Showing posts with label சகாதேவன். Show all posts
Showing posts with label சகாதேவன். Show all posts

Thursday, May 07, 2015

"போரே விருப்பம்!" என்ற சகாதேவன்! - உத்யோக பர்வம் பகுதி 81

"I desire war!" said Sahadeva! | Udyoga Parva - Section 81 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –10)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கோரினால் அதற்கு உடன்படக்கூடது என்றும்; திரௌபதியை அவமதித்த துரியோதனன் நிச்சயம் கொல்லப்பட வேண்டும் என்றும் பாண்டவர்கள் அனைவரும் அறம் சார்ந்திருந்தாலும், இக்காரியத்திற்காக அந்த அறத்தைத் துறந்து தான் துரியோதனனுடன் போரிட விரும்புவதாகவும் கிருஷ்ணனிடம் சொல்வது; சாத்யகி சகாதேவன் சொன்னதை ஆமோதித்துக் கிருஷ்ணனிடம் பேசியது; இதைக் கேட்ட போர்வீரர்கள் அனைவரும் ஆர்ப்பரித்துப் போருக்கான தங்கள் ஆவலை வெளிப்படுத்தத் தொடங்கியது...

சகாதேவன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், " உண்மையில், மன்னன் {யுதிஷ்டிரர்} சொன்னது நிலைத்த அறமாகும். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, போர் நிச்சயம் நடக்கும்வண்ணம் நீர் செயல்பட வேண்டும். கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கொள்ள விரும்பினாலும், ஓ! தாசார்ஹ குலத்தவரே {கிருஷ்ணரே}, அவர்களுடன் போர் ஏற்படும்படி அவர்களைத் தூண்டுவீராக.


ஓ! கிருஷ்ணரே, சபைக்கு மத்தியில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} அந்த அவல நிலையில் கொண்டுவரப்பட்டதைக் கண்ட பிறகும், சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டாமல் எனது கோபம் எப்படித் தணியும்? ஒ கிருஷ்ணா, பீமர், அர்ஜுனர், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் ஆகியோர் அறம் சார்ந்த மன நிலையைக் கொள்வதாக இருந்தாலும், அறத்தைத் துறக்கும் நான், போர்க்களத்தில் துரியோதனனுடன் மோத விரும்புகிறேன்" என்றான் {சகாதேவன்}.

அப்போது சாத்யகி {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {கிருஷ்ணரே}, உயர் ஆன்மா கொண்ட சகாதேவர் உண்மையையே பேசியிருக்கிறார். நான் துரியோதனனிடம் கொண்டுள்ள கோபம், அவனது மரணத்தால் மட்டுமே தணியும். கந்தலுடையும், மான் தோலும் உடுத்தி, பாண்டவர்கள் துயர்நிறைந்த நிலையில் காட்டில் இருப்பதைக் கண்டபோது நீரும் சினம் கொண்டீர், என்பது உமக்கு நினைவில்லையா? எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, போரில் கடுமையானவரான மாத்ரியின் வீர மகன் {சகாதேவர்} சொன்னதே இங்குக் கூடியிருக்கும் வீரர்கள் அனைவரின் ஒருமனதான கொள்கையாக இருக்கிறது" என்றான் {சாத்யகி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம யுயுதனனின் {Yuyudhana} இவ்வார்த்தைகளால், அங்கே கூடியிருக்கும் வீரர்கள் அனைவரும் சிங்கம் போலக் கர்ஜித்தனர். மேலும் அந்த வீரர்கள் அனைவரும் சாத்யகியின் வார்த்தைகளை உயர்வாக மெச்சி, அவனை {சாத்யகியை} புகழ்ந்து "அருமை! அருமை!" என்றனர். போரிடும் ஆவலால் அவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தொடங்கினர்.


Friday, October 31, 2014

இடையனான சகாதேவன்! - விராட பர்வம் பகுதி 10

Sahadeva became a cowherd! | Virata Parva - Section 10 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 10)

இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண


பதிவின் சுருக்கம் : இடையன் வேடத்தில் சகாதேவன் விராடனின் முன்னிலைக்கு வருவது; சகாதேவனைக் குறித்து விராடன் விசாரித்தல்; சகாதேவன் விராடனிடம் கோரிய பணி; விரும்பிய பணியில் நியமிக்கப்பட்ட சகாதேவன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இடையரின் ஆடை உடுத்தி, இடையர்களின் பேச்சுவழக்கைப் பேசிக் கொண்டு, விராட நகரத்தின் மந்தைவெளிக்கு வந்தான் சகாதேவன். காந்தியுடன் பிரகாசித்த அந்த மனிதர்களில் காளையைக் கண்ட மன்னன் {விராடன்}, திகைப்படைந்தான். பிறகு அவன் {விராடன்} தனது ஆட்களை அனுப்பிச் சகாதேவனை அழைத்தான். அவன் {சகாதேவன்} வந்ததும், மன்னன் {விராடன்} அவனிடம் {சகாதேவனிடம்}, “நீ யாருக்கு உடையவன்? நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன வேலையை எதிர்பார்க்கிறாய்? உன்னை இதற்கு முன் நான் கண்டதில்லையே! ஓ! மனிதர்களில் காளையே, உன்னைக் குறித்த உண்மையை எனக்குச் சொல்" என்றான் {மன்னன் விராடன்}.


மன்னனின் {விராட மன்னனின்} முன்னிலைக்கு வந்த எதிரிகளைத் துன்புறுத்துபவனான சகாதேவன், ஆழ்ந்த குரலில் மேகம் போலக் கர்ஜித்து, “நான் ஒரு வைசியன். எனது பெயர் அரிஷ்டநேமியாகும். குருகுலத்தின் காளைகளான பாண்டுவின் மகன்களால் நான் காளைகளைப் பராமரிக்கும் இடையனாக நியமிக்கப்பட்டிருந்தேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {விராடரே}, மன்னர்களில் சிம்மங்களான அந்தப் பிருதையின் {Pritha -குந்தியின்} மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை நான் அறியாததால், நான் உம்மை அண்டி வாழ விரும்புகிறேன். சேவை செய்யாமல் என்னால் வாழ இயலாது. ஓ! மன்னா {விராடரே}, நான் உம்மைத் தவிர வேறு எவருக்கும் சேவை செய்ய விரும்பவில்லை" என்றான் {சகாதேவன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட விராடன், “நீ அந்தணனாகவோ, க்ஷத்திரியனாகவோ இருக்க வேண்டும். கடல் சூழ்ந்த முழு உலகத்துக்கும் தலைவனைப் போல நீ தெரிகிறாய். ஓ! எதிரிகளைச் சிதைப்பவனே, எனக்கு உண்மையைச் சொல். வைசியரின் அலுவல் {வேலை} உனக்குத் தகாதது. நீ எந்த மன்னனின் பகுதியில் இருந்து வருகிறாய் என்றும், நீ என்ன அறிவாய் என்றும், என்ன திறனுடன் நீ எங்களிடம் இருக்கப் போகிறாய் என்றும், என்ன கூலியை நீ ஏற்பாய் என்றும் எனக்குச் சொல்" என்றான் {மன்னன் விராடன்}.

சகாதேவன் {மன்னன் விராடனிடம்}, “பாண்டுவின் ஐந்து மகன்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், பசுக்களைப் பத்தாயிரமாகவும் {10,000}, இன்னுமொரு பத்தாயிரமாகவும் {10,000}, மேலும் இருபதாயிரமாகவும் {20,000} என இப்படியே எட்டு லட்சத்துப் பத்தாயிரம் {8,10,000} எண்ணிக்கையிலான பசுக்களை ஒரு பகுதியாக {8,10,000} வைத்திருந்தார். அந்தக் கால்நடைகளைக் காக்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டிருந்தேன். மக்கள் என்னைத் தந்திரீபாலன் என்று அழைப்பது வழக்கமாகும். பத்து யோஜனைக்குள் வாழும், கணக்கெடுக்கப்பட்ட பசுக்கள் அனைத்தின் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை நான் அறிவேன். என்னிடம் நல்ல மன நிறைவு கொண்டவரும், சிறப்புமிக்கவருமான குரு மன்னர் யுதிஷ்டிரர் எனது நற்தகுதிகளை அறிவார். குறுகிய காலத்திற்குள் பசுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வழிமுறைகளையும், அவற்றை {பசுக்களை} நோயில் இருந்து காக்கும் உபாயத்தையும் நான் அறிவேன். இந்தக் கலைகளையே நான் அறிந்திருக்கிறேன். எத்தகைய காளைகளின் சிறுநீர் வாசமே கூட, மலடையும் {மலட்டுப் பசுவையும்} கன்று ஈன வைக்குமோ, மனிதர்களால் வழிபடப்படும் அத்தகைய காளைகளின் மங்களக்குறிகளைக் கொண்டு, அவற்றை என்னால் இனம் பிரிக்க முடியும்" என்றான் {சகாதேவன்}.

