Showing posts with label தியூத பர்வம். Show all posts
Showing posts with label தியூத பர்வம். Show all posts

Thursday, October 24, 2013

பாண்டவர்களை மீட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 70

Draupadi rescued the Pandavas | Sabha Parva - Section 70 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

கர்ணன் மேலும் திரௌபதியை அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; தீய சகுனங்களை விதுரரும் காந்தாரியும் உணர்ந்து திருதராஷ்டிரனுக்கு உணர்த்துவது; திருதராஷ்டிரனிடம் இரண்டு வரங்கள் கேட்டு திரௌபதி பாண்டவர்களை மீட்பது...

கர்ணன் சொன்னான், "இந்தச் சபையில் உள்ள அனைவரிலும், பீஷ்மர், விதுரர், மற்றும் குருக்களின் ஆசான் (துரோணர்) ஆகியோர் சுதந்திரமானவர்களாகத் தெரிகிறார்கள். ஏனென்றால் இவர்கள்தான் எப்போதும் தங்கள் தலைவனை {திருதராஷ்டிரனை} துன்மார்க்கன் போலப் பேசி, எப்போதும் அவரைக் கண்டித்து, எப்போதும் அவரது {திருதராஷ்டிரரின்} வளமையை விரும்பாமல் இருக்கிறார்கள். ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் சம்பாதிக்க முடியாது. அப்படியே சம்பாதித்தாலும் அது அவர்கள் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஒரு அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவி நீ. மன்னன் திருதராஷ்டிரனின் உள் அறைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய். அதுவே சரியான காரியம் என்று நாங்கள் வழிகாட்டுகிறோம். 


ஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும் தான் இப்போது உனக்குத்  தலைவர்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல. ஓ அழகானவளே {திரௌபதியே}, உனக்கான கணவனை நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொள். அவன் உன்னை சூதில் வைத்தாடி அடிமையாக்க மாட்டான். பெண்கள், குறிப்பாக அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாகத் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கத் துணியும் போது கண்டிக்கப்படுவதில்லை. எனவே, நீ அதைச் செய். நகுலன், பீமசேனன், யுதிஷ்டிரன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோர் வெல்லப்பட்டனர். மேலும், ஓ யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகளே திரௌபதி} நீ இப்போது அடிமையாய் இருக்கிறாய். அடிமையாக இருக்கும் உனது கணவர்கள் இனிமேலும் உனக்குத் தலைவர்களாகத் தொடர முடியாது. ஐயோ, பாஞ்சால மன்னன் துருபதன் மகளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்னால் பகடைப் பணயமாக வைத்தாடிய பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} வாழ்வையும், வீரத்தையும், ஆண்மையையும் பயனில்லாதவை என்று கருதவில்லையா?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த பீமன் துயரத்தால் பெரும் மூச்சிரைத்தான். மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிந்து, அறம் மற்றும் கடமையால் கட்டப்பட்டு, கோபத்தால் அனைத்தையும் தனது பார்வையால் எரித்து, "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இந்த சூத மகனின் {கர்ணனின்} வார்த்தைகளால் எனக்குக் கோபம் வரவில்லை, ஏனென்றால் உண்மையிலேயே நாம் அடிமைத்தனத்திற்குள் நுழைந்துவிட்டோம். ஆனால், நீர் இளவரசியை {திரௌபதியைப்} பந்தயமாக வைத்து விளையாடவில்லையெனில் நமது எதிரிகள் என்னிடம் இப்படிக் கூறியிருக்க முடியுமா?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் அமைதியாக உணர்விழந்து இருந்த யுதிஷ்டிரனிடம், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமன் அர்ஜுனன் ஆகிய இருவரும், இரட்டையர்களும் கூட உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர். (திரௌபதி கேட்ட) கேள்விக்கு நீ பதிலளி. கிருஷ்ணை {திரௌபதி}  வெல்லப்படவில்லை என்று நீ கருதுகிறாயா என்பதைச் சொல்" என்றான். குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசிய துரியோதனன், ராதையின் மகனை {கர்ணனை} ஊக்கவித்து பீமனை அவமதிக்க விரும்பி, வாழை மரம் போலவும், யானையின் துதிக்கையைப் போல, அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும், இடியைப் போன்ற பலத்தையும் கொண்ட தனது இடது தொடையை {ஆடை விலக்கித்} திரௌபதியின் பார்வையில் படும்படி வெளிக்காட்டினான். இதைக் கண்ட பீமசேனன், தனது சிவந்த கண்களை அகல விரித்து, அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனிடம் (கணை போன்ற வார்த்தைகளால்) துளைப்பது போல, "பெரும் மோதலில் இந்த உனது தொடையை உடைக்கவில்லையென்றால், விருகோதரன் {பீமன்} தனது மூதாதையர்களின் நல்லுலகத்தை அடையமாட்டான்" என்றான். கொழுந்துவிட்டெரியும் மரத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வெளிப்படுவது போல, கோபம் நிறைந்த பீமனின் அனைத்து உறுப்புகளில் இருந்தும் தீப்பொறிகள் வெளிப்பட்டன.

