clone demo
தக்ஷகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தக்ஷகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 05, 2013

இந்திரன் அர்ஜுனன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 229

The fight between Indra and Arjuna | Adi Parva - Section 229 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

இந்திரனுக்கும் அர்ஜுனனுக்கு நடந்த மோதல்; இந்திரன் அர்ஜுனனை நினைவை இழக்கச் செய்தது; தக்ஷகன் மனைவியின் தந்திரம்; இந்திரன் தனது நண்பனின் மகனைக் காக்க நினைப்பது; தக்ஷகன் மகன் தப்பிப்பது; நாகர்கள், கருடர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதியது; தேவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணனுடன் அர்ஜுனனுடனும் மோதியது; தேவர்கள் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தது; இந்திரன் மீண்டும் தாக்கியது;

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு பாண்டுவின் மகனான பீபத்சு {பீபத்சு} {Vibhatsu-அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான். அளவற்ற ஆன்மா கொண்ட அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போல தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான். அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம்  இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை. அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவன் தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.

 ஆனால், தக்ஷகனின் பெரும் பலம் வாய்ந்த மகன் அஸ்வசேனன் {Aswasena} அங்கிருந்தான். அவன் நெருப்பில் இருந்து தப்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்தான்., ஆனால் அர்ஜுனனின் கணைகளால் அடைக்கப்பட்டதால், எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பாம்பின் மகளாகிய அவனது தாய், அவனை முதலில் விழுங்கி அவனைக் காக்க நினைத்தாள், அவனது தாய் முதலில் அவனது தலையை விழுங்கினாள். பிறகு அவனது வாலை விழுங்கினாள். தனது மகனின் வாலை விழுங்கிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கடற்பாம்பு {அஸ்வசேனனின் தாய்} (பூமியில் இருந்து} எழுந்தாள். ஆனால் அவள் தப்புவதைக் அர்ஜுனன் கண்டு, தனது கூரிய நுணுக்கமான கணையால் அவளது உடலில் இருந்து தலையைக் கொய்தான். இவற்றையெல்லாம் கண்ட இடியைத் தாங்கும் இந்திரன், தனது நண்பனின் மகனைக் காக்க எண்ணி, கடும் காற்றை எழுப்பி, அர்ஜுனனை நினைவு தவற வைத்தான். கிடைத்த அந்த கணநேரத்தில் அஸ்வசேனன் தப்புவதில் வெற்றியடைந்தான். மாயசக்தியின் வெளிப்பாட்டைக் கண்ட அர்ஜுனன், பாம்பால் ஏமாற்றப்பட்டு பெரும் கோபம் அடைந்தான். முன்னும் பின்னுமாக உடன் சென்று வான் வழியாகத் தப்பிக்க நினைத்த அனைத்து விலங்குகளையும், இரண்டாகவும், மூன்றாகவும், பல துண்டுகளாகவும் வெட்டிப் போட்டான். கோபம் கொண்ட பீபத்சு {பீபத்சு}வும் {அர்ஜுனனும்}, அக்னியும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ஏமாற்றுத் தனமாகத் தப்பிய அந்தப் பாம்பை, "நீ எப்போதும் புகழடைய மாட்டாய்", என்று சபித்தனர். 

தன்னை ஏமாற்றிய அந்த நிகழ்வை நினைத்த ஜிஷ்ணு {Jishnu-அர்ஜுனனன்} மிகுந்த கோபம் கொண்டு கணைகள் எனும் மேகத்தால் வானத்தை மறைத்து, ஆயிரம் கண்கள் உடையவனிடம் {இந்திரனிடம்} மோத முற்பட்டான். தேவர்கள் தலைவனும் அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு, அவனுடன் மோத முற்பட்டு, தனது கடும் ஆயுதங்களை வீசி, வானத்தின் பெரும் பகுதியை மறைத்தான். பிறகு மிகுந்த கர்ஜனையோடு இருந்த காற்று, பெருங்கடல்களைக் கலக்கி, வேகமான நீரோட்டம் கொண்ட பெரும் மேகத் திரள்களை மொத்தமாகக் கொண்டு வந்தது. அந்த மேகத்திரள்கள் இடியையும், பயங்கரமான மின்னல்வெட்டுகளையும் வெளியிட்டன.
பிறகு, காரணங்களின் அறிவு கொண்ட அர்ஜுனன், அந்த மேகங்களை விலக்க, வயவ்யா {Vayavya} என்ற அற்புதமான ஆயுதத்தை அதற்கு உரிய மந்திரங்களுடன் செலுத்தினான். அந்த ஆயுதத்தால், இந்திரனுடைய இடியின் சக்தியும் மற்றும் அந்த மேகங்களும் அழிக்கப்பட்டன. வேகமான நீரோட்டம் கொண்ட மழையால் நிறைந்த அந்த மேகங்கள் அனைத்தும் வற்றச் செய்யப்பட்டன. அங்கே விளையாடிக் கொண்டிருந்த மின்னலும் அகற்றப்பட்டது. சிறிது நேரத்திலேயே வானம் தூசுகள் மற்றும் இருள் அற்று காணப்பட்டது. அருமையான குளிர்ந்த தென்றல் அங்கு வீசியது. சூரியத்தட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

பிறகு தெளிந்த நெய்யை உண்பவன் {அக்னி}, தடை செய்ய யாரும் இல்லாததால், பல உருவங்களை எடுத்து, உயிரினங்களின் உடலில் இருந்து கசிந்த கொழுப்புகளை தெறிக்க வைத்து, அவனது அனைத்துச் சுடர்களையும் வெளியிட்டு பிழம்பாக எரிந்து, அண்டத்தையே தனது கர்ஜனையால் நிறைத்தான். அற்புதமான இறகுகள் கொண்ட கருட குலத்தைச் சேர்ந்த எண்ணிலடங்கா பறவைகள், அந்தக் காடு கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படுவதைக் கண்டு, அந்த வீரர்களைத் தங்கள் இடிபோன்ற இறக்கைகளாலும், அலகுகளாலும், கூரிய நகங்களாலும் அடிக்க விரும்பி பெருமையுடன் வானில் இருந்து கீழிறங்கின. நெருப்பைக் கக்கும் முகம் கொண்ட எண்ணிலடங்கா நாகர்களும் மேலிருந்து கீழிறங்கி அர்ஜுனனை அணுகி, எந்நேரமும் கொடும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.

அவர்கள் அணுகுவதைக் கண்ட அர்ஜுனன் தனது கோபத்தால் உண்டான நெருப்பில் வாட்டப்பட்ட கணைகளைக் கொண்டு அவர்களை துண்டுகளாக வெட்டிப் போட்டான். பிறகு உயிரிழந்த அந்தப் பறவைகளும் பாம்புகளுடன் கீழே எரிந்து கொண்டிருந்த பூதத்தில் {ஐம்பூதத்தில் ஒன்றான நெருப்பில்} விழுந்தன. அங்கே போர்புரிய விரும்பி எண்ணற்ற அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், நாகர்களும் உரக்கக் கத்திக் கொண்டே வந்தனர். அவர்கள் பெரும் கோபத்தால் தங்கள் சக்தியும் வீரமும் தூண்டப்பட்டு, தனது தொண்டைக்குழியில் இருந்து (வாயிலிருந்து) இரும்பு குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் கக்கும் இயந்திரங்களையும், பெரிய கற்களை உந்தித் தள்ளும் கவண்களையும் {cataputs}, ஏவுகணைகளையும் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனையும் பார்த்தனையும் தாக்க வந்தனர்.

ஆனால், அவர்கள் ஆயுதங்களை மழையெனச் சரியாகப் பொழிந்தாலும், பீபத்சு {பீபத்சு} அவர்களுக்கு நிந்தனை செய்யும் வகையில் பதில் சொல்லி, அவர்களது தலையைத் தனது கூரிய கணைகளால் அடித்தான்.

எதிரிகளைக் கொல்லும், பெரும் சக்தி கொண்ட கிருஷ்ணனும் தைத்தியர்களையும், தானவர்களையும் தனது சக்கரத்தால் படுகொலை செய்தான். அளவிலா பலம் கொண்ட பல அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டும், சக்கரத்தின் வலுவால் தாக்கப்பட்டும், தனித்து விடப்பட்டு வழிதவறி கிடக்கும் அனாதைக் குழந்தையைப் போல அலைகளின் கடுமை கொண்ட கரையில் அசைவற்று கிடந்தனர். பிறகு தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, தனது வெள்ளைக் குதிரையில் ஏறி. அந்த வீரர்களிடம் விரைந்து, பொய்க்காத தனது இடி ஆயுதத்தை எடுத்து பெரும் பலத்துடன் வீசினான். பிறகு அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தேவர்களிடம், "இந்த இருவரும் கொல்லப்பட்டனர்", என்று சொன்னான். கடுமையான இடி ஆயுதத்தை இந்திரன் வீசப்போவதைக் கண்ட தேவர்கள் ஆளாளுக்கு அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, யமன் {Yama} மரணத்தைக் கொடுக்கும் கதாயுதத்தையும், குபேரன் {Kuvera} முள் கதாயுதத்தையும், வருணன் {Varuna} சுருக்கு கயிறையும், அழகிய ஏவுகனையையும், ஸ்கந்தன் (கார்த்திகேயன்) {முருகன்} தனது வேலும் எடுத்துக் கொண்டு மேரு மலையென அசையாது நின்றார்கள். அஸ்வினி {Aswins} தேவர்கள் தங்கள் கரங்களில் பிரகாசமிக்க செடிகளுடன் நின்றனர். தத்ரி {Dhatri} தனது கையில் வில்லுடனும், ஜெயா {Jaya} தனது கையில் கதையுடனும், பெரும் பலம் கொண்ட துவஷ்திரி {Tvashtri} கோபம் கொண்டு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டும், சூரியன் {Surya} பிரகாசமான கணையுடனும், மிரித்யு {Mrityu} போர்க்கோடரியுடனும், ஆர்யமான் {Aryaman} கூர்முனை கொண்ட கனத்த தடியுடனும், மித்ரன் {Mitra} கத்தி போன்ற கூர்மையுடைய சக்கரத்துடனும் அங்கே நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, புஷா {Pusha}, பகா {Bhaga}, சாவித்ரி {Savitri} ஆகியோர் கைகளில் விற்களும், வளைந்த பட்டா கத்திகளும் கொண்டு, கோபத்துடன் கிருஷ்ணனிடமும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடமும்} விரைந்தனர். ருத்ரர்களும், வசுக்களும், பலம்வாய்ந்த மருதர்களும், விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் தங்கள் சக்தியாலேயே பிரகாசமாக இருக்கும் மற்ற பல தேவர்களும் கைகளில் பல ஆயுதங்களுடன் அந்த உயர்ந்த மனிதர்களான கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} அவர்களை அடித்து வீழ்த்த விரைந்தனர். விரைவில் ஏதோ நிகழப் போவதை முன்னறிவிக்குமாறு அந்தப் பெரும் மோதல் இருந்தது. பல உயிர்களின் உணர்வுகள் அங்கே கொள்ளை போவது தெரிந்தது. அண்ட கலைப்புக்கான நேரம் வந்ததைப் போல அப்போது காட்சியளித்தது. ஆனால், அச்சமற்ற போரில் தோல்வியுறாத அர்ஜுனனும் கிருஷ்ணனும், மோதத் தயாராக இருக்கும் சக்ரனையும் {இந்திரனையும்} தேவர்களையும் கண்டு,  கைகளில் வில்லுடன் அமைதியாகக் காத்திருந்தனர்.

