Showing posts with label சாத்யகி. Show all posts
Showing posts with label சாத்யகி. Show all posts

Sunday, December 11, 2016

அமைதிப்படுத்தப்பட்ட சாத்யகியும், திருஷ்டத்யும்னனும்! - துரோண பர்வம் பகுதி – 199

Satyaki and Dhristadyumna pacified! | Drona-Parva-Section-199 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னன் பேச்சைக் கேட்டுப் பாண்டவர்கள் என்ன சொன்னார்கள் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; திருஷ்டத்யும்னனுக்குச் சாத்யகியின் கோபம் நிறைந்த பதில்; பூரிஸ்ரவஸ் கொலையைக் குறித்துச் சொல்லி சாத்யகியை இகழ்ந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் கொல்ல விரைந்த சாத்யகி; சாத்யகியைப் பிடித்துக் கொண்ட பீமன்; நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்த சகாதேவன்; பெரும் முயற்சிக்குப் பிறகு அமைதியை மீட்ட கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும்…


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவர் வேதங்களை அதன் அங்கங்களோடு முறையாகக் கற்றவரோ, எவரிடம் ஆயுத அறிவியல் முழுமையும், பணிவும் குடி கொண்டிருந்ததோ, எவரது அருளால் பல முதன்மையான மனிதர்கள், தேவர்களும் அடைய முடியாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்தனரோ, அந்தச் சிறப்புமிக்க மனிதரும், பெரும் முனிவர் ஒருவரின் {பரத்வாஜரின்} மகனுமான துரோணர், ஐயோ, இழிந்தவனும், தீயவனும், குறுகிய மனம் கொண்டவனும், குருவைக் கொன்ற பாவியுமான அந்தத் திருஷ்டத்யும்னால் அனைவரின் முன்னிலையிலும் அவமதிக்கப்படும்போது, தன் கோபத்தை வெளிக்காட்ட அங்கே எந்த க்ஷத்திரியனும் இல்லையா? க்ஷத்திரிய வகைக்கு ஐயோ, கோபத்திற்கு ஐயா.(1-4) ஓ! சஞ்சயா, துரோணரின் படுகொலையைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களும், உலகில் உள்ள பிற அரச வில்லாளிகள் அனைவரும் அந்தப் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான்.(5)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குரூரச் செயலைச் செய்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும் முற்றிலும் அமைதியாக இருந்தனர்.(6) எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது சாய்ந்த பார்வைகளை வீசிய அர்ஜுனன், “ச்சீ… ச்சீ…” என்று அவனை {திருஷ்டத்யும்னனை} நிந்தித்து, கண்களில் கண்ணீர் வடிப்பவனாகவும், பெருமூச்சு விடுபவனாகவும் காணப்பட்டான்.(7) யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் - சகாதேவன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் நாணமடைந்து நின்றனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாத்யகி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(8) “இத்தகு தீய பேச்சுகளைப் பேசும் இந்த இழிந்த பாவியைத் தாமதமில்லாமல் கொல்லத்தக்க எந்த மனிதனும் இங்கே இல்லையா?(9) சண்டாளர்களில் ஒருவனைக் கண்டிக்கும் பிராமணர்களைப் போலவே, உனது பாவச் செயலுக்காகப் பாண்டவர்கள் அனைவரும் உன்னைக் கண்டிக்கின்றனர்.(10) இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்து, நேர்மையான மனிதர்கள் அனைவரின் கண்டிப்புகளையும் பெற்ற நீ, இத்தகைய மதிப்புமிக்க ஒரு சபையில் {பேசுவதற்கு} உன் உதடுகளை {வாயைத்} திறக்க வெட்கமாக இல்லையா?(11)

ஓ! வெறுக்கத்தக்க பாவியே {திருஷ்டத்யும்னனே}, நீ உன் ஆசானைக் கொல்ல முற்படுகையில் உனது நாவும், தலையும் ஏன் நூறு துண்டுகளாகச் சிதறவில்லை? அந்தப் பாவச்செயலால் நீ ஏன் வீழவில்லை?(12) இத்தகைய ஒரு பாவச் செயலைச் செய்துவிட்டு, இந்த மனிதர்களுக்கு மத்தியில் உன்னையே புகழ்ந்து கொள்ளும் நீ, பார்த்தர்கள், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரால் நிந்திக்கத்தக்கவனாகிறாய்.(13) மிகக்கொடிய அட்டூழியத்தைச் செய்துவிட்டு, அதற்கு மேலும் நீ, ஆசானிடம் இத்தகைய வெறுப்புணர்வை காட்டுகிறாயே. இதற்காக நீ எங்கள் கரங்களால் கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஒரு கணம் உன்னை உயிரோடு விட்டுவைப்பதால் கூடப் பயனேதும் கிடையாது.(14) ஓ! இழிந்தவனே {திருஷ்டத்யும்னனே}, அறம் சார்ந்த ஆசானின் தலைமயிரைப் பற்றிக் கொல்பவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?(15) ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, உன்னைப் பெற்றதால், உனக்கு முன்னோர்களில் ஏழு தலைமுறையினரும், உனது வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரும் புகழை இழந்து நரகத்தில் மூழ்கிவிட்டார்கள்.(16)

மனிதர்களில் காளையான இந்தப் பார்த்தரை {அர்ஜுனரைப்} பீஷ்மரின் கொலைக்காக நீ குற்றம் சுமத்துகிறாய். எனினும், சிறப்பு மிக்கவரான பின்னவரே {பீஷ்மரே}, தமது மரணத்தைச் சாதித்துக் கொண்டார்.(17) உண்மையைச் சொன்னால், பாவிகள் அனைவரிலும் முதன்மையான உன் உடன் பிறந்த சகோதரனே (சிகண்டியே) பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாவான். பாஞ்சால மன்னரின் மகன்களை விடப் பாவம் நிறைந்தவர்கள் இந்த உலகில் வேறு எவரும் இல்லை.(18) பீஷ்மரின் மரணத்திற்காகவே உன் தந்தை {துருபதன்} சிகண்டியைப் பெற்றார். அர்ஜுனரைப் பொறுத்தவரை, அவர் {அர்ஜுனர்} சிகண்டியைப் பாதுகாத்தார், அதே வேளையில் சிகண்டியே சிறப்புமிக்கப் பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தான்.(19) நேர்மையானவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட்ட உன்னையும், உனது சகோதரனையும் {சிகண்டியையும்} தங்களுக்கு மத்தியில் கொண்ட பாஞ்சாலர்களும், நேர்மையில் இருந்து விழுந்து, அற்பத்தனத்தின் கறைபடிந்து, நண்பர்களையும், ஆசான்களையும் வெறுப்பவர்களாக ஆகிவிட்டனர்.(20)

மீண்டும் என் முன்னிலையில் நீ பேசினால், வஜ்ரத்தைப் போன்ற பலமான என் கதாயுதத்தால் உன் தலையை நொறுக்கிவிடுவேன்.(21) பிராமணக் கொலைக்கு {பிரம்மஹத்திக்குச்} சற்றும் குறையாத குற்றத்தைச் செய்தவனும், பிராமணரைக் கொன்றவனுமான உன்னைக் கண்டு, தங்களைத் தூய்மை படுத்திக் கொள்வதற்காக மக்கள் சூரியனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.(22) ஓ! தீய நடத்தை கொண்டவனே {திருஷ்டத்யும்னனே}, பாஞ்சாலர்களில் இழிந்தவனே, முதலில் என் ஆசானைப் {அர்ஜுனரைப்} பழிப்பதற்கும், பிறகு என் ஆசானின் ஆசானைப் {துரோணரைப்} பழிப்பதற்கும் நீ வெட்கப்படவில்லையா?[1](23) நில், நிற்பாயாக. இந்த என் கதாயுதத்தின் ஓர் அடியைப் பொறுத்துக் கொள்வாயாக. நான் உன் தாக்குதல்கள் பலவற்றைப் பொறுத்துக் கொள்கிறேன்” என்றான் {சாத்யகி}.(24) அந்தச் சாத்வத வீரனால் {சாத்யகியால்} இப்படி நிந்திக்கப்பட்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கோபக்கார சாத்யகியிடம் இந்தக் கடுஞ்சொற்களைச் சிரித்துக் கொண்டே சொன்னான்.(25)

[1] “வங்க உரையைப் பொருள் கொள்ளக் கடினமாக இருக்கிறது. நான், குரோர்குருஞ்சா புயோபி Gurorguruncha bhuyopi என்று உள்ள பம்பாய் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். அதன் பொருள், “ஆசானின் ஆசான்” என்பதாகும். உண்மையில் அர்ஜுனன் சாத்யகியின் ஆசானாவான், எனவே, துரோணர் பின்னவனுடைய {சாத்யகியுடைய} ஆசானின் ஆசானாவார்” என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “என் முன்னிலையிலேயே என்னுடைய குருவையும், என் குருவுக்குக் குருவையும் மறுபடியும் நிந்திப்பவனான நீ வெட்கமடையவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்டவை போலவே இருக்கிறது.

திருஷ்டத்யும்னன் {சாத்யகியிடம்}, “ஓ! மதுகுலத்தோனே {சாத்யகியே} உன் வார்த்தைகளைக் கேட்டேன். ஆனாலும் உன்னை நான் பொறுத்துக் கொள்கிறேன். நியாயமற்ற பாவியான நீயே, நேர்மையான நீதிமான்களை நிந்திக்க விரும்புகிறாய்.(26) பொறுமையானது {மன்னிக்கும் தன்மையானது}, உலகத்தால் மெச்சப்படுகிறது. எனினும், பாவம் மன்னிக்கத் தகாததாகும். பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒருவனே {சாத்யகியே}, பொறுத்துக் கொள்பவர்களை {மன்னிக்கும் மனிதர்களை} பலமற்றவனாகக் கருதுகிறான்.(27) நடத்தையால் நீ இழிந்தவனாவாய். நீ பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனாவாய். மேலும் நீ அநீதியில் பிடிப்புள்ளவனாவாய். உன் கால் பெருவிரல் நுனியிலிருந்து முடிவரை நீ அனைத்து வகையிலும் நிந்திக்கத்தக்கவனே. {அப்படிப்பட்ட} நீயோ பிறரைப் பழிக்க {குற்றஞ்சுமத்த} விரும்புகிறாய்?(28) மீண்டும் மீண்டும் நீ தடுக்கப்பட்டாலும், பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரமற்றவனுமான பூரிஸ்ரவஸைக் கொன்ற உன் செயலைவிடப் பாவம் நிறைந்தது வேறு என்ன இருக்க முடியும்?(29) துரோணர், தமது படைகளை அணிவகுக்கச் செய்து, தெய்வீக ஆயுதங்களின் துணையுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமது ஆயுதங்களைக் கீழே வைத்ததும், நான் அவரைக் கொன்றேன். ஓ! அற்ப இதயம் கொண்டவனே, அந்தச் செயலில் முறையற்றது {பாவம்} என்ன இருக்கிறது?(30) ஓ! சாத்யகி, தவசியைப் போலப் பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், வேறு ஒருவரால் கரம் அறுக்கப்பட்டவனுமான அந்த எதிரி {பூரிஸ்ரவஸ்} களப்போரில் இருந்து விலகியபோது, அவனைக் கொன்ற ஒருவன், இத்தகைய செயலை எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?(31) உனது அந்த வீரப் பகைவன் {பூரிஸ்ரவஸ்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் காலால் உன்னை உதைத்து, பூமியில் வீசி எறிந்தான். அப்போது உன் ஆண்மையைக் காட்டி அவனை {பூரிஸ்ரவஸை} ஏன் நீ கொல்லவில்லை?(32) எனினும் பார்த்தர் {அர்ஜுனர்} துணிச்சல்மிக்கவனான சோமதத்தனின் அந்த வீரமகனை {பூரிஸ்ரவஸை} ஏற்கனவே வென்ற பிறகே நீ அவனை நியாயமற்ற முறையில் கொன்றாய்.(33)

