிகள் அதன் மகரங்களாக அமைந்து அதைப் பயங்கரமாக்கின. கடும் கழுகுகள் அதன் சுறாக்களாகின. துள்ளித் திரியும் பேய்களாலும், பிசாசங்களாலும், ஆயிரக்கணக்கான பிறவகை ஆவிகளாலும் அது நிறைந்திருந்தது [1]. மேலும் அதில் உயிரற்ற போர்வீரர்களின் கணக்கிலடங்கா உடல்கள் மிதந்தன. யமனுக்கு ஒப்பான முகத்தோற்றம் கொண்ட அந்த அர்ஜுனனின் ஆற்றலைக் கண்டு, அந்தப் போர்க்களத்தில் இதற்கு முன் எப்போதும் நேராத அளவுக்குக் குருக்கள் பீதியை அடைந்தனர்.(28-38)

[1] வேறொரு பதிப்பில், “ஆயிரக்கணக்காகக் கூத்தாடும் பிரேதம் {சடலம்}, பிசாசம் முதலான பூதங்களால் நான்கு பக்கங்களும் சூழப்பட்டிருந்தது” என்றிருக்கிறது. பேய், ஆவி போன்ற சொற்கள் பயன்படுத்தப்படாதது இங்கே கவனிக்கத்தக்கது.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களால் பகைவீரர்களைக் கலங்கடித்துக் கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டு, அவன் {அர்ஜுனன்} கடுஞ்சாதனைகளைச் செய்யும் போர்வீரன் என அனைவரையும் உணரச் செய்தான்.(39) அப்போது, அர்ஜுனன் தேர்வீரர்களில் முதன்மையான அனைவரையும் விஞ்சி நின்றான்.(40) ஆகாயத்தில் எரிக்கும் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல, உயிரனங்கள் ஏதாலும் அவனைப் பார்க்கக்கூட முடியவில்லை.(41) அந்தப் போரில் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} வில்லான காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகள், ஆகாயத்தில் நாரைகளின் வரிசைக்கு ஒப்பாக எங்களுக்குத் தெரிந்தன.(42) அந்த வீரர்கள் அனைவரின் ஆயுதங்களையும் தன் ஆயுதங்களால் கலங்கடித்து, தான் ஈடுபட்ட பயங்கரச் சாதனைகளால் தன்னைக் கடுஞ்சாதனைகள் கொண்ட போர்வீரனாகக் காட்டிக் கொண்ட அர்ஜுனன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் விஞ்சி அவர்கள் அனைவரையும் தன் கணைகளால் மலைக்கச் செய்தான்.(44) கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடி, அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் திரிந்து அழகாகக் காட்சியளித்தான்.(45) அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள் வானத்தினூடாகத் தொடர்ந்து செல்வது ஆகாயத்தில் காணப்பட்டது.(46) அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், உண்மையில் அந்தப் பாண்டுவின் மகன் எப்போது அதைக் குறிபார்த்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை எங்களால் கவனிக்கவே முடியவில்லை.(47)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்து, போரில் தேர்வீரர்கள் அனைவரையும் பீடித்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை நோக்கிச் சென்று, அவனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு {64} நேரான கணைகளால் துளைத்தான்.(48) பிறகு, ஜெயத்ரதனை நோக்கிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட குருவீரர்கள் அனைவரும் போரில் இருந்து விலகினர்.(49) உண்மையில், அந்த வீரர்கள் ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிருடன் தப்புவான் என்ற} நம்பிக்கையற்றுப் போனார்கள். அந்தக் கடும்போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்த உமது வீரர்களில் ஒவ்வொருவரும், ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் கணையால் தங்கள் உடலில் ஆழத் துளைக்கப்பட்டனர்.(50) வலிமைமிக்கத் தேர்வீரனும், வெற்றியாளர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், நெருப்பு போலச் சுடர்விட்ட தன் கணைகளால், உமது படையைத் தலைகளற்ற உடல்களின் {கபந்தங்களின்} [2] கூட்டமாக மாற்றினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படியே நால்வகைப் படைப்பிரிவுகளுடன் கூடிய உமது படையில் முழுக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஜெயத்ரதனை நோக்கி முன்னேறினான். மேலும் அவன் {அர்ஜுனன்} துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஐம்பது கணைகளாலும், விருஷசேனனை {கர்ணனின் மகனை} மூன்றாலும் துளைத்தான்.(51-53) அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஒன்பது கணைகளால் கிருபரை மென்மையாகத் தாக்கினான். மேலும் அவன், சல்லியனைப் பதினாறு கணைகளாலும், கர்ணனை முப்பத்திரண்டாலும் துளைத்தான்.(54) அதற்கு மேலும் அவன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு கணைகளால் துளைத்து சிங்க முழக்கம் செய்தான்.

[2] “ஒரு கபந்தம் என்பது உயிருடன் கூடியதும், நடக்கக்கூடியதுமான தலையற்ற உடலாகும். இந்தத் தலையற்ற முண்டங்கள் தங்கள் பிடிக்குள் அகப்பட்டு இரையாவோரின்  குருதியைக் குடிக்கும் என்று கதைகள் சொல்லப்படுகின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

எனினும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சினத்தால் நிறைந்தான்.(55) பன்றிக் கொடியைத் தாங்கிய அவன் {ஜெயத்ரதன்}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கழுகின் சிறகுகளைக் கொண்டவையுமான நேரான கணைகள் பலவற்றைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர் மீது விரைவாக ஏவினான்.(56, 57) பிறகு கோவிந்தனை {கிருஷ்ணனை} மூன்று கணைகளால் துளைத்த அவன் {ஜெயத்ரதன்}, அர்ஜுனனை ஆறால் {6 கணைகளால்} தாக்கினான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} எட்டு கணைகளால் அர்ஜுனனின் குதிரைகளையும், மற்றொன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(58) அப்போது அர்ஜுனன், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} ஏவப்பட்ட கூரிய கணைகளைக் கலங்கடித்த அதே வேளையில், இரண்டு கணைகளால் ஜெயத்ரதனுடைய தேரோட்டியின் தலையையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தையும் அறுத்தான். வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கொடிமரம், நெருப்பின் தழல் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது. அதே வேளையில் சூரியனும் வேகமாகக் கீழே இறங்கினான்.(59-61)

அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைவாக, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வலிமையும், வீரமும் மிக்க ஆறு தேர்வீரர்களுக்கு மத்தியில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்.(62) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்த ஜெயத்ரதனும், அங்கே அச்சத்துடன் காத்திருக்கிறான். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, தடையின்றி நீ முயன்றாலும், அந்த ஆறு தேர்வீரர்களையும் போரில் வெல்லாமல் உன்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லவே முடியாது. எனவே, நான் யோகத்தை {யோக சக்தியைப்} பயன்படுத்திச் சூரியனை மறைக்கப் போகிறேன். (அதன் விளைவாக) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மட்டுமே சூரியன் மறைவதைக் காண்பான். ஓ! தலைவா {அர்ஜுனா}, உயிரை விரும்புபவனான அந்தப் பொல்லாதவன், தன் அழிவுக்காகவே மகிழ்ச்சியை அடைந்து, அதற்கு மேலும் தன்னை மறைத்துக் கொள்ள மாட்டான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஓ! குருக்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நீ அவனைத் {ஜெயத்ரதனைத்} தாக்க வேண்டும்.(65-66)

சூரியன் உண்மையாகவே மறைந்துவிட்டான் என்று எண்ணி நீ உன் ஊக்கமான முயற்சியைக் கைவிட்டுவிடாதே” என்றான் {கிருஷ்ணன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான்.(67)

அப்போது ஹரி என்றும் அழைக்கப்படுபவனும், தவச் சக்திகளைக் கொண்டவனும், தவசிகள் அனைவரின் தலைவனுமான கிருஷ்ணன், யோகத்தைப் பயன்படுத்தி, சூரியனை மறைப்பதற்காக இருளை உண்டாக்கினான் [3].(68)

கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள், சூரியன் மறைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பார்த்தன் {அர்ஜுனன்} தன் உயிரை விடப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(69)

உண்மையில், உமது போர்வீரர்கள், சூரியனைக் காணாது மகிழ்ச்சியிலேயே நிறைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைத் திருப்பிக் கொண்டு நின்றனர். மன்னன் ஜெயத்ரதனும் அதே மனநிலையில்தான் இருந்தான். இப்படி அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் மீண்டும் தனஞ்சயனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, உன் மீது கொண்ட அச்சத்தை விட்டு, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(72) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பொல்லாத ஆன்மா கொண்ட அவனை {ஜெயத்ரதனைக் கொல்ல} இதுவே தகுந்த நேரம். விரைவாக அவனது தலையை அறுத்து உனது சபதத்தை உண்மையாக்குவாயாக” என்றான் [4].(73)

[3] வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் ஒரு அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு, "இங்கே சில புஸ்தகங்களில் பல பாட பேதங்கள் காணப்படுகின்றன. "வாசுதேவர் சக்ரத்தினால் சூரியனை மறைத்தார்" என்பது அவைகளுள் முக்கியமானது" என்று இருக்கிறது. இந்தக் குறிப்பு கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இல்லை.

[4] வேறொரு பதிப்பில் இதன் பிறகு நேரடியாக ஜெயத்ரதன் கொல்லப்படும் காட்சிக்கே செல்கிறது. கங்குலியில் பின்வருவன, கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது நடந்ததாக அந்தப் பதிப்பில் விவரிக்கப்படுகிறது.