பிறகு விதுரன் அனைவரிடமும், "பிரதீபரின் குல மன்னர்களே, பீமசேனனிடம் இருந்து எழும் பெரும் அபாயத்தைக் காணுங்கள். பாரதர்களை விஞ்ச பயமுறுத்தும் இந்தப் பெரும் மோதல் நிச்சயம் விதியால் அனுப்பப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். திருதராஷ்டிரரின் மகன்கள், நிச்சயமாக, ஒவ்வொரு சரியான கருத்தையும் கருத்தில் கொள்ளாமல் சூதாடினார்கள். அவர்கள் இப்போதும் ஒரு {அரச குலத்தைச் சேர்ந்த} பெண்மணியை {திரௌபதியைக்} குறித்து சர்ச்சை செய்து வருகின்றனர். நமது நாட்டின் செழிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அந்தோ, கௌரவர்கள் இன்னும் பாவகர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கௌரவர்களே,  நான் அறிவிக்கப்போகும் உயர்ந்த கட்டளைகளை உங்கள் மனதில் கொள்ளுங்கள். அறத்துக்கு கொடுமை செய்தால், இந்த முழு சபையும் மாசுபடும். யுதிஷ்டிரன், அவனே வெல்லப்படுவதற்கு முன் அவளைப் {திரௌபதியை} பணயம் வைத்திருந்தானானால், அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயமாக அவளது {திரௌபதியின்} தலைவனாகக் கருதப்பட்டிருப்பான். எந்த செல்வத்தையும் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவன் எந்த நேரத்தில் பணயம் வைத்தாலும், அதை வெல்வது என்பது கனவில் செல்வத்தை வெற்றிகொள்வது போல ஆகும். காந்தார மன்னனின் {சகுனியின்} வார்த்தைகளைக் கேட்டு, இந்த சந்தேகமற்ற உண்மையில் {சத்தியத்தில்} இருந்து வீழ்ந்துவிடாதீர்கள்" என்றான் {விதுரன்}.

விதுரர் இப்படிப் பேசுவதைக் கேட்ட துரியோதனன், "பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோர் வார்த்தைகளுக்கு நான் இணங்குகிறேன். அவர்கள் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும். பிறகு, யக்ஞசேனி {திரௌபதி} தனது அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாள்" என்றான்.

இதைக் கேட்ட அர்ஜுனன், "குந்தியின் இந்த சிறப்பு வாய்ந்த மகனான, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு வரை நிச்சயம் எங்கள் தலைவராகவே இருந்தார். ஆனால், அவரே {யுதிஷ்டிரரே} தன்னைத் தோற்ற பிறகு, அவர் யாருடைய தலைவர் என்று கௌரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த நேரத்தில், திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்த ஹோமம் செய்யும் அறையில்  இருந்து ஒரு நரி சத்தமாக ஊளையிட்டது. மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்படி நரி ஊளையிட்டதைத் தொடர்ந்து, கழுதைகள் கத்தின. எல்லா புறங்களில் இருந்தும் கொடும் பறவைகள் தங்கள் கதறல்களால் பதில் சொல்லத் தொடங்கின. அனைத்தையும் அறிந்த விதுரன், சுபலனின் மகள் {காந்தாரி} ஆகிய இருவரும் அந்தக் கொடும் சத்தத்தின் பொருளை உணர்ந்து கொண்டனர். பீஷ்மர், துரோணர், மற்றும் கற்ற கௌதமர் ஆகியோர் சத்தமாக "சுவஷ்டி! சுவஷ்டி!" {நல்லதே நடக்கட்டும்} என்றனர்.

