Showing posts with label அர்ஜுனாபிகமன பர்வம். Show all posts
Showing posts with label அர்ஜுனாபிகமன பர்வம். Show all posts

Saturday, December 21, 2013

இந்திரனைக் கண்ட அர்ஜுனன் - வனபர்வம் பகுதி 37

Arjuna saw Indra | Vana Parva - Section 37 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் அர்ஜுனனுக்கு பிரதிஸ்மிருதியை உபதேசித்து, அனைத்து ஆயுதங்களையும் பெறுவதற்காக வடக்கு நோக்கி அனுப்புதல்; அர்ஜுனன் இந்திரனை அடைவது; இந்திரன் அர்ஜுனனை சிவனை நோக்கித் தவம் இருக்குமாறு ஆலோசனை கூறுவது...

வைசம்பாயனர் சொன்னார், "சிறிது நேரம் கழித்து, நீதிமானான யுதிஷ்டிரன் முனிவரின் {வியாசரின்} கட்டளையை நினைவுகூர்ந்து, மனிதர்களில் காளையும், பெரும் ஞானியுமான அர்ஜுனனைத் தனிமையில் அழைத்தான். மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனின் கரங்களைப் பற்றிக்கொண்ட எதிரிகளைத் தண்டிக்கும் அறம் சார்ந்த யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்தப்பிறகு, தனிமையில் தனஞ்செயனிடம் {அர்ஜுனனிடம்} தெளிவான மென்மையான வார்த்தைகளால், "ஓ பாரதா {அர்ஜுனா}, மொத்த ஆயுத அறிவியலும் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரிடம் இருக்கிறது. அவர்கள் அனைத்துவிதமான பிரம்ம, தேவ, மனித, வயவ்ய {வாயு வசிக்கும் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த [அல்லது] வாயு} ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும், அதை திரும்ப அழைப்பது குறித்தும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} சமாதானப்படுத்தப்பட்டு, மதிக்கப்பட்டு, திருப்திசெய்யப்பட்டு, ஒரு குருவிடம் ஒருவன் நடந்து கொள்ளும் முறைப்படி நடத்தப்படுகிறார்கள். திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனது படை வீரர்கள் அனைவரிடமும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கிறான்.  அவனால் {துரியோதனனால்} அனைத்துத் தலைவர்களும் மதிக்கப்பட்டு, திருப்தி செய்து அவர்களிடம் மறு நன்மையை எதிர்பார்த்து இருக்கிறான். இப்படி அவனால் {துரியோதனனால்} மதிக்கப்பட்டவர்கள், தங்கள் பலத்தைப் {நமக்கு எதிராகப்} பயன்படுத்தத் தவறமாட்டார்கள்.


ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, கிராமங்கள், நகரங்கள், கானகங்கள், சுரங்கங்கள் மற்றும் கடல்களுடன் கூடிய மொத்த பூமியும் துரியோதனனின் ஆட்சிக்குட்பட்டு இருக்கிறது. நீ மட்டுமே எங்களது ஒரே அடைக்கலம். உன் மீது பெரும் பாரம் இருக்கிறது. ஆகையால், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இப்போது நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கிருஷ்ண துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து ஒரு அறிவியலைப் பெற்றிருக்கிறேன். அந்த அறிவியலை நீ பயன்படுத்தினால், முழு அண்டத்தின் அறிவும் உனக்கு வெளிப்படும். ஓ குழந்தாய், கவனமாக அந்த அறிவியலை என்னிடம் இருந்து பெற்று, குறித்த நேரத்தில் (அந்த அறிவியலின்) துணை கொண்டு தேவர்களின் கருணையைப் பெறு. ஓ பாரத குலத்தின் காளையே, கடுமையான தவத்திற்கு உன்னை நீ அர்ப்பணித்துக் கொள். ஓ குழந்தாய் {அர்ஜுனா}, வில், வாள், கவசம் ஆகியவற்றைப் பூண்டு, நோன்பு மற்றும் நல்ல உறுதிகளை மேற்கொண்டு, யாருக்கும் வழி கொடாமல் வடதிசை நோக்கிச் செல். ஓ தனஞ்செயா {அர்ஜுனா}, தேவ ஆயுதங்கள் அனைத்தும் இந்திரனிடம் இருக்கின்றன. விரித்திரன் மீதிருந்த பயத்தால் தேவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பலங்கள் அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} கொடுத்தனர். ஒரே இடத்தில் கூடி இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் நீ பெறுவாய். நீ சக்ரனிடம் {இந்திரனிடம்} செல். அவன் {இந்திரன்}, அவனது அனைத்து ஆயுதங்களையும் உனக்குத் தருவான். வில்லை எடுத்துக் கொண்டு இன்றே புரந்தரனைக் {இந்திரனைக்} காண செல்" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன மேன்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன், அந்த அறிவியலை அர்ஜுனனுக்குக் கொடுத்தான். உரிய சடங்குகளுடன், பேச்சு, உடல், மனம் ஆகியவற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தம்பிக்கு {அர்ஜுனனுக்கு} அந்த அறிவியலைக் கொடுத்த அண்ணன் {யுதிஷ்டிரன்}, தம்பியை {அர்ஜுனனை} உடனே செல்ல கட்டளையிட்டான். யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், பலம்வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன், காண்டீவத்தையும், வற்றாத ஆம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, கவசம், கையுறை, உடும்புத்தோலால் செய்யப்பட்ட விரலுறை ஆகியவற்றைப் பூண்டு, நெருப்பில் நெய்யூற்றி {அக்னி ஹோமம் செய்து}, அந்தணர்களுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களைத் தன்னை ஆசீர்வதிக்கச் செய்து, இந்திரனைக் காணும் நோக்கோடு (காம்யக வனத்தைவிட்டு) வெளியேறினான்.

வில்தாங்கிய அந்த வீரன் {அர்ஜுனன்}, வெளியேறும் போது உருக்கத்துடன் பெருமூச்சு விட்டபடி, திருதராஷ்டிரன் மகன்களுக்கு மரணத்தைக் கொடுக்க மேல்நோக்கிப் பார்த்தான். குந்தியின் மகன் {அர்ஜுனன்} ஆயுதந்தரித்து வெளிக்கிளம்புவதைக் கண்ட அந்தணர்களும், சித்தர்களும், அரூபமான ஆவிகளும் அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ விரும்பியதை விரைவில் அடைவாய்" என்றனர். அந்தணர்கள் தங்கள் ஆசீர்வாதங்களைச் சொல்லி, "நீ கொண்டிருக்கும் நோக்கத்தை அடைவாய். வெற்றி உண்மையில் உனதாகட்டும்" என்றனர்.

சால மரம் போன்ற பருமனான தொடைகள் கொண்ட வீரனான அர்ஜுனன், அனைவரின் இதயங்களையும் கவர்ந்து செல்வதைக் கண்ட கிருஷ்ணை {திரௌபதி} அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ வலுத்த கரம் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மைப் பெற்ற போது குந்தி என்னவெல்லாம் விரும்பினாளோ, நீர் என்னவெல்லாம் விரும்புகிறீரோ அவற்றை எல்லாம் சாதியும். ஓ தனஞ்செயரே {அர்ஜுனரே}, நாம் யாரும் இனி எப்போதும் க்ஷத்திரிய குலத்தில் பிறவாதிருப்போமாக. பிச்சையெடுத்து வாழும் அந்தணர்களை நான் எப்போதும் வணங்கி வருகிறேன். இளவரசர்களின் சபையில் என்னைக் கண்ட இழிந்த துரியோதனன் என்னை மாடு என்று சொல்லி பரிகரித்தது எனக்கு பெரும் துயரத்தைக் கொடுக்கிறது. இதையும் தவிர்த்து அவன் {துரியோதனன்} பல கடுஞ்சொற்களை அந்தச் சபையில் வைத்து சொன்னான். நான் இதுவரை உணர்ந்த அவமானங்களைவிட, உம்மைப் பிரியும் இந்த சோகம் பெரிதாக இருக்கிறது. நீர் இல்லாத போது, நிச்சயமாக உமது சகோதரர்கள் மணிக்கணக்காக உமது வீரச் சாகசங்களையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனரே}, நீ வெகு காலத்திற்கு வெளியே இருந்துவிட்டால், எங்களுக்கு எந்த இன்பமும் செல்வமும் கிடையாது. அப்படிக் கிடைத்தாலும் அது எங்களுக்குச் சுவை தராது. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனரே}, நமது செழுமை, நமது துன்பம், வாழ்வும் மரணமும், நமது நாடு, செழிப்பு ஆகியவை அனைத்தும் உம்மை நம்பியே இருக்கின்றன. ஓ பாரதரே {அர்ஜுனரே}, வெற்றி உமதாகட்டும் என்று நான் உம்மை வாழ்த்துகிறேன். ஓ பாவமற்றவரே, இப்போது நீர் செய்யப்போகும் காரியத்தால் பலம் நிறைந்த எதிரிகளைக்கூட உம்மால் எதிர்க்க முடியும். ஓ பெரும் பலம் உடையவரே, வெற்றியை அடைய விரைவாகச் செல்லும். ஆபத்துகள் உமைத்தாக்காதிருக்கட்டும். நான் தத்ரியையும் {ஆதித்யர்களில் ஒருவன் [ஆரோக்கியத்திற்கானவன்]} விதத்ரியையும் {துர்கையையும்} வணங்குகிறேன். நாம் உம்மை ஆசீர்வதிக்கிறேன் {I bless thee}. செழிப்பு உமதாகட்டும். ஓ தனஞ்செயரே {அர்ஜுனரே}, நீர் எப்போதும் உமது அண்ணனை வழிபட்டு, அவரது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதால், ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, தித்ரி, புஷ்டி, உமை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உமது வழியில் உம்மைக் காப்பார்கள். ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனரே}, நான், வசுக்களையும், ருத்திரர்களையும், ஆதித்தியர்களையும், மணிலர்களையும், விஸ்வதேவர்களையும், சத்யர்களையும் உமது நன்மைக்காக வழிபடுவேன். ஓ பாரதரே {அர்ஜுனரே}, வானம், நிலம், சொர்க்கம் ஆகியவற்றில் இருக்கும் தொல்லை கொடுக்கும் ஆவிகளிடம் இருந்தும் மற்ற பல ஆவிகளிடமிருந்தும் பாதுகாப்பாக இரும்" என்று சொன்னாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யக்ஞசேனனின் {துருபதனின்} மகளான கிருஷ்ணை {திரௌபதி} ஆசீர்வாதங்களைக் கூறி நிறுத்திக் கொண்டாள். பாண்டுவின் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மகன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களை வலம் வந்து, தௌமியரை வலம் வந்து, தனது அழகான வில்லை எடுத்துக் கொண்டு கிளம்பினான். இந்திரனைக் காணும் ஆவலால் சென்று கொண்டிருந்த பெரும் சக்தியும் வீரமும் கொண்ட அர்ஜுனன் சென்ற வழியை விட்டு அனைத்து உயிரினமும் கிளம்பத் தொடங்கின.

அந்த எதிரிகளைக் கொல்பவன் தவசிகள் வசித்த பல மலைகளைக் கடந்து, தேவர்கள் ஓய்வெடுக்கும் புனிதமான இமய மலையை அடைந்தான். தவ நோன்புகளின் தொடர்ச்சியாக, காற்றைப் போல, மனோ வேகத்தைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, ஒரே நாளில் அந்த புனிதமான மலையை அடைந்தான். இமய மலையையும், கந்தமாதனாவையும் கடந்து, பல சமமற்ற ஆபத்தான பகுதிகளை, இரவு பகல் பாராமல், களைப்படையாமல் கடந்து சென்றான். இந்திரகீலத்தை {மலை} அடைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} சிறிது நேரம் தங்கினான்.

