Showing posts with label இந்திரன். Show all posts
Showing posts with label இந்திரன். Show all posts

Tuesday, January 13, 2015

மீண்டும் மறைந்த இந்திரன்! - உத்யோக பர்வம் பகுதி 13

Indra hid himself again! | Udyoga Parva - Section 13 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 13)

பதிவின் சுருக்கம் : சச்சி நகுஷனிடம் அவகாசம் கேட்பது; நகுஷன் சம்மதிப்பது; சச்சியின் நிலையைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்டுவது; விஷ்ணு இந்திரனுக்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்யச் சொன்னது; வேள்வி முடிந்ததும் இந்திரன் சுயநினைவை அடைவது; பலமிக்க நகுஷனைக் கண்ட இந்திரன் மீண்டும் ஒளிந்து கொள்வது; இதனால் துக்கமுற்ற இந்திராணி உபஸ்ருதி தேவியை வேண்டுவது...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தேவர்கள் மன்னனான நகுஷன் அவளை {இந்திரனின் மனைவியான சச்சியைப்} பார்த்து, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் மூன்று உலகங்களுக்கும் இந்திரனாவேன். ஓ! அழகிய தொடைகளும் அழகிய நிறமும் கொண்டவளே, என்னை உனது தலைவனாக ஏற்றுக் கொள்வாயாக!” என்றான். நகுஷனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய தேவி, பயந்து போய், தென்றல் {காற்று} வீசுமிடத்தில் இருக்கும் வாழைமரம் போல நடுங்கினாள். பிரம்மாவுக்குத் தலைவணங்கிய அவள் {சச்சி}, தனது கரங்களைக்கூப்பியபடி, தேவர்களின் மன்னனான கடுமுகம் கொண்ட நகுஷனிடம், “ஓ! தெய்வங்களின் தலைவா {நகுஷா}, நான் காலத்தைப் {அவகாசத்தைப்} பெற விரும்புகிறேன். இந்திரருக்கு என்ன நேர்ந்தது என்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் அறியப்படவில்லை. அவரைக் குறித்த உண்மையை விசாரித்த பின், ஓ! தலைவா, அவரை {இந்திரரைக்} குறித்த எந்தச் செய்தியையும் அடையவில்லையென்றால், நான் உம்மைச் சந்திக்கிறேன்; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள் {சச்சி}.


இந்திரனின் ராணி இப்படிச் சொன்னதும், நகுஷன் மகிழ்ந்தான். பிறகு நகுஷன் {சச்சியிடம்}, “ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். செய்திகளை உறுதி செய்து கொண்ட பின் நீ வருவாயாக. சாதகமற்ற உனது உண்மை நிலையை நீ நினைத்துப் பார்ப்பாய் என்று நான் நம்புகிறேன்” என்றான். நகுஷனால் அனுப்பப்பட்ட அந்த மங்கலகரமான பார்வை கொண்டவள் {சச்சி}, {அங்கிருந்து} வெளியே வந்தாள். அந்தப் புகழ்பெற்ற மங்கை {சச்சி} பிருஹஸ்பதியின் {பிரகஸ்பதியின்} இல்லத்திற்குச் சென்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அக்னியைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், அவளது {சச்சியின்} சொற்களைக் கேட்டதும், இந்திரனின் நலன்களை அறிய ஊக்கம் கொண்ட நோக்கத்துடன் {தங்களுக்குள்} கலந்தாலோசித்தனர். பிறகு அவர்கள் தேவர்களுக்குத் தேவனான வலிமைமிக்க விஷ்ணுவைச் சேர்ந்தனர் {சென்றடைந்தனர்}.

உரையாற்றுவதில் வல்லவர்களான தேவர்கள், அவனிடம் {விஷ்ணுவிடம்} வருத்தத்துடன், “தேவர்கள் அனைவருக்கும் தலைவனான இந்திரன், {பிராமணனைக் கொன்ற பாவத்தால் ஏற்பட்ட} பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களுக்குத் தலைவா {விஷ்ணுவே}, முதலில் பிறந்தவனும் {அனைத்திற்கும் முன்பு பிறந்தவனும்}, அண்டத்தின் ஆட்சியாளனும், எங்களின் புகலிடமும் நீயே. அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காகவே நீ விஷ்ணுவின் உருவை ஏற்றாய். உனது சக்தியால் விருத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரன் பிரம்மஹத்தி பாவத்தால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களில் சிறந்தவனே, அவனை {இந்திரனை} விடுவிக்க வேண்டிய வழிகளைப் பரிந்துரைப்பாயாக!” என்றனர் {தேவர்கள்}.

அவர்களது சொற்களைக் கேட்ட விஷ்ணு  {தேவர்களிடம்}, “இந்திரன் எனக்கு வேள்வியைக் காணிக்கையாக்கட்டும். அப்போது நான் அந்த வஜ்ரதாங்கியை {இந்திரனைச்} சுத்திகரிப்பேன். புனிதமான குதிரை வேள்வியைச் செய்யும் அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்}, தேவர்கள் தலைவனாக மீண்டும் தனது கண்ணியத்தை அடைவான். தீய மனம் கொண்ட நகுஷன், தனது தீச்செயல்களால் அழிவை நோக்கி வழிநடத்தப்படுவான். தேவர்களே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார் {விஷ்ணு}.

உண்மையான சொற்களான, காதுகளுக்கு இனிமையான அமுதம் போன்ற அந்த விஷ்ணுவின் சொற்களைக் கேட்ட தேவர்கள், கவலையுடனும் அச்சத்துடனும் இந்திரன் இருந்த பகுதிக்குத் தங்கள் ஆசான் மற்றும் முனிவர்கள் ஆகியோருடன் சென்றனர். அங்கே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த மனம் கொண்ட பெரும் இந்திரனைச் சுத்திகரிப்பதற்காகப் பிரம்மஹத்தியை நீக்க வல்ல பெரும் குதிரை வேள்வி செய்யப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, மரங்கள், நதிகள், மலைகள், பூமி மற்றும் பெண்கள் ஆகியோருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவத்தைப் பகிர்ந்தளித்தான். இப்படி அந்த உயிரினங்களுக்கு அதைப் {பிரம்மஹத்தியைப்} பிரித்தளித்து, அதில் இருந்து விடுபட்ட இந்திரன், நோயில் இருந்து விடுபட்டான். இப்படியே அதை {பிரம்மஹத்தியை}, அந்த உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்தளித்து அதில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, நோயில் இருந்தும் விடுபட்டான். பாவத்தில் இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, தன்னிலையை அடைந்தான். பிறகு, அசையும் உயிரினங்கள் அனைத்தின் பலத்தை உறிஞ்சுபவனும், முனிவர்கள் அளித்த வரத்தின் அறத்தால் அணுகமுடியாதபடி இருந்தவனுமான நகுஷனைக் கண்டு வலாசுரனைக் கொன்றவன் {இந்திரன்} நடுங்கினான்.

பிறகு, அந்தச் சச்சியின் கணவன் {இந்திரன்}, மீண்டும் பார்வையில் இருந்து மறைந்து போனான். உயிரினங்கள் அனைத்தின் பார்வைக்கும் மறைந்தபடி, காலத்தை எதிர்பார்த்து அவன் {இந்திரன்} உலவி கொண்டிருந்தான். இந்திரன் மறைந்ததும், சச்சி {இந்திராணி} துயரத்தில் விழுந்தாள். பிறகு, பெரும் துன்பமடைந்த அவள் {சச்சி}, “ஐயோ! ஓ! இந்திரரே, நான் ஏதாவது கொடையளித்திருந்தால், தேவர்களுக்குக் காணிக்கை அளித்திருந்தால், எனது ஆன்மிக வழிகாட்டிகளை மனநிறைவு கொள்ளச் செய்திருந்தால், என்னில் ஏதாவது உண்மை இருந்தால், எனது கற்புக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என நான் வேண்டிக் கொள்வேன். புனிதமானவளும், தூய்மையானவளும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் [1] சென்று கொண்டிருப்பவளுமான {உத்தராயணக் காலத்தில் நடப்பவளும்} இந்த இரவின் தேவியை, எனது விருப்பம் நிறைவேற்றுவதற்காக வணங்குகிறேன்” என்றாள் {சச்சி}.

[1] “குளிர் காலத்தில் இருந்து கோடைகாலத்திற்குள் நுழையும் சூரியனின் பாதை {உத்தராயணக் காலம்}” என்கிறார் கங்குலி.

இதைச் சொன்ன அவள் {சச்சி}, தன் உடலையும், ஆன்மாவையும் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இரவின் தேவியை வழிபட்டாள். தனது கற்பு மற்றும் உண்மையின் {சத்தியத்தின்} பெயரால் அவள் {சச்சி}, குறிசொல்பவளிடம் {சந்தேகத்தைத் தெளிவிக்கும் அந்தத் தேவியான உபஸ்ருதியிடம்} [2] கேட்டாள். அவள் {சச்சி}, “தேவர்களின் தலைவர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாயாக. உண்மை உண்மையாலேயே சரிபார்க்கப்படட்டும்” என்றாள். இப்படியே அவள் {சச்சி}, குறிசொல்லும் தேவியிடம் {இரவின் தேவியான உபஸ்ருதியிடம்} பேசினாள்.

[2] “இரவில் நட்சத்திரங்களின் குறிப்புகளைக் கொண்டு {பழங்காலத்தில்} நடைமுறையில் பயிலப்பட்ட குறிகேட்பு முறையாகும்” என்கிறார் கங்குலி
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, January 12, 2015

பிருஹஸ்பதியின் திட்டம்! - உத்யோக பர்வம் பகுதி 12

The deliberation of Vrihaspati! | Udyoga Parva - Section 12 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 12)

பதிவின் சுருக்கம் : தேவர்கள் நகுஷனை அமைதிப்படுத்துவது; நகுஷன் தேவர்களிடம் இந்திரன் அகலிகையை அடைந்ததைச் சொல்லி அவர்களை நிர்ப்பந்தித்தது; தேவர்கள் பிருஹஸ்பதியிடம் சென்றது; இந்திராணியான சச்சி பிருஹஸ்பதியிடம் அழுதது; அண்டியவர்களைக் கைவிடக்கூடாது என்று பிரம்மன் சொல்லியிருப்பதைப் பிருஹஸ்பதி எடுத்துரைப்பது; தேவர்கள் இதற்கு ஒரு திட்டத்தை வகுக்குமாறு பிருஹஸ்பதியிடம் வேண்டுவது; பிருஹஸ்பதியின் திட்டம்; இந்திராணி நகுஷனிடம் சென்றது...

