clone demo
பிரம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 06, 2014

மந்தரை என்ற கூனி ! - வனபர்வம் பகுதி 274

Manthara called as hunchback!  | Vana Parva - Section 274 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது...


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னான்.

ராவணன் பெற்ற வரம்! - வனபர்வம் பகுதி 273

The boon obtained by Ravana!  | Vana Parva - Section 273 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.


ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.

அவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.

வேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.

ஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன்! தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள்! இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை" என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக!” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்! அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்!” என்றான்.

மார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்" என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன்! நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்!” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்" என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்" என்றான் {பிரம்மன்}”

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும்! உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்!” என்று சாபமிட்டான்.

பக்திமானான விபீஷணன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


வியாழன், ஆகஸ்ட் 07, 2014

சிவனுக்கு மகன் கந்தன்! - வனபர்வம் பகுதி 230அ

Skanda is a son of Siva!  | Vana Parva - Section 230a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுவாகாவை அக்னியுடன் இணைத்த ஸ்கந்தன்; ஸ்கந்தனின் தந்தை சிவன் என்று பிரம்மன் ஸ்கந்தனிடம் சொன்னது; சிவனால் பெறப்பட்ட மிஞ்சிகையும், மிஞ்சிகனும்; ஆவிகளை வழிபட வேண்டியதற்கான தேவைகள்; குஹன் அமர்ந்திருந்த அந்த மலையின் அழகு ...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தன் {அந்த அன்னையருக்கு} இந்தச் சக்திகளை எல்லாம் அளித்த போது, சுவாகா அவன் முன் தோன்றி, "இயற்கையாகவே {உண்மையில்} நீ எனது மகன். நீ எனக்கு அற்புதமான மகிழ்ச்சியை அருள வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றாள்.

ஸ்கந்தன், "எந்த மாதிரியான மகிழ்ச்சியை நீ விரும்புகிறாய்?" என்று கேட்டான்.

சுவாகா {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தக்ஷனின் அன்புக்குரிய மகளான சுவாகா என்ற பெயர் கொண்டவள் ஆவேன்; எனது இளமையில் நான் ஹுதாசனனிடம் (அக்னி தேவன்) காதல் கொண்டேன். ஆனால், என் மகனே, அந்தத் தேவன் {அக்னி தேவன்} எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அவருடையே (அவரது மனைவியாக) எப்போதும் வாழ விரும்புகிறேன்" என்றாள்.

வியாழன், ஜூன் 19, 2014

மனுவும்! மீனும்! - வனபர்வம் பகுதி 186

Manu and the fish! | Vana Parva - Section 185 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மீன் உருவத்தில் இருந்த பிரம்மனை வைவஸ்வத மனு வளர்த்தது, உலகை அழித்த பெருவெள்ளம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்...

பிறகு பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், அந்தணர் மார்க்கண்டேயரிடம், "இப்போது நீர் வைவஸ்வத மனுவின் வரலாற்றை உரைப்பீரா?" என்று கேட்டான்.

அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, {ஒரு காலத்தில்} வலிமைமிக்கப் பெருமுனிவர் {மன்னன்} ஒருவர் மனு என்ற பெயரில் இருந்தார். அவர் விவஸ்வானின் {சூரியனின்} மகனும், பிரம்மனின் புகழுக்கு ஒப்பானவரும் ஆவார். அவனது தந்தையையும், பாட்டனையும் பலத்திலும், வலிமையிலும், நற்பேறிலும், ஏன் தவச்சடங்குகளிலும் கூட அவர் {மனு} விஞ்சி நின்றார். உயர்த்திய கரங்களுடன் ஒற்றைக் காலில் நின்றபடி அந்த மனிதர்களின் தலைவன் {மனு} இலந்தைக் காடான விசாலையில் {பதரி} கடும் தவமிருந்தார். கீழ்நோக்கிய தலையுடனும் {தலைகீழாக நின்று கொண்டு}, நிலைத்த கண்களுடனும் அவர் கடுமையான உறுதியான தவத்தைப் பத்தாயிரம் வருடங்கள் செய்தார். ஒரு நாள், ஈர உடையுடனும், தலையில் சடாமுடியுடனும் தவம்பயின்று கொண்டிருந்த அவரிடம் {மனுவிடம்}, சீரிணீ நதியின் கரையை அடைந்த ஒரு மீன், "வணக்கத்திற்குரிய ஐயா, நான் ஆதரவற்ற ஒரு சிறு மீன். நான் பெரும் மீன்களைக் கண்டு அஞ்சுகிறேன்; ஆகையால், ஓ பெரும் பக்திமானே {மனுவே}, என்னைக் காப்பதே உமக்குத் தகும் என்பதை நினையும்; குறிப்பாகப் பலம்பொருந்திய மீன்கள் பலவீனமானவற்றை உண்பது ஒரு நிலையான வழிமுறையாக நிறுவப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பயங்கரக்கடலில் {நதியில்} நான் மூழ்கிப் போகமால் என்னைக் காப்பதே உமக்குத் தகும்! நான் நிச்சயம் உமது நற்செயலுக்கான ஈடு {மறு உதவி (அ) பிரதியுபகாரம்} செய்வேன்" என்றது.


அந்த மீனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட வைவஸ்வத மனு இரக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, அம்மீனை நீரில் இருந்து தனது கரங்களால் எடுத்தார். நிலவின் கதிர்களைப் போல ஒளிரும் உடல் கொண்ட அம்மீன், நீரில் இருந்து எடுக்கப்பட்டு, ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தில் போடப்பட்டது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி வளர்க்கப்பட்ட அம்மீன், உருவத்தால் வளர்ந்தது. மனுவும் அதைக் குழந்தையைப் போலக் கவனத்துடன் வளர்த்தார். பிறகு நீண்ட காலம் கழித்து, அந்த மீன், அது இருந்த பாத்திரம் கொள்ளாத அளவுக்கு வளர்ந்தது. அதன் பிறகு (ஒரு நாள்) மனுவைக் கண்ட அம்மீன் அவரிடம், "வணக்கத்திற்குரிய ஐயா, எனக்கு வேறு ஒரு சிறந்த வசிப்பிடத்தை நியமிப்பீராக" என்று கேட்டது. பிறகு எதிரிகளின் நகரங்களை வெல்லும் புகழத்தக்க மனு, அதைப் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு பெரிய குளத்திற்குக் கொண்டு சென்று அங்கே விட்டார். பிறகு அம்மீன் பல வருடங்கள் அங்கேயே வளர்ந்து வந்தது. அந்தத் தடாகம் இரண்டு யோஜனை நீளமும், ஒரு யோஜன அகலமும் கொண்டதாக இருந்தாலும் கூட, ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கேயும் அந்த மீனுக்கு விளையாடித்திரிய இடமில்லாமல் போனது.

பிறகு மீண்டும் மனுவைக் கண்ட அது {மீன்} {மீண்டும்}அவரிடம், , "ஓ!பக்திமிக்கப் புகழத்தக்க தந்தையே {மனுவே}, என்னைக் கடலுக்குப் பிடித்தமான மனைவியான கங்கைக்கு {கங்கை நதிக்கு} எடுத்துச் செல்லும். நான் அங்கு நீண்ட காலம் வாழ்வேன்; அல்லது நீர் விரும்பியவாறு செய்யும். ஓ! பாவமற்றவரே, நான் இந்த அளவு வளர்வதற்கு உமது உதவியே காரணம், நான் உமது கட்டளையை மகிழ்ச்சியாக நிறைவேற்றுவேன்" என்றது. இப்படிச் சொல்லப்பட்ட நேர்மையும் அடக்கமும் கொண்ட வழிபாட்டுக்குரிய மனு, அந்த மீனைக் கங்கை நதிக்கு எடுத்துச் சென்று தனது கைகளாலேயே அதை அந்நதியில் விட்டார். அங்கேயும், ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அம்மீன் சிறிது காலத்தில் வளர்ந்து மீண்டும் மனுவைக் கண்டு, "ஓ! தலைவா, நான் எனது பெருத்த உடலால் கங்கையில் நகர்வதற்கு இயலாமல் இருக்கிறேன்; எனவே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, தயவு செய்து விரைவாக என்னைக் கடலுக்கு எடுத்துச் செல்லும்" என்றது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு மனு அதை {மீனை} கங்கையில் இருந்து எடுத்து, கடலுக்குச் சுமந்து சென்று, அங்கே அதை {கடலிடம்} ஒப்படைத்தார். அது பெருத்த உருவம் கொண்டதாக இருந்தாலும், மனு அதை எளிதாக எடுத்துச் சென்றார். அதன் ஸ்பரிசமும், மணமும் அவருக்கு இனிமையாக இருந்தது.

{மீன்} மனுவால் கடலுக்குள் வீசப்பட்டபோது, அது புன்னகையுடன், "ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் என்னைச் சிறப்புக் கவனத்துடன் பாதுகாத்தீர்; தக்க காலம் வரும்போது நீர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேளும்! ஓ! நற்பேறு பெற்றவரே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, அசைவன மற்றும் அசையாதன கொண்ட இவ்வுலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வுலகத்தைக் களையெடுப்பதற்கான வேளையும் கனிந்துவிட்டது. எனவே, உமக்கு நன்மை எதுவோ அதை இப்போது விவரிக்கிறேன்! படைப்பில் அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைப் பயங்கரமான பேரழிவு அணுகுகிறது. நீண்ட கயிறுடன் கூடிய ஒரு பலமிக்க மகத்தான பேழையை {கப்பல் - build a strong massive ark) நீர் செய்யும். ஓ! பெருமுனியே {மனுவே}, ஏழு முனிவர்களுடன் {சப்த ரிஷிகளுடன்} நீர் அதில் ஏறி, பழங்காலத்தில் மறுபிறப்பாள அந்தணர்களால் பட்டியலிடப்பட்ட பலவிதமான விதைகளை உம்முடன் எடுத்துச் சென்று, அதைத் {விதைகளைத்} தனியாகவும் கவனத்துடனும் பாதுகாத்து வாரும். ஓ! முனிவர்களில் அன்பிற்குரியவரே {மனுவே}, அதைச் செய்துவிட்டு எனக்காகக் காத்திரும். நான் உம்மிடம் தந்தம் கொண்ட {கொம்பு கொண்ட} ஒரு விலங்காக {மீனாகத்தான் இருக்க வேண்டும்} வருவேன். அதைக் கொண்டு, ஓ! தவசியே {மனுவே}, என்னை அடையாளம் கண்டு கொள்ளும். இப்போது நான் உம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். நீர் நான் சொன்னவாறு நடந்து கொள்ளும். என்னுடைய துணை இல்லாமல் உம்மால் அந்தப் பெரு வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இயலாது" என்றது {மீன்}.

