clone demo
வியாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

வெற்றியாளர்களிடம் காணப்படும் அறிகுறிகள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 003இ

Indications of those who will be victorious! | Bhishma-Parva-Section-003c | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் வியாசரிடம் தன் நிலையை விளக்கிக் கூறுவது; வியாசரின் உத்தரவின் பேரில் தனது மனத்தில் இருப்பதைத் திருதராஷ்டிரன் கேட்பது; வெற்றி பெறப் போகும் வீரர்களிடம் காணப்படும் அறிகுறிகளையும், தோல்வியுறுபவர்களின் அறிகுறிகளையும் வியாசர் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; படை சிதறுவதற்கான காரணங்களை வியாசர் சொல்வது...

{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, "அந்த அந்தணர்களில் சிறந்தவர் {வியாசர்}, சோகம் நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பேச்சுக் கலையை அறிந்தவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன், மீண்டும் ஒருமுறை அவரிடம் {வியாசரிடம்}, "வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றைக் குறித்த என் அறிவு உமக்கு ஒத்ததாகவே இருக்கிறது. இவற்றின் உண்மையை நான் அறிவேன். எனினும், சுய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளும் மனிதன், நீதியை இழக்கிறான். ஓ! ஐயா {வியாசரே}, நான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அறிவீராக. நீரோ அளவிலா சக்தி படைத்தவர். உமது சக்தியை {கருணையை} எங்களுக்கு அளிக்குமாறு நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள நீரே எங்களுக்குப் புகலிடமும், வழிகாட்டியும் ஆவீர். ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, எனது மகன்கள் எனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இல்லை. எனது அறிவும் பாவம் இழைக்கத் துணியவில்லை. பாரதர்களின் புகழ், சாதனைகள் மற்றும் அறத்துணிவு ஆகியவற்றுக்கு நீரே காரணமாவீர். குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவருக்கும் நீர் மதிப்புமிக்கப் பாட்டனாவீர்" என்றான் {திருதராஷ்டிரன்}.


வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! விசித்திரவீரியனின் அரச மகனே {திருதராஷ்டிரா}, உனது மனதில் இருப்பதைத் தாராளமாக என்னிடம் சொல்வாயாக. நான் உனது ஐயங்களை விலக்குவேன்" என்றார்.

திருதராஷ்டிரன், "ஓ! புனிதமானவரே {வியாசரே}, போரில் வெற்றி பெறுபவர்களின் அடையாளங்கள் அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்" என்றான்.

வியாசர், "(புனித) நெருப்பு, உற்சாகமான பிரகாசத்தை வகிக்கிறது {நிர்மலமான காந்தியைக் கொண்டிருக்கிறது}. அதன் ஒளி மேல்நோக்கி உயர்கிறது. அதன் சுடர் வலமாக {சுற்றி} வளைகிறது. புகையற்று அது சுடர்விடுகிறது. அதில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகள் {நெய்} நறுமணத்தைக் கொடுக்கிறது. இவையே எதிர்கால வெற்றிக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகிறது. சங்குகளும், மிருதங்கங்களும், ஆழ்ந்த மற்றும் உரத்த ஒலியைக் கொடுக்கின்றன. சூரியனும், சந்திரனும் தூய கதிர்களைக் கொடுக்கிறார்கள். இவையே எதிர்கால வெற்றிக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகிறது. காகங்கள் நின்று கொண்டிருந்தாலோ அல்லது சிறகடித்துக் கொண்டிருந்தாலோ கூட ஏற்புடைய வகையிலேயே கரைகின்றன. பின்னால் இருப்பவை, {காக்கைகள்}, போர்வீரர்களை முன்னேறத் தூண்டுகின்றன; அதே வேளையில் முன்னால் இருப்பவையோ, முன்னேற்றம் அனைத்தையும் தடுக்கின்றன [1].

[1] வேறு பதிப்பில் இந்த வரிகள், "பயணத்திற்குப் புறப்படுபவர்களுக்கும், பயணத்தில் இருப்பவர்களுக்கும், காக்கைகளின் வாக்குகள் வெளிப்படுதல் விரும்பத்தக்கதாகும். புறப்படுகின்றவர்களுக்குப் பின்புறத்தில் இருந்து கத்துகின்ற காக்கைகள், போகின்றவர்களைத் துரிதப்படுத்துகின்றன. புறப்படப் போகிறவர்களுக்கு முன்னால் இருந்து கத்துகின்ற காக்கைகள் பயணத்தைத் தடுக்கின்றன" என்றிருக்கிறது. கங்குலியோ, "67ம் சுலோகத்தின் இரண்டாவது வரி மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. மொழிபெயர்ப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். காகங்கள் ஒரு படைக்குப் பின்னால் பறக்கும்போது, அது மங்கலமான அறிகுறி என்றும்; அவை முன்னால் இருப்பதைக் கண்டால், அது அமங்கலக்குறி என்றும் பொருள் தருவதாகப் படுகிறது. ye என்ற சுட்டுப்பெயரை {pronoun-ஐ} காக்கைகளாகவே எடுத்துக் கொள்வதில் நீலகண்டர் செய்தது சரியா என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இல்லை" என்கிறார்.

கழுகுகள், அன்னங்கள், கிளிகள், மரங்கொத்திகள் {அன்றில்கள்} ஆகியவை எங்கே இனிமையாக ஒலியெழுப்பி வலமாகச் சுற்றுகின்றனவோ, அவர்கள் {அங்கே உள்ளவர்கள்} போரில் வெல்வது உறுதி என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். ஆபரணங்கள், கவசங்கள், கொடிக்கம்பங்கள் அல்லது குதிரைகளின் இனிமையான கனைப்பொலி ஆகியவை எவருடைய படைப்பிரிவுகளில் காண முடியாத அளவுக்குப் பிரகாசிக்கின்றனவோ, அவர்கள் எப்போதும் எதிரிகளை வெல்வார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, எவருடைய வீரர்கள் உற்சாகமாக முழக்கமிடுகிறார்களோ, எவருடைய சக்திகள் தணிக்கப்படாமல் இருக்கிறதோ, எவருடைய மாலைகள் வாடாமல் இருக்கின்றவோ அவர்கள் எப்போதும் போர்க்கடலைக் {போர் எனும் கடலைக்} கடப்பார்கள். எதிரியின் படைப்பிரிவுகளைத் துளைத்துக் கொண்டு எவர் உற்சாகமாக முழக்கமிட்டுக் கொண்டு, எதிரியிடம் கூட அன்பான வார்த்தைகளைச் [2] சொல்கிறார்களோ, எவர் அடிப்பதற்கு முன்பே எதிரியை எச்சரிக்கிறார்களோ அவர்கள் வெற்றியை அடைகிறார்கள்.

[2] "போரிடாதே. ஏனெனில் நீ விரைவில் இறந்தவனாவாய்" என்பது போன்ற வார்த்தைகளாக இருக்கலாம் என்கிறார் கங்குலி

கேள்வி {காது கேட்கும் திறன்}, பார்வை, சுவை, தொடுதல் மற்றும் மணம் ஆகியவை மோசமான எந்தவித மாற்றத்திற்கும் ஆளாகாமல் இருந்தால் அவை மங்கலமாகும். போராளிகளுக்கு எப்போதும் இன்பமாயிருப்பதும், ஒரு வெற்றிகரமான படையின் அடையாளமாகும். வீசும் காற்றும், மேகங்களும், பறவைகளும் உதவிகரமாக இருப்பதும்; அதே வேளையில் (உதவிகரமாக இருக்கும்) மேகங்களும், வானவில்லும் நன்மையான மழையைப் பொழிவதும் வெற்றியின் மற்றொரு அடையாளமாகும் [3]. {மேகங்கள் நன்மையான மழையைப் பொழிதலும், வானவில் பின்தொடர்ந்து வருதலும் வெற்றியாளர்களின் அடையாளமாகும்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, வெற்றியால் மகுடந்தரிக்கப்படும் படைகளின் அடையாளங்கள் இவை. அதே வேளையில் ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அழிவுக்குள்ளாவோருக்கு இவை அனைத்தும் மாறுபட்டு அமையும்.

[3] வேறு பதிப்புகளில், "காற்றுகள் அனுசரித்து வீசுதலும், அவ்வாறே மேகங்களும், பறவைகளும், இந்திரவில்களும் {வானவில்களும்} பின்தொடர்ந்து செல்லுதலும் வெற்றியாளர்களின் அடையாளங்களாகும்" என்று இருக்கிறது.

படை சிறியதோ, பெரியதோ, போராளிகளின் குணமாக உற்சாகம் இருக்குமேயானால், அதுவே நிச்சயம் வெற்றியின் அடையாளம் ஆகும். பீதியடைந்த படைவீரன் ஒருவன், ஒரு பெரிய படையே அச்சத்துள்ளாகி பின்வாங்குவதற்குக் காரணமாக இருக்க முடியும். ஒரு படையானது பீதிக்குள்ளாகி பின்வாங்கினால், வீரமிக்கப் போர்வீரர்களும் அச்சங்கொள்ளக் காரணமாக அதுவே அமையும். ஒரு முறை உடைக்கப்பட்டு, விரட்டப்படும் ஒரு பெரும்படை அச்சத்தால் சிதறியோடும் மான்கூட்டத்தைப் போலவோ, வலிமைமிக்க ஊற்றுக் கொண்ட நீரைப் போலவோ தடுக்க {திருப்ப} முடியாததாகும். ஒரு பெரும்படை ஒருமுறை விரட்டப்பட்டாலே, அதை மீண்டும் திரளச் செய்வது இயலாது; மறுபுறம், அப்படி உடைக்கப்பட்ட அந்தப் படையினால், ஓ! பாரதா {திருதராஷ்டிரா} போரில் நன்கு திறம்பெற்றவர்கள் கூட உற்சாகத்தை இழப்பார்கள்.

அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஓடும் வீரர்களைக் காண்பதால், அந்தப் பீதி பல்வேறு திசைகளிலும் பரவி, விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, முழுப் படையும் உடைந்து, அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடும். ஒரு படை இப்படி விரட்டப்படும்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நால்வகைப் படைகளைக் கொண்ட பெரும் பிரிவுகளின் தலைமையில் இருப்போரான துணிச்சல் மிக்கத் தலைவர்களால்கூட அவர்களை {மீண்டும்} அணிதிரட்ட முடியாது. சுறுசுறுப்புடன் எப்போதும் உழைக்கும் ஒரு புத்திசாலி மனிதன், வழிகளின் {உபாயங்களின்} துணை கொண்டு (வெற்றியை அடைய) முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலமோ {சாமம் மூலமோ}, பிற வழிகளிலோ {தானம் மூலமோ} வெல்லப்படும் வெற்றியே மிகச் சிறந்ததெனச் சொல்லப்படுகிறது. (எதிரிகள் மத்தியில்) வேறுபாட்டை உண்டாக்கி {பேதம் மூலம்} பெறப்படுவது பொருட்படுத்தத்தக்கது அல்ல {சாதாரணமானதே}. அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரின் மூலமாகப் பெறப்படும் வெற்றி இழிவானது.