அங்கே அவன் {அர்ஜுனன்} வானத்தில் இருந்து "நில்!" என்ற ஒரு குரலைக் கேட்டான். அக்குரலைக் கேட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} சுற்றிலும் தனது பார்வையைச் செலுத்தினான். வலக்கையின் திறனை இடக்கையிலும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அர்ஜுனன், தனக்கு எதிரே மர நிழலில் பிரம்மாவின் பிரகாசத்துடன் பழுப்பு மஞ்சள் நிறத்தில் {of tawny colour}, சடாமுடியும் மெலிதான உடலுடன் ஒரு தவசி நிற்பதைக் கண்டான். அப்படி அர்ஜுனனை நிறுத்திய அந்த வலிமைவாய்ந்த தவசி அவனிடம், "வில், அம்புகளுடனும், கவசத்துடனும், வாள் உறை மற்றும் கையுறையுடனும் க்ஷத்திரிய வகைக்குரிய குறிகளுடன் இருக்கும் நீ யார் குழந்தாய்? இங்கே ஆயுதங்களுக்கான தேவை இல்லை. இந்த இடம், கோபமோ இன்பமோ அற்று தவ நோன்புகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அமைதியான அந்தணர்களின் வசிப்பிடமாகும். இங்கே எந்த விதமான சச்சரவும் இல்லாததால், வில்லின் அவசியம் இங்கு இல்லை. ஆகையால், ஓ குழந்தாய், உனது வில்லைத் தூக்கி எறி. நீ இங்கு வந்த ஒரே காரணத்திலேயே வாழ்க்கையின் புனித நிலையை அடைந்துவிட்டாய். ஓ வீரனே, உன்போன்ற வீரமும் சக்தியும் கொண்ட மனிதர்கள் யாரும் இல்லை" என்றார். இப்படியே அந்த அந்தணர் பலமுறை புன்னகை கொண்ட முகத்துடன் அர்ஜுனனை வலியுறுத்தினார். ஆனால் தனது காரியத்தில் உறுதியாய் இருந்த அர்ஜுனனை அவரால் அசைக்க முடியவில்லை.

இதைக்கண்ட அந்த மறுபிறப்பாளர் {அந்தணர்}, இதயத்தில் மகிழ்ந்து, அர்ஜுனனிடம் மீண்டும், "ஓ எதிரிகளைக் கொல்பவனே, நீ அருளப்பட்டிரு! நானே சக்ரன் {இந்திரன்}, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட குரு குலத்தை நிலை நிறுத்துபவனான வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிரம் தாழ்த்தி, கைகளைக் கூப்பி, அந்த ஆயிரம் கண் உடையவனிடம் {இந்திரனிடம்}, "ஓ சிறப்பு மிக்கவரே, நான் அனைத்து ஆயுதங்களையும் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதுவே எனது விருப்பத்திற்குரிய பொருள்; இந்த வரத்தை எனக்கு அருளும்" என்று கேட்டான். அந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சிரித்துக் கொண்டே, அவனிடம் {அர்ஜுனனிடம்} மகிழ்ச்சியாக, "ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, நீ இந்த இடத்தை அடைந்த பிறகு, ஆயுதங்களுக்கான தேவை என்ன இருக்கிறது? நீ ஏற்கனவே வாழ்க்கையின் புனித நிலையை அடைந்து விட்டாய். நீ விரும்பும் அருள் நிறைந்த உலகங்களைக் கேள்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆயிரம் கண்ணுடையவனிடம் {இந்திரனிடம்}, "அருள் நிறைந்த உலகங்களையும், இன்பம் நுகர் பொருட்களையும், தெய்வீக உலகங்களையும் நான் விரும்பவில்லை. ஓ தேவர்கள் தலைவா {இந்திரா}, அனைத்து தேவர்களின் செழிப்பை நான் விரும்பவில்லை. எனது சகோதரர்களை கானகத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். பகைவர்களைப் பழிதீர்க்காமல், அனைத்து உலகங்களில் அனைத்து காலங்களிலும் அழியா பழியை அடைவேன். மகிழ்ச்சியைப் பற்றிய இந்தப் பேச்சு எதற்கு?" என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட அனைத்து உலகங்களாலும் வழிபடப்படுபவனான விரித்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மென்மையான வார்த்தைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சமாதானப் படுத்த எண்ணி, "நீ எப்போது அனைத்து உயிரினங்களின் தலைவனான திரிசூலம் தாங்கும், முக்கண் சிவனைக் காண்கிறாயோ, ஓ குழந்தாய், அப்போது, நான் உனக்கு அனைத்து தேவ ஆயுதங்களையும் தருகிறேன். ஆகையால், தேவர்களில் உயர்ந்த தெய்வத்தைப் பார்க்கும் தகுதியைப் பெற முயற்சி செய். அப்படி அவரை நீ கண்ட பிறகுதான், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ உனது அனைத்து விருப்பங்களையும் அடைய முடியும்" என்றான். பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இப்படிச் சொன்ன சக்ரன் {இந்திரன்} உடனே மறைந்து போனான். தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அர்ஜுனன் அதே இடத்தில் தங்கினான்.

 ******************அர்ஜுனாபிகமன பர்வம் முற்றிற்று******************


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, December 20, 2013

பெரும் முனிவனே அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 36

Arjuna is a great rishi | Vana Parva - Section 36 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வியாசர் வந்து யுதிஷ்டிரனுக்கு ஞானத்தை உபதேசிப்பது. வியாசரின் கட்டளைப்படி யுதிஷ்டிரன் துவைத வனத்தைவிட்டு, காம்யக வனம் சென்று தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது...


வைசம்பாயனர் சொன்னார், "பீமனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனும், மனிதர்களில் புலியும், பகைவர்களைக் கொல்பவனுமான யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டபடி அமைதியாகச் சிந்தித்தான். பிறகு தனக்குள்ளேயே, "மன்னர்களின் கடமைகளையும், பலவகைப்பட்டவர்களின் கடமைகள் குறித்த உண்மைகளையும் கேட்டிருக்கிறேன். கடமைகளைக் கண்ணுக்கு முன்பு வைத்து, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் நடத்தைகளில் அவற்றை அனுசரிப்பவர்களே கடமையைச் சரியாகச் செய்பவர்கள் ஆவார்கள். அறத்தின் உண்மையான வழிகளை அறிந்த நான், மேருவைப் புரட்டிப் போடுவது போல அறத்தை எப்படி புரட்டிப் போடுவேன்?" என்று சிறிது நேரம் சிந்தித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானித்து, பீமனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அவனுக்கு மறுமொழி கூறினான்.


அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, நீ சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால், ஓ பேசுபவர்களில் முதன்மையானவனே, நான் சொல்லப்போகும் மறுமொழியையும் கேள். ஓ பீமா, ஒருவன் செய்ய முயற்சிக்கும் எந்தப் பாவ காரியமும், தைரியத்தை {திமிரை} நம்பி மட்டுமே செய்யப்பட்டு, எப்போதும் வலியின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. ஆனால், ஓ பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {பீமனே}, ஆழ்ந்து ஆராய்ந்து, நன்கு வழிநடத்தப்பட்ட வீரத்துடனும், அனைத்து கருவிகளுடனும்,  எது தொடங்கப்பட்டாலும் அது வெற்றியடையும். தேவர்களே கூட அப்படிப்பட்ட ஏற்பாடுகளுக்கு அனுக்கிரம் செய்வார்கள். ஓ பீமா, பலத்தில் கொண்டுள்ள கர்வத்தாலும், அவசரத்தாலும் அக்காரியத்தை உடனே நடத்த வேண்டும் என்று எண்ணுகிறாய்.

வீழ்த்துவதற்கு கடினமான பூரிஸ்ரவஸ், சலன், பெரும் பலம் மிக்க ஜலசந்தன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரோணரின் பலம் மிக்க மகன் {அஸ்வத்தாமன்}, திருதராஷ்டிரன் மகன்களாகிய துரியோதனனும் மற்றவரும் ஆயுதக்கலையில் சாதனை செய்தவர்கள். அவர்கள் அனைவரும் நம்முடன் போரிடத் தயாராக இருக்கிறார்கள். நம்மால் காயப்பட்ட அந்த மன்னர்களும் பூமியின் தலைவர்களும், கௌரவர்களுடன் உறவு பூண்டவர்களும் கௌரவர்களின் பக்கத்தையே சேர்வார்கள்.

பீஷ்மர், துரோணர், மற்றும் சிறப்புவாய்ந்த கிருபர் ஆகியோரின் நடத்தை அவர்களிடம் {கௌரவர்களிடம்} எவ்வாறு இருக்கிறதோ அதே போல நம்மிடம் இருந்தாலும், ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, எனது உறுதியான முடிவு என்னவென்றால் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும், தங்களுக்கு மிகவும் பிடித்தமான அரச உதவிகளுக்குப் பதிலாக, போர்க்களத்தில் உயிரையும் தர சித்தமாயிருப்பார்கள். அர்ப்பணிப்புடன் அறம்பயிலும் அவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள். வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களால் கூட அவர்களை வீழ்த்த முடியாது என்றே நான் எண்ணுகிறேன். இன்னும் அவர்களிடம் கர்ணன் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். மூர்க்கமும், எப்போதும் கோபமும் கொண்ட அவன் {கர்ணன்} அனைத்து ஆயுதங்களிலும் நிபுணனாகவும், வெல்லப்பட முடியாதவனாகவும், துளைக்க முடியாத கவசம் கொண்டவனாகவும் இருக்கிறான். மனிதர்களில் முதன்மையான அவர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தாமல், எந்த உதவியும் அற்ற நாம் துரியோதனனை எப்படிக் கொல்ல முடியும்? ஓ விருகோதரா {பீமா}, வில் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த சூத மகனின் {கர்ணனின்} கை லாவகத்தை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை," என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மூர்க்கமான பீமன் அச்சமுற்று ஏதும் பேசாதிருந்தான். பாண்டுவின் மகன்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, சத்தியவதியின் மகனும் பெரும் தவசியுமான வியாசர் அங்கே வந்தார். அப்படி அவர் வந்த போது பாண்டுவின் மகன்கள் அவரை முறைப்படி வணங்கினர். பிறகு, பேசுபவர்களில் முதன்மையான அவர் {வியாசர்} யுதிஷ்டிரனிடம், "ஓ யுதிஷ்டிரா, ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் காளையே, உனது இதயத்தில் என்ன கடந்து செல்கிறது என்பதை எனது ஞானப்பார்வையில் கண்டே, நான் உன்னிடம் வந்தேன். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவனே, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இளவரசர்களான துரியோதனன் மற்றும் துச்சாசனன் ஆகியோரிடம் நீ கொண்ட அச்சத்தை எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நான் விலக்குவேன். என்னிடம் இருந்து அதைக் கேட்டு அமைதியுடன் அதைச் சாதித்து முடி. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அதைச் சாதிப்பதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடு." என்றார்.

பராசரரின் மகனான {வியாசர்}, அந்தப் பேசுபவர்களில் முதன்மையானவர் {வியாசர்} யுதிஷ்டிரனை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, ஆழமான வார்த்தைகளில், "ஓ பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும்போது உனது செழுமைக்கான நேரம் வரும். வெற்றியை உருவகமாகக் கொண்ட பிரதிஸ்மிருதி என்ற ஞானத்தை நான் அதைப் பெறத் தகுதியுடைய உனக்குத் தருகிறேன். அதை (உன்னிடமிருந்து) பெறும் அர்ஜுனன் உனது விருப்பத்தை சாதிக்கக்கூடியவனாக இருப்பான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகேந்திரன், ருத்திரன், வருணன், குபேரன், யமன் ஆகியோரிடம் அர்ஜுனன் சென்று அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறட்டும். அவன் {அர்ஜுனன்} தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் தகுதியைப் பெற்றவனாவான். அவன் {அர்ஜுனன்}, அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து நாராயணனுக்கு நண்பனும், பெரும் சக்தி படைத்த முனிவனுமாவான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அவன் {அர்ஜுனன்}, இந்திரனிடமும், ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் கானகத்தை விட்டு, நீ வசிப்பதற்கு தகுதியான வேறு கானகத்திற்குச் செல்லவும் சிந்தனை செய். நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் வசிப்பது அருமையாக இருப்பது அரிது. உனது காரியத்தில் {நீ இங்கு தங்குவதால்}, இது தவசிகளுக்கு துயரத்தையும் கொடுக்கலாம். நீ வேதங்களின் பல கிளைகள் அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்களைப் பராமரிப்பதாலும், தொடர்ந்து இங்கு வசிப்பதாலும், இக்கானகத்தில் மான்களின் எண்ணிக்கை முழுவதும் அழிந்து போகக்கூடும். பல செடி கொடிகளும் அழிந்து போகும்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிச் சொல்லிவிட்டு, பெரும் ஞானம் கொண்ட, உலகத்தின் புதிர்களை அறிந்த சிறப்புவாய்ந்த, மேன்மையான தவசியான வியாசர், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அறிவியலில் முதன்மையான ஞானத்தைக் {பிரதிஸ்மிருதி} கொடுத்தார். பிறகு அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து வியாசர் மறைந்தார். அறம்சார்ந்த புத்திசாலியான யுதிஷ்டிரன், தான் பெற்ற ஞானத்தைக் கவனமாக மனதில் நிறுத்தி, சரியான நேரங்களில் அவற்றை உரைத்தான். வியாசரின் ஆலோசனையைக் கேட்டு மகிழ்ந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, துவைதவனத்தைவிட்டு, சரஸ்வதி நதிக்கரையில் இருந்து காம்யக வனத்திற்குச் சென்றான். தவத்தகுதியுடையவர்களும், சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியமைப்பு குறித்த அறிவியலை அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்கள், தேவர்கள் தலைவனைத் {இந்திரனைத்} தொடரும் முனிவர்கள் போல அவனைத் {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்றார்கள். காம்யக வனத்திற்கு வந்த சேர்ந்த அந்த பாரதர்களில் சிறந்த காளைகள், தங்கள் நண்பர்கள் மற்றும் பணியாட்களுடன் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா} சக்தி படைத்த அந்த வீரர்கள், அங்கே விற்பயிற்சிக்கு தங்களை அர்ப்பணித்து, வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டு அங்கு சிறிது காலம் வசித்தார்கள். அங்கே அந்த வனத்தில் சுத்தமான கணைகளைத் தரித்துக்கொண்டு தினமும் மான் வேட்டையாடினார்கள். பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான சடங்குகளைச் செய்தார்கள்.இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, December 19, 2013

கைப்பிடி புல்லால் மலைகளை மறைப்பீரா? - வனபர்வம் பகுதி 35

Will you hide Himavat mountains with handful of grass| Vana Parva - Section 35 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

வனவாசத்தை முடிக்காமலேயே துரியோதனனை வெல்ல வேண்டும் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் சொல்வது...