இந்திராணியான சச்சி தேவி
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “கோபம் கொண்ட நகுஷனைக் {நஹுஷனைக்} கண்ட தேவர்கள், துறவியர் தலைமையில், கடுமுகம் கொண்ட தங்கள் மன்னனான அவனிடம் {நகுஷனிடம்} சென்று, “ஓ! தேவர்களின் மன்னா {நகுஷா}, உனது கோபத்தை விடு. ஓ! தலைவா, நீ கோபமடைந்தால், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும்பாம்புகளுடன் இருக்கும் அந்த அண்டமே நடுங்கும். நல்லவனே, உனது கோபத்தை விடு. உன்னைப் போன்றவர்கள் இத்தகு நிலையை அடையக்கூடாது. அந்தத் தேவி {சச்சி} வேறொருவரின் {இந்திரனின்} மனைவியாவாள். ஓ! தேவர்களின் தலைவா, அமைதியடைவாயாக! அடுத்தவர் மனைவியை அடையும் பாவத்திலிருந்து உனது மனதைத் திருப்பு. நீ தேவர்களின் மன்னனாவாய், உனக்கு வளம் உண்டாகட்டும்! உனது குடிகளை அறம்தழுவி காப்பாயாக!” என்றனர். இப்படிச் சொல்லப்பட்டும், காமத்தில் உணர்விழந்திருந்த அவன் {நகுஷன்} {அவர்களால்} சொல்லப்பட்டதைக் கவனித்தானில்லை. பிறகு அந்த மன்னன் {நகுஷன்}, தேவர்களிடம் இந்திரனைச் சுட்டும்படி, “துறவியின் மனைவியான களங்கமற்ற அகலிகையை {அஹல்யையை}, அவளது கணவர் உயிரோடிருந்தபோதே அடைந்தானே. நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? முற்காலத்தில் இந்திரனால் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற, அநீதியான, வஞ்சனையான செயல்கள் பலவாகும். நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? எனக்கு இன்பமானதை அந்தத் தேவி {சச்சி} செய்யட்டும்; அதுவே அவளுக்கு நிரந்தர நன்மையாகும். தேவர்களே, இதுவே உங்கள் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும்” என்றான் {நகுஷன்}.


அதற்குத் தேவர்கள் {நகுஷனிடம்}, “ஓ! சொர்க்கத்தின் தலைவா {நகுஷா}! நீ கட்டளையிட்டதுபோலவே, நாங்கள் இந்திரனின் ராணியைக் {சச்சியை} கொண்டுவருகிறோம். ஓ! வீரமிக்க ஆன்மாவே {நகுஷா}, இந்தக் கோபத்தை விடு! ஓ! தேவர்கள் தலைவா, நீ அமைதியடைவாயாக!” என்றனர்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அவனிடம் {நகுஷனிடம்} பேசிய பிறகு, தேவர்களும் துறவிகளும் இச்செய்தியைத் தெரிவிப்பதற்காகப் பிருஹஸ்பதியிடமும் {பிரகஸ்பதியிடமும்}, இந்திரனின் ராணியிடமும் {சச்சியிடமும்} சென்றனர். அவர்கள், “ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, இந்திரனின் ராணி {சச்சி} தனது பாதுகாப்புக்காக உமது வீட்டை தானே வந்து அடைந்தாள். ஓ! தெய்வீகத் துறவியரில் சிறந்தவரே {பிருஹஸ்பதியே}, நீரும் அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்திருக்கிறீர். ஆனால், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, இந்திரனின் ராணியை {சச்சியை} நகுஷனுக்கு அளிக்குமாறு தேவர்கள், கந்தர்வர்கள், துறவிகள் ஆகிய நாங்கள் உம்மிடம், வேண்டுகிறோம். தேவர்கள் மன்னனான பெரும் பிரகாசம் மிக்க நகுஷன், இந்திரனுக்கும் மேன்மையானவனாவான். தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமும் நிறமும் கொண்ட அந்த மங்கை {இந்திராணியான சச்சி}, அவனைத் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்கட்டும்!” என்றனர். இப்படிச் சொல்லப்பட்டதும், அந்தத் தேவி, கண்ணீர் வடித்து, இரக்கப்படும்படியான பரிதாபகரமான சொற்களில் விண்ணப்பிக்கும் வகையில் அழுதாள். அவள் {சச்சி} பிருஹஸ்பதியிடம், “ஓ! தெய்வீகத் துறவியரில் சிறந்தவரே {பிருஹஸ்பதி}, நகுஷனை எனது தலைவனாக நான் விரும்பவிலை. ஓ! அந்தணரே, நான் உமது பாதுகாப்பில் இருக்கிறேன். இந்தப் பெரும் அபாயத்தில் இருந்து என்னைக் காப்பாற்றும்!” என்றாள் {சச்சி}.

அதற்குப் பிருஹஸ்பதி, “எனது பாதுகாப்பை அடைந்திருக்கும் ஒருவரை நான் கைவிடமாட்டேன். இதுவே எனது தீர்மானம். ஓ! களங்கமற்ற வாழ்வு கொண்டவளே {இந்திராணியான சச்சியே}, அறமும் உண்மையும் கொண்ட உன்னை நான் கைவிடேன். அறவிதிகளை அறிந்தவனும், உண்மையின் மீது மதிப்பு கொண்டவனும், அதிலும் குறிப்பாக நீதி எது என்பதை அறிந்தவனுமான ஓர் அந்தணனாக நான் இருப்பதால், ஒரு முறையற்ற செயலைச் செய்ய நான் விரும்பேன். நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

தேவர்களில் சிறந்தவர்களே நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம். இக்காரியம் குறித்து முன்பே பிரம்மன் பாடியிருப்பதைக் கேளுங்கள். அச்சத்தில் பாதுகாப்பை நாடி வரும் ஒருவரை எதிரியிடம் விடுபவன், தனக்குப் பாதுகாப்புத் தேவையாக இருக்கும்போது எந்தப் பாதுகாப்பையும் அடையமாட்டான். அவனது விதை {அவன் விதைத்த விதை} முளைக்க வேண்டிய காலத்தில் முளைக்காது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் அவனிடம் மழை வராது. அச்சத்தில் பாதுகாப்பை நாடி வரும் ஒருவரை எதிரியிடம் விடுபவன், தான் செய்யும் எந்தக் காரியத்திலும் வெல்லமாட்டான்; உணர்வற்ற அவன், அங்கங்கள் அசைவிழந்து சொர்க்கத்தில் இருந்து விழுவான்; அவனால் கொடுக்கப்படும் காணிக்கைகளை தெய்வம் மறுக்கும். அவனது சந்ததி அகால நேரத்தில் இறக்கும். அவனது முன்னோர்கள் எப்போதும் (தங்களுக்குள்} சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்திரனோடு கூடிய தேவர்கள் அவன் மீது வஜ்ரத்தை அடிப்பார்கள். இதுவும் {இந்தக் காரியமும்} அப்படிப்பட்டதே என்பதை அறிந்தும், இந்திரனுக்கு விருப்பமான மனைவி என உலகில் பிரபலமானவளும், அவனது {இந்திரனின்} ராணியுமான இந்தச் சச்சியை நான் {எதிரியிடம் [நகுஷனிடம்]} விட மாட்டேன்” என்றார் {பிருஹஸ்பதி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு தேவர்களும், கந்தர்வர்களும், அந்தத் தேவர்களின் ஆசானிடம் {பிருஹஸ்பதியிடம்} இச்சொல்லைச் சொன்னார்கள், “ஓ! பிருஹஸ்பதி, தகுதியான ஏதாவதொரு உரத்த கொள்கையைத் திட்டமிடுவீராக! {வலுவான திட்டத்தை வகுப்பீராக!}” என்றனர். அதற்குப் பிருஹஸ்பதி {தேவர்களிடம்}, “மங்கலகரமான தோற்றம் கொண்ட இந்தத் தேவி {இந்திராணியான சச்சி}, {தன்னைக் கோரும்} அவனது {நகுஷனது} முன்மொழிவுக்கு {ஆசைக்குத்} தன்னைத் தயார் செய்வதற்காக நகுஷனிடம் சிறிது காலத்தை {அவகாசத்தைக்} கேட்கட்டும். இதுவே இந்திரனின் ராணிக்கும், நம் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். தேவர்களே, காலம் பல இடையூறுகளை எழுப்பும். {இந்தத் தேவியான சச்சி, கேட்கும்} காலமே {நகுஷனின்} காலத்தைக் கடத்தும். அவனுக்கு அருளப்பட்டுள்ள வரத்தின் அறத்தால் நகுஷன் கர்வம் உள்ளவனாகவும் பலவானாகவும் இருக்கிறான்!” என்றார் {பிருஹஸ்பதி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிருஹஸ்பதி இப்படிப் பேசியதும், தேவர்கள் மகிழ்ந்து, “ஓ! அந்தணரே, நன்று சொன்னீர். இதுவே தேவர்கள் அனைவருக்கும் நன்மையைத் தரும். இதில் ஐயமில்லை. இந்தத் தேவி {சச்சி} அமைதியேற்படச் செய்யட்டும்” என்றனர். பிறகு அக்னியின் தலைமையிலான அந்தத் தேவர்களின் கூட்டம் அனைத்து உலகங்களின் நன்மைக்கான நோக்கத்துடன், இந்திரனின் ராணியிடம் {சச்சியிடம்} அமைதியான முறையில் பேசினர். அந்தத் தேவர்கள் {சச்சியிடம்}, “இந்த முழு அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிவற்றைத் தாங்குபவள் நீயே. கற்பும், உண்மையும் கொண்ட நீ, நகுஷனிடம் செல்வாயாக! உன்னிடம் காமங்கொண்டிருக்கும் அந்தத் தீயவன் {நகுஷன்}, விரைவில் விழுவான்; ஓ! தேவி {சச்சி}, இந்திரன் தேவர்களின் அரசாட்சியை {மீண்டும்} அடைவான்!” என்றனர். அந்த ஆழ்ந்த ஆய்வின் விளைவுகளை உறுதி செய்து கொண்ட இந்திரனின் ராணி {சச்சி}, தனது முடிவை அடைய விரும்பி, கடுமுகம் கொண்ட நகுஷனிடம் கூச்சத்துடன் சென்றாள். அந்தத் தீய நகுஷனும், காமத்தால் அறிவற்றவனாகி, அவள் {சச்சி} எப்படிப்பட்ட இளமையையும் அழகையும் கொண்டவள் என்பதைக் கண்டு மிகுந்த மனநிறைவு கொண்டான்.

************************

தொடர்புடைய பதிவுகள்

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, January 10, 2015

விருத்திரனைக் கொன்ற இந்திரன்! - உத்யோக பர்வம் பகுதி 10

Vritra killed by Indra! | Udyoga Parva - Section 10 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 10)

பதிவின் சுருக்கம் : தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் ஆலோசிப்பது; விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் அவர்கள் விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தியது; அமைதி ஏற்பட விருத்திரன் சொன்ன நிபந்தனைகள்; விருத்திரன் வைத்த நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, விஷ்ணுவின் உதவியோடு இந்திரன் விருத்திரனைக் கொன்றது; திரிசிரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியால் இந்திரன் நீருக்கடியில் மயங்கி கிடந்தது; இந்திரன் இல்லாத உலகம் அல்லலுற்றது; தங்களுக்கு ஒரு தலைவன் இல்லாமல் தேவர்களும் முனிவர்களும் திண்டாடியது...