போரில் பல தீமைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானதாகப் படுகொலை சொல்லப்படுகிறது. ஒருவரை ஒருவர் அறிந்தவர்களும், துக்கப்படாதவர்களும், குடும்பப் பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களும், உறுதியான தீர்மானம் கொண்டவர்களுமான ஐம்பது துணிவுமிக்க வீரர்களால் மட்டுமேகூட ஒரு பெரும் படையை நசுக்கிவிட முடியும். புறமுதுகிடாத ஐந்து, ஆறு அல்லது ஏழு பேரால் கூட வெற்றியை அடைந்துவிட முடியும். வினதையின் மகனான கருடன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பறவைகளின் பெருங்கூட்டத்தைக் கண்டாலும்கூட, (அவர்களை வீழ்த்த) பல தொண்டர்களின் துணையைக் கேட்க மாட்டான். எனவே ஒரு படையில் இருக்கும் வீரர்களுடைய எண்ணிக்கையின் பலம் மட்டுமே எப்போதும் வெற்றியைத் தந்துவிடாது. வெற்றி உறுதியற்றதாகும் {நிச்சயமற்றதாகும்}. அது வாய்ப்பைச் {சந்தர்ப்பத்தைச்} சார்ந்தே இருக்கிறது. வெற்றி அடைந்தவர்கள் கூட இழப்பை ஏற்க வேண்டியிருக்கும்" என்றார் {வியாசர்}.ஆங்கிலத்தில் | In English

திருதராஷ்டிரனை அறிவுறுத்திய வியாசர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 003ஆ

Vyasa's advice to Dhritarashtra! | Bhishma-Parva-Section-003b | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)

பதிவின் சுருக்கம் : கோள்களின் நிலைகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகள், இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய வியாசர்; நடைபெற இருக்கும் போரில் இறப்பவர்கள் நல்லுலகையே அடைவார்கள் என்று திருதராஷ்டிரன் வியாசரிடம் சொன்னது; திருதராஷ்டிரனைக் கண்டித்து, அறிவுரை கூறிய வியாசர் ... 

{வியாசர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "எனவே, வழக்கத்திற்கு மாறான நாட்களில் கிரகணங்களுக்கு உட்படும் [1] சூரியனும் சந்திரனும், பூமியில் உள்ள உயிரினங்களின் பேரழிவுக்குக் காரணம் ஆவார்கள். உண்மையில், {மேற்கண்ட தேய்பிறை சதுர்த்தசி திதியில்} வாய் நிறைய இரத்தத்தைப் பருகும் ராட்சசர்களும் அதனால் தணிவடையமாட்டார்கள் {நிறைவடையமாட்டார்கள்}. பெரும் நதிகள் எதிர்த்திசையில் பாய்ந்தோடுகின்றன. நதிகளின் நீர் இரத்தமாக மாறிவிட்டது. கிணறுகள், நுரைகளை வெளியிட்ட படி, காளைகளைப் போல முழங்குகின்றன [2]. இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்க விண்கற்கள் {கொள்ளிகள்} உரத்த சீற்றத்துடன் கீழே விழுகின்றன [3]. இந்த இரவு கடந்ததும், தீய விளைவுகள் உன்னை ஆக்கிரமிக்கும். ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காகத் தங்கள் வீடுகளில் இருந்து பந்தங்களுடன் வெளியே வரும் மக்கள், சுற்றிலும், மேலும் அதிகமான அடர்ந்த இருளையே எதிர்கொள்வார்கள் [4]. இது போன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட பெரும் முனிவர்கள், ஆயிரக்கணக்கான மன்னர்களின் இரத்தத்தைப் பூமி குடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.


[1] "மூலத்தில் Aparvani என்று இருக்கிறது. அதாவது, பர்வ {Parva} நாட்களிலோ அல்லது பௌர்ணமி, அமாவாசை ஆகிய சாதாரண நாட்களிலோ அல்ல என்பது இங்கே பொருள். பம்பாய்ப் பதிப்பில் Aparvani க்குப் பிறகு grahenau tau என்று இருக்கிறது. ஆனாலும், வங்காள உரைகள் பலவற்றில் உள்ளதைப் போல grastavetau என்பதே நல்ல வாசிப்பு என்பது கேள்விக்கு இடமற்றதாகும்" என்கிறார் கங்குலி.

[2] "மூலத்தில் Pratisrotas என்று இருக்கிறது, இங்கே pratisrotasas என்பதே தேவைப்படும் கடும் இலக்கணமாகும். கிழக்கிலோடியவை இப்போது மேற்கிலும், மேற்கிலோடியவை கிழக்கிலும் பாயும் {ஒரு திசையில் பாய்பவை எதிர் திசையில் பாய்கின்றன} என்பதே இங்கே பொருள். kurddanti என்பது சில உரைகளில் narddanti என்றிருக்கிறது. எனினும், பிந்தையதே {narddanti} நிச்சயம் சிறப்பு. kurddanti என்பது விளையாடுதல் அல்லது விளையாட்டு என்ற பொருளைத் தரும். அப்படியென்றால் {kurddanti என்று கொண்டால்} "காளைகளைப் போல விளையாடும் கிணறுகள்" என்று அந்த வாக்கியம் பொருளற்றதாகிவிடும். இங்கே "விளையாட்டு" என்பதை விட "முழக்கம்" என்பதே சரியானதாக இருக்கும்" என்கிறார் கங்குலி.

[3] "sakrasani என்பதை suskasani என்றே பரத்வான் பண்டிதர்கள் படிக்கிறார்கள். எனினும், sakrasani என்பதே உண்மையான உரையாகும்" என்கிறார் கங்குலி.

[4] இதே இடத்தில் வேறு ஒரு (1) பதிப்பில், "மகாமுனிவர்கள், அனைத்துத் திசைகளிலும் இருளடர்ந்திருக்கிற (இராக்காலத்தில் தீபமில்லாமையால்) பெரிய பந்தங்களுடன் வீட்டிலிருந்து வெளிவந்து, (அவ்விதமான உத்பாதங்களைக் கண்டு), அந்தச் சமயத்தில், "பூமியானது ஆயிரக்கணக்கான அரசர்களுடைய ரத்தத்தைக் குடிக்கப் போகிறது" என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்" என்று இருக்கிறது............ மற்றொரு (2) பதிப்பிலோ, "அடர்ந்த இருளில் அனைத்துத் திசைகளிலும் ஒன்றோடொன்று நெருங்கின பெரிய விண்வீழ்கொள்ளிகள் {உற்கைகள்} புறப்பட்டால் அப்பொழுது பூமியானது ஆயிரக்கணக்கான அரசர்களின் ரத்தத்தைக் குடிக்கும் என்று பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டுள்ளது என்றும் கொள்ளலாம்" என்று இருக்கிறது. இங்கே பந்தம் என்ற சொல் கையாளப்படவில்லை........... ஆனால் கங்குலி இங்கே வேறொன்றைச் சொல்கிறார். அவர், "இங்கே மூலம் மிகவும் தெளிவற்ற வகையில் உள்ளது. Uluka என்பது நீலகண்டரால் (விளக்கிற்காகப் {வெளிச்சத்திற்காகப்} பயன்படுத்தப்படும்) பந்தம் என்று விளக்கப்படுகிறது. எனினும் இவ்வரி நீள்வளையமாக {நீளமாக, சுற்றி வளைக்கும் வகையிலேயே} இருக்கிறது. இதில் பரத்வான் பண்டிதர்களோ முற்றிலும் புதிதான வரியை அறிமுகப்படுத்துகிறார்கள்" என்கிறார் கங்குலி. மேற்கண்டவைதான் {(1)&(2)} பரத்வான் பண்டிதர்களின் புதிய வரிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன் விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறுத்த அதன் கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது [5].

[5] "Mahabhuta பெரிதும் பெருகுகிறது" என்பது மூலம் என்கிறார் கங்குலி.

கூரான கூழாங்கற்கள் {பருக்கைக் கற்கள்} நிரம்பிய கடுங்காற்று, வலிமைமிக்க மரங்களைச் சாய்த்தபடி வீசிக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள சாதாரண மரங்களும், புனிதமான மரங்களும், பலத்தக் காற்றால் நசுக்கப்பட்டும், மின்னலால் தாக்கப்பட்டும் சரிந்தவண்ணம் உள்ளன. (வேள்வித்) தீயில், அந்தணர்களால் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படும் போது, அது {நெருப்பு}, நீலமாகவோ, சிவப்பாகவோ, மஞ்சளாகவோ மாறுகிறது. அதன் சுடர்கள் உரத்த ஒலியுடன் இடதுபுறமாகச் சாய்ந்து {சுழன்று}, கெட்ட நாற்றத்தைக் கொடுக்கிறது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, தொடுதல், நுகர்தல், சுவை ஆகியன முன்பு இல்லாததைப் போல ஆகிவிட்டன. (போராளிகளின்) கொடிக்கம்பங்கள், தொடர்ச்சியாக நடுங்கியவண்ணம் புகையைக் கக்குகின்றன.

துந்துபிகளும், பேரிகைகளும், கரித்தூசி மழையை வீசியெறிகின்றன {தணலைப் பொழிகின்றன}. உயர்ந்த மரங்களின் உச்சிகள் அனைத்திலும், இடமாகச் {இடதுபுறமாகச்} சுற்றும் காகங்கள் உக்கிரமாகக் கத்துகின்றன. மேலும் அவை அனைத்தும், "பக்வா, பக்வா" [6] என்று உக்கிரமாகக் கத்தியபடி, மன்னர்களின் அழிவுக்காக {அவர்களின்} கொடிக்கம்பங்களின் நுனிகளில் வந்து அமர்கின்றன. தீய யானைகள், முழுவதும் நடுங்கியபடி, அங்குமிங்கும் ஓடி, சிறுநீரையும் மலத்தையும் கழிக்கின்றன. குதிரைகள் அனைத்தும் துக்கத்துடன் இருக்கின்றன. அதே வேளையில் யானைகள் தண்ணீரில் இறங்குகின்றன. இவையனைத்தையும் கேட்டு, ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, உலகம் அழிவுக்குள்ளாகாத வகையில், தகுந்தது எதுவோ அதைச் செய்வாயாக" என்றார் {வியாசர்}.

