Showing posts with label சகுனி. Show all posts
Showing posts with label சகுனி. Show all posts

Sunday, July 03, 2016

புறமுதுகிட்ட சகுனி! - துரோண பர்வம் பகுதி – 095

Sakuni turned his back! | Drona-Parva-Section-095 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : துரோணரோடு மோதிய பாண்டவப்படையினர்; விராடனுடன் விந்தானுவிந்தர்களும், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்களோடு பாஹ்லீகனும், காசி இளவரசனோடு சைப்யனும், சாத்யகியோடு துச்சாசனனும், குந்திபோஜன் மற்றும் கடோத்கசனோடு அலம்புசனும், நகுலன் மற்றும் சகாதேவனோடு சகுனியும், யுதிஷ்டிரனோடு சல்லியனும், பீமசேனனுடன் விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் மோதியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த அற்புதமான போரை விவரமாகச் சொல்கிறேன் கேளும். தமது வியூகத்தின் வாயிலில் {முகப்பில்} நின்று கொண்டிருந்த பரத்வாஜரின் மகனை {துரோணரை} அணுகிய பார்த்தர்கள், துரோணரின் படைப்பிரிவைப் பிளப்பதற்காக மூர்க்கமாகப் போரிட்டனர். துரோணரும் தம் படைகளின் துணையுடன், தமது வியூகத்தைப் பாதுகாக்க விரும்பி, புகழடைய முயன்று கொண்டிருந்த பார்த்தர்களுடன் போரிட்டார்.


கோபத்தால் தூண்டப்பட்ட அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, பத்து கணைகளால் விராடனைத் தாக்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விராடனும், போரில் பெரும் ஆற்றலுடன் திகழ்ந்த அவ்வீரர்கள் இருவரையும் அணுகி, அவர்களுடனும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களுடனும் போரிட்டான். அவர்களுக்குள் நடைபெற்றதும், எல்லைகடந்த கடுமை கொண்டதுமான அந்தப் போரில் இரத்தம் தண்ணீராக ஓடியது. காட்டில் சிங்கத்திற்கும், மதங்கொண்ட, வலிமைமிக்க இரு யானைகளுக்கு இடையில் நேரும் மோதலுக்கு ஒப்பாக அஃது இருந்தது.

யக்ஞசேனனின் {துருபதனின்} வலிமைமிக்க மகன் {சிகண்டி}, உயிர்நிலைகளையே துளைக்கவல்ல, கடுமையான, கூரிய கணைகளால் அந்தப் போரில் மன்னன் பாஹ்லீகனைப் பலமாகத் தாக்கினான். கோபத்தால் நிறைந்த பாஹ்லீகனும், தங்கச் சிறகுகளைக் கொண்டவரையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஒன்பது நேரான கணைகளால் யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} ஆழமாகத் துளைத்தான். அடர்த்தியான கணைகள் மற்றும் ஈட்டிகளின் மழையுடன் அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது மிகக் கடுமையடைந்தது. மருண்டோரின் அச்சங்களையும், வீரர்களின் இன்பத்தையும் அஃது அதிகரித்தது. அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகள் அனைத்தையும் முழுமையாக மறைத்து, எதுவும் தெளிவாகக் காணமுடியாதபடி ஆக்கின.

துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கோவாசனர்களின் மன்னன் சைப்பியன், அந்தப் போரில், யானையொன்று மற்றொரு யானையோடு போரிடுவதைப் போல வலிமைமிக்கத் தேர்வீரனான காசிகளின் இளவரசனோடு போரிட்டான். பாஹ்லீகர்களின் மன்னன் கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து புலன்களுக்கு எதிராகப் போராடும் மனத்தைப் போல வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள் ஐயவரை எதிர்த்துப் போரிட்டான். அந்த இளவரசர்கள் ஐவரும், ஓ! உடல்படைத்தோரில் முதன்மையானவரே, உடலோடு எப்போதும் போராடும் புலன்நுகர்பொருட்களைப் போல அனைத்துப் பங்கங்களில் இருந்தும் தங்கள் கணைகளை ஏவி, அந்த எதிரியோடு {பாஹ்லீகனோடு} போரிட்டனர்.

உமது மகன் துச்சாசனன், கூர்முனைகள் கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விருஷ்ணி குலத்து சாத்யகியைத் தாக்கினான். பெரும் வில்லாளியான அந்தப் பலவானால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சாத்யகி தன் புலனுணர்வை ஓரளவுக்கு இழந்தான் {சிறிது மயக்கமடைந்தான்}. விரைவில் தேற்றமடைந்த அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, கங்க இறகுகளிலான சிறகமைந்த பத்து கணைகளால் அந்த வலிமைமிக்க வில்லாளியான உமது மகனை {துச்சாசனனை} விரைவாகத் துளைத்தான். ஒருவரையொருவர் ஆழமாகத் துளைத்துக் கொண்டு, தங்கள் ஒவ்வொருவரின் கணைகளாலும் பீடிக்கப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல அபாரமாகத் தெரிந்தனர்.

குந்திபோஜனின் கணைகளால் பீடிக்கப்பட்ட {ராட்சசன்} அலம்புசன், கோபத்தால் நிறைந்து அழகாகப் பூத்துக் குலுங்கும் கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போலத் தெரிந்தான். பிறகு அந்த ராட்சசன், பல கணைகளால் குந்திபோஜனைத் துளைத்துத் தன் படையின் தலைமையில் நின்று பயங்கரக் கூச்சல்களையிட்டான். அந்த வீரர்கள் அந்தப் போரில் தங்களுக்குள் மோதிக் கொண்ட போது, பழங்காலத்தின் சக்ரனையும் {இந்திரனையும்}, அசுரன் ஜம்பனையும் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தெரிந்தனர். மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, கோபத்தால் நிறைந்து, தங்களுக்கு எதிராகப் பெரும் குற்றமிழைத்திருந்த காந்தார இளவரசன் சகுனியைத் தங்கள் கணைகளால் கடுமையாகத் தாக்கினர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே நடந்த படுகொலைகள் பயங்கரமானவையாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மால் தோற்றுவிக்கப்பட்டு, கர்ணனால் வளர்க்கப்பட்டு, உமது மகன்களால் பாதுகாக்கப்பட்டதுமான (பாண்டவர்களின்) கோப நெருப்பு இப்போது பெருகி மொத்த உலகத்தையும் எரிக்கத் தயாராக இருக்கிறது. பாண்டு மகன்கள் இருவரின் கணைகளால் களத்தைவிட்டு புறங்காட்டி ஓட நிர்ப்பந்திப்பட்ட சகுனி தன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தான். அவன் புறமுதுகிட்டதைக் கண்டவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுல, சகாதேவர்கள்}, பெரும் மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவன் {சகுனி} மீது மீண்டும் தங்கள் கணைகளைப் பொழிந்தனர். எண்ணற்ற நேரான கணைகளால் தாக்கப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கி ஓடினான்.

துணிச்சல்மிக்கக் கடோத்கசன், அந்தப் போரில் ராட்சசன் அலம்புசனை நோக்கி தன்னால் இயன்றதைவிடச் சற்றே குறைவான மூர்க்கத்துடன் விரைந்தான். பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் நடந்ததைப் போல அந்த இருவருக்கிடையில் நடந்த அந்தப் போர் காண்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தது. மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் ஐநூறு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்துவிட்டு, மேலும் ஏழாலும் அவனை மீண்டும் துளைத்தான். அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும் தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அவர்களுக்குள் நடந்த மிக அற்புதமான போரானது தொடங்கியது. உமது மகன்களான விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் பெரும் படை சூழ பீமசேனனுடன் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்} [1].

[1] பெரும்பாலும் பகுதி 94ல் சொல்லப்பட்ட செய்திகளே பகுதி 95லும் மீண்டும் கூறப்பட்டிருக்கிறது. ஒருவேளை பகுதி 94 இடைசெருகலாக இருக்கலாம். இஃது ஆய்வுக்குரியதே.


ஆங்கிலத்தில் | In English

Friday, May 06, 2016

சகுனியின் மாயைகளை அகற்றிய அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 028

Arjuna dispelled Sakuni’s illusions! | Drona-Parva-Section-028 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : பகதத்தனை வலம் வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய சகுனியின் தம்பிகளான விருஷகனும், அசலனும்; விருஷகனையும் அசலனையும் கொன்ற அர்ஜுனன்; சகுனி செய்த மாயைகள்; மாயைகளை அழித்த அர்ஜுனன்; பின்வாங்கிய சகுனி; காந்தாரர்களை அழித்த அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பெரும் சக்தி கொண்டவனும், இந்திரனுக்கு எப்போதும் பிடித்தமானவனும், அவனது {இந்திரனின்} நண்பனுமான பகதத்தனைக் கொன்ற பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} அவனை வலம் வந்தான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவர்களும், காந்தார மன்னனின் {சுபலனின்} மகன்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய சகோதரர்கள் இருவரும் போரில் அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கினர். அந்த வீர வில்லாளிகள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, பெரும் வேகம் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அர்ஜுனனைப் பின்னாலிருந்தும் முன்னாலிருந்தும் ஆழமாகத் துளைக்க ஆரம்பித்தனர்.

அப்போது அர்ஜுனன், கூரிய கணைகளால் சுபலனின் மகனான விருஷகனின் குதிரைகள், தேரோட்டி, வில், குடை, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கணைகளின் மேகத்தாலும், பல்வேறு ஆயுதங்கள் பிறவற்றாலும் சுபலனின் மகனுடைய {விருஷகனின்} தலைமையில் இருந்த காந்தாரத் துருப்புகளை மீண்டும் கடுமையாகப் பீடித்தான். பிறகு சினத்தால் நிறைந்த அர்ஜுனன், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட வீரக் காந்தாரர்கள் ஐநூறு {500} பேரைத் தன் கணைகளின் மூலம் யமலோகம் அனுப்பினான். அப்போது அந்த வலிமைமிக்க வீரன் {விருஷகன்}, குதிரைகள் கொல்லப்பட்ட {தன்} தேரில் இருந்து விரைவாகக் கீழிறங்கி, தன் சகோதரனின் {அசலனின்} தேரில் ஏறி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.