பிறகு காந்தாரியும், கற்ற விதுரனும் இந்தப் பயங்கர சகுனத்தைக் குறித்து அனைத்தையும் பெரும் துயரத்துடன் மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். அதன்பேரில் மன்னன் {திருதராஷ்டிரன்}, "தீய மனம் கொண்ட துரியோதனா, பாவி, குருக்களில் காளையரின் மனைவியை {திரௌபதியை}, குறிப்பாக அவர்கள் {பாண்டவர்கள்} மணந்த மனைவியான திரௌபதியை, இப்படி அவமதிப்பாகப் பேசியதால், ஏற்கனவே அழிவு ஏற்பட்டுவிட்டது"  என்றான். இப்படிச் சொல்லிய ஞானம் கொண்ட திருதராஷ்டிரன், தனது ஞானத்தின் துணையைக் கொண்டு, தனது உறவினர்களையும், நண்பர்களையும் அழிவில் இருந்து காக்கும் பொருட்டு, பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியைச்} சமாதானப் படுத்தத் தொடங்கினான். அவளிடம் {திரௌபதியிடம்} அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, "ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, என்னிடம் ஒரு வரம் கேள். கற்புள்ள அறம் சார்ந்த நீ, எனது மருமகள்களில் மூத்தவளாவாய்" என்றான்.

திரௌபதி, "ஓ பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் எனக்கு ஒரு வரம் அருளுவதாக இருந்தால், அனைத்துக் கடமைகளுக்கும் கீழ்ப்படியும், அழகான யுதிஷ்டிரர், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறட்டும். பெரும் மனோ சக்தி கொண்ட பிரதிவிந்தியனை {யுதிஷ்டிரன் மற்றும் திரௌபதியின் மகனை}, அறியாத சிறுவர்கள் அடிமையின் மகனே என அழைக்காதிருக்கட்டும். அவன் {பிரதிவிந்தியன்} இளவரசனாக இருப்பதால், அனைத்து மனிதர்களுக்கும் மேன்மையானவனாக இருந்து, அனைத்து மன்னர்களாலும் வளர்க்கப்பட வேண்டியவனை அடிமையின் மகனே என்று அழைப்பது முறையாகாது" என்றாள்.

திருதராஷ்டிரன் அவளிடம் {திரௌபதியிடம்}, "ஓ மங்களமானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஓ சிறந்தவளே, இன்னுமொரு வரம் கேள், நான் தருவேன். உனக்கு இரண்டாவது வரம் கொடுக்கச் சொல்கிறது எனது மனம். நீ ஒரே ஒரு வரம் பெறக்கூடியவள் இல்லை" என்றான்.

திரௌபதி, "ஓ மன்னா, பீமசேனர், தனஞ்செயர் {அர்ஜுனர்}, இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் ரதங்கள் மற்றும் விற்களுடன், கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சுதந்திரத்தை மீண்டும் அடையட்டும்" என்று கேட்டாள்.

திருதராஷ்டிரன், "ஓ அருளப்பட்ட மகளே, நீ விரும்பியவாறே ஆகட்டும், மூன்றாவது ஒரு வரம் கேள், இரு வரங்கள் உனக்குப் போதுமானதாக இல்லை. அறம் சார்ந்த நடத்தையுடைய நீ, எனது மருமகள்களில் முதன்மையானவள் ஆவாய்" என்றான்.

திரௌபதி, "ஓ மன்னர்களில் சிறந்தவரே, ஓ சிறந்தவரே, பேராசை எப்போதும் அறவீழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மூன்றாவது வரம் பெறும் தகுதி எனக்கு இல்லை. ஆகையால் நான் எதுவும் கேட்கத் துணிய மாட்டேன். ஓ மன்னர்களுக்கு மன்னா, வைசியன் ஒரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரியப் பெண் இரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரிய ஆண் மூன்று வரம் கேட்கலாம் என்றும்; அந்தணன் நூறு வரம் கேட்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓ மன்னா, கட்டுப்பட்ட இழிந்த நிலையில் இருந்து எனது கணவர்கள் விடுபட்டனர். அவர்களின் அறச்செயல்களால் நாங்கள் செழிப்பை அடைவோம்!" என்றாள் {திரௌபதியை}.

*********************************************************************
குறிப்பு: 
பகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். பகடை ஆட்டம் நடைபெற்றபோது   

யுதிஷ்டிரனுக்கு வயது   :76  
பீமனுக்கு வயது        :75  
அர்ஜுனனுக்கு வயது    :74  
நகுல சகாதேவர்களுகு   :73  
துரியோதனனுக்கு வயது :75  
கர்ணனுக்கு வயது      :92  
கிருஷ்ணனுக்கு வயது   :74 

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்: 
மஹாபாரதம் - கால அட்டவணை - 1 
மஹாபாரதம் - கால அட்டவணை - 2

Wednesday, October 23, 2013

எங்கள் அண்ணன் எங்கள் தலைவன் | சபா பர்வம் - பகுதி 69

Our elder brother is our lord | Sabha Parva - Section 69 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

திரௌபதியின் கேள்விகளுக்கு அச்சபை பதில் சொல்லாததுது; துரியோதனன், திரௌபதியிடம் தனது கணவன்மார்கள் யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும், உன்னை அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கிறேன் என்று கூறல்; பீமன் யுதிஷ்டிரன் எங்கள் தலைவனே என்று கூறல்...