இப்படிக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட அந்தப் பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்}, காந்தியில் சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான தன் கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(74) மேலும் அவன் {அர்ஜுனன்} கிருபரை இருபது கணைகளாலும், கர்ணனை ஐம்பதாலும் துளைத்தான். சல்லியன், துரியோதனன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறு கணைகளால் அவன் தாக்கினான்.(75) மேலும் அவன் {அர்ஜுனன்} விருஷசேனனை எட்டு கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபது {60} கணைகளாலும் துளைத்தான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற போர்வீரர்களைத் தன் கணைகளால் தாக்கியபடியே ஜெயத்ரதனை எதிர்த்து விரைந்தான். தழல் நாக்கை விரித்துப் பரவும் நெருப்பைப் போலத் தங்கள் முன்னிலையில் அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள் மிகவும் குழம்பினர்.(76, 77) பிறகு வெற்றியை விரும்பிய உமது போர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இந்திரனின் மகனை {அர்ஜுனனைக்} கணைத்தாரைகளால் குளிப்பாட்டினர்.(78) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், குருவின் வெற்றிகொள்ளப்படாத வழித்தோன்றலுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இடைவிடாத கணை மழையால் மறைக்கப்பட்டுச் சினத்தால் நிறைந்தான்.(79)

அப்போது, மனிதர்களில் புலியான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, உமது படையைக் கொல்ல விரும்பி, அடர்த்தியான கணை வலைகளை உண்டாக்கினான். பிறகு, அவ்வீரனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.(80, 81)

இரு மனிதர்களாகச் சேர்ந்து ஓடும் எவரையும் காண முடியாத வகையில் அவர்கள் அப்படி {தனித்தனியாகத்} தப்பி ஓடினர். குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அப்போது கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(82) உண்மையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {அர்ஜுனன்} அப்போது செய்ததைப் போல இதுவரை செய்யப்பட்டதும் இல்லை, இனி செய்யப்படப் போவதும் இல்லை. உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனைப் போலத் தனஞ்சயன், யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரை சாரதிகள், (தேர்வீரர்கள்) மற்றும் தேரோட்டிகள் ஆகியோரைக் கொன்றான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்படாத எந்த ஒரு யானையையோ, குதிரையையோ, மனிதப் போர்வீரனையோ நான் அந்தப் போரில் காணவில்லை.(83-84)

புழுதியாலும், இருளாலும் பார்வை தடைபட்ட உமது வீரர்களால் ஒருவரையொருவர் வேறுபடுத்திக்காண முடியாமல் முற்றிலும் உற்சாகத்தை இழந்தனர்.(85)

விதியால் உந்தப்பட்டும், கணைகளால் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் இருந்த உமது படை வீரர்கள், விழவோ, நொண்டித் திரியவோ தொடங்கினர்.(86) அவர்களில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, செயல் இழந்தனர், சிலரோ மரணம் ஏற்பட்டதைப் போல இருண்டனர் {நிறம் மங்கினர்}. யுக முடிவில் உயிரினங்கள் கொல்லப்படுவதற்கு ஒப்பாக நடந்த அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, வெகுசிலரே தப்ப முடிந்த மூர்க்கமான அந்தக் கொடூரப் போரில் சிந்திய குருதி பூமியை நனைத்தது, பூமியில் எழுந்த புழுதியானது அப்படிச் சிந்திய குருதி மழை மற்றும் களத்தில் வீசிய வேகமான காற்று ஆகியவற்றின் விளைவால் மறைந்து போனது. தேர்ச்சக்கரங்களின் மத்திய பகுதி வரை மூழ்கும் அளவுக்கு அந்த இரத்த மழை ஆழமாக இருந்தது.(88, 89)

பெரும் வேகத்தைக் கொண்டவையும், மதங்கொண்டவையுமான உமது படையின் ஆயிரக்கணக்கான யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகர்கள் கொல்லப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வலியால் கதறிக்கொண்டு நட்புப் படையணிகளைத் தங்கள் நடையால் நசுக்கியபடியே தப்பி ஓடின.(90) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரதிகளை இழந்த குதிரைகளும், காலாட்படை வீரர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு, அச்சத்துடன் தப்பி ஓடினர்.(91) உண்மையில் உமது படைவீரர்கள், கலைந்த கேசங்களுடன், தங்கள் கவசங்களை இழந்து, தங்கள் காயங்களில் இரத்தப் பெருக்கெடுத்து, அச்சத்தால் போர்க்களத்தை விட்டே தப்பி ஓடினர். ஒரு சிலர், ஏதோ தங்கள் கீழ் உறுப்புகள் {கால்கள்} முதலைகளால் பற்றப்பட்டதைப் போல அசையும் சக்தியை இழந்து களத்தில் கிடந்தனர்.(92, 93) வேறு சிலரோ, கொல்லப்பட்ட யானைகளின் உடல்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.

இப்படி உமது படையை முறியடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தோரைப் பயங்கரக் கணைகளால் தாக்கத் தொடங்கினான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} தன் கணை மாரியால் கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், விருஷசேனன், துரியோதனன் ஆகியோரை மறைத்தான். எப்போது அர்ஜுனன் தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது வில்லை வளைத்தான், எப்போது அவற்றைத் தொடுத்தான் என்பதை எவராலும் கவனிக்க முடியாத அளவுக்கு அவனுடைய {அர்ஜுனனின்} வேகம் இருந்தது. உண்மையில் எதிரியைத் தாக்கும்போது, அவனது வில்லானது இடைவிடாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.(95-97) அவனது கணைகளும் இடைவிடாமல் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டு அனைத்துத் திசைகளிலும் இறைக்கப்படுவதும் காணப்பட்டது.

அப்போது கர்ணனின் வில்லையும், விருஷசேனனுடையதையும் வெட்டிய அர்ஜுனன், ஒரு பல்லத்தால் சல்லியனின் தேரோட்டியும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(98) பிறகு வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாமனும் மைத்துனனுமாக உறவுமுறை கொண்ட கிருபரையும், அஸ்வத்தாமனையும் பல கணைகளால் ஆழமாகத் துளைத்தான். இப்படி உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை மிகவும் பீடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நெருப்பு போன்ற காந்தி கொண்ட பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(99, 100) இந்திரனின் வஜ்ரத்தைப் போலத் தெரிந்ததும், தெய்வீக மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதுமான அந்த உறுதி மிக்கக் கணை, எந்தக் கடுமையையும் தாங்கவல்லதாக இருந்தது.(101) மேலும் அது நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் எப்போதும் வழிபடப்பட்டதாக இருந்தது. (மந்திரங்களின் துணையுடன்) வஜ்ரத்தின் சக்தியால் அதை ஈர்த்தவனும், குருவின் வழித்தோன்றலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன், காண்டீவத்தில் அதைப் பொருத்தினான்.(102) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தக் கணை வில்லின் நாணில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் உரத்த கூச்சல்கள் கேட்கப்பட்டன.(103)

அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மீண்டும் அர்ஜுனனிடம் விரைவாகப் பேசினான், “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தீய ஆன்மா கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலையை விரைவாக அறுப்பாயாக. சூரியன் அஸ்த மலைகளை அடையப் போகிறான். எனினும், ஜெயத்ரதனின் கொலை குறித்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. உலகம் அனைத்திலும் அறியப்படும் விருத்தக்ஷத்திரன் ஜெயத்ரதனின் தந்தையாவான்.(105) நெடுங்காலத்திற்குப் பிறகே அவன் {விருத்தக்ஷத்திரன்}, எதிரிகளைக் கொல்பவனான ஜெயத்ரதனைத் தன் மகனாக அடைந்தான். (அந்த மகன் பிறந்த போது) வடிவமற்ற கண்ணுக்குத் தெரியாத குரல் ஒன்று, மேகங்கள் அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த ஒலியுடன் விருத்தக்ஷத்திரனிடம், “இந்த உனது மகன் {ஜெயத்ரதன்}, ஓ! தலைவா {விருத்தக்ஷத்திரா}, குருதியாலும், நடத்தையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும், இன்னும் பிற குணங்களாலும், இவ்வுலகின் இரு குலங்களுக்கு (சூரியன் மற்றும் சந்திர குலங்களுக்குத்) தகுந்தவனாவான். க்ஷத்திரியர்களில் முதன்மையடையும் அவன் {ஜெயத்ரதன்}, வீரர்களால் எப்போதும் வழிபடப்படுபவனாக இருப்பான்.(107-109) ஆனால் போரில் போராடிக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்களில் காளையும், உலகில் பகட்டானவனுமான ஒருவன், கோபத்தால் தூண்டப்பட்டு இவனது தலையை அறுப்பான்” என்றது.(110) பகைவர்களைத் தண்டிப்பவனான அந்தச் சிந்துக்களின் (பழைய) ஆட்சியாளன் {விருத்தக்ஷத்திரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டுச் சில காலம் சிந்தித்தான். தன் மகன் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவன் {விருத்தக்ஷத்திரன்} தன் சொந்தங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம்,(111) “எந்த மனிதன் போரில் போராடிக் கொண்டிருக்கும் என் மகனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பூமியில் விழச் செய்வானோ, அவன் பெரும் சுமையைச் சுமப்பான், அந்த மனிதனின் தலை நிச்சயம் நூறு துண்டுகளாகச் சிதறும் என நான் சொல்கிறேன்” என்றான்.(12)

இவ்வார்த்தைகளைச் சொல்லி, ஜெயத்ரதனை அரியணையில் நிறுவிய விருத்தக்ஷத்திரன் காடுகளுக்குச் சென்று தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(113) ஓ! குரங்குக் கொடியோனே {அர்ஜுனா}, பெரும் சக்தி கொண்ட அவன் {விருத்தக்ஷத்திரன்} இப்போதும் கூட இதே சமந்தபஞ்சகத்துக்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே கடுந்தவத்தைச் செய்து கொண்டிருக்கிறான். எனவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, இந்தப் பயங்கரப் போரில் ஜெயத்ரதனின் தலையை வெட்டும் நீ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அற்புதச் செயல்களைச் செய்யும் உனது கடுமையான தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு, ஓ! வாயு தேவன் மகனின் {பீமனின்} தம்பியே {அர்ஜுனா}, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை {ஜெயத்ரதனின் தலையை} விரைவாக அந்த விருத்தக்ஷத்திரனின் மடியிலேயே விழச் செய்வாயாக. ஜெயத்ரதனின் தலையை நீ பூமியில் வீழ்த்தினால், உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும் என்பதில் ஐயமில்லை.(116, 117) தெய்வீக ஆயுதத்தின் துணை கொண்டு, பூமியின் தலைவனான அந்த முதிய சித்து மன்னன் {விருத்தக்ஷத்திரன்} அறியாத வண்ணம் இச்செயலைச் செய்வாயாக. உண்மையில், ஓ! வாசவனின் {இந்திரனின்} மகனே, ஓ! அர்ஜுனா, மூன்று உலகங்களிலும் உன்னால் அடைய முடியாததோ, செய்ய முடியாததோ  எதுவுமில்லை” என்றான் {கிருஷ்ணன்}.

