Showing posts with label சஞ்சயன். Show all posts
Showing posts with label சஞ்சயன். Show all posts

Saturday, December 31, 2016

மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 04

Dhritarashtra felldown senseless! | Karna-Parva-Section-04 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துயரால் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; பெண்களின் ஓலம்; பெண்கள் மயங்கிவிழுந்தது; மீண்டும் சஞ்சயனிடம் போரைக் குறித்து விசாரித்த திருதராஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இந்தப் புலனாய்வைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரின் உச்சக்கட்டத்தை உணர்ந்து, சுயோதனன் {துரியோதனன்} ஏற்கனவே இறந்துவிட்டதாகவே கருதினான். மிகவும் கலங்கிப் போன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, உணர்வுகளை இழந்த யானையொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(1) பெரிதும் கலக்கமடைந்தவனான அந்த ஏகாதிபதிகளில் முதனமையானவன் {திருதராஷ்டிரன்} பூமியில் விழுந்த போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, (அரச குடும்பத்தைச் சார்ந்த) பெண்கள் உரக்க ஓலமிட்டனர். மொத்த பூமியையும் நிறைக்குமளவுக்கு அவ்வொலி பேரொலியாக இருந்தது[1].(2) ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்கியிருந்த அந்தப் பாரதப் பெண்மணிகள், பெரிதும் கலக்கமடைந்த இதயங்களுடன், துயரால் எரிக்கப்பட்டவர்களாக உரக்க அழுதனர்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னனை அணுகிய காந்தாரியும், அந்தக் குடும்பத்தின் பிற பெண்மணிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(4)


[1] சுலோகங்கள் 1-ம், 2-ம் இரு வரி சுலோகங்களாக அல்லாமல் முவ்வரி சுலோகங்களாக இருக்கின்றன எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துயரால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் குளித்து, உணர்வுகளை இழந்த அந்தப் பெண்களுக்குச் சஞ்சயன் ஆறுதல் கூறினான்.(5) (சஞ்சயனால்) ஆறுதலடைந்த அந்தப் பெண்கள், காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினர்.(6) விதுரனும், அந்தக் குரு வழித்தோன்றலின் {திருதராஷ்டிரன்} மீது நீரைத் தெளித்து, தன் கண்ணையே ஞானமாகக் கொண்ட [2] அந்தப் பலமிக்க ஏகாதிபதிக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மெதுவாக உணர்வுகளை அடைந்து, அந்தக் குடும்பத்தின் பெண்கள் அங்கே இருப்பதை அறிந்து கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, மதியிழந்த ஒருவனைப் போலச் சிறிது நேரம் முற்றிலும் அமைதியாக இருந்தான்.(8)

[2] "இது பார்வையற்ற ஒரு மனிதனைக் குறிக்கும் மதிப்புமிக்க அடைமொழியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சிறிது நேரம் சிந்தித்து, நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்களை நிந்தித்து, பாண்டவர்களைப் புகழ்ந்தான்.(9) தன் அறிவையும், சுபலனின் மகனான சகுனியின் அறிவையும் நிந்தித்த மன்னன், நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினான்.(10) மீண்டும் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த மன்னன், போதுமான மன உரத்துடன், கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான்.(11)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். ஓ! சூதா, எப்போதும் வெற்றியை விரும்பிய என் மகன் துரியோதனன், வெற்றியடையவதில் சலிப்படைந்து ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டானா? ஓ! சஞ்சயா, திரும்பச் சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, இவை யாவையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக" என்றான்.(12,13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, மன்னனால் {திருதராஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதன் {சஞ்சயன்}, அவனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களுமான தனது மகன்கள், தம்பிகள் மற்றும் பிற சூதப் போர்வீரர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டான்.(14) பாண்டுவின் புகழ்பெற்ற மகனால் {பீமனால்} துச்சாசனனும் கொல்லப்பட்டான். உண்மையில், அந்தப் போரில் கோபத்துடன் இருந்த பீமசேனனால் அவனது {துச்சாசனனின்} குருதியும் குடிக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(15)
------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 4-ல் உள்ள சுலோகங்கள் :15

ஆங்கிலத்தில் | In English

தன் படைக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்! - கர்ண பர்வம் பகுதி – 03

Duryodhana incited the enthusiasm of his force! | Karna-Parva-Section-03 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் முகவாட்டத்தைக் கண்டு, கலங்கி நின்ற படைவீரர்கள்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; கர்ணனின் பெருமைகளைச் சொன்ன துரியோதனன்; அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட்டதைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பெரும் வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், நிறம் மங்கியவர்களாகி, உற்சாகமற்றவர்களாகி தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(1) ஆயுதங்கள் தரித்திருந்தவர்களான அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தலையைத் தொங்கப்போட்டனர். துயரால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், முற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.(2) இவ்வாறு பீடிக்கப்பட்ட முகத்தோற்றத்துடன் கூடிய அவர்களைக் கண்ட உமது துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துயரால் மனங்கலங்கி மேல்நோக்கியபடி வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்களில் பலரின் ஆயுதங்கள், இரத்தக் கறைகளுடன் அவர்களது கைகளில் இருந்து விழுந்தன.(4) மேலும், ஓ! பாரதரே, படைவீரர்களின் பிடியில் இருந்த எண்ணற்ற ஆயுதங்களும், வானத்தில் இருந்து விழும் விண்கோள்களுக்கு ஒப்பாகத் தொங்கிக் கொண்டிருந்தன[1].(5)


[1] "இந்தச் சுலோகத்தை நீலகண்டர் சரியாக விளக்கியிருக்கிறார் என நான் நினைக்கிறேன். நக்ஷத்திரானி Nakshatrani என்பதை விழும் விண்கோள்களாகப் பொருள் கொள்ளாவிடில், அந்த ஒப்பீடு பொருளற்றதாகவும், அபத்தமானதாகவும் ஆகிவிடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பிடிக்கப்பட்டவைகளும், நழுவுகின்றவைகளுமான அந்த ஆயுதங்கள், ஆகாயத்திலிருந்து விழுகின்றவையும் அமங்களத்தைத் தெரிவிக்கின்றவையுமான நக்ஷத்திரங்கள் போலக் காணப்பட்டன" என்றிருக்கிறது.

அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி, முடக்கப்பட்டு உயிரற்றவர்களைப் போல இப்படி நின்று கொண்டிருந்த உமது அந்தப் படையைக் கண்டு,(6) "உங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நான் பாண்டவர்களைப் போருக்கு அழைத்து, இந்த ஆயுத வழியைத் தொடக்கினேன்.(7) எனினும், துரோணர் வீழ்ந்ததும், {நமக்கான} வாய்ப்பு மகிழ்ச்சியற்றதாகத் தெரிகிறது. போரில் ஈடுபடும் போர்வீரர்கள் அனைவரும் போரில் சாகிறார்கள்.(8) போரில் ஈடுபடுவதால், ஒரு போர்வீரன் வெற்றியையோ, மரணத்தையோ அடைவான். இதில் (துரோணரின் மரணத்தில்) என்ன வினோதமிருக்கிறது? ஒவ்வொரு திசையை நோக்கியும் முகத்தைத் திருப்பிப் போரிடுவீராக.(9) வலிமையும், பலமும், உயர் ஆன்மாவும் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான விகர்த்தனன் மகன் கர்ணன், தனது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே போரில் திரிவதை இப்போது காண்பீராக.(10)

போரில் அந்தப் போர்வீரன் {கர்ணன்} மீது கொண்ட அச்சத்தாலேயே, கோழையான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிங்கத்தைக் கண்ட சிறு மானைப் போல எப்போதும் பின்வாங்குகிறான்.(11) அவனே {கர்ணனே}, பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்ட வலிமைமிக்கப் பீமசேனனை, சாதாரண மனிதப் போர் முறைகளாலேயே அந்தப் பரிதாப நிலையை அடையச் செய்தான்.(12) ஆயிரக்கணக்கான மாயைகளைக் கொண்டவனும், தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான கடோத்கசனை உரக்க முழங்கியபடியே, வெல்லப்படமுடியாத தனது ஈட்டியால் கொன்றவன் அவனே {கர்ணனே}.(13) இலக்கில் துல்லியமும், வெல்லப்பட முடியாத சக்தியும் கொண்ட அந்தப் புத்திசாலி போர்வீரனின் {கர்ணனின்} வற்றாத ஆயுத வலிமையை இன்று காண்பீராக.(14) விஷ்ணுவுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பான அஸ்வத்தாமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரின் ஆற்றலையும் அந்தப் பாண்டுவின் மகன்கள் இன்று காணட்டும்[2].(15) போரில் பாண்டுவின் மகன்களையும், அவர்களது துருப்புகளையும் தனித்தனியாகவே உங்கள் அனைவராலும் கொல்ல முடியும். அப்படியிருக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உங்களால் அடைய இயலும் சாதனை எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்? பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான நீங்கள், இன்று பெரும்பணிகளைச் சாதித்தபடியே ஒருவரையொருவர் காணப் போகிறீர்கள்" என்றான் {துரியோதனன்}.(16)

[2] "15வது சுலோகத்தின் இரண்டாவது வரியானது சில உரைகளில் வேறு விதமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன், தனது தம்பிகளுடன் கூடி கர்ணனை (குரு படையின்) படைத்தலைவனாக்கினான்.(17) படைத்தலைமையை ஏற்றவனும், போரில் மிகக் கடுமையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன் உரத்த முழக்கங்களைச் செய்தபடியே எதிரியோடு போரிட்டான்.(18) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள் மற்றும் விதேஹர்களுக்கு மத்தியில் அவன் {கர்ணன்} பேரழிவை ஏற்படுத்தினான்.(19) ஒன்றின் {ஒரு கணையின்} சிறகுக்கு {புங்கத்திற்கு} மிக நெருக்கமாக, வண்டுகளின் கூட்டங்களைப் போல எண்ணற்ற சரக் கணைகள் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டன. பெரும் சுறுசுறுப்புடன் கூடிய பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் பீடித்து, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற அவன் {கர்ணன்}, இறுதியாக அர்ஜுனனால் கொல்லப்பட்டான்" {என்றான் சஞ்சயன்}.(21)
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 3-ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

