Showing posts with label காலவர். Show all posts
Showing posts with label காலவர். Show all posts

Thursday, October 04, 2018

தற்கட்டுப்பாடு அற்றவனுக்கான நன்மையும் சிறப்பும்! - சாந்திபர்வம் பகுதி – 288

Beneficials and excellence for non self-restraints! | Shanti-Parva-Section-288 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 115)


பதிவின் சுருக்கம் : ஆன்ம ஞானத்தைத் தேடாத மனிதர்கள் எவ்வழியில் மேன்மையடையலாம், நன்மையும், சிறப்பும் அடையலாம் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, சாத்திரங்களின் உண்மைகளை அறியாதவனும், எப்போதும் ஐயத்தில் இருப்பவனும், தற்கட்டுப்பாட்டையும், ஆன்ம ஞானத்தை நோக்கமாகக் கொண்ட பிற பயிற்சிகளையும் தவிர்ப்பவனுமான ஒருவனுக்கு எது நன்மை என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)

Tuesday, June 09, 2015

தௌஹித்ரர்களுடன் யயாதி! - உத்யோக பர்வம் பகுதி 121

Yayati with his daughters sons ! | Udyoga Parva - Section 121 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –50)

பதிவின் சுருக்கம் : தேவ தூதன் ஒருவன் யயாதியை சொர்க்கத்தில் இருந்து தள்ளவிட வருவது; கீழே விழுந்த யயாதி தங்கள் மகள் வழி பேரர்களுக்கு மத்தியில் விழுவது; பேரர்களும், மகளும், காலவரும் தங்கள் புண்ணியங்களை யயாதிக்குக் கொடுக்க முன் வந்தது ...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தனது இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, தனது இருக்கையில் இருந்து தள்ளப்பட்டு, அச்சத்தால் இதயம் நடுங்கி, வருத்தத்தால் எரிந்து, தனது மாலைகளின் ஒளி மங்கி, அறிவு மறைக்கப்பட்டு, மணிமுடியும் {கிரீடமும்} தோள்வளைகளும் நழுவி, தலைச்சுற்றலுடன், ஆபரணங்களும் அங்கிகளும் இழந்து, அங்கங்கள் அனைத்தும் தளர்ந்து, அடையாளம் காணமுடியாதபடி மாறினான் யயாதி. சில நேரங்களில் மற்ற சொர்க்கவாசிகளைக் காணாது, விரக்தியில் நிரம்பி, புத்தி சூன்யமாகிப் போன மன்னன் யயாதி, பூமியை நோக்கித் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தான்.


அந்த மன்னன் {யயாதி} விழுவதற்கு முன்னர், அவன் தனக்குள், "நான் ஊக்கப்படுத்திய எந்த மங்கலமற்ற, பாவம் நிறைந்த எண்ணத்தின் விளைவாக, இப்படி என் இடத்தில் இருந்து நான் வீசி எறியப்படுகிறேன்?" என்று நினைத்தான். அங்கே இருந்த மன்னர்கள், சித்தர்கள் மற்றும் அப்சரஸ்கள் அனைவரும் யயாதி தனது நிலையை இழந்து கீழே விழுவதைக் கண்டு சிரித்தனர். ஓ! மன்னா {துரியோதனா}, விரைவில், தகுதி இழந்தவர்களை வீசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் தேவர்கள் மன்னனின் {இந்திரனின்} கட்டளையின் பேரில் அங்கே வந்தான்.

அங்கே வந்த அவன் யயாதியிடம், "செருக்கால் அதீதமாகப் போதையுண்டிருக்கும் உன்னால் அலட்சியம் செய்யப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்த உனது செருக்கின் விளைவால், சொர்க்கத்தில் இனியும் உனக்கு இடமில்லை. ஓ! மன்னனின் மகனே {நகுஷனின் மகனே யயாதி}, இங்கே வசிக்க நீ தகுந்தவனில்லை. நீ இங்கே அங்கீகரிக்கப்பட்டவன் இல்லை. போய்க் கீழே விழுவாயாக" என்றான். தேவ தூதன் இப்படிச் சொன்னதும், அந்த நகுஷனின் மகன் மூன்று முறை மீண்டும் மீண்டும், "விழுந்தால், நீதிமான்கள் மத்தியில் நான் விழக்கடவேன்" என்று கேட்டுக் கொண்டான். இதைச் சொன்னவனும், தங்கள் செயல்களால் உயர்ந்த பகுதிகளை வென்ற மனிதர்களில் முதன்மையானவனுமான அவன் {யயாதி}, எந்தக் குறிப்பிட்ட பகுதியில் விழுவது என்பது குறித்து நினைக்கத் தொடங்கினான்.

அதே வேளையில், வலிமைமிக்க நான்கு மன்னர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், உசீநரனின் மகனான சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் நைமிஷ வனத்தில் கூடியிருப்பதைக் கண்டு, அவர்களுக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான்., தேவர்கள் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்யும் வகையில், வாஜபேயம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி ஒன்றைச் செய்வதில் அந்த ஏகாதிபதிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேள்விப்பீடத்தில் இருந்து எழும் புகை சொர்க்கத்தின் வாயில்களையே எட்டின. அப்படி எழுந்த புகையானது, பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் ஒரு நதியைப் போலத் தெரிந்தது. மேலும் அது வானத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கும் புனித ஓடையான கங்கையைப் போல இருந்தது. அந்தப் புகையை நுகர்ந்தபடி, அதை வழிகாட்டியாகக் கொண்டு, அண்டத்தின் தலைவனான அந்த யயாதி, பூமிக்கு இறங்கி வந்தான். பெரும் அழகு படைத்தவர்களும், வேள்வி செய்வோரில் முதன்மையானவர்களும், உண்மையில் தனது சொந்த உறவினர்களும், நான்கு திசைகளில் லோகபாலகர்கள் போல இருந்தவர்களும், நான்கு பெரும் வேள்வி நெருப்புகள் போல இருந்தவர்களுமான ஆட்சியாளர்களில் சிம்மங்கள் போன்ற அந்த நால்வருக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான். தனது தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் இழந்ததன் விளைவாக அந்த அரசமுனியான யயாதி அவர்களுக்கு மத்தியில் இப்படியே விழுந்தான்.

சுடர்மிகும் அழகுடன் இருந்த அவனைக் {யயாதியைக்} கண்ட அந்த மன்னர்கள் அவனிடம் {யயாதியிடம்}, "நீர் யார்? எந்த இனம், நாடு அல்லது நகரத்தைச் சேர்ந்தவர் நீர்? நீர் ஒரு யக்ஷரா? தேவரா? கந்தர்வரா? அல்லது ஒரு ராட்சசரா? உம்மைக் காண மனிதனைப் போல இல்லையே. நீர் கருத்தில் கொண்டுள்ள நோக்கம் என்ன?" என்று கேட்டனர். இப்படிக் கேட்கப்பட்ட யயாதி, "நான் அரச முனியான யயாதி ஆவேன். புண்ணியம் தீர்ந்ததன் விளைவாகச் சொர்க்கத்தில் இருந்து விழுந்தேன். நீதிமான்களுக்கு மத்தியில் நான் விழ விரும்பியதால், உங்களுக்கு மத்தியில் விழுகிறேன்" என்றான் {யயாதி}.

அதற்கு அந்த மன்னர்கள் {யயாதியிடம்}, "ஓ! அனைவரிலும் முதன்மையானவரே, உமது அந்த விருப்பம் நிறைவேறட்டும். எங்கள் அனைவரின் புண்ணியங்களையும், நாங்கள் செய்த வேள்விகள் அனைத்தின் கனிகளையும் நீர் ஏற்றுக் கொள்ளும்" என்றனர். அதற்கு யயாதி, “நான், தானத்தை ஏற்கத் தகுந்த பிராமணன் அல்ல. மறுபுறம், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். பிறர் புண்ணியங்களைக் குறைக்கும் நோக்கம் எனது இதயத்துக்கு இல்லை" என்றான்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த நேரத்தில், {விலங்கினம் போல} நோக்கமற்ற தனது உலவல்களின் போது அங்கே மாதவி வர நேர்ந்தது. அவளை {மாதவியைக்} கண்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, அவளிடம், "நீ இங்கே வந்த நோக்கம் என்ன? உனது எந்தக் கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்? ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவளே, நாங்கள் அனைவரும் உனது மகன்கள் ஆதலால், எங்களுக்குக் கட்டளையிடுவதே உனக்குத் தகும்" என்றனர்.

அவர்களது வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்த மாதவி, தனது தந்தையான யயாதியை அணுகி, அவனை மரியாதையாக வணங்கினாள். தவத்துறவுகளில் ஈடுபட்டு வந்த அந்த மங்கை {மாதவி}, தனது மகன்கள் அனைவரின் தலைகளையும் தொட்டபடி, தனது தந்தையிடம் {யயாதியிடம்}, "இவர்கள் அனைவரும் எனது மகன்களானதால், ஓ! மன்னர்களின் மன்னா {யயாதியே}, இவர்கள் உமது மகளின் மகன்களாவர் {தௌஹித்ரர்கள் ஆவார்கள்}. இவர்கள் உமக்கு அந்நியரில்லை. இவர்கள் உம்மைக் காப்பார்கள். இந்த நடைமுறை புதியதல்ல, இதன் தோற்றம் பழங்காலத்திற்குச் சொந்தமானது. ஓ! மன்னா, மானின் நடத்தையைக் கைக்கொண்டு வனத்தில் வாழும் நான் உமது மகளான மாதவி ஆவேன். நானும் புண்ணியம் ஈட்டியிருக்கிறேன். நீர் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளும். ஓ! மன்னா, தங்கள் வாரிசுகளால் ஈட்டப்பட்ட தகுதிகளின் {புண்ணியங்களின்} ஒரு பகுதியை அனுபவிக்க மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளதாலேயே, அவர்கள் தங்கள் மகள்கள் மகனைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஓ! மன்னா, இதுவே உமது வழக்கிலும் (காலவரிடம் நீர் என்னைக் கொடுக்கும்போது) நடந்தது" என்றாள் {மாதவி}.

