Showing posts with label தியூத பர்வம். Show all posts
Showing posts with label தியூத பர்வம். Show all posts

Wednesday, October 30, 2013

அந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80

Brahmanas on strike | Sabha Parva - Section 80 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த பயத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில விஷயங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது.


வைசம்பாயனர் சொன்னார், "பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் துயரத்தில் மூழ்கினான். அவன் அமைதியற்று கவலையுடன் அமர்ந்து துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி, "ஓ பூமியின் தலைவா, முழு பூமியையும், அதன் செல்வங்களையும் பெற்று, பாண்டவர்களையும் நாடு கடத்திய பிறகு இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்?" என்று கேட்டான்.


திருதராஷ்டிரன், "கூட்டணி படைகளின் துணையுடன் பெரும் ரதங்களில் போர் புரியும் வீரர்களில் காளைகளான பாண்டுவின் மகன்களைப் போரில் சந்திக்க வேண்டிய ஒருவன் எப்படி துக்கப்படாமல் இருக்க முடியும்?" என்று கேட்டான்.

சஞ்சயன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது தவறான செயலாலேயே இந்தப் பெரும் பகைமை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது நிச்சயம் மொத்த உலகிற்கும் அழிவைக் கொண்டு வரும். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் தடுக்கப்பட்டும், தீய மனம் கொண்ட உமது வெட்கங்கெட்ட மகன் துரியோதனன், தனது சூத தூதுவனிடம் {பிராதிகாமினிடம்}, பாண்டவர்களின் அன்புக்குரிய அறம்சார்ந்த மனைவியை {திரௌபதியை} சபைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டான். யாருக்கு தோல்வியையும் அவமானத்தையும் தேவர்கள் கொடுக்கப்போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான். அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் அந்த மனிதனைக் காண வைக்கும். ஆதரவற்ற பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} சபையின் நடுவே இழுத்து வந்து அந்தப் பாவிகள் பயங்கரமான கொடூரமான அழிவை மொத்தமாகப் பெற்றுக் கொண்டனர். *பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்து, கடமையையும், அனைத்து அறநெறிகளையும் அறிந்து, அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட துருபதன் மகளை {திரௌபதியை}, போலிப் பகடையாட்டம் {பொய்யாட்டம்} ஆடும் துரியோதனனைத் தவிர வேறு யாரால் இப்படி அவமதித்து சபைக்குக் கொண்டு வர முடியும்? கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தி மாதவிலக்காக இருந்த அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, சபைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பாண்டவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, நாடு பிடுங்கப்பட்டு, ஆடைகளும் களைந்து, அழகிழந்து, அனைத்து மகிழ்ச்சியையும் தொலைத்து, அடிமை நிலையில் இருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாள் {திரௌபதி}. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்ட அவர்கள் தங்கள் வீரத்தைக்காட்ட இயலாமல் இருந்தனர். அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனும் கர்ணனும் கொடுமையான மற்றும் கடுமையான வார்த்தைகளை, அப்படி நடத்தப்படத் தகாதவளான கோபம் கொண்ட கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} பேசினர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் அச்சமூட்டும் தீமையின் முன் அறிகுறி என எனக்கு படுகிறது" என்றான்.

திருதராஷ்டிரன், "ஓ சஞ்சயா,துயரத்தில் இருக்கும் துருபதன் மகளின் {திரௌபதியின்} பார்வையே முழு உலகத்தையும் எரித்துவிடும். அப்படியிருக்கும் போது எனது ஒரு மகனாவது உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா? பாண்டவர்கள் மணந்த மனைவியான அழகும் இளமையும் கூடிய அறம்சார்ந்த கிருஷ்ணை {திரௌபதி} சபையில் இழுத்து வரப்பட்ட போது, பாரதர்களின் {துரோணாதிபதிகளின்} மனைவிகள் காந்தாரியுடன் கூடி பயத்தால் ஓலமிட்டு அழுதனர். இப்போது கூட அவர்கள் தினமும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர். திரௌபதி இப்படி அவமதிக்கப்பட்ட கோபத்தால் அந்தணர்கள் அன்று மாலை செய்ய வேண்டிய அக்னிஹோத்திரச் சடங்கைச் செய்யவில்லை. பிரளய காலத்தில் நடப்பது போல காற்று கடும்பலத்துடன் வீசியது. அங்கே கடும் இடியுடன் கூடிய புயலும் ஏற்பட்டது. எரிகற்கள் விண்ணிலிருந்து விழுந்தன. காலமற்ற காலத்தில் சூரியனை ராகு விழுங்கி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தினான். நமது போர் ரதங்கள் திடீரென எரிந்தன. அவற்றின் கொடிக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இவை அனைத்தும் பாரதர்களுக்கு {துரோணாதிபதிகளுக்கு} நேரப்போகும் தீங்கினைப் பகன்றன. துரியோதனனின் வேள்வி அறையில் இருந்து நரிகள் ஊளையிட்டன. எல்லாபுறத்திலிருந்தும் கழுதைகள் பதிலுக்கு கத்த ஆரம்பித்தன. பிறகு, பீஷ்மர், துரோணர், கிருபர், சோமதத்தன், உயர் ஆன்ம பாஹ்லீகன் ஆகியோர் சபையை விட்டுச் சென்றனர். இதன்பிறகுதான் நான் விதுரனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ கிருஷ்ணா {திரௌபதி} நான் உனக்கு வரங்களை வழங்குகிறேன். நீ என்ன கேட்கிறாயோ அதை நிச்சயம் கொடுக்கிறேன்" என்றேன். பாஞ்சால இளவரசி பாண்டவர்களின் விடுதலையைக் கோரினாள். எனது சுய விருப்பத்தின் பேரில் நான் பாண்டவர்களை விடுவித்து, அவர்களை {பாண்டவர்களை} அவர்களது ரதங்கள் விற்கள் மற்றும் அம்புகளுடன் {அவர்களது தலைநகருக்கு-காண்டவப்பிரஸ்தத்திற்கு/ இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பிப் போக கட்டளையிட்டேன். அதன் பிறகு தான் விதுரன் "சபைக்குள் கிருஷ்ணையை இழுத்து வந்தது நிச்சயம் பாரத குலம் அழிய வழிவகுக்கும். இந்தப் பாஞ்சால மன்னனின் மகன் {திரௌபதி} களங்கமற்ற ஸ்ரீ ஆவாள். தெய்வீகப் பிறவியான அவள் {திரௌபதி} பாண்டவர்கள் மணந்த மனைவியாக இருக்கிறாள். இவளுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பாண்டுவின் கோபக்கார மகன்கள் மன்னிக்க மாட்டார்கள். விருஷ்ணி குல வில்லாளிகளும் மன்னிக்க மாட்டார்கள். பெரும் பலம் வாய்ந்த வீரர்களான பாஞ்சாலர்களும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். தடுக்க முடியாத வீரம் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} துணை கொண்டு, நிச்சயம் அர்ஜுனன் பாஞ்சாலப் படையுடன் திரும்பி வருவான். பெரும் பலம் வாய்ந்த பீமசேனனும் தனது கதாயுதத்தை யமனைப் போலச் சுழற்றிக் கொண்டு வருவான். பீமனுடைய கதாயுதத்தின் பலத்தை இந்த மன்னர்களால் தாங்க முடியாது. ஆகையால், ஓ மன்னா, பாண்டவர்களிடம் பகைமையில்லாமல் எப்போதும் அமைதியும் சமாதானமுமாக இருப்பதே சிறந்ததாகப் படுகிறது. பாண்டுவின் மகன்கள் எப்போதுமே குருக்களைவிட {கௌரவர்களைவிட} பலசாலிகள்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, **சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான் என்பதை நீர் அறிவீர். ஆகையால், ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு சமாதானம் செய்து கொள்வதே உமக்குத் தகும். எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, ஓ மன்னா, இருகட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தும். ஒ மன்னா, நீர் இந்த வழியில் நடந்து கொண்டால், நிச்சயம்  நற்பேறைப் பெறுவீர்." என்றான். இவ்வாறே கவல்கனின் மகனான விதுரன் அறமும் பொருளும் சார்ந்த வார்த்தைகளில் என்னிடம் பேசினான். எனது மகன் மீது நான் கொண்ட பாசத்தினால், நான் அவனது {விதுரனது} ஆலோசனையை ஏற்கவில்லை" என்றான் {திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}.

************ சபாபர்வம் முற்றும் ************

*பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்த திரௌபதி,

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
அமானுஷ்ய பிறப்புகள் - ஆதிபர்வம் பகுதி 167
அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169

--------------------------------------------------------------------------------------
**சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான் 

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

ஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 14 ஆ
எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15 
அர்ஜுனன் கொடுத்த ஊக்கம்! - சபாபர்வம் பகுதி 16
ராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 17
சுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை - சபாபர்வம் பகுதி 18
ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19
எதிரியை அழிக்க கிளம்பிய மூன்று வீரர்கள் -சபாபர்வம் பகுதி 20
ஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 21
"அடப்பாவி! நீயா அப்பாவி?" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22 
பதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 23
ஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24

Tuesday, October 29, 2013

துரோணர் பயந்தாரா? - சபாபர்வம் பகுதி 79

Did Drona fear? | Sabha Parva - Section 79 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

விதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து துர்சகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது....

வைசம்பாயனர் சொன்னார், "பெரும் முன்னறியும் திறன் {Foresight} கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்}, "தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான்? அர்ஜுனன் எப்படிச் சென்றான்? மாத்ரியின் மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர்? ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார்? சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள்? நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்" என்றான்.

விதுரன், "குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது முகத்தைத் துணியால் மூடிச் சென்றான். ஓ மன்னா, பீமன், தனது பெரும் கரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றான். ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மன்னனைத் தொடர்ந்து சென்று மண்ணை சுற்றிலும் வீசிச் சென்றான். மாத்ரியின் மகனான சகாதேவன், தன் மேனியில் வண்ணம் பூசிச் சென்றான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மனிதர்களில் அழகான நகுலன் தன் மேனியில் அழுக்கு பூசிக் கொண்டு பெரும் துயரத்துடன் சென்றான். பெரிய கண்களை உடைய அழகான திரௌபதி, கலைந்திருந்த தனது முடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே கண்ணீருடன் சென்றாள். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தௌமியர் தனது கையில் குசப் {தர்ப்பைப்} புல்லை வைத்துக் கொண்டு சாமவேதத்தில் இருந்து யமனைக் குறிக்கும் பயமூட்டும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சாலை வழி சென்றார்" என்றான்.