Friday, December 30, 2016

சஞ்சயன் திருதராஷ்டிரன் உரையாடல்! - கர்ண பர்வம் பகுதி – 02

Sanjaya Dhritarashtra dialogue! | Karna-Parva-Section-02 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணன் வீழ்ந்ததைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; திருதராஷ்டிரனின் புலம்பல்; திருதராஷ்டிரன் வருந்தக்கூடாது என்று சொன்ன சஞ்சயன்…


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற இதயம் கொண்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான குதிரைகளில் அவ்விரவே நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(1) ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், ஆழ்ந்த கவலையால் நிறைந்த இதயத்துடன் கூடிய அவன் {சஞ்சயன்}, சொந்தங்களோ, நண்பர்களோ {அப்போது அங்கு} இல்லாதிருந்த திருதாரஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். துயரால் சக்தி அனைத்தையும் இழந்திருந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} கண்ட அவன் {சஞ்சயன்}, கூப்பிய கரங்களுடன், தலைவணங்கி அந்த ஏகாதிபதியின் பாதங்களை வழிபட்டான்.(3)


முறையாக மன்னன் திருதராஷ்டிரனை வணங்கிய அவன் {சஞ்சயன்}, கவலையால் கூவியபடியே சொல்லத் தொடங்கினான்,(4) "ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். நீர் மகிழ்ச்சியாக இல்லையா? உமது தவறுகளால் இத்தகு துயரத்தில் வீழ்ந்தாலும், நீர் மலைப்படைய மாட்டீர் என நான் நம்புகிறேன்.(5)

விதுரர், துரோணர், கங்கையின் மகன் {பீஷ்மர்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் உமது நன்மைக்கான ஆலோசனைகளைச் சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை நீர் மறுத்தத்தை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(6)

ராமர் {பரசுராமர்}, நாரதர், கண்வர் மற்றும் பிறராலும் உமது நன்மைக்கான ஆலோசனைகள் சபையில் வைத்துச் சொல்லப்பட்டன. அவை உம்மால் மறுக்கப்பட்டதை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(7)

உமது நன்மையிலேயே எப்போதும் ஈடுபட்ட நண்பர்களான பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரும் போரில் எதிரியால் கொல்லப்பட்டதை நினைத்து நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்" என்றான் {சஞ்சயன்}.(8)

கரங்களைக் கூப்பியபடி தன்னிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சூதன் மகனிடம் {சஞ்சயனிடம்}, துயரால் பீடிக்கப்பட்டு, நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே இருந்த அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கொண்ட போர்வீரரான அந்தக் கங்கை மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சியையும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரின் வீழ்ச்சியையும் கேட்டு என் இதயத்தில் பெரும் வலியை உணர்கிறேன்.(10) பெரும் சக்தி கொண்டவரும், வசுக்களால் பிறந்தவருமான எந்த வீரர் கவசம் பூண்டு கொண்டு ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொன்றாரோ,(11), பிருகுவின் மகன் {பரசுராமர்}, உயர்ஆன்மா கொண்ட எவரிடம் உயர்ந்த ஆயுதங்களைக் கொடுத்தாரோ, பிள்ளைப் பருவத்திலே எந்தப் போர்வீரர், ராமரால் {பரசுராமரால்} வில்லின் அறிவியல் பயிற்றுவிக்கப்பட்டாரோ, ஐயோ அவர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டவனும், யக்ஞசேனன் {துருபதன்} மகனுமான சிகண்டியால் கொல்லப்பட்டாரே. இதற்காக என் இதயம் பெரிதும் வலிக்கிறது[1].(12,13)

[1] "13ம் சுலோகத்தில் நீலகண்டர் துரோணரையல்லாமல் பீஷ்மரைக் குறிப்பிட்டுச் சரியாகவே விளக்கியிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு சில பதிப்புகளில் இந்தச் சுலோகம் துரோணரைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.

எந்த வீரரின் அருளின் மூலம், வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் அரச மகன்களும், பூமியின் தலைவர்கள் பலரும் மகாரதர்கள்[2] ஆனார்களோ,(14) ஐயோ, துல்லியமான இலக்குக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளியான துரோணர், திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(15) அவ்விருவரும், நால்வகை ஆயுதங்களிலும் (ஆயுதங்களின் அறிவிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும்)[3] தங்களுக்கு ஒப்பாக எவனையும் கொண்டதில்லை. ஐயோ, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(16) எந்தப் போர்வீரர், ஆயுத அறிவில் தனக்கு நிகராக மூன்று உலகிலும் எவனையும் கொள்ளவில்லையோ, வீரரான அந்தத் துரோணரின் கொலையைக் கேட்டு என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(17)

[2] "ஒரு மகாரதன் என்பவன், பத்தாயிரம் வில்லாளிகளுடன் ஒரே நேரத்தில் போரிடக்கூடியவன் ஆவான் எனக் கங்குலி" இங்கே விளக்குகிறார்.

[3] "முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம், யந்திரமுக்தம் என்பனவே அந்த நால்வகை ஆயுதங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். முக்தம் என்ற ஆயுதமானது கரங்களில் இருந்து வீசி எறிந்து போரிடப் பயன்படுவது; அமுக்தம் என்பது, ஒரு வாளைப் போல, கரங்களில் இருந்து வீசி எறியப்படாமல் போரிடப் பயன்படுவது; முக்தாமுக்தம் என்பது, ஒரு கதாயுதத்தைப் போல, சில வேளைகளில் வீசி எறியப்பட்டும், சில வேளைகளில் வீசி எறியப்படாமலும் போரிடப் பயன்படுவது; யந்திரமுக்தம் என்பது ஏதாவது ஓர் இயந்திரத்தில் இருந்து ஏவப்பட்டுப் போரிடப் பயன்படுவதும் ஆகும். முக்த ஆயுதங்கள் அனைத்தும் அஸ்திரங்கள் எனப்படுகின்றன. அமுக்த ஆயுதங்கள் சஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பாண்டுவின் உயர்ஆன்ம மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆற்றலுடன் முயன்று, பலமிக்கப் படையான சம்சப்தகர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிய பிறகு,(18) துரோணரின் புத்திசாலி மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நாராயண ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, (கௌரவப்) படைப்பிரிவுகள் தப்பி ஓடத் தொடங்கிய பிறகு, என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(19) துரோணரின் மரணத்திற்குப் பிறகு, தப்பி ஓடியவர்களும், துயரக் கடலில் மூழ்கியவர்களுமான என் துருப்பினரை, ஆழ்ந்த கடலின் நடுவே கப்பல் உடைந்த கடலோடிகளுக்கு ஒப்பாக நான் நினைக்கிறேன்.(20) ஓ! சஞ்சயா, குரு படைப்பிரிவுகள் களத்தில் இருந்து தப்பி ஓடிய போது, துரியோதனன், கர்ணன், போஜர்களின் தலைவனான கிருதவர்மன், மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், எஞ்சியிருக்கும் என் மகன்கள் மற்றும் பிறரின் முகங்கள் எவ்வண்ணத்தை ஏற்றன?(21,22) ஓ!கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் என் தரப்பின் போர்வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலை விளக்கியபடி, போரில் உண்மையாக நடந்தவாறே இவையாவற்றையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது தவறால், கௌரவர்களுக்கு ஏற்பட்ட அனைத்தையும் கேட்டு நீர் எந்த வேதனையும் அடைய வேண்டாம். ஞானியான எவனும், விதிகொண்டு வரும் எதற்காகவும், ஒருபோதும் வலியை உணர்வதில்லை {மனம் வருந்துவதில்லை}.(24) விதி வெல்லப்பட முடியாததாகையால், மனித காரியங்கள் அடையப்படுவதாகவும், அடையப்படாததாகவும் ஆகலாம். எனவே, ஞானியான ஒருவன், தான் விரும்பிய பொருட்களை அடைந்தாலோ, வேறுவிதமானாலோ ஒருபோதும் வலியை உணர்வதில்லை" (என்றான் சஞ்சயன்}.(25)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நான் வலியை உணரவில்லை. நான் இவை யாவற்றையும் விதியின் விளைவாகவே கருதுகிறேன். விரும்பியபடியே அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக" என்றான்.(26)
-----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 2-ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

Wednesday, September 28, 2016

இரவுநேரப் போர்க்களம்! - துரோண பர்வம் பகுதி – 153

Battlefield on the night! | Drona-Parva-Section-153 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் :  துரோணர் செய்த போர் குறித்துச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; இரவு நேரப் போர்க்களத்தை வர்ணித்த சஞ்சயன்; பாண்டவத் தலைவர்கள் அனைவரையும் இயல்புக்கு மீறிய துணிவுடன் எதிர்கொண்ட துரோணர்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு, பெரும் பலம் கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும் ஆசானுமான அந்த வீரத் துரோணர், கோபத்துடன் பாண்டவப் படைக்குள் ஊடுருவியபடி களத்தில் தன் தேரில் திரிந்து கொண்டிருந்த போது, அவரது  பாதையைப் பாண்டவர்கள் எவ்வாறு தடுத்தனர்?(1, 2) அந்தப் பயங்கரப் போரில் ஆசானுடைய {துரோணருடைய} தேரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்? எதிரியை அவர் {துரோணர்} கடுமையாகக் கொன்ற போது, அவரது இடது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்?(3) போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தில், அவரைத் தொடர்ந்து சென்ற துணிவுமிக்கப் போர்வீரர்கள் யாவர்? அந்தத் தேர்வீரருக்கு முன்பு நின்றவர்கள் யாவர்?(4) வெல்லப்படாத பெரும் வில்லாளியும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவருமான அவர், தன் தேரில் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடியே பாண்டவப்படைக்குள் நுழைந்த போது, பருவகாலமற்ற மிதமிஞ்சிய குளிரை அவரது எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். குளிர்கால வெடிப்புகளுக்கு வெளிப்பட்ட பசுவைப் போல அவர்கள் நடுங்கியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.(5, 6) பரவும் காட்டுத் தீயைப் போலப் பாஞ்சாலர்களின் துருப்புகள் அனைத்தையும் எரித்தவரும், தேர்வீரர்களில் காளையுமான அவர் {துரோணர்} தன் மரணத்தை எப்படிச் சந்தித்தார்?” என்று கேட்டான்.(7]