இந்திரன் சொன்னான், “ஓ! தேவர்களே, அழிக்கப்படமுடியாத இந்த முழு அண்டத்திலும், விருத்திரன் பரவியுள்ளான். அவனை எதிர்க்கும் பணிக்கு நிகரான வேறு எதுவும் கிடையாது. பழங்காலத்தில் நான் இயன்றவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ இயலாதவனாக இருக்கிறேன். உங்களால் என்ன நல்லது நேரிடும்? நான் என்ன செய்ய முடியும்? அவன் அணுகப்பட முடியாதவன் என்பது எனது கருத்து. சக்தியுடன் பரந்திருக்கும் அவன், போரில் அளவிலா பலத்தைக் கொண்டிருக்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களையும் அவன் {விருத்திரன்} விழுங்கிவிட வல்லவனாக இருக்கிறான். எனவே, சொர்க்கவாசிகளே கேளுங்கள், இதுவே எனது தீர்மானம். விஷ்ணுவின் வசிப்பிடம் சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவருடன் {பரமாத்மாவுடன்} சேர்ந்து ஆலோசித்து, இந்த இரக்கமற்ற இழிந்தவனைக் கொல்லும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்றான் {இந்திரன்}.


சல்லியன் தொடர்ந்தான், “இப்படி இந்திரன் பேசிய நிலையில், முனிவர்கள் கூட்டத்துடன் சேர்ந்த தேவர்கள், அனைத்தையும் பாதுகாப்பவனின் {இந்திரனின்} பாதுகாப்பின் கீழ் தங்களைக் கொண்டு, வலிமைமிக்க தெய்வமான விஷ்ணுவிடம் சென்றார்கள். விருத்திரனிடம் கொண்ட பேரச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், தெய்வங்களுக்குத் தலைமையான தெய்வத்திடம் {விஷ்ணுவிடம்}, “முற்காலங்களில் மூன்று உலகங்களையும் மூன்று காலடிகளில் நீ மூடினாய். ஓ! விஷ்ணு, நறுஞ்சுவையுடைய விண்ணுணவை {அமுதத்தை} கொள்வனவு செய்து {சேகரித்து}, போரில் அசுரர்களை அழித்தாய். பெரும் அசுரனான பலியைக் கட்டி, இந்திரனை சொர்க்கத்தின் அரியணைக்கு உயர்த்தினாய். தேவர்களுக்குத் தலைவனான நீ, இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கிறாய். நீயே, மனிதர்கள் அனைவராலும் வணங்கப்படும் பலமிக்கத் தேவனான தெய்வம் {விஷ்ணு}. ஓ! தேவர்களில் சிறந்தவனே {விஷ்ணுவே}, இந்திரனுடன் கூடிய அனைத்து தேவர்களுக்கும் நீயே புகலிடம் ஆவாய்! ஓ! அசுரர்களைக் கொல்பவனே, அண்டம் முழுவதும் விருத்திரன் பரவியிருக்கிறானே” என்றார்கள்.

அதற்கு விஷ்ணு {தேவர்களிடம்}, “உங்களுக்கு நன்மையானவை எதற்கும் நான் கட்டுப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. எனவே, அவனை {விருத்திரனை} அழிக்கக்கூடிய சூழ்ச்சியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ரிஷிகளும், கந்தர்வர்களுமாகிய நீங்கள் அண்ட வடிவைத் தாங்கியிருக்கும் விருத்திரன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனிடம் ஒரு சமரசங் கொள்ளுங்கள். இப்படியே நீங்கள் அவனைத் வீழ்த்துவதில் வெல்வீர்கள். தேவர்களே, காட்சிக்குப் புலப்படாமல் இருந்து, ஆயுதங்களில் சிறந்த இந்திரனின் வஜ்ரத்துக்குள் நான் நுழைவேன். எனது சக்தியின் அறத்தால், இந்திரன் வெற்றியை அடைவான். ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, முனிவர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் புறப்படுங்கள். இந்திரனுக்கும் விருத்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதில் தாமதம் இல்லாமலிருக்கட்டும்” என்றான் {விஷ்ணு}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவன் {விஷ்ணு} இப்படிப் பேசியதும், முனிவர்களும் தேவர்களும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு ஒன்று சேர்ந்து சென்றனர். பிறகு இந்திரனை அணுகிய அவர்கள், பத்து திக்குகளையும் எரிக்கும் பிரகாசத்துடனும், மூன்று உலகங்களையும் விழுங்கி விடுவது போல, சூரியனையோ சந்திரனையோ ஒத்திருந்த விருத்திரனைக் கண்டார்கள். பிறகு, விருத்திரனிடம் வந்த முனிவர்கள், அவனிடம் சமரசமாக, “ஓ! வெல்லப்பட முடியாதவனே, இந்த முழு அண்டத்திலும் உனது சக்தி பரவியிருக்கிறது. எனினும், ஓ! வலிமைமிக்கவைகளில் சிறந்தவனே, உன்னால் இந்திரனை வீழ்த்த முடியவில்லை. நீ போரிட ஆரம்பித்து நீண்ட காலம் கடந்துவிட்டது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய அனைத்து உயிரினங்களும் இந்தப் போரின் விளைவுகளால் துன்புறுகின்றனர். உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு விளையட்டுமாக. நீ மகிழ்ச்சி அடைந்து, இந்திரலோகங்களில் நித்தியமாக வசிப்பாயாக!” என்றனர்.

துறவிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்க விருத்திரன், அவர்களுக்குத் தலைவணங்கினான். பிறகு அந்த அசுரன் {விருத்திரன்}, “ஓ! உயர்ந்த கொடை பெற்றவர்களே, நீங்களும் இந்தக் கந்தர்வர்கள் அனைவரும் சொல்வதை நான் கேட்டேன். களங்கமற்றவர்களே, நான் சொல்லப் போவதையும் நீங்கள் கேளுங்கள். நான், இந்திரன் ஆகிய எங்கள் இருவருக்குள் எப்படி அமைதி ஏற்பட முடியும்? தேவர்களே, இரு பகை சக்திகளுக்குள் எப்படி நட்பிருக்க முடியும்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த முனிவர்கள் {விருத்திரனிடம்}, “நீதிமான்களுக்கிடையில் முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டு விடும். அதுவே விரும்பத்தக்கதுமாகும். அதன் பின்னர், என்ன விதிக்கப்படுகிறதோ அதுவே நடக்கும். எனவே, நல்லோரின் நட்பு யாசிக்கப்பட வேண்டும். நல்லோருடனான நட்பு என்பது அற்புத செல்வமாகும் (செல்வத்தைப் போன்றதாகும்). ஏனெனில், தேவையேற்படும்போதெல்லாம் ஒரு விவேகி தனது ஆலோசனையை {ஒரு நண்பனுக்குக்} கொடுப்பான். நல்ல மனிதனிடம் கொள்ளும் நட்பு அதிகப் பயனுடையதாகும்; எனவே, விவேகிகள் நல்லோரைக் கொல்ல விரும்பலாகாது. நல்லோரால் மதிக்கப்படும் இந்திரன், பரந்த மனப்பான்மை கொண்ட மனிதர்களுக்குப் புகலிடமாக இருக்கிறான். வாய்மையுடையவனாக, குற்றமற்றவனாக, அறமறிந்தவனாக, நுண்ணிய நீதியை அறிந்தவனுமாக அவன் {இந்திரன்} இருக்கிறான். மேற்சொன்ன படி உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு இருக்கட்டும். இவ்வழியில், {இந்திரனிடம்} நம்பிக்கை வை; உனது இதயத்தில் வேற்றுமை கொள்ளாதே”, என்றனர்”.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பெருமுனிவர்களின் இச்சொற்களைக் கேட்ட அந்த ஒப்பற்ற அசுரன் {விருத்திரன்} அவர்களிடம், இயல்புக்குமிக்க சக்திகளைக் கொண்ட முனிவர்கள் என்னால் மதிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. தேவர்களே, நான் சொல்லப் போகிறவை முழுமையாக நடத்தப்படட்டும்; பிறகு, நான் (இந்த) பிராமணர்களில் சிறந்தவர்கள் என்னிடம் சொன்னவாறு அனைத்தையும் செய்கிறேன். பிராமணக் குலத்தின் தலைவர்களே, உலர்ந்தவற்றினாலோ, ஈரமானவையினாலோ, கல்லினாலோ, மரத்தினாலோ, நெருக்கமான போரில் பயன்படும் ஆயுதங்களாலோ, ஏவுகணைகளாலோ, பகலிலோ, இரவிலோ, இந்திரனோ, தேவர்களோ என்னைக் கொல்லாத வகையில் அவர்களுக்குக் கட்டளையிடுவீராக! அந்த நிபந்தனைகளின் பேரிலேயே இந்திரனுடனான சமாதானம் என்னால் ஏற்கப்படும்” என்றான் {விருத்திரன்}. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அதற்கு அந்த முனிவர்கள் அவனிடம் “நல்லது” என்றனர்.

இப்படி அமைதி தீர்மானிக்கப்பட்டதும், விருத்திரன் மிகவும் மகிழ்ந்தான். விருத்திரனைக் கொல்லும் நினைவால் அடிக்கடி நிரப்பப்பட்டாலும் இந்திரனும் மகிழ்ச்சியடைந்தான். அந்தத் தேவர்கள் தலைவன் (மனதில்) அமைதியில்லாமல், தப்பும் வழி தேடி தனது நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட நாளின் மாலைப்பொழுதில் பயங்கரமான நேரத்தில், கடற்கரையில் அந்தப் பலமிக்க அசுரனை அவன் {இந்திரன்} கண்டான். அந்த ஒப்பற்ற அசுரனுக்கு {விருத்திரனுக்கு} அருளப்பட்ட வரத்தை நினைத்துப் பார்த்து, “இஃது ஒரு பயங்கரமான மாலைப்பொழுது. இது பகலுமல்ல, இரவுமல்ல. என்னிடம் இருந்து அனைத்தையும் அபகரித்த இந்த விருத்திரன் எனது எதிரி. இவன் என்னால் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் சந்தேகமில்லை. ஏமாற்றியாவது பெரும் அளவில் இருக்கும் இந்தப் பெரும் பலமிக்க அசுரனை நான் கொல்லவில்லையானால், எனக்கு நன்மையுண்டாகாது” என்றான் {இந்திரன்}.