எங்கெல்லாம் துரோணர், பாண்டவர்களின் படைகளை முறியடிக்க முயன்றாரோ அங்கல்லாம் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே நான் சென்றேன்.(34) இவ்வழியில் ஒரு சண்டாளனைப் போல நடந்து கொண்டவனும், நிந்திக்கப்படத்தக்கவனுமான நீ, இத்தகைய கடும் வார்த்தைகளால் என்னை நிந்திக்கிறாயா?(35) ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே, நீயே தீச்செயல்கள் செய்தவன்; நானல்ல. பாவம் நிறைந்த செயல்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. மீண்டும் என் மீது பழி சுமத்தாதே.(36) அமைதியாக இருப்பாயாக. இதன் பிறகு என்னிடம் எதையும் சொல்வது உனக்குத் தகாது. உதடுகளால் நான் சொல்லும் மறுமொழி இதுவே. வேறு எதையும் சொல்லாதே.(37) மடமையினால் மீண்டும் இத்தகைய கடும் வார்த்தைகளை நீ பேசினால், என் கணைகளால் உன்னை நான் யமலோகம் அனுப்புவேன்.(38) ஓ! மூடனே {சாத்யகியே}, அறத்தால் மட்டுமே ஒருவன் தன் எதிரிகளை வெல்ல முடியாது. குருக்களின் அநீதிகளையும் இப்போது கேட்பாயாக.(39)

சில காலத்திற்கு முன்பு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் (அவர்களால்) நியாயமற்ற வகையில் வஞ்சிக்கப்பட்டார். ஓ! சாத்யகி, திரௌபதியும் நியாயமற்ற வகையிலேயே தண்டிக்கப்பட்டாள்.(40) ஓ! மூடனே {சாத்யகியே}, கிருஷ்ணையுடன் {கரிய நிறம் கொண்ட திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், அவர்களிடம் இருந்த அனைத்தும் கொள்ளையடிக்கபட்டு, மிக நியாயமற்ற வகையில் நாடுகடத்தப்பட்டனர்.(41) நியாயமற்ற ஒரு செயலாலேயே மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} நம்மிடம் இருந்து எதிரியால் {அவர்களிடம்} இழுக்கப்பட்டான். நியாயமற்ற ஒரு செயலாலயே சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} கொல்லப்பட்டான்.(42) இந்தத் தரப்பிலோ, நியாயமற்ற ஒரு செயலாலேயே குருக்களின் பாட்டன் பீஷ்மர் கொல்லப்பட்டார். பூரிஸ்ரவஸும் கூட, நியாயங்களை அறிந்தவனான உனது நியாயமற்ற ஒரு செயலாலேயே கொல்லப்பட்டான்.(43) இப்படியே இந்தப் போரில் எதிரிகளும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் செயல்பட்டுள்ளனர். துணிவு கொண்டோரும், அறநெறி அறிந்தோருமாகிய அவர்கள் அனைவரும், ஓ! சாத்வதா {சாத்யகி}, வெற்றியை ஈட்டுவதற்காக இவ்வாறே செயல்பட்டுள்ளனர்.(44) உயர்ந்த அறநெறியை உறுதி செய்வது மிகக் கடினமானதாகும். அதேபோல, ஒழுக்கக்கேட்டை {அறநெறியற்ற செயல்பாட்டை} புரிந்து கொள்வதும் மிகக் கடினமானதாகும். உன் தந்தைமாரின் வீட்டிற்குத் திரும்பாமல் இப்போது கௌரவர்களுடன் போரிடுவாயாக” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(45)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(திருஷ்டத்யும்னனின் உதடுகளில் இருந்து வெளி வந்த) கடுமை நிறைந்த இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்டவனும், அருளப்பட்டவனுமான சாத்யகி, {கோபத்தால்} தலையில் இருந்து உள்ளங்கால் வரை நடுங்கத் தொடங்கினான்.(46) சினத்தால் நிறைந்த அவனது கண்கள் தாமிர வண்ணத்தை ஏற்றன. தன் வில்லைத் தனது தேரில் வைத்த அவன் {சாத்யகி}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டான்.(47) பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்த அவன் {சாத்யகி}, பெரும் கோபத்தோடு, “நான் உன்னிடம் கடுமையாகப் பேச மாட்டேன். ஆனால், கொல்லத்தக்கவனான உன்னைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(48) வலிமைமிக்கச் சாத்யகி, கோபத்தாலும், பழிவாங்கும் விருப்பத்தாலும் தன்னையே போன்றவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி, யமனைப் போலச் செல்வதைக் கண்ட வலிமைமிக்கப் பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} தூண்டுதலின் பேரில், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துத் தன் கரங்களால் அவனைப் {சாத்யகியைப்} பிடித்துக் கொண்டான்.(49,50) பெரும் கோபத்தில் விரைந்தவனும், பெரும் பலம் கொண்டனுமான சாத்யகி, தன்னைப் பின்னே இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகனையும் {பீமனையும்} பலவந்தமாக இழுத்துக் கொண்டே ஐந்து எட்டுகள் முன்னேறினான்.(51) அப்போது தன் பாதத்தை உறுதியாக ஊன்றிய பீமன், ஆறாவது எட்டில் அந்தச் சினி குலத்துக் காளையை {சாத்யகியை} நிறுத்தினான்.(52)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து கீழே குதித்த சகாதேவன், பீமனின் வலிய கரங்களுக்குள், உறுதியாக அகப்பட்டிருந்த சாத்யகியிடம், இந்த இனிமையான வார்த்தைகளில்,(53) “ஓ! மனிதர்களில் புலியே {சாத்யகியே}, ஓ! மதுகுலத்தோனே {சாத்யகியே}, விருஷ்ணிகளோடு கூடிய அந்தகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரை விட, அன்புக்குரிய வேறு நண்பர்கள் எங்களுக்கு இல்லை.(54) அதே போல அந்தகர்களும், விருஷ்ணிகளும், குறிப்பாகக் கிருஷ்ணரும், எங்களைவிட அன்புக்குரிய வேறு நண்பர்களைக் கொண்டிருக்க முடியாது.(55) ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, அதே போலப் பாஞ்சாலர்கள், கடல்களுக்கு மத்தியில் உள்ள மொத்த உலகில் தேடினாலும், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் விட அன்புக்குரிய வேறு நண்பர்களை அவர்களால் காண முடியாது.(56) நீ இந்த இளவரசனுக்கு எப்படிப்பட்ட நண்பனோ; இவனும் உனக்கு அதே போன்ற நண்பனே. நாங்கள் உங்களுக்கு எவ்வாறோ, அவ்வாறே நீங்களும் எங்களுக்கு {நண்பர்களாக} இருக்கிறீர்கள்.(57) கடமைகள் அனைத்தையும் அறிந்த நீ, இப்போது நண்பர்களுக்கான கடமையை நினைவுகூர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} இலக்காகக் கொண்ட இந்த உனது கோபத்தை விடுவாயாக. ஓ! சிநி குலத்தில் முதன்மையானவனே {சாத்யகியே} அமைதியடைவாயாக.(58) பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்துக் கொள்வாயாக {மன்னிப்பாயாக}; அதே போலப் பிருஷதன் மகனும் உன்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். நாங்களும் பொறுமையைக் கடைப்பிடிப்போம். பொறுமையைவிடச் சிறந்தது வேறு எது இருக்கிறது?” என்று கேட்டான் {சகாதேவன்}.(59)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரன் இவ்வாறு சகாதேவனால் தணிவடையச் செய்யப்படுகையில், பாஞ்சால மன்னனின் மகன் {திருஷ்டத்யும்னன்} சிரித்துக் கொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(60) “ஓ! பீமரே, போரில் தன் ஆற்றலில் செருக்குள்ள சிநியின் பேரனை {சாத்யகியை} விடுவீராக. ஓ! குந்தியின் மகனே {பீமரே}, அவனது {சாத்யகியின்} போராசையையும், சினத்தையும் என் கூரிய கணைகளால் தணித்து, அவனது உயிரை நான் எடுக்கும் வரை, மலைகளைத் தாக்கும் காற்றைப் போல அவன் {சாத்யகி} என்னிடம் வரட்டும்.(61,62) அதோ கௌரவர்கள் வருகிறார்கள். (சாத்யகியைக் கொன்ற பிறகு) பாண்டவர்களின் இந்தப் பெரும்பணியை நான் சாதிப்பேன்.(63) அல்லது, போரில் எதிரிகள் அனைவரையும் பல்குனர் {அர்ஜுனர்} தடுக்கட்டும். என்னைப் பொறுத்தவரை, நான் இவனது {சாத்யகியின்} தலையை வீழ்த்துவேன்.(64) போரில் கரமற்ற பூரிஸ்ரவஸைப் போல என்னை இவன் நினைத்துக் கொள்கிறான். அவனை விடுவீராக. ஒன்று நான் அவனைக் {சாத்யகியைக்} கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(65)

பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வலிமைமிக்கவனும், பீமனின் உறுதியான பிடிக்குள் இருந்தவனுமான சாத்யகி, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு {கோபத்தால்} நடுங்கத் தொடங்கினான்.(66) பெரும் வலிமையும், பலம் நிறைந்த கரங்களையும் கொண்ட அவர்கள் இருவரும், காளைகள் இரண்டைப் போல முழங்கத் தொடங்கினர். அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும் பெருமுயற்சி செய்து, அவ்வீரர்களை அமைதிப்படுத்துவதில் வென்றனர். சினத்தால் இரத்த சிவப்பாகக் கண்கள் சிவந்திருந்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரையும் அமைதிப்படுத்தியதும், (பாண்டவப் படையின்) க்ஷத்திரியர்களில் முக்கியமானோர் அனைவரும் எதிரிப்படையின் போர்வீரர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்” என்றான் {சஞ்சயன்}.(67,68)
----------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 199-ல் உள்ள சுலோகங்கள் : 68

ஆங்கிலத்தில் | In English

Wednesday, November 30, 2016

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 192

Satyaki rescued Dhrishtadyumna! | Drona-Parva-Section-192 | Mahabharata In Tamil

(துரோணவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : துரோணர் அழைத்தும், தோன்றாமல் போன தெய்வீக ஆயுதங்கள்; துரோணரின் ஆயுதங்கள் தீர்ந்து போனது; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான கடும் மோதல்; திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி; சாத்யகியின் வீரத்தை மெச்சிய அர்ஜுனன்; சாத்யகியின் ஆற்றலை இரு படைகளும் புகழ்ந்ததாகச் சொன்ன சஞ்சயன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பெருங்கவலையில் மூழ்கியிருப்பதையும், துயரால் கிட்டத்தட்ட உணர்வுகளை இழந்திருப்பதையும் கண்டவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி விரைந்து சென்றான்.(1) ஒரு பெரும் வேள்வியில், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனின் {அக்னியின்} மூலம், மனிதர்களின் ஆட்சியாளனான துருபதனால் அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} துரோணரின் அழிவுக்காகவே பெறப்பட்டான்.(2) துரோணரைக் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, வெற்றியைத் தரவல்லதும், உறுதிமிக்கதும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதும், பெரும் பலத்துடன் கூடிய நாண்கயிற்றைக் கொண்டதும், மீற முடியாததும், தெய்வீகமானதுமான வில்லொன்றை எடுத்தான். அவன் {திருஷ்டத்யும்னன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், நெருப்பின் காந்தியைக் கொண்டதுமான கடுங்கணை ஒன்றை அதில் பொருத்தினான்.