பீமன் சொன்னான், "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நுரை போலவும், (எப்போதும் விழத்தயாராக இருக்கும்) கனிந்த கனி போலவும், நீர் காலத்தை நம்பி அழியும் தன்மை பெற்று இருக்கிறீர். வேகமான கணையைப் போன்றும், வேகமாக ஓடும் நீரூற்றைப் போன்றும், மரணத்தைப் போன்றும் உள்ள எல்லையற்ற, அளவிடமுடியாத காலத்திற்குட்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தால்,  நம்மிடம் உள்ள அனைத்தும் அதில் அடித்துச் செல்லப்படுகிறது. அவை எல்லாம் உம்மிடம் இருக்கும் என்று எப்படி நீர் கருதுகிறீர்? ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஊசியால் குத்தி எடுக்கப்படும் மைப்பொடி போல ஒவ்வொரு கணமும் வாழ்நாள் குறையும் ஒருவன், எப்படி காலத்தை எதிர்பார்க்கலாம்? அளவற்ற ஆயுள் கொண்டவனோ அல்லது தனது வாழ்நாள் எவ்வளவு என்ற நிச்சயம் கொண்டவனோ, எதிர்காலத்தைத் தன் கண் முன் நடக்கும் நிகழ்வு போல அறிபவனுமே (எதிர்பார்த்த) காலத்தின் வருகைக்காகக் காத்திருக்கலாம்.


ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் நமது வாழ்நாட்களைக் குறைத்து பதிமூன்று {13} வருடங்கள் காத்திருந்தோமானால், அது நம்மை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும். உடலுள்ள எந்த உயிரினத்திற்கும் மரணம் நிச்சயம் வரும். ஆகையால், நாம் இறக்கும் முன்பு நமது நாட்டை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். எதிரிகளைத் தண்டிக்கத் தவறி, புகழடைவதில் தோல்வியுறுபவன், அசுத்தமான ஒரு பொருளைப் போன்றவனாவான். தடுமாறும் காளையைப் போல புகழற்று அழிந்து போகக்கூடியவன் இந்தப் பூமிக்குத் தேவையற்ற பாரமாகவே இருப்பான். எதிரிகளைத் தண்டிக்காமல் பலமற்று, வீரமற்று வீணாக ஒருவன் வாழ்ந்தால், அவன் தாழ்ந்த பிறவியாகவே கருதப்படுவான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொன்று உமது கரத்தின் பலத்தால் பெற்ற செல்வத்தை அனுபவியும். உமது கரங்களால் தங்கத்தைப் பொழிய முடியும்; உமது புகழ் உலகெங்கும் பரவும்.

ஓ அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, தனக்குத் தீங்கிழைத்தவனைக் கொல்வதால் ஒருவன் அன்றே நரகத்திற்குச் சென்றாலும், அந்த நரகம் கூட அவனுக்கு சொர்க்கமாக மாறும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவன் கோபத்தை அடக்குவதால் உண்டாகும் வலி உணர்ச்சி நெருப்பை விட எரிச்சல் நிறைந்ததாக இருக்கும். இப்போது கூட நான் அதனால் எரிந்து கொண்டுதான் இருக்கிறேன். என்னால் பகலிலோ இரவிலோ உறங்க முடிவதில்லை. பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்று அழைக்கப்படும் பிருதையின் {குந்தியின்} இந்த மகன், வில் நாணை இழுப்பதில் முதன்மையானவனாவான். அவன் {அர்ஜுனன்} குகைக்குள் வாழும் சிங்கத்தைப் போல இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிச்சயமாக துக்கம் அவனை எரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பூமியில் உள்ள அனைத்து வில்லாளிகளின் துணையும் இல்லாமல் எதிரிகளைக் கொல்ல நினைக்கும் அவன், பலம் வாய்ந்த யானையைப் போல, தனது நெஞ்சத்தில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான்.

நகுலன், சகாதேவன், வீரர்களின் தாயான முதிர்ந்த குந்தி ஆகியோர் உம்மைத் திருப்திப்படுத்தவே ஊமையாக இருக்கின்றனர். அவர்களுக்குச் சமமாக சிரீன்ஜயர்களும் நமது நண்பர்கள் அனைவரும், உம்மைத் திருப்தி செய்ய எண்ணுகின்றனர். நானும் பிரதிவிந்தியனின் தாயும் {திரௌபதியும்} மட்டுமே துயரத்தில் எரிந்து உம்மிடம் இதுகுறித்துப் பேசுகிறோம். நான் உம்மிடம் என்னவெல்லாம் பேசுகிறேனோ, அவையெல்லாம் துக்கத்தில் மூழ்கி போருக்கு ஆவலாகக் காத்திருக்கும் இவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதே. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அலட்சியப்படுத்தத்தக்க பலவீனமானவர்களால் நமது நாடு கவரப்பட்டு, அவர்களால் அந்த நாடு அனுபவிக்கப்படுவதை விட வேறு என்ன பேரிடர் நமக்கு வர வேண்டும்?

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது பலவீனமான மனதாலேயே, நீர் செய்து கொடுத்த உறுதிமொழியை மீற வெட்கப்படுகிறீர். ஆனால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, இந்த உமது மனநிலையாலும் உமது அன்பாலும் இந்தக் கொடிய வலியைத் தாங்கிக் கொள்வதை யாரும் மெச்சமாட்டார்கள். வேதங்களை அதன் பொருள் உணராது மனப்பாடம் செய்யும் மடமையும் அறியாமையும் கொண்ட உயர் பிறவிகளைப் போல, உமது அறிவு உண்மையைக் காணவில்லை. நீர் அந்தணர்களைப் போல அன்பாக இருக்கிறீர். நீர் எப்படி க்ஷத்திரியக் குலத்தில் பிறந்தீர்? க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர்கள் பொதுவாக குரூர புத்தி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

நீர், மனுவால் உரைக்கப்பட்ட குரூரமான, கபடமான, அமைதிவழிகளுக்கும் அறத்திற்கும் எதிரான அரச கடமைகளைக் கேட்டிருக்கிறீர். பிறகு ஏன், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் தீய திருதராஷ்டிரன் மகன்களை மன்னிக்கிறீர்? உமக்கு அறிவும், வீரமும் கல்வியும், உயர்ந்த பிறப்பும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, செய்ய வேண்டிய காரியத்தில் முயற்சியில்லாமல் பெரும்பாம்பு போல அசையாமல் ஏன் இருக்கிறீர்?

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எங்களை மறைக்க விரும்புபவன், இமயத்தின் மலைகளை, கைப்பிடி புல்லால் மறைக்க விரும்புகிறான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, உலகம் முழுவதும் நீர் அறியப்பட்டவராதலால், மனிதர்களை அறியாமல் எப்படி சூரியனால் முழு வானத்தைக் கடக்க முடியாதோ அப்படி உம்மால் யாராலும் அறியப்படாமல் இருக்க முடியாது. நீர் நிறைந்த இடத்தில் கிளை பரப்பி, மலர்களுடனும், இலைகளுடனும் இருக்கும் பெரும் மரம் போல அல்லது இந்திரனின் யானையைப் {ஐராவதத்தைப்} போல இருக்கும் ஜிஷ்ணுவால் {அர்ஜுனானால்} எப்படி யாராலும் அறியப்படாமல் இருக்க முடியும்? இளம் சிங்கங்களைப் போல இருக்கும் நமது தம்பிகளான இந்தப் பிள்ளைகள் நகுலனும் சகாதேவனும் எப்படி கமுக்கமாக {இரகசியமாக} வாழ முடியும்? ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, துருபதனின் மகளும் , இளவரசியும் , வீரர்களின் தாயும், அறச் செயல்களுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படி யாரும் அறியாமல் வாழ முடியும்? என்னைப் பிள்ளைப் பருவத்தில் இருந்து அனைவரும் அறிவர். யாரும் அறியாமல் நான் எப்படி வாழ முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தச் செயல் மேருவின் மலைகளை மறைக்க முயல்வதற்குச் சமமானது.

நம்மால் அவர்களது நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பல மன்னர்கள் இருக்கிறார்கள். நம்மால் நாடுகடத்தப்பட்ட, செல்வங்கள் அபகரிக்கப்பட்ட இந்த மன்னர்களும் இளவரசர்களும் நமக்கு நண்பர்கள் இல்லையாகையால், அவர்கள்,  திருதராஷ்டிரனின் தீய மகன்களைத் தொடர்வார்கள். திருதராஷ்டிரனுக்கு நன்மை செய்ய விரும்பும் அவர்கள், நிச்சயம் நம்மைக் காயப்படுத்தவே எண்ணுவார்கள். நிச்சயம் அவர்கள் நமக்கு எதிராக எண்ணிலடங்கா ஒற்றர்களை ஏவுவார்கள். அவர்கள் நம்மைக் கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னால், பெரும் ஆபத்தில் நாம் மூழ்குவோம். நாம் ஏற்கனவே பதிமூன்று {13} மாதங்களைக் கானகத்தில் கழித்துவிட்டோம். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றையே பதிமூன்று வருடங்களாகக் கருதிக் கொள்ளும். சோமத்திற்கு ஈடாக மூலிகைப்பானை கருதப்படுவதைப் போல, ஒரு வருடத்திற்கு ஒரு மாதம் ஈடாகும் என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, புனிதமான சுமைகளைச் சுமக்கும் அமைதியான காளைக்கு நல்ல சுவையான உணவைக் கொடுத்து இந்தப் பாவத்தில் இருந்து நீர் விடுபடலாம். ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளைக் கொல்லத் தீர்மானியும். ஒவ்வொரு க்ஷத்திரியனுக்கும் போரைத் தவிர உயர்ந்த அறம் கிடையாது!" என்றான் {பீமன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, December 18, 2013

கடும் வார்த்தைகளால் என்ன பயன்? - வனபர்வம் பகுதி 34

What use of harsh words | Vana Parva - Section 34 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் தனது சபதத்தை விடமுடியாது என்று சொல்வது; சபதத்தின் முடிவுக்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று பீமனிடம் சொல்வது...

வைசம்பாயனர் சொன்னார் "பீமசேனனால் இப்படிச் சொல்லப்பட்ட, உண்மைக்குத் தன்னை உறுதியாக அர்ப்பணித்திருந்த, உயர் ஆன்ம மன்னனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} பொறுமையுடன் இருந்து சில கணம் பொறுத்து, "ஓ பாரதா {பீமா}, சந்தேகமற இவையெல்லாம் உண்மையே. அம்பு போன்ற உனது வார்த்தைகளால் துளைத்து என்னைச் சித்திரவதைச் செய்யும் உன்னை என்னால் நிந்திக்க முடியாது. எனது முட்டாள்தனத்தால் மட்டுமே இந்தப் பேரிடர் உங்களுக்கு வந்திருக்கிறது.  திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நாட்டையும் அரசுரிமையையும் பறிக்க விரும்பியே நான் பகடை வீச முற்பட்டேன். அதனால்தான், தந்திரம் கொண்ட சூதாடியான சுபலனின் மகன் {சகுனி}, சுயோதனன் {துரியோதனன்} சார்பாக என்னை எதிர்த்து விளையாடினான்.