[6] இவை பறவைகள் கத்தும் ஒலிக்குறிப்பாகும்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தன் தந்தையின் {தந்தை வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "இவையாவும், பழங்காலத்திலேயே விதிக்கப்பட்டுவிட்டது என்றே நான் நினைக்கிறேன். மனிதர்களின் பேரழிவு நேரத்தான் போகிறது. க்ஷத்திரிய வகையினரின் கடமைகளை நோற்று மன்னர்கள் போரில் இறந்தால், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள், மகிழ்ச்சியை மட்டுமே அடைவார்கள். இந்த மனிதர்களில் புலிகள், தங்கள் உயிரைப் பெரும்போரில் துறந்து, இங்கே புகழையும், அடுத்த உலகத்தில் என்றென்றைக்கும் நிலைத்த பேரின்பத்தையும் அடைவார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, தன் மகன் திருதராஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், கவிஞர்களில் இளவரசருமான அந்த முனிவர் (வியாசர்), உச்சநிலை யோகத்தில் தன் மனதைக் குவித்தார். குறுகிய காலமே {ஒரு முகூர்த்த காலம்} அப்படிச் சிந்தித்த நிலையில் இருந்த அவர் {வியாசர்}, மீண்டும் ஒருமுறை, "ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, காலமே அண்டத்தை அழிக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தக் காலமே உலகங்களைப் படைக்கவும் செய்யும். இங்கே {இவ்வுலகில்} எதுவும் நித்தியமானது கிடையாது. குருக்கள், உனது சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு {அறம் நழுவாத} நீதியின் பாதையைக் காட்டுவாயாக. நீயே அவர்களைத் தடுக்கும் திறமையுடையவன் ஆவாய்.

சொந்தங்களின் படுகொலை பாவம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது. எனக்கு ஏற்பில்லாதாதை நீ செய்யாதிருப்பாயாக. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மரணமே {காலனே} உனது மகனின் {துரியோதனனின்} வடிவில் பிறந்திருக்கிறான். வேதங்களில் எப்போதும் படுகொலை மெச்சப்படுவதில்லை. அஃது ஒருபோதும் நன்மையைச் செய்யாது. ஒருவனுடைய குலத்தின் பழக்க வழக்கங்கள் அவனது சொந்த உடலே ஆகும். அந்தப் பழக்கவழக்கங்களை அழிப்பவனை, அதுவே கொன்றுவிடும் [7]. (நீதியின் பாதையில் நடக்க) உன்னால் இயலும் என்றாலும், இந்தக் குலத்தின் அழிவுக்காகவும், இந்தப் பூமியில் உள்ள அந்த மன்னர்களின் அழிவுக்காகவும், துயரத்தில் இருக்கும் ஒருவனைப் போல, உன்னைக் காலமே தவறான பாதையில் திசை திரும்பச் செய்கிறது.

[7] இந்த இடத்தில் வேறு பதிப்பில், "எவன் குல அறத்தையும், தன் உடலையும் அழிப்பானோ, அவனை அந்த அறமே அழிக்கும்" என்று இருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது நாட்டின் வடிவில் பேரிடர் உன்னிடம் வந்திருக்கிறது. உனது அறம் மிகப்பெரிய அழிவில் நிலைநிற்கிறது. நீதி {அறம் [அ] தர்மம்} என்பது என்ன என்பதை உனது மகன்களுக்குக் காட்டுவாயாக. ஓ! வெல்லப்பட முடியாதவனே {திருதராஷ்டிரா}, உனக்குப் பாவத்தைக் கொண்டு வரும் நாடு உனக்கு எப்படி மதிப்புடையதாகும்? {பாவத்தை அடைவதற்குக் காரணமான நாட்டினால் உனக்கு என்ன பயன்?}. உனது நற்பெயர், உனது அறம் மற்றும் உனது புகழைக் கவனிப்பாயாக {பாதுகாப்பாயாக}. பிறகு, நீ சொர்க்கத்தை வெல்வாய். பாண்டவர்கள் தங்கள் நாட்டைப் பெற்றுக் கொள்ளட்டும், கௌரவர்கள் அமைதியை அடையட்டும்" என்றார் {வியாசர்}.


ஆங்கிலத்தில் | In English

வியாழன், ஆகஸ்ட் 06, 2015

பதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 003அ

Fortnights with Thirteen days! | Bhishma-Parva-Section-003a | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)

பதிவின் சுருக்கம் : கண்கூடாகத் தெரியும் துர்நிமித்தங்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் பேசிய வியாசர்; பயங்கரப் பிறவிகள்; விலங்குகள் மற்றும் பறவைகளின் இயல்புக்கு மிக்க நடத்தைகள், வானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்கைகள், வழக்கத்திற்கு மாறான, இயல்புக்கு மிக்கப் பக்ஷங்கள் பற்றிய குறிப்பு ...

வியாசர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், "பசுக்களிடம் கழுதைகள் பிறக்கின்றன. தாய்மாருடன் சிலர் பாலுறவு இன்பம் கொள்கிறார்கள். காடுகளில் உள்ள மரங்கள் மலர்களையும் கனிகளையும் பருவகாலம் தவறி {அல்லது பருவகாலத்திற்கு முன்பே} காட்டுகின்றன. விரைவில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் {கர்ப்பிணிகளும்}, அப்படியில்லாதவர்கள் கூடப் பயங்கரர்களை {monsters} ஈன்றெடுக்கிறார்கள். ஊனுண்ணும் விலங்குகள் {நாய்கள் போன்ற விலங்குகள்}, (ஊனுண்ணும்) பறவைகளுடன் சேர்ந்து ஒன்றாக உண்கின்றன. மூன்று கொம்புகளைக் கொண்ட சிலவும், நான்கு கண்களைக் கொண்ட சிலவும், ஐந்து கால்களைக் கொண்ட சிலவும், இரண்டு பாலுறுப்புகளை {ஆண்குறிகளைக்} கொண்ட சிலவும், இரு தலைகளுடன் சிலவும், இரு வால்களுடன் சிலவும், கோரப் பற்களைக் கொண்டவையாகச் சிலவும், எனத் தங்கள் வாய்களை அகல விரித்து மங்கலமற்ற வகையில் கதறும் மங்கலமற்ற {தீய சகுனங்களை வெளிப்படுத்தும்} விலங்குகள் பிறக்கின்றன.


முகடுகளைக் கொண்டவையும், மூன்று கால்கள், நான்கு பற்கள், கொம்புகள் ஆகியவற்றைக் கொண்டவையுமான குதிரைகளும் பிறக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது நகரத்தில் கூடப் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் மனைவியர், கருடர்களையும், மயில்களையும் ஈன்றெடுக்கிறார்கள். பெண் குதிரை பசுக்கன்றை ஈன்றெடுக்கிறது. பெண் நாய், நரிகளை ஈன்றெடுக்கிறது. கோழிகளும், மான்களும், கிளிகளும், மங்கலமற்ற வகையில் கதறுகின்றன.

சில பெண்கள், நான்கு அல்லது ஐந்து மகள்களை (ஒரே நேரத்தில்) ஈன்றெடுக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் அவர்கள், தாங்கள் பிறந்த உடனேயே, ஆடவும், பாடவும், சிரிக்கவும் செய்கிறார்கள். இழிந்த வகைகளின் உறுப்பினர்கள் {நீசர்கள்} சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படியே அச்சந்தரும் விளைவுகளை இவை சுட்டிக்காட்டுகின்றன. மரணத்தால் {காலனால்} உந்தப்பட்டவர்களைப் போலக் குழந்தைகளும், ஆயுதம் தாங்கிய உருவங்களை வரைகிறார்கள். அவர்கள் {குழந்தைகள்}, போரிடும் விருப்பத்தால், கதாயுதங்களைத் தரித்துக் கொண்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் விரைந்து, (விளையாட்டாகத் தாங்கள் கட்டிய) நகரங்களை இடிக்கிறார்கள் [1]. பல வகையான தாமரைகளும், ஆம்பல்களும் மரங்களில் வளர்கின்றன. பலமான காற்றுக் கடுமையாக வீசுகிறது, புழுதியும் அடங்கவில்லை.

[1] இந்த இடத்தில் வேறு பதிப்புகளில், "ஆயுதங்களோடு கூடிய பிரதிமைகளும் {உருவங்களும்}, காலத்தினால் தூண்டப்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கின்றன. பாலர்கள் தடிகளைக் கையில் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்தோடுகிறார்கள். போரிடும் எண்ணங்கொண்டு, விளையாட்டுக்காக நகரங்களை ஏற்படுத்தி, அவற்றில் ஒருவர் மற்றவருடைய நகரத்தை இடிக்கிறார்கள்." என்று இருக்கிறது.

அடிக்கடி பூமி நடுங்குகிறது. ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையே முன்னறிவிக்கின்றன.

வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும் அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும் கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2].

[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் "கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது" என்று இருக்கிறது.

நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான்.

குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகைப் பயிர்களை விளைவிக்கும் பூமி, இப்போது அனைத்து காலங்களிலும் விளையும் பயிர்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு வாற்கோதுமை {யவதானியக்} கதிரும் ஐந்து காதுகளுடனும் {ஐந்து தலைகளுடனும்}, {செந்நெற்கதிர்கள்} நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் நூறுடனும் {நூறு தலைகளுடனும்} அருளப்பட்டிருக்கின்றன. உலகங்களில் சிறந்தவையும், இந்த அண்டமே நம்பியிருக்கும் உயிரினங்களுமான பசுக்கள், கன்றுகளுக்குப் பாலூட்டிய பிறகு, வெறும் இரத்தத்தை மட்டுமே தருகின்றன. கதிர்வீச்சுக் கொண்ட ஒளிக்கதிர்கள் விற்களில் இருந்து வெளிவருகின்றன. வாட்கள் பிரகாசத்தில் சுடர்விடுகின்றன. ஆயுதங்கள், (தங்கள் முன்னே) போர் ஏற்கனவே வந்து விட்டதைப் போலக் காண்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்கள், நீர், கவசங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியன நெருப்பைப் போன்ற நிறத்தில் இருக்கின்றன. ஒரு பெரும் படுகொலை நடக்கப் போகிறது.