திருதராஷ்டிரன், "ஓ விதுரா, பாண்டுவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லும்போது ஏன் இப்படி வித்தியாசமான கோலத்தில் சென்றனர்?" என்று கேட்டான்.

விதுரன், "உமது மகன்களால் துன்புறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து நாடும் செல்வமும் திருடப்பட்டு இருந்தாலும், ஞானமும் நீதியும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் மனம் அறத்தின் பாதையில் இருந்து வழுவவில்லை. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் உனது பிள்ளைகளிடம் அன்புடனேயே இருக்கிறான். நியாயமற்ற முறையில் அனைத்தையும் இழந்தாலும், அவன் {யுதிஷ்டிரன்} பெரும் கோபம் கொண்டிருந்தாலும், "எனது கோபப்பார்வையால் மக்களைப் பார்த்து அவர்களை எரித்துவிடக் கூடாது" என்று கண்களைத் திறக்காமல் செல்கிறான். அதனாலே அவன் {யுதிஷ்டிரன்} முகத்தை மூடிச் செல்கிறான்.

ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீமன் ஏன் அப்படிச் செல்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேளும். "எனது கரங்களின் பலத்திற்கு நிகரானவர் யாருமில்லை" என்று நினைத்துக் கொண்டு தனது பெரும் கரங்களை அடிக்கடி விரித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். ஓ மன்னா, தனது கரத்தின் வலிமையில் கர்வம் கொண்ட விருகோதரன் {பீமன்}, அந்தக் கரங்களைக் கொண்டு எதிரிகளின் செயல்களுக்காக அவர்களை அவன் {பீமன்} என்ன செய்யப் போகிறான் என்பதைக் காட்டிக் கொண்டு செல்கிறான்.

இரண்டு கரங்களையும் (காண்டீவத்தைத் தாங்கிப்} பயன்படுத்தவல்ல குந்தியின் மகனான அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி சென்று, மணல் துகள்களை தூவி, போர்களத்தில் தனது கணைகளின் மழையைக் குறிப்பால் உணர்த்துகிறான். ஓ பாரதா, மணற்துகளை எப்படி எளிதாக அவனால் வீச முடிகிறதோ அப்படித் தனது அம்புகளின் மழையை (போர்க்களத்தில்) எளிதாக எதிரிகள் மீது பொழிவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறான்.

சகாதேவன் தனது முகத்தில் வண்ணம் பூசி, "இந்த துயர் நிறைந்த நாளில் என்னை யாரும் அறிந்து கொள்ள வேண்டாம்" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான். ஓ மேன்மையானவரே,  நகுலன் தனது மேனியை புழுதியால் கறைபடுத்தி, "இப்படிச் செய்யவில்லை என்றால், என்னைப் பார்க்கும் பெண்களின் இதயங்களைக் கொள்ளையிடுவேன்" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான்.

கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே, "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆவிக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.

ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் கற்ற தௌமியர், தனது கையில் தெற்மேற்கு நோக்கிய குசப்புல்லை கொண்டு, முன்னணியில் நடந்து, யமனைக் குறிக்கும் சாம வேத மந்திரங்களை உரைத்துச் செல்கிறார். ஓ ஏகாதிபதி, அந்த கற்ற அந்தணரும், "போர்க்களத்தில் பாரதர்கள் கொல்லப்படும் போது, குருக்களின் புரோகிதர்கள் இப்படியே (இறந்தவர்களின் நன்மைக்கான} சோம மந்திரங்களைப் பாடிச் செல்வர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.

பெரும் துயரத்தில் இருந்த குடிமக்கள் அனைவரும், "ஐயோ, ஐயோ, எங்கள் தலைவர்கள் செல்கிறார்களே. ச்சீ… ச்சீ… பேராசை கொண்ட குருகுலத்தின் மூத்தவர்கள் சிறுபிள்ளைகள் போல் நடந்து கொண்டு பாண்டுவின் வாரிசைகளை ஒதுக்கினரே. ஐயோ, பாண்டுவின் மகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாங்கள், தலைவன் இல்லாமல் இருப்போமே. தீய, பேராசை கொண்ட குருக்களிடம் நாங்கள் எப்படி அன்புடன் இருக்க முடியும்?" என்றனர்.

ஓ மன்னா இப்படியே பெரும் மனோ சக்தி கொண்ட குந்தியின் மகன்கள், தங்கள் இதயத்தில் இருந்த தீர்மானங்களைக் குறிப்புகளாலும், நடத்தையாலும் குறிப்பிட்டு சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதும், வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது, பூமி நடுங்கத் தொடங்கியது. அமாவாசை இல்லாத போதே சூரியனை ராகு விழுங்க வந்தான். நகரத்தை வலப்புறம் கொண்டு {இடப்புறமாக} எரிகற்கள் விழுந்தன. {ஊரை அபஸவ்யமாகச் சுற்றி எரிகொள்ளி விழுந்தது என்கிறது ம.வீ.ரா. பதிப்பு}. நரிகளும், கழுகுகளும், காக்கைகளும், மற்ற இறைச்சி உண்ணும் விலங்குகளும் பறவைகளும், தேவர்களின் கோவில்களில் இருந்தும், புனிதமான மரங்களின் உச்சியிலிருந்தும், சுவர்கள் மற்றும் வீடுகளின் மேலிருந்தும் உரக்க கத்த ஆரம்பித்தன. ஓ மன்னா, உமது தீய ஆலோசனைகளின் விளைவால் இந்த இயல்புக்கு மிக்க பேரிடர் அறிகுறிகள், பாரதர்களின் அழிவைக் குறிக்கும்படி காணப்படவும் கேட்கப்படவும் செய்தன.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இப்படி மன்னன் திருதராஷ்டிரனும், ஞானமுள்ள விதுரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது, அந்த கௌரவர்கள் சபையில், அனைவரின் கண்களுக்கும் முன்னால், தேவலோக முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்} தோன்றினார். அவர்கள் அனைவருக்கும் முன்னால் தோன்றிய அவர் {நாரதர்}, பயங்கரமான வார்த்தைகளால், "இன்றிலிருந்து பதினான்காவது வருடம், துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள்" என்று சொன்னார். வேத அருளைத் தன்னகத்தே கொண்ட அந்த முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்}, இப்படிச் சொல்லிவிட்டு, வானத்தில் கடந்து, காட்சியில் இருந்து மறைந்தார்.

பிறகு, துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி, நாட்டை அவரிடம் {துரோணரிடம்} ஒப்படைத்தனர். பிறகு துரோணர், பகைமையும் கோபமும் கொண்ட துரியோதனன், துச்சாசனன், கர்ணன் மற்றும் அனைத்து பாரதர்களிடமும், "பாண்டவர்கள் தெய்வீக மூலம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து, மரியாதையுடன் இதயப்பூர்வமாக என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன்.

ஆனால் விதி வலியது, அதை என்னால் மீற முடியாது. பகடையில் தோற்ற பாண்டுவின் மகன்கள், தங்கள் ஏற்ற உறுதிக்கு ஏற்றவாறு நாடு கடந்து செல்கிறார்கள். அவர்கள் கானகத்தில் பனிரெண்டு வருடங்கள் வாழ்வார்கள். இந்த காலத்தில் அவர்கள் அங்கே பிரம்மச்சரிய வாழ்முறையைக் கைக்கொண்டு, பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் திரும்பி தங்கள் எதிரிகளை வஞ்சம் தீர்க்கப் போகின்றனர். முன்பு நடந்த ஒரு நட்பு ரீதியான சச்சரவில் நான் துருபதனை நாட்டை இழக்கச் செய்தேன். ஓ பாரதா {துரியோதனா} என்னால் அவனது நாடு கவரப்பட்டதால், அவன் ஒரு வேள்வி செய்து, {என்னைக் கொல்வதற்காக} ஒரு மகனைப் பெற்றான். யாஜர் மற்றும் உபயாஜரின் தவ வலிமையில், துருபதன் {வேள்வி} நெருப்பிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ற பெயர் கொண்ட மகனையும், களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி} என்ற மகளையும் பெற்றான். அவர்கள் இருவரும் வேள்வி மேடையில் எழுந்தவர்கள்.

பாண்டுவின் மகன்களுக்கு நடந்த திருமணத்தால் அந்தத் திருஷ்டத்யும்னன் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} மைத்துனனாகி, அவர்களிடம் அன்புடன் இருக்கிறான். ஆகையால், அவனைக் {திருஷ்டத்யும்னன்} குறித்தே நான் அச்சப்படுகிறேன். தெய்வீகப் பிறப்பு பிறந்து, நெருப்பு போல பிரகாசிக்கும் அவன் {திருஷ்டத்யும்னன்} பிறக்கும்போதே வில், அம்பு மற்றும் கவசத்துடன் பிறந்தான். நானோ இறப்பு உள்ள மனிதன். ஆகையால், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} நான் மிகவும் அச்சம் கொள்கிறேன். அந்த எதிரிகளைக் கொல்லும் பர்ஷத்தனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான். நானும் அவனும் {திருஷ்டத்யும்னனும்} நேரடியாகப் போர்க்களத்தில் மோதும் நிலை வந்தால், நான் எனது உயிரை இழக்க நேரிடும்.