விராடன் {சகாதேவனிடம்}, “தனித்துவமானவை எனப் பிரிக்கப்பட்ட ஒரு லட்சம் பசுக்கள் {1,00,000 – நூறாயிரம்} என்னிடம் இருக்கின்றன. அவற்றையும், அவற்றைப் பாதுகாப்பவர்களையும் உன் பொறுப்புக்குள் வைக்கிறேன். இனிமேல் என் விலங்குகள் உனது பாதுகாப்பில் இருக்கும்" என்றான் {மன்னன் விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களில் தலைவனான சகாதேவன், விராடனால் பராமரிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியால் கண்டுபிடிக்கப்படாதவாறு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். (அவனது சகோதரர்களைத் தவிர- பாண்டவர்களைத் தவிர} வேறு யாராலும் அவனை {சகாதேவனை} அடையாளம் காண முடியவில்லை". {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, October 26, 2014

ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்தல்! - விராட பர்வம் பகுதி 5

Stowing of weapons! | Virata Parva - Section 5 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 5)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

விராட நகரத்தை நோக்கிப் பாண்டவர்கள் புறப்படுவது; திரௌபதி சோர்வடைவது; அர்ஜுனன் திரௌபதியைத் தூக்கிக் கொள்வது; மயானத்தில் இருக்கும் ஒரு வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பது; அம்மரத்தை மனிதர்கள் அண்டாமல் இருப்பதற்கு, ஒரு சடலத்தை அம்மரத்தில் தொங்க விடுவது; விராட நகரத்துக்குள் நுழைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தங்கள் இடுப்பைச் சுற்றி வாள்களைக் கட்டிக் கொண்டும், உடும்புத்தோலால் ஆன விரல் உறைகளையும் பல்வேறு ஆயுதங்களையும் அணிந்து கொண்டும், யமுனை நதி இருந்த திசையில் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} முன்னேறிச் சென்றனர். தங்கள் நாட்டை (விரைவில்) மீட்க விரும்பிய அந்த வில்லாளிகள் {பாண்டவர்கள்}, அணுக இயலாத மலைகளிலும், கடினமான காடுகளிலும் இதுவரை வாழ்ந்த வந்த அவர்கள், இப்போது தங்கள் காட்டு வாழ்வை {வனவாசத்தை} முடித்து, அந்த நதியின் {யமுனையின்} தெற்கு கரையை நோக்கி முன்னேறினர். காட்டில் மான்களைக் கொன்று வேடுவர்களாகத் தங்கள் வாழ்வைக் கடத்திய அந்தப் பெரும் பலம் பொருந்திய வலிமைமிக்க வீரர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு வலப்புறத்தில் பாஞ்சாலர்களின் நாட்டை விட்டு, இடப்புறத்தில் தாசர்ண நாட்டை விட்டு, யக்ருல்லோம {Yakrilloma}மற்றும் சூரசேன {Surasena} நாடுகளைக் கடந்து சென்றனர். {காம்யக வனத்தில் இருந்து தசார்ண நாட்டுக்கு வடக்காகவும், பாஞ்சால நாட்டுக்குத் தெற்காகவும், யக்ருல்லோம நாடு, சூரசேனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியிலும் இருந்த யமுனை நதியை வந்தடைந்தார்கள் என்று வேறு பதிப்புகளில் உள்ளன}. தாடியுடன் வெளிறிப் போய்த் தெரிந்த அந்த வில்லாளிகள், வாள்களை அணிந்து கொண்டு, காட்டை விட்டு வேடுவர்களைப் போன்ற தோற்றத்தில் வெளியேறி மத்ஸ்ய {விராட} நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாட்டை அடைந்ததும் கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனிடம், “நடைபாதைகளையும், பல்வேறு வயல்களையும் நாம் காண்கிறோம். இதிலிருந்து விராடத் தலைநகரம் {Virata's metropolis} இன்னும் தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது" என்றாள்.


யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதகுலத்தின் தனஞ்சயா {அர்ஜுனா}, பாஞ்சாலியைத் தூக்கி நீ சுமப்பாயாக [1]. காட்டைவிட்டு வெளியேறிய உடனேயே, நாம் நகரத்தை அடையலாம்" என்றான்.

[1] வேறு சில பதிப்புகளில் யுதிஷ்டிரன் நகுலனிடமும், சகாதேவனிடமும் திரௌபதியைத் தூக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் களைப்பாக இருப்பதாகச் சொன்னதால் அர்ஜுனன் சுமந்ததாகவும் வருகிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடந்தார், “பிறகு யானை மந்தையின் தலைமையை யானையைப் போல அர்ஜுனன் திரௌபதியை விரைந்து தூக்கிக் கொண்டான். பிறகு நகரம் அருகே வந்ததும், அவளைக் கீழே இறக்கிவிட்டான். அந்த {விராட} நகரத்தை அடைந்ததும், ருருவின் மகன் (யுதிஷ்டிரன்) அர்ஜுனனிடம், “நகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நமது ஆயுதங்களை எங்கே வைப்பது? ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, ஆயுதங்களுடன் நுழைந்தால், நாம் நிச்சயம் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவோம். மேலும், மிகப்பெரிய வில்லான காண்டீவத்தை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். அதனால், சந்தேகமற, விரைவில் மக்கள் நம்மை அடையாளம் காண்பார்கள். நம்மில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும், {நமது} வாக்குறுதியின் படி, நாம் மேலும் பன்னிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்க நேரிடும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம் சொன்னான்}, “அடைய முடியா சிகரத்தின் அருகில் இருக்கும், அதோ அந்தக் கடுமை நிறைந்த மயானத்தில், ஒரு பெரும் வன்னி மரம் {Sami tree}, ஏறுவதற்குக் கடினமானதாகவும், பெரும் கிளைகளை விரிந்து பரப்பியிருப்பியபடியும்  இருக்கிறது. நாம் நமது ஆயுதங்களை அந்த இடத்தில் {மரத்தில்} வைக்கும்போது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, நம்மைக் கவனித்துப் பார்க்க அங்கே எந்த மனிதரும் இல்லை என்று நினைக்கிறேன். விலங்குகளும் பாம்புகளும் நிறைந்த காட்டுக்குச் செல்லும் வழியை விட்டு விலகியிருக்கும் {ஒதுக்குப்புறமான} இடத்தின் மத்தியிலும், இருண்ட மயானத்தின் அருகிலும் அந்த மரம் உள்ளது. அந்த வன்னி மரத்தில் நமது ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நாம் நகரத்திற்குச் சென்று துயரத்தில் இருந்து விடுபட்டு வாழலாம்" என்றான் {அர்ஜுனன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் பேசிய அர்ஜுனன், (அந்த மரத்தில்) ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கத் தயாரானான். பிறகு அந்தக் குருக்களின் காளை {அர்ஜுனன்}, பகைக்கூட்டங்களை எப்போதும் அழிப்பதும், தேவர்களையும், மனிதர்களையும், நாகர்களையும் தன்னந்தனித் தேரில் சென்று, அவர்களை வென்று, நாட்டின் எல்லைகளை விரிவாக்க உதவியதும், சுண்டினால் இடியொலியெழுப்புவதுமான பயங்கரமான பெரிய காண்டீவத்தின் நாணைத் தளர்த்தினான். மேலும், பகைவர்களை ஒடுக்கும் போர்க்குணம் கொண்ட யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரக் களத்தைக் காத்த {தனது} வில்லின் அழியாத நாணைத் தளர்த்தினான். பாஞ்சாலர்கள், சிந்துவின் தலைவன் ஆகியோரைத் தன்னந்தனியாக வீழ்த்த உதவியதும், சுண்டினால் மலையை உடைக்கும் இடியொலியுடன் கர்ஜிப்பதும், (பயத்தால்} எதிரிகளைக் களத்தை விட்டு ஓட வைத்ததுமான தனது வில்லின் நாணை சிறப்புமிக்கப் பீமசேனன் கழற்றினான்.

செம்பின் நிறம், மிதமான பேச்சு, போர்க்களத்தில் பெரும் பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், குடும்பத்தில் ஒப்பற்ற அழகு கொண்டதன் விளைவாக நகுலன் என்ற பெயரில் அழைகப்பட்டவனுமான பாண்டுவின் மகன், மேற்குப் பகுதிகள் அனைத்தையும் தான் வெல்ல உதவிய வில்லின் நாணைத் தளர்த்தினான். மென்மையான மனநிலை கொண்ட வீரனான சகாதேவனும், தெற்கு நாடுகளைத் தான் வெல்லக் காரணமாக இருந்த வில்லின் நாணைக் கழற்றினான். பிறகு தங்களுடைய விற்களுடன் தங்கள் நீண்ட பளபளக்கும் வாள்களையும், தங்கள் மதிப்புமிக்க அம்பறாத்தூணிகளையும், கத்தி போன்ற கூர்மையுடைய தங்கள் கணைகளையும் ஒன்றாக வைத்தனர். பிறகு நகுலன் அந்த மரத்தில் ஏறி விற்களையும் பிற ஆயுதங்களையும் அதில் வைத்தான் {Nakula ascended the tree, and deposited on it the bows and the other weapons}. அந்த மரத்தில் உடையாத பகுதி என்றும், மழையும் ஊடுருவாத பகுதி என்றும் தான் {நகுலன்} நினைத்த பகுதியில் அவற்றை {அந்த ஆயுதங்களை} இறுக்கமாகக் கட்டினான்.

{உயிரற்றுக் கிடந்த பசுவின் தோலை அறுத்து, அதில் சகாதேவன் [நகுலன் அல்ல] ஆயுதங்களைக் கட்டினான் என்று வேறு பதிப்புகளில் வருகிறது}

பிறகு, {தாங்கள் கட்டப்போகும் சடலத்தின்} துர்வாடையை நுகரும் மக்கள் "இங்கே ஒரு சடலம் இருக்கிறது" என்று கருதி அந்த மரத்தை தூரத்திலேயே தவிர்த்து விடுவார்கள் என்று எண்ணிய பாண்டவர்கள், (அந்த மரத்தில்) ஒரு சடலத்தைத் தொங்கவிட்டனர் {சடலத்தை சகாதேவன் கட்டியதாக வேறு பதிப்புகள் சொல்கின்றன}. ஆடு மேய்ப்பவர்களும், மாடு மேய்ப்பவர்களும் அந்தச் சடலத்தைக் குறித்துக் கேட்ட போது, அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள் {பாண்டவர்கள்}, அவர்களிடம், “இது நூற்றியெண்பது வயதான எங்கள் தாய் ஆவாள். எங்கள் மூதாதையர்களின் வழக்கப்படி நாங்கள் அவளது சடலத்தைத் தொங்கவிட்டிருக்கிறோம்" என்றனர்.

பிறகு அந்தப் பகைவர்களைத் தாங்குபவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தை {விராட நகரத்தை} அணுகினார்கள். தாங்கள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ஜயன், ஜயந்தன், விஜயன், ஜயத்சேனன், ஜயத்பாலன் என்ற (ஐந்து) பெயர்களைத் தனக்கும், தன் தம்பிகளுக்கும் யுதிஷ்டிரன் சூட்டிக்கொண்டான். பிறகு, (துரியோதனனுக்கு) வாக்குறுதி கொடுத்ததற்கு ஏற்ப, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய {அஞ்ஜாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்கும் நோக்குடன், அவர்கள் அந்தப் பெரும் நகரத்திற்குள் நுழைந்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, October 25, 2014

யுதிஷ்டிரனின் கவலை! - விராட பர்வம் பகுதி 3

The grief of Yudhishthira! | Virata Parva - Section 3 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 3)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண


நகுலன் குதிரைகளின் காப்பாளனாகவும்; சகாதேவன் பசுக்களின் காப்பாளனாகவும் விராட நாட்டில் இருக்கப் போவதாகச் சொல்வது; திரௌபதி என்ன செய்ய முடியும் என்று யுதிஷ்டிரன் வருந்துவது; விராட மன்னனின் மனைவிக்குப் பணிப்பெண்ணாக இருக்கப் போவதாகத் திரௌபதி சொல்வது...