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலைப் பொழுதில் சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனையும், பெரும் வில்லாளியான அந்தச் சாத்யகியையும் சந்தித்த பிறகு, அந்த இருவரும் துரோணரை நோக்கிச் சென்றனர்.(8) அப்போது யுதிஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் ஒரு தனிப் படைப்பிரிவுடன், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போல, நுண்ணறிவு கொண்ட நகுலன், வெல்லப்பட முடியாத சகாதேவன், தன் சொந்தப் படைப்பிரிவுடன் கூடிய திருஷ்டத்யும்னன், விராடன், ஒரு பெரும்படையுடன் கூடிய சால்வர்களின் ஆட்சியாளன் ஆகியோர் போரில் துரோணரை எதிர்த்துச் சென்றனர். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்டவனும், திருஷ்டத்யும்னனின் தந்தையுமான மன்னன் துருபதனும், துரோணரை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் தங்கள் படைகளுடன் சேர்ந்து பெரும் பிரகாசம் கொண்ட துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(10, 12) திறனுடன் தாக்குபவர்களும், பலம் நிறைந்தவர்களுமான ஆறாயிரம் பிரபத்ரகப் பாஞ்சாலர்களும், சிகண்டியைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(13) மனிதர்களில் முதன்மையான பிறரும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(14)

ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, வீரமிக்க அந்தப் போர்வீரர்கள் போரிடச் சென்ற போது, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் அந்த இரவானது மிகுந்த இருளடைந்தது.(15) அந்த இருண்ட நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைவிட்ட போர் வீரர்கள் பலராவர்.(16) அந்த இரவில், பல யானைகள், குதிரைகள், மற்றும் காலாட்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். கும்மிருட்டான அவ்விரவில் ஒளிரும் வாய்களுடன் கூடிய நரிகள் பெரும் அச்சத்தைத் தூண்டும் வகையில் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. கௌரவர்களின் கொடிமரங்களை அடைந்த ஆந்தைகள் {கோட்டான்கள்} அங்கிருந்து அலறி அச்சங்களை {ஆபத்துகளை} முன்னறிவித்தன. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் ஒரு கடும் ஆரவாரம் எழுந்தது.(17-19) பேரிகைகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் உரத்த ஒலியுடன் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், குதிரைலாடங்களின் தடவொலிகள் ஆகியவையும் கலந்த அந்த ஆரவாரம் எங்கும் பரவியது.(20)

பிறகு, அந்த மாலை {இரவு} வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், சிருஞ்சயர்கள் அனைவருக்கும் இடையில் கடும்போரொன்று நடைபெற்றது.(21) உலகமே இருளில் மூழ்கியிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை.(22) போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியால் ஆகாயம் மறைக்கப்பட்டது. மனிதன், குதிரை மற்றும் யானைகளின் குருதிகள் ஒன்றாகக் கலந்தன.(23) அப்போது பூமியின் புழுதி மறைந்து போனது. நாங்கள் அனைவரும் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக ஆனோம். மலையில் மூங்கில் காடு ஒன்று எரியும் ஒலியைப் போல, ஆயுத மோதல்களின் பயங்கர ஒலிகள் அந்த இரவு பொழுதில் கேட்கப்பட்டன.(24) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே} மிருதங்கங்கள், அனகங்கள், வல்லகிகள், படகங்கள் [1] ஆகியவற்றின் ஒலிகளோடு, (மனிதர்களின்) கூச்சல்களும், (குதிரைகளின்) கனைப்பொலிகளும் கலந்து எங்கும் பயங்கரக் குழப்பத்தை உண்டாக்கின.(25)

[1] பல்வேறு வகைகளிலும், அளவுகளிலுமான பேரிகைகள். எ.கா. மேளம், மத்தளம், முரசு, துந்துபி முதலியன.

அந்தக் களம் இருளில் மூழ்கியிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(26) அந்த இரவின் மதத்தையே {வெறியையே} அனைவரும் பூண்டு கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே எழும்பிய பூமியின் புழுதி இரத்த மழையால் தணிக்கப்பட்டது.(27) பிறகு தங்கக் கவசங்கள் மற்றும் போர்வீரர்களின் பிரகாசமான ஆபரணங்களின் விளைவால் அந்த இருள் அகன்றது. அப்போது தங்கத்தாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்ததும், ஈட்டிகளும் கொடிமரங்களும் நிறைந்ததுமான அந்தப் பாரதப் படை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் இரவு வானத்தைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தப் போர்க்களம் நரிகளின் ஊளைகளையும், காகங்களின் கரைதல்களையும், யானைகளின் பிளிறல்களையும், போர்வீரர்களின் கூக்குரல்கள் மற்றும் கதறல்களையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலிகள் யாவும் ஒன்றாகக் கலந்து மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது.(28-30) இந்திரனின் வஜ்ரத்தைப் போல அந்தப் பேராரவாரம் அனைத்துத் திசைப்புள்ளிகளையும் நிறைத்தது.

அந்த நடு இரவில், அந்தப் பாரதப் படையானது, போராளிகளின் அங்கதங்கள், காது குண்டலங்கள். மார்புக் கவசங்கள் மற்றும் ஆயுதங்களால் ஒளிர்வதாகத் தெரிந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்த இரவில் தெரிந்தன. வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள், கத்திகள், தண்டாயுதங்கள், வேல்கள், கோடரிகள் ஆகியன விழுகையில், திகைப்பூட்டும் நெருப்புக் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. முன்னோடியாக இருந்த துரியோதனனே அதன் (புயல் போன்ற படையின்) பலமான காற்றாக இருந்தான். தேர்களும் யானைகளும் அதன் உலர்மேகங்களாகின.(31-34) பேரிகைகள் மற்றும் பிற கருவிகளின் உரத்த ஒலிகள் அதன் பெருத்த இடிமுழக்கங்களாகின. கொடிமரங்களும், விற்களும் அதன் மின்னல் கீற்றுகளாகின. துரோணரும், பாண்டவர்களும் அதன் {அந்தப் புயல் போன்ற படையின்} பொழியும் மேகங்களாகினர். வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் அதன் இடிகளாகின.(35) கணைகள் அதன் மழைப்பொழிவாகின, (பிற வகைகளிலான) ஆயுதங்கள் அதன் வன்காற்றுகளாகின. மேலும் அங்கே வீசிய காற்றுகள் மிக வெப்பமாகவும், மிகக் குளிர்ந்ததாகவும் இருந்தன.

பயங்கரமானதும், அதிர்ச்சியளிப்பதும், கடுமையானதுமான அது {புயல் போன்ற அந்தப் பாரதப் படை} உயிரை அழிப்பதாக இருந்தது. {பாதுகாப்பான} உறைவிடமாகக் கொள்ள அதில் {அந்தப் படையில்} ஏதும் இல்லை.(36) மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், வீரர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், பயங்கரமான ஒலிகளை எதிரொலிப்பதுமான அந்தப் பயங்கர இரவில் போரை விரும்பிய போராளிகள் அச்சந்தரும் அந்தப் படைக்குள் {பாரதப் படைக்குள்} நுழைந்தனர்.(37) இரவில் அந்தக் கடுமையான, பயங்கரமான போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்து கோபத்துடன் விரைந்தனர்.(38) எனினும், சிறப்புமிக்கத் துரோணரை எதிர்த்துச் சென்ற அவர்கள் அனைவரும், ஒன்று புறமுதுகிடச்செய்யப்பட்டனர், அல்லது யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பபட்டனர்.(39) உண்மையில், அந்த இரவில், துரோணர் மட்டுமே தனியாகத் தன் கணைகளால், ஆயிரம் {1000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} தேர்களையும், பத்து லட்சம் {10,00,000} காலாட்படை வீரர்கள் மற்றும் குதிரைகளையும் துளைத்தார்" {என்றான் சஞ்சயன்}.(40, 41)
--------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 153-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-41

ஆங்கிலத்தில் | In English

Monday, July 18, 2016

பத்துக் கொடிமரங்கள்! - துரோண பர்வம் பகுதி – 104

The ten standards! | Drona-Parva-Section-104 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 20)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், விருஷசேனன், சல்லியன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், துரியோதனன் ஆகிய பத்து வீரர்களின் கொடிமரங்கள் குறித்த வர்ணனை; அவர்களுக்கிடையில் மூண்ட போர்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, பெரும் அழகுடன் பிரகாசித்தவையும், (அந்தப் போரில்) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நமது வீரர்களுக்குச் சொந்தமானவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்து எனக்கு விவரிப்பாயாக" என்றான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்ம வீரர்களின் பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்துக் கேளும். அவற்றின் வடிவங்களையும், பெயர்களையும் நான் விவரிப்பதைக் கேளும். உண்மையில், ஓ! மன்னா, அந்த முதன்மையான தேர்வீரர்களின் தேர்களில் நெருப்புத் தழல்களைப் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்த பல்வேறு வகைகளிலான கொடிமரங்கள் காணப்பட்டன. தங்கத்தால் ஆனவையாகவோ, தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டவையாகவோ, தங்க இழைகளால் இழைக்கப்பட்டவையாகவோ இருந்தவையும், தங்க மலையை (மேருவைப்) போலத் தெரிந்தவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமங்கள் அங்கே உயர்ந்த அழகுடன் காணப்பட்டன.

வீரர்களுடைய அந்தக் கொடிமரங்கள் அனைத்திலும் சிறந்த கொடிகளும் இணைக்கப்பட்டிருந்தன. உண்மையில், சுற்றிலும் பல்வேறு வண்ணங்களிலான கொடிகளைக் கொண்ட கொடிமரங்களான அவை, மிகவும் அழகாகத் தெரிந்தன. மேலும், காற்றால் அசைந்த அந்தக் கொடிகள், விளையாட்டரங்கில் ஆடும் அழகிய பெண்களைப் போலத் தெரிந்தன. வானவில்லின் காந்தியைக் கொண்டவையும், அந்தத் தேர்வீரர்களுக்குச் சொந்தமானவையுமான கொடிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தென்றலில் அசைந்தபடியே அவர்களின் தேர்களை அலங்கரித்தன.