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பாண்டவர்களுடன் குருக்கள் மோதும் இந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் புறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர விளைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரா}, ஆயுதங்கள் அனைத்தும் இப்போது கதிர்வீச்சுடன் சுடர்விடுவதாகத் தெரிகிறது.

[3] "இது மூலத்தில் "Conitam cchardayanniva" என்று இருக்கிறது. நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன். இங்கே "கேட்பவர்கள்" என்பதற்குப் பதிலாக "ஆயுதங்கள்" என்றே பர்தவான் பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின், "அந்தப் பறவை இரத்தம் கக்குபவைப் போலப் பயங்கரமாக அலறியது" என்று பொருள்படும். "cchardayan" என்ற காரண வினை இந்த விளக்கத்திற்கு எதிராகவே உள்ளது. எனினும், மகாபாரதத்தில், காரணப் பொருள் இல்லாமலேயே காரண வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழு உயர் ஆன்ம முனிவர்களின் பெயரால் அறியப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் பிரகாசம் மங்கியிருக்கிறது. சுடர்விடும் கோள்களான பிருஹஸ்பதியும் {வியாழனும்}, சனியும், விசாகம் என்று அழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தை அணுகி, ஒரு வருடம் முழுவதும் அங்கேயே நிலைத்திருக்கிறது.

மூன்று சந்திர மாதங்கள், இரண்டு முறை அதன்போக்கில் ஒரே சந்திர பிறைநாட்களில் {ஒரே சந்திர பட்சத்தில்}, ஒன்று கூடியிருக்கின்றன [4]. எனவே, முதல் மாதத்தில் இருந்து, பதிமூன்றாவது {13} நாளில் எனும்படி அது பௌர்ணமி அல்லது அமாவாசை நாளன்று சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் ராகுவினால் பீடிக்கப்பட்டார்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இத்தகைய இரு விசித்திரமான கிரகணங்கள் பெரும் படுகொலையையே முன்னறிவிக்கின்றன [5]. பூமியின் திக்குகள் அனைத்தும், புழுதி மழையால் மூடப்பட்டு மங்கலமற்றுக் காணப்பட்டன. வருங்கால ஊகமாக ஆபத்தை முன்னறிவிக்கும்படி, கடும் மேகங்கள் இரவு நேரத்தில் இரத்த மாரி பொழிகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான். கடும் ஆபத்தை முன்னறிவிக்கும் கடுங்காற்றுத் தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது. இவையனைத்தும், பல சோக சம்பவங்களை வகைப்படுத்தும் ஒரு போரையே தரும்.

[4] "நிச்சயமாக இஃது உண்மையானதாக இருந்தாலும், பல பதிப்புகளில் இந்தச் சுலோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இஃது அறிவுசார்ந்ததாக இருக்காது என்பதால், நான் மிகவும் சுதந்திரமாக இதை வழங்கியிருக்கிறேன். உண்மையென்னவெனில், ஒரு பக்ஷத்தில் {தேய்பிறை [கிருஷ்ண பக்ஷம்] / வளர்பிறை [சுக்ல பக்ஷம்} மூன்று மாதங்கள் இருமுறை ஒன்றாக இணைவது அரிதிலும் அரிதாகும். இங்கே, இதனால், பிறைநாட்கள் (அதாவது பக்ஷங்கள்), இரண்டு நாட்கள் குறைக்கப்படுவதால், பௌர்ணமியோ, அமாவாசையோ, வழக்கம் போல முதல் மாதத்தில் இருந்து பதினைந்தாம் நாளில் வராமல் பதிமூன்றாம் {13} நாளில் வருகிறது. சந்திர கிரகணங்கள் எப்போதும் பௌர்ணமி நாட்களிலேயே ஏற்படும். அதே போலச் சூரிய கிரகணங்கள் எப்போதும் அமாவாசைகளிலேயே ஏற்படும். எனவே, இத்தகைய கிரகணங்கள், (வழக்கம்போல) பதினைந்து நாட்களில் வருவதற்குப் பதிலாக, முதல் மாதத்தின் நாட்கள் கழிக்கப்பட்டுப் பதிமூன்று நாட்களில் வருவது மிகவும் அசாதாரண நிகழ்வுகளாகும்." என்கிறார் கங்குலி. இதுவே வேறு பதிப்பில், "சந்திர சூரியர் இருவரும் இரண்டு திதி {இரண்டு நாள்} க்ஷயத்தினால் {இழப்பினால்} பதிமூன்றாவது நாளில் சம்பவித்திருக்கிற தரிசத்தில் ராகுவினால் ஒரு தினத்தில் விழுங்கப்பட்டார்கள்" என்று இருக்கிறது.

[5] Vishamam என்பது போராகும். akranda என்பது அழுகை அல்லது துன்பத்தை விளைவித்தல் என்று பொருள்படும். பிந்தைய வார்த்தை "கடும்போர்" என்றும் பொருள்படும். இந்தப் பொருளிலேயே புரிந்து கொள்ளப்பட்டால் akranda என்பது பகையையோ, அமைதியின்மையையோ குறிப்பதாகிவிடும்.

நட்சத்திரக் கூட்டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் [6]. ஒவ்வொரு வகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம் தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளை முன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக) பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோ கொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன் ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்து பதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன" என்றார் {வியாசர்}.

[6] "பின்வரும் பொருள் ஒரு நீண்ட குறிப்பைத் தரும் என்று சொல்லி நீலகண்டர் விளக்குகிறார். மன்னர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, யானைகளுக்குச் சொந்தக்காரர்கள் (கஜபதிகள்), குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் (அஸ்வபதி), மனிதர்களுக்குச் சொந்தக்காரர்கள் (நரபதி) என்பதே ஆகும். தீய சகுனத்தைச் சொல்லும் கிரகம் (பாப கிரகம்), அஸ்வினி முதலான ஒன்பது நட்சத்திரங்களைப் பீடித்தால், அஃது அஸ்வபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மகம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது கஜபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மூலம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது நலபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும். எனவே, வேறு பாபக் கிரகங்களும் மூன்று வகை நட்சத்திரக்கூட்டங்களையும் பீடித்தால், அஃது அனைத்து வகை மன்னர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன என்றே வியாசர் இங்கே குறிப்பிடுகிறார்." என்கிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English

புதன், ஆகஸ்ட் 05, 2015

தெய்வீகப்பார்வையைப் பெற்ற சஞ்சயன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 002

Celestial Vision obtained by Sanjaya! | Bhishma-Parva-Section-002 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 2)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனிடம் தனிமையில் பேசிய வியாசர்; போரைக் காண திருதராஷ்டிரனுக்குப் பார்வையளிப்பதாகச் சொன்ன வியாசர்; பார்வையை மறுத்த திருதராஷ்டிரன்; வியாசர் சஞ்சயனுக்கு ஞானப்பார்வையை அருள்வது; வியாசர் தான் காணும் தீய சகுனங்களைக் குறித்துச் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வர இருக்கும் கடும்போருக்காகக் கிழக்கிலும், மேற்கிலும் (நின்று கொண்டு) இருந்த அந்தப் படைகளிரண்டைக் கண்டவரும், நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியவற்றை {கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களை} அறிந்தவரும், பாரதர்களின் பாட்டனும், வேதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனும், புனிதமுனியுமான வியாசர், தன் கண்களுக்கு முன்பு நடப்பதைக் காண்பது போலவே அனைத்தையும் கண்டு, தனிமையில் சென்று, தனது மகன்களின் தீய கொள்கைகளை நினைத்து மன உளைச்சல் அடைந்தவனும், துன்பத்துக்கு ஆளானவனுமான விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்.


வியாசர் {திருதராஷ்டிரன்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது மகன்களும், பிற ஏகாதிபதிகளும் தங்கள் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் [1]. போருக்காக அணிதிரண்டிருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, அவர்களது நேரம் வந்துவிட்டதால், அவர்கள் அனைவரும் அழிந்தே போவார்கள். காலத்தால் கொண்டுவரப்படும் மாற்றங்களை மனதில் தாங்கும் நீ, துக்கத்தில் உனது இதயத்தைச் செலுத்தாதே. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரில் (போரிடும்) அவர்களை நீ காண விரும்பினால், ஓ! மகனே {திருதராஷ்டிரா}, நான் உனக்குப் பார்வையை அருள்வேன் {கொடுப்பேன்}. போரைக் காண்பாயாக!" என்றார்.

[1] மாறாக, "அவர்களது காலம் முடிந்துவிட்டது" என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார் கங்குலி.

திருதராஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {வியாசரே}, எனது சொந்தங்களின் படுகொலையைக் காண நான் விரும்பவில்லை. எனினும், நான், உமது ஆற்றலின் மூலம், இந்தப் போரை நுணுக்கமாகக் கேட்க வேண்டும்" என்று சொன்னான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவன் {திருதராஷ்டிரன்} போரைக் காண விரும்பாமல், கேட்க விரும்பியதால், வரங்களின் தலைவனான வியாசர், சஞ்சயனுக்கு ஒரு வரத்தை அளித்தார். (அவர் திருதராஷ்டிரனிடம்), "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, இந்தச் சஞ்சயன் போரை உனக்கு விவரிப்பான். இந்தப் போர் முழுவதிலும் இவனது கண்களைத் தாண்டி எதுவும் இருக்காது. {இந்தப் போரில் நடைபெறும் எதுவும் இவனது கண்களுக்குத் தப்பாது}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தெய்வீகப் பார்வையை அடைந்த சஞ்சயன், போரை உனக்கு விவரிப்பான். அவன் {சஞ்சயன்} அனைத்தையும் அறிவான். வெளிப்படையாகவோ, மறைவாகவோ, பகலிலோ, இரவிலோ நடக்கும் எதையும், ஏன் மனதால் நினைக்கப்படும் அனைத்தையும்கூட இந்தச் சஞ்சயன் அறிவான்.