யுதிஷ்டிரன் {நகுலனிடம்}, “மென்மையும், அழகான உருவமும் கொண்டு, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுதியுடைய நீ, ஓ! வீர நகுலா, அந்த மன்னனின் {விராடனின்} நாட்டில் வாழும்போது என்ன அலுவலைச் செய்வாய்? அது பற்றி அனைத்தையும் எனக்குச் சொல்!” என்று கேட்டான்.

நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “கிரந்திகன் [Granthika; granthiko] {தாமக்ரந்தி} என்ற பெயரின் கீழ், மன்னன் விராடனின் குதிரைகளுக்குப் பொறுப்பாளனாவேன் {keeper of horses -குதிரை காப்பாளன்}. (இப்பணியில்) {குதிரைகளைக் காப்பதில்} முழு ஞானமும், குதிரைகளின் நேர்த்திகளை {தன்மைகளை} அறிவதில் திறனும் உடையவனாக இருக்கிறேன். அதுதவிர, அப்பணி எனக்கு ஏற்புடையதாகும் {பிடித்தமானதாகும்}. குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றுக்குச் சிகிச்சையளிப்பதிலும் நான் பெரும் திறன் கொண்டிருக்கிறேன். ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மைப் போலவே, குதிரைகள் எனக்கும் பிடித்தமானவையே. என் கைகளில் குதிரைக்குட்டிகளும் {colts}, பெண்குதிரைகளும் {mares} கூட அமைதியடையும்; இவை ஓர் ஓட்டுனரைத் தாங்கும் போதோ, தேரை இழுக்கும்போதோ தீமையை {குற்றத்தை} அடையாது [1]. விராட நகரத்தில் என்னைக் குறித்துக் கேட்பவர்களிடம் நான், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, “முன்பு நான் யுதிஷ்டிரரால் குதிரைகளுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தேன்" என்று சொல்வேன். இப்படி மாறுவேடம் கொண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த விராட நகரத்தில் எனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்துவேன். இப்படி நான் அந்த ஏகாதிபதியை {விராட மன்னனை} மகிழ்விக்கும்போது யாராலும் என்னைக் கண்டுபிடிக்க இயலாது! [2]” என்றான் {நகுலன்}.


[1] "ஆதுஷ்டா {Adushta} என்று ஆரம்பித்து ரதேஸ்து ச {ratheshu cha} என்று முடியும் சுலோகம் வங்காள உரைகளைத் தவிர வேறு எதிலும் காணப்படவில்லை.” என்கிறார் கங்குலி.

[2] “படிக்கும்போது இங்கே {பல உரைகளில்} வித்தியாசங்கள் காணப்படுங்கின்றன. எனினும், அதே பொருளிலேயே உள்ளன" என்கிறார் கங்குலி. {அதாவது வெவ்வேறு பதிப்புகளில் வெவ்வேறு சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன என்கிறார் போலும்}.

யுதிஷ்டிரன் {சகாதேவனிடம்}, “ஓ! சகாதேவா, மன்னனின் {விராட மன்னனின்} முன்பு நீ எப்படி உன்னைத் தாங்கிக் கொள்வாய்? ஓ! குழந்தாய் {சகாதேவா}, மாறுவேடத்தில் வாழும் பொருட்டு நீ என்ன செய்வாய்?” என்று கேட்டான்.

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் விராட மன்னனின் மாடுகளைக் காப்பவனாவேன். பசுக்களில் பால் கறப்பதும், அவற்றின் உக்கிரத்தைத் தணித்து, அவற்றைப் பழக்குவதிலும் நான் திறன் பெற்றிருக்கிறேன். தந்திரீபாலன் [Tantripal; tantipāla] {தந்த்ரீபாலன்} என்ற பெயரின் கீழ், நான் எனது கடமைகளை நயமாகச் செய்வேன். உமது இதயத்தின் நோய் அகலட்டும். முன்பு நான் அடிக்கடி உம்முடைய பசுக்களைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, எனக்கு அந்த வேலையில் குறிப்பிட்ட ஞானம் உண்டு. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பசுக்களின் இயல்புகளையும், அவை கொண்டிருக்கும் மங்களக் குறிகளையும், அவை குறித்த பிற காரியங்களையும் நான் நன்கு அறிவேன். எத்தகைய காளைகளின் சிறுநீர் வாசமே கூட, மலடையும் {மலட்டுப்பசுவையும்} கன்றீன வைக்குமோ, அத்தகையவற்றை {அப்படிப்பட்ட காளைகளை}, அதன் மங்களக்குறிகளைக் கொண்டு, என்னால் இனம் பிரிக்க முடியும். இப்படியே நான் வாழ்வேன், இவ்வகை வேலையில் நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன். உண்மையில், என்னை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. மேலும் நான் அந்த ஏகாதிபதியை மனம் நிறையச் செய்வேன்" என்றான் {சகாதேவன்}.

யுதிஷ்டிரன், “நம் உயிரினும் மேலான நமது அன்புக்குரிய மனைவி இவள். நம்மால் ஒரு தாயைப் போலப் பேணிக் காக்கப்படவோ அல்லது மூத்த சகோதரியைப் போலப் போற்றப்படவோ நிச்சயமாக இவள் தகுதியுடையவள். பெண்களுக்குரிய எவ்வகை வேலையையும் அறிந்திராதவளும், துருபதன் மகளுமான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} என்ன அலுவலைச் செய்வாள்? மென்மையும், இளமையும் கொண்ட இவள், பெரும் புகழ் கொண்ட இளவரசியாயிற்றே. தனது தலைவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, மேம்பட்ட அறம் கொண்ட இவள் எப்படி வாழப்போகிறாள்? *இவள் {திரௌபதி} பிறந்ததில் இருந்து, மலர்மாலைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த உடுப்புகளையும் மட்டுமே அனுபவித்திருக்கிறாள்" என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்குத் திரௌபதி, “பிறருக்குப் பணிவிடை செய்யப்புகுபவர்களான, சைரந்திரிகள் [3] என்று அழைக்கப்படும் ஒரு மனித {பெண்} வர்க்கம் இருக்கிறது. எனினும், (மரியாதைக்குரிய) மற்ற பெண்கள் அப்படிச் செய்வதில்லை. இந்த வர்க்கத்தில் சிலர் உள்ளனர். சிகை அலங்காரம் செய்வதில் திறமையான ஒரு சைரந்திரியாக [Sairindhri ; sairandhrī] {ஸைரந்த்ரி} என்னை நான் வெளிக்காட்டுவேன். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மன்னனால் {விராட மன்னனால்} கேட்கப்படும்போது, “யுதிஷ்டிரரின் இல்லத்தில் திரௌபதியின் பணிப்பெண்ணாக நான் பணிபுரிந்தேன்" என்று சொல்வேன். இப்படியே மாறுவேடத்தில் நான் எனது நாட்களைக் கழிப்பேன். மன்னனின் {விராட மன்னனின்} மனைவியான புகழ்பெற்ற சுதேஷ்ணைக்கு நான் பணிவிடை செய்வேன். என்னை அடைவதால், நிச்சயம் அவள் {சுதேஷ்னை} (முறையாக) என்னைக் காப்பாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இது போல வருந்தாதீர்!” என்று மறுமொழி கூறினாள் {திரௌபதி}.

[3] சைரந்திரி என்றால், "மற்றொருவரின் வீட்டில் முழு உரிமையுடன் {சுயேட்சையாக} வேலை செய்யும் பெண் கைவினைஞர்" என்று வில்சன் என்பவர் சொல்லியிருப்பதாகக் கங்குலி சொல்கிறார்.

சைரந்திரிகள் பிறர் வீட்டில் வசித்துக் கொண்டு முழு உரிமையுடனும் கற்புடனும் அரச குல பெண்களுக்குத் தலை பின்னுதல், வினோதமான ஓவியங்கள் வரைதல் போன்ற வேலைகளைச் செய்பவர்கள் ஆவர்.

யுதிஷ்டிரன் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ நன்றாகப் பேசுகிறாய். ஆனால், ஓ! அழகான பெண்ணே, நீ ஒரு மதிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். எப்போதும் அறநோன்புகள் நோற்று கற்புடன் உள்ள நீ பாவம் என்பது என்ன என்பதை அறிய மாட்டாய். எனவே, உன்னை வெறித்துப் பார்க்கும் பாவிகளின் தீய இதயம் மகிழ்வுறாத வழியில் நீ நடந்து கொள்ள வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

*************************************************************************
*இவள் {திரௌபதி} பிறந்ததில் இருந்து,
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169 - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section169.html#
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, October 13, 2014

பாண்டவர்கள் நால்வர் இறந்தனர்! - வனபர்வம் பகுதி 310

Four of the Pandavas died!  | Vana Parva - Section 310 | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

தங்கள் தாகத்தை அடக்க நீர் இருக்கும் இடத்தைக் கண்டறிய யுதிஷ்டிரன் நகுலனிடம் சொன்னது; நகுலன் மரத்திலேறி ஒரு தடாகத்தைப் பார்த்தது; நீர் கொண்டு வருவதற்காக நகுலனும், அவனைத் தொடர்ந்த சகாதேவனும், அர்ஜுனனும், பீமனும் அனுப்பப்பட்டு இறந்து போனது; நால்வரும் திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் மனம் வருந்தி, தானே தடாகத்தையும், தனது தம்பிகளையும் தேடிப் புறப்பட்டது....

யுதிஷ்டிரன், “இடர்களுக்கு ஓர் எல்லையே இல்லை. அதே போல அதன் இறுதிக்காரணம் அல்லது செயல்திறன்மிக்கக் காரணத்தை உறுதியாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறம் {நன்மை} மற்றும் மறங்களின் {தீமையின்} கனிகளை நீதியின் தேவன் {தர்மதேவன் = யமன்} மட்டுமே பிரித்தளிக்கிறான்" என்றான். அதற்குப் பீமன், “அடிமையைப் போலக் கிருஷ்ணையை {திரௌபதியைச்} சபைக்குள் இழுத்துவந்த பிராதிகாமினை அங்கேயே நான் கொல்லாததால்தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்" என்றான். அர்ஜுனன், “சூதனின் மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட, எலும்பையே துளைக்கும் கடும் வார்த்தைகளுக்கு நான் சீற்றம் கொள்ளாததாலேயே இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!" என்றான். சகாதேவன், "ஓ! பாரதா {யுதிரஷ்டிரரே}, உம்மைப் பகடையில் சகுனி வீழ்த்திய போது, நான் அவனைக் கொல்லவில்லை. எனவே தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!" என்றான்.”