சிங்கத்தைப் போலக் கடுமுகமுடைய குரங்கின் அடையாளத்தைக் தாங்கிய அர்ஜுனனின் கொடிமரமானது, அந்தப் போரில் அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. ஓ! மன்னா, முதன்மையான குரங்கைத் தாங்கியதும், பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} அந்தக் கொடிமரம் குரு படையை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

அதே போல, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்கவாலை உச்சியில் கொண்டதும், உதயச் சூரியனின் பிரகாசத்துடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வானவில்லின் காந்தியைக் கொண்டதுமான துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கொடிமரமானது, தென்றலில் மிதந்தபடியும், குரு வீரர்களில் முதன்மையானோரின் மகிழ்ச்சியைத் தூண்டியபடியும் உயரத்தில் இருப்பதை நாங்கள் கண்டோம்.

அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரமானது, தங்கத்தாலான யானை வடத்தை அடையாளமாக {கொடியாகத்} தாங்கியிருந்தது. ஓ! மன்னா, அந்தப் போரில் அஃது {அந்தக் கொடியானது} ஆகாயம் முழுமையையும் நிறைப்பதாகத் தெரிந்தது. தங்கத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கொடியானது, போரில் கர்ணனின் கொடிமரத்தில் இணைக்கப்பட்டு, காற்றால் அசைக்கப்பட்டு, அவனது தேரில் நடனமாடுவதைப் போலத் தெரிந்தது.

பாண்டவர்களின் ஆசானும், தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்த பிராமணரும், கௌதமரின் மகனுமான கிருபர், சிறந்த காளைமாடு ஒன்றைத் தம் அடையாளமாகக் {கொடியாகக்} கொண்டிருந்தார். ஓ! மன்னா, மூன்று நகரங்களை அழித்தவன் [1] தன் காளையுடன் பிரகாசிப்பதைப் போலக் காளைமாட்டுடன் கூடிய அந்த உயர் ஆன்மா {கிருபர்} பிரகாசமாகத் தெரிந்தார்.

[1] "திரிபுரம் என்பது, அசுரத்தச்சன் மயனால் கட்டப்பட்ட மூன்று நகரங்களைக் குறிப்பதாகும். எனினும், அந்த நகரங்களை உடைமையாகக் கொண்ட அசுரனின் பெயரும் திரிபுரனே ஆகும். ஹரிவம்சத்தின் இறுதியில், அந்த மூன்று நகரங்களையும், அதில் வசித்தோர் அனைவருடன் சேர்த்து மகாதேவனே {சிவனே} அழித்தான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

விருஷசேனன், {தன் தேரில் உள்ள கொடிமரத்தில்} தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மயிலைக் கொண்டிருந்தான். அது {அந்த மயில்} எப்போதும் படையின் முகப்பை அலங்கரித்துக் கரைந்து கொண்டிருப்பதைப் போல அவனது {விருஷசேனனது} கொடிமரத்தில் இருந்தது. அந்த மயிலோடு கூடிய உயர் ஆன்ம விருஷசேனனின் தேரானது, ஓ! மன்னா, ஒப்பற்ற மயிலோடு கூடியதும், தங்கத்தாலான அழகிய கலப்பை முனையோடு {கொழுவோடு} கூடியதும், நெருப்புத் தழலைப் போலத் தெரிந்ததுமான (தேவர்களின் படைத்தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} தேரைப் போல ஒளிர்ந்தது. ஓ! ஐயா, அந்த உழுமுனையானது {கலப்பை முனையானது} அவனது தேரில் பிரகாசமாகத் தெரிந்தது.

மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், தன் கொடிமர உச்சியில் அழகுடன் கூடியவளும், அனைத்து வித்துகளையும் உண்டாக்கவல்லவளுமான சோளத்தின் தலைமைத் தேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம் [2].

[2] வேறொரு பதிப்பில், "சுப்ரமண்யரின் ரதம் பிரகாசிக்கின்ற மயிலால் விளங்குவது போல, மகாத்மாவான அந்த விருஷசேனனுடைய ரதமானது அந்த மயிலினால் விளங்கியது. மத்ரதேசத்தரசனான சல்லியனுடைய த்வஜத்தின் நுனியில் ஸ்வர்ணமயமான, நிகரில்லாத, மங்கலகரமான அக்னிஜ்வாலையைப் போன்ற உழுபடைச்சால் ஒன்றைக் கண்டோம். அந்தப் படைச்சாலானது அவனுடைய ரதத்தை அடைந்து விளங்கியது. அஃது எல்லா வித்துக்களும் முளைத்ததும், அழகியதுமான படைச்சல் போல விளங்கியது" என்று இருக்கிறது.

மன்மதநாததத்தரின் பதிப்பில், "அந்த மயிலோடு கூடிய அந்தச் சிறந்த வீரனின் {விருஷசேனனின்} தேரானது அழகாகத் தெரிந்தது. மயிலால் அலங்கரிக்கப்பட்டதால், ஓ மன்னா, அது ஸ்கந்தனின் தேரைப் போலத் தோன்றியது. மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் கொடிமரத்தின் உச்சியில், ஒப்பற்றதும், அழகானதும், தங்கத்தாலானதும், நெருப்புத் தழலைப் போலத் தெரிந்ததுமான ஒரு கொழு {உழுமுனை, கலப்பை முனை} பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். அவனது தேரில் இருந்த அந்தக் கொழுவானது, அழகனைத்தையும் கொண்டவளும், அனைத்து வித்துக்களையும் உண்டாக்கவல்லவளுமான சோள தேவியின் அவதாரத்தைப் போல அழகாகத் தெரிந்தது" என்று இருக்கிறது. கங்குலியின் பதிப்புக்கும், மேற்கண்ட இரண்டு பதிப்பிற்கும் இடையில் சல்லியனின் தேர்க்கொடி வர்ணனையில் பெரும் வேறுபாடு இருக்கிறது.

சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கொடிமரத்தின் உச்சியை ஒரு வெள்ளிப் பன்றி அலங்கரித்திருந்தது. தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, வெண்மையான ஸ்படிகத்தின் காந்தியைக் கொண்டிருந்தது. தன் கொடியில் அந்த வெள்ளி அடையாளத்தைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஈடுபட்டிருந்த சூரியனைப் போலப் பிரகாசித்தான் [3].

[3] "இங்கே lohita என்றில்லாமல் alohita என்பதே சரியான வாசிப்பாகும். இங்கே Arka என்பது ஸ்படிகமே அன்றிச் சூரியனல்ல. அது வெள்ளிப் பன்றி என்பதால் சூரியனாக இருக்க முடியாது என்பது இங்கே தெளிவு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "சிந்துராஜனுடைய த்வஜத்தின் நுனியில் வெள்ளிமயமான பன்றியானது பொன்னணிகளால் அலங்கரிக்கப்பட்டு அங்காரகனுடைய {செவ்வாய் கிரகத்தின்} காந்தியைப் போன்ற காந்தியையுடையதாக நான்கு பக்கமும் பிரகாசித்தது. வெள்ளிமயமான அந்த த்வஜத்தினால் ஜயத்ரதன், முற்காலத்தில் தேவாசுர யுத்தத்தில் பூஷா என்பவன் விளங்கியதைப் போல விளங்கினான்" என்றிருக்கிறது.

மன்மதநாததத்தரின் பதிப்பில், "சிந்து மன்னனின் கொடிமரமானது வெள்ளிப் பன்றி பொறிக்கப்பட்டு ஒளிர்ந்தது; தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அஃது, உதயசூரியனின் காந்தியைக் கொண்டிருந்தது. தன் கொடிமரத்தில் உள்ள அந்தக் கொடியின் காரணமாக ஜெயத்ரதன், பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரின் பூஷனைப் போல அழகாகத் தோன்றினான்" என்று இருக்கிறது. இப்படி மூன்று பதிப்புகளும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகின்றன.

வேள்விகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த சோமதத்தன் மகனுடைய {பூரிஸ்ரவஸின்} கொடிமரமானது, வேள்வி மரத்தை {யூபத்தை} அடையாளமாகத் தாங்கியிருந்தது. அது சூரியனைப் போறோ, சந்திரனைப் போன்ற ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஓ! மன்னா, தங்கத்தாலான சோமதத்த மகனின் வேள்விமரமானது, ராஜசூயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியின் போது எழுப்பப்படும் உயரமான மரத்தைப் {யூபத்தைப்} போன்றே பிரகாசமாகத் தெரிந்தது.

ஓ! ஏகாதிபதி, சலனின் கொடிமரமானது [4], தங்கத்தாலான மயில்களால் அனைத்துப் பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரும் வெள்ளி யானையைத் தாங்கியிருந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் கொடிமரமானது, தேவமன்னனின் {இந்திரனின்} படையை அலங்கரிக்கும் பெரிய வெள்ளை யானையை {ஐராவதத்தைப்} போல உமது துருப்புகளை அலங்கரித்தது.

[4] கங்குலியின் பதிப்பில் சல்லியனின் கொடிமரம் என இரண்டாவது முறையாகக் இங்கே குறிப்பிடப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது சல்லியன் என்றே குறிப்பிடப்படுகிறது. வேறொரு பதிப்பில், "வெள்ளிமயமான சலனுடைய பெரிய யானைக் கொடியானது பக்கங்களில் ஸ்வர்ணத்தினால் சித்தரிக்கப்பட்ட அங்கங்களுள்ள மயில்களால் விளங்கியது" என்று இருக்கிறது. எனவே இது சலனாகவே இருக்கக்கூடும் என்ற ஐயத்தில் மேலே சலன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த மன்னன் துரியோதனனின் கொடிமரத்தில், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று இருந்தது. அவ்வீரனின் {துரியோதனனின்} சிறந்த தேரில் ஓ! மன்னா, ஒரு நூறு மணிகளின் கிண்கிணி ஒலியுடன் கூடிய அந்தக் கொடிமரம் இருந்தது. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, குருக்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, உயரமான அந்தக் கொடிமரத்துடன் போரில் பிரகாசமாகத் தெரிந்தான். உமது படைப்பிரிவுகளில் இந்த ஒன்பது கொடிமரங்களே [5] உயர நின்றன. அங்கே தெரிந்த பத்தாவது கொடிமரமானது, பெரும் குரங்கால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கொடிமரமே ஆகும். அந்தக் கொடிமரத்தைக் கொண்ட அர்ஜுனன், (தன் சிகரத்தில்) சுடர்மிக்க நெருப்பைக் கொண்ட இமயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.