போரில் நிபுணத்துவம் பெற்ற அந்த வீரர்கள், பெரும் கோபம் கொண்டு அந்த தேவர்களை நோக்கி முன்னேறி, இடியைப் போன்ற தங்கள் கணைகளைத் தொடுத்தனர். தொடர்ச்சியாக கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் தாக்கப்பட்ட அந்தத் தேவர்கள், கடைசியாக அச்சமுற்று போர்க்களத்தை விட்டு அகன்று, இந்திரனின் பாதுகாப்பைக் கோரினர். வானில் சாட்சிகளாக நின்று கொண்டிருந்த முனிவர்கள், மாதவனிடமும் {கிருஷ்ணனிடமும்} அர்ஜுனனிடமும் தோல்வியுற்ற தேவர்களைக் கண்டு அச்சரியமடைந்தனர். அவர்களது வீரத்தைத் தொடர்ச்சியாக சாட்சியாகக் கண்ட சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் பெரும் திருப்தி கொண்டு, மீண்டும் தாக்குதல் நடத்த விரைந்தான். பிறகு, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} இடது கையாலும் வில்லின் நாண் இழுக்க வல்ல அர்ஜுனனின் வீரத்தை உறுதி செய்ய நினைத்து, கற்களை மிக அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பெரும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது கணைகளை அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பிறகு, நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்},  தனது கல் மழை தடுக்கப்பட்டதைக் கண்டு, இன்னும் அடர்த்தியாகக் கற்களைப் பொழிந்தான். ஆனால் பகனைத் தண்டித்தவனின் மகன் (அர்ஜுனன்) அந்தக் கல் மழையைத் தனது வேகமான கணைகளால் தடுத்து தனது தந்தையைத் திருப்தி செய்தான்.
வானிலிருந்து விழுந்த கற்கள்
 பிறகு பாண்டுவின் மகனை அடிக்க நினைத்த சக்ரன் {இந்திரன்}, மந்தர மலையின் சிகரம் ஒன்றைத் தனது கையால் பெயர்த்தெடுத்து, அவன் {அர்ஜுனன்} மீது வீசினான். ஆனால், அர்ஜுனன், நெருப்பு வாய் கொண்ட தனது வேகமான கணைகளால், அந்த மலைச் சிகரத்தை ஆயிரம் துண்டுகளாக ஆக்கினான். வானிலிருந்து விழுந்த அந்த மலைத்துண்டுகளைப் பார்ப்பதற்கு, ஏதோ சூரியனும், சந்திரனும், கோள்களும் தங்கள் இடத்திலிருந்து நகர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. அந்தப் பெரும் சிகரம் அந்த கானகத்தில் விழுந்து, காண்ட வனத்தில் வசித்த எண்ணிலடங்கா உயிரினங்களை அழித்தது.


செவ்வாய், மார்ச் 19, 2013

வேள்வி நின்றது! | ஆதிபர்வம் - பகுதி 58

The sacrifice stopped! | Adi Parva - Section 58 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 46)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...

சௌதி, "இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேளுங்கள். மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தை அருளி திருப்தி செய்யும் தருணத்தில் இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்" என்றார் {சௌதி}.சௌனகர், “ஓ சூதா, விவேகிகளான அந்த அந்தணர்களின் மந்திரங்களுக்கு வீரியமில்லையா? அதனால்தான் தக்ஷகன் நெருப்பில் விழவில்லையா?” என்று கேட்டார்.

சௌதி, “இந்திரனால் கைவிடப்பட்டு, சுயநினைவை இழந்த அந்தப் பாம்புகளில் சிறந்தவனான தக்ஷகனை நோக்கி ஆஸ்தீகர் ‘நில், நில், நில்’ என்று மூன்று முறைக் கூறினார். கலங்கிய இதயத்துடன் கூடிய அவன் {தக்ஷகன்} அந்தரத்திலே, பூமிக்கும், ஆகாயத்திற்கும் நடுவில் நிற்கும் மனிதன் போல் நின்றான்” என்றார். {அதாவது செங்குத்தாக நின்றான் என்று பொருள்}

பிறகு சதஸ்யர்களால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, "ஆஸ்தீகர் சொன்னது போல் நடக்கட்டும். இந்த {நாக} வேள்வி இத்துடன் நிற்கட்டும். பாம்புகள் காக்கப்படட்டும், இந்த ஆஸ்தீகரும் அருளப்படட்டும். ஓ சூதரே உமது வார்த்தைகளும் உண்மையாகட்டும் [1]" என்றான்.

[1] ஆதிபர்வம்-பகுதி:51 சூதனின் தீர்க்கத் தரிசனத்தில் உள்ளது போல்

ஆஸ்தீகருக்கு வரம் அருளப்பட்ட போது, மகிழ்ச்சி ஆரவாரங்கள் அந்த இடம் முழுவதையும் நிறைத்தன. பாண்டவ குலத்தில் வந்த மன்னன் {ஜனமேஜயன்}, அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வி அத்துடன் முடிவுக்கு வந்தது. மன்னன் {ஜனமேஜயன்} மனநிறைவுகொண்டு, ரித்விக்குகளுக்கும், சதஸ்யர்களுக்கும், மற்றும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செல்வத்தைக் கொடுத்தான். கட்டுமானப்பணியில் சிறந்த, கட்டடங்கள் மற்றும் அடித்தளங்களின் விதிகளை அறிந்து, பாம்பு வேள்வி தடைபடுவதற்கு ஓர் அந்தணன் காரணமாவான் என்று முதலிலேயே சொன்ன சூத சாதியைச் சேர்ந்த லோஹிதாக்ஷனுக்குப் [2] பெரும் செல்வங்களைக் கொடுத்தான்.

[2] வேறொரு பதிப்பில் புராணத்தை நினைவு கூர்ந்த லோஹிதாக்ஷரும், யாகம் நிற்கும் என்று கூறிய ஸ்தபதியும் ஒருவர் அல்லாது, இருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க கருணையுடன் மன்னன் {ஜனமேஜயன்}, இன்னும் பல பொருட்களையும், உணவுகளையும், ஆடைகளையும் அவரது {சூதன் லோஹிதாஷா} விருப்பத்திற்கேற்பக் கொடுத்து மனநிறைவடைந்தான். தன் காரியத்தை முடித்துத் திருப்தியுடனிருந்த ஆஸ்திகரை மரியாதையுடன் நடத்தி அவரை வீட்டிற்கு விடைகொடுத்தனுப்பிய பிறகு, உரிய சடங்குகளுடன் வேள்வியை அவன் {ஜனமேஜயன்} முடித்தான்.

மன்னன் {ஜனமேஜயன்} அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, "நீர் திரும்பவும் வந்து எனது பெரும் குதிரை வேள்வியில் (அஸ்வமேத வேள்வி) சதயஸ்யராக இருக்க வேண்டும்" என்றான். ஆஸ்தீகர், "சரி" என்று சொல்லி, அந்த ஏகாதிபதியை {ஜனமேஜயனை} மனநிறைவுப்படுத்தித் தன் குறிக்கோளை அடைந்த மகிழ்ச்சியுடன் தனது இல்லத்திற்குச் சென்றார். அப்படி மகிழ்ச்சியாகச் சென்று தனது மாமன் {வாசுகி} மற்றும் தாயின் {ஜரத்காருவின்} கால்களில் விழுந்து ஆசிபெற்று, {நாக வேள்வியில்} நடந்தவை நடந்தபடியே அனைத்தையும் அவர்களிடம் சொன்னார் {ஆஸ்தீகர்}.

சௌதி தொடர்ந்தார், "அவர் {ஆஸ்தீகர்} சொன்னதையெல்லாம் கேட்ட பாம்புகள் பெரும் மகிழ்வு கொண்டனர். அவர்கள் அச்சம் நீங்கியது. ஆஸ்தீகரிடம் பெரும் மனநிறைவு கொண்டு அவருக்கு {ஆஸ்தீகருக்கு} ஒரு வரம் தருவதாகச் சொல்லினர், "ஓ கற்றவனே {ஆஸ்தீகனே}, உனக்கு நாங்கள் என்ன நன்மை செய்வது? உன்னிடம் நாங்கள் பெரும் மனநிறைவுகொண்டோம். எங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டாய். உனக்காக நாங்கள் என்ன செய்யட்டும் குழந்தாய்" என்றனர்.

ஆஸ்தீகர், "காலையிலோ, மாலையிலோ, எனது இந்தப் புனிதமான செயலையுடைய வரலாறை கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் படிக்கும் அந்தணர்களும் மற்ற மனிதர்களும், உங்களிடம் எந்தவிதமான அச்சத்தையும் அடையாதிருக்கட்டும்" என்றார். அதற்கு அந்தப் பாம்புகள் பெருமகிழ்வுடன், "ஓ மருமகனே, உன் வரமானது நீ கேட்டபடியே ஆகட்டும். ஓ மருமகனே, நீ என்ன கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு செய்வோம். ஆஸ்தீகன், அர்திமான், சுனிதன் என்று பகலிலோ, இரவிலோ மனதால் நினைப்பவர்களுக்கும் பாம்புகளினால் பயம் ஏற்படாது.

'நான் எனது மனத்தில் ஜரத்காருவுக்குப் பிறந்தவரும் பாம்பு வேள்வியிலிருந்து பாம்புகளைக் காத்தவருமான ஆஸ்தீகரை நினைக்கிறேன். அதனால் பெரும் நற்பேறு பெற்ற பாம்புகளே, நீங்கள் என்னைக் கடிக்காதிருங்கள். இங்கே இருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் அருளப்படுவீர்கள். கடும் விஷம் கொண்ட பாம்புகளே சென்றுவிடுங்கள். ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்குப் பிறகு ஆஸ்தீகர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள் பாம்புகளே. எந்தப் பாம்பு ஆஸ்தீகரைக் குறித்துச் சொல்லியும் கடிக்கிறதோ, அந்தப் பாம்புகளின் தலை சிம்சா மரத்தின் கனி போல நூற்றுக்கணக்காகப் பிளந்து போகட்டும்.' என்று யார் சொன்னாலும் அவர்களுக்கும் பாம்புகளால் எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றனர்.

சௌதி தொடர்ந்தார், "அந்தணர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, அப்படி முக்கியமான பாம்புகள் கூடி சொன்னபோது ஆஸ்தீகர் பெரிதும் மகிழ்ந்தார். அதன்பிறகு அந்த உயர் ஆன்ம முனிவர் {ஆஸ்தீகர்} அங்கிருந்து சென்றுவிடுவதில் தனது இதயத்தைச் செலுத்தினார். அப்படிப் பாம்பு வேள்வியில் இருந்து பாம்புகளைக் காத்த அந்த அந்தணர்களில் சிறந்தவர் {ஆஸ்தீகர்}, தனக்குரிய காலத்தில் மகன்களையும் பேரன்களையும் விட்டு மேலுலகம் சென்றார்.

ஆஸ்தீகர் வரலாற்றை எப்படி நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டேன். இந்த வரலாற்றைச் சொல்வதால் பாம்புகளின் மேல் இருக்கும் பயம் விலகும்.

சௌதி தொடர்ந்தார், "ஓ அந்தணர்களே, ஓ பிருகு பரம்பரையில் முதன்மையானவரே {சௌனகரே}, உமது முன்னோரான பிரம்மதி, இதுகுறித்து விசாரித்த ருருவிடம் சொன்னவாறே, நான் கேட்டவாறே, கல்விமானான ஆஸ்தீகர் குறித்த இந்த அருள்நிறைந்த வரலாற்றைத் தொடக்கமுதல் சொன்னேன். ஓ அந்தணரே {சௌனகரே}, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {சௌனகரே}, {நீர் பாம்பு} துந்துபாவின் கதையைக் கேட்டவுடன் நீர் விரும்பிய அறம்வளர்க்கும் புனிதமான ஆஸ்தீகர் வரலாற்றைக் கேட்டீர். உமது ஆர்வம் நிறைவடையட்டும்" என்றார் {சௌதி}.


ஆங்கிலத்தில் | In English

ஞாயிறு, மார்ச் 17, 2013

தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 56

Indra cast off Takshaka! | Adi Parva - Section 56 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 44)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...

ஜனமேஜயன், "இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்" என்றான்.

அதற்குச் சதயஸ்யர்கள், "அந்தணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்.சௌதி தொடர்ந்தார், "மன்னன் {ஜனமேஜயன்} அந்த அந்தணச் சிறுவனிடம் {ஆஸ்தீகனிடம்}, "ஒரு வரத்தைக் கேள்" என்றான். இதனால் அதிருப்தி அடைந்த ஹோத்ரி {சண்டபார்கவர்}, "தக்ஷகன் இன்னும் இந்த வேள்விக்குள் வரவில்லை" என்றார்.

"ஜனமேஜயன், "உங்கள் பலத்தில் சிறந்ததைச் செய்து, தக்ஷகனை விரைவாக வர வைத்து, இந்த வேள்வியை முடித்து வையுங்கள். அவன் {தஷகன்} எனது எதிரி" என்றான்.

"அதற்கு ரித்விக்குகள், "புராணங்களும் {சாத்திர அறிவும்}, இந்த நெருப்பும் {அக்னி பகவானும்} என்ன சொல்கிறதென்றால், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தக்ஷகன் பயத்தால் பீடிக்கப்பட்டு இந்திரனின் இருப்பிடத்தில் இருக்கிறான் (என்று தோன்றுகிறது)" என்றனர்.