பிறகு மனு அந்த மீனிடம், "ஓ! பெருமைமிக்க உயிரினமே, நீ சொல்வதில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. நீ சொன்னது போலவே நடப்பேன்" என்றார். இப்படி ஒருவர் மற்றவரிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் சென்று விட்டனர். ஓ பெரும் பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெல்பவனே, மீனால் வழிகாட்டப்பட்டது போலப் பலவிதமான விதைகளை எடுத்துக் கொண்டு, நல்ல ஓடத்திலே பெரிய அலைகளுடன் கூடிய கடலில் {சப்த ரிஷிகளுடன் கூடிய மனு} மிதந்தார். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மீனை நினைத்தார். ஓ! எதிரிகளை வெல்பவனே, பாரதக் குலத்தின் முதன்மையான வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்த மீனும் அவரது மனதை அறிந்து, கொம்புகள் கொண்ட தலையுடன் அங்கே தோன்றியது. பிறகு, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, கொம்பு கொண்ட மீன் ஒன்று பாறையின் உருவத்தில் கடலில் வருவதைக் கண்டதும், ஏற்கனவே அவர் உயர்த்திப் பிடித்திருந்த கயிற்றுச் சுருக்கை அதன் தலையில் மாட்டினார். அச்சுருக்கால் இறுக்கப்பட்ட அம்மீன், ஓ! மன்னா, எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியுடன் அப்பேழையை {ஓடத்தை} உப்பு நீரில் இழுத்துச் சென்றது. கூத்தாடும் அலைகளும், நிறைந்த நீரின் கர்ஜிப்பும் கொண்ட அக்கடலில் அவ்வோடம் {பேழை} இழுத்துச் செல்லப்பட்டது. ஓ! உனது எதிரிகளையும், பகை நகரங்களையும் வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட அவ்வோடம் {பேழை}, ஒரு குடிகார விலைமகள் போல ஆடிச் சென்றது.

பூமிக்கும், நான்கு திசைப்புள்ளிகளுக்கும்  வித்தியாசம் தெரிவில்லை.எங்குக் காணினும் நீராக இருந்தது. அந்நீர் வானத்தையும், தேவலோகத்தையும் நிறைத்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமியை பெருவெள்ளத் சூழ்ந்த போது, மனுவைத் தவிர ஏழு முனிவர்களும் அம்மீனும் மட்டுமே காணப்பட்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப்பெருவெள்ளத்தில் அம்மீன் அவ்வோடத்தைப் {அப்பேழையைப்} பல வருடங்கள் விடாமுயற்சியுடன் இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பாரதக் குலத்தின் ஆபரணமே, அது {மீன்} அவ்வோடத்தை {அப்பேழையை} இமயத்தின் உயர்ந்த சிகரத்திற்கு இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! பாரதா, அம்மீன் அந்த ஓடத்தை {பேழையை} இமயத்தின் அச்சிகரத்தில் கட்டச் சொன்னது. மீனின் வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அம்மலையின் சிகரத்தில் அவ்வோடத்தைக் {அப்பேழையைக்} கட்டினார்கள். ஓ! குந்தியின் மகனே, பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, இமயத்தின் உயர்ந்த சிகரம் இன்றும் நௌபந்தனம் (துறைமுகம்) என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள். பிறகு அம்மீன் அம்முனிவர்களிடம், "நானே அனைத்து உயிரினங்களுக்கும் தலைமையான பிரம்மம் ஆவேன். என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை. மீனின் உருவைக் கொண்டு, நான் உம்மை இந்தப் பேரிடரில் இருந்து காத்தேன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும், அசைவன, அசையாதன ஆகிய படைப்பின் பிரிவுகளையும் (மீண்டும்) {வைவஸ்வத மனு} மனு படைப்பான். கடும் தவங்களைப் பயின்றும் எனது அருளாலும், அவன் அச்சக்தியை அடைவான். மாயை அவன் மீது எந்தச் சக்தியையும் செலுத்த முடியாது" என்றது {மீன்}.

இப்படிச் சொன்ன அம்மீன் உடனே மறைந்தது. வைவஸ்வத மனு உலகத்தைப் படைப்பதற்கு மனதில் விருப்பம் கொண்டார். படைப்புத் தொழில் செய்யும் இவ்வேலையின் போது மாயை அவரை ஆட்கொண்டது, ஆகையால் அவர் பெருந்தவம் பயின்றார். தவத்தகுதியுடைய அந்த மனு, ஓ! பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, மீண்டும் சரியான மற்றும் முறையான வரிசையில் உயிரினங்களைப் படைத்தார்.

நான் {மார்க்கண்டேயரான நான்} உனக்குச் {யுதிஷ்டிரனான உனக்குச்} சொன்ன மீனின் புராணமான இந்தக் கதையைக் கேட்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கிறது. மனுவின் ஆதி வரலாறான இதைத் தினமும் கேட்பவன் மகிழ்ச்சியை அடைந்து, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சொர்க்கத்தை அடைகிறான்" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

புதன், பிப்ரவரி 19, 2014

தனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்! - வனபர்வம் பகுதி100

Dadhicha gave his bones! | Vana Parva - Section 100| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விருத்திரனைத் தலைமையாகக் கொண்ட காலகேயர்கள் தேவர்களை விரட்டுவது; தேவர்களுக்குப் பிரம்மன் விருத்திரனைக் கொல்லும் உபாயத்தைச் சொல்லல்; தேவர்கள் ததீச முனிவரை அடைந்து அவரது எலும்புகளை இரந்து கேட்டல்; ததீசர் தனது உடலைத் துறத்தல்; ததீசரின் எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குதல்...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, சிறப்புமிக்கப் பெரும் புத்திகூர்மையுள்ள முனிவரான அகஸ்தியரின் சாதனைகளை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.

லோமசர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அகஸ்தியரின் அற்புதமான இயல்புக்கு மிக்க வரலாற்றைக் கேள். ஓ ஏகாதிபதி, கட்டுக்கடங்கா சக்தியும் பராக்கிரமும் படைத்த அம்முனிவரை {அகஸ்தியரைப்} பற்றிக் கேள். கிருத யுகத்தில் கடுமையான தானவர்களில் குறிப்பிட்ட இனங்கள் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். காலகேயர்கள் என்ற பெயர் கொண்ட அவர்கள் கடும் பராக்கிரமத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களை விருத்திரனுக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, வித்தியாசமான ஆயுதங்களுடன் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை எல்லாத் திக்குகளிலும் துரத்தினர்.

பிறகு தேவர்கள் அனைவரும் விருத்திரனுடைய அழிவைத் தீர்மானிக்க இந்திரனின் தலைமையில் பிரம்மனிடம் சென்றார்கள். கரங்கள் கூப்பி நின்ற அவர்களைக் கண்ட பரமேஷ்டி {பிரம்மா} அவர்களிடம், "தேவர்களே, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பது உட்பட அனைத்தும் என்னால் அறியப்பட்டிருக்கிறது. இப்போது விருத்திரனைக் கொல்லும் வழியை உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். ததீசர் {Dadhicha} என்ற பெயரில் உயர் ஆன்மா கொண்ட ஒரு பெரும் முனிவர் இருக்கிறார். நீங்கள் அனைவரும் ஒன்றாக அவரிடம் சென்று ஒரு வரத்தைக் கேளுங்கள். பெரும் திருப்தி கொண்ட இதயத்துடன், அற ஆன்மா கொண்ட அந்த முனிவர் {ததீசர்} அந்த வரத்தை உங்களுக்குக் கொடுப்பார். வெற்றியில் விருப்பம் உள்ள நீங்கள் அனைவரும் அவரிடம் {ததீசரிடம்} சென்று, "மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் எங்களுக்கு உமது எலும்புகளைத் தர வேண்டும்" என்று சொல்லுங்கள்.

அவர் {ததீசர்} தனது உடலைத் துறந்து, அவரது எலும்புகளை உங்களுக்குத் தருவார். அந்த எலும்புகளைக் கொண்டு, ஆறு பக்கங்கள் {ஆறு படிகள்} கொண்ட, பயங்கரமான சத்தத்துடன் மிகப் பலம் வாய்ந்த எதிரியையும் அழிக்கவல்ல வஜ்ரம் என்ற கடும் ஆயுதத்தைச் செய்யுங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் இவற்றை விரைவாகச் செய்யுங்கள்" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் இருந்து வந்து, நாராயணனைத் தலைமையாகக் கொண்டு ததீசரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.

அந்த ஆசிரமம் சரஸ்வதி நதியின் அக்கரையில் வித்தியாசமான மரங்கள் மற்றும் கொடிகள் சூழ இருந்தது. அங்கே இருந்த வண்டுகளின் ஒலி சாம வேதம் ஒலிக்கு நிகராக இருந்தது. அங்கே ஆண் கோகிலம் {குயில்} மற்றும் சகோரப் பறவைகளின் இசை நிறைந்திருந்தது. எருமைகளும், பன்றிகளும், மான்களும், சமரங்களும் புலி குறித்த பயமின்றி இன்பமாகத் திரிந்தன. மதம் பெருகிய யானைகள் ஓடையில் மூழ்கி, பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டு அந்த இடத்தைத் தங்கள் பிளிறல்களால் நிரப்பின. அந்த இடம் சிங்கங்கள் மற்றும் புலிகளின் கர்ஜனையாலும் நிறைந்திருந்தது. அந்தக் காட்டின் அச்சுறுத்தும் ஏகாதிபதிகளான அவை குகைகளிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அவ்வப்போது அழகாகக் காணப்பட்டன. இப்படித் தேவர்கள் நுழைந்த அந்தத் ததீசரின் ஆசிரமம் சொர்க்கத்தைப் போல இருந்தது.