இப்படி நினைத்த இந்திரன், விஷ்ணுவை மனதில் நினைத்த மாத்திரத்தில் பெரும் மலையெனக் கடலில் நுரைக்குவியல் இருப்பதைக் கண்டான். பிறகு அவன், “இஃது {கடல் நுரை} உலர்ந்தோ, ஈரமாகவோ இல்லை. இஃது ஆயுதமும் அல்ல; நான் இதை விருத்திரன் மீது ஏவப் போகிறேன். அவன் உடனே இறந்துவிடுவான் என்பதில் ஐயமில்லை” என்று சொன்னான் {இந்திரன்}. பிறகு அவன் வஜ்ரத்தை {வஜ்ரத்தின் சக்தியை} அந்த நுரையில் கலந்து விருத்திரன் மீது வீசினான். அந்த நுரைக்குள் நுழைந்திருந்த விஷ்ணு, விருத்திரனின் உயிருக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தான். விருத்திரன் கொல்லப்பட்ட போது, திக்குகள் இருளற்றதாகின; அங்கே இனிய தென்றல் வீசியது; அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன. கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்களுடன் கூடிய தேவர்கள், பெரும்பாம்புகள், துறவிகள் ஆகியோர் பல்வேறு துதிப்பாடல்களால் வலிமைமிக்க இந்திரனைப் புகழ்ந்தனர்.

அனைவராலும் வணங்கப்பட்ட அந்த இந்திரன் அனைவருக்கும் ஊக்கம் தரும் சொற்களைப் பேசினான். அனைத்து தேவர்களையும் போலவே, தனது எதிரியைக் கொன்றதால் அவன் இதயமும் மகிழ்ந்தது. அந்த அறத்தின் இயல்பை அறிந்த அவன் {இந்திரன்}, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைவிடவும் போற்றுதலுக்குரிய விஷ்ணுவை வணங்கினான். தேவர்களுக்குப் பயங்கரனான பலமிக்க விருத்திரன் கொல்லப்பட்டதும், பொய்மையினால் {அசத்தியத்தால்} மூழ்கடிக்கப்பட்ட இந்திரன் மிகுந்த துயரத்துக்குள்ளானான்; மேலும், துவஷ்டியரின் மகனான மூன்று தலையனைக் {திரிசிரனைக்} கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியினாலும் மூழ்கடிக்கப்பட்டான். உலகங்களின் எல்லைகளுக்குள்ளே தஞ்சம்புகுந்து {உலகங்களின் கோடியை அடைந்து}, உணர்வுகளையும், சுயநினைவையும் இழந்தான். தனது பாவங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அவன் {இந்திரன்}, ஒருவராலும் அறியப்படாமல் இருந்தான். நெளிந்து கொண்டிருக்கும் பாம்பைப் போல அவன் நீருக்குள் மறைந்து கிடந்தான்.

பிரம்மஹத்தியினால் ஏற்பட்ட அச்சத்தினால் ஒடுக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, காட்சியில் இருந்து இப்படி மறைந்து போன போது, அழிவைக் கடந்திருந்ததைப் போலப் பூமி காட்சியளித்தது. அது {பூமி} மரங்களற்று, காடுகளற்று, ஆறுகளின் ஓட்டங்கள் தடை செய்யப்பட்டுக் கிடந்தது; நீர்த்தேக்கங்கள் தங்கள் நீரனைத்தையும் இழந்தன; மழை நின்று போனதால், விலங்குகள் மத்தியில் துன்பமே நிலவியது. தேவர்களும், பெருமுனிவர்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தனர்; மன்னனில்லாத உலகம், பேரழிவுகளால் மூழ்கடிக்கப்பட்டது. சொர்க்கத்தில் இருந்த தேவர்களும், தெய்வீக முனிவர்களும், தேவர்கள் தலைவனிடம் இருந்து பிரிந்ததால், அச்சமுற்று, தங்களுக்கு யார் மன்னன் என்று கவலைப்பட்டனர். ஒருவரும் தேவர்களின் மன்னனாகச் செயல்பட விரும்பவில்லை” என்றான் {சல்லியன்} 

*********************************

தொடர்புடைய பதிவுகள்
 
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, January 09, 2015

சல்லியன் சொன்ன விருத்திரன் கதை! - உத்யோக பர்வம் பகுதி 9

The story of Vritra told by Salya | Udyoga Parva - Section 9 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 9)

பதிவின் சுருக்கம் : துவஷ்டிரியால் திரிசிரன் படைக்கப்பட்டது; திரிசிரன் தவத்தில் ஆழ்வது; திரிசிரன் தனது பதவியைக் குறி வைக்கிறான் என்றெண்ணி இந்திரன் அவனைக் கொல்வது; தனது மகனைக் கொன்ற இந்திரனைக் கொல்வதற்காக துவஷ்டிரி விருத்திரனை உண்டாக்குவது; விருத்திரன் இந்திரனை விழுங்குவது; தேவர்கள் கொட்டாவியைப் படைப்பது; விருத்திரன் வெளியிட்ட கொட்டாவியால் இந்திரன் வெளியே வந்தது; மீண்டும் போர் தொடங்கியது; இந்திரன் தோற்று ஓடியது; மந்தர மலையில் அமர்ந்து கொண்டு தேவர்கள் விஷ்ணுவை தியானித்தது...

யுதிஷ்டிரன் {சல்லியனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {சல்லியரே}, ஒப்பற்ற இந்திரன் தனது ராணியுடன் அனுபவித்த பெரிய இணையற்ற துயரம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”

அதற்குச் சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இந்திரன் மற்றும் அவனது மனைவிக்கும் துயரம் எப்படி நேர்ந்தது என்று, முன்நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட பழங்கதையை நான் சொல்கிறேன் கேள். ஒரு முறை உயிரினங்களின் தலைவரும், தேவர்களில் முதன்மையானவருமான துவஷ்டிரி {துவஷ்டா = விஸ்வகர்மா} [1] கடுமையான தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இந்திரன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவன் {துவஷ்டிரி} மூன்று தலை கொண்ட ஒரு மகனை {திரிசிரனைப்} படைத்தான் என்று சொல்லப்படுகிறது. பெரும் காந்தியும், உலகளாவிய வடிவமும் கொண்ட அவன், இந்திரனின் இருக்கை {பதவி} மீது ஆவல் கொண்டான்.

[1] தேவி பாகவதத்தில் விஸ்வகர்மா என்றே வருகிறது.

[2] இவனுக்கு விஸ்வரூபன் என்று பெயர் என தேவி பாகவதம் கூறுகிறது.
ஆதாரம் : http://www.sacred-texts.com/hin/db/bk06ch01.htm

சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவற்றை ஒத்திருக்கும் பரிதாபகரமான மூன்று முகங்களைக் கொண்டிருந்த அவன், ஒரு வாயினால் வேதங்களைப் படித்தான், மற்றொரு வாயினால் மதுவைக் {சூரையைக்} குடித்தான், மூன்றாவதைக் கொண்டு எல்லாத் திக்குகளையும் உறிஞ்சிவிடுவதைப் {விழுங்குவதைப்} போலப் பார்த்தான். தவப் பயிற்சி, மென்மை, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு, அறப்பயிற்சிகளையும், தவத்தையும் செய்யும் வாழ்வு வாழ அவன் நோக்கம் கொண்டான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அவனது தவப்பயிற்சி திடமானதாகவும், பயங்கரமானதாகவும், மிகக் கடுமையான தன்மை கொண்டதாகவும் இருந்தது. துணிவு, உண்மை, அளவிலா ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட தவத்தைக் கண்ட இந்திரன், தனது இடத்தை அடையவே அவன் இப்படிச் செய்கிறான் என்று அஞ்சினான். பிறகு இந்திரன், “இவனைச் சிற்றின்பத்திற்கு அடிமையாக்குது எவ்வாறு? இவன் செய்யும் இத்தகு கடும் தவப்பயிற்சியை நிறுத்துவது எவ்வாறு? இந்த மூன்று தலையன் {திரிசிரன்} பலத்தில் வளர்ந்தால், இந்த முழு அண்டத்தையுமே விழுங்கிவிடுவானே” என்று ஆலோசித்தான்.

இப்படியே இந்திரன் தனது மனதில் ஆலோசித்தான்; பிறகு, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பெரும் புத்திக்கூர்மையுடைய அவன் {இந்திரன்}, துவஷ்டிரியின் மகனை {விஸ்வரூபன் என்ற திரிசிரனை} மயக்க தேவ கன்னியருக்குக் கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “விரைந்து தாமதமில்லாமல் சென்று, அந்த மூன்று தலையன் {திரிசிரன்} சிற்றின்பத்தின் எல்லைவரை மூழ்கும்படி அவனை மயக்குங்கள். வசீகரமான இடுப்புகளுடன், உணர்வைத்தூண்டும் ஆடைகளில் உங்களை வரிசைப்படுத்திக் கொண்டு, கவர்ச்சியான கழுத்தணிகளில் உங்களை அலங்கரித்துக் கொண்டு, காதற்கெஞ்சல்களுடன் கூடிய சைகைகளைக் காட்சிப்படுத்துவீர்களாக! அழகுடன் கூடி அவனை மயக்கி எனது பெரும் அச்சத்தைப் போக்குவீர்களாக! ஓ! அழகிய காரிகைகளே, என் இதயத்தில் ஓய்வின்மையை {நிம்மதியற்ற தன்மையை} உணர்கிறேன். பெண்களே, என் மீது தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அச்சந்தரும் ஆபத்தைத் தவிர்ப்பீர்களாக! உங்களுக்கு நன்மையே விளையட்டும்” என்றான் {இந்திரன்}.

அதற்கு அந்தத் தேவ கன்னியர் {இந்திரனிடம்}, “ஓ! இந்திரரே, ஓ! வலனைக் கொன்றவரே, அவனிடம் நீர் அச்சங்கொள்ள ஒன்றுமில்லை என்ற அளவுக்கு நாங்கள் அவனை {திரிசிரனை} மயக்க முயற்சிப்போம். ஓ! தேவரே, தவத்தின் நிதியான இவன், அனைத்தையும் தனது கண்களாலே எரிப்பவன்போல அமர்ந்திருக்கும் அவனை {திரிசிரனை} மயக்குவதற்காக நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செல்கிறோம். அவனை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, உமது அச்சங்களுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துகிறோம்” என்றனர்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்திரனால் கட்டளையிடப்பட்ட அவர்கள் அந்த மூன்று தலையனிடம் {திரிசிரனிடம்} சென்றார்கள். அங்கே வந்த அந்த அழகிய காரிகைகள், காதலின் பல்வேறு சைகளைகளைச் செய்து, தங்கள் அழகிய உருவங்களைக் காட்சிப்படுத்தி அவனை மயக்கினர். ஆனால், மிகக்கடுமையான தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவன்  அவர்களைப் பார்த்தாலும், ஆசைக்கு ஆளாகவில்லை. அடக்கப்பட்ட புலன்களுடன் இருந்த அவன் ஈர்ப்பினால் விளிம்பு வரை முழுமையாக இருந்த கடலைப் போல இருந்தான். தங்கள் முயற்சிகளில் சிறந்ததைச் செய்த பிறகு, அந்தத் தேவ கன்னியர் இந்திரனிடமே திரும்பிச் சென்றனர்.