பிறகு, சகோதரர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய இருவரும் ஒரே தேரில் ஏறிக் கணைகளின் மழையால் பீபத்சுவை {அர்ஜுனனை} இடையறாமல் துளைக்கத் தொடங்கினர். திருமணப் பந்தத்தால் {உமது மனைவி காந்தாரியால்} உமக்கு உறவினர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், பழங்காலத்தில் விருத்திரனோ, பலனோ இந்திரனைத் தாக்கியது போல மிகக் கடுமையாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தாக்கினர். குறி தவறாத அந்தக் காந்தார இளவரசர்கள் இருவரும் காயமடையாமலேயே, வியர்வையை உண்டாக்கும் {சூரியக்} கதிர்களால் உலகைப் பீடிக்கும் கோடை காலத்தின் இரண்டு மாதங்களைப் போலப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மீண்டும் தாக்கத் தொடங்கினர். அப்போது அர்ஜுனன், மனிதர்களில் புலிகளும், ஒரே தேரில் அருகருகில் இருந்தவர்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த இளவரசர்களை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஒரே கணையால் கொன்றான். பிறகு, கண்கள் சிவந்தவர்களும், சிங்கத்தைப் போன்றவர்களும், வலிமைமிக்கக் கரங்களையும், ஒரே குணங்களையும் கொண்ட இரத்தச் சகோதரர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அந்தத் தேரில் இருந்து ஒன்றாகவே கீழே விழுந்தனர். நண்பர்களின் அன்புக்குரிய அவர்களது உடல்கள், கீழே பூமியின் மீது விழுந்து, சுற்றிலும் புனிதமான புகழைப் பரப்பியபடி அங்கே கிடந்தன. துணிச்சல்மிக்கவர்களும் புறமுதுகிடாதவர்களுமான தங்கள் தாய்மாமன்கள் இப்படி அர்ஜுனனால் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி, அவன் {அர்ஜுனன்} மீது பல ஆயுதங்களை மழையாகப் பொழிந்தனர் [1].

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அரசரே! (போரைவிட்டு) ஓடாதவர்களான தம் மாமன்மார்களிருவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டது கண்டு, உம்முடைய மகன்கள் மிகுந்த கண்ணீரைச் சொரிந்தார்கள்” என்றிருக்கிறது.

பல்வேறு விதங்களிலான நூறு மாயைகளை அறிந்தவனான சகுனியும், தன் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} குழப்புவதற்காக மாயைகளை உண்டாக்கினான். அர்ஜுனன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தடிகள், இரும்பு குண்டுகள் {பந்துகள்}, கற்கள், சதக்னிகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பரிகங்கள், நீண்ட கத்திகள், வேல்கள், முத்கரங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, கம்பனங்கள், வாள்கள், ஆணிகள் {நகரங்கள்}, குறும் உலக்கைகள், போர்க்கோடரிகள், க்ஷுரங்கள் {கத்தி போன்றவை}, கூரிய பல்லங்கள் {க்ஷுரப்ரங்கள்}, நாளீகங்கள், வத்ஸதந்தங்கள், அஸ்திஸந்திகள் {எலும்பு போன்ற தலைகளைக் கண்ட கணைகள்}, சக்கரங்கள், பாம்புத் தலை கொண்ட கணைகள், பராசங்கள் ஆகியவையும் இன்னும் பல ஆயுதங்களும் விழுந்தன. கழுதைகள், ஒட்டகங்கள், எருமைக்கடாக்கள், புலிகள், சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், ஓநாய்கள், கழுகுகள், குரங்குகள், பல்வேறு விதங்களிலான பாம்புகள், பலவிதமான ராட்சசர்கள், காக்கை கூட்டங்கள் ஆகியன அனைத்தும் பசியுடனும், சினத்தால் தூண்டப்பட்டும் அர்ஜுனனை நோக்கி ஓடின.

அப்போது, தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கணை மேகங்களை ஏவி அவை அனைத்தையும் எதிர்த்தடித்தான். சிறந்த பலமான கணைகளின் மூலம் அந்த வீரனால் {அர்ஜுனனால்} எதிர்த்தடிக்கப்பட்ட அவர்கள் {காந்தாரர்கள்}, உரக்கக் கதறிய படியே உயிரிழந்து கீழே விழுந்தனர். பிறகு அடர்த்தியான இருள் தோன்றி அர்ஜுனனின் தேரை மறைத்தது, அந்த இருளுக்குள் இருந்து கடும் குரல்கள் அர்ஜுனனை நிந்தித்தன. எனினும், பின்னவன் {அர்ஜுனன்}, ஜியோதிஷ்கம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் அந்த அடர்த்தியான பயங்கரமான இருளை விலக்கினான். அந்த இருள் விலக்கப்பட்ட போது, பயங்கரமான நீரலைகள் தோன்றின. அந்த நீரை வற்ற செய்வதற்காக அர்ஜுனன் ஆதித்யம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அந்த ஆயுதத்தின் விளைவாக அந்த நீர் அனைத்தும் கிட்டத்தட்ட வற்ற செய்யப்பட்டது. சுபலனால் {சகுனியால்} மீண்டும் மீண்டும் உண்டாக்கப்பட்ட பல்வேறு மாயைகளை அர்ஜுனன் சிரித்துக் கொண்டே தன் ஆயுதங்களின் பலத்தால் அழித்தான் [2]. அவனது {சகுனியின்} மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, அச்சங்கொண்ட சகுனி தன் வேகமான குதிரைகளின் உதவியோடு இழிந்த பாவியைப் போலத் தப்பி ஓடினான்.

[2] வேறொரு பதிப்பில் இதன்பிறகு, “இவ்வாறு சௌபலனான சகுனியால் அடிக்கடி உண்டாக்கப்பட்ட பலவித மாயைகளை அர்ஜுனன் தன் அஸ்த்ரபலத்தால் விரைவாக நாசஞ்செய்து சிரித்துக் கொண்டே (சகுனியை நோக்கி), “ஓ! கெட்ட சூதாட்டக்காரா! காந்தாராதிபதியே! இக்காண்டீவமானது சொக்கட்டான் காய்களைப் போடாது; இக்காண்டீவமோ பிரகாசிப்பவையும், தீட்டப்பட்டவையும், கூர்மையுள்ளவையுமான அம்புகளைப் பிரயோகிக்கும்” என்று சொன்னான்” என்றிருக்கிறது.

அப்போது, ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், தன் கரங்களின் அதீத நளினத்தை {லாகவத்தை} எதிரிகளுக்கு எடுத்துக் காட்டியபடி, அந்தக் கௌரவப் படையின் மீது அம்புகளின் மேகங்களைப் பொழிந்தான். இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட உமது மகனின் படை, மலையால் தடுக்கப்பட்ட கங்கையின் நீரூற்று இரண்டு ஓடைகளாகப் பிரிவதைப் போலப் பிரிந்தது. அந்த ஓடைகளில் ஒன்று, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே} துரோணரை நோக்கிச் சென்றது, மற்றொன்றோ உரத்த கதறலுடன் துரியோதனனை நோக்கிச் சென்றது. அப்போது அடர்த்தியாக எழுந்த புழுதியானது துருப்புகள் அனைத்தையும் மறைத்தது. எங்களால் அர்ஜுனனைக் காண முடியவில்லை. காண்டீவத்தின் நாணொலி மட்டுமே களத்திற்கு வெளியே {வடக்குப் பகுதியில்} எங்களால் கேட்கப்பட்டது. உண்மையில், அந்தக் காண்டீவ நாணொலியானது, சங்கொலிகள், பேரிகைகளின் ஒலிகள் மற்றும் பிற கருவிகளின் ஒலிகள் ஆகியவற்றுக்கும் மேலெழுந்து எங்களுக்குக் கேட்டது.

பிறகு களத்தின் தென்பகுதியில் போர் வீரர்களில் முதன்மையானோர் ஒரு புறமும், அர்ஜுனன் மறுபுறமும் நிற்க ஒரு கடும்போர் அங்கே நடந்தது. எனினும், நான் துரோணரைப் பின்தொடர்ந்து சென்றேன். யுதிஷ்டிரனின் பல்வேறு படைப்பிரிவுகள் களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரியை அடித்தன. உமது படையின் பல்வேறு பிரிவுகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோடைகாலக் காற்றானது, ஆகாயத்தின் மேகத்திரள்களை அழிப்பதைப் போல அர்ஜுனனைத் தாக்கின. உண்மையில் அடர்த்தியான மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மேகங்களை இறைத்தபடி அர்ஜுனன் வந்த போது, மனிதர்களில் புலியான அந்தக் கடும் வில்லாளியை {அர்ஜுனனைத்} தடுப்பதற்கு உமது படையில் எவரும் இல்லை. பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட உமது வீரர்கள் பெரும் வலியை உணர்ந்தனர். {அப்படி வலியை உணர்ந்த} அவர்கள் தப்பி ஓடினர். அப்படித் தப்பி ஓடும்போது தங்கள் எண்ணிக்கையிலேயே {தங்கள் படையினரிலேயே} அவர்கள் பலரைக் கொன்றனர்.

கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளால் ஆன சிறகுகளைக் கொண்டவையும், அனைத்து உடல்களையும் ஊடுருவவல்லவையுமான கணைகள் அர்ஜுனனால் ஏவப்பட்டு, விட்டிற்பூச்சிக்கூட்டங்களைப் போல அனைத்துப் பக்கங்களையும் மறைத்தபடி பாய்ந்தன. குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைத் துளைத்த அந்தக் கணைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {அவற்றை ஊடுருவி} எறும்புப் புற்றுக்களுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் புகுந்தன. {அதன்பிறகு} அர்ஜுனன், யானை, குதிரை அல்லது மனிதன் என எவர் மீதும் {இரண்டாவது முறையாக} கணைகளை ஏவவில்லை. ஒரே ஒரு கணையால் {மட்டும்} தாக்கப்பட்ட இவை ஒவ்வொன்றும் கடுமையாகப் பீடிக்கப்பட்டு உயிரிழந்து கீழே விழுந்தன.