வைசம்பாயனர் சொன்னார் "துரியோதனன் மீதிருந்த பயத்தால், பெண் விரலடிப்பான் பறவை {Female Osprey} போல, பாவமாக அழுதுகொண்டு திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்த திரௌபதியைக் கண்டும், அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் யாரும் நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. அந்த மன்னர்களும், அவர்களின் மகன்களும் பேரன்களும் அமைதியாக இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, மெல்லச் சிரித்து, பாஞ்சால மன்னன் {துருபதன்} மகளிடம் {திரௌபதியிடம்}, "ஓ யக்ஞசேனி, நீ கேட்டிருக்கும் கேள்வி உனது கணவர்களான பெரும் பலம் வாய்ந்த பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரைச் சார்ந்து இருக்கிறது. அவர்களே {பாண்டவர்களே} உனது கேள்விக்கு பதிலளிக்கட்டும்.


English : Osprey

Scientific Name : Pandion haliaetus
விரலடிப்பான் பறவை
ஓ பாஞ்சாலி, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்காக, இந்த மதிப்பு மிக்க மனிதர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை எனத் தீர்மானித்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பொய்யனாக ஆக்கட்டும். பிறகு நீ இந்த அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாய். தர்மனின் இந்த சிறப்புமிகுந்த மகன் {யுதிஷ்டிரன்}, எப்போதும் அறம் சார்ந்து இருப்பவன். இந்திரனைப் போல இருக்கும் அவனே {யுதிஷ்டிரனே} உனக்குத் தான் தலைவனா இல்லையா என்று தீர்மானிக்கட்டும். அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளைக் கொண்டு, நீ பாண்டவர்களையோ அல்லது எங்களையோ தாமதமில்லாமல் ஏற்றுக் கொள். உண்மையில், இந்தச் சபையில் இருக்கும் கௌரவர்கள் அனைவரும் உனது துயரம் எனும் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றனர். பேறிலிகளான உனது கணவர்களைக் கண்டு, பெருந்தன்மையுடன் இருக்கும் அவர்களால் {சபையோர்களால்} உனது கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை" என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "குரு மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, அந்த சபையில் இருந்தவர்கள் சத்தமாகப் பாராட்டினார்கள். அங்கீகரிக்கும் வகையில் கூச்சலிட்டு, தங்கள் கண் மற்றும் உதட்டு அசைவுகளால் ஒருவருக்கொருவர் குறிப்பால் பேசிக்கொண்டனர். மேலும், அவர்களில் சிலரிடம் இருந்து "ஓ", "ஐயோ" என்ற குரல்கள் கேட்டன. மகிழ்ச்சிகரமான துரியோதனனின் வார்த்தைகளால், அங்கிருந்த (அவனைச் சார்ந்த) கௌரவர்கள், மிக மகிழ்ச்சியடைந்தனர். அந்த மன்னர்கள் தங்கள் முகங்களை அறத்தின் விதிகளை அறிந்த யுதிஷ்டிரன் பக்கம் திருப்பி, அவன் {யுதிஷ்டிரன்} என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலாகப் பார்த்தனர். அந்த சபையில் இருந்த அனைவரும், போர்க்களத்தில் தோற்காத பாண்டுவின் மகனான அர்ஜுனன் என்ன சொல்வான் என்றும், பீமசேனன் என்ன சொல்வான் என்றும், இரட்டையர்கள் என்ன சொல்வார்கள் என்றும் கேட்க ஆவலாக இருந்தனர். அங்கே கேட்ட பல குரல்களின் ஹூங்காரம் நின்றதும், பீமசேனன், சந்தனம் பூசிய தனது பலம்வாய்ந்த நன்கு அமைந்த கரங்களை ஆட்டி, "எங்கள் அண்ணனாகிய இந்த நீதிமானான உயர் ஆன்ம மன்னன் யுதிஷ்டிரன், எங்களுக்கு தலைவனாக இல்லையெனில், நாங்கள் இந்த குருக்கள் குலத்தை (இவை அனைத்திற்காகவும்) மன்னித்திருக்கவே மாட்டோம். எங்களது எல்லா அறம் மற்றும் தவத்தகுதிகள் அனைத்திற்கும், ஏன் எங்கள் உயிர்களுக்கும் கூட அவரே {யுதிஷ்டிரரே} தலைவர். அவர் தான் வெல்லப்பட்டதாகக் கருதினால், நாங்கள் வெல்லப்பட்டவர்களே. அது அப்படியில்லையெனில், இந்தப் பூமியைத் தங்கள் பாதங்களால் தொடும் எந்த உயிரினமும், பாஞ்சால இளவரசியின் கூந்தலைத் தொட்ட பிறகு, என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டு, எங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} மீதிருக்கும் மரியாதையாலும், அமைதியாக இருக்குமாறு அர்ஜுனன் தொடர்ந்து கேட்டுக் கொள்வதாலும், நான் எந்தப் பயங்கரத்தையும் செய்யவில்லை. எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கட்டளையிட்டால், சிறு விலங்குகளை சிங்கம் கொல்வதைப் போல, வாளின் வேலையை எனது அறைகளால் {Slaps} செய்து, திருதராஷ்டிரரின் இந்தக் கேடுகெட்ட மகன்களைக் கொல்வேன்" என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பேசிய பீமனிடம், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர், "ஓ பீமா, பொறுத்திரு. எல்லாம் உன்னால் சாத்தியமாகும்" என்றனர்.