சௌதி தொடர்ந்தார், "புராணங்களில் தெளிந்த அறிவுடைய சூத சாதியைச் சேர்ந்த லோஹிதாக்ஷன் [1] என்று அழைக்கப்பட்ட சிறப்பு மிகுந்தவர் முன்பே ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.

[1] சிவந்த கண்களைக் கொண்டவர் என்று பொருள்

மன்னனால் {ஜனமேஜயனால்} தற்போது கேட்கப்பட்டு, அந்த ஏகாதிபதிக்கு மீண்டும் சொன்னார் {லோஹிதாக்ஷர்}. "ஐயா {ஜனமேஜயரே}, அந்தணர்கள் கூறுவதையே புராணங்களை அறிந்த நானும் சொல்கிறேன், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயரே}, இந்திரன் "என்னிடம் மறைவாக இருப்பாயாக. அக்னி உன்னை எரிக்கமாட்டான்" என்ற வரத்தை அவனுக்கு {தஷகனுக்கு} அளித்திருக்கிறான்" என்றார்.

சௌதி தொடர்ந்தார், "வேள்வியில் அமர்த்தப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, இதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டு, ஹோத்ரியை {சண்டபார்கவரைத்} தனது கடமையைச் செய்யத் தூண்டினான். அந்த ஹோத்ரி, மந்திரங்களை உச்சரித்து, தெளிந்த நெய்யை நெருப்பில் விடும்போது இந்திரன் தோன்றினான்.

அந்தச் சிறப்பு மிகுந்தவன், தேவர்கள் சுற்றிலும் நின்று போற்ற, மேகக் கூட்டங்களும், தேவலோக பாடகர்களும், தேவலோக நடன மாதர்களின் கூட்டங்களும் பினதொடர தன் தேரில் தெரிந்தான்

தக்ஷகன் பயத்தினால் கலக்கமடைந்து இந்திரனின் மேலாடையினுள் ஒளிந்து கொண்டு கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தான். மன்னன் {ஜனமேஜயன்} மிகுந்த கோபம் கொண்டு, தக்ஷகனை அழிக்கும் நோக்கத்தில் மந்திரங்கள் அறிந்த அந்தணர்களிடம், "அந்தப் பாம்பு தக்ஷகன், இந்திரனின் இருப்பிடத்தில் இருந்தால், அவனை {தஷகனை} இந்திரனோடே வந்து இந்த நெருப்பில் விழச்செய்யுங்கள்" என்றான் {ஜனமேஜயன்}.

சௌதி தொடர்ந்தார், "இப்படித் தக்ஷகனைக் குறித்து ஜனமேஜயனால் தூண்டப்பட்ட ஹோத்ரி அங்கிருந்த அவனது {தஷகனின்} பெயரைச் சொல்லி நெய்யை ஊற்றினார். அப்படி ஊற்றப்படும்போது, கலவரமடைந்த தக்ஷகன், புரந்தரனுடன் {இந்திரனுடன்} உடனே வானத்தில் தெரிந்தான். புரந்தரன் {இந்திரன்}, அந்த வேள்வியைப் பார்த்து எச்சரிக்கையடைந்து விரைவாகத் தக்ஷகனைக் கைவிட்டுத் தனது இருப்பிடம் திரும்பினான். இந்திரன் அப்படிச் சென்றதும், அந்தப் பாம்பு இளவரசன் தக்ஷகன் பயத்தால் உணர்விழந்து மந்திரங்களின் வலிமையால் வேள்வித் தீச்சுடரின் அருகே வந்துவிட்டான்.

அப்போது ரித்விக்குகள், "ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, உனது வேள்வி சிறப்பாக நடக்கிறது. ஓ தலைவா, இனி நீ இந்த அந்தணர்களில் முதல்வனுக்கு வரத்தை அருளலாம்" என்றனர்.

"ஜனமேஜயன், "அளவற்ற அழகுடன் குழந்தையைப் போல் இருப்பவரே, உமக்குத் தக்க வரமளிக்க விரும்புகிறேன். அதனால், உமது இதயத்தில் நீர் விரும்புவதைக் கேளும். கொடுக்க முடியாததையும் உமக்குக் கொடுக்கிறேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றான்.

ரித்விக்குகள், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தக்ஷகன் விரைவாக உனது கட்டுப்பாட்டுக்கள் வருவதைப் பார். அவனது {தஷகனது} கொடூரமான கதறலும், சத்தமான உருமலும் கேட்கிறது பார். நிச்சயமாக வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அந்தப் பாம்பைக் கைவிட்டுவிட்டான். உனது மந்திரங்களால் அவனது உடல் செயலிழந்துள்ளது, அவன் {தஷகன்} மேலுலகில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறான். இப்போது, வானத்தில் உருண்டு, சுய உணர்வை இழந்து, சத்தமாக மூச்சுவிட்டுக் கொண்டு அந்தப் பாம்புகளின் இளவரசன் {தஷகன்} வந்து கொண்டிருக்கிறான்" என்றனர்.

"சௌதி தொடர்ந்தார், "அப்படி அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் அந்த வேள்வித்தீயில் விழுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன் ஆஸ்தீகர், "ஓ ஜனமேஜயா, நீ எனக்கு ஒரு வரம் அருள்வதாக இருந்தால், இந்த உனது வேள்வி இத்தோடு முடிவுக்கு வரட்டும். மேலும் பாம்புகள் இந்தத் தீயில் விழ வேண்டாம்" என்றார் {ஆஸ்தீகர்}.

"ஓ அந்தணரே {சௌனகரே}, அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்}, ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டதால் மிகவும் வருந்தி அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, "ஓ சிறந்தவரே, தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று நீர் எதை விரும்பினாலும் நான் தருகிறேன். ஆனால் எனது வேள்வி நிற்காதிருக்கட்டும்" என்றான் {ஜனமேஜயன்}.

ஆஸ்தீகர், "நான் தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று எதையும் உன்னிடம் கேட்கவில்லை. ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, உனது இந்த வேள்வி இத்தோடு நிற்கட்டும். எனது தாய்வழி {பெண் பாம்பு ஜரத்காருவின்} உறவினர்கள் {பாம்புகள்} இதனால் விடுதலை அடையட்டும்" என்றார்.

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டு, மீண்டும் மீண்டும் அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவரிடம் {ஆஸ்தீகரிடம்}, "அந்தணர்களில் சிறந்தவரே, வேறு ஏதாவது வரத்தைக் கேளும். நீர் அருளப்பட்டு இருப்பீர்!" என்றான். ஆனால், ஓ பிருகு குலத்தோரே {சௌனகரே}, அவர் {ஆஸ்தீகர்} வேறு எந்த வரத்தையும் வேண்டவில்லை. அதன்பிறகு வேதமறிந்த சத்யஸ்யர்களும் அனைவரும் ஒருமித்த குரலில் மன்னனிடம் {ஜனமேஜயனிடம்}, "இந்த அந்தணன் தனது வரத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்" என்றனர்" {என்றார் சௌதி}.


ஆங்கிலத்தில் | In English

தக்ஷகனைப் பாதுகாத்த இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 53

Indra protected Takshaka! | Adi Parva - Section 53 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 41)

பதிவின் சுருக்கம் : வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது…

சௌனகர், "எந்தப் பெரும் முனிவர்கள், பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில் ரித்விக்குகளாக இருந்தனர்? பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்? ஓ சூத மைந்தரே {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று கேட்டார்.அதற்குச் சௌதி, "அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாகவும், சதஸ்யர்களாகவும் இருந்த அந்த விவேகிகளின் பெயர்களைச் சொல்கிறேன். சண்டபார்கவர் என்ற அந்தணர் ஹோத்ரியாக அந்த வேள்வியில் இருந்தார். வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {சண்டபார்கவர்}, சியவனரின் பரம்பரையில் வந்த புகழ் வாய்ந்தவராவார். படித்த, முதிர்ந்த அந்தணரான கௌத்சர், வேத சுலோகங்களை உச்சரிக்கும் உத்கத்ரியாக இருந்தார்.

ஜைமினி அந்தணராகவும், சார்ங்கரவர் மற்றும் பிங்களர் அத்வர்யுக்களாகவும், வியாசர் தனது மகன் {சுகர்} மற்றும் சீடர்களுடனும், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது, பிங்களர், ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் அந்தணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் ஆகியோருடன் வேதங்களை முழுவதும் அறிந்த மற்றும் பல அந்தணர்கள் அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்யர்களாக இருந்தனர்.

அந்தப் பாம்பு வேள்வியில், ரித்விக்குகள் தெளிந்த நெய்யை நெருப்பில் விட ஆரம்பித்ததும், எல்லா உயிரினங்களிடத்திலும் பயத்தை உண்டாக்கும் பயங்கரமான பாம்புகள் அந்த நெருப்பில் வந்து விழ ஆரம்பித்தன. அப்படி விழுந்த அந்தப் பாம்புகளின் கொழுப்பும் மஜ்ஜையும் {எலும்புக்குள் இருக்கும் சத்தும்} உருகி ஆறுகளாக ஓடின. பாம்புகள் தொடர்ந்து வந்து எரிந்ததால், அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் தாங்கமுடியாத கடும் நாற்றமெடுத்தது. அப்படி நெருப்பில் விழுந்த மற்றும் விழுவதற்கு முன் ஆகாயத்தில் இருந்த அந்தப் பாம்புகளின் கதறல்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

அதே நேரத்தில், ஜனமேஜயன் பாம்புகளின் யாகத்தை நடத்துகிறான், என்று அறிந்ததுமே, அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் புரந்தரனின் (இந்திரன்) அரண்மனைக்குக் சென்றான். அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {பாம்பு தஷகன்}, நடந்தவைகள் அனைத்தையும் கூறி, தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு பீதியினால் இந்திரனின் பாதுகாப்பை நாடினான். {அதைக் கேட்டு} நிறைவடைந்த இந்திரன், "ஓ பாம்புகளின் இளவரசனே, ஓ தக்ஷகா, பாம்பு வேள்வியால் இந்த இடத்தில் உனக்கு எந்தப் பயமுமில்லை. உனக்காக என்னால் பெருந்தகப்பன் {பிரம்மன்} சமாதானம் செய்யப்பட்டார். ஆகையால் உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். உனது இதயத்தில் இருக்கும் அச்சமானது தணியட்டும்" என்றான் {இந்திரன்}.

சௌதி தொடர்ந்தார், "இப்படி அவனால் {இந்திரனால்} ஊக்குவிக்கப்பட்ட, அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {தஷகன்} இந்திரனின் இருப்பிடத்திலேயே தங்கி மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆனால், வாசுகி {பாம்பு}, இப்படிப் பாம்புகள் தொடர்ந்து நெருப்பில் விழுவதைக் கண்டும், தனது குடும்பம் {பாம்பினம்} ஒரு சில உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டதைக் கண்டும் மிகவும் வருந்தினான். பெரும் துயரம் கொண்ட அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} இதயம் உடையும் நிலையில் இருந்தது.

அவன் {பாம்பு மன்னன் வாசுகி} தனது தங்கையை {ஜரத்காருவை} வரவைத்து, "ஓ இனிமையானவளே {ஜரத்காருவே}, எனது உறுப்புகள் எரிகின்றன. தேவலோகத்தின் புள்ளிகள் எனக்குத் தெரியவில்லை. நான் எனது சுயநினைவை இழந்து கீழே விழப்போகிறேன். எனது மனம் திரும்புகிறது {நிலையற்று இருக்கிறது}, பார்வை மங்குகிறது, எனது இதயம் உடைகிறது. உணர்விழந்து, இன்று அந்த எரியும் நெருப்பில் விழுந்துவிடப் போகிறேன்.

பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} இந்த வேள்வி நமது இனத்தை அழிக்க உருவானதாகும். மரணத் தேவனின் வசிப்பிடத்திற்கு நானும் செல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. ஓ எனது தங்கையே {ஜரத்காருவே}, நம்மையும், நமது உறவினர்களையும் காப்பதற்கு உன்னை எதற்காக ஜரத்காருவுக்கு அளித்தேனோ, அதற்கான நேரம் வந்துவிட்டது. ஓ பாம்பினத்தின் பெண்களில் சிறந்தவளே {ஜரத்காருவே}, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேள்வியை ஆஸ்தீகன் தடுத்து நிறுத்துவான், என்று பழங்காலத்தில் பெருந்தகப்பன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஆகையால், ஓ குழந்தாய் {ஜரத்காரு}, எனது பாதுகாப்புக்காகவும், என்னை நம்பியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும், வேதங்களில் முழுமை கண்டவனும், வயதில் முதிர்ந்தவர்களாலும் மதிக்கப்படுபவனான உனது மைந்தனை {ஆஸ்தீகனைக்} வேண்டிக் கேட்டுக் கொள்வாயாக" என்றான் {பாம்பு மன்னன் வாசுகி}.