(கிருஷ்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்டத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான தீண்டலைக் கொண்டதும், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும், தெய்வீக ஆயுதமாக {அஸ்திரமாக} மாற்றப்பட்டதும், கடினங்கள் எதையும் தாங்கவல்லதும், நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் கொண்டு எப்போதும் வழிபடப்பட்டதும் ஜெயத்ரதனைக் கொல்லத் தன்னால் எடுக்கப்பட்டதுமான அந்தக் கணையை விரைவாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை வேகமாகச் சென்று, மரத்தின் உச்சியில் இருக்கும் சிறு பறவையைக் கவர்ந்து செல்லும் ஒரு பருந்தைப் போல ஜெயத்ரதனின் தலையைக் கவர்ந்து சென்றது. அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் கணைகளைக் கொண்டு அந்தத் தலையை (கீழே விழாதபடிக்கு) ஆகாயத்திலேயே செலுத்திக் கொண்டிருந்தான்.(118-123) தன் எதிரிகள் கவலையையும், தன் நண்பர்கள் மகிழ்ச்சியையும் அடையும்படி செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை மீண்டும் மீண்டும் அந்தத் தலையின் மீது ஏவி அதை {அந்தத் தலையைச்} சமந்தபஞ்சகத்தின் எல்லைகளுக்கு அப்பால் செலுத்தினான்.(124)

அதேவேளையில் உமது மருமகனின் {ஜெயத்ரதனின்} தந்தையும், பெரும் சக்தியைக் கொண்டவனுமான மன்னன் விருத்தக்ஷத்திரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் மாலைவேளை வேண்டுதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(125) அமர்ந்த நிலையில் தன் வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த விருத்தக்ஷத்திரனின் மடியில் கருங்குழல்களாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஜெயத்ரதனின் தலை விழுந்தது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை தன் மடியில் வீசப்பட்டது மன்னன் விருத்தக்ஷத்திரனால் காணப்படவில்லை. எனினும், பின்னவன் {விருத்தக்ஷத்திரன்} தன் வேண்டுதலைகள் முடித்து எழுந்த போது, திடீரென அது கீழே பூமியில் விழுந்தது. ஜெயத்ரதனின் தலையானது கீழே பூமியில் விழுந்தபோது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த முதிய விருத்தக்ஷத்திரனின் தலை நூறு துண்டுகளாகச் சிதறியது. இந்தக் காட்சியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன.(126-130). அவர்கள் அனைவரும் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, வலிமைமிக்கப் பீபத்சுவையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அந்த இருள் விலக்கிக் கொள்ளப்பட்டது.(131) அதன் பிறகே தொண்டர்களோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் கண்ட அந்த இருள் வாசுதேவனால் உண்டாக்கப்பட்ட மாயையே என்பதை அறியவந்தனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மருமகனான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, எட்டு அக்ஷௌஹிணிகளைக் கொல்லச் செய்து {கொல்லப்பட காரணமாக அமைந்து}, நினைத்துப் பார்க்க முடியாத சக்தியைக் கொண்ட பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான். சிந்துக்களின் ஆட்சியாளனான ஜெயத்ரதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையடைந்த உமது மகன்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.(132-134) பார்த்தனால் {அர்ஜுனனால்} ஜெயத்ரதன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவன் {கிருஷ்ணன்} தன் சங்கை முழக்கினான், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனும் தனது சங்கை முழக்கினான்.(135) பீமசேனனும், அந்தப் போரில் யுதிஷ்டிரனுக்குச் செய்தியை அனுப்புபவனைப் போல, பேராற்றலுடன் கூடிய சிங்க முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(136) அந்தப் பிரம்மாண்டமான கூச்சலைக் கேட்டவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைப் புரிந்து கொண்டான்.(137) துந்துபி ஒலிகளாலும், பிற கருவிகளாலும் தன் படையின் போர்வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டிய அவன் {யுதிஷ்டிரன்} போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(138)

அதன் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததும், துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சோமகர்கள்}, ஜெயத்ரதன் வீழ்ந்த பிறகு, முடிந்த மட்டும் முயன்று அவருடன் {துரோணருடன்} போரிட்டனர். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று வெற்றியடைந்த பிறகு, அந்த வெற்றியால் போதை கொண்டு துரோணருடன் போரிட்டனர்.(139-141) அர்ஜுனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் ஜெயத்ரதனைக் கொன்ற பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டான்.(142) உண்மையில், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தன் முந்தைய சபதத்தைச் சாதித்த பிறகு, தானவர்களை அழிக்கும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவோ, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.143
-----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 145ல்  வரும் மொத்த சுலோகங்கள் 143


ஆங்கிலத்தில் | In English

வெள்ளி, ஜூலை 15, 2016

ஜெயத்ரதனின் பாதுகாவலர்களுடன் கடும்போர்! - துரோண பர்வம் பகுதி – 103

Arjuna's fight against the protectors of Jayadratha! | Drona-Parva-Section-103 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை எதிர்த்த எட்டு மகாரதர்கள்; பயங்கரச் சங்கொலிகள்; கிருஷ்ணார்ஜுனர்களின் சங்கொலிகள் கௌரவர்களை அச்சுறுத்தியது; காயம்பட்ட கிருஷ்ணனைக் கண்டு கோபமூண்ட அர்ஜுனன் கௌரவர்களைத் துளைத்தது; கௌரவர்களைப் பந்தாடிய அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "விருஷ்ணி மற்றும் அந்தகருள் முதன்மையானவனையும் {கிருஷ்ணனையும்}, குரு குலத்தவரில் முதன்மையானவையும் {அர்ஜுனனையும்} கண்ட உடனேயே, உமது வீரர்களில் முதன்மையடைய முயன்ற ஒவ்வொருவரும் நேரத்தை இழக்கமால், அவர்களைக் கொல்லும் விருப்பத்தில் எதிர்த்துச் சென்றனர்.

விஜயனும் {அர்ஜுனனும்} அந்தத் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவையுமான தங்கள் பெரும் தேர்களில் சென்ற அவர்கள், தங்கப்பிடி கொண்டவையும், பிரகாசத்தால் பார்க்கப்பட முடியாதவையுமான விற்களை ஏந்தி, உரக்க கூச்சலிட்டுக் கொண்டு, கோபக்கார குதிரைகளால் இழுக்கப்பட்டுத் திசைகளின் பத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி விரைந்தனர்.

பூரிஸ்ரவஸ், சலன், கர்ணன், விருஷசேனன், ஜெயத்ரதன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் தேர்வீரர்களில் முதன்மையான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய அந்தப் பெரும் தேர்வீரர்களான எட்டு பேரும், ஏதோ வானத்தை விழுங்கிவிடுவதைப் போல, புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், தங்கச் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அற்புதத் தேர்களால் திசைகளில் பத்து புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடிய சென்றனர்.

கவசம் பூண்டு, கோபத்தால் நிறைந்து, மேகங்களின் திரள்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறி, கூரிய கணைகளின் மழையால் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனை மறைத்தனர். பெரும் வேகம் கொண்டவையும், சிறந்த இனத்தைச் சேர்ந்தவையுமான அழகிய குதிரைகளால் தாங்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், திசைப்புள்ளிகளை ஒளியூட்டியபோது பிரகாசமாகத் தெரிந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மலைப்பகுதிகளைச் சேர்ந்த சிலவும், நதிகளைச் சேர்ந்த சிலவும், சிந்துக்களின் நாட்டைச் சேர்ந்த சிலவும் எனப் பல்வேறு நாடுகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவையும், பெரும் வேகம் கொண்டவையுமான முதன்மையான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களைக் கொண்ட குருக்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலர், உமது மகனை {துரியோதனனை} மீட்க விரும்பி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி விரைந்தனர். ஓ! மன்னா, மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் சங்குகளை எடுத்து முழக்கி, ஆகாயத்தையும், கடல்களுடன் கூடிய பூமாதேவியையும் {அவற்றின் ஒலியால்} நிறைத்தனர்.

அப்போது தேவர்களில் முதன்மையானோரான அந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூடப் பூமியில் முதன்மையான தங்கள் சங்குகளை முழக்கினர். குந்தியின் மகன் {அர்ஜுனன்} தேவதத்தத்தையும், கேசவன் பாஞ்சஜன்யத்தையும் முழக்கினர். தனஞ்சயனால் {அர்ஜுனனால்} வெளியிடப்பட்ட தேவதத்தத்தின் வெடிப்பொலியானது, பூமியையும், ஆகாயத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தது. வாசுதேவனால் முழக்கப்பட்ட பாஞ்சஜன்யமும் அனைத்து ஒலிகளையும் விஞ்சி வானத்தையும் பூமியையும் நிறைத்தது.

மருண்டோருக்கு அச்சத்தையும், துணிவுள்ளோருக்கு உற்சாகத்தையும் தூண்டிய அந்தக் கடுமையான பயங்கரமான ஒலி தொடர்ந்த போது, பேரிகைகள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள், மிருதங்கம்கள் ஆகியன ஆயிரக்கணக்கில் முழகப்பட்ட போது, ஓ! பெரும் மன்னா, குரு தரப்பால் அழைக்கப்பட்டவர்களும், தனஞ்சயனின் நன்மையில் அக்கரையுள்ளவர்களும், சினத்தால் நிறைந்தவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளாலேயே கூட அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சங்குகளின் உரத்த வெடிப்பொலிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தங்கள் தங்கள் துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மன்னர்களும், கேசவன் மற்றும் அர்ஜுனனின் வெடிப்பொலிகளுக்குத் தங்கள் வெடிப்பொலிகளால் பதில் சொல்ல விரும்பி, சினத்தால் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர். அந்தச் சங்கொலிகளால் தூண்டப்பட்டு முன் நகர்ந்த குரு படையின் தேர் வீரர்களும், யானைகளும், குதிரைகளும், கவலையாலும், அச்சத்தாலும் நிறைந்திருந்தன. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் இருந்தோர் ஏதோ நோயுற்றவர்களைப் போலவே {மந்தமாகக்} காணப்பட்டனர்.