*********************************************************************
குறிப்பு:
பகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள்.

பகடை ஆட்டம் நடைபெற்றபோது  

யுதிஷ்டிரனுக்கு வயது   :76 
பீமனுக்கு வயது         :75 
அர்ஜுனனுக்கு வயது    :74 
நகுல சகாதேவர்களுகு   :73 
துரியோதனனுக்கு வயது :75 
கர்ணனுக்கு வயது       :92 
கிருஷ்ணனுக்கு வயது   :74

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மஹாபாரதம் - கால அட்டவணை - 1
மஹாபாரதம் - கால அட்டவணை - 2

கேள்வியின் நாயகன் யுதிஷ்டிரனே | சபா பர்வம் - பகுதி 68

The authority of the question is Yudhishthira | Sabha Parva - Section 68 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

மன்னர்களிடமும், கௌரவர்களிடமும் திரௌபதி கேள்வி கேட்பது; பீஷ்மர் பதில் உரைக்க இயலாது என்றும், இந்தக் கேள்விக்கு பதிலை யுதிஷ்டிரனே சொல்ல வேண்டும் என்றும் சொல்வது...

திரௌபதி சொன்னாள் "மனிதர்களில் மோசமானவனே, தீய மனதுடைய துச்சாசனா சற்று பொறு. உயர்ந்த கடமையான ஒரு செயலை நான் செய்ய வேண்டும். நான் இதுவரை அதைச் செய்யவில்லை. இந்தப் பாவியின் {துச்சாசனனின்} பலம் நிறைந்த கரங்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுவதால், நான் எனது உணர்வுகளை இழந்தேன். நான் இந்த குருக்களின் சபையில் இருக்கும் மரியாதைக்குரிய பெரியோர்களை வணங்குகிறேன். இதை நான் முன்கூட்டி செய்யாததால் அது எனது தவறாகாது" என்றாள்.


வைசம்பாயனர் சொன்னார், "பாதிக்கப்பட்ட ஆதரவற்ற திரௌபதி, இப்படி நடத்தப்படுவதற்கு உரியவள் இல்லையென்றாலும், முன்பைக் காட்டிலும் அதிக பலத்துடன் இழுக்கப்பட்டு, தரையில் விழுந்து, அந்தக் குருக்களின் சபையில் இப்படி அழுதாள்.

"அந்தோ {ஐயோ}, இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான், அதுவும் *சுயம்வரத்தின் போதுதான், சபையில் கூடியிருந்த மன்னர்களால் பார்க்கப்பட்டேன். அதன் பிறகு ஒரு முறை கூட நான் பார்க்கப்படவில்லை. நான் இன்று இந்தச் சபையின் முன்னால் அழைத்து வரப்பட்டிருக்கிறேன். முன்பு அரண்மனையில் இருந்தபோது காற்றும் சூரியனும் கூட கண்டிராத ஒருத்தி, ஒரு கூட்டத்தின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டாள்.

அந்தோ, அரண்மனையில் இருந்தபோது எவளைக் காற்று தீண்டினால் கூட பாண்டுவின் மகன்களுக்கு துயரத்தைக் கொடுக்குமோ, அவளே இன்று பாண்டவர்களால் துன்பப்பட்டு, இந்தப் பாவியால் பற்றி இழுத்தவரப் பட்டிருக்கிறாள்.