ஆயுதங்கள் இவனை வெட்டாது. உழைப்பு இவனைக் களைப்படையச் செய்யாது. இந்தக் கவல்கணன் மகன் {சஞ்சயன்}, அந்தப் போரில் இருந்து உயிருடன் வெளிவருவான். என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரா}, இந்தக் குருக்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் புகழையும் நான் பரப்புவேன் {மஹாபாரதம் பாடுவேன்}. வருந்தாதே. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரா}, இது விதி. துயருக்கு வழிகொடுப்பது உனக்குத் தகாது. இது தவிர்க்க இயலாததாகும். வெற்றியைப் பொறுத்தவரை, நீதி எங்கிருக்கிறதோ, அங்கேயே அஃது இருக்கும். {அறமிருக்குமிடம் வெற்றியுண்டாகும்}", என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர்ந்த அருளைக் கொண்டவரும், குருக்களின் புனிதப்பாட்டனுமான அவர் {வியாசர்}, இதைச் சொன்ன பிறகு, மேலும் ஒரு முறை திருதராஷ்டிரனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இந்தப் போரில் நடக்கும் படுகொலை பெரிதாக இருக்கும். பயங்கரத்தின் அறிகுறியாக (எண்ணற்ற) {தீய} சகுனங்களை நான் இங்கே காண்கிறேன்.

பருந்துகள் {சியேனங்கள்}, கழுகுகள் {கிருத்திரங்கள்}, காகங்கள், நாரைகள் {கங்கங்கள்} [2] ஆகியவை கொக்குகளுடன் சேர்ந்து மரங்களின் மேல் இறங்கி {கொடிக்கம்ப நுனிகளில் விழுந்து}, கூட்டங்கூட்டமாகச் சேருகின்றன. போருக்கான சாத்தியக்கூறுகளினால் மகிழ்ந்திருக்கும் அவை, தங்கள் முன்னிலையில் இருப்பதைக் (களத்தைக்) {எதிர்பார்ப்புடன்} கீழே பார்க்கின்றன. ஊனுண்ணும் விலங்குகள், யானைகள் மற்றும் குதிரைகளின் இறைச்சியை உண்ணப் போகின்றன. உக்கிரமான நாரைகள் {Herons}, பயங்கரத்தை முன்னறிவிக்கும்படி, இரக்கமற்ற வகையில் கதறி, மையப் பகுதியில் சுற்றியபடி தென்பகுதியை நோக்கிச் செல்கின்றன [3]. சந்திப் பொழுதுகள் இரண்டுக்கும் முன்னரும், பின்னரும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, சூரியன், உதிக்கும்போதும், மறையும்போதும், தலையற்ற உடல்களால் {கபந்தங்களால்} அவன் {சூரியன்} மறைக்கப்படுகிறான். மின்னலால் சக்தியூட்டப்பட்டவையும், கதாயுதம் போன்றவையும், வெள்ளை மற்றும் சிவந்த கைகளுடனும் {ஓரங்களுடனும்}, கறுத்த கழுத்துடனும் {இடைவெளியுடனும்} மூவண்ணங்களைக் கொண்டவையுமான மேகங்கள், சந்திப்பொழுதுகள் இரண்டிலும் சூரியனைச் சூழ்ந்திருக்கின்றன.

[2] மேற்கண்ட வரியில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சியேனம், கிருத்திரம், கங்கம் ஆகியன கழுகுகளின் வகைகளாகும். மேற்கண்ட பத்தியில் {} என்ற அடைப்புக்குறிக்குள் உள்ள பறவைகளின் பெயர்கள் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவை வேறு பதிப்புகளில் கண்டவையாகும்.

[3] வேறு பதிப்புகளில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன. அவ்வரிகள், "பயங்கரங்களும், பயத்தைத் தெரிவிப்பவைகளுமான கழுகுகள், நடுப்பகலில், தெற்கை நோக்கி நான்கு பக்கங்களிலும், "கடா! கடா!" என்று ஒலியிட்டபடி கூச்சலிடுகின்றன" என்று இருக்கிறது. இந்தக் கழுகுக்குப் பதில் கங்குலி Heron என்று சொல்லி நாரையை இங்கே குறிப்பிடுகிறார்.

சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒளிவீசிக் கொண்டிப்பதை நான் கண்டேன். மாலையிலும் கூட அவற்றின் அம்சங்களில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. நான் இவற்றை நாள் முழுவதும், ஏன் இரவு முழுவதும்கூடக் காண்கிறேன். இவை அனைத்தும் அச்சத்தையே முன்னறிவிக்கின்றன. கார்த்திகை (மாதத்தில்}, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் {பௌர்ணமியில்} கூட, சந்திரன் தனது பொலிவை இழந்து போய், காண முடியாதவன் ஆனான். அல்லது தாமரையின் நிறத்தைக் கொண்டிருந்த ஆகாயத்தில், அவன் {சந்திரன்} நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். பெரும் வீரம் கொண்டவர்களும், கதாயுதங்களைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான பூமியின் வீரத் தலைவர்கள், மன்னர்கள், இளவரசர்கள் ஆகிய பலர், கொல்லப்பட்டு, பூமியில் கிடந்து உறங்கப் போகிறார்கள் [4]. இரவு நேரங்களில், சண்டையிட்டுக் கொள்ளும் பன்றிகள் மற்றும் பூனைகளின் உக்கிரக் கூக்குரல்களைத் தினமும் நான் வானத்தில் கேட்கிறேன்.

[4] இறக்கப் போகிறார்கள் என்பது இங்கே பொருள்.

தேவர்கள் மற்றும் தேவியரின் உருவங்கள் {பிரதிமைகள்} சில நேரங்களில் சிரிக்கின்றன; சில நேரங்களில் நடுங்குகின்றன; சில நேரங்களில் தங்கள் வாயில் இரத்தம் கக்குகின்றன; சில நேரங்களில் வேர்க்கின்றன; சில நேரங்களில் விழுந்து விடுகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அடிக்கப்படாமலேயே பேரிகைகள் முழங்குகின்றன, (இழுவை) விலங்குகள் பூட்டப்படாமலேயே க்ஷத்திரியர்களின் பெருந்தேர்கள் நகர்கின்றன. குயில்கள் {கோகிலங்கள்}, மரங்கொத்திகள் {சதபத்ரங்கள்}, காடைகள், நீர்க்கோழிகள் {பாஸங்கள்}, கிளிகள், காகங்கள் {சாரசப்பறவைகள்}, மயில்கள் ஆகியன பயங்கரக் கூச்சலிடுகின்றன. ஆயுதங்கள் தரித்தவர்களும், கவசம் அணிந்தவர்களுமான குதிரைப்படை வீரர்கள் இங்கேயும் அங்கேயுமாகக் கடுமையாகக் கத்துகின்றனர் [5]. சூரிய உதயத்தின் போது, நூற்றுக்கணக்கான பூச்சிகளின் {சல்பங்களின்} கூட்டங்கள் காணப்படுகின்றன.

[5] இதே வரி, வேறு பதிப்பில், "பிருங்கிரிடிகள் என்று அழைக்கப்படும் கறுத்த விட்டில் பூச்சிகள் உலோகங்களை மூக்கினால் கொத்திக் கொண்டு குதிரைகளின் முதுகில் அமர்ந்து கத்துகின்றன" என்று இருக்கிறது. தொடர்ந்து வரும் அடுத்த வரியால், இதுவே சரியாகவும் படுகிறது.

இரு சந்திப் பொழுதுகளிலும், வானத்தின் திக்குகள் பற்றி எரிவன போலத் தெரிகின்றன. மேலும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, மேகங்கள் புழுதியையும், இறைச்சியையும் பொழிகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவளும், நீதிமான்களால் மெச்சப்படுபவளுமான அருந்ததி {நட்சத்திரம்}, இதோ, (தனது தலைவனான) வசிஷ்டரைத் தனக்குப் பின்னால் கொண்டிருக்கிறாள் {வசிஷ்டரை முந்திச் செல்கிறாள்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சனிக் கோளும் {கிரகமும்}, ரோகிணியைப் பீடித்தபடி தோன்றுகிறது {ரோகிணி நட்சத்திரத்தைப் பீடித்தபடி சனி தோன்றுகிறான்}. நிலவில் இருக்கும் மானின் அடையாளம் {களங்கம்}, தனது வழக்கமான நிலையை விட்டு மாறுபட்டிருக்கிறது. {இவற்றால்}, ஒரு பெரிய பயங்கரம் சுட்டிக் காட்டப்படுகிறது. வானம் மேகமற்றிருந்தாலும், அங்கே ஒரு பயங்கர முழக்கம் கேட்கிறது. விலங்குகள் அனைத்தும் அழுகின்றன, அவற்றின் கண்ணீரும் வேகமாக விழுகிறது" என்றார் {வியாசர்}."


ஆங்கிலத்தில் | In English

ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

வியாசரையும் காந்தாரியையும் இங்கே அழைப்பீராக! - உத்யோக பர்வம் பகுதி 67

Bring Vyasa and Gandhari hither! | Udyoga Parva - Section 67 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 27) {யானசந்தி பர்வம் - 21}

பதிவின் சுருக்கம் : சஞ்சயன் சொன்ன எதையும் துரியோதனன் மதிக்காமல் இருப்பது; எஞ்சிய பிறரும் அமைதியாக இருப்பது; சபை கலைவது; இருதரப்புப் பலம் மற்றும் பலவீனங்களைச் சஞ்சயனிடம் தனிமையில் திருதராஷ்டிரன் கேட்பது; சஞ்சயன், வியாசரையும், காந்தாரியையும் வரவழைக்கச் சொல்வது; சஞ்சயன் மற்றும் திருதராஷ்டிரன் மனநிலைகளைப் புரிந்து கொண்ட வியாசர், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் குறித்துச் சஞ்சயன் அறிந்த யாவற்றையும் திருதராஷ்டிரனுக்குச் சொல்லச் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரன் மகனான துரியோதனன், சஞ்சயன் கூறிய வார்த்தைகளைச் சிறிதும் மதிக்கவில்லை, எஞ்சியவர்களும் அமைதியாக இருந்தனர். அப்போது, அங்கே கூடியிருந்த மன்னர்கள் எழுந்து சென்றனர். பூமியின் மன்னர்கள் அனைவரும் சென்றபிறகு, தனது மகன் {துரியோதனன்} மீது தான் கொண்ட பாசத்தால், அவனது {துரியோதனனின்} ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றுபவனான மன்னன் திருதராஷ்டிரன், அங்கே கூடிய மன்னர்கள் அனைவரும் வெற்றியடைய விரும்பி, தன் தரப்பு மற்றும் தனக்கு எதிரான பாண்டவர்கள் தரப்புத் தீர்மானங்கள் குறித்துச் சஞ்சயனிடம் தனிமையில் விசாரிக்கத் தொடங்கினான்.