துணிவுமிக்க அந்த வீரர்களால் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனால்} முழக்கப்பட்ட அந்தச் சங்கொலியின் எதிரொலியால் கலங்கடிக்கப்பட்ட குரு படையானது, இடியொலியின் எதிரொலியால் (ஏதோ ஓர் இயற்கையான நடுக்கத்தின் மூலம்) கீழே விழுந்த ஆகாயம் போல இருந்தது [1]. ஓ! ஏகாதிபதி, அந்த உரத்த ஆரவாரமானது, பத்து புள்ளிகளிலும் எதிரொலித்து, யுக முடிவின் போது அனைத்துயிர்களையும் அச்சுறுத்தும் முக்கிய நிகழ்வுகளைப் போல அந்த {கௌரவப்} படையை அச்சுறுத்தியது.

[1] "இங்கே Praviddham சொல்லப்படும் என்பது தன் வழக்கமான இடத்தில் இருந்து தளர்ந்தது, அல்லது விழுந்தது என்று பொருள் படும். இப்படியே நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார்.

பிறகு துரியோதனன், ஜெயத்ரதனின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அந்த எட்டு பெரும் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} எழுபத்துமூன்று கணைகளால் வாசுதேவனையும், மூன்று பல்லங்களால் அர்ஜுனனையும், மேலும் ஐந்து பிற கணைகளால் அவனது கொடிமரத்தையும், (நான்கு) குதிரைகளையும் தாக்கினான்.

ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} துளைக்கப்பட்டதைக் கண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, நூறு கணைகளால் அஸ்வத்தாமனைத் தாக்கினான். பிறகு கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சல்லியனுக்குச் சொந்தமானதும், நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் கூடியதுமான வில்லையும் கைப்பிடிக்கும் இடத்தில் அறுத்தான். பிறகு சல்லியன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.

பூரிஸ்ரவஸ், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான். கர்ணன், இருபத்துமூன்று கணைகளாலும், விருஷசேனன் ஏழு கணைகளாலும் அவனைத் துளைத்தனர். ஜெயத்ரதன் எழுபத்து மூன்று கணைகளாலும், கிருபர் பத்தாலும் அர்ஜுனனைத் துளைத்தனர். அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனும் {சல்லியனும்} பத்துக் கணைகளால் பல்குலனனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது கணைகளால் அவனைத் துளைத்தான். அவன் மீண்டும் ஒரு முறை பார்த்தனை ஐந்து கணைகளாலும், வாசுதேவனை இருபது கணைகளாலும் துளைத்தான்.

மனிதர்களில் புலியும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிக்காட்டும்படி அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்குத் துளைத்தான். கர்ணனை பனிரெண்டு கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த பார்த்தன், சல்லியனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான். மேலும் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} மூன்று கணைகளாலும், சல்லியனைப் பத்தாலும் துளைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, கிருபரை இருபத்தைந்து கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நூறாலும் துளைத்தான், மேலும் அவன் எழுபது கணைகளால் துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} தாக்கினான்.

அப்போது சினத்தால் நிறைந்த பூரிஸ்ரவஸ், கிருஷ்ணனின் கையில் இருந்த சாட்டையை அறுத்து, இருபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனைத் தாக்கினான். பிறகு வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, வலிமைமிக்கச் சூறாவளியொன்று மேகத்திரள்களைக் கிழிப்பதைப் போல நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான கணைகளால் தன் எதிரிகளான அவர்களைச் சிதைத்தான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

செவ்வாய், ஜூலை 12, 2016

ஜெயத்ரதனைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! - துரோண பர்வம் பகுதி – 100

Krishna and Arjuna saw Jayadratha! | Drona-Parva-Section-100 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைக் கண்டு தப்பி ஓடிய கௌரவர்கள் வெட்கமடைந்து திரும்பி வந்தது; தேர்க்கூட்டத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; நம்பிக்கையிழந்த கௌரவர்கள்; ஜெயத்ரதனைக் நோக்கி கிருஷ்ணனும் அர்ஜுனனும் விரைந்தது; விரைந்து வந்த துரியோதனன் கிருஷ்ணனைத் தாண்டி சென்று திரும்பிப் பார்த்தது; கௌரவர்களின் மகிழ்ச்சி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஏற்கனவே பல படைப்பிரிவுகளைப் பிளந்துத் தங்கள் படைக்குள்ளும் ஊடுருவிவிட்டதைக் கண்ட உமது படையின் {கௌரவப்படையின்} மன்னர்கள் அச்சத்தால் தப்பி ஓடினர். எனினும் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், சிறிது நேரத்திலேயே, சினத்தாலும், வெட்கத்தாலும் நிறைந்து, தங்கள் வலிமையால் உந்தப்பட்டு, நிதானமாக குவிந்த மனத்தை அடைந்து தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்றனர். ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிரம்பிப் போரில் பாண்டுவின் மகனை எதிர்த்துச் சென்ற அவர்கள் பெருங்கடலில் இருந்து ஆறுகள் திரும்பாததைப் போலத் திரும்பவில்லை. இதைக் கண்டு போரிலிருந்து ஓடிய இழிந்த க்ஷத்திரியர்கள் பலர், வேதங்களிடமிருந்து விலகிச் செல்லும் நாத்திகர்களைப் போலப் பாவத்துக்கும், நரகத்துக்கும் ஆட்பட்டனர் [1].


[1] "இவ்வரியை நெருக்கமான வகையில் நேரடியாக மொழிபெயர்க்காமல், அதன் பொருளையே கொடுத்திருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "நாஸ்திகர்கள் வேதங்களிடத்திலிருந்து திரும்புவது போலச் சில அஸத்துக்கள் (யுத்தத்தினின்று) திரும்பினார்கள். அந்த வீரர்கள் நரகத்தை அடைவதற்கான பாவத்தைப் பெற்றார்கள்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

தேர்களின் கூட்டத்தை மீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, ராகுவின் வாயிலிருந்து விடுபட்ட சூரியனையும் சந்திரனையும் போல அதை {தேர்க்கூட்டத்தை} விட்டு இறுதியாக வெளியே வந்தனர். உண்மையில், தங்கள் களைப்பு விலகி, அந்தப் பரந்த படையைப் பிளந்த அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, பலமான வலையைக் கடந்த இரு மீன்களைப் போலத் தெரிந்தனர். அடர்த்தியான ஆயுத மழையால் தடுக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததுமான துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பலத்துடன் கடந்து சென்ற அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், (ஆகாயத்தில் தோன்றும்) யுகச் சூரியன்களைப் போலத் தெரிந்தனர். ஆயுதங்களின் அடர்த்தியான மழையின் ஊடாகப் பிளந்து சென்று, உடனடி ஆபத்திலிருந்து விடுபட்ட அந்த உயர் ஆன்ம வீரர்கள், அடர்த்தியான தங்கள் ஆயுதங்களின் மேகங்களால் ஆகாயத்தை மறைத்து, காட்டுத் தீயில் இருந்து தப்பியவர்கள் போலவோ, மகரத்தின் வாயில் இருந்து தப்பிய இரு மீன்களைப் போலவோ தெரிந்தனர். மேலும் அவர்கள் பெருங்கடலைக் கலங்கடிக்கும் இரு மகரங்களைப் போல அந்த (குரு) படையைக் கலங்கடித்தனர்.

பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் துரோணரின் படைப்பிரிவுக்கு மத்தியில் இருக்கையில், உமது வீரர்களும், உமது மகன்களும் அவ்விருவராலும் அதை விட்டு வெளிவர இயலாது என்றே நினைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, பெரும் காந்தி கொண்ட அவ்விரு வீரர்களும், துரோணரின் படைப்பிரிவை விட்டு வெளிவந்ததைக் கண்ட பிறகு, ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிர்வாழ்வான் என்று} அதற்கு மேலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அந்த இரு கிருஷ்ணர்களும் துரோணரிடமிருந்தும், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} இருந்தும் தப்ப முடியாது என்று அவர்கள் நம்பியதால், ஓ! மன்னா, அதுவரை அவர்களுக்கு ஜெயத்ரதனின் உயிர் மீது பலமான நம்பிக்கையிருந்தது. ஓ! ஏகாதிபதி, எதிரிகளை எரிப்பவர்களான அவ்விருவரும், கிட்டத்தட்ட கடக்கப்பட முடியாத துரோணரின் படைப்பிரிவையும், போஜர்களின் படைப்பிரிவையும் கடந்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தனர். எனவே, அந்தப் படைகளைக் கடந்து சென்று சுடர்விடும் இரு நெருப்புகளைப் போல இருந்த அவர்களைக் கண்ட உம்மவர்கள் நம்பிக்கை இழந்து, அதற்கு மேலும் ஜெயத்ரதன் உயிரின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.