நெருப்பின் கடுந்தழல்களுக்கு ஒப்பானதும், அவனது வட்டமான வில்லுக்குள் அடங்கி இருந்ததுமான அந்தக் கணையானது, பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் உள்ள {பரிவேஷத்துடன் கூடிய} பெரும் காந்தியுடைய கூதிர் காலச் சூரியனுக்கு ஒப்பாக இருந்தது.(3-5) அந்தச் சுடர்மிக்க வில்லானது பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} பலத்துடன் வளைக்கப்படுவதைக் கண்ட துருப்புகள், (உலகின்) இறுதி நேரம் வந்துவிட்டது என்றே கருதினர்.(6) அந்தக் கணை தன்னை நோக்கிக் குறிவைக்கப்படுவதைக் கண்ட அந்த வீரப் பரத்வாஜ மகன் {துரோணர்}, தன் உடலின் இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்தார்.(7) அந்தக் கணையைக் கலங்கடிப்பதற்காக ஆசான் {துரோணர்} கவனமாகத் தயாரானார். எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மா கொண்டவரின் {துரோணரின்}ஆயுதங்கள், அவரது உத்தரவுக்குப் பிறகும் தோன்றாமல் போயின[1].(8)

[1] “அனைத்து தெய்வீக ஆயுதங்களும் தங்களை இருப்பு அழைக்கத் தெரிந்தவனின் உத்தரவுக்கேற்பத் தோன்றும் உயிர் கொண்டவையே ஆகும். எனினும், வழக்கமான சூத்திரங்களின் படி இருப்புக்கு அழைக்கப்பட்டாலும், மரணத்திற்கான நேரம் வந்த அந்த மனிதரை அவை கைவிட்டன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

நான்கு நாட்கள் மற்றும் இரவுகளாக அவர் இடையறாமல் தமது ஆயுதங்களை ஏவிக்கொண்டிருந்தாலும், அவை தீர்ந்துவிடவில்லை. எனினும், அந்த ஐந்தாம் நாளின் மூன்றாம் பகுதியில் அவரது ஆயுதங்கள் தீர்ந்தன.(9) தன் கணைகள் தீர்ந்து போனதைக் கண்டும், தமது மகனின் {அஸ்வத்தாமனின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டும், தன் உத்தரவுக்கு ஏற்பத் தோன்ற வேண்டிய தெய்வீக ஆயுதங்களின் விருப்பமின்மையின் காரணமாகவும்,(10) முனிவர்களின் வார்த்தைகளில் உந்தப்பட்டும் அவர் {துரோணர்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பினார். பெரும் சக்தியால் நிறைந்திருந்தாலும், அவரால் முன்பு போலப் போரிட முடியவில்லை.(11) பிறகு, அங்கிரஸ் முன்பு தமக்குக் கொடுத்திருந்த மற்றொரு தெய்வீக வில்லையும், பிராமணனின் சாபத்திற்கு ஒப்பான சில குறிப்பிட்ட கணைகளையும் எடுத்துக் கொண்ட அவர், திருஷ்டத்யும்னனுடன் போரிடுவதைத் தொடர்ந்தார்.(12) அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} அடர்த்தியான கணை மாரியால் மறைத்த அவர், சினத்தால் நிறைந்து, தமது கோபக்கார எதிரியைச் {திருஷ்டத்யும்னனை} சிதைத்தார்.(13) அவர் {துரோணர்} தன் கூரிய கணைகளைக் கொண்டு அந்த இளவரசனின், கணைகள், கொடிமரம் மற்றும் வில் ஆகியவற்றை நூறு துண்டுகளாக அறுத்தார். பிறகு அவர் {துரோணர்} தன் எதிராளியின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியை வீழ்த்தினார்.(14)

அப்போது திருஷ்டத்யும்னன், புன்னகைத்தபடியே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒரு கூரிய கணையால் துரோணரின் நடுமார்பைத் துளைத்தான்.(15) அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, அம்மோதலில் தன்னிலையை இழந்த அந்த வலிமைமிக்க வில்லாளி, பிறகு, அகன்ற தலை கொண்ட கூரிய கணை {பல்லம்} ஒன்றால் மீண்டும் திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தார்.(16) உண்மையில் அந்த வெல்லப்பட முடியாத துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் காதாயுதம் மற்றும் வாளைத் தவிர அவன் {திருஷ்டத்யும்னன்} கொண்டிருந்த ஆயுதம் மற்றும் விற்கள் அனைத்தையும் அறுத்தார்.(17) சினத்தால் நிறைந்த அவர் {துரோணர்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, எந்த எதிரியின் உயிரையும் எடுக்க வல்லவையான ஒன்பது கூரிய கணைகளால் கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் துளைத்தார்.(18)

அப்போது அளக்க முடியாத ஆன்மா {தைரியம்} கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தன் தேரின் குதிரைகளோடு தன் எதிரியின் குதிரைகளைக் கலக்கச் செய்தான்.(19) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சிவப்பு நிறம் கொண்டவையும், புறாக்களின் நிறத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகள் இப்படி ஒன்றோடொன்று கலந்தது மிக அழகாகத் தெரிந்தது.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் இப்படி ஒன்றோடொன்று கலந்த அந்தக் குதிரைகள் மழைக்காலங்களில் மின்னலின் சக்தியூட்டப்பட்டு முழங்கும் மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(21) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த இருபிறப்பாளர் {பிராமணரான துரோணர்}, திருஷ்டத்யும்னனுடைய தேரின் ஏர்க்கால் இணைப்புகளையும், சக்கர இணைப்புகளையும், தேரின் (பிற) இணைப்புகளையும் அறுத்தார்.(22)

தனது வில்லை இழந்து, தேரற்றவனாக, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், பெரும் துயரத்தில் விழுந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான்.(23) சினத்தால் நிறைந்தவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், அந்தக் கதாயுதம் தன் மீது வீசப்படத் தயாராக இருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கூரிய கணைகளால் அஃதை அறுத்தார்.(24) துரோணரின் கணைகளால் தன் கதாயுதம் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த மனிதர்களில் புலி (பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}), குறையற்ற ஒரு வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(25) அந்தச் சூழ்நிலையில், உயர் ஆன்மப் போர்வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுவதில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஐயமறத் தீர்மானமாக இருந்தான்.(26) சில நேரங்களில் தேர்க்கூட்டில் பதுங்கியும், சிலநேரங்களில் தன் தேரின் ஏர்க்கால்களில் நின்றபடியும் இருந்த அந்த இளவரசன், தன் வாளை உயர்த்தியபடியும், பிரகாசமான தன் கேடயத்தைச் சுழற்றியபடியும் திரிந்து கொண்டிருந்தான்[2].(27) வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மடமையினால் ஒரு கடினமான சாதனையை அடைய விரும்பி, அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மார்பைத் துளைக்க எண்ணினான்.(28) அவன் {திருஷ்டத்யும்னன்}, சில நேரங்களில் நுகத்தடியிலும், சில நேரங்களில் துரோணருடைய சிவப்பு குதிரைகளின் இடுப்புக்குக் கீழும் இருந்தான். அவனது இந்த நகர்வுகளை {இயக்கங்களைத்} துருப்புகள் அனைத்தும் உயர்வாகப் பாராட்டின.(29) உண்மையில், அவன் நுகத்தடியின் கட்டுகளுக்கு மத்தியிலோ, அந்தச் சிவப்புக் குதிரைகளுக்குப் பின்புறமோ இருக்கையில், அவனைத் தாக்க எந்த வாய்ப்பையும் துரோணர் காணவில்லை. இவை யாவும் காண்பதற்கு மிக அற்புதமானவையாக இருந்தன.(30)

[2] வேறொரு பதிப்பில், “அவ்வாறு கத்தியையும் கேடகத்தையுங் கையிலெடுக்கின்ற பாஞ்சால ராஜகுமாரன் மகாத்மாவும் ஆசார்ய முக்கியருமான துரோணருடைய வதத்திற்கு ஸமயம் வந்ததென்று ஸம்சயமற்று நன்றாக எண்ணினான். அவன் கத்தியையும், தேஜஸுள்ள கேடகத்தையுங் கையிலெடுத்துத் தன் ரதத்தினுடைய ஏர்க்கால்வழியாக ரதமத்தியிலிருக்கின்ற துரோணரிடம் சென்றான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 26 மற்றும் 27ம் சுலோகங்கள், “இந்தச் சூழ்நிலையில் பாஞ்சால இளவரசன், சிறப்புமிக்கப் பெரும் வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பினான் என்பதில் ஐயமில்லை. பிறகு தன் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்து, அந்தத் தேரின் ஏர்க்காலில் பயணித்தபடியே தன் வாளையும், பிரகாசமான கேடயத்தையும் உயர்த்திக் கொண்டு, தமது தேரில் அமர்ந்திருந்த பின்னவரை {துரோணரை} அணுக முயன்றான்” என்றிருக்கிறது.

அந்தப் போரில் துரோணர் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் இயக்கங்களும், இறைச்சித் துண்டு ஒன்றிற்காக ஆகாயத்தில் திரியும் ஒரு பருந்துக்கு ஒப்பானவையாக இருந்தன.(31) அப்போது துரோணர், ஓர் ஈட்டியின் மூலமாகத் (தமக்குச் சொந்தமான) சிவப்புக் குதிரைகளைத் தாக்கிவிடாதவாறு, தன் எதிராளியின் வெண்குதிரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் துளைத்தார்[3].(32) திருஷ்டத்யும்னனுடைய அந்தக் குதிரைகள் உயிரையிழந்து பூமியில் விழுந்தன. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருடைய சிவப்புக் குதிரைகள், திருஷ்டத்யும்னனுடைய தேரில் சிக்கியிருந்த நிலையில் இருந்து விடுபட்டன.(33) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் தன் குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போராளிகளில் முதன்மையானவனுமான பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(34) அந்த வாள்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரை இழந்தாலும், தன் வாளை எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வினதையின் மகன் (கருடன்) ஒரு பாம்பின் மீது வேகமாகப் பாய்வதைப் போலத் துரோணரை நோக்கிப் பாய்ந்தான்.(35)

[3] இங்கே பம்பாய்ப் பதிப்பைப் பின்பற்றியிருப்பதாகக் கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “துரோணர், சிவப்பான குதிரைகளை விட்டுவிட்டுத் திருஷ்டத்யும்னனுடைய புறா நிறமுள்ள குதிரைகளெல்லாவற்றையும் தாழை மடல் போன்ற முனையுள்ள சக்தியினால் ஒவ்வொன்றாகப் பிளந்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அதன்பின்னர், பலமிக்கத் துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, தன் எதிராளியுடைய நீல நிறக் குதிரைகளை ஒரு சக்திவாய்ந்த கணையால் ஒன்றன்பின் ஒன்றாகக் கொன்றார்” என்றிருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அத்தருணத்தில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பழங்காலத்தில் ஹிரண்யகசிபுவைக் கொல்ல விரும்பிய விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருந்தான்.(36) மேலும் அவன் {திருஷ்டத்யும்னன்} பல்வேறு பரிணாமங்களைச் செய்தான். உண்மையில் அந்தப் பிருஷதன் மகன், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, நன்கு அறியப்பட்டவையும், பல்வேறு வகைகளிலான இருபத்தோரு நகர்வுகளையும் {இயக்கங்களையும்}[4] களத்தில் திரிந்தபடியே வெளிக்காட்டினான்.(37) வாள்தரித்துக் கையில் கேடயத்துடன் கூடிய அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் வாளை உயரச் சுழற்றி {பிராந்தம்}, பக்கத்தூண்டுதல்கள் செய்து {உத்ப்ராந்தம்}, முன்நகர்ந்து விரைந்து {ஆவித்தம்}, பக்கவாட்டில் ஓடி {ஆப்லுதம்}, உயரக் குதித்து {ப்ரஸ்ருதம்}, தன் எதிராளிகளின் பக்கங்களை {விலாப்புறங்களைத்} தாக்கி {ஸ்ருதம்}, பின்புறமாக விலகி {பரிவ்ருத்தம்}, எதிரியை நெருங்கியும் {நிவ்ருத்த சம்பாதம்} மற்றும் அவர்களைக் கடுமையாக அழுத்தியபடியும் {சமுதீர்ணம்} திரிந்து கொண்டிருந்தான். அவற்றை நன்றாகப் பயின்ற பிறகு, அவன் {திருஷ்டத்யும்னன்}, பாரதம், கௌசிகம், சாத்வதம் என்ற பரிமாணங்களையும் காட்டியபடியே துரோணருக்கு அழிவை உண்டாக்குவதற்காக அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான் [5].