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரன், நகுலனிடம், “ஓ! மாத்ரியின் மகனே, இந்த மரத்தில் ஏறி, தொடுவானத்தின் பத்து புள்ளிகளையும் சுற்றிப் பார். நீரோ, நீர்நிறைந்த நிலத்தில் {மட்டுமே} வளரும் அத்தகு மரங்களோ எங்காவது வளர்ந்திருக்கிறதா என்று பார்! ஓ! குழந்தாய், உனது இந்தச் சகோதரர்கள் களைத்துப் போய்த் தாகமாய் இருக்கிறார்கள்" என்றான். அதற்கு, “அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன நகுலன் விரைவாக மரத்தில் ஏறி சுற்றிலும் பார்த்து, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அருகே இருக்கும் பல மரங்களை நான் பார்க்கிறேன். மேலும் நான் கொக்குகளின் ஒலிகளையும் கேட்கிறேன். எனவே, அங்கே நீர் இருக்கிறது என்பதில் ஐயமில்லை" என்றான்.

உண்மையில் நிலைத்து நிற்கும் குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, “ஓ! மனதுக்கினியவனே {நகுலா}, நீ சென்று இந்த அம்பறாத்தூணிகளில் நீர் நிறைத்து வா" என்றான். “அப்படியே ஆகட்டும்" என்று தனது அண்ணனின் கட்டளையின் பேரில் உடனே புறப்பட்ட நகுலன், நீர் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறி, விரைவில் அங்கே வந்து சேர்ந்தான். கொக்குகள் நிறைந்த தெளிந்த தடாகத்தைக் கண்ட அவன் {நகுலன்}, அதைக் {நீரைக்} குடிக்க எண்ணினான். அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல், “ஓ! குழந்தாய் {நகுலா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! மாத்ரியின் மகனே {நகுலா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு (உனக்கு வேண்டிய அளவுக்கு) எடுத்துச் செல்.” என்றது. இருப்பினும், மிகுந்த தாகத்தில் இருந்த நகுலன் அந்த வார்த்தைகளை மதிக்காமல், அந்தக் குளிர்ந்த நீரைக் குடித்தான். அதைக் குடித்ததும் இறந்து கீழே விழுந்தான்.

ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, நகுலனின் தாமதத்தைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நகுலனின் வீரச் சகோதரனான சகாதேவனிடம், “ஓ! சகாதேவா, நமது சகோதரனான, உனக்கு முன் பிறந்தவன் {நகுலன்} இங்கிருந்து சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. எனவே, நீ சென்று உன்னுடன் பிறந்த தமையனையும் நீரையும் கொண்டு வா" என்றான். இதற்குச் சகாதேவன், “அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அதே திசையில் சென்று, அந்த இடத்திற்கு வந்த, தனது அண்ணன் {நகுலன்} தரையில் இறந்து கிடப்பதைக் கண்டான். தனது அண்ணனின் இறப்பால் துயருற்ற அவன், கடும் தாகமடைந்து நீரை நோக்கி முன்னேறிய போது இந்த வார்த்தைகள் அவனுக்குக் கேட்டது, “ஓ குழந்தாய் {சகாதேவா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்.”

எனினும் மிகுந்த தாகத்தில் இருந்த சகாதேவன், அந்த வார்த்தைகளை மதியாமல் அந்நீரைக் குடித்தான். அதைக் குடித்துவிட்டு இறந்து கீழே விழுந்தான். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், விஜயனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனா}, உனது இரு சகோதரர்களும் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஓ! எதிரிகளை அடக்குபவனே! நீ அருளப்பட்டிருப்பாய்! நீ அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு  நீருடன் வா. ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துயரத்தில் மூழ்கியிருக்கும் எங்கள் அனைவருக்கும் நீயே புகலிடமாவாய்!” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட புத்திக்கூர்மை கொண்ட குடகேசன் {அர்ஜுனன்}, தனது வில்லையும், கணைகளையும், தனது உருவிய வாளையும் எடுத்துக்கொண்டு நீர்த்தடாகத்தைத் தேடி சென்றான். பிறகு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேருடைய அவன் {அர்ஜுனன்}, நீர் எடுக்க வந்த மனிதர்களில் புலிகளான தனது இரண்டு தம்பிகளும் இறந்து கிடப்பதைக் கண்டான்.

உறங்குவதைப் போல் கிடந்த அவர்களைக் கண்ட மனிதர்களில் சிங்கம் {அர்ஜுனன்}, மிகவும் துயருற்று, தனது வில்லை உயர்த்தி, காட்டையே சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெரும் காட்டில் அவன் யாரையும் காணவில்லை. பிறகு அவன் (நீரை) நோக்கி ஓடிய போது, வானத்தில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டான். “நீ ஏன் இந்த நீரை அணுகுகிறாய்? வலிமையைப் பயன்படுத்தி நீ இதைக் குடிக்க முடியாது. ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, நான் உன்னிடம் கேட்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க முடியும் என்றால், ஓ! பாரதா {அர்ஜுனா} நீ நீரைக் குடித்து, உனக்குத் தேவையான அளவுக்கு அதை எடுத்துச் செல்லலாம்!” {என்றது அந்தக் குரல்}.

இப்படித் தடுக்கப்பட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, “என் முன் தோன்றி என்னைத் தடை செய்வாயாக! எனது கணைகளால் நீ கடுமையாகத் துளைக்கப்படும்போது, நீ இது போன்று மீண்டும் பேச மாட்டாய்!” என்றான். இதைச் சொன்ன பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் மந்திரங்களால் தூண்டப்பட்ட கணைகளைக் கொண்டு நிறைத்தான். ஒலியை மட்டுமே கேட்டு, காட்சிக்குத் தெரியாத குறியை அடிக்கும் தனது திறமையையும் அவன் {அர்ஜுனன்} வெளிப்படுத்தினான். ஓ! பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, தாகத்தால் மிகவும் பாதிக்கப்பட அவன் {அர்ஜுனன்} முள் கணைகளையும், எறிவேல்களையும், இரும்புக் கணைகளையும், கலங்கடிக்கப்பட முடியாத கணைகளையும் எண்ணற்ற வகையில் வானத்தில் பொழிந்தான்.

பிறகு காட்சிக்குப்புலப்படாத யக்ஷன் {அர்ஜுனனிடம்}, “இந்த இடருக்கு என்ன தேவையிருக்கிறது, ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, எனது கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு குடி! எனினும், எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நீ குடித்தால், அதன் பிறகு உடனே நீ சாவாய்" என்றான். இடது கையாலும் வில்லை இழுக்கும் ஆற்றல் பெற்ற பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த வார்த்தைகளை மதியாமல், நீரைக் குடித்து, உடனே இறந்து விழுந்தான். (தனஞ்சயனின் தாமதத்தைக் கண்ட) குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பீமசேனனிடம், “ஓ! எதிரிகளை அடக்குபவனே {பீமா}, நகுலன், சகாதேவன், பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} ஆகியோர் நீர் இரைக்கச் சென்று வெகு நேரமாகிவிட்டது. இருப்பினும் அவர்கள் இன்னும் வரவில்லை. ஓ! பாரதா {பீமா}, உனக்கு நன்மையே விளையட்டும்! அவர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு, நீருடன் வா!” என்றான்.

அதன்பிறகு, “அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பீமசேனன், மனிதர்களில் புலிகளான தனது தம்பிகள் எங்கே இறந்து கிடக்கின்றனரோ அங்கே சென்றான். அவன் {பீமன்} தாகத்தில் இருந்தாலும் அவர்களைக் கண்டு மிகவும் துயரப்பட்டான். பிறகு வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {பீமன்}, இது யாரோ ஒரு யக்ஷன் அல்லது ராட்சசனின் செயலாக இருக்கும் என நினைத்தான். பிறகு பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, “இன்று நான் நிச்சயம் சண்டையிட வேண்டும். எனவே, முதலில் நான் தாகந்தணிவேன்" என்று நினைத்தான். பிறகு அந்தப் பாரதக் குலத்தின் காளை {பீமன்} {நீரைக்} குடிக்கும் நோக்குடன் விரைந்து முன்னேறினான். அப்போது, அந்த யக்ஷன் {பீமனிடம்}, “ஓ குழந்தாய் {பீமா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்.” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யக்ஷனால் சொல்லப்பட்ட அளவிடமுடியாத சக்தி கொண்ட பீமன், அவனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமலேயே நீரைக் குடித்தான். அப்படி அவன் குடித்த உடனேயே அந்த இடத்திலேயே அவன் இறந்து விழுந்தான். தனது தம்பிகள் தன்னைவிட்டு சென்று நீண்ட நேரம் ஆனதை நினைத்த யுதிஷ்டிரன் சில காலம் பொறுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, “மாத்ரியின் இரு மகன்களும் ஏன் தாமதிக்கின்றனர்? காண்டீவத்தைத் தாங்குபவன் ஏன் தாமதிக்கிறான்? பெரும் பலம் கொண்ட பீமனும் ஏன் தாமதிக்கிறான்? நான் அவர்களைத் தேடிச் செல்வேன்" என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே நினைத்தான். இப்படித் தீர்மானித்த வலிய கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தனது இதயம் துயரத்தால் எரிய எழுந்தான்.