மலைநாட்டுக்காரனான {காந்தார நாட்டுக்காரனான} சகுனி, ஏய்ப்பதில் மிகவும் தந்திரம் மிக்கவன். எந்த யுக்தியும் தெரியாமல் சபை நடுவே நான் பகடை வீசினேன். அவன் {சகுனி} தந்திரமாக என்னை வீழ்த்திவிட்டான். அதனாலேயே, ஓ பீமசேனா, நாம் இந்தப் பேரிடரில் மூழ்கினோம். சகுனியின் விருப்பத்திற்கேற்றபடி பகடைகள் இரட்டைப் படையாகவும், ஒற்றைப்படையாகவும் விழுவதைப் பார்த்தாவது நான் எனது மனதை அடக்கியிருக்க வேண்டும். இருப்பினும், கோபம் ஒரு மனிதனின் பொறுமையை விரட்டிவிடுகிறது. ஓ குழந்தாய் {பீமா}, ஆணவம், தற்பெருமை, கர்வம் ஆகியவற்றின் வசமாக இருக்கும்போது மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

ஓ பீமசேனா, நீ பயன்படுத்திய வார்த்தைகளுக்காக நான் உன்னை நிந்திக்கவில்லை. இவ்விதம் நமக்குக் நடக்க வேண்டியது முன்பே விதிக்கப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் நமது நாட்டை விரும்பி, நம்மை துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் தள்ளியபோது, திரௌபதியே நம்மைக் காத்தாள். மீண்டும் பகடை விளையாட சபைக்கு அழைக்கப்பட்ட போது, அனைத்து பாரதர்கள் முன்னிலையிலும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பந்தயப் பொருள் குறித்து என்ன சொன்னான் என்பதை நீயும் அறிவாய் அர்ஜுனனும் அறிவான்.

துரியோதனன் "ஓ இளவரசே, அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, (வீழ்த்தப்பட்டால்) நீ உனது அனைத்து தம்பிகளுடன், அனைவரும் அறியும்படி பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீ தேர்ந்தெடுக்கும் கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13வது} வருடத்தை தலைமறைவாகக் கழிக்க வேண்டும். அந்தக் கடைசி காலத்தில், பாரதர்களின் ஒற்றர்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், நீ மீண்டும் கானகத்தில் அதே அளவு காலம் வாழ வேண்டும். மேலும் கடைசி வருடத்தை தலைமறைவாக வாழ வேண்டும். இது குறித்து சிந்தித்து அதை சபதமாக ஏற்றுக் கொள். {துரியோதனனாகிய} என்னைப் பொறுத்தவரை, எனது ஒற்றர்களைக் குழப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் இருந்தீர்களானால், ஓ பாரதா, ஐந்து நதிகள் பாயும் இந்த நாடு மீண்டும் உனதாகும் நான் இந்தக் குருக்களின் சபையில் சத்தியம் செய்கிறேன். அதே போல, ஓ பாரதா, உன்னால் நான் வீழ்த்தப்பட்டால், நாங்கள் அனைவரும், எங்கள் செல்வங்களைத் துறந்து, அதே காலத்திற்கு, அதே விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம்." என்று சொன்னான் {துரியோதனன்}.

அந்த இளவரசனால் {துரியோதனனால்} அப்படிச் சொல்லப்பட்டதும், நான் அனைத்து குருக்களுக்கும் மத்தியில் "அப்படியே ஆகட்டும்'' என்றேன். அந்த இழிந்த விளையாட்டு அதன்பிறகு தொடங்கியது. நாம் வீழ்த்தப்பட்டு நாடு கடத்தப்பட்டோம். அதனாலேயே நாம் பல வனங்களில் துயரத்துடனும், அசௌகரியத்துடனும் சுற்றி வருகிறோம். எனினும் திருப்தியடையாத சுயோதனன் {துரியோதனன்} கோபத்திற்குத் தன்னைக் கொடுத்து, நமது இடரைக் கண்டு அனைத்து குருக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்க வைத்தான். நல்லோர் முன்னிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் நுழைந்த பிறகு, பூமியில் உள்ள நாட்டிற்காக யார்தான் அந்த ஒப்பந்தத்தை உடைக்க முடியும்?

ஒரு மரியாதைக்குரிய மனிதனுக்கு, ஒப்பந்தத்தை மீறி அரசை அடைவதை விட மரணமே மேலானது என்று நான் நினைக்கிறேன். அந்த விளையாட்டின் போது, *நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். அர்ஜுனனால் நீ தடுக்கப்பட்டு, உனது கரங்களையே பிசைந்து நின்றாய். நீ விரும்பியதைச் செய்திருந்தாயானால், இந்தப் பேரிடர் நம்மேல் விழுந்திருக்குமா? ஓ பீமா, உனது வீரத்தை உணர்ந்த நீ, இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே ஏன் அதைச் சொல்லவில்லை? ஏற்ற சபதத்தினால் துயரில் மூழ்கி, நேரமும் கடந்து பிறகு, என்னிடம் இத்தகு கடும் வார்த்தைகள் பேசி என்ன பயன்?

ஓ பீமா, திரௌபதி அப்படித் துன்பப்படுத்தப்பட்டதைக் கண்டும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான் எனது பெரும் கவலை. நான் ஏதோ விஷ பானத்தை அருந்தியதைப் போல எனது இதயம் எரிகிறது. இருப்பினும் குரு வீரர்களுக்கு மத்தியில் சபதமேற்ற பிறகு, என்னால் அதை மீற முடியாது. விதைகளைத் தூவியவன் அறுவடைக்காகக் காத்திருப்பது போல, ஓ பீமா, பொறுத்திரு. நமது சிறந்த நாட்கள் மீண்டும் வரும். முதலில் காயப்பட்டவன், எதிரிகள் கனிகளுடனும் மலர்களுடன் இருப்பதை அறிந்து, அவனைத் தனது வீரத்தால் பழிவாங்குவது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வீரன் சாகாப்புகழடைகிறான். அப்படிப்பட்ட மனிதன் பெரும் செழிப்பை அடைகிறான். அவனது எதிரிகள் அவனுக்கு தலைவணங்கி, இந்திரனைச் சுற்றி பாதுகாப்புக்காக நிற்கும் தேவர்களைப் போல, நண்பர்கள் அவனைச் சூழ்ந்து நிற்பார்கள்.

ஆனால், ஓ பீமா, எனது சத்தியம் பொய்யாகாது என்பதை அறிந்து கொள். நான் அறத்தை உயிரினும், தேவத்தன்மையினும் மேலாகக் கருதுகிறேன். நாடு, மகன்கள், புகழ், செல்வம் ஆகியவை அனைத்தும் உண்மையின் {சத்தியத்தின்} பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது." என்றான் {யுதிஷ்டிரன்}.

***********************************************************************
*நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். 

மேலும் பார்க்க கீழே சொடுக்கவும்:
மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ

பீமன் சொன்னான் "ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.

இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன். இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுதியானவள் கிடையாது. அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. **நான் அந்த உமது கரங்களை எரித்துவிடுகிறேன். சகாதேவா, கொஞ்சம் நெருப்பைக் கொண்டு வா**" என்றான். {இந்த வரிகளை பாரதியாரின் வார்த்தைகளில்- பாரதியாரின் பாஞ்சாலி சபததில் Footnoteல் பாருங்கள்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


இன்றே ஹஸ்தினாபுரம் செல்வீர்! - வனபர்வம் பகுதி 33ஆ

Go today itself to Hastinapur | Vana Parva - Section 33a | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

தனது அண்ணனான யுதிஷ்டிரனிடம் பீமன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விவரித்து, ஹஸ்தினாபுரத்தின் மீது போர் தொடுக்க ஆலோசனை கூறுதல்….

பீமன் தொடர்ந்தான், "ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, இவை மூன்றையும் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} விடுப்பதோ அல்லது மேற்கொள்வதோ, மகிழ்ச்சியை விரும்புவோருக்கு எது சிறந்ததோ அதை நீர் கவனமாக ஆராய்ந்து நிர்ணயிக்க வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் அவற்றை அடைவதையோ அல்லது கைவிடுவதையோ செய்ய வேண்டும். இவ்விரண்டிலும் முடிவு எடுக்க முடியாமல் சலனத்துடன் இருப்பவன் இழிந்த வாழ்வை மேற்கொள்கிறான். உமது நடத்தை எப்போதும் அறம் சார்ந்தே இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே.


இந்த உமது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நீர் செயல்பட வேண்டும். பரிசு, வேள்வி, அறிவுள்ளோரை மதித்தல், வேத கல்வி, நேர்மை ஆகியவை, ஓ மன்னா, இவ்வுலகிலும் மறு உலகிலும் பயனளிக்கக்கூடிய உயர்ந்த அறங்களாகும். ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும் ஒருவன் கணக்கிலடங்கா மற்ற பல சாதனைகளைச் செய்திருந்தாலும் செல்வமற்று இருந்தால் அவனால் இவ்வறங்களை அடைய முடியாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த முழு அண்டமே அறத்தை நம்பியுள்ளது. அறத்தை விட உயர்ந்தது எதுவும் கிடையாது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் செல்வம் வைத்திருப்பவனாலேயே அறத்தை அடைய முடிகிறது. பிச்சைக்கார வாழ்வு வாழ்வதாலோ, அயர்ந்து போன வாழ்வு வாழ்வதாலோ செல்வம் சம்பாதிக்க முடியாது. அறத்தால் வழிகாட்டப்பட்ட புத்தியைக் கொண்டே செல்வம் சம்பாதிக்க முடியும். உமது காரியத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தணர்களுக்கு சாத்தியமான பிச்சையெடுத்தல் விலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது பலம் மற்றும் சக்தியைக் கொண்டு செல்வத்தைப் பெற முயற்சி செய்யும். பிச்சையெடுத்து வாழ்தலோ, சூத்திரரின் வாழ்வு முறையோ உமக்கு ஏற்றதல்ல. பலமும் சக்தியும் க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை அறம். ஆகையால், உமது வகைக்கு ஏற்ற அறத்தை மேற்கொண்டு உமது எதிரிகளை நீர் கொல்ல வேண்டும். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, எனது பலத்தையும், அர்ஜுனனின் பலத்தையும் துணையாகக் கொண்டு திருதராஷ்டிரர் மகன்களின் பலத்தை அழித்துவிடும்.

கல்வி கற்ற ஞானமுள்ளவர்கள் ஆட்சியுரிமையே அறம் என்கின்றனர். ஆகையால் ஆட்சியுரிமையை அடையும். தாழ்மையான நிலையில் வாழ்வது உமக்குத் தகாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, விழித்தெழும், (உமது க்ஷத்திரிய வகைக்கான) நித்தியமான அறங்களைப் புரிந்து கொள்ளும். பிறப்பிலேயே மனிதர்களுக்கு வலியை உண்டாக்கும் கொடூரமான செயல்கள் புரியும் வகையைச் சேர்ந்திருக்கிறீர். உமது குடிமக்களைப் பேணிக்காத்து, கனிகளை அறுவடை செய்யும். அப்படிச் செய்தால் நிந்திக்கப்பட மாட்டீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த அறத்தை உமது வகைக்கு விதித்தது கடவுளே ஆகும். இதிலிருந்து நீர் விலகிக்கொண்டால், உம்மை நீரே கேலிக்குரியவர் ஆக்கிக் கொள்வீர். சுய வகைக்கு {சொந்த வர்ணத்துக்கு} உரிய அறங்களில் இருந்து விலகுதல் எப்போதுமே மெச்சப்படுவதில்லை. ஆகையால், ஓ குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, உமது வகைக்கு {க்ஷத்திரிய வகைக்கு} உகந்தவாறு உமது இதயம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஆக்கி, அயர்ச்சியான வாழ்வைத் தூக்கி எறிந்து, சக்தியை அடைந்து ஆண்மையுடன் உமது சுமையை நீர் சுமக்க வேண்டும்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எந்த மன்னனும் அறத்தின் வழிகளை மட்டுமே கொண்டு, உலகின் ஆட்சி உரிமையையோ, செழிப்பையோ அல்லது செல்வாக்கையோ அடைய முடியாது. வேடன், பெரும் கும்பலுக்கு {விலங்குகள் அல்லது பறவைகளுக்கு} கவர்ச்சிகரமான உணவைப் பார்வைக்கு வைத்து ஆசை காட்டி, தனது உணவை அடைவது போல, புத்திசாலியானவன், தாழ்ந்தவர்களும் பேராசை கொண்டவர்களுமான எதிரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து நாட்டைப் பெறுவான். மன்னர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, பல அசுரர்கள், தங்கள் அண்ணன்கள் பதவியும் செல்வாக்குடனும் இருக்கும்போதே, யுக்தியைக் கொண்ட தேவர்களால் அழிக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இப்படியே அனைத்தும் பலவான்களுக்கு உடையதாகிறது.

ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, யுக்திகளைக் கைக்கொண்டு எதிரிகளைக் கொல்லும். போர்க்களத்தில் வில் தாங்குபவர்களில் அர்ஜுனனுக்கு ஈடானவர் யாருமில்லை. அதே போல கதாயுதம் தாங்குவதில் எனக்கு நிகர் யாருமில்லை. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பலவான்கள், எதிரிகளின் திட்டங்களை ஒற்றர்கள் மூலம் உளவு கொண்டு படைகளின் எண்ணிக்கையை வைத்து போர் புரிவதில்லை. மாறாக, தங்கள் பலத்தை நம்பியே போர் புரிகின்றனர். ஆகையால், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது பலத்தை வெளிக்காட்டும். பலமே செல்வத்தின் வேர். வேர் என்று சொல்லப்படும் மற்றவையெல்லாம் உண்மையில் அதன் வேர் அல்ல. குளிர் காலத்தில் மரத்தின் நிழலால் உண்டாவது எதுவும் இல்லை. அதே போல, பலமில்லாத அனைத்தும் கனியற்றதாகவே ஆகிவிடும்.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தனது செல்வத்தைப் பெருக்க எண்ணும் ஒருவன், நிலத்தில் விதைகளைத் தூவுவதைப் போல செல்வத்தை செலவு செய்ய வேண்டும். இது குறித்து உமது மனதில் சந்தேகம் இல்லாதிருக்கட்டும். எனினும், செலவு செய்யும் செல்வம், வரவாக வரப்போகும் செல்வத்துக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ ஆகும் என்றால், செல்வத்தைச் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், செல்வ முதலீடு கழுதையைப் போன்றது, சொறியும்போது முதலில் இன்பமாக இருக்கும். ஆனால் அதுவே பின்பு வலியாகிப் போகும்.

ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு மனிதன் விதைகளைத் தூவுவதைப் போல, பெரும் அறத்தைப் பெறுவதற்காக தன்னிடம் இருந்து சிறு அறத்தைத் தூவினால், அவன் அறிவுள்ளவன் என்று கருதப்படுகிறான். நான் சொல்லும் இது சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டது. ஞானமுள்ளவர்கள் தங்கள் எதிரியின் நண்பர்களை அவனிடம் இருந்து பிரித்து, அவனை {அந்த எதிரியை} பலவீனமாக்கி, தனக்குக் கீழ்ப்படிய வைக்கிறார்கள். பலவான்கள் கூட, தங்கள் தைரியத்தை நம்பியே போர்புரிகிறார்கள். {தைரியமற்ற} தொடர்ந்த முயற்சிகளாலோ, சமரசக்கலைகளாலோ ஒருவன் எப்போதும் நாட்டை அடைய முடியாது.

தேனைக் கவர வருபவனை, எண்ணற்ற தேனீக்கள் பல சேர்ந்து கொல்வது போல, சில நேரங்களில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலவீனமான மனிதர்கள் பலர் கூடி எண்ணிக்கையில் அதிகமாகி, பலவானான எதிரியைக்கூட கொன்றுவிடுகிறார்கள். அனைத்தையும் காக்கும் சூரியன், தனது கதிர்களால் கொல்லவும் செய்கிறான். அது போல, நீர் சூரியனின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது நாட்டைக் காத்துக் கொள்ளவதும், மக்களைப் பேணிக்காப்பதும் வேதங்களில் சொல்லப்பட்ட தவ வாழ்க்கையாகும். உமது முன்னோர்கள் அத்தகு தவ வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு க்ஷத்திரியன் தவத்தால் அருள் உலகை அடைய மாட்டான். மாறாக, நியாயமாகப் போரிட்டு வென்றாலோ அல்லது தோல்வியுற்றாலோ கூட அவ்வுலகை {அருள்  உலகை} அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த உமது துயரத்தைக் கண்டு, ஒளி சூரியனைக் கைவிடும் என்றும், அருள் {grace = கருணை / மென்மை} சந்திரனைக் கைவிடும் என்றும் உலகம் தீர்மானித்திருக்கிறது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நல்ல மனிதர்கள் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்து, ஒருவருடன் ஒருவர் உரையாடி, உம்மை பாராட்டவும் பழிக்கவும் செய்கிறார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, குருக்களும் அந்தணர்களும் ஒன்று கூடி அறியாமையாலோ, காரியவாதத்தாலோ, பேராசையாலோ அல்லது பயத்தாலோ ஒரு பொய்யும் உரைக்கமாட்டீர் என்று விவாதித்தும், உமது உறுதியான சத்தியப்பற்றைக் குறித்து மகிழ்ச்சியாகவும் பேசுகின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாட்டை அடைவதற்காக ஒரு மன்னனால் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும், அவன் அந்நாட்டை அடைந்த பிறகு, செய்யப்படும் வேள்விகளாலும் தானங்களாலும் கரைந்து போகிறது. அந்தணர்களுக்கு கிராமங்களைக் கொடுப்பதாலும், ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுப்பதாலும், மேகத்திலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல, ஒரு மன்னன் பாவத்திலிருந்து விடுபடுகிறான்.

ஓ குரு குலத்தின் மகனே, ஓ யுதிஷ்டிரரே, நமது நாட்டின் இளைஞர்களும் முதியவர்களும் ஆக அனைத்துக் குடிமக்களும் உம்மைப் புகழ்கிறார்கள். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நாய் உணவருந்தும் பாத்திரத்தில் பால் இருப்பது போல, சூத்திரர்களிடம் வேதம் இருப்பது போல, திருடர்களிடம் உண்மை இருப்பது போல, மாதர்களிடம் பலம் இருப்பது போல, துரியோதனனிடம் அரசுரிமை இருக்கிறது என்று அனைத்து மக்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். பாடத்தை மனப்பாடம் செய்வது போல, மாதர்களும் குழந்தைகளும் திரும்பத் திரும்ப இதையே சொல்கின்றனர். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, எங்களுடன் சேர்த்து நீரும் இத்தகு தாழ் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்.

ஐயோ, உம்முடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் உமது துயரத்தில் தொலைந்து போனோம். ஆகையால், அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்ட உமது தேரில் ஏறி, மேன்மையான அந்தணர்களை நல்வார்த்தைகள் சொல்லச்சொல்லி, இன்றே விரைந்து ஹஸ்தினாபுரம் சென்றால், அங்கே {ஹஸ்தினாபுரத்தினை} வென்று அதில் கிடைக்கும் பொருட்களை நீர் அந்தணர்களுக்கு கொடுக்கலாம். வில்தாங்குவதில் உறுதியான உமது தம்பிகளாலும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களாலும் சூழப்பட்டு, கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போல, மருதர்களால் சூழப்பட்ட, விரித்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போல இங்கிருந்து வெளியேறும்.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் பலசாலி ஆகையால், இந்திரன் அசுரர்களை வாட்டியது போல உமது பலத்தைக் கொண்டு பலவீனமான எதிரிகளை வாட்டி, திருதராஷ்டிரன் மகன்கள் அனுபவிக்கும் செல்வங்களை அவர்களிடமிருந்துப் பறியும். காண்டீவத்தில் இருந்து புறப்படும், கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போன்றவையும், கழுகு இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளை எந்த மனிதனாலும் தாங்க முடியாது. ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் கோபத்துடன் போர்க்களத்தில் இருக்கும்போது, எனது கதாயுதத்தின் தூண்டுதலைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வீரனோ, யானையோ, குதிரையோ எதுவும் கிடையாது.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஸ்ரீன்ஜயர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணி குல காளையரின் துணை கொண்டு போரிட்டு, நாம் ஏன் நமது நாட்டை அடையக்கூடாது? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரியின் கையில் இருக்கும் இந்த பூமியை, பெரும் படைகளின் துணை கொண்டும், நமது முயற்சியாலும் வெற்றி கொள்ள முடியாதா?இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, December 17, 2013

அறம்பயில்பவன் ஏன் துன்புறுகிறான்? - வனபர்வம் பகுதி 33அ

Why do virtuous get afflicted? | Vana Parva - Section 33a | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

அறம், பொருள், இன்பம் குறித்து பீமன் யுதிஷ்டிரனிடம் பேசுவது

வைசம்பாயனர் சொன்னார், "யக்ஞ்சேனியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், கோபத்தால் பெருமூச்சுவிட்டபடி, மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனிடம், "ஓ ஏகாதிபதி {அண்ணா யுதிஷ்டிரரே}, (உமக்கு முன்பாக) நாடுகள் சம்பந்தமான காரியங்களில் நல்ல மனிதர்கள் வழக்கமாகச் செல்லும் பாதையில் நடந்து செல்லும். இப்படி அறம், இன்பம் மற்றும் பொருளை இழந்து, தவசிகளின் ஆசிரம வாழ்க்கை வாழ்வதால் நமக்கு என்ன லாபம்? அறத்தாலோ நேர்மையாலோ, பலத்தாலோ துரியோதனன் நம்மிடம் இருந்து நாட்டைப் பறிக்கவில்லை. அவன் நியாயமற்ற பகடையாட்டம் மூலம் பறித்தான். கழிவுகளை உண்ணும் பலவீனமான குள்ளநரி, சிங்கத்திடம் இருந்து அதன் இரையைப் பறிப்பது போல, அவன் நமது நாட்டை நம்மிடம் இருந்து பறித்தான்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சத்தியத்துடன் ஒட்டிக் கொள்ளும் வெற்றுத் தகுதிக்குக் {அறத்திற்குக்} கீழ்ப்படிந்து, துன்பத்தினை அனுபவித்து, அறம் மற்றும் இன்பத்திற்கு ஊற்றுக்கண்ணான செல்வத்தை ஏன் கைவிட வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, காண்டீவத்தைத் தாங்குபவனால் {அர்ஜுனனால்} காக்கப்பட்டதால் இந்திரனாலும் கைப்பற்ற முடியாதிருந்த நமது நாடு, உமது பொறுப்பிலாத் தன்மையாலேயே நம் கண் எதிரிலேயே நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாம் உயிருடன் இருக்கும்போதே, கையாலாகாதவனிடம் இருந்து பறிக்கப்பட்ட கனி போல அல்லது நொண்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட பசுக்களைப் போல, நமது செல்வம் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.

நீர் அறத்தைக் கைக்கொள்வதில் உண்மையுடன் {விசுவாசத்துடன்} இருக்கிறீர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மைத் திருப்திப்படுத்தவே நாங்கள் இந்தக் கொடிய பேரிடரில் மூழ்கியுள்ளோம். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நாங்கள் உமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலேயே, நமது நண்பர்களின் இதயத்தைக் கிழித்து, எதிரிகளின் இதயங்களைத் திருப்திப்படுத்துகிறோம். உமக்குக் கீழ்ப்படிந்து, திருதராஷ்டிரன் மகன்களைக் கொல்லாது வந்த முட்டாள்த்தனமான நமது செயல் என்னை வருந்த வைக்கிறது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வனவிலங்கைப் போன்ற உமது கானக வாழ்க்கை என்பதை பலவீனமாவன் மட்டுமே ஏற்பான். நிச்சயமாக, பலவானான எந்த மனிதனும் இப்படிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்ள மாட்டான். இந்த உமது வாழ்க்கை முறையை கிருஷ்ணனோ, பீபத்சு {பீபத்சு}வோ {அர்ஜுனனோ}, அபிமன்யுவோ, ஸ்ருஞ்சயரோ, நானோ, மாத்ரியின் மகன்களோ ஏற்கவில்லை. நோன்புகளால் பாதிக்கப்பட்டு நீர், அறம்! அறம்! என்று கதறுகிறீர்.