[4] வாள்போரின் இருபத்தோரு முறைகள்:

[5] வேறொரு பதிப்பில், “அந்தப் பார்ஷதன் கத்தியையுங் கேடகத்தையுங் கையிலெடுத்துக் கொண்டு 1.பிராந்தம், 2.உத்ப்ராந்தம், 3.ஆவித்தம், 4.ஆப்லுதம், 5.ப்ரஸ்ருதம், 6.ஸ்ருதம், 7.பரிவ்ருத்தம், 8.நிவ்ருத்த ஸம்பாதம், 9.ஸமுதீர்ணம், என்கிற மார்க்கங்களைக் காண்பித்தான். அவன் யுத்தத்தில் துரோணரைக் கொல வேண்டும் என்கிற எண்ணத்துடன் கைத்தேர்ச்சியினால் 1.பாரதம், 2.கௌசிகம், 3.ஸாத்வதம் என்கிற (கத்தி சுழற்றும்) வகைகளையுங் காண்பித்துக் கொண்டு சஞ்சரித்தான்” என்றிருக்கிறது.

கையில் வாளுடனும், கேடயத்துடனும் களத்தில் திரிந்து கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் அந்த அழகிய பரிணாமங்களைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மேலும் அங்கு இருந்த தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அப்போது மறுபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், அந்தப் போரின் நெருக்கத்தில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே, திருஷ்டத்யும்னனின் வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கேடயத்தையும் அறுத்தார். மிக அருகில் இருந்து போரிட்ட அந்தத் துரோணர் ஏவிய கணைகள் {வைஸ்திகங்கள்}, ஒரு முழம் அளவு நீளத்திற்கே இருந்தன[6].(38-42) அத்தகு கணைகள் நெருங்கிய போரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சரத்வான் மகன் (கிருபர்), பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோரைத் தவிர அவ்வகையிலான கணைகள் வேறு எவரிடமும் இல்லை.(43) அத்தகு கணைகளைப் பிரத்யும்னன், யுயுதானன் {சாத்யகி}, அபிமன்யு ஆகியோரும் வைத்திருந்தனர்.

[6] வேறொரு பதிப்பில், “நெருங்கி நின்று செய்யும் போரில் ஸமீபத்திலுள்ள பகைவர்களை நன்றாக அடிக்கும் திறமைவாய்ந்த பன்னிரண்டங்குல நீளமுள்ள “வைஸ்திகம்” என்னும் பாணங்கள் துரோணரிட்ம உள்ளன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பிறகு அந்த ஆசான் {துரோணர்}, தம் சொந்த மகனைப் {அஸ்வத்தாமனைப்} போன்ற தமது அந்தச் சீடனைக் {திருஷ்டத்யும்னனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகம் கொண்ட வலிமையான கணையொன்றைத் தன் வில்லின் நாணில் பொருத்தினார். எனினும், உமது மகனும் {துரியோதனனும்}, உயர் ஆன்மக் கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணையைப் பத்து கணைகளால் வெட்டிய சாத்யகி, துரோணருக்கு அடிபணியும் தருவாயில் இருந்த திருஷ்டத்யும்னனைக் காத்தான்.(44-46) அப்போது கேசவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (குரு போர்வீரர்களின்) தேர்த்தடங்களில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவனும், துரோணர், கர்ணன் மற்றும் கிருபரின் கணைகள் தாக்கும் தொலைவில் இருந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியைக் கண்டனர். “நன்று, நன்று” என்று சொன்ன அவர்கள் இருவரும், அந்தப் போர்வீரர்கள் அனைவரின் தெய்வீக ஆயுதங்களையும் இப்படி அழித்துக் கொண்டிருந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகியை உரக்கப் பாராட்டினர். பிறகு கேசவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} குருக்களை நோக்கி விரைந்தனர்.(47-49)

கிருஷ்ணனிடம் பேசிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மது குலத்தைத் தழைக்க வைப்பவனும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, என்னையும், இரட்டையரையும் {நகுல-சகாதேவரையும்}, பீமரையும், மன்னர் யுதிஷ்டிரரையும் மகிழச் செய்யும் வகையில், ஆசான் மற்றும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(50-51) விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவனான சாத்யகி, பயிற்சியால் அடைந்த திறனுடனும், செருக்கில்லாமலும் போரில் திரிந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(52) போரில் வெல்லப்பட முடியாத அவனைக் {சாத்யகியைக்} கண்டு இந்தத் துருப்புகள் அனைத்தும், (வானிலிருக்கும்) சித்தர்களும் ஆச்சரியத்தால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவனைப் {சாத்யகியைப்} புகழ்கின்றனர்” என்றான் {அர்ஜுனன்}. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இருபடைகளைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், அந்தச் சாத்வத வீரனுடைய {சாத்யகியுடைய} சாதனைகளின் விளைவாக அவனைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(53)
--------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 192-ல் உள்ள சுலோகங்கள்: 53


ஆங்கிலத்தில் | In English

Saturday, November 26, 2016

சாத்யகி துரியோதன நட்பு! - துரோண பர்வம் பகுதி – 190

The Friendship of Satyaki and Duryodhana! | Drona-Parva-Section-189 | Mahabharata In Tamil

(துரோணவத பர்வம் – 07)

பதிவின் சுருக்கம் : துச்சாசனனை வென்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட கிருதவர்மனும், அவனது மூன்று தம்பியரும்; துரோணரை நோக்கிச் சென்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் காக்க விரைந்த துரியோதனன்; துரியோதனனை நோக்கி விரைந்த சாத்யகி; சாத்யகியிடம் பேசிய துரியோதனன், தன்னைத்தானே பழித்துக் கொண்டது; சாத்யகியின் பதில்; துரியோதனனைப் பாதுகாக்க விரைந்த கர்ணன்; தேர்வீரர்களைக் காக்க தன் போர்வீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களும், குதிரைகள், யானைகள் ஆகியவையும் பயங்கரமாகக் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனுடன்  துச்சாசனன் மோதினான்.(1) தன் தங்கத் தேரில் ஏறிவந்தவனும், துச்சாசனனின் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்டவனும், கோபத்துடன் கூடியவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துச்சாசனனின்} குதிரைகள் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} கணைகளால் மறைக்கப்பட்டதும், கொடியுடனும், சாரதியுடனும் கூடிய துச்சாசனனின் தேரானது விரைவில் கண்ணுக்குப் புலப்படாததாகியது.(3) அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்க அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} முன்பு நிற்க இயலாதவனானான்.(4) தன் கணைகளின் மூலம் துச்சாசனனைப் புறமுதுகிடச் செய்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மேலும் தன் கணைகளை இறைத்தபடியே அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.(5)


அந்த நேரத்தில், ஹிருதிகன் மகனான கிருதவர்மன், தன் தம்பிகள் மூன்று பேருடன் சேர்ந்து காட்சியில் தோன்றி, திருஷ்டத்யும்னனை எதிர்க்க முயன்றான்.(6) எனினும், மனிதர்களில் காளையரான இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), சுடர்மிக்க நெருப்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்து சென்று, அவனைப் பாதுகாக்கத் தொடங்கினர்.(7) பிறகு வலிமையுடன் கூடிய அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சினத்தால் தூண்டப்பட்டு, மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(8) தூய ஆன்மாவும், தூய நடத்தையும் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, நேர்மையான வழிமுறைகளில் போரிட்டனர்.(9) களங்கமற்ற குலத்தில் தோன்றியவர்களும், களங்கமற்ற செயல்கள் மற்றும் பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள், சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரோடொருவர் நேர்மையாகப் போரிட்டனர்.(10)

அந்தப் போரில் நியாயமற்றதென்று ஏதுமில்லை, மேலும் நியாயமற்றதாகக் கருதப்பட்ட ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவுமில்லை. முள்பதித்த கணைகளையோ {கர்ணிகளையோ}, நாளீகங்கள் என்று அழைக்கப்பட்டவற்றையோ, நஞ்சூட்டப்பட்டவற்றையோ {லிப்தகங்களோ}, கொம்புகளால் செய்யபட்ட தலைகளைக் கொண்டவையோ {பஸ்திகமங்களையோ}, கூரிய பல தலைகள் கொண்டவற்றையோ {சூசிகளையோ, கபிசங்களையோ}, காளைகள் மற்றும் யானைகளின் எலும்புகளாலானவையோ {சூளிகளையோ}, இரு தலைகள் கொண்டவையோ {பலிசங்களையோ}, துருப்பிடித்த தலை கொண்டவையோ {யமிகளையோ}, நேராகச் செல்லாதவையோ {பாசகங்களையோ}, என இவற்றில் எதையும் அவர்கள் பயன்படுத்தவில்லை[1].(11,12) புகழையும், நேர்மையாகப் போரிடுவதால் கிடைக்கும் பேரருள் உலகங்களையும் வெல்ல விரும்பிய அவர்கள் யாவரும் எளிமையான, நியாயமான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.(13) உமது படையின் அந்த நான்கு போர்வீரர்களுக்கும் {கிருதவர்மன், அவனது மூன்று தம்பியர் ஆகியோருக்கும்}, பாண்டவத்தரப்பின் அந்த மூன்று பேருக்கும் {திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, நியாயமற்ற எதையும் கொண்டிருக்கவிடினும் மிகப் பயங்கரமானதாகவே இருந்தது[2].(14)

[1] "இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கணைகள் யாவும் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தவல்லவையும், எளிதில் பிடுங்கப்பட முடியாதவையுமாகும். நேராகச் செல்லாமல் கோணலாகச் செல்லக்கூடிய கணைகளைப் பொறுத்தவரை, போராளிகளால் அவற்றை எளிதில் கலங்கடிக்க முடியாது என்பதாலும், அவை எங்கே பாயும் என்பதை யாராலும் அறிய முடியாது என்பதாலும் அவை கண்டிக்கப்படுகின்றன" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[2] வேறொரு பதிப்பில், "எல்லா வீரர்களும் நல்ல யுத்தத்தினாலே பரலோகங்களையும், கீர்த்தியையும் எண்ணங்கொண்டவர்களாக நேர்மையும், பரிசுத்தமுமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். உம்முடைய நான்கு யுத்தவீரர்களுக்கும், அந்த மூன்று பாண்டவர்களோடு அப்பொழுது எல்லாத் தோஷங்களற்றதும் கைகலந்ததுமான யுத்தம் நடந்தது" என்றிருக்கிறது.

அப்போது, ஆயுதப் பயன்பாட்டில் மிகுந்த வேகம் கொண்ட திருஷ்டத்யும்னன், துணிச்சல்மிக்கவர்களான உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இரட்டையரால் (நகுலனாலும், சகாதேவனாலும்) தடுக்கப்படுவதைக் கண்டு துரோணரை நோக்கிச் சென்றான்.(15) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தடுக்கப்பட்ட அந்த நான்கு போர்வீரர்களும், (தங்கள் வழியில் நிற்கும்) இரு மலைகளைத் தாக்கும் காற்றைப் போல முன்னவர்களுடன் மோதினார்கள்.(16) பெரும் தேர்வீரர்களான அந்த இரட்டையரில் ஒவ்வொருவரும், இரண்டு எதிராளிகளுடன் போரிட்டனர். அதே வேளையில், திருஷ்டத்யும்னன் துரோணரின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(17) வெல்லப்பட முடியாதவனான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரை எதிர்த்துச் செல்வதையும், (தன் படையின்) நான்கு வீரர்கள் இரட்டையருடன் போரிடுவதையும் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரனிடம்}, குருதியைக் குடிக்கும் கணைமாரியை இறைத்தபடியே அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். இதைக் கண்ட சாத்யகி, குரு மன்னனை {துரியோதனனை} வேகமாக அணுகினான்.(18,19) குரு மற்றும் மது குலங்களின் வழித்தோன்றல்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி, போரில் ஒருவரையொருவர் தாக்க விரும்பினர்.(20) குழந்தைப் பருவத்தில் ஒருவரோடு ஒருவர் நடந்து கொண்ட விதங்களை மனதில் நினைத்து, அதைக் குறித்து மகிழ்ச்சியாகச் சிந்தித்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அவர்கள் மீண்டும் மீண்டும் புன்னகைத்தனர்.(21)