அவர்கள் அனைவரும், தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} கூப்பிய கரங்களுடன் சென்று, “ஓ!, அணுக முடியாத அவனை {திரிசிரனை} எங்களால் தொந்தரவு செய்ய இயலவில்லை. ஓ! உயர்ந்த கொடை கொண்டவரே, இப்போதும் உமக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யும்” என்றனர். உயர்ந்த மனம் கொண்ட இந்திரன் அந்தத் தேவ கன்னியரைக் கௌரவித்து அனுப்பிவிட்டு, ஓ! யுதிஷ்டிரா, தனது எதிரியை அழிக்கும் பிற வகைகளை மட்டுமே சிந்திக்கலானான். இவ்வாறே கற்றல் ஆய்வில் பதியப்பட்டுள்ள பாடங்களைக் குறித்துச் சிந்தித்து, அவனைக் கொல்வது என உறுதியாகத் தீர்மானித்தான்.

பிறகு, கோபம் பெருகிய இந்திரன், நெருப்பைப் போன்றதும், காணப் பயங்கரமானதும், பேரச்சத்தை ஈர்ப்பதுமான தனது வஜ்ரத்தை அந்த மூன்று தலையன் மீது வீசினான். வலுவாக வஜ்ரத்தால் அடிக்கப்பட்ட அவன் {திரிசிரன்} கொல்லப்பட்டு, மலையில் இருந்து தளர்ந்து விழுந்த சிகரம் போலக் கீழே விழுந்தான். வஜ்ரத்தால் கொல்லப்பட்டு, மலைபோல் கீழே கிடப்பவனைக் கண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, இறந்து கிடந்தவனின் தோற்றத்தின் பிரகாசத்தினால் எரிக்கப்பட்டு அமைதியடையவில்லை. கொல்லப்பட்டாலும், அவன் சுடர்விடும் பிரகாசத் தோற்றத்துடன் உயிருடன் இருப்பவன் போலவே இருந்தான். உயிரற்றவனாக இருந்தாலும், களத்தில் தரையில் கிடந்த அவனுடைய தலைகள் உயிருடன் இருப்பவைப் போலவே இருந்தன என்பதைச் சொல்ல ஆச்சரியமாகவே இருக்கிறது. அந்தக் காந்தியைக் கண்டு பெரும் அச்சம் கொண்ட இந்திரன் சிந்தனையில் ஆழ்ந்தபடியே இருந்தான்.

அந்த நேரத்தில், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தோளில் கோடரியைத் தாங்கிக் கொண்டு, அந்தக் காட்டுக்கு வந்த ஒரு தச்சன் [3], அது {அந்த மூன்று தலையன்} கிடந்த இடத்தை அடைந்தான். அச்சத்திலிருந்த சச்சியின் தலைவனான இந்திரன், தற்செயலாக அங்கே வந்த தச்சனைக்  கண்டான். அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்} அவனிடம் {தச்சனிடம்} உடனடியாக, “எனக்காக இதைச் செய். விரைவில் இவனது தலைகளைத் துண்டிப்பாயாக” என்றான். அதற்கு அந்தத் தச்சன், “இவனது தோள்கள் அகலமாக இருக்கின்றன; இந்தக் கோடரியால் இவற்றை வெட்ட முடியாது. அல்லது, நீதிமான்களால் கண்டிக்கப்பட்டவற்றை என்னால் செய்ய முடியாது” என்றான். அதற்கு இந்திரன், “அஞ்சாதே, நான் சொல்வதை விரைவாகச் செய். எனது உத்தரவின் பேரில் உனது கோடரி வஜ்ரத்துக்கு இணையாக இருக்கும்” என்றான்.

[3] தேவி பாகவதத்தில் இவன் மரம்வெட்டி அல்லது விறகு வெட்டியெனப்படுகிறான். அவனது பெயர் தக்சன் {Taksa}என்பதாகும்.

தச்சன் {இந்திரனிடம்}, “இந்தப் பயங்கரமான செயலைச் செய்த உன்னை நான் யாரென எடுத்துக் கொள்வது? இதை நான் அறிய விரும்புகிறேன். சரியான உண்மையை எனக்குச் சொல்” என்றான். அதற்கு இந்திரன், “ஓ! தச்சா, நான் தேவர்கள் தலைவனான இந்திரன். இதை நீ அறிவாயாக. நான் சொன்னதை மட்டும் நீ செய். ஓ! தச்சா, தயங்காதே!” என்றான். அதற்கு தச்சன் {இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, மனிதத்தன்மையற்ற இந்த உனது செயலுக்காக நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்? ஒரு துறவியின் மகனைக் கொன்றதால் ஏற்பட்ட, அந்தணனைக் கொன்ற பாவத்தின் மீது பேரச்சம் கொள்ளாமல் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

இந்திரன், “பிறகு நான் சில கடுமையான அறச்சடங்குகளைச் செய்து இந்தக் களங்கத்தில் இருந்து என்னைச் சுத்திகரித்துக் கொள்வேன். எனது வஜ்ரத்தால் கொல்லப்பட்ட இவன் எனது வலிமை நிறைந்த எதிரியாவான். ஓ! தச்சா, இன்னும் நான் அமைதியடையவில்லை. இவனது தலைகளை விரைவாக வெட்டிவிடு. நான் உனக்கு அருட்கொடைகளை அளிப்பேன். வேள்விகளில், மனிதர்கள் அந்த வேள்வியின் விலங்குடைய தலையை உனது பங்காக அளிப்பார்கள். இதுவே நான் உனக்கு அளிக்கும் அருட்கொடையாகும். நான் விரும்புவதை விரைவாகச் செய்” என்றான் {இந்திரன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “இதைக் கேட்ட அந்தத் தச்சன், பெரும் இந்திரனின் கோரிக்கையின் பேரில்,, அந்த மூன்று தலையனின் தலைகளைத் தனது கோடரியால் உடனே துண்டித்தான். அவனது தலைகள் வெட்டப்பட்ட போது, அதிலிருந்து கவுதாரிகள், காடைகள், குருவிகள் ஆகிய பல பறவைகள் பறந்து வெளியேறின.  அவன் வேதங்களைச் சொல்லி, சோமச்சாற்றைக் குடிக்கும் வாயிலிருந்து கவுதாரிகள் வெளியேறின. ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அனைத்துத் திக்குகளையும் உறிஞ்சுவதுபோலப் பார்த்துக் கொண்டிருந்த வாயிலிருந்து பல காடைகள் வெளியே வந்தன. அந்த மூன்று தலையன் மது அருந்த பயன்படுத்திய வாயில் இருந்து, குருவிகளும் பருந்துகளும் பறந்து சென்றன. அந்தத் தலைகள் வெட்டப்பட்ட பிறகு, இந்திரன் தனது நடுக்கத்தில் இருந்து விடுபட்டு, இதயத்தில் மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்குச் சென்றான். அந்தத் தச்சனும் தனது வீட்டுக்குச் சென்றான். அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தனது எதிரியைக் கொன்ற பிறகு, தனது நோக்கம் நிறைவேறியதாகக் கருதினான்.

பிறகு உயிரினங்களின் தலைவனான துவஷ்ட்ரி {விஸ்வகர்மா}, தன் மகன் {விஸ்வரூபன் திரிசரன்} இந்திரனால் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டும் கோபத்தால் கண்கள் சிவந்து இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {துவஷ்டிரி}, "தொடர்ச்சியாகத் தவம் பயின்று, கருணையோடும், தற்கட்டுபாட்டோடும், ஆசைகளை அடக்கிக் கொண்டும் எக்குற்றமும் செய்யாதிருந்த எனது மகனை {திரிசரனை} இந்திரன் கொன்றதால், இந்திரனின் அழிவுக்காக நான் விருத்திரனை உண்டாக்குவேன். நான் கொண்டுள்ள சக்தியையும், தவப்பயிற்சியின் பலத்தையும் இந்த உலகங்கள் காணட்டும்! மனித்தன்மையற்ற, தீய மனம் கொண்ட தேவர்கள் தலைவன் இதைச் சாட்சியாகக் காணட்டும்!" என்றான்.

தன் தவத்திற்காக நன்கு அறியப்பட்ட அவன் {துவஷ்டிரி} கோபம் பெருகி இதைச் சொன்ன பிறகு, நீரால் தனது வாயைச் சுத்தம் செய்து கொண்டு, காணிக்கைகளை நெருப்பிலிட்டு, பயங்கரமான விருத்திரனை உண்டாக்கி, அவனிடம் {விருத்திரனிடம்}, "ஓ! இந்திரனைக் கொல்ல விதிக்கப்பட்டவனே, எனது தவச்சடங்குகளின் சக்தியால் நீ பலத்துடன் வளர்வாயாக!" என்றான். அந்த அசுரன் பலத்தால் வளர்ந்து ஆகாய விரிவில் கோபுரமாய் நின்று நெருப்பின் மகனைப் {முருகனைப்} போல இருந்தான். அவன் {விருத்திரன்}, "பிரளய நாளில் உதித்த சூரியனைப் போல நான் யாரைக் கொல்ல வேண்டும்?' என்று கேட்டான். "இந்திரனைக் கொல்!" என்பதே மறுமொழியாக இருந்தது.

பிறகு அவன் தேவலோகத்திற்குச் சென்றான். பிறகு விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. இருவரும் கோபத்தில் எரிந்தனர். ஓ! குரு குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா} அங்கே ஒரு பயங்கரமான மோதல் நடைபெற்றது. வீரனான விருத்திரன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்கள் தலைவனைப் பிடித்தான். பிறகு கோபத்தால் நிரம்பி, இந்திரனைச் சுழற்றி, தனது வாய்க்குள் தூக்கி எறிந்தான். இந்திரன் விருத்திரனால் விழுங்கப்பட்ட போது, பெரும்பலம் கொண்டவர்களான தேவர்களில் மூத்தவர்கள் அச்சங்கொண்டு, விருத்திரனைக் கொல்வதற்காகப் பெரும்பலமிக்க ஜிரிம்பிகாவை {கொட்டாவியின் அதிதேவதை} உண்டாக்கினார்கள்.

விருத்திரன் கொட்டாவி விட்டு தனது வாயைத் திறந்ததும், வலன் என்ற அசுரனைக் கொன்றவன் {இந்திரன்}, அவனது உடலின் பல பாகங்களைச் சுருக்கி, விருத்திரனின் வாயில் இருந்து வெளியே வந்தான். அது முதலே, மூன்று உலகங்களிலும் உள்ள அசையும் உயிரினங்களின் உயிர்மூச்சில் கொட்டாவி இணைந்துவிட்டது. இந்திரன் வெளியேறியதைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். கோபம் மிகுந்த இருவரான விருத்திரன் மற்றும் இந்திரனுக்குமிடையில் மீண்டும் அங்கே பயங்கரப் போர் மூண்டது. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அது {அந்தப் போர்} நீண்ட காலத்திற்கு நீடித்தது.

