Showing posts with label குந்தி. Show all posts
Showing posts with label குந்தி. Show all posts

Monday, June 15, 2015

கிருஷ்ணனிடம் பேசிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 132

Kunti spoke to Krishna! | Udyoga Parva - Section 132 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –61)

பதிவின் சுருக்கம் : குந்தியைச் சந்தித்த கிருஷ்ணன், அவளிடம் கௌரவச் சபையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொன்னது; தான் புறப்படப் போவதாகவும், பாண்டவர்களின் தாய் சொல்லிய அனுப்பிய செய்தி என யுதிஷ்டிரனிடம் தான் என்ன சொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணன் குந்தியிடம் கேட்டது; ஓர் அரசனுக்கு உரிய கடமைகளைக் குறித்துக் கிருஷ்ணன் மூலமாகக் குந்தி யுதிஷ்டிரனுக்குச் சொன்ன நீதிகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.


துரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும்? ஓ! பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

குந்தி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, "ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.

இது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், "எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான். 

மன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.

குற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா? மன்னன் காலத்துக்குக் காரணமா? என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).

கிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.

உனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.

என்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.

தேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ},  எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.

(ஓ! கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன? அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; 
ஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்; 
ஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்; 
ஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.

நீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.

நண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம்  இருக்க முடியும்? மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே" {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.


Thursday, May 14, 2015

"உணவை ஏன் மறுக்கிறாய்!" துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 91

"Why dost thou refuse food!" said Duryodhana! | Udyoga Parva - Section 91 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –20)

பதிவின் சுருக்கம் : குந்தியிடம் விடைபெற்றுச் சென்ற கிருஷ்ணன் துரியோதனனை அடைந்தது; துரியோதனன் கொடுக்க முன்வந்த உணவைக் கிருஷ்ணன் மறுத்தது; மறுத்ததற்கான காரணத்தைத் துரியோதனன் கேட்க, அதைக் கிருஷ்ணன் சொன்னது; கிருஷ்ணன் விதுரனின் இல்லத்தை அடைந்து அங்கே குந்தியின் கைகளால் உண்டது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிருதையிடம் {குந்தியிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவளை வலம் வந்தவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், சௌரி என்றும் அழைக்கப்பட்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, புரந்தரனின் {இந்திரனின்} வசிப்பிடத்தைப் போன்றதும், அழகிய இருக்கைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் செல்வம் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றான். வாயில் காப்போரால் தடுக்கப்படாத அந்தப் பெரும் புகழ் கொண்ட வீரன் {கிருஷ்ணன்}, தொடர்ச்சியாக மூன்று கட்டுகளைக் கடந்து, சுடர்விட்டுப் பிரகாசிப்பதும், மலையின் சிகரத்தைப் போன்று உயர்ந்ததும், மேகத்திரள் போன்று தெரிவதுமான அந்த மாளிகைக்குள் நுழைந்தான் {உப்பரிகையில் ஏறினான்}.

அங்கே, குருக்கள் அனைவராலும் சூழப்பட்டு, ஆயிரம் {1000} மன்னர்களுக்கு மத்தியில் தனது அரியணையில் அமர்ந்திருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} கண்டான். மேலும், அங்கே, துச்சாசனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் தங்களுக்குரிய இருக்கைகளில் துரியோதனனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டான். அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சபைக்குள் நுழைந்ததும், அமைச்சர்களுடன் கூடியவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்த மதுசூதனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தான்.

பிறகு, கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரர் மகன்களையும், அவனது ஆலோசகர்கள் அனைவரையும், அங்கே இருந்த மன்னர்கள் அனைவரையும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி நலம் விசாரித்தான். பிறகு, அந்த விருஷ்ணி குலத்து அச்யுதன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலானதும், தங்க வேலைப்பாடுகள் கொண்டதுமான அழகிய இருக்கை ஒன்றில் அமர்ந்தான். குரு {கௌரவ} மன்னன் {துரியோதனன்}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஒரு மாட்டையும், தயிர்க்கடைசலையும், நீரையும் காணிக்கையாக்கி, தனது அரண்மனைகள், மாளிகைகள் மற்றும் முழு நாட்டையும், அவனது {கிருஷ்ணனின்} பயன்பாட்டுக்காக வைத்தான். பிறகு அங்கிருந்த மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தனது இருக்கையில் இருந்த கோவிந்தனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.

வழிபாடுகள் முடிந்ததும், மன்னன் துரியோதனன், வெற்றியாளர்களில் முதன்மையானவனான அந்த விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை}, தனது இல்லத்தில் உண்ண அழைத்தான். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} அந்த அழைப்பை ஏற்கவில்லை. குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் அமர்ந்திருந்தவனும், குரு {கௌரவ} மன்னனுமான துரியோதனன், மென்மையான குரலில், ஆனால், தனது வார்த்தைகளுக்குப் பின்னால் மறைபொருளுடன் கூடிய ஏமாற்றுத்தனங்களுடன், கர்ணனை {ஓரக்கண்ணால்} பார்த்துக் கொண்டே, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} உரையாடி, பிறகு {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனக்காகத் தயாராக வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான உணவுகளையும் பானங்களையும், ஆடைகளையும், படுக்கைகளையும் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? உனது உதவியை நீ இரு தரப்புக்கும் அளித்திருக்கிறாய்; நீ இரு தரப்புகளின் நன்மையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். மேலும், நீ திருதராஷ்டிரரின் உறவினர்களில் முதன்மையானவனும், அவரால் மிகவும் விரும்பப்படுபவனும் ஆவாய். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அறம், பொருள் ஆகிய இரண்டையும், அனைத்தின் விபரங்களையும் நீ முழுமையாக அறிவாய். எனவே, ஓ! சக்கரம் மற்றும் கதாயுதம் தாங்குபவனே {கிருஷ்ணா}, உனது மறுப்புக்கான உண்மைக் காரணம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனா}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மா கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தனது வலிய (வலது) கரத்தை உயர்த்தி, அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மறுமொழியாக, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில், காரணங்கள் நிறைந்தவையும், தெளிவானவையும், தனித்துவமானவையும், சரியாக உச்சரிக்கப்பட்டவையும், ஓர் எழுத்தும் விடுபடாதவையுமான அற்புத வார்த்தைகளில், "ஓ! மன்னா {துரியோதனா}, தங்கள் காரியங்கள் வெற்றியடைந்த பிறகு மட்டுமே, தூதர்கள் உண்ணவும், வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, எனது காரியம் வெற்றியடைந்ததும், நீ என்னையும், எனது பணியாட்களையும் உற்சாகப்படுத்தலாம்" என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிப் பதிலுரைக்கப்பட்டதும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, மீண்டும் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ எங்களிடம் இப்படி நடந்து கொள்வது உனக்குத் தகாது. {வந்திருக்கும் காரியத்தில்} நீ வெற்றியடைந்தாலும், வெற்றியடையாவிட்டாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ எங்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே நாங்கள் உன்னை நிறைவு செய்ய முயல்கிறோம். எனினும், ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, எங்களது அந்த முயற்சியெல்லாம் கனியற்றதாகத் தோன்றுகிறது. அல்லது, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நட்பாலும் அன்பாலும் நாங்கள் வழங்கும் வழிபாட்டை நீ ஏற்காததன் விளைவில் எந்தக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை. {எங்கள் விருந்தோம்பலை நீ ஏற்காததற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை}. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, எங்களுக்கு உன்னிடம் பகையோ, சண்டையோ கிடையாது. எனவே, சிந்தித்துப் பார்த்தால், இது போன்ற அந்த வார்த்தைகள் உனக்குத் தகாது என்பது உனக்குத் தெரியும்" என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தனது கண்களைத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} மற்றும் அவனது ஆலோசகர்கள் மீது செலுத்தியபடி {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, "ஆசையாலோ, கோபத்தாலோ, அகந்தையாலோ, பொருளீட்டவோ, வாதத்தின் பொருட்டோ, மயக்கத்தாலோ நான் ஒருபோதும் அறத்தைக் கைவிடமாட்டேன். துயரத்தில் இருக்கும்போது ஒருவன் மற்றொருவரின் உணவைக் கொள்கிறான். எனினும், தற்போதோ, ஓ! மன்னா {துரியோதனா}, உனது எந்தச் செயலாலும் நீ என்னிடம் அன்பை ஈர்க்கவில்லை, அல்லது நானும் துயரில் மூழ்கிவிடவில்லை.

ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்து அறங்களையும் கொண்டவர்களும், அன்பான மற்றும் மென்மையான உனது சகோதரர்களுமான பாண்டவர்களை, அவர்கள் பிறந்ததிலிருந்தே, எக்காரணமும் இன்றி நீ வெறுக்கிறாய். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ கொண்டிருக்கும் நியாயமற்ற வெறுப்பு உனக்குக் கெடுதியையே செய்யும். பாண்டுவின் மகன்கள் அனைவரும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருப்பவர்கள். உண்மையில், எவனால் அவர்களுக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்த முடியும்? அவர்களை வெறுப்பவன், என்னையே வெறுக்கிறான்; அவர்களை விரும்புபவன், என்னையே விரும்புகிறான். அறம்சார்ந்த பாண்டவர்களுக்கும் எனக்கும் பொதுவான  ஆன்மா ஒன்றே {நாங்கள் வேறு வேறு அல்ல} என்பதை அறிந்து கொள்வாயாக.

காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதலைத் தொடர்ந்து, தன் ஆன்மாவின் இருளால், அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவனை வெறுத்து, அவனைக் காயப்படுத்த முயல்பவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தாலும், கோபம் நிறைந்த பாதகன் ஒருவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். கட்டுபாடற்ற ஆன்மா கொண்ட கோபம் நிறைந்த அந்தப் பாதகன், தனது அறியாமையாலும் பேராசையாலும், அனைத்து மங்கலகரமான குணங்களையும் கொண்ட தனது இரத்த உறவினர்களை வெறுத்தால், அவன் தனது செழிப்பில் நீண்ட காலம் இன்புற முடியாது. {அவனால் தனது செழிப்பை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது}. மறுபுறம், தனது நல்ல அலுவல்களால், நற்குணங்கள் கொண்ட மனிதர்களை வென்றெடுக்கும் ஒருவன், தனது இதயத்தில் அவர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தாலும், செழிப்பையும், புகழையும் சதாகாலமும் அவன் அனுபவிப்பான். எனவே, தீமையால் அசுத்தமான இந்த உணவு அனைத்தும், என்னால் உண்ணத்தக்கது அல்ல. விதுரரால் வழங்கப்படும் உணவை மட்டுமே, நான் உண்ணலாம் என நான் நினைக்கிறேன்" என்று மறுமொழி கூறினான் {கிருஷ்ணன்}.

தனது விருப்பங்களுக்கு எதிரான எதையும் எப்போதும் தாங்கிக் கொள்ள இயலாதவனான துரியோதனனிடம் இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} சுடர்மிகும் அரண்மனையில் இருந்து வெளியே வந்தான். உயர்ந்த ஆன்மாவும், வலிய கரங்களையும் கொண்ட அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அம்மாளிகையில் இருந்து வெளியே வந்து, ஒப்பற்ற விதுரனின் இல்லத்தை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இல்லத்தில் தங்கியிருந்த போது, துரோணர், கிருபர், பீஷ்மர், பாஹ்லீகன் மற்றும் பல கௌரவர்கள் அங்கே வந்தனர். அங்கே வந்த அந்தக் கௌரவர்கள் மாதவனிடம், அந்த வீர மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, எங்கள் இல்லங்களையும், அதில் இருக்கும் செல்வங்களையும் நாங்கள் உன் ஆளுகைக்குள் வைக்கிறோம்" என்றனர்.

பெரும் சக்தி கொண்ட அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவர்களிடம், "நீங்கள் செல்லலாம். உங்கள் காணிக்கைகளால் நான் பெருமையடைகிறேன்" என்றான். அந்தக் குருக்கள் அனைவரும் சென்ற பிறகு, விதுரன், அந்தத் தாசார்ஹ குலத்தின் வீழாத வீரனை {கிருஷ்ணனை}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களுடன் கவனித்து உற்சாகப்படுத்தினான். அந்த ஒப்பற்ற கேசவனின் {கிருஷ்ணனின்} முன்பு, குந்தி, சுத்தமானதும், சுவை நிறைந்ததுமான உணவைக் அபரிமிதமாக வைத்தாள். அதைக் கொண்டு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, முதலில் அந்தணர்களை நிறைவு செய்தான். உண்மையில், நிறையச் செல்வங்களுடன் சேர்த்து அந்த உணவின் ஒரு பகுதியை வேதமறிந்த பல அந்தணர்களுக்குக் கொடுத்தான். பிறகு, விதுரனால் வழங்கப்பட்ட சுவை நிறைந்த சுத்தமான உணவில் மீந்ததைக் கொண்டு, மருதர்களுக்கு மத்தியில் இருக்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, தனது பணியாட்களுடன் சேர்ந்து அவன் உண்டான்", என்றார் {வைசம்பாயனர்}.

Wednesday, May 13, 2015

இருள் விலகிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 90இ

Kunti dispelled from darkness! | Udyoga Parva - Section 90c | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –19)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் குந்தி தனது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு தனது மகன்களுக்குச் சொல்ல வேண்டியதைக் கிருஷ்ணனிடம் சொன்னது; குந்திக்கு ஆறுதலைச் சொன்ன கிருஷ்ணன், பாண்டவர்களின் நலத்தையும் மகிழ்ச்சியையும் சொன்னது; கிருஷ்ணனைப் புரிந்து கொண்ட குந்தி இருள் விலகி கிருஷ்ணனைப் புகழ்ந்தது...

{குந்தி கிருஷ்ணனிடம் தொடர்ந்தாள்}, "ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரனிடம், "ஓ! மகனே {யுதிஷ்டிரனே} உனது அறம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அறத்தகுதி அழிந்து போகாத வகையில் செயல்படுவாயாக" என்று {நான் சொன்னதாகச்} சொல்வாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பிறரைச் சார்ந்து வாழ்வது இழிவே. அற்பத்தனம் மூலம் {கெஞ்சி வாழ்வதன் மூலம்} வாழ்வாதாரத்தைப் பெறுவதைவிட மரணமே மேலானது.


தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, எப்போதும் தயாராக இருக்கும் விருகோதரனிடமும் {பீமனிடமும்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் எதை நோக்கமாகக் கொண்டு ஒரு மகனைப் பெறுகிறாளோ, அந்நிகழ்வுக்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதையும் சாதிக்காமல் நேரத்தை நழுவ விட்டீர்களேயானால், இப்போது உலகமனைத்தாலும் மதிக்கப்படும் நீங்கள், பின்பு, இழிந்ததாகக் கருதப்படும் ஒன்றையே செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இழகச்சியை அடைந்தால், நான் உங்களை என்றென்றைக்கும் கைவிட்டுவிடுவேன். நேரம் வரும்போது, அன்பிற்குரிய {தனது} உயிர்கூட விடப்பட வேண்டும்" என்று சொல்வாயாக.

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுல சகாதேவனிடம்}, "க்ஷத்திரிய வழக்கங்களின் படி வாழ விரும்பும் மனிதனின் இதயத்தை, தன் ஆற்றலால் வெல்லப்பட்ட பொருட்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். எனவே, ஆற்றலால் {வீரத்தால்} அடையத்தக்க இன்ப {மகிழ்ச்சியைத் தரக்கூடிய} பொருட்களை வெல்ல முயலுங்கள்" என்று சொல்வாயாக.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அங்கே சென்று, ஆயுதம் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவனும், பாண்டுவின் வீரமகனுமான அர்ஜுனனிடம், "திரௌபதி சுட்டிக்காட்டும் பாதையில் நீ நடப்பாயாக" என்று சொல்வாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, அண்டத்தை அழிப்பவனைப் போன்ற பீமனும் அர்ஜுனனும், கோபத்தால் தூண்டப்படும்போது, தேவர்களையே கூட அவர்களால் கொல்ல இயலும் என்பது நீ அறிந்ததே. அவர்களது மனைவியான கிருஷ்ணையை {திரௌபதியை} துச்சாசனனும், கர்ணனும் சபைக்கு இழுத்து வந்து அவமதித்துப் பேசியது, அவர்களுக்கு {பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்} இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும்.