மனிதர்களில் காளையான குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, “இந்தக் காட்டில் ஏதாவது தீய ஆதிக்கம் இருக்கிறதா? அல்லது இதில் {இந்தக்காட்டில்} தீய மிருகங்களின் தொந்தரவு இருக்கிறதா? அல்லது அவர்கள் அனைவரும் வலிமைமிக்க ஏதாவதோர் உயிரினத்தை அவமதித்தன் விளைவாக விழுந்தார்களா? அல்லது நீர் இருக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியாமல், இந்தக் காடு முழுவதும் சுற்றித் தேடித் திரிகிறார்களா? அந்த மனிதர்களில் காளையர் திரும்பி வராததன் காரணம்தான் என்ன?” என்று தனக்குள் நினைத்தான். பிறகு இதே வகையில் தனக்குள் பேசிக்கொண்ட ஏகாதிபதிகளில் முதன்மையான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், மான்களும், கரடிகளும், பறவைகளும் நிறைந்து, பிரகாசமான பச்சை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு, கருவண்டுகளின் ரீங்காரத்தாலும், சிறகு படைத்த பாடகர்களின் இனிய கீதங்களாலும் எதிரொலிக்கப்பட்டு, மனித ஒலியே அற்றிருந்த அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் சென்ற போது அவன் தேவ தச்சனாலேயே வடிவமைக்கப்பட்டது போன்ற ஓர் அழகிய தடாகத்தைக் கண்டான். அது {அத்தடாகம்} மஞ்சள் நிறம் கொண்ட மலர்களாலும், தாமரைகளாலும், சிந்துவாரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {அத்தடாகம்} பிரம்பு {canes}, தாழை {ketakas}, அலரி {karaviras}, அரச {pippalas} மரங்களால் சூழப்பட்டிருந்தது. களைப்பால் பாதிக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரன் அந்தக் குளத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, April 19, 2014

ஜடாசுரன் வதம்! - வனபர்வம் பகுதி 156

The slaughter of Jatasura! | Vana Parva - Section 156 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமன் இல்லாத நேரத்தில் ஜடாசுரன் என்ற ராட்சசன், பாண்டவர்களையும், திரௌபதியையும் கடத்திச் செல்வது; பீமன் ஜடாசுரனைக் கொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அச்சிறந்த மலையில் அந்தணர்களுடன் வசித்து வந்த பாண்டவர்கள் அர்ஜுனன் திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை வளர்ந்து பிற ராட்சசர்களும், பீமனின் மகனும் {கடோத்கசனும்} சென்ற பிறகு, ஒரு நாள் பீமன் வெளியே சென்றிருந்தான். அப்போது, தீடீரென ஒரு ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனையம், இரட்டையர்களையும் {நகுலன், சகாதேவன் இருவரையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} கடத்திச் சென்றான். (அந்தண வேடத்தில் இருந்த) அந்த ராட்சசன் பாண்டவர்களுடனேயே நெடுங்காலமாகத் தங்கியிருந்தவனாவான். அப்படி இருந்த போது அவன் தன்னைச் சாத்திரங்களை அறிந்த ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த வகை அந்தணனனாகக் காட்டிக் கொண்டான். பாண்டவர்கள் உபயோகித்த வில் மற்றும் அம்பறாத்தூணிகளையும், இன்னும் பிற பொருட்களையும் கவர்ந்து செல்லவும், திரௌபதியை அபகரிக்கவுமே அவன் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தான். அந்தத் தீய பாவியின் பெயர் ஜடாசுரன் ஆகும். ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அவனை ஆதரித்த பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அந்தப் பாவி சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போன்றவன் என்பது தெரியாது.


ஒரு நாள் எதிரிகளை ஒடுக்குபவனான பீமசேனன் வேட்டையாடுவதற்கு வெளியே சென்றான். கடோத்கசனும், அவனது அடிபொடிகளும் பலதரப்பட்ட திசைகளுக்குச் சிதறிப் போனதையும், லோமசர் மற்றும் நோன்பு நோற்கும் பிற பெரும் முனிவர்கள் நீராடுவதற்கும், மலர்கள் சேகரிப்பதற்கும் சென்றிருப்பதையும் கண்ட அவன் {அந்த ராட்சசன் ஜடாசுரன்}, பயங்கரமான பெரும் உருவம் எடுத்து (பாண்டவர்களின்) ஆயதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, திரௌபதியையும், மூன்று பாண்டவர்களையும் கடத்திக்கொண்டு சென்றான். அதன் பிறகு, பாண்டுவின் மகனான சகாதேவன், தனது முயற்சியால் அவனிடமிருந்து {அந்த ஜடாசுரன் என்ற ராட்சசனிடம் இருந்து} விடுபட்டு, கௌசிக என்ற வாளை எதிரியிடம் இருந்து பறித்து, பீமனை அழைத்துக் கொண்டே, அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் சென்ற திக்கில் சென்றான்.

இப்படிக் கடத்திச் செல்லப்பட்ட போது, நீதிமானான யுதிஷ்டிரன் அவனிடம் (அந்த ராட்சசனிடம்), "ஓ! மூடா, (இத்தகு செயலால்) உனது தகுதி குறைந்தது. இயற்கையால் விதிக்கப்பட்ட விதியை நீ மதிக்க மாட்டாயா? மானுட இனத்தைச் சேர்ந்தவரோ அல்லது தாழ்ந்த வகையைச் சேர்ந்தவரோ, எவராயினும் அறத்தை மதித்து நடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராட்சசர்கள் அப்படி மதித்து நடக்க வேண்டும். முதலில் அவர்களே மற்றவர்களைவிட அறத்தை நன்கறிந்தவர்கள். இதையெல்லாம் கருதிப் பார்த்து நீ அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! ராட்சசா, தேவர்கள், பித்ருக்கள், சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், ஏன் புழுக்களும் எறும்புகளும் கூட மனிதர்களை நம்பியே தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். நீயும் அப்படியே வாழ்கிறாய். மானுட இனத்தில் செல்வம் கொழிக்கிறது என்றால், உனது இனமும் செழிப்படையும். அவர்களுக்குப் பேரிடர் சம்பவித்தால் தேவர்களும் துன்புறுவர். காணிக்கைகளால் திருப்தி செய்யப்படுவதால்தான் தேவர்களும் வாழ்கின்றனர். ஓ! ராட்சசா {ஜடாசுரா}, நாங்களே {மனிதர்களே} நாடுகளின் பாதுகாவலர்களாகவும், ஆட்சியாளர்களும், குருக்களாகவும் இருக்கிறோம். நாடுகள் பாதுகாப்பற்று இருந்தால் வளமையும் மகிழ்ச்சியும் எப்படி வரும்? குற்றமேதும் நடக்காத வரை ஒரு ராட்சசன் ஒரு மன்னனை மீறி நடக்கக்கூடாது.

ஓ! மனிதர்களை உண்பவனே {ஜடாசுரனே}, சிறு தீங்கைக் கூட நாங்கள் செய்யவில்லையே. விகாசையில் வாழும் நாங்கள் தேவர்களையும் பிறரையும் எங்கள் சக்திக்குத் தக்கவாறு சேவித்தே வருகிறோம். நாங்கள் எங்களுக்கு மூத்தவர்களையும், அந்தணர்களையும் வணங்காமல் இருந்ததில்லை. ஒரு நண்பன், நம்பியிருப்பவன், உணவு கொடுத்தவன், தங்க இருப்பிடம் அளித்தவன் ஆகியோருக்கு ஒரு போதும் தீங்கிழைக்கக் கூடாது. நீ எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சியாகவும் மரியாதையுடனும் வசித்திருக்கிறாய். ஓ! தீய மனம் கொண்டவனே, நாங்கள் கொடுத்த உணவையும் உண்ட நீ, எங்களைக் கடத்திக் கொண்டு செல்கிறாயா? உனது செயல்கள் சரியற்றவையாக இருக்கிறது. எந்தப் பலனும் இல்லாமல் நீ வயதால் வளர்ந்திருக்கிறாய். விலங்குக்கொப்பான உனது இயல்புகள் தீமையானவையாக இருக்கின்றன. ஒன்றுமில்லாததற்குச் சாகத் துணிந்தாய். ஆகையால் இன்று நீ ஒன்றுமில்லாமலேயே இறப்பாய். நீ உண்மையில் அறமற்று இருந்தாலும், தீமையற்றவனாக இருந்தால், எங்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, போரிட்ட பின் திரௌபதியை அபகரித்துச் செல். ஆனால் மூடத்தனத்தால் நீ இச்செயலைச் செய்தால் நீ அவப்பெயரையும், சிறுமையையுமே பெறுவாய். மானுட இனத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு {திரௌபதிக்கு} நீ ஏதும் தீங்கு செய்தால், நன்கு குலுக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த விஷத்தைக் குடித்தவனாவாய்" என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.

பிறகு, யுதிஷ்டிரன் தன்னைக் கனம் நிறைந்தவனாக ஆக்கிக் கொண்டான். அவனது எடையால் ஒடுக்கப்பட்ட அவன் முன்பு போல வேகமாகச் செல்ல முடியவில்லை. பிறகு திரௌபதி, நகுலன், சகாதேவன் ஆகியோரிடம் யுதிஷ்டிரன், "இந்த இழிந்த ராட்சசனைக் குறித்து அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நான் அவனது வேகத்தைத் தடுத்திருக்கிறேன். பலம்வாய்ந்த கரம் கொண்ட வாயுத்தேவனின் மகன் {பீமன்}, வெகு தொலைவில் இருக்க மாட்டான். பீமன் இங்கு வந்த அடுத்த நொடி இந்த ராட்சசன் வாழ மாட்டான்" என்றான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, உணர்விழந்த ராட்சசனை முறைத்துப் பார்த்த சகாதேவன் குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், "ஒரு க்ஷத்திரியனுக்குப் போரைவிடவோ அல்லது எதிரியை வீழ்த்துவதை விடவோ எது தகுதி வாய்ந்ததாக இருக்கும்? ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் போரிடலாம். ஓ! பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, ஒன்று இவன் நம்மைக் கொல்வான் அல்லது நாம் இவனைக் கொல்வோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதுவே தகுந்த நேரமும் இடமும் ஆகும். ஓ! பொய்க்காத பராக்கிரமம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நமது க்ஷத்திரிய அறத்தைக் காட்ட நேரம் வாய்த்தது. நாம் வென்றோ அல்லது கொல்லப்பட்டோ சொர்க்கத்தை அடைவதே நமக்குத் தகும். இந்த ராட்சசன் வாழ்ந்தவாறே இன்று சூரியன் மறைந்தனானால், நான் இனிமேல் என்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஹோ! ஹோ! ராட்சசனே, நான் பாண்டுவின் மகனான சகாதேவன். ஒன்று என்னைக் கொன்று இந்த மங்கையைக் கடத்தி செல் அல்லது என்னால் கொல்லப்பட்டு உணர்விழந்து விழு" என்றான் {சகாதேவன்}.

