Showing posts with label சிகண்டி. Show all posts
Showing posts with label சிகண்டி. Show all posts

Friday, March 18, 2016

பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு! - பீஷ்ம பர்வம் பகுதி – 119

The destruction cause by Bhishma! | Bhishma-Parva-Section-119 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 77)

பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை நடுங்கச் செய்த கௌரவ வீரர்களும், பீஷ்மரும்; கௌரவப் படையிருக்கு அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு;  பாண்டவப் படையைத் தூண்டிய திருஷ்டத்யும்னன்; பத்தாம் நாள் போரில் பீஷ்மர் உண்டாக்கிய பேரழிவு; சதாநீகனைக் கொன்ற பீஷ்மர்; பீஷ்மருக்கு எதிராக அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்த பாண்டவ வீரர்கள்; பீஷ்மரை மீண்டும் மீண்டும் துளைத்த அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எண்ணிக்கையில் வலுவான இரண்டு படைகளின் போராளிகளும், போர்வியூகத்தில் இப்படி நின்றிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்வாங்காதவர்களான அந்த வீரர்கள் அனைவரும் பிரம்மலோகத்தில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர் [1]. தொடர்ந்து நடந்த பொதுவான மோதலில், ஒரு வகுப்பைச் சேர்ந்த போராளிகள், அதே வகுப்பைச் சேர்ந்தோருடன் போரிடவில்லை. தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், யானை வீரர்கள் யானைவீரர்களோடும் போரிடவில்லை. மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போராளிகள், பைத்தியக்காரர்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர். அந்த இருபடைகளையும் அடைந்த பேரிடர் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது. அந்தக் கடும் படுகொலையில் யானைகளும், மனிதர்களும் களத்தில் தங்களைப் பரப்பிக் கொண்ட போது, அவர்கள் கண்மூடித்தனமாகப் போரிட்டதால், அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் அனைத்தும் இல்லாமல் போனது.


[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “படைகளில் நன்றாக அணிவகுக்கப்படாமல், பெரும்பான்மையாக ஒன்றையொன்று அனுசரித்து நிற்குமளவில் அனைவரும் பிரம்மலோகத்தை அடைவதில் பற்றுள்ளவர்களானார்கள்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இவ்வரி, “எண்ணிக்கையில் பலமானவையும், போருக்காக அணிவகுக்கப்பட்டவையுமான இரு படைப்பிரிவுகளும், ஒன்றையொன்று சந்தித்தபோது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்வாங்காதவர்களான வீரர்கள் அனைவரும், பிரம்மனின் உலகங்களை நோக்கமாகக் கொண்டு போருக்கு விரைந்தனர்” என்று இருக்கிறது

சல்லியன், கிருபர், சித்திரசேனன், துச்சாசனன், விகர்ணன் ஆகிய வீரர்கள் பிரகாசமான தங்கள் தேர்களில் ஏறி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையை நடுங்கச் செய்தனர். அந்த உயர் ஆன்ம போர்வீரர்களால் போரில் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் புரட்டப்படும் நீரில் உள்ள படகைப் போலப் பல்வேறு வழிகளில் சுழலத் தொடங்கியது. குளிர்காலத்தின் குளுமை விரைவாகப் பசுக்களை வெட்டுவதை {சதைகளைப் பிளப்பதைப்} போலவே, பீஷ்மரும் பாண்டுவின் மகன்களை விரைவாக வெட்டினார்.

மேலும், உமது படையைப் பொறுத்தவரை, புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த பல யானைகள், சிறப்புமிக்கப் பார்த்தனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டன. போர்வீரர்களில் முதன்மையானோர் பலரும் அந்த வீரனால் {அர்ஜுனனால்} நசுக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான கணைகளாலும், நாராசங்களாலும் தாக்கப்பட்டுப் பெரும் யானைகள் பல வலியால் பயங்கரமாகப் பிளிறிபடி கீழே விழுந்தன. சிதறிக் கிடந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான உயிரிழந்த உயர் ஆன்ம வீரர்களின் உடல்களுடனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் அந்தப் போர்க்களம் அழகாகத் தெரிந்தது.

பெரும் வீரர்களின் அழிவுக்கான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், பாண்டுவின் மகனானத் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகள் அனைத்தின் தலைமையில் நின்று கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்த பாட்டனை {பீஷ்மரைக்} கண்ட உமது மகன்கள் அவரை அணுகினர். போரில் தங்கள் உயிர்களை விட விரும்பி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்ட அவர்கள், பெரும் படுகொலைகள் நிறைந்த அந்தப் போரில் பாண்டவர்களை அணுகினர். துணிவுமிக்கப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னர் உம்மாலும், உமது மகனாலும் {துரியோதனனாலும்} தங்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விதங்களிலான தீங்குகள் பலவற்றை மனதில் தாங்கி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, உயர்ந்த சொர்க்கங்களை வெல்லும் ஆவலில் உமது மகனோடும், உமது படையின் வீரர்கள் பிறருடனும் மகிழ்ச்சியாகப் போரிட்டனர்.

பிறகு பாண்டவப் படையின் படைத்தலைவனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தன் படைவீரர்களிடம், “சிருஞ்சயர்களுடன் கூடிய சோமகர்களே, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக” என்றான். தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்களும், சிருஞ்சயர்களும், கணைகளின் மழையால் பீடிக்கப்பட்டாலும், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். இப்படித் தாக்கப்பட்ட உமது தந்தை பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுச் சிருஞ்சயர்களோடு போரிடத் தொடங்கினார்.

பழங்காலத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, புத்திசாலியான ராமர் {பரசுராமர்}, பகையணிகளுக்கு அழிவைத் தரும் ஆயுதங்களின் கல்வியைப் பெரும் சாதனைகளைக் கொண்ட பீஷ்மருக்கு அளித்தார். அந்தக் கல்வியைக் கொண்டு, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்திய, பகைவீரர்களைக் கொல்பவரான முதிர்ந்த குரு பாட்டன் பீஷ்மர் நாளுக்கு நாள் பத்தாயிரம் ரத வீரர்களை {தேர்வீரர்களைக்} கொன்றார்.

எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் {போரின்} பத்தாம் {10} நாளில்,  பீஷ்மர், தனியாளாகவே பத்தாயிரம் யானைகளைக் கொன்றார். பிறகு, மத்ஸ்யர்களுக்கும், பாஞ்சாலர்களுக்கும் மத்தியில் இருந்த பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} எழுவரையும் கொன்றார். இவை அனைத்திற்கும் மேலாக, அந்தப் பயங்கர போரில், ஐயாயிரம் {5000} காலாட்படை வீரர்களும், தந்தங்களைக் கொண்ட ஓராயிரம் {1000} யானைகளும், பத்தாயிரம் {10000} குதிரைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்வியால் அடையப்பட்ட திறமையின் மூலம் உமது தந்தையால் {பீஷ்மரால்} கொல்லப்பட்டன [2].

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “அந்தப் பத்தாவது நாள் வந்தவுடன், பெரிய பாட்டனாரான பீஷ்மர் தாம் ஒருவராகவே போரில் மாத்ஸ்யர்களின் படைகளிலும், பாஞ்சாலர்களின் படைகளிலும் உள்ள கணக்கிலடங்காத யானைகளையும், குதிரைகளையும் கொன்று, ஏழு மகாரதர்களையும், ஐயாயிரம் ரதிகர்களையும், பதினாலாயிரம் காலாட்களையும் கொன்றார். மனிதர்களின் தலைவா, உமது தகப்பனரான பீஷ்மர், அந்தப் போரில் பல்லாயிரம் யானைகளையும், பதினாயிரம் குதிரைகளையும் பயிற்சியின் பலத்தால் கொன்றார்” என்று இருக்கிறது. மன்மத நாத தத்தரின் பதிப்பில் இந்தப் பத்தி, “On that the tenth day of the battle, O foremost of the Bharatas, from among the Matsyas and the Panchalas, Bhishma, single handed, Having slain ten thousan elephants, slew also seven mighty car-warriors. Then the great gransire also slew five thousand car-warriors. In that fierce battle in addition to all this, fourteen thousand foot-soldiers, one thousand elephants, and ten thousand steeds were slain, O ruler of men, by your father, through his superior education.” அஃதாவது “அந்தப் பத்தாம் நாள் போரில், ஓ பாரதர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் தனியாளாக, மத்ஸ்யர்களுக்கும் பாஞ்சாலர்களுக்கும் மத்தியில் இருந்த பத்தாயிரம் யானைகளைக் கொன்று, ஏழு வலிமைமிக்கத் தேர்வீரர்களையும் கொன்றார். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, ஐயாயிரம் தேர்வீரர்களையும் கொன்றார். இவை அனைத்துக்கும் மேலாக, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தந்தையின் {பீஷ்மரின்} கல்வியின் மேன்மையால், பதினாலாயிரம் காலாட்படை வீரர்களும், ஓராயிரம் யானைகளும், பத்தாயிரம் குதிரைகளும் அந்தப் பெரும்போரில் கொல்லப்பட்டன” என்று இருக்கிறது. மூன்று பதிப்புகளிலும் எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன.

மன்னர்கள் அனைவரின் படையணிகளை மெலிதாக்கிய {குறைத்த} அவர் {பீஷ்மர்}, விராடனின் அன்புக்குரிய தம்பி சதாநீகனைக் கொன்றார். அந்த வீரப் பீஷ்மர், போரில் சதாநீகனைக் கொன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பல்லங்களால் முழுமையாக ஓராயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். இவற்றைத் தவிர, தனஞ்சயனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த பாண்டவப் படையின் க்ஷத்திரியர்கள் அனைவரும் பீஷ்மரை அடைந்ததுமே {அவர்கள்} யமோலோகம் செல்ல வேண்டியிருந்தது. போரில் கௌரவப் படையின் தலைமையில் நின்ற பீஷ்மர், கணைகளின் மழைகளால் பாண்டவப் படையின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தார். பத்தாம் நாளில் கையில் வில்லுடன், இரு படைகளுக்கும் மத்தியில் நின்று கொண்டு மகத்தான சாதனைகளை அடைந்து, கோடை வானின் வெப்பமான நடுநாள் {மத்திய வேளை} சூரியனைப் போல இருந்ததால், அவரை {பீஷ்மரை}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் எவராலும் காணவும் முடியவில்லை. போரில் தைத்திய படையை எரிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும் பாண்டவப் படையை எரித்தார்.