தன் நடத்தையை (மனதில்) பழித்துக் கொண்ட மன்னன் துரியோதனன், எப்போதும் தனது அன்புக்குரிய நண்பனான சாத்யகியிடம்,(22) "ஓ! நண்பா, கோபத்திற்கு ஐயோ!, பழிவுணர்ச்சிக்கு ஐயோ! {கோபத்தையும், பழி உணர்ச்சியையும் நிந்திக்க வேண்டும்}. நீ என் மீது உன் ஆயுதங்களைக் குறிவைப்பதாலும், நான் உன் மீது குறி வைப்பதாலும், ஓ! சிநி குலத்துக் காளையே {சாத்யகி}, க்ஷத்திரியத் தொழிலுக்கு ஐயோ!, வலிமை மற்றும் ஆற்றலுக்கும் ஐயோ! அந்நாட்களில் நீ எனக்கு உயிரினும் அன்புக்குரியவனாக இருந்தாய், நானும் உனக்கு அவ்வாறே இருந்தேன்.(23,24) ஐயோ, குழந்தைப் பருவத்தில் நீயும், நானும் நடந்து கொண்ட விதங்களும், செய்த செயல்களும் என் நினைவில் இருக்கின்றன. அவையாவும் போர்க்களத்தில் ஒன்றுமில்லாதவை ஆகினவே.(25) ஐயோ, ஓ !சாத்வத குலத்தோனே, இங்கே கோபம் மற்றும் பேராசையால் உந்தப்பட்டு, இன்று நாம் ஒருவரோடு ஒருவர் போரிட இருக்கிறோமே" என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அவனிடம் {துரியோதனனிடம்}, சில கூரிய கணைகளை எடுத்துக் கொண்டே புன்னகைத்தவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனுமான சாத்யகி, "ஓ! இளவரசே {துரியோதனா}, முன்னர் நாம் ஒன்றாகக் கூடி விளையாடிய இடங்களைப் போல, ஓ! இளவரசே, இது சபையோ, நமது ஆசானின் வசிப்பிடமோ அல்ல" என்றான்.(26,27) துரியோதனன், "ஓ! சிநி குலத்தோனே {சாத்யகியே}, நம் குழந்தைப் பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் எங்கே போயின? ஐயோ, இப்போதைய இந்தப் போரானது நம் மீது எவ்வாறு விழுந்தது? காலத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட முடியாதது என்பதாகவே தெரிகிறது.(28) (நாம் உந்தப்பட்டிருப்பதைப் போல) செல்வத்தின் மீது கொண்ட ஆசை என்ன பயனைத் தரப்போகிறது? எவ்வளவுதான் நாம் செல்வத்தைக் கொண்டிருந்தாலும், செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலேயே போரிடுவதற்கு நாம் இப்போது ஒன்று கூடியிருக்கிறோம்" என்றான்.{துரியோதனன்}.(29)

சஞ்சயன் சொன்னான், "இவ்வாறு சொன்ன மன்னன் துரியோதனனிடம் சாத்யகி, "இதுவே க்ஷத்திரியத் தொழில், அவர்கள் தங்கள் ஆசானுடன் கூடப் போரிட வேண்டியிருக்கிறது.(30) நான் உனது அன்புக்குரியவனாக இருந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, தாமதமேதும் செய்யாமல் என்னைக் கொல்வாயாக. ஓ! பாரத் குலத்தின் காளையே, உன் மூலமாக நான் நல்லோரின் உலகங்களை அடைவேன்.(31) உன் வலிமை மற்றும் ஆற்றல் அனைத்தையும் தாமதியாமல் வெளிப்படுத்துவாயாக. நண்பர்களுக்கிடையேயான இந்தப் பெரும் துயரைக் காண நான் விரும்பவில்லை" என்றான் {சாத்யகி}.(32)

இவ்வாறு மறுமொழி கூறிய சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதிக்கும்படி அச்சமற்ற வகையில் துரியோதனனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(33) அவன் {சாத்யகி} முன்னேறிவருவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} அவனை எதிர்கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன், அந்தச் சிநி குலத்தோன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(34) பிறகு, குரு மற்றும் மது குலங்களின் சிங்கங்களான அவர்களுக்கு இடையில், யானைக்கும், சிங்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதலுக்கு ஒப்பான ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(35)

அப்போது கோபத்தால் நிறைந்த துரியோதனன், தன் வில்லை முற்று முழுதாக வளைத்து, கூரிய கணைகளை ஏவி, வெல்லப்பட முடியாத சாத்யகியைத் துளைத்தான்.(36) சாத்யகியும், குரு இளவரசனை {துரியோதனனை} அந்தப் போரில் ஐம்பது கூரிய கணைகளால் விரைவில் துளைத்து, மீண்டும் இருபதாலும், பிறகு மீண்டும் பத்து கணைகளாலும் துளைத்தான்.(37) பிறகு அம்மோதலில் உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா, புன்னகைத்துக் கொண்டே, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து, முப்பது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான்.(38) பிறகு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தை} ஏவிய அவன் {துரியோதனன்}, கணை பொருத்தப்பட்டிருந்த சாத்யகியின் வில்லை இரண்டாக அறுத்தான். பெரும் கரநளினம் கொண்ட பின்னவன் {சாத்யகி} மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, உமது மகனின் மீது கணை மாரியை ஏவினான். துரியோதனனைக் கொல்லச் சென்ற அந்தக் கணைகளின் சரத்தைப் பின்னவன் {துரியோதனன்},(39,40) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் உரக்க முழங்கச் செய்யும்படி துண்டுகளாக வெட்டினான். பெரும் வேகத்தைக் கொண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் ஊறவைத்தவையும், முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று கணைகளால் சாத்யகியைப் பீடித்தான்.

அப்போது, துரியோதனனின் கணைகள் யாவற்றையும், அவற்றுடன் சேர்த்துக் கணை பொருத்தப்பட்ட அவனது {துரியோதனனின்} வில்லையும் சாத்யகி வேகமாக வெட்டினான்.(41,42) பிறகு அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தன் எதிராளியின் மீது கணைமாரியைப் பொழிந்தான். சாத்யகியால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த துரியோதனன், ஓ! மன்னா, பெரும் துயரத்துடன் மற்றொரு தேரில் அடைக்கலம் தேடினான். சிறிது நேரம் இளைப்பாறி புத்துணர்வை அடைந்த உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் சாத்யகியை எதிர்த்துச் சென்று,(43,44) பின்னவனுடைய தேரின் மீது கணைமாரியை ஏவினான். ஓ! மன்னா, சாத்யகியோ சிரித்துக் கொண்டே, துரியோதனனின் தேரின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இடையறாமல் ஏவினான். இருவரின் கணைகளும் ஆகாயத்தில் ஒன்றோடொன்று கலந்தன. இப்படி ஏவப்பட்ட அந்தக் கணைகளின் அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பாய்ந்ததன் விளைவால், பெரும் காட்டை எரிக்கும்போது நெருப்பினால் உண்டாகும் ஒலியைப் போன்றே அங்கே பேரொலி எழுந்தது. இருவராலும் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமியானது அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(45-47) ஆகாயமும் அப்படியே நிறைந்தது.

தேர்வீரர்களில் முதன்மையான அந்த மதுகுலத்து வீரன் {சாத்யகி}, துரியோதனனை விட வலிமைமிக்கவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், (48) உமது மகனை மீட்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான். எனினும், வலிமைமிக்கப் பீமசேனனால் கர்ணனின் அம்முயற்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(49) எனவே, அவன் கர்ணனை எதிர்த்து வேகமாகமாகச் சென்று, எண்ணற்ற கணைகளை ஏவினான். பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் மிக எளிதாக வெட்டிய கர்ணன்,(50) தன் கணைகளால் பீமனின் வில், கணைகள் ஆகியவற்றையும் மற்றும் அவனது சாரதியையும் வெட்டினான். பாண்டுவின் மகனான பீமன், சினத்தால் நிறைந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு,(51) தன் எதிராளியின் வில், கொடிமரம் மற்றும் சாரதியை அம்மோதலில் நொறுக்கினான். அந்த வலிமைமிக்கப் பீமன், கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றையும் நொறுக்கினான்.(52) எனினும் கர்ணன், ஒரு சக்கரம் உடைந்த அந்தத் தேரிலேயே மலைகளின் அரசனை (மேருவைப்) போல அசையாமல் நின்றான். ஒரு சக்கரத்தை மட்டுமே கொண்ட அவனது அழகிய தேரானது, ஒரு சக்கரத்தையே உடைய சூரியனின் தேர் ஏழு தெய்வீகக் குதிரைகளால் இழுக்கப்படுவதைப் போல அவனது குதிரைகளால் இழுக்கப்பட்டது. பீமசேனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாத கர்ணன், பல்வேறு வகைகளிலான கணைகளையும், பிற ஆயுதங்களையும் அம்மோதலில் அபரிமிதமாகப் பயன்படுத்தியபடியே பின்னவனுடன் {பீமனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான். பீமசேனனும், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான்.(53-55)

அந்தப் போரானது இயல்பையடைந்து குழம்பியபோது, அந்தத் தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யப் போர்வீரர்களில் முதன்மையானோர் யாவரிடமும்,(56) “யாவர் நமக்கு உயிரோ, யாவர் நமக்குத் தலைவர்களோ, யாவர் நம்மில் பெரும்பலம் கொண்டவர்களோ, அப்படிப்பட்ட மனிதர்களில் காளையர் அனைவரும், தார்தராஷ்டிரர்களிடம் போர்புரிகின்றனர்.(57) உணர்வுகளை இழந்து மலைப்படைந்தவர்களைப் போல நீங்கள் ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என் படையின் அந்தத் தேர்வீரர்கள் போரிடும் இடத்திற்குச் செல்வீராக.(58) வெற்றி அடைவது, அல்லது கொல்லப்படுவது ஆகியவற்றால் நீங்கள் விரும்பிய இலக்குகளை அடைவீர்கள் என்பதால், உங்கள் அச்சங்களை விரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொள்வீராக (போரில் ஈடுபடுவீராக).(59) நீங்கள் வெற்றியாளர்கள் என நிரூபித்தால், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளை நீங்கள் செய்யலாம். மறுபுறம் நீங்கள் கொல்லப்பட்டாலோ, தேவர்களுக்கு இணையானவர்களாகி, அருள் உலகங்கள் பலவற்றை நீங்கள் வெல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(60)

இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கவர்களும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவர்களுமான அந்த வீரத் தேர்வீரர்கள், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்து போரில் ஈடுபட்டனர்.(61) அப்போது ஒரு புறத்தில இருந்து பாஞ்சாலர்கள் எண்ணற்ற கணைகளால் துரோணரைத் தாக்கினர், அதே வேளையில் பீமசேனனின் தலைமையிலான பிறர் மற்றொரு புறத்தில் இருந்து அவரைத் தடுத்தனர்.(62) பாண்டவர்கள் தங்களுக்கு மத்தியில், நேர்மையற்ற மனம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான மூவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் பீமசேனனும், இரட்டையரும் (நகுலனும், சகாதேவனும்) ஆவர் [3]. இவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(63) “ஓ! அர்ஜுனா, வேகமாக விரைந்து சென்று துரோணரின் அருகில் உள்ள குருக்களை விரட்டுவாயாக. ஆசானின் {துரோணரின்} பாதுகாவலர்களை அவர் இழந்தால், பாஞ்சாலர்களால் அவரை எளிதில் கொல்ல முடியும்” என்று உரக்கச் சொன்னார்கள்.(64) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கௌரவர்களை எதிர்த்து திடீரென விரைந்தான், அதே வேளையில் திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் துரோணரை எதிர்த்து விரைந்தனர். உண்மையில், (துரோணரின் தலைமையிலான) அந்த ஐந்தாம் நாளில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரப் போராளிகள் கலங்கடிக்கப்பட்டு, பெரும் வேகத்துடன் (அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்}) நொறுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(65)

[3] வேறொரு பதிப்பில், "ஒழுங்கில்லாதவர்களும், மகாரதர்களுமான பீமன், நகுலன், ஸஹதேவன் என்கிற மூன்று பாண்டு புத்திரர்கள் இருந்தார்களே அவர்கள் தனஞ்சயனைக் குறித்து" என்றிருக்கிறது.
------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 190-ல் உள்ள சுலோகங்கள் :65 