கௌரவர்களே, *திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான் என்ற பொது நம்பிக்கை இருக்கும் போது, இதை விட  பெரிய துன்பம் எனக்கு என்ன இருக்க முடியும்? அவன் {திருஷ்டத்யும்னன்} என்னைக் கொல்லவே பிறந்திருக்கிறான் என்று நான் கேள்விப்படுகிறேன். இதுவே உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. ஓ துரியோதனா, உன்னால் அந்தக் கொடுமையான அழிவுக்காலம் நெருங்கி வந்துவிட்டது. உனக்கு நன்மை பயக்கும் செயல்களை நேரம் கடத்தாமல் செய். பாண்டவர்களை நாடு கடத்திவிட்டதால், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதே. இந்த உனது மகிழ்ச்சி, பனிக்காலத்தில் பனை மரத்தின் அடியில் (குறுகிய காலம்) ஓய்வெடுப்பதைப் போலத்தான் நீடித்திருக்கும். ஓ பாரதா {துரியோதனா} பலதரப்பட்ட வேள்விகளைச் செய்து மகிழ்ந்து, நீ விரும்பு அனைத்தையும் கொடு. இன்றிலிருந்து பதினான்காவது வருடம் பேரிடர் உன்னை மூழ்கடிக்கும்" என்றார் {துரோணர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரோணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "ஓ க்ஷத்தா {விதுரா}, ஆசான் உண்மையைச் சொல்கிறார். நீ சென்று பாண்டவர்களை அழைத்து வா. அவர்கள் திரும்பி வர வில்லை என்றால், அவர்கள் மரியாதையுடனும், பாசத்துடனும் செல்லட்டும். அந்த எனது மகன்கள் {பாண்டவர்கள்} ஆயுதங்களுடனும், ரதங்களுடனும், காலாட் படையுடனும் சென்று அனைத்து நல்ல பொருளையும் பெற்று மகிழட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
------------------------------------------------------------------------------------------
*திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான்........

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

Sunday, October 27, 2013

குந்தியின் அழுகை | சபா பர்வம் - பகுதி 78

Kunti's lamentation | Sabha Parva - Section 78 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

திரௌபதி குந்தியிடமும் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை பெறுவது; குந்தி திரௌபதியைச் சமாதானப்படுத்தியது; பாண்டவர்களைக் கண்ட குந்தி துக்கம் கொண்டது; பாண்டவர்கள் குந்தியைச் சமாதானப்படுத்தியது, பாண்டவர்கள் கிளம்பியது; விதுரன் குந்தியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது; திருதராஷ்டிரன் விதுரைரை அழைத்தது...

வைசம்பாயனர் சொன்னார், "பின்பு அனைவரும் கிளம்பத் தயாரான போது சிறப்புமிக்க பிருதையிடம் {குந்தியிடம்} திரௌபதி சென்று பிரியாவிடை கோரினாள். துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை கோரினாள். தகுதியுடையவர்கள் அனைவரையும் வணங்கி, ஆரத்தழுவி செல்ல அவள் {திரௌபதி} விரும்பினாள். பின்னர் பாண்டவர்களின் உள் அறைக்குள் இருந்து ஒப்பாரியும் அழுகையும் சத்தமாக எழுந்தது. அவர்கள் பயணப்படுவதற்கு முன்னர், திரௌபதியைக் கண்ட குந்தி, மிகவும் துன்புற்று, துயரத்தால் அடைபட்ட குரலுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.

"ஓ குழந்தாய் {திரௌபதி}, இந்தப் பேரிடரைக் கண்டு அஞ்சாதே. பெண்களின் கடமைகளை நன்கு அறிந்தவள் நீ. உனது நடத்தைகள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கின்றன. ஓ இனிய புன்னகை உடையவளே, உனது தலைவர்களுக்கு நீ ஆற்ற வேண்டிய கடமையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. கற்புடன் சாதனைகள் கொண்டவள் நீ. உனது குலத்துக்கு ஏற்ற வகையிலும், புகுந்த வீட்டின் குலத்துக்கு ஏற்ற வகையிலும் உனது  தன்மைகள் இருக்கின்றன. உனது கோபத்தால் எரியாது போன கௌரவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. 


ஓ குழந்தாய், எனது வேண்டுதல்களால் பாதுகாப்பாகச் சென்று வா. தவிர்க்க முடியாத காரியங்களில் நல்ல பெண்கள் மனவேற்றுமை கொள்வதில்லை. அனைத்திற்கும் மேலான அறத்தால் காக்கப்பட்டு, விரைவில் நீ நற்பேறு பெறுவாய். கானகத்தில் வாழும்போது, எனது மகன் சகாதேவனைக் கவனித்துக் கொள். அவனது {சகாதேவனது} மனம் இந்த பேரிடரில் மூழ்கிப்போகாமல் பார்த்துக் கொள்" என்றாள். "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி கண்ணீரால் நனைந்து, ஒற்றையாடையில் ரத்தக்கறையுடன், முடிகள் கலைந்து இருந்த திரௌபதி தனது மாமியாரை விட்டு சென்றாள். அழுது ஒப்பாரி வைத்து சென்ற அவளை {திரௌபதியை} பிருதை {குந்தி} துயரத்துடன் தொடர்ந்தாள். அவள் {குந்தி} அப்படி வெகுதூரம் சென்றிருக்கமாட்டாள், அதற்குள் அவள் {குந்தி} ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி, அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டு வருவதைக் கண்டாள். அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், நண்பர்கள் பாவமாக நிற்பதையும் கண்டாள். மேலிட்ட தாயுணர்ச்சியின் காரணமாக, குந்தி அந்த நிலையில் இருந்த தனது மகன்கள் அனைவரையும் ஆரத்தழுவி துயரத்தால் தடைபட்ட சொற்களுடன் இப்படிச் சொன்னாள்.

"அறம் சார்ந்து, நல்ல நடத்தை கொண்டு, அனைத்து அற்புதமான குணங்களும் மரியாதைக்குரிய நடத்தையும் கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் உயர்ந்த மனம் படைத்தவர்கள். எப்போதும் பெரியவர்களின் பணிவிடைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். தேவர்களுக்கும் வேள்விகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருந்த உங்களை இந்தப் பேரிடர் எப்படி ஆட்கொண்டது? இந்தப் பேறு மாறுவது எப்போது?

யாருடைய தீமையால் இந்தப் பாவம் உங்களை ஆட்கொண்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஐயோ நானே உங்களை ஈன்றவள். என் கேடுகாலத்தால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. இதனால் தான் அற்புதமான அறங்களைக் கொண்ட உங்களுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தது. சக்தியால், வீரத்தால், பலத்தால், உறுதியால், பராக்கிரமத்தால் நீங்கள் குறைந்தவர்களல்லர். சொத்துகளையும் உடைமைகளையும் இழந்து, பாதைகளற்ற கானகத்தில் எப்படி ஏழ்மையில் வாழப்போகிறீர்கள்?

கானக வாழ்க்கைதான் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்திருந்தால், {எனது கணவர்} *பாண்டு இறந்த போதே, சதசிருங்க மலையில் இருந்து ஹஸ்தினாபுரம் வந்திருக்க மாட்டேனே. உங்கள் தந்தை {பாண்டு} அதிர்ஷ்டசாலி, அவர் வருநலம் தெரிந்தவராக {தீர்க்கதரிசனுத்துடன்} தனது தவ வாழ்க்கையின் கனிகளை அனுபவித்து, விருப்பம் நிறைவேறி, மகன்களைப் பற்றி எந்த வலியும் இல்லாமல் சொர்க்கத்திற்கு உயர்ந்தார். அறம் சார்ந்த மாத்ரியும் அதிர்ஷ்டசாலியே, அவள் {மாத்ரியும்} பின்னால் நடக்கப் போவதை அறிந்தே உயர்ந்த பாதையை அடைந்து எல்லா அருளையும் பெற்றாள். மாத்ரி என்னை அவளது வசிப்பிடமாகவும், தனது மனமாகவும் நினைத்து, அவளது பாசத்தை என்னில் நிலைக்க வைத்தாள்.

ஓ.. சீ... சீ... எனக்கு உயிரின் மேலிருந்த ஆசையினால் அல்லவா இன்று துயரத்தை அனுபவிக்கிறேன். குழந்தைகளே, நீங்கள் எனக்கு அற்புதமானவர்கள், அன்பானவர்கள். உங்களை நான் பெரும் சிரமத்திற்கிடையில் பெற்றேன். என்னால் உங்களை விட முடியாது. நானும் உங்களுடன் வருகிறேன். ஐயோ, ஓ கிருஷ்ணா {திரௌபதி} என்னை ஏன் விட்டுச் செல்கிறாய்? உயிருடன் கூடிய அனைத்தும் நிச்சயம் அழியும். தத்தா {பிரம்மா} எனது இறப்பை விதிக்க மறந்துவிட்டாரா? அப்படித்தான் இருக்கும். அதனால் தான் எனது உயிர் போகாமல் இன்னும் இருக்கிறது.

ஓ கிருஷ்ணா {கிருஷ்ணன்}, துவாரகையில் இருப்பவனே, சங்கர்ஷணனின் {பலராமனின்} தம்பியே, நீ எங்கிருக்கிறாய்? இந்தத் துயரத்திலிருந்து என்னையும் இந்த மனிதர்களில் சிறந்தவர்களையும் ஏன் விடுவிக்காமல் இருக்கிறாய்? ஆதியும் அந்தமும் இல்லாத நீ, உன்னை நினைப்பவர்களை விடுவிப்பாய் என்று சொல்கிறார்களே. அது ஏன் இப்போது பொய்யானது. இந்த எனது மகன்கள் எப்போதும் அறத்துடன் இணைந்து, உயர்ந்தவர்களாக, நல்ல புகழும் வீரமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த துயரம் தகாது. அவர்களுக்கு கருணை காட்டு.

அறநெறிகளும் உலகளாவிய நடைமுறைகளையும் அறிந்த பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூத்தவர்கள் இருக்கும்போது இந்த பேரிடர் எப்படி வந்தது? ஓ பாண்டு, ஓ மன்னா, நீர் எங்கே இருக்கிறீர்? உமது பிள்ளைகள் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடத்தப்படும்போது அமைதியாக ஏன் இருக்கிறீர்? ஓ சகாதேவா, போகாதே. நீயே எனக்கு அன்பான மகன், ஓ மாத்ரியின் மகனே, நீ எனக்கு எனது உடலைவிட அன்பானவன். என்னை ஏமாற்றிவிடாதே. என்னிடம் கருணை காட்டு. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டு, உனது சகோதரர்கள் செல்லட்டும். ஆனால், நீ என்னிடம் இருந்து, எனக்காகக் காத்திருப்பதால் கிடைக்கும் அறத்தைப் பெற்றுக் கொள்" என்றாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அழுது கொண்டிருந்த தங்கள் தாயை {குந்தியைச்} சமாதானப்படுத்தி, இதயத்தில் துயரத்துடன் கானகம் சென்றனர். துயரத்தில் இருந்த விதுரனும், துயரத்தில் இருந்த குந்தியிடம் பல காரணங்களைச் சொல்லி சமாதானப் படுத்தி, மெதுவாகத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான். திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்மணிகள், பாண்டவர்களின் நாடு கடத்தலையும், சபைக்கு கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்பட்டதையும் கேள்விப்பட்டு, கௌரவர்களை நிந்தித்து சத்தமாக அழுதனர். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்து, தாமரை போன்ற தங்கள் முகங்களை தங்கள் அழகான கரங்களால் மூடிக் கொண்டனர். தனது மகன்களுக்கு வர இருக்கும் ஆபத்தை எண்ணிய மன்னன் திருதராஷ்டிரனும் துயரத்துக்கு இரையாகி, மனம் அமைதியில்லாமல் இருந்தான். ஒவ்வொன்றையும் கவனமாக தியானித்து, துயரத்தால் மன அமைதி இழந்து, ஒரு தூதரை விதுரனிடம் அனுப்பி, "ஒரு நொடியும் தாமதிக்காமல் க்ஷத்தா {விதுரன்} இங்கே வரட்டும்" என்று சொன்னான்.