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்களின் விவகாரங்களை நுணுக்கமாக நீ தெரிந்து வைத்திருப்பதால், நமது படையின் பலமும் பலவீனமும் எதில் அடங்கி இருக்கிறது என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. அவர்களின் {பாண்டவர்களின்} மேன்மையும், தாழ்மையும் எதிலிருக்கிறது என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நீ இருதரப்பு பலங்களையும் முழுதாய் அறிந்திருக்கிறாய். நீ அனைத்தையும் அறிந்தவனாகவும், அறம் மற்றும் பொருள் குறித்த அனைத்துக் காரியங்களை அறிந்தவனாகவும் இருக்கிறாய். ஓ! சஞ்சயா, என்னால் கேட்கப்படும் நீ, போரில் ஈடுபடும்போது, எத்தரப்பு அழிந்து போகும் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் எதையும் கமுக்கத்தில் {இரகசியத்தில், தனிமையாகச்} சொல்ல மாட்டேன். ஏனெனில், {அப்படிச் சொன்னால்} எனக்கெதிரான தீய உணர்வுகள் {அருவருப்பு} உமக்கு உண்டாகலாம். ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உயர்ந்த நோன்புகளைக் கொண்ட உமது தந்தை வியாசரையும், உமது ராணி காந்தாரியையும் இங்கே அழைப்பீராக. அறநெறி அறிவும், நுண்ணிய நோக்கும், உண்மை அறியும் திறனும் பெற்ற அவர்கள் {வியாசரும், காந்தாரியும்}, உமக்கு என் மீது அருவருப்பு உண்டானால் அவற்றை நீக்குவார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் முன்னிலையில், கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} நோக்கங்கள் பற்றிய அனைத்தையும் நான் உமக்குச் சொல்கிறேன்" என்றான் {சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் {சஞ்சயனால்} சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் வியாசர் ஆகியோரை அங்கே அழைத்து வர ஏற்பாடு செய்தான். விதுரனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {காந்தாரியும் வியாசரும்}, தாமதமின்றிச் சபைக்குள் நுழைந்தார்கள். பெரும் ஞானம் கொண்டவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சஞ்சயன் மற்றும் தன் மகன் {திருதராஷ்டிரன்} ஆகிய இருவரது நோக்கங்களையும் புரிந்து கொண்டு, "ஓ! சஞ்சயா, அறிந்து கொள்ளும் விருப்பத்தில் திருதராஷ்டிரன் விசாரிக்கும் அனைத்தையும் அவனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சொல்வாயாக. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் குறித்து நீ அறிந்தது அத்தனையும் அவனுக்குச் சொல்வாயாக" என்றார் {வியாசர்}.

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

சொர்க்கத்தை மறுத்த முத்கலர்! - வனபர்வம் பகுதி 259

Mudgala declined heaven!  | Vana Parva - Section 259 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சொர்க்கம், நிலையற்றது என்றெண்ணிய முத்கலர் சொர்க்கத்தை ஏற்க மறுத்தது; முத்கலரின் கதையைச் சொன்ன வியாசர் திரும்பிச் சென்றது...

தேவர்களின் தூதுவன் {முத்கலரிடம்}, "ஓ! பெரும் தவசியே {முத்கலரே}, நீர் குறைந்த அறிவுள்ளவராக இருக்கிறீர்; பெரும் புகழைத் தரத்தக்க தெய்வீக அருளை அடைந்தும், ஞானமற்ற மனிதரைப் போல இன்னும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர். ஓ! முனிவரே {முத்கலரே}, சொர்க்கம் என்று அறியப்படும் பகுதி, நமக்கு மேலே இருககிறது. கோபுரத்தின் உயரங்களுக்கு மேலே இருக்கும் அது, ஓ! தவசியே {முத்கலரே}, எப்போதும் தெய்வீகத் தேர்கள் பயணிக்கும் அற்புதமான பாதைகளைக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள், உண்மையற்றவர்கள், தவம் பயிலாதவர்கள், பெரும் வேள்விகளைச் செய்யாதவர்கள் ஆகியோர் அங்குச் செல்ல முடியாது. அறம்சார்ந்த ஆன்மா கொண்டவர்கள், மனதை அடக்கியவர்கள், தங்கள் உணர்வுகளை அடக்கியவர்கள், தங்கள் புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தீமை விலக்கியவர்கள், தானம் செய்வதில் முனைப்புடன் இருப்பவர்கள், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் வென்று, போர்வடுக்களை மேனியில் தாங்கிய மனிதர்கள் மட்டுமே அந்தப் பகுதிகளை அடைய முடியும். ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்கள் செய்பவர்களால் அடையப்படும் அவ்வுலகங்களில் பக்திமான்களே வசிக்கின்றனர்.

புதன், ஆகஸ்ட் 27, 2014

காம்யகம் வந்த வியாசர்! - வனபர்வம் பகுதி 257

Vyasa visited Kamyaka!  | Vana Parva - Section 257 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

காம்யக வனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; தானம், தவம் ஆகியவற்றில் எது அதிகப் பலனைக் கொடுக்கும் என்ற விளக்கம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, காட்டில் வசிக்கும் அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், அவல நிலையிலேயே பதினோரு {11} வருடங்களைக் கழித்தனர். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள, தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் அடைகாக்கும் நிலையை அடைந்து, பழங்களிலும், கிழங்குகளிலும் வாழ்ந்து, தங்கள் நாட்களைத் துன்பகரமாகவே கழித்தனர். அந்த அரசமுனியான பலமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுக்கு நேர்ந்த இந்த எல்லை கடந்து துன்பம், தனது தவறாலேயே ஏற்பட்டது என்று நினைத்தான். தன் சூதாட்டச் செயலால் விளைந்த அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவனால் {யுதிஷ்டிரனால்} நிம்மதியாக உறங்க முடியவில்லை. தன் இதயம் ஈட்டியால் துளைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். சூத மகனின் {கர்ணனின்} கடுமையான வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, தன் கோப விஷத்தை ஒடுக்கி, பெருமூச்சு விட்டபடி, தனது நேரத்தை எளிமையான தோற்றத்தில் கழித்தான். அர்ஜுனன், இரட்டையர் இருவர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சிறப்புமிக்கத் திரௌபதி, மனிதர்களில் பெரும் பலம் படைத்த பராக்கிரமம் மிக்கப் பீமன் ஆகியோர், தங்கள் பார்வையை யுதிஷ்டிரன் மேல் செலுத்தும்போதெல்லாம் {அவன் நிலையைக் கண்டு} மிகவும் கசப்பான வலியை உணர்ந்தனர். (வனவாசக் கெடுவில்) மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதை நினைத்துப்பார்த்து, கோபமும் நம்பிக்கையும் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், பல்வேறு முயற்சிகளையும் பயிற்சிகளையும் நாடி, தங்கள் உடல்களைப் பல்வேறு உருவங்களில் சமைத்தனர்.


சிறிது காலம் கழித்து வலிமைமிக்கத் துறவியும், சத்தியவதியின் மகனுமான வியாசர் பாண்டவர்களைக் காண அங்கே வந்தார். தங்களை நோக்கி அவர் வருவதைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் முன்சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவரை முறைப்படி வரவேற்றான். வியாசரை வணங்கி, அவரை மனம் நிறைய வைத்த புலன்களை அடக்கிய பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் அமர்ந்த பிறகு, அவர் சொல்வதைக் கேட்கும் வண்ணம், அவருக்கு முன்பு அமர்ந்தான். தனது பேரர்கள் மெலிந்து போய், காட்டில் கிடைப்பதை வைத்து உண்டு வாழ்வதைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தவசி {வியாசர்}, இரக்கத்தால் உந்தப்பட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, எந்த மனிதனும் தடையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. உயர்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு ஞானி, வாழ்வு என்பது பள்ளம் மேடுகள் நிறைந்ததே என்பதை அறிந்து, இன்பத்தாலோ, துன்பத்தாலோ நிறைந்திருப்பதில்லை.

பயிரைத் {விதைகளைத்} தூவுபவன் {பயிரிடும் உழவன்}, காலத்தை உணர்ந்து, பயிரின் பலன்களை அனுபவிப்பதைப் போல, மகிழ்ச்சி வரும்போது ஒருவன் மகிழ்ந்திருக்க வேண்டும்; துன்பம் வரும்போது, அவன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தவத்திற்கு மேன்மையானது எதுவுமில்லை; தவத்தினால் ஒருவன் வலிமையான கனியை அடைகிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் செய்யும் ஒரு மனிதனை சுத்தப்படுத்துகின்றன. தீமை மற்றும் மிருகத்தனமான வழிகளுக்கு அடிமையாக இருக்கும் மூடர்கள், இவ்வாழ்வுக்குப் பிறகு, மிருகத்தனமான பிறப்புகளை அடைந்து {மிருகங்களாகப் பிறந்து}, எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இவ்வுலகில் செய்யப்படும் செயல்களின் கனிகளையெல்லாம், {அம்மனிதன்} அடுத்த உலகில் அறுக்கிறான். எனவே, ஒருவன் தவத்தாலும், நோன்புகள் நோற்பதாலும் தனது உடலை கட்டுப்படுத்த வேண்டும்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூதற்ற மகிழ்ச்சியான மனதுடன், {தானம்} பெறுபவர்களிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, தனது சக்திக்குத் தக்க ஒருவன் தானம் அளிக்க வேண்டும். உண்மை பேசும் மனிதன், தொல்லைகளற்ற வாழ்வைப் பெறுகிறான். கோபம் களைந்த ஒருவன் நேர்மையை அடைகிறான். துர்குணம் களைந்த ஒருவன் உச்சபட்ச மனநிறைவை அடைகிறான். தனது புலன்களையும், உள்மனதையும் வென்ற ஒருவன், இன்னல்களை அறியமாட்டான். புலன்களை வென்ற ஒரு மனிதன் மற்றவர்களுடைய செழிப்பின் உயர்வைக் கண்டு பாதிப்படையமாட்டான். அனைவருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுத்து, வரங்களை அளிப்பவன், மகிழ்ச்சியை அடைந்து, அவனது இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். பொறாமை களைந்த மனிதன் பூரண நிம்மதியை அடைகிறான். மரியாதைக்குரியவர்களை மரியாதையுடன் நடத்துபவன், சிறப்புமிக்கக் குலத்தில் பிறப்பை அடைகிறான். தன் புலன்களை வெல்பவன், தீப்பேறுகளைச் {துரதிர்ஷ்டங்களைச்} சந்திப்பதில்லை. நன்மையைத் தொடரும் மனதுடையவன் {நன்மை செய்ய விரும்புபவன்}, இயற்கைக்குத் தான் செய்ய வேண்டிய கடனை செலுத்துவதன் காரணமாக, நேர்மையான மனதுடையவனாக மீண்டும் பிறக்கிறான்" என்றார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்} கேட்டான், "ஓ! அறம்சார்ந்தவர்களில் சிறந்தவரே, ஓ! வலிமைமிக்கத் தவசியே {வியாசரே}, தானமளிப்பதிலும், தவம் மேற்கொள்வதிலும், அடுத்த உலகத்திற்குத் தேவையான கூடுதல் செயல்திறனை {அல்லது பலாபலனை = efficacy} எது கொடுக்கும்? பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது?" என்று கேட்டான்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, தானத்தைவிட இவ்வுலகில் பயில்வதற்குக் கடினமானது ஏதுமில்லை. செல்வத்தில் {அதைச் சம்பாதிப்பதில்} மனிதர்கள் அதிகத் தாகம் கொள்கின்றனர். செல்வமும் சிரமத்துடனே அடையப்படுகிறது. ஓ! பெருந்தன்மை கொண்டவனே, வீர மனிதர்கள், செல்வத்தை அடைவதற்காக, தங்கள் இன்னுயிரையும் கைவிட்டு {இன்னுயிர் மீதுள்ள பற்றைக் கைவிட்டு} கடலின் ஆழங்களுக்குள்ளும், கானகத்திற்குள்ளும் நுழைகின்றனர். செல்வத்திற்காக, சிலர் உழவு {விவசாயம்} செய்கின்றனர், சிலர் பசுக்களை வளர்க்கின்றனர், சிலர் சேவகம் செய்கின்றனர். எனவே, இத்தகு சிரமங்களுக்கு ஆட்பட்டு அடையும் செல்வத்தைத் துறப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தானத்தைவிடப் பயில்வதற்குக் கடினமானது எதுவும் இல்லையென்பதால், வரங்களை அளிப்பது கூட, அனைத்திற்கும் மேன்மையானது என்பது எனது கருத்து.