தங்கள் தாயின் {தாய் மாதவியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, தங்கள் தாய்வழி பாட்டனையும் வணங்கி, அதே வார்த்தைகளைச் சத்தமாக, ஒப்பற்ற வகையில், இனிய குரலில் உரைத்தனர். சொர்க்கத்தில் இருந்து விழுந்த தங்கள் தாய்வழி பாட்டனைக் காக்க அவர்கள் உரைத்த வார்த்தைகள் உலகம் முழுதும் எதிரொலித்தன. அந்நேரத்தில் அங்கே வந்து, காலவரும் யயாதியிடம், "எனது தவத்துறவின் {புண்ணியத்தில்} எட்டில் ஒரு பங்கை ஏற்று, சொர்க்கத்திற்கு நீ உயர்வாயாக" என்றார் {காலவர்}. 


Saturday, June 06, 2015

கடனைத் தீர்த்த காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 119

Galava payed his debt! | Udyoga Parva - Section 119 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –48)

பதிவின் சுருக்கம் : காலவரைக் கண்ட கருடன், மேலும் இருநூறு குதிரைகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்று தடுத்தது; குதிரைகள் ஏன் கிடைக்காது என்பதற்கு ஒரு பழங்காலக் கதையைக் கருடன் சொன்னது; காலவர் மாதவியை விஸ்வாமித்ரருக்கு அளிப்பது; விஸ்வாமித்ரர் மாதவியிடம் அஷ்டகனைப் பெறுவது; கடன் தீர்ந்த காலவர் மாதவியை அவளது தந்தையிடம் திரும்ப ஒப்படைப்பது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "காலவரைக் கண்ட வினதையின் மகன் {கருடன்} புன்னகையுடன் அவரிடம் {காலவரிடம்}, "ஓ! அந்தணா, நற்பேறாலேயே, நான் உன்னை வெற்றிகரமானவனாகக் காண்கிறேன்" என்றான். எனினும், கருடன் பேசிய வார்த்தைகளைக் கேட்ட காலவர், காரியத்தின் நான்காவது பகுதி இன்னும் நிறைவேறாமல் இருப்பதை அவனுக்கு {கருடனுகுச்} சுட்டிக் காட்டினார்.

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான கருடன், காலவரிடம், "(மீதம் உள்ள இருநூறு குதிரைகளை அடைய) எந்த முயற்சியும் செய்யாதே. ஏனெனில் அதில் நீ வெல்ல மாட்டாய். பழங்காலத்தில், கான்யகுப்ஜ நாட்டில் காதியின் மகளாகிய சத்தியவதியைத் தனது மனைவியாக்கிக் கொள்ள {விரும்பிய} ரிசீகர் {தனது விருப்பத்தைக் காதியிடம்} கேட்டார். ஓ! காலவா, அதன் பேரில், காதி அந்த முனிவரிடம் {ரிசீகரிடம்}, "ஓ! புனிதமானவரே {ரிசீகரே}, சந்திரப் பிரகாசம் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஆயிரம் குதிரைகள் எனக்கு {சுல்கமாக} வழங்கப்படட்டும்" என்று கேட்டான் {காதி}. இப்படிக் கேட்கப்பட்ட ரிசீகர் {காதியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். பிறகு வருணனின் உறைவிடத்தில் உள்ள மாபெரும் குதிரைகள் அங்காடிக்குச் (அஸ்வதீர்த்தத்திற்குச்) சென்ற அந்த முனிவர் {ரிசீகர்}, அவன் {காதி} கேட்டதை அடைந்து, அவற்றை அந்த மன்னனிடம் {காதியிடம்} கொடுத்தார்.புண்டரீகம் என்ற பெயர் கொண்ட வேள்வி ஒன்றை நடத்திய அந்த ஏகாதிபதி {காதி}, அக்குதிரைகளை (தக்ஷிணையாக) அந்தணர்களுக்குக் கொடுத்துவிட்டான். நீ ஏற்கனவே கோரிக்கை வைத்த அந்த மூன்று மன்னர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு இருநூறு {200} குதிரைகளை அந்த அந்தணர்களிடம் இருந்து கொள்முதல் செய்தார்கள். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, மீதம் நானூறும் {400-நானூறு குதிரைகளும்}, ஆற்றைக் கடக்கும்போது விதஸ்தையால் [1] எடுத்துக் கொள்ளப்பட்டன.

[1] //இந்தச் சுலோகத்தின் பிற்பாதி பலவாறாகப் படிக்கப்படுகிறது. "நியாமனனி சந்தரே ஹ்ருதன்யாசன் விதஸ்தயா {Niyamanani Santare Hritanyasan Vitastaya}" என்பதே சரியான உரை என எனக்குத் தோன்றுகிறது. "கடந்து சென்ற போது, விதஸ்தை (நதியால்) இழுத்துக் கொள்ளப்பட்டன" என்பதே அதன் பொருளாகும். விதஸ்தை, பஞ்சாபின் ஐந்து நதிகளில் ஒன்றாகும்.// என்கிறார் கங்குலி.

எனவே, ஓ! காலவா, பெறமுடியாத ஒன்றை, உன்னால் பெற முடியாது. ஓ! அறம்சார்ந்தவனே {காலவா}, நீ ஏற்கனவே அடைந்திருக்கும் அறுநூறு {600} குதிரைகளையும், மேலும், இருநூறு {200} குதிரைகளுக்கு இணையாக இந்தக் கன்னிகையையும் விஸ்வாமித்ரருக்குக் கொடுத்துவிடு. ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, பிறகு நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு வெற்றியால் மகுடம் சூட்டப்படுவாய்" என்றான் {கருடன்}.

பிறகு காலவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, குதிரைகளையும், அந்தக் கன்னிகையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கருடனையும் தனது துணைக்கு அழைத்துக் கொண்டு விஸ்வாமித்ரரிடம் சென்றார். அவரது {விஸ்வாமித்ரரின்} முன்னிலைக்கு வந்த காலவர், "நீர் கோரிய வகையில் அறுநூறு {600} குதிரைகள் இங்கு இருக்கின்றன. மீதம் உள்ள இருநூறுக்காக {200} இந்தக் கன்னிகையை நான் காணிக்கையாக்குகிறேன். இவை அனைத்தும் உம்மால் ஏற்கப்படட்டும். இந்தக் கன்னிகையிடம் மூன்று அரச முனிகள் அறம்சார்ந்த மகன்கள் மூவரைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவதும், அனைவருக்கும் முதன்மையானவனுமான மகனை நீர் இவளிடம் பெறுவீராக. இப்படியே எண்ணூறு {800} குதிரைகள் என்ற எண்ணிக்கை நிறைவடைந்ததாக உம்மால் கருதப்படட்டும். நானும் கடனில் இருந்து விடுபட்டு, நான் விரும்பும் தவ நோன்புகளைப் பயிலச் செல்ல அனுமதிப்பீராக" என்றார் {காலவர்}.

அந்தப் பறவை {கருடன்} மற்றும் உயர்ந்த அழகுடைய கன்னிகை {மாதவி} ஆகியோரின் துணையுடன் இருக்கும் காலவரைக் கண்ட விஸ்வாமித்ரர், "ஓ! காலவா, நீ ஏன் முன்பே இந்த மங்கையை எனக்குக் கொடுக்கவில்லை? எனது குலத்தை விருத்திச் செய்யும் நான்கு மகன்கள் எனக்கு மட்டுமே இருந்திருப்பார்களே. இவளிடம் ஒரு மகனைப் பெறுவதற்காக நான் இந்த உனது கன்னிகையை {மாதவியை} ஏற்கிறேன். குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றை எனது துறவில்லத்தில் {ஆசிரமத்தில்} மேய விடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இதைச் சொன்ன பெரும் காந்திபடைத்த விஸ்வாமித்ரர் அவளுடன் {மாதவியுடன்} தனது நேரத்தை இன்பமாகக் கழிக்கத் தொடங்கினார். மாதவி, அஷ்டகன் என்ற பெயரில் அவருக்கு {விஸ்வாமித்திரருக்கு} ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அந்த மகன் பிறந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்ரர் அறம் பொருள் ஆகிய இரண்டையும் உரைத்து, அறுநூறு {600} குதிரைகளையும் அவனிடமே {அஷ்டகனிடமே} கொடுத்தார்.