குரு {கௌரவத்} தலைவர்களின் முன்னிலையிலேயே பெரும்பலமிக்க சக்தி கொண்ட பீமனை துரியோதனனே அவமதித்திருக்கிறான். அந்த நடத்தைக்கான கனியை {பலனை} அவன் {துரியோதனனே} அறுவடை செய்வான் {அடைவான்} என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், எதிரியால் தூண்டப்பட்டால், விருகோதரன் {பீமன்} அமைதியை அறியமாட்டான். உண்மையில், ஒரு முறை தூண்டப்பட்டுவிட்டால், நீண்டகாலத்துக்கு அதைப் பீமன் மறக்க மாட்டான். அந்த எதிரியும், அவனது கூட்டாளிகளும் அழியும் வரை அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்} மறக்க மாட்டான். நாட்டை இழந்தது என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை; பகடையில் தோற்றதும் என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை. ஒற்றையாடை உடுத்தியிருந்தவளும், ஒப்பற்றவளும், அழகானவளுமான பாஞ்சால இளவரசி {திரௌபதி} சபைக்கு இழுத்துவரப்பட்டு, கசப்பான வார்த்தைகளைக் {அவள்} கேட்குமாறு செய்யப்பட்டதே என்னை மிகவும் துன்புறுத்தியது. ஓ! கிருஷ்ணா, இதைவிட எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?

ஐயோ, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு என்றும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், பெரும் அழகுடையவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, மேனி சுகமில்லாத போது {மாதவிலக்காய் இருந்த போது}, இப்படிக் கொடூரமாக நடத்தப்பட்டாளே. வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டவளாய் இருந்தாலும், யாருமற்றவளைப் போல, அப்போது ஆதரவற்று இருந்தாளே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னையும், பலமிக்க மனிதர்களில் முதன்மையான அந்த ராமனையும் {பலராமனையும்}, வலிமைமிக்கத் தேர் வீரனான பிரத்யும்னனையும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பாதுகாவலர்களாய்க் கொண்டிருந்தும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, எனது மகன்களான யாரும் வெல்லமுடியாத பீமன், புறமுதுகிடாத விஜயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உயிரோடு இருந்தும், நான் இத்தகு துயரைத் தாங்க வேண்டியிருப்பது நிச்சயம் விசித்திரமாகவே இருக்கிறது!" என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி அவளால் {குந்தியால்} சொல்லப்பட்டதும், பார்த்தனின் {அர்ஜுனனின்} நண்பனான சௌரி {கிருஷ்ணன்}, தன் மகன்களைக் குறித்த துயரில் பாதிக்கப்பட்டிருந்த தனது அத்தை {தந்தையின் சகோதரி} பிருதையைத் {குந்தியைத்} தேற்றினான். மேலும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஓ! அத்தை {குந்தி}, உன்னைப் போன்ற எந்தப் பெண் இந்த உலகில் இருக்கிறாள்? மன்னன் சூரசேனருக்கு மகளான நீ, திருமணத்தால் அஜமீட குலத்தை {குருகுலத்தை} அடைந்தாய். உயர்ந்த பிறப்பும், உயர்ந்த மணமும் கொண்ட நீ, ஒரு பெரிய தடாகத்தில் இருந்து மற்றொரு பெரிய தடாகத்திற்கு மாற்றப்பட்ட தாமரையைப் போன்றவளாவாய்.

செழிப்புகள் அனைத்தையும், பெரும் நற்பேறையும் பெற்ற நீ, உனது கணவரால் {பாண்டுவால்} வணங்கப்பட்டாய். அறங்கள் அனைத்தையும், பெரும் அறிவையும் உடைய நீ, இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்வதே உனக்குத் தகும். உறக்கம், தளர்வு, கோபம், மகிழ்ச்சி, பசி, தாகம், குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றில் இருந்து மீண்ட உனது பிள்ளைகள், வீரர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். பெரும் முயற்சியும், பெரும் பலமும் கொண்ட உனது மகன்கள், தாழ்ந்த மற்றும் சராசரியானவர்களுக்கு மட்டுமே மனநிறைவைத் தருகின்றதும், புலன்களால் பெறப்படுவதுமான வசதிகளால் பாதிக்கப்படாமல், வீரர்களுக்குத் தகுந்த இன்பத்தை எப்போதும் தொடர்ந்து செல்கிறார்கள். அதே போலச் சராசரி ஆசைகளைக் கொண்ட சிறிய மனிதர்களைப் போல, அவர்கள் மனநிறைவை அடைவதில்லை.

மகிழ்ச்சிகரமானதையும், துன்பகரமானதையோ, அறிவுடையோர், அதே இன்பத்துடனோ துன்பத்துடனோ பெற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், குறைந்த அல்லது சராசரி மனிதர்களை மனநிறைவு கொள்ளச் செய்யும் வசதிகளால் பாதிக்கப்பட்டு, எந்த வகையான உற்சாகமும் அற்ற மந்த நிலைக்கு இணையான நிலையையே சாதாரண மனிதர்கள் விரும்புகின்றனர். எனினும், மேன்மையானவர்களோ, மனித துயரங்களில் தீவிரமானதையோ, அல்லது, மனிதனுக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சிகள் அனைத்திலும் உயர்ந்ததையோ தான் விரும்புகிறார்கள். அறிவுடையோர் எல்லை கடந்தவற்றிலேயே {அதீத [தீவிர] நிலைகளிலே} இன்புறுகின்றனர். இடைநிலைகளில் அவர்கள் இன்பத்தைக் காண்பதில்லை; எல்லை கடந்தவற்றையே {அதீதமான இரு நிலைகளையே} அவர்கள் இன்பமாகக் கருதுகிறார்கள். அதே வேளையில், {இரு நிலைகளுக்கும்} இடைநிலையைத் {அதீத நிலை இரண்டுக்கும் நடுவில் இருப்பதைத்} துயரமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள் என் மூலமாக உன்னை வணங்குகிறார்கள். தாங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லி, உனது நலத்தை விசாரிக்கிறார்கள். தங்கள் எதிரியைக் கொன்று, செழிப்பை முதலீடாக்கிக் கொண்டு, முழு உலகத்தின் தலைவர்களாக அவர்களை {பாண்டவர்களை} நீ விரைவில் காண்பாய்", என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிக் கிருஷ்ணனால் தேற்றப்பட்டவளும், தன் மகன்கள் குறித்த துயரத்தால் பாதிக்கப்பட்டவளுமான குந்தி, தனது புரிதலை தற்காலிகமாக இழந்திருந்ததால் விளைந்த இருளை விரைவாக அகற்றி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எதைச் செய்வது முறையானது என்று நீ கருதுகிறாயோ, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, சிறு கபடமும் இல்லாமல், நீதியைத் தியாகம் செய்யாமல் அது செய்யப்படட்டும். ஓ! கிருஷ்ணா, உனது உண்மை {சத்தியம்} மற்றும் உனது பரம்பரையின் பலம் என்ன என்பதை நான் அறிவேன். உனது நண்பர்கள் சம்பந்தமானவற்றைச் செய்து முடிக்க, என்ன தீர்ப்பையும், என்ன ஆற்றலையும் நீ வெளிப்படுத்துவாய் என்பதையும் நான் அறிவேன். எங்கள் குலத்தில், நீயே அறம் {தர்மம்}, நீயே உண்மை {சத்தியம்}, நீயே தவத்துறவுகளின் உருவகமும் ஆவாய். நீயே அந்தப் பெரும் பிரம்மம், அனைத்தும் உன் மீதே இருக்கின்றன. எனவே, நீ சொன்னது அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வலம் வந்து, அவளிடம் பிரியாவிடை பெற்றவனும் வலிய கரங்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, {அங்கிருந்து} துரியோதனனின் மாளிகைக்குப் புறப்பட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.


குந்தியின் சோகம்! - உத்யோக பர்வம் பகுதி 90ஆ

The sorrow of Kunti | Udyoga Parva - Section 90b | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –19)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் கைகளில் திரௌபதி அடைந்த அவமானத்தைக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது; அதைவிடப் பெரிய துயரம் தனக்கு வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டது; சூதும் வேட்டையும் பாண்டவர்களுக்குத் தகுமா என்று கேட்டது; தர்மத்தின் நிமித்தமாகப் பாண்டவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்று சொன்னனது; அர்ஜுனன் பிறந்தபோது அசரீரி செய்த அறிவிப்பைச் சொன்னது; நீண்ட நாளாகக் காணாதிருப்பதால் தனக்குத் தன் பிள்ளைகளும், தன் பிள்ளைகளுக்குத் தானும் இறந்ததற்குச் சமமாக இருப்பதாகக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது...