நம்பிக்கையின்மையால் நீர் உமது ஆண்மையை இழந்துவிட்டீரா? தங்கள் செழிப்பை மீட்க முடியாத கோழைகள் மட்டுமே, கனியற்ற, அழிவை ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கையின்மையைப் பேணிக் காப்பர். உமக்கு திறனும் கண்களும் இருக்கின்றன. நம்மிடம் ஆண்மை இருப்பதை நீர் காண்கிறீர். நீர் அமைதியான வாழ்க்கை மேற்கொள்வதாலேயே உமக்கு இந்தத் துயரம் தெரியவில்லை. மன்னிக்கும் இயல்பு கொண்ட நம்மை இந்த திருதராஷ்டிரர்கள் திறமையற்றவர்களாகவே உண்மையில் கருதுகிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்தத் துயரம் போர்க்களத்தில் நேரும் மரணத்தைவிட எனக்குத் துன்பமாக இருக்கிறது. எதிரிகளுக்குப் புறமுதுகிடாமல் நியாயமான முறையில் போரிட்டு மடிவது, இந்த வனவாசத்தைவிட சிறந்ததே. அப்படிச் செய்தால் மறு உலகத்தில் நாம் பேரானந்தம் உள்ள பகுதிகளை அடையலாம். அப்படி இல்லையென்றால், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நாம் முழு உலகத்தையும் செழிப்பையும் அடைவோம்.

பெரும் சாதனைகளைச் செய்ய விரும்பி, நமது வகைக்குண்டான முறைகளை அனுசரிப்பவர்கள், நமது தீமைக்காக பழிவாங்க விரும்புபவர்கள், இதையே தங்கள் கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது நாடு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டதால், நாம் போரில் ஈடுபட்டால், நமது செயலைக் காணும் உலகம் நமக்குப் புகழையே தரும், இழிவைத் தராது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவனுடைய சுயத்தையும், நண்பரைகளையும் சித்திரவதை செய்யும் அறம் உண்மையில் அறமே ஆகாது. மறுபுறம் பேரிடர்களை உற்பத்தி செய்யும் அது தீமையானது. சில நேரங்களில் அறமே மனிதனுடைய பலவீனமாகிறது. அப்படிப்பட்ட மனிதன் அறம்பயின்றாலும், இறந்த மனிதனைக் கைவிடும் இன்பத்தையும் வலியையும் போல, அறமும் பொருளும் அவனைக் கைவிடும்.

அறத்திற்காகவே அறம்பயில்பவன் எப்போதும் துன்பப்படுகிறான். சூரிய ஒளியைக் காண இயலாத குருடனைப் போல அறத்தின் காரண காரியங்களை அறியாத அவனை ஞானி {அறிவுள்ளவன்} என்று அழைக்கமுடியாது. செல்வத்தை தனக்கு மட்டுமே என்று கருதுபவன், செல்வத்தின் காரண காரியங்களை அறிய மாட்டான். உண்மையில் அவன், கானகத்தில் மாடு மேய்க்கும் பணியாளைப் போன்றவன். அறத்தையும், இன்பங்களையும் தவிர்த்து, எவன் தொடர்ந்து செல்வத்தை மட்டுமே அதிகமாகக் கொள்கிறானோ, அவன் எல்லோராலும் தண்டிக்கப்படவும் கொல்லப்படவும் தக்கவன். அறமும் செல்வமும் அற்று, தான்தோன்றித் தனமாக இன்பத்தை மட்டுமே நுகர்பவன், காய்ந்த குளத்தில் சாகும் மீனைப் போல, தனது காலம் முடியும் போது சாவான். இந்தக் காரணங்களுக்காகவே, ஞானமுள்ளவர்கள் எப்போதும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நெருப்புக்கு எரிபொருளைப் போல, அறமும் பொருளுமே இன்பத்திற்கான முக்கியத் தேவை.

இன்பம் அறத்தையே தனது வேராகக் கொண்டிருக்கிறது. அறமும் இன்பத்துடன் சேர்ந்தே இருக்கிறது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, கடல் மேகங்களை உற்பத்தி செய்வதும், மேகங்கள் கடலை நிரப்புவதும் போல அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஒரு பொருளைத் தொடுவதாலோ, செல்வத்தை அடைவதாலோ ஏற்படும் மகிழ்ச்சியானது இன்பம் எனப்படுகிறது. கண்களுக்குப் புலப்படாத உடலற்ற அது {இன்பம்} மனதிலேயே இருக்கிறது. செல்வத்தை (அடைய) விரும்புபவன், தனது வெற்றிக்காக பெரும் அறப்பங்கு {அறத்தில் ஈடுபட்டு அதில் பெரும் பங்கைப்) பெற முயற்சிக்கிறான். இன்பதைத விரும்புபவன், (தனது விருப்பம் உணரப்பட வேண்டும் என்பதற்காக) செல்வத்தைத் தேடுகிறான். எனினும், இன்பம் தனது பங்குக்கு எதையும் தருவதில்லை. ஒரு இன்பம் மற்றொரு இன்பத்திற்கு வழிகாட்டும். விறகில் இருந்து சாம்பலைப் பெறலாம். ஆனால் சாம்பலில் இருந்து எதுவும் கிடைக்காது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் காணும் பறவைகளை வேடன் கொல்கிறான். அதைப் போலவே பாவங்கள் இந்த உலகின் உயிரினங்களைக் கொல்கின்றன. ஆகவே, இன்பத்தாலோ பேராசையாலோ தவறாக வழிநடத்தப்பட்டவன், அறத்தின் இயல்பைக் காணாமல், அனைவராலும் கொல்லப்படத்தக்கவனாக இருந்து, இங்கும் {இவ்வுலகத்திலும்} அங்கும் {மறு உலகத்திலும்} இழிந்த நிலையை அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இன்பத்திற்கான பல பொருட்களை {செல்வத்தை} அடையும்போது இன்பத்தையும் அடையலாம் என்பதை நீர் அறிவீர். அவற்றின் {செல்வத்தின்} சாதாரண நிலைகளையும், அவற்றின் பெரும் மாற்றங்களையும் நீர் நன்கு அறிவீர். அதை {செல்வத்தைத்} தொலைப்பதால் இயலாமையும் மரணமும் வருகிறது. துன்பமும் வருகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் துயரம் இப்போது நம்மை மூழ்கடிக்கிறது. ஐம்புலன்கள், அறிவாற்றல், இதயம் போன்றவற்றில் இருந்து எழும் மகிழ்ச்சி, அதற்கான பொருளை நோக்கி நம்மை வழிநடத்தும். அதுவே இன்பம் எனப்படுகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த இன்பமே, நமது செயல்களுக்கான சிறந்த கனிகள் என நான் நினைக்கிறேன்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இப்படியே ஒருவன் அறம், பொருள் மற்றும் இன்பத்தை ஒன்றன் பின் ஒன்றாகக் கருத வேண்டும். ஒருவன் தன்னை அறத்திற்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்ளக்கூடாது. அதே போல விருப்பங்களை நிறைவேற்றும் செல்வத்தை {பொருளை} மட்டுமே என்றும், இன்பத்தை மட்டுமே என்றும் பயிலக்கூடாது. இவை மூன்றையும் எப்போதும் பயில வேண்டும். ஒருவன் காலையில் அறத்தையும், மதிய வேளையில் செல்வத்தையும், மாலையில் இன்பத்தையும் தேட வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. ஒருவன் வாழ்வின் முன் பகுதியில் இன்பத்தையும், இரண்டாவதாக செல்வத்தையும் கடைசியாக அறத்தையும் பயில வேண்டும் என்றும் சாத்திரங்கள் சொல்கின்றன. ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் ஞானமுள்ளவர்கள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் சரியான நேரத்தில் சரியானபடி செய்கிறார்கள்.இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, December 15, 2013

செயல்பாடில்லா வாழ்வு சாத்தியமற்றது! - வனபர்வம் பகுதி 32

Life is impossible without action| Vana Parva - Section 32 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

செயல் மற்றும் செயலின்மை குறித்து தனது தந்தை துருபதனின் இல்லத்தில் இருந்த போது ஒரு அந்தணரின் மூலம் அறிந்து கொண்ட திரௌபதி, தனது நாயகனான யுதிஷ்டிரனிடம் அவற்றை மீண்டும் சொல்லிப் புலம்புதல்.....

திரௌபதி சொன்னாள், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நான் தர்மத்தை அவமதிக்கவோ பழிக்கவோ இல்லை. அனைத்து உயிரினங்களின் தலைவனான கடவுளை நான் ஏன் அவமதிக்க வேண்டும்? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, துயரத்தால் தாக்கப்பட்டு நொந்து போயிருப்பதால் நான் மீண்டும் புலம்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உலகில் உள்ள உணர்வுள்ள எவ்வுயிரும் எப்படிச் செயல்படும் என்று நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். அசையாத உயிரினங்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் செயல்படாமல் இருக்காது. ஒரு கன்றுக்குட்டி, தான் பிறந்த உடனேயே, தாயின் மடியை அடைந்து பால் குடிக்கிறது. தங்கள் சிலைகளை வைத்து மந்திரங்கள் ஓதப்படுவதன் விளைவாக மனிதர்கள் வலியை உணர்கிறார்கள்.

ஆகையால், ஓ யுதிஷ்டிரரே, முன்ஜென்மங்களில் தாங்கள் செய்த செயல்களின் அடிப்படையிலேயே உயிரினங்கள் தங்கள் குணங்களை அடைகின்றன. ஓ பாரதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, அசையும் உயிரினங்களில் மனிதன் மட்டும் தனது செயல்கள் மூலம் இவ்வுலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கையை நிர்ணயிப்பதால் விசேஷமானவனாக இருக்கிறான். முந்தைய ஜென்ம வாழ்க்கையின் தாக்கத்தால், அனைத்து உயிர்களும் தங்கள் செயல்களின் கனிகளை இவ்வுலகில் பறிப்பது தெரிகிறது. உண்மையில், அனைத்து உயிரினங்களும் முந்தய ஜென்ம வாழ்வின் தாக்கத்தோடேயே வாழ்கின்றன. (யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே) நீரில் வாழும் கொக்கைப் போல படைப்பாளரும் {பிரம்மாவும்}, அண்ட ஆணையாளரும் தங்கள் வேலையைச் செய்கின்றனர். செயல்படாத உயிரினத்தின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஆகையால், எந்த உயிரினமாக இருந்தாலும் செயலற்ற தன்மையுடன் அல்லாமல் செயல்பாடோடே இருக்க வேண்டும். செயலைத் துறப்பதால் கண்டிக்கப்படாதிருக்க நீரும் செயல்பட வேண்டும்.

கவசம் தரிப்பது போல, செயலால் உம்மைக் காத்துக் கொள்ளும். செயல்கள் அல்லது வேலையின் பயன்பாட்டை உண்மையில் அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது அதுவும் இல்லாமலிருக்கலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் செயல்பட வேண்டும்; {செல்வ} வரவுக்காக முயற்சிக்காதவன், தனது செல்வத்தைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருந்தால், இமயத்தை ஒத்த அவனது பெரும் செல்வமும் விரைவில் செலவழிந்துவிடும். செயல் இல்லை என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து போகும். செயல்கள் கனிகொடுக்க வில்லையென்றால், உயிரினங்கள் பெருகியிருக்காது. சில நேரங்களில் உயிரினங்கள் கனியற்ற செயல்களை செய்வதை நாம் காண்கிறோம். அவை செயல்படவில்லை என்றால் அவற்றின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடும். விதியை நம்பும் மனிதர்களும், வாய்ப்பை {அதிர்ஷ்டத்தை} நம்பும் மனிதர்களும், மனிதர்களிலேயே இழிந்தவர்களாவார்கள். செயல்திறனை நம்புபவர்கள் மட்டுமே பாராட்டத்தக்கவர்கள். வசதியாக பொய்யுரைத்துக் கொண்டு, செயல்படாமல், விதியை மட்டுமே நம்பி இருப்பவன், சுடப்படாத மண் பானை நீரால் அழிவது போல அழிந்து போவான். அதே போல, வாய்ப்பை நம்பி எதிர்பார்த்து, செயல்பட முடிந்தும் செயல்படாமல் உட்கார்ந்து இருப்பவனும், பலவீனமான மற்றும் ஆதரவற்ற தனது வாழ்க்கையால் நீண்ட நாள் பிழைத்திருக்க மாட்டான்.