[5] அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், விருஷசேனன், சல்லியன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், துரியோதனன் ஆகியோரின் கொடிமரங்களே இவை.

பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அர்ஜுனனைத் தடுப்பதற்காகத் தங்கள் அழகிய, பிரகாசமான, பெரிய விற்களை எடுத்துக் கொண்டனர். அதேபோல, ஓ! மன்னா, தெய்வீக சாதனைகளைச் செய்தவனான பார்த்தனும் {அர்ஜுனன்}, உமது தீய கொள்கையின் விளைவால் எதிரிகளை அழிக்கும் வில்லான தன் காண்டீவத்தை எடுத்துக் கொண்டான். உமது குற்றத்தின் காரணமாக, ஓ! மன்னா, அரசவீரர்கள் பலர் அந்தப் போரில் கொல்லப்பட்டனர். (உமது மகனின்) அழைப்பால் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்களின் ஆட்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களோடு சேர்த்து பல குதிரைகளும், பல யானைகளும் அழிந்தன.

(ஒரு புறத்தில்) துரியோதனனின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மறுபுறத்தில் அந்தப் பாண்டவர்களில் காளையும் {அர்ஜுனனும்} உரக்க முழங்கியபடி மோதலைத் தொடங்கினர். ஒன்றாகச் சேர்ந்திருந்த அந்த வீரர்கள் அனைவருடன், அச்சமற்ற வகையில் தனியாக மோதியவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தக் குந்தி மகனால் அங்கே அடையப்பட்ட சாதனை மிக அற்புதமானதாக இருந்தது. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்காக, மனிதர்களில் புலிகளான அவர்கள் அனைவரையும் வீழ்த்த விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அவ்வீரன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த போது பிரகாசமாகத் தெரிந்தான்.

ஆயிரக்கணக்கில் கணைகளை ஏவியவனும், எதிரிகளை எரிப்பவனும், மனிதர்களில் புலியுமான அந்த அர்ஜுனன், (தன் கணைமாரியின் மூலம்) அந்த வீரர்கள் அனைவரையும் மறையச் செய்தான். மனிதர்களில் புலிகளான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பங்குக்கு, அனைத்துப் பக்கங்களில் இருந்து ஏவப்பட்ட தங்கள் கணைகளின் மேகங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} மறையச் செய்தனர். குருகுலத்துக் காளையான அர்ஜுனன், மனிதர்களில் சிங்கங்களான அவர்களின் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்டு, உமது துருப்புகளால் ஆரவாரப் பேரொலி எழுப்பப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Tuesday, June 21, 2016

சஞ்சயனின் நிந்தனை! - துரோண பர்வம் பகுதி – 086

The reproach of Sanjaya! | Drona-Parva-Section-086 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : போருக்கான காரணமாகத் தன் மகனைப் பழித்த திருதராஷ்டிரனை சஞ்சயன் நிந்தித்தது; அதன் பிறகு நடந்த போரைக் குறித்து விவரிக்கத் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "என் கண்களால் சாட்சியாகக் கண்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்வேன். அமைதியாகக் கேட்பீராக. உமது தவறு பெரியது. (வயலின்) நீர் பாய்ந்து போன பிறகு, அணையானது பயனற்றுப் போவதைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இது புதிதல்ல என்பதால் கவலைப்படாதீர்.


குந்தியின் மகனான யுதிஷ்டிரனையும், உமது மகன்களையும் பகடையாட்டத்தில் இருந்து நீர் முன்னர்த் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

அதே போல, போருக்கான நேரம் வந்த போது, சினத்தில் எரிந்த இரு தரப்பையும் நீர் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

அதே போல, கீழ்ப்படியாத துரியோதனனைக் கொல்லும்படி குருக்களை நீர் முன்னர்த் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது [1].

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "கௌரவர்களின் நன்மையைக் கருதி மூர்க்கனான துரியோதனனை முந்திச் சிறைப்படுத்தியிருப்பீராகில், நீர் பெரும்புகழைப் பெற்றிருப்பீர்" என்றிருக்கிறது. கங்குலியில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலோ, "அதே போல, சீருக்கு இடம் கொடுக்காத துரியோதனனின் இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பிற குருக்களை நீர் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது" என்று இருக்கிறது.

(இச்செயல்களில் ஏதேனும் ஒன்றை நீர் செய்திருந்தாலும்), பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பிற மன்னர்கள் ஆகியோர் உமது நேர்மையற்ற புத்தியை {பிடிவாதத்தை} ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அதே போல, ஒரு தந்தையின் கடமையாகத் துரியோதனனை அறவழியில் நிறுத்தி, அதன்வழியே அவனை {துரியோதனனை} நடக்கச் செய்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

இந்தப் பூமியில் ஞானிகளில் சிறந்தவராக நீர் இருக்கிறீர். {அப்படிப்பட்ட நீர்}, நித்தியமான அறத்தைக் கைவிட்டு, துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் ஆலோசனைகளை எவ்வாறு பின்பற்றினீர். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனையோ, துரோணரையோ கூட உம்மை மதிக்கும் அளவுக்குக் கிருஷ்ணன் மதித்ததில்லை. எனினும், எப்போது மன்னரின் கடமைகளில் இருந்து நீர் வழுவினீர் என்பதை அவன் {கிருஷ்ணன்} அறிந்தானோ அப்போதிலிருந்து உம்மை {அந்த அளவுக்கு} மரியாதையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டான். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} பல்வேறு கடும் சொற்களை உமது மகன்கள் பேசியிருக்கின்றனர்.

ஓ! அரசுரிமையைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பேச்சுகளின் போது, நீர் உமது மகன்களுக்காகப் பாகுபாடு காட்டினீர். அந்த உமது பாகுபாட்டின் விளைவே உம்மை இப்போது பீடிக்கிறது. ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பரம்பரை அரசுரிமை இப்போது ஆபத்திலிருக்கிறது {சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது}. (இல்லையெனில்), பிருதையின் {குந்தியின்} மகன்களால் அடக்கப்பட்ட முழு உலகையும் இப்போது அடைவீராக [2]. குருக்கள் அனுபவிக்கும் அரசும், அவர்களின் {குருக்களின்} புகழும் பாண்டுக்களால் {பாண்டு மற்றும் பாண்டவர்களால்} அடையப்பட்டதே. பாண்டுவின் அறம்சார்ந்த மகன்களே அந்த அரசையும், புகழையும் மேலும் பெருக்கினர். எனினும், உம்முடைய தொடர்பாலும், பேராசை கொண்ட நீர் அவர்களது பரம்பரை அரசை அபகரித்துக் கொண்டதாலும், அவர்களது அந்தச் சாதனைகள் (அவர்களுக்குக்) கனியற்றவையாகின [3].

[2] "Apavrittam என்பதற்கு ஆபத்துக்குள்ளானது, சந்தேகத்திற்கிடமானது என்று பொருள் என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. அதாவது, சஞ்சயன் என்ன சொல்கிறான் என்றால் அஃது அப்படி இல்லையென்றால், பாண்டவர்களால் உமக்கு அளிக்கப்படும் முழு உலகையும் ஆளும் கசப்பை அடைய வேண்டியிருக்கும். ஒன்று பாண்டவர்கள் உமது நாட்டைப் பறித்துக் கொள்வார்கள், அல்லது உமது மகன்களைக் கொன்ற பிறகு முழுவதற்கும் உம்மையே ஆட்சியாளராக்குவார்கள். இந்த இரண்டில் எதுவும் உமக்குக் கசப்பையே தரும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். 

[3] வேறொரு பதிப்பில், "தகப்பன் பாட்டன் வழியாகக் கிடைத்திருந்த ராஜ்யத்தை நீர் சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டீர். ஏனெனில், பார்த்தர்களால் ஜயிக்கப்பட்ட பூமி முழுமையும் நீரே அடைந்தீர். முன்பு கௌரவர்களின் ராஜ்யமும், கீர்த்தியும் பாண்டுவினாலேயே தேடப்பட்டன. தர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களான பாண்டவர்களாலே மறுபடியும் அவ்விரண்டும் அதிகமாக்கப்பட்டன. இவ்வுலகில் ராஜ்யபோகத்தில் பேராசையுள்ளவரான உம்மாலே பிதாவைச் சேர்ந்த ராஜ்யத்திலிருந்து பாண்டவர்கள் விலகும்படி செய்யப்பட்டமையால், அவர்களுடைய அந்தக் காரியமானது உம்மை அடைந்து மிகவும் பயனற்றதாகிவிட்டது." என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "உமது மூதாதையரிடம் இருந்து நீரடைந்த அரசுரிமை இப்போது உமது கரங்களில் இருந்து நழுவப் போகிறது; அல்லது பிருதையின் மகன்களிடம் இருந்து அதை நீர் பெறுவீர் (பாண்டவர்கள் உமது மகன்களைக் கொன்று அவர்களிடம் இருந்து அதை நிச்சயம் பறிப்பார்கள்). குருக்களின் ஆட்சிப்பகுதிகளும், அவற்றின் புகழும் பாண்டுவால் அடையப்பட்டு, நன்னடத்தைக் கொண்ட பாண்டுவின் மகன்களால் புகழும், ஆட்சிப்பகுதிகளும் மேலும் பெருகின.  உம்முடைய தொடர்பால் அவர்களது முயற்சிகளனைத்தும் கனியற்றவையாகின. மேலும், பேராசை கொண்ட உம்மால் அவர்களது பரம்பரை அரசுரிமையையும் இழந்தனர்" என்று இருக்கிறது.

