Showing posts with label சகாதேவன். Show all posts
Showing posts with label சகாதேவன். Show all posts

Saturday, October 28, 2017

எனது என்ற மரணமும், எனதற்ற பிரம்மமும்! - சாந்திபர்வம் பகுதி – 13

Death is mine and Brahma not mine! | Shanti-Parva-Section-13 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : மிருத்யு மற்றும் பிரம்மம் குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்த சகாதேவன்; இவ்விரண்டும் கலந்த ஆத்மாவானது அழிவற்றதானாலும், அழிவையுடையதானாலும் செயலே ஒருவனுக்குச் சிறந்தது என்று சொன்னது; தன் வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் வேண்டிய சகாதேவன்...


சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே, புறப்பொருட்கள் அனைத்தையும் கைவிடுவதால் மட்டுமே ஒருவன் வெற்றியை அடைந்துவிடுவதில்லை. அகப்பற்றுகளைக் {மனப்பற்றுகளைக்} கைவிட்டாலும் கூட வெற்றியை அடைவது ஐயத்திற்கிடமானதே.(1) மனத்தின் அகத்தில் ஆசைகளைக் கொண்டு, புறப்பொருட்களைக் கைவிடுபவனின் அறத்தகுதியும், மகிழ்ச்சியும் நமது எதிரிகளுடைய பங்காக இருக்கட்டும்.(2) மறுபுறம், அகப்பற்றையும் கைவிட்டு, பூமியை ஆள்பவனுடைய அறத்தகுதியும், மகிழ்ச்சியும், நமது நண்பர்களின் பங்காக இருக்கட்டும்.(3) மம (எனது) என்ற ஈரெழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது மிருத்யுவாகும்; அதே வேளையில் அதன் எதிர்ச்சொல்லான நமம (எனதில்லை) என்று மூன்று எழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது அழிவில்லா பிரம்மமாகும்[1].(4) ஓ! மன்னா, பிரம்மமும், மிருத்யுவும் கண்ணுக்குப் புலனாகாதவகையில் அனைத்து ஆன்மாவுக்குள்ளும் நுழைந்து, அனைத்துயிரினங்களையும் செயல்பட வைக்கின்றன என்பதில் ஐயமில்லை.(5)

Tuesday, August 15, 2017

சகுனியையும், உலூகனையும் கொன்ற சகாதேவன்! - சல்லிய பர்வம் பகுதி – 28

Sahadeva killed Sakuni and Uluka! | Shalya-Parva-Section-28 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 28)


பதிவின் சுருக்கம் : சகாதேவனை எதிர்த்து வந்த சகுனி; பீமனோடு மோதிய சகுனியும், உலூகனும்; போர்க்களத்தின் கோரநிலை; சகாதேவனைத் தாக்கிய உலூகன்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; உலூகனின் தலையைக் கொய்த சகாதேவன்; சகுனி ஏவிய ஆயுதங்களைக் கலங்கடித்த சகாதேவன்; சகுனியைக் கொன்ற சகாதேவன்; காண்டீவத்தின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடிய வீரர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவைத் தந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகனான சகுனி, சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) வீரச் சகாதேவனோ, சகுனி தன்னை நோக்கி வேகமாக விரைந்தபோது, பூச்சிக்கூட்டங்களைப் போன்ற எண்ணற்ற வேகமான கணைமாரியை அந்தப் போர்வீரனின் {சகுனியின்} மீது ஏவினான்.(2) அந்த நேரத்தில் உலூகனும் பீமனோடு மோதி, பத்து கணைகளால் அவனைத் துளைத்தான். அதேவேளையில் மூன்று கணைகளால் பீமனைத் துளைத்த சகுனி, ஓ! ஏகாதிபதி, தொண்ணூறால் சகாதேவனை மறைத்தான்.(3) உண்மையில், போரில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள், கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தாலான சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கள் காதுவரை இழுக்கப்பட்ட நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கூரிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(4) அவர்களின் விற்களில் இருந்தும், கரங்களில் இருந்தும் ஏவப்பட்ட அந்தக் கணைமாரிகள், ஓ! ஏகாதிபதி, மேகத்தில் இருந்து பொழியும் அடர்த்தியான மழைப்பொழிவைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(5)

Friday, August 04, 2017

சகுனியின் குதிரைப் படை! - சல்லிய பர்வம் பகுதி – 23

The cavalry of Shakuni! | Shalya-Parva-Section-23 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 23)


பதிவின் சுருக்கம் : கிருதவர்மனின் குதிரைகளைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை எதிர்க்க எழுநூறு தேர்வீரர்களை அனுப்பிய துரியோதனன்; துரியோதனன் அனுப்பிய வீரர்கள் அனைவரையும் கொன்ற சிகண்டியின் பாஞ்சாலப் படை; பயங்கரச் சகுனங்கள் தோன்றின; பாண்டவர்களை எதிர்த்த சகுனி; சகுனியை எதிர்க்க சகாதேவனை அனுப்பிய யுதிஷ்டிரன்; பத்தாயிரம் குதிரைகளைக் கொண்ட சகுனியின் குதிரைப்படை ஆறாயிரமாகச் சுருங்கியது; தலையற்ற முண்டங்கள் ஒரு கையில் தலையுடனும், மறுகையில் வாளுடனும் எழுந்து நின்றது; சகுனியைச் சூழ்ந்த கொண்ட பாண்டவர்கள்; சகுனியின் உதவிக்குச் சென்ற கௌரவர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அச்சத்தையேற்படுத்தும் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பிளக்கப்பட்டது.(1) எனினும், பெரும் முயற்சி செய்து தங்கள் பெரும் தேர்வீரர்களை அணிதிரட்டிய உமது மகன்கள், பாண்டவப் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தனர்.(2) உமது மகனின் நலனை விரும்பிய (குரு) போர்வீரர்கள், திடீரென மீண்டும் திரும்பி வந்தனர். அவர்கள் திரும்பி வந்ததும், உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான போர் மிகப் பயங்கரமாக நடந்தது.(3,4) போர்வீரர்கள், அனுமானம் மற்றும் அங்கே சொல்லப்பட்ட பெயர்களின் துணை கொண்டு போரிட்டனர். இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டபோது ஏற்பட்ட அழிவானது பெரிதானதாக இருந்தது.(5)

Friday, March 31, 2017

பாசறையை அடைந்த யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 63

Yudhishthira repaired to the Pandava camp! | Karna-Parva-Section-63 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)

கர்ணனிடம் புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 62

Yudhishthira retreated from Karna! | Karna-Parva-Section-62 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை முற்றுகையிட்ட துரியோதனன்; யுதிஷ்டிரனை மீட்க விரைந்த பாண்டவப் படை; அந்தப் பாண்டவப் படை முழுவதையும் தனியொருவனாகத் தடுத்த கர்ணன்; சகாதேவனால் தாக்கப்பட்ட துரியோதனன்; சினம் கொண்ட கர்ணன் பாண்டவத் துருப்புகளை விரட்டியது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்; கௌரவப் படையைப் பிளந்த யுதிஷ்டிரன்; கர்ணனால் தாக்கப்பட்டு அவனிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது அந்த அழகிய அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், நாராயணனாலேயே {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேரில் {அங்கே} காட்சியளித்தான்.(1) பெருங்கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, விஜயன் {அர்ஜுனன்} அந்தப் போரில் குதிரைவீரர்கள் நிறைந்த உமது படையைக் கலங்கடித்தான்.(2) வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனன் வேறு காரியத்தில் {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உமது மகன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, பழிவாங்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, தன் துருப்புகளில் பாதி அளவு சூழச் சென்று, முன்னேறி வந்து கொண்டிருந்த யுதிஷ்டிரனைத் திடீரென முற்றுகையிட்டான்.(3) பிறகு அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, எழுபத்துமூன்று கத்தி தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான். இதனால் கோபத்தால் தூண்டப்பட்டவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன்,(4) முப்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} உமது மகனை {துரியோதனனை} வேகமாகத் தாக்கினான். அப்போது, யுதிஷ்டிரனைப் பிடிப்பதற்காகக் கௌரவத் துருப்புகள் மிக வேகமாக விரைந்தன.(5)