ஆங்கிலத்தில் | In English

வியாழன், மார்ச் 14, 2013

ஜனமேஜயன் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 50

The wrath of Janamejaya! | Adi Parva - Section 50 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 38)

பதிவின் சுருக்கம் : அமைச்சர்கள் நடந்ததைக் கூறினர்; தக்ஷகன் கசியபர் உரையாடல் தெரிந்த விதம்; தக்ஷகனைப் பழிதீர்க்க முடிவு செய்த ஜனமேஜயன் ...

சௌதி தொடர்ந்தார், "அமைச்சர்கள் சொன்னார்கள், "அந்த மன்னர் மன்னன் {பரீக்ஷித்}, பசியாலும், முயற்சியாலும் களைத்துப் போய், அந்த முனிவரின் {சமீகரின்} தோள்களில் பாம்பைக் கிடத்திவிட்டு தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பி வந்துவிட்டான். அந்த முனிவருக்குப் {முனிவர் சமீகருக்குப்}, பசுவிடம் பிறந்த ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெயர் சிருங்கின்.

அவன் {சிருங்கின்} தனது பெரும் வீரம், சக்தி மற்றும் பெரும் கோபத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டு இருந்தான். (தினமும்) தனது குருவிடம் [1] சென்று, அவரை வழிபட்டு வரும் வழக்கம் அவனிடம் {சிருங்கினிடம்} இருந்தது. அந்தக் குருவின் உத்தரவின் பேரில் சிருங்கி தனது வீட்டுக்குத் திரும்பி வருகையில் தனது நண்பனின் மூலம், உன் தந்தையினால் அவன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டறிந்தான். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தந்தை {முனிவர் சமீகர்} எக்குற்றமும் செய்யாதிருப்பினும், உயிரற்ற பாம்பைச் சுமந்து ஒரு சிலையைப் போல அசைவற்றவராக அமர்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டான்.


[1] பிரம்மனிடம் சென்று என்று வேறு ஒரு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} கடும் தவங்களை நோற்பவர், முனிவர்களில் முதன்மையானவர், தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்பவர், சுத்தமானவர், அற்புதமான செயல்கள் செய்து கொண்டிருப்பவர். தவத் துறவுகளால் அவரது {முனிவர் சமீகரது} ஆன்மா ஞானஒளி பெற்றிருந்தது. அவரது உறுப்புகளும், அதன் செயல்களும் அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. அவரது செயல்களும், பேச்சும் எப்போதும் அருமையாகவே இருக்கும். அவர் {முனிவர் சமீகர்} பேராசைகள் அற்று மனநிறைவுயுடன் இருந்தார். அவர் பொறாமையற்றும், எந்த விதத்திலும் கருமித்தனமற்றும் இருந்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் அதன் துயரங்களில் அடைக்கலம் கொடுப்பவர். அந்த முதிர்ந்தவர் மௌன விரதம் இருப்பது வழக்கம்.

உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} அப்படிப்பட்டவர் {மேற்சொன்ன அனைத்துக் குணங்களைக் கொண்டவர்}. அந்த முனிவரின் மகன் {சிருங்கி} பெரும் கோபம் கொண்டு உனது தந்தையை {பரீக்ஷித்தைச்} சபித்தான். வயதில் இளையவனாக இருந்தாலும், அந்தச் சக்திவாய்ந்தவன் தவ மகிமையில் முதிர்ந்தவனாக இருந்தான். அவன் {சிருங்கி} கோபம் கொண்டு வேகமாக நீரைத் தொட்டு, தவசக்தியினால் ஒளிர்ந்து கொண்டு உன் தந்தையைக் குறித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தான். "எனது ஆன்மிகப் பலத்தைப் {தவத்தின் சக்தியைப்} பார்! எனது இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டுப் பலமான சக்தியும், கொடிய விஷமும் கொண்ட தக்ஷகன் {பாம்பு}, எந்தத் தவறும் செய்யாத என் தந்தை {முனிவர் சமீகர்} மீது இந்தப் பாம்பைக் கிடத்திய தீயவனை, இன்னும் ஏழு இரவுகளுக்குள் தன் விஷத்தால் எரிப்பான்" என்று {சிருங்கி} சபித்துவிட்டு, தனது தந்தை {முனிவர் சமீகர்} எங்கிருந்தாரோ அங்குச் சென்றான்.

அவனது தந்தையைச் சந்தித்து, தனது சாபத்தைப் பற்றிச் சொன்னான். அந்த முனிவர்களில் புலியானவர் {முனிவர் சமீகர்}, இனிமையான குணமும், அனைத்து அறங்களும் கொண்டவனும், இனிமையானவனுமான தனது சீடன் கௌர்முகனை உனது தந்தையிடம் {பரீக்ஷித்திடம்} அனுப்பினார். அவன் {சமீகரின் சீடன் கௌர்முகன்} (சபைக்கு வந்த பிறகு) வந்து சிறிது ஓய்வெடுத்த பின், மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} அனைத்தையும் தன் குருவின் {சமீகர்} வார்த்தைகளிலேயே தெரிவித்தான். "எனது மகனால் {சிருங்கியால்} நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், ஓ மன்னா, தக்ஷகன் {பாம்பு} தனது விஷத்தால் உன்னை எரிக்கப்போகிறான். ஓ மன்னா, கவனமாக இருப்பாயாக" {என்றான் கௌர்முகன்}. ஓ ஜனமேஜயா, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட உனது தந்தை {பரீக்ஷித்} பலம்வாய்ந்த தக்ஷகனுக்கு எதிராக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான்.

ஏழாவது நாள் வந்த போது, கசியபர் என்ற அந்தண முனிவர், ஏகாதிபதியை {பரீக்ஷித்தைச்} சந்திக்க விருப்பம் கொண்டார். ஆனால் அந்தப் பாம்பு தக்ஷகன், கசியபரைச் சந்தித்தான்.. அந்தப் பாம்புகளின் இளவரசன் {தஷகன்} கசியபரிடம் நேரத்தைக் கடத்தாமல் பேசினான். "எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்? எக்காரியத்திற்காக நீர் போகிறீர்?" என்றான். கசியபர், "ஓ அந்தணரே, நான் குரு பரம்பரையின் சிறந்த மன்னன் பரீக்ஷித் எங்கிருக்கிறானோ அங்குச் செல்கிறேன். அவன் தக்ஷகனின் விஷத்தால் இன்று எரியப் போகிறான். அவனைக் குணப்படுத்தவே நான் விரைவாகச் செல்கிறேன். உண்மையில் என்னால் பாதுகாக்கப்படும் போது அந்தப் பாம்பால் அவனைக் {பரீக்ஷித்தைக்} கடித்துக் கொல்ல முடியாது" என்றார்.

தக்ஷகன், "என்னால் கடிபட இருக்கும் அந்த மன்னனை எதற்காகக் காக்கப் போகிறீர்? நானே தக்ஷகன். ஓ அந்தணரே {கசியபரே}, என்னால் கடிக்கப்படும் அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} பிழைக்க வைக்க உம்மால் ஆகாது. எனது விஷத்தின் அற்புத பலத்தைப் பாரும்" என்று சொல்லி, அங்கே இருந்த கானக மன்னனைக் (ஆல மரத்தைக்) கடித்தான். அந்த ஆலமரம் பாம்பால் {தஷகனால்} கடிபட்ட உடன் சாம்பலாக ஆனது.

ஆனால் ஓ மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதை உயிர்ப்பித்தார். அப்போது தக்ஷகன், "உமது விருப்பத்தைச் சொல்லும்" என்று கேட்டு அவரது {ஆசையைத்} தூண்டினான். இப்படிக் கேட்கப்பட்ட கசியபரும் தக்ஷகனிடம், "செல்வத்தில் விருப்பம் கொண்டே நான் அங்குச் செல்கிறேன்" என்றார். அந்த உயர்ஆன்ம கசியபரிடம் தக்ஷகன் மென்மையான வார்த்தைகளால், "ஓ பாவமற்றவரே {கசியபரே}, நீர் அந்த ஏகாதிபதியிடம் {பரீக்ஷித்திடம்} இருந்து எதிர்பார்த்ததை விட அதிகச் செல்வத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லும்" என்றான் {தஷகன்}. இதைக் கேட்ட, அந்த மனிதர்களில் முதன்மையான கசியபர், அவனிடமிருந்து தான் விரும்பிய அளவு செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வந்த வழியே சென்றார்.

கசியபர் திரும்பிச் சென்றதும், தக்ஷகன் மாற்றுருவம் கொண்டு, தனது மாளிகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கியிருந்த, மன்னர்களில் முதன்மையானவனும், அறவழி நடப்பவனுமான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} மேல் தனது விஷ நெருப்பைப் பிரயோகித்தான். அதன் பிறகு ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, நீ (அரியணையில்) அமர்த்தப்பட்டாய். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, கொடூரமானதாக இருந்தாலும், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் முழுவிவரத்தையும் உரைத்துவிட்டோம். மன்னனான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} கவலையையும், உதங்க முனிவரின் அவமதிப்பையும் முழுவதும் கேட்டு, செய்யவேண்டியதை நீயே தேர்வு செய்து கொள்வாயாக" என்றனர்.

சௌதி தொடர்ந்தார், "எதிரிகளை அடக்கும் மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்கள் அனைவருடன் பேசினான். அவன், "ஆலமரம், தக்ஷகனால் சாம்பலானதையும், அது பிறகு அற்புதமான முறையில் கசியபரால் உயிர்ப்பிக்கப்பட்டதையும் எப்போது நீங்கள் அறிந்தீர்கள்? எனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகன் தீண்டி இறந்திருந்தாலும், கசியபரின் மந்திரங்களால் அவரை நிச்சயம் பிழைக்க வைத்திருக்க முடியும். அந்தப் பாம்புகளில் இழிந்தவன் {தஷகன்}, அந்தப் பாவ ஆன்மா, தன்னால் கடிபட்ட மன்னன், கசியபரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் தன் விஷம் செயலிழக்க வைக்கப்பட்டதைக் குறித்து உலகம் தன்னைக் கேலி செய்து எள்ளி நகையாடும் என்று தன் மனதில் எண்ணியிருக்கிறான். நிச்சயமாக அந்த எண்ணம் இருந்ததால்தான், அவன் {தஷகன்} கசியபரை சமாதானப்படுத்தியிருக்கிறான். அவனைத் {தஷகனைத்} தண்டிக்க நான் ஒரு வழியைத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கானகத்தில் தனிமையில் தக்ஷகனும் கசியபரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்கள் பார்த்தபடியே அல்லது கேட்டபடியே எனக்குச் சொல்லுங்கள். அதை அறிந்த பிறகு, பாம்பினத்தையே ஒழிக்க ஒரு திட்டம் செய்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.

அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த அந்தணர்களில் முதன்மையானவரும் {கசியபரும்}, பாம்புகளின் இளவரசனும் கானகத்தில் சந்தித்துக் கொண்டதைப் பற்றி முன்பு எங்களுக்குக் கூறியவனைப் பற்றிக் கேட்பாயாக. ஓ ஏகாதிபதியே, {அந்த ஆலமரத்தின்} காய்ந்த கிளைகளை உடைத்து அதை வேள்விக்கான விறகாக்கும் எண்ணத்துடன் ஒரு மனிதன் அம்மரத்தின் மேல் ஏறியிருந்தான்.

அவன் அந்தப் பாம்பாலோ {தக்ஷகனாலோ} அல்லது அந்த அந்தணராலோ கவனிக்கப்படவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த மனிதனும் அந்த மரத்தோடு சாம்பலானான். ஓ மன்னர்மன்னா, அந்த மரம் அந்தணரின் {கசியபரின்} சக்தியால் உயிர்மீட்கப்பட்ட போது, உடன் சேர்ந்து இவனும் மீண்டான். ஓர் அந்தணரின் வேலைக்காரனான அவன், எங்களிடம் வந்து, தக்ஷகனுக்கும், அந்தணருக்கும் {கசியபருக்கும்} இடையில் நடந்த உரையாடலை முழுமையாகச் சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா} நாங்கள் பார்த்தவாறும், கேட்டவாறும் அனைத்தையும் இப்போது சொல்லிவிட்டோம். இதைக் கேட்ட நீ, ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, என்ன நடக்க வேண்டும் என்று உத்தரவிடுவாயாக" என்றனர் {அமைச்சர்கள்}.