கொல்லப்பட்ட மனிதர்கள், யானைகள், கணைகளால் அடிக்கப்பட்ட குதிரைகள் என அனைத்தாலும் விரவி கிடந்ததும், நாய்கள், நரிகள் ஆகியவற்றின் ஊளைகளால் எதிரொலித்ததுமான அந்தப் போர்க்களம் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் காட்சியளித்தது. அந்தக் கணைகளால் வலியை உணர்ந்தவனான தந்தை {தன்} மகனைக் கைவிட்டான், நண்பன் மற்றொரு நண்பனையும், மகன் தந்தையையும் கைவிட்டனர். உண்மையில், ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வீரர்கள் பலர், தங்களைச் சுமந்த விலங்குகளையே கூடக் கைவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Friday, May 15, 2015

சபையை அடைந்த கிருஷ்ணன் ! - உத்யோக பர்வம் பகுதி 94

Krishna reached the court! | Udyoga Parva - Section 94 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –23)

பதிவின் சுருக்கம் : விதுரனின் இல்லத்தில் இருந்து கிருஷ்ணனை அழைத்துப் போகத் துரியோதனனும், சகுனியும் வந்தது; கிருஷ்ணன் கௌரவச் சபையை அடைந்தது; கிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை; வானில் முனிவர்கள் நிற்பதை கிருஷ்ணன் பீஷ்மருக்குச் சொன்னது; பீஷ்மர் முனிவர்களை அழைத்து இருக்கையில் அமர வைத்தது; அனைவரும் அமர்ந்தது அங்கே முற்றான அமைதி நிலவியது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், புகழ்பெற்றவர்களுமான அந்த இரண்டு நபர்களுக்கு {கிருஷ்ணன், விதுரன் ஆகியோருக்கு} இடையில் நடைபெற்ற இத்தகு உரையாடலில், பிரகாசமான நட்சத்திரங்களால் ஆன அந்த இரவு கடந்து சென்றது.உண்மையில், அறம், பொருள், இன்பம் ஆகியன நிறைந்தவையும், மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் ஏற்புடைய வகையைச் சார்ந்த எழுத்துகளைக் {சொற்களைக்}  கொண்டவையுமான கிருஷ்ணனின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒப்பற்ற விதுரனின் விருப்பத்திற்கு எதிராகவே அந்த இரவு கடந்து சென்றது.

அளவிலா ஆற்றல் கொண்ட கிருஷ்ணனும் அதற்கு நிகரான பாணி மற்றும் எழுத்துகளைக் கொண்ட சொற்பொழிவுகளை {அன்று இரவு} கேட்டுக் கொண்டேயிருந்தான்.

பிறகு, அதிகாலையில், இனிய குரலைக் கொடையாகக் கொண்ட சூதர்களும், பாணர்களும், கேசவனை {கிருஷ்ணனை}, இனிய ஒலி கொண்ட சங்குகள் மற்றும் துந்துபி முழக்கங்களுடன் எழுப்பினர். படுக்கையில் இருந்து எழுந்த தாசார்ஹ குலத்தவனும், சாத்வதர்கள் அனைவரில் காளையுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலைக்குரிய அனைத்து வழக்கமான செயல்களையும் செய்தான். நீராடல் மூலம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, புனித மந்திரங்களை ஓதி, தெளிந்த நெய்யிலானான நீர்க்காணிக்கைகளை வேள்வித்தீயில் ஊற்றினான். தன்னை அலங்கரித்துக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்}, உதயசூரியனை வணங்கத் தொடங்கினான்.

தாசார்ஹ குலத்தின் வீழ்த்தப்படாத கிருஷ்ணன், தனது காலை துதியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும் அங்கே அவனிடம் {கிருஷ்ணனிடம்} வந்து, "பீஷ்மரின் தலைமையிலான அனைத்து குருக்களுடனும், பூமியின் அனைத்து மன்னர்களுடனும் திருதராஷ்டிரர் தனது அவையில் அமர்ந்திருக்கிறார். தெய்வலோகத்தில் சக்ரனின் {இந்திரனின்} இருப்பை விரும்பும் தேவர்களைப் போல, அவர்கள் அனைவரும் உனது இருப்பை வேண்டுகின்றனர்" என்றனர்.

இப்படிச் சொல்லப்பட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்கள் இருவரையும் இனிமையாகவும் மரியாதையாகவும் விசாரித்தான். சூரியன் சிறிது உயர எழுந்த போது, எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, எண்ணற்ற அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு, தங்கம், ஆடைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளைப் பரிசாகக் கொடுத்தான்.

அதிகச் செல்வத்தைத் தானமளித்த அவன் {கிருஷ்ணன்}, தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகு, அங்கே வந்த அவனது தேரோட்டி (தாருகன்), தாசார்ஹ குலத்தின் அந்த வீழாவீரனை {கிருஷ்ணனை} வணங்கினான். பிறகு, கிண்கிணி மணிகளால் வரிசையாக அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்கதுமான தனது தலைவனின் {கிருஷ்ணனின்} பெரிய தேரில், அற்புதக் குதிரைகளைப் பூட்டி அங்கே விரைவாகத் திரும்பி வந்தான் தாருகன். தனது அழகிய தேர், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, பலமிக்க மேகத்திரளின் இரைச்சலைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியை எழுப்பத் தயாராக இருப்பதை உணர்ந்தவனும், யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குபவனுமான உயர் ஆன்ம ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, புனித நெருப்பையும், அந்தணர்கள் குழுவையும் வலம் வந்து, கௌஸ்துப மணியைப் பூண்டு கொண்டு, அழகில் சுடர்விட்டபடி, குருக்களால் சூழப்பட்டு, விருஷ்ணிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டுத் தேரில் ஏறினான் {கிருஷ்ணன்}.

அறத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் அறிந்த விதுரன், உயிர்வாழும் அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனும், அறிவைக் கொடையாகக் கொண்ட அனைத்து நபர்களில் முதல்வனுமான அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்தை {கிருஷ்ணனை}, தனது சொந்தத் தேரில் பின்தொடர்ந்து சென்றான் {விதுரன்}. துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனை {வேறு} ஒரு தேரில் பின்தொடர்ந்து சென்றார்கள். சாத்யகி, கிருதவர்மன் மற்றும் பிற பலமிக்க விருஷ்ணி குலத்துத் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் கிருஷ்ணனுக்குப் பின்னால் சென்றனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்பட்டவையுமான அந்த வீரர்களின் அழகிய தேர்கள் ஒவ்வொன்றும் உரத்த சடசடப்பொலியை எழுப்பிபடியும், பிரகாசித்துக் கொண்டும் முன்னேறி நகர்ந்து சென்றன.

முன்கூட்டியே தூற்றப்பட்டு, நீர்தெளிக்கப்பட்டிருந்ததும், உயர்ந்த மன்னர்கள் மட்டுமே பயன்படுத்த தகுந்ததுமான அகலமான ஒரு தெருவுக்கு, அழகுடன் பெரும் புத்திக்கூர்மை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} வந்தான். அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து {கிருஷ்ணன்} புறப்பட்டபோது, எக்கங்கள் {கைத்தாளங்கள் = ஜால்ரா போன்ற பெரிய இசைக்கருவி} இசைக்கப்பட்டன, சங்குகள் முழங்கத் தொடங்கின, இன்னும் பிற கருவிகள் தங்கள் இசையைப் பொழிந்தன.

வீரத்திற்காக இவ்வுலகில் முதன்மையானவர்களாக இருப்பவர்களும், சிங்கம்போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான இளமை நிறைந்த வீரர்கள், சௌரியின் {கிருஷ்ணனின்} தேரைச் சூழ்ந்து கொண்டு, பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து சென்றனர். பல்வேறு நிறங்களில் உடுத்தியிருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகளுடன் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு அணிவகுத்து சென்றனர். அந்த வீழ்த்தப்படமுடியாத தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது, ஐநூறு {500} யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அனைத்து வயதிலான ஆண்களும் பெண்களுமான அந்தத் தலைநகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்கள் அனைவரும் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} காண விரும்பி வெளியே தெருக்களுக்கு வந்தனர். வீடுகளின் மாடிகள் மற்றும் மேல்மாடங்களில் திரண்டிருந்த பெண்களின் பாரத்தைத் தாங்க முடியாமல், அவை {அந்த வீடுகள்} விழும் நிலையில் இருந்தன. குருக்களால் {கௌரவர்களால்} வழிபடப்பட்டு, பல்வேறு இனிய பேச்சுகளைக் கேட்டு, தகுந்தவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் திரும்பச் சொல்லி, அனைவரின் மீதும் கண்களைச் செலுத்தியபடியே கேசவன் {கிருஷ்ணன்} அந்தத் தெருவில் சென்று கொண்டிருந்தான்.

கடைசியாக, கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையை அடைந்த போது, அவனது பணியாட்கள், தங்கள் சங்குகளையும், எக்காளங்களையும் உரக்க முழங்கி, ஆகாயத்தை அந்த முழக்கத்தால் நிறைத்தனர். அதன்பேரில், அளவிலா ஆற்றல் படைத்த மன்னர்களின் அந்தச் சபை, விரைவில் தங்கள் கண்களைக் கிருஷ்ணன் மீது செலுத்தப்போகும் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியுடன் நடுங்கினர். மழைநிறைந்த மேகங்கள் உருள்வதைப் போன்ற சடசடப்பை எழுப்பிய தேரின் ஒலியைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள், கிருஷ்ணன் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து, மகிழ்ச்சியால் தங்கள் உடல்களின் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். அந்தச் சபையின் வாயிலை அடைந்த சாத்வதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, கயிலாய மலையைப் போன்ற தனது தேரில் இருந்து இறங்கி, புதிதாய் எழுந்த மேகத் திரள் போல இருப்பதும், அழகால் சுடர்விடுவதும், பெரும் இந்திரனின் வசிப்பிடத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தச் சபைக்குள் நுழைந்தான்.