தன் ஆற்றலை இப்படி வெளிப்படுத்தும் அவரை {பீஷ்மரைக்} கண்ட மதுசூதனான தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, மகிழ்ச்சியுடன் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “{அதோ} இரு படைகளுக்கும் மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர் நிற்கிறார். உனது வலிமையை வெளிப்படுத்தி அவரை {பீஷ்மரைக்} கொன்றால், நீ வெற்றியை அடையலாம். அங்கே, அந்த இடத்தில், நமது படைகளை அவர் பிளக்கும்போது, உன் பலத்தை வெளிப்படுத்தி அவரைத் தடுப்பாயாக. ஓ! தலைவா {அர்ஜுனா}, உன்னையன்றி வேறு எவனும் பீஷ்மரின் கணைகளைத் தாங்கத் துணிய மாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படித் தூண்டப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், அந்தக் கணத்திலேயே தன் கணைகளின் மூலம் பீஷ்மரின் தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றோடு அவரையும் {பீஷ்மரையும்} மறையச் செய்தான். எனினும், குருக்களில் முதன்மையானவரான அந்தக் காளை {பீஷ்மர்}, தன் கணை மழையின் மூலம், பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஏவிய கணைகளின் மழையைத் துளைத்தார் {தடுத்தார்}. பிறகு, பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, {சேதி மன்னனான} வீர திருஷ்டகேது, பாண்டுவின் மகனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), சேகிதானான், கைகேயச் சகோதரர்கள் ஐவர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், சிகண்டி, வீரக் குந்திபோஜன், {பாண்டவத் தரப்பைச் சேர்ந்த} சுசர்மன், விராடன் ஆகியோரும், பாண்டவப் படையின் பலமிக்கப் போர்வீரர்கள் பலரும் பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, துன்பக்கடலில் மூழ்குவதாகத் தெரிந்தது, எனினும், பல்குனன் {அர்ஜுனன்}, அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான்.

பிறகு, சிகண்டி, வலிமைமிக்க ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டு, பீஷ்மரை மட்டுமே நோக்கி மூர்க்கமாக விரைந்தான். வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, எதன் பிறகு எதைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து, பீஷ்மரைப் பின்தொடர்ந்தோர் அனைவரையும் கொன்று அதன் பிறகு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். சாத்யகி, சேகிதானன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகிய அனைவரும் உறுதிமிக்க அந்த வில்லாளியால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டு, அந்தப் போரில் பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோரும் வலிமைமிக்க ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு போரில் பீஷ்மருக்கு எதிராக விரைந்தனர். போரில் பின்வாங்காதவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகளான அனைவரும், நன்கு குறிபார்க்கப்பட்ட கணைகளால் பீஷ்மரின் உடலில் பல்வேறு பகுதிகளில் துளைத்தனர். பாண்டவப் படையைச் சேர்ந்த அந்த இளவரசர்களில் முதன்மையானோரால் ஏவப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகள் அனைத்தையும் அலட்சியம் செய்தவரும், கலக்கமில்லா ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், பாண்டவப் படையணிக்குள் ஊடுருவினார்.

ஏதோ எந்நேரமும் விளையாடுபவரைப் போல இருந்த பாட்டன் {பீஷ்மர்}, அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். பாஞ்சால இளவரசனான சிகண்டியை அடிக்கடி பார்த்துச் சிரித்து, அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த அவர் {பீஷ்மர்}, அவன் {சிகண்டியை} நோக்கி ஒரு கணையைக் கூடக் குறிப் பார்க்காமல் இருந்தார். மறுபுறம் அவர் {பீஷ்மர்}, துருபதனின் படைப்பிரிவைச் சேர்ந்த பெரும் தேர்வீரர்கள் எழுவரைக் கொன்றார்.

பிறகு, அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்த மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் ஆகியோருக்கு மத்தியில் குழுப்பமான துயரக் குரல்கள் எழுந்தன. அவர்கள் {பாண்டவப் படையினர்}, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடனும், கணைகளின் மழைகளுடனும், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகலை உண்டாக்குபவனை மறைக்கும் மேகங்களைப் போலத் தனி வீரரும், எதிரிகளை எரிப்பவரும், பாகீரதியின் {கங்கையின்} மகனுமான பீஷ்மரைப் மறைத்தனர்.

பிறகு, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பான, அவருக்கும் {பீஷ்மருக்கும்}, அவர்களுக்கும் {பாண்டவப் படையினருக்கும்} இடையிலான அந்தப் போரில், கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தன் முன்னிலையில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, பீஷ்மரை (மீண்டும் மீண்டும்) துளைத்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Thursday, March 17, 2016

துச்சாசனனை முறியடித்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 118

Arjuna routed Dussasana! | Bhishma-Parva-Section-118 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 76)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்; சிகண்டியை அலட்சியம் செய்த பீஷ்மர்; துச்சாசனன் வெளிப்படுத்திய ஆற்றல்; துச்சாசனனை வீழ்த்திய அர்ஜுனன்;  படைவீரர்களுடன் பேசிய துரியோதனன்; துச்சாசனனின் குதிரைகளையும், தேரோட்டியையும் வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனிடம் வீழ்ந்த  கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் களத்தில் இருந்து தப்பி ஓடியது; அர்ஜுனனின் ஆற்றல்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரை அணுகிய சிகண்டி, பத்து பல்லங்களால் அவரது {பீஷ்மரின்} நடுமார்பைத் தாக்கினான். எனினும், அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பாஞ்சால இளவரசனான சிகண்டியைப் பார்வையால் எரித்துவிடுவதைப் போலப் பார்க்க மட்டுமே செய்தார். அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்காதிருந்தார். எனினும், சிகண்டி அதைப் புரிந்து கொள்ளவில்லை.


பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் சிகண்டியிடம், “வேகமாக விரைந்து பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக. ஓ! வீரா {சிகண்டியே}, உனக்குச் சொல்ல என்ன தேவையிருக்கிறது? வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சிகண்டியே}, போரில் பீஷ்மருடன் போரிடத் தகுந்த வேறெந்த வீரனையும் நான் யுதிஷ்டிரரின் படையில் காணவில்லை. இதை நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.

இப்படிப் பார்த்தனால் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால் பாட்டனை {பீஷ்மரை} விரைவாக மறைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் கணைகளைக் கொண்டு அந்தப் போரில் கோபக்கார அர்ஜுனனை மட்டுமே தடுத்தார்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, கூர்முனை கொண்ட தன் கணைகளால் பாண்டவர்களின் மொத்த படையையும் அடுத்து உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினார். அதே போலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரிய படையால் ஆதரிக்கப்பட்டு, பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மூழ்கடிக்கத் தொடங்கினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருந்த அந்தப் பாரத வீரர் {பீஷ்மர்}, (எண்ணற்ற மரங்களை) எரிக்கும் காட்டுத்தீயைப் போலத் துணிவுமிக்க வீரர்கள் பலரை எரித்தார்.

அந்தப் போரில் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாத்துக் கொண்டும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டும் என நாங்கள் அங்கே கண்ட உமது மகனின் (துச்சாசனனின்) ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வில்லாளியான உமது மகன் துச்சாசனின் அந்தச் சாதனையால், மக்கள் அனைவரும் மனம் நிறைந்தனர். பாண்டவர்கள் அனைவருடனும், அவர்களுக்கு மத்தியில் இருந்த அர்ஜுனனுடனும் அவன் {துச்சாசனன்} தனியாகப் போரிட்டான்; பாண்டவர்களால் அவனைத் தடுக்க இயலாத வீரியத்துடன் அவன் {துச்சாசனன்} போரிட்டான். அந்தப் போரில் துச்சாசனனால் தேர்வீரர்கள் பலர் தங்கள் தேர்களை இழந்தனர். குதிரையின் முதுகில் இருந்த வலிமைமிக்க வில்லாளிகள் பலரும், வலிமைமிக்க வீரர்கள் பலரும், யானைகளும், துச்சாசனனின் கூர்மையான கணைகளால் துளைக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துச்சாசனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட பல யானைகள் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன. எரிபொருள் {விறகு} ஊட்டப்பட்ட நெருப்பின் பிரகாசமான தழல்கள் சுடர்விட்டு எரிவதைப் போலப் பாண்டவப் படையை எரித்து உமது மகன் {துச்சாசனன்} சுடர்விட்டெரிந்தான்.

வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான இந்திரனின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டவப் படையைச் சேர்ந்த எந்த வீரனும் பெரிய வடிவம் கொண்ட அந்த வீரனை {துச்சாசனனை} வீழ்த்தவோ, எதிர்க்கவோ துணியவில்லை. பிறகு விஜயன் என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துச்சாசனனை வீழ்த்தி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கம்போதே பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். உமது மகன் {துச்சாசனன்} வீழ்த்தப்பட்டாலும், பீஷ்மரின் வலிமையை ஆதரமாகக் கொண்டு, தன் தரப்புக்கு அடிக்கடி ஆறுதலளித்து, பாண்டவர்களுடன் மிகக் கடுமையாகப் போரிட்டான்.