பிறகு, சோமனின் {சந்திரனின்} நகரத்தைப் போன்ற பிரகாசமிக்க நகரத்திற்கு அஷ்டகன் சென்றான். குசிகரின் மகனான விஸ்வாமித்ரர் அந்தக் காரிகையைத் {மாதவியைத்} தனது சீடனிடம் {காலவரிடம்} ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குச் சென்றுவிட்டார். தனது ஆசான் கோரிய கட்டணத்தைக் கொடுப்பதில் வென்ற காலவரும், அவரது நண்பனான சுபர்ணனுடன் {கருடனுடன்} சேர்ந்து மகிழ்ச்சிகரமான இதயத்துடன் அந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்}, "மிகுந்த ஈகை குணம் உள்ள ஒருவனையும், மிகுந்த வீரம் கொண்டவன் ஒருவனையும், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒருவனையும், பெரும் வேள்விகளைச் செய்யும் ஒருவனையும் நீ மகன்களாகப் பெற்றாய். ஓ! அழகிய கன்னிகையே {மாதவி}, நீ இந்த மகன்களால், உனது தந்தையை மட்டுமல்ல, நான்கு மன்னர்களையும், என்னையும் காத்திருக்கிறாய். ஓ! கொடியிடையாளே, இப்போது நீ செல்லலாம்" என்றார். இதைச் சொன்ன காலவர், பாம்புகளை உண்ணும் கருடனுக்கு விடைகொடுத்தனுப்பி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவளது தந்தையிடம் {யயாதியிடம்} ஒப்படைத்துவிட்டு காட்டுச் சென்றுவிட்டார்" என்றார் {நாரதர்}.

Friday, June 05, 2015

மன்னன் சிபியின் பிறப்பு! - உத்யோக பர்வம் பகுதி 118

The Birth of King Sivi! | Udyoga Parva - Section 118 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –47)

பதிவின் சுருக்கம் : போஜர்களின் மன்னனா உசீநரனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு நானூறு குதிரைகளை வரதட்சணையாகத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வன் மற்றும் திவோதாசன் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று உசீநரன் சொல்வது; காலவர் மாதவியை உசீநரனுக்கு அளிப்பது; உசீநரனுக்குச் சிபி என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து உசீநரனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தனது உறுதிமொழியில் பற்றுறுதியுடன் இருந்த ஒப்பற்ற மாதவி, அந்தச் செழிப்பைக் கைவிட்டு மீண்டும் கன்னித்தன்மையை அடைந்து, அந்தணரான காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். தனது சொந்த காரியத்தைச் சாதிக்க மனதில் உறுதி கொண்ட காலவர், அடுத்து என்ன செய்வது என்பதைச் சிந்தித்து மன்னன் உசீநரனுக்குக் காத்திருப்பதற்காகப் போஜர்களின் நகரத்திற்குச் சென்றான்.


கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட அந்த மன்னனின் {உசீநரனின்} முன்னிலையை அடைந்ததும், காலவர் அவனிடம் {உசிநரனிடம்}, "இந்தக் கன்னிகை உனக்கு அரச மகன்கள் இருவரைப் பெற்றுத் தருவாள். ஓ! மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவனே, அவளுக்கான {மாதவிக்கான} வரதட்சனையாக {சுல்கமாக}, சந்தோரப் பிரகாசம் கொண்டவையும், கரிய நிறம் கொண்ட ஒரு காதைக் கொண்டவையுமான நானூறு {400} குதிரைகளை நீ தர வேண்டும். குதிரைகளை அடைய வேண்டி நான் செய்யும் இந்த முயற்சியும் எனது ஆசானுக்காகவே {விஸ்வாமித்திரருக்காகவே}, மற்றபடி அவற்றைக் கொண்டு எனக்கு வேறு காரியம் எதுவுமில்லை.

(எனது சொற்களை) நீ ஏற்கமுடியுமென்றால், எந்தத் தயக்கமும் இன்றி நான் உனக்குச் சொல்வதைச் செய்வாயாக. ஓ! அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ! மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ! அரசமுனியே {உசீநரா}, வாரிசுகளின் வடிவில் கனியைப் பெற்ற ஒருவன், சொர்க்கத்தில் இருந்து விழுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், பிள்ளைகள் அற்றவர்கள் செல்லும் அச்சங்கள் நிறைந்த நரகத்திற்குச் செல்லத் தேவையில்லை.

இவற்றையும், காலவர் சொன்ன பிற வார்த்தைகளையும் கேட்ட மன்னன் உசீநரன், அவரிடம் {காலவரிடம்}, "ஓ! காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நீர் குறிப்பட்ட வகையில் என்னிடம் இருநூறு {200} குதிரைகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வகைகளில், என் ஆட்சிப்பகுதியில் உலவும் ஆயிரக்கணக்கானவற்றை {ஆயிரக்கணக்கான குதிரைகளை} நான் பெற்றிருக்கிறேன்.

ஓ! காலவரே, ஹர்யஸ்வன், திவோதாசன் போன்ற பிறர் சொன்னது போன்ற பாதையிலே நடந்து நானும் இவளிடம் {மாதவியிடம்} ஒரு மகனை மட்டுமே பெறுவேன். வரதட்சணை {சுல்கம்} குறித்த இக்காரியத்தில் நானும் அவர்களைப் போலவே செயல்படுவேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, எனது செல்வங்கள் எனது வசதிகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அல்ல, எனது நகரத்திலும் நாட்டிலும் வசிக்கும் குடிமக்களுக்காகவே இருக்கிறது.

ஓ! அறம்சார்ந்தவரே {காலவரே}, தனது சொந்த இன்பங்களுக்காக, பிறர் செல்வத்தைக் கொடுக்கும் மன்னன் அறத்தையோ, புகழையோ ஈட்டவே முடியாது. தெய்வீகப் பெண் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் இந்தக் கன்னிகை எனக்குக் கொடுக்கப்படட்டும். ஒரு மகனைப் பெறுவதற்காக மட்டுமே நான் இவளை {மாதவியை} ஏற்பேன்" என்றான் {உசீநரன்}.

இவற்றையும், உசீநரன் பேசிய பிற வார்த்தைகளையும் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவரான காலவர், அந்த ஏகாதிபதியை {உசீநரனை} மெச்சியபடி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவனுக்குக் {உசீநரனுக்கு} கொடுத்தான். அந்தக் காரிகையை உசீநரன் ஏற்கும்படி செய்த காலவர் காடுகளுக்குள் சென்றுவிட்டார். (தனது சொந்த செயல்களால் வென்ற) செழிப்பை அனுபவிக்கும் நீதிமிக்க ஒரு மனிதனைப் போல, உசீநரன் மாதவியுடன் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலுள்ள நீரூற்றுகளிலும், நதிகளின் நீர்வீழ்ச்சிகளிலும், மாளிகைகளிலும், இனிமையான அறைகளிலும் பலவண்ண வேறுபாடுகள் கொண்ட தோட்டங்களிலும், காடுகளிலும், இனிமையான இடங்களிலும், வீடுகளின் மேல்தளங்களிலும் அந்தக் காரிகையுடன் விளையாடி இன்புற்றிருந்தான்.

உரிய நேரத்தில், காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அவனுக்கு {உசீநரனுக்கு} ஒரு மகன் பிறந்தான். பின்னாட்களில் அவன் சிபி என்ற பெயரால் சிறந்த மன்னனாகக் கொண்டாடப்பட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மகனின் பிறப்புக்குப் பிறகு, அந்தணரான காலவர் உசீநரனிடம் வந்து, அந்தக் கன்னிகையைத் {மாதவியைத்} திரும்பப் பெற்றுக் கொண்டு, வினதையின் மகனைக் {கருடனைக்} காணச் சென்றார்" என்றார் {நாரதர்}.

Thursday, June 04, 2015

புகழ்பெற்ற காதல் இணைகள்! - உத்யோக பர்வம் பகுதி 117

Famous Love Couples! | Udyoga Parva - Section 117 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –46)

பதிவின் சுருக்கம் : காலவர் காசியின் ஆட்சியாளன் திவோதாசனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு குதிரைகளைத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வனைப் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று திவோதாசன் சொல்வது; காலவர் மாதவியைத் திவோதாசனுக்கு அளிப்பது; புராணங்களில் உள்ள புகழ்பெற்ற தம்பதியினரின் பெயர்ப்பட்டியலை நாரதர் உரைப்பது; திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து திவோதாசனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு மாதவியிடம் பேசிய காலவர், "காசியின் ஆட்சியாளன் ஓர் ஒப்பற்ற மன்னனாவான். அவன் திவோதாசன் என்ற பெயரில் அறியப்படுகிறான். பெரும் ஆற்றலும், வலிமைமிக்க நாட்டையும் கொண்ட அவன் {திவோதாசன்}, பீமசேனனின் மகனாவான். ஓ! அருளப்பட்ட மங்கையே {மாதவி}, நாம் இப்போது அவனிடம்தான் {திவோதாசனிடம்} செல்கிறோம். மெதுவாக என்னைத் தொடர்ந்து வருவாயாக! வருந்தாதே. மனிதர்களின் ஆட்சியாளனான அவன் {திவோதாசன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனாவான்" என்றார் {காலவர்}.
நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "அந்த முனிவர் {காலவர்}, அந்த மன்னனின் {திவோதாசனின்} முன்னிலையில் நின்ற போது, பின்னவனால் {திவோதாசனால்} உரிய விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்டார். பிறகு, காலவர், அந்த ஏகாதிபதி {திவோதாசன்} ஒரு குழந்தையைப் பெறும் பொருட்டு, அவனைத் தூண்டத் தொடங்கினார். இப்படிச் சொல்லப்பட்ட திவோதாசன் {காலவரிடம்}, "இவை யாவையும் முன்பே நான் கேள்விப்பட்டேன். ஓ! அந்தணரே, நீர் அதிகம் பேசத் தேவையில்லை. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நான் இக்காரியம் குறித்துக் கேள்விப்பட்டதும் எனது இதயம் அதிலேயே நிலைத்துவிட்டது. மற்ற மன்னர்கள் அனைவரையும் கடந்து நீர் என்னை அடைந்திருப்பது எனக்குக் கிடைத்த பெரிய மரியாதையின் அடையாளமே. உமது நோக்கம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. குதிரைகளின் காரியத்தில், ஓ! காலவரே, எனது செல்வமும் மன்னன் ஹர்யஸ்வனைப் போன்றதுதான் {என்னிடமும் இருநூறு {200} குதிரைகள்தான் உள்ளன}. எனவே, நான் இந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்} ஓர் அரச மகனை மட்டுமே பெறுவேன்" என்றான் {திவோதாசன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் அந்த மங்கையை {மாதவியை} அந்த மன்னனுக்கு {திவோதாசனுக்கு} அளித்தார்.