ஆங்கிலத்தில் | In English

Monday, November 14, 2016

உறக்கமற்ற கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 182

The sleepless Krishna! | Drona-Parva-Section-182 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மீது அந்த மரண ஈட்டியை கர்ணன் ஏன் முன்பே ஏவவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; கிருஷ்ணனின் கொள்கை உறுதியே அதற்குக் காரணம் எனச் சொன்ன சஞ்சயன்; சிறு எதிரிக்கு எதிராக அந்த ஈட்டியைப் பயன்படுத்திய கர்ணன் மற்றும் துரியோதனனின் மடமையால் துயருற்ற திருதராஷ்டிரன்; மரண ஈட்டியை ஏவ கௌரவர்கள் இரவில் தீர்மானித்திருந்தாலும், காலையில் அதை மறந்தனர் என்பதைச் சொன்ன சஞ்சயன்; இதே கேள்வியைக் கிருஷ்ணனிடம் கேட்ட சாத்யகி; கிருஷ்ணனின் பதில்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நிச்சயம் ஒருவரைக் கொல்லவல்ல ஓர் ஈட்டியை அந்தச் சூதன் மகன் {கர்ணன்} கொண்டிருந்தபோது, பிறர் அனைவரையும் விட்டுவிட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏன் அவன் அஃதை ஏவவில்லை?(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது?(2) போரிட அழைக்கப்பட்டால், அந்த அறைகூவலைத் தான் ஒருபோதும் மறுப்பதில்லை என்ற அளவுக்கு அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். எனவே, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பல்குனனை நிச்சயம் போருக்கு அழைத்திருக்க வேண்டும்.(3)


ஓ! சஞ்சயா, விருஷன் {கர்ணன்}, அந்தப் பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} தனிப்போரில் ஈடுபட்டாலும், சக்ரனால் {இந்திரனால்} தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} அவனை {அர்ஜுனனை} ஏன் கொல்லவில்லை என்பதை எனக்குச் சொல்வயாக.(4) என் மகன் {துரியோதனன்}, நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள் ஆகிய இரண்டும் அற்றவன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொல்லாத பாவி {துரியோதனன்}, தொடர்ச்சியாக எதிரியால் கலங்கடிக்கப்படுகிறான். அப்படியிருக்கையில், தன் எதிரிகளை அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(5) உண்மையில், அத்தகு வலிமைகொண்டதும், வெற்றியைத் தரவல்லதுமான அந்த ஈட்டி, ஐயோ, கடோத்கசன் மூலம் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பலனற்றதாகச் செய்யப்பட்டதே.(6) உண்மையில், கை முடமான ஒரு முடவனின் கரத்தில் உள்ள கனி {பழம்} பலமிக்கவனால் பறிக்கப்படுவதைப் போலவே, கர்ணனின் கரத்தில் இருந்து அது {அந்த ஈட்டி} பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே அந்த மரண ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனால் கனியற்றதாகச் செய்யப்பட்டது.(7)

பன்றிக்கும் நாய்க்கும் இடையிலான சண்டையில் அவ்விரண்டும் இறந்து போன பிறகு, வேடனே ஆதாயத்தை அடைவதைப் போல, ஓ! கற்றவனே {சஞ்சயா}, கர்ணனுக்கும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போரில் ஆதாயமடைந்தத்து வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று நான் நினைக்கிறேன்.(8) போரில் கடோத்கசன் கர்ணனைக் கொன்றால், அது பாண்டவர்களுக்குப் பெரும் ஆதாயத்தைக் கொடுக்கும். மறுபுறம், கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், கர்ணனின் ஈட்டி {சக்தி ஆயுதம்} இழக்கப்படுவதன் விளைவால் அதுவும் அவர்களுக்கே பெரும் ஆதாயத்தையே கொடுக்கும். பெரும் ஞானம் கொண்டவனும், மனிதர்களில் சிங்கமுமான அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மைக்கு ஏற்புடையதைச் செய்ய இவ்வழியில் சிந்தித்து, போரில் கர்ணனால் கடோத்கசன் கொல்லப்படும்படி செய்தான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(9,10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் அடைய விரும்பிய சாதனையை அறிந்து கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணன், கர்ணனின் கரங்களில் இருந்து வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், நாம் நிச்சயம் வெற்றியை அடைந்திருப்போம்.(13)

உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, யோகியரின் தலைவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், தன் குதிரைகள், கொடிமரம், தேர் ஆகியவற்றோடு கூடிய அவன் {அர்ஜுனன்} போரில் அழிவை அடைந்திருப்பான்.(14) பல்வேறு வழிகளில் காக்கப்பட்டு, கிருஷ்ணனின் நல்ல துணையுடன் கூடிய அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை அணுகி அவர்களை வென்று வருகிறான்.(15) உண்மையில், கிருஷ்ணனே பார்த்தனை {அர்ஜுனனை} அந்த மரண ஈட்டியில் இருந்து பாதுகாத்தான், இல்லையெனில், மரத்தை அழிக்கும் மின்னலை {இடியைப்} போல அவ்வாயுதம் {அந்த சக்தி ஆயுதம்} குந்தியின் மகனை {அர்ஜுனனை} அழித்திருக்கும்” {என்றான் சஞ்சயன்}.(16)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகன் {துரியோதனன்}, சச்சரவில் விருப்பம் கொண்டவனாவான். அவனது ஆலோசகர்கள், மூடர்களாகவே இருக்கிறார்கள். அவனது {துரியோதனனது} ஞானமும் வீணானதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, அர்ஜுனனின் நிச்சய மரணத்திற்கான இந்த உறுதியான வழிமுறைகள் கலங்கடிக்கப்பட்டிருக்கின்றன.(17) ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை?(18) ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பெரும் ஞானம் கொண்ட நீயும் இந்தப் பெரும்பொருளை {சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்துதல் என்ற நோக்கத்தைக்} கர்ணனுக்கு நினைவூட்டாமல் ஏன் மறந்தாய்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(19)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசசன் ஆகியோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது. (நாங்கள் கர்ணனிடம்), “ஓ! கர்ணா, பிற போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. பிறகு நாம் பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் நம் அடிமைகளாகக் கொள்ளும் தலைவர்களாவோம்.(31) அல்லது, பார்த்தன் {அர்ஜுனன்} வீழ்ந்த பிறகு, விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டு மகன்களில் ஒருவரை (அவனுடைய {அர்ஜுனனுடைய} இடத்தில் நிறுத்திப் போரிட) நியமித்தானென்றால், அந்தக் கிருஷ்ணனே கொல்லப்பட வேண்டும்.(22)

கிருஷ்ணனே பாண்டவர்களின் ஆணிவேராவான். பார்த்தன் அதனில் {அந்த ஆணி வேரில்} வளர்ந்த மரம் போன்றவனாவான். பிருதையின் {குந்தியின்} பிற மகன்கள் அதன் கிளைகளாவர், அதே வேளையில் பாஞ்சாலர்கள் அதன் இலைகள் என்று அழைக்கப்படலாம்.(23) பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளனர்; கிருஷ்ணனையே தங்கள் வலிமையாகவும், கிருஷ்ணனையே தங்கள் தலைவனாகவும் அவர்கள் கொண்டுள்ளனர். உண்மையில், நட்சத்திரக்கூட்டங்களுக்கு ஒரு சந்திரனைப் போல, கிருஷ்ணனே அவர்களது மைய ஆதாரமாக இருக்கிறான். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, இலைகள், கிளைகள், மரம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, எங்கும், எக்காலத்திலும் கிருஷ்ணனையே பாண்டவர்களின் ஆணிவேர் என்று அறிந்து கொள்வாயாக” என்று {கர்ணனிடம் நாங்கள்} சொன்னோம்.(25)

உண்மையில், கர்ணன், யாதவர்களை மகிழ்விக்கும் அந்தத் தசார்ஹ குலத்தோனை {கிருஷ்ணனைக்} கொன்றிருந்தால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள் காடுகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த உலகமும் உமது மேலாதிக்கத்தைக் கொண்டதாக நிச்சயம் ஆகியிருக்கும்.(27) தேவர்களின் தலைவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான அந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைக்} குறித்த இத்தகு தீர்மானத்துடனேயே நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்தோம். எனினும், போரின் போது நாங்கள் எங்கள் தீர்மானத்தை மறந்தோம்.(28)

கேசவனே {கிருஷ்ணனே} குந்தியின் மகனான அர்ஜுனனை எப்போதும் பாதுகாக்கிறான். அவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனைப் போரில் ஒரு போதும் சூதன் மகன் {கர்ணன்} முன்பு நிறுத்தவில்லை [1].(29) உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான்?(31) நன்றாகச் சிந்தித்தால், கையில் சக்கரம் தாங்கிய வீரனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வெல்ல இயன்ற எவனும் மூவுலகிலும் இல்லை என்பதையே நான் காண்கிறேன்”.(32)

[1], [2] துரோண பர்வம் பகுதி 144க்கு இக்கருத்து முரணாக உள்ளது. அர்ஜுனனும் கர்ணனும் அப்போது மோதிக் கொண்டனர். அப்போது அர்ஜுனனின் கணையில் இருந்து அஸ்வத்தாமனே கர்ணனை காத்தான். அதைச் சொன்னதே சஞ்சயன்தான். அப்போது ஜெயத்ரதனைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு அர்ஜுனன் சென்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் தானாக முன் வந்து கர்ணன் முன்பு அர்ஜுனனை நிறுத்தவில்லை என்பது உண்மையே. கடோத்கசனின் வதத்தை நிறைவேற்றும் வரையில் கர்ணன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கிருஷ்ணன் கருதியிருக்கலாம் என்ற கோணமும் இதில் மறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தேர்வீரர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, பெரும் தேர்வீரனான கர்ணனைக் குறித்து, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, அளவில்லா சக்தி கொண்ட அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைப்} பல்குனர் {அர்ஜுனர்} மீது ஏவ வேண்டும் என்பதே கர்ணனின் உறுதியான தீர்மானமாகும். எனினும், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அஃதை ஏன் அவர் {அர்ஜுனர்} மீது ஏவவில்லை” என்று கேட்டான்.(34)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் - சாத்யகியிடம்}, “துச்சாசனன், கர்ணன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அவர்களின் தலைமையில் நின்ற துரியோதனன் ஆகியோர் அடிக்கடி (இதைக் குறித்துக் கர்ணனிடம் பேசி),(35) “ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! போரில் அளவிலா ஆற்றலைக் கொண்டவனே, ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, எப்போதும் ராதையின் மகனை {கர்ணனை} மலைக்கச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அவன் {கர்ணன்}, வெண்குதிரைகள் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} மீது அந்த ஈட்டியை வீசவில்லை.(40)

[3] “நெருப்பே தேவர்களின் வாயாகும். நெருப்பில்லாத தேவர்கள் வாயற்றவர்களாக ஆவார்கள். இப்படியே நீலகண்டர் விளக்குகிறார்” என இங்கே கங்குலி குறிப்பிடுகிறார்.

ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்திற்கு ஏதுவான வழிமுறைகளைக் கலங்கடிக்காதவரை {என் விழிகளில்} உறக்கத்தையோ, என் இதயத்தில் மகிழ்ச்சியையோ நான் கொள்ளவில்லை.(41) எனவே, கடோத்கசனின் மூலம் அந்த ஈட்டி பயனற்றதானதைக் கண்ட பிறகே, ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, மரணத்தின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} இன்று மீட்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.(42) போரில் பீபத்சுவுடைய {அர்ஜுனனுடைய} பாதுகாப்பின் அளவுக்கு என் தந்தை, என் தாய், நீங்கள் {யாதவர்கள்}, என் சகோதரர்கள் ஆகியோரையும், ஏன் என் உயிரையே கூடத் தகுந்ததாக நான் கருதவில்லை.(43)

மூவுலகங்களின் அரசுரிமையை விட மதிப்புமிக்க ஏதாவது இருந்தாலும் கூட, ஓ! சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ! யுயுதானா {சாத்யகி}, இந்த மகிழ்ச்சிப் போக்கு எனதானது {இப்படி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறேன்}.(45) இதற்காகவே கர்ணனோடு போரிட நான் அந்த ராட்சசனை {கடோத்கசனை} அனுப்பினேன். இரவில் கர்ணனோடு போரிட்டு தாக்குப்பிடிக்கவல்லவன் {கடோத்கசனைத் தவிர வேறு} எவனும் இருக்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நன்மையிலும், அவனுக்கு ஏற்புடையதிலும் எப்போதும் அர்ப்பணிப்புள்ள அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியிடம் இப்படியே பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(47)
----------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 182-ல் உள்ள மொத்த சுலோகங்கள்:  47


ஆங்கிலத்தில் | In English

Thursday, October 27, 2016

கௌரவப்படையை முறியடித்த மூவர்! - துரோண பர்வம் பகுதி – 171

The Trio that routed the Kaurava host! | Drona-Parva-Section-171 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : துரியோதனனைப் புறமுதுகிடச் செய்த சாத்யகி; தன்னுடன் மோதிய எதிரிகளை முறியடித்த சாத்யகி; சகுனியைத் தேரிழக்கச் செய்த அர்ஜுனன்; கௌரவப் படையை கொன்றழித்த அர்ஜுனன்; துரோணரின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன், துரோணரைத் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய திருஷ்டத்யும்னன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, எளிதில் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களும், உமது படையைச் சேர்ந்தவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும், ({சாத்யகியின்} சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாமல் யுயுதானனின் {சாத்யகியின்} தேரை எதிர்த்து கோபத்துடன் சென்றனர்.(1) அவர்கள், {ஆயுதங்களால்} நன்கு தரிக்கப்பட்டவையும், தங்கம் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் ஏறி, குதிரைப் படை மற்றும் யானைப்படை ஆகியவற்றின் துணையுடன் சென்று அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(2) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த வீரனை {சாத்யகியை} அறைகூவியழைத்து சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(3) மதுகுலத்தோனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பிய அந்தப் பெரும் வீரர்கள், வெல்லப்படமுடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் மீது தங்கள் கூர்முனை கணைகளைப் பொழிந்தனர்.(4)


தன்னை நோக்கி இப்படி வேகமாக வந்து கொண்டிருந்த அவர்களைக் கண்டவனும், எதிரிப்படைகளைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} பல கணைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஏவினான்.(5) வீரனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகி, நேரான தன் கடுங்கணைகளால் பலரின் தலைகளைத் துண்டித்தான்.(6) மேலும் அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பல யானைகளின் துதிக்கைகளையும், பல குதிரைகளின் கழுத்துகளையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்கள் பலரின் கரங்கள் ஆகியவற்றையும் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டினான்.(7) விழுந்து கிடந்த வெண்சாமரங்கள் மற்றும் வெண்குடைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர்க்களம், ஓ! பாரதரே, கிட்டத்தட்ட நிறைந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தைப் போல விளங்கியது.(8) யுயுதானனால் {சாத்யகியால்} போரில் இப்படிக் கொல்லப்பட்ட படையின் ஓலமானது, {நரகத்தில்) பிசாசுகளின் அலறலைப் போலப் பேரொலியாக இருந்தது.(9) அந்த ஆரவாரப் பேரொலியால் பூமி நிறைந்ததால், அந்த இரவானது மேலும் கொடூரமானதாகவும், மேலும் பயங்கரமானதாகவும் ஆனது.(10)

தன் படையானது, யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, பிளக்கப்படுவதைக் கண்டும், அந்த நள்ளிரவில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும்,(11) வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, தன் தேரோட்டியிடம் மீண்டும் மீண்டும், "இந்த ஆரவாரம் எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக" என்றான்.(12) பிறகு, உறுதிமிக்க வில்லாளியும், களைப்பினை அறியாதவனும், கரங்களில் பெரும் நளினம் கொண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மன்னன் துரியோதனன், யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்.(13) மாதவன் {சாத்யகி}, தன் வில்லை முழுமையாக வளைத்து, குருதி குடிக்கும் கணைகள் பனிரெண்டால் துரியோதனனைத் துளைத்தான்.(14) இப்படி யுயுதானனின் கணைகளால் முதலில் பீடிக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பத்துக் கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(15) அதே வேளையில் பாஞ்சாலர்களுக்கும், உமது துருப்புகள் அனைத்திற்கும் இடையில் நடந்த போர் மிக அற்புமாகக் காட்சியளித்தது.(16)

அப்போது, சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனை} எண்பது {80} கணைகளால் மார்பில் துளைத்தான்.(17) பிறகு அவன் வேறு பிற கணைகளால் துரியோதனனின் குதிரைகளை யமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {சாத்யகி}, விரைவாகத் தனது எதிராளியின் {துரியோதனனின்} சாரதியைத் தேரில் இருந்து வீழ்த்தினான்.(18) உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டே சாத்யகியின் தேரை நோக்கி பல கூரிய கணைகளை ஏவினான்.(19) எனினும், பெருங்கர நளினத்தை வெளிப்படுத்திய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனால் ஏவப்பட்ட அந்த ஐம்பது கணைகளையும் வெட்டினான்.(20) பிறகு மாதவன் {சாத்யகி}, அம்மோதலில் திடீரென ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} உறுதிமிக்க வில்லை, அதன் கைப்பிடியில் அறுத்தான்.(21) தன் தேர், வில் ஆகியவற்றை இழந்தவனும், பலமிக்க மனிதர்களின் ஆட்சியாளனுமான அவன் {துரியோதனன்}, கிருதவர்மனின் பிரகாசமிக்கத் தேரில் விரைவாக ஏறினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பின்வாங்கியதும்,  அந்த நள்ளிரவில் சிநியின் பேரன் {சாத்யகி}, உமது படையைப் பீடித்து முறியடித்தான்.(23)

அதே வேளையில் சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களாலும், பல்லாயிரம் யானைகளாலும், பல்லாயிரம் குதிரைகளாலும் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு, தீர்மானத்துடன் போரிடத் தொடங்கினான். அவர்களில் பலர் அர்ஜுனனை நோக்கி பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களை ஏவினர்.(24,25) உண்மையில் அந்த க்ஷத்திரியர்கள் நிச்சயம் மரணமடைய {மரணமடைவோம் என்ற தீர்மானத்தோடே} அர்ஜுனனோடு போரிட்டனர். எனினும் சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தடுத்து, இறுதியில் அந்த எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தான். சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளைக் கொல்பவனான அந்த அர்ஜுனனை இருபது கணைகளால ஆழத் துளைத்தான். மேலும் அவன் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பெருந்தேரின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(26-28) பிறகு அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் இருபது கணைகளால் சகுனியைத் துளைத்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வில்லாளிகளில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(29) தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் சக்தியைதக் கொண்ட அற்புதக் கணைகளால் உமது படையின் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்ட கணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான (இறந்தோரின்) உடல்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, மலர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) உண்மையில், கிரீடங்களாலும், அழகிய மூக்குகளாலும், அழகிய காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், சினத்தால் (கீழ்) உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தவையும், கண்களை அகல விரித்தவையும், சூடாமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், உயிரோடு இருந்தபோது, ரத்தினங்களால் மகுடம் சூட்டப்பட்டவையும், இனிய வார்த்தைகளைப் பேசியவையுமான க்ஷத்திரியர்களின் தலைகளால் விரவிக் கிடந்த அந்தப் பூமியானது, சம்பக {சம்பங்கி} மலர்கள் பரவிய குன்றுகளால் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(32,33) அந்தக் கடும் சாதனையை அடைந்து, ஐந்து நேரான கணைகளால் சகுனியை மீண்டும் துளைத்தவனும், கடும் ஆற்றல் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் உலூகனை மீண்டும் ஒருகணையால் தாக்கினான்.(34) அவனது {உலூகனது} தந்தையான சுபலனின் மகன் {சகுனியின்} முன்னிலையிலேயே இப்படி உலூகனைத் துளைத்த அர்ஜுனன், சிங்க முழக்கம் செய்து, அதனால் {அவ்வொலியால்} உலகத்தையே நிறைத்தான். பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, சகுனியின் வில்லை அறுத்தான்.(36)

பிறகு அவன் {அர்ஜுனன்}, அவனது {சகுனியின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பினான். பிறகு அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து குதித்து,(37) விரைவாகச் சென்று {தன் மகனான} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அந்தத் தந்தையும், மகனும் ஒரே தேரில் சென்று,(38) மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அந்த இரு போர்வீரர்களையும் துளைத்து,(39) பீடித்து உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான். காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்படும் வலிமைமிக்க மேகத் திரள் ஒன்றைப் போல,(40) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படை அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்பட்டது. உண்மையில் அந்தப் படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் இப்படிக் கொல்லப்பட்டு,(41) (அவர்களது) தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. தாங்கள் ஏறிச்சென்ற விலங்குகளைப் பலர் கைவிட்டனர், பிறரோ, தங்கள் விலங்குகளை அதிக வேகத்தில் தூண்டி,(42) கடுமையான அந்த இருண்ட நேரத்தில், அச்சத்தால் தூண்டப்பட்டுப் போரில் இருந்து பின்வாங்கினர். இப்படி உமது போர்வீர்ரர்களை வென்ற வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} மகிழ்ச்சிகரமாகத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(43)

திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்ரரே}, மூன்று கணைகளால் துரோணரைத் துளைத்து, கூரிய கணை ஒன்றால் பின்னவருடைய வில்லின் நாணையும் விரைவாக அறுத்தான்.(44) க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான அந்த வீரத் துரோணர், அந்த வில்லைப் பூமியில் தூக்கி வீசிவிட்டு, பெரும் உறுதியும், பலமும் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார்.(45) திருஷ்டத்யும்னனை ஐந்து கணைகளால் துளைத்த துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தார்.(46) தன் கணைகளால் துரோணரைத் தடுத்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், அசுரப் படையை அழிக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல அந்தக் கௌரவப் படையை அழிக்கத் தொடங்கினான்.(47)

உமது மகனின் {துரியோதனின்} படை கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குருதியையே ஓடையாகக் கொண்ட ஒரு பயங்கர ஆறு அங்கே பாயத் தொடங்கியது.(48) மேலும் அது, இரண்டு படைகளுக்கும் இடையில் மனிதர்களையும், குதிரைகளையும், யானைகளையும் சுமந்த சென்றபடி ஓடிக் கொண்டிருந்தது.(49) அது {அந்த ஆறு}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதிகளை நோக்கிப் பாயும் வைதரணீக்கு ஒப்பானதாக இருந்தது. உமது படையைக் கலங்கடித்து அதை முறியடித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வீரத் திருஷ்டத்யும்னன், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போலச் சுடர்விட்டெரிந்தான்.(50) பிறகு திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் தங்கள் பெரிய சங்குகளை முழக்கினர், அதே போலவே, இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), யுயுதானனும் {சாத்யகியும்}, பாண்டுவின் மகனான விருகோதரனும் {பீமனும்} {தங்கள் சங்குகளை} முழக்கினார்கள்.(51) உமது தரப்பைச் சேர்ந்தவர்களும், பெரும் சக்தியையுடையவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களை வென்ற கடும் போர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, கர்ணன், வீரத் துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் சிங்க முழக்கம் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(52,53)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 171-ல் வரும் மொத்த சுலோகங்கள்-53


ஆங்கிலத்தில் | In English

Wednesday, October 26, 2016

“நாம் அபிமன்யுவை கொன்றது போலவே…!” என்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 170

“As we killed Abhimanyu!” said Karna! | Drona-Parva-Section-170 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 18)

பதிவின் சுருக்கம் : துரோணரை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட திருஷ்டத்யும்னன்; துருமசேனனைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் காக்க விரைந்த சாத்யகி; விருஷசேனனை மயக்கமடையச் செய்த சாத்யகி; அர்ஜுனனின் நாணொலியையும், தேரொலியையும் கேட்டுக் கலங்கிய கர்ணன்; திருஷ்டத்யும்னனையும், சாத்யகியையும் கொல்ல துரியோதனனுடன் சேர்ந்து ஆலோசித்த கர்ணன்; சாத்யகி மற்றும் திருஷ்டத்யும்னனை அர்ஜுனன் காக்க முடியாதபடி அவனை எதிர்த்துச் செல்லுமாறு சகுனியிடம் சொன்ன துரியோதனன்; பெரும்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கர்ணன் முதலானோர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அவனைச் {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(3) ஆசான்களில் முதன்மையானவரான துரோணர் இப்படித் தாக்கப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், தீர்மானத்துடன் போரில் ஈடுபட்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரைக் காத்தனர்.(4) பிறகு, அந்த இரவில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட கடலெனும் இரு துருப்புகளும், சூறாவளியால் மூர்க்கமாகத் தாக்கப்படுபவையும், மிகவும் கலங்கடிக்கப்படும் உயிரினங்களுடன் கூடியவையுமான பயங்கரமான இரண்டு கடல்களைப் போலத் தெரிந்தன.(5)