அந்தப் போரில் தன் எதிரிகளுடன் போரிட்ட அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். பிறகு அந்தப் போரில் சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் தீண்டலைக் கொண்டதும், பாம்பின் நஞ்சைப் போல மரணத்தைத் தரவல்லதுமான கணைகள் பலவற்றால் பாட்டனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் உமது தந்தைக்குச் சிறு வலியையே கொடுத்தன, ஏனெனில் அவற்றை அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} சிரித்துக் கொண்டே ஏற்றார். உண்மையில், வெப்பத்தால் பீடிக்கப்பட்ட ஒருவன் மழைத்தாரைகளை ஏற்பதைப் போலவே கங்கையின் மைந்தரும் {பீஷ்மரும்}, சிகண்டியின் கணைகளை ஏற்றார்.

மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் உயர் ஆன்ம பாண்டவர்களின் துருப்புகளைத் தொடர்ச்சியாக எரிக்கும் கடும் முகம் கொண்டவராகவே பீஷ்மரைக் கண்டனர். பிறகு உமது வீரரிகளிடம் பேசிய உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைவீராக. படைத்தலைவர் ஒருவரின் கடமைகளை அறிந்தவரான பீஷ்மர் உங்களைக் காப்பார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட கௌரவத் துருப்புகள், அச்சமனைத்தையும் விட்டுப் பாண்டவர்களுடன் போரிட்டனர். (பிறகு துரியோதனன், மீண்டும் அவர்களிடம்), “தங்கப் பனைமர வடிவத்தைத் தாங்கிய தனது உயர்ந்த கொடிமரத்துடன் கூடிய பீஷ்மர், தார்தராஷ்டிர வீரர்கள் அனைவரின் மதிப்பையும், கவசங்களையும் பாதுகாத்தபடி நிலை கொண்டிருக்கிறார். தேவர்களே கூட மிகக் கடுமையாக முயன்றாலும், சிறப்புமிக்கவரும், வலிமைமிக்கவருமான பீஷ்மரை வீழ்த்தமுடியாது. எனவே, இறப்பவர்களான {மனிதர்களான} பார்த்தர்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? எனவே, வீரர்களே பல்குனனை {அர்ஜுனனை} எதிரியாக அடைந்து களத்தில் இருந்து ஓடாதீர்கள். பூமியின் தலைவர்களான உங்களுடன் நானும் சேர்ந்து, இன்று மிகக் கடுமையாக முயற்சியுடன் பாண்டவர்களுடன் போரிடுவேன்” என்றான் {துரியோதனன்}.

வில்லைக் கையில் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், விதேஹர்கள், கலிங்கர்கள், தாசேரகர்களின் பல்வேறு இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுமான வலிமைமிக்கப் போராளிகளில் பலர், சினத்தால் தூண்டப்பட்டுப் பல்குனன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். அதேபோல, நிஷாதர்கள், சௌவீரர்கள், பாஹ்லீகர்கள், தாரதர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபிகதர்கள், சூரசேனர்கள், சிபிகள், வசாதிகள், சால்வர்கள், சாகர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கேகயர்கள் ஆகியோரைச் சேர்ந்த போராளிகள் பலரும், நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மேல் பாய்ந்தனர்.

பீபத்சு என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை மனதில் நினைத்து, அவற்றைக் கொண்டு படைப்பிரிவுகளின் தலைமையில் நின்ற அந்தப் பெரும் தேர்வீரர்களைக் குறிபார்த்து, விட்டில் பூச்சிகளை எரிக்கும் நெருப்பைப் போல, பெரும் சக்தி கொண்ட அந்த ஆயுதங்களின் மூலமாக அவர்கள் அனைவரையும் விரைவாக எரித்தான். உறுதிமிக்க அந்த வில்லாளி (தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமாக) காண்டீவத்தால் ஆயிரமாயிரம் கணைகளை உண்டாக்கிய போது,  ஆகாயத்தில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

பிறகு, அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், உயர்ந்த தங்கள் கொடிமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒன்றாகச் சேர்ந்து, அந்தக் குரங்குக் கொடியோனை (பார்த்தனை {அர்ஜுனனை}) அணுகவும் முடியவில்லை. கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் கொடிமரங்களுடனும், குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளுடனும், யானை வீரர்கள் தங்கள் யானைகளுடனும் கீழே விழுந்தனர். அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக முறியடிக்கப்பட்டுப் பின்வாங்கிச் செல்லும் அம்மன்னர்களின் துருப்புகளால் விரைவில் பூமியானது அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டது.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையை முறியடித்த பார்த்தன் {அர்ஜுனன்}, துச்சாசனன் மேல் பல கணைகளை ஏவினான். இரும்புத் தலைகளைக் கொண்ட அக்கணைகள் அனைத்தும், உமது மகன் துச்சாசனைத் துளைத்து ஊடுருவி, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவி செல்லும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பிறகு அர்ஜுனன், துச்சாசனனின் குதிரைகளைக் கொன்று, பிறகு அவனது {துச்சாசனனின்} தேரோட்டியையும் வீழ்த்தினான். தலைவன் அர்ஜுனன், இருபது {20} கணைகளால் விவிம்சதியைத் தேரிழக்கச் செய்து, மேலும் ஐந்து {5} நேரான கணைகளால் அவனை {விவிம்சதியைத்} தாக்கினான். வெண்குதிரைகளைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, முழுவதும் இரும்பாலான பல கணைகளால் கிருபர், விகர்ணன், சல்லியன் ஆகியரைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் தேரிழக்கச் செய்தான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படித் தங்கள் தேர்களை இழந்து, போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்ட கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் அனைவரும் தப்பி ஓடினார்கள் {போரைவிட்டு ஓடினார்கள்}.

வலிமைமிக்கத் தேர்வீரர்களை முற்பகலில் வீழ்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான். சூரியன் ஒளிக்கதிர்களைப் பொழிவதைப் போலச் சுற்றிலும் தன் கணைகளை இறைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிற மன்னர்கள் பலரையும் வீழ்த்தினான். தன் கணைகளின் மூலம் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் களத்தைவிட்டுப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரில் குருதிப் புனலைக் கொண்ட பெரிய ஆறை அங்கே ஓடச் செய்தான் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி இத்துடன் முடியாமல், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பயங்கரமானதும், சிறந்த வீரர்களுக்கு அழிவைச் செய்வதுமான அந்தப் போரில் பாண்டவர்கள் சிருஞ்சயர்களுடன் சேர்ந்து பீஷ்மருக்காகத் தங்களை ஆற்றலை வெளிப்படுத்தினர். போரில் ஆற்றலுடன் பிரகாசிக்கும் பாட்டனைக் கண்டு உமது மகன்கள் பிரம்மலோகத்தை முன்னிட்டு பின்வாங்காதிருந்தனர். போரில் வெறிக் கொண்ட உமது வீரர்கள் சொர்க்கத்தை நோக்கமாகக் கொண்டு போரில் மரணத்தை விரும்பி பாண்டவர்களை எதிர்த்தார்கள். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப் பாண்டவர்கள், உமது மகன்களுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்பங்கள் பலவற்றை நினைவுகூர்ந்து, போரில் அச்சத்தை விலக்கி, சொர்க்கத்தை நோக்கமாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் உமது வீரர்களோடும், உமது மகன்களோடும் போரிட்டனர்” என்று முடிகிறது.

தேர்வீரர்களால் பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும் கொல்லப்பட்டன. யானைகளால் கொல்லப்பட்ட தேர்வீரர்கள் பலராக இருந்தனர், மேலும், காலாட்படை வீரர்களால் கொல்லப்பட்ட குதிரைகளும் பலவாக இருந்தன. யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோரின் உடலும், அவர்களது தலைகளும் நடுவில் பிளக்கப்பட்டு, போர்க்களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விழுந்தன. காது குண்டலங்கள், தோள்வளைகள் ஆகியவற்றை அணிந்தவர்களும், கீழே விழுந்தவர்களும், வீழ்த்தப்படுகிறவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான (கொல்லப்பட்டுக் கிடந்த) இளவரசர்களால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது விரவி கிடந்தது. தேர்ச்சக்கரங்களால் அறுக்கப்பட்டோ, யானைகளால் மிதிக்கப்பட்டோ தேர்வீரர்கள் பலரின் உடல்கள் விரவிக் கிடந்தன.

காலாட்படை வீரர்களும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் தப்பி ஓடினார்கள். அனைத்துப் பக்கங்களிலும் பல யானைகளும் தேர்வீரர்களும் விழுந்தனர். சக்கரங்கள், நுகத்தடிகள், கொடிமரங்கள் முறிக்கப்பட்ட பல தேர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தன. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் ஆகியோரின் குருதியால் நனைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்த போர்க்களம் கூதிர் கால வானின் சிவந்த மேகம் போல அழகாகத் தெரிந்தது. நாய்கள், காகங்கள், கழுகுகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் பிற பயங்கர விலங்குகளும், பறவைகளும், தங்கள் முன் கிடக்கும் உணவைக் கண்டு உரக்க ஊளையிட்டன. காற்றானது அனைத்துத் திசைகளில் இருந்து பல்வேறு விதங்களில் வீசியது. உரக்க முழக்கமிடும் ராட்சசர்களும், தீய ஆவிகளும் அங்கே காணப்பட்டனர்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கிலிகளும், விலையுயர்ந்த கொடிகளும் காற்றால் அசைக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான குடைகளும், கொடிமரங்களோடு இணைக்கப்பட்ட பெரும் தேர்களும் களத்தில் சிதறிக் கிடந்தது காணப்பட்டது [2].