இப்போதோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய பிறகு, உமது மகன்களின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி நீர் அவர்களை நிந்திக்கிறீர். இஃது உமக்குத் தகாது. போரிடும்போது, க்ஷத்திரியர்கள் தங்கள் உயிர்களைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. உண்மையில் அந்த க்ஷத்திரியர்களில் காளைகள், பார்த்தர்களின் வியூகத்தைத் துளைத்துப் போரிடுகின்றனர். உண்மையில், கிருஷ்ணன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரால் பாதுகாக்கப்படும் அந்தப் படையுடன் கௌரவர்களைத் தவிர வேறு யார் போரிடத் துணிவர்?

அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகவும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தங்கள் ஆலோசகராகவும், சாத்யகி மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் பாதுகாவலர்களாகவும் கொண்டோரை, கௌரவர்களையும், அவர்களின் தலைமையில் பின்தொடர்வோரையும் தவிர வேறு எந்த மனித வில்லாளி எதிர்க்கத் துணிவான்? வீரத்தைக் கொண்டு, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் நட்பு மன்னர்களால் அடையத்தக்க அனைத்தையும், கௌரவர்கள் தரப்பில் உள்ள வீரர்களும் செய்கின்றனர். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அந்த மனிதர்களில் புலிகளுக்கு இடையில் நடந்த பயங்கரப் போரைக் குறித்த அனைத்தையும் இப்போது கேட்பீராக" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

திருதராஷ்டிரனின் பின்னிரக்கம்! - துரோண பர்வம் பகுதி – 085

The repentance of Dhritarashtra! | Drona-Parva-Section-085 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவின் மறைவுக்கு இரங்கி, துரியோதனனின் நடத்தைக்காக வருந்திய திருதராஷ்டிரன் அதன்பிறகு நடந்த போர்ச்செய்திகளைச் சொல்லும்படி சஞ்சயனைத் தூண்டியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அபிமன்யுவின் படுகொலைக்கு அடுத்த நாள், துயராலும் கவலையாலும் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் என்ன செய்தனர்? என் வீரர்களில் அவர்களோடு {பாண்டவர்களோடு போரிட்டவர் யாவர்? சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சாதனைகளை அறிந்தவர்களும், தீங்கைச் செய்தவர்களுமான அந்தக் கௌரவர்கள் எவ்வாறு அச்சமற்றிருந்தனர் என எனக்குச் சொல்வாயாக.


தன் மகன் கொல்லப்பட்டதன் காரணமாகத் துயரில் எரிந்து, அனைத்தையும் அழிக்க மூர்க்கமாக விரையும் காலனைப் போல வந்த அந்த மனிதர்களில் புலியை (அர்ஜுனனைப்) போரில் அவர்கள் எவ்வாறு பார்க்கத் துணிந்தனர்? குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த வீரன், தன் மகனின் மரணத்திற்காகத் துயருற்றுப் போரில் தன் பெரும் வில்லை அசைத்த போது, என் வீரர்கள் என்ன செய்தனர்?

ஓ! சஞ்சயா, துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? இன்று ஒரு பெரும் சோகம் எங்களைப் பீடித்திருக்கிறது. மகிழ்ச்சிக் குரல்களை நான் இப்போது கேட்கவில்லை. சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} வசிப்பிடத்தில் காதுகளுக்கு மிகவும் ஏற்புடைய எந்த உற்சாகக் குரல்கள் முன்பு கேட்கப்பட்டனவோ, ஐயோ, இன்று அவை கேட்கப்படவில்லையே. ஐயோ, என் மகன்களின் முகாமில் அவர்களது புகழைப் பாடும் எண்ணற்ற சூதர்கள் மற்றும் மாகதர்களின் பாடல்களும், ஆடல்களும் கேட்கப்படவில்லையே. முன்பெல்லாம் அத்தகு ஒலிகள் அடிக்கடி என் காதுகளை எட்டின. ஐயோ, அவர்கள் துயரில் மூழ்கியிருப்பதாலேயே (அவர்களின் முகாமில்) அத்தகு ஒலிகளை நான் கேட்கவில்லை.

முன்னர், ஓ! சஞ்சயா, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சோமதத்தனின் வசிப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது, மகழ்ச்சிகரமான ஒலிகளையே நான் கேட்பேன். ஐயோ, இன்று என் மகன்களின் வசிப்பிடம் துயர ஒலிகள், புலம்பல்கள் ஆகியவற்றை எதிரொலித்து, உயிரையும், சக்தியையும் கொண்ட அனைத்து ஒலிகளையும் இழந்திருப்பதால், நான் இழந்த (அறத்) தகுதிகள் எவ்வளவு? விவிம்சதி, துர்முகன், சித்திரசேனன், விகர்ணன் மற்றும் என் பிற மகன்களின் வீடுகளிலும் முன்பு நான் வழக்கமாகக் கேட்கும் ஒலிகள் கேட்கப்படவில்லையே.

என் மகன்களின் முக்கியப் புகலிடமும், துரோணரின் மகனுமான எந்தப் பெரும் வில்லாளியிடம் {அஸ்வத்தாமனிடம்}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சீடர்கள் காத்திருந்தார்களோ {பணி செய்தார்களோ}, சர்ச்சைக்குரிய விவாதங்கள் [1], பேச்சுகள், உரையாடல்கள் [2], கிளர்ச்சி தரும் பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான மகிழ்ச்சிகரமான பாடல்களில் இரவும் பகலும் எவன் இன்புறுவானோ, குருக்கள், பாண்டவர்கள், சாத்வதர்கள் ஆகியோர் பலரால் எவன் வழிபடப்படுகிறானோ, ஐயோ, ஓ சூதா {சஞ்சயா}, அந்தத் துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} வசிப்பிடத்தில் முன்பு போல ஒலிகள் கேட்கப்படவில்லையே. பெரும் எண்ணிக்கையிலான பாடகர்களும், ஆடற்கலைஞர்களும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோண மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} நெருக்கமாகக் காத்திருப்பார்களே {பணி செய்வார்களே}. ஐயோ, அவனது வசிப்பிடத்தில் அவர்களது ஒலி கேட்கப்படவில்லையே.

[1] வேறொரு பதிப்பில், இது விதண்டை என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் பொருள், தன் தரப்பைச் சாதிக்க யுக்தியைச் சொல்லாமல் பிறர் தரப்பை மட்டும் கண்டிக்கிற வாதம் என்று சொல்லப்படுகிறது.

[2] வேறொரு பதிப்பில் இது சல்லாபம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் பொருள், இருவர் தனித்துப் பேசுவது என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாலைப்பொழுதிலும், விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரின் முகாமில் எழும் அந்தப் பேரொலி, ஐயோ இப்போது அங்கே கேட்கப்படவில்லையே. கைகேயர்களின் முகாம்களில் வழக்கமாக நடனம் மற்றும் களியாட்டங்களில் ஈடுபடும் அவர்களுடைய வீரர்களின் பெரிய கைத்தடல்களும், பாடலின் பேரொலியும் இன்று கேட்கப்படவில்லையே.

சாத்திரச் சடங்குகளின் புகலிடமான சோமதத்தன் மகனிடம் {பூரிஸ்ரவசிடம்} காத்திருப்போரும் {பணி செய்வோரும்}, வேள்விகளைச் செய்யத்தக்கோருமான புரோகிதர்களின் ஒலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. விற்கயிறின் நாணொலி, வேத உரைப்பொலி, ஈட்டிகள் வாள்கள் ஆகியவற்றின் 'விஸ்' {என்ற} ஒலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகிய ஒலிகள் துரோணரின் வசிப்பிடத்தில் இடையறாமல் கேட்கப்படுமே. ஐயோ, அவ்வொலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. வழக்கமாக அங்கே எழும் பல்வேறு நாட்டுப் பாடல்களின் பெருக்கம், இசைக்கருவிகளின் பேரொலி ஆகியவை, ஐயோ, இன்று கேட்கப்படவில்லையே.

மங்காப்புகழ் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அமைதியை விரும்பியும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டும் உபப்லாவ்யத்தில் இருந்து வந்த போது, ஓ! சூதா {சஞ்சயா}, தீய துரியோதனனிடம் நான் இதைச் சொன்னேன்: "ஓ! மகனே {துரியோதனா}, வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு, பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. ஓ! மகனே, (சமாதானம் செய்து கொள்வதற்கான) நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். ஓ! துரியோதனா, என் ஆணையை மீறாதே. சமாதானம் வேண்டியும், என் நன்மைக்காகவும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் வாசுதவேனை {கிருஷ்ணனை} நீ ஒதுக்கினால், போரில் உனக்கு வெற்றி கிட்டாது" என்றேன்.

எனினும், துரியோதனனின் நன்மைக்காகப் பேசியவனும், வில்லாளிகள் அனைவரில் காளையுமான அந்தத் தாசார்ஹனைத் துரியோதனன் புறக்கணித்தான். இதன் மூலம், தனக்கு அழிவைத் தரக்கூடிய ஒன்றை அவனே தழுவி கொண்டான். காலனின் பிடியில் அகப்பட்ட அந்த எனது தீய மகன் {துரியோதனன்}, துச்சாசனன் மற்றும் கர்ணனைப் பின்பற்றி என் ஆலோசனைகளை நிராகரித்தான். பகடையாட்டத்தை நான் அங்கீகரிக்கவில்லை. விதுரன் அஃதை அங்கீகரிக்கவில்லை. ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, பீஷ்மரோ, சல்லியனோ, பூரிஸ்ரவசோ, புருமித்ரனோ, ஜயனோ, அஸ்வத்தாமனோ, கிருபரோ, துரோணரோ அஃதை அங்கீகரிக்கவில்லை. இம்மனிதர்களின் ஆலோசனைகளின்படி என் மகன் நடந்து கொண்டிருந்தால், அவன் தன் சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ்ந்திருப்பான். மகிழ்ச்சிகரமான இனிய பேச்சைத் தங்கள் சொந்தங்களுக்கும், உயர் பிறப்பாளர்களுக்கும் {நற்குலத்தில் பிறந்தோர்களுக்கும்} ஏற்புடைய வகையில் எப்போதும் பேசுபவர்களும், அனைவராலும் விரும்பப்படுபவர்களும் விவேகிகளுமான பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சியை அடையப்போவது உறுதி.