அந்தோ, இந்தக் கௌரவர்கள், இந்த நிலைக்குத் தகாத தங்கள் மருமகள், அவர்கள் முன்பும் பாதிக்கப்படுவதைப் பொறுத்திருக்கின்றனர். காலங்கள் இணைப்பிலிருந்து அப்பாற்பட்டு போனதாகத் தெரிகிறது {விவரீத காலமென்று நினைக்கிறேன் என்று ம.வீ.ரா பதிப்பு சொல்கிறது}. **உயர் பிறப்பு பிறந்தும், கற்புடன் இருந்தும், நான் இந்த பொது சபைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டேன் என்பதைவிட வேறு என்ன துயரம் எனக்கு வேண்டும்? எதற்காக இந்த மன்னர்கள் அறியப்பட்டிருக்கின்றனரோ, அந்த அறம் எங்கே?

பழங்காலத்தின் மன்னர்கள், தாங்கள் மணந்த மனைவிகளை பொது சபைக்கு அழைத்து வருவதில்லை என்று கேள்விப்படுகிறோம். அந்தோ, என்றுமழியாத அந்தப் பழக்கங்களை கௌரவரிடம் இருந்து மறைந்தே போய்விட்டது. இல்லையென்றால், பாண்டவர்களின் கற்புள்ள மனைவியும், பிரிஷாதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} தங்கையும், வாசுதேவன் {கிருஷ்ணனின்} தோழியுமான நான், இந்தச் சபையின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது எவ்வாறு?

கௌரவர்களே, நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மணந்த மனைவி, இம்மன்னன் {யுதிஷ்டிரன்} பிறந்த அதே புகழ்பெற்ற {க்ஷத்திரிய} குலத்திலேயே நானும் பிறந்தேன். நான் பணிப்பெண்ணா? அல்லது வேறா என்று இப்போது எனக்குச் சொல்லுங்கள். நான் உங்கள் பதிலை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். குருக்களின் பெயரை அழிக்க வந்த இந்தப் பாதகன் என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறான். கௌரவர்களே, இனிமேலும் என்னால் தாங்க முடியாது. மன்னர்களே, நான் வெல்லப்பட்டேனா, வெல்லப்படவில்லையா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னவாக இருப்பினும் நான் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்றாள் {திரௌபதி}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், "ஓ அருளப்பட்டவளே, அறத்தின் பாதை நுட்பமானது என்று நான் ஏற்கனவே சொன்னேன். இந்த உலகத்தின் சிறந்த ஞானியும் அதை {அறத்தைப்} புரிந்து கொள்வதில் எப்போதும் தோல்வியுறுகிறான். உலகத்தில் பலம் வாய்ந்த மனிதன் எதை அறம் என்று நினைக்கிறானோ, உண்மை வேறாக இருப்பினும், அதையே மற்றவர்களும் அறமாகக் கருதுகின்றனர். ஆனால், பலவீனமான மனிதன் எதை அறமாகக் கருதுகிறானோ அது உயர்ந்த அறமாக இருப்பினும், அதை எள்ளளவும் கருத மாட்டார்கள். ஈடுபட்டிருக்கும் விஷயத்தின் முக்கியத்துவத்தாலும், அதன் சிக்கல் மற்றும் நுட்பமான தன்மையாலும், நீ கேட்கும் கேள்விக்குத் தீர்மானமான பதிலை என்னால் சொல்ல இயலவில்லை. 

இருப்பினும், அனைத்துக் குருக்களும் பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்பது நிச்சயம். நமது குலத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை. ஓ அருளப்பட்டவளே {திரௌபதியே}, நீ மருமகளாக நுழைந்திருக்கும் குடும்பம் எப்படிப்பட்டதெனில், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எவ்வளவுதான் துன்பத்தால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அறத்திலிருந்தும் நெறிகளிலிருந்தும் வழுவுவதில்லை. ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, நீ இவ்வளவு துயரப்படும்போதும், உனது பார்வை அறத்திலும் அறநெறியிலும் நிறைத்திக்கும் உனது நடத்தை உனக்கு தகுதியுடையதே. அறநெறிகளை அறிந்த துரோணர் மற்றும் இங்கிருக்கும் பல முதியவர்கள், தங்கள் தலையைத் தொங்கப் போட்டு இறந்தவர்கள் போல உயிரற்ற உடலாக அமர்ந்திருக்கின்றனர். இருப்பினும், இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அதிகாரம் உடையவன் யுதிஷ்டிரன் என்றே எனக்குத் தெரிகிறது. நீ வெல்லப்பட்டாயா வெல்லப்படவில்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் அவனே {யுதிஷ்டிரனே}", என்றார் {பீஷ்மர்}.