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி இத்துடன் முடியாமல், “கொடிகளுடன் கூடிய யானைகள் கணைகளால் துன்புற்றுத் திக்குகளில் ஓடின. ஓ மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கதாயுதம், ஈட்டி, வில் ஆகியவற்றைத் தரித்த க்ஷத்திரியர்களும் அனைத்து இடங்களிலும் பூமியில் விழுந்தவர்களாகக் காணப்பட்டனர். அம்புகளாலும், நாராசங்களாலும் ஆயிரக்கணக்காக அடிக்கப்பட்ட பெரிய யானைகள் ஆங்காங்கு பலவீனமான ஒலியை வெளியிட்டபடி கீழே விழுந்தன. வலிமைமிக்கத் தேர்வீரனான படைத்தலைவனோ {திருஷ்டத்யும்னனோ}, “வீரர்களே, கங்கையின் மைந்தரை எதிர்த்துச் செல்லுங்கள். அதுவன்றி, நீங்கள் செய்யும் காரியத்தில் என்ன பயன்?” என்று கட்டளையிட்டான். படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்கள், சிருஞ்சயர்களுடன் நான்கு பக்கங்களிலும் கணைமாரியைப் பொழிந்த படி கங்கையின் மைந்தரை எதிர்த்தனர்” என்று முடிகிறது.

பிறகு, பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதமொன்றைத் தூண்டியெழுப்பி, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். கவசம் பூண்ட சிகண்டி, அர்ஜுனனை நோக்கி விரையும் பீஷ்மரிடம் விரைந்தான். அதன் பேரில், (பிரகாசத்திலும், சக்தியிலும்) நெருப்புக்கு ஒப்பான அந்த ஆயுதத்தைப் பீஷ்மர் திரும்பப்பெற்றார். அதேவேளையில், வெண்குதிரைகளைக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பாட்டனை {பீஷ்மரைக்} குழப்பியபடி உமது துருப்புகளைக் கொன்றான் [3].

[3] இந்த 60வது வரிக்குப் பிறகும் பம்பாய்ப் பதிப்பில் இன்னும் மூன்று வரிகள் உள்ளன, அவனைப் பின்வருமாறு: "கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகள் பல, திசைகள் அனைத்திலும் ஓடுவது தெரிந்தது. கதாயுதங்கள், ஈட்டிகள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த க்ஷத்திரியர்கள் பலர், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதும் காணப்பட்டது" என்று பம்பாய்ப் பதிப்பில் உள்ள வரிகளை இங்கே மேற்கோளில் அளித்திருக்கிறார் கங்குலி. 


ஆங்கிலத்தில் | In English

Friday, March 04, 2016

பீஷ்மரைச் சவாலுக்கழைத்த சிகண்டி! - பீஷ்ம பர்வம் பகுதி – 109

Sikhandin challenged Bhishma! | Bhishma-Parva-Section-109 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 67)

பதிவின் சுருக்கம் : பாண்டவ கௌரவப் படைகளில் அவரவர் நின்ற வரிசைகள்; சிகண்டியை முன்னிறுத்திச் சென்ற பாண்டவப் படை; பீமனால் கொல்லப்பட்ட கௌரவப் படையினர்; தப்பி ஓடிய கௌரவப் படை; இவற்றைப் பொறுத்துக் கொள்ளாத பீஷ்மர்; பாண்டவர்களின் முக்கியத் தேர்வீரர்களைத் தடுத்த பீஷ்மர்; பாண்டவப் படைக்கு அச்சமூட்டிய பீஷ்மர்; பீஷ்மரின் சாதனைகளைக் கண்டு ஆச்சரியமடைந்த கௌரவர்கள்; பீஷ்மரின் மார்பைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தாக்காத பீஷ்மர்; பீஷ்மரிடம் கோபத்துடன் பேசிய சிகண்டி; பீஷ்மருடன் போரிடச் சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்...

பீஷ்மருடன் போரிட்ட சிகண்டி
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சிகண்டி போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பீஷ்மரும் பாண்டவர்களை எவ்வாறு எதிர்த்து சென்றார்? ஓ! சஞ்சயா இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தப் பாண்டவர்கள் அனைவரும், சூரிய உதயக் காலத்தின் போது, சிகண்டியைத் தங்கள் முன்னிலையில் நிறுத்தி, பேரிகைகள், மத்தளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை அடித்துக் கொண்டும், சுற்றிலும் பால்வெண்மை கொண்ட சங்குகளை ஊதிக் கொண்டும் போருக்குச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகைவர்கள் அனைவருக்கும் அழிவை உண்டாக்கும் ஒரு வியூகத்தை [1] அமைத்துக் கொண்டு அவர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.


[1] ஒன்பதாம் நாள் வியூகத்தையே பத்தாம் நாளிலும் கௌரவர்களும், பாண்டவர்களும் அமைத்துக் கொண்டதாக வில்லி பாரதம் கூறுகிறது. முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே, அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே, {வில்லி பாரதம் 3:ப.போ.ச.3}. அப்படியெனில், கௌவர்கள் அமைத்த வியூகமானது மீண்டும் சர்வதோபத்திர வியூகமாகவும், பாண்டவர்கள் அமைத்தது மண்டல {வில்லியின் படி பத்ம} வியூகமாகவும் இருத்தல் வேண்டும்.

அவனுக்கு {சிகண்டிக்குப்} பின்னால் திரௌபதியின் மகன்களும், வீர அபிமன்யுவும் இருந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சாத்யகியும், சேகிதானனும் {சிகண்டியின்} இறுதிப் பாதுகாவலர்கள் ஆனார்கள் [2]. அவர்களுக்குப் பின் பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் இருந்தான். திருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் அடுத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அரசத் தலைவனான யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} துணையுடன், காற்றைச் சிங்க முழக்கங்களால் நிறைத்த படி அணிவகுத்தான். அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அடுத்து தன் துருப்புகளால் சூழப்பட்ட விராடன் இருந்தான். அவனுக்கு {விராடனுக்கு} அடுத்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, துருபதன் இருந்தான். கைகேயச் {கேகயச்} சகோதரர்கள் ஐவர், வீர திருஷ்டகேது ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படையின் பின்புறத்தைப் பாதுகாத்தார்கள் [3]. தங்கள் பெரிய படையை இப்படிப்பட்ட வியூகத்தில் [4] அணிவகுத்த பாண்டவர்கள், தங்கள் உயிர்களையே விடத் துணிந்து உமது படையை எதிர்த்து விரைந்தனர்.

[2] வேறு ஒரு பதிப்பில் இவ்விரு வரிகளும் ஒன்றாக ஒரே வரியாக, “திரௌபதி மகன்கள், வீர அபிமன்யு, சாத்யகி, சேகிதானன் ஆகியோர் படைக்குப் பின் பக்கத்தைப் பாதுகாத்தார்கள்” என்று இருக்கிறது.

[3] கடோத்கசனும் இவர்களுடன் சென்றதாக வேறு ஒரு பதிப்பில் குறிப்பு இருக்கிறது.

[4] குறிப்பு [1]-ஐ காண்க.

அதே போலக் கௌரவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படை முழுமைக்கும் தலைமையில் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மரை நிறுத்திப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர். அந்த வெல்லப்படமுடியாத வீரர் {பீஷ்மர்} உமது வலிமைமிக்க மகன்களால் பாதுகாக்கப்பட்டார். அடுத்து, அவர்களுக்குப் பின்னால் பெரும் வில்லாளியான துரோணரும், அவரது வலிமைமிக்க மகனும் (அஸ்வத்தாமனும்) இருந்தார்கள். அடுத்து, அதற்குப் பின்னால் தன் யானைப்படையால் சூழப்பட்ட பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னால் கிருபரும், கிருதவர்மனும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் காம்போஜர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் சுதக்ஷிணனும், மகதர்களின் மன்னன் ஜயத்சேனனும், சுபலனின் மகனும் {சகுனியும்}, பிருஹத்பலனும் இருந்தனர். அதேபோல, பெரும் வில்லாளிகளான பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பின்புறத்தைப் பாதுகாத்தனர்.

ஒவ்வொரு நாள் வந்தபோதும், சந்தனுவின் மகனான பீஷ்மர், சில நேரங்களில் அசுரர்களின் முறைமையின்படியும், சிலநேரங்களில் பிசாசர்கள் மற்றும் சில நேரங்களில் ராட்சசர்கள் {முறைமையின்} படியும் போரில் வியூகங்களை அணிவகுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் உமது துருப்பினர் மற்றும் அவர்களுடையவர்கள் {அவர்களது துருப்பினர்} ஆகிய இருதரப்புகளுக்கும் இடையில் யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போர் எண்ணிக்கையைப் பெருக்கும்படியான போர் தொடங்கியது. பார்த்தர்கள் {பாண்டவப் படையினர்}, அர்ஜுனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, சிகண்டியை முன்னணியில் நிறுத்தி, பல்வேறு விதங்களிலான கணைகளை இறைத்தபடி அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்துச் சென்றனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் [5] கணைகளால் பீடிக்கப்பட்ட உமது வீரர்கள் (பலர்), பீறிட்ட குருதியில் குளித்து, அடுத்த உலகத்திற்குச் சென்றனர்.

[5] கங்குலியின் ஆங்கிலப் பதிப்பில் இங்கே Bhishma என்று தவறுதலாக இருக்கிறது. இது பீமனே.

நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் உமது படையை அணுகி, பெரும் வீரத்தால் அதை {உமது படையைப்} பீடிக்கத் தொடங்கினர். போரில் இப்படிக் கொல்லப்பட்ட உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் அந்தப் பெரும்படையைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர். பிறகு, பெரும் தேர்வீரர்களால் பயங்கரமாகப் பீடிக்கப்பட்டு, இப்படி அவர்களால் எங்கும் கொல்லப்பட்டுவந்த உமது படையினர், அனைத்துப் புறங்களிலும் தப்பி ஓடினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், {தங்களுக்குப்} பாதுகாவலன் ஒருவனையும் கண்டடையவில்லை” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட வீர பீஷ்மர், பார்த்தர்களால் எனது படை பீடிக்கப்படுவதைக் கண்டு என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, எதிரிகளைத் தண்டிப்பவரான அந்த வீரர் {பீஷ்மர்}, போரில் எப்படிப் பாண்டவர்களை எதிர்த்து விரைந்து, சோமகர்களை {எப்படிக்} கொன்றார் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பீடிக்கப்பட்ட போது, உமது தந்தை {பீஷ்மர்} என்ன செய்தார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரப் புதல்வர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் (தாங்கள் சந்தித்த அனைவரையும்) கொன்றபடி உமது மகனின் {துரியோதனனின்} படையினருடன் மோதினர்.

ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு நேர்ந்த அந்தப் பேரழிவையும், உமது படையின் எதிரியால் போரில் ஏற்படுத்தப்பட்ட அந்த அழிவைப் பீஷ்மரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, தம் உயிரையே விடத் துணிந்து, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மீது நாராசங்களையும் {நீண்ட கணைகளையும்}, வத்சதந்தங்களையும் {கன்றுக்குட்டியின் பல் போன்ற கணைகளையும்}, அஞ்சலிகங்களையும் {பிறை வடிவக் கணைகளையும்} பொழிந்தார்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, தாக்குதலுக்குரிய, தற்காப்புக்குரிய பிற ஆயுதங்களை சக்தியுடன் பொழிந்து, போரில் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையான ஐவரைத் தன் ஆயுதங்களாலும் கணைகளாலும் தடுத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான அவர் {பீஷ்மர்}, தேர்வீரர்கள் பலரை அவர்களது தேரில் இருந்தும், குதிரைவீரர்களை அவர்களது குதிரைகளில் இருந்தும், காலாட்படை வீரர் கூட்டத்தையும், யானைவீரர்களை அவர்கள் செலுத்திய விலங்குகளின் முதுகில் இருந்தும் கீழே தள்ளி, எதிரிக்கு அச்சமூட்டினார்.

பாண்டவ வீரர்கள் அனைவரும், ஒன்று கூடியிருக்கும் அசுரர்கள் வஜ்ரதாரியை {இந்திரனை} எதிர்த்து விரைவதைப் போல, போரில் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை நோக்கிப் பெரும் சுறுசுறுப்புடன் விரைந்தார்கள். அவர் {பீஷ்மர்}, இந்திரனின் இடிக்கு ஒத்த தீண்டலைக் கொண்ட கூர்தீட்டப்பட்ட தன் கணைகளை அனைத்துப் புறங்களிலும் ஏவியபடி பயங்கரத் தோற்றம் கொண்டவராக எதிரிக்குத் தெரிந்தார். அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்தபோது சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்த அவரது பெரிய வில் எப்போதும் வட்டமாகவே வளைக்கப்பட்டே தெரிந்தது. போரில் அந்தச் சாதனைகளைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆச்சரியத்தால் நிறைந்து பாட்டனை {பீஷ்மரை} வழிபட்டார்கள்.

பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, போரில் போராடிக் கொண்டிருக்கும் உமது வீரத்தந்தையின் {பீஷ்மரின்} மேல், தேவர்கள் (அசுரன்) விப்ரசித்தியைப் (பழங்காலத்தில்) கண்டதைப் போல மகிழ்ச்சியற்ற இதயங்களுடன், தங்கள் கண்களைச் செலுத்தினர். அவர்களால், அகலவிரித்த வாயைக் கொண்ட அந்தகனை ஒத்த அந்த வீரரை {பீஷ்மரைத்} தடுக்க முடியவில்லை. அந்தப் பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மர், , காட்டை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, சிகண்டியின் படைப்பிரிவைத் தன் கூரிய கணைகளால் எரித்தார்.

கடும்நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்பையோ, காலனால் தூண்டப்பட்ட அந்தகனையோ ஒத்த சிகண்டி, மூன்று {3} கணைகளால் அவரது {பீஷ்மரின்} நடு மார்பைத் துளைத்தார். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட பீஷ்மர் (தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பது) சிகண்டி என்பதைக் கண்டார். கோபத்தால் தூண்டப்பட்டாலும், (சிகண்டியோடு போரிட) விரும்பாத பீஷ்மர் சிரித்துக் கொண்டே, “நீ என்னைத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும், நான் உன்னுடன் ஒருபோதும் போரிட மாட்டேன். படைப்பாளனால் {பிரம்மனால்} முதலில் செய்யப்பட்டது போலவே இன்னும் இருக்கும் அந்தச் சிகண்டியே நீ [6]" என்றார் {பீஷ்மர்}.

[6] பாலினம் மாற்றப்பட்டாலும் நீ இன்னும் பெண்ணே என்று சிகண்டியிடம் பீஷ்மர் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவரது {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சிகண்டி, கோபத்தால் உணர்வுகளை இழந்து, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி {நக்கியபடி}, அந்தப் போரில் பீஷ்மரிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, க்ஷத்திரிய இனத்தை அழிப்பவர் நீர் என்பதை நான் அறிவேன் [7]. ஜமதக்னியின் மகனுடனான {பரசுராமருடனான} உமது போரையும் நான் கேட்டிருக்கிறேன். மனிதசக்திக்கு மீறிய உமது ஆற்றலைக் குறித்தும் நான் அதிகம் கேட்டிருக்கிறேன். உமது ஆற்றலை அறிந்தும், நான் இன்று உம்மோடு போரிடுவேன்.

[7] வேறொரு பதிப்பில் க்ஷத்திரியர்களுக்குப் பயத்தை உண்டாக்குபவர் நீர் என்பதை நான் அறிவேன் என்று சிகண்டி சொல்வதாக இருக்கிறது.

பாண்டவர்களுக்கும், எனக்கும் ஏற்புடையதைச் செய்ய, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, போரில் இன்று நான் உம்மோடு போரிடுவேன். நிச்சயமாக நான் உம்மைக் கொல்வேன். உமது முன்னிலையில் இதை நான் உண்மையின் {சத்தியத்தின்} மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீர் என்னைத் தாக்கினாலும், தாக்கவில்லையென்றாலும், நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது. ஓ! எப்போதும் வெல்வபரே, ஓ! பீஷ்மரே, இவ்வுலகை இறுதிமுறையாகக் காண்பீராக” என்றான் {சிகண்டி}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படிச் சொன்ன அந்தச் சிகண்டி தன் சொற்கணைகளால் ஏற்கனவே துளைத்தது போக, அந்தப் போரில் ஐந்து {5} நேரான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், சிகண்டியின் வார்த்தைகளைக் கேட்டு, அவனே {சிகண்டியே} பீஷ்மரை அழிப்பவன் எனக் கருதி, "என் கணைகளால் எதிரியை முறியடித்தபடி உன் பின்னால் இருந்து போரிடுவேன். சினம் தூண்டப்பட்ட நீ பயங்கர ஆற்றல் படைத்த பீஷ்மரை எதிர்த்து விரைவாயாக. வலிமைமிக்கப் பீஷ்மரால் போரில் உன்னைப் பீடிக்க இயலாது. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சிகண்டி}, பீஷ்மருடன் மூர்க்கமாகப் போரிடுவாயாக. ஓ! ஐயா {சிகண்டி}, பீஷ்மரைக் கொல்லாமல் நீ இன்று திரும்புவாயானால், என்னுடன் சேர்த்து நீ இவ்வுலகில் ஒரு கேலிப்பொருளாவாய். ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பெரும்போரில் நாம் கேலிக்கு ஆளாகாதவாறு போரிட முயற்சி செய்வாயாக. பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே {சிகண்டியே}, (குரு படையின்) தேர்வீரர்கள் அனைவரையும் தடுத்து நான் இந்தப் போரில் உன்னைக் காப்பேன். நீ பாட்டனை {பீஷ்மரைக்} கொல்வாயாக.

துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சுயோதனன் {துரியோதனன்}, சித்திரசேனன், விகர்ணன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், துணிச்சல்மிக்கப் பகதத்தன், மகதர்களின் வலிமைமிக்க மன்னன்{ஜெயத்சேனன்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ராட்சசர்களில் துணிச்சல்மிக்கவனான ரிஷ்யசிருங்கனின் மகன் {அலம்புசன்}, திரிகர்த்த ஆட்சியாளன் {சுசர்மன்} மற்றும் (கௌரவப்படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறர் ஆகியோரை, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாக நான் தடுப்பேன். உண்மையில், ஒன்றுகூடி நம்மோடு போர்புரியக்கூடிய குருபடையின் வலிமைமிக்க வீரர்கள் அனைவரையும் நான் தடுத்து நிறுத்துவேன். நீ பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக" என்று சொல்லி அவனை {சிகண்டியைத்} தூண்டினான் {அர்ஜுனன்}" {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}. 


ஆங்கிலத்தில் | In English

Monday, January 25, 2016

சிகண்டியை மீண்டும் தவிர்த்த பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 087

Bhishma avoided Sikhandin onceagain! | Bhishma-Parva-Section-087 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 45)

பதிவின் சுருக்கம் : பீமனால் தேரிழந்த சித்திரசேனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட விகர்ணன்; பீஷ்மருக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; குதிரைகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனின் தேரில் ஏறிக் கொண்டது; நகுலசகாதேவர்களைத் தன் கணைகளால் மறைத்த பீஷ்மர்; வில்லால் விளையாடிய பீஷ்மர்; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; திருஷ்டத்யும்னனின் குதிரைகளைக் கொன்ற விந்தனும் அனுவிந்தனும்; சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; ஏழாம் நாள் போரின் முடிவிலான களநிலவரம்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி {பீமனால்} தன் தேரை இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் சித்திரசேனனைக் கண்ட உமது {மற்றொரு} மகன் விகர்ணன், அவனை {சித்திரசேனனைத்} தன் தேரில் ஏறச் செய்தான். கடுமையாகவும், கொடூரமாகவும் நடைபெற்ற அந்தப் பொதுவான போரில், சந்தனுவின் மகனான பீஷ்மர், யுதிஷ்டிரனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்.


அப்போது, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய சிருஞ்சயர்கள் நடுங்கத் தொடங்கினார்கள். யுதிஷ்டிரன் ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டுவிட்டதாகவே அவர்கள் {சிருஞ்சயர்கள்} கருதினார்கள். எனினும், இரட்டையர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} சென்ற குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியுமான பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மறைத்தான்.