துவஷ்டிரியின் {படைப்பு தேவர்களில் ஒருவர்} பலமிக்க ஆவியை ஈர்த்தும், சுயமாகப் பலம் கொண்டும் இருந்ததால், விருத்திரனின் கையே போரில் ஓங்கியிருந்தது. இந்திரன் புறமுதுகிட்டான். அவனது பின்வாங்கலால் தேவர்கள் மிகுந்த துயரடைந்தனர். இந்திரனுடன் சேர்ந்த அவர்கள் அனைவரும் கூடத் துவஷ்டிரியின் பலத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைவரும் துறவிகளுடன் ஆலோசித்தனர். முறையாகச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசித்து, அதீத அச்சத்தால் நிரம்பி வழிந்தனர். அவர்கள் மந்தர மலையின் மேல் அமர்ந்து கொண்டு, விருத்திரனைக் கொல்ல எண்ணி விஷ்ணுவை மனத்தால் அடைந்தார்கள்" என்றான் {சல்லியன்}

*********************************

தொடர்புடைய பதிவுகள்
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, December 25, 2014

பீஷ்மர் மயங்கினார்! - விராட பர்வம் பகுதி 63

Bhishma swooned away! | Virata Parva - Section 63 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 38)


பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற கடும் போர்; வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிவது; இருவரும் கடுமையாகப் போரிடுவது; அர்ஜுனன் அடித்த கணைகளால் பீஷ்மர் மயங்குவது; தேரோட்டிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களுக்கு மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்ட போது, சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமாகிய பீஷ்மர், அர்ஜுனனை நோக்கி விரைந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது அற்புத வில்லையும், எதிரிகளின் முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல கூரிய முனை கொண்ட பல கணைகளையும் எடுத்து, அடித்து அவனைக் {அர்ஜுனனைக்} கடும் வேதனைக்குள்ளாக்கினார். அவரது {பீஷ்மரது} தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டதன் விளைவாக அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சூரிய உதயத்தின் போது காணப்படும் அழகிய மலை போலத் தெரிந்தார்.

Thursday, December 18, 2014

இந்திரனின் வருகை! - விராட பர்வம் பகுதி 56

Indra came there! | Virata Parva - Section 56 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 31)


பதிவின் சுருக்கம் :கௌரவர்களுக்கு அர்ஜுனனுக்கும் இடையில் நடக்கும் போரைக் காண வந்திருந்த தேவர்களும் இந்திரனும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மழைக்காலத்தில், மென்மையான காற்றின் முன்னிலையில் செல்லும் மேகத்திரள் போல, அந்தக் கடும் வில்லாளிகளின் படைகள் {காலாட்படைகள்} தெரிந்தன. (அந்தக் காலாட்படையின்) அருகில் பயங்கரமான போர்வீரர்களால் நடத்தப்படும் எதிரிகளின் குதிரைகள் {குதிரைப்படைகள்} நின்றிருந்தன. அங்கே, பயங்கர முகம் கொண்டவையும், அழகிய கவசத்தால் ஒளிருபவையும், திறமையான போராளிகளால் நடத்தப்படுபவையும், இரும்பு அங்குசங்களால் தூண்டப்படுபவையுமான யானைகளும் {யானைப்படைகளும்} இருந்தன.

Sunday, October 12, 2014

கவசத்தை உரித்தெடுத்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 308

Karna peeled off his mail!  | Vana Parva - Section 308 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

அந்தண வேடத்தில் வந்த இந்திரன் கர்ணனிடம் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்பது; கர்ணன் அது தனது உயிரை அழிக்கும் என்று சொல்லி மறுப்பது; இந்திரன் அதைத்தவிர வேறு எதுவும் வேண்டாமென்பது; அவற்றுக்கு ஈடாக வேறு ஏதேனும் இந்திரன் அளிக்க வேண்டும் என்று கர்ணன் கோருவது; இந்திரன் வாசவி என்ற சக்தி ஆயுதத்தைத் தருவதாகக் கர்ணனுக்குச் சொல்வது; அதை ஏற்ற கர்ணன் தனது கவசத்தையும் குண்டலங்களையும் அறுத்து இந்திரனுக்குக் கொடுப்பது; கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த கௌரவர்கள் துயரையும், பாண்டவர்கள் மகிழ்ச்சியையும் அடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தண வேடம் தரித்து வந்த போது, அவனைக் கண்ட கர்ணன் {இந்திரனிடம்}, “நல்வரவு!” என்றான். அவனது {அந்த அந்தணரின்} நோக்கத்தை அறியாத அதிரதனின் மகன் {கர்ணன்}, அந்த அந்தணனிடம் {இந்திரனிடம்}, “தங்கத்தாலான அட்டிகை {#}, அழகிய காரிகைகள் {#}, அபரிமிதமான பசுக்களுடன் நிறைந்த கிராமங்கள் ஆகியவற்றில் நான் எதை உமக்குக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணன் {இந்திரன்}, “நான் தங்கத்தாலான அட்டிகையையோ, அழகிய காரிகைகளையோ வேறு ஏதும் ஏற்புடைய பொருளையோ உன்னிடம் கேட்கவில்லை. அவைகளைக் கேட்பவர்களுக்குக் கொடுப்பாயாக. ஓ!பாவமற்றவனே {கர்ணா}, நீ உனது நோன்பில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாய் என்றால், (உனது மேனியில் இருக்கும்) உன் உடலுடன் ஒட்டிப்பிறந்த இந்தக் கவசத்தையும், இந்தக் காது குண்டலங்களையும் அறுத்து எனக்கு அளிப்பாயாக!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! அந்தணரே, நான் உமக்கு வீடு தோட்டத்துடன் கூடிய நிலத்தையும், அழகிய காரிகைகளையும், பசுக்களையும், கழனிகளையும் {fields} கொடுப்பேன்; ஆனால் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் உமக்குத் தர இயலாதவனாக இருக்கிறேன்!” என்றான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் பலவிதமான வார்த்தைகளில் மறுக்கப்பட்டாலும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்த அந்தணன் {அதாவது இந்திரன்} வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. கர்ணன் தன் சக்தியால் இயன்றவரை அவனைச் சமாதானப்படுத்தி, முறையாக வழிபட்டாலும், அந்த அந்தணர்களில் சிறந்தவன் வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. அந்த அந்தணர்களில் முதன்மையானவன் {இந்திரன்}, வேறு எந்த வரத்தையும் கேட்காத போது, ராதையின் மகன் {கர்ணன்}, அவனிடம் {இந்திரனிடம்} புன்னகையோடு, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது கவசம் எனது உடலோடு பிறந்தது, இந்தக் காது குண்டலங்கள் அமிர்தத்தில் இருந்து எழுந்தவை. இவற்றாலேயே உலகங்களில் நான் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறேன். எனவே, அவற்றை என்னால் பிரிய முடியாது. ஓ! அந்தணர்கள் மத்தியில் உள்ள காளையே, செழிப்பு நிறைந்ததும், எதிரிகளற்றதுமான இந்த முழு உலகத்தின் அரசாட்சியை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீராக! ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, எனது காது குண்டலங்களையும், என்னுடலுடன் பிறந்த கவசத்தையும் நான் இழந்தால், எதிரிகளால் வெல்லத்தக்கவன் ஆகிவிடுவேன்!” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகனைக் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்தவன் {இந்திரன்} வேறு வரத்தைக் கேட்காத போது, கர்ணன் அவனிடம் {இந்திரனிடம்} மீண்டும் புன்னகையுடன், “ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! தலைவா {இந்திரா}, இதற்கு முன்பே நான் உன்னை அடையாங்கண்டு கொண்டேன். ஓ! சக்ரா {இந்திரா}, நீயே தேவர்களுக்குத் தலைவனாதலால், உனக்கு நான் பயனில்லாத வரத்தை அளிப்பது முறையாகாது! மறுபுறம், நீயே படைப்பாளனும், அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருப்பதால், நீயே எனக்கு வரங்களை அளிக்க வேண்டும்! ஓ! தேவா {இந்திரா}, நான் இந்தக் கவசத்தையும், காது குண்டலங்களையும் உனக்கு அளித்தால், நான் அழிவைச் சந்திப்பேன் என்பது நிச்சயம். நீயும் கேலிக்குள்ளாக்கப்படுவாய். எனவே, ஓ! சக்ரா {இந்திரா}, எனது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் எடுத்துக் கொண்டு அதற்கீடாக ஏதாவது ஒன்றை எனக்கு அளிப்பாயாக! இல்லையெனில், நான் அவற்றை உனக்குத் தர மாட்டேன்!” என்றான் {கர்ணன்}. உடனே சக்ரன் {இந்திரன் கர்ணனிடம்}, “நான் உன்னிடம் வருவதற்கு முன்பே, சூரியன் எனது நோக்கத்தை அறிந்து, அனைத்தையும் உனக்கு விளக்கிருக்கிறான் என்பதில் ஐயமில்லை! ஓ கர்ணா, நீ விரும்பியது போலவே ஆகட்டும்! ஓ மகனே, வஜ்ராயுதத்தைத் தவிர, நீ பெற விரும்புவது யாது என்பதை எனக்குச் சொல்!” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மகிழ்ச்சியில் நிறைந்து, தனது காரியம் நிறைவேறப்போவதைக் கண்டு வாசவனை {இந்திரனை} அணுகி, தடுக்கப்பட முடியாத கணையைப் பெற எண்ணி, இந்திரனிடம், “ஓ! வாசவா, எனது கவசத்துக்கும் காது குண்டலங்களுக்கும் ஈடாகத் தடுக்கப்பட இயலாததும், போரின் பொருட்டு அணிவகுக்கும் எதிரிக் கூட்டத்தை அழிக்கத் தகுதி வாய்ந்ததுமான கணையொன்றை எனக்குத் தருவாயாக!” என்றான் {கர்ணன்}.

உடனே, ஓ! பூமியின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, ஒருக்கணம் அந்தக் கணையை மனதில் நிறுத்தி (அதை அங்குக் கொண்டுவரும் பொருட்டு), வாசவன் {இந்திரன்} கர்ணனிடம், உனது காது குண்டலங்களையும், உனது உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசத்தையும் எனக்கு அளித்து, அதற்கு ஈடாகச் சில நிபந்தனைகளின் பேரில் இந்தக் கணையைப் பெற்றுக் கொள்! நான் போர்க்களத்தில் தைத்தியருடன் மோதும்போது, கலங்கடிக்கப்படாத இந்தக் கணை, எனது கைகளால் வீசப்பட்டு, எதிரிகளை நூற்றுக்கணக்கில் அழித்து, நோக்கம் நிறைவேறியதும் எனது கைக்கே திரும்பி வந்துவிடும். எனினும், உனது கையில் இந்தக் கணை, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உனது எதிரியில் பலமிக்க ஒரே ஒருவனைக் கொல்லும். அந்தச் சாதனையை அடைந்த பின்னர், அது உறுமிக்கொண்டும், சுடர்விட்டுக்கொண்டும் என்னிடம் திரும்பிவிடும்!” என்றான் {இந்திரன்}.

அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “நான் யாருக்கு அஞ்சி இருக்கிறேனோ, அந்தப் பெரும் கர்ஜனை செய்யும் தீ போன்று சூடான என்னுடைய ஓர் எதிரியைக் கடும்போரில் கொல்ல நான் விரும்புகிறேன்" என்றான். அதற்கு இந்திரன், “அப்படிக் கர்ஜிக்கும் பலம் நிறைந்த எதிரியை நீ போர்க்களத்தில் கொல்வாய். ஆனால், நீ கொல்ல நினைக்கும் அவன், சிறப்பு மிக்க ஒரு நபரால் பாதுகாக்கப்படுகிறான். "வெல்லப்படமுடியாத பன்றி {வராகம்}” என்றும், “புரிந்துகொள்ளப்பட முடியாத நாராயணன்" என்றும் {பஜ்ஞவராகன் என்றும் வெல்லப்படாத நாராயணன் என்றும்} வேதம் அறிந்தவர்களால் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன் அவனைப் பாதுகாத்து வருகிறான்!” என்றான். அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “அது அப்படியே இருந்தாலும், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, ஒரே ஒரு சக்திவாய்ந்த எதிரியை {நிச்சயம்} அழிக்கும் அந்த ஆயுதத்தை எனக்குக் கொடுப்பாயாக! எனது பங்குக்கு நான் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் எனது மேனியில் இருந்து அறுத்து உனக்குக் கொடுப்பேன். எனினும், இதனால் காயப்படும் எனது உடல் காணச்சகியாதது ஆகாமல் நீ அருள வேண்டும்!” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, நீ உண்மையை நோற்க {சத்தியத்தைப் பேண} உள்ளதால், உனது மேனி காணச்சகியாததாகவோ, வடு உடையதாகவோ ஆகாது. ஓ! பேச்சால் அருளப்பட்டவர்களில் சிறந்தவனே, ஓ! கர்ணா, நீ உனது தந்தையைப் போலவே சக்தியும் நிறமும் கொண்டிருப்பாய். கோபத்தில் பித்தேறி, உன்னிடம் வேறு ஆயுதங்கள் இருக்கும்போதோ, உனது உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாதபோதோ இந்தக் கணையை நீ ஏவினால், இது உன்மேலேயே விழும்" என்றான். கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, நீ சொல்வது போலவே, எனது உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும்போது மட்டுமே நான் இந்த வாசவி {இந்திரசக்தி} கணையை வீசுவேன்! இதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன்!” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுடர்விடும் கணையைப் பெற்றுக் கொண்ட கர்ணன், தனது இயற்கை கவசத்தை உரிக்கத் தொடங்கினான். தனது உடலை வெட்டிக் கொள்ளும் கர்ணனைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதக் கூட்டம் சிம்ம கர்ஜனை புரிந்தது. அப்படிக் கர்ணன் தனது கவசத்தை உரித்துக் கொண்டிருந்த போது முகத்தில் எந்தவித கடும் மாற்றத்தையும் {விகாரத்தையும்} காட்டிக் கொள்ளவில்லை. மனிதர்களில் வீரனான அவன் {கர்ணன்}, மீண்டும் மீண்டும் புன்னகைத்துக் கொண்டே ஆயுதம் கொண்டு தனது உடலை அறுத்துக் கொண்டிருந்த போது, தேவலோக பேரிகைகள் {#} முழங்கின; தெய்வீக மலர் மாரி பொழிந்தது. தனது சிறந்த கவசத்தைத் தனது மேனியில் இருந்து அறுத்தெடுத்த கர்ணன், இன்னும் {குருதி} சொட்டிக் கொண்டிருந்த அதை {கவசத்தை} வாசவனிடம் {இந்திரனிடம்} கொடுத்தான். தனது காதுகளில் இருந்து காதுகுண்டலங்களையும் அறுத்த அவன், அவற்றையும் இந்திரனிடம் கொடுத்தான்.

இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே அவன் கர்ணன் என்று அழைக்கப்பட்டான். கர்ணனை  இப்படி ஏமாற்றி அவனை உலகப் புகழடையச் செய்த சக்ரன், பாண்டு மகன்களின் காரியம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக எண்ணி புன்னகைத்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அவன் {கர்ணன்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான். கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் துயருற்று செருக்கிழந்தார்கள். மறுபுறம், பிருதையின் {குந்தியின்} மகன்கள், தேரோட்டியின் மகனுக்கு {கர்ணனுக்கு} ஏற்பட்ட அவல நிலையை அறிந்து, மகிழ்ச்சியால் நிறைந்தனர்.”

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பாண்டுவின் மகன்களான அவ்வீரர்கள் அந்நேரத்தில் எங்கிருந்தனர்? இந்த வரவேற்கத்தக்க செய்தியை அவர்கள் யார் மூலம் அறிந்தார்கள்? வனவாசத்தின் பனிரெண்டாவது ஆண்டுக் கழிந்ததும் அவர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சிறப்புமிக்கவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக!” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சைந்தவர்கள் தலைவனை {ஜெயத்ரதனை} வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட அவர்கள், காட்டில் தங்கள் வனவாசத்தின் வலி நிறைந்த காலத்தை முழுதும் கடத்தி, மார்க்கண்டேயர் உரைத்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் குறித்த பழங்கதைகளைக் கேட்ட பிறகு, மனிதர்களில் வீரர்களான அவர்கள் காம்யக வனத்தில் இருந்த தங்கள் ஆசிரமத்தில் இருந்து, தங்கள் அனைத்து தேர்களுடனும், தொண்டர்களுடனும், தேரோட்டிகள், பசுக்கள், தங்களைத் தொடர்ந்த குடிமக்கள் ஆகிய அனைவருடனும் புனிதமான துவைத வனத்திற்கு மீண்டும் சென்றனர்.

*********பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் முற்றிற்று*********


பதிவிரதா மஹாத்மியப் பர்வம் வனபர்வத்தின் பகுதி 297ழோடு முடிந்திருக்க வேண்டும். இந்த 308ம் பகுதியில் குண்டல ஹரணா பர்வம் முடிவடைய வேண்டும். குண்டலா ஹரணா பர்வம் என்பது வனபர்வத்தின் 298 முதல் 308 வரையுள்ள பகுதிகளைக் கொண்டதாகும். ஆனால் இவற்றைக் கங்குலி கையாளவில்லை. எனவே நாமும் கங்குலியின் வழியிலேயே செல்கிறோம்.

அடுத்து வரும் வனபர்வத்தின் 309ம் பகுதியில் இருந்து ஆரணேயப் பர்வம் ஆரம்பிக்கும்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, September 06, 2014

மந்தரை என்ற கூனி ! - வனபர்வம் பகுதி 274

Manthara called as hunchback!  | Vana Parva - Section 274 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது...


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னான்.

Friday, August 08, 2014

மஹிஷனைக் கொன்ற ஸ்கந்தன்! - வனபர்வம் பகுதி 230இ

Skanda killed Mahisha!  | Vana Parva - Section 230c | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; புறமுதுகிட்ட தேவர்களை உற்சாகமூட்டி மீண்டும் போரிடத்தூண்டிய இந்திரன்; தேவர்களின் கை ஓங்குவது; தானவப்படையில் மஹிஷன் முன்னணிக்கு வந்து தேவர்களைத் துன்புறுத்துவது; அசுரர்களின் கை ஓங்குவது; மஹிஷன் ருத்திரனிடமிருந்து தேரைப் பறிப்பது; பெரும் கோபம் கொண்ட ஸ்கந்தன் மஹிஷனைக் கொன்றது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன மகேஸ்வரன், அவனை {ஸ்கந்தனை} அரவணைத்து ஏற்று, பிறகு அவனை விடுவித்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அவன் {சிவன்} ஸ்கந்தனை விடுவித்த பிறகு, பல்வேறு வகையான சகுனங்கள் ஏற்பட்டு தேவர்களின் மன அமைதியைக் கெடுத்தன.

நட்சத்திரங்களுடன் கூடிய வானம் எரிந்து கொண்டிருந்தது. முழு அண்டமும் மொத்த குழப்பத்தில் இருந்தன. பூமி நடுங்கியபடி சடசடத்தது. முழு உலகமும் இருளில் மூழ்கியது. மதிக்கத்தக்க உமையுடன் இருந்த சங்கரன், தேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் இந்தப் பேரழிவைக் கண்டு மனக் கலக்கத்தை அடைந்தார்கள். அவர் இந்தக் குழப்ப நிலையில் இருந்த போது, அங்கே கடுமையும் பலமும் மிக்க ஒரு படை, பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு மேகத்திரள் போலவும், பாறைக்குவியல் போலவும் அவர்கள் முன்னிலையில் வந்தது.


பல்வேறு மொழிகளைப் பேசிய எண்ணிலடங்காதவர்களான அந்தப் பயங்கரமானவர்கள் {அசுரர்கள்}, சங்கரரும், தேவர்களும் நின்ற இடத்தை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் எல்லாப்புறங்களில் இருந்தும் கணைகளையும், பாறைக் குவியல்களையும், கதாயுதங்களையும், சதாக்னிகளையும், பிராசங்களையும், பரிகங்களையும் தேவர்கள் படையின் மீது வீசினர். தேவர்களின் படை, அங்கு ஏற்பட்ட கணை மழையாலும், பயங்கர ஆயுதங்களின் பொழிவாலும் மொத்தமாகக் குழம்பிய நிலையில் இருந்தது. அவர்களுடைய {தேவர்களுடைய} வீரர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களை அறுத்துப் போட்டு, அந்தத் தானவர்கள் பெரும் அழிவை ஏற்படுத்தினர். தேவர்களின் துருப்புகள் எதிரியை நோக்கிப் புறமுதுகிடப் போவது போலவே தெரிந்தது. அசுரர்களால் கொல்லப்பட்ட பல பேர், எரியும் கானகத்தில் விழும் பெரிய மரங்களைப் போல விழுந்தனர்.

அந்தத் தேவலோகவாசிகள் தங்கள் உடலில் இருந்து தலைகள் பிரிக்கப்பட்ட நிலையில் விழுந்தனர். அந்த அஞ்சத்தக்க போரில், தலைமை தாங்க யாருமில்லாமல், அவர்கள் {தேவர்கள்} எதிரிகளால் {அசுரர்களால்} கொல்லப்பட்டார்கள். பின்பு, வலனைக் கொன்றவனான தேவன் புரந்தரன் {இந்திரன்}, அசுரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு நிலையற்று இருக்கும் தேவர்களிடம், "வீரர்களே! அஞ்சாதீர்கள்! உங்கள் முயற்சிகள் வெல்லட்டும்! அனைவரும் ஆயுதங்களை எடுத்து ஆண்மையுடன் போராடுங்கள். இதற்கு மேல் நீங்கள் துரதிர்ஷ்டத்தை அடைய மாட்டீர்கள். பயங்கர உருவம் கொண்ட அந்தத் தீயவர்களை வீழ்த்துங்கள்" என்று சொன்னான்.