இந்த அழைப்பின் பேரில் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு விதுரன் விரைவாக வந்தான். அவன் {விதுரன்} வந்ததும், அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம் {விதுரனிடம்} பெரும் கவலையுடன், பாண்டவர்கள் எப்படி ஹஸ்தினாபுரத்தை விட்டு சென்றார்கள் என்று விசாரித்தான்.


பாண்டவர்கள் வெளியேறினர் | சபா பர்வம் - பகுதி 77

The Pandavas went away | Sabha Parva - Section 77 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் அனைவரிடம் விடை பெறுதல்; விதுரன் குந்தி தன்னிடம் இருக்கட்டும் என்று கோருதல்; பாண்டவர்கள் சம்மதித்தல்; விதுரன் யுதிஷ்டிரனுக்கு நீதிகளைச் சொல்லல்; பாண்டவர்கள் வெளியேறுதல்...

யுதிஷ்டிரன் சொன்னான், "எனது முதிர்ந்த பாட்டாவிடமும் {பீஷ்மரிடமும்}, மன்னன் சோமதத்தனிடமும், பெரும் மன்னன் பால்ஹீகனிடமும், துரோணர், கிருபர் ஆகியோரிடமும், அனைத்து மன்னர்களிடமும், அஸ்வத்தாமன், விதுரர், திருதராஷ்டிரர், திருதராஷ்டிரரின் அனைத்தும் மகன்கள், யுயுத்சு, சஞ்சயன் என அனைத்து சபையோரிடமும் நான் பிரியாவிடை கோருகிறேன். நான் அனைத்து பாரதர்களிடமும் பிரியாவிடை கோருகிறேன். நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் காண்பேன்"


வைசம்பயாணர் தொடர்ந்தார், "அங்கிருந்த அனைவரும் அவமானத்தால் குன்றிப்போனதால் யுதிஷ்டிரனுக்கு பதிலேதும் சொல்ல இயலவில்லை. இருப்பினும் அவர்களது மனதிற்குள், அந்த புத்திசாலி இளவரசின் நன்மைக்காக வேண்டினார்கள்.

விதுரன், "மரியாதைக்குரிய பிருதை {குந்தி} பிறப்பிலேயே இளவரசி. அவள் {குந்தி} கானகத்திற்குச் செல்வது தகாது. முதிர்ந்த, மென்மையான, எப்போதும் மகிழ்ச்சிக்காக அறியப்படும் இந்த அருளுடையவள் எனது வசிப்பிடத்தில், என்னால் வணங்கப்பட்டு வாழ்ந்து வரட்டும். இதை அறிந்து கொள்ளுங்கள் பாண்டவர்களே. எப்போதும் பாதுகாப்பு உங்களுடையதாக இருக்கட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள், "ஓ பாவமற்றவரே {விதுரரே}, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நீர் எங்கள் சிறிய தகப்பனார். ஆகையால் நீங்கள் எங்களுக்கு தந்தையைப் போன்றவர். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிந்தவர்கள். ஓ கற்றவரே, நீரே எங்கள் மரியாதைக்குரிய பெரியவர். உமது உத்தரவுகளுக்கு நாங்கள் எப்போதும் கீழ்ப்படிவோம். ஓ உயர் ஆன்மாவே, செய்ய வேண்டியது வேறு ஏதேனும் இருப்பின் எங்களுக்கு ஆணையிடும்" என்றனர்.

விதுரன், "ஓ யுதிஷ்டிரா, பாரத குலத்தின் காளையே, பாவகர வழிகளில் வீழ்த்தப்பட்டவன் அப்படிப்பட்ட தோல்வியின் வலியை உணரத் தேவையில்லை. இது எனது கருத்து. அனைத்து அறநெறிகளையும் அறிந்தவன் நீ; போர்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் வெற்றியாளன்; பீமசேனன் எதிரிகளைக் கொல்பவன்; நகுலன் செல்வம் சேர்ப்பவன்; சகாதேவன் நிர்வாகத் திறமை உள்ளவன்; தௌமியர் வேதம் அறிந்தவர்களில் முதன்மையானவர்; திரௌபதி அறம் மற்றும் பொருளியல் அறிந்தவள். நீங்கள் ஒருவருக்கொருவர் பிணைப்புடையவர்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் மகிழ்பவர்கள். எதிரிகளால் உங்களைப் பிரிக்க முடியாது. மேலும் நீங்கள் அடக்கமானவர்கள். ஆகையால், உலகத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படாதோர் யார்? ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி பொறுமையின் உருவமாக இந்த பொருள்சார்ந்த உலகத்தில் இருப்பது உனக்கு பெரிய நன்மையைத் தரும். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான எதிரிகூட அதற்கு எதிராக நிற்க முடியாது. முன்பு இமயமலையில் மேருஸாவர்ணியாலும் {முனிவராலும்}, வாரணாவத நகரத்தில் கிருஷ்ண துவைபாயனராலும் {வியாசராலும்}, பிருகு மலை நெடும்பாறைகளில் {பிருகுதுங்கம் என்ற மலை என்கிறது ம.வீ.ரா.பதிப்பு} ராமனாலும் {பரசுராமனாலும்}, திருஷத்வதி கரைகளில் சம்புவாலும் {ஜம்பு = பரமசிவனாலும்} உபதேசம் பெற்றிருக்கிறாய். மேலும் அஞ்சன மலையில் பெரும் முனிவரான அசிதரின் போதனையைக் கேட்டிருக்கிறாய். மேலும் கல்மாஷி கரையில் பிருகுவுக்கு சீடனாகியிருக்கிறாய். நாரதரும், உனது புரோகிதரான தௌமியரும் இப்போது உனக்கு உபதேசிப்பவர்களாக இருக்கிறார்கள். முனிவர்களால் உனக்குக் கிடைக்கப்பெற்ற அற்புதமான பாடங்களை கைவிட்டுவிடாதே. அவை மறு உலகத்திற்கும் பயனுள்ளவையாக இருக்கும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, புத்திகூர்மையில் நீ இளாவின் மகனான புரூரவசையே விஞ்சியிருக்கிறாய். பலத்தால் பல ஏகாதிபதிகளையும், அறத்தால் பல முனிவர்களையும் விஞ்சியிருக்கிறாய். ஆகையால், நீ இந்திரனுக்கு சொந்தமான வெற்றியை அடைவாய்; யமனுக்கு சொந்தமான கோபத்தைக் கட்டுப்படுத்து; குபேரனுக்குச் சொந்தமானதை {செல்வத்தை} தானமாகக் கொடு; வருணனுக்குச் சொந்தமான உனது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்து. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சந்திரனிடம் இருந்து மகிழ்ச்சிக்குரிய சக்தியைப் பெறு. நீரில் இருந்து அனைத்தையும் அடக்கும் சக்தியைப் பெறு; பொறுமையை பூமியிடம் இருந்து பெறு; சக்தியை மொத்த சூரிய வட்டிலில் இருந்து பெறு; பலத்தை காற்றிடம் {வாயு} இருந்து பெறு; மற்ற பூதங்களிடம் இருந்து செழுமையைப் பெறு. நோயால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும், நலனும் உனதாகட்டும்; நீ திரும்பி வருவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். ஓ யுதிஷ்டிரா, துன்பம், கடினம் போன்ற அனைத்து காலங்களிலும் உனது கடமையின் படி சரியாக நடந்து கொள். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எங்களிடம் விடைபெற்று செல். ஓ பாரதா, அருள் உனதாகட்டும். இதற்கு முன்பு நீ பாவம் செய்தாய் என்று யாராலும் சொல்ல முடியாது. நாங்கள் உன்னைக் காண்போம் என நம்புகிறோம், ஆகையால், பாதுகாப்புடன் வெற்றி மகுடம் தரித்து திரும்பிவா" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி விதுரரால் சொல்லப்பட்ட தடுக்க முடியா வீரம் கொண்ட பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீஷ்மரிடமும் துரோணரிடமும் பணிந்து வெளியேறினான்.

நகுலனும் சபதமேற்றான் | சபா பர்வம் - பகுதி 76

The vow of Nakula | Sabha Parva - Section 76 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

துச்சாசனன் பாண்டவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி, திரௌபதியிடம் தங்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லல்; பீமன் கோபம் கொள்ளுதல்; துரியோதனனின் நையாண்டி; பீமன் சபதத்தை உரக்கச் சொல்லல்; அர்ஜுனன் சபதமேற்றல்; சகாதேவன் பீமனின் சபதத்தை உறுதி கூறல்; நகுலன் சபதம் ஏற்றல்; பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை அணுகுதல்...

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு {பகடை ஆட்டத்தில்} தோல்வியுற்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள், வனவாசத்துக்குத் தயாரானார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக, முறையான வரிசையில் தங்கள் அரச உடுப்புகளைக் களைந்து மான் தோல் உடுத்தினர். மான் தோல் உடுத்தப்பட்டு நாட்டை இழந்து, நாடு கடத்தலுக்குத் தயாராக இருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களைக் கண்ட துச்சாசனன், "சிறப்புவாய்ந்த மன்னன் துரியோதனனின் முழு அரசாட்சி நடக்கத் தொடங்கிவிட்டது. பாண்டுவின் மகன்கள் வெற்றிகொள்ளப்பட்டு, பெரும் துயரத்தில் மூழ்கினர். அகலமான அல்லது குறுகலான பாதைகளில் சென்று எங்கள் குறிக்கோளை நாங்கள் அடைந்துவிட்டோம்.


