Agni deviated from the young birds | Adi Parva - Section 234 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 5)
சாரங்கப் பறவைக் குஞ்சுகள் அக்னியிடம் வேண்டுவது; அதில் இளையவனான துரோணனின் பாடலில் அக்னி மயங்குவது; அப்பறவைகளை எரிக்காமல் விடுவது…
ஜரிதாரி, "ஞானமுள்ள மனிதன் மரணத்தைக் குறித்த விழிப்புடன் இருப்பான். ஆகையால், அவன் மரணத்தைச் சந்திக்கும் அந்த நேரத்தில் எந்தத் துயரமும் கொள்வதில்லை. ஆனால் குழம்பிய ஆன்மா, விழிப்புடன் இருப்பதில்லை. ஆகையால் மரணத்தைச் சந்திக்கும்போது, வலியையும் துயரத்தையும் உணர்ந்து, முக்தி பெறுவதில்லை," என்றான்.
இரண்டாவது சகோதரனான சாரிசிரிகன், "நீ அமைதியும் புத்திசாலித்தனமும் கொண்டவன். நமது உயிருக்கு அச்சுறுத்தலான சமயம் வந்திருக்கிறது. பலரில் ஒருவரே ஞானமுள்ளவனாகவும் வீரமுள்ளவனாகவும் வரமுடியும். இது சந்தேகமில்லாதது," என்றான்.
மூன்றாவது சகோதரனான ஸ்தம்பமித்ரன், "மூத்த சகோதரனே காப்பாளன் என்று அழைக்கப்படுகிறான். மூத்த சகோதரனே (இளையவர்களை) ஆபத்திலிருந்து மீட்பவன். மூத்தவனே அவர்களைக் காப்பதில் தவறினால், இளையவர்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான்.
நான்காவதும் மிக இளையவனுமான துரோணன், "ஏழு நாவுகளையும் ஏழு வாய்களையும் கொண்ட கொடும் நெருப்பு தேவன் {அக்னி}, சுடர் விட்டு எரிந்து, தன் வழியில் எதிர்படும் அனைத்தையும் நக்கிக் கொண்டு, நமது வசிப்பிடத்தை நோக்கி வருகிறான்," என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்ட மந்தபாலரின் மகன்கள் ஒவ்வொருவரும் அக்னியிடம் அர்ப்பணிப்புடன் கூடிய புகழ்ச்சிப் பாடலைப் {eulogistic hymn துதி} பாடினார்கள். ஓ ஏகாதிபதியே அவர்களின் பாடலை நான் உரைக்கிறேன் கேள்."
"ஜரிதாரி, "ஓ நெருப்பே, நீயே காற்றின் ஆன்மா, பூமியின் தாவரங்களுக்கு உடலாக இருப்பவன் நீயே, ஓ சுக்ரா, உனக்கு நீர் {தண்ணீர்} காரணம் அதுபோல நீருக்கு நீயே காரணம்! ஓ பெரும் சக்தி கொண்டவனே, உனது சுடர்கள் சூரியனின் கதிர்களைப் போல தங்களைப் மேலும் கீழுமாக, முன்பும் பின்புமாக எல்லா பக்கங்களிலும் பெருக்கிக் கொள்கின்றன," என்றான்.
சாரிசிரிகன், "ஓ புகையைக் கொடியாகக் கொண்ட தேவனே {அக்னியே}, எங்கள் தாயை {ஜரிதையை} காணவில்லை, நாங்கள் எங்கள் தந்தையையும் அறிந்ததில்லை! எங்களுக்கு சிறகுகள் இன்னும் முளைக்கவில்லை. எங்களைக் காக்க யாருமில்லை. ஆகையால், ஓ அக்னியே, நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் எங்களைக் காப்பாற்று! ஓ அக்னியே, துயரத்தில் இருக்கும் எங்களை, உனது அதிர்ஷ்டமான உருவத்தாலும், உனது ஏழு சுடர்களாலும் காப்பாற்று! நாங்கள் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம். ஓ அக்னி நீயே (அண்டத்துக்கு) வெப்பத்தைக் கொடுப்பவன். ஓ தலைவா, உன்னைத்தவிர வேறு யாரும் சூரியனின் கதிர்களுக்கு வெப்பத்தைக் கொடுக்க முடியாது. சிறுவர்களாகவும் முனிவர்களாகவும் இருக்கும் எங்களைக் காப்பாற்று. ஓ ஹவ்யவாஹனா {Havyavaha} (வேள்வி நெய்யைச் சுமப்பவனே), வேறு வழியில் சென்று திருப்தி அடைவாயாக," என்றான்.