இருபுறத்திலும் விதுரன் மற்றும் சாத்யகியைத் தோளோடு தோள் சேர்த்தபடியும், ஆகாயத்தில் இருக்கும் சிறு ஒளிகளின் பிரகாசத்தை மூழ்கடிக்கும் சூரியனைப் போல, குருக்கள் அனைவரின் பிரகாசத்தையும் தனது சொந்த பிரகாசத்தால் மூழ்கடித்தபடியும், அந்த ஒப்பற்ற வீரன் {கிருஷ்ணன்}, அந்தச் சபைக்குள் நுழைந்தான். வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு கர்ணனும், துரியோதனனும் அமர்ந்தனர், அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்பு, கிருதவர்மனோடு கூடிய விருஷ்ணிகள் அமர்ந்தனர்.

ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக, பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரனோடு கூடிய பிறர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உண்மையில், அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வந்ததும், ஒப்பற்றவனும் பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர் மற்றும் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். வலிமைமிக்கவனும், மனிதர்களின் ஆட்சியாளனுமான மன்னன் திருதராஷ்டிரன் தனது இருக்கையில் இருந்து எழுந்ததும், அவனை {திருதராஷ்டிரனை} சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களும் எழுந்தனர்.

திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சுற்றிலும் அழகானதாக இருந்த ஓர் இருக்கை, கிருஷ்ணனுக்காக அங்கே வைக்கப்பட்டிருந்தது.
அந்த இருக்கையில் மாதவன் {கிருஷ்ணன்} அமர்ந்ததும், மன்னன் {திருதராஷ்டிரன்}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற ஆட்சியாளர்கள் அனைவருக்கும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி புன்னகையுடன் தனது வாழ்த்துகளை அவன் {கிருஷ்ணன்} தெரிவித்தான். அந்தச் சபைக்கு வந்த கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பூமியின் மன்னர்கள் அனைவரும் மற்றும் குருக்கள் அனைவரும் அவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டனர்.

எதிரிகளைத் தண்டிப்பவனும், பகை நகரங்களை வீழ்த்துபவனுமான அந்தத் தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} அங்கே அமர்ந்திருந்த போது, ஹஸ்தினாபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கையில் தான் கண்ட முனிவர்கள், ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். நாரதரின் தலைமையில் நின்று கொண்டிருந்த முனிவர்களைக் கண்ட அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரிடம் மெதுவாக, "ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்முடைய இந்தப் பூலோக சபையைக் {கூட்டத்தைக்} காண முனிவர்கள் வந்திருக்கின்றனர். இருக்கைகள் மற்றும் ஏராளமான மரியாதைகளுடன் அவர்களை அழைப்பீராக. ஏனெனில், அவர்கள் {அந்த முனிவர்கள்} அமராதாபோது, இங்கே யாரும் தன் இருக்கையில் அமரக்கூடாது. எனவே, தங்கள் ஆன்மாக்களை முறையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களுக்கு, முறையான வழிபாட்டை விரைந்து அளிப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு அந்த முனிவர்களை அரண்மனையின் வாயிலில் கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அவர்களுக்கான {அந்த முனிவர்களுக்கான} இருக்கைகளை விரைந்து கொண்டுவருமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் விரைவில், தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய பெரிய இருக்கைகளை அங்கே கொண்டு வந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த முனிவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்க்கியாக்களை ஏற்றதும், கிருஷ்ணன் தனது இருக்கையில் அமர்ந்தான்; அவ்வாறே மன்னர்கள் அனைவரும் அமர்ந்தனர். சாத்யகிக்கு அருமையான ஓர் இருக்கையை துச்சாசனன் அளித்தான், அதே வேளையில், விவிம்சதி, தங்கத்தாலான இருக்கையைக் கிருதவர்மனுக்குக் கொடுத்தான்.

ஒப்பற்றவர்களும், கோபம் நிறைந்தவர்களுமான கர்ணனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு அருகிலேயே ஒரே இருக்கையில் இணைந்து அமர்ந்தனர். தன் நாட்டுத் தலைவர்கள் சூழ இருந்த காந்தார மன்னன் சகுனியும், ஓ மன்னா {ஜனமேஜயா}, தனது மகனுடன் சேர்ந்து அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருகே அமர்ந்தான். உயர் ஆன்மா கொண்ட விதுரன், கிருஷ்ணனின் இருக்கையைத் தொட்டுக் கொண்டிருந்ததும், வெள்ளை மான்தோல் விரிக்கப்பட்டிருந்ததுமான மணிக்கல் பதித்த இருக்கையில் அமர்ந்தான்.

அந்தச்சபையின் மன்னர்கள் அனைவரும், தாசார்ஹ குலத்து ஜனார்த்தனையே {கிருஷ்ணனையே} நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அமிர்தத்தை அடுத்து அடுத்துக் குடித்தாலும், எப்போதும் மனநிறைவு கொள்ளாதவர்களைப் போல, நிறைவு காணவில்லை. காயாம்பூ {Atasi flower} நிறத்திலான மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தங்கத்தில் பதிக்கப்பட்ட நீலக்கல் {Sapphire} போல, அந்தச் சபையின் மத்தியில் அமர்ந்திருந்தான். கோவிந்தன் {கிருஷ்ணன்} தனது இருக்கையில் அமர்ந்ததும், யாரும் ஒரு வார்த்தையும் பேசாததால் அங்கே முற்றான அமைதி நிலவியது" என்றார் {வைசம்பாயனர்}.


Thursday, August 21, 2014

"பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடு" என்றான் சகுனி! - வனபர்வம் பகுதி 249

"Give back unto the sons of Pritha their kingdom!" said Sakuni!  | Vana Parva - Section 249 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் நட்போடு பழகு என்று சகுனி துரியோதனனுக்குச் சொன்னது; துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க சகுனி செய்த முயற்சி; இறப்பதில் உறுதியாக இருந்த துரியோதனன் உணவைத் துறந்து அமர்ந்தது; தைத்தியர்களும் தானவர்களும் துரியோதனனை பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்றது…

அசுரர்கள் துரியோதனன் சந்திப்பு
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவமானத்தைத் தாங்க முடியாமல் உணவைத் துறந்து உயிரை விடத் தீர்மானித்து அமர்ந்திருந்த மன்னன் துரியோதனனைக் கண்ட சுபலனின் மகனான சகுனி ஆறுதலாக இவ்வார்த்தைகளை அவனிடம் {துரியோதனனிடம்} கூறினான். சகுனி, "ஓ! குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ! மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய்? நீ மூத்தவர்களுக்காக எப்போதும் காத்ததில்லை என்பதை இன்றே நான் கண்டு கொண்டேன். திடீர் இன்பத்தையோ, திடீர் துன்பத்தையோ கட்டுப்படுத்தத்தெரியாதவன், ஏற்கனவே செழிப்பை அடைந்தவனாக இருந்தாலும், சுடப்படாத மண் குடத்தைத் தண்ணீரில் இட்டது போலவே அது {அவனிடமிருந்து} தொலைந்து போகும்.
துணிச்சலற்று, ஆண்மையின் சிறு பொறி கூட இல்லாது, அலட்சியப் போக்குக்கு அடிமையாக, எப்போதும் புத்தியற்றவனாக, சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு மன்னன், எப்போதும் தனது குடிகளால் மதிக்கப்படுவதில்லை. நன்மையையே அடைந்த உனக்கு, இந்தக் காரணமற்ற சோகம் ஏன் வந்தது? {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? இந்த உனது நடத்தை உண்மையில் நிலையற்றதாகும். உற்சாகமாக இரு. உனது உயிரைத் துறக்காதே. ஆனால் அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குச் செய்த நன்மையை எண்ணி இதயத்தால் மகிழ்ந்து நினைத்துப் பார். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடு. அத்தகு நடத்தையால், அறத்தையும் புகழையும் வெல். இவ்வழியில் செயல்படுவதால், நீ பெருமையடைவாய். நட்புடன் இருந்து பாண்டவர்களுடன் சகோதர உறவுநிலையை நிறுவு. நீ மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், அவர்களது {பாண்டவர்களின்} தந்தை வழி நாட்டை அவர்களுக்குக் கொடு" என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் முன்னால் சகோதரப்பாசத்தின் அன்பால் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் வீரமிக்கத் துச்சாசனனைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, துச்சாசனனை எழுப்பி, தனது பருத்த கரங்களால் அவனை வாரி அணைத்து, பாசத்தால் அவனது தலையை முகர்ந்து பார்த்தான். கர்ணன் மற்றும் சுபலன் {சகுனி} ஆகியோரது இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் எப்போதையும் விட அதிகமாக நம்பிக்கை இழந்து, அவமானத்தில் மூழ்கினான். நம்பிக்கையற்ற தன்மை அவனது ஆன்மாவை வென்றது. தன் நண்பர்கள் சொன்னது அனைத்தையும் கேட்ட அவன் சோகத்துடன், "அறம், செல்வம், நட்பு, செழுமை, ஆட்சி, கேளிக்கைகள் ஆகியவற்றால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எனது நோக்கத்தைத் தடை செய்யாது, அனைவரும் என்னை விட்டுச் செல்லுங்கள். உணவைத் துறந்து உயிரை விடுவதில் உறுதியான தீர்மானத்தோடு இருக்கிறேன். நகரத்திற்குத் திரும்பி, எனக்கு மூத்தவர்களை மரியாதையோடு நடத்துங்கள்" என்றான் {துரியோதனன்}.