சௌதி தொடர்ந்தார், "மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் மிகுந்த துயர் கொண்டு அழத் துவங்கினான். அந்த ஏகாதிபதி தனது கைகளைப் பிசைந்தான். அந்தத் தாமரைக் கண் கொண்ட மன்னன் {ஜனமேஜயன்} பெரும் சூடானதும், நீண்டதுமாக மூச்சுவிட்டு, கண்களில் நீர்ச் சிந்தி, சத்தம்போட்டுக் கதறினான். மிகுந்த துக்கம் கொண்டு, சாரை சாரையாகக் கண்ணீர் சிந்தி, நீரைத் தொட்ட அந்த ஏகாதிபதி பேசினான். அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, மனதில் ஏதோ திட்டம் போடுபவனைப் போலச் சிறிது சிந்தித்து விட்டு தனது அமைச்சர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான்.

"எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} விண்ணேகுதலை உங்கள் மூலம் அறிந்தேன். என் உறுதியான முடிவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது தந்தையை {பரீக்ஷித்தைக்} கொன்ற தீயவனான தக்ஷகனைப் பழிவாங்குவதில் நேரத்தை விரையமாக்கக்கூடாது என்று எண்ணுகிறேன். எனது தந்தையை அவன் எரித்து, சிருங்கியை வெறும் இரண்டாவது காரணமாக்கினான் ஆழ்ந்த வெறுப்பாலேயே அவன் {தஷகன்} கசியபரைத் திரும்பிப் போகச் செய்தான். அந்த அந்தணர் {கசியபர்} வந்திருந்தால் எனது தந்தை {பரீக்ஷித்} நிச்சயம் பிழைத்திருப்பார். கசியபரின் கருணையாலும், அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாலும் எனது தந்தை பிழைத்திருந்தால் அவன் எதை இழந்திருப்பான்?

எனது கோபத்தின் விளைவுகளைப் பற்றிய அறியாமையால், எனது தந்தையை உயிர்ப்பிக்கும் ஆவலுடன் வந்த, அந்த அந்தணர்களில் சிறந்த கசியபரைத் தோற்கடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தினான். மன்னனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று அந்த அந்தணருக்குச் செல்வத்தைக் கொடுத்த அந்தப் பாவியான தக்ஷகனின் பகைச்செயல் மிகப்பெரிது. என்னையும், உதங்க முனிவரையும், உங்கள் எல்லோரையும் மனநிறைவுப்படுத்த, எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} எதிரியை நானே இப்போது பழிக்குப்பழி வாங்கப் போகிறேன்" என்றான் {ஜனமேஜயன்}" {என்றார் சௌதி}.

ஆங்கிலத்தில் | In English

புதன், மார்ச் 06, 2013

ஜனமேஜயனும் வபுஷ்டமையும்! | ஆதிபர்வம் - பகுதி 44

Janamejaya and Vapushtama! | Adi Parva - Section 44 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 32)

பதிவின் சுருக்கம் : பரிக்ஷித் இறந்ததும் பாலகன் ஜனமேஜயன் மன்னனானது; காசி மன்னன் சுவர்ணவர்மனின் மகள் வபுஷ்டமையை மணந்த ஜனமேஜயன்; இன்புற்றிருந்த ஜனமேஜயன்...

சௌதி சொன்னார், "தக்ஷகனின் சுருளுக்குள் அகப்பட்டுக் கிடந்த மன்னனைப் {பரிக்ஷித்தைப்} பார்த்த சபை உறுப்பினர்கள் பயத்தினால் வெளிறி போய்த் துயரம் கொண்டு அழுதனர். தக்ஷகனின் முழக்கத்தைக் கேட்ட அனைத்து அமைச்சர்களும் தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடியபோது, அந்தப் பாம்புகளில் அற்புதமானவனும், பாம்புகளின் அரசனுமான தக்ஷகன், தாமரையின் நிறத்தினால் ஆன கோடு போல நீல வானத்திலே செல்வது, ஒரு பெண்ணின் தலை உச்சியிலே சிவந்த நிறமுள்ள கோடானது அவள் அடர்ந்த கூந்தலின் நடுவே வகிர்ந்து செல்வதைப் போலக் கண்டனர்.


மன்னன் {பரிக்ஷித்} வாழ்ந்த வந்த அந்த மாளிகை தக்ஷகனின் விஷத்தால் பற்றி எரிந்தது. இதையெல்லாம் கண்ட மன்னனின் சபை உறுப்பினர்கள் எல்லாத் திக்குகளுக்கும் பறந்து சென்றனர். மன்னனோ {பரிக்ஷித்} இடியால் தாக்குண்டவன் போல் கீழே விழுந்தான்.

தக்ஷகனின் விஷத்தால் கீழே வீழ்த்தப்பட்ட மன்னனுக்கு {பரிக்ஷித்துக்கு}, அவனது சபை உறுப்பினர்களும், அந்தணரான அரச புரோகிதரும் சேர்ந்து அவனது இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்தனர். குடிமக்கள் அனைவரும் சேர்ந்து. இன்னும் வயதுக்கு வராதவனும், இறந்து போன தங்கள் ஏகாதிபதியின் மகனுமான சிறுவனைத் தங்கள் மன்னனாக்கினர். அம்மக்கள் குரு பரம்பரை நாயகனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான அந்தப் புது மன்னனை ஜனமேஜயன் என்று அழைத்தனர். அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஜனமேஜயன் சிறுவனாக இருந்தாலும், எண்ணத்தில் விவேகமுள்ளவனாக இருந்தான்.

குரு {கௌரவ} பரம்பரையினரில் காளையான பரிக்ஷித்தின் மூத்த மகன், தனது அமைச்சர்கள் மற்றும் புரோகிதரோடு அந்த நாட்டைத் தனது முப்பாட்டன் (யுதிஷ்டிரன்) போல் சிறப்பாக ஆண்டான். அந்த இளம் ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} அமைச்சர்கள், அவன் தற்போது எதிரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை வாய்ந்தவனாக ஆகிவிட்டதைக் கண்டு {தகுந்த வயதடைந்ததைக் கண்டு}, காசி மன்னன் சுவர்ணவர்மனிடம், அவனது மகள் வபுஷ்டமையைத் தங்கள் மன்னனுக்கு மணமகளாகக் கேட்டனர்.

காசிமன்னன் {சுவர்ணவர்மன்}, தகுந்த விசாரணைகளுக்குப் பிறகு, தனது மகள் வபுஷ்டமையை முறையான சடங்குகளுடன், குரு பரம்பரையின் பலம்வாய்ந்த நாயகனுக்கு {ஜனமேஜயனுக்கு} மணமுடித்துக் கொடுத்தான். மன்னன் மணவாட்டியைப் பெற்று பெரு மகிழ்ச்சியோடு இருந்தான். அவன் {ஜனமேஜயன்} எந்நேரத்திலும் வேறு எந்தப் பெண்ணுக்கும் தனது இதயத்தைக் கொடுக்காமல் இருந்தான். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, நிறைந்த இதயத்துடன், இன்பத்தை விரும்பி, நீர்நிலைகளிலும், கானகங்களிலும், மலர்ச்சோலைகளிலும் திரிந்து கொண்டிருந்தான்.

பழங்காலத்தில் தேவலோக மங்கை ஊர்வசியை அடைந்த புரூரவஸ் எப்படி மகிழ்ச்சியாக இருந்தானோ அப்படி இந்த முதன்மையான ஏகாதிபதியும் காலத்தைக் கழித்தான். அழகுக்காகப் போற்றப்பட்டவளும், அழகானவர்களிலேயே அழகானவளுமான அந்த மங்கை வபுஷ்டமையும், தான் விரும்பியவாறு கணவன் கிடைத்தான் என்றெண்ணி, அவன் தன்னோடு இன்பமாக இருந்தபோதெல்லாம், அர்ப்பணிப்புடனும், மிகுந்த பாசத்துடனும் தனது கணவனை {ஜனமேஜனை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்" {என்றார் சௌதி}.


ஆங்கிலத்தில் | In English

செவ்வாய், மார்ச் 05, 2013

பரிக்ஷித்தைக் கொன்றான் தக்ஷகன்! | ஆதிபர்வம் - பகுதி 43

Takshaka Killed Parikshit! | Adi Parva - Section 43 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 31)

பதிவின் சுருக்கம் : தன் திறனை தக்ஷகனுக்கு நிரூபித்துக் காட்டிய கசியபர்; கசியபரிடம் சமாதானம் பேசிய தக்ஷகன்; புழுவாகிக் கனியில் இருந்த தக்ஷகன்; பரிக்ஷித் கொல்லப்பட்டான்...

சௌதி சொன்னார், "அதன் பிறகு தக்ஷகன் {பாம்பு மன்னன்}, என்னால் கடிபட்ட எந்த உயிரையும் உம்மால் குணப்படுத்த முடியும் என்றால், ஓ கசியபரே என்னால் கடிக்கப்படும் இந்த மரத்திற்கு உயிரைத் தாரும். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கசியபரே}, இந்த ஆலமரத்தை உங்கள் பார்வை முன்பே {விஷத்தினால்} எரிக்கிறேன். உங்களால் முடிந்ததைச் செய்து, நீங்கள் சொன்னது போல உங்கள் மந்திரங்களின் திறமையை எனக்குக் காட்டும்" என்றான் {தக்ஷகன்}.

கசியபர், " அப்படி நீ நினைத்தாயானால் ஓ பாம்புகளின் மன்னா {தக்ஷகா}, இந்த மரத்தைக் கடி. உன்னால் கடிபட்டாலும், ஓ பாம்பே, அதை நான் காப்பாற்றுவேன்" என்றார்.

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்}, சிறப்புமிக்கக் கசியபர் இப்படிச் சொன்னவுடன், அந்த ஆலமரத்தைக் கடித்தான். அந்தச் சிறப்புமிக்கப் பாம்பால் கடிக்கப்பட்ட அந்த மரமானது, பாம்பின் விஷம் ஊடுருவி எல்லாப்புறமும் பற்றி எரிந்தது


ஆலமரத்தை அப்படி எரித்ததும் அந்தப் பாம்பு {தக்ஷகன்}, கசியபரிடம், "ஓ அந்தணர்களில் முதன்மையானவரே, உம்மால் ஆனதை முயற்சித்து, இந்தக் கானகத்தின் மன்னனை {ஆலமரத்தை} காப்பாற்றும்" என்றான்.

சௌதி தொடர்ந்தார், "பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்} ஏற்றிய விஷத்தால் {அந்த} மரம் {ஆலமரம்} சாம்பலாகியிருந்தது. அந்தச் சாம்பலை எடுத்த கசியபர், "ஓ பாம்புகளின் மன்னா, இந்தக் கானகத்தின் மன்னன் மீது என் வித்தையின் பலத்தை நான் பிரயோகிப்பதை பார். ஓ பாம்பே {தக்ஷகனே}, உனது மூக்கின் அருகிலேயே {உன் முன்னாலேயே} நான் அவனுக்கு உயிர் தருகிறேன்" என்றார். பிறகு அந்தணர்களில் சிறந்தவரும், சிறப்புமிக்கவரும், நன்கு கற்றவருமான அந்தக் கசியபர் சாம்பல் குவியலாக்கப்பட்ட அந்த மரத்திற்குத் தன் வித்தையினால் உயிரூட்டினார். முதலில் மொட்டு ஒன்றை உருவாக்கினார். அதன் பிறகு, அதைச்சுற்றி இலைகள் இரண்டை உருவாக்கினார். அதன்பிறகு, மரத்தின்தண்டையும், அதன் கிளைகளையும், பிறகு இலைகளுடன் கூடிய முழுவதும் வளர்ந்த மரத்தையே உருவாக்கினார்.