********************************************************************
*சுயம்வரத்தின் போதுதான், சபையில் கூடியிருந்த மன்னர்களால் பார்க்கப்பட்டேன். அதன் பிறகு ஒரு முறை கூட நான் பார்க்கப்படவில்லை. 

மேலும் விவரங்களுக்கு பார்க்க: 
சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187
**உயர் பிறப்பு பிறந்தும்,
பார்க்க: 
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169

Monday, October 21, 2013

மார்பைப் பிளந்து ரத்தம் குடிப்பேன் | சபா பர்வம் - பகுதி 67ஆ

I will tear open the breast and drink the life blood | Sabha Parva - Section 67b | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பீமன், துச்சாசனனின் மார்பைப் பிளந்து உதிரம் குடிப்பேன் என்று சபதம் ஏற்பது; விதுரர் மறுபடி நியாம் கேட்பது; பிரகலாதன், சூதன்வான் மற்றும் விரோசனன் கதையை விதுரர் சொல்வது; கர்ணன் திரௌபதியை உள் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துச்சாசனனிடம் சொல்வது; துச்சாசனன் திரௌபதியை இழுப்பது....

 கோபம் கொண்ட பீமன்
பீமன் சொன்னான் "உலகத்தின் க்ஷத்திரியர்களே, இந்த எனது வார்த்தைகளைக் கேளுங்கள். இது போன்ற வார்த்தைகளை மற்ற மனிதர்கள் யாரும் இதுவரை உச்சரித்ததில்லை, எதிர்காலத்திலும் யாரும் எப்போதும் இவற்றை உச்சரிக்க மாட்டார்கள். பூமியின் தலைவர்களே, இவ்வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவற்றை நான் நிறைவேற்றாமல் இருந்தால், இறந்த எனது மூதாதையர்கள் உலகம் எனக்குக் கிடைக்காமல் போகட்டும். போர்களத்தில் சக்தியை மட்டுமே பயன்படுத்தி, கொடிய மனம் கொண்ட துன்மார்க்கனான  இந்தப் பாவியின் மார்பைப் பிளந்து, இவனது {துச்சாசனனது} உயிர்மை கொண்ட ரத்தத்தைக் குடிக்காமல் போனேன் என்றால், எனது மூதாதையர்கள் உலகத்தை நான் அடையாமல் போகக் கடவேன்" என்றான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமனின் இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட சபையோர் இருக்கையின் நுனியில் நின்றனர். அங்கே இருந்த அனைவரும் அவனைப் {பீமனைப்} பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனனை} நிந்தித்தனர். திரௌபதியின் மேனியில் இருந்து உருவப்பட்டு அந்த சபையில் சேகரிக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் உருவியதால் துச்சாசனன் களைப்படைந்து, வெட்கமடைந்து கீழே அமர்ந்தான்.

குந்தியின் மகன்களை அந்த நிலையில் கண்ட அந்தச் சபையிலிருந்த தேவர்களைப் போன்ற மனிதர்கள் (திருதராஷ்டிரன் மகனைப் பார்த்து) "சீ" என்றனர். ஒன்றுகலந்த அவர்களின் குரல் கேட்டவர்களை இருக்கையின் நுனியில் நிற்கச் செய்தது. அந்தச் சபையில் இருந்த நேர்மையான மனிதர்கள் அனைவரும், "அந்தோ! திரௌபதியின் கேள்விக்கு இந்தக் கௌரவர்கள் பதிலளிக்கவில்லை" என்று சொல்லி திருதராஷ்டிரனையும் நிந்தித்து பெரும் கூச்சல் எழுப்பினர்.

பிறகு நீதி நெறிகளின் அறிவியல் அறிந்த விதுரன், தனது கரங்களை அசைத்து, அனைவரையும் அமைதிப்படுத்தி, "இந்தச் சபையில் இருப்போரே, ஆதரவற்று அழுது கொண்டிருக்கும் திரௌபதி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறாள். நீங்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இது போன்ற நடத்தையால் அறமும் அறநெறிகளும் தண்டிக்கப்படுகின்றன. நெருப்பால் உட்கொள்ளப்பட்டவன் போல, துயரத்துக்கு ஆட்பட்ட மனிதன் நல்ல மனிதர்களின் சபையை அணுகுகிறான். அந்தச் சபையில் இருப்பவர்கள் அந்த நெருப்பைத் தணித்து, அவனை உண்மையாலும் அறநெறிகளாலும் குளிரச் செய்வர். பாதிக்கப்பட்ட மனிதன் சபையாரிடம் அறநெறி வழங்கும் தனது உரிமைகள் பற்றி கேட்கிறான். அப்போது அந்தச் சபையில் இருப்போர் விருப்பாலும் கோபத்தாலும் உந்தப்படாமல் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.