பிறகு அந்த அரசமுனியும் {திவோதாசனும்},
பிரபாவதியுடன் சூரியனையைப் போலவோ,
சுவாஹாவுடன் அக்னியைப் போலவோ,
சச்சியுடன் {இந்திராணியுடன்} வாசவனைப் {இந்திரனைப்} போலவோ, ரோகிணியுடன் சந்திரனைப் போலவோ,
ஊர்மிளையுடன் {தூமோர்ணையுடன்} யமனைப் போலவோ,
கௌரியுடன் வருணனைப் போலவோ,
ரித்தியுடன் குபேரனைப் போலவோ,
லட்சுமியுடன் நாராயணனைப் போலவோ,
ஜானவியுடன் {கங்கையுடன்} சாகரனைப் {பெருங்கடலைப்} போலவோ, ருத்திராணியுடன் ருத்திரனைப் போலவோ,
சரஸ்வதியுடன் {வேதியினியுடன்} பெரும்பாட்டனைப் {பிரம்மாவைப்} போலவோ,
அத்ரிசியந்தியுடன் வசிஷ்டரின் மகனான சக்திரியைப் போலவோ,
(அக்ஷமாலை என்றும் அழைக்கப்பட்ட) அருந்ததியுடன் வசிஷ்டரைப் போலவோ,
சுகன்யையுடன் சியவனனைப் போலவோ,
சந்தியையுடன் புலஸ்தியரைப் போலவோ,
விதர்ப்ப இளவரசியான லோபாமுத்ரையுடன் அகஸ்தியரைப் போலவோ,
சாவித்ரியுடன் சத்யவானைப் போலவோ,
புலோமையுடன் பிருகுவைப் போலவோ,
அதிதியுடன் காசியபரைப் போலவோ,
ரேணுகையுடன் ரிசீகரின் மகனான ஜமதக்னியைப் போலவோ,
ஹைமவதியுடன் குசிகரின் மகன் விஸ்வாமித்ரரைப் போலவோ,
தாரையுடன் பிருகஸ்பதியைப் போலவோ,
சதப்பிரவாவுடன் சுக்ரனைப் போலவோ,
பூமியுடன் பூமிபதியைப் போலவோ,
ஊர்வசியுடன் புரூரவசைப் {புரூரவனைப்} போலவோ,
சத்தியவதியுடன் ரிசீகரைப் போலவோ,
சரஸ்வதியுடன் மனுவைப் போலவோ,
சகுந்தலையுடன் துஷ்யந்தனைப் போலவோ,
திருதியுடன் நித்தியமான தர்மனைப் போலவோ,
தமயந்தியுடன் நளனைப் போலவோ,
சத்யவதியுடன் நாரதரைப் போலவோ,
ஜரத்காருவுடன் ஜரத்காருவைப் போலவோ,
பிரதீசியையுடன் புலஸ்தியரைப் போலவோ,
மேனகையுடன் ஊர்ணாயுவைப் போலவோ,
ரம்பையுடன் தும்புருவைப் போலவோ,
சதசீர்ஷையுடன் வாசுகியைப் போலவோ,
குமாரியுடன் தனஞ்சயனைப் போலவோ,
விதேக இளவரசியான சீதையுடன் ராமனைப் போலவோ அல்லது
ருக்மிணியுடன் கிருஷ்ணனைப் போலவோ
{தியோதாசன்} அவளுடன் {மாதவியுடன்} விளையாடினான்.

தன்னுடன் விளையாடி மகிழ்ந்த மன்னன் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயருடைய மகனை மாதவி பெற்றாள். அவனுக்கு {திவோதாசனுக்கு} அவள் {மாதவி} ஒரு மகனைப் {பிரதர்த்தனனைப்} பெற்றுக் கொடுத்ததும், புனிதமான காலவர் திவோதாசனிடம் குறித்த நேரத்தில் வந்து, "அந்தக் கன்னிகை {மாதவி} என்னுடன் வரட்டும். எனக்கு நீ தர வேண்டிய குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும். ஏனெனில், ஓ! பூமியின் ஆட்சியாளா {திவோதாசா}, நான் வரதட்சணைக்காக {சுல்கத்துக்காக} வேறு இடம் செல்ல விரும்புகிறேன்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அறம்சார்ந்தவனும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவனுமான மன்னன் திவோதாசன் அந்தக் கன்னிகையை {மாதவியை} குறித்த நேரத்தில் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான்" என்றார் {நாரதர்}.


Tuesday, June 02, 2015

மீண்டும் கன்னியான மாதவி! - உத்யோக பர்வம் பகுதி 116

Madhavi became a maiden once more! | Udyoga Parva - Section 116 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –45)

பதிவின் சுருக்கம் : ஹர்யஸ்வன் காலவரிடம் அவர் கேட்கும் வகையில் இருநூறு  குதிரைகள் மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் தான் மாதவியை அடைய விரும்புவதாகவும் சொன்னது; ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் தான் கன்னியாகும் வரத்தைத் தான் கொண்டிருப்பதாகக் காலவரிடம் மாதவி சொல்வது; ஹர்யஸ்வனுக்கும் மாதவிக்கும் மகனாக வசுமனஸ் பிறப்பது; மீண்டும் மாதவியைப் பெற்றுக் கொண்ட காலவர்...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஏகாதிபதிகளில் சிறந்தவனான மன்னன் ஹர்யஸ்வன், தனக்குப் பிறக்கப்போகும் மகனை நினைத்துச் சூடான நீண்ட பெருமூச்சை விட்டு, நீண்ட நேரம் சிந்தித்தபிறகு, இறுதியாக, "உயர்ந்திருக்க வேண்டிய {உன்னதமாக இருக்க வேண்டிய} அங்கங்கள் ஆறும் {6} இந்த மங்கையிடம் {மாதவியிடம்} உயர்ந்திருக்கின்றன. மென்மையாக இருக்க வேண்டிய ஏழும் {7} இவளிடம் மென்மையாக இருக்கின்றன. ஆழமாக {கம்பீரமாக} இருக்க வேண்டிய மூன்றும் {3} இவளிடம் ஆழமாக இருக்கின்றன. இறுதியாக, சிவந்திருக்க வேண்டிய ஐந்தும் {5} இவளிடம் சிவந்தே இருக்கின்றன [1]. இவள் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட விரும்பப்படுபவள் போலவும், கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவளாகவும் தெரிகிறாள். அனைத்து மங்கலக் குறிகளையும் கொண்ட இவள் {மாதவி} நிச்சயம் பல பிள்ளைகளைப் பெறுவாள். சக்கரவர்த்தியாகக் கூடிய ஒரு மகனைக் கூடப் பெறுவதற்கு இவள் தகுந்தவளே. ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {காலவரே}, எனது செல்வத்தைக் கருத்தில் கொண்டு, இவளுக்காக {மாதவிக்காக} நான் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஹர்யஸ்வன்}.


[1] அழகைக் குறிக்கவோ, மங்கலத்தைக் குறிக்கவோ உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஆறு {6} எவை என்பது பலவாறாகச் சொல்லப்படுகிறது.
உள்ளங்கைகளின் பின்புறம் இரண்டும்{2},பின்தட்டுகள் இரண்டும் {2}, கொங்கைகள் இரண்டும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது. கொங்கைகள் இரண்டும் {2}, இடைகள் இரண்டும் {2}, கண்கள் இரண்டும் {2} தான் அவை என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.

மென்மையாக இருக்க வேண்டிய ஏழு {7} அங்கங்கள் என்பன, தோல், மயிர், பற்கள், கைவிரல்கள், கால்விரல்கள், இடை, கழுத்து ஆகியன என்று ஒரே கருத்தாகக் குறிக்கப்படுகிறது. ஆழமாக இருக்க வேண்டிய மூன்று {3} அங்கங்கள் என்பன தொப்புள் {நாபி}, குரல் மற்றும் புத்தி என்று சொல்லப்படுகிறது. சிவந்திருக்க வேண்டிய ஐந்து {5} அங்கங்கள் என்பன உள்ளங்கைகள், கடைக்கண்கள், நாக்கு, உதடுகள், முகம் ஆகியன ஆகும். இந்த ஐந்தும் கூடப் பலவாறாகச் சொல்லப்படுகின்றன என்கிறார் கங்குலி.

கீழ்க்கண்டவை வேறொரு பதிப்பில் கண்ட அங்கலட்சணங்கள் ஆகும். இவை கங்குலியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றன.