{குந்தி தொடர்ந்தாள்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது மகன்களுக்கு மேலாக, துருபதனின் மகள் {திரௌபதி} எனது அன்புக்குரியவள் ஆவாள். உயர்குலப் பிறப்பும், பெரும் அழகும் கொண்ட அவள் {திரௌபதி} அனைத்து சாதனைகளையும் கொண்டவளாவாள். உண்மை நிறைந்த பேச்சுடன் கூடிய அவள் {திரௌபதி}, தனது மகன்களின் துணையை விட்டு, தனது தலைவர்களின் துணையைத் தேர்ந்தெடுத்தாள். உண்மையில், தனது அன்புக்குரிய மகன்களை விட்டுவிட்டு, பாண்டுவின் மகன்களைப் பின்தொடர்ந்து சென்றாள். ஒரு காலத்தில் பணியாட்களின் பெரிய வரிசையால் காக்கப்பட்டவளும் {பணிவிடை செய்யப்பட்டவளும்}, இன்ப நோக்கம் அனைத்திலும் தனது கணவர்களால் புகழப்பட்டவளும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, மங்கலக்குறிகள் மற்றும சாதனைகள் அனைத்தையும் கொண்டவளுமான அந்தத் திரௌபதி இப்போது எப்படி இருக்கிறாள்?


அக்னிக்கு நிகரான சக்தியைக் கொண்டவர்களும், எதிரிகளை அடிப்பவர்களும், வலிய வில்லாளிகளுமான ஐந்து வீரக் கணவர்களைக் கொண்டிருந்தும், ஐயோ, துருபதன் மகள் {திரௌபதி} அடைந்த துன்பம் பெரியதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பதினான்கு {14} நீண்ட வருடங்களாகப் பாஞ்சால இளவரசியான எனது மருமகளை {திரௌபதியை} நான் காணவில்லை. தொடர் இடர்களுக்கு இரையான அவளும், அவ்வளவு காலம் தன் மகன்களைக் காணவில்லை. இப்படிப்பட்ட நிலையைக் கொண்ட துருபதனின் மகளே {திரௌபதியே}, தடங்கலில்லா இன்பத்தை அனுபவிக்க இயலாத போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, ஒருவன் அனுபவிக்கும் மகிழ்ச்சி, அவனது செயல்களின் கனி அல்ல என்றே தோன்றுகிறது.

வலுக்கட்டாயமாகச் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்ட திரௌபதியை நினைக்கும்போது, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, யுதிஷ்டிரனோ, பீமனோ, நகுலனோ, சகாதேவனோ என் பற்றுக்கு ஆட்படவில்லை. கோபமும், பேராசையும் கொண்ட இழிந்த துச்சாசனன், மாதவிலக்கான காலத்தில் ஒற்றையாடையுடுத்தியிருந்த திரௌபதியை, அவளது மாமனார் {திருதராஷ்டிரரின்} முன்னிலையிலேயே இழுத்துவந்து, குருக்கள் அனைவரின் பார்வைக்கும் அவளை {திரௌபதியை} வெளிப்படுத்தியபோது ஏற்பட்டதைவிடக் கனமான துயரம் எனக்கு வேறு எதுவும் கிடையாது.

அங்கே இருந்தவர்களில் மன்னன் பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன் ஆகியோர் இந்தக் காட்சியால் துளைக்கப்பட்டனர் என்பது அறியப்பட்டதே. ஆனால், அந்தச் சபையில் இருந்தோர் அனைவரைக்காட்டிலும் நான் விதுரனையே வழிபடுகிறேன். கல்வியாலோ, செல்வத்தாலோ ஒருவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவனாகமாட்டான். ஒருவன் தனது மனநிலையாலேயே மதிப்புக்குரியவன் ஆகிறான். ஓ! கிருஷ்ணா, பெரும் புத்திசாலித்தனமும், ஆழ்ந்த ஞானமும் கொண்ட ஒப்பற்ற விதுரனின் குணம், இந்த முழு உலகத்தையும் (அவன் அணிந்திருக்கும்) ஆபரணம் போல அலங்கரிக்கிறது" என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வரவால் மகிழ்ச்சியையும், (தனது மகன்கள் நிமித்தமான) சோகத்தாலும் பாதிக்கப்பட்ட பிருதை {குந்தி}, தனது பல்வேறு துயரங்களுக்குமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள். அவள் {குந்தி}, "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பழங்காலத்துத் தீய மன்னர்கள் அனைவரின் தொழிலான சூதும், மான்வேட்டையும், பாண்டவர்களின் மகிழ்ச்சிக்குகந்த தொழிலாகுமா? ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகன்களால் தங்கள் சபையில் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் முன்னிலையில் இழுத்துவரப்பட்டு, மரணத்தைவிடக் கொடுமையான அவமானங்கள் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மீது குவிக்கப்பட்டதையும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது மகன்கள் தங்கள் தலைநகரில் இருந்து விரட்டப்பட்டுக் காட்டில் உலவியதையும், இன்னும் எனது பல்வேறு துயரங்களையும் நினைக்கும்போதெல்லாம் எனக்கு {எனது மனம்} எரிகிறது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு அந்நியரின் வீட்டில் அடைந்து கிடந்து, தங்கள் காலத்தை மறைந்திருந்து கழிக்க வேண்டிய நிலையைக் காட்டிலும் எனக்கோ, எனது மகன்களுக்கோ வேறு எதுவும் அதிக வலியைத் தராது.

என் மகன்களைத் துரியோதனன் துரத்தியது முதல் பதினான்கு {14} வருடங்கள் முழுமையாக முடிந்திருக்கிறது. பாவங்களின் கனிகளை {பலன்களை} துன்பம் அழிக்கும், அறத்தகுதியைச் சார்ந்தே மகிழ்ச்சி இருக்கும் என்றால், இவ்வளவு துன்பங்களுக்குப் பிறகு, மகிழ்ச்சி என்பது எங்களுடையதே ஆகும். (தாய்ப்பாசத்தைப் பொறுத்தவரை) நான் திருதராஷ்டிரர் மகன்களிடமும் எனது மகன்களிடமும் எந்தப் பாகுபாட்டையும் காட்டவில்லை. அந்த உண்மையின் காரணமாகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களது எதிரிகள் கொல்லப்பட்டு, அவர்களால் நாடும் மீட்கப்பட்டு, தற்போதைய கலவர நிலையில் இருந்து வெளியே பாதுகாப்பாக வரும் அவர்களோடு {பாண்டவர்களோடு} உன்னையும் நான் நிச்சயம் காண்பேன். அறத்தை ஒட்டியிருக்கும் உண்மைநிறைந்த நோன்பை நோற்றப் பாண்டவர்கள், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எனினும், தற்போதைய எனது சோகங்களின் காரியத்தில் நான் என்னையோ, சுயோதனனையோ {துரியோதனனையோ} பழி கூறாமல் எனது தந்தையை {சூரசேனரை} மட்டுமே கூறுவேன். செல்வந்தன் ஒருவன் பணத்தைக் கொடையாகக் கொடுப்பது போல, என் தந்தை {சூரசேனர்}, என்னைக் குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். சிறுபிள்ளையாகக் கைகளில் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த என்னை, உனது பாட்டன் {சூரசேனர்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, தனது நண்பரான ஒப்பற்ற குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். எனது தந்தையாலும், எனது மாமனாராலும் கைவிடப்பட்ட நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, ஓ! மாதவா, தாங்கமுடியாத துயரங்களால் பீடிக்கப்பட்டு, வாழ்வதில்தான் என்ன பயன் இருக்க முடியும்? {பிறந்த இடத்திலும் கைவிடப்பட்டேன், புகுந்த இடத்திலும் கைவிடப்பட்டேன். அப்படிப்பட்ட நான் வாழ்ந்துதான் என்ன பயன்?}.