"அறத்தில் தன் கண்ணைச் செலுத்தும் ஒரு மனிதன் எங்கும் எப்போதும் மகிழ்ச்சியையே அடைவான். அப்படிப்பட்ட மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு நன்மையையும் அருளையும் வெல்வான். தேவையான வலிமையைப் பெற்றிருக்கும் பாண்டவர்கள் பாதிப் பூமியை அனுபவிக்கத் தகுந்தவர்களே. கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி (குருக்களைப் போலவே) அவர்களுக்கும் பரம்பரை உடைமையாகும். அரசுரிமையைக் கொண்ட பாண்டவர்கள் நீதியின் பாதையில் {அறவழியில்} இருந்து எப்போதும் விலகமாட்டார்கள்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, பாண்டவர்கள் யாருடைய பேச்சை எப்போதும் கேட்பார்களோ அப்படிப்பட்டவர்களாக, உதாரணத்திற்குச் சல்லியன், சோமதத்தன், உயர் ஆன்ம பீஷ்மர், துரோணர், விகர்ணன், பாஹ்லீகர், கிருபர் மற்றும் வயதால் மதிக்கத்தக்க பாரதர்களில் சிறந்தவர்களான பிறரையும் நான் என் சொந்தங்களாகக் கொண்டிருக்கிறேன். உன் சார்பாகப் பாண்டவர்களிடம் இவர்கள் பேசினால், நன்மைதரும் அந்தப் பரிந்துரைகளின் படி அவர்கள் {பாண்டவர்கள்} நிச்சயம் செயல்படுவார்கள். அல்லது இவர்களில் அவர்களின் தரைப்பைச் சார்ந்து, வேறுமாதிரியாகப் பேசுகிறவர் என எவரை நினைக்கிறாய். கிருஷ்ணன் ஒருபோதும் அறவோரின் பாதையைக் கைவிடமாட்டான். பாண்டவர்கள் அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் பேசும் அறவார்த்தைகளுக்கு அவ்வீரர்கள் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டார்கள், ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அற ஆன்மாக்கள்' என்ற இந்த வார்த்தைகளையும், ஓ! சூதா {சஞ்சயா}, இது போன்ற வார்த்தைகளையும் என் மகனிடம் பரிதாபகரமாகப் புலம்பினேன். மூடனான அவன் {துரியோதனன்} நான் சொன்னதைக் கேட்கவில்லை. இவையாவும் காலத்தின் கோலமெனவே நான் நினைக்கிறேன்.

விருகோதரன் {பீமன்}, அர்ஜுனன், விருஷ்ணி வீரனான சாத்யகி, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், வெல்லப்பட முடியாத யுதாமன்யு, தடுக்கப்படமுடியாத திருஷ்டத்யும்னன், வீழ்த்தப்படாத சிகண்டி, அஸ்மகர்கள், கேகயர்கள், சோமகர்களின் க்ஷத்ரதர்மன், சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது}, சேகிதானன், காசி ஆட்சியாளனின் மகனான விபு, திரௌபதியின் மகன்கள், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், மனிதர்களில் புலிகளான இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரும், ஆலோசனை வழங்க மதுசூதனனும் {கிருஷ்ணனும்} எங்கிருக்கிறார்களோ, அவர்களுடன் போரிட்டு உயிரோடு வாழ்வதை எதிர்பார்க்கும் எவன் இவ்வுலகில் இருக்கிறான்?

மேலும், என் எதிரிகள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துகையில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி, நான்காமவனான துச்சாசனன் ஆகியோரைத் தவிர்த்து ஐந்தாவதாக வேறு எவரையும் நான் காணாததால், அவர்களை {என் எதிரிகளைத்} தடுப்பதற்கு வேறு எவன் இருக்கிறான்? கவசம் பூண்டு, கையில் கடிவாளத்துடன் விஷ்ணுவையே தங்கள் தேரில் கொண்டவர்களும், அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகக் கொண்டவர்களும் ஒரு போதும் தோற்க முடியாது. அந்த என் புலம்பல்களைத் துரியோதனன் இப்போதும் நினைத்துப் பார்க்க மாட்டானா?

மனிதர்களில் புலியான பீஷ்மர் கொல்லப்பட்டதாக நீ சொன்னாய். தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் சொன்ன வார்த்தைகளின் கனிகளைக் கண்டு என் மகன்கள் இப்போது புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சினியின் பேரனாலும் {சாத்யகியாலும்}, அர்ஜுனனாலும் தன் படை மூழ்கடிக்கப்பட்டதைக் கண்டும், தன் தேர்களின் தட்டுகள் வெறுமையாக இருப்பதைக் கண்டும் என் மகன்கள் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். பனிக்காலத்தின் முடிவில், காற்றால் உந்தப்பட்டுப் பெருகும் காட்டுத்தீயானது, உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போலவே தனஞ்சயன் {அர்ஜுனன்} என் துருப்புகளை எரிக்கப்போகிறான்.

ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ நிறைவானவனாக இருக்கிறாய். மாலையில் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} இழைத்த பெரும் தீங்குக்குப் பிறகு நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அபிமன்யு கொல்லப்பட்ட போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? ஓ! மகனே {சஞ்சயா}, காண்டீவதாரிக்கு {அர்ஜுனனுக்குக்} பெரும் குற்றமிழைத்த என் வீரர்கள், அவனது சாதனைகளைப் போரில் தாங்க இயன்றவர்களாக இல்லை. துரியோதனனால் தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் என்ன? கர்ணனால் {தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள்} என்ன? துச்சாசனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன செய்தனர்?

ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பேராசையின் பாதையில் பயணிப்பவனும், தீய புரிதல் கொண்டவனும், கோபத்தினால் மனம் பிறழ்ந்தவனும், அரசுரிமையை இச்சிப்பவனும், மூடனும், கோபத்தால் அறிவை இழந்தவனுமான தீய துரியோதனனின் தீச்செயல்களாலேயே இந்தப் போர் என் பிள்ளைகள் அனைவரின் மேலும் விழுந்திருக்கிறது.

ஓ! சஞ்சயா, பிறகு துரியோதனனால் ஏற்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக. அவை தவறான தீர்மானங்களா? இல்லை நல்ல தீர்மானங்களா?" {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English

Tuesday, May 10, 2016

தேவர்களே ஊடுருவ முடியாத வியூகம்! - துரோண பர்வம் பகுதி – 031

Impenetrable array to the very gods! | Drona-Parva-Section-031 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : பனிரெண்டாம் நாளை தோற்றதாகக் கருதிய கௌரவ வீரர்கள்; எரிச்சலும் கோபமும் கொண்ட துரியோதனன் துரோணரிடம் பேசியது; பாண்டவர்களின் வீரர்களில் முதன்மையான ஒருவரைக் கொல்வதாகத் துரியோதனனிடம் சூளுரைத்த துரோணர்; பதிமூன்றாம் நாள் போரில் சக்கர வியூகம் அமைத்த துரோணர்; நாளின் இறுதியில் அபிமன்யு கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் சொல்லும் சஞ்சயன்; திருதராஷ்டிரன் அடைந்த துயரம்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முதலில் அளவிலா ஆற்றல் கொண்ட அர்ஜுனனால் {தாங்கள்} பிளக்கப்பட்டதாலும், யுதிஷ்டிரன் நன்கு பாதுகாக்கப்பட்டதால், துரோணர் செய்திருந்த சபதம் தோல்வி அடைந்த காரணத்தாலும் உமது வீரர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்பட்டனர். புழுதி படிந்தும் பிளந்திருந்த கவசங்களுடனுமிருந்த  அவர்கள் அனைவரும் சுற்றிலும் தங்கள் கண்களை ஆவலாகச் சுழலவிட்டனர். உறுதியான இலக்கைக் கொண்ட தங்கள் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, போரில் அவர்களால் {எதிரிகளால்} அவமதிக்கப்பட்ட அவர்கள் {கௌரவ வீரர்கள்}, துரோணரின் சம்மதத்தின் பேரில் களத்தில் இருந்து திரும்பினர். அப்படித் திரும்பிக் கொண்டிருக்கையில், உயிர்களனைத்தும் பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணற்ற தகுதிகளைப் புகழ்வதையும், அனைவரும் அர்ஜுனனிடம் கேசவன் {கிருஷ்ணன்} கொண்ட நட்பைப் பேசுவதையும் அவர்கள் கேட்டனர். சம்பவங்களின் கோர்வையை நினைவு கூர்ந்த அவர்கள், சாபத்தில் வீழ்ந்த மனிதரைப் போல முற்றான அமைதி கொண்டு அந்த இரவைக் கழித்தனர் [1].


[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, "பிராணிகள் பல்குனனுடைய அளவற்ற குணங்களைப் புகழவும், அவனிடத்திலிருக்கின்ற கிருஷ்ணனுடைய நேசமானது சொல்லப்படவும், உம்மைச் சேர்ந்தவர்க் எல்லோரும் (பிரம்மஹத்தி முதலான தோஷத்தினால்) நிந்திக்கப்பட்டவர்கள் போலத் தியானத்தில் ஊமைத்தன்மையை அடைந்தார்கள்” என்றிருக்கிறது.

அடுத்த நாள் காலையில், துரியோதனன், தங்கள் எதிரியின் செழிப்பைக் கண்டு இதய உற்சாகத்தைப் பெரிதும் இழந்து, எரிச்சலாலும், கோபத்தாலும் இந்த வார்த்தைகளைத் துரோணரிடம் சொன்னான். பேச்சில் திறமையுள்ள அந்த மன்னன் {துரியோதனன்}, எதிரி அடைந்த வெற்றியை எண்ணி சினத்தால் நிறைந்து, துருப்புகள் அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {பிராமணோத்தமரே}, உம்மால் அழிக்கப்பட வேண்டிய மனிதர்களால் இன்று நீர் எங்களைத் தாழ்த்திவிட்டீர் {கீழான நிலைக்குக் கொண்டுவந்து விட்டீர்} என்பதில் ஐயமில்லை. அடையத்தக்க தூரத்தில் யுதிஷ்டிரனைக் கொண்டிருந்தும், இன்று அவனை நீர் பிடிக்கவில்லை. போரில் உம்மால் பிடிக்கத்தக்க அந்த எதிரி, உமது பார்வையில் ஒரு முறை பட்டாலே, தேவர்களாலேயே உதவப்பட்டு, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டாலும் கூட அவன் உம்மிடம் இருந்து தப்புவது இயலாதே. மனம் நிறைந்திருந்த நீர் எனக்கு ஒரு வரத்தை அளித்தீர்; எனினும், இப்போதோ அதன் படி செயல்படாமலிருக்கிறீர். (உம்மைப் போன்ற) உன்னதர்கள், தங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவனின் நம்பிக்கைகளை ஒருபோதும் பொய்யாக்குவதில்லை" என்றான் {துரியோதனன்}.

துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} நாணிக் குறுகினார். மன்னனிடம் {துரியோதனனிடம்} அவர் {துரோணர்}, "என்னை நீ இப்படி நினைப்பது உனக்குத் தகாது. உனக்கு ஏற்புடையதைச் சாதிக்கவே நான் எப்போதும் முயல்கிறேன். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் படையைத் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களாலும் வீழ்த்த இயலாது. அண்டத்தை உண்டாக்கிய கோவிந்தன் எங்கிருக்கிறானோ, அர்ஜுனன் தலைவனாக எங்கிருக்கிறானோ, அங்கே முக்கண் மகாதேவனைத் தவிர வேறு எவனுடைய பலம் செல்லுபடியாகும்? ஓ! ஐயா {துரியோதனா}, நான் இஃதை இன்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், இது வேறுவகையிலாகாது.

இன்று நான், பாண்டவ வீரர்களில் முதன்மையான ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனைக் கொல்வேன். இன்று நான், தேவர்களாலும் ஊடுருவமுடியாத ஒரு வியூகத்தை அமைப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, எவ்வழிகளிலாவது அர்ஜுனனை களத்திலிருந்து {வெளியே} கொண்டு செல்வாயாக. அவன் அறியாததோ, போரில் அடையமுடியாததோ யாதொன்றும் இல்லை. {உலகத்தாரால்} போரைக் குறித்து {இதுவரை} அறியப்பட்ட அனைத்தையும் அவன் பல்வேறு இடங்களில் இருந்து அடைந்திருக்கிறான்" என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "துரோணர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மீண்டும் போரிடுவதற்காக அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சம்சப்தகர்கள், களத்தின் தென் பகுதிக்கு அவனை {அர்ஜுனனைக்} கொண்டு சென்றனர். பிறகு, எப்போதும் பார்க்கப்படாத, கேள்விப்படாத வகையில் அர்ஜுனனுக்கும், அவனுடைய எதிரிகளுக்கும் {சம்சப்தகர்களுக்கும்} இடையிலான அந்த மோதல் இருந்தது.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் அமைத்த வியூகமானது பிரகாசிப்பதாகத் தெரிந்தது. உண்மையில், உச்சியை அடைந்து, (கீழிருக்கும் அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வியூகமானது பார்க்கப்பட முடியாததாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யு, தன் தந்தையுடைய மூத்த அண்ணனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், போரில் ஊடுருவ முடியாத அந்தச் சக்கர வியூகத்தின் பல இடங்களைத் துளைத்தான். மிகக் கடினமான அருஞ்செயல்களைச் செய்து, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்ற அவன் {அபிமன்யு}, (இறுதியில்) ஒன்று சேர்ந்திருந்த ஆறு வீரர்களால் {ஒரே நேரத்தில்} எதிர்க்கப்பட்டான். ஓ! பூமியின் தலைவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே} இறுதியாக அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துச்சாசனன் மகனிடம் [2] பலியாகி தன் உயிரை விட்டான். இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தோம், பாண்டவர்களோ பெரும் துன்பத்தில் நிறைந்தனர். சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, நம் துருப்புகள் இரவு ஓய்வுக்காகப் பின்வாங்கப்பட்டன {திரும்ப அழைக்கப்பட்டன}" {என்றான் சஞ்சயன்} [3].

[2] இவன் பெயர் துர்மாசனன் durmashana என்று வலைத்தளங்கள் பலவற்றில் காணப்படுகிறது.

[3] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகமானவை இருக்கின்றன, அவை பின்வருமாறு, "அப்போது, ஜனமேஜயன், "போரில் விடாமுயற்சியுடையவர்களும், செயல்களாலே சிரமங்களைத் தெரிவிப்பவர்களும், கிருஷ்ணனோடு கூடியவர்களுமான பாண்டவர்கள் அனைவரும் தேவர்களாலும் அணுக முடியாதவர்கள் ஆவர். அடிக்கடி தொடர்ச்சியான உத்தம காரியங்களாலும், புத்தியினாலும், சுபாவத்தினாலும், கீர்த்தியினாலும், ஐசுவரியத்தினாலும், கிருஷ்ணனுக்கு நிகரான ஒரு மனிதன் உண்டானதுமில்லை; உண்டாகப் போவதுமில்லை. மன்னன் யுதிஷ்டிரன், சத்யம், தர்மம், தவம், தானம், பிராம்மணப் பூஜை முதலான குணங்களாலே தேகத்துடனே சொர்க்கம் அடைந்தானாம். ஊழிக்காலத்து அந்தகன், கீர்த்தியுடைய ஜமதக்னி மகனான பரசுராமர், யுத்த அரங்கத்தில் நிற்கின்ற பீமசேனன் ஆகிய மூவரும் சமானர்களாகச் சொல்லப்படுகிறார்கள். பிரதிஜ்ஞை செய்த காரியத்தை நிறைவேற்றுவதில் சாமர்த்தியமுள்ளவனும், ரணகளத்தில் காண்டீவத்தை வில்லாகக் கொண்டவனுமான பார்த்தனுக்குச் {அர்ஜுனனுக்குச்} சமமான உவமையை இப்புவியில் அறிகிறேனில்லை. நகுலனிடத்தில் அதிகமாகக் குருபக்தி, செய்யப்பட்டதையும், செய்யத்தக்கதையும் வெளியிடாமலிருத்தல், வணக்கம், மன அடக்கம், சௌந்தரியம், வல்லமை ஆகிய ஆறும் நிலைபெற்றிருந்தன. வீரனான சகதேவன் கல்வி, இனிமை, காம்பீர்யம், தைரியம், ரூபம், பராக்கிரமம் இவைகளால் அசுவினி தேவதைகளுக்கு ஒப்பானவனாவான். கிருஷ்ணனிடத்திலும், பாண்டவர்களிடத்திலும் அதிகமான எந்தக் குணங்களுண்டோ மங்களகரங்களான அந்தக் குணங்கள் அபிமன்யு ஒருவனிடத்தில் இருக்கின்றவையாகக் காணப்பட்டனவாம். பிராம்மணோத்தமரே, வல்லமையினால் யுதிஷ்டிரனுக்கும், ஒழுக்கத்தினால் கிருஷ்ணனுக்கும், செய்கையினால் பயங்கரச் செய்கையுடைய பீமசேனனுக்கும், வடிவத்தினால் மங்களகரமான பராக்கிரமத்தினால் தனஞ்சயனுக்கும், வணக்கத்தில் சகதேவனுக்கும் நகலனுக்கும் ஒப்பாயிருக்கின்றவனும், பகைவர்களால் தோல்வியடைவிக்கத்தகாதவனும், சுபத்திரையின் மகனுமாகிய {என் பாட்டன்} அபிமன்யுவைப் பற்றிய விருத்தாந்தத்தை நான் முழுதும் கேட்க விரும்புகிறேன். அவன் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?" என்று வினவ, வைசம்பாயனர் சொல்லத் தொடங்கினார். "பெரும் மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிர மன்னன், அபிமன்யு கொல்லப்பட்டதைக் கேட்டுச் சஞ்சயனைக் குறித்து (அபிமன்யுவின் விருத்தாந்தத்தை) விஸ்தாரமாக வினவினான்" என்று வைசம்பாயனர் சொன்ன பிறகு கங்குலியில் உள்ளது போலவே பின்வரும் சம்பவங்கள் தொடர்கின்றன. மேற்சொன்ன செய்திகள் கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட இதே பொருளைக் கொண்ட விவரிப்பை சஞ்சயன் சொல்வதாக அடுத்த பகுதியில் {துரோண பர்வம் பகுதி 32ல்} வருகிறது.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, இளமையை அடையாதவனும், மனிதர்களில் சிங்கத்தின் {அர்ஜுனனின்} மகனுமான அவன் (அபிமன்யு) கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் தூள் தூளாக நொறுங்குகிறது. உண்மையில், ஆட்சி உரிமையை விரும்பும் துணிச்சல்மிக்க மனிதர்கள், மனவுறுத்தல் ஏதுமின்றி ஒரு குழந்தையின் மீது ஆயுதங்களை ஏவத்தக்க வகையில் சட்டம் இயற்றுபவர்களால் {தர்மகர்த்தாக்களால்} ஏற்படுத்தப்பட்ட க்ஷத்திரியர்களின் கடமைகள் கொடூரமானவையே. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டிருந்தாலும் அச்சமற்ற வகையில் களத்தில் திரிந்த அந்தக் குழந்தையை {அபிமன்யுவை}, ஆயுதங்களில் சாதித்தவர்களான இத்தனை பல வீரர்கள் சேர்ந்து எவ்வாறு கொன்றார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! சஞ்சயா, போரில் நம் தேர் அணிவகுப்பினுள் ஊடுருவிய அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} நம் வீரர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்கும் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} படுகொலையை {வதத்தை} விரிவாகச் சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேட்பீராக. நம் படையணிகளுக்குள் ஊடுருவிய அந்த இளைஞன் {அபிமன்யு}, தன் ஆயுதங்களுடன் எவ்வாறு விளையாடினான் என்பதையும், வெற்றி பெறும் நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட நமது படையின் தடுக்கப்பட முடியாத வீரர்கள் அனைவரும் அவனால் {அபின்யுவால்} எவ்வாறு பீடிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நான் உமக்குச் சொல்கிறேன். செடிகள், மூலிகைகள், மரங்கள் ஆகியன நிறைந்த காட்டில், {காட்டுத்} தீயால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட காட்டுவாசிகள் அனைவரையும்போல, உமது படையின் வீரர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top