அங்கே ததீசர் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், பெருந்தகப்பனைப்போல இருப்பதையும் அவர்கள் {தேவர்கள்} கண்டனர். தேவர்கள் அனைவரும் அந்த முனிவரின் பாதங்களைப் பணிந்து வணங்கி, பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்கச் சொன்ன அந்த வரத்தை அவரிடம் {ததீசரிடம்} இரந்து கேட்டனர். பிறகு மிகவும் திருப்தியடைந்த ததீசர், தேவர்களில் முதன்மையானவர்களிடம் {இந்திரனிடம்}, "தேவர்களே, உங்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்வேன். எனது உடலை நானே துறக்கிறேன்" என்று சொன்னார். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர் {ததீசர்}, இப்படிச் சொன்னவுடன் தனது உயிரைத் துறந்தார். மரித்த அந்த முனிவரிடம் இருந்து, ஏற்கனவே {பிரம்மனால்} வழிகாட்டப்பட்டது போல எலும்புகளை எடுத்தனர். பிறகு இதயம் மகிழ்ந்த தேவர்கள், {தேவலோக தச்சர்களில் ஒருவனான} துவஷ்டிரியிடம் {Twashtriசென்று, அவனிடம் வெற்றியின் வழிகள் குறித்துப் பேசினர்.

அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட துவஷ்டிரி மகிழ்ச்சியில் மூழ்கி, (அந்த எலும்புகளைக் கொண்டு) மிகக் கவனத்துடன் கடுமையான ஆயுதமான வஜ்ரத்தை {Vajra} உருவாக்கினான். அதைத் தயாரித்த பிறகு மிக மகிழ்ச்சியுடன் இந்திரனிடம், "ஓ மேன்மையானவனே, ஆயுதங்களில் முதன்மையான இதைக் கொண்டு தேவர்களின் எதிரிகளைச் சாம்பலாக்கு. ஓ தேவர்கள் தலைவனே {இந்திரா}, எதிரிகளைக் கொன்ற பிறகு மகிழ்ச்சியாகத் தேவலோகத்தையும், உன்னைத் தொடர்பவர்களையும் ஆட்சி செய்" என்றான் {துவஷ்டிரி}. துவஷ்டிரியால் இப்படிச் சொல்லப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும் உரிய மரியாதைகளுடனும் வஜ்ரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


திங்கள், பிப்ரவரி 17, 2014

ராமன், பரசுராமன் மோதல்! - வனபர்வம் பகுதி 99ஆ

The encounter between Rama and Parasurama! | Vana Parva - Section 99b| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பரசுராமன் தசரத ராமனைச் சந்தித்து தனது வில்லைக் கொடுத்துப் பரிசோதிப்பது; பரசுராமனின் கர்வத்தைப் பங்கப்படுத்திய ராமன்; சக்தியை இழந்த பரசுராமன் பிறகு வதூசரம் என்ற நதிக்குச் சென்று தனது இழந்த சக்தியை மீண்டும் பெறுவது...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, லோமசரின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷடிரன் தனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்து அங்கே {கங்காத்துவாரத்தில்} நீராடி, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தினான். ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரன் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய பிறகு, அவனது உடல் அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து, எதிரிகளின் கண்களுக்கு அரூபமானான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், "ஓ! சிறந்தவரே, ஏன் ராமனின் {பரசுராமனின்} சக்தியும் பலமும் எடுக்கப்பட்டது? அதன் பிறகு அவர் எப்படி அதை மீட்டெடுத்தார்? ஓ! மேன்மையானவரே, நான் உம்மிடம் கேட்கிறேன். அனைத்தையும் சொல்வீராக" என்றான்.

லோமசர் சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (தசரதன் மகனான) ராமன் மற்றும் பிருகு குலத்தின் புத்திகூர்மைகொண்ட ராமன் {பரசுராமன்} ஆகியோரின் வரலாறுகளைக் கூறுகிறேன் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராவணனின் அழிவிற்காக விஷ்ணு தனது சொந்த உடலுடன், சிறப்புமிக்கத் தசரதனிடத்தில் பிறந்தான். தசரதனின் மகன் {ராமன்} பிறந்ததும், அயோத்தியையில் நாம் அவனைக் கண்டோம். பிறகுதான் ரிசகரின் மகனான பிருகு குலத்தின் ரேணுகா மூலம் பிறந்த ராமன் {பரசுராமன்}, களங்கமற்ற செயல்கள் புரிந்த தசரதனின் மகனான ராமனைக் குறித்துக் கேள்விப்பட்டு அயோத்திக்குச் சென்றார். ஆர்வ மிகுதியால் அவர் க்ஷத்திரியர்களுக்கு மரணத்தைக் கொடுத்த தெய்வீக வில்லையும் தசரத மைந்தனின் பராக்கிரமத்தை உறுதி செய்ய எடுத்துச் சென்றார்.

பிருகு குலத்தின் ராமன் {பரசுராமன்} தனது நாட்டுக்குள் வந்ததை அறிந்த தசரதன், அந்த வீரரை உரிய மரியாதையுடன் அழைத்துவர தனது சொந்த மகனான ராமனை அனுப்பி வைத்தான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தசரதனின் மகன் தன்னை அணுகுவதையும், ஆயுதங்களுடன் தயாராக இருப்பதையும் கண்ட பிருகு குல ராமன் {பரசுராமன்} புன்னகையுடன் அவனிடம் {தசரத ராமனிடம்}, ஓ! மன்னா, ஓ! மேன்மையானவனே, க்ஷத்திரிய குலத்தை அழிக்க நான் பயன்படுத்திய கருவியான எனது கைகளில் இருக்கும் இந்த வில்லில், உன்னால் இயன்றால், உனது பலத்தையெல்லாம் பிரயோகித்து நாணேற்று" என்று சொன்னார். இப்படிச் சொல்லப்பட்ட தசரதன் மகன் {ராமன்}, "ஓ சிறப்புமிக்கவரே, என்னை இப்படி அவமதிப்பது உமக்குத் தகாது. நான் க்ஷத்திரிய வகையின் அறங்களுக்குத் தாழ்ந்த மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவனல்ல. குறிப்பாக இக்ஷவாகுவின் வழித்தோன்றல்கள் யாரும் தங்கள் கரங்களின் பராக்கிரமம் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை" என்றான்.

பிறகு தசரதன் மகனிடம் {ராமனிடம்}, பிருகு குல ராமன் {பரசுராமன்}, "அனைத்துத் தந்திரப் பேச்சுகளையும் நிறுத்து. ஓ மன்னா! இந்த வில்லை எடு" என்றார். இதற்குத் தசரதனின் மகனான ராமன், பிருகு குல ராமனின் {பரசுராமனின்} கைகளில் இருந்த க்ஷத்திரியர்களுக்கு அழிவைக் கொடுத்த வில்லைக் கோபத்துடன் வாங்கினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {தசரத ராமன்} புன்னகையுடன் சிறு முயற்சியும் இல்லாமல், அந்த வில்லில் நாண்பூட்டி அனைத்து உயிரினங்களையும் பயங்கொள்ளச் செய்யும் நாணொலியை எழுப்பினான். தசரதனின் மகனான ராமன், பிருகுவின் ராமனிடம் {பரசுராமனிடம்}, "இதோ. இந்த வில்லுக்கு நாண் பூட்டிவிட்டேன். ஓ! அந்தணரே, நான் வேறு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமன்}, தசரதனின் சிறப்புமிக்க மகனிடம் {ராமனிடம்} ஒரு தெய்வீகக் கணையைக் கொடுத்து, "ஓ! வீரனே {தசரத ராமா}, இந்தக் கணையை வில்லின் நாணில் பொருத்தி, நாணை உனது காது வரை இழு" என்றார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைக் கேட்ட தசரதனின் மகன் {ராமன்} கோபத்தில் எரிந்து, "நீர் சொன்னதை நான் கேட்டேன். மன்னித்தும் விட்டேன். ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமனே}, நீர் கர்வம் நிறைந்து இருக்கிறீர். பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} கருணையால் பெற்ற சக்தியைக் கொண்டே நீர் க்ஷத்திரியர்களுக்கு மேன்மையானவராக இருக்கிறீர். அதனால் தான் நீர் என்னை அவமதிக்கிறீர். எனது சுய உருவைப் பாரும். நான் உமக்குப் பார்வையைத் தருகிறேன்" என்றான்.

ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, பிறகு பிருகு குலத்தின் ராமன் தசரதன் மகனின் உடலில் வசுக்களுடன் கூடிய ஆதித்தியர்களையும், ருத்ரர்களையும், மருதர்களுடன் கூடிய சத்யஸ்களையும், பித்ருக்களையும், ஹூதாசனனையும், நட்சத்திரக் குவியல்களையும், கோள்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், யஹர்களையும், ஆறுகளையும், தீர்த்தங்களையும், பிரம்மனால் அடையாளங்காட்டப்பட்ட முனிவர்களில் நித்தியமான வாலகில்யர்களையும், தெய்வீக முனிவர்களையும், கடல்களையும், மலைகளையும், உபநிஷத்துகள், வசத்துகளுள், வேள்விகளுடன் கூடிய வேதங்களையும், சமன்களின் உயிர்த்தோற்றத்தையும், ஆயுத அறிவியலையும், மழையுடன் கூடிய மேகங்களையும், மின்னலையும் கண்டார்.

பிறகு சிறப்புமிக்க விஷ்ணு அந்தக் கணையை அடித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இடி மற்றும் எரிகற்களின் ஓசை உலகத்தை நிறைத்து வானத்தில் மின்னல் தோன்ற ஆரம்பித்தது. பூமியின் பரப்பு மீது தூசி மற்றும் மழை பொழிய ஆரம்பித்தது. சுழற்காற்றும், பயங்கரச் சத்தமும் அனைத்தையும் அதிரச் செய்தன. பூமி நடுங்க ஆரம்பித்தாள். ராமனின் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணை மற்ற ராமனின் {பரசுராமனின்} சக்தியைக் குழப்பி, {தசரத} ராமனின் கரங்களுக்கே திரும்ப வந்து சேர்ந்தது. இப்படி உணர்வை இழந்த பார்க்கவர் {பரசுராமன்}, மீண்டும் சுயநினைவை அடைந்து விஷ்ணு சக்தியின் வடிவமான {தசரத} ராமனைப் பணிந்தார்.