சவ்யசச்சின் {அர்ஜுனன்} பிறந்த அன்றிரவு, பிரசவ அறையில், உருவமற்ற ஒரு குரல், "இந்த உனது மகன் உலகம் முழுதையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே எட்டும். பெரும் போரில் குருக்களைக் கொன்று, நாட்டை மீட்கும் உனது மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் சேர்ந்து, மூன்று பெரிய வேள்விகளை நடத்துவான்" என்றது. நான் அந்த அறிவிப்பை சந்தேகிக்கவில்லை. படைப்பைத் தாங்கிப்பிடிக்கும் தர்மத்தை {அறத்தை} நான் வணங்குகிறேன். தர்மம் {அறம்} என்பது கட்டுக்கதை {தொன்மம்} அல்ல என்றால், ஓ! கிருஷ்ணா, அந்த உருவமற்ற குரல் சொன்ன அனைத்தையும் நீ சாதிப்பாய்.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனது பிள்ளைகளின் பிரிவைப் போன்ற வலிநிறைந்த துயரை, எனது கணவரின் இழப்போ, செல்வத்தின் இழப்போ, குருக்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட பகையோகூட எனக்கு அளிக்கவில்லை. ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை}, அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை} என் முன்னே காணாமல், என் இதயம் என்ன சமாதானத்தை அடையும்? ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, யுதிஷ்டிரன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} ஆகியோரை பதினான்கு {14} வருடங்களாக நான் காணவில்லை. நீண்ட நாட்கள் காணாமல் போனவர்களை [1] இறந்ததாகக் கருதி மனிதர்கள் ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். நடைமுறைப்படி, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனக்கு எனது பிள்ளைகள் அனைவரும் இறந்தவராவர். அதே போல, நானும் அவர்களுக்கு இறந்தவளாவேன்" {என்றாள் குந்தி}

[1] பழங்காலத்தில் பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக ஒருவரைக் காணவில்லையென்றால், அவரை இறந்தவராகக் கருதுவார்களாம்."கண்மணி நகுலனைக் காண்பேனா?" என்றாள் குந்தி - உத்யோக பர்வம் பகுதி 90அ

"Shall I behold again Nakula of mine?" asked Kunti | Udyoga Parva - Section 90a | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –19)

பதிவின் சுருக்கம் : விதுரனைச் சந்தித்த கிருஷ்ணன், பிற்பகலில் குந்தியைச் சந்தித்தது; நீண்ட காலத்திற்குப் பிறகு கிருஷ்ணனைக் கண்ட குந்தி அழுவது; தன் மகன்கள் எப்படியெல்லாம் ஆடம்பரமாக வளர்க்கப்பட்டார்கள் என்பதைச் சொல்வது; அப்படிச் சொகுசாக வளர்ந்தவர்கள் காட்டில் எப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லி குந்து அழுவது; பாண்டவர்கள் ஒவ்வொருவர் திறமைகளையும் குணங்களையும் கிருஷ்ணனிடம் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியிருக்கிறார்கள் என்று குந்தி கேட்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விதுரனைச் சந்தித்தபிறகு, பிற்பகலில், தனது அத்தையான {தந்தையின் சகோதரியான} பிருதையிடம் {குந்தியிடம்} சென்றான். சூரியனைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்ட கிருஷ்ணன், தனது இல்லத்திற்கு வந்ததைக் கண்ட அவள் {குந்தி}, தனது கரங்களால் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு தனது மகன்களை நினைத்து அழுது புலம்ப ஆரம்பித்தாள்.

தனது பெரும்பலமிக்க மகன்களின் துணைவனான விருஷ்ணி குலத்துக் கோவிந்தனை {கிருஷ்ணனை} நீண்ட காலம் கழித்துக் கண்டதால், பிருதையின் {குந்தியின்} கண்ணீர் வேகமாக வழிந்தது. வீரர்களில் முதன்மையான கிருஷ்ணன், விருந்தோம்பல் சடங்குகள் முடிந்து இருக்கையில் அமர்ந்த பிறகு, துயரால் சுண்டிய முகம் கொண்ட பிருதை {குந்தி - கிருஷ்ணனிடம்}, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "ஆரம்பக் காலத்திலிருந்தே பெரியோர்களுக்காக மரியாதையாக எப்போதும் காத்திருந்தவர்களும் {பணிவிடை செய்தவர்களும்}; தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நட்பால் இணைந்தவர்களும்; நண்பர்களுடனும் பணியாட்களுடனும் வாழத் தகுதியிருப்பினும், வஞ்சனையால் தங்கள் நாடு பறிக்கப்பட்டு விலகியவர்களும், கோபத்தையும் மகிழ்ச்சியையும் அடக்கி, அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களுமான எனது பிள்ளைகள், நாட்டையும், இன்பங்களையும் கைவிட்டு, துக்கத்தில் இருந்த என்னையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று எனது இதயத்தின் வேரையே பிடுங்கிப் போட்ட ஒப்பற்ற அந்தப் பாண்டுமகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துயரத்திற்குத் தகாதவர்களாக இருப்பினும் துன்பப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஐயோ, சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி வாழ்ந்தார்கள்?


குழந்தையாக இருந்தபோதே {சிறு வயதிலேயே} தந்தையைப் பறிகொடுத்து என்னால் மென்மையாக {அன்பாக} வளர்க்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், பெற்றோர் இருவரையும் காணாமல் அந்தப் பெருங்காட்டில் எப்படி வாழ்ந்தார்கள்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் தங்கள் சிறுவயதிலிருந்தே சங்குகள், பேரிகைகள் மற்றும் புல்லாங்குழல்களின் இசையால் தங்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள். வீட்டில் இருக்கும்போது, உயர்ந்த அரண்மனை அறைகளில் மென்மையான போர்வைகள் மற்றும் ரங்கு மான் தோல் ஆகியவற்றில் உறங்கியவர்கள். காலையில் யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, சங்கு, கைத்தாள {ஜால்ரா} ஒலியாலும், யாழ் மற்றும் குழலின் இசையாலும் எழுப்பப்பட்டவர்கள். அந்தணர்களால் உச்சரிக்கப்பட்ட புனித ஒலி கொண்ட பாடல்களால் அதிகாலையிலேயே துதிக்கப்பட்டு, அவர்களில் தகுந்தவர்களை ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் நகைகளால் வணங்கியவர்கள். மறுபிறப்பாள வகையின் ஒப்பற்ற உறுப்பினர்கள் {அந்தணர்கள்} அடைந்த விருந்தோம்பலுக்குப் பதிலாக, அவர்களிடம் மங்கல ஆசிகளைப் பெற்றவர்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்படிப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}; இரைதேடும் விலங்குகளின் கீச்சொலி மற்றும் அலறல்கள் போன்ற துன்பங்களுக்குத் தகாத அவர்கள்; ஆழமான காடுகளில் உறக்கம் கொண்டார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தொழில்முறை காரிகள் {ஓதுவார்கள்} மற்றும் பாணர்களின் துதிமுழக்கங்கள், பாடல் மகளிரின் தேன்குரலுடன் கூடிய கைத்தாளங்கள், பேரிகைகள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையால் படுக்கையில் இருந்து எழுப்பபட்டவர்கள், ஐயோ, காட்டு விலங்குகளின் அலறல்களுடன் கூடிய ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி எழுந்தார்கள்?

பணிவு கொண்டவனும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதி கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டவனும், காமத்தையும், தீமையையும் வீழ்த்தி, எப்போதும் நீதியின் பாதையில் நடப்பவனும், அம்பரீஷன், மாந்தாதா, யயாதி, நகுஷன், பரதன், திலீபன், உசீநரனின் மகனான சிபி மற்றும் பழங்கால அரசமுனிகள் தாங்கியது போலப் பெரும்பாரத்தைத் தாங்க இயன்றவனும், அற்புத குணமும், மனநிலையும் கொண்டவனும், அறத்தை அறிந்தவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தான் கொண்ட சாதனைகள் அனைத்தின் விளைவாக, மூவுலகத்திற்கும் ஏகாதிபதியாகக் கூடிய தகுதி கொண்டவனும், கல்வி மற்றும் மனநிலையால் நீதி நிறைந்த குருக்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அழகானவனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், எதிரியற்றவனும், சுத்தமான தங்கம் போன்ற நிறமுடையவனும் அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனுமான அந்த யுதிஷ்டிரன் எப்படி இருக்கிறான்?