அப்போது அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்க மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(9)

பகைவீரர்களைக் கொல்பவனும், பெருமழகுடன் கூடியவனுமான அந்தப் போர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உறுதிமிக்க வில்லைத் தன் காதுவரை இழுத்து, துரோணரின் உயிரை எடுக்கவல்ல ஒரு பயங்கரக் கணையை ஏவினான்.(10) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் வலிமைமிக்க அந்த இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} இப்படி ஏவப்பட்ட அந்தக் கணையானது, உதயச் சூரியனைப் போல மொத்தப்படைக்கும் ஒளியூட்டியது.(11) அந்தப் பயங்கரக் கணையைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படிப் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, நஞ்சற்ற பாம்பொன்றைப் போலப் பூமியில் வேகமாக விழுந்தது.(14)

அந்தப் போரில், நேரான தன் கணைகளால் திருஷ்டத்யும்னனின் கணைகளை வெட்டிய கர்ணன், பிறகு, கூரிய கணைகள் பலவற்றால் திருஷ்டத்யும்னனையும் துளைத்தான்.(15) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஐந்தாலும், துரோணர் ஐந்தாலும், சல்லியன் ஒன்பதாலும், துச்சாசனன் மூன்றாலும் அவனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர்.(16) துரியோதனன் இருபது கணைகளாலும், சகுனி ஐந்தாலும் அவனை {திருதஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும், அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} வேகமாகத் துளைத்தனர்.(17) இப்படியே அவன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரைக் காக்க முயன்ற அந்த ஏழுவீரர்களாலும் அந்தப் போரில் துளைக்கப்பட்டான். எனினும் அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(18) உண்மையில் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் துரோணர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் உமது மகன் {துரியோதனன்} ஆகியோரை வேகமாகத் துளைத்தான்.(19) அந்த வில்லாளியால் {திருஷ்டத்யும்னனால்} இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து போரிட்டு, உரக்க முழங்கியபடியே மீண்டும் அம்மோதலில் திருஷ்டத்யும்னனைத் துளைத்தனர்.(20)

அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துருமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த கணை ஒன்றால் அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(21) அந்த இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய அவன் {துருமசேனன்}, “நில், நிற்பாயாக” என்றான். பிறகு திருஷ்டத்யும்னன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், ஏவப்படுபவரின் உயிரையே எடுக்கவல்லவையுமான மூன்று நேரான கணைகளால் அம்மோதலில் துருமசேனனைப் பதிலுக்குத் துளைத்தான்.(22)  பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரகாசமான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட துருமசேனனின் தலையை மற்றொரு பல்லத்தால் பின்னவனின் {துருமசேனனின்} உடலில் இருந்து வெட்டினான்.(23) (சினத்தால்) (கீழ்) உதடு கடிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தத் தலையானது, பலமான காற்றின் செயல்பாட்டால், குலையில் இருந்து உதிர்ந்து விழும் பழுத்த பனம்பழத்தைப் போலத் தரையில் விழுந்தது.(24)

மீண்டும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் துளைத்த அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, போர் முறைகள் அனைத்தையும் அறிந்த போர்வீரனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} வில்லைச் சில பல்லங்களால் அறுத்தான்.(25) கடுஞ்சிங்கம் ஒன்று தன் வால் அறுபட்டத்தைப் பொறுத்துக் கொள்ளாததைப் போல, கர்ணனால் தன் வில் அறுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(26) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், சினத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைக் கணை மேகங்களால் மறைத்தான்.(27) சினத்தால் தூண்டப்பட்ட கர்ணனைக் கண்டவர்களும், தேர்வீரர்களில் காளையருமான அந்த ஆறு வீரர்கள், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கொல்லும் விருப்பத்தால் விரைவாக அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(28) உமது தரப்பின் முதன்மையான ஆறு தேர்வீரர்களுக்கு முன்பு நிற்கும் பின்னவனை {திருஷ்டத்யும்னனைக்} கண்ட துருப்புகள் அனைத்தும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவன் காலனின் கோரப் பற்களுக்கிடையில் விழுந்துவிட்டதாகவே கருதினர்.(29)

அதே வேளையில் தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சாத்யகி, தன் கணைகளை இறைத்தபடியே வீரத் திருஷ்டத்யும்னன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.(30) சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத போர்வீரன் வருவதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவனைப் பத்து கணைகளால் துளைத்தான்.(31) பிறகு சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, “ஓடாமல் என் முன்னே நிற்பாயாக” என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) பலிக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததற்கு ஒப்பாக இருந்தது.(33) க்ஷத்திரியர்களில் காளையான அந்தச் சாத்யகி, தன் தேரின் சடசடப்பொலியால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டே, தாமரைக் கண் கொண்ட கர்ணனை (பல கணைகளால்) துளைத்தான்.(34)

அந்த வலிமைமிக்கச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்ட உமது மகன்கள் அனைவரும் சாத்யகியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் துளைத்தனர்.(38)

அவர்கள் அனைவரின் ஆயுதங்களையும், கர்ணனின் ஆயுதங்களையும் தடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனனை {கர்ணனின் மகனை} வேகமாக நடுமார்பில் துளைத்தான்.(39) அந்தக் கணையால் துளைக்கப்பட்டவனும், பெரும் காந்தி கொண்டவனுமான வீர விருஷசேனன், தன் வில்லை விட்டுவிட்டு வேகமாகத் தன் தேரில் விழுந்தான்.(40) வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன் கொல்லப்பட்டதாக நம்பிய கர்ணன், தன் மகன் இறந்த துயரால் எரிந்து, பெரும் பலத்துடன் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான்.(41) இப்படிக் கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் யுயுதானன் {சாத்யகி}, பெரும் வேகத்துடன், பல கணைகளால் கர்ணனை மீண்டும் மீண்டும் துளைத்தான்.(42) மீண்டும் கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை ஐந்தாலும் துளைத்த அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தந்தை, மகன் ஆகிய இருவரின் தோலுறைகளையும், விற்களையும் அறுத்தான்.(43) பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும், எதிரிகளை அச்சத்தால் தூண்டவல்ல வேறு இரண்டு விற்களுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் யுயுதானனை {சாத்யகியைத்} துளைக்கத் தொடங்கினர்.(44)

வீரர்களுக்கு இப்படி அழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அவனது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது பெரிய படையைக் கலங்கடித்துவிடுவான். நம் துருப்புகளில் பல ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கின்றன. எவரும் போரில் நிற்கவில்லை {நிலைக்க முடியவில்லை}.(49) உண்மையில், காற்றால் கலைக்கப்படும் மேகத்திரள்களைப் போல நமது படையும் கலைக்கப்படுகிறது. அர்ஜுனனோடு மோதும் நமது படை, கடலில் படகு பிளப்பதைப் போலப் பிளக்கிறது.(50)

ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் விளைவால் போர்க்களத்தில் இருந்து ஓடவோ, கீழே விழவோ செய்யும் முதன்மையான வீரர்களின் உரத்த ஓலங்கள் கேட்கப்படுகின்றன.(51) ஓ! தேர்வீரர்களில் புலியே {துரியோதனா}, ஆகாயத்தில் கேட்கப்படும் இடி முழக்கத்தைப் போல, இந்த நள்ளிரவில், அர்ஜுனனின் தேர் அருகில் துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியைக் கேட்பாயாக.(52) அர்ஜுனனின் தேர் அருகே (பீடிக்கப்படும் போராளிகளால்) எழுப்பப்படும் உரத்த ஓலங்களையும், மகத்தான சிங்க முழக்கங்களையும், பல்வேறு பிற ஒலிகளையும் கேட்பாயாக.(53)

எனினும் இங்கே, நம் மத்தியில் சாத்வத குலத்தில் முதன்மையான இந்தச் சாத்யகி இருக்கிறான். இந்த நமது நோக்குப் பொருளை {சாத்யகியைத்} தாக்கி வீழ்த்த முடியுமேயானால், நம் எதிரிகளை அனைவரையும் நம்மால் வெல்ல முடியும்.(54) அதேபோலப் பாஞ்சால மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரிடம் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் {திருஷ்டத்யும்னன்}, தேர்வீரர்களில் முதன்மையான பல வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கிறான்.(55) நம்மால் சாத்யகியையும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனையும் கொல்ல முடிந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, வெற்றி நமதே என்பதில் ஐயமிருக்காது.(56)

சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்த விருஷ்ணி குலமகனையும் {சாத்யகியையும்}, இந்தப் பிருஷதன் மகனையும் {திருஷ்டத்யும்னனையும்} சூழ்ந்து கொண்டு, வீரர்களான இவ்விருரையும் நாம் கொல்ல முயல்வோம் [1].(57) சாத்யகி, குருக்களில் காளையர் பலருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து, ஓ! பாரதா {துரியோதனா}, சவ்யசச்சின் {அர்ஜுனன்}, நம் முன் துரோணரின் இந்தப் படைப்பிரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(58) பலரால் சூழப்பட்ட சாத்யகியைப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்க முடியாதவாறு, அங்கே {அர்ஜுனன் வரும் வழியில்} நமது முதன்மையான தேர்வீரர்களைப் பெருமளவில் அனுப்ப வேண்டும்.(59) மதுகுலத்தின் சாத்யகியை விரைவில் யமனுலகு அனுப்ப, இந்தப் பெரும் வீரர்கள், பெரும் பலத்துடன் கணை மேகங்களை ஏவட்டும்” என்றான் கர்ணன்.(60)

[1] வேறொரு பதிப்பில், “அபிமன்யுவைச் சூழ்ந்தது போலச் சூரர்களும், மகாரதர்களுமான அந்த விருஷ்ணி வீரனையும், பார்ஷதனையும் சூழ்ந்து கொண்டு கொல்வதற்கு நாம் முயற்சி செய்வோம்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “முறையே விருஷ்ணி மற்றும் பிருஷத குலங்களின் வழித்தோன்றல்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான இவ்விரு வீரர்களையும், சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே, கூரான ஆயுதங்களால் துளைத்து அவர்களைக் கொல்ல முயல்வோம்” என்றிருக்கிறது.

இதையே கர்ணனின் கருத்தாக உறுதிசெய்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, விஷ்ணுவிடம் பேசும் இந்திரனைப் போல அந்தப் போரில் சுபலனின் மகனிடம் {சகனியிடம்},(61) “பின்வாங்காத பத்தாயிரம் யானைகள் மற்றும் பத்தாயிரம் தேர்களுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வீராக.(62) துச்சாசனன், துர்விசாஹன், சுபாகு, துஷ்பிரதர்ஷணன் ஆகியோர் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினர் சூழ உம்மைப் பின்தொடர்வார்கள்.(63) ஓ! அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ! அம்மானே, பாவகனின் {அக்னியின்} மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே நீர் குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(65)

இப்படிச் சொல்லி உமது மகனால் தூண்டப்பட்ட சகுனி, கவசம் தரித்துக் கொண்டு, பெரும்படையாலும், உமது மகன்களாலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டுவின் மகன்களை எரிப்பதற்காகப் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். அப்போது உமது படைக்கும், எதிரிக்கும் இடையில் ஒரு பெரும்போர் தொடங்கியது.(66,67) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துணிவுமிக்கத் திருஷ்டத்யும்னனுடனும், பாஞ்சாலர்களுடனும் அற்புதமானதும், கடுமையானதுமான ஒரு போரைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.(70)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 170-ல் வரும் மொத்த சுலோகங்கள்-70


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top