Friday, February 03, 2017

துச்சாசனனை வென்ற சகாதேவன்! - கர்ண பர்வம் பகுதி – 23

Sahadeva vanquished Dushasana! | Karna-Parva-Section-23 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சகாதேவனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனுக்கும், சகாதேவனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; மாறிமாறி ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டியது; துச்சாசனனை மயக்கமடையச் செய்த சகாதேவன்; போர்க்களத்தைவிட்டுத் துச்சாசனனைக் கொண்டு சென்ற அவனது சாரதி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தால் நிறைந்த சகாதேவன், இவ்வாறு உமது படையைச் சிதறடித்துக் கொண்டிருந்தபோது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சகோதரனை எதிர்த்த சகோதரனாகத் துச்சாசனன் அவனை {சகாதேவனை} எதிர்த்துச் சென்றான்.(1) அவ்விருவரும் பயங்கரப் போரில் ஈடுபடுவதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தங்கள் ஆடைகளை {காற்றில்} அசைத்தனர்.(2) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வலிமைமிக்க அந்த மகன் {சகாதேவன்}, வில்தரித்த உமது கோபக்கார மகனால் {துச்சாசனனால்} மூன்று கணைகளைக் கொண்டு மார்பில் தாக்கப்பட்டான்.(3) பிறகு சகாதேவன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதலில் ஒரு கணையால் உமது மகனைத் {துச்சாசனனைத்} துளைத்து, எழுபது கணைகளால் மீண்டும் அவனையும், அதன் பிறகு மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(4)


அப்போது துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் சகாதேவனின் வில்லை அறுத்து, எழுபத்து மூன்று கணைகளால்அவனது கரங்களிலும், மார்பிலும் துளைத்தான்.(5) பிறகு அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த சகாதேவன், ஒரு வாளை உருவி கொண்டு, அதைச் சுழற்றி உமது மகனின் {துச்சாசனனின்} தேரை நோக்கி வேகமாக வீசினான்.(6) கணை பொருத்தப்பட்ட துச்சாசனனுடைய வில்லின் நாண்கயிற்றை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்தில் இருந்து விழும் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(7) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்த வீரச் சகாதேவன், மரணக் கணையொன்றை துச்சாசனன் மீது ஏவினான்.(8) எனினும், அந்தக் குரு போர்வீரன், யமதண்டத்தைப் போன்ற அந்தப் பிரகாசமான கணையானது தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும்போதே, அதைத் தன் கூர்முனை வாளால் இரு துண்டுகளாக வெட்டினான்.(9) பிறகு அந்தக் கூரிய வாளை சுழற்றிய துச்சாசனன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது அதை வேகமாக வீசினான். அதே வேளையில் அந்த வீரப் போர்வீரன் {துச்சாசனன்} கணையொன்றுடன் கூடிய மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(10)

எனினும் சகாதேவன், அந்தப் போரில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த வாளைத் தன் கூரிய கணைகளால் மிக எளிதாக வெட்டிக் கீழே விழச் செய்தான்.(11) அப்போது அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் {துச்சாசனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அறுபத்துநான்கு கணைகளைச் சகாதேவன் தேர் மீது வேகமாக ஏவினான்.(12) எனினும் சகாதேவன், ஓ! மன்னா, அந்த எண்ணற்றக் கணைகள் பெரும் வேகத்தோடு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, அவை ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் வெட்டினான்.(13) உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளைத் தடுத்த சகாதேவன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவினான்.(14) அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று கணைகளால் வெட்டிய உமது மகன், மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்தபடி உரக்க முழங்கினான்.(15)

பிறகு துச்சாசன், ஓ! மன்னா, சகாதேவனைத் துளைத்து, ஒன்பது கணைகளால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் அந்தப் போரில் தாக்கினான்.(16) அப்போது சினத்தால் நிறைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாண்கயிற்றில் அந்தகனுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றைப் பொருத்தினான்.(17) பெரும் வேகத்தோடு சென்ற அந்தக் கணையானது, ஓ! மன்னா, அவனது {துச்சாசனனின்} பலமான கவசத்தையும், உடலையும் துளைத்து, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(18) அவன் {துச்சாசனன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, தானும் கூரிய கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டிருந்தாலும், வேகமாகத் தன் தேரை {போருக்கு} வெளியே கொண்டு சென்றான்.(19) இவ்வாறு அந்தக் குரு போர்வீரனை வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, துரியோதனனின் படைப்பிரிவைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் அதை நொறுக்கத் தொடங்கினான்.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, கோபத்தில் தூண்டப்பட்ட ஒரு மனிதன் எறும்புக்கூட்டத்தை நசுக்குவதைப் போலவே அந்தப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்} கௌரவப் படையை நசுக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(21)
-----------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -23ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

Thursday, February 02, 2017

மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்! - கர்ண பர்வம் பகுதி – 22

Nakula killed the Mlecchha king! | Karna-Parva-Section-22 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துரியோதனனின் தூண்டுதலின் பேரில் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்ற யானைப் படையினர்; யானைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; யானைகளால் கொல்லப்பட்ட படைவீரர்கள்; வங்கர்களின் மன்னனை வீழ்த்திய சாத்யகி; புண்டரனைக் கொன்ற சகாதேவன்; அங்கர்களின் தலைவனான மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்; யானைப்படையைப் பீடித்த பாண்டவர்கள்; புறமுதுகிட்டோடிய கௌரவப் படையினர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யானைகளில் சென்ற போர்வீரர்கள் பலர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, சினத்தால் நிறைந்து, திருஷ்டத்யும்னனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி அவனை எதிர்த்துச் சென்றனர்.(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்டரர்கள், மகதர்கள், தாம்ரலிப்தகர்கள், மேகலர்கள், கோசலர்கள், மத்ரர்கள், தாசர்ணர்கள், நிஷாதர்கள் ஆகியோரைச் சார்ந்தவர்களும், யானைப் போரில் திறம்பெற்ற போராளிகளில் முதன்மையானோருமான பலர், கலிங்கர்களுடன் சேர்ந்து கொண்டு, கணைகளையும், வேல்களையும் பொழியும் மேகங்களைப் போல அந்தப் போரில் பாஞ்சாலர்களை நனைத்தனர்.(2-4)


குதிங்கால்கள், கால்விரல் நுனிகள் மற்றும் அங்குசங்களைக் கொண்டு தங்கள் சாரதிகளால் தூண்டப்பட்ட அந்த (எதிரிகளை) நசுக்கும் யானைகளைப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தன் கணைகளாலும் நாராசங்களாலும் மறைத்தான்.(5) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்விலங்குகள் ஒவ்வொன்றையும், அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, பத்து, எட்டு, அல்லது ஆறு கூரிய கணைகளால் துளைத்தான்.(6) மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போலப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த யானைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும், கூரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உரத்த முழக்கங்களுடன் (அவனை மீட்பதற்காக) அவனை நோக்கிச் சென்றனர்.(7) அந்த யானைகளின் மீது தங்கள் ஆயுதங்களைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள், தங்களின் உள்ளங்கையொலிகள் மற்றும் தங்கள் வில்லின் நாணொலிகள் ஆகியவற்றினால் உண்டான இசையின் துணையுடனும், காலத்தை வெல்லும் வீரர்களால் தூண்டப்பட்டும் அவர்கள் வீரர்களின் நடனத்தை ஆடத் தொடங்கினர்.(8)

அப்போது, பெரும்பலத்தைக் கொண்டவர்களான நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சிகண்டி, சேகிதானன் ஆகிய வீரர்கள் அனைவரும், மேகங்கள் தங்கள் மழையால் மலைகளை நனைப்பதைப் போலத் தங்கள் ஆயுதங்களால் அந்த யானைகளை அனைத்துப் பக்கங்களிலும் நனைத்தனர்.(9) மிலேச்சப் போர்வீரர்களால் தூண்டப்பட்ட அந்தச் சீற்றமிகு யானைகள், தங்கள் துதிக்கைகளால் மனிதர்களையும், குதிரைகளையும், தேர்களையும் இழுத்துத் தங்கள் கால்களால் அவற்றை நசுக்கின.(10) தங்கள் தந்தங்களின் முனைகளால் அவை சிலரைத் துளைத்தன, சிலரை உயரத் தூக்கித் தரையில் வீசின; அந்தப் பெரும் விலங்குகளின் தந்தங்களில் உயரத் தூக்கப்பட்ட வேறு சிலர், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் கீழே விழுந்தனர்.(11)