அந்த விஷ்ணுவின் கட்டளையின் பேரில் அவர் மகேந்திர மலைகளுக்குச் சென்றார். அதுமுதல் அந்தப் பெரும் தவசி அச்சத்துடனும் அவமானத்துடனும் அங்கே வசிக்க ஆரம்பித்தார். பிறகு ஒரு வருடம் கழிந்ததும் சக்தி இழந்து கர்வபங்கப்பட்டு, துயரத்தில் இருந்த ராமனைக் {பரசுராமனைக்} கண்ட பித்ருக்கள் அவரிடம், "ஓ! மகனே, விஷ்ணுவை அணுகிய நீ நடந்து கொண்ட முறை சரியானதல்ல. மூன்று உலகங்களிலும் அவன் உனது வழிபாட்டுக்குகந்தவன். ஓ! மகனே, போ. வதூசரம் என்ற பெயர் கொண்ட புண்ணிய நதிக்குச் செல். அந்த நதியில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி உனது இழந்த சக்தியை மீட்டெடு. ஓ! ராமா {பரசுராமா}, அந்த நதியில், தெய்வீகக் காலத்தில், உனது பெரும்பாட்டனான பிருகு தவம்பயின்று பெரும் பலனடைந்த தீப்தோத்தம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன" என்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி அவர்களால் சொல்லப்பட்ட ராமன் {பரசுராமன்}, தனது பித்ருகளுக்குப் பிரியாவிடை கொடுத்து அந்தத் தீர்த்தங்களுக்குச் சென்று தனது சக்தியை மீண்டும் அடைந்தார். இது பழங்காலத்தில் களங்கமற்ற ராமனுக்கு {பரசுராமனுக்கு}, (தசரதன் மகனின் {ராமனின்} உருவத்தில் இருந்த) விஷ்ணுவை சந்தித்த பிறகு ஏற்பட்ட நிலையாகும்" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


செவ்வாய், செப்டம்பர் 03, 2013

அக்னியின் செரியாமை - ஆதிபர்வம் பகுதி 225

Agni suffering fro surfeit | Adi Parva - Section 225 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)

ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…

பிரம்மனும் அக்னியும்
வைசம்பாயனர் சொன்னார், "அந்த அந்தணன் அர்ஜுனனிடமும், சத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் வீரர்களில் இரு முதன்மையானவர்கள். அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட அந்தணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னைத் திருப்திப்படுத்திடும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றான். இப்படி அந்த அந்தணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} அவனிடம், "எந்த வகையான உணவு உம்மைத் திருப்திப்படுத்தும் என்று சொன்னால் நாங்கள் அதை உமக்குக் கொடுக்க முயற்சிப்போம்." என்றனர். 


இப்படி பதில் உரைக்கப்பட்ட அந்தச் சிறப்பு மிகுந்த அந்தணன், எந்த வகையான உணவு உமக்குத் தேவை என்று அந்த வீரர்கள் கேட்டதால், "நான் சாதாரண உணவை விரும்பவில்லை. நான் அக்னி என்பதை அறிந்து கொள்ளுங்கள்! உனக்கு உகந்த உணவை எனக்குக் கொடுங்கள். இந்தக் காண்டவ வனக் காடு இந்திரனால் காக்கப்படுகிறது. இது அந்தச் சிறப்பு வாய்ந்தவனால் காக்கப்படுவதால், நான் அதை உண்பதில் எப்போதுமே தோல்வி காண்கிறேன். இந்தக் கானகத்தில் இந்திரனின் நண்பனான தக்ஷகன் என்ற நாகன் தன்னைத் தொடர்பவர்களுடனும், தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறான். அவனுக்காகவே {தஷகனுக்காகவே} இடியைத் தாங்குபவன் {இந்திரன்} இந்தக் கானகத்தைக் காக்கிறான். பல உயிரினங்களும் தக்ஷகனின் பொருட்டு இங்கு பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் கானகத்தை உண்ண நினைத்தாலும், இந்திரனின் வீரத்தால் எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் நெருப்புச் சுடர்களை வீசியதும் அவன் மேகத்திலிருந்து நீரை ஊற்றுகிறான்.

ஆகையால், நான் காண்டவ வனத்தை உட்கொள்வதைப் பெரிதும் விரும்பினாலும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இப்போது நான் ஆயுத நிபுணத்துவம் வாய்ந்த உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் நிச்சயம் இந்த வனத்தை எரித்துவிடுவேன். இதுவே நான் விருப்பப்படும் உணவு! அற்புதமான ஆயுதங்களை அறிந்த நீங்கள், மழைத் துளிகள் கீழே இறங்குவதையும், உயிரினங்கள் தப்பிப்பதையும் தடுத்தால், நான் இந்த வனத்தை எரிக்க ஆரம்பிப்பேன்!" என்றான்.

ஜனமேஜயன், "தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} காக்கப்பட்டு, பல உயிரினங்களுடன் இருந்த அந்தக் காண்ட வனத்தை உட்கொள்ள அந்தச் சிறப்பு மிகுந்த அக்னி ஏன் விரும்பினான்? அக்னி கோபத்துடன் காண்டவ வனத்தை உட்கொள்ள, பெரிய காரணம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஓ அந்தணரே {வைசம்பாயணரே}, இதை விவரமாக அறிய நான் விரும்புகிறேன். ஓ முனிவரே {வைசம்பாயணரே}, பழங்காலத்தில் காண்டவ வனம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்லும்." என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

{விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன். அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்தே இந்த மகாபாரதம். வைசம்பாயனர் உரைத்ததை கேட்ட சௌதியே தற்போது நைமிசாரண்யத்தில் சௌனகர் தலைமையில் சௌனகரின் பன்னிரண்டு வருட {12} வேள்வியில் பங்கெடுத்த முனிவர்கள் மத்தியில் மகாபாரதத்தை நமக்காகக் கூறுகிறார்}

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் புராணங்களில் சொல்லியபடி நான் காண்டவனத்தில் மூண்ட பெருந்தீயைப் பற்றிச் சொல்கிறேன். ஓ மன்னா {ஜனமேஜயா}, புராணங்களில் பலமும் வீரமும் பொருந்தி இந்திரனுக்கு நிகரான ஸ்வேதகி {Swetaki} என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான் என்று கேள்விப்படுகிறோம். வேள்விகளிலும், தானங்களிலும், புத்திசாலித்தனத்தில் அவனுக்கு நிகராக யாரும் உலகத்தில் இல்லை. ஸ்வேதகி ஐந்து பெரும் வேள்விகளையும் பல மற்ற வேள்விகளையும் செய்து, அந்தணர்களுக்கு பரிசுகள் பலவும் கொடுத்தான்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இதயம் எப்போதும் வேள்விகளிலும், அறச் சடங்குகளிலும், பரிசு பொருட்களைக் கொடுப்பதிலுமே நிலைத்திருந்தது. பெரும் புத்திகூர்மை உடைய ஸ்வேதகி, பல வருடங்களுக்கு வேள்விகளைச் செய்தான். தனக்கு வேள்வி செய்ய உதவி செய்த ரித்விக்குகள், தொடர்ந்து புகைபட்டு கண்கள் பாதிப்படைந்து, பலவீனமாகி அந்த மன்னனைவிட்டுப் போகும்வரை தொடர்ந்து வேள்விகளைச் செய்து வந்தான். பிறகு ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் தங்களால் வேள்விகளில் உதவ முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும், அம்மன்னன் {ஸ்வேதகி}, தொடர்ந்து அந்த ரித்விக்குகளை தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், கண்கள் வலி கொண்ட அவர்கள் {ரித்விக்குகள்} அவனது வேள்விக்கு வரவில்லை. ஆகையால், அந்த மன்னன் {ஸ்வேதகி}, தன் ரித்விக்குகளின் சிபாரிசில் அந்த ரித்விக்குகளைப் போன்றே உள்ள மற்ற ரித்விக்குகளைக் கொண்டு தான் தொடங்கிய அவ்வேள்வியை முடித்தான். சில நாட்கள் கடந்தது, மன்னன் ஸ்வேதகி நூறுவருடங்கள் செய்வதற்கான மற்றொரு வேள்வியைத் திட்டமிட்டான். ஆனால் அந்த சிறப்பு வாய்ந்த ஏகாதிபதிக்கு ஒரு புரோகிதரும் கிடைக்கவில்லை. அந்தக் கொண்டாடப்பட்ட மன்னம் {ஸ்வேதகி}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து, சோம்பலை விடுத்து, தனது புரோகிதர்களை, சமாதானப் பேச்சுகள் மூலமும், பரிசுகள் மூலமும், அவர்களை வணங்கியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான். அந்த அளவில்லா சக்தி கொண்ட மன்னனின் {ஸ்வேதகியின்} நோக்கத்தை சாதிக்க அனைவரும் மறுத்து விட்டனர். பிறகு கோபம் அடைந்த அந்த அரசமுனி {ஸ்வேதகி}, ஆசிரமங்களில் அமர்ந்திருந்த அந்த அந்தணர்களிடம், "அந்தணர்களே நான் வீழ்ந்த மனிதனாக இருந்தாலோ, உங்களுக்கு தரும் மரியாதையையோ சேவையையோ குறைத்து வழங்குபவனாக இருந்தாலோ உங்களாலோ அல்லது மற்ற அந்தணர்களாலோ இப்படி கைவிடப்பட்ட கதியை அடைய நான் தகுதி வாய்ந்தவனாவேன். ஆனால் நான் உங்களை அவமதிக்கவும் இல்லை,  தரம் தாழ்த்தவும் இல்லை. ஆகையால், அந்தணர்களில் முதன்மையானவர்களே, தகுந்த காரணமில்லாமல் நீங்கள் என்னைக் கைவிட்டு எனது வேள்விக்கு தடை செய்யக் கூடாது. அந்தணர்களே, நான் உங்கள் பாதுகாப்பைக் கோருகிறேன்! நீங்கள் எனக்கு நன்மை செய்ய வேண்டுகிறேன்.