யுதிஷ்டிரனால் நன்கு அடிக்கப்பட்ட அந்த எண்ணிலா கணைகளை, நூறு நூறாகவும், ஆயிரங்களாகவும் தனித் தனித் தொகுப்புகளாக அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஏற்றுக் கொண்டார் [1]. (பதிலுக்கு) பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள், காற்றில் பறக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல எண்ணற்றவையாக இருந்தன. கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொகுப்புகளாக அடிக்கப்பட்ட எண்ணிலாக் கணைகளால் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் மறைத்தார்.

[1] இங்கே பொருள் என்னவென்றால், யுதிஷ்டிரனால் ஏவப்பட்ட அம்புகளின், எண்ணிலா தனித் தொகுப்புகளில், ஒவ்வொரு தொகுப்பும், ஒவ்வொரு நேரத்தில் பீஷ்மரால் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டன என்பதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்த உயர் ஆன்மக் கௌரவர் {பீஷ்மர்} மீது நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற ஒரு நாராசத்தை {நீண்ட கணையை} வேகமாக ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் யுதிஷ்டிரனின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்த நாராசம், தன்னை அடைவதற்கு முன்பே, ஒரு க்ஷூரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணையால்} அதனைத் துண்டாக்கினார். காலனுக்கு ஒப்பான அந்த நாராசத்தைத் துண்டித்த பீஷ்மர், குருக்களின் வழிவந்த அந்த இளவரசனுடையவையும் {யுதிஷ்டிரனுடையவையும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் குதிரைகளைக் கொன்றார்.

பிறகு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரைக் கைவிட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், உயர் ஆன்ம நகுலனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மர் கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போரில் இரட்டையரிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்} வந்து, அவர்களைக் கணைகளால் மறைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த (சகோதரர்கள்) இருவரையும் கண்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் அழிவை (நிர்ணயிக்க) விரும்பி ஊக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்த யுதிஷ்டிரன்,  "ஒன்றாகக் கூடி சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கொல்வீராக" என்று சொல்லி தன் நண்பர்களையும், (தன் தரப்பிலுள்ள) ஆட்சியாளர்களையும் தூண்டினான். பிருதை மகனின் {குந்தியின் மகனின் யுதிஷ்டிரனின்} இவ்வார்தைகளைக் கேட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அப்போது, அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வீழ்த்தித் தன் வில்லால் விளையாடத் தொடங்கினார்.

களத்தில் இப்படிக்கட்டுப்படுத்தப்பட முடியாமல் திரிந்து கொண்டிருந்த அந்தக் குரு குலத்தவரை {பீஷ்மரை}, காட்டில் மான் கூட்டத்திற்கு மத்தியில் திரியும் இளஞ்சிங்கத்தைப் போலப் பாண்டவர்கள் கண்டார்கள். அந்தப் போரில் பேரொலியுடன் முழங்கித் துணிவுமிக்க வீரர்களின் இதயங்களைத் தன் கணைகளால் அச்சங்கொள்ளச் செய்யும் அவரை {பீஷ்மரைக்} கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், போரில் அந்தப் பாரதக் குலச் சிங்கத்தின் {பீஷ்மரின்} அசைவுகளைக் காற்றின் உதவியால் வைக்கோலை எரிக்கும் காட்டு நெருப்புக்கு ஒப்பானதாகவே அந்த க்ஷத்திரியர்கள் கண்டார்கள்.

கனிந்த (பனம்) பழங்களைத் தாங்கும் மரங்களிலிருந்து (கல்லைக் கொண்டு) அவற்றை {கனிகளை} வீழ்த்தும் திறமைமிக்க ஒரு மனிதனைப் போல, அந்தப் போரில் தேர்வீரர்களின் தலைகளைப் பீஷ்மர் வீழ்த்தினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியின் பரப்பில் விழுந்த வீரர்களின் தலைகள், கல் மழையை ஒத்த பேரொலியை எழுப்பின. கடுமையானதும், பயங்கரமானதுமான அப்போர் நடந்து கொண்டிருந்த போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும் ஒரு பெரிய குழப்பம் தோன்றியது. அந்தக் குழப்பத்தின் விளைவால் (இரு படையின்) வியூகங்களும் {அணிவகுப்புகளும்} உடைந்தன. ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் {போருக்கு} அழைத்த க்ஷத்திரியர்கள், போரிடுவதற்காக ஒருவரையொருவர் அணுகினர்.

அப்போது, பாரதர்களின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட சிகண்டி, "நில்லும், நில்லும்" என்று சொன்னபடி அவரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். எனினும், சிகண்டியின் பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், அதன் காரணமாக அவனை {சிகண்டியை} அலட்சியம் செய்து சிருஞ்சயர்களை நோக்கி முன்னேறினார் [2]. அதன்பேரில், அந்தப் பெரும்போரில் பீஷ்மரைக் கண்ட சிருஞ்சயர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் {சிருஞ்சயர்கள்} தங்கள் சங்கொலிகளுடன் கலந்து, பல்வேறு விதமான உரத்த முழக்கங்களையும் செய்தனர். அதன் பிறகு தொடங்கிய கடுமையான போரில் தேர்களும் யானைகளும் ஒன்றோடொன்று கலந்தன. ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, நாளின் அந்த மணித்துளியின் போது, சூரியன் (நெடுங்கோட்டுக்கு {தீர்க்கரேகைக்கு}) அடுத்தப் பக்கத்தில் {மேற்கில்} இருந்தான்.

[2] இதே போல் ஐந்தாம் நாள் போரிலும் சிகண்டியைத் தவிர்த்திருக்கிறார் பீஷ்மர். ஆனாலும், பீஷ்ம பர்வம் பகுதி 86ல்  பீஷ்மர் சிகண்டியின் ஆயுதத்தை வெட்டியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. மேலும் பீஷ்மரைக் கண்ட சிருஞ்சயர்கள் மகிழ்ந்ததாக இங்கே சொல்லப்படுகிறது. இதே பகுதியில் யுதிஷ்டிரை நோக்கி முன்னேறிய பீஷ்மரைக் கண்டு சிருஞ்சயர்கள் நடுங்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த மனமாற்றம் ஏற்படுவதற்கு இடையில் ஏதாவது நடந்திருக்க வேண்டும்.

பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், கணைகள் மற்றும் வேல்களின் மழையால் (பாரதர்களின் அந்தப்) படையைப் பெரிதும் பீடித்தனர். அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்காக் கணைகளால் அந்தப் போரில் உமது வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். எனினும், அந்தப் போரில் மேன்மையான தீர்மானத்தை அடைத்திருந்த உமது போராளிகள், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, (இப்படிப்) போரில் கொல்லப்பட்டாலும், போரிடுவதிலிருந்து பின்வாங்கவில்லை. உண்மையில், உமது துருப்புகள் தங்கள் துணிச்சலின் அளவுக்குத்தக்க தாக்கத் தொடங்கினார்கள்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் ஒப்பற்ற மகனால் {திருஷ்டத்யும்னனால்} உமது உயர் ஆன்மப் போராளிகள் கொல்லப்பட்ட போது, அவர்களுக்கு மத்தியில் பேரொலியுடன் கூடிய துன்பக் கதறல்கள் கேட்கப்பட்டன. பேரொலியுடன் கூடிய அந்தக் கதறல்களைக் கேட்டு, உமது படையின் வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து வேகமாகச் சென்றனர். அவனது {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளை வேகமாகக் கொன்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் சேர்ந்து, அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கணைமாரியால் மறைத்தனர். அதன்பேரில், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரைவிட்டு விரைவாகக் கீழே குதித்துக் காலந்தாழ்த்தாமல் உயர் ஆன்ம சாத்யகின் தேரில் ஏறிக் கொண்டான்.

பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், பெரும்படை ஒன்றின் துணையுடன், அவந்தியின் இரு இளவரசர்களான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {விந்தானுவிந்தர்களை} எதிர்த்துச் சென்றான். அதே போல, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து விதங்களிலும் தயாராக இருந்த உமது மகனும் {துரியோதனனும்}, போரில் விந்தன் மற்றும் அனுவிந்தனைச் (அவர்களை ஆதரிப்பதற்காக) சூழ்ந்து நின்றான்.

அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட அர்ஜுனனும், அசுரர்களை எதிர்த்த வஜ்ரபாணியை {இந்திரனைப்} போல க்ஷத்திரியக் குலத்தின் காளைகள் பலரை எதிர்த்துப் போரிட்டான். உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதை எப்போதும் செய்யும் துரோணரும், அந்தப் போரில் கோபத்தில் எரிந்து, பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். துரியோதனனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட உமது பிற மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

பிறகு, சூரியன் சிவப்பு நிறமடைந்த போது [3], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளிடம் பேசிய மன்னன் துரியோதனன், "நேரத்தை இழக்காதீர் {விரைவாகச் செயல்படுவீர்}" என்று சொன்னான். இப்படிப் போரிட்ட அவர்கள், அடைதற்கரிய சாதனைகளை அடைந்த பின், சூரியன் மேற்கு மலையில் ஓயச் சென்றதன் விளைவால் மறைந்த போது, அந்த அந்திப் பொழுதின் தொடக்கத்தில், குருதியையே வெள்ளமாகவும், அலைகளாகவும் கொண்டதும், எண்ணிலடங்கா குள்ளநரிகளால் மொய்க்கப்பட்டதுமான பயங்கர ஆறு ஒன்று விரைவாக அங்கே பெருக்கெடுத்தது. மேலும், தீமையை முன்னறிவிக்கும் வகையில், ஆவிகளும், பயங்கரமாக ஊளையிடும் குள்ளநரிகளும் நிறைந்து அந்தப் போர்க்களமே பயங்கரமாக மாறியது. ராட்சசர்களும், பிசாசங்களும் மற்றும் மனித ஊனுண்ணிகள் பிறவும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சுற்றிலும் காணப்பட்டன.