அப்போது, சாத்யகி, தன் முன்னே இருந்த வங்கர்களின் மன்னனுடைய யானையின் முக்கிய அங்கங்களைச் சிதைத்துப் பெரும் வேகத்தைக் கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசத்தால்} அதைப் போர்க்களத்தில் கீழே வீழ்த்தினான்.(12) பிறகு சாத்யகி, தன்னால் தொட முடியாதவனான சாரதியை, அவன் தன் விலங்கின் முதுகில் இருந்து குதிக்கப் போகும் தருணத்தில், மற்றொரு நீண்ட கணையால் அவனது மார்பைத் துளைத்தான். சாத்வதனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {வங்கர்களின் மன்னன்} கீழே பூமியில் விழுந்தான்.(13) அதே வேளையில் சகாதேவன், நகரும் மலையெனத் தன்னை எதிர்த்து வந்த புண்டரனின் யானையைப் பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட மூன்று கணைகளால் தாக்கி,(14) கொடிமரம், சாரதி, கவசம் மற்றும் அதன் {யானையின்} உயிரையும் இழக்கச் செய்தான். இவ்வாறு அந்த யானையை வெட்டி வீழ்த்திய சகாதேவன், அங்கர்களின் தலைவனை [1] எதிர்த்துச் சென்றான்.(15) எனினும், சகாதேவனை விலகச் செய்த நகுலன், யமதண்டத்திற்கு ஒப்பான மூன்று நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அங்கர்களின் ஆட்சியாளனைப் பீடித்து, ஒரு நூறு கணைகளால் தன் எதிரியின் யானையையும் பீடித்தான்.(16) பிறகு அந்த அங்கர்களின் ஆட்சியாளன், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசம் கொண்ட எண்ணூறு {800} வேல்களை நகுலன் மீது வீசினான். அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நகுலன் வெட்டினான்.(17) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} தன் எதிராளியின் தலையைப் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றால் வெட்டி வீழ்த்தினான். இதனால் உயிரையிழந்த அந்த மிலேச்ச மன்னன், தான் செலுத்திய விலங்கிலிருந்து கீழே விழுந்தான்.(18)

[1] அங்கர்களின் ஆட்சியாளனாகத் துரியோதனனால் முடிசூடப்பட்டவன் கர்ணன். ஆனால், இங்கே குறிப்பிடப்படுபவன் கர்ணன் அல்லன். மிலேச்சர்கள் என்று அயல் நாட்டினரே குறிப்பிடப்படுவர். இங்கே குறிப்பிடப்படும் அங்கர்களின் மன்னன் 18ம் சுலோகத்தின் மிலேச்சன் என்றும் சொல்லப்படுகிறான்.

யானைகளைச் செலுத்துவதில் திறன்பெற்ற அந்த அங்கர்களின் இளவரசன் வீழ்ந்ததும், சினத்தால் நிறைந்த அங்கர்களின் யானைக்காரர்கள், நகுலனைத் துண்டுகளாக {தூள்தூளாக} நசுக்க விரும்பி, காற்றில் அசையும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சிறந்த வாய்களைக் கொண்டவையும், தங்கத்தாலான அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சுடர்மிக்க மலைகளைப் போலத் தெரிந்தவையுமானத் தங்கள் யானைகளில் வேகமாக அவனை {நகுலனை} எதிர்த்துச் சென்றனர்.(19,20) மேலும், மேகலர்கள், உத்கலர்கள், கலிங்கர்கள், நிஷாதர்கள், தாம்ரலிப்தகர்கள் பலரும், நகுலனைக் கொல்ல விரும்பி தங்கள் கணைகளையும், வேல்களையும் பொழிந்தபடியே அவனை எதிர்த்துச் சென்றனர்.(21) அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்கள், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்தப் போர்வீரர்களால் சூழப்பட்ட நகுலனை மீட்பதற்காக வேகமாக விரைந்தனர்.(22) பிறகு தங்கள் கணைகளையும், நாராசங்களையும் பொழிந்த அந்தத் தேர்வீரர்களுக்கும், ஆயிரக்கணக்கான வேல்களைப் பொழிந்த அந்த யானைக்காரர்களுக்கும் இடையே ஒரு கடும்போர் நேர்ந்தது.(23) யானைகளின் மத்தகங்கள், மற்ற அங்கங்கள், துதிக்கைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நாராசங்களால் மிகவும் துளைக்கப்பட்டுப் பிளந்து சிதைந்தன.(24)

அப்போது சகாதேவன், வேகமான அறுபத்துநான்கு கணைகளால், அந்தப் பெரும் யானைகளில் எட்டை விரைவாகக் கொன்று, அதன் சாரதிகளோடு கீழே விழச் செய்தான்.(25) தன் குலத்தை மகிழ்விப்பவனான நகுலனும், பெரும் வீரியத்துடன் தன் அற்புத வில்லை வளைத்து, நேரான கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் யானைகள் பலவற்றைக் கொன்றான்.(26) பிறகு, பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சிகண்டி ஆகியோர் அந்தப் பெரும் யானைகளைக் கணை மழையால் நனைத்தனர்.(27) பாண்டவ வீரர்களாலான அந்த மழைநிறைந்த மேகங்களின் விளைவாக, எதிரியின் யானைகளாலான அந்த மலைகள், இடியுடன் கூடிய புயலால் தாக்கி வீழ்த்தப்பட்ட உண்மையான மலைகளைப் போலவே, அவர்களது எண்ணற்ற கணைகளாலான மழைத்தாரைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டன.(28) பாண்டவத் தேர்வீரர்களான அந்தத் தலைவர்கள், அந்த உமது யானைகளை இவ்வாறு கொன்று, கரையை உடைத்துச் செல்லும் ஆற்றுக்கு ஒப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பகைவரின் படையின் மீது தங்கள் கண்களைச் செலுத்தினர்.(29) பாண்டு மகனின் அந்தப் போர்வீரர்கள், இவ்வாறு உமது படையைக் கலங்கடித்து, மீண்டும் அதைக் கலங்கடித்த பிறகு கர்ணனை எதிர்த்து விரைந்தனர். {என்றான் சஞ்சயன்}(30)
-----------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி - 22ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

Friday, November 25, 2016

துரோணார்ஜுனப் போர்! - துரோண பர்வம் பகுதி – 188, 189

The battle between Drona and Arjuna! | Drona-Parva-Section-188, 189 | Mahabharata In Tamil

(துரோணவத பர்வம் – 05, 06)

பதிவின் சுருக்கம் : துச்சாசனனின் சாரதியைக் கொன்ற சகாதேவன்; சகாதேவனிடம் வீழும் நிலையை அடைந்த துச்சாசனன்; கர்ணன் குறுக்கிட்டது; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; நகுலனின் தேரில் ஏறிக் கொண்ட பீமன்; துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்தர்களும் முனிவர்களும் அந்த இரு போர்வீரர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் இயல்பு நிலையை அடைந்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, தன் தேரின் கடும் வேகத்தால் பூமியை நடுங்கச் செய்தபடி சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) எனினும், எதிர்களை நசுக்குபவனான மாத்ரியின் மகன் {நகுலன்}, தன்னை எதிர்த்து வரும் எதிராளியின் சாரதியுடைய தலைப்பாகையுடன் கூடிய தலையை அகன்ற தலை கொண்ட கணை யொன்றால் {பல்லத்தால்} விரைவாக வெட்டினான்.(2) சகாதேவனால் சாதிக்கப்பட்ட இந்தச் செயல் வேகத்தால் துச்சாசனனோ, துருப்புகளில் ஏதுமோ சாரதியின் தலை வெட்டப்பட்டதை அறியவில்லை.(3) கடிவாளங்கள் எவராலும் இழுத்துப் பிடிக்கப்படாததால் குதிரைகள் தங்கள் விருப்பப்படி ஓடின. அப்போதுதான் துச்சாசனன் தன் சாரதி கொல்லப்பட்டதை அறியவந்தான்.(4) குதிரைகளை நடத்த அறிந்தவனான அந்த முதன்மையான தேர்வீரன் {துச்சாசனன்}, தானே அந்தப் போரில் தன் குதிரைகளை நடத்திக்கொண்டு, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டான்.(5) சாரதியற்ற தேரில் அந்தப் போரில் அச்சமில்லாமல் சென்ற அந்த அவனது {துச்சாசனனது} செயலை நண்பர்களும், எதிரிகளும் பாராட்டினர்.(6)