அவனால் இப்படிச் சொல்லப்பட்டது, அவர்கள் அனைவரும் எதிரிகளை அழிக்கும் அந்த மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {துரியோதனா}, உன் வழி எதுவோ, அதுவே எங்களுடையதுமாகும். நீ இல்லாமல் நாங்கள் எப்படி நகரத்துக்குள் நுழைய முடியும்?" என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நண்பர்கள், அமைச்சர்கள், தம்பிகள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் சொல்லிப் பார்த்தும், அந்த மன்னன் {துரியோதனன்}, தனது நோக்கத்தில் இருந்து வழுவவில்லை. அவனது நோக்கத்திற்கு ஏற்ப திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, பூமியில் தர்ப்பை புற்களைப் பரப்பி, நீரைத் தொட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இடத்தில் அமர்ந்தான். மரவுரி மற்றும் தர்ப்பை புற்களை ஆடையாக உடுத்தி அவன் உயர்ந்த நோன்பைக் கடைப்பிடித்தான். {மௌன விரதம் மேற்கொண்டு} அனைத்துப் பேச்சையும் நிறுத்திய அந்த மன்னர்களில் புலி {துரியோதனன்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பி, வெளி விவகாரங்களை அனைத்தையும் விலக்கி வழிபாட்டையும் வேண்டுதலையும் ஆரம்பித்தான்.

அதே வேளையில், பழங்காலத்தில் தேவர்களால் வீழ்த்தப்பட்டுப் பாதாள லோகங்களில் வாழும் தைத்தியர்களும் தானவர்களும், துரியோதனனின் நோக்கத்தை உறுதி செய்து கொண்டு, மன்னன் {துரியோதனன்} இறந்தால், தங்கள் பக்கம் பலவீனமடையும் என்பதை அறிந்து, துரியோதனனைத் தங்கள் முன்னிலைக்குக் கொண்டு வர, ஒரு வேள்வியைச் செய்தனர். மந்திரங்களை அறிந்தவர்கள், ஏற்கனவே பிருஹஸ்பதியாலும், உசானசாலும் {சுக்கிராச்சாரியராலும்} தீர்மானிக்கப்பட்டிருந்த சூத்திரங்களின் உதவியுடன், மந்திரங்களாலும், வேண்டுதல்களாலும் அடையத்தக்க வகையில், அதர்வ {அதர்வண} வேதத்திலும், உபநிஷத்களிலும் சொல்லப்பட்டுள்ள {நவகுண்டீ} சடங்குகளைச் செய்தனர். வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கு அறிந்த, கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்கள், கவனம் நிறைந்த ஆன்மாவுடன், நெருப்பில் தெளிந்த நெய்யையும் பாலையும் நீர்க் காணிக்கையாக மந்திரங்கள் சொல்லி ஊற்ற ஆரம்பித்தனர்.

அச்சடங்குகள் முடிந்த போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டது. இதயத்தில் நல்ல மகிழ்ச்சியை அடைந்த தைத்தியர்கள் அவளிடம் {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, "திருதராஷ்டிரனின் மகனான மன்னன் {துரியோதனன்} இப்போது, உயிரைத் துறப்பதற்காக உண்ணா நோன்பு நோற்றிருக்கிறான். அவனை இங்கே கொண்டு வா" என்று கட்டளையிட்டனர். இப்படிக் கட்டளையிடப்பட்ட அவள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி சென்றுவிட்டாள். கண் இமைக்கும் நேரத்தில் சுயோதனன் {துரியோதனன்} இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். மன்னனை பாதாள லோகத்திற்கு நொடிப்பொழுதில் கொண்டு வந்த அவள், அதைத் தானவர்களிடம் தெரிவித்தாள். இரவு வேளையில் தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மன்னனைக் {துரியோதனனைக்} கண்ட தானவர்கள் ஒன்று கூடி, இதயத்தால் அவர்கள் அனைவரும் நன்கு மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளை {முகத்துதியை} துரியோதனனிடம் பேசினர்."

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, August 12, 2014

சகுனி அளித்த உறுதி! - வனபர்வம் பகுதி 237

The assurance given by Sakuni!  | Vana Parva - Section 237  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கர்ணன், துவைதவனம் செல்வதற்கு துரியோனனுக்கு அனுமதியளிக்குமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டியது; திருதராஷ்டிரன் முதலில் மறுத்து, பின்பு ஏற்றது; துரியோதனன் துவைதவனத்தை அடைந்தது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனைக் காணச் சென்றனர். ஓ! ஜனமேஜயா, அவனைக் கண்டு, அவனது நலம் விசாரித்து, பதிலுக்கு அவனால் {திருதராஷ்டிரனால்} அவர்களின் நலம் விசாரிக்கப்பட்டனர். பிறகு, ஏற்கனவே அவர்களால் ஏவப்பட்ட சமங்கன் {சங்கவன்} என்ற பெயர் படைத்த ஒரு மாட்டு இடையன் மன்னனை அணுகி கால்நடைகளைக் குறித்துப் பேசினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பின்பு ராதையின் மகனும் {கர்ணனும்}, சகுனியும் சேர்ந்து திருதராஷ்டிரனிடம், "ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, நமது கால்நடை நிலையங்கள் இப்போது இனிமையான இடத்தில் இருக்கின்றன. அவற்றை எண்ணுவதற்கும், குட்டிகளைக் குறித்துக் கொள்வதற்கும் நேரம் வந்துவிட்டது {கணக்கெடுப்பு எடுப்பதற்கு நேரம் வந்துவிட்டது}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதுவே உமது மகன் வேட்டைக்குச் செல்வதற்கு அற்புதமான காலமாகும். எனவே, துரியோதனன் அங்குச் செல்வதற்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்" என்றனர்.
திருதராஷ்டிரன், "ஓ! குழந்தாய்! மான் துரத்தலும் {வேட்டையாடுவதும்}, கால்நடைகளை ஆய்வு செய்தலும் மிகச் சரியானதே! உண்மையில் இதுவிஷயத்தில் இடையர்கள் நம்பத்தக்கவர்கள் அல்ல என்பதே என் எண்ணம். ஆனால், மனிதர்களில் புலிகளான பாண்டவர்கள் அந்தக் கால்நடை நிலையங்களுக்கு அருகில் இருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். எனவே, நீங்கள் அங்குச் செல்லக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். வஞ்சகமான வழிகளில் வீழ்த்தப்பட்ட அவர்கள் பெரும் துயரத்துடன் அந்த ஆழ்ந்த கானகத்தில் வாழ்கிறார்கள். ஓ! ராதேயா {கர்ணா}, அவர்கள் பெரும் பலம்மிக்க வீரர்களும், இயற்கையிலேயே திறன் வாய்ந்தவர்களும் ஆவார்கள். இப்போது அவர்கள் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். மன்னன் யுதிஷ்டிரன் கோபம் தூண்டப்பட்டுப் பாதிப்படைய மாட்டான். ஆனால் பீமன், இயற்கையிலேயே உணர்ச்சிகள் மிக்கவன் ஆவான். யக்ஞசேனனின் மகள் {திரௌபதி}, தானே சக்தியாக இருக்கிறாள். கர்வமும், அறியாமையம் கொண்ட நீங்கள் நிச்சயம் குற்றம்புரிவீர்கள். தவத்தகுதி பெற்ற அவள் நிச்சயம் உங்களை எரித்துவிடுவாள். அல்லது வாள்களும் ஆயுதங்களும் கொண்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} உங்களை எரித்துவீடுவார்கள்! அல்லாமலும், எண்ணிகையில் சக்தியுடைய நீங்கள் {எண்ணிக்கையில் அதிகமான நீங்கள்} அவர்களை எந்த விதத்திலாவது காயப்படுத்த முனைந்தால், அது மிகவும் முறையற்ற செயலாகிவிடும். நீங்கள் அதில் வெல்லவும் முடியாது என்பது எனது எண்ணம்.


வலிமையான கரங்கள் கொண்ட அர்ஜுனனும் கானகம் திரும்பிவிட்டான். ஆயுதங்கள் பெற்றிருக்காத போதே பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} முழு உலகையும் வென்றிருக்கிறான். இப்போது ஆயுதங்களைப் பெற்றிருக்கிற பலமிக்க வீரனான அவனால் {அர்ஜுனனால்}, உங்கள் அனைவரையும் கொல்ல முடியாதா? அல்லது எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் கவனமாக அங்குச் சென்றாலும், தொடர்ந்து உண்மையற்றவர்களாக இருந்த காரணத்தால் மனக்கலக்கம் அடையும் உங்களால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அல்லது உங்களுடைய ஏதாவது ஒரு படைவீரன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கு செய்தால், அது முன்பே திட்டமிடப்படாத செயலாக இருந்தாலும், அக்குற்றம் உங்களையே சாரும். எனவே, கணக்கெடுக்கும் வேலைக்கு நம்பிக்கைக்குரிய வேறு ஏதாவது மனிதன் செல்லட்டும். பாரதா {இங்கு துரியோதனா என்ற பொருள் வரும் என நினைக்கிறேன். ஆனால் திருதராஷ்டிரன் கர்ணனிடம்தான் பேச ஆரம்பிக்கிறான்}, நீயே அங்குச் செல்வதை நான் முறையாக எண்ணவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.