ஆனால் அந்தணர்களில் முதன்மையானவர்களே, பகையால் மட்டுமே அல்லது சரியற்ற நோக்கத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கைவிடுவதாக இருந்தால், எனது வேள்விக்குத் துணைபுரிய மற்ற புரோகிதர்களை நாடி, அவர்களிடம் சமாதானமாகவும் இனிமையாகவும் பேசி அவர்களுக்குப் பரிசு கொடுத்து இந்த வேலையை அவர்கள் கையில் கொடுப்பேன்." என்று சொல்லி அந்த ஏகாதிபதி அமைதியடைந்தான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, பிறகு, தங்களால் மன்னனின் வேள்விக்குத் துணை புரிய முடியாது என்பதை அறிந்த அந்தப் புரோகிதர்கள், தாங்கள் கோபம் கொண்டதாக நடித்து, அந்த மன்னனிடம் {ஸ்வேதகியிடம்}, "ஓ மன்னர்களில் சிறந்தவனே, உனது வேள்விகள் இடைவிடாது தொடர்ச்சியாக நடக்கின்றன. உனக்குத் தொடர்ந்து துணை புரிந்து வருவதால், நாங்கள் களைப்படைந்திருக்கிறோம். உழைப்பால் எங்களுக்கு நேர்ந்த களைப்பால், நீ எங்களுக்கு விடுப்பு அளிப்பதே தகும். ஓ பாவமற்றவனே, நீதியை இழந்ததால், உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (தொடர்ந்து எங்களை துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறாய்). நீ ருத்ரனிடம் {சிவனிடம்} செல்! அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான்!" என்றனர். கோபத்தால் வந்த அந்தக் கண்டிக்கும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஸ்வேதகி மிகுந்த கோபம் கொண்டான். அந்த ஏகாதிபதி கைலாச மலைக்குச் சென்று, அங்கே துறவுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதி நிலைத்த கவனத்துடன் மகாதேவனை {சிவனை} வழிபட ஆரம்பித்தான். அவன் மிகுந்த கடுமையான தவம் இருந்தான். உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, அவன் பல காலங்களைக் கடத்தினான். அந்த ஏகாதிபதி {ஸ்வேதகி}, நாள் முழுவதும், சில வேளைகளில் பனிரெண்டாவது மணி நேரத்திலும், சில வேளைகளில் பதினாறாவது மணி நேரத்திலும் பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்டான். மன்னன் ஸ்வேதகி தொடர்ந்து ஒரு காலை உயர்த்தியபடி ஆறுமாதங்களுக்கு நிலைத்த கண்களுடனும், நிலைத்த கவனத்துடனும் ஒரு தூண் தரையில் ஊன்றப்பட்டது போலவும், ஒரு நெடும் மரம் நிற்பது போலவும் நின்றான். ஓ பாரதா {ஜனமேஜயா}, கடைசியில் சங்கரன் {சிவன்} கடும் தவம் இருந்த அந்த மனிதர்களில் புலி போன்றவனிடம் திருப்தியடைந்து, அவனிடம் தன்னைக் காண்பித்தான். அந்தத் தெய்வம் {சிவன்} அந்த ஏகாதிபதியிடம் {ஸ்வேதகியிடம்} அமைதியான கடும் குரலில், "ஓ மன்னர்களில் புலி போன்றவனே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, உனது துறவால் நான் திருப்தியடைந்தேன். நீ அருளப்பட்டிரு! ஓ மன்னா, இப்போது நீ விரும்பிய வரத்தைக் கேள்." என்று கேட்டான். அளவற்ற சக்தி கொண்ட அந்த ருத்திரனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அரச முனி அந்தத் தெய்வத்தைப் பணிந்து அவனிடம் {சிவனிடம்}, "ஓ சிறப்பு மிகுந்தவனே, மூன்று உலகத்தாலும் வழிபடப்படுபவனே, நீ என்னிடம் திருப்தியடைந்தாய் என்றால், ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ தேவர்களுக்கு தலைவா, எனது வேள்விகளில் நீ எனக்குத் துணை புரி." என்று கேட்டான். ஏகாதிபதியால் {ஸ்வேதகியால்} பேசப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த சிறப்பு மிகுந்த தெய்வம் {சிவன்} மிகவும் திருப்தி கொண்டு, புன்னகைத்து, "நாங்களே வேள்விகளுக்குத் துணை புரிவதில்லை; ஆனால், ஓ மன்னா, கடுந்தவங்களை இயற்றிய, நீ வரமாக இதை விரும்புவதால், இச்சூழ்நிலையில், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நான் உனது வேள்விக்கு துணை புரிகிறேன்." என்றான். பிறகும் ருத்திரன் தொடர்ந்து, "ஓ மன்னர் மன்னா, தொடர்ந்த பனிரெண்டு வருடங்களுக்கு நீ இடைவிடாமல் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு நிலைத்த கவனத்துடன் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால், நீ என்னிடம் கேட்பதை அடைவாய்." என்றான் {சிவன்}.

ருத்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் ஸ்வேதகி, அந்தத் திரிசூலம் தாங்கியவன் {சிவன்} வழிகாட்டியபடியே நடந்து கொண்டான். பனிரெண்டு வருடங்கள் கடந்தன, அங்கே மகேஸ்வரன் {சிவன்} மீண்டும் வந்தான். உலகத்தை உண்டாக்கிய அந்தச் சங்கரன், அந்த அற்புதமான ஏகாதிபதியான ஸ்வேதகியைக் கண்டு மிகுந்த திருப்தி அடைந்து உடனடியாக அவனிடம், "நான் உனது செயல்களால் திருப்தியடைந்தேன். ஆனால், ஓ மன்னர்களில் சிறந்தவனே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நானே வந்து உனது வேள்வியில் இன்று துணை புரிய மாட்டேன். இந்தப் பூமியில் எனது சுயத்தின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த அந்தணன் இருக்கிறான். அவன் துர்வாசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். பெரும் சக்தி கொண்ட அந்த அந்தணன் {துர்வாசன்} உனது வேள்வியில் உனக்குத் துணையாக இருப்பான். ஆகையால், வேள்விக்கான தயாரிப்புகள் தொடங்கட்டும்." என்றான் {சிவன்}.

ருத்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தனது தலைநகருக்குத் திரும்பி, தேவையானவற்றைச் சேகரித்தான். அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, மன்னன் {ஸ்வேதகி} மறுபடி ருத்திரனிடம் சென்று, "அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாகிவிட்டது. உனது கருணையால் அனைத்து தயாரிப்புகளும் முடிந்து விட்டன. ஓ தேவர்களுக்குத் தேவா, நாளை வேள்வியில் நீ நிறுவப்பட்டிரு." என்றான். அந்த சிறப்புவாய்ந்த மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட ருத்திரன் துர்வாசரை அழைத்து, அவரிடம், "ஓ துர்வாசரே, இந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஸ்வேதகி என்று அழைக்கப்படுகிறான். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {துர்வாசரே}, எனது கட்டளையின் பேரில், நீர் இந்த மன்னனுக்கு அவனது வேள்வியில் துணை புரியும்." என்று சொன்னார்.

அதற்கு துர்வாச முனிவர் ருத்திரனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். பிறகு மன்னன் சுவேதகியின் தயாரிப்புகள் முடிந்து வேள்வி நடந்தது. அந்தச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதி தகுந்த காலத்தில் விதிப்படி வேள்வியைச் செய்தான். அந்த நேரத்தில் அந்தணர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் அதிகமாக இருந்தது. அந்த ஏகாதிபதியின் வேள்வி முடிவுக்கு வந்ததும் துணை புரிய வந்த புரோகிதர்கள் அனைவரும் துர்வாசருடன் சென்று விட்டார்கள். வேள்வியில் இருந்த அளவிடமுடியாத சக்தி கொண்ட மற்ற அனைத்து சத்யஸ்யர்களும் சென்று விட்டார்கள். அந்த உயர்ந்த ஏகாதிபதி, வேதங்களை அறிந்த உயர்ந்த அந்தணர்களாலும் வழிபடப்பட்டு, குடிமக்களால் பாராட்டப்பட்டு, வாழ்த்துப்பா பாடப்பட்டு, தனது அரண்மனைக்குள் நுழைந்தான்.

இதுதான் ஏகாதிபதிகளில் சிறந்த அரசமுனி ஸ்வேதகியின் வரலாறு. பூமியில் பெரும் புகழ் கொண்ட அவனுக்கு நேரம் வந்ததும் தனக்கு வாழ்க்கையில் உதவிய ரித்விக்குகளுடனும், சத்யஸ்யர்களுடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஸ்வேதகியின் அந்த வேள்வியில் அக்னி தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நெய்யைக் குடித்திருந்தான். நிச்சயமாக அந்தக் காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட நெய் அக்னியின் வாயில் தொடர்ந்து உற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு அதிகமாக குடித்த அக்னிக்கு நெய் மிகவும் தெவிட்டி, இனி யார் கையிலும் எந்த வேள்வியிலும் நெய் உண்ணக்கூடாது என்று விரும்பினான். அக்னி தனது நிறத்தையும் பளபளப்பையும் இழந்து மங்கிப் போனான். அளவுக்கு அதிகமாக {நெய்யை} உண்டு தெவிட்டும் நிலையை அடைந்ததால் அவன் பசியற்ற {ஜீரணிக்காத} நிலையை உணர்ந்தான். அவனுக்கு சக்தி குறைந்து, நோயால் பாதிக்கப்பட்டான். பிறகு வேள்வி நெய்யைக் குடிப்பவன் தனது சக்தி சிறுகச் சிறுக குறைவதைக் கண்டு, அனைவராலும் வழிபடப்படும் பிரம்மனின் புனிதமான வசிப்பிடம் சென்றான். தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அந்தத் தெய்வத்தை {பிரம்மனை}அணுகிய அக்னி அவனிடம் {பிரம்மனிடம்}, "ஓ உயர்ந்தவனே, ஸ்வேதகி {தனது வேள்வியில்} என்னை அளவுக்கதிகமாக திருப்திப்படுத்தினான். தவிர்க்க முடியாத தெவிட்டும் நிலையால் இன்னும் நான் பாதிப்படைந்திருக்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மா}, நான் பிரகாசத்தாலும் சக்தியாலும் குறைந்து வருகிறேன். உமது கருணையால் நான் எனது இயல்பான தன்மையை மறுபடி அடைய விரும்புகிறேன்." என்று கேட்டான். ஹூதவாஹனின் {அக்னியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறப்புமிகுந்த படைப்பாளி {பிரம்மன்} அவனிடம் {அக்னியிடம்} புன்னகைத்து, "ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது. ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையை போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய, எதிரிகள் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அது இப்போது எண்ணிலடங்கா உயிரங்களுக்கு இல்லமாகி இருக்கிறது. அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், நீ உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களுடன் சென்று உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்." என்றான் {பிரம்மன்}. இந்த வார்த்தைகளைத் தலைமைத் தெய்வத்தின் உதடுகளில் இருந்த அறிந்த அந்த ஹூதசானன் {அக்னி} பெரும் வேகத்துடன் முன்னேறி விரைவாக பெரும் உற்சாகத்துடன் அந்தக் காண்டவப் பிரஸ்தத்தை அடைந்தான்.