பிறகு, அச்சமற்ற வீரர்களும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவர்களுமான கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும், ஜெயத்ரதனைக் கொல்வது குறித்துத் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தார்தராஷ்டிரத் தேர்வீரர்களில் முதன்மையான ஆறு பேருக்கு மத்தியில் ஜெயத்ரதன் நிறுத்தப்பட்டிருக்கிறான். எனினும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் காணப்பட்டதும், அவன் என்னிடம் இருந்து தப்பமாட்டான். தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனே {இந்திரனே} போரில் அவனுக்கு {ஜெயத்ரதனுக்குப்} பாதுகாவலனாக இருந்தாலும் நம்மால் அவன் கொல்லப்படுவான்" என்றான் {அர்ஜுனன்}. இப்படியே அந்த இரு கிருஷ்ணர்களும் பேசிக்கொண்டனர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தேடிக் கொண்டிருக்கையில் இப்படியே அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். (அவர்கள் சொன்னதைக் கேட்ட) உமது மகன்கள் உரக்க ஓலமிட்டனர் [2].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, "இவ்வாறு மிக்கப் புஜபலமுடையவர்களான கிருஷ்ணார்ஜுனர்கள் சிந்துராஜனுடைய வதத்தை எதிர்பார்த்து ஒருவரோடொருவர் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் உம்முடைய புத்திரர்கள் பலவாறாக ஆராவாரஞ்செய்தார்கள்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

வேக நடை கொண்ட தாகமிக்க இரு யானைகள், பாலைவனத்தைக் கடந்து, நீர் குடித்துப் புத்துணர்ச்சியடைந்ததைப் போலவே எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் இருந்தனர். மரணத்திற்கு எட்டாதவர்களும், முதுமை தளர்ச்சிக்கு மேம்பட்டவர்களுமான {இளைஞர்களுமான} அவர்கள், புலிகள், சிங்கங்கள் மற்றும் யானைகள் நிறைந்த ஒரு மலைநாட்டைக் கடந்த இரு வணிகர்களைப் போலத் தெரிந்தனர் [3]. உண்மையில் (துரோணர் மற்றும் கிருதவர்மனிடம் இருந்து) விடுபட்ட அவர்களைக் கண்ட உமது வீரர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முக நிறத்தைப் பயங்கரமாகக் கருதினர்; உம்மவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்க ஓலமிட்டனர்.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "யௌவனமுள்ளவர்களான அவ்விருவரும், புலிகளும், சிங்கங்களும், யானைகளுமாகிய இவைகளால் நான்கு பக்கங்களிலும் சூழப்பட்ட மலைகளைத் தாண்டி மரணப் பயத்தை விட்டவர்களான இரண்டு வர்த்தகர்களைப் போலக் காணப்பட்டார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. அப்போது கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் மரணமும், முதுமையும் நெருங்காத இளமையுடன் இருந்தனர் என்பது இங்கே பொருள்.

கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான துரோணரிடம் இருந்தும், பூமியின் தலைவர்களான பிறரிடமிருந்தும் விடுபட்ட பார்த்தனும், கிருஷ்ணனும், சுடர்மிக்க இரு சூரியன்களைப் போலத் தெரிந்தனர். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், பெருங்கடலுக்கு ஒப்பான துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, மிக ஆழமான கடலைக் கடந்து இன்பத்தில் நிறைந்திருக்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர். துரோணர் மற்றும் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} பாதுகாக்கப்பட்ட படைப்பிரிவுகளின் அடர்த்தியான ஆயுத மழையில் இருந்து விடுபட்ட கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், இந்திரனையோ, அக்னியையோ போலச் சுடர்மிகும் பிரகாசத்துடன் தெரிந்தனர். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும், தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, மலர்ந்திருக்கும் கர்ணிகரங்களால் {கோங்கு மரங்கள்} நிறைந்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.

துரோணரை முதலையாகவும், ஈட்டிகளைச் சீற்றமிக்கப் பாம்புகளாகவும், கணைகளை மகரங்களாகவும், க்ஷத்திரியர்களை ஆழமான நீராகவும் கொண்ட அகலமான தடாகத்தைக் கடந்து, விற்களின் நாணொலிகளையும், உள்ளங்கை ஒலிகளையும் இடிகளாகக் கொண்டதும், கதாயுதங்களையும், வாள்களையும் மின்னல்கீற்றுகளாகக் கொண்டதும், துரோணரின் ஆயுதங்களால் ஆனதுமான அந்த மேகத்தில் இருந்து வெளியே வந்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும், இருளில் இருந்து விடுபட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். வலிமைமிக்கவர்களும், புகழ்மிக்க வில்லாளிகளுமான அவ்விரு கிருஷ்ணர்களும் துரோணரின் ஆயுதங்களால் தடுக்கப்பட்ட பகுதிகளைக் கடந்ததும், மழைக்காலங்களில் நீர் நிறைந்திருப்பவையும், முதலைகள் நிறைந்தவையும், பெருங்கடலைத் தங்களில் ஆறாவதாகக் கொண்டவையுமான (சதத்ரூ, விபாசை, இரவி {இராவதீ}, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய) ஐந்து ஆறுகளைத் தங்கள் கரங்களின் உதவியால் கடந்து வந்த மனிதர்களைப் போல அனைத்து உயிர்களும் அவர்களைக் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கருதின [4].

[4] வேறொரு பதிப்பில், "மழைக்காலத்தில் நிறைந்தவையும், பெரிய முதலைகளால் சூழப்பட்டவையும், சிந்து நதியை ஆறாவதாக உடையவைகளுமான சமுத்திரகாமிகளான ஐந்து நதிகளைக் கைகளால் நீந்தித் தாண்டினவர்கள் போலவும், பெரு மலைகளாலடர்ந்த கோரமான மகாநதியைத் தாண்டி கரைகண்டவர்களான வழிப்போக்கர்கள் போலவும் யுத்தத்தில் துரோணருடைய அஸ்திரபந்தத்தைத் தாண்டினார்கள்" என்றும் எல்லாப் பிராணிகளும் எண்ணின" என்று இருக்கிறது.

தங்களுக்கு அதிகத் தொலைவில் இல்லாத ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி {அவன் மீது} கண்களைச் செலுத்திய அவ்விரு வீரர்களும், ருரு மானின் மீது பாயும் விருப்பத்தில் காத்திருந்த புலிகளைப் போலத் தெரிந்தனர். ஓ! ஏகாதிபதி, ஜெயத்ரதரன் ஏற்கனவே கொல்லப்பட்டவன் என்று உமது வீரர்கள் கருதுமளவிற்கு அவர்களது {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடைய} முகத்தின் நிறம் இருந்தது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிவந்த கண்களைக் கொண்டவர்களும், ஒன்றாக இருந்தவர்களுமான கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} ஜெயத்ரதனைக் கண்டதும் மகிழ்ச்சியால் நிறைந்து மீண்டும் மீண்டும் முழங்கினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, கையில் கடிவாளத்துடன் நின்ற சௌரி {கிருஷ்ணன்} மற்றும் வில்லுடன் இருந்த பார்த்தன் ஆகியோரின் காந்தி சூரியனையோ, நெருப்பையோ போன்றிருந்தது. துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கண்டதால், சதைத்துண்டுகளைக் கண்ட இரு பருந்துகளைப் போல அவர்கள் இன்புற்றனர். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வெகுதொலைவில் இல்லை என்பதைக் கண்ட அவர்கள், இறைச்சித் துண்டை நோக்கிப் பாயும் பருந்துகள் இரண்டைப் போல அவனை {ஜெயத்ரதனை} நோக்கிக் கோபத்துடன் விரைந்தனர்.

ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் (துரோணரின் படைப்பிரிவை) மீறியதைக் கண்டவனும், துரோணரால் கவசம் பூட்டப்பட்டவனும், குதிரைகளைச் சீராக்குவதையும், அவற்றை வழிநடத்துவதையும் நன்கறிந்தவனும், உமது வீர மகனுமான மன்னன் துரியோதனன், சிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனித்தேரில் விரைந்தான். ஓ! மன்னா, வலிமைமிக்க வில்லாளிகளான கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} தாண்டிச் சென்ற உமது மகன் {துரியோதனன்}, தாமரைக் கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} நோக்கித் திரும்பினான். தனஞ்சயனை {அர்ஜுனனை} உமது மகன் {துரியோதனன்} தாண்டிச் சென்றதும், உமது துருப்புகளுக்கு மத்தியில் பல்வேறு இசைக்கருவிகளும் மகிழ்ச்சிகரமாக முழக்கப்பட்டன. இரு கிருஷ்ணர்களின் எதிரே நின்ற துரியோதனனைக் கண்டு சங்கொலிகளுடன் கலந்து சிங்க முழக்கங்கள் செய்யப்பட்டன. ஓ! மன்னா, சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பாக ஜெயத்ரதனின் பாதுகாவலர்களாக நின்றவர்களும், போரில் உமது மகனை {துரியோதனனைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தன்னைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தங்களைக் கடந்து {மீறிச்} சென்றதைக் கண்ட கிருஷ்ணன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

புதன், ஜூன் 22, 2016

துரோணர் அமைத்த கலப்பு வியூகம்! - துரோண பர்வம் பகுதி – 087

The inter-array formed by Drona! | Drona-Parva-Section-087 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : பதினான்காம் நாள் போர்த்தொடக்கம்; துரோணர் வியூகம் வகுத்துக் கொண்டிருந்தபோது இருந்த வீரர்களின் நிலை; வீரர்களும் ஜெயத்ரதனும் ஏற்க வேண்டிய நிலைகளை அவர்களுக்குச் சொன்ன துரோணர்; சகட, சக்கர, பத்ம மற்றும் சூசிமுக வியூகங்கள் கலந்த புது வியூகமொன்றை வகுத்த துரோணர்; அந்த வியூகத்தில் வீரர்கள் ஏற்றுக் கொண்ட நிலைகள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவு கடந்ததும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் போருக்கு அணிவகுக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்துடன் கதறியவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான கோபக்கார வீரர்களின் பல்வேறு ஒலிகள் அங்கே கேட்கப்பட்டன. சிலர் தங்கள் விற்களை வளைத்தனர், சிலர் தங்கள் கரங்களை வில்லின் நாண்கயிறுகளில் தேய்த்தனர். அவர்களில் பலர் ஆழ்ந்த மூச்சுகளைவிட்டபடியே "அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே?" என்று கதறினர்.


சிலர் நன்கு கடினமாக்கப்பட்டவையும், வானத்தின் நிறத்தைக் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையும் அழகிய பிடிகளுள்ளவையும், உறையிலிருந்து எடுக்கப்பட்டவையுமான வாள்களை உயர வீச (உயர வீசவும், அதை மீண்டும் பிடிக்கவும்) தொடங்கினர். போரை விரும்பிய துணிச்சல்மிக்க வீரர்கள் பலர், பயிற்சியால் அடையப்பட்ட திறனுடன், வாள்வீசுவோர் மற்றும் வில்லாளிகளின் படிமுறை வளர்ச்சியை அங்கே செயல்பாட்டில் காட்டினர். சிலர், மணிகள் நிறைந்தவையும், சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் கதாயுதங்களைச் சுழற்றியபடியே பாண்டுவின் மகன்களைக் குறித்து விசாரித்தனர்.