அப்போது சகாதேவன், அந்தக் குதிரைகளைக் கூரிய கணைகளால் துளைத்தான். அக்கணைகளால் பீடிக்கப்பட்ட அவை அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடின.(7) அவன் {துச்சாசனன்} கடிவாளங்களைப் பிடிப்பதற்காக வில்லைக் கீழே வைக்கவும், பிறகு வில்லைப் பயன்படுத்துவதற்காகக் கடிவாளத்தைக் கீழே வைக்கவும் செய்தான்.(8) அந்தச் சந்தர்ப்பங்களில் மாத்ரியின் மகன் {சகாதேவன்} கணைகளால் அவனை {துச்சாசனனை} மறைத்தான். அப்போது கர்ணன், உமது மகனை {துச்சாசனனைக்} காக்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான்.(9) அதன்பேரில் விருகோதரன் {பீமன்}, பெரும் கவனத்தோடு முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லின் இருந்து ஏவப்பட்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கர்ணனின் மார்பையும் கரங்களையும் துளைத்தான்.(10) தடியால் அடிபட்ட பாம்பு போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன், கூரிய கணைகளை ஏவியபடி பீமசேனனைத் தடுத்து நின்றான்.(11) அதன்பேரில், பீமனுக்கும், ராதையின் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு கடும்போர் நடைபெற்றது. அந்த இருவரும் காளைகளைப் போல முழங்கினர். அவ்விருவரின் கண்களும் (சினத்தால்) விரிந்திருந்தன.(12)

கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்துடன் ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே அவர்கள் விரைந்து சென்றனர். போரில் திளைப்பவர்களான அவ்விருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நிலையை அடைந்தனர். ஒருவரை நோக்கி மற்றவர் கணைகளை எளிதாக ஏவமுடியாத அளவுக்கு அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். அதன்பேரில், கதாயுதப் போர் நிகழ்ந்தது. பீமசேனன் வேகமாகக் கர்ணனுடைய தேரின் கூபரத்தைத் தன் கதாயுதத்தால் நொறுக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனது} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பீமனுடைய தேரின் மீது வீசினான். எனினும், அதைப் பீமன், தனது கதாயுதத்தால் நொறுக்கினான். பிறகு மீண்டும் ஒரு கனமான கதாயுத்தை எடுத்துக் கொண்ட பீமன், அஃதை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(13-16) கர்ணன், அழகிய சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு அந்தக் கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் தாக்கி, மீண்டும் இன்னும் பிற கணைகளால் தாக்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கதாயுதமானது, மந்திரங்களால் பீடிக்கப்பட்ட பாம்பைப் போலப் பீமனை நோக்கித் திரும்பியது. அந்தக் கதாயுதத்தின் எதிர்வீச்சால் பீமனின் பெரும் கொடிமரம் ஒடிந்து விழுந்தது.(17,18) அதே கதாயுதத்தினால் தாக்கப்பட்ட பீமனின் சாரதியும் உணர்வுகளை இழந்தான்.

பிறகு சினத்தால் வெறிக் கொண்ட பீமன், கர்ணன் மீதும்,(19) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {கர்ணனின்} கொடிமரம், வில் மற்றும் தோலுறை ஆகியவற்றின் மீதும் எட்டு கணைகளை ஏவினான். பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் கர்ணனின் கொடிமரம், வில் மற்றும் தோலுறைகளைப் பெரும் கவனத்தோடு அறுத்தான். பிறகு வெல்லப்படமுடியாததும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கரடியின் நிறத்தில் இருந்த பீமனின் குதிரைகளையும், அவனது {பீமனது} பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் வேகமாகக் கொன்றான்.(20-22) இப்படித் தனது தேருக்குத் தீங்கேற்பட்டதும், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், மலைச்சிகரத்தில் இருந்து கீழே குதிக்கும் சிங்கத்தைப் போல, நகுலனின் தேரில் வேகமமாகக் குதித்தான்.(23)

அதே வேளையில், தேர்வீரர்களில் முதன்மையானோரும், ஆசான் சீடனுமானோரும், ஆயுதங்களில் திறம் பெற்றோருமான துரோணரும், அர்ஜுனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்டு,(24) ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் நளினம், இலக்கில் உறுதி, தேர்களின் நகர்வுகள் ஆகியவற்றால் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் மலைப்படையச் செய்தனர்.(25) இதுவரை என்றும் நடக்காததைப் போல ஆசானுக்கும் {துரோணருக்கும்}, சீடனுக்குமிடையில் {அர்ஜுனனுக்கும்} நடந்த இதுபோன்றதொரு போரைக் கண்ட போர்வீரர்கள் பிறர், ஒருவரோடொருவர் போரிடுவதை நிறுத்தி நடுக்கத்தை அடைந்தனர்.(26) அவ்வீரர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தேர்களின் அழகிய பரிணாமங்களை வெளிக்காட்டியபடியே அடுத்தவரைத் தன் வலப்புறத்தில் நிறுத்த விரும்பினர்[1].(27)

[1] வேறொரு பதிப்பில், “சேனையின் மத்தியில் விசித்திரமான ரதகதிகளில் சென்று கொண்டு அவ்வீரர்களிருவரும் அப்பொழுது ஒருவரையொருவர் இடமாகச் செல்வதற்கு விரும்பினார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பிறகு அந்த இரு வீரர்களும், போர்க்களத்தில் தங்கள் தேர்களின் பல்வேறு நகர்வுகளை வெளிக்காட்டியபடியே, ஒருவரையொருவர் தங்கள் வலதில் விட்டுச் செல்ல முயன்றனர்” என்றிருக்கிறது.

அங்கே இருந்த போர்வீரர்கள், அவர்களது ஆற்றலைக் கண்டு ஆச்சரியத்தால் நிரம்பினர். உண்மையில், துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் பெரும்போரானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓர் இறைச்சித் துண்டுக்காக வானில் மோதிக் கொள்ளும் இரண்டு பருந்துகளுக்கு ஒப்பாக இருந்தது. குந்தியின் மகனை {அர்ஜுனனை} வெல்வதற்காகத் துரோணரால் செய்யப்பட்ட சாதனைகள் அனைத்தும்,(28,29) அதே போன்ற சாதனைகளைச் செய்த அர்ஜுனனால் எதிர்க்கப்பட்டது. துரோணர், பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விஞ்சுவதில் தவறியபோது, ஆயுதங்கள் அனைத்தின் வழிமுறைகளை அறிந்த போர்வீரரான அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, ஐந்திரம், பாசுபதம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(30,31) அந்த ஆயுதங்கள் துரோணரின் வில்லில் இருந்து வெளிப்பட்டதும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை வேகமாக அழித்தான். இப்படித் தன் ஆயுதங்களை முறையாகத் தன் ஆயுதங்களால் அர்ஜுனன் அழித்தபோது,(32) தெய்வீக ஆயுதங்களில் வலிமைமிக்க ஓர் ஆயுதத்தைக் கொண்டு, துரோணர் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மறைத்தார். பார்த்தனை {அர்ஜுனனை} வெல்லும் விருப்பத்தால் பார்த்தன் மீது அதைத் துரோணர் ஏவினாலும், அவன் பதிலுக்குத் தாக்கி அதைக் கலங்கடித்தான். தன் ஆயுதங்கள் அனைத்தும், குறிப்பாக தெய்வீக ஆயுதங்களும் கூட அர்ஜுனனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், பின்னவனைத் {அர்ஜுனனைத்} தன் இதயத்தால் பாராட்டினார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, அர்ஜுனனைத் தன் சீடனாகக் கொண்டதன் விளைவால், இவ்வுலகில் ஆயுதங்களை அறந்தோர் அனைவரைக் காட்டிலும் தம்மை மேன்மையானவராகக் கருதிக் கொண்டார். அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தடுக்கப்பட்ட துரோணர்,(33-36) தீவிரமாகப் போராடி, ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாக (பதிலுக்கு) அர்ஜுனனைத் தடுத்தார்.