இன்று நாங்கள் எங்கள் எதிரிகளைவிட செல்வத்தில் மேன்மையானோம். எங்கள் அரசாட்சி காலமும் மனிதர்கள் போற்றுதலுக்குரிய வகையில் இருக்கிறது. பிருதையின் {குந்தியின்}  மகன்கள் அனைவரும் நிலைத்த நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். அவர்கள் காலாகாலத்துக்கும் நாட்டையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டனர். செல்வத்தில் கர்வம் கொண்டு, திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} ஏளனம் செய்து சிரித்தவர்கள், இப்போது தோல்வியுற்று, தங்கள் செல்வத்தையெல்லாம் இழந்து கானகத்திற்கு செல்ல வேண்டியவர்களானார்கள்.

சுபலன் மகனிடம் {சகுனியிடம்} அவர்கள் பந்தயமாக ஏற்றுக் கொண்டது போல, தங்கள் பல வண்ண கவசங்களையும், தெய்வீக ஆடை ஆபரணங்களையும் களைந்து, மான் தோலை அணிந்து கொள்ளட்டும். உலகத்தில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லையென்று தற்பெருமை பேசியவர்கள், இப்போது தங்கள் பேரிடர் காலத்தில் பருப்பு இல்லாத எள் தானியங்கள் போல தங்களைக் கருதி, தங்கள் நிலையை அறிந்து கொள்வார்கள் {எள்ளுப்பதர்கள் போலப் பயன்படாதவர்களாகித் தங்களைச் சரியாகத் தெரிந்து கொள்வர் என்று சொல்கிறது ம.வீ.ரா. பதிப்பு}. இந்த ஆடையில் கூட பாண்டவர்கள் வேள்வியில் அமர்ந்திருக்கும் பலம் கொண்ட ஞானிகள் போல இருந்தாலும், வேள்வி செய்யத் தகாதவர்களைப் போலவும், வேடதாரிகள் போலவும் தெரிகிறார்கள்.

சோமக குலத்தின் ஞானமுள்ள யக்ஞசேனன் {துருபதன்}, பாஞ்சால இளவரசியான தனது மகளை {திரௌபதியை}, பாண்டுவின் மகன்களுக்கு அளித்தான். ஆண்மையற்றவர்களுக்குத் தனது பெண்ணை அளித்ததால் அவன் நற்பேறற்ற நிலையை அடைந்தான். ஓ யக்ஞசேனி {திரௌபதி}, செல்வத்தையும் உடைமைகளையும் இழந்து மான் தோலுடுத்தி, கந்தலான நூலாடை அணியும் உனது கணவர்களால் உனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது. இங்கே இருப்பவர்களுக்கு மத்தியில், உனக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவரைக் கணவராகத் தேர்ந்தெடுத்துக் கொள். இங்கே கூடியிருக்கும் குருக்கள் அனைவரும் பொறுமையும், சுயக்கட்டுப்பாடும், பெரும் செல்வமும் கொண்டவர்கள். இவர்களில் ஒருவரை உனது தலைவராகக் கொண்டால், இந்தப் பேரிடர் உனக்குப் பாவகர நிலையைத் தராது. இந்தப் பாண்டுவின் மகன்கள் பருப்பற்ற எள் தானியங்கள் {எள் பதர்} போன்றவர்கள் அல்லது பார்வைக்காக தோலால் பாடம் செய்யப்பட்ட விலங்கு போன்றவர்கள் அல்லது பருப்பற்ற அரிசி தானியம் {நெற்பதர்} போன்றவர்கள். வீழ்ந்த பாண்டுவின் மகன்களுக்காக இனியும் நீ ஏன் காத்திருக்க வேண்டும்? பருப்பற்ற எள் தானியத்தை {எண்ணைக்காக} நசுக்கும் வேலை வீணானது" என்றான்.

திருதராஷ்டிரன் மகனான துச்சாசனன் இப்படி பாண்டவர்களுக்கு முன்னிலையில் கொடுமையான வார்த்தைகளைப் பேசினான். இதைக் கேட்டு பொறுமை காக்க முடியாத பீமன், மிகுந்த கோபத்தில் திடீரென சிறு நரியை அணுகும் இமாலய சிங்கம் போல அந்த இளவரசனை {துச்சாசனனை} அணுகி, மிகச் சத்தமாக கண்டிக்கும் வார்த்தைகளில், "தீய எண்ணம் கொண்ட துன்மார்கனே, பாவிகள் பேசும் பேச்சைப் பேசிவிட்டு பரந்த அளவில் பாராட்டுகளைப் பெறுவாய் என்றா நினைக்கிறாய்? காந்தார மன்னனின் {சகுனியின்}  நிபுணத்துவத்தால் முன்னேறினாய். ஆனால் மன்னர்களுக்கு முன்னிலையில் தற்பெருமை பேசுகின்றாய். உனது கணை போன்ற வார்த்தைகளால் எப்படி நீ எங்கள் இதயங்களைத் துளைக்கிறாயோ, அப்படி போர்க்களத்தில், இதையெல்லாம் நினைவுகூர்ந்து உனது இதயத்தைத் துளைப்பேன். கோபத்தால் பேராசையாலும் உனக்குப் பின்னால் உனக்குப் பாதுகாவலாக இருப்போரையும் அவர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் உறவினர்களுடன் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மான்தோல் உடுத்தியிருந்த பீமன் இப்படிப் பேசிவிட்டு, அறத்தின் பாதியில் இருந்து வழுவாமல், வேறு எதுவும் செய்யாமல் விட்டான். அப்போது துச்சாசனன் வெட்கமின்றி குருக்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டு சத்தமாக "மாடே! மாடே!" என்றான்.

இதனால் பீமன் மறுபடியும், "ஓ துச்சாசனா, பாதகா, இது போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த உனக்கு என்ன தைரியம்? ஏமாற்று வித்தைகளால் எங்கள் செல்வத்தை வென்று, நீயெல்லாம் தற்பெருமை பேசுகிறாய். நான் உனக்குச் சொல்கிறேன். போர்க்களத்தில் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமனாகிய நான்} உனது இதயத்தைத் துளைத்துப் பிளந்து, உனது உயிர் ரத்தம் குடிக்கவில்லையானால், அருள் நிறைந்த பகுதிகளை அவன் அடைய மாட்டான். நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களை, அனைத்து வீரர்கள் முன்னிலையில் கொன்று, எனது கோபத்தை விரைவில் தணித்துக் கொள்வேன்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தச் சபையை விட்டு பாண்டவர்கள் வெளியேறும் போது, தீய மன்னனான துரியோதனன் பெரும் மகிழ்ச்சியால், சிங்கம் போல நடக்கும் பீமனின் நடையைப் போல நடந்து காட்டி நையாண்டி செய்தான். பிறகு விருகோதரன் {பீமன்} மன்னனை {துரியோதனனை} நோக்கி பாதி திரும்பிய நிலையில், "மூடா, இதனால் நீ என்னை மிஞ்சியவனாகி விட்டாய் என்று நினைத்துக் கொள்ளாதே. விரைவில் உன்னையும் உனது தொண்டர்களையும் கொல்வேன். அப்போது இதையெல்லாம் நினைவு கூர்ந்து உனக்குப் பதிலளிக்கிறேன்" என்றான். தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைக் கண்ட பெரும் பலமும் கர்வமும் கொண்ட பீமன், பொங்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தி, யுதிஷ்டிரனின் சுவடுகளைப் பின்பற்றி சென்று, அந்தக் கௌரவ அவையில், "நான் துரியோதனனைக் கொல்வேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வான். சகாதேவன் பகடைச் சூதாடி சகுனியைக் கொல்வான். நான் இந்தச் சபையின் முன்னால் இந்தக் கர்வமான வார்த்தைகளை உச்சரிக்கிறேன். இவ்வார்த்தைகளுக்குத் தேவர்கள் நன்மை செய்வர். எப்போதாவது நாங்கள் குருக்களுடன் போர் செய்தால், இந்தப் பாதகன் துரியோதனனை அப்போர்க்களத்தில் எனது கதையால் அடித்தே கொல்வேன். பிறகு அவனை {துரியோதனனை} தரையில் கிடத்தி, எனது பாதத்தை அவனது தலையில் வைப்பேன். தீய பேச்சு கொண்ட இந்தத் தீய மனிதன் துச்சாசனைப் பொறுத்தவரை, சிங்கம் போல நான் அவனது ரத்தத்தைக் குடிப்பேன்" என்றான்.

அர்ஜுனன், "ஓ பீமா, மேன்மையான மனிதர்களின் தீர்மானங்கள் வார்த்தைகளால் மட்டும் அறியப்படுவதில்லை. இன்றிலிருந்து பதினான்காவது {14} வருடத்தில், அவர்கள் என்ன நடக்கும் என்பதைக் காண்பார்கள்" என்றான்.

பீமன், "இந்தப் பூமி துரியோதனன், கர்ணன், தீய சகுனி, மற்றும் துச்சாசனன் ஆகிய நால்வரின் ரத்தத்தைக் குடிக்கும்" என்றான்.