செருக்கால் போதையுண்டவர்களும், பருத்த கரங்களைக் கொண்டவர்களுமான சிலர், இந்திரனைக் கௌரவிக்க உயர்த்தப்பட்ட கம்பங்களுக்கு ஒப்பான பரிகங்களால் (கொடிக்கம்பங்களின் காட்டைக் கொண்டு மறைப்பதைப் போல) ஆகாயத்தைத் தடுத்தனர். அழகிய மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், போரை விரும்பியவர்களுமான பிறர், பல்வேறு ஆயுதங்களுடன், களத்தின் பல்வேறு பகுதிகளில் நின்றனர். அவர்கள், "அர்ஜுனன் எங்கே? அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்} எங்கே? செருக்குள்ள பீமன் எங்கே? அவர்களது கூட்டாளிகள் எங்கே?" என்றபடியே அவர்களைப் போருக்கு அழைத்தனர்.

அப்போது தன் சங்கை முழக்கி, தன் குதிரைகளை மிக விரைவாகத் தூண்டிய துரோணர் தன் தருப்புகளை அணிவகுத்தபடியே பெரும் வேகத்துடன் இங்குமங்கும் திரிந்தார். போரில் களிப்புற்ற அந்தப் படைப்பிரிவுகள் அனைத்தும் தங்கள் நிலைகளை ஏற்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} ஜெயத்ரதனிடம், "நீ, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், அஸ்வத்தாமன், சல்லியன், விருஷசேனன், கிருபர் ஆகியோர், நூறாயிரம் {100,000} குதிரைகள், அறுபதாயிரம் {60,000} தேர்கள், மதங்கொண்ட பதினாலாயிரம் {14,000} யானைகள், கவசம் பூண்ட நூற்று இருபதாயிரம் {120,000} காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் எனக்குப் பின்புறத்தில் இருபது மைல்கள் {ஆறு குரோசங்கள்} தொலைவில் உங்கள் நிலைகள் ஏற்பீர்களாக. அங்கே வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட உன்னைத் தாக்க இயலாது, எனவே, பாண்டவர்களைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும். ஓ! சிந்துக்களின் ஆட்சியாளா {ஜெயத்ரதா}, ஆறுதலடைவாயா" என்ற வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.

சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், (துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்டதும் ஆறுதலை அடைந்தான். அவன் {ஜெயத்ரதன்}, பெரும் தேர்வீரர்களாலும், கவசம்பூண்டு, கையில் சுருக்குக் கயிறுகளைக் {பாசங்களைக்} கொண்டு மூர்க்கமாகப் போரிடத் தீர்மானித்திருந்த காலாட்படை வீரர்கள் பலராலும் சூழப்பட்டு, துரோணரால் சுட்டப்பட்ட பகுதிக்கு காந்தார வீரர்கள் பலருடன் சென்றான் [1]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாமரங்களாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயத்ரதனின் குதிரைகள் அனைத்தும் நன்றாக இழுக்கும் திறன் கொண்டவையாகவும் இருந்தன. ஏழாயிரம் {7000} அத்தகு குதிரைகளும், சிந்து இனத்தில் மூவாயிரம் {3000} குதிரைகள் பிறவும் அவனுடன் இருந்தன.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "மனத்தேறுதலையடைந்த சிந்து தேசாதிபதியான ஜயத்ரதன், அந்த மகாரதர்களாலும், கவசமணிந்தவர்களும், சன்னதர்களும் ஈட்டியைக் கையில் பிடித்துக் குதிரையின் மேல் ஏறியிருக்கின்றவர்களுமான குதிரை வீரர்களாலும் சூழப்பட்டுக் காந்தாரர்களுடன் சேர்ந்து அவ்விடம் சென்றான்" என்றிருக்கிறது.

போரிட விரும்பிய உமது மகன் துர்மர்ஷணன், கவசம் பூண்டவையும், பெரும் அளவிலானவையும், கடும் செயல்கள் செய்யக்கூடியவையும், நன்கு பயிற்சி பெற்ற பாகர்களோடு கூடியதுமான மதங்கொண்ட ஆயிரத்து ஐநூறு யானைகளுடன் {1500} துருப்புகள் அனைத்துக்கும் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான். உமது மற்ற மகன்களான துச்சாசனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் இருவரும், ஜெயத்ரதனின் நோக்கங்களைச் சாதிப்பதற்காக முன்னேறிச் செல்லும் படைகளுக்கு மத்தியில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.

பரத்வாஜர் மகனால் {துரோணரால்}, {ஒரு} பகுதி சகடமாகவும், {ஒரு} பகுதி சக்கரமாகவும் அமைக்கப்பட்ட வியூகமானது, முழுமையாக நாற்பத்து எட்டு மைல்கள் நீளமும், அதன் பின்புறத்தின் இருபது மைல்கள் [2] அகலமும் கொண்டிருந்தது. அந்த வியூகத்தின் பின்புறத்தில் தாமரை வடிவித்தில் துளைக்கப்பட முடியாத மற்றொரு வியூகம் {பத்ம வியூகம்} அமைக்கப்படிருந்தது. அந்தத் தாமரைக்குள், சூசீ {ஊசி} என்று அழைக்கப்படும் மற்றுமொரு அடர்த்தியான {நெருக்கமான} வியூகம் அமைக்கப்பட்டிருந்தது. துரோணர், தன் வலிமைமிக்க வியூகத்தை இப்படி அமைத்த பிறகு, தனது நிலையை ஏற்றார்.

[2] வேறொரு பதிப்பில் இது, "பனிரெண்டு கவ்யூதி நீளமும், ஐந்து கவ்யூதி அகலமும் கொண்டது" எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு கவ்யூதி என்பது இரண்டு குரோசங்களைக் கொண்டதாகும். ஒரு குரோசம் என்பது இரண்டு மைல்கள் எனச் சொல்லப்படுகிறது. எனவே ஒரு கவ்யூதி நான்கு மைல்களைக் கொண்ட அளவாகும். நான்கு குரோசங்கள் சேர்ந்தது ஒரு யோஜனையாகும். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே மைல்கணக்கிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

அந்தச் சூசியின் {ஊசியின்} வாய்ப்பகுதியில் வலிமைமிக்க வில்லாளியான கிருதவர்மன் தன் நிலையை எடுத்துக் கொண்டான். கிருதவர்மனுக்கு அடுத்ததாக, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, ஜலசந்தனும் [3] நின்றனர். இவர்களுக்கு அடுத்ததாகத் துரியோதனனும், கர்ணனும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால், அந்தச் சகட வியூகத்தில், அதன் {அந்த வியூகத்தின்} தலையைப் பாதுகாப்பதற்காகப் புறமுதுகிடாத வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அதில் {அந்த வியூகத்தில்} இருந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவருக்கும் பின்புறத்தில், ஒரு பெரும் படை சூழ மன்னன் ஜெயத்ரதன் அந்தச் சூசீ {ஊசி} வடிவ வியூகத்தின் ஒரு புறத்தில் நின்றான்.

[3] துரியோதனன் தம்பியருள் ஜலசந்தன் என்ற ஒருவன் பீஷ்ம பர்வம் பகுதி 64அ-ல் பீமனால் கொல்லப்பட்டான். இங்கே குறிப்பிடப்படும் இந்த ஜலசந்தன் வேறொருவனாக இருக்க வேண்டும்.  இவன் துரோண பர்வம் பகுதி 114ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். இவன் பூரு குலத்தவன் என்றும், குரு வீரன் என்றும் துரோணபர்வம், கர்ண பர்வம் மற்றும் சல்லிய பர்வங்களில் நினைவுகூரப்படுகிறான்.

அந்தச் சகடத்தின் {சகட வியூகத்தின்} நுழைவாயிலில் பரத்வாஜரின் மகன் {துரோணர்} இருந்தார். துரோணருக்குப் பின்னால் அவரைப்பாதுகாக்கும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} இருந்தான். வெண்கவசமும், சிறந்த தலைப்பாகையும், அகன்ற தோளும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட துரோணர் தன் பெரிய வில்லை வளைத்தபடி சினத்தில் இருக்கும் அந்தகனைப் போல நின்றார். அழகிய கொடிமரம், சிவப்பு வேள்விப்பீடம், கருப்பு மான் தோல் ஆகியவற்றுடன் அருளப்பட்டிருந்த துரோணரின் தேரைக் கண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.

துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகம் கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்ததால், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அந்த வியூகமானது, தன் மலைகள், கடல்கள், கானகங்கள் மற்றும் பல பொருட்கள் நிறைந்த முழு உலகத்தையே விழுங்கிவிடும் என அனைத்து உயிர்களும் எண்ணின. தேர்கள், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்ததும், அற்புதவடிவில் பயங்கரமாக முழங்குவதும், எதிரிகளின் இதயங்களைப் பிளக்கவல்லதும், சகட வடிவிலானதுமான [5] அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்ட மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியடையத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.

[5] வில்லி பாரதம் இவ்வியூகத்தை இப்படிச் சொல்கிறது.

அணிகளைந்தைந்தாலைவகைவியூகமாகியசேனையின்சிரத்து,
மணிமுடிபுனைந்துவைத்தெனவலங்கல் வலம்புரிமார் பனைநிறுத்திப்,
பணிவுறுமவுணர்பதாகினிவகுத்தபார்க்கவனிவனெனப்பயில் போர்த்,
துணிவுடன்பஃறோர்சூழ்வரச்சகடதுண்டத்துநின்றனன்றுரோணன்.

                                                                                          - வில்லி 13:42:7

பொருள்: சதுரங்கங்கள்கூடின தனது பெருஞ்சேனைத்தொகுதியைத் தனித்தனிஐந்தாகப்பிரித்து, அவற்றை ஐந்துவியூகமாக அமைத்து, அவற்றிற்கெல்லாம் ஒருமகுடம்வைத்தாற்போல அலங்காரமாயமையும்படி துரியோதனனைத் தலைமையாகநிறுத்தித் தான் அவ்வைந்து வியூகங்களுட் பிரதானமானதும் மற்றை நான்கையுந் தனக்குள்ளேகொண்ட மகாவியூகமான சகடவியூகத்தின் முன்னிடத்திலே நின்றனனென்பதாம். ஐந்துவியூகம் - சகடம், பதுமம், கர்ப்பம், சூசீ, கூடம் என்பன.