குறிப்பாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். முறையாக அடைந்த செல்வத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பக்தியுள்ள மனிதர்களுக்குக் {தானம்} கொடுக்க வேண்டும். ஆனால், முறையற்று அடைந்த செல்வத்தைக் கொண்டு தானம் செய்பவன், மறுபிறவியின் தீமையில் இருந்து தப்ப முடியாது. ஓ! யுதிஷ்டிரா, குறித்த நேரத்தில், தகுந்த ஆளுக்கு {தானம் பெறுபவருக்கு}, சுத்தமான மனதுடன் சிறு தானத்தைச் செய்தால் கூட, {அந்த தானமளிக்கும் மனிதன்}, மறு உலகத்தில் வற்றாத பலன்களை அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருக்கிறது. முத்கலர், ஒரு துரோணம் [1] சோளத்தைத் தானம் செய்ததால் நல்ல பலனை அடைந்தார்.

[1] மிகச் சிறிய அளவு {அளவுகோல்} என்கிறார் கங்குலி. சமஸ்க்ருதத்தில் ‘த்ரோணீ’ என்றால் வாளி போன்ற ஒரு பாத்திரம், அது போன்றதொரு பாத்திரத்தில் பிறந்ததாலேயே துரோணருக்கும் அவ்வாறு பெயர் வந்தது. துரோணம் என்பது ஒரு பாத்திர அளவாக இருக்கக்கூடும்.இந்த இடத்தில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கங்குலியின் மொழிபெயர்ப்பில் கோஷ யாத்திரா பர்வமே தொடர்கிறது. 260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வம் முடிகிறது. அதன் பிறகு  261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


செவ்வாய், பிப்ரவரி 11, 2014

புனிதப்பயணம் ஆரம்பம் - வனபர்வம் பகுதி 93

Pilgrimage begun! | Vana Parva - Section 93| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைத் தொடங்கல்; அந்தணர்கள் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டல்; யுதிஷ்டிரன் அவர்களை ஏற்றல்; வியாசர், பர்வதர், நாரதர் ஆகியோர் வருகையும் அவர்களது வாழ்த்துகளும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தக் கானகத்தில் (யுதிஷ்டிரனுடன்) வசித்து வந்த அந்தணர்கள், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} (பக்திமயமான புனிதப்பயணத்திற்கு) புறப்படுவதைக் கண்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை {யுதிஷ்டிரனை} அணுகி, "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தீர்த்தங்களை நோக்கிய உனது பயணத்திற்கு, உனது தம்பிகளுடனும், சிறப்புமிக்க முனிவர் லோமசருடனும் புறப்பட்டுவிட்டாய். ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, எங்களையும் உன்னுடன் அழைத்துச் செல். ஓ குரு குலத்தின் மகனே, நீ இல்லாமல் எங்களால் அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்ய முடியாது. ஆபத்துகள் சூழ்ந்ததும், அடைவதற்கு அரிதானதுமான அவற்றில் {தீர்த்தங்கள்} இரை தேடும் விலங்குகளின் தொந்தரவுகளும் அதிகம் இருக்கும்.

ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்கள் சிறு குழுக்களில் உள்ள மனிதர்களால் {அந்தணர்களைச் சிறு குழு என்கிறார்களோ என்னவோ} அடைய முடியாதனவாக இருக்கின்றன. வில்லைத் தாங்குபவர்களில் முதன்மையான உனது தம்பிகள் எப்போதும் வீரம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். உங்களைப் போன்ற வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, நாங்களும் அவற்றுக்கு {தீர்த்தங்களுக்கு} முன்னேறுவோம். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, உனது கருணையால், தீர்த்தங்களால் கிடைக்கும் அருள்நிறைந்த கனியை அடைய அனுமதி கொடு. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது சக்தியால் பாதுகாக்கப்பட்ட நாங்கள், அந்தத் தீர்த்தங்களை அடைந்து, நீராடி எங்கள் பாவங்களைக் கழுவி கொள்ள விடு. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்களில் நீராடுவதால், கார்த்தவீரியனும், அஷ்டகனும், அரசமுனியான லோம்பதரும், ஏகாதிபத்திய வீரனுமான பரதனும் மட்டுமே அடைந்திருக்கும் அடைவதற்குக் கடினமான பகுதிகளைச் {உலகங்களைச்} சந்தேகமற நீயும் அடைவாய்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிரபாசத்தையும் மற்றத் தீர்த்தங்களையும், மகேந்திரத்தையும் மற்ற மலைகளையும், கங்கையையும் மற்ற நதிகளையும், பிலக்ஷத்தையும் மற்ற மரங்களையும் {தலவிருட்சங்களையும்- gigantic trees} உன்னுடன் காண விரும்புகிறோம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உனக்கு அந்தணர்களிடத்தில் ஏதும் மதிப்பு இருக்குமானால், தக்க நடவடிக்கையை எடு. இதனால் நீ நிச்சயம் செழிப்பை அடைவாய். ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அத்தீர்த்தங்கள், தவ நோன்புகளுக்கு எப்போதும் தடையை ஏற்படுத்தும் ராட்சசர்களின் தொல்லைகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களை அவர்களிடம் இருந்து காத்தலே உமக்குத் தகும். லோமசரால் பாதுகாக்கப்பட்டு, எங்களையும் உடன் அழைத்துக் கொண்டு, தௌமியரும், புத்திகூர்மை கொண்ட நாரதரும் பேசிய தீர்த்தங்களுக்கும், பெரும் தவச் செல்வம் கொண்ட தெய்வீக முனிவரான லோமசர் சொன்னவற்றிற்கும் செல். அப்படிச் செல்வதால் உனது பாவங்கள் அனைத்தும் விலகும்" என்றனர்.

அவர்களால் இப்படி மரியாதையுடன் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன்களில் காளையான மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமனால் தலைமைதாங்கப்பட்ட தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஆனந்தக் கண்ணீருடன் அந்தத் தவசிகளிடம், "அப்படியே ஆகட்டும்" என்றான். பிறகு லோமசர் மற்றும் புரோகிதரான தௌமியரின் அனுமதியுடன், பாண்டு மகன்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, முழு ஆன்மக் கட்டுப்பாட்டுடனும் தீர்மானத்துடனும், தனது தம்பிகளுடனும், துருபதனின் களங்கமற்ற மகளுடனும் {திரௌபதியுடனும்} புறப்பட்டுச் சென்றான். சரியாக அந்த நேரத்தில், அருள்நிறைந்த வியாசரும், புத்திகூர்மை நிறைந்த பர்வதர் மற்றும் நாரதரும் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே காம்யகத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவர்களை உரியச் சடங்குகளுடன் வழிபட்டான்.

அந்த ஏகாதிபதியால் {யுதிஷ்டிரனால்} இப்படி வழிபடப்பட்ட அந்த அருளப்பட்டவர்கள் யுதிஷ்டிரனிடம், "ஓ யுதிஷ்டிரா, ஓ பீமா, இரட்டையர்களே {நகுல சகாதேவர்களே}, உங்கள் மனதில் இருந்து தீய எண்ணங்களை அகற்றுங்கள். உங்கள் இதயங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, தீர்த்தங்களுக்குச் செல்லுங்கள். உடல் ரீதியாக விதிகளைக் கடைப்பிடிப்பது பூலோக விரதம் என்றழைக்கப்படுகிறது; அதே வேளையில், தீய எண்ணங்களில் இருந்து விடுபெற இதயத்தைச் சுத்திகரிக்கும் முயற்சி தெய்வீக விரதம் என்று அழைக்கப்படுகிறது என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தீய எண்ணங்களில் இருந்து விடுபட்ட மனது உயர்ந்த தூய்மையைக் கொண்டது. ஆகையால், உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, நட்புணர்வுகளை மட்டுமே வளர்த்துத் தீர்த்தங்களைக் காணுங்கள். உடல் சார்ந்து பூலோக விரதங்களைக் கடைப்பிடித்துக் கொண்டே, தெய்வீக விரதங்களால் மனதைச் சுத்திகரிப்பவர்களாக இருந்து, ஏற்கனவே உரைகளில் கேட்டவாறு புனிதப்பயணங்களின் கனிகளை அடைந்து கொள்ளுங்கள்" என்றனர்.