சிறப்புமிக்கக் கசியபரால் புத்துயிர் பெற்ற மரத்தைக் கண்ட தக்ஷகன், அவரிடம் {கசியபரிடம்} "எனது விஷத்தையோ அல்லது என்னைப் போன்ற இன்னொருவரின் விஷத்தையோ நீர் முறிப்பது ஆச்சரியமன்று. ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எந்தச் செல்வத்தை விரும்பி நீர் அங்குச் செல்கிறீர்? அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனிடம் {பரிக்ஷித்திடம்} என்ன பரிசு கிடைக்கும் என்று நீர் நம்புகிறீரோ, அதை அடைவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும், நானே அதைத் தருகிறேன். புகழால் அலங்கரிக்கப்பட்டவரே, அந்தணரின் {சிருங்கி} சாபத்தால் பாதிக்கப்பட்டவனும், வாழ்நாள் குறுகியவனுமான மன்னனிடம் {பரிக்ஷித்திடம்} தங்கள் வெற்றிச் சந்தேகத்திற்கிடமானதே. அப்படி ஆகி விட்டால், மூவுலகிலும் பரவியிருக்கும் தங்கள் ஒளி வீசும் புகழானது (கிரகணத்தின் போது) ஒளியை இழக்கும் சூரியனைப் போல மறைந்துவிடும்.

அதற்குக் கசியபர், "பொருட்செல்வத்திற்காகவே நான் அங்குச் செல்கிறேன். அதை நீ எனக்குக் கொடுப்பாயாக. ஓ பாம்பே, உனது தங்கத்தை எடுத்துக் கொண்டு, நான் வந்த வழியே திரும்புகிறேன்" என்றார். தக்ஷகன், "ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவரே, நீர் அந்த மன்னனிடம் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே தருகிறேன். அதனால் நீர் அங்கே செல்லாதீர்" என்றான் {பாம்பு மன்னன் தக்ஷகன்}.

சௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்ட பெரும் சக்தியும் அறிவும் கொண்ட, அந்த அந்தணர்களில் சிறந்தவரான கசியபர் அம்மன்னனை {பரிக்ஷித்தை} நினைத்துத் தியானத்தில் அமர்ந்தார். அந்த முனிவர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், ஆன்மிக ஞானத்தைக் கொடையாகக் கொண்டவருமான கசியபர் பாண்டவ குலத்தில் வந்த மன்னனின் {பரிக்ஷித்தின்} வாழ்நாள் உண்மையிலேயே தீர்ந்ததைக் கண்டு தக்ஷகனிடம் தான் விரும்பிய அளவிற்குச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனார்.

அப்படி வந்த வழியே சிறப்புமிக்கக் கசியபர் சென்றதும், சரியான நேரத்தில் தக்ஷகன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான். வழியிலேயே, மன்னன் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்வதாகவும், விஷமுறிவுக்கான மந்திரங்களாலும் மருந்துங்களாலும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தான் {தக்ஷகன்}.

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு {தக்ஷகன்}, "அந்த ஏகாதிபதி {பரிக்ஷித்} எனது மாயையால் ஏமாற்றப்பட வேண்டும். ஆனால் அதற்கு என்ன வழி?" என்று சிந்தித்தான். பிறகு தக்ஷகன் சில பாம்புகளைத் துறவிகள் போல வேடம்பூணச் செய்து, பழங்கள், தர்ப்பைப் புற்கள், தண்ணீர் ஆகியவற்றோடு அனுப்பினான். பின் தக்ஷகன் அவர்களிடம், ‘அவசர வேலையிருப்பதாகக் காட்டிக்கொண்டு, பொறுமையின்மைக்கான எந்த அடையாளத்தையும் காட்டிக் கொள்ளாமல், அரசனிடம் {பரிக்ஷித்திடம்} சென்று (நீங்கள் அவனுக்குப் பரிசாக எடுத்துச் செல்லும்) பழங்களையும், பூக்களையும், தண்ணீரையும் அந்த ஏகாதிபதி {பரிக்ஷித்} ஏற்குமாறு மட்டும் செய்யுங்கள்’ என்றான்.

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்புகளும், தக்ஷகன் உத்தரவிட்டவாறே நடந்து கொண்டன. அவை தர்ப்பைப் புல்லையும், நீரையும், பழங்களையும் கொண்டு சென்றன.

பெரும் சக்தி கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவன் {பரிக்ஷித்} அந்தக் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டான். அவர்கள் {வந்தவர்களின்} வேலை முடிந்தவுடன், "சென்று வாருங்கள்" என்று சொன்னான். துறவிகளைப் போல வேடம்பூண்டு வந்த பாம்புகள் சென்றவுடன், மன்னன் {பரிக்ஷித்} தனது அமைச்சர்களிடமும், நண்பர்களிடமும், "அந்தத் துறவிகள் கொண்டு வந்த, இந்த அருஞ்சுவை கொண்ட பழங்களை என்னுடன் உண்ணுங்கள்" என்றான். விதியின் உந்துதலாலும், முனிவரின் {சிருங்கியின்} வார்த்தைகளாலும், மன்னன் {பரிக்ஷித்} தனது அமைச்சர்களுடன் அந்தப் பழங்களை உண்ண விரும்பினான். தக்ஷகன் புகுந்திருந்த, அந்தக் குறிப்பிட்ட பழத்தை மன்னனே {பரிக்ஷித்தே} சாப்பிட எடுத்தான்.

அப்படி அவன் எடுத்து உண்ணும்போது, ஓ சௌனகரே, அதன் உள்ளிருந்து கண்கள் கருப்பாகவும், செம்பு நிற உடலுடனும், புரிந்துகொள்ள முடியாத உருவத்துடனும், ஓர் அருவருக்கத்தக்க புழு வெளியே வந்தது. அந்த மன்னர்களில் முதன்மையானவன் அதை எடுத்துத் தனது சபை உறுப்பினர்களிடம், "கதிரவன் மறைகிறான். விஷத்தால் எனக்கு இனிமேல் கண்ணீரில்லை. அதனால், எனது பாவகாரியத்திற்குப் பரிகாரமாகவும், அத்துறவியின் {சிருங்கின்} வார்த்தைகள் உண்மையாகவும், இந்தப் புழுவே தக்ஷகனாக மாறி என்னைக் கடிக்கட்டும்" என்றான்.

அச்சபை உறுப்பினர்களும், விதியால் உந்தப்பட்டு, அவனது பேச்சை அங்கீகரித்தனர். பிறகு அந்த ஏகாதிபதி {பரிக்ஷித்}, தனது நேரம் வந்ததும், உடனே உணர்வை இழந்து புன்னகையுடன், அந்தப் புழுவை எடுத்துத் தனது கழுத்தில் விட்டுக்கொண்டான். அவன் அப்படிப் புன்னகைத்துக் கொண்டிருக்கும்போதே, மன்னனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து வெளியே வந்த (புழுவின் உருவத்தில் இருந்த) தக்ஷகன், அந்த ஏகாதிபதியின் {பரிக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்டான். விரைவாக மன்னனின் {பரிக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்புகளின் மன்னன் தக்ஷகன் பேரொலியுடன் முழங்கியவாறு, புவியைக் காப்பவனைக் கடித்தான்" {என்றார் சௌதி}.


ஆங்கிலத்தில் | In English

ஞாயிறு, மார்ச் 03, 2013

பரிக்ஷித்துக்கு செய்தி வந்தது! | ஆதிபர்வம் - பகுதி 42

The message reached Parikshit! | Adi Parva - Section 42 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 30)

பதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரிக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...

சௌதி சொன்னார், "அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "ஓ தந்தையே, நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}. ஓ தந்தையே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை" என்றான் {சிருங்கி}.


சமீகர், "ஓ குழந்தாய் {சிருங்கினே}, நீ பெரும் ஆற்றலுடையவன் என்பதும், உண்மை பேசுபவன் என்பதும் எனக்குத் தெரியும். இதற்கு முன்பு நீ பொய் சொன்னதில்லை, ஆகையால் உனது சாபமும் பொய்க்காது. ஒரு மகன் தகுந்த வயதை அடைந்தாலும், அவன் தந்தையால் அறிவுறுத்தப்பட்டால்தான் நற்குணங்களை அடைந்து புகழையும் அடையமுடியும். நீ குழந்தையாதலால் உனக்கு எவ்வளவு ஆலோசனைகள் தேவைப்படும்?

நீ எப்போதும் ஆன்மிகத் தவங்கள் செய்துகொண்டு இருக்கிறாய். அறுகுணங்கள் கொண்ட சிறப்புமிக்கவர்கள் கூட, கோபவசப்பட்டால் அந்தக் கோபம் பெருகிக் கொண்டே தான் இருக்கும். ஓ விதிகளைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவனே, நீ எனது மகனாக இருப்பதாலும், சிறுவனாக இருப்பதாலும், உன் அவசரத்தை நான் கண்டதாலும், நான் உனக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஓ மகனே {சிருங்கியே}, காட்டிலுள்ள பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே உண்டு அமைதியுடன் வாழ்ந்து வருவாயாக. உனது இந்தக் கோபத்தைக் கொன்றுவிடு, உனது தவச் செயல்களின் நற்பலன்களை இப்படிக் கெடுத்துக் கொள்ளாதே. கோபமானது, பெரும் வலிகளை {கடினமான விரதங்களை} அனுபவித்துத் தவசிகள் அடையும் அறங்களை {தர்மங்கள்} நிச்சயமாக அழித்து விடுகிறது. பிறகு அறமிழந்தவர்களான அவர்களுக்கு அருள் நிலை இருக்காது.

மன்னிக்கும் தன்மையுள்ள துறவிகளுக்கு, அமைதி எப்போதும் வெற்றியைத் தந்திருக்கிறது. ஆகவே, மன்னிக்கும் குணம் கொண்டவனாக, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, வாழக் கற்றுக் கொள்வாயாக. மன்னிக்கும் தன்மையினால், பிரம்மனாலும் எட்ட முடியாத உலகங்களை நீ அடைவாய். நான் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும், என்னால் முடிந்த அளவு நன்மையைச் செய்ய வேண்டும் என்பதாலும், இதில் ஏதாவது செய்ய வேண்டும். மன்னனிடம் {பரிக்ஷித்திடம்}, 'ஓ ஏகாதிபதி, என்னை நீ அவமதித்ததால், அறிவு முதிர்வுறாத எனது இளவயது மகன் கோபம் கொண்டு உன்னைச் சபித்திருக்கிறான்', என்று செய்தியனுப்ப வேண்டும்" என்றார் {சமீகர்}.

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பெரு முனிவர் {சமீகர்}, பெரும் நோன்புகளை நோற்பவர், கருணையால் உந்தப்பட்டுச் சரியான உத்தரவுகள் கொடுத்து, மன்னன் பரிக்ஷித்திடம் தனது சீடனை அனுப்பினார். முதலில் மன்னனின் {பரிக்ஷித்தின்} நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு உண்மையான செய்தியைக் கூறுமாறு அறிவுறுத்தி, ஆன்மிகத் தவங்களில் ஈடுபட்டவனும், நன்னடத்தையுள்ளவனுமான கௌர்முகன் என்ற தனது சீடனை அனுப்பினார். அந்தச் சீடனும் விரைவில் குரு {கௌரவ} குலத்தின் தலைவனான அந்த ஏகாதிபதியை {பரிக்ஷித்தை} அடைந்தான். வாயில்காப்போன் மூலம் தன் வரவைத் தெரிவிக்குமாறு முதலில் சொல்லிவிட்டு, {பிறகு} மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.

அந்த இருபிறப்பாளனான {அந்தணனான} கௌர்முகன் அந்த ஏகாதிபதியால் {பரிக்ஷித்தால்} தகுந்த முறையில் வழிபடப்பட்டான். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மன்னனிடம் {பரிக்ஷித்திடம்}, அவனது அமைச்சர்கள் முன்னிலையில், தனக்கு அறிவுறுத்தியிருந்தபடி அந்தச் சமீகரின் கொடூரமான வார்த்தைகளை முழுமையாகச் சொன்னான்.

கௌர்முகன், "ஓ மன்னர்களுக்கு மன்னா, அற ஆன்மா கொண்ட, உணர்ச்சிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அமைதி நிறைந்த, கடினமான ஆன்மிக வழிபாடுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சமீகர் என்ற பெயர் கொண்ட, ஒரு முனிவர் உனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓ மனிதர்களில் புலியே, அவர் {சமீகர்} பேசா நோன்பிருக்கும்போது அவரது தோளில் உனது வில்லின் நுனியால் செத்த பாம்பைக் கிடத்தினாய். அவரே {சமீகரே} உன்னை மன்னித்துவிட்டார். ஆனால் அவரது மகனால் {சிருங்கியால்} அது முடியவில்லை.