சகுனி, "பாண்டு மகன்களின் மூத்தவன் {யுதிஷ்டிரன்} அறநெறிகளை அறிந்தவன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சபைக்கு மத்தியில், பனிரெண்டு வருடங்கள் தான் கானகவாசம் செய்வதாக அவனே சூளுரைத்திருக்கிறான். பாண்டுவின் மற்ற மகன்கள் அனைவரும் அறம் சார்ந்தவர்களும், யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்தவர்களும் ஆவர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நம்மிடம் எப்போதும் கோபம் கொள்ள மாட்டான். உண்மையில், வேட்டைப் பயணம் செல்லவே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அப்படிச் செல்லும் போது, நமது கால்நடைகளைக் கணக்கிடுவதை மேற்பார்வையிடும் வாய்ப்பையும் பெறுவோம். பாண்டுவின் மகன்களைக் காண எங்களுக்கு எண்ணமில்லை. பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். அதே போல எங்கள் தரப்பில் இருந்து எந்தத் தவறான நடவடிக்கையும் எழாது" என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் தலைவனான திருதராஷ்டிரன், தனக்கு அதில் அதிக விருப்பம் இல்லாவிட்டாலும், துரியோதனனும் அவனது ஆலோசகர்களும் {அமைச்சர்களும், கர்ணனும், சகுனியும்} அங்குச் செல்ல அனுமதி கொடுத்தான். அந்த ஏகாதிபதியால் {திருதராஷ்டிரனால்} அனுமதி அளிக்கப்பட்ட காந்தாரிக்குப் பிறந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, கர்ணனின் துணையுடன், பெரும் படை சூழ சென்றான். அவனுடன் {துரியோதனனுடன்}, துச்சாசனன், பெரும் புத்திக்கூர்மை கொண்ட சுபலனின் மகன் {சகுனி}, அவனது பல தம்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மங்கையரும் சென்றனர். துவைதவனம் என்ற பெயரால் அறியப்பட்ட அத்தடாகத்தைக் காண தனது மனைவியருடன் அந்த வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட இளவரசன் புறப்பட்ட போது, (ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்களும் தங்கள் தங்கள் மனைவியருடன் அவனைத் தொடர்ந்தனர். எட்டாயிரம் {8000} தேர்கள், முப்பதாயிரம் {30000} யானைகள், ஒன்பதாயிரம் {9000} குதிரைகள், பல்லாயிரம் தரைப்படை வீரர்கள், கடைகள், கூடாரங்கள், வணிகர்கள், பாடகர்கள், வேட்டையில் நன்கு பயின்ற நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அம்மன்னன் {துரியோதனன்} புறப்பட்ட போது, அவனைத் தொடர்ந்து சென்ற பெரிய மக்கள் கூட்டம், மழைக்காலக் காற்றின் ஆழ்ந்த இரைச்சலைப் போலப் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. தனது தொண்டர்களுடனும், வாகனங்களுடனும் துவைதவனத்தை அடைந்த மன்னன் துரியோதனன், {அத்தடாகத்திலிருந்து} நான்கு மைல்கள் {கவ்யூதி அல்லது இரண்டு க்ரோசம்} தொலைவில் தங்கினான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


கர்ணன் தீட்டிய திட்டம்! - வனபர்வம் பகுதி 236

A plan contrived by Karna!  | Vana Parva - Section 236  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

திருதராஷ்டிரன் தன்னைத் துவைதவனம் செல்ல அனுமதிக்க மாட்டான் எனவும், அதனால், திருதராஷ்டிரன் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதற்கு ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டுமாறும் துரியோதனன் கர்ணனைப் பணித்தது; மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்று திருதராஷ்டிரனிடம் சொல்லுமாறு துரியோதனனிடம் கர்ணன் சொன்னது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மன்னன் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். எனினும், விரைவில், அந்த இளவரசன் {துரியோதனன்} மனச் சோர்வடைந்து, அப்படிப் பேசியவனிடம் {கர்ணனிடம்}, "ஓ! கர்ணா, நீ சொல்வது, எப்போதும் என் மனதில் இருக்கிறது. எனினும், பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியை என்னால் பெற முடியாது. மன்னர் திருதராஷ்டிரர் எப்போது அந்த வீரர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில், தங்கள் தவங்களால் பாண்டுவின் மகன்கள் மேலும் பலமடைந்திருப்பதாக மன்னர் {திருதராஷ்டிரர்} கருதுகிறார். அல்லது, நமது நோக்கங்களைப் புரிந்திருப்பதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் நமக்கு அனுமதி வழங்கமாட்டார். ஓ! பெரும் பிரகாசமிக்கவனே, துவைதவனத்தில் வனவாசத்தை மேற்கொண்டு இருக்கும் பாண்டவர்களை அழிப்பதைவிட நமக்கு வேறு எதுவும் காரியம் கிடையாது என்பதை அறிந்ததால் அவர் {திருதராஷ்டிரர்} அனுமதி வழங்க மாட்டார்.பகடையாட்டத்தின் போது, என்னிடமும், உன்னிடமும், சுபலனனின் மகனிடமும் {சகுனியிடமும்} க்ஷத்திரி {விதுரர்} பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். அந்த வார்த்தைகள் அனைத்தையும், மற்றவர்கள் புலம்பியதையும் (அவரும் {விதுரரும்} பிறரும் புலம்பியதையும்) நினைத்துப் பார்த்தால், நான் போக வேண்டுமா, வேண்டாமா என்பதை என் மனதால் தீர்மானிக்க முடியவில்லை. பீமனும், பல்குனனும் {அர்ஜுனன்} கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து தங்கள் நாட்களை வனத்தில் வலியுடன் கடத்துவதை என் கண்களால் கண்டால், நிச்சயம் நான் பெரிதும் மகிழ்வேன். பாண்டுவின் மகன்கள் மரவுரி உடுத்தி மான் தோல்களை அணிந்திருப்பதைக் காணும்போது நான் அடையும் மகிழ்ச்சியை, இந்த முழு உலகின் ஆட்சியும் நான் பெறும்போது கூட அடைய மாட்டேன். ஓ! கர்ணா, துருபதன் மகள் {திரௌபதி} அந்த வனத்தில் சிவப்புக் கந்தலாடை அணிந்திருப்பதைக் காண்பதை விட என்ன மகிழ்ச்சி எனக்குப் பெரிதாக இருக்கும்?

பாண்டுவின் மகன்களான யுதிஷ்டிரனும் பீமனும், நான் பெரும் செல்வாக்கு அடைந்திருப்பதைக் கண்டால்தான், எனது வாழ்வின் பெரிய இலக்கை அடைந்த நிறைவைக் கொள்வேன். எனினும், நான் கானகத்திற்குச் செல்வதற்கான வழிகளைக் காணவில்லை. உண்மையில், நான் அங்குச் செல்வதற்கு, எதைக் கொண்டு மன்னரின் அனுமதியைப் பெற முடியும்! எனவே, நாம் கானத்திற்குச் செல்லும் வகையில், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்}, துச்சாசனனோடும் சேர்ந்து ஒரு திறமை வாய்ந்த திட்டத்தை முயன்று கண்டுபிடி {திறமையான திட்டத்தை உருவாக்கு}! நானும், நான் அங்குச் செல்வதா வேண்டாமா என்று எனது மனதில் உறுதி செய்து கொண்டு, நாளை மன்னரின் முன்னிலைக்குச் செல்கிறேன். குருக்களில் சிறந்தவரான பீஷ்மரோடு நான் அமர்ந்திருக்கும்போது, நீ சகுனியோடு சேர்ந்து நீங்கள் உருவாக்கிய திட்டத்தை முன்மொழி. பயணம் குறித்துப் பீஷ்மர் மற்றும் மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எங்கள் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக் கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கிறேன்" என்றான் {துரியோதனன்}.

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிய அவர்களை அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்று விட்டனர். இரவு கடந்ததும், கர்ணன் மன்னனிடம் {துரியோதனனிடம்} வந்தான். அவனிடம் வந்த கர்ணன் சிரித்துக் கொண்டே துரியோதனனிடம், "என்னால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, அதைக் கேள்! நமது மந்தைகள் {இடைச்சேரிகள்} துவைதவனக் காட்டில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன! ஆடுமாடுகளின் மந்தைகளைக் கண்காணிக்கிறோம் என்ற சாக்கைச் சொன்னால், நிச்சயம் நாம் அனைவரும் அங்கே செல்லலாம். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மாட்டு மந்தைகளுக்கு மன்னர்கள் அடிக்கடி செல்வது {கோஷ யாத்திரை செல்வது} முறையே. ஓ! இளவரசே {துரியோதனா}, இதுவே நோக்கமாக முன்மொழியப்பட்டால், உனது தந்தை நிச்சயம் உனக்கு அனுமதி வழங்குவார்!" என்றான்.

துரியோதனனும் கர்ணனும் இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையில், சகுனி அவர்களிடம் "அங்குச் செல்வதற்கு, இந்தத் திட்டத்தையே சிரமமற்றது என நானும் கண்டேன்! மன்னர் {திருதராஷ்டிரர்} நமக்கு நிச்சயம் அனுமதி வழங்குவார். மேலும் அவரே நம்மைப் போகும்படியும் ஏவுவார். நமது மந்தைகள் அனைத்தும் துவைதவனக் காடுகளில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்ற சாக்கில் நாம் அனைவரும் அங்குச் செல்வோம் என்பதில் ஐயமில்லை" என்றான் {சகுனி}.

பிறகு அவர்கள் மூவரும் சிரித்து, ஒருவருக்கொருவர் கைகளைக் கொடுத்தனர். ஒரு தீர்மானத்தை அடைந்த அவர்கள், குருக்களின் தலைவனைக் {திருதராஷ்டிரனைக்} காணச் சென்றனர்." 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, August 11, 2014

துரியனைத் தூண்டிய சகுனி! - வனபர்வம் பகுதி 235

Duryodhana, induced by Sakuni!  | Vana Parva - Section 235 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

செழிப்புடன் இருக்கும் தன்னைக் காட்டி, பாண்டவர்களின் பொறாமையைத் தூண்டி அவர்களது துன்பத்தை அதிகரிக்கும்படி சகுனியும், கர்ணனும் துரியோதனனைத் தூண்டியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சகுனி, சந்தர்ப்பம் கிடைத்த போது, கர்ணனின் துணையோடு துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {சகுனி}, "ஓ! பாரதா {துரியோதனா}, உனது பராக்கிரமத்தினால் வீரர்களான பாண்டவர்களை நாடு கடத்திய பிறகு, சம்பரனைக் கொன்றவன் சொர்க்கத்தை ஆண்டதைப் போல, எதிரிகள் இல்லாத இப்பூமியை ஆட்சி செய்! ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கின் மன்னர்கள் அனைவரும் உனக்குக் கப்பம் செலுத்துகின்றனர். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, முன்பு பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்த பிரகாசமான செழிப்பனைத்தையும், இப்போது உனது தம்பிகளுடன் கூடிய நீ அடைந்துவிட்டாய்? இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு யுதிஷ்டிரனிடம் இருந்த அந்தப் பிரகாசமான செழுமையை நாம் முன்பு கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ! மன்னா {துரியோதனா}, இப்போது அந்தச் செல்வங்கள் உனது தம்பிகளுடன் சேர்ந்த உனக்குச் சொந்தமாகிவிட்டது. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட ஏகாதிபதி {துரியோதனா}, அரசனான யுதிஷ்டிரனிடம் இருந்து அந்தச் செழிப்பை அறிவின் பலத்தால் மட்டுமே பறித்தோம்.