"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், தெய்வீக மற்றும் மனித முனிவர்களை வழக்கமான சடங்குகளைச் {மங்கல வாழ்த்துகளைச்} செய்ய வைத்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, லோமசர், துவைபாயனர்{வியாசர்}, நாரதர் மற்றும் தெய்வீக முனிவரான பர்வதர் ஆகியோரின் பாதங்களை வழிபட்டு தௌமியருடனும், தங்களுடன் கானகத்தில் இருந்த தவசிகளுடனும் மார்கழியின் {Agrahayana} முழு நிலவிற்கு {பௌர்ணமிக்கு} அடுத்த நாளில் {the day following the full moon of Agrahayana} பூசம் நட்சத்திரத்தில் {Pushya} புறப்பட்டனர். மரவுரியும், மான்தோலும், சடா முடியும் தரித்து, துளைக்கமுடியாத கவசத்துடன் வாள்கள் ஏந்தியவாறு அவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ ஜனமேஜயா, அம்பறாத்தூணிகளுடனும், கணைகளுடனும், குறுவாள்களுடனும், மற்ற ஆயுதங்களுடனும் இருந்த பாண்டுவின் வீர மகன்கள், இந்திரசேனனுடனும், மற்றப் பணியாட்களுடனும், பல சமையற்காரர்களுடனும், பிற வகைகளைச் சேர்ந்த ஊழியர்களுடனும் பதினைந்து தேர்களில் {fourteen and one cars}, கிழக்கு நோக்கிய முகங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


வெள்ளி, டிசம்பர் 20, 2013

பெரும் முனிவனே அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 36

Arjuna is a great rishi | Vana Parva - Section 36 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வியாசர் வந்து யுதிஷ்டிரனுக்கு ஞானத்தை உபதேசிப்பது. வியாசரின் கட்டளைப்படி யுதிஷ்டிரன் துவைத வனத்தைவிட்டு, காம்யக வனம் சென்று தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது...


வைசம்பாயனர் சொன்னார், "பீமனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனும், மனிதர்களில் புலியும், பகைவர்களைக் கொல்பவனுமான யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டபடி அமைதியாகச் சிந்தித்தான். பிறகு தனக்குள்ளேயே, "மன்னர்களின் கடமைகளையும், பலவகைப்பட்டவர்களின் கடமைகள் குறித்த உண்மைகளையும் கேட்டிருக்கிறேன். கடமைகளைக் கண்ணுக்கு முன்பு வைத்து, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் நடத்தைகளில் அவற்றை அனுசரிப்பவர்களே கடமையைச் சரியாகச் செய்பவர்கள் ஆவார்கள். அறத்தின் உண்மையான வழிகளை அறிந்த நான், மேருவைப் புரட்டிப் போடுவது போல அறத்தை எப்படி புரட்டிப் போடுவேன்?" என்று சிறிது நேரம் சிந்தித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானித்து, பீமனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அவனுக்கு மறுமொழி கூறினான்.


அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, நீ சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால், ஓ பேசுபவர்களில் முதன்மையானவனே, நான் சொல்லப்போகும் மறுமொழியையும் கேள். ஓ பீமா, ஒருவன் செய்ய முயற்சிக்கும் எந்தப் பாவ காரியமும், தைரியத்தை {திமிரை} நம்பி மட்டுமே செய்யப்பட்டு, எப்போதும் வலியின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. ஆனால், ஓ பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {பீமனே}, ஆழ்ந்து ஆராய்ந்து, நன்கு வழிநடத்தப்பட்ட வீரத்துடனும், அனைத்து கருவிகளுடனும்,  எது தொடங்கப்பட்டாலும் அது வெற்றியடையும். தேவர்களே கூட அப்படிப்பட்ட ஏற்பாடுகளுக்கு அனுக்கிரம் செய்வார்கள். ஓ பீமா, பலத்தில் கொண்டுள்ள கர்வத்தாலும், அவசரத்தாலும் அக்காரியத்தை உடனே நடத்த வேண்டும் என்று எண்ணுகிறாய்.

வீழ்த்துவதற்கு கடினமான பூரிஸ்ரவஸ், சலன், பெரும் பலம் மிக்க ஜலசந்தன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரோணரின் பலம் மிக்க மகன் {அஸ்வத்தாமன்}, திருதராஷ்டிரன் மகன்களாகிய துரியோதனனும் மற்றவரும் ஆயுதக்கலையில் சாதனை செய்தவர்கள். அவர்கள் அனைவரும் நம்முடன் போரிடத் தயாராக இருக்கிறார்கள். நம்மால் காயப்பட்ட அந்த மன்னர்களும் பூமியின் தலைவர்களும், கௌரவர்களுடன் உறவு பூண்டவர்களும் கௌரவர்களின் பக்கத்தையே சேர்வார்கள்.

பீஷ்மர், துரோணர், மற்றும் சிறப்புவாய்ந்த கிருபர் ஆகியோரின் நடத்தை அவர்களிடம் {கௌரவர்களிடம்} எவ்வாறு இருக்கிறதோ அதே போல நம்மிடம் இருந்தாலும், ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, எனது உறுதியான முடிவு என்னவென்றால் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும், தங்களுக்கு மிகவும் பிடித்தமான அரச உதவிகளுக்குப் பதிலாக, போர்க்களத்தில் உயிரையும் தர சித்தமாயிருப்பார்கள். அர்ப்பணிப்புடன் அறம்பயிலும் அவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள். வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களால் கூட அவர்களை வீழ்த்த முடியாது என்றே நான் எண்ணுகிறேன். இன்னும் அவர்களிடம் கர்ணன் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். மூர்க்கமும், எப்போதும் கோபமும் கொண்ட அவன் {கர்ணன்} அனைத்து ஆயுதங்களிலும் நிபுணனாகவும், வெல்லப்பட முடியாதவனாகவும், துளைக்க முடியாத கவசம் கொண்டவனாகவும் இருக்கிறான். மனிதர்களில் முதன்மையான அவர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தாமல், எந்த உதவியும் அற்ற நாம் துரியோதனனை எப்படிக் கொல்ல முடியும்? ஓ விருகோதரா {பீமா}, வில் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த சூத மகனின் {கர்ணனின்} கை லாவகத்தை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை," என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மூர்க்கமான பீமன் அச்சமுற்று ஏதும் பேசாதிருந்தான். பாண்டுவின் மகன்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, சத்தியவதியின் மகனும் பெரும் தவசியுமான வியாசர் அங்கே வந்தார். அப்படி அவர் வந்த போது பாண்டுவின் மகன்கள் அவரை முறைப்படி வணங்கினர். பிறகு, பேசுபவர்களில் முதன்மையான அவர் {வியாசர்} யுதிஷ்டிரனிடம், "ஓ யுதிஷ்டிரா, ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் காளையே, உனது இதயத்தில் என்ன கடந்து செல்கிறது என்பதை எனது ஞானப்பார்வையில் கண்டே, நான் உன்னிடம் வந்தேன். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவனே, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இளவரசர்களான துரியோதனன் மற்றும் துச்சாசனன் ஆகியோரிடம் நீ கொண்ட அச்சத்தை எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நான் விலக்குவேன். என்னிடம் இருந்து அதைக் கேட்டு அமைதியுடன் அதைச் சாதித்து முடி. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அதைச் சாதிப்பதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடு." என்றார்.

பராசரரின் மகனான {வியாசர்}, அந்தப் பேசுபவர்களில் முதன்மையானவர் {வியாசர்} யுதிஷ்டிரனை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, ஆழமான வார்த்தைகளில், "ஓ பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும்போது உனது செழுமைக்கான நேரம் வரும். வெற்றியை உருவகமாகக் கொண்ட பிரதிஸ்மிருதி என்ற ஞானத்தை நான் அதைப் பெறத் தகுதியுடைய உனக்குத் தருகிறேன். அதை (உன்னிடமிருந்து) பெறும் அர்ஜுனன் உனது விருப்பத்தை சாதிக்கக்கூடியவனாக இருப்பான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகேந்திரன், ருத்திரன், வருணன், குபேரன், யமன் ஆகியோரிடம் அர்ஜுனன் சென்று அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறட்டும். அவன் {அர்ஜுனன்} தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் தகுதியைப் பெற்றவனாவான். அவன் {அர்ஜுனன்}, அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து நாராயணனுக்கு நண்பனும், பெரும் சக்தி படைத்த முனிவனுமாவான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அவன் {அர்ஜுனன்}, இந்திரனிடமும், ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் கானகத்தை விட்டு, நீ வசிப்பதற்கு தகுதியான வேறு கானகத்திற்குச் செல்லவும் சிந்தனை செய். நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் வசிப்பது அருமையாக இருப்பது அரிது. உனது காரியத்தில் {நீ இங்கு தங்குவதால்}, இது தவசிகளுக்கு துயரத்தையும் கொடுக்கலாம். நீ வேதங்களின் பல கிளைகள் அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்களைப் பராமரிப்பதாலும், தொடர்ந்து இங்கு வசிப்பதாலும், இக்கானகத்தில் மான்களின் எண்ணிக்கை முழுவதும் அழிந்து போகக்கூடும். பல செடி கொடிகளும் அழிந்து போகும்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிச் சொல்லிவிட்டு, பெரும் ஞானம் கொண்ட, உலகத்தின் புதிர்களை அறிந்த சிறப்புவாய்ந்த, மேன்மையான தவசியான வியாசர், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அறிவியலில் முதன்மையான ஞானத்தைக் {பிரதிஸ்மிருதி} கொடுத்தார். பிறகு அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து வியாசர் மறைந்தார். அறம்சார்ந்த புத்திசாலியான யுதிஷ்டிரன், தான் பெற்ற ஞானத்தைக் கவனமாக மனதில் நிறுத்தி, சரியான நேரங்களில் அவற்றை உரைத்தான். வியாசரின் ஆலோசனையைக் கேட்டு மகிழ்ந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, துவைதவனத்தைவிட்டு, சரஸ்வதி நதிக்கரையில் இருந்து காம்யக வனத்திற்குச் சென்றான். தவத்தகுதியுடையவர்களும், சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியமைப்பு குறித்த அறிவியலை அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்கள், தேவர்கள் தலைவனைத் {இந்திரனைத்} தொடரும் முனிவர்கள் போல அவனைத் {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்றார்கள். காம்யக வனத்திற்கு வந்த சேர்ந்த அந்த பாரதர்களில் சிறந்த காளைகள், தங்கள் நண்பர்கள் மற்றும் பணியாட்களுடன் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா} சக்தி படைத்த அந்த வீரர்கள், அங்கே விற்பயிற்சிக்கு தங்களை அர்ப்பணித்து, வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டு அங்கு சிறிது காலம் வசித்தார்கள். அங்கே அந்த வனத்தில் சுத்தமான கணைகளைத் தரித்துக்கொண்டு தினமும் மான் வேட்டையாடினார்கள். பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான சடங்குகளைச் செய்தார்கள்.இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top