ஓ மன்னர்களின் மன்னா {பரிக்ஷித்}, பின்னவனால் {சிருங்கியால்} அவன் தந்தைக்குத் தெரியாமல், இப்போதிலிருந்து ஏழு இரவுகளுக்குள் தக்ஷகன் (என்னும் பாம்பு) உன் மரணத்தை ஏற்படுத்தும் என்று சபிக்கப்பட்டிருக்கிறாய். சமீகர் உன்னைக் காப்பாற்றத் தனது மகனிடம் {சிருங்கியிடம்} மீண்டும் மீண்டும் வேண்டினார். ஆனால் அவரது மகனுடைய சாபத்தைப் பொய்யாக்க யாரும் இல்லை [1]. தனது மகனின் {சிருங்கியின்} கோபத்தை அமைதிப்படுத்தத் அவரால் இயலாத காரணத்தால் [2], ஓ மன்னா, உனது நன்மைக்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்றான் {பேசா நோன்பிருந்த முனிவர் சமீகரின் சீடன் கௌர்முகன்}.

[1] மதிப்பும் மற்றும் தரத்தில் உயர்ந்தவரால் ஒருவருடைய சாபத்திலிருந்து விலக்கு அளிக்கமுடியும் அல்லது பலனை குறைக்க மடியும். உதா. கத்ருவின் சாபத்தைப் பிரம்மா மாற்றியமைத்தது. அதுபோலச் சிருங்கியின் சாபத்தை மாற்ற அப்போது யாரும் இல்லை.

[2] சிருங்கி கோபத்தை விட்டால் அவனாலேயே சாபத்தை மாற்றமுடியும். அவன் கோபத்தைத் தணித்துக் கொள்ள முடியாததால் சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. உதா. பௌஷ்யனால் உதங்கருக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.

குரு பரம்பரையில் உதித்தவனும், ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபடுபவனுமான அந்த மன்னன் {பரிக்ஷித்}, இந்தக் கொடூர வார்த்தைகளைக் கேட்டுத் தனது பாவகரமான காரியத்தை நினைவுகூர்ந்து, மிகவும் வருந்தினான். அந்த முனிவர்களிலே முதன்மையானவர் {சமீகர்} பேசா நோன்பு நோற்றிருந்தார் என்பதை அறிந்ததும் இருமடங்கு துயருற்று, அந்த முனிவர் சமீகரின் கருணையையும், தனது பாவகரக் காரியத்தையும் நினைத்துப் பார்த்து மிகவும் வருந்தினான். ஒரு தேவனைப் போன்று காட்சியளித்த அந்த மன்னன், முனிவருக்கு {சமீகருக்கு} இழைக்கப்பட்ட செயலை எண்ணி வருத்தப்பட்ட அளவிற்குக் கூடத் தன் மரணச் செய்திக்காக வருந்தவில்லை.

அதன்பிறகு, "அந்த வழிபடத்தகுந்தவர் {சமீகர்} என்னிடம் கருணையோடு இருக்கட்டும்" என்று சொல்லி கௌர்முகனை மன்னன் {பரிக்ஷித்} அனுப்பி வைத்தான். அவன் {கௌர்முகன்} சென்றவுடன், ஆழ்ந்த கவலையுடன் இருந்த மன்னன் {பரிக்ஷித்}, சிறிதும் நேரத்தை வீணாக்காமல் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினான். ஆலோசனைகளில் சிறந்தவனான அந்த மன்னன் {பரிக்ஷித்} அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஒரே தூணில் ஒரு மாளிகையை எழுப்பச் செய்தான். அஃது {அம்மாளிகை} இரவும் பகலும் நன்கு காக்கப்பட்டது.

மருத்துவர்களும், மருந்துகளும், மந்திரங்களில் திறமை மிகுந்த அந்தணர்களும் அந்த மாளிகையில் நிறைய இருந்தனர். எல்லாப் புறங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {பரிக்ஷித்}, தனது கடமைகளை அறம் மிகுந்த அமைச்சர்கள் புடைசூழ அங்கிருந்தே நிறைவேற்றினான். எவரும் அங்கிருக்கும் மன்னனை நெருங்க முடியவில்லை. காற்று கூடப் புகமுடியாதபடி அந்த இடம் பாதுகாக்கப்பட்டது.

ஏழாவது நாள் வந்தபோது, அந்தணர்களில் சிறந்தவரும், பெரும் கல்வி கற்றவருமான கசியபர் [3] (பாம்பு கடித்தபின்) மன்னனைக் குணப்படுத்த விரும்பி (மன்னனின் இருப்பிடம் நோக்கி) வந்துகொண்டிருந்தார். அவர் நடந்தனவற்றை எல்லாம் கேள்விப்பட்டிருந்தார். பாம்புகளில் முதன்மையான தக்ஷகனால் அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பரிக்ஷித்} எமனுலகு அனுப்பப்படுவான் என்பதை அறிந்திருந்தார். ‘அந்த முதன்மையான பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட பிறகு, அந்த ஏகாதிபதியை {பரிக்ஷித்தை} குணப்படுத்த வேண்டும். அதனால், எனக்குச் செல்வமும் கிடைக்கும், நற்பேறும் கிடைக்கும்’ என்று எண்ணினார்.

[3] இந்த அந்தண கசியபரும், கருடனின் தந்தையான முனிவர் கசியபரும் வேறு வேறானவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆதிபர்வம் பகுதி 20ல் கருடனின் தந்தையான கசியபருக்கு விஷமுறிவு ஞானத்தைப் பிரம்மன் அருளியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இருப்பினும் இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள கால வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டால் இரண்டு கசியபர்களும் வேறு வேறு என்ற தீர்வையே நாம் எட்ட வேண்டியிருக்கும்.

ஆனால், மன்னனைக் குணப்படுத்த இதயத்தில் எண்ணியிருந்த கசியபர், தனது வழியில் நெருங்கி வருவதை முதிர்ந்த அந்தணரின் உருவில் இருந்த அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் கண்டான். அந்தப் பாம்புகளின் இளவரசன் {தக்ஷகன்}, அந்த முனிவர்களில் காளையிடம் {கசியபரிடம்}, "இவ்வளவு வேகமாக எங்குச் செல்கிறீர்? இப்படி நீங்கள் செல்வதன் நோக்கம் என்ன?" என்று கேட்டான் {முதிர்ந்த அந்தணரின் உருவில் இருந்த பாம்பான தக்ஷகன்}.

இப்படிக் கேட்கப்பட்ட கசியபர், "குரு பரம்பரையில் வந்தவனும், எல்லா எதிரிகளையும் ஒடுக்குபவனுமான, மன்னன் பரிக்ஷித்தை, இன்று தக்ஷகன் தனது விஷத்தால் எரிக்கப் போகிறான். ஓ மனதிற்கினியவரே, அக்னியைப் போன்ற சக்தி படைத்த தக்ஷகன் அவரைக் கடித்த பிறகு, பாண்டவப் பரம்பரையில் வரும் ஒரே பிரதிநிதியான அந்த அளவற்ற வீரமிக்க மன்னனை {பரிக்ஷித்தை} குணப்படுத்தவே நேரத்தை வீணடிக்காமல் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறேன்" என்று மறுமொழி சொன்னார். அதற்குத் தக்ஷகன், "நான்தான் தக்ஷகன், ஓ அந்தணரே {கசியபரே}, நானே அந்தப் பூமியின் தலைவனை {பரிக்ஷித்தை} எரிக்கப் போகிறேன். நில்லும், என்னால் கடிபட்டவனை உம்மால் குணப்படுத்த முடியாது" என்றான். கசியபர், "எனது கல்வியின் ஆற்றலால், அங்குச் சென்று உன்னால் கடிபட்ட ஏகாதிபதியைக் {பரிக்ஷித்தைக்} குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார் {கசியபர்}" {என்றார் சௌதி}.


ஆங்கிலத்தில் | In English

திங்கள், ஜனவரி 07, 2013

பௌசியனும் உதங்கரும்! | ஆதிபர்வம் - பகுதி 3 ஆ

Paushya and Utanka! | Adi Parva - Section 3b | Mahabharata In Tamil

(பௌசிய பர்வம்)

பதிவின் சுருக்கம் : வேதாவின் கதை; உதங்கரின் குருகுல வாசம்; வேதாவின் மனைவி உதங்கரிடம் கேட்ட குரு தட்சணை; பௌசியன் மனைவியிடம் உதங்கர் பெற்ற காதணி; உதங்கரும், பௌசியனும் மாறி மாறி அளித்த சாபங்கள்...

அதன்பிறகு அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனான வேதா {பைதன்} என்று அழைக்கப்பட்டவனை, அவனது குரு {அயோதா தௌம்யர்} அழைத்து  "வேதா, எனது மகனே, எனது இல்லத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து எனக்குச் சேவை செய்வாயாக. அஃது உனக்கு ஆதாயத்தைத் தரும்" என்றார். வேதாவும் அவரது {அயோதா தௌம்யரின்} இல்லத்திலேயே தங்கி எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தான். அந்த வீட்டிற்காக வெயில், குளிர், பசி, தாகம் என அனைத்தையும் முணுமுணுப்பின்றித் தாங்கி, ஓர் எருதைப் போல உழைத்தான். குருவும் {அயோதா தௌம்யரும்} மனநிறைவு கொண்டார். வேதா நற்பேறும் உலக ஞானத்தையும் அடைந்தான். இதுவே வேதாவின் சோதனை.

"வேதா, தனது குருவிடம் அனுமதி பெற்று, தனது கல்வியெல்லாம் முடித்து அங்கிருந்து விடைபெற்று, இல்லற தர்மத்தை ஏற்று வாழ்க்கை நடத்தினான். அவனது {வேதாவின்} வீட்டில் அவனுக்கு மூன்று சீடர்கள் இருந்தனர். தானே குருவின் வீட்டில் அதிகக் கஷ்டப்பட்டு வந்ததால் அவர்களுக்கு எந்தக் கடுமையான வேலையும் கொடுக்காமல் பார்த்து வந்தான் {வேதா}.

சில காலத்திற்குப் பிறகு, இரு க்ஷத்திரியர்களான ஜனமேஜயனும் பௌஸ்யனும், வேதாவைக் குருவாக ஏற்றனர். ஒருநாள் வேதா, வேள்வி நடத்த வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், தனது சீடர்களில் ஒருவனான உதங்கனை வீட்டைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்க வைத்துவிட்டு "என்னவெல்லாம் வீட்டில் நடக்க வேண்டுமோ அதுவெல்லாம் உன் கவனத்தின் பேரில் நடக்கட்டும்" என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

"உதங்கனும் எப்போதும் கவனத்துடன் அலுவல்களைக் கவனித்து வந்தான். அப்படி உதங்கன் அனைத்தையும் கவனித்து வரும்போது, அந்த இல்லத்தில் இருந்த பெண்கள் கூடி வந்து "ஓ உதங்கா, உனது எஜமானி புத்திரப்பேறுக்கான சரியான காலத்தில் {ருது ஸ்நானம் செய்து} இருக்கிறாள். உனது குருவும் {வேதாவும்} இல்லை. ஆகையால், நீ குருவின் இடத்தில் இருந்து தேவையானதைச் செய்வாயாக" என்றனர். அதற்கு உதங்கன் "பெண்களின் உத்தரவின் பேரில் நான் அப்படிச் செய்வது சரியாகாது. சரியற்றதைச் செய்ய நான் எனது குருவால் உத்தரவிடப்படவில்லை" என்றான்.

குரு {வேதா} தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். நடந்தது அத்தனையும் அறிந்தார். உதங்கனைக் குறித்து மிகுந்த மனநிறைவு கொண்டு, "உதங்கா, எனது மகனே, உனக்கு என்ன உதவியை நான் அளிப்பது? உன்னால் நான் நன்றாகச் சேவிக்கப்பட்டேன். அதனால் நமது நட்பு பெருகிற்று. அதனால் நான் உன்னை விடுவிக்கிறேன். உனது ஆசைகளனைத்தும் நிறைவடையட்டும்" என்றார்.

குருவால் {குரு வேதாவால்} இப்படி விடுவிக்கப்பட்ட உதங்கன், "நீங்கள் விரும்பியதை நான் செய்ய எனக்கு உத்தரவு கொடுங்கள். 'பயன்பாட்டுக்கு {வழக்கத்துக்கு} முரணாகக் கல்வியை அளிப்பவன் எவனோ, பயன்பாட்டுக்கு முரணாக அதைப் பெறுபவன் எவனோ, அந்த இருவரில் ஒருவர் இறப்பர். அல்லது இருவருக்குள்ளும் பகை ஏற்படும்' என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், உங்கள் விடுவிப்பு எனக்குக் கிடைத்தாலும், குருவுக்கான காணிக்கையாக உங்களுக்கு நான் ஏதாவது செய்து விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என்றான்.