அப்போது, ஆயிரக்கண்ணான தேவர்களும், கந்தர்வர்களும்,(37) முனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்களும் அனைத்துப் பக்கங்களிலும் தென்பட்டனர். (அவர்களும், அவர்களோடு கூடிய) அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோராலும்(38) நிறைந்திருந்த அந்த ஆகாயமானது, மேகங்கள் திரண்டு மீண்டும் இருண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. துரோணரையும், உயர் ஆன்ம பார்த்தனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்து கொண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத குரல் ஒன்று ஆகாயமெங்கும் மீண்டும் மீண்டும் கேட்டது. துரோணர் மற்றும் பார்த்தன் ஆகியோரால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக அனைத்துப் பக்கங்களும் ஒளியால் சுடர்விட்டு எரிந்த போது,(39,40) அங்கே இருந்த சித்தர்களும் முனிவர்களும், “இது மனிதப் போரோ, அசுரப்போரோ, ராட்சசப் போரோ, தெய்வீகப் போரோ, கந்தர்வப் போரோ அல்ல. உயர்வான பிரம்ம மோதலே இஃது என்பதில் ஐயமில்லை. இந்தப்போர் மிக அழகானது; ஆச்சரியகரமானது. இதைப் போன்ற ஒன்றை நாம் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(41-42) சில நேரங்களில் ஆசான் {துரோணர்} பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, சில நேரங்களில் பாண்டுவின் மகன் துரோணரையும் விஞ்சி நிற்கின்றனர். அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் எவனாலும் காண முடியாது.(43) ருத்ரன் தன்னையே இரு பாகங்களாகப் பகுத்துக் கொண்டு, தானே தன்னுடன் போரிட்டால், அஃது இது போன்ற நிகழ்வுக்கு ஒப்பாகலாம். இதற்கு ஒப்பாக வேறொரு நிகழ்வை வேறு எங்கும் காண முடியாது.(44) அறிவியலானது, ஒன்றாகத் திரண்டு ஆசானிடம் {துரோணரிடம்} இருக்கிறது. அறிவியலும், வழிமுறைகளும் {தொழில்நுட்பமும்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} உள்ளது.(45) இந்தப் போர்வீரர்களில் எவரையும் எந்த எதிரிகளாலும் போரில் எதிர்க்க முடியாது. இவ்விருவரும் விரும்பினால் தேவர்களுடன் கூடிய அண்டத்தையே இவர்களால் அழித்துவிட முடியும்” என்றனர்.(46) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் உயிரினங்கள் அனைத்தும், மனிதர்களில் காளையரான இவ்விருவரையும் கண்டு இவ்வார்த்தைகளைச் சொல்லின.(47)

அந்தப் போரில் உயர் ஆன்மத் துரோணர், பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள் அனைத்தையும் பீடித்தபடியே பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார்.(48) அதன் பேரில் மலைகள், நீர்நிலைகள், மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். கடுமையான காற்று வீசத்தொடங்கியது. கடல்கள் ஆர்ப்பரித்துப் பொங்கின.(49) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர் {துரோணர்}, ஆயுதத்தை உயர்த்திய போது, குரு மற்றும் பாண்டவப் படைகளின் போராளிகளும் அச்சமடைந்தனர்; இன்னும் பிற உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்தன.(50) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்ற வகையில் தனது பிரம்மாயுதத்தைக் கொண்டு அந்த ஆயுதத்தைக் கலங்கடித்ததால், இயற்கையின் கலக்கம் விரைவாகத் தணிந்தது.(51) இறுதியாக அவர்களில் எவராலும் தன் எதிராளியைத் தனிப்போரில் வெல்ல இயலாத போது, களத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பத்தால் இரு படைகளுக்கும் இடையில் இயல்பான மோதலே நடந்தது.(52) துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் அந்தப் பயங்கரப் போர் (மேலும் இருபடைகளின் இயல்பான போரும்) நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(53) மேகத் திரள்களால் மறைக்கப்பட்டதைப்போல அடர்த்தியான கணை மழையால் ஆகாயம் மறைக்கப்பட்டது, வானுலாவும் உயிரினத்தாலும், அந்தப் பூதத்தின் {வானத்தின்} ஊடாக ஒரு பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. {ஆகாயத்தில் பறவையேதும் பறக்கவில்லை}” {என்றான் சஞ்சயன்}.(54) Sacred Texts வலைத்தளத்தில் 188 மற்றும் 189 ஆகியவை ஒன்றாகக் கலந்திருக்க வேண்டும் என்ற ஐயப்பாட்டைத் தெரிவித்து, 189ம் பகுதியைத் தவிர்த்துள்ளார்கள். எனவே நாம் இந்தப் பதிவையே 188 மற்றும் 189 ஆகக் கருத்தில் கொள்கிறோம். அடுத்தது பகுதி 190


ஆங்கிலத்தில் | In English

Friday, October 21, 2016

சகாதேவனை வென்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 166

Karna vanquished Sahadeva! | Drona-Parva-Section-166 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : சகாதேவனைத் தடுத்த கர்ணன்; கர்ணனுக்கும் சகாதேவனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகாதேவனைத் தன் வில்லால் தொட்ட கர்ணன்; சகாதேவனைப் பரிகசித்த கர்ணன்; தன் உயிர்மீது கொண்ட ஆசையைக் கைவிட்ட சகாதேவன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விகர்த்தனன் மகனான கர்ணன் {வைகர்த்தனன்} [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரை அடையும் விருப்பத்தில் முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகாதேவனைத் தடுத்தான்.(1) ராதையின் மகனை {கர்ணனை} ஒன்பது கணைகளால் துளைத்த சகாதேவன், மீண்டும் அந்தப் போர்வீரனை {கர்ணனை} ஒன்பது நேரான கணைகளால் துளைத்தான்.(2) பிறகு கர்ணன், ஒரு நூறு கணைகளால் சகாதேவனைப் பதிலுக்குத் துளைத்துத் தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடியே, நாண்பொருத்தப்பட்ட பின்னவனின் {சகாதேவனின்} வில்லை வெட்டினான்.(3) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மாத்ரியின் வீர மகன் {சகாதேவன்}, கர்ணனை இருபது கணைகளால் துளைத்தான். அவனது {சகாதேவனின்} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4)


[1] “வைகர்த்தனன் என்பதற்கு, தன் தோலையோ, இயற்கையான கவசத்தையோ உரித்துக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். சூரியதேவனின் மகனே கர்ணன் என்பது அவனது மரணத்திற்குப் பிறகே அறியப்பட்டது என்றாலும், நாடகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக இந்து உரையாசிரியர்கள் இத்தகு பத்திகளில் எல்லாம் இப்படியே {சூரியனின் மகன் என்ற பொருளிலேயே} விளக்குகின்றனர்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது கர்ணன், நேரான கணைகள் பலவற்றால், சகாதேவனின் குதிரைகளைக் கொன்று, ஒரு பல்லத்தால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் விரைவாக யமனுலகுக்கு அனுப்பினான்.(5) தேரற்றவனான சகாதேவன் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். சிரித்துக் கொண்டேயிருந்த கர்ணனால் அந்த ஆயுதங்களும் வெட்டப்பட்டன.(6) அப்போது வலிமைமிக்கச் சகாதேவன், அம்மோதலில், கனமானதும், பயங்கரமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கதாயுதம் ஒன்றை விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கி வீசினான்.(7) பிறகு கர்ணன், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், சகாதேவனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தைத் தன் கணைகளால் விரைவாக வெட்டி, அதைப் பூமியில் விழச் செய்தான்.(8) தன் கதாயுதம் வெட்டப்படதைக் கண்ட சகாதேவன், கர்ணனின் மீது ஈட்டி ஒன்றை வீசினான். அந்த ஈட்டியும் கர்ணனால் வெட்டப்பட்டது.(9)

அப்போது தன் சிறந்த தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துத் தன் எதிரே இருந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(10) எனினும், அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர்த்தப்பட்ட காலச் சக்கரம் போலத் தன்னை நோக்கி வந்த அந்தச் சக்கரத்தைப் பல்லாயிரம் கணைகளால் வெட்டினான். அந்தச் சக்கரம் வெட்டப்பட்ட போது, கர்ணனைக் குறி பார்த்த சகாதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் தேரின் அச்சு {ஏர்க்கால்}, தன் குதிரைகளின் கடிவாளங்கள், தேர்களின் நுகத்தடிகள் ஆகியவற்றையும், யானைகள், குதிரைகள் மற்றும் இறந்த கிடந்த மனித உடல்களின் அங்கங்கள் ஆகியவற்றையும் அவன் {கர்ணன்} மீது வீசினான்.(11,12) கர்ணன் அவையாவையும் தன் கணைகளால் வெட்டினான். ஆயுதங்கள் அனைத்தையும் தான் இழந்துவிட்டதைக் கண்ட மாத்ரியின் மகனான சகாதேவன், கணைகள் பலவற்றால் கர்ணனால் தாக்கப்பட்டுப் போரை விட்டகன்றான்.(13,14)