சக்ரனின் {இந்திரனின்} பேச்சைக் கேட்டுத் திரும்பிய தேவலோக வாசிகள், அவனது தலைமையில் திரண்டு, தானவர்களை நோக்கி விரைந்தனர். பிறகு முப்பத்து மூன்று கோடி தேவர்களும், பலமிக்க மருதர்களும், சத்யஸ்களும், வசுக்களும் பணிக்கு {போருக்குத்} திரும்பினர். அவர்கள் எய்த அம்புகள் தைத்தியர்கள், அவர்களது குதிரைகள் மற்றும் யானைகளின் உடலில் இருந்து பெரும்பகுதி குருதியை வெளியேற்றின. அவர்கள் அடித்த கணைகள் அனைத்தும், மலையின் பக்கவாட்டில் இருந்து விழும் பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் உடலைக் கடந்து தரையில் விழுந்தன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட தைத்தியர்கள் {அசுரர்கள்} சிதறிய மேகங்களைப் போலப் பக்கவாட்டில் விழுந்தனர்.

போர்க்களத்தில் தேவர்கள் தொடுத்த தாக்குதலாலும், பல ஆயுதங்களின் மழையாலும் தானவப்படை {அசுரப்படை} பெரும் துன்பத்துக்குள்ளாகி புறமுதுகிட்டது. பிறகு அனைத்து தேவர்களும் மகிழ்ச்சியாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்குவதற்குத் தயாராக இருந்தனர். தேவ இசைக்கருவிகள் பல்வேறு ஒலிகளில் இசைக்கப்பட்டன.. இரு தரப்புக்கும் அச்சத்தை ஏற்படுத்திய அந்த மோதல் இப்படியே நடந்தது. போர்க்களம் முழுவதும் இரத்தத்தாலும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் உடல்களாலும் நிறைந்திருந்தன. ஆனால் திடீரெனத் தேவர்களின் நிலை மீண்டும் மோசமானது. பயங்கரமான தானவர்கள் மீண்டும் தேவர்கள் படைக்குப் பெரும் அழிவைச் செய்தனர். அசுரர்களின் பேரிகைகளும் தூரிகைகளும் இசைத்தன. தானவத் தலைவர்கள் பயங்கரமாகப் போர் கர்ஜனை புரிந்தனர்.

பிறகு கைகளில் பெரும் பாறையைத் துக்கிக் கொண்டு ஒரு பலமிக்கத் தானவன், அந்தப் பயங்கரத் தைத்திய படையில் இருந்து வெளியே வந்தான். கருமேகங்களுக்குள்ளிருந்து வெளியே வரும் சூரியனைப் போல அவன் இருந்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்கள் அவன் அந்தப் பாறையைத் தூக்கி வீசப்போவதைக் கண்டு குழப்பத்தால் ஓடினர். ஆனால் அந்த மஹிஷன் {Mahisha} அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்கள் மீது அந்த மலையை வீசினான். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அப்படி விழுந்த அந்தப் பெரும் பாறையால் தேவர்கள் படையில் பத்தாயிரம் {10000} போர்வீரர்கள் தரையில் நசுங்கி, தங்கள் கடைசி மூச்சை விட்டனர். மஹிஷனின் இச்செயல், தேவர்களின் இதயங்களில் பயங்கரத்தை உண்டாக்கியது. அவன் {மஹிஷன்} தனது தானவத் தொண்டர்களுடன் சேர்ந்து, மான்கூட்டத்தின் மேல் விழும் சிங்கத்தைப் போல அவர்கள் {தேவர்கள்} மீது விழுந்தான்.

முன்னேறி வரும் மஹிஷனைக் கண்ட இந்திரனும் பிற தேவர்களும் தங்கள் ஆயுதங்களையும், நிறங்களையும் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடினர். இதனால் மிகவும் கோபமடைந்த மஹிஷன், ருத்திரனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறினான். அதன் {தேரின்} அருகே சென்ற அவன் {மஹிஷன்} அதன் கம்பத்தைத் {ஏர்க்காலை} தனது கைகளால் பற்றினான். கோபத்துடன் இருந்த மஹிஷன் ருத்திரனின் தேரைப் பிடித்த போது, முழு உலகமும் முனகியது. பெரும் முனிவர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். கருமேகங்களைப் போல இருந்த பெரும் உருவம் படைத்த தைத்தியர்கள், வெற்றி அவர்களுக்கு உறுதி என நினைத்து, மகிழ்ச்சியால் மூர்க்கத்தனம் கொண்டனர். அந்தப் புகழத்தக்க தேவன் (ருத்திரன்) அந்த அவல நிலையில் இருந்தாலும், போர்க்களத்தில் அந்த மஹிஷனைக் கொல்ல நினைக்கவில்லை; அந்தத் தீய மனம் கொண்ட அசுரனுக்கு {மஹிஷனுக்கு} மரண அடியை ஸ்கந்தன் கொடுப்பான் என்பதை நினைவுகூர்ந்தான்.

கடுமை நிறைந்த மஹிஷன், தான் அடைந்த பரிசு (ருத்திரனின் தேர்) குறித்துச் சிந்தித்துத் திருப்தியடைந்து, தேவர்களுக்குப் பெரும் அச்சத்தை ஊட்டி, தைத்தியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து பெரும் போர் கர்ஜனை செய்தான். தேவர்கள் பயத்துடன் இக்கட்டான நிலையில் இருந்த போது, கோபத்தால் எரிந்த பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, பிரம்மாண்டமான சூரியனைப் போல அவர்களை {தேவர்களை} மீட்க வந்தான். அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, ஒளிரும் செவ்வாடை பூண்டு, சிவப்பு மலர் மாலை தரித்திருந்தான். தங்கக் கவசம் பூண்டு, சிவப்பு நிறை குதிரைகளால் இழுக்கப்பட்ட சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த தங்க நிறத் தேரில் சென்றான். அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட தைத்திய படை {அசுரப்படை} திடீரெனப் போர்க்களத்தில் சோர்வடைந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, மஹிஷனை அழிப்பதற்காகப் பிரகாசமான சக்தியை வெளியிட்டான். அந்த ஏவுகணை மஹிஷனின் தலையை அறுத்தது. அவன் {மஹிஷன்} தரையில் விழுந்து இறந்து போனான். மலையைப் போன்ற அவனது தலை, தரையில் விழுந்து, பதினாறு யோஜனை நீளமுள்ள வட குருக்களின் {உத்தரகுரு} நாட்டு நுழைவாயிலை அடைத்துக் கொண்டிருந்தது. தற்போது அந்நாட்டு மக்கள் அந்த நுழைவாயில் வழியாக எளிதாகச் செல்கின்றனர்.

ஸ்கந்தன் மீண்டும் மீண்டும் தனது சக்தியை போர்க்களத்தில் வீசுவதையும், அது ஆயிரக்கணக்கான எதிரிப் படை வீரர்களைக் கொன்று, மீண்டும் அவனது கைகளுக்கே திரும்புவதையும் தேவர்களும் தானவர்களும் கண்டனர். மஹாசேனனின் {ஸ்கந்தனின்} கணைகளால் தாக்கப்பட்ட பயங்கரத் தானவர்கள் பெரும் எண்ணிக்கையில் கீழே விழுந்தபடியே இருந்தனர். பீதி அவர்களை ஆட்கொண்டது, ஸ்கந்தனின் தொண்டர்கள் அவர்களைக் கொல்லத் தொடங்கி, அவர்களை ஆயிரக்கணக்கில் தின்று, அவர்கள் இரத்தத்தைக் குடித்தனர். அவர்கள் குறுகிய காலத்திலேயே, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ, காட்டை அழிக்கும் நெருப்பைப் போலவோ, மேகங்களை விரட்டும் காற்றைப் போலவோ தானவர்களை அழித்து மகிழ்ந்தனர். இப்படியே புகழ்பெற்ற ஸ்கந்தன் தனது எதிரிகளை அழித்தான். அவனை {ஸ்கந்தனை} வாழ்த்த தேவர்கள் வந்தனர். தனது பங்குக்கு அவன் {ஸ்கந்தன்} மகேஸ்வரனுக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தினான். அந்தக் கிருத்திகையின் மகனின் {ஸ்கந்தனின்} பிரகாசம் சூரியனைப் போன்ற பிரம்மாண்டத்துடன் இருந்தது.

அந்த எதிரிகள், ஸ்கந்தனால் முழுமையாக வீழ்த்தப்பட்டு, மகேஸ்வரன் போர்க்களத்தை விட்டு அகன்ற போது, புரந்தரன் மஹாசேனனைத் {ஸ்கந்தனைத்} தழுவி கொண்டு, "பிரம்மனின் உதவியால் வெல்லப்பட முடியாதவனாக இருந்த இந்த மஹிஷனை நீ கொன்றுவிட்டாய். ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, தேவர்கள் அவனுக்கு {மஹிஷனுக்கு} புல்லைப் போல இருந்தனர். ஓ! பலமிக்க உறுப்புகள் {அங்கங்கள்} கொண்ட வீரா {ஸ்கந்தா}, தேவர்களுக்கு முள்ளாய் இருந்தவனை அகற்றிவிட்டாய். எங்களுடன் பகைமை பாராட்டி, முன்பு எங்களைத் துன்புறுத்திய, மஹிஷனின் வீரத்துக்கு இணையாக இருந்த, நூற்றுக்கணக்கான தானவர்களைப் போர்க்களத்தில் கொன்றாய். உனது தொண்டர்களும் நூற்றுக்கணக்கானவர்களை விழுங்கினர். ஓ! பலமிக்கவனே, உமையின் தலைவனைப் {சிவனைப்} போலவே நீயும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறாய். உனது முதல் சாதனையாக இந்த வெற்றி கொண்டாடப் படட்டும். மூவுலகங்களிலும் உனது புகழ் மங்காது. ஓ! வலுத்த கரங்கள் கொண்ட தேவனே {ஸ்கந்தா}, அனைத்து தேவர்களும் உனக்குத் தங்கள் பற்றுறுதியை {விசுவாசத்தை} அளிப்பார்கள்.

இப்படி மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பேசிய சச்சியின் கணவன் {இந்திரன்}, முக்கண் தேவனின் (சிவனின்) அனுமதியோடு, தேவர்கள் புடை சூழ தனது இருப்பிடத்திற்குச் சென்றான். ருத்திரன் பத்திரவடத்திற்குத் திரும்பினான். தேவர்களும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பினர். ருத்திரன், தேவர்களிடம், "நீங்கள் எனக்கு அளித்தது போலவே, ஸ்கந்தனுக்கும் உங்கள் பற்றுறுதியை {விசுவாசத்தை} அளிக்க வேண்டும்" என்றான். அக்னி தேவனின் அந்த மகன் {ஸ்கந்தன்}, ஒரே நாளில் தானவர்களைக் கொன்று, மூவுலகங்களையும் வென்று பெரும் முனிவர்களால் வழிபடப்பட்டான். ஸ்கந்தன் பிறப்பு சம்பந்தமான இந்தக் கதையை உரிய கவனத்துடன் படிக்கும் அந்தணன், இவ்வுலகில் பெரும் செழிப்பை அடைந்து, அதன் பிறகு {அடுத்த உலகில்} ஸ்கந்தனின் துணையை அடைகிறான்." என்றார் {மார்க்கண்டேயர்}. 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top