காண்டவ வனம் பற்றி எரிவதைக் கண்ட அந்தக் கானக வாசிகள், பெரும் முயற்சி எடுத்து அந்தப் பெருந்தீயை அணைக்க முயன்றனர். நூறாயிரம் {ஒரு லட்சம்} யானைகள், கோபம் கொண்ட வேகத்துடன், தங்கள் துதிக்கைகளில் நீர் கொண்டு வந்து நெருப்பின் மீது இரைத்தன. கோபத்தால் பைத்தியமான ஆயிரக்கணக்கான, பல தலைகள் கொண்ட நாகங்கள், தங்கள் பல தலைகளிலும் நீர் இரைத்து அந்த நெருப்பை அணைக்க முயன்றன. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா} மற்ற கானகவாழ் உயிரினங்கள், பலதரப்பட்ட வழிகளிலும், பலவிதமான முயற்சிகளிலும் அந்த நெருப்பை அணைத்தன. இதே போல அக்னி ஏழு முறை அந்த காண்டவ வனத்தை எரித்தான். இப்படியே கானகத்தில் சுடர்விட்டெரிந்த அந்த நெருப்பு, அக்கானக வாசிகளால் அணைக்கப்பட்டது.

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

பெண் பித்தால் அழிந்த சகோதரர்கள் - ஆதிபர்வம் பகுதி 214

Brothers deceased due to lust| Adi Parva - Section 214 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வத் தொடர்ச்சி)
சுந்தனும் உபசுந்தனும் பெரும் இன்பத்துடன் போதையில் இருப்பது; அவர்கள் இருக்கும் இடத்திற்குத் திலோத்தமை சென்றது; அவள் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது; இருவரும் அழிவது; நாரதர் பாண்டவர்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்த வலியுறுத்துவது; அவர் முன்னிலையிலேயே அவர்களுக்குள் ஒரு விதி பிறப்பது.

Art of Cambodia in the Musée Guimet ,Reliefs of Banteay Srei Temple, Sunda-Upasunda
கம்போடிய நாட்டு ஸ்ரீ கோவிலில் உள்ள சுந்தன் உபசுந்தன் திலோத்தமை சிற்பம்
நாரதர் தொடர்ந்தார், "அதே வேளையில் அசுரச் சகோதரர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} முழு உலகத்தையும் அடக்கி எதிரிகள் அற்று இருந்தனர். மூன்று உலகங்களையும் தங்கள் முழு கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, தங்கள் முயற்சிகளால் ஏற்பட்ட களைப்பும் நீங்கிய பிறகு, அவர்களால் இனி செய்யப்பட வேண்டியது எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களையெல்லாம் அபகரித்து வந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர். அவர்கள் தங்களுக்கு (மூன்று உலகிலும்) எதிரிகளே இல்லை என்று கண்டபோது, இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து, மற்ற முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு தேவர்களைப் போல வாழ்ந்தனர். அவர்கள், பெண்கள், வாசனைப் பொருட்கள், பூ மாலைகள், இசை, குடி என அனைத்து வகை இன்பங்களையும் அனைத்து புலன் நுகர் பொருட்களையும் தாராளமாக அனுபவித்தனர்.


 ஒரு நாள் விந்திய மலைகளில் இருக்கும் கற்களும் மரங்களும் நிறைந்த சமவெளிகளுக்கு இன்பம் அனுபவிப்பதற்காகச் சென்றனர். மிகவும் ஏற்புடைய அனைத்து விருப்ப பொருட்களையும் அங்கே கொண்டு வந்த அந்தச் சகோதரர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} அற்புதமான இருக்கைகளில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், அழகானப் பெண்கள் துணையுடனும் அமர்ந்தனர். அந்த மங்கையர், அந்தச் சகோதரர்களை மகிழ்விக்க எண்ணி, அங்கே இசையுடன் கூடிய நடனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அங்கே அந்தச் சகோதரர்களை வாழ்த்திப் பாடல்கள் பாடப்பட்டன.

அதேவேளையில், சிவப்பு பட்டில் ஆன ஒற்றையாடையுடன் தனது அழகுகளை எல்லாம் வெளிப்படுத்திய திலோத்தமை, காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டே அந்த வழியில் வந்தாள். அந்தப் பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் {சுந்தன் உபசுந்தன்} இருந்த இடத்திற்கு அவள் {திலோத்தமை} மெதுவாக வந்தாள். அந்த அசுரச் சகோதரர்கள் நிறைய குடித்து போதையுடன் இருந்த போது, அந்த கற்பனைக்கெட்டாத அழகு கொண்ட மங்கையைக் {திலோத்தமையைக்} கண்டு அதனால் தாக்குண்டனர். அவர்கள் தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து அந்த மங்கையிருக்கும் இடத்திற்குச் சென்றனர். காமத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த இருவரும், தனக்கே அந்தப் பெண் வேண்டும் எனக் கேட்டனர். சுந்தன் அந்த மங்கையின் வலது கையைப் பற்றி இழுத்தான். தாங்கள் பெற்ற வரங்களாலும், பெரும் பலத்தாலும், செல்வங்கள் மற்றும் ரத்தினங்களாலும், தாங்கள் குடித்த மதுவினாலும், மிகுந்த போதைக்குள்ளாகி, அவைகளால் மதம் கொண்டு, விருப்பம் மற்றும் ஆசையினால் உந்தப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் கைகளில் வில் வளைத்து கோபத்துடன், "அவள் எனது மனைவி, ஆகையால் உனக்கு அவள் பெரியவள்", என்றான் சுந்தன். "அவள் எனது மனைவி, ஆகையால் அவள் உனக்கு கொழுந்தியாள்" என்ற மறுமொழி கூறினான் உபசுந்தன். பிறகும் அவர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} ஒருவருக்கு ஒருவர், "அவள் எனதே, உனத்தல்ல" என்றனர். விரைவில் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகினர். அந்த மங்கையின் அழகால் பைத்தியம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் தாங்கள் கொண்டிருந்த தங்கள் அன்பையும் பாசத்தையும் மறந்து, ஆசையால் நினைவிழந்து,
திலோத்தமைக்காக கதாயுதங்களால்
அடித்து கொள்ளும் சுந்தனும் உபசுந்தனும்
கடும் கதாயுதங்களை கையில் ஏந்தினர். இருவரும், (அவள் {திலோத்தமை} கரம் பற்றுவதில்) "நானே முதல்வன், நானே முதல்வன்" என்று சொல்லி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அந்த முரட்டு அசுரர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} உடனே தரையில் விழுந்து, ரத்தத்தில் குளித்து, வானத்தில் இருந்து விழுந்த இரு சூரியன்களைப் போல கிடந்தனர். அங்கே அவர்களுடன் வந்திருந்த பெண்களும் மற்ற அசுரர்களும் இதைக் கண்டு பயத்தாலும் துயரத்தாலும் ஓடி பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்தனர். சுத்தமான ஆன்மா கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, தேவர்களுடனும் பெரும் முனிவர்களுடனும் அங்கே வந்தார். அந்த சிறப்பு மிக்க பெருந்தகப்பன் திலோத்தமையைப் பாராட்டி, அவளுக்கு ஒரு வரம் தர விரும்புவதாகச் சொன்னார். அந்தத் தலைமை தெய்வம், வரம் கொடுக்க விரும்பி திலோத்தமையிடம், "ஓ அழகான மங்கையே, நீ ஆதித்யர்களின் உலகத்தில் சஞ்சரிக்கலாம். யாரும் நீண்ட நேரம் பார்க்க முடியாத வகையில் உனது பிரகாசம் பெரிதாக இருக்கும்!" என்றார். அனைத்து உயிர்களுக்கு பெரும்பாட்டன் அவளுக்கு இந்த வரத்தைக் கொடுத்த பிறகு, மூன்று உலகங்களுக்கும் இந்திரனை முன்பு போலவே நிறுவி, தனது இடத்திற்குத் திரும்பினார்."

நாரதர் தொடர்ந்தார், "இப்படியே, எப்போதும் ஒற்றுமையாகவும், அதற்காகவே முன்னுதாரணமாகவும் கொள்ளப்பட்ட அந்த அசுரர்கள், திலோத்தமைக்காக கோபத்தில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர். ஆகையால் பாசத்தால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாரத குலத்தில் வந்த முதன்மையானவர்களே, எனக்கு ஏற்புடையது எதையும் செய்ய நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், திரௌபதி குறித்து உங்களுக்குள் வேற்றுமை வராதபடிக்கு உங்களுக்குள் ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் {நாரதர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும் முனிவர் நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த சிறப்புமிகுந்த பாண்டவர்கள், தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆலோசித்து, அளவிட முடியாத சக்தி கொண்ட அந்த தெய்வீக முனிவரின் முன்னிலையில், தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட விதி என்னவென்றால், அவர்களில் ஒருவர் திரௌபதியுடன் அமர்ந்திருக்கும்போது, மற்ற நால்வரில் எவரேனும் அவர்களைக் கண்டால், அவன் பனிரெண்டு வருடங்களுக்கு [1] பிரம்மச்சாரியாக கானகத்திற்குள் ஓய்ந்து போக வேண்டும். இப்படி ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட, அந்த அறம் சார்ந்த பாண்டவர்களைக் கண்ட பெரும் முனிவர் நாரதர், அவர்களிடம் மிகவும் திருப்தி கொண்டு, தான் விரும்பிய இடத்திற்கு சென்றார். இப்படியே, ஓ ஜனமேஜயா, நாரதரால் உந்தப்பட்ட பாண்டவர்கள், தங்களுக்குள் பொது மனைவியைக் குறித்து ஒரு விதியை அமைத்துக் கொண்டனர். மேலும், இதனால்தான், ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர்களுக்குள் இது விஷயத்தில் சச்சரவு ஏற்படவில்லை", என்றார் {வைசம்பாயனர்}.