மாத்ரியின் மகனான சகாதேவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, வஜ்ரம் தாங்கியிருக்கும் வாசவனைப் போலக் கைகளில் கதாயுதத்துடன் பீமசேனன் அங்கே தோன்றினான். அவன் {பீமன்} தனது இரு சகோதரர்களையும், நல்ல மனம் கொண்ட திரௌபதியையும் (அந்தப் பேயின் தோள்களில்), தரையில் நின்று கொண்டு விதியால் மதியிழந்த ராட்சசனை கண்டித்துக் கொண்டிருந்த.சகாதேவனையும் கண்டான். தனது சகோதரர்களும், திரௌபதியும் கடத்தப்படுவதை அறிந்த பெரும் பலம் வாய்ந்த பீமன் கோபத்தால் எரிந்து அந்த ராட்சசனிடம், "முன்பு நீ எங்கள் ஆயுதங்களை நுண்ணாய்வு செய்த போதே நீ தீயவன் என்பது எனக்குத் தெரியும்; ஆனால் உன்னைக் குறித்து நான் அச்சப்படவில்லை. அதனால் உன்னை அப்போது கொல்லாமல் விட்டேன். நீ அப்போது அந்தண உருவில் இருந்தாய். எங்களிடம் எந்தக் கடும் வார்த்தைகளையும் பேசவில்லை. எங்களைத் திருப்தி செய்வதிலேயே மகிழ்ச்சி கொண்டிருந்தாய். மேலும் நீ எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதற்கு மேலும் நீ எங்கள் விருந்தினராக வேறு இருந்தாய். ஆகையால் குற்றமிழைக்காத அப்பாவியான உன்னை; அதுவும் அந்தண உருவில் இருந்த உன்னை நான் எப்படிக் கொல்ல முடியும்? அப்படியிருப்பவன் ஒருவன் ராட்சசனாகவே இருந்தாலும், அவனைக் கொல்பவன் நரகத்திற்குச் செல்வான். மேலும் நேரம் வருவதற்கு முன்னால் உன்னைக் கொல்ல முடியாதல்லவா. இன்று உனது முழு நேரமும் முடிந்தது. அதனால்தான் விதி உன்னைக் கிருஷ்ணையை {திரௌபதியை} அபகரிக்கச் செய்தது. இக்காரியத்தைச் செய்ததால் நீ விதியெனும் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொண்டாய். முள்ளால் தைக்கப்பட்ட வாயுடன் நீரில் இருக்கும் மீனைப் போல இருக்கும் நீ எப்படி இன்று உயிருடன் இருக்க முடியும்? நீ ஏற்கனவே மனதால் {நீ விரும்பிய இடத்திற்கு} சென்றிருந்தாலும் உன்னால் இன்று நீ விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் பகனும், ஹிடிம்பனும் சென்ற இடத்திற்கு நீ செல்ல வேண்டியதிருக்கும்" என்றான் {பீமன்}.

பீமனால் இப்படிச்சொல்லப்பட்ட அந்த ராட்சசன் அச்சத்தால் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கினான். இருப்பினும் விதியால் இழுக்கப்பட்ட அவன் போர் செய்ய அணுகினான். கோபத்தால் உதடுகள் துடிக்க அவன் {ஜடாசுரன்} பீமனிடம், "இழிந்தவனே, நான் தடுமாறவில்லை. நான் உனக்காகவே தாமதம் செய்தேன். நான் கேட்டிருப்பது போல உன்னால் ஏற்கனவே போரில் கொல்லப்பட்ட ராட்சசர்களுக்கு உனது இரத்தத்தைக் காணிக்கையாக்குவேன்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட பீமன் மிகச்சினம் கொண்டு பிரளய கால யமன் போல வாயோரங்களைத் தனது நாவால் நக்கிக் கொண்டிருந்த அந்த ராட்சசனை அணுகி, தனது கரங்களைத் தட்டினான். பீமன் போருக்கு எதிர்பார்த்து காத்திருப்பதைப் பார்த்த ராட்சசன் {ஜடாசுரன்} கோபத்துடன் வாலி இந்திரனை நோக்கி விரைந்தது போல விரைந்து சென்றான்.

அந்த இருவருக்குள்ளும் கடும் மற்போர் ஏற்பட்ட போது, மாத்ரியின் மகன் இருவரும் எல்லைமீறிய கோபத்துடன் முன்னேறினர். ஆனால் குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்} அவர்களைப் புன்னகையுடன் தடுத்து, "இந்த ராட்சசனுக்கு நானே போதும். நின்று பார். எனது சகோதரர்கள், எனது நற்செயல்கள், எனது வேள்விகள், எனது சக்திகள் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்வேன்" என்றான். அவன் {பீமன்} அப்படிச் சொன்ன பிறகு, அந்த இரு வீரர்களான ராட்சசனும் {ஜடாசுரனும்} விருகோதரனும் {பீமனும்} ஒருவருக்கொருவர் சவால் விட்டபடி ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்தனர். அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டது தேவனுக்கும் அரசுரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அது இருந்தது. தொடர்ச்சியாக மரங்களை வேரோடு பிடுங்கி அந்தப் பலம் பொருந்திய இருவரும் போரிட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொல்ல நினைத்த அவர்கள் தங்கள் தொடைகளால் பெரும் மரங்களை ஒடித்துப் போட்டனர். செடிகளுக்கு அழிவைத் தருவதான மரங்களைக் கொண்டு அவர்கள் செய்த போர் ஒரு பெண்ணுக்காக இரு சகோதரர்களான வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த போரைப் போல இருந்தது. ஒரு நொடியில் மரங்களைக் காற்றில் வீசிய அவர்கள், அதைக் {மரங்களைக்} கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பெரும் கர்ஜனை செய்தனர்.

அந்தப் பகுதியில் இருந்த மரங்களை அனைத்தும் பிடுங்கப்பட்டு நார்நாராய் ஆன பிறகு ஒருவரை ஒருவர் கொல்ல நினைத்த பலம்பொருந்திய அவர்கள் இருவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மலையைப் போன்றும், பெரும் மேகக்கூட்டம் போன்று இருந்த பெரிய பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். அதனால் பாதிக்கப்படாத இருவரும், பிறகு இடியைப் போன்ற செங்குத்தான பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். பலம் நிறைந்த அவர்கள் அறைகூவியபடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இரு பெரும் யானைகளைப் போல மற்போர் புரிந்தனர். பிறகு கடும் அடிகளைக் கொண்டு சண்டையிட்டனர். அந்த இரு பெரும் பலம் வாய்ந்தவர்களும் பற்களை நறநறவெனக் கடித்து ஒலியை எழுப்பினர்.

ஐந்து தலை பாம்பைப் போல இருந்த தனது கரத்தால் பீமன் அந்த ராட்சசனின் {ஜடாசுரனின்} கழுத்தில் ஒரு கடுமையை அடியை அடித்தான். பீமன் அடித்த முதல் அடியில் அந்த ராட்சசன் மயங்கினான். மயங்கிய அவனைப் பீமேசனேன் பிடித்துக் கொண்டான். பிறகு தேவனைப் போன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட பீமன் தனது இரு கரங்களால் அவனைத் தூக்கி நல்ல விசையுடன் தரையில் தூக்கி எறிந்து அவனது உறுப்புகள் அனைத்தையும் நொறுக்கினான். பிறகு தனது முட்டியால் அடித்து, கண்கள் உருண்டபடி, உதடுகள் கடித்தபடி இருந்த அந்த ராட்சசனின் தலையை மரத்தில் இருந்து கனியைப் பிடுங்குவது போல அவனது உடலில் இருந்து பிய்த்தெறிந்தான். பீமசேனன் தனது பலத்தால் ஜடாசுரனின் தலையைப் பிய்த்த போது, அவனது உடல் முழுவதும் ரத்தத்தால் பூசப்பட்டபடி இருந்தது. ஜடாசுரனைக் கொன்ற பீமன் யுதிஷ்டிரனின் முன்னிலைக்குக் வந்தான். அந்தணர்களில் முதன்மையானவர்கள் (பீமனை) வாசவனைப் புகழும் மருதர்களைப் போலப் புகழ ஆரம்பித்தனர்.

http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

Sunday, January 19, 2014

காம்யகத்தை விட்டுப் பெயரலாம் என்றான் சகாதேவன்! - வனபர்வம் பகுதி 80

"We may migrate Kamyaka" said Sahadeva! | Vana Parva - Section 80 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வம்)

அர்ஜுனன் இல்லாத கானகத்தைக் கண்டு யுதிஷ்டிரனிடம் புலம்பும் திரௌபதியும், பாண்டவர்களும்…

ஜனமேஜயன் சொன்னான், "ஓ புனிதமானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டனான பார்த்தன் {அர்ஜுனன்}, காம்யக வனத்தைவிட்டுச் சென்ற பிறகு, இடது கையாலும் வில்லை இழுக்கும் அந்த வீரன் {அர்ஜுனன்} தங்களுடன் இல்லாத போது {மற்ற} பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? எதிரிகளை வீழ்த்தும் அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியே, தேவர்களுக்கு விஷ்ணுவைப் போல, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரே புகலிடம் என்று எனக்குத் தெரிகிறது. இந்திரனைப் போன்ற வீரம் கொண்டு போரில் புறமுதுகிடாத அந்த வீரனின் {அர்ஜுனனின்} துணையில்லாதிருந்த எனது பாட்டன்கள், தங்கள் நாட்களை எப்படிக் கடத்தினர்?"