[3] அதாவது சூரியன் மறைவதற்குச் சற்றே முன்னர் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

சுசர்மன் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்களையும் {படைவீரர்களையும்} அவர்களது படைப்பிரிவின் மத்தியில் வெற்றிக் கொண்ட அர்ஜுனன், தன் பாசறையை நோக்கிச் சென்றான். இரவு தொடங்கிய போது, தன் தம்பிகளோடு கூடிய குரு குலத்தின் தலைவன் யுதிஷ்டிரனும், தன் துருப்புகள் பின் தொடர, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பாசறையை நோக்கிச் சென்றான். துரியோதனன் தலைமையிலான மன்னர்களை வெற்றிக் கொண்ட பீமசேனனும், தனது பாசறையை நோக்கிச் சென்றான்.

அந்தப் பெரும்போரில் (தனது துருப்புகளுடன்) சந்தனுவின் மகனான பீஷ்மரைச் சூழ்ந்து கொண்ட மன்னன் துரியோதனனும், தன் பாசறையை நோக்கிச் சென்றான். மொத்த (தார்தராஷ்டிரப்) படையையும் சூழ்ந்து கொண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும், தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர். அதே போல, தங்கள் படையைச் சூழ்ந்து கொண்ட சாத்யகியும், பிருஷதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவர்களான உமது துருப்பினரும், பாண்டவர்களும், இருளடைந்ததும் போரிடுவதை நிறுத்தினர். தங்கள் பாசறைகளுக்குச் ஓயச் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும், அவற்றில் {பாசறைகளில்} நுழைந்ததும், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். துணிவுமிக்கத் தங்கள் வீரர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து, விதிகளுக்கு ஏற்ப காவல்சாவடிகளை அமைத்து, (தங்கள் உடல்களில் இருந்து) கணைகளைப் பிடுங்கி, பல்வேறு விதங்களிலான நீரில் நீராடினர் {குளித்தனர்}.

பிறகு, அவர்களுக்காகச் சினமாற்றும் {அமைதிப்படுத்தும்} சடங்குகளை அந்தணர்கள் செய்தனர்; பாணர்கள் அவர்களது புகழைப் பாடினர். பிறகு அந்தப் புகழ்பெற்ற மனிதர்கள், கருவிகள் மற்றும் குரல் இசை ஆகிய இரண்டின் துணையோடும் சிறிது நேரம் களிப்பில் ஈடுபட்டனர் {உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர்}. சிறிது நேரத்திற்கு {ஒரு முகூர்த்த நேரத்திற்கு} அந்த முழுக் காட்சியும் சொர்க்கத்தைப் போன்றே இருந்தது. அந்த மனிதர்களில் காளையர் சிறிது நேரம் போரைக் குறித்துப் பேசாதிருந்தனர். களைத்த மனிதர்களாலும், யானைகளாலும், குதிரைகளாலும் நிறைந்திருந்த அந்தப் படைகள் இரண்டும் அங்கே உறங்கிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காண்பதற்கு அவை அழகாகின [4]" {என்றான் சஞ்சயன்}.

[4] களைத்திருக்கும் மனிதர்களோடு கூடியவையும், யானைகளாலும், குதிரைகளாலும் நெருங்கியவையும், நன்கு உறங்குகின்றவையுமான அந்த இருதிறத்துப் படைகளும் இராக்காலத்தில் பார்ப்பதற்கு ரமணீயமாயிருந்தன என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.

ஏழாம் நாள் போர் முற்றும் 


ஆங்கிலத்தில் | In English

Sunday, January 24, 2016

பீமனிடம் தப்பிய சித்திரசேனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 086

Chitrasena escaped from Bhima! | Bhishma-Parva-Section-086 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 44)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்குத் துணையாக வந்த அர்ஜுனன்; பீஷ்மரைக் கொன்று சபதத்தை நிறைவேற்றும்படி சிகண்டியிடம் சொன்ன யுதிஷ்டிரன்; சிகண்டியின் ஆற்றல்; ஜெயத்ரதனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; பீமனின் கதாயுதத்துக்குத் தப்பி ஓடிய சித்திரசேனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "{சுசர்மன் மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற பிற மன்னர்களின்} அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிதிபட்ட பாம்பைப் போல நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, தன் தொடர்ச்சியான கணைகளின் பெரும் சக்தியால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் விற்களை வெட்டினான். அந்தப் போரில் பலம் நிறைந்த ஏகாதிபதிகளின் விற்களை ஒருக்கணத்தில் வெட்டிப் போட்ட உயர் ஆன்ம அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை அழிக்க விரும்பி, ஒரே நேரத்தில் தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.


இப்படி இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்களில் சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தத்தில் மூழ்கி களத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டனர், மேலும் சிலர் தலை அறுபட்டனர். இன்னும் சிலர் கவசங்கள் பிளந்து, உடல்கள் சிதைந்து மாண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்களில் பலர், பூமியில் விழுந்து ஒன்றாக அழிந்தனர்.

போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசர்களைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, {அந்த இடத்தை நோக்கித்} தன் தேரில் முன்னேறி வந்தான். கொல்லப்பட்ட போராளிகளின் பின் பக்கத்தைப் பாதுகாத்த தேர்வீரர்களில் முப்பத்திரண்டு {32} பேரும் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். பார்த்தனை {அர்ஜுனனைச்} சூழ்ந்த அவர்கள் அனைவரும், உரத்த நாணொலி கொண்ட தங்கள் விற்களை வளைத்து, மலைச்சாரலில் நீரை பெருமளவில் பொழியும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணை மழையை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தனர்.

அந்தப் போரில், கணைமாரியால் பீடிக்கப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, எண்ணெயில் தோய்த்த {தோய்த்துக் கூராக்கப்பட்ட} அறுபது {60} கணைகளால் பின்புறத்தைப் பாதுகாத்தவர்களான அவர்கள் அனைவரையும் {யமனுலகு} அனுப்பி வைத்தான். அந்த அறுபது தேர்வீரர்களையும் வீழ்த்திய ஒப்பற்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் இதயம் நிறைந்தான் {மனக்களிப்படைந்தான்}. அம்மன்னர்களின் படைகளையும் கொன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, {அடுத்து} பீஷ்மரைக் கொல்ல விரைந்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, தனக்கு முன்னணியில் பல (பிற) மன்னர்களையும் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக அவனிடம் விரைந்து வந்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறும் அந்தப் போராளிகளைக் கண்ட, சிகண்டியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், அர்ஜுனனின் தேரைப் பாதுகாக்க விரும்பி, கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் கொண்டு முன்னேறினர்.

திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடன் {சுசர்மனுடன்} தன்னை நோக்கி முன்னேறிவரும் அந்தத் துணிச்சல்மிக்கவர்களைக் கண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அந்தப் போரில் அவர்களைச் சிதைத்தான். பிறகு, பீஷ்மரை அணுக விரும்பிய அந்தப் புகழ் பெற்ற வில்லாளி {அர்ஜுனன்}, துரியோதனனையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலைமையிலான பிற மன்னர்களையும் கண்டான். பெரும் சக்தியுடன் போரிட்டு, பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பிய அவ்வீரர்களை ஒரு கணத்தில் தடுத்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், அளவிலா ஆற்றல், மிகுந்த பலம், பெரும் மனவுறுதி ஆகியவற்றைக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், துரியோதனன், ஜெயத்ரதன் மற்றும் பிறரை தவிர்த்துவிட்டு, கையில் வில் மற்றும் அம்புடன் அந்தப் போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி இறுதியில் முன்னேறினான்.

கடும் ஆற்றல், அளவிலா புகழ் ஆகியவற்றைக் கொண்ட உயர் ஆன்ம யுதிஷ்டிரனும், கோபத்தால் தூண்டப்பட்டு, தனது பங்காக ஒதுக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனைப் {சல்லியனைப்} [1] போரில் தவிர்த்துவிட்டு, பீமன் மற்றும் மாத்ரி மகன்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிப் போரிடுவதற்காக விரைவாகச் சென்றான். ஒன்றாகக் கூடியிருந்த பாண்டு மகன்கள் அனைவராலும் போரில் தாக்கப்பட்டாலும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவரும், கங்கை மற்றும் சந்தனுவின் உயர் ஆன்ம மகனுமான அவர் {பீஷ்மர்}, சற்றேனும் நடுங்கவில்லை.

[1] பீஷ்ம பர்வம் பகுதி 84ல் சகாதேவனால் வீழ்த்தப்பட்ட சல்லியன் மூர்ச்சை தெளிந்து யுதிஷ்டிரனைப் போரில் சந்திக்கிறான். எனினும் யுதிஷ்டிரன், சல்லியனைத் தவிர்த்துச் செல்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம்.

கடும்பலமும், பெரும் சக்தியும், இலக்கில் உறுதியும் கொண்ட மன்னன் ஜெயத்ரதன், போரில் முன்னேறி, தன் சிறந்த வில்லைக் கொண்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரின் விற்களையும் [2] பலத்துடன் வெட்டி வீழ்த்தினான். கோபம் தூண்டப்பட்டவனும், ஒப்பற்றவனுமான துரியோதனன், தன் நிலை குறித்த கோபத்தில், நெருப்பின் சுடர்களுக்கு ஒப்பான கணைகளால் யுதிஷ்டிரன், பீமசேனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்}, பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தாக்கினான். மேலும், கிருபர், சலன், சித்திரசேனன் ஆகியோரின் கணைகளாலும் துளைக்கப்பட்ட பாண்டவர்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) ஒன்று சேர்ந்திருந்த தைத்தியர்களின் கணைகளால் துளைக்கப்பட்ட தேவர்களைப் போலக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தனர்.

[2] இங்கே அர்ஜுனன் இல்லை முந்தைய பத்திகளிலேயே அர்ஜுனன் ஜெயத்ரதனையும், துரியோதனனையும் தவிர்த்துவிட்டுச் செல்கிறான் என்பதை நினைவில் கொள்க. காண்டீவம் இங்கே வீழவில்லை.