அர்ஜுனன், "ஓ பீமா, நீர் சொன்னவாறே, நான் தீங்கிழைப்பவனும், பொறாமை கொண்டவனும், கடும் பேச்சு கொண்டவனும், வீணனுமான கர்ணனைப் போர்க்களத்தில் கொல்வேன். கர்ணனையும் அவனது தொண்டர்களையும் எனது கணைகளால் கொல்வேன் என்று பீமனுக்கு ஏற்புடைய வகையில் சபதமேற்கிறேன். முட்டாள்தனமாக எனக்கு எதிராகப் போரிட வரும் மன்னர்களையும் நான் யமனுலகு அனுப்புவேன். இமய மலை அகற்றப்படலாம், பகலை உண்டாக்குபவன் {சூரியன்} ஒளியிழந்து போகலாம், சந்திரன் தனது குளிர்ச்சியை இழக்கலாம். ஆனால் இந்த எனது சபதம் எப்போதும் பேணப்படும். மேலும் இவை அனைத்தும் பதினான்காவது {14} வருடத்திலேயே நிச்சயமாக நடைபெறும். துரியோதனன் உரிய மரியாதையுடன் நமது நாட்டைத் திருப்பித் தர மாட்டான்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனன் இதைச் சொன்னதும், மாத்ரியின் அழகான மகனான பெரும் சக்தி பெற்ற சகாதேவன், சகுனியைக் கொல்ல விரும்பி, தனது பலம் வாய்ந்த கரங்களை அசைத்து, பாம்பு போல பெருமூச்சுவிட்டு, கண்கள் சிவக்க கோபத்துடன், "காந்தார மன்னர்களின் அவமானமே {புகழைக் கெடுத்தவனே} {சகுனியே}, யாரை நீ தோல்வியுற்றார்கள் என்று நினைக்கிறாயோ, அவர்கள் உண்மையில் தோற்கவில்லை. அவர்கள் கூரிய முனை கொண்ட கணைகளாவர். அவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்தி, போர் அபாயத்தை வரவழைத்துக் கொண்டாய். உன்னையும் உனது தொண்டர்களையும் குறித்து பீமன் சொன்ன எல்லாவற்றையும் நான் நிச்சயம் சாதிப்பேன். உனக்கு செய்ய வேண்டிய காரியம் ஏதாவது இருந்தால், அந்த நாளுக்கு முன் செய்து முடித்துக் கொள். ஓ சுபலனின் மகனே {சகுனியே}, அதுவரை நீ க்ஷத்திரிய வெளிச்சத்தில் இருந்து எதிர்த்து நின்றால், நான் உன்னையும், உனது தொண்டர்களையும் கொல்வேன்" என்றான்.

"பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சகாதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் அழகான நகுலன், "விதியால் உந்தப்பட்டு சாவை விரும்பி, சூதாட்டத்தில் யக்ஞசேனன் {துருபதன்}  மகளை {திரௌபதியை} அவமதித்து, துரியோதனனுக்கு ஏற்புடைய காரியங்களைச் செய்யும் திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரையும் நான் நிச்சயம் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன். விரைவில், திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்துப் பார்த்து, யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரில், இந்தப் பூமியை திருதராஷ்டிரன் மகன்கள் அற்றதாக ஆக்குவேன்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நீண்ட கரங்கள் உடைய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் அவர்களுக்குள் அறம்சார்ந்த சபதங்களை ஏற்று மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர்".


பந்தயம் இதுதான் | சபா பர்வம் - பகுதி 75

This is the stake | Sabha Parva - Section 75 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

திருதராஷ்டிரனின் தூதுவர் யுதிஷ்டிரனிடம் சென்று மீண்டும் அழைத்து வருவது; சகுனி புதிய பந்தயம் பற்றிச் சொல்வது; யுதிஷ்டிரன் பந்தயத்தை ஏற்று, பகடையாட்டம் தொடங்கியது...

வைசம்பாயனர் சொன்னார், "புத்திசாலியான மன்னன் திருதராஷ்டிரனின் கட்டளைகளை ஏற்று சென்ற அரச தூதுவன், அந்த நேரத்தில் நெடுந்தூரம் சென்றிருந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரனைச் சந்தித்து, "உமக்கு தந்தை போன்ற உமது பெரியப்பா "சபை தயாராக இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, ஓ மன்னன் யுதிஷ்டிரனே, வந்து பகடையை வீசு" என்ற வார்த்தைகளை உமக்கு சொல்லி அனுப்பினார்" என்றான்.


யுதிஷ்டிரன், "படைப்புகளுக்கு ஆணையிடுபவர் {பிரம்மா/விதி} பகிர்ந்தளிக்கும் வண்ணம்  நற்பேறு மற்றும் கேட்டின் கனியை உயிரினங்கள் பெறுகின்றன. நான் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அந்தக் கனிகள் தவிர்க்க முடியாதன. இது பகடைக்கான உத்தரவாகும். தவிர இது கிழட்டு மன்னரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையும் ஆகும். எனக்கு அது அழிவைத் தான் தரும் என்றாலும் என்னால் அதை மறுக்க முடியாது" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "தங்கத்தாலான (உயிருள்ள) விலங்கு இருக்க வாய்ப்பில்லை. என்றாலும், ராமன் மானைக் கண்டு மயங்கினான். உண்மையில் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதனின் மனம் ஒழுங்கு மாறி குழம்பிப் போகிறது. ஆகையால், யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லி, தனது தம்பிகளுடன் வந்த பாதையிலேயே மறுபடி திரும்பினான். சகுனியின் ஏமாற்றுத் தனத்தை முழுவதும் அறிந்தும், பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்}, திரும்பி வந்து, மீண்டும் அவனுடன் பகடையாட அமர்ந்தான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள், தங்கள் நண்பர்களின் மனம் பாதிக்கும் வகையில் மறுபடியும் அந்தச் சபைக்குள் நுழைந்தனர். தங்களையே அழிவுக்குள்ளாக்க, விதியால் கட்டாயப்படுத்தப்பட்டு, சூதாடுவதற்காக மீண்டும் வந்து வசதியாக அமர்ந்தனர்."

சகுனி, "கிழட்டு மன்னர் {திருதராஷ்டிரர்} உங்கள் செல்வத்தை எல்லாம் மீண்டும் உங்களுக்கே கொடுத்துவிட்டார். அது நல்லதுதான். ஆனால், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேள், ஒரு பெரும் பந்தயம் இருக்கிறது. உன்னால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டால், மான் தோல் உடுத்தி, கானகம் நுழைந்து அங்கே பனிரெண்டு {12} வருட காலம் வாழ்ந்து, பதிமூன்றாவது {13} வரும் ஏதாவது ஒரு அறியாத தேசத்தில், யாரும் அறியா வண்ணம் வாழ்வோம். அறியப்பட்டால், மேலும் பனிரெண்டு {12} வருடங்கள் தொடர்ச்சியாக கானகம் செல்வோம். அதேபோல எங்களால் நீங்கள் வீழ்த்தப்பட்டால், நீங்கள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து மான் தோலுடுத்தி, பனிரெண்டு {12} வருடங்கள் கானகம் சென்று, பதிமூன்றாவது வருடம் {13} யாருமறியா தேசத்தில் யாரும் அறியா வண்ணம் வாழ வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால், மேலும் பனிரெண்டு {12} வருடங்கள் தொடர்ச்சியாக கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13} வருடம் முடிந்ததும், யாராக இருந்தாலும் அவர்கள் நாடு மற்றவரால் கொடுக்கப்படும். ஓ யுதிஷ்டிரா, ஓ பாரதா, இந்த உறுதியுடன் பகடை வீசி எங்களுடன் விளையாடு" என்றான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சபையோர், பெரும் துயரத்துடன் தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் உணர்வுகளின் பலத்தால் "ஐயோ, துரியோதனன் நண்பர்கள், அவனது ஆபத்தை அவனுக்கு உணர்த்தவில்லையே... சீ.. சீ.. ஓ பாரதர்களில் காளைகளே, இவன் (திருதராஷ்டிரா) புரிந்து கொள்கிறானோ இல்லையோ, நீங்கள் சொல்ல வேண்டியது உங்கள் கடமை" என்றனர்.

யுதிஷ்டிரன், "ஓ சகுனி, தனது சுய ஒழுங்கின் படி {என் தர்மத்தின் படி} வாழும் என்னைப் போன்ற ஒரு மன்னன், பகடைக்கு அழைக்கப்படும்போது எப்படி மறுப்பான்?

சகுனி, "எங்களிடம் நிறைய பசுக்களும், குதிரைகளும், கறவை மாடுகளும், கணக்கிலடங்கா ஆடுகளும், செம்மறிகளும், யானைகளும், பொக்கிஷமும், தங்கமும், ஆண் பெண் பணியாட்களும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் முன்பு பந்தையம் வைத்தோம். ஆனால் இப்போது இது ஒன்றே பந்தயம்; அதாவது கானகத்திற்கு நாடு கடத்தப்படுவது. தோல்வியுறும் நீயோ அல்லது நாங்களோ கானகத்தில் வாழ்ந்து, பதிமூன்றாவது {13} வருடம் தலைமறைவாக யாரும் அறியாத இடத்தில் வாழவேண்டும். மனிதர்களில் காளைகளே இந்தத் தீர்மானத்துடன் நாம் விளையாடலாம்" என்றான்.

ஓ பாரதா {ஜனமேஜயா}, இந்த முன்மொழிவு ஒரு முறை சொல்லப்பட்டது. பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்}, அதை ஏற்றுக் கொண்டான். சகுனி பகடையை எடுத்தான். அவற்றை {பகடைகளை} வீசி யுதிஷ்டிரனிடம் "பார், நான் வென்று விட்டேன்" என்றான்.


காந்தாரி சொன்ன புத்திமதி | சபா பர்வம் - பகுதி 74

Gandhari's counsel to Dhritarashtra | Sabha Parva - Section 74 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

அறத்தின் வழி நடக்கும்படி திருதராஷ்டிரனுக்கு காந்தாரி அறிவுறுத்துவது; காந்தாரியை சொல்லை மறுத்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைப்பது.

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதி, அதன்பிறகு தான் அறம் சார்ந்த காந்தாரி, தனது மகன்கள் மேல் இருக்கும் பாசத்தால் துயர் கொண்டு மன்னர் திருதராஷ்டிரனிடம், "*துரியோதனன் பிறந்த போது, பெரும் புத்திகூர்மையுள்ள விதுரர், "குலத்தைக் கெடுக்கப் போகும் இவனை {துரியோதனனை} மறு உலகத்திற்கு அனுப்புவது நலம்." என்று சொன்னார். இதை இதயத்தில் நிறுத்தும், ஓ குருக்களின் மன்னா. ஓ பாரதா, உமது தவறுக்காக பேராபத்து எனும் கடலில் மூழ்காதீர்.

ஓ தலைவா, முதிரா வயது கொண்ட இந்தத் தீயவர்களின் ஆலோசனைகளைப் பாராட்டி அங்கீகரிக்காதீர். இந்தக் குலத்தின் பயங்கர அழிவுக்கு நீரே காரணமாகாதீர். கட்டி முடிக்கப்பட்ட ஏரிக்கரையை எவன் உடைப்பான்? அல்லது அணைந்து போன நெருப்பை எவன் மறுபடி கிண்டி விடுவான்? ஓ பாரத குலத்தின் காளையே, அமைதியாக இருக்கும் பிருதையின் {Pritha-குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} எவன் தூண்டிவிடுவான்?