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், காற்றின் வேகம் கொண்டவனும், பலமிக்கவனும், பாண்டு மகன்களில் எப்போதும் கோபம் நிறைந்தவனும், தனது சகோதரர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவனும், அதனால் அவர்கள் அனைவருக்கும் அன்பானவனும், உறவினர்கள் அனைவருடனும் கூடிய கீசகனைக் கொன்றவனும், குரோதவாசர்கள், ஹிடிம்பன் {இடும்பன்}, பகன் ஆகியோரைக் கொன்றவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலும், காற்று தேவனுக்கு {வாயுத்தேவனுக்கு} நிகரான வலிமையும் கொண்டவனும், பயங்கரமானவனும், மாதவனுக்கு இணையான கோபம் கொண்டவனும், அடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கோபம்நிறைந்த பாண்டு மகனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், கோபம், வலிமை, பொறுமையின்மை, ஆகியவற்றை ஒடுக்கி, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, தனது அண்ணனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பவனும், அளவற்ற வீரம் கொண்டவனும், விருகோதரன் {பீமன்} என்ற தனது பெயருக்கு நியாயம் கற்பிப்பவனும், கதாயுதத்தைப் போன்ற கரங்களைக் கொண்டவனும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பாண்டுவின் வலிமைநிறைந்த இரண்டாவது மகனுமான பீமசேனன் எப்படி இருக்கிறான்?

ஓ! கிருஷ்ணா, பழங்காலத்தின் ஆயிரங்கரங்கள் படைத்த அர்ஜுனனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} பெயரைக் கொண்டிருப்பதால், தன்னை எப்போதும் மேலானவனாகக் கருதும் அந்த இருகரங்கள் கொண்டவனும், ஒரே இழுப்பில் ஐநூறு {500} கணைகளை அடிக்கவல்லவனும், மன்னன் கார்த்தவீரியனுக்கு இணையாக ஆயுதங்களைப் பயன்படுத்தும் {மூன்றாவது} பாண்டுமகனும், சக்தியில் ஆதித்தியனுக்கு இணையானவனும், புலனடக்கத்தில் பெரும் முனிவருக்கு நிகரானவனும், பொறுமையில் பூமிக்கு நிகரானவனும், ஆற்றலில் இந்திரனுக்கு நிகரானவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தனது ஆற்றலால் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரைக்காட்டிலும் பரந்த நாட்டைக் குருக்களுக்கு உண்டாக்கிக் கொடுத்தவனும், பிரகாசத்தில் சுடர் விடுபவனும், கரங்களின் வலிமைக்காகப் பாண்டவர்களால் கொண்டாடப்படுபவனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தன்னிடம் போரிட்ட எதிரியை உயிருடன் தப்பவிடாதவனும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அனைவரையும் வென்றவனும், எவராலும் வெல்லப்படாதவனும், தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போலப் பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவனும், உனது சகோதரனும் {மைத்துனனும்} நண்பனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இப்போது எப்படி இருக்கிறான்?

அனைத்து உயிர்களிடமும் கருணையுள்ளவனும், பணிவு கொண்டவனும், பலமிக்க ஆயுதங்களை அறிந்தவனும், மென்மையானவனும் {மென்மையான மேனியும்}, நுட்பமானவனும் {நுட்பமான அறிவும்}, அறம் சார்ந்தவனும், எனக்கு அன்பானவனும், ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியும், வீரனும், சபைகளின் ரத்தினமும், வயதில் இளையவனும், தனது அண்ணன்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அறம், பொருள் அறிந்தவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தன் மனோநிலைக்காக, தனது அண்ணன்களால் மெச்சப்படுபவனும், நன்னடத்தை மற்றும் உயர்ந்த ஆன்மா கொண்ட எனது மகனும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, வீரர்களில் முதன்மையானவனும், தனது அண்ணன்களுக்கு அடக்கமாகக் காத்திருப்பவனும் {பணிவிடை செய்பவனும்}, என்னிடம் மரியாதை கொண்டவனும், மாத்ரியின் மகனுமான அந்தச் சகாதேவனைக் குறித்து எனக்குச் சொல்வாயாக.

மென்மையானவனும், வயதால் இளையவனும், வீரமுடையவனும், மேனி அழகு கொண்டவனும், நம் அனைவரிடமும் தனது சகோதரர்களிடமும் அன்புடன் இருக்கும் பாண்டுமகனும், {தனது சகோதரர்களைப் பொறுத்தவரையில்}, தனி உடல் கொண்டு நடக்கும் தங்கள் உயிர் போன்றவனும், பல்வேறு வகையான போர்முறைகளை அறிந்தவனும், பெரும் பலம் கொண்டவனும், வலிய வில்லாளியும், ஆடம்பரமாக வளர்க்கப்பட்டவனும், அன்புக்குரிய எனது மகனுமான அந்த நகுலன், ஓ! கிருஷ்ணா, இப்போது நல்ல உடல்நிலையும் மனநிலையும் கொண்டிருக்கிறானா? வலிமைமிக்கத் தேர்வீரனும், அனைத்து ஆடம்பரங்களிலும் வளர்க்கப்பட்டவனும், துயருறத் தகாதவனுமான எனது நகுலனை நான் மீண்டும் காண்பேனா? ஓ! வீரா {கிருஷ்ணா} கண்ணிமைக்கும் குறுகிய நேரம் கூட நகுலனிடம் இருந்து பார்வையை அகற்றினால் அமைதியடையாத நான், இன்றும் உயிருடன் இருப்பதைப் பார்" {என்றாள் குந்தி}.

Sunday, October 12, 2014

கர்ணனின் இருப்பிடம் அறிந்த குந்தி! - வனபர்வம் பகுதி 307

Kunti knew whereabouts of  Karna!  | Vana Parva - Section 307 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

கங்கையில் மிதந்து வந்த பெட்டியை ராதை எடுப்பது; அதிரதன் அப்பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்தது; ராதை கர்ணனைத் தனது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டது; கர்ணன் அங்க தேசத்தில் வளர்வது; ஒற்றர்கள் மூலம் குந்தி கர்ணனைக் குறித்து அறிவது; இளைஞனானதும் கர்ணன் ஹஸ்தினாபுரம் வருவது; துரியோதனனுடன் கர்ணனுக்கு ஏற்பட்ட நட்பு; கர்ணன் பெரும் வில்லாளி என உலகம் புகழ்வது; அர்ஜுனனிடம் கர்ணனுக்கு ஏற்பட்ட போட்டி மனப்பான்மை; கர்ணனிடம் வந்த இந்திரன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் என்ற பெயர் கொண்ட ஒரு சூதன், தனது மனைவியுடன் கங்கையாற்றுக்கு வர நேர்ந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த அவனது {அதிரதனின்} மனைவியின் பெயர் ராதை ஆகும். அந்த உயர்ந்த அருள் பெற்ற காரிகை {ராதை}, ஒரு மகனை அடைய பெரும் முயற்சி செய்திருந்தாலும், ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, அப்படி ஒருவனைப் {ஒரு மகனைப்} பெறுவதில் தோல்வியுற்றிருந்தாள். கங்கையாற்றுக்கு வந்த அவள் {ராதை}, நீரோட்டத்தில் மிதந்து வரும் பெட்டியைக் கண்டாள். ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களுடனும், களிம்புகளுடனும் {மருந்துகளுடனும்} இருந்த அப்பெட்டியை ஜானவியின் {கங்கையின்} அலைகள் அவளிடம் {ராதையிடம்} கொண்டு வந்து சேர்த்தன. ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண் {ராதை}, அதைப் பிடிக்கச் செய்தாள். பிறகு அவள் தேரோட்டி சாதியைச் சேர்ந்த {தனது கணவன்} அதிரதனுக்கு அனைத்தையும் உரைத்தாள். இதைக்கேட்ட அதிரதன் நீர்நிலையில் இருந்து அப்பெட்டியை எடுத்து, {சில} கருவிகளைக் கொண்டு அதைத் திறந்தான். அவன் அதில் {அப்பெட்டியில்} காலைச் சூரியனைப் போன்ற பிள்ளையைக் கண்டான். அந்தக் குழந்தை தங்கக் கவசத்துடனும், காது குண்டலங்களுடன் கூடிய அழகிய முகத்துடன் இருந்தது. அதன்பிறகு அந்தத் தேரோட்டியும், அவனது மனைவியும் {ராதையும்} இத்தகு ஆச்சரியத்தால் தாக்கப்பட்டு, அதிசயத்தால் தங்கள் கண்களை அகல விரித்தனர். அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்திக் கொண்ட அதிரதன் தனது மனைவியிடம் {ராதையிடம்}, “ஓ! அச்சமுள்ள பெண்ணே {ராதை}, நான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற அதிசயத்தைக் கண்டதேயில்லை. நம்மிடம் வந்திருக்கும் இந்தக் குழந்தை தெய்வீகப் பிறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். உண்மையில், மகனற்ற எனக்குத் தேவர்களே இவனை அனுப்பி வைத்துள்ளனர்!” என்று சொல்லி, ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா} அந்தக் குழந்தையை ராதையிடம் கொடுத்தான்.