சந்தனு மகனால் {பீஷ்மரால்} ஆயுதம் வெட்டப்பட்டு ஓடிக்கொண்டிருந்த சிகண்டியைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் கோபத்தால் நிறைந்தான் [3]. அப்போரில் சிகண்டியிடம் கோபத்துடன் பேசிய அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, "உன் தந்தையின் முன்னிலையில் என்னிடம், "உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பிரகாசமிக்கச் சூரியனின் நிறத்தைக் கொண்ட என் கணைகளால் நான் கொல்வேன். உண்மையாகவே நான் இதைச் சொல்கிறேன்" என்று அப்போது நீ சொன்னாய். அஃதே உனது உறுதிமொழியாகும். தேவவிரதரை {பீஷ்மரை} நீ போரில் கொல்லாத வரை, உனது உறுதிமொழியை நிறைவேற்றாதவனாகவே நீ இருப்பாய். ஓ! வீரா {சிகண்டியே}, நிறைவேறா உறுதிமொழியைக் கொண்டவனாக இராதே.

[3] சிகண்டியின் ஆயுதத்தைப் பீஷ்மர் வெட்டியிருக்கிறார் என்றால், அவனுடன் போரிட்டாரா? அல்லது அவன் ஏவிய ஆயுதத்தை மட்டும் வெட்டினாரா? என்பது தெரியவில்லை.

உனது அறம், குலம், புகழ் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வாயாக. பயங்கர மூர்க்கம் கொண்ட பீஷ்மர், கடும் சக்தி கொண்ட தனது எண்ணற்ற கணைகளால் எனது படைகளை எரித்து, காலனைப் போல ஒரு கணத்தில் அனைத்தையும் அழிப்பதைப் பார். உனது வில்லறுபட்டு, போரைத் தவிர்த்துவிட்டு, சந்தனுவின் அரசமகனால் {பீஷ்மரால்} வீழ்த்தப்பட்டு, உனது சொந்தங்களையும் சகோதரர்களையும் கைவிட்டுவிட்டு நீ எங்கே செல்லப் போகிறாய்? இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான் என்பது உனக்குத் தெரியவில்லையே.  ஓ! வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய்? [4]" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

[4] இந்த இடத்தில் தான் ஏற்றிருக்கும் பம்பாய் உரை ajnayamanas cha என்று சொல்வதாகவும், வங்காள உரை தவறானதாகத் தெரிகிறது என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் இந்த இடத்தில்: "நன்றாகத் தொடங்கப்பட்டிருக்கிற பெரும் போரில் வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} பின்புறம் நிற்கையிலே, பூமியில் பீஷ்மரை விடப் புகழ் பெற்றவனான நீ எப்படிப் பயத்தை இப்பொழுது பாராட்டலாம்?" என்று இருக்கிறது. இந்தத் தென்னகப் பதிப்பும் தவறானதாவே இருக்கக்கூடும்.

பலமான காரணத்துடன் கூடியதாக {நியாயமானதாக} இருந்தாலும் கடுமையுடன் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம சிகண்டி, அவற்றை நல்ல ஆலோசனையாகக் கருதி, பீஷ்மரைக் கொல்வதில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டான். பீஷ்மர் மீது பாய்வதற்காக அப்போரில் பெரும் மூர்க்கத்துடன் சிகண்டி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கலங்கடிப்பதற்குக் கடினமான பயங்கர ஆயுதங்களால் சல்லியன் அவனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, அண்ட அழிவு நேரத்தின்போது சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்று பிரகாசத்துடன் (இப்படிக்) காட்சியளித்த அந்த ஆயுதங்களைக் (ஆக்னேயாஸ்திரங்களைக்} கண்டு கிஞ்சிற்றும் குழம்பவில்லை,.

தனது கணைகளால் அந்த அயுதங்களைத் தடுத்த வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, அசையாமல் அங்கேயே நின்றான். பிறகு, (சல்லியனின் அந்த நெருப்பு போன்ற ஆயுதங்களை [அந்த ஆக்னேயாஸ்திரங்களைக்]) கலங்கடிப்பதற்காக, மற்றொரு ஆயுதமான கடுமையான வருண ஆயுதத்தை {வருணாஸ்திரத்தை} அவன் {சிகண்டி} எடுத்தான். பின்னர், ஆகாயத்தில் நின்றிருந்த தேவர்களும், பூமியில் இருந்த மன்னர்களும் என அனைவரும், சல்லியனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கும் சிகண்டியின் வருண ஆயுதத்தைக் கண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில், உயர் ஆன்மா கொண்ட வீர பீஷ்மர்,  பாண்டுவின் மகனும், அஜமீட குலத்தவனுமான மன்னன் யுதிஷ்டிரனின் பலவண்ணங்களிலான கொடிமரத்தையும், வில்லையும் அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினார்.

அதன் பேரில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் யுதிஷ்டிரனைக் கண்டு, தனது வில்லையும் கணைகளையும் போட்டுவிட்டு, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமசேனன், அந்தப் போரில் கால்நடையாகவே ஜெயத்ரதனை நோக்கி விரைந்தான். பிறகு, ஜெயத்ரதன், யமதண்டம் போன்றவையும், கூர் முனை கொண்டவையுமான ஐநூறு {500} பயங்கரக் கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கிக் கையில் கதாயுதத்துடன் இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் பீமசேனனை அனைத்துப் புறங்களிலும் இருந்தும் துளைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்தவனும், மூர்க்கமானவனுமான விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்த இதயத்துடன், ஆரட்டாவில் [5] பிறந்தவையான சிந்துக்கள் மன்னனின் {ஜெயத்ரதனின்} குதிரைகள் அனைத்தையும் அப்போரில் கொன்றான்.

[5] அரேபியாவுக்குச் சற்றே வடக்கே, தென்கிழக்கு ஈராக்கில் உள்ள ஓர் இடமாகும் இந்த ஆரட்டா. கர்ண பர்வம் பகுதி 45லும் குறிப்பிடப்படும் இது கள்வர்களின் இடமாகச் சொல்லப்படுகிறது. இந்த இடம் சுமேரிய இலக்கியங்களில் அதிகம் குறிப்பிடப்படுகிறது. தொன்மங்களுக்கு வெளியே இந்த நகரத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

அதன்பிறகு, பீமசேனன் நடந்து வருவதைக் கண்டவனும், நிகரற்ற ஆற்றலைக் கொண்டவனும், தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான உமது மகன் (சித்திரசேனன்), அவனுக்கு {பீமனுக்கு} மரணத்தைக் கொடுப்பதற்காக உயர்த்திய ஆயுதங்களுடன் அவனை {பீமனை} நோக்கித் தன் தேரில் விரைந்தான். பீமனும், கையில் கதாயுதத்துடன் முழங்கிக் கொண்டே, உரக்கக் கத்திய படி அவனை {சித்திரசேனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். யமதண்டத்தைப் போன்றிருந்த அந்த உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்தைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், (தங்களுக்கு மத்தியில்) அது பாய்வதைத் தவிர்க்க விரும்பி, துணிச்சல் மிக்க உமது மகனை {சித்திரசேனனைக்} கைவிட்டுவிட்டு ஓடினார்கள் [6].

[6] வேறு ஒரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: "பீமன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மயக்கமுற்ற ஜெயத்ரதன், போரிடுவதை நிறுத்தி, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைவிட்டுவிட்டுச் சகுனியுடன் சேர்ந்து குருமன்னன் {துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமனும் விரைவாக முழங்கிக் கொண்டு ஜெயத்ரதனை அச்சுறுத்திக் கதாயுதத்துடன் எதிர்த்தான். யமதண்டம் போன்ற அந்தக் கதாயுதம் பீமனால் தூக்கப்பட்டதைத் கண்ட அந்தக் கௌரவர்கள் அனைவரும், நெருங்கியதும், நன்றாக அடிப்பதும், அதிபயங்கரமானதும், புத்தி மயக்கத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போரில் கதாயுதத்தின் உக்கிரப் பாய்ச்சலை விலக்க எண்ணி, உமது மகனை {சித்திரசேனனை} விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்" என்று இருக்கிறது. கங்குலியை விட இந்த வர்ணனைத் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

புலனுணர்வைக் குழப்புவதும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான (மனிதர்களின்) அந்த நொறுங்கலில் {போரில்}, தன்னை நோக்கி வரும் கதாயுதத்தைச் கண்டாலும், சித்திரசேனன் தனது புலனுணர்வுகளை இழக்கவில்லை. பளபளக்கும் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட அவன் {சித்திரசேனன்} தனது தேரைக் கைவிட்டுவிட்டு, மலைமுகட்டின் மேல் இருந்து குதிக்கும் சிங்கத்தைப் போல (தன் வாகனத்தில் இருந்து) கீழே தரையில் குதித்துக் காலாட்படை வீரனானான்.

அதே வேளையில் அந்த அழகிய தேரின் மேல் விழுந்த அந்தக் கதாயுதம், குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய அந்த வாகனத்தையே {தேரையே} அந்தப் போரில் அழித்து, ஆகாயத்தில் இருந்து பூமியில் தளர்ந்து விழும் சுடர்மிக்க ஓர் எரிநட்சத்திரத்தைப் போலப் பூமியில் விழுந்தது {கதாயுதம்}. அற்புதம் நிறைந்த அந்த உயர்ந்த சாதனையை {சித்திரசேனன் தப்பியதைக்} கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்தன. அவை {அந்தத் துருப்புகள்} அனைத்தும் ஒன்றாகக் கூடி அந்தப் போர்க்களத்தில் பெருமுழக்கம் செய்தன. மேலும் வீரர்கள் அனைவரும் (தாங்கள் என்ன கண்டார்களோ, அதற்காக) உமது மகனை {சித்திரசேனனை}  பாராட்டினார்கள்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top