திருதராஷ்டிரன் புலம்பல்! - வனபர்வம் பகுதி 234

The lament of Dhritarashtra!  | Vana Parva - Section 234 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வம்)

துவைதவனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த ஓர் அந்தணர், திருதராஷ்டிரனிடம் சென்று பாண்டவர்களின் நிலையைக் குறித்துச் சொன்னது; பாண்டவர்களின் நிலையையும், அதற்கான காரணங்களையும் நினைத்து திருதராஷ்டிரன் புலம்பியது ...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, குளிர், கோடை, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றின் கடுமைத் தன்மைக்கு அக்கானகத்தில் முழுவதும் ஆட்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், துவைதம் என்ற பெயர் கொண்ட தடாகத்தோடு கூடிய வனத்தை அடைந்த பிறகு என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அத்தடாகத்திற்குப் பாண்டுவின் மகன்கள் வந்த பிறகு, மனிதர்கள் வசிக்காத ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு வசித்தனர். இனிமையான கானகத்திலும், எப்போதும் அழகாக இருக்கும் மலைகளிலும், அழகிய ஆறுகள் கொண்ட பள்ளத்தாக்குகளிலும் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்ட பிறகு, வேத கதைகள் அறிந்த பல மதிப்பிற்குரிய துறவிகள் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண அங்கே அடிக்கடி வந்து சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்}, வேதமறிந்த முனிவர்களால் எப்போதும் மதிக்கப்பட்டனர். ஒரு நாள், தனது பேச்சின் சக்திக்காக உலகத்தால் நன்கு அறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட அந்தணர் அந்தக் கௌரவ இளவரசர்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தார். பாண்டவர்களுடன் சிறிது நேரம் பேசிய அவர், தனது விருப்பத்தின்படி விசித்திரவீரியனுடைய அரசமகனின் {திருதராஷ்டிரனின்} அரசவைக்குச் சென்றார்.
குருக்களின் தலைவனான அந்த முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால} உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்ட அந்த அந்தணர் தனக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} கேட்டுக் கொண்டதற்கிணங்க, காற்றுக்கும் சூரியனுக்கும் தங்களை வெளிப்படுத்தி, மெலிந்து போய்க் கடும் துன்பத்தில் விழுந்திருக்கும் தர்மன் {யமன்}, பவனன் {வாயு}, இந்திரன் மற்றும் {அஸ்வினி} இரட்டையர்களின் மகன்களைக் குறித்துப் பேசினார். பிறகு அந்த அந்தணர், வீரர்களைக் கணவர்களாகக் கொண்டிருந்தும் துயரத்தில் மூழ்கி, முழுதும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} குறித்தும் பேசினார். அந்த அந்தணரின் வார்த்தைகளைக் கேட்ட விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, அரச பரம்பரையில் பிறந்து துன்பம் எனும் ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கும் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} நினைத்துத் துயரால் தாக்குண்டான். அனைத்தும் தனது சொந்தத் தவறால் நடந்தனவே என்று நினைத்து, தனது உள்ளார்ந்த ஆத்மா சோகத்தில் மூழ்கியதால், பெருமூச்சுவிட்டும் நடுங்கியும், பெரும் முயற்சியை மேற்கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டான் {திருதராஷ்டிரன்}.

அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, "ஐயோ, உண்மையானவனும், பக்திமானும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், ஒரு எதிரியும் இல்லாதவனும், முன்பு மென்மையான ரங்கு தோல்களாலான மெத்தைகளில் {ஹம்ஸதூளிகாசயனம்} படுத்தவனும், எனது மகன்களின் மூத்தவனுமான யுதிஷ்டிரன் இப்போது வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? ஐயோ, தினமும் காலையில் சூதர்களாலும் மாகதர்களாலும், பிற பாடகர்களாலும் இனிமையாகப் பாடப்பட்ட தன் புகழ் துதியைக் கேட்டு எழும்பிய, இந்திரனுக்கு நிகரான அந்தக் குருகுல இளவரசன் {யுதிஷ்டிரன்}, இப்போது, இரவின் சில மணிநேரத்தில் {விடியற்காலையில்} பறவைக்கூட்டங்களால் வெறுந்தரையில் இருந்து எழுவானே!

காற்றுக்கும் வெயிலுக்கும் உடலை வெளிப்படுத்தி, இளைத்துப் போய்க் கோபத்தால் நிறைந்திருக்கும் சிரமப்படத்தகாத விரிகோதரன் {பீமன்}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} முன்னிலையில் வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், புத்திசாலியுமான அர்ஜுனன், யுதிஷ்டிரனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தாலும், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைத்து இரவெல்லாம் உறங்கமாட்டானே! இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்}, கிருஷ்ணை, யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் துன்பத்தில் மூழ்கியிருப்பதைக் காணும் அர்ஜுனன், ஐயமின்றி, கடும் சக்தி கொண்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடி கோபத்தால் இரவெல்லாம் உறங்க மாட்டானே!

சொர்க்கத்தில் உள்ள அருளப்பட்ட இரு தேவர்களைப் போல இருக்கும் இரட்டையர்கள் {நகுலன் சகாதேவன் ஆகியோர்}, அருள் நிலைக்குத் தகுதியிருப்பினும், அறம் மற்றும் உண்மைக்குக் கட்டுப்பட்டு, (தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழிவாங்குவதைக் கட்டுப்படுத்திக் கொண்டு) விழிப்புடன் ஓய்வில்லாமல் தங்கள் இரவுகளைக் கழிப்பார்களே! வாயுத்தேவனின் பலத்திற்கு இணையான பலம் கொண்ட வாயு தேவனின் மகன் {பீமன்}, தனது அண்ணனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, பெருமூச்சுவிட்டபடி சந்தேகமற தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பான். அனைத்து போர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக இருப்பினும், அவன் {பீமன்} இப்போது, அறத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டுத் தரையில் அமைதியாகக் கிடக்கிறான். எனது பிள்ளைகளைக் கொல்ல நினைத்திருக்கும் அவன் நேரத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறான்.

ஏமாற்றுகரமாக யுதிஷ்டிரன் பகடையில் வீழ்த்தப்பட்ட போது, துச்சாசனன் பேசிய கொடும் வார்த்தைகள், விருகோதரனின் {பீமனின்} இதயத்தில் ஆழமாக மூழ்கி, எரிந்து கொண்டிருக்கும் வைக்கோல் கட்டு காய்ந்த விறகை உட்கொள்வது போல அவனை எரித்துக் கொண்டிருக்குமே! தர்மனின் மகன் எப்போதும் பாவ வழியில் செயல்படமாட்டான்; தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிவான்; ஆனால், நாடுகடத்தப்பட்ட வனவாழ்வின் விளைவாக, காற்றின் துணையோடு எரியும் காட்டுத்தீ போல, பீமனின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்குமே! வீரனான அவன் {பீமன்} அந்தக் கோபத்தினால் பிளக்கப்பட்டு, கைகளைப் பிசைந்து கொண்டு என் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் எரித்துவிடுவதைப் போல, மிகக் கோரமான சூடான பெருமூச்சை விட்டுக் கொண்டிருப்பானே! காண்டீவத்தைத் தாங்குபவனும் {அர்ஜுனனும்} விருகோதரனும் {பீமனும்} கோபப்படும்போது, யமனும் காலனும் போன்று, வஜ்ரங்களைப் போன்ற தங்கள் கணைகளைச் சிதறவிட்டு, எந்தத் தகுதி படைத்த எதிரியையும் கொன்று விடுவார்கள்.

ஐயோ, துரியோதனன், சகுனி, சூதனின் மகன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்ட துச்சாசனன் ஆகியோர், பகடை வழியாகப் பாண்டவர்களின் நாட்டைக் களவு செய்து, கொடூரமான அழிவின் குறியைக் கவனிக்காமல் தேனை மட்டும் காண்பதாக அல்லவா தெரிகிறது. சரியாகவோ, தவறாகவோ நடந்து கொண்ட மனிதன் தனது அச்செயலுக்கான கனியை {பலனை} எதிர்பார்க்கிறான். எனினும், அக்கனி {அந்தப் பலன்} அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தி, முழுமையாக அவனை முடக்கிவிடுகிறது. பின்பு அம்மனிதன் எப்படி விடுபடுவான்? நிலம் நன்கு உழப்பட்டு, அதில் விதைகளைத் தூவி, காலத்தில் {மழையின்} தேவன் {இந்திரன்} {மழையைப்} பொழிந்தாலும், அந்தப் பயிர் விளையாமல் போகலாம். இதைத்தான் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். உண்மையில், இங்கே எல்லாம் விதி சார்ந்தே நடக்கிறது என்கிறது பழமொழி; நான் நினைப்பதுபோல் அல்லாமல் இருந்தால் அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? {இதற்கு தெய்வத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?}

சூதாடியான சகுனி, எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளும் பாண்டுவின் மகனிடம் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டான். எனது தீய மகன்களின் மேல் கொண்ட பாசத்தினால் நானும் அது போலவே நடந்து கொண்டேன். ஐயோ, இதன் காரணமாகவே குருக்களுக்கு அழிவு காலம் வந்துவிட்டதே! ஓ!, ஒருவேளை, தவிர்க்க முடியாத அது {அழிவு} நடந்து விடுமோ! உந்தப்பட்டாலும் இல்லையென்றாலும் காற்று நகர்ந்தே தீரும். கருவுற்ற பெண் பிரசவிக்கத்தான் செய்வாள். வைகறை {விடியல்} இருளை விலக்கத்தான் செய்யும். பகல் மாலையில் மறைந்துதான் போகும்! நம்மாலோ, பிறராலோ ஈட்டப்பட்டது எதுவாயினும் {எந்தப் பொருளாயினும்}, மனிதர்கள் அதைச் செலவு செய்தாலும், செய்யாவிட்டாலும், நேரம் வரும்போது, அந்த நமது உடைமைகள் நமக்குத் துன்பத்தைக் கொண்டு வருகின்றன. இருந்தும் ஏன் மக்கள் செல்வத்தை ஈட்டுவதில் இவ்வளவு ஆவலாக உள்ளனர்?