ஆங்கிலத்தில் | In English

ஞாயிறு, ஜூன் 12, 2016

கிருஷ்ணன் சொன்ன தகவல்! - துரோண பர்வம் பகுதி – 075

The information of Krishna! | Drona-Parva-Section-075 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : ஒற்றர்கள் மூலம் அறிந்த தகவலை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது; ஜெயத்ரதன் துரியோதனனிடம் பேசியது; துரோணர் அமைக்கப்போகும் வியூகம் குறித்த தகவல்கள் ஆகியவற்றைச் சொன்ன கிருஷ்ணன் மீண்டும் மந்திரிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று அர்ஜுனனை முடுக்கியது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பார்த்தன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} மரணத்தைக் குறித்துச் சூளுரைத்த பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} “உன் சகோதரர்களின் சம்மதத்துடன் (மட்டுமே, என்னிடம் ஆலோசியாமல்), “சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வேன்” என்று உறுதியேற்றிருக்கிறாய்! இஃது (உன் தரப்பில்) பெரும் அசட்டைத் துணிவு கொண்ட ஒரு செயலாகும். என்னிடம் ஆலோசியாமலே, நீ பெரும் கனத்தை (உன் தோள்களில்) ஏற்றிருக்கிறாய். ஐயோ, அனைவரின் ஏளனத்தில் இருந்து நாம் எப்படித் தப்பிக்கப் போகிறோம்? [1]


[1] வேறொரு பதிப்பில் இந்த வரிகள், ”சகோதரர்களின் சம்மதத்தையறியாமல், ‘சைந்தவனை யான் கொல்வேன்’ என்று உன் வாக்கினால் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது. இப்படிச் செய்யப்பட்ட அந்தப் பிரதிஜ்ஞை சாகசமே; என்னோடு கூட ஆலோசியாமலே இந்தப் பெரிய பாரத்தை நீ சுமக்க ஆரம்பித்தாய். எவ்வாறு நாம் எல்லாவுலகத்தோர்களாலும் பரிஹஸிக்கத் தகாதவர்களாவோம்” என்று இருக்கிறது.

நான் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} முகாமுக்கு சில ஒற்றர்களை அனுப்பிவைத்தேன். அந்த ஒற்றர்கள் விரைவாக என்னிடம் வந்து இந்தத் தகவலை எனக்கு அளித்தனர். அஃதாவது, ஓ! தலைவா {அர்ஜுனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} குறித்து நீ உறுதியேற்ற பிறகு, சிங்க முழக்கங்களுடன் கலந்த (நமது) இசைக்கருவிகளின் ஒலி, திருதராஷ்டிரர்களால் கேட்கப்பட்டது.

அந்த ஆரவாரத்தின் விளைவாக, அந்தத் திருதராஷ்டிரர்கள், தங்கள் நலன்விரும்பிகளுடன் கூடி அச்சமடைந்து, “இந்தச் சிங்க முழக்கங்கள் காரணமற்றவையல்ல” என்று நினைத்து (அடுத்தது என்ன நடக்கும் என்று) காத்திருந்தனர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, கௌரவர்களின் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைக்கு மத்தியில் இருந்து உரத்த முழக்கங்களைக் கொண்ட ஆரவாரம் எழுந்தது. அவர்களது தேர்களில் இருந்து பயங்கரச் சடசடப்பொலிகளும் கேட்கப்பட்டது. “அபிமன்யுவின் மரணத்தைக் கேட்கும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆழமாகத் துன்புற்றுக் கோபத்தில் இரவிலேயே கூடப் போரிடப் புறப்பட்டு வருவான்” என்று நினைத்து (போருக்குத் தயாராக) அவர்கள் காத்திருந்தனர்.

அப்படி அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உண்மையில் பிணைப்புள்ள நீ, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல ஏற்றிருக்கும் உறுதியை உண்மையில் அறிந்து கொண்டனர். பிறகு, சுயோதனனின் ஆலோசகர்கள் அனைவரும் உற்சாகமிழந்து சிறு விலங்குகளைப் போல அச்சமுற்றனர்.

மன்னன் ஜெயத்ரதனைப் பொறுத்தவரை, சிந்துக்கள் மற்றும் சௌவீரர்களின் ஆட்சியாளனான அவன், துயரத்தில் மூழ்கி, முற்றிலும் உற்சாகத்தை இழந்து எழுந்து நின்று, தன் ஆலோசகர்கள் அனைவருடன் தன் பாசறைக்குள் நுழைந்தான். ஆலோசனை தேவைப்பட்டு நிற்கும் அந்நேரத்தில், தனக்கு நன்மையைத் தரும் அனைத்துத் தீர்வுகளையும் குறித்து (அவர்களுடன்) கலந்தாலோசித்த பிறகு, (கூட்டணியில் உள்ள) மன்னர்களின் சபைக்குச் சென்று சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

{அவன் ஜெயத்ரதன்}, ”தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனது மகனைக் கொன்றவன் நானே என்று நினைத்து, நாளை என்னுடன் போரில் மோதுவான்! தன் படைக்கு மத்தியில் அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வதாகச் சபதமேற்றிருக்கிறான். தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரும் கூடச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} அந்த உறுதிமொழியில் அவனைச் சலிப்படையச் செய்யத் துணியமாட்டார்கள். எனவே, நீங்களனைவரும் போரில் என்னைப் பாதுகாக்க வேண்டும். தனஞ்சயன் {அர்ஜுனன்} உங்கள் தலையில் தன் காலை வைத்து இலக்கை {அவனது இலக்கான என்னை} அடிப்பதில் வெல்லாதிருக்கட்டும். இக்காரியம் குறித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அல்லது, ஓ! குருக்களை மகிழ்விப்பவனே {துரியோதனா}, போரில் என்னைக் காப்பதில் நீ வெல்ல முடியாது என நீ நினைத்தால், ஓ! மன்னா {துரியோதனா}, நான் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பாயாக” என்றான் {ஜெயத்ரதன்}.

இப்படி (ஜெயத்ரதனால்} சொல்லப்பட்ட சுயோதனன் {துரியோதனன்} உற்சாகமற்றவனாக அமர்ந்து தன் தலையைத் தொங்கப்போட்டான். ஜெயத்ரதன் பெரும் அச்சத்தில் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட சுயோதனன் {துரியோதனன்} அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். குரு மன்னன் {துரியோதனன்} பெரிதும் துயருறுவதைக் கண்ட சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தன் நன்மையைக் குறிப்பிட்டு மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான், ”பெரும்போரில் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடிக்கும் மேன்மையான சக்தி கொண்ட எந்த வில்லாளியையும் நான் இங்கே காணவில்லை. சதக்ரதுவே {இந்திரனே} ஆனாலும், வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டீவ வில்லுடன் நிற்கும் அர்ஜுனன் முன்பு எவனால் நிற்க முடியும்?

முற்காலத்தில், இமயமலையில், உயர்ந்த சக்தியைக் கொண்ட தலைவன் மகேஸ்வரனே {சிவனே} காலாளாக நின்றிருந்த பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதினான் என்று கேள்விப்படுகிறோம். தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} தூண்டப்பட்ட அவன் {அர்ஜுனன்}, தனித்தேரில் சென்று, ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரம் தானவர்களைக் கொன்றான். அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} இப்போது பெரும் மதிநுட்பம் கொண்ட வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூட்டுச் சேர்ந்திருக்கிறான். அவன் {அர்ஜுனன்}, தேவர்களுடன் சேர்ந்த இந்த மூவுலகங்களையும் அழிக்கத் தகுந்தவனென நான் நினைக்கிறேன். (போர்க்களத்தை விட்டு என் வீட்டுக்குச் செல்ல) எனக்கு நீ அனுமதியளிக்க வேண்டும், அல்லது உயர் ஆன்ம வீரத் துரோணர் தன் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} சேர்ந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது, உன் விருப்பத்துக்காக நான் காத்திருப்பேன்” என்றான் {ஜெயத்ரதன்}.

ஓ! அர்ஜுனா, (ஜெயத்ரதனால் இப்படிச் சொல்லப்பட்ட) மன்னன் சுயதோனன் இக்காரியம் குறித்து ஆசானிடம் பணிவுடன் வேண்டினான் [2]. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்களும், குதிரைகளும் அணிவகுக்கப்பட்டிருக்கின்றன. கர்ணன், பூரிஸ்ரவஸ், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வெல்லப்பட முடியாத விருஷசேனன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகியோர் முன்னணியில் (ஜெயத்ரதனுக்கு முன்பாக) நிற்பார்கள்.

[2] துரோணர் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஜெயத்ரதனின் கோரிக்கையைத் துரோணரிடம் துரியோதனன் வழிமொழிந்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அரைப்பங்கு சகடமும் {தேர்போன்ற வாகனம்}, அரைப்பங்கு தாமரையும் {பத்மும்} கொண்ட வியூகம் ஒன்றை துரோணர் அமைக்கப்போகிறார். அந்தத் தாமரையின் இதழ்களின் நடுவில் சூசிமுக {ஊசி வாய்} வியூகமும் இருக்கும். சிந்துக்களின் ஆட்சியாளனான அந்த ஜெயத்ரதன் அதற்குள் போரில் வெல்லப்பட முடியாத படி கடினமாக வீரர்களால் பாதுகாக்கப்படுவான். வில் (பயன்பாடு), ஆயுதங்கள், ஆற்றல், பலம், குலவழி [3] ஆகியவற்றில் இந்த ஆறு தேர்வீரர்களும் தாங்கிக் கொள்ள மிகக் கடினமானவர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த ஆறு தேர்வீரர்களையும் முதலில் வீழ்த்தாமல் ஜெயத்ரதனை அடையமுடியாது.

[3] வேறொரு பதிப்பில் இது மனோதைரியம் என்று இருக்கிறது. இஃதே இங்குச் சரியானதாகவும் படுகிறது.