சிறிது நேரம் அவனை {சகாதேவனைப்} பின்தொடர்ந்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே},(15) சகாதேவனிடம் சிரித்துக் கொண்டே இந்தக் கொடூர வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! வீரா {சகாதேவா}, போர்க்களத்தில் உன்னைவிட மேம்பட்டவர்களுடன் போரிடாதே.(16) ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, {உனக்கு} இணையானவர்களுடன் போரிடுவாயாக. என் வார்த்தைகளில் ஐயங்கொள்ளாதே” என்றான். பிறகு தன் வில்லின் நுனியால் அவனை {சகாதேவனைத்} தொட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் {சகாதேவனிடம்}(17) “அதோ அர்ஜுனன், போரில் உறுதியான தீர்மானத்தோடு குருக்களுடன் போரிடுகிறான். ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, அங்கே செல்வாயாக, அல்லது நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்புவாயாக” என்றான்.(18) அந்த வார்த்தைகளைச் சொன்னவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சிரித்துக் கொண்டே, பாஞ்சாலர்களின் மன்னனுடைய துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(19)

வலிமைமிக்கத் தேர்வீரனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனுமான அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்}, மாத்ரியின் மகனை {சகாதேவனைக்} கொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், குந்தியின் வார்த்தைகளை நினைவில் கொண்டு அவனைக் {சகாதேவனைக்} கொல்லாமல் விட்டான்.(20) பிறகு இதயம் நொந்த சகாதேவன், கணைகளால் பீடிக்கப்பட்டும், கர்ணனின் வார்த்தைகளெனும் ஈட்டிகளால் துளைக்கப்பட்டும், தன் உயிரின் மீதான ஆசையைக் கைவிட்டான்.(21) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சகாதேவன்}, பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசனனான ஜனமேஜயனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(22)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 166-ல் வரும் மொத்த சுலோகங்கள்-22


ஆங்கிலத்தில் | In English

Tuesday, July 19, 2016

சாத்யகிக்கு அஞ்சிய வீரர்கள்! - துரோண பர்வம் பகுதி – 106

Warriors frightened by Satyaki! | Drona-Parva-Section-106 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : க்ஷேமதூர்த்தியைக் கொன்ற கைகேயப் பிருஹத்க்ஷத்ரன்; திரிகர்த்த வீரதன்வானைக் கொன்ற திருஷ்டகேது; துரியோதனனின் தம்பியான துர்முகனைத் தேரிழக்கச் செய்த சகாதேவன், திரிகர்த்த மன்னன் சுசர்மனின் மகனான நிரமித்ரனைக் கொன்றது; விகர்ணனை வென்ற நகுலன்; மகத வியாக்ரதத்தனைக் கொன்ற சாத்யகி, மகத வீரர்கள் அனைவரையும் கொன்றது; சாத்யகியுடன் போரிட அஞ்சிய வீரர்கள்; சாத்யகியை நோக்கி விரைந்த துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, க்ஷேமதூர்த்தி [1], {தன்னை நோக்கி} முன்னேறி வருபவனும், பெரும் வீரம் கொண்டவனும், கைகேகயர்களின் இளவரசனுமான பிருஹத்க்ஷத்ரனைப் பல கணைகளால் மார்பில் துளைத்தான். அப்போது மன்னன் பிருஹத்க்ஷத்ரன், ஓ! ஏகாதிபதி, துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பிளந்து செல்ல விரும்பி, தொண்ணூறு நேரான கணைகளால் தன் எதிராளியை {க்ஷேமதூர்த்தியை} வேகமாகத் தாக்கினான். எனினும், சினத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி நன்கு கடினமாக்கப்பட்ட கூரிய பல்லம் ஒன்றால் கைகேயர்களின் இளவரசனுடைய {பிருஹத்க்ஷத்ரனின்} வில்லை அறுத்தான். அப்படி அவனது வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, அம்மோதலில், நேரான கூரிய கணை ஒன்றால் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவனை {பிருஹத்க்ஷத்ரனை} வேகமாகத் துளைத்தான்.


[1] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [1]ல் க்ஷேமதூர்த்திப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (தன் எதிரியைப் பார்த்துப்) புன்னகைத்த பிருஹத்க்ஷத்ரன், விரைவில், வலிமைமிக்கத் தேர்வீரனான க்ஷேமதூர்த்தியைக் குதிரைகளற்றவனாகவும், தேரோட்டியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான். மேலும் அவன் {பிருஹத்க்ஷத்ரன்}, நன்கு கடினமாக்கப்பட்டதும், கூர்மையானதுமான மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காது குண்டலங்களால் சுடர்விட்ட தன் அரசெதிராளியின் {க்ஷேமதூர்த்தியின்} தலையை உடலில் இருந்து வெட்டினான். கேசத்தாலும், கிரீடத்தாலும் அருளப்பட்ட அந்தத் தலை திடீரென வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்த போது, வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன் தன் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியால் நிறைந்து, பார்த்தர்களின் நிமித்தமாக உமது துருப்புகளின் மேல் பெரும் சக்தியுடன் பாய்ந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான வீரதன்வான் [2] துரோணரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த திருஷ்டகேதுவைத் தடுத்தான். கணைகளையே தங்கள் நச்சுப் பற்களாகக் கொண்டு, ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பெரும் சுறுசுறுப்புடன் பல்லாயிரம் கணைகளால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உண்மையில், மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், ஆழ்ந்த காடுகளுக்குள் இரு தலைமை யானைகள் சீற்றத்துடன் மோதிக்கொள்வதைப் போலத் தங்களுக்குள் போரிட்டனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் இருவரும், மலைக்குகையொன்றில் மோதிக் கொள்ளும் கோபம்கொண்ட இரு புலிகளைப் போல மற்றவனைக் கொல்ல விரும்பத்துடனே போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. காணத்தகுந்த அது {அம்மோதல்} மிக அற்புதமானதாக இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான சித்தர்களும், சாரணர்களுமே கூட அற்புதத்திற்காகக் காத்திருக்கும் கண்களுடன் அதைக் கண்டனர்.

[2] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [2]ல் இவனைப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அப்போது வீரதன்வான், ஓ! பாரதரே, சினத்துடன் சிரித்தவாறே, பல்லங்களைக் கொண்டு திருஷ்டகேதுவின் வில்லை இரண்டாக அறுத்தான். சேதிகளின் ஆட்சியாளனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டகேது}, உடைந்த வில்லை எறிந்துவிட்டு, இரும்பாலானதும், தங்கப் பிடியைக் கொண்டதுமான கடும் ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டான். ஓ! பாரதரே, கடும் சக்தி கொண்ட அந்த ஈட்டியைத் தன் கரங்களால் வீரதன்வானின் தேரை நோக்கிச் சாய்த்த திருஷ்டகேது அதைக் கவனமாகவும், பெரும் பலத்துடனும் ஏவினான். வீரர்களைக் கொல்லும் அந்த ஈட்டியால் பெரும்பலத்துடன் தாக்கப்பட்டு, இதயம் துளைக்கப்பட்ட வீரதன்வான், வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவ்வீரன் {வீரதன்வான்} வீழ்ந்ததும், ஓ! தலைவா, பாண்டவர்களால் உமது படை பிளக்கப்பட்டது.

(உமது மகன்) துர்முகன், அறுபது கணைகளைச் சகாதேவன் மீது ஏவி, அந்தப் போரில் பாண்டுவின் மகனை {சகாதேவனைச்} சவாலுக்கழைப்பதற்காக உரக்க முழங்கினான். அப்போது, சினத்தால் நிறைந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, சிரித்துக் கொண்டே சகோதரனைத் தாக்கும் சகோதரனாகக் கூரிய கணைகள் பலவற்றால் துர்முகனைத் துளைத்தான். வலிமைமிக்கத் துர்முகன், மூர்க்கத்துடன் போரிடுவதைக் கண்ட சகாதேவன், ஓ! பாரதரே, ஒன்பது கணைகளால் மீண்டும் அவனைத் {துர்முகனைத்} தாக்கினான். பெரும்பலம் கொண்ட சகாதேவன், ஒரு பல்லத்தால் துர்முகனின் கொடிமரத்தை வெட்டி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் தாக்கி வீழ்த்தினான். மேலும் நன்கு கடினமாக்கப்பட்ட, கூரிய மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காதுகுண்டலங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்த துர்முகனின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். மேலும் ஒரு க்ஷுரப்ரத்தால் துர்முகனின் பெரிய வில்லை அறுத்த சகாதேவன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் துர்முகனையும் துளைத்தான்.

குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து அச்சமற்றவகையில் கீழே குதித்த துர்முகன், ஓ! பாரதரே, நிரமித்ரனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு சினத்தால் நிறைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சகாதேவன், அந்தப் பெரும்போரில் தன் படைக்கு மத்தியில் இருந்த நிரமித்ரனை ஒரு பல்லத்தால் கொன்றான். அதன்பேரில், திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடைய {சுசர்மனின்} மகனான நிரமித்ரன், உமது படையைப் பெரும் துயரத்தில் பீடிக்கச் செய்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். அவனைக் {நிரமித்ரனைக்} கொன்றதும், வலிமைமிக்க (ராட்சசன்) கரனைக் கொன்ற தசரதன் மகன் ராமனைப் போல வலிமைமிக்கச் சகாதேவன் பிரகாசமாகத் தெரிந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இளவரசன் நிரமித்ரன் கொல்லப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, திர்கர்த்த வீரர்களுக்கு மத்தியில் "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் உரத்த கதறல்கள் எழுந்தன.

நகுலன், ஓ! மன்னா, பெரிய கண்களைக் கொண்ட உமது மகன் விகர்ணனை ஒருக்கணத்தில் வென்றான். இது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

வியாக்ரதத்தன் [3], தன் படைப்பிரிவுக்கு மத்தியில் இருந்த சாத்யகியின் குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரம் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் கண்ணுக்குப் புலப்படாதபடி மறைத்தான். சிநியின் துணிச்சல்மிக்கப் பேரன், பெரும் கரநளினத்துடன் அக்கணைகளைக் கலங்கடித்துத் தன் கணைகளின் மூலம் வியாக்ரதத்தனை, அவனது குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்தோடு சேர்த்து வீழ்த்தினான். ஓ!தலைவா {திருதராஷ்டிரா}, அந்த மகதர்களின் இளவரசனுடைய {வியாக்ரதத்தனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, தீவிரத்துடன் போராடிக் கொண்டிருந்த மகதர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர்.

[3] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [3]ல் இவனைப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளையும், வேல்களையும் ஆயிரக்கணக்கில் இறைத்தபடியும், அந்தப் போரில் பிண்டிபாலங்கள், பராசங்கள், முத்கரங்கள், உலக்கைகள் ஆகியவற்றைக் கொண்டும், சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத அந்த வீரனுடன் {சாத்யகியுடன்} போரிட்டனர். பெரும் வலிமையைக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், வெல்லப்படமுடியாதவனுமான சாத்யகி, சிரித்துக் கொண்டே மிக எளிமையாக அவர்கள் அனைவரையும் வென்றான். மகதர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர். எஞ்சிய மிகச் சிலரும் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.

ஓ! தலைவா, ஏற்கனவே யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த உமது படையானது, இதைக் கண்டு பிளந்து ஓடியது. மது குலத்தில் முதன்மையானவனும், சிறந்த வீரனுமான அவன் {சாத்யகி}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் உமது துருப்பினரைக் கொன்று, தன் வில்லை அசைத்தபடியே பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஓ! மன்னா, இப்படியே அந்தப் படை, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்மாவால் {சாத்யகியால்} முறியடிக்கப்பட்டது. உண்மையில், நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரன் {சாத்யகியின்} மீது கொண்ட அச்சத்தால், போரிடுவதற்காக எவனும் அவனை அணுகவில்லை. அப்போது சினத்தால் நிறைந்த துரோணர், தன் கண்களை உருட்டியபடி, கலங்கடிக்கப்பட முடியாத சாதனைகளைக் கொண்ட சாத்யகியை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

பின்வாங்கிய யுதிஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 105

Yudhishthira retreated! | Drona-Parva-Section-105 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 21)

பதிவின் சுருக்கம் : துரோணரை எதிர்த்த பாஞ்சாலர்கள்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற துரோணர்; களத்தைவிட்டுப் பின்வாங்கிய யுதிஷ்டிரன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்}, தன் பார்வை படும் தொலைவில் அர்ஜுனன் அடைந்த பிறகு, குருக்களுடன் மோதிய பாஞ்சாலர்கள், பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தாக்கினார்களா?" என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த நாளின் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரில் {அந்தப் போர் எனும் சூதாட்டத்தில்}, (ஒவ்வொருவரும் போரிட்டு வெல்வதற்கோ, தோற்பதற்கோ ஏற்ற வகையில்) துரோணரே பந்தயப் பொருளானார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்கள் உற்சாகத்துடன் உரக்க முழங்கியபடியே அடர்த்தியான கணை மழைகளை ஏவினர். உண்மையில், பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதலானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாகவும், கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது. பாண்டவர்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைப் பிளக்க விரும்பி, அவரது தேரை அடைந்து, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் நின்றபடியே, தங்களுக்கு அடியில் இருந்த பூமியை நடுங்கச் செய்து, கணை மழையைப் பொழிந்து, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.


கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன், இடிக்கு ஒப்பான பலத்தைக் கொண்ட கூரிய கணைகளை இடையறாமல் இறைத்தபடியே துரோணரை நோக்கிச் சென்றான். பெரும் புகழைக் கொண்ட க்ஷேமதூர்த்தி [1], ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே பிருஹத்க்ஷத்ரனை எதிர்த்து வேகமாக விரைந்தான். இதைக் கண்டவனும், பெரும் வலிமை கொண்டவனும், சேதிக்களில் காளையுமான திருஷ்டகேது, அசுரன் சம்பரனை எதிர்த்துச் செல்லும் மகேந்திரனைப் போல க்ஷேமதூர்த்தியை எதிர்த்து விரைந்தான். வாயை அகல விரித்த யமனைப் போல, பெரும் மூர்க்கத்துடன் விரையும் அவனை {திருஷ்டகேதுவைக்} கண்ட வலிமைமிக்க வில்லாளியான வீரதன்வான் [2] பெரும் வேகத்துடன் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்த்துச் சென்றான்.

[1] இங்கே குறிப்பிடப்படும் க்ஷேமதூர்த்தி, கௌரவப்படையைச் சேர்ந்த ஒரு வீரனாவான். இவன் துரோண பர்வம் பகுதி 106ல் பிருஹத்க்ஷத்ரனால் கொல்லப்படுகிறான். இவனைத் தவிர்த்து இன்னும் இரண்டு க்ஷேமதூர்த்திகள் இருக்கின்றனர். ஒருவன் குளூட்ட நாட்டை ஆண்ட மன்னன் ஆவான். குளூ என்று அழைக்கப்படும் அந்தப் பள்ளத்தாக்கு {குளூட்ட நாடு} இன்றைய இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கிறது. கௌரவர் தரப்பில் நின்று போரிட்ட இம்மன்னன் குரோதவாசன் என்றழைக்கப்பட்ட அசுரனின் உயிர்ப்பகுதியாகக் கருதப்பட்டான். இவன் கர்ண பர்வம் பகுதி 12ல் பீமசேனனால் கொல்லப்படுகிறான். மற்றொருவன் துரோண பர்வம் பகுதி 23ல் காணப்படுபவன் ஆவான். பிருஹந்தன் என்பவன் இவனுடைய சகோதரனாகச் சொல்லப்படுகிறான். சல்லிய பர்வம் பகுதி 21லும் சாத்யகியுடன் இவன் போரிடுகிறான். எனவே மஹாபாரதப் போரில் மூன்று க்ஷேமதூர்த்திகள் இருந்திருக்க வேண்டும்.

[2] வீரதன்வான் திரிகர்த்த நாட்டைச் சேர்ந்த ஒரு வீரனாவன். இவன் கௌரவத் தரப்பில் இருந்து போரிட்டவனாவான். துரோண பர்வம் பகுதி 106ல் இவன் திருஷ்டகேதுவால் கொல்லப்படுகிறான்.