ஸ்தம்பமித்ரன், "ஓ அக்னியே, நீயே அனைத்தும்! இந்த முழுப் அண்டமும் உன்னால் படைக்கப்பட்டதே! அனைத்து உயிர்களையும் நீயே தாங்கி நிற்கிறாய்! முழு அண்டத்தையும் நீயே தாங்கி நிற்கிறாய்! வேள்வி நெய்யைச் சுமந்து செல்பவன் நீயே! அந்த அற்புதமான வேள்வி நெய்யும் நீயே! ஞானமுள்ளோர் உன்னை ஒருவனாகவும் (காரணகர்த்தாவாகவும்), பலராகவும் (விளைவுகளாகவும்) அறிந்துள்ளனர்! மூன்று உலகங்களையும் படைத்த நீயே, அவற்றை நேரம் வரும்போது உன்னைப் பெருக்கிக் கொண்டு அழிக்கிறாய். நீயே உற்பத்திக்கு காரணம், நீயே அண்டத்தில் கரைந்திருக்கும் சாறு!" என்றான்.
துரோணன், "ஓ அண்டத்தின் தலைவனே, பலத்தால் வளர்ந்து, உடல்களில் தங்கி, உயிரினங்கள் உண்ணும் உணவை நீயே செரிக்க வைக்கிறாய். ஆகையால் அனைத்தும் உன்னுள்ளேயே நிலைத்திருக்கின்றன. ஓ சுக்ரா, உனது வாயிலிருந்து வேதங்கள் வெளிவந்தன. நீயே சூரியனாக இருந்து உலகத்தின் நீரையும், உலகம் விளைவிக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறாய். அப்படிக் குடித்து, அதை மழையாக நீயே கொடுக்கிறாய். மழையாய் வந்து அனைத்தையும் வளர வைக்கிறாய். ஓ சுக்ரா, உன்னிடம் இருந்தே இந்தச் செடிகளும் அடர்த்தியான இலைகள் கொண்ட கொடிகளும் உண்டாகின. உன்னிடம் இருந்தே குளங்களும், தடாகங்களும், பெரும் சமுத்திரமும் அருளப்பட்டது! ஓ கடும் கதிர்கள் கொண்டவனே, எங்களது இந்த உடல் வருணனை {நீர்க்கடவுள்} நம்பி இருக்கிறது. எங்களால் உனது வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஆகையால், எங்களுக்கு அதிர்ஷ்டகரமான காப்பாளனாக இரு! எங்களை அழித்துவிடாதே! ஓ தாமிர நிறம் கொண்ட கண்களை உடையவனே, சிவந்த கழுத்து கொண்டவனே, நடக்கும் பாதையைக் கருப்பு நிறத்தால் குறிப்பவனே, தனது கரையில் இருக்கும் வீட்டை சமுத்திரம் காப்பது போல, நீ வேறு திசைக்குத் திரும்பி எங்களை காப்பாற்று!" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரம்மத்தை உச்சரிக்கும் துரோணனால் இப்படிக் கேட்டக்கொள்ளப்பட்ட அக்னி, தான் கேட்டதில் {புகழப்பட்டதில்} மிகுந்த திருப்தி கொண்டு, தான் மந்தபாலருக்கு அளித்த உறுதியையும் நினைவு கூர்ந்து அவனிடம், "ஓ துரோணரே! நீர் முனிவர். நீர் சொன்னது அனைத்தும் பிரம்மம் (வேத உண்மை). நான் உங்களை இன்பமடைய வைப்பேன். அஞ்சாதீர்! உண்மையில், மந்தபாலர், நான் இக்கானகத்தை உட்கொள்ளும் போது, தனது மகன்களைக் காக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் {மந்தபாலர்} என்னிடம் பேசிய பேச்சுகளும், உமது பேச்சும் எனக்கு நிறை செய்தன. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். ஓ அந்தணர்களில் சிறந்தவரே, நான் உமது பாடலால் மிகுந்த திருப்தி அடைந்தேன். ஓ அந்தணரே, நீர் அருளப்பட்டிரும்!" என்றான் {அக்னி}.
துரோணன், "ஓ சுக்ரா, இந்தப் பூனைகள் தினமும் எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. ஓ ஹுதாசனா; அவர்களை, அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உட்கொள்," என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அக்னி அந்தச் சாரங்கப் பறவைகளிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, தனது நோக்கத்தைச் சொன்னான். மேலும், ஓ ஜனமேஜயா, அவன் பலத்தால் வளர்ந்து, அந்தக் காண்ட வனத்தை மேலும் எரிக்க ஆரம்பித்தான்.
![]() |
![]() |
![]() |