Rama installed in sovereignty! | Vana Parva - Section 289b | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமன் தன் பரிவாரங்கள், லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டது. வழியில் கிஷ்கிந்தையில் இறங்கி அங்கதனுக்குப் பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டியது; நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ஹனுமானைத் தூதனுப்பியது; ராமனின் பட்டாபிஷேகம்; சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்குத் தகுந்த வெகுமதிகளை ராமன் கொடுத்தனுப்பியது; ராமன் கோமதியாற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளைச் செய்தது...
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, விழியோரம் சிவந்த ராமன் இப்படிப் பதிலளித்ததும், மகிழ்ந்த அவனது தந்தை {தசரதன்} "அயோத்தி திரும்பி நாட்டை ஆட்சி செய்! ஓ! பெரும் புகழ்கொண்டவனே {ராமா}, உனது {வனவாசத்தின்} பதினான்கு {14} வருடங்கள் முடிவடைந்தன" என்றான். தசரதனால் இப்படிச் சொல்லப்பட்டு, ராமன் தேவர்களை வணங்கி, நண்பர்களால் வழிபடப்பட்டு, புலோமனின் மகளுடன் இணைந்த தேவர்கள் தலைவனைப் போலத் தனது மனைவியுடன் இணைந்தான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் அவிந்தியனுக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான். திரிஜடை என்ற ராட்சச பெண்ணுக்கு செல்வங்களையும் மரியாதைகளையும் அளித்தான். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுடன் இருந்த பிரம்மன், ராமனிடம், "ஓ கௌசல்யையைத் தாயாகக் கொண்டவனே {ராமா}, உனது இதயத்தில் இருக்கும் எந்த வரங்களை நாங்கள் கொடுப்பது?" என்று கேட்டான்.