ஓ! அர்ஜுனா, அந்த அறுவரில் ஒவ்வொருவரின் ஆற்றலையும் நினைத்துப் பார். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா} அவர்கள் ஒன்றுசேர்ந்து நிற்கும்போது எளிதில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, நாம், நமது நன்மைக்காகவும், நமது நோக்கத்தில் வெற்றியடைவதற்காகவும், நம் நன்மையை விரும்புபவர்களும், கொள்கைகளை {ஆலோசனைகளை} அறிந்தவர்களுமான ஆலோசகர்களுடன் மீண்டும் ஆலோசிக்க வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}. 


ஆங்கிலத்தில் | In English

சனி, ஜூன் 11, 2016

ஜெயத்ரதனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 074

Drona consoled Jayadratha! | Drona-Parva-Section-074 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சபதத்தைக் கேட்டு அஞ்சிய ஜெயத்ரதன் களத்தை விட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னது; ஜெயத்ரதனுக்குத் தைரியமூட்டிய துரியோதனன்; துரோணரிடம் சென்ற ஜெயத்ரதன்; அவனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(துரியோதனனின்) ஒற்றர்கள் {சாரர்கள்}, வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் உண்டாக்கப்பட்ட அந்த உரத்த ஆரவாரத்தைக் கேட்டு, (அதன் காரணத்தைக் குறித்துத் தங்கள் தலைவர்களுக்கு) தகவல் சொன்ன போது, அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவனைப் போலத் துயரத்தால் இதயம் நிலைகுலைந்து, சோகத்தில் மூழ்கிய ஜெயத்ரதன், மெதுவாக எழுந்து, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மன்னர்களின் சபைக்குச் சென்றான்.


மனிதர்களில் தேவர்களான அவர்களின் முன்னிலையில் சிறிது நேரம் சிந்தித்த ஜெயத்ரதன், அபிமன்யுவின் தந்தையின் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தால் வெட்கமடைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், "பாண்டுவின் மண்ணில் {மனைவியிடத்தில்}, ஆசையின் ஆதிக்கத்தின் கீழ் இந்திரனால் பெறப்பட்ட அந்த இழிந்தவன் {அர்ஜுனன்} என்னை யமனுலகுக்கு அனுப்ப நினைக்கிறான். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக.

எனவே, உயிர் மீது கொண்ட விருப்பத்தால் நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன். அல்லது, க்ஷத்திரியரில் காளையரே, உங்கள் ஆயுதங்களின் பலத்தால் என்னைப் பாதுகாப்பீராக. பார்த்தன் {அர்ஜுனன்} என்னைக் கொல்ல முயல்கிறான், வீரர்களே, என்னை அச்சமற்றவனாக்குங்கள். துரோணர், துரியோதனன், கிருபர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பாஹ்லீகர், துச்சானன் மற்றும் பிறர், யமனால் பீடிக்கப்பட்டவனையே காக்க இயன்றவர்களாவர். எனினும், பல்குனனால் {அர்ஜுனனால்} மட்டுமே நான் அச்சுறுத்தப்படுகிறேன் எனும்போது, பூமியின் தலைவர்களான இவர்கள் அனைவரும், மற்றும் நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என்னைக் காக்க இயலாதா?

பாண்டவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்ட பிறகு எனது அச்சம் பெரிதாக இருக்கிறது. பூமியின் தலைவர்களே, மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதர்களைப் போல எனது அங்கங்கள் பலமற்றனவாகின்றன. காண்டீவதாரி {அர்ஜுனன்} என் மரணத்துக்காக உறுதியேற்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. இதன்காரணமாகவே பாண்டவர்கள், தாங்கள் அழவேண்டிய இந்நேரத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். மனித ஆட்சியாளர்களை விட்டுத் தள்ளுங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் கூட அர்ஜுனனின் சூளுரையைக் கலங்கடிக்கத் துணியமாட்டார்கள்.

எனவே, மனிதர்களில் காளையரே, அருளப்பட்டிருப்பீராக, (குரு முகாமை விட்டு அகல) எனக்கு அனுமதி அளிப்பீராக. என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டுகிறேன். பாண்டவர்களால் இதற்கு மேல் என்னைக் காண முடியாது!” என்றான் {ஜெயத்ரதன்}.

அச்சத்தால் இதயம் நடுங்க இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனிடம், வேறு அனைத்தையும் விடத் தன் சொந்த வேலையைச் செய்து முடிப்பதையே எப்போதும் நோக்கும் துரியோதனன், “ஓ மனிதர்களில் புலியே {ஜெயத்ரதா}, அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே, இந்த க்ஷத்திரிய வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னுடன் போரில் மோத யாரால் முடியும். {துரியோதனனாகிய} நான், விகர்த்தனன் மகன் கர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், வெல்லப்பட முடியாத விருஷசேனன், புருமித்ரன், ஜயன், போஜன், காம்போஜன், சுதக்ஷிணன், பெரும்பலமுள்ள சத்யவிரதன், விகர்ணன், துர்முகன், துச்சாசனன், சுபாஹு, தன் ஆயுதங்களை உயர்த்தியிருக்கும் கலிங்கர்களின் ஆட்சியாளன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் (சகுனி) ஆகிய இவர்களும், எண்ணற்ற பிற மன்னர்களும் தங்கள் படைகளுடன் அனைத்துப் புறங்களிலும் உன்னைச் சூழ்ந்து கொண்டு போரைச் சந்திக்கின்றனர். எனவே, உனது இதய நோய் அகலட்டும்!

மேலும், நீயே தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறாய். ஓ!அளவிலா காந்தி கொண்டவனே, நீயே வீரனாகவும் இருக்கிறாய். ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, இப்படிப்பட்ட நீ அச்சத்திற்கான காரணத்தை எவ்வாறு காண முடியும்? எனக்குச் சொந்தமான பதினோரு அக்ஷௌஹணி படைகளும் உன்னைப் பாதுகாப்பதற்காகக் கவனத்துடன் போராடும். எனவே, ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, அச்சங்கொள்ளாதே. உன் அச்சங்கள் விலகட்டும்” என்றான் {துரியோதனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தேற்றப்பட்ட சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, துரியோதனன் துணையுடன் அன்றிரவே (குரு படைத்தலைவர்) துரோணரிடம் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரியாதையுடன் துரோணரின் கால்களைத் தொட்டுப் பணிவுடன் தன் இருக்கையில் அமர்ந்த அவன் {ஜெயத்ரதன்}, ஆசானிடம் {துரோணரிடம்} இந்த வார்த்தைகளில், “இலக்கை அடித்தல், தொலைவிலிருந்து அஃதை {இலக்கை} அடித்தல், கரங்களின் உறுதி, தாக்குதலின் பலம் ஆகியவற்றில் எனக்கும் பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உள்ள வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக! ஓ! ஆசானே {துரோணரே}, (ஆயுத அறிவியலில் உள்ள) திறனைப் பொறுத்தவரை எனக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக நான் அறியவிரும்புகிறேன்! அஃதை என்னிடம் உண்மையாகச் சொல்வீராக!” என்று கேட்டான் {ஜெயத்ரதன்}.

துரோணர் {ஜெயத்ரதனிடம்}, “ஓ! மகனே {ஜெயத்ரதா}, நீ மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒரே அளவு கல்வியையே பயின்றீர்கள். எனினும், யோகம் {அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி} மற்றும் அவன் ஏற்ற கடின வாழ்வு {கடின முயற்சி} ஆகியவற்றின் விளைவால் அவன் உனக்கு மேம்பட்டவனாக இருக்கிறான்! எனினும், எக்காரணத்திற்காகவும் நீ பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} அஞ்சலாகாது. ஓ! மகனே {ஜெயத்ரதா}, இவ்வச்சத்தில் இருந்து நான் உன்னைப் பாதுகாப்பேன் என்பதில் ஐயமில்லை. என் கரங்களால் பாதுகாக்கப்படுபவனைத் தேவர்களே கூடத் தீங்கு செய்ய முடியாது.

பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்க {கடக்க [அ] பிளக்க} முடியாத வியூகம் ஒன்றை நான் அமைக்கப் போகிறேன். எனவே, உன் சொந்த வகையின் {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றபடி அஞ்சாமல் நீ போரில் ஈடுபடுவாயாக. ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {ஜெயத்ரதா}, உன் தந்தைமார்கள் மற்றும் பாட்டன்மார்களின் வழியில் நீ நடப்பாயாக. வேதங்களை முறையாகக் கற்ற பிறகு நீ விதிப்படி நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தியிருக்கிறாய் {அக்னியில் ஹோமம் செய்திருக்கிறாய்}. பல்வேறு வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய். எனவே, மரணம் என்பது உனக்கு அச்சத்தைத் தரும் பொருளாகாது. (ஒரு வேளை நீ இறந்தாலும்) தீய மனிதர்களால் அடைய முடியாத பெரும் நற்பேறைப் பெற்று, கர வலிமையால் ஒருவன் அடையும் சொர்க்கத்திலுள்ள அற்புத உலகங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.

கௌரவர்கள், பாண்டவர்கள், விருஷ்ணிகள், பிற மனிதர்கள், நான், என் மகன் ஆகியோரும் குறுகிய வாழ்நாளைக் கொண்ட மனிதர்களே. இஃதை எண்ணிப் பார்ப்பாயாக. அனைத்திலும் சக்தி வாய்ந்த காலத்தால், ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்படப் போகும் நாம் அனைவரும், தத்தமது வினையையே {செயற்பலனையே} அடுத்த உலகத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். கடும் நோன்புகளை நோற்று துறவியர் எந்த உலகங்களை அடைவார்களோ, அதே உலகங்களைத் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்றே க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்” என்றார் {துரோணர்}.

இவ்வாறே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} ஆறுதல் சொல்லப்பட்டான். பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த அச்சத்தை {தன்னிடமிருந்து} வெளியேற்றிய அவன் {ஜெயத்ரதன்}, தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தன. சிங்க முழக்கங்களுடன் கலந்து, இசைக்கருவிகளின் உரத்த ஒலி அங்கே கேட்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2017, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top