வெற்றியில் உள்ள விருப்பத்தால், தன் படைப்பிரிவின் தலைமையில் நின்ற மன்னன் யுதிஷ்டிரன், வீரத் துரோணரால் தடுக்கப்பட்டான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் விகர்ணன், போரில் சாதித்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வீரனுமான நகுலனை எதிர்த்து விரைந்தான். எதிரிகளை எரிப்பவனான துர்முகன், முன்னேறி வரும் சகாதேவனை வேகமாகச் செல்லும் பல்லாயிரம் கணைகளால் மறைத்தான். வீர வியாக்ரதத்தன் [3], மனிதர்களில் புலியான சாத்யகியைத் தன் கூர்முனைக் கணைகளால் மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான். கோபத்துடன் கூடிய சோமதத்தன் மகன் {சலன்} [4], மனிதர்களில் புலிகளும், பெரும் தேர்வீரர்களுமான திரௌபதியின் மகன்களை (ஐவரை) வலிமைமிக்கக் கணைகளை ஏவி தடுத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பயங்கர முகத் தோற்றம் கொண்டவனுமான ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஸ்யசிருங்கியின் மகனான} (ராட்சசன் அலம்புசன்), கோபத்தால் நிறைந்து முன்னேறிவரும் பீமசேனனைத் தடுத்தான். மனிதனுக்கும், ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலானது, பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கு இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.

[3] கங்குலியின் இந்தப் பகுதியில் {துரோண பர்வம் 105ல்} Vyughradatta என்றும், அடுத்த பகுதியில் {துரோண பர்வம் 106ல்} Vyaghradatta என்றும் மன்மதநாததத்தரின் பதிப்பில் Vyaghradanta என்றும் அழைக்கப்படும் இவன், வேறொரு பதிப்பில், "வியாக்ரதத்தன்" என்று அழைக்கப்படுகிறான். இவன் மகத நாட்டு இளவரசனாவான். கௌரவத் தரப்பில் இருந்து போரிட்ட இவன், துரோண பர்வம் பகுதி 106ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். வியாக்ரதத்தன் என்ற பெயரில் பாண்டவத் தரப்பில் நின்று போரிட்ட மற்றொரு மன்னனும் உண்டு. பாஞ்சால இளவரசனான அவன் துரோண பர்வம் பகுதி 16ல் துரோணரால் கொல்லப்பட்டான்.

[4] பூரிஸ்ரவஸ் அல்ல; இவன் சலன். சோமதத்தனுக்குப் பூரிஸ்ரவசும், சலனும் மகன்களாவர்.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரன், தொண்ணூறு நேரான கணைகளால் துரோணரின் முக்கிய அங்கங்கள் அனைத்திலும் தாக்கினான். குந்தியின் புகழ்பெற்ற மகனால் {யுதிஷ்டிரனால்} சினமூட்டப்பட்ட துரோணர், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு, இருபத்தைந்து கணைகளால் அவனது நடுமார்பைத் தாக்கினார். துரோணர், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனது {யுதிஷ்டிரனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றை இருபது கணைகளால் மீண்டும் தாக்கினார்.

பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தியவனும், அற ஆன்மா கொண்டவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, துரோணரால் ஏவப்பட்ட கணைமாரியைத் தன் கணைமாரியால் கலங்கடித்தான். அப்போது பெரும் வில்லாளியான துரோணர், சினத்தால் நிறைந்து, உயர் ஆன்மாக் கொண்டவனும் நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை வெட்டினார். பிறகு அந்தப் பெரும் வில்லாளி (பரத்வாஜரின் மகன் {துரோணர்}), வில்லற்ற யுதிஷ்டிரனை பல்லாயிரம் கணைகளால் விரைவாக மறைத்தார். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் மன்னன் {யுதிஷ்டிரன்} மறைக்கப்பட்டதைக் கண்ட அனைவரும், யுதிஷ்டிரன் இறந்தான் என்று நினைத்தனர், சிலரோ துரோணருக்கு முன்னிலையில் மன்னன் {யுதிஷ்டிரன்} தப்பிவிட்டான் என்று நினைத்தனர். ஓ! மன்னா, பலர், "ஐயோ, அந்த உயர் ஆன்ம பிராமணரால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்" என்று கதறினர்.

அப்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் துயரத்தில் வீழ்ந்து, அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட அந்த வில்லை எறிந்துவிட்டு, சிறந்ததும், பிரகாசமானதும், கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். மேலும் அந்த வீரன் {யுதிஷ்டிரன்}, ஆயிரக்கணக்கில் துரோணரால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அம்மோதலில் அறுத்தான். இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன. அந்தக் கணைகளை வெட்டிய யுதிஷ்டிரன், ஓ! மன்னா, கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் போரில் மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான். தங்கப்பிடி கொண்டதும், அச்சந்தரும் தோற்றத்தைக் கொண்டதும், தன்னுடன் எட்டு மணிகள் இணைக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதுமான அஃதை {அந்த ஈட்டியை} யுதிஷ்டிரன் எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான். ஓ! பாரதரே, அந்த முழக்கத்தால், அந்தப் பாண்டுவின் மகன் அனைத்து உயிரினங்களையும் அச்சமடையச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் உயர்த்தப்பட்ட அந்த ஈட்டியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஒரே மனத்துடன், "துரோணருக்கு நன்மை விளையட்டும்" என்றன.

மன்னனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கணையானது, சட்டையுரித்து விடுபடும் பாம்புக்கு ஒப்பாக, ஆகாயத்தையும், திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்துக்கும் ஒளியூட்டியபடியே கடும் வாய்க் கொண்ட ஒரு பெண்பாம்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்றது. தன்னை நோக்கி மூர்க்கமாக வரும் அதைக் கண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், ஓ! மன்னா, பிரம்மம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இருப்புக்கு அழைத்தார். பயங்கரத் தோற்றம் கொண்ட அந்த ஈட்டியைத் தூசியாகப் பொடி செய்த அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்}, பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரனின்} தேரை நோக்கிச் சென்றது. அப்போது, ஓ! ஐயா, பெரும் விவேகம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும் {மற்றொரு} பிரம்மாயுதத்தை அழைத்துத் தன்னை நோக்கி வரும் அவ்வாயுதத்தை {துரோணரின் பிரம்மாயுதத்தைக்} கலங்கடித்தான்.

பிறகு அந்தப் போரில் துரோணரை ஐந்து நேரான கணைகளால் துளைத்த அவன் {யுதிஷ்டிரன்}, கத்தி முனை கொண்ட கணை ஒன்றால், துரோணரின் பெரும் வில்லையும் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்த உடைந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} நோக்கி கதாயுதம் ஒன்றைப் பெரும் சக்தியுடன் வீசினார். தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட யுதிஷ்டிரன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தாலும் நிறைந்து தானும் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பெரும் சக்தியுடன் வீசப்பட்ட அவ்விரு கதாயுதங்களும் நடுவானில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, தங்கள் மோதலால் தீப்பொறிகளை உண்டாக்கியபடி கீழே பூமியில் விழுந்தன.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது சீற்றத்தால் நிறைந்த துரோணர், கூர்முனை கொண்ட நான்கு சிறந்த கணைகளால் யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்றார். இந்திரன் மீது கொண்ட மதிப்பால் நடப்பட்ட மரத்திற்கு {இந்திரத்வஜத்திற்கு} இணையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} வில்லையும் மற்றொரு பல்லத்தால் அறுத்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்த மன்னன் யுதிஷ்டிரன், கைகளை உயர்த்தியபடி ஆயுதமேதும் இல்லாமல் நின்றான். தேரற்றவனாகவும், குறிப்பாக ஆயுதங்களற்றவனாகவும் இருந்த அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், ஓ! தலைவா, தமது எதிரிகளையும், மொத்த படையையும் மலைக்கச் செய்தார். தன் வாக்குறுதியில் உறுதியானவரும், பெரும் கரநளினம் கொண்டவருமான துரோணர், மானை நோக்கிச் செல்லும் சீற்றமிக்கச் சிங்கத்தைப் போலக் கூரிய கணைமாரியை ஏவியபடி மன்னனை நோக்கி விரைந்தார்.

எதிரிகளைக் கொல்பவரான துரோணர், அவனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைவதைக் கண்டு, "ஓ" என்றும், "ஐயோ" என்றும் பாண்டவப் படையில் கூச்சல்கள் எழுந்தன. பலர், "பரத்வாஜர் மகனால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்" என்று கதறினர். ஓ! பாரதரே, இவ்வகையான உரத்த ஓலங்களே பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன. அதே வேளையில், குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்டு, வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தைவிட்டுப் பின்வாங்கினான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top