பெண்களுக்கான அங்கலட்சணம்: பின்தட்டுகள், நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயர்ந்திருக்க வேண்டும்; விரல்களின் கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் {கங்குலி ஏழு என்கிறார்} மென்மையாக இருக்க வேண்டும். குரல், மனம், நாபி ஆகிய மூன்றும் ஆழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கைகள், உள்ளங்களால்கள், கடைக்கண்கள், நகங்கள் ஆகியன {இந்த அங்கங்கள் ஐந்து என்கிறார் கங்குலி} சிவந்திருக்க வேண்டும்.

ஆண்களின் லட்சணம் என்பது : அங்கங்கள் ஐந்தில் {5} நீளமும், நாலில் {4} குட்டையும், ஐந்தில் {5} மென்மையும், ஆறில் {6} உயர்வும் {உன்னதமும்}, ஏழில் {7} சிவப்பும், மூன்றில் {3} விரிவும், மூன்றில் {3} ஆழமும் {கம்பீரமும்} இருக்க வேண்டும். கன்னம், கண், கை, தொடை, மூக்கு ஆகிய ஐந்தும் {5} நீண்டு இருந்தால் நன்மையை அளிக்கின்றன. லிங்கம் {ஆண்குறி}, பின்தட்டு, கழுத்து, கணுக்கால் ஆகிய நான்கும் {4} குட்டையானால் நன்மையை அளிக்கின்றன. பல், விரல்கணு, கேசம், தோல், விரல் ஆகிய ஐந்தும் {5} மென்மையாக இல்லாவிட்டால் துக்கத்தைத் தரும். மார்பு, கக்ஷம், நகம், நாசி, தோள், பிடரியெலும்பு ஆகிய ஆறும் {6} உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டும். கடைக்கண், பாதம், கை, கன்னம், உதடுகள், நாக்கு, நகம் ஆகிய ஏழும் {7} சிவந்திருந்தால் அனைத்து நன்மைகளையும் அளிக்கும்.

அதற்குக் காலவர், "நல்ல நாட்டில் பிறந்தவையும், சந்திர வெண்மை கொண்டவையும், ஒரு காது கருப்பாக இருப்பவையுமான எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொடுப்பாயாக. மங்கலகரமான இந்தப் பெரிய கண்களைக் கொண்ட மங்கை, நெருப்புக்குக் காரணமாக அரணிகளைப் {கடையப்பட்டால் நெருப்பை உண்டாக்கும் தடி} போல, உனது மகன்களின் தாயாவாள்" என்றார்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசமுனியான மன்னன் ஹர்யஸ்வன் துயரத்தால் நிறைந்தான். ஆனால் காமத்தில் குருடான அவன், முனிவர்களில் முதன்மையானவரான காலவரிடம், "பிற வகை வேள்விகள் அனைத்துக்கும் தகுந்த வகையில் ஆயிரக்கணக்கான குதிரைகளை நான் (எனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில்) கொண்டிருப்பினும், ஓ! காலவரே, உமக்குத் தேவையான வகையில் என்னிடம் இருநூறு குதிரைகளே இருக்கின்றன. நான் இந்தக் காரிகையிடம் ஒரு மகனை மட்டுமே பெற விரும்புகிறேன். அன்புகூர்ந்து, எனது இந்த வேண்டுகோளை அருளும்" என்றான் {ஹர்யஸ்வன்}.

மன்னனின் {ஹர்யஸ்னின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் காரிகை {மாதவி}, காலவரிடம், "பிரம்மத்தை உரைப்பவர் {பிரம்மவாதி} ஒருவர், ஒவ்வொரு மகப்பேறுக்குப் {பிரசவத்திற்குப்} பிறகும் நான் மீண்டும் கன்னியாவேன் என்ற வரத்தை எனக்கு அருளினார். எனவே, இந்த மன்னனின் {ஹர்யஸ்வரின்} அற்புதக் குதிரைகளை ஏற்றுக் கொண்டு, என்னை இவருக்கு அளிப்பீராக. இதே வழியில், தொடர்ச்சியாக நான்கு மன்னர்களிடம் எண்ணூறு குதிரைகளை முழுமையாக நீர் அடைந்துவிடலாம். நானும் நான்கு மகன்களைப் பெற்றவளாவேன். இவ்வழியில், உமது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தை நீர் கொடுப்பீராக. இதையே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ! அந்தணரே {காலவரே}, நீர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது உம்மைச் சார்ந்ததே" என்றாள்.

அந்த மங்கையால் {மாதவியால்} இப்படிச் சொல்லப்பட்ட காலவ முனிவர், மன்னன் ஹர்யஸ்வனிடம், "ஓ! ஹர்யஸ்வா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் தீர்மானித்த வரதட்சணையில் {சுல்கத்தில்} நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து இந்தக் காரிகையை ஏற்று, இவளிடத்தில் ஒரே மகனை மட்டும் பெறுவாயாக" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த மங்கையைப் பெற்றுக் கொண்டு, காலவரை வழிபட்ட மன்னன் {ஹர்யஸ்வன்}, உரிய நேரத்திலும், உரிய இடத்திலும், தான் விரும்பிய வகையில் ஒரு மகனை அவளிடம் {மாதவியிடம்} பெற்றான். அப்படிப் பிறந்த அந்த மகன், வசுமனஸ் என்ற பெயரால் அழைக்கப்படலானான். பூமியின் மன்னர்கள் அனைவரிலும் செல்வந்தனாக, வசுக்களைப் போல இருந்த அவன் {வசுமனஸ்}, ஒரு மன்னனாகவும், பெரும் ஈகையாளனாகவும் ஆனான்.

சிறிது காலத்திற்குப் பிறகு, புத்திக்கூர்மை கொண்ட காலவர் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் இருந்த ஹர்யஸ்வனை அணுகி, அவனிடம், "ஓ! மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஹர்யஸ்வா}, ஏதாவது பிற மன்னனிடம் இரக்க {மீதமுள்ள குதிரைகளை இரந்து பெற} எனக்கு நேரம் வந்துவிட்டது" என்றார்.

ஆண்மை நிறைந்த செயல்களில் உறுதியுள்ளவனும், உண்மை நிறைந்த பேச்சை எப்போதும் கொண்டவனுமான ஹர்யஸ்வன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன்னால் மேலும் அறுநூறு {600} குதிரைகளைக் கொடுக்க முடியாது என்பதை நினைவுகூர்ந்து, மாதவியைக் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவியும் அந்தச் சுடர்மிகும் அரசச் செழிப்பைக் கைவிட்டு, மீண்டும் கன்னித் தன்மையை அடைந்து, காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். "இந்தக் குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும்" என்று சொன்ன காலவர், அந்தக் கன்னிப் பெண்ணை {மாதவியை} அழைத்துக் கொண்டு மன்னன் திவோதாசனிடம் சென்றார்" என்றார் {நாரதர்}.


மாதவியை மகளாக ஏற்ற காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 115

Galava accepted Madhavi as daughter | Udyoga Parva - Section 115 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –44)

பதிவின் சுருக்கம் : காலவர் கேட்ட குதிரைகளைக் கொடுக்க இயலாத யயாதி, தனது மகளை காலவரிடம் கொடுப்பது; யயாதி தனது மகள் மாதவியைத் திருமணம் செய்து கொடுப்பதால் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு காலவர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொன்னது; காலவர் மாதவியை ஏற்றுக் கொள்வது; கருடன் தனது நண்பன் காலவன் தன் நோக்கத்தை அடைய ஒரு வழி கிடைத்த மனநிறைவுடன் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பியது; மாதவியை மணமுடித்துக் கொடுத்து வரதட்சணையைப் பெற்றுக் கொள்ள அயோத்யா மன்னன் ஹர்யஸ்வனிடம் காலவர் சென்றது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "உண்மை நிறைந்த அற்புத வார்த்தைகளைக் கொண்டு சுபர்ணனால் {கருடனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனும், தானமளிப்பவர்களில் முதன்மையானவனும், காசி நாட்டவர் அனைவரிலும் தயாளமான ஆட்சியாளனுமான தலைவன் யயாதி, தன் மனதில் அவ்வார்த்தைகளைச் சுழற்றி, தன்னிடம் கேட்கப்பட்ட யாசகத்தால் கிடைக்கும் பெருமையையும், (காலவரின்) தவத்தகுதியையும் கருதிப் பார்த்து, சூரிய குல மன்னர்கள் அனைவரையும் கடந்து, குறிப்பாகத் தன்னிடம் இந்த இருவரும் {கருடனும் காலவரும்} வந்ததை நோக்கில் கொண்டு, "இன்றைய எனது வாழ்வு அருளப்பட்டதே. உண்மையில், நான் பிறந்த குலமும் இன்று அருளப்பட்டதாகியது. ஓ! பாவமற்ற தார்க்ஷியா {கருடா}, எனக்கு நிகராக இந்த மாநிலமும் அருளப்பட்டிருக்கிறது. எனினும், ஓ! நண்பா, நான் உன்னிடம் சொல்ல ஒன்றிருக்கிறது. நீ நினைப்பது போல நான் இப்போது அவ்வளவு பெரிய செல்வந்தனில்லை. எனது செல்வம் குறைந்தவிட்டது. எனினும், ஓ! விண்ணதிகாரியே {கருடா}, நீ இங்கே வந்த நோக்கம் கனியற்றதாகச் {பலனற்றுப் போகச்} செய்ய என்னால் இயலாது. மேலும் இந்த மறுபிறப்பாள முனிவரின் {பிராமண முனிவர் காலவரின்} நம்பிக்கைகளையும் நான் வீணாக்க விரும்பவில்லை.