அவனது குரு {வேதா} இதைக்கேட்டு, "உதங்கா, எனது மகனே, சிறிது நேரம் பொறுத்திரு" என்றார். சிறிது காலம் கழித்து, உதங்கன் மறுபடியும், "உங்களுக்கு விருப்பமானதை என்னிடம் காணிக்கையாகக் கேளுங்கள்" என்றான். அதற்குக் குரு {வேதா}, "எனதன்பு உதங்கா, நீ பெற்ற கல்விக்கான காணிக்கையாக ஏதாவது பெறும்படி நீ அடிக்கடிக் கூறிக் கொண்டிருக்கிறாய். ஆகையால், உள்ளே சென்று உனது எஜமானியிடம் என்ன வேண்டுமென்று கேள். அவள் கேட்பதைக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடு" என்றார்.

உதங்கன் தனது குருவின் {வேதாவின்} மனைவியிடம் சென்று, "அம்மா, குரு என்னை வீட்டுக்குச் செல்ல அனுமதித்துவிட்டார். நான் கற்ற கல்விக்கு ஏதாவது காணிக்கை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிச்செய்தால் நான் இங்கிருந்து கடனளாகியாகப் போக வேண்டியதில்லை. நான் என்ன கொண்டு வரவேண்டும் என எனக்கு உத்தரவிடுங்கள்" என்றான்.

இப்படிக் கேட்கப்பட்ட குருவின் {வேதாவின்} மனைவி, "மன்னன் பௌசியனிடம் சென்று, ராணியின் ஒரு ஜோடி கம்மலை பிச்சையாகக் கேட்டு, அதை இங்குக் கொண்டு வா. இன்றிலிருந்து நான்காவது நாள் புனிதமான நாளாகும். அன்று விருந்திற்கு வரும் அந்தணர்கள் முன்னிலையில் அந்தக் குண்டலங்களுடன் காட்சியளிக்க விரும்புகிறேன். இதையும் கவனத்தில் கொள் உதங்கா, நீ இதில் வெற்றிக் கொண்டால் நற்பேறு உன்னைத் தேடி வரும். தோல்வியுற்றால் என்ன நன்மை கிடைக்கும் என்று நீ எதிர்பார்ப்பாய்?" என்றாள்.

இப்படி உத்தரவிடப்பட்ட உதங்கன், அங்கிருந்து கிளம்பினான். அப்படியே வீதியோரமாக நடந்து செல்கையில் இயல்புக்குமிக்கப் பெரிய தோற்றத்தில் ஒரு காளையும், அதன்மீது அசாதாரண உடலமைப்பு பெற்ற மனிதன் அமர்ந்திருப்பதையும் பார்த்தான். அந்த மனிதன் உதங்கனைப் பார்த்து "இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக" என்றான். உதங்கன் உடன்பட விரும்பவில்லை.

அந்த மனிதன் மறுபடியும், "ஓ உதங்கா, ஆராயாமல் உண்பாயாக. உனது ஆசானும் {வேதாவும்} இதற்கு முன் இதைச் உண்டிருக்கிறார்" என்றான். உதங்கன் சம்மதித்துச் சாணத்தைச் சாப்பிட்டு, அந்தக் காளையின் சிறுநீரைக் குடித்து, கைகளையும் வாயையும் தூய்மைப்படுத்திக் கொண்டு மரியாதையாக எழுந்து மன்னன் பௌசியன் இருக்குமிடம் சென்றான்.

"அரண்மனையை வந்தடைந்ததும், மன்னன் பௌசியன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனை {மன்னன் பௌசியனை} அணுகிய உதங்கன், தனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு, "நான் உன்னிடம் ஒரு கோரிக்கை வைக்கவே வந்தேன்" என்றான். மன்னனும் பதில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு, "ஐயா, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். உதங்கன் "உனது இராணியின் ஒரு ஜோடிக் கம்மல்களை, எனது குருவின் {வேதாவின்} மனைவிக்குப் பரிசாகக் கொடுப்பதற்கு, அதைப் பிச்சையாகக் கேட்டு வந்தேன்" என்றான்.

"மன்னன் {பௌசியன்}, "உள்ளே பெண்கள் இருக்கும் அறைகளுக்குச் சென்று இராணியைக் கண்டு அவளிடம் வாங்கிக் கொள்ளும்" என்றான். பெண்களின் அறைகளுக்குச் சென்ற உதங்கனால் இராணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பவும் மன்னனிடம் வந்து "இதுவல்ல நீ என்னை நடத்த வேண்டிய முறை. நீ என்னை இப்படி ஏமாற்றக்கூடாது. ராணி அந்த அறைகளில் இல்லை. என்னால் அவளைக் காண முடியவில்லை" என்றான். இதைக் கேட்ட மன்னன் சற்று நேரம் யோசித்தான். பின்பு "ஐயா, சற்றுக் கவனத்துடன் நினைவுப்படுத்திப் பாரும், நீர் அசுத்தங்களில் ஏற்பட்ட ஏதாவது தொடர்பால் மாசடையவில்லை என்பது உறுதிதானா? எனது ராணி கற்புக்கரசியாவாள். மாசுள்ளவர்கள் அவளைக் காண இயலாது. அவளும் தன்னை மாசுள்ளவர்கள் மத்தியில் வெளிப்படுத்த மாட்டாள்" என்றான்.

"இப்படிச் சொல்லப்பட்ட உதங்கன், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அவசரத்தில், உணவருந்தி்விட்டு நின்றபடியே சுத்திகரிப்புச் சடங்கைச் செய்தேன்" என்றான். மன்னன் பௌசியன் "இதுதான் வரம்பை மீறிய குற்றம். நின்றபடி சடங்கைச் செய்தல் சுத்திகரிப்பு ஆகாது. அதுவும் பயணம் மேற்கொள்ளும்போது அப்படிச் செய்தல் கூடாது" என்றான். இதை ஏற்றுக் கொண்ட உதங்கன், கிழக்கு நோக்கி உட்கார்ந்து, தனது முகம், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவினான். பிறகு சத்தமிடாமல் மூன்று முறை எச்சில்படாது வெதுவெதுப்பில்லாத நீர், தனது குடலை அடையும் வரை உறிஞ்சினான். தனது முகத்தை இரு முறை துடைத்தான். பிறகு நீரை வைத்துத் தனது உறுப்புகளைத் தொட்டான் (காது, மூக்கு.......). இவையெல்லாவற்றையும் செய்து, மறுபடியும் பெண்களின் அறைகளுக்குள் நுழைந்தான்.

பௌசியன் மனைவியிடம்
காதணிகளைப் பெறும் உதங்கன்
இம்முறை ராணியைக் கண்டான். ராணியும் அவனைத் {உதங்கனைத்} தெரிந்து கொண்டு, "வாருங்கள் ஐயா, நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டாள். உதங்கன், "அந்தக் குண்டலங்களை உன்னிடம் பிச்சையாகக் கேட்கிறேன். அவற்றை எனது குருவுக்குக் {வேதாவுக்குக்} காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்" என்றான். ராணி மிகுந்த விருப்பத்துடன் உதங்கரின் நன்னடத்தைக்குப் பரிசு கொடுக்க எண்ணி, தனது குண்டலங்களைக் கழற்றிக் கொடுத்தாள். கொடுத்து விட்டு, "இந்தக் குண்டலங்களைப் பாம்புகளின் அரசனான தக்ஷகன் விரும்புகிறான். அதனால் இந்தக் கம்மல்களைப் பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும்" என்றாள்.

"இப்படிச்சொல்லப்பட்ட உதங்கன், 'பெண்ணே, பயங்கொள்ளாதே, பாம்புகளுக்குத் தலைவன் தக்ஷகனால் என்னை வெல்ல முடியாது" என்று சொல்லிவிட்டு ராணியிடம் விடைபெற்றுக் கொண்டு பௌசியன் முன்பு வந்து "பௌசியா, மனம் நிறைந்தேன்" என்றான். பௌசியன் உதங்கனிடம், "கொடையாகக் கொடுக்கப்படும் சரியான பொருள் நீண்ட இடைவெளிக்குப் பிறகே கிடைக்கும். நீர் தகுதியுள்ள விருந்தினர், அதனால் உம்மை வழிபட விரும்புகிறேன். சற்றுப் பொறுத்திரும்" என்றான்.

உதங்கன், "சரி, நான் பொறுத்திருக்கிறேன். தயாராக வைத்திருக்கும் தூய பொருட்களை விரைவாக வரவைக்குமாறு வேண்டுகிறேன்" என்றான். மன்னன் {பௌசியன்} ஏற்றுக் கொண்டான் உதங்கனும் மகிழ்வுடன் இருந்தான். தனது முன்பாக வைக்கப்பட்ட உணவு குளிர்ந்ததாகவும், சுத்தமற்றதாகவும், அதில் தலைமுடியும் இருந்ததால் கோபத்துடன் உதங்கன், "நீ எனக்குச் தூய்மையற்ற ணவைக் கொடுத்ததால், பார்வையை இழப்பாயாக" என்று சபித்தான். பதிலுக்குப் பௌசியனும், "சுத்தமாக இருக்கும் உணவைச் சுத்தமற்றது என்று சொன்னதால் நீ பிள்ளைப்பேறில்லாமல் போவாயாக' என்று சபித்தான். உதங்்கன், "இது முறையல்ல, எனக்குத் தூய்மையற்ற உணவைப் பரிமாறி, பதில் சாபம் வேறு தருகிறாயா? கண்ணால் சாட்சி கண்டு உன்னில் நீ மனநிறைவு  கொள்வாயாக" என்றான்.

உணவு சுத்தமற்றதாகத்தான் இருக்கிறது என்பதைப் பௌசியன், நேரடியாகவே கண்டு கொண்டான். அந்த உணவு குளிர்ந்ததாகவும், தலைமுடியுடனும், யாரோ பின்னலிடாதப் பெண்ணால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து முனியை அமைதிப் படுத்த முயன்றான் "ஐயா, உம் முன்னால் வைத்த உணவு குளிர்ந்ததாகவும், முடியுடனும் இருக்கிறது. சரியான அக்கறையுடன் இந்த உணவு தயாரிக்கப்படவில்லை. ஆகவே என்னை மன்னித்துக் கொள்ளும். நான் குருடாகாமல் காப்பாற்றும்" என்றான். உதங்கன், "நான் என்ன சொல்கிறேனோ அது நடந்தே தீரும். இருந்தாலும், நீ குருடானாலும் மிக விரைவில் பார்வையை அடைவாய். உனது சாபத்தையும் நீ திரும்பப் பெற்றுக் கொள்" என்றான்.

பௌசியன் சொன்னான், "எனது சாபத்தைத் திரும்பப்பெற என்னால் இயலாது. ஏனென்றால் எனது கோபமும் இன்னமும் தணியவில்லை. ஆனால் உமக்கு இது தெரியாது. அந்தணனின் வார்த்தைகள் என்னதான் கூரிய கத்தியைப் போன்று இருந்தாலும், அவனது இதயம் புதிதாகக் கடைந்த வெண்ணையைப் போன்று மிருதுவானது. இஃது அப்படியே க்ஷத்திரியர்களிடம் பார்த்தால், அவனது வார்த்தைகள் மெதுவான வெண்ணையைப் போன்றும், அவனது இதயம் கூரியக் கத்தியைப் போன்றும் இருக்கும். அப்படியிருப்பதால், நான் கொடுத்த சாபத்தை என்னால் திரும்பப் பெற இயலவில்லை. அதனால் நீர் வந்த வழியே போம்" என்றான்.

"நீ சுத்தமற்ற உணவினைத்தான் கொடுத்தாய் என்பதை நான் காண்பித்தேன். நீ என்னைச் சாந்தப்படுத்தினாய், அஃது ஒருபக்கம் இருக்கட்டும். சுத்தமான உணவைச் சுத்தமற்றது என்று நான் சொன்னதாகக் கருதியே எனக்குப் பிள்ளைப் பேறற்றுப் போகட்டும் என்று சபித்தாய். ஆனால், உணவு சுத்தமற்றதாகவே இருந்தது. ஆகையால் உனது சாபம் என்னை ஒன்றும் செய்யாது. இதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உதங்கன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திர்கதமஸ் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 
Creative Commons License
முழுமஹாபாரதம் by முழுமஹாபாரதம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Based on a work at http://mahabharatham.arasan.info.
Permissions beyond the scope of this license may be available at http://mahabharatham.arasan.info.
mahabharatham.arasan.info. Blogger இயக்குவது.
Back To Top