உண்மையில், எதை அடைந்தாலும், அது விதியின் பயன் என்றால், அது பிரிக்கப்படாதபடி சிறுகச் சிறுக இழக்காமல் உடனே வெளியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டாமா? அது பாதுகாக்கப்படாமல் இருந்தால் நூறு துண்டுகளாக உடைந்து போகுமே! {பிரிக்கப்படாமல், சிறிது சிறிதாகச் செலவாகாமல் பொருள் பாதுகாக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்} ஆனால், நமது உடைமைகளின் தன்மை எதுவாக இருந்தாலும், இவ்வுலகில் நமது செயல்களின் வினை தொலைந்து போவதில்லை. {செய்த வினை பலன் கொடுக்காமல் போவதில்லை}.

வனத்தில் இருந்து இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்ற அர்ஜுனனின் சக்தியைப் பாரும்! நால்வகைத் தெய்வீக ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த அவன் {அர்ஜுனன்}, மீண்டும் உலகத்திற்குத் திரும்பிவிட்டான்! மனித உருவத்தோடு சொர்க்கத்திற்குச் சென்ற எந்த மனிதன், மீண்டும் திரும்பி வர விரும்புவான்? காலத்தால் அடிக்கப்பட்டு, மரணத்திற்கு ஆட்பட்டிருக்கும் எண்ணற்ற குருக்களைக் {கௌரவர்களைக்} கண்ட காரணத்தாலேயே அவன் {அர்ஜுனன்} திரும்பியிருக்கிறான். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் திறன் பெற்ற அர்ஜுனனே வில்லாளி! அவன் கையாளும் வில்லான காண்டீவம், கடும் ஊக்கம் கொண்டது. இது தவிர, அவன் தனது தெய்வீக ஆயுதங்களையும் வைத்திருக்கிறான்! இந்த மூன்றின் {தெய்வீக ஆயுதங்கள், காண்டீவம், அர்ஜுனன்} சக்தியை யாரால் தாங்க முடியும்?" என்றான் {திருதராஷ்டிரன்}.

அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுபலனின் மகன் {சகுனி}, கர்ணனுடன் அமர்ந்திருந்த துரியோதனனிடம் சென்று, அனைத்தையும் தனிமையில் சொன்னான். துரியோதனன் சிறு புத்தி கொண்டிருந்தவன் ஆனாலும், அவன் கேட்டதை நினைத்து துயரத்தால் நிறைந்தான்."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, November 10, 2013

அறம் தடுமாறினானா கர்ணன்? - வனபர்வம் பகுதி 7

Did Karna perquisite in virtue? | Vana Parva - Section 7 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
விதுரன் திரும்பி வந்ததை அறிந்த துரியோதனன் பாண்டவர்களை திரும்ப அழைத்து வரப் போகிறார் மன்னர் என்று துயர் கொள்வது; கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோரை அழைத்து துரியோதனன் ஆலோசனை செய்தல்; பாண்டவர்கள் திரும்பி வந்தால் தக்க ஆலோசனை செய்வோம் என்று சகுனி சொல்வது; பாண்டவர்கள் திரும்பி வந்தால் மறுபடியும் பகடையில் வீழ்த்து என்று கர்ணன் சொல்வது; அவர்கள் திரும்பி வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று துரியோதனன் சொல்வது; கோபம் கொண்ட கர்ணன், மூவரையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களைக் கொல்ல கிளம்பியது. வியாசர் அவர்களைத் தடுத்தது....

வைசம்பாயனர் சொன்னார், "விதுரன் திரும்பி வந்ததையும், மன்னன் {திருதராஷ்டிரன்} அவனைச் சமாதானப் படுத்தியதையும் கேள்விப்பட்ட, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகன் {துரியோதனன்} துயரால் எரிய ஆரம்பித்தான். அறியாமை எனும் மேகத்தால் ஞானம் மறைக்கப்பட்ட அவன் {துரியோதனன்}, சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன் மற்றும் துச்சாசனனை அழைத்து அவர்களிடம், "கற்றவரும், திருதராஷ்டிரரின் ஞானமுள்ள அமைச்சருமான விதுரர் திரும்பிவிட்டார்! பாண்டு மகன்களின் நண்பரான அவர், எப்போதும் அவர்களுக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபட்டு வருகிறார். 

இந்த விதுரர், அவர்களைத் {பாண்டவர்களைத்} திரும்ப அழைக்கும் வகையில் மன்னனை {திருதராஷ்டிரனை} மயக்குவதில் வெற்றிபெறும் முன்னர், எனக்கு நன்மையைச் செய்ய நினையுங்கள். எனது பாதையில் வேறு எந்தத் தடையும் இல்லை என்றாலும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் திரும்பி வருவதை நான் கண்டால், உணவையும், நீரையும் தவிர்த்து மீண்டும் மெலிந்தவனாகிவிடுவேன். விஷத்தை உட்கொள்வேன் அல்லது தூக்கு மாட்டிக் கொள்வேன், அல்லது நெருப்புக்குள் நுழைவேன் அல்லது எனது ஆயுதங்களைக் கொண்டே என்னை நான் கொன்று கொள்வேன். ஆனால் பாண்டுவின் மகன்கள் செழிப்பாக இருப்பதை என்னால் காண முடியாது’’, {என்றான் துரியோதனன்} .

சகுனி, "ஓ மன்னா, பூமியின் தலைவா, ஏன் இப்படி அறியாமையில் இருக்கிறாய்? ஒரு குறிப்பிட்ட சபதத்தை ஏற்று பாண்டவர்கள் கானகம் சென்றுவிட்டார்கள். ஆகையால் நீ நினைப்பது நடக்காது. அகையால், அவர்கள் உனது தந்தையின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளை ஏற்கமாட்டார்கள்! இருப்பினும், அவர்களின் சபதத்தை மீறி மன்னனின் உத்தரவுக்கிணங்கி அவர்கள் தலைநகருக்குத் திரும்பினாலும், நாம் நடுநிலையாக ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பது போலக் காண்பித்து, பாண்டவர்களை நெருக்கமாகக் கவனித்து, நமது ஆலோசனைகளைத் தொடர்வோம்" என்றான்.

துச்சாசனன், "ஓ பெரும் புத்திகூர்மை கொண்ட மாமா {சகுனி}, நீர் சொல்வது போலத் தான் இது இருக்கிறது! நீர் உச்சரிக்கும் ஞானத்தின் வார்த்தைகள் எனக்குப் புரிகிறது" என்றான்.

கர்ணன், "ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிடம் ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும்  தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.

வைசம்பாயனர் சொன்னார், "கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியற்ற இதயத்துடன், தனது ஆலோசகர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். இதையெல்லாம் குறித்துக் கொண்ட கர்ணன், தனது அழகான கண்களை விரித்து, கடுமையான கோபத்துடன் தனது உறுப்புகளை {உடலை} அசைத்து, அலட்சியத்துடன் துரியோதனன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனிடம்}, "இளவரசர்களே, எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் மன்னனின் (துரியோதனனின்) நலத்தை விரும்பி, கூப்பிய கரங்களுடன் அவனுக்காகக் காத்திருக்கும் பணியாட்கள். ஆகையால், நாம் அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்! 

ஆனால், நம்மால் எப்போதும் அவனது நலத்தைக் காக்க (நாம் திருதராஷ்டிரரை நம்பி இருப்பதால்) உடனே செயல்பட முடியவில்லை. நாம் இப்போது, கவசங்களைத் தரித்து, ஆயுதங்களைத் தாங்கி, நமது ரதங்களில் ஏறி, ஒன்றுசேர்ந்து சென்று, காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களைக் கொல்லச் செல்வோம். பாண்டவர்களை அமைதிப்படுத்தி, அறியமுடியா பயணத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தால்தான், நாம் இருவரும், திருதராஷ்டிரரின் மகன்களும் அமைதியை அடைய முடியும். அவர்கள் {பாண்டவர்கள்}, துயரத்தில் இருக்கும்வரை, சோகத்தில் இருக்கும் வரை, உதவியற்று இருக்கும் வரை, அந்தக் காலம் வரை மட்டுமே நாம் அவர்களுக்குச் சமமானவர்கள்! இதுவே என் மனம் {கருத்து}" என்றான்.

தேரோட்டி மகனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் தொடர்ந்து அவனைப் பாராட்டி, "நன்று" என்று உரக்கச் சொல்லி, ஒவ்வொருவரும் தங்கள் ரதங்களில் ஏறி, இரத்தச் சிவப்பான வெற்றிக்காக ஒருங்கிணைந்து, பாண்டுவின் மகன்களைக் கொல்ல விரைந்தனர். தனது ஆன்மப் பார்வையால், அவர்கள் வெளியேறியதை அறிந்த சுத்தமான ஆன்மா கொண்ட கிருஷ்ண துவைபாயனர்{வியாசர்} அவர்களிடம் வந்து, அவர்களைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டார். அவர்களைத் திருப்பி அனுப்பிய அந்தப் புனிதமானவர் {வியாசர்}, அவனது கண்பார்வையைப் போன்ற புத்திகூர்மை கொண்ட மன்னனின் {திருதராஷ்டிரனின்} முன்பு விரைவாகத் தோன்றினார். வசதியாக அமர்ந்திருந்த மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} அந்தப் புனிதமானவர் {வியாசர்} பேச ஆரம்பித்தார்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top