எனவே, அவரது நோக்கம் எதனால் நிறைவேறுமோ, அதை {குதிரையை} நான் கொடுப்பேன். இரந்து கேட்டு வரும் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினால், அவர் {தானமளிக்க வேண்டியவரின்} குலத்தையே எரித்துவிடக் கூடும். ஓ! வினதையின் மகனே {கருடா}, "கொடு" என்று கேட்டு வருபவரின் நம்பிக்கைகளையெல்லாம் அழித்துவிட்டு, "என்னிடம் ஏதும் இல்லை" என்று சொல்வதை விட வேறு பெரிய பாவச்செயல் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. {உலகில் ஆசையை நாசம் செய்வதான "கொடு" மற்றும் "இல்லை" என்ற வார்த்தைகளைக் காட்டிலும் மிகப் பாவமானது வேறு எதுவும் இல்லை}. தனது நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்து, தன் நோக்கமும் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்த ஒரு மனிதர், தனக்கு நன்மை செய்யத்தவறிய ஒருவனுடைய மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அழித்துவிடக்கூடும்.

எனவே, ஓ! காலவரே, நான்கு குடும்பங்களைத் தழைக்க வைக்கவல்ல [1] இந்த எனது மகளை {மாதவியைப்} பெற்றுக் கொள்ளும். அழகில் இவள் {மாதவி} தேவர்களுக்கு நிகரானவளாவாள். இவளிடம் நற்குணங்களால் ஆன திறன்கள் அனைத்தும் உள்ளன. உண்மையில், இவளது அழகுக்காகவே, தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் {தாங்கள் மணமுடித்துக்கொள்ள} (என்னிடம்) இவளைக் கேட்கின்றனர். ஒரு காது கருப்பாக உள்ள எண்ணூறு குதிரைகளைக்கூட விடும், பூமியில் உள்ள மன்னர்கள் தங்கள் முழு நாடுகளையும் இவளுக்கு வரதட்சணையாக கொடுப்பார்கள். எனவே, மாதவி என்ற பெயர் கொண்ட எனது இந்த மகளை நீர் பெற்றுக் கொள்வீராக. நான், எனது மகள் மூலமாகப் பெறப்படும் மகனைக் {தௌஹித்ரர் = மகளின் மகன்} கொண்டவனாக வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றான் {யயாதி}.

[1] நான்கு குடும்பங்கள் என்பது 1. தன் தாயின் குடும்பம் 2. தன் தந்தையின் குடும்பம், 3. தன் கணவனின் தாயுடைய குடும்பம் 4. தன் கணவனின் தந்தையுடைய குடும்பம் ஆகியவை ஆகும். நான்கு பிள்ளைகளைப் பெற்று, நான்கு வம்சங்களைப் பெறுவாள் இந்த மாதவி என்ற தொலைநோக்குப் பார்வையும் இதில் அடங்கியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த மகளைப் {யயாதியின் மகளாகிய மாதவியைத் தன் மகளாகப்} பெற்றுக் கொண்ட காலவர், "நான் மீண்டும் உம்மைக் காண்பேன்" என்று சொல்லியபடி கருடனுடன் சென்றுவிட்டார். அவர்கள் {காலவரும் கருடனும்} அந்த மங்கையை {மாதவியை} தங்களுடன் அழைத்துச் சென்றனர். முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த {பறவையினத்தைச் சேர்ந்த} காலவரின் நண்பன் {கருடன்}, அவரிடம் {காலவரிடம்}, "இறுதியாக குதிரைகளை அடைவதற்கான வழி கிடைத்தது" என்று சொன்னான். இதைச் சொன்ன கருடன், பிறகு, காலவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டான். அந்தப் பறவைகளின் இளவரசன் {கருடன்} சென்ற பிறகு, தன்னுடன் அந்த மங்கையை {மாதவியை} அழைத்துச் சென்ற அவர் {காலவர்}, அந்த மங்கைக்கான (தகுந்த) வரதட்சணையைக் கொடுக்கக்கூடிய ஒரு மன்னனிடம் செல்வது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.

பெரும் சக்தி கொண்டவனும், நால்வகை அணிகளுடன் கூடியபெரும் படையைக் கொண்டவனும், கருவூலம் நிரம்பியவனும், அபரிமிதமான தானியங்களைக் கொண்டவனும், தனது குடிகளால் அன்புடன் விரும்பப்படுபவனும், அந்தணர்களால் விரும்பப்படுபவனும், அயோத்யா நகரத்தை ஆள்பவனுமான இக்ஷவாகு குலத்தின் ஹர்யஸ்வனிடம் [2] செல்ல அவர் முதலில் நினைத்தார். வாரிசை அடையும் விருப்பத்துடன் இருந்த அவன் {ஹர்யஸ்வன்}, அற்புதமான தவங்களில் ஈடுபட்டு, சமாதானத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வந்தான்.

[2] ஹர்யஸ்வன் என்றால் பச்சைக் குதிரைகளை உடையவன் என்று பொருள்.

பிறகு அந்த அந்தணரான காலவர், ஹர்யஸ்வனிடம் சென்று, "ஓ! மன்னர்களின் மன்னா {ஹர்யஸ்வா}, இந்த மங்கை {மாதவி}, பிள்ளைகளைப் பெற்று தனது கணவனின் குடும்பத்தைப் பெருக வைப்பாள். ஓ! ஹர்யஸ்வா, எனக்கு வரதட்சணையைக் கொடுத்துவிட்டு, இவளை {மாதவியை} உனது மனைவியாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. நீ என்ன வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் [3] என்பதை நான் சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு, நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பாயாக" என்றார் {காலவர்}.

[3] மணமகளின் பெற்றோருக்கு, மணமகன் வரதட்சணை கொடுப்பதை "சுல்கம்" என்று சொல்வார்கள்.Wednesday, May 27, 2015

யயாதியைச் சந்தித்த கருடனும் காலவரும்! - உத்யோக பர்வம் பகுதி 114

Garuda and Galava met Yayati | Udyoga Parva - Section 114 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –43)

பதிவின் சுருக்கம் : கருடன் தனது நண்பனான யயாதி குறித்துக் காலவரிடம் சொன்னது; காலவரை  யயாதியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து, காலவர் கேட்கும் குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி யயாதியிடம் கேட்டது....

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, சிறகு படைத்த உயிரினங்களில் முதன்மையானவனான கருடன், உற்சாகமற்றிருந்த காலவரிடம், "பூமிக்கடியில் அக்னியினால் உண்டாக்கப்பட்டு, வாயுவினால் சோதிக்கப்படுவதாலும், பூமியே ஹிரண்மயமாயிருக்கிறது என்று சொல்லப்படுவதாலும், அந்தச் செல்வம் {தங்கம்} ஹிரண்யம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் செல்வமே {தங்கமே} உலகத்தைத் தாங்கி வாழ்வை நிலைக்க வைக்கிறது. எனவே, அது தனம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தன்னை சேவைகளுக்காகவே அந்தத் தனம் {செல்வம்}, ஆதியில் இருந்து மூவுலகிலும் நிலைத்திருக்கிறது. குபேரனின் கையிருப்பை அதிகரிக்கும்பொருட்டு, பூரட்டாதியும் உத்திரட்டாதியும் கூடிய வெள்ளிக்கிழமையில் அக்னி தனது விருப்பத்தின் ஆணையால் செல்வத்தை உண்டாக்கி மனிதர்களிடம் அளித்தான். பூமிக்கடியில் இருக்கும் அந்தச் செல்வம் அஜைகபாதர்கள் மற்றும் அஹிர்ப்புதனியர் என்று அழைக்கப்படும் தேவர்களாலும், குபேரனாலும் காக்கப்படுகிறது. எனவே, ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, அடைவதற்கு அரிதான அது மிக அரிதாகவே அடையப்படுகிறது. செல்வமில்லாமல், நீ வாக்குறுதியளித்திருக்கும் குதிரைகளை அடைவது இயலாது. எனவே, அரச முனிவர்களின் குலத்தில் பிறந்திருப்பவனும், தனது குடிமக்களை ஒடுக்காதவனுமான ஏதாவது ஒரு மன்னனிடம் {செல்வத்தை} இரந்து கேட்டு நமது நோக்கத்தில் வெற்றியடைவாயாக.

சந்திர குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் எனது நண்பனாக இருக்கிறான். நாம் அவனிடம் செல்வோம். ஏனெனில், பூமியில் உள்ளோர் அனைவரை விடவும், அவனே பெரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறான். அந்த அரச முனி யயாதி என்ற பெயரால் அறியப்படுகிறான். அவன் நகுஷனின் மகனுமாவான். அவனது ஆற்றல் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது. நேரடியாக நீ கேட்டு, நானும் அதை நிர்பந்தித்தால், நாம் கேட்பதை அவன் {யயாதி} கொடுப்பான். ஏனெனில், பொக்கிஷத்தலைவனான குபேரன் கொண்டுள்ளதற்கு நிகரான அளவு அபரிமிதமான செல்வத்தை அவன் {யயாதி} கொண்டிருக்கிறான். ஓ! கற்றவனே, இப்படியே கொடையை ஏற்று, உனது ஆசானின் கடனை அடைப்பாயாக" என்றான் {கருடன்}.