ஓ அஜமிதரே {திருதராஷ்டிரரே}, அனைத்தையும் நீர் நினைவில் வைத்திருப்பீர். இருப்பினும், நான் இந்த விஷயத்தில் உம்முடைய கவனத்தைக் கோருகிறேன். சாத்திரங்களால் தீய மனம் கொண்டோரை நன்மையாகவோ தீமையாகவோ கட்டுப்படுத்தவே முடியாது {புத்தி கெட்டவனுக்கு நன்மையையும் தீமையையும் சாத்திரங்கள் கற்பிக்காது என்கிறது ம.வீ.ரா.பதிப்பு}.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ச்சியில்லா மனிதனின் புரிதல், முதிர்ச்சியுடையோரைப் போல இருக்காது. உமது மகன்கள் உம்மைத் தலைவராக ஏற்றுத் தொடரட்டும். அவர்கள் உம்மிடம் இருந்து {அவர்கள் உயிரை இழந்துவிடாமல்} எப்போதும் பிரிக்கப்படாது இருக்கட்டும். ஆகையால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தையின்படி இந்தப் பாவியை {துரியோதனனை} நமது குலத்தில் இருந்து கைவிடுங்கள்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன்பு உமது பிள்ளை பாசத்தால் உம்மால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவனால் {துரியோதனனால்} நமது குலம் அழியும் நேரம் வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிழை செய்யாதீர். அமைதி, அறம், உண்மையான கொள்கை ஆகியவற்றால் உமது மனம் வழிநடத்தப்படட்டும். தீச்செயல்கள் மூலம் செழிப்பை அடைபவன் விரைவில் அழிக்கப்படுவான். மென்மையான செயல் மூலம் கிட்டும் செல்வம், வேர்விட்டு, கீழிறங்கி தலைமுறை தலைமுறையாக இருக்கும்" என்றாள்.

அறத்தின் வழியைக் காட்டும் வார்த்தைகளைப் பேசிய காந்தாரியால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அவளிடம் {காந்தாரியிடம்}, "நமது குலத்திற்கு அழிவு வந்திருக்கிறது என்றால், அது அப்படியே நடக்கட்டும். நான் அதைத் தடுக்க இயலாதவனாக இருக்கிறேன். அவர்கள் (எனது மகன்கள்) விருப்பப்படியே நடக்கட்டும். பாண்டவர்கள் திரும்பட்டும். எனது மகன்கள் பாண்டுவின் மகன்களோடு சூதாடட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
********************************************************************
*துரியோதனன் பிறந்த போது...........
பார்க்க:அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115


Saturday, October 26, 2013

பாண்டவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர் | சபா பர்வம் - பகுதி 73

Pandavas were asked to return | Sabha Parva - Section 73 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு கிளம்பினர் என்று கேள்விப்பட்ட துச்சாசனன் துரியோதனனிடம் விரைந்து சென்று சொல்வது; உடனே துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து முறையிடுவது; பாண்டவர்களை மீண்டும் விளையாட அழைப்பது...

ஜனமேஜயன் சொன்னான், "தங்கள் நகைகள் மற்றும் செல்வங்களுடன், திருதராஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் கிளம்பிவிட்டார்கள் என்று தெரிய வந்த போது திருதராஷ்டிரன் மகன்களின் உணர்வு எப்படி இருந்தது?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் அவர்களது தலைநகருக்குத் திரும்ப, ஞானமுள்ள திருதராஷ்டிரன் உத்தரவிட்டான் என்பதை அறிந்த துச்சாசனன் நேரங்கடத்தாமல் தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்} சென்றான். மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, தனது ஆலோசகருடன் இருந்த துரியோதனன் முன்னிலைக்கு வந்து, துயரத்துடன், "பெரும் பலம் வாய்ந்த வீரர்களே, நாம் இவ்வளவு சிரமப்பட்டு வென்றதையெல்லாம், அந்தக் கிழவர் {திருதராஷ்டிரன்} வீசி எறிந்துவிட்டார். மொத்த செல்வத்தையும் அவர் நமது எதிரிகளிடம் கொடுத்துவிட்டார்" என்றான். கர்வத்தால் வழிநடத்தப்பட்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, பாண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பி, ஒன்று கூடி விரைந்து சென்று விசித்திர வீரியனின் மகனான ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து, அவனை {திருதராஷ்டிரனை} மகிழ்விக்கும் தந்திரமான வார்த்தைகளால் பேசினர்.

துரியோதனன், "ஓ மனனா {தந்தை திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கு ஆசானான பிருஹஸ்பதி, சக்ரனிடம், மனிதர்கள் மற்றும் அரசியல் குறித்து பேசியதை நீர் கேள்விப்பட்டதில்லையா? ஓ எதிரிகளைக் கொல்பவரே, "எப்போதும் தந்திரம் மூலமாகவும், பலத்தின் மூலமாகவும் தவறு செய்யும் எதிரிகளை எந்த உபாயத்தைக் கைக்கொண்டும் கொன்றுவிட வேண்டும்" இது தான் பிருஹஸ்பதி சொன்ன வார்த்தைகள்.

ஆகையால் நாம், பாண்டவர்களின் செல்வத்தைக் கொண்டு பூமியின் மன்னர்களைத் திருப்தி செய்து பிறகு பாண்டுவின் மகன்களுடன் போரிட்டால், என்ன எதிர்விளைவுகள் வந்துவிடும்? ஒருவன் கழுத்திலும் முதுகிலும் கோபத்திலிருக்கும் கடும் விஷம் கொண்ட பாம்புகள் இருக்கும்போது, அவனால் அதை எடுத்துவிட முடியுமா? ஆயுதம் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்திருக்கும் பாண்டுவின் கோபக்கார மகன்கள், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, நிச்சயமாக நம்மை அழித்துவிடுவார்கள்.

இப்போது கூட அர்ஜுனன், கவச உடையுடனும், தனது இரு அம்பறாதூணிகளுடனும், அடிக்கடி தனது காண்டீவத்தை எடுத்து நீண்ட மூச்சுகளை விட்டு, தனது கோபப்பார்வையை சுற்றிலும் சுழற்றிக் கொண்டு முன்னேறுகிறான். விருகோதரன் {பீமன்},விரைவாகத் தனது ரதத்தை வரச்சொல்லி கட்டளையிட்டு அதன் மீது ஏறி, பெரும் எடை கொண்ட தனது கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டே பயணிக்கிறான் என்று கேள்விப் படுகிறோம். நகுலன் வாளில் தனது பிடியை வைத்துக் கொண்டும், கரத்தில் தனது அரைவட்ட கேடயத்தைப் பிடித்துக் கொண்டும் பயணிக்கிறான். சகாதேவனும், மன்னனும் (யுதிஷ்டிரனும்), தங்கள் நோக்கங்களை {ஒருவருக்கொருவர்} தங்கள் அறிகுறிகளால் தெளிவாக சாட்சியமிட்டு செல்கின்றனர். அவர்கள் அனைவரும் அனைத்துவித ஆயுதங்களைத் தங்கள் ரதங்களில் நிரப்பி, தங்கள் குதிரைகளைச் சவுக்கால் அடித்து, (காண்டவத்திற்கு விரைவாக சென்று} தங்கள் படைகளை ஒன்றுசேர்க்க செல்கின்றனர்.

நம்மால் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு ஏற்பட்ட காயங்களால், நம்மை மன்னிக்கும் திறனற்று இருக்கிறார்கள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை அவர்களில் யார்தான் மன்னிக்க முடியும்? நீர் அருளப்பட்டிரும். நாம் மீண்டும் பாண்டுவின் மகன்களோடு பகடையாடி அவர்களை நாடு கடத்துவோம். ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, இப்படித்தான் நாம் அவர்களை {பாண்டவர்களை} வசப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். பகடையில் தோற்கும் நாமோ அவர்களோ தோலாடை பூண்டு, பனிரெண்டு வருடம் வனம் செல்ல வேண்டும். பதிமூன்றாவது வருடம், யாருக்கும் தெரியாமல், யாருக்கும் தெரியாத தேசத்தில் வாழ வேண்டும். அப்படி அவர்கள் வாழ்வது வெளிப்பட்டால், மற்றுமொரு பனிரெண்டு வருட காலம் கானகத்தில் இருக்க வேண்டும். நாமோ அல்லது அவர்களோ இப்படி வாழ வேண்டும்.

பகடை வீசி விளையாட்டு தொடங்கட்டும், பாண்டுவின் மகன்கள் மீண்டும் விளையாடட்டும். ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஓ மன்னா, இதுவே நமது மேலான கடமையாகும். இந்தச் சகுனி பகடையின் முழு அறிவியலையும் அறிவார். அவர்கள் பதிமூன்று வருடங்களை வெற்றிகரமான முடித்துத் திரும்பினாலும், நாம் அதற்குள் நாட்டில் நன்கு வேரூன்றி, பலருடன் கூட்டணி அமைத்து, அணுக முடியாத பெரும் படையைக் கொண்டு அடக்கிவிடலாம். ஓ மன்னா, இதனால், பாண்டுவின் மகன்கள் திரும்ப வந்தாலும் அவர்களை வீழ்த்தி விடலாம். ஓ எதிரிளைக் கொல்பவனே, இந்தத் திட்டமே உமக்கு பரிந்துரைப்பதாக இருக்கட்டும்" என்றான்.

திருதராஷ்டிரன் சொன்னான், "உண்மையில் பாண்டவர்கள் வெகு தொலைவு சென்றிருந்தாலும், அவர்களைத் திருந்த அழைத்து வாருங்கள். பகடை வீச அவர்கள் உடனே வரட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு துரோணர், சோமதத்தன், பால்ஹீகன், கௌதமர் {கிருபர்}, விதுரர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வைசிய மனைவிக்குப் பிறந்த திருதராஷ்டிரனின் பெரும் பலம் வாய்ந்த மகன் {யுயுத்சு}, பூரிஸ்ரவஸ், பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன் ஆகியோர், "விளையாட்டை ஆரம்பிக்க வேண்டாம். அமைதி நிலவட்டும்" என்றனர். ஆனால் பிள்ளைகளிடம் பாகுபாடு கொண்ட திருதராஷ்டிரன், ஞானமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இவ்வாலோசனைகளைக் கருதாமல் பாண்டுவின் மகன்களை அழைத்தான்"


Friday, October 25, 2013

இந்திரப்பிரஸ்தம் கிளம்பினர் பாண்டவர்கள் | சபா பர்வம் - பகுதி 72

Pandavas started to Indraprastha | Sabha Parva - Section 72 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...

யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே எங்கள் தலைவர். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடும். ஓ பாரதரே, நாங்கள் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்தே இருக்க விரும்புகிறோம்" என்றான்.


அதற்கு திருதராஷ்டிரன், "ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. அமைதியுடனும் பாதுகாப்புடனும் நீ செல்லலாம். நீ சென்று, உனது செல்வங்களுடன் கூடிய உனது நாட்டை எனது உத்தரவின் பேரில் ஆண்டுகொள். ஓ குழந்தாய், இந்தக் கிழவனின் உத்தரவை உனது மனதில் ஏற்றுக் கொள். நான் கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் நன்மைக்கும் மேன்மைக்குமே ஆகும். ஓ யுதிஷ்டிரா, ஓ குழந்தாய், அறத்தின் நுட்பமான பாதையை நீ அறிவாய். பெரும் ஞானம் கொண்ட நீ, அடக்கத்துடன் பெரியோர்களுக்காக காத்திருப்பவனாகவும் இருக்கிறாய். எங்கே புத்திசாலித்தனம் இருக்கிறதோ அங்கே பொறுமை இருக்கிறது. ஆகையால், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அமைதி ஆலோசனைகளைத் தொடர்ந்து செல். கோடரி மரத்தின் மேலேதான் விழும், கல்லின் மேல் அல்ல. (நீ அறிவுரை ஏற்பாய், துரியோதனன் ஏற்கமாட்டான்). 

எதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைத்துப் பாராமல் இருப்பவர்கள் சிறந்த மனிதர்கள் ஆவர். நல்லவர்கள், பகைவர்களின் நற்செயல்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பர், தீச்செயல்களை அல்ல; எதிரிகளின் நல்லதையே பார், குறைகளைப் பார்க்காதே. அவர்களுடன் பகை கொள்ளாதே. தவிரவும் நல்லவர்கள், மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் நல்லதைச் செய்வார்கள். ஓ யுதிஷ்டிரா, மனிதர்களில் தாழ்ந்தவர்களே சண்டையிடும் வகையில் கடுஞ்சொற்களைப் பேசுவார்கள்; அதேவேளையில் பாகுபாடு பார்ப்பவர்கள், அப்படிப் பேசப்படும் வார்த்தைகளுக்கு பதிலளிப்பார்கள். நல்லவர்கள் தங்கள் உணர்வுகளைப் போல மற்றவர்கள் உணர்வுகளையும் அறிவார்கள், ஆகையால் அவர்கள் தீச்செயல்களை நினைவுகூராமல் நற்செயல்களையே கருதிப் பார்ப்பார்கள். நீ இதுவரை மனதைக் கவரும் முகப் பாவத்துடன், அறம், செல்வம், இன்பம், முக்தி ஆகியவற்றின் வரம்புகளை மீறாமல், நல்ல மனிதனாக இருந்தாய். ஓ குழந்தாய், துரியோதனனின் கடுஞ்சொற்களை மனதில் வைத்துக் கொள்ளாதே. நீ நல்லதையே நினைக்க விரும்பினால் உனது தாய் காந்தாரியையும் என்னையும் பார். 

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, என்னைப் பார், நான் இன்னும் உயிருடன் இருக்கும் கண்ணில்லாத முதிர்ந்த உனது தகப்பன். நண்பர்களைக் காணவும், எனது பிள்ளைகளின் பலத்தையும் பலவீனத்தையும் காணவும் கூடிய கொள்கை நோக்கத்துடனேயே நான் இந்த பகடை விளையாட அனுமதித்தேன். ஓ மன்னா, உன்னை ஆட்சியாளனாகவும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த விதுரனை ஆலோசகராகவும் கொண்டிருக்கும் குருக்கள் எதற்காகவும் துயரப்படத் தேவையில்லை. உன்னில் அறம் இருக்கிறது. அர்ஜுனனில் பொறுமை இருக்கிறது, பீமசேனனிடத்தில் வீரமும் மற்றும் இரட்டையர்களிடத்தில் பெரியோரை மதிக்கும் பக்தியும் இருக்கிறது. ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. காண்டவப்பிரஸ்தத்திற்குத் திரும்பிச் செல். உனக்கும் உனது பங்காளிகளுக்கும் இடையில் சகோதரப் பாசம் தழைக்கட்டும். உனது மனம் எப்போதும் அறத்தில் நிலைத்திருக்கட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, பாரதர்களில் முதன்மையான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது பெரியப்பாவிடம் {திருதராஷ்டிரரிடம்} மரியாதையின் அனைத்து அங்கங்களுடன் பேசி முடித்து, தனது தம்பிகளுடன் காண்டவப் பிரஸ்தம் கிளம்பினான். திரௌபதியைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு மேக வண்ணத்துடன் இருந்த தங்கள் ரதங்களில் ஏறி, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நகரங்களில் சிறந்த இந்திரப்பிரஸ்தத்திற்குக் கிளம்பினர்.


பீமன் அமைதிப்படுத்தப்பட்டான் | சபா பர்வம் - பகுதி 71

Bhima was pacified | Sabha Parva - Section 71 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...

கர்ணன் சொன்னான், "இந்த உலகில் அழகுக்காக பெயர்பெற்ற எந்தப் பெண்மணியும் (இந்த திரௌபதயைப் போல்) இதுபோன்ற செய்கையைச் செய்து நாம் கேள்விப்பட்டதில்லை. பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் மகன்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் போது, இந்த திரௌபதி, பாண்டவர்களின் மீட்பர் ஆனாள். உண்மையில், இந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, படகில்லாமல் துன்பக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களுக்கு படகாகி, அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தாள்" என்றான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "குருக்களுக்கு மத்தியில், பாண்டுவின் மகன்கள் தங்கள் மனைவியால் காப்பாற்றப்பட்டனர் என்று சொல்லப்பட்ட கர்ணனின் வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரடைந்த கோபக்கார பீமசேனன் (அர்ஜுனனிடம்), "ஓ தனஞ்செயா {அர்ஜுனா}, சந்ததி, செயல்கள் {கர்மம்}, கல்வி {ஞானம்} ஆகிய மூன்று ஒளிகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. இந்த மூன்றிலிருந்துதான் படைப்புகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தேவலன் சொல்லியிருக்கிறார். இந்த உடலை விட்டு உயிர் போன பிறகு, அசுத்தமடைந்த இந்த உடல், உறவினர்களால் கைவிடப்படும்போது, இந்த மூன்றும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் {ஆத்மாவுக்கும்} சேவை செய்கிறது. ஆனால், நமக்குள் இருக்கும் அந்த ஒளி, நமது மனைவியை அவமதிக்கும் இந்தச் செயலால் மங்குகிறது. ஓ அர்ஜுனா, இப்படி அவமதிக்கப்பட்ட மனைவியிடம் பிறக்கும் மகன், நமக்கு சேவை செய்வான் என்பது எப்படி நிச்சயமாகும்?" என்று கேட்டான்.

அர்ஜுனன், "ஓ பாரதா {பீமா}, மேன்மையான மனிதர்கள், தாழ்ந்த மனிதர்கள் கடுஞ்சொற்களை உச்சரித்தாலும் உச்சரிக்காவிட்டாலும் பதில் பேசுவதில்லை. சுயமாக மரியாதையைச் சம்பாதித்த மனிதர்கள், அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்றாலும், எதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைக்க மாட்டார்கள். மாறாக, அவர்களின் நற்செயல்களைப் புதையலாக நினைப்பார்கள்" என்றான்.

பீமன், "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நேரத்தைக் கடத்தாமல் இங்கே கூடியிருக்கும் எதிரிகளை இப்போதே, இந்த அரண்மனைக்கு வெளியில், கொன்று வேரோடு அழித்து விடவா? இல்லையென்றால், வார்த்தைகளுக்கும் ஆணைக்கும் என்ன தேவை இருக்கிறது? நான் இப்போது இவர்களைக் கொன்று விடுகிறேன், ஓ மன்னா, நீர் எதிரியில்லாம் இந்த மொத்த உலகையும் ஆளும்" என்றான். 

இப்படிச் சொன்ன பீமன், தொடர்ச்சியாகத் தனது கோபப் பார்வையைச் சுழலவிட்டு, தனது தம்பிகளுடன் கூடி தாழ்ந்த மிருகங்களுக்கு மத்தியில் இருக்கும் சிங்கம் போல இருந்தான். ஆனால் நற்செயல்களையே செய்யும் அர்ஜுனன், முறையிடும் தோற்றத்துடன் தனது அண்ணனைச் {பீமனைச்} சமாதானப்படுத்தத் தொடங்கினான். பெரும் வீரமும் வலுத்த கரமும் கொண்ட அந்த வீரன் {பீமன்} கோபத்தால் எரியத் தொடங்கினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, விருகோதரனின் {பீமனின்} காதுகளில் இருந்தும் மற்ற புலன்களில் இருந்தும் நெருப்பும், புகையும், தீப்பொறிகளும் வெளிப்பட்டன. பிரளய கால யமனைப் போல அவனது புருவங்கள் நெறித்து, அவனது முகத்தைக் காணப் பயங்கரமாக இருந்தது. பிறகு யுதிஷ்டிரன் அந்தப் பலம் வாய்ந்த வீரனை {பீமனைத்} தடை செய்து, தனது கரங்களால் கட்டி அணைத்து அவனிடம் {பீமனிடம்}, "இப்படி இருக்காதே. அமைதியுடனும் சமாதானத்துடனும் இரு" என்றான். கோபத்தால் கண்கள் சிவந்து இருந்த பெரும் கரம் வாய்ந்தவனை அமைதிப்படுத்திய மன்னன் {யுதிஷ்டிரனை}, பிரார்த்திக்கும் வகையில் தனது கரங்களைக் கூப்பி, தனது பெரியப்பா திருதராஷ்டிரனை அணுகினான்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top