வைசம்பாயனர் சொன்னார், "கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட அர்ஜுனன் காம்யக வனத்தை விட்டுச் சென்றதும், ஓ மகனே {ஜனமேஜயா}, பாண்டுவின் மகன்கள் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கினர். உற்சாகமற்ற இதயம் கொண்ட அந்தப் பாண்டவர்கள், சரத்தில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் போலவும், சிறகிழந்த பறவைகள் போலவும் இருந்தனர். குபேரன் இல்லாத சைத்திரரத வனம் போல, வெண்குதிரைகளைக் கொண்ட அந்த வீரன் இல்லாத கானகம் இருந்தது. ஓ ஜனமேஜயா, அந்த மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன்கள் அர்ஜுனனின் துணையை இழந்து உற்சாகமற்ற மனநிலையுடனேயே அந்தக் காம்யக வனத்தில் தொடர்ந்து வாழ்ந்தனர். ஓ பாரதகுலத்தின் தலைவா {ஜனமேஜயனே}, அந்தப் பலம் பொருந்திய போர் வீரர்கள், சுத்தமான கணைகளைக் கொண்டு, பெரும் பராக்கிரமத்துடன் அந்தணர்களின் வேள்விக்கான விலங்குகளை அடித்தனர். அந்த மனிதர்களில் புலிகளான எதிரிகளை ஒடுக்குபவர்கள், தினமும் காட்டு விலங்குகளைக் கொன்று, முறைப்படி அதைச் சுத்தப்படுத்தி, அந்தணர்களிடம் கொடுத்தனர்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே அந்த மனிதக் காளைகள், அர்ஜுனனின் பிரிவால் துயரத்துடனும் உற்சாகமற்ற இதயங்களுடனும் வாழ்ந்தனர். குறிப்பாக பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தனது மூன்றாவது தலைவனை நினைத்து வருந்தி, யுதிஷ்டிரனிடம், "தனது இருகரங்களால், ஆயிரம் கரம் கொண்ட (பழங்கால) அர்ஜுனனையே {கார்த்தவீரியார்ஜுனன்} எதிர்க்கவல்லவர் அர்ஜுனர். பாண்டு மகன்களில் முதன்மையான அவர் இல்லாத இந்தக் கானகம் அழகற்றதாக எனது கண்களுக்குத் தெரிகிறது. அவரில்லாத இடத்தில் எனது பார்வை படும்போது, பூமி களையிழந்து காணப்படுகிறது. பூத்துக் குலுங்கும் மரங்களாலும், அற்புதங்கள் நிறைய வைத்திருந்தாலும் அர்ஜுனர் இல்லாத இந்தக் கானகம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கிறது. நீல மேகக் குவியல் போலவும், மதம் கொண்ட யானையின் பராக்கிரமத்துடனும், தாமரை இதழ்கள் போன்ற கண்களும் உடைய அந்த வீரர் இல்லாத இந்தக் காம்யக வனம் எனக்கு அழகாகத் தெரியவில்லை. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைப் போன்ற கர்ஜனையைக் கொடுக்கும் வில்லொலியை எழுப்புபவரும், இடது கையாலும் வில்லை இழுக்கவல்லவரும், அந்த வீரரை {அர்ஜுனரை} நினைத்து, என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை" என்றாள் {திரௌபதி}.

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன அழுத்தத்தால் உண்டான அவளது புலம்பலைக் கேட்ட எதிரி வீரர்களைக் கொல்பவனான பீமன், திரௌபதியிடம், "ஓ கொடியிடை கொண்ட அருளப்பட்ட மங்கையே, அமுதத்தைப் பெருமடக்காகக் குடிப்பது போல உள்ள உனது ஏற்புடைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் மகிழ்கிறது. சமச்சீராக நீண்டு, இரண்டு இரும்பு கதாயுதங்கள் போல பருத்து, உருண்டு, வில்லின் நாணால் உண்டான காயங்களுடனும், வில் வாள், மற்ற ஆயுதங்களுடன் இரண்டு ஐந்து தலை நாகங்களைப் போல இருக்கும் கரங்களைக் கொண்ட அந்த மனிதப் புலி இல்லாமல், சூரியன் இல்லா வானம் போல இருக்கிறோம். அந்த பெரும் பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனை நம்பியே பாஞ்சாலர்களும் கௌரவர்களும், கடும் முயற்சியுடைய தேவர்களுக்குக் கூடப் பயப்படுவதில்லை. அந்த வீரனை நம்பியே நாம் நமது எதிரிகள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவும், பூமி ஏற்கனவே அடையப்பட்டதாகவும் கருதி வருகிறோம். அப்படிப்பட்ட அந்த பல்குனன் {அர்ஜுனன்} இல்லாமல் நான் இந்த காம்யக வனத்தில் அமைதியை அடைய முடியவில்லை. வேறு பக்கங்களில் நான் எனது பார்வையைத் திருப்பினாலும், அனைத்தும் எனக்கு வெறுமையாகவே தெரிகிறது.

பீமன் முடித்ததும், பாண்டுவின் மகனான நகுலன் கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "போர்க்களத்தில் இயல்புக்குமிக்க சாதனைகள் செய்து தேவர்களையும் பேச வைக்கும் அந்த வீரர்களில் முதன்மையானவர் {அர்ஜுனர்} இல்லாத இந்த வனத்தில் நாம் என்ன இன்பங்களை அடைய முடியும்? வடதிசை சென்று நூற்றுக்கணக்கன கந்தர்வத் தலைவர்களை வீழ்த்தி, காற்று போன்ற பெரும் வேகம் கொண்ட எண்ணிலடங்கா தித்திரி, கல்மாஷ வகையிலான அழகான குதிரைகளைக் கொணர்ந்தார். அப்படிக் கொணர்ந்து, பெரும் ராஜசூய வேள்வியின் போது, தனது அண்ணனான மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பாசத்தால் பரிசளித்த அந்தச் சிறப்புமிக்கவரும், பீமருக்குப் பின் பிறந்த அந்தப் பயங்கரப் போர்வீரரும், தேவர்களுக்கு இணையானவருமான அந்த வீரர் {அர்ஜுனர்} இல்லாத இந்தக் காம்யக வனத்தில் மேலும் வாழ எனக்கு விருப்பமில்லை" என்றான் {நகுலன்}.

நகுலனின் புலம்பல்களுக்குப் பிறகு, சகாதேவன், "போர்க்களத்தில் பல பலம்பொருந்திய வீரர்களை வீழ்த்தி, பெரும் செல்வத்தையும், கன்னிகைகளையும் கொண்டு வந்து, மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பெரும் ராஜசூய வேள்வியின் போது கொடுத்தவர், அந்த அளவில்லா பிரகாசம் கொண்ட வீரர், போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற *யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர். சிறப்புமிக்க துருபதனின் பகுதியின் மேல் படையெடுத்து, ஓ பாரதரே {யுதிஷ்டிர்ரே} துரோணருக்குத் தனது குரு தட்சணையைக் கொடுத்தவர் அந்த வீரர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது ஆசிரமத்தில் இருக்கும் அந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனரின்} புல் படுக்கையைக் கண்டு எனது இதயம் ஆறுதல் இல்லாமல் தவிக்கிறது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அந்த வீரர் இல்லாத இந்தக் கானகம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. ஆகவே இந்தக் கானகத்தை விட்டு சென்றுவிடுவதே நலம் என நான் கருதுகிறேன்" என்றான் {சகாதேவன்}.
***********************************************************************
*யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர்.

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, October 27, 2013

நகுலனும் சபதமேற்றான் | சபா பர்வம் - பகுதி 76

The vow of Nakula | Sabha Parva - Section 76 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

துச்சாசனன் பாண்டவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி, திரௌபதியிடம் தங்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லல்; பீமன் கோபம் கொள்ளுதல்; துரியோதனனின் நையாண்டி; பீமன் சபதத்தை உரக்கச் சொல்லல்; அர்ஜுனன் சபதமேற்றல்; சகாதேவன் பீமனின் சபதத்தை உறுதி கூறல்; நகுலன் சபதம் ஏற்றல்; பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை அணுகுதல்...

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு {பகடை ஆட்டத்தில்} தோல்வியுற்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள், வனவாசத்துக்குத் தயாரானார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக, முறையான வரிசையில் தங்கள் அரச உடுப்புகளைக் களைந்து மான் தோல் உடுத்தினர். மான் தோல் உடுத்தப்பட்டு நாட்டை இழந்து, நாடு கடத்தலுக்குத் தயாராக இருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களைக் கண்ட துச்சாசனன், "சிறப்புவாய்ந்த மன்னன் துரியோதனனின் முழு அரசாட்சி நடக்கத் தொடங்கிவிட்டது. பாண்டுவின் மகன்கள் வெற்றிகொள்ளப்பட்டு, பெரும் துயரத்தில் மூழ்கினர். அகலமான அல்லது குறுகலான பாதைகளில் சென்று எங்கள் குறிக்கோளை நாங்கள் அடைந்துவிட்டோம்.


இன்று நாங்கள் எங்கள் எதிரிகளைவிட செல்வத்தில் மேன்மையானோம். எங்கள் அரசாட்சி காலமும் மனிதர்கள் போற்றுதலுக்குரிய வகையில் இருக்கிறது. பிருதையின் {குந்தியின்}  மகன்கள் அனைவரும் நிலைத்த நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். அவர்கள் காலாகாலத்துக்கும் நாட்டையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டனர். செல்வத்தில் கர்வம் கொண்டு, திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} ஏளனம் செய்து சிரித்தவர்கள், இப்போது தோல்வியுற்று, தங்கள் செல்வத்தையெல்லாம் இழந்து கானகத்திற்கு செல்ல வேண்டியவர்களானார்கள்.

சுபலன் மகனிடம் {சகுனியிடம்} அவர்கள் பந்தயமாக ஏற்றுக் கொண்டது போல, தங்கள் பல வண்ண கவசங்களையும், தெய்வீக ஆடை ஆபரணங்களையும் களைந்து, மான் தோலை அணிந்து கொள்ளட்டும். உலகத்தில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லையென்று தற்பெருமை பேசியவர்கள், இப்போது தங்கள் பேரிடர் காலத்தில் பருப்பு இல்லாத எள் தானியங்கள் போல தங்களைக் கருதி, தங்கள் நிலையை அறிந்து கொள்வார்கள் {எள்ளுப்பதர்கள் போலப் பயன்படாதவர்களாகித் தங்களைச் சரியாகத் தெரிந்து கொள்வர் என்று சொல்கிறது ம.வீ.ரா. பதிப்பு}. இந்த ஆடையில் கூட பாண்டவர்கள் வேள்வியில் அமர்ந்திருக்கும் பலம் கொண்ட ஞானிகள் போல இருந்தாலும், வேள்வி செய்யத் தகாதவர்களைப் போலவும், வேடதாரிகள் போலவும் தெரிகிறார்கள்.