எதிர்பாராவிதத்தில் செல்வத்தை அடையும் ஒருவன், யாரொருவரின் முயற்சியும் இல்லாமல் அதைப் பெற்றதால், அதிர்ஷ்டத்தால் அடைந்தான் என்று சொல்லப்படுகிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே},  அறச்சடங்குகள் மூலம் ஒரு மனிதன் அடையும் எந்த நற்பேறாக இருந்தாலும், அது அதிர்ஷ்டவசமாகப் பெற்றதாகவே சொல்லப்படுகிறது. மனிதன் செயல்பாட்டால் கனியை அடைந்தால், தனது செயல்பாடுகளின் நேரடிப் பயனான அது, அவனது தனிப்பட்ட திறனுக்கான சாட்சியாக மதிக்கப்படுகிறது. ஓ மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, காரணம் இல்லாமல் தானாக ஒருவனால் அடையப்படும் செல்வம், தன்னிச்சையான கையகப்படுத்தல் என்று சொல்லப்படுகிறது.  அதிர்ஷ்டவசமான அருளாலும், தானாகவும் வரும் எந்தப் பொருளும், ஒருவனுடைய செயல்களின் பயனாகப் பெறப்பட்டது என்று கருதப்பட்டாலும், அது முன்ஜென்ம வாழ்க்கையில் அவன் செய்த செயல்களின் விளைவே ஆகும். அண்ட ஆணையாளரான கடவுள், முன் ஜென்ம வாழ்க்கையில் செய்த செயல்களை ஆராய்ந்து, இந்த உலகத்தில் அதன் பகுதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறான். நல்லதாகவோ தீயதாகவோ எச்செயலையும் செய்யும் ஒரு மனிதன், அது கடவுள் கொடுத்த பயன் என்பதை அறிந்து, முன்ஜென்ம வாழ்க்கைக்குத் தக்க படி செயல்படுகிறான். இந்த உடல் கடவுளின் கரங்களில், செய்யப்படும் செயல்களுக்கு கருவியாக மட்டுமே இருக்கிறது. செயல்திறனற்றதாக இருக்கும் உடல், கடவுள் பணித்ததைச் செய்கிறது.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தலைவர்களுக்குத் தலைவனான கடவுளே, அனைத்து உயிர்களையும் செயல்பட வைக்கிறான். உயிரினங்கள் தானே செயல்படும் சக்தியற்றவை. ஓ வீரரே, மனிதன் முதலில் மனதில் ஒரு காரியத்தைத் தீர்மானித்து, தனது அறிவின் துணை கொண்டு அதைச் சாதிக்கிறான். ஆகையால், நாம், (மனிதன் செய்யும் காரியங்களுக்கு) மனிதனே காரணம் என்று சொல்கிறோம். ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, மாளிகைகளும், நகரங்களும் மனிதர்களின் செயல்களின் பயன்களே, ஆகையால் மனிதர்களின் செயல்கள் எத்தனை என்று எண்ணுவது சாத்தியமற்றது. எள்ளில் இருந்து எண்ணை எடுக்கலாம் என்றும், பாலில் இருந்து தயிர் எடுக்கலாம் என்றும், விறகு எரிப்பதால் உணவைச் சமைக்க முடியும் என்றும், புத்தி கொண்ட மனிதன் தனது அறிவின் துணை கொண்டு அறிந்து கொள்கிறான். இவற்றையெல்லாம் சாதிக்கும் வழிகளையும் அவர்கள் அறிகிறார்கள். அவற்றை அறிந்து கொண்டு, பின்பு சரியான பொருட்களைக் கொண்டு அவற்றைச் சாதிக்கிறார்கள். தங்கள் செயல்களின் வழியாகக் கிடைக்கும் பலன்களைக் கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன.

ஒரு நிபுணன் ஒரு வேலையைச் செய்தால், அதைச் சரியாகச் செய்கிறான். வேலையில் இருக்கும் வித்தியாசங்களால், நிபுணத்துவம் அற்ற கை செய்த வேலையை நாம் கண்டறிகிறோம். ஒரு மனிதன் செய்யும் செயல்களின் விஷயத்தில் அவன் காரணமாக இருக்க வில்லையெனில், வேள்விகள் அவன் விஷயத்தில் கனி கொடுக்காது. யாரும் அவனுக்கு சீடனாகவும் முடியாது. குருவாகவும் முடியாது. ஒரு வேலைக்கு அந்த மனிதனே காரணமாக இருப்பதால்தான் அவன் வெற்றியடையும்போது பாராட்டப்படுகிறான். ஆகையால் அந்தப் பணியில் அவன் தோற்கும்போது நிந்திக்கப்படுகிறான். தனது செயல்களுக்குத் தானே காரணமாகாத மனிதன் இவற்றையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? சிலர் அனைத்துமே அதிர்ஷ்டத்தின் பயன் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அப்படியில்லை என்கின்றனர். ஆனால் விதியின் பயன் என்றும், அதிர்ஷ்டத்தின் பயன் என்றும் சொல்லப்படும் அனைத்தும், முன்ஜென்ம செயல்களின் நல்ல அல்லது தீய செயல்களின் பயனாக இருக்கின்றன. அதிர்ஷ்டத்தாலும், விதியாலும் உடைமைகள் கிடைப்பதும் காணப்படுகிறது. சில விதியாலும், சில அதிஷ்டத்தாலும், சில முயற்சியாலும் பெற்றப்படுகின்றன. மனிதர்களின் விஷயத்தில் இவை மூன்றையும் தவிர்த்து நான்காவதாக ஒரு காரணம் கிடையாது. உண்மை அறிந்த, அறிவுத்திறமை கொண்டவர்கள் இப்படியே சொல்கின்றனர்.

எனினும், நன்மையான அல்லது தீங்கான கனிகளைக் கொடுப்பது கடவுள் இல்லை என்றால், உயிரினங்களில் பரிதாபகரமானவர்கள் யாரும் இருக்க முடியாது. முந்தைய செயல்களின் விளைவுகள் ஒரு கட்டுக்கதை என்றால், மனிதன் வேலை செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும். ஆகையால் இவ்வுலகில் மூன்று மட்டுமே {விதி, அதிர்ஷ்டம், முயற்சி}  வெற்றி மற்றும் தோல்வியின் கதவுகள் என்று (முன் ஜென்ம வாழ்வின் செயல்களைக் கருதிப்பாராமல்) கருதுபவர்கள் உடலைப் போலவே மந்தமாக செயலற்று இருப்பார்கள். இவையெல்லாம் இப்படி இருப்பினும் மனிதன் செயல்பட வேண்டும். இது மனுவின் தீர்மானமாகும்.யுதிஷ்டிரரே, செயல்படாத மனிதன் நிச்சயம் அடிமைப்படுவான் {Succumb}. இவ்வுலகத்தில் செயல்படும் மனிதன் பொதுவாக வெற்றியையே சந்திக்கிறான். இருப்பினும் செயலற்றவன் வெற்றியை அடைவதே இல்லை. வெற்றி சாத்தியமில்லாத போது, வெற்றியின் பாதையில் இருக்கும் தடைகளை விலக்க ஒருவன் முயற்சிக்க வேண்டும்.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, (கடுமையாக) வேலை செய்யும் {உழைக்கும்} மனிதனின் கடன்கள் (கடவுளுக்கு பட்ட கடன்கள்) (அவன் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும்) ரத்து செய்யப்படுகின்றன. செயலற்று, நீண்டு கிடப்பவன், துரதிர்ஷ்டத்தில் மூழ்குகிறான். துடிப்புடனும், நிபுணத்துவத்துடனும் இருப்பவன் நிச்சயம் வெற்றியை அறுவடை செய்து, செழிப்பையும் இன்பத்தையும் அடைவான். தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் புத்திசாலி மனிதர்கள், வித்தியாசமாக இருப்பவர்களை சந்தேகம் உள்ளவர்களாகவும், வெற்றியடையாதவர்களாகவும் கருதுகிறார்கள். எனினும் நம்பிக்கை நிறைந்தவர்களை வெற்றியாளர்களாகவே அவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கணம் நாம் துன்பத்தில் மூழ்கி இருக்கிறோம். இருப்பினும் நீர் செயல்பட்டால் நமது துன்பம் விலகும். நீர் தோல்வியுற்றால், அதுவே உமக்கும், விருகோதரருக்கும் {பீமருக்கும்}, விவத்சுவுக்கும் {அர்ஜுனருக்கும்}, இரட்டையர்களுக்கும் {நகுலர், சகாதேவருக்கும்} (நீங்கள் எதிரியிடம் நாட்டை பறிக்க முடியவில்லை என்ற) ஆதாரத்தை வழங்கும்.

மற்றவர்களின் செயல்களுக்கு வெற்றிமகுடம் சூட்டப்படுவதைக் காண்கிறோம். நமது செயல்களும் வெற்றியடையும் என்று கருதலாம். தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஒருவன் எப்படி முன்பே அறிந்து கொள்ள முடியும்? முயற்சி செய்தால், அந்த முயற்சிக்கு கனி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். உழவன் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுது விதைகளைத் தூவுகிறான். பிறகு பயிரை விளைவிக்க மேகமே {மழையே} காரணம் என்று அமைதியாக அமர்கிறான். மேகங்கள் அவனுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அந்த உழவன் பழியில் இருந்து விடுவிக்கப்படுகிறான். அவன் தனக்குள்ளேயே, "மற்றவர்கள் செய்ததைத்தான் நானும் செய்தேன். இருந்தபோதிலும் தோல்வியைச் சந்தித்தேன். என்னை எந்தப் பழியும் சாராது." என்று நினைத்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளாதிருப்பான்.

ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஒரு நம்பிக்கையின்மையுடன், "நான் செயல்படுகிறேன். ஆனாலும் வெற்றி எனதாகவில்லையே!" என்று கருதக்கூடாது. ஏனென்றால் முயற்சியைத் தவிர்த்து வெற்றிக்கான இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. வெற்றியோ தோல்வியோ நம்பிக்கையின்மை கூடாது. ஏனென்றால் செயல்களின் வெற்றி சேர்க்கை மற்றும் பல சூழ்நிலைகளைப் பொருத்ததாகும். ஒரு முக்கியமான பொருள் தேவை என்றால் வெற்றி அதற்கு ஈடானதாகாது அல்லது வெற்றி கிட்டாது. இருப்பினும் முயற்சி இல்லையென்றால் வெற்றி கிட்டாது. முயற்சி இல்லாது வேறு எது இருந்தாலும் அது பாராட்டத்தக்கதல்ல. புத்திசாலிகள், செழிப்பை அடைய இடம், நேரம், வழி, அதிர்ஷ்ட சடங்குகள் ஆகியவற்றைச் சரியாகச் செய்து தங்கள் புத்தியின் துணையுடன் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள். கவனத்துடனும், விழிப்புடனும் வீரத்தைத் தலைமை வழிகாட்டியாகக் கொண்டு வேலையைச் செய்ய வேண்டும். ஒரு வேலையின் வெற்றிக்குத் தேவையான குணங்களின் சேர்க்கையில் வீரமே முக்கியமானதாகும்.

எதிரி தன்னைவிட பல குணங்களில் மேன்மையாக இருப்பதைக் காணும் புத்திசாலி மனிதன், சமரசக் கலைகளையும், சரியான சாதனங்களையும் பயன்படுத்தி தனது காரியங்களை நிறைவேற்றுவதற்கு வழி தேட முயற்சிக்க வேண்டும். அவன் தனது எதிரிக்கு தீமையையும், எதிரியை அகற்றுதலையும் விரும்ப வேண்டும். மரணத்திற்குரிய மனிதர்களைப் பற்றி இல்லாமல், அவனது எதிரி கடல், மலைகளாகவும் இருந்தாலும் கூட அவனது நோக்கங்கள் இவ்வாறே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மனிதன் தனது எதிரிகளிடம் இருக்கும் ஓட்டைகளைத் தேடுவதன் மூலம், தனது மற்றும் தனது நண்பர்களின் கடனைத் தீர்க்கிறான். எந்த மனிதனும் தன்னைத் தானே இழிவுப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்பவன் உயர்ந்த செழிப்பை அடையவே மாட்டேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்த உலகத்தில் வெற்றி என்பது அடையக்கூடியதே. உண்மையில் இவ்வுலகத்தில் வெற்றி என்பது நேரம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கிடைக்கிறது.

முன்பு என் தந்தை {துருபதன்} தன்னுடன் ஒரு கற்ற அந்தணரை வைத்திருந்தார். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவரே {அந்த அந்தணரே} இவற்றையெல்லாம் என் தந்தைக்கு {துருபதனுக்குச்} சொன்னார். உண்மையில் பிருஹஸ்பதி வெளிப்படுத்திய கடமை குறித்த இவ்வழிமுறைகள், எனது சகோதரர்களுக்கு {திருஷ்டத்யும்னன் போன்றோர்க்குக்} கற்றுத் தரப்பட்டது. பிறகு, அவர்களிடம் இருந்தே, என் தந்தையின் {துருபதரின்} இல்லத்தில் இருந்தபோது நான் கேட்டறிந்தேன். ஓ யுதிஷ்டிரரே, இடைவேளை நேரங்களில் நான் {உள் அறைகளில் இருந்து = அந்தப்புரத்தில் இருந்து} வெளியே சென்று என் தந்தையின் {துருபதரின்} மடியில் அமர்ந்து கொள்வேன். அப்போது அந்தக் கற்ற அந்தணர் இந்த உண்மைகளையெல்லாம் இனிமையாகவும் ஆறுதலாகவும் எனக்குச் சொன்னார்.இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, December 13, 2013

கடவுளைப் பழிக்காதே கிருஷ்ணா! - வனபர்வம் பகுதி 31

Krishna! don't slander God | Vana Parva - Section 31 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் திரௌபதிக்கு விளக்கம் சொல்வது...

யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ யக்ஞசேனி {திரௌபதி}, உனது பேச்சு மென்மையானதாக, அற்புதம் நிறைந்த சொற்றொடர்கள் கொண்டதாக இருக்கிறது. நாங்கள் அதைக் {கவனமாகக்} கேட்டோம். எனினும், நீ நாத்திகர்களின் மொழியில் பேசுகிறாய். ஓ இளவரசி {திரௌபதி}, எனது செயல்களுக்கான கனியை {பலனை} எதிர்பார்த்து நான் செயல்படுவதில்லை. கொடுப்பது எனது கடமையாகையால் நான் கொடுக்கிறேன்; வேள்வி செய்வது எனது கடமையாகையால் நான் வேள்வி செய்கிறேன்! இல்லற வாழ்வு வாழும் ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம், அவை கனி கொடுக்குமா கொடுக்காதா என்பதைக் கருதாமலேயே எனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி செய்கிறேன். ஓ அழகிய இடை கொண்டவளே, அறத்தின் கனியை அடைய விரும்பி நான் அறம்பயில வில்லை. வேதத்தின் விதிகளை மீறி நடக்கக்கூடாது என்று கருதியும், நல்லவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்களின் நடத்தையைக் கண்டுமே நான் அறம்பயில்கிறேன்!


ஓ கிருஷ்ணா {திரௌபதி}, எனது இதயம் இயற்கையாகவே அறத்தின்பால் ஈர்க்கப்படுகிறது. அறம்பயில்வதின் மூலம் அந்த அறத்தின் கனியை அடைய விரும்பும் மனிதன் அறத்தை வணிகம் செய்பவனே ஆவான். அறச்செயல்கள் செய்த பிறகு, அதன் கனி குறித்து சந்தேகப்படுபடும் பாவ மனம் கொண்டவனுக்கு, அவனது ஐயத்தின் காரணமாகவே அக்கனி கிடைக்காது. , அறம் குறித்த சந்தேகம் உனக்கு இருக்கக்கூடாது  என்பதற்காகவே இது போன்ற விஷயங்களில் நிறைய சாட்சிகளைக் கொண்டிருக்கும் வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை நான் உன்னிடம் பேசுகிறேன். அறத்தை சந்தேகிப்பவன் தாழ்ந்த பிறவியான விலங்காகப் பிறக்க விதிக்கப்படுகிறான். வேதங்களின் படி, பலவீனமான புரிதல் கொண்ட மனிதன் ஒருவன், அறம், நல்லொழுக்கம், அல்லது முனிவர்களின் வார்த்தைகளைச் சந்தேகித்தால், நித்திய வாழ்வில் இருந்தும், அருளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு சூத்திரனாகிறான்.


ஓ புத்திசாலியே {திரௌபதியே}, நற்குலத்தில் பிறந்த ஒரு குழந்தை வேதங்களைப் பயின்று, அறத்தால் தன்னைத் தாங்கிக் கொண்டால், அறக்குணம் கொண்ட அரச முனிகள் அவனது வயதைக் கருதிப் பாரார். ஆனால், அறத்தைச் சந்தேகித்து, சாத்திரங்களை மீறி நடக்கும் பாவம் நிறைந்த இழிந்தவன், சூத்திரர்களை விடவும், ஏன் திருடர்களை விடவும் தாழ்ந்தவனாகக் கருதப்படுவான். அளவிடமுடியா ஆன்மா கொண்ட பெரும் தவசியான மார்க்கண்டேயர் நம்மிடம் வந்ததை நீயே உன் கண் கொண்டு பார்த்தாய்! அறத்தால் மட்டுமே அவர் சதையுடன் கூடிய நித்தியத்தன்மையை {சாகாவரத்தை} அடைந்தார். வியாசர், வசிஷ்டர், மைத்திரேயர், நாரதர், லோமசர், சுகர் மற்றும் பிற முனிவர்கள் அனைவரும் அறத்தால் மட்டுமே பரிசுத்தமான ஆன்மாவை அடைந்தனர். தெய்வீக தவச் சக்தியும், சாபமிட மற்றும் அருள் வழங்கக் கூடிய சக்தியும், தேவர்களைப் போன்றே அவர்கள் மேன்மையுடன் இருப்பதையும் நீயே உன் கண்ணாறக் கண்டிருக்கிறாய்.

ஓ பாவமற்றவளே {திரௌபதியே}, தேவர்களுக்குச் சமமான இவர்கள் அனைவரும், வேதங்களில் எழுதியிருப்பதைத் தங்கள் கண்களால் கண்டு, அறமே முதன்மைக் கடமை என்று விவரிக்கின்றனர். ஆகையால், ஓ இனிமையான அரசியே {திரௌபதியே}, மடமை கொண்ட இதயத்துடன் {மனத்துடன்} தெய்வத்தையோ செயலையோ சந்தேகிக்கவோ நிந்திக்கவோ செய்யாதே! அறத்தைச் சந்தேகித்து அதை அவமதிக்கும் முட்டாள், தனது ஆய்வறிவால் கிடைத்த சாட்சியைக் கொண்ட கர்வத்துடன், மற்ற சாட்சிகள் அனைத்தையும் காணாது, எதிர்காலத்தையே நிகழ்காலம் போல அறிந்து சொல்லும் முனிவர்களை பைத்தியக்காரர்கள் என்கிறான். தனது புலன்களைத் திருப்தி செய்யும் மேலோட்டமான வார்த்தைகளையே கருதிப்பார்க்கும் அந்த முட்டாள், மற்ற அனைத்திலும் குருடாயிருக்கிறான். அறத்தைச் சந்தேகிப்பவன் தனது குற்றத்திற்கு பரிகாரம் இல்லாதவன் ஆவான். கவலை நிறைந்த அந்த ஆறுதல் பெற முடியாத பாவி, அதன் பிறகு எந்த நல்லுலகையும் அடையமாட்டான்.

சாட்சிகளை நிராகரிப்பவனும், வேத சாத்திரங்களின் பொருளை அவதூறாகப் பேசுபவனும், காமத்தாலும் பேராசையாலும் உந்தப்பட்டு விதி மீறுபவனுமான அந்த முட்டாள் நரகத்திற்குச் செல்கிறான். ஓ இனிமையானவளே {திரௌபதியே}, மறுபுறம், அறத்தை நம்பிக்கையுடன் பேணிக் காப்பவர்கள், மறு உலகத்தில் நித்தியமான அருளைப் பெறுகிறார்கள். அறத்தைப் பேணிக்காக்காத முட்டாள், முனிவர்கள் அருளிய சாட்சிகளை மீறி நடந்து, அந்த சாத்திர மீறலுக்காக எந்த {உலக} வாழ்க்கையிலும் செழிப்பை அடைய மாட்டார்கள்.

ஓ அழகானவளே {திரௌபதியே}, மரியாதையுடன் முனிவர்களின் வார்த்தைகளையும், அறம்சார்ந்தவர்களின் நடத்தைகளையும் சாட்சியாக எண்ணிப் பார்க்காதவன், நிச்சயமாக இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நிலைக்க மாட்டான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நல்லவர்கள் பயிலும் பழமையான தர்மம் அண்ட அறிவு பெற்று அனைத்தையும் காணும் சக்தி பெற்ற முனிவர்களால் நிறுவப்பட்டது. ஓ துருபதனின் மகளே {திரௌபதி}, கடலைக் கடக்க நினைக்கும் வணிகர்களுக்கு கப்பல் எப்படியோ, அப்படி சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோரின் ஒரே படகு தர்மமே {சனாதன தர்மம்}. ஓ களங்கமற்றவளே {திரௌபதியே}, அறம்சார்ந்தோரால் பயிலப்படும் அறங்கள் கனி கொடுக்கவில்லையெனில், இந்த அண்ட மே காரிருளில் மூழ்கிவிடும். யாரும் முக்திக்கு முயற்சிக்கமாட்டார்கள். யாரும் ஞானத்தையோ செல்வத்தையோ பெற முயற்சிக்க மாட்டார்கள். மனிதர்களும் விலங்குகளைப் போலவே வாழ ஆரம்பிப்பார்கள்.

தவம் {ஆன்மிகம்}, பிரம்மச்சரியம், வேள்விகள், வேத கல்வி, தானம், நேர்மை ஆகியவை கனி கொடாமலிருந்தால், தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் அறம் பயின்றிருக்க மாட்டார்கள். செயல்கள் கனியற்றதாக இருப்பின், ஒரு கொடிய குழப்பமே பின்தொடரும். மனிதர்களின் நிலைமைக்கு {தரத்திற்கு} அப்பார்ப்பட்ட முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், ராட்சசர்களும் அறத்தை இந்த அளவு ஈடுபாட்டுடன் ஏன் பயில வேண்டும்? கடவுளே அறத்திற்கான கனி கொடுப்பவன் என்பதை அறிந்தவன், இவ்வுலகத்தில் அறத்தையே பயில்வான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, இதுவே நித்திய செழிப்பு {செழிப்பின் ஊற்றுக்கண்}.

ஞானம் மற்றும் தவத்தின் கனிகள் தெரியும்போது, அறமும், தீமையும் கனியற்றதாகிவிடாது. ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நீ கேள்விப்பட்டவாறே உனது பிறப்பைக் குறித்து நினைத்துப் பார். பெரும் வீரம் கொண்ட திருஷ்டத்யும்னன் எப்படிப் பிறந்தான் என்பதை நினைத்துப் பார். ஓ இனிய புன்னகை கொண்டவளே {திரௌபதி}, இவையே {அறத்தின் கனிகளுக்கு} சிறந்த சாட்சிகள். தங்கள் மனதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தங்கள்  செயல்களுக்கான கனியைப் பறிப்பார்கள். சிறிது அறம்பயில்பவர்கள் கனியின் சிறு பகுதிகளை அடைவார்கள். அறத்தைச் சிறிதும் பயிலாத அறியாமையில் உள்ள மூடர்கள், எவ்வளவுதான் (இங்கு) பெற்றாலும், மறு உலகத்தில் ஒன்றையும் அடையமாட்டார்கள். ஓ அழகானவளே {திரௌபதியே}, வேதங்களில் விதிக்கப்பட்ட அறச்செயல்களும், மீறல்களும் கனிகொடாமல் போவது என்பதன் ஆதியும் அந்தமும், தேவர்களும் அறியாத புதிராக உள்ளது. இவற்றையெல்லாம் சாதாரண மனிதர்கள் அறியாமல் இருக்கின்றனர். இந்தப் புதிரைத் தக்க வைத்துக் கொள்ளும் தேவர்கள், மாயையால் அதை மறைக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

நோன்புகளிலும் தவத்திலும் நம்பிக்கை வைத்து, தங்கள் பாவங்களை எரித்து, அமைதியாகவும் புனிதமாகவும் வசிக்கும் ஆசைகளை அழித்த மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} இவை அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள். ஆகையால், அறம் கனி கொடுப்பதை நீ காணவில்லையென்றாலும், தர்மத்தையும் தேவர்களையும் நீ சந்தேகிக்கக்கூடாது. நீ விருப்பத்துடன் வேள்விகளைச் செய்ய வேண்டும். ஆணவம் இல்லாமல் தொண்டு செய்ய வேண்டும். இந்த உலகில் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் கனிகள் இருக்கின்றன. அறம் நித்தியமானது. காசியபரை சாட்சியாக வைத்து, தனது (ஆன்மிக) மகன்களுக்கு பிரம்மாவே இதைச் சொல்லியிருக்கிறார். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, உனது சந்தேகங்கள் மூடுபனி விலகுவது போல விலகட்டும். இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து, உனது சந்தேகங்கள் நம்பிக்கைக்கு வழி கொடுக்கட்டும். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனான கடவுளை அவதூறு செய்யாதே. அவனை {கடவுளை} எப்படி அறிவது என்பதை அறிந்து கொள். அவனைப் பணிந்து வணங்கு. உனது மனம் இது போல் ஆகாது பார்த்துக் கொள். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, மனிதர்களுக்கு அருளும் தலைவர்களுக்குத் தலைவனான கடவுளை பக்தியுடன் அணுகி, அழியாத் தன்மை {நித்தியத்தன்மை} பெறு!இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top