வேறு பதிப்புகளில் 12 மாதம் என்றும் இருக்கிறது. ஆனால் அர்ஜுனன் அந்தத் தேசாந்தரத்தில் இந்தியாவின் பல பகுதிகளைக் கடக்கிறான். அவற்றை 12 மாதங்களில் கடக்க முடியுமா என்பதும், 12 வருடங்கள் தேவைப்படுமா என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதே!


திலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள் - ஆதிபர்வம் பகுதி 213

Siva's extra three faces due to Thilottama | Adi Parva - Section 213 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வத் தொடர்ச்சி)

சுந்தனும் உபசுந்தனும் புரியும் தீயச் செயல்களை தேவர்களும் முனிவர்களும் பிரம்மனிடம் சொல்லி முறையிடுவது; பிரம்மன் விசுவகர்மாவை அழைத்து அசுரச் சகோதரர்களின் அழிவுக்காக அழகான ஒரு பெண்ணை படைக்கச் சொன்னது; படைக்கப்பட்ட அப்பெண்ணைப் பார்த்து தேவர்களும், இந்திரனும், சிவனும் மயங்கியது;

ராஜா ரவிவர்மாவின்
திலோத்தமை ஓவியம்

நாரதர் தொடர்ந்தார், "பிறகு, மன அமைதியும், சுயக்கட்டுப்பாடும் கொண்ட அந்த தெய்வீக முனிவர்களும், சித்தர்களும், உயர் ஆன்ம முனிவர்களும், அந்த அண்ட ப் படுகொலையைக் கண்ட பெரும் துயரம் கொண்டனர். ஆசைகளையும், புலன்களையும், ஆன்மாவையும் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அண்டத்தின் மீது பரிவு கொண்டு, அவர்கள் அனைவரும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} இருப்பிடத்திற்குச் சென்றனர். அங்கே சென்று, பெரும்பாட்டனைச் {பிரம்மனைச்} சுற்றி தேவர்களும், சித்தர்களும், பிரம்ம முனிவர்களும் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அங்கே தேவர்களுக்குத் தேவன் மகாதேவன் {சிவன்}, அக்னி, வாயு, சோமன் {சந்திரன்}, சூரியன், சக்ரன் {இந்திரன்}, பிரம்மனையே தியானிக்கும் முனிவர்கள், வைகானசர்கள், வாலகில்யர்கள், வானப்பிரஸ்தர்கள், மரீசிபர்களும், அஜர்கள், அவிமூடர்கள், போன்ற பெரும் சக்தி படைத்த பல துறவிகள் அங்கே இருந்தனர். 

சோகம் நிறைந்த இதயங்களுடன் தேவர்களும் மற்ற முனிவர்களும் பிரம்மனை அணுகிய போது மேற்குறிப்பிட்ட அனைத்து முனிவர்களும் அங்கே பெருந்தகப்பனோடு {பிரம்மனோடு} அமர்ந்திருந்தார்கள். அப்படி வந்த அவர்கள் {முனிவர்கள்} சுந்தன் மற்றும் உபசுந்தனின் செயல்களைப் பற்றிக் கூறினர். அவர்கள் {முனிவர்கள்} அந்த அசுர சகோதரர்களின் {சுந்தன், உபசுந்தனின்} செயல்களை, அது எப்படி நிறைவேற்றப்பட்டது, எந்த வரிசையில் செய்யப்பட்டது போன்றவற்றை முழுவதுமாக எடுத்துக் கூறினர். பிறகு அனைத்து தேவர்களும் பெரு முனிவர்களும் இந்தக் காரியத்தைக் குறித்து அதிக அழுத்தத்துடன் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சொல்லினர். அந்தப் பெருந்தகப்பன் அவர்கள் சொன்ன அனைத்தையும் விவரமாகக் கேட்டு, சிறிது நேரம் யோசித்துவிட்டு, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தன் மனதில் தீர்மானித்தார்.

அந்த அசுரச் சகோதரர்களுக்கு {சுந்தனுக்கும் உபசுந்தனுக்கும்} அழிவை ஏற்படுத்த ஒரு தீர்மானம் செய்து, விஸ்வகர்மனை {Viswakarman-தேவலோக தச்சன்} அழைத்தார். விஸ்வகர்மனைத் தன் முன் கண்ட பெரும் ஆன்மத் தகுதி கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்} அவனிடம் {விஸ்வகர்மனிடம்}, "அனைத்து இதயங்களையும் கொள்ளை கொள்ளும் தகுதி கொண்ட ஒரு மங்கையைப் படை {உற்பத்தி செய்}. பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி அவரது உத்தரவை மரியாதையுடன் பெற்றுக் கொண்டு, அண்டத்தின் பெரும் தச்சன் {விஸ்வகர்மா} மிகுந்த கவனத்துடன் ஒரு மங்கையைப் படைத்தான். விஸ்வகிரீத் {Viswakrit} முதலில் அனைத்து அழகு குணங்களையும் தொகுத்து அந்த மங்கையின் மேனியில் சேர்த்து படைத்தான். நிச்சயமாக, அந்த தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள். விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதிருந்தாள். பார்வையாளர்கள் பார்த்து ஸ்தம்பிக்காத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது. இயல்புக்கு மிக்க தனது அழகால், தெய்வீக ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருந்து அனைத்து உயிர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டாள். அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பெருந்தகப்பன் அவளுக்கு திலோத்தமை {Tilottama} என்ற பெயரைக் கொடுத்தார். அதற்கு உயிர் கொடுத்து, அதன் வாழ்க்கை துவங்கிய போது, அந்த மங்கை {திலோத்தமை} பிரம்மனிடம் தலை வணங்கி, கரங்கள் கூப்பி, "படைக்கப்பட்ட அனைத்து பொருளுக்கும் தலைவா {பிரம்மா}, நான் என்ன பணியைச் சாதிக்க வேண்டும். நான் எதற்காகப் படைக்கப் பட்டேன்?" என்று கேட்டாள். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "ஓ திலோத்தமா, அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தனிடம் செல். ஓ இனிமையானவளே, உனது கொள்ளை கொள்ளும் அழகால் அவர்களை மயக்கு. ஓ மங்கையே, அங்கே சென்று, அந்த அசுரச் சகோதரர்களின் {சுந்தன் உபசுந்தனின்} பார்வை உன் மீது பட்டவுடன், உனது அழகு என்ற செல்வத்தை அடைய எண்ணம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும்படி நீ நடந்து கொள்" என்றார் {பிரம்மன்}.

நாரதர் தொடர்ந்தார், "அந்த மங்கை {திலோத்தமை}, பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தேவர்கள் சூழ்ந்த அந்தச் சபையைச் சுற்றி நடந்தாள். அந்த சிறப்பு மிகுந்த பிரம்மன் அப்போது தனது முகத்தை கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார். மகாதேவனும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருந்தான். மற்ற தேவர்கள் அனைவரும் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். மற்ற முனிவர்கள் அனைவரும் எல்லா திசைகளையும் பார்த்து அமர்ந்திருந்தார்கள். தேவர்கள் அமர்ந்திருந்த அந்த சபையை வலம் வந்த அந்த திலோத்தமையை, இந்திரனும் அந்தச் சிறப்புமிக்க ஸ்தானுவும் (மகாதேவனும் {சிவனும்}) மட்டும்தான் தங்கள் மன அமைதியை இழக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த மங்கை{திலோத்தமை} தனது அருகில் வந்தபோது மிகுந்த ஆசைக்குள்ளான மகாதேவனின் {சிவனின்} உடலில் (திலோத்தமைக் கண்டு) தென்புறத்தில் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல ஒரு முகம் தோன்றியது. அவள் {திலோத்தமை} அவனுக்குப் {சிவனுக்குப்} பின்புறம் சென்றதும் மேற்கில் ஒரு முகம் தோன்றியது. அந்த மங்கை அந்தப் பெரும் தேவனுக்கு {சிவனுக்கு} வடக்கு புறத்தில் சென்றதும், நான்காவதாக அவனது உடலில் வடக்கு பக்கம் ஒரு முகம் தோன்றியது. 

(அந்த மங்கையைக் காண ஆவலுடன் இருந்த) தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} ஒவ்வொன்றும் அகலமாகவும், சிவந்தும் முன்பும் பின்பும், இடுப்பிலுமாக ஆயிரம் கண்கள் தோன்றியன. இப்படியே பெரும் தேவன் ஸ்தானுவுக்கு {சிவனுக்கு} நான்கு முகங்களும், பலனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} ஆயிரம் கண்களும் உண்டாயிற்று. இதன் நிமித்தமாக அனைத்து தேவர்களும் முனிவர்களும், தங்களை வலம் வந்த திலோத்தமை சென்ற திசைகளில் எல்லாம் தங்கள் முகத்தைத் திருப்பினர். தெய்வீகமான பெரும்பாட்டனை {பிரம்மனைத} தவிர அங்கிருந்த சிறப்பு வாய்ந்த அனைவரின் பார்வையும் {திருஷ்டியும்} திலோத்தமையின் உடல் மீது விழுந்தது. திலோத்தமை (அசுரர் நகரத்திற்குக்) கிளம்பியதும், அவளது அழகின் செல்வத்தின் மீது இருந்த மதிப்பால் அனைவரும் அந்தப் பணி முடிந்ததாகவே நினைத்தனர். அப்படி அந்த திலோத்தமை சென்றதும், அண்டத்தின் முதல் காரணமான அந்தப் பெரும் தலைவன் {பிரம்மன்} தேவர்களையும் முனிவர்களையும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.


ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

சுந்தனும் உபசுந்தனும் - ஆதிபர்வம் பகுதி 211

Sunda and Upasunda | Adi Parva - Section 211 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வத் தொடர்ச்சி)

சுந்தன் உபசுந்தன் ஆகியோரின் கடுந்தவம்; பிரம்மா அவர்களுக்குக் கொடுத்த வரம்; கொடுக்க முடியாத வரம்; மாற்றிக் கொடுத்த வரம்; மகிழ்ச்சி நிறைந்த தைத்தியர்களின் நகரம்….