இப்படியே பேசிக்கொண்டு, என்ன செய்யப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்த கருடனும் காலவனும், பிரதிஷ்டானம் என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் இருந்த மன்னன் யயாதியிடம் சேர்ந்தே சென்றனர். விருந்தோம்பலுடன் அவர்களை வரவேற்ற அந்த மன்னன் {யயாதி} அவர்களுக்கு அற்புதமான ஆர்கியாவையும், அவர்களது பாதங்களைக் கழுவி கொள்ள நீரையும் கொடுத்தான். பிறகு அந்த மன்னன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான்.

அதன்பேரில் கருடன், "ஓ! நகுஷனின் மகனே {யயாதி}, காலவன் என்று அழைக்கப்படும் இந்தத் தவக்கடல் எனது நண்பனாவான். ஓ! ஏகாதிபதி, இவன் {காலவன்} விஸ்வாமித்ரரிடம் பல்லாயிரம் வருடங்களாகச் சீடனாக இருந்தான். இந்தப் புனித அந்தணன் {காலவன்}, தான் செல்ல விரும்பும் இடத்திற்கு விடைகொடுத்து விஸ்வாமித்ரரால் அனுப்பப்பட்ட போதும், அந்நேரத்தில் தனது ஆசானிடம், தனது குருதட்சணையைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகச் சொன்னான்.

இவனது  ஏழ்மையை அறிந்து கொண்ட விஸ்வாமித்ரர் இவனிடம் {காலவனிடம்} எதையும் கேட்கவில்லை. ஆனால் இந்த அந்தணன் {காலவன்} மீண்டும் மீண்டும் கல்விக் கட்டணத்தைக் குறித்துச் சொன்னதும், சற்றே கோபப்பட்ட அந்த ஆசான் {விஸ்வாமித்திரர்}, "நல்ல வம்சாவளியைக் கொண்டதும், சந்திரப் பிரகாசம் கொண்டதும், ஒரு காதில் மட்டும் கருப்பு நிறம் கொண்டதுமான எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. ஓ! காலவா, நீ உனது ஆசானுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதையே நீ கொடுப்பாயாக", என்று சொல்லிவிட்டார். இப்படியே தவத்தைச் செல்வமாகக் கொண்ட விசுவாமித்ரர் இவனிடம் கோபத்தில் சொல்லிவிட்டார்.

அதனால், இந்த அந்தணர்களில் காளை {காலவன்} பெரும் துயரத்தில் இருக்கிறான். தனது ஆசானின் {விஸ்வாமித்ரரின்} ஆணையை நிறைவேற்ற முடியாததால், இப்போது உனது பாதுகாப்பை நாடி வந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {யயாதி}, அவற்றை உன்னிடம் இருந்து பிச்சையாகப் பெற்று, மீண்டும் மகிழ்ச்சியை அடைந்து, தனது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து, தன்னை இவன் தவநோன்புகளுக்கு அர்ப்பணித்துக் கொள்வான். 

எனவே, அரச முனியாக இருக்கும் உனக்கு, தான் கொண்டிருக்கும் தவச் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதால், அவ்வகைச் செல்வத்தில் மேலும் செல்வந்தனாக இந்த அந்தணன் உன்னை ஆக்குவான். ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு குதிரையின் உடலில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ, ஓ! பூமியின் ஆட்சியாளா, அவ்வளவு அருள் உலகங்களையும், ஒரு குதிரையைக் கொடுப்பவன் அடைவான். இவன் {காலவன்} உன்னிடம் கொடை பெறுவதற்குத் தகுதியுடையவன் ஆவான். எனவே, சங்குக்குள் சேகரிக்கப்பட்ட பாலைப் போல உனது கொடை இந்த நேரத்தில் அவனுக்கு அமையட்டும்" என்றான் {கருடன்}.


சாண்டிலி என்ற பெண்! - உத்யோக பர்வம் பகுதி 113

A lady called Sandili! | Udyoga Parva - Section 113 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –42)

பதிவின் சுருக்கம் : கருடனும் காலவரும் ஓய்வெடுக்க ரிஷப மலையில் இறங்குவது; அங்கே தவம் செய்யும் சாண்டிலியைக் கண்டது; சாண்டிலியின் விருந்தோம்பல்; கருடனின் சிறகுகள் பறிபோனது; தூய நடத்தையின் பெருமையைச் சாண்டிலி சொல்வது; கருடன் மீண்டும் சிறகுகளைப் பெற்றது; ரிஷப மலையில் இருந்து அவர்கள் புறப்பட்டதும், வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்தித்தது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு ரிஷப மலையின் சிகரத்தில் இறங்கிய அந்த அந்தணரும் {காலவரும்}, அந்தப் பறவையும் {கருடனும்}, அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாண்டிலி என்ற அந்தணப் பெண்ணைக் கண்டனர். காலவரும், கருடனும் தங்கள் சிரம் தாழ்த்தி அவளை {சாண்டிலியை} வணங்கி வழிபட்டனர். அதன்பேரில், அந்த மங்கை அவர்களது நலன் விசாரித்து அவர்களுக்கு {அமர} இருக்கை கொடுத்தாள். உணவைச் சமைத்த அந்த மங்கை முதலில் மந்திரங்களால் அதைத் தேவர்களுக்குக் காணிக்கையாக்கினாள். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இருவரும் {காலவரும், கருடனும்}, அந்த மங்கையால் {சாண்டிலியால்} தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த உணவை உண்டனர். உணவை உண்ட பிறகு தங்களைத் தரையில் கிடத்திக் கொண்ட அவர்கள் {காலவரும், கருடனும்} இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தனர்.


விழித்ததும் அந்த இடத்தைவிட்டு செல்ல முயன்ற கருடன், தனது சிறகுகள் விழுந்துவிட்டதைக் கண்டான். உண்மையில், அவன் தலையும் கால்களும் மட்டும் உள்ள ஒரு சதைப் பிண்டம் {சதைகளால் ஆன உருண்டை} போல இருந்தான். அவனுக்கு நேர்ந்த இந்த அவலநிலையைக் கண்ட காலவர் மிகுந்த வருத்தத்துடன், "பயணம் மேற்கொண்டு இங்கே வந்ததன் விளைவாகத்தான் இந்த அவல நிலை உனக்கு வந்ததா? ஐயோ, இன்னும் எவ்வளவு காலம் நாம் இங்கே வசிக்க வேண்டியதிருக்கும்? உனது மனதில் தீமையான பாவ சிந்தனையை ஏதும் கொண்டாயா? நீ குற்றமுள்ள மனமுடன் இருப்பதால், அந்தப் பாவம் அற்பமானதாக இராது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார் {காலவர்}.

இப்படிச் சொல்லப்பட்ட கருடன், அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "உண்மையில், ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே-காலவா}, தவ வெற்றியால் மகுடம் சூட்டபட்டிருக்கும் இந்தப் பெண்மணியை இந்த இடத்தில் இருந்து, எங்கே படைப்பாளன் இருக்கிறானோ, எங்கே தெய்வீகமான மகாதேவன் {சிவன்} இருக்கிறானோ, எங்கே நித்தியமான விஷ்ணு இருக்கிறானோ, எங்கே அறமும் வேள்வியும் சேர்ந்து இருக்கிறதோ அங்கே தூக்கிச் சென்றுவிட வேண்டும் எனக்கருதினேன். ஏனெனில், இந்தப் பெண்மணி அங்கேயே வாழ வேண்டும் என நான் நினைத்தேன். இப்போது நான், எனக்கு நன்மை வேண்டி, இந்தப் புனிதமான பெண்மணியின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுவேன், என்று சொல்லி பரிதாபம் நிறைந்த இதயத்துடன் அந்தப் பெண்மணியிடம் {சாண்டிலியிடம்}, "உண்மையில் நான் என் மனதில் இப்படியே நினைத்தேன். நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறிழைத்திருந்தாலும், இதுவே எனது விருப்பமாக இருந்தது. அஃது உனது விருப்பத்திற்கு எதிரானது என்பது தெளிவு என்றாலும், உன் மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாகவே நான் அவ்வாறு நினைத்தேன். எனவே, உனது இதயத்தின் உன்னதத் தன்மையால் எனக்கு மன்னிப்பை அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {கருடன்}.

அந்தப் பறவைகளின் இளவரசனிடமும், அந்த அந்தணர்களில் காளையிடமும் அந்தப் பெண்மணி மனநிறைவு கொண்டாள். அவள் {சாண்டிலி}, கருடனிடம், "ஓ! அழகிய இறகுகள் கொண்டவனே {கருடா}, அஞ்சாதே. உனது சிறகுகள் திரும்பும், உனது அச்சங்களை விலக்கு. உன்னால் நான் அவமதிக்கப்பட்டேன் {இகழ்வாகக் கருதப்பட்டேன்}. ஆனால், நான் இகழ்ச்சியை மன்னிப்பதில்லை என்பதை அறிந்து கொள்வாயாக. எந்தப் பாவி என்னை அவமதிப்பானோ, அவன் அருள் உலகங்கள் அனைத்தில் இருந்தும் வேகமாக விழுவான். என் மேல் எந்த ஓர் அமங்கலக் குறியும் இன்றி, முற்றிலும் பழியற்று இருக்கும் நான், எனது நடத்தையில் கொண்ட தூய்மையின் விளைவாக உயர்ந்த தவ வெற்றியை அடைந்திருக்கிறேன்.