அதன்பிறகு ராதை, தேவவடிவமும், தெய்வீக பிறப்பும், தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசமும், சிறந்த அருளும் நிரம்பிய அக்குழந்தையை {கர்ணனை}, விதிப்படி {தன் மகனாக} தத்தெடுத்துக் கொண்டாள். அவளால் {ராதையால்} முறைப்படி வளர்க்கப்பட்ட அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்ட குழந்தை {கர்ணன்} வளரத் தொடங்கினான். கர்ணனைத் தத்தெடுத்த பிறகு அதிரதன், தனது மற்ற மகன்களைப் பெற்றான். பிரகாசமான கவசமும், பொன்மயமான காது குண்டலங்களும் பெற்ற அக்குழந்தைக்கு {கர்ணனுக்கு}, இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} வசுசேணன் என்று பெயரிட்டார்கள். இப்படியே பெரும் பிரகாசமும், அளவிடமுடியாத பராக்கிரமும் பெற்றவன் {கர்ணன்} தேரோட்டியின் {அதிரதனின்} மகனாகி, வசுசேணன் என்றும் விருஷன் என்றும் அறியப்பட்டான்.

தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை {குந்தி} தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை {கர்ணனை} யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்.

திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நட்பேற்பட்ட பிறகு, அவன் {கர்ணன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் காயமேற்படுத்தும் நோக்கம் கொண்டவனானான். உயர் ஆன்மா கொண்ட பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} சண்டை போடுவதையே {போரிடுவதையே} அவன் எப்போதும் விரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் {கர்ணனும் அர்ஜுனனும்} முதன்முதலாக ஒருவருக்கொருவர் பார்த்தபோதிலிருந்தே, கர்ணன் எப்போதும் அர்ஜுனனுக்குச் சவால் விடுவான். அர்ஜுனனும் அவனது பங்குக்கு  {கர்ணனிடம்} சவால் விடுவான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதுவே குந்தியிடம் தான் பெற்று, சூதர்கள் குலத்தால் வளர்க்கப்பட்ட கர்ணனைக் குறித்துச் சூரியன் அறிந்த ரகசியம் என்பதில் சந்தேகமில்லை.

காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் இருக்கும் அவனைக் {கர்ணனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனைப் {கர்ணனைப்} போரில் கொல்ல முடியாது என்று எண்ணி, அதனால் எப்போதும் {உள்ளத்தில்} பெரும் வலி கொண்டான். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நாளின் மத்திய வேளையில், கர்ணன் நீரில் இருந்து எழுந்ததும், கரங்கள் கூப்பி பிரகாசமிக்கச் சூரியனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் {கர்ணனிடம்} செல்வம் கேட்பதை அந்தணர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஒன்றைக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்கு ஏதுமில்லை. பிறகு, (இது போன்ற ஒரு சமயத்தில்) இந்திரன், அந்தண வேடம் பூண்டு அவன் {கர்ணன்} முன் தோன்றி, “எனக்குக் {பிட்சை} கொடு!” என்று கேட்டான். அதன் பிறகு ராதையின் மகன், “நீர் வரவேற்கப்படுகிறீர் {நல்வரவு}!” என்று மறுமொழி கூறினான்.தேவி பாகவதத்தில் ஒரு இடத்தில்  தச்சன் என்றும், மறுஇடத்தில் தேரோட்டி என்றும்  அதிரதன் சொல்லப்படுகிறான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, October 11, 2014

அஸ்வ நதியில் மிதந்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 306

Karna floated in river Aswa!  | Vana Parva - Section 306 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

கவசத்துடனும் காதுகுண்டலங்களுடனும் குந்திக்குக் குழந்தை பிறந்தது; குந்தி குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து அஸ்வ நதிக்கு எடுத்துச்சென்று அழுது புலம்பியது; குந்தி அப்பெட்டியை அஸ்வ நதியில் விட்டது; பெட்டி அஸ்வநதியிலிருந்து கங்கைக்கு மிதந்து சென்று சம்பா என்ற நகரத்தை அடைந்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, வளர்பிறை முதல்நாளில் {பிரதமையில்}, வருடத்தின் பத்தாவது மாதத்தில் {தை மாதத்தில்}, {on the first day of the lighted fortnight during the tenth month of the year }, ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் தலைவன் {சூரியன்} மூலம் பிருதைக்குக் {குந்திக்கு} கருவுண்டானது. சிறந்த இடைகள் {excellent hips} கொண்ட அந்தக் காரிகை {குந்தி}, நண்பர்களிடம் கொண்ட பயத்தின் காரணமாக, யாரும் தன் நிலையை அறியாதவண்ணம் தான் கருவுற்றிருப்பதை மறைத்தாள். அந்தக் காரிகை {குந்தி}, தனது நிலையைக் கவனமாக மறைத்து, கன்னியருக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிலேயே முழுவதும் வாழ்ந்த போது, அவளது {குந்தியின்} செவிலியைத் {Nurse} தவிர {வளர்ப்புத்தாயைத் தவிர என்றும் சில பதிப்புகளில் இருக்கின்றன} வேறு யாரும் அந்த உண்மையை {அவளது உண்மை நிலையை} அறியவில்லை. தெய்வத்தின் அருளால், அந்த அழகிய கன்னிகை, குறித்த நேரத்தில் தேவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.


அக்குழந்தை, தனது தந்தையை {சூரியனைப்} போலவே கவசத்துடனும், பிரகாசமான காது குண்டலங்களுடனும் இருந்தான். அவன் சிங்கம் போன்ற கண்களும், காளையைப் போன்ற தோள்களும் கொண்டிருந்தான். குழந்தையைப் பெற்றவுடனேயே, அந்த அழகிய பெண், தனது செவிலியிடம் ஆலோசித்து, மென்மையான விரிப்பும், விலையுயர்ந்த தலையணையும் செடிநார் வேலைப்பாட்டுடனும் கூடிய ஒரு வசதியான {தாராளமான இடம் கொண்ட} மென்மையான பெட்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அதன் மேற்பரப்பு மெழுகால் {தேன்மெழுகால்} தீட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டியை ஒரு வளமான மூடி பொதிந்திருந்தது. கண்களில் கண்ணீருடன் அவள் {குந்தி} அந்தக் குழந்தையை அஸ்வ நதிக்குச் சுமந்து சென்று, அந்தக் கூடையை அதன் {அந்நதியின்} நீரில் அனுப்பினாள். திருமணமாகாத ஒரு பெண், குழந்தை பெறுவது முறையற்றது என்பதை அவள் {குந்தி} அறிந்திருந்தாலும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பெற்ற பாசத்தால் அவள் பரிதாபகரமாக அழுதாள். அப்படி அஸ்வ நதியின் நீரில் பெட்டியை அனுப்பிய போது அழுது கொண்டே குந்தி சொன்ன வார்த்தைகளை {ஜனமேஜயா} நீ கேட்பாயாக!”

“ஓ! குழந்தாய், நிலம், நீர், ஆகாயம் மற்றும் தெய்வீகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவர் கையாலும் உனக்கு நன்மையே நேரிடட்டும். உனது பாதைகள் அனைத்தும் மங்களகரமானவையாக இருக்கட்டும்! எந்த ஒருவரும் உன் வழியைத் தடை செய்யாதிருக்கட்டும்! ஓ! மகனே, உன்னைக் கடக்க நேரிடும் அனைவரின் இதயங்களும் உன்னிடம் பகை கொள்ளாதிருக்கட்டும்! நீர்நிலைகளின் தலைவன் வருணன், உன்னை நீரில் பாதுகாக்கட்டும்! வானத்தை அதிகாரம் செய்யும் தெய்வம் உன்னை வானத்தில் முழுவதும் பாதுகாக்கட்டும்! ஓ! மகனே, விதியால் விதிக்கப்பட்டதற்கேற்ப நான் யாரிடம் உன்னைப் பெற்றேனோ அந்த வெப்பம் வெளியிடுபவர்களில் சிறந்தவரும், உனது தந்தையுமான சூரியன், உன்னை அனைத்து இடங்களிலும் காக்கட்டும்! ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருதர்கள், திசைப்புள்ளிகளுடன் கூடிய பெரும் இந்திரன், அவர்களுக்குத் தலைமையாக ஆள்பவர்கள் ஆகியோரும், தேவர்கள் அனைவரும் உன்னை அனைத்து இடங்களிலும் பாதுகாக்கட்டும்! இந்த உனது கவசத்தால் நான் அந்நிய நிலங்களிலும் உன்னை அடையாளங்காண்பேன்!