வைசம்பாயனர் சொன்னார், "யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, ஓ யுதிஷ்டிரா, நான் சொல்லப்போகும் இந்தப் பழைய கதையை உனது தம்பிகளுடன் சேர்ந்து நடந்தது அத்தனையும் நடந்தபடியே கேள். பழங்காலத்தில் ஒரு பெரும் பலம் வாய்ந்த தைத்தியன் ஒருவன் பெரும் சக்தியும் பலமும் கொண்டு, நிகும்பன் என்ற பெயரில் பெரும் அசுரனான ஹிரண்யகசிபுவின் {விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்டவன்} குலத்தில் பிறந்தான். அந்த நிகும்பனுக்கு, சுந்தன், உபசுந்தன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். அந்த  பலம் வாய்ந்த அசுரர்கள் இருவரும் பெரும் சக்தியும் பயங்கரமான வீரமும் கொண்டிருந்தார்கள். 

அச்சகோதரர்கள் இருவரும், கடுமையானவர்களாகவும் தீய இதயம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த தைத்தியர்கள் இருவரும் ஒரு தீர்மானம் கொண்டு, ஒரே சாதனைகளையும் முடிவையும் எப்போதும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் ஏற்கும் வகையில் செயல்கள் செய்து வந்தனர். அந்தச் சகோதர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தனர். எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றனர். ஒரே வகையான தீர்மானமும் பழக்க வழக்கமும் கொண்ட அவர்களைக் காணும் போது, ஒரே மனிதன் இரு பிரிவாகப் பிரிந்தது போல இருந்தது. பெரும் சக்தி கொண்டு, எல்லாவற்றிலும் எப்போதும் ஒரு தீர்மானம் கொண்ட அந்தச் சகோதரர்கள் படிப்படியாக வளர்ந்து வந்தனர். ஒரு காரணத்துக்கான செயலைச் செய்து, மூன்று உலகங்களையும் அடக்கி ஆள விருப்பம் கொண்ட அந்தச் சகோதரர்கள், சரியான தயாரிப்புகளுக்குப் பிறகு, விந்திய மலைக்குச் சென்றனர். அங்கே சென்று கடும் தவங்களைச் செய்தனர். பசியாலும் தாகத்தாலும் துன்புற்று, தலையில் சடாமுடி தரித்து, மரவுரி {மரப்பட்டைகளால் ஆன உடுப்பு} உடுத்தி, நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மத் தகுதி அடைந்தனர். அவர்கள் தங்களைத் தலை முதல் கால் வரை அழுக்காகிக்கொண்டு, காற்றை மட்டுமே உண்டு, கால் கட்டைவிரலில் நின்று தவம் செய்தனர். பிறகு தங்கள் உடல் சதைகளைத் துண்டுகளாக அறுத்து நெருப்பில் போட்டனர். தங்கள் கரங்களை உயரத் தூக்கியபடி, நிலைத்தக் கண்களுடன்,  அவர்கள் நோற்ற தவம் நீண்ட காலமாக நடந்தது. அவர்கள் அப்படி ஆன்மிகத் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், ஒரு அற்புதமான நிகழ்வு நடந்தது. அவர்களது ஆன்மிகத் தவத்தின் சக்தியினால்
எரிமலையான
விந்தியமலை
நீண்ட காலமாக கொதிப்புற்ற விந்தியமலை எல்லாப்புறங்களிலும் புகையை வெளியிட்டது. அவர்களது தவத்தின் மகிமையைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்தனர். பிறகு அவர்களது ஆன்ம தவத்தை முன்னேற்றம் காண விடாது, அந்த தேவர்கள் எண்ணற்ற தடைகளை அவர்களுக்கு உண்டாக்கினர். தேவர்கள் தொடர்ச்சியாக அச்சகோதரர்களை {சுந்தனும் உபசுந்தனும்} , பல விலைமதிப்பில்லாத பொருட்களைக் கொண்டும், மிகுந்த அழகுடைய பெண்களைக் கொண்டும் மயக்கினர். இருப்பினும் அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை. பிறகு அந்த சிறப்புமிகு சகோதரர்களின் முன்னிலையில் தங்கள் மாயச் சக்தியைப் பயன்படுத்தி தேவர்கள் மறுபடியும் முயன்றனர். அவர்களது சகோதரிகள், தாய்மார்கள், மனைவியர் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும், கலைந்த கேசம், ஆபரணம் மற்றும் உடைகளுடன் அவர்களை நோக்கி பயத்துடன் ஓடி வருவது போலவும், கையில் கதை கொண்ட ஒரு ராட்சசன் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டு வருவதாகவும் அவர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} கண்டனர். அப்படி ஓடி வந்த பெண்கள் அந்தச் சகோதரர்களை நோக்கி, "எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று கேட்பது போலவும் தோன்றிற்று. ஆனால், இவையாவும் அவர்களை அசைக்கவில்லை. அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை. இந்தக் காட்சி அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதைக் கண்ட போது அந்த மங்கையரும் ராட்சசனும் அவர்களது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள். பிறகு கடைசியில், அனைவரின் நலனையும் வேண்டும், தலைவர்களுக்குத் தலைவனான பெரும்பாட்டன் {பிரம்ம}, அந்தப் பெரும் அசுரர்களிடம் வந்து, அவர்கள் விரும்பிய வரத்தைக் கேட்குமாறு சொன்னார்.

பிறகு பெரும் வீரம் கொண்ட சகோதரர்களான சுந்தனும் உபசுந்தனும், பெரும்பாட்டனைக் {பிரம்மனைக்} கண்டு, தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, கரங்கள் கூப்பி அவருக்காகக் காத்திருந்தனர். அந்தச் சகோதரர்கள் இருவரும் {சுந்தனும் உபசுந்தனும்}அந்தக் கடவுளிடம், "ஓ பெரும்பாட்டனே, நீர் எங்களது ஆன்மிகத் தவத்தால் திருப்தி அடைந்தீரே ஆனால், ஓ தலைவா, எங்களுக்கு அனைத்து ஆயுதங்களின் அறிவையும், மாய சக்திகளின் அறிவையும் கொடுத்த நன்மையைச் செய்யும். நாங்கள் பெரும்பலத்துடன் விரும்பிய உருவை எடுக்கும் சக்தியை எங்களுக்குத் தந்தருளும். கடைசியாக எங்களுக்கு சாகா வரத்தை அருளும்" என்று கேட்டனர் {சுந்தனும் உபசுந்தனும்}.

அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன், "சாகாவரம் தவிர்த்து, நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் மட்டும் மரணம் நேரும் வகையில் நீங்கள் வரம் கேட்டால், மரணிக்காதவர் போலவே வாழலாம். நீங்கள் மூன்று உலகத்தையும் அடக்கி ஆளவே கடும் தவம் இயற்றினீர்கள். ஓ பெரும் பலம் வாய்ந்த தைத்தியர்களே, நீங்கள் கேட்ட அந்த ஒரு விருப்பத்தை {சாகா வரத்தை} மட்டும் என்னால் தர முடியாது" என்றார்.

நாரதர் தொடர்ந்தார், "பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுந்தனும் உபசுந்தனும், "ஓ பெரும்பாட்டனே, எங்களில் ஒருவரால் தவிர, அசைவன, அசையாதன, என்ற மூவுலகத்தில் இருக்கும் படைக்கப்பட்ட எந்தப் பொருளினாலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது" என்று கேட்டனர். அதற்கு பெருந்தகப்பன் {பிரம்மன்}, "இப்பொழுது நீங்கள் கேட்ட விருப்பத்தை நான் உங்களுக்கு அருள்கிறேன்" என்று சொல்லி அவர்களுக்கு வரத்தைக் கொடுத்து, அவர்களின் தவத்தைக் கைவிட வைத்து, தனக்கு உரிய பகுதிக்குச் சென்றுவிட்டார். பிறகு அந்தப் பலம் வாய்ந்த சகோதரர்களான தைத்தியர்கள் {சுந்தனும் உபசுந்தனும்}, பல வரங்களைப் பெற்று, அண்டத்தில் யாராலும் கொல்லப்பட முடியாதவர்களாக ஆனார்கள். பிறகு, அவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினார்கள். பெரும் புத்திசாலித்தனம் உடைய அந்த தைத்தியர்களின் உறவினர்களும் நண்பர்களும், வெற்றி மகுடம் சூடி பல வரங்களைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர்களைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். சுந்தனும் உபசுந்தனும் தங்கள் சடா முடிகளை வெட்டி தலையில் மகுடம் சூடினர். விலை உயர்ந்த ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து மிகுந்த அழகுடன் காட்சியளித்தனர். அவர்கள் தங்கள் நகரத்தில் ஒவ்வொரு இரவும் தகுந்த நேரமாக இல்லாதிருந்தாலும் சந்திரனை அங்கே உதிக்க வைத்தனர். அவர்களது நண்பர்களும் உறவினர்களும் இதயத்தில் ஆனந்தம் அடைந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, இன்பத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.  சாப்பிடு, ஊட்டு, கொடு, சந்தோஷப்படுத்து, பாடு, குடி போன்ற உற்சாகக் குரல்கள் தினம் தினம் எல்லா வீடுகளிலும் கேட்டது. ஆங்காங்கே சத்தமான குரல்களுடன் கைதட்டல்களும் சேர்ந்து அந்த தைத்தியர்களின் நகரத்தையே நிறைத்தது. நினைத்த உருவை அடையும் அந்த தைத்தியர்கள் எல்லாவகையான இன்ப விளையாட்டுகளிலும் ஈடுபட்டு, ஒரு முழு வருடத்தை ஒரு நாளாகக் கருதி, காலம் கடப்பதையே அறியாது இருந்தார்கள்."
----------------------------------------------------------------------------------------------------------
*எரிமலை (Volcano) என்பது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்புசாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும்."வால்கனோ" (volcano) என்ற சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வால்கன் என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும்.
நன்றி:http://ta.wikipedia.org/wiki/எரிமலை


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2017, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top