தூய நடத்தையானது {ஆசாரமானது}, தனது கனியாக அறத்தைத் தாங்கி வருகிறது. தூய நடத்தையானது, தனது கனியாகச் செல்வத்தைத் தாங்கி வருகிறது. அந்தத் தூய நடத்தையே, செழிப்பையும் கொண்டு வருகிறது. அந்தத் தூய நடத்தையே {ஆசாரமே}, மங்கலமற்ற அனைத்து அறிகுறிகளையும் விரட்டி விடுகிறது. ஓ! பறவைகளின் அருளப்பட்ட இளவரசனே {கருடா}, இந்த இடத்தில் இருந்து நீ எங்கு விரும்புகிறாயோ அங்கே செல். என்னை இகழும் நினைப்பை ஊக்குவிக்காதே. உண்மையில் பழிக்கத்தக்க பெண்களும் இருக்கலாம். அவர்களைக் கூட நீ அவமதிக்காமல் கவனமாக இருப்பாயாக. முன்பைப் போலவே, நீ மீண்டும் பலத்தையும் சக்தியையும் பெறுவாய்" என்றாள் {சாண்டிலி}.

அந்தப் பெண்மணியின் வார்த்தைகளின் பேரில் கருடன் மீண்டும் சிறகுகளை அடைந்து, முன்பை விட அதிகப் பலவான் ஆனான். பிறகு சாண்டிலியிடம் விடைபெற்ற கருடன், காலவரை முதுகில் சுமந்த படி அங்கிருந்து {ரிஷப மலையிலிருந்து} சென்றான். ஆனால் தாங்கள் தேடி வந்த வகைக் குதிரைகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோல்வியுற்றனர். அப்போது வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்திக்க நேர்ந்தது.

வினதையின் மகன் {கருடன்} முன்னிலையிலேயே அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவர் {விஸ்வாமித்ரர்}, காலவரிடம், "ஓ! மறுபிறப்பாளனே {காலவா}, நீ உன் சுயவிருப்பத்தின் படியே வாக்குறுதியளித்திருந்த செல்வத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நீ என்ன செய்வாய் என்பதை நான் அறியவில்லை. நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். நான் இன்னும் சில காலம் காத்திருப்பேன். (வாக்குறுதி கொடுத்த காரியத்தில்) நீ வெற்றியடைத்தக்க வழியைத் தேடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று இருந்த காலவரிடம், "உன்னிடம் விஸ்வாமித்ரர் முன்பே சொன்னதை, இப்போது என் முன்னிலையிலும் சொல்லக் கேட்டேன். எனவே, ஓ காலவா, அந்தணர்களில் சிறந்தவனே, வா, இக்காரியம் குறித்துத் தீர்மானிப்போம். (உன்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி) உனது ஆசானுக்கு முழுச் செல்வத்தையும் அளிக்காமல், நீ அமரவும் கூடாது" என்றான் {கருடன்}.


Tuesday, May 26, 2015

"மரணமே கடவுள்!" என்ற கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 112

"Death is God himself!" said Garuda! | Udyoga Parva - Section 112 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –41)

பதிவின் சுருக்கம் : கிழக்கு திசையை நோக்கிச் செல்லுமாறு கருடனிடம் காலவர் கேட்டுக் கொண்டது; கருடன் தனது முதுகில் காலவரை ஏற்றிக் கொண்டது; கருடனின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காலவர் அதைக் கருடனிடம் சொன்னது; ரிஷப மலையில் ஓய்ந்து போகலாம் என்று கருடன் சொன்னது...

காலவர் {கருடனிடம்} சொன்னார், "ஓ கருடா, பாம்புகளில் முதன்மையானோரைக் கொல்பவனே, ஓ! அழகிய சிறகுகள் கொண்டவனே, ஓ! வினதையின் மகனே {கருடனே}, ஓ! தார்க்கியா {தார்க்ஷயா}, தர்மத்தின் கண்கள் இரண்டும் எங்கு விழித்தனவோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னைச் சுமந்து செல்வாயாக. எங்கே தேவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நீ முதலில் சொன்னாயோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னை அழைத்துச் செல். உண்மையும், அறமும் அங்கே வசிக்கின்ற என்று நீ சொல்லியிருக்கிறாய். தேவர்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன். எனவே, அருணனின் தம்பியே {கருடா}, நான் தேவர்களைக் காணும் வகையில் என்னை அங்கே {கிழக்குத் திசைக்கு} அழைத்துச் செல்" என்றார் {காலவர்}.


நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட வினதையின் மகன் {கருடன்}, அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "என் முதுகில் ஏறுவாயாக" என்றான். பிறகு, காலவ முனிவர் கருடனின் முதுகில் ஏறினார்.

காலவர் {கருடனிடம்}, "ஓ! பாம்புகளை உண்பவனே {கருடா}, நீ பறந்து செல்கையில், ஆயிரம் கதிர்களைக் கொண்டவனும், நாள் படைப்பனுமான சூரியன் காலை வேளையில் இருப்பதைப் போன்ற அழகுடன் இருக்கிறாய். ஓ! விண்ணதிகாரியே {கருடா}, உனது சிறகடிப்பால் உண்டான புயல் காற்றில் மரங்களே உடைந்து உனது பாதையில் தொடரும் அளவுக்கு உனது வேகம் பெரியதாக இருக்கிறது.

ஓ! வானவாசியே {கருடா}, உனது சிறகுகளால் உண்டான புயலைக் கொண்டு கடல்களில் இருக்கும் நீர், மலைகள், காடுகளுடன் கூடிய பூமியையே இழுத்துவிடுவாய்ப் போலிருக்கிறது. உண்மையில், உனது சிறகுகளின் அசைவால் உண்டான பெருங்காற்று, மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகள் நிரம்பிய கடல் நீரை ஆகாயத்தின் மத்தியப்பகுதி வரை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரே முகம் கொண்ட மீன்களும், மனித முகங்களைக் கொண்ட திமிகள், திமிங்கலங்கள் மற்றும் பாம்புகளும் உனது சிறகுகள் எழுப்பும் பெருங்காற்றால் நசுக்கப்படுகின்றன. அந்த ஆழ்ந்த கர்ஜனையால் எனது காதுகள் செவிடாகின்றன. எதையும் கேட்கவோ, பார்க்கவோ முடியாதபடி நான் மலைத்துப் போயிருக்கிறேன். உண்மையில், எனது சொந்த நோக்கத்தைக்கூட நான் மறந்து விட்டேன்.

ஓ! விண்ணதிகாரியே {கருடா}, ஓர் அந்தணனின் உயிர் ஆபத்தில் இருப்பதை நினைவுகூர்ந்து உனது வேகத்தைத் தளர்த்துவாயாக. ஓ! ஐயா, சூரியனையோ, திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் ஓர் அடர்த்தியான இருளையே நான் காண்கிறேன். உடலை என்னால் காண முடியவில்லை. ஓ! முட்டையிடும் இனத்தவனே {கருடா}, ஒளிமிக்க இரண்டு ரத்தினங்களைப் போல ஒளிரும் உனது கண்கள் இரண்டை மட்டுமே நான் காண்கிறேன். என்னால் உனது உடலையோ, எனது உடலையோ காண முடியவில்லை.

ஒவ்வொரு அடியிலும் உனது உடலில் இருந்து தீப்பொறி பறப்பதை நான் காண்கிறேன். இந்தத் தீப்பொறிகளை விரைவில் நிறுத்து, மேலும் உனது கண்களின் ஒளிர்வையும் நிறுத்து. ஓ! வினதையின் மகனே {கருடா}, உனது வழியில் நீ செல்லும் இந்த அபரிமித வேகத்தைத் தளர்த்துவாயாக. சந்திரப் பிரகாசத்துடனும், ஒரு காதில் கருப்பு நிறத்துடனும் கூடிய எண்ணூறு {800} குதிரைகளை எனது ஆசானுக்கு {விசுவாமித்திரருக்கு} கொடுப்பதாக நான் வாக்களித்திருக்கிறேன். ஓ! முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எனது வாக்குறுதியை நிறைவேற்றும் எந்த வழியையும் நான் காணவில்லை. ஆனால் ஒரு வழியை என்னால் காண முடிகிறது. அஃது எனது உயிரை விடுவதுதான். எனக்குச் சுயமாக எந்தச் செல்வமும் இல்லை, செல்வமிக்க எந்த நண்பரும் எனக்குக் கிடையாது, மேலும் அபரிமிதமான செல்வத்தாலும் எனது நோக்கத்தை அடைய துணை நிற்க முடியாது" என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதையும் இன்னும் பிற சோகமான வார்த்தைகளையும் சொன்ன காலவரிடம், வினதையின் மகன் {கருடன்}, தனது வேகத்தைக் குறைக்காமல் சிரித்துக் கொண்டே, "ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவா {காலவா}, உனது வாழ்வுக்கு ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் உனக்குச் சிறுமதியே இருக்கிறது. ஒருவனது முயற்சியால் அவனுக்கு மரணம் ஏற்படாது. உண்மையில் மரணமே கடவுள். உனது நோக்கத்தை இதற்கு முன் நீ எனக்கு ஏன் சொல்லவில்லை? இவை அனைத்தையும் சாதிக்கப் பல அற்புத வழிகள் இருக்கின்றன. இங்கே கடலின் அருகே ரிஷபம் என்றழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே சிறிது நேரம் நாம் ஓய்வெடுப்போம். உணவால் புத்துணர்ச்சி பெற்ற பிறகு, ஓ! காலவா மீண்டும் நான் திரும்புவேன்" என்றான் {கருடன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top