ஓ! மகனே, உனது தந்தையும், பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வீகமானவருமான சூரியன், ஓடையில் சென்று கொண்டிருக்கும் உன்னைத் தனது தெய்வீகப் பார்வையால் காண்பவராக இருப்பதால் அவர் நிச்சயம் அருளப்பட்டவரே! ஓ! தேவனால் பெறப்பட்டவனே {மகனே}, நீ தாகமடையும்போது உனக்கு உறிஞ்சக் கொடுப்பவளும் {பால் கொடுப்பவளும்}, உன்னை மகனாகக் கொள்பவளுமான மங்கையும் அருளப்பட்டவளே. தெய்வீக கவசத்தாலும், தெய்வீக காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர்களைப் போன்ற அகன்ற கண்களும், மெருகிடப்பட்ட தாமிரத்தைப் போன்றோ, தாமரை இதழ்களைப் போன்ற நிறமும், அழகிய நெற்றியும், சுருள் முனை கொண்ட முடியும் கொண்ட உன்னைத் தனது மகனாக ஏற்கப் போகிறவள் எப்பேற்பட்ட நற்கனவைக் கண்டிருப்பாளோ. ஓ! மகனே, தரையில் தவழ்ந்து, புழுதி பூசி, விளங்காத இனிமையான மழலைச் சொற்களை உச்சரிக்கும் உன்னைக் காண்பவள் நிச்சயம் அருளப்பட்டவளே! ஓ! மகனே, இமயத்தின் காடுகளில் பிறந்த சிங்கத்தைப் போல உயர்ந்த இளமையை நீ அடைவதைக் காணப் போகும் அவள் நிச்சயம் அருளப்பட்டவளே!” {என்று சொல்லி அழுதாள் குந்தி}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி நீண்ட நேரம் பரிதாபகரமாகப் புலம்பியழுத பிருதை {குந்தி}, அந்தக் கூடையை அஸ்வ நதியின் நீரில் வைத்தாள். தன் மகன் நிமித்தமாகத் துயர் கொண்டு பெரிதும் அழுத அந்தத் தாமரைக்கண் காரிகை {குந்தி}, தனது மகனை அடிக்கடி காண விரும்பினாலும், நள்ளிரவில் அந்தக் கூடையை விட்டுவிட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்ன நடந்தது என்பதைத் தனது தந்தை அறிந்து விடுவானோ என்று பயந்து கொண்டே, தனது செவிலியுடன் மீண்டும் மாளிகையை அடைந்தாள். அதே வேளையில், அந்தக் கூடை அஸ்வ நதியில் இருந்து சர்மண்வதி நதிக்கும், பிறகு சர்மண்வதியில் இருந்து யமுனைக்கும், அங்கிருந்து கங்கைக்கும் என மிதந்து கொண்டே கடந்து சென்றது. குழந்தையைக் கொண்டிருந்த அந்தக் கூடை, கங்கையின் அலைகளால் சுமந்து செல்லப்பட்டுச் சூத குலத்தவன் ஆளும் சம்பா என்ற ஒரு நகரத்தை அடைந்தது. தன் உடல் அணிந்திருந்த அந்தச் சிறந்த கவசத்தாலும், அமிர்தத்தாலான அந்தக் காது குண்டலங்களாலும், விதியால் இப்படி விதிக்கப்பட்டதாலுமே உண்மையில் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


கர்ணனுக்காக கவசகுண்டலங்கள் பெற்ற குந்தி! - வனபர்வம் பகுதி 305

Kunti obtained the ear-rings and the coat of mail for Karna!  | Vana Parva - Section 305 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

சூரியனைச் சமாதானப்படுத்த முயன்ற குந்தி; சூரியன் அவளுக்குக் காது குண்டலங்களும், கவசமும் கொண்ட மகன் பிறப்பான் என்று சொன்னது; குந்தி சூரியனை ஏற்றது; குந்தி மயங்கி விழுந்தது; சூரியன் அவளது கன்னித்தன்மையை அழிக்காது, தன்னை அவளது கருவறையில் வைத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த உன்னதமான பெண் {குந்தி} அவனிடம் {சூரியனிடம்} இனிய வார்த்தைகளில் பேசினாலும், அவளால் ஆயிரங்கதிர் கொண்ட தெய்வத்தின் {சூரியனின்} கருத்தை மாற்ற முடியவில்லை. இருளை அகற்றுபவனின் கருத்தை மாற்றுவதில் தோல்வியுற்ற அவள் {குந்தி}, கடைசியாகச் சாபத்துக்கஞ்சி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “என் காரியமாக எனது அப்பாவி தந்தையும் {குந்திபோஜனும்}, அந்தப் அந்தணரும் {துர்வாசரும்}, கோபக்கார சூரியனின் சாபத்தில் இருந்து எப்படித் தப்புவார்கள்? சக்தியும், தவமும் பாவங்களை அழிக்கவல்லதாயினும், முதிராத வயது கொண்ட நேர்மையானவர்கள், முட்டாள்தனமாக அவற்றை அணுக முடியாது. அது போன்ற வழியில் முட்டாள் தனமாக நடந்ததால்தான் நான் இன்று இந்த அஞ்சத்தக்க நிலையில் நிறுத்தப்பட்டுள்ளேன். உண்மையில் நான் இந்தத் தெய்வத்தின் {சூரியனின்} பிடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளேன். இருப்பினும், நானாகவே என் உடலை இவருக்கு {சூரியனுக்கு} கொடுத்து, பெரும் பாவத்தை எப்படிச் செய்ய முடியும்?” என்று நீண்ட நேரம் சிந்தித்தாள்.”

Friday, October 10, 2014

குந்தியிடம் பேசிய சூரியன்! - வனபர்வம் பகுதி 304

Lord Surya spoke to Kunti!  | Vana Parva - Section 304 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

மந்திரங்களின் சக்தியைச் சோதிக்கக் குந்தி எண்ணுவது; அதே நேரத்தில் அவளுக்குப் பருவமும் வந்தது; கிழக்கில் உதிக்கும் சூரியனைக் கண்டு மந்திரங்களால் குந்தி அவனை அழைத்தது; சூரியன் வந்தது; குந்தி அவனைத் திரும்பி செல்லும்படி சொன்னது; சூரியன் குந்தியை மிரட்டியது; குந்தி தனது நிலையை விளக்குவது; சூரியன் தனது நிலையை விளக்குவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {துர்வாசர்}, வேறு வேலையாகச் சென்றுவிட்ட பிறகு, அந்தக் கன்னிகை {குந்தி}, அந்த மந்திரங்களின் திறனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள்  தனக்குள்ளேயே, "அந்த உயர் ஆன்மா கொண்டவரால் {மகாத்மாவால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்த மந்திரங்களின் இயல்பு எப்படிப்பட்டது? தாமதிக்காமல் நான் அதன் சக்தியைச் சோதிப்பேன்" என்று நினைத்தாள். அப்படி அவள் {குந்தி} சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, திடீரெனப் பருவகாலத்தின் {ருது} அறிகுறிகள் தனக்குத் தென்படுவதை உணர்ந்தாள். திருமணமாகாத போதே, தனக்குப் பருவகாலம் வந்ததால், அவள் {குந்தி} வெட்கமும் நாணமுமடைந்தாள். தனது அறையில் ஓர் ஆடம்பரப் படுக்கையில் அமர்ந்திருந்த அவள் {குந்தி}, கிழக்கில் சூரியக் கோளம் உதிப்பதைக் காண நேர்ந்தது. சிறந்த இடை கொண்ட அந்தக் கன்னிகையின் {குந்தியின்} கண்கள் மற்றும் மனம் ஆகிய இரண்டும் அந்தச் சூரிய கோளத்தின் மேல் நிலைத்து நின்றது. காலைச் சூரியனின் அழகைக் கண்டு, தெவிட்டாமல் மீண்டும் மீண்டும் அந்தக் கோளத்தை அவள் கூர்ந்து நோக்கியபடியே இருந்தாள். திடீரென அவளுக்கு {குந்திக்கு} தெய்வீகப் பார்வை கொடையாகக் கிடைத்தது.

வரம் மறுத்த குந்தி! - வனபர்வம் பகுதி 303

Kunti denied boon!  | Vana Parva - Section 303 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

குந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top