சோமக குலத்தின் ஞானமுள்ள யக்ஞசேனன் {துருபதன்}, பாஞ்சால இளவரசியான தனது மகளை {திரௌபதியை}, பாண்டுவின் மகன்களுக்கு அளித்தான். ஆண்மையற்றவர்களுக்குத் தனது பெண்ணை அளித்ததால் அவன் நற்பேறற்ற நிலையை அடைந்தான். ஓ யக்ஞசேனி {திரௌபதி}, செல்வத்தையும் உடைமைகளையும் இழந்து மான் தோலுடுத்தி, கந்தலான நூலாடை அணியும் உனது கணவர்களால் உனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது. இங்கே இருப்பவர்களுக்கு மத்தியில், உனக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவரைக் கணவராகத் தேர்ந்தெடுத்துக் கொள். இங்கே கூடியிருக்கும் குருக்கள் அனைவரும் பொறுமையும், சுயக்கட்டுப்பாடும், பெரும் செல்வமும் கொண்டவர்கள். இவர்களில் ஒருவரை உனது தலைவராகக் கொண்டால், இந்தப் பேரிடர் உனக்குப் பாவகர நிலையைத் தராது. இந்தப் பாண்டுவின் மகன்கள் பருப்பற்ற எள் தானியங்கள் {எள் பதர்} போன்றவர்கள் அல்லது பார்வைக்காக தோலால் பாடம் செய்யப்பட்ட விலங்கு போன்றவர்கள் அல்லது பருப்பற்ற அரிசி தானியம் {நெற்பதர்} போன்றவர்கள். வீழ்ந்த பாண்டுவின் மகன்களுக்காக இனியும் நீ ஏன் காத்திருக்க வேண்டும்? பருப்பற்ற எள் தானியத்தை {எண்ணைக்காக} நசுக்கும் வேலை வீணானது" என்றான்.

திருதராஷ்டிரன் மகனான துச்சாசனன் இப்படி பாண்டவர்களுக்கு முன்னிலையில் கொடுமையான வார்த்தைகளைப் பேசினான். இதைக் கேட்டு பொறுமை காக்க முடியாத பீமன், மிகுந்த கோபத்தில் திடீரென சிறு நரியை அணுகும் இமாலய சிங்கம் போல அந்த இளவரசனை {துச்சாசனனை} அணுகி, மிகச் சத்தமாக கண்டிக்கும் வார்த்தைகளில், "தீய எண்ணம் கொண்ட துன்மார்கனே, பாவிகள் பேசும் பேச்சைப் பேசிவிட்டு பரந்த அளவில் பாராட்டுகளைப் பெறுவாய் என்றா நினைக்கிறாய்? காந்தார மன்னனின் {சகுனியின்}  நிபுணத்துவத்தால் முன்னேறினாய். ஆனால் மன்னர்களுக்கு முன்னிலையில் தற்பெருமை பேசுகின்றாய். உனது கணை போன்ற வார்த்தைகளால் எப்படி நீ எங்கள் இதயங்களைத் துளைக்கிறாயோ, அப்படி போர்க்களத்தில், இதையெல்லாம் நினைவுகூர்ந்து உனது இதயத்தைத் துளைப்பேன். கோபத்தால் பேராசையாலும் உனக்குப் பின்னால் உனக்குப் பாதுகாவலாக இருப்போரையும் அவர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் உறவினர்களுடன் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மான்தோல் உடுத்தியிருந்த பீமன் இப்படிப் பேசிவிட்டு, அறத்தின் பாதியில் இருந்து வழுவாமல், வேறு எதுவும் செய்யாமல் விட்டான். அப்போது துச்சாசனன் வெட்கமின்றி குருக்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டு சத்தமாக "மாடே! மாடே!" என்றான்.

இதனால் பீமன் மறுபடியும், "ஓ துச்சாசனா, பாதகா, இது போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த உனக்கு என்ன தைரியம்? ஏமாற்று வித்தைகளால் எங்கள் செல்வத்தை வென்று, நீயெல்லாம் தற்பெருமை பேசுகிறாய். நான் உனக்குச் சொல்கிறேன். போர்க்களத்தில் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமனாகிய நான்} உனது இதயத்தைத் துளைத்துப் பிளந்து, உனது உயிர் ரத்தம் குடிக்கவில்லையானால், அருள் நிறைந்த பகுதிகளை அவன் அடைய மாட்டான். நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களை, அனைத்து வீரர்கள் முன்னிலையில் கொன்று, எனது கோபத்தை விரைவில் தணித்துக் கொள்வேன்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தச் சபையை விட்டு பாண்டவர்கள் வெளியேறும் போது, தீய மன்னனான துரியோதனன் பெரும் மகிழ்ச்சியால், சிங்கம் போல நடக்கும் பீமனின் நடையைப் போல நடந்து காட்டி நையாண்டி செய்தான். பிறகு விருகோதரன் {பீமன்} மன்னனை {துரியோதனனை} நோக்கி பாதி திரும்பிய நிலையில், "மூடா, இதனால் நீ என்னை மிஞ்சியவனாகி விட்டாய் என்று நினைத்துக் கொள்ளாதே. விரைவில் உன்னையும் உனது தொண்டர்களையும் கொல்வேன். அப்போது இதையெல்லாம் நினைவு கூர்ந்து உனக்குப் பதிலளிக்கிறேன்" என்றான். தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைக் கண்ட பெரும் பலமும் கர்வமும் கொண்ட பீமன், பொங்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தி, யுதிஷ்டிரனின் சுவடுகளைப் பின்பற்றி சென்று, அந்தக் கௌரவ அவையில், "நான் துரியோதனனைக் கொல்வேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வான். சகாதேவன் பகடைச் சூதாடி சகுனியைக் கொல்வான். நான் இந்தச் சபையின் முன்னால் இந்தக் கர்வமான வார்த்தைகளை உச்சரிக்கிறேன். இவ்வார்த்தைகளுக்குத் தேவர்கள் நன்மை செய்வர். எப்போதாவது நாங்கள் குருக்களுடன் போர் செய்தால், இந்தப் பாதகன் துரியோதனனை அப்போர்க்களத்தில் எனது கதையால் அடித்தே கொல்வேன். பிறகு அவனை {துரியோதனனை} தரையில் கிடத்தி, எனது பாதத்தை அவனது தலையில் வைப்பேன். தீய பேச்சு கொண்ட இந்தத் தீய மனிதன் துச்சாசனைப் பொறுத்தவரை, சிங்கம் போல நான் அவனது ரத்தத்தைக் குடிப்பேன்" என்றான்.

அர்ஜுனன், "ஓ பீமா, மேன்மையான மனிதர்களின் தீர்மானங்கள் வார்த்தைகளால் மட்டும் அறியப்படுவதில்லை. இன்றிலிருந்து பதினான்காவது {14} வருடத்தில், அவர்கள் என்ன நடக்கும் என்பதைக் காண்பார்கள்" என்றான்.

பீமன், "இந்தப் பூமி துரியோதனன், கர்ணன், தீய சகுனி, மற்றும் துச்சாசனன் ஆகிய நால்வரின் ரத்தத்தைக் குடிக்கும்" என்றான்.

அர்ஜுனன், "ஓ பீமா, நீர் சொன்னவாறே, நான் தீங்கிழைப்பவனும், பொறாமை கொண்டவனும், கடும் பேச்சு கொண்டவனும், வீணனுமான கர்ணனைப் போர்க்களத்தில் கொல்வேன். கர்ணனையும் அவனது தொண்டர்களையும் எனது கணைகளால் கொல்வேன் என்று பீமனுக்கு ஏற்புடைய வகையில் சபதமேற்கிறேன். முட்டாள்தனமாக எனக்கு எதிராகப் போரிட வரும் மன்னர்களையும் நான் யமனுலகு அனுப்புவேன். இமய மலை அகற்றப்படலாம், பகலை உண்டாக்குபவன் {சூரியன்} ஒளியிழந்து போகலாம், சந்திரன் தனது குளிர்ச்சியை இழக்கலாம். ஆனால் இந்த எனது சபதம் எப்போதும் பேணப்படும். மேலும் இவை அனைத்தும் பதினான்காவது {14} வருடத்திலேயே நிச்சயமாக நடைபெறும். துரியோதனன் உரிய மரியாதையுடன் நமது நாட்டைத் திருப்பித் தர மாட்டான்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனன் இதைச் சொன்னதும், மாத்ரியின் அழகான மகனான பெரும் சக்தி பெற்ற சகாதேவன், சகுனியைக் கொல்ல விரும்பி, தனது பலம் வாய்ந்த கரங்களை அசைத்து, பாம்பு போல பெருமூச்சுவிட்டு, கண்கள் சிவக்க கோபத்துடன், "காந்தார மன்னர்களின் அவமானமே {புகழைக் கெடுத்தவனே} {சகுனியே}, யாரை நீ தோல்வியுற்றார்கள் என்று நினைக்கிறாயோ, அவர்கள் உண்மையில் தோற்கவில்லை. அவர்கள் கூரிய முனை கொண்ட கணைகளாவர். அவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்தி, போர் அபாயத்தை வரவழைத்துக் கொண்டாய். உன்னையும் உனது தொண்டர்களையும் குறித்து பீமன் சொன்ன எல்லாவற்றையும் நான் நிச்சயம் சாதிப்பேன். உனக்கு செய்ய வேண்டிய காரியம் ஏதாவது இருந்தால், அந்த நாளுக்கு முன் செய்து முடித்துக் கொள். ஓ சுபலனின் மகனே {சகுனியே}, அதுவரை நீ க்ஷத்திரிய வெளிச்சத்தில் இருந்து எதிர்த்து நின்றால், நான் உன்னையும், உனது தொண்டர்களையும் கொல்வேன்" என்றான்.

"பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சகாதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் அழகான நகுலன், "விதியால் உந்தப்பட்டு சாவை விரும்பி, சூதாட்டத்தில் யக்ஞசேனன் {துருபதன்}  மகளை {திரௌபதியை} அவமதித்து, துரியோதனனுக்கு ஏற்புடைய காரியங்களைச் செய்யும் திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரையும் நான் நிச்சயம் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன். விரைவில், திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்துப் பார்த்து, யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரில், இந்தப் பூமியை திருதராஷ்டிரன் மகன்கள் அற்றதாக ஆக்குவேன்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நீண்ட கரங்கள் உடைய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் அவர்களுக்குள் அறம்சார்ந்த சபதங்களை ஏற்று மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர்".


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top