மன்னர்களே, விகர்ணன் அவனது ஞானத்துக்கும் நீதிக்கும் தகுந்தவாறு அந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறான். நீங்கள் சரியாக நினைப்பதை நீங்களும் பதிலாகச் சொல்ல வேண்டும். அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் {மௌனமாக} இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும். மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவன் ஒரு சபையில் சேர்ந்து பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவனைச் சாரும். பழைய வரலாற்றில் உள்ள அங்கிரசின் மகனான பிரகலாதனின் கதையை கற்றவர்கள் மேற்கோளாகக் காட்டுவார்கள்.

பழங்காலத்தில் தைத்தியர்களின் தலைவனாக பிரகலாதன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு விரோசனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகன் இருந்தான், அந்த விரோசனன் தனக்கு ஒரு மணமகளை அடைவதற்காக அங்கிரசின் மகனான சூதன்வானிடம் சண்டையிட்டான். அந்த மணமகளை அடைவதன் பொருட்டு அவர்கள் இருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, "நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்" என்று சொன்னார்கள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் பிரகலாதனை நடுவராகக் கொண்டு தங்கள் இருவருக்குள்ளும் ஒரு தீர்மானத்திற்கு வர முடிவு செய்தனர். அவர்கள் அவனிடம் {பிரகலாதனிடம்}, "எங்கள் இருவரில் (மற்றவனுக்கு) யார் பெரியவன்? இந்தக் கேள்விக்கு விடை பகரும். பொய் சொல்லாதீர்" என்றனர்.

இந்த சண்டையால் அச்சமடைந்த பிரகலாதன் தனது பார்வையை சூதன்வானிடம் செலுத்தினான். யமனின் கதாயுதத்தைப் போல கோபத்தால் எரிந்து கொண்டிருந்த சூதன்வான், அவனிடம் {பிரகலாதனிடம்}, "நீர் தவறாக விடையளித்தாலோ, அல்லது விடையளிக்காமல் இருந்தாலோ உமது தலை இடிதாங்கியின் {இந்திரனின்} இடியால் நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்" என்றான். சூதன்வானால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த தைத்தியன் {பிரகலாதன்}, அத்திமர இலை போல நடுங்கி, ஆலோசனைக்காக பெரும் சக்தி வாய்ந்த காசியபரிடம் சென்றான்.

பிரகலாதன், "ஓ சிறப்பும் மேன்மையும் வாய்ந்தவரே, தேவர்களையும், அசுரர்களையும், அந்தணர்களையும் வழிநடத்த வேண்டிய அறநெறிகளின் விதிகளை நன்கு அறிந்தவர் நீர். இருப்பினும், கடமையின் படி பார்த்தால் இந்தச் சூழ்நிலை பெரும் சிரமம் கொண்டதாக இருக்கிறது. நான் உம்மிடம் ஒன்று கேட்கிறேன். ஒருவனிடம் கேள்வி கேட்ட பிறகு, அவன் பதிலளிக்கவில்லை என்றாலோ, தவறாக பதிலளித்தாலோ அவன்  எந்த உலகங்களை அடைவான்?" என்று கேட்டான்.

காசியபர், "பதிலை அறிந்தும் ஒருவன் சபலத்தாலோ, கோபத்தாலோ அல்லது பயத்தாலோ விடையளிக்கவில்லை என்றால், அவன் தன் மீது வருணனின் ஆயிரம் சுருக்குகளைப் {சுருக்கு கயிறு} போட்டுக் கொள்கிறான். விழியாலோ காதாலோ ஒரு காரியத்தை சாட்சியாக நின்று அறிந்தவன், பொறுப்பில்லாமல் பேசினால், அவனும் தன்மேல் ஆயிரம் வருண சுருக்குகளை {வருணபாசங்களை} மாட்டிக் கொள்கிறான். ஒரு முழு வருடத்தின் முடிவில் அச்சுருக்குகளில் ஒன்று தளரும். ஆகையால், அறிந்தவன், உண்மையை மறைக்காமல் பேச வேண்டும். அறம் பாவத்தால் {என்ற கணையால்} துளைக்கப்பட்டு ஒரு சபையை அடைந்தால், அந்தக் கணையை அகற்ற வேண்டியது அந்தச் சபையில் இருக்கும் அனைவரின் கடமையாகும். அல்லது அவர்களே அந்த அந்தப் பாவத்தால் துளைக்கப்படுவார்கள்.

ஒரு சபையில் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய செயல் கண்டிக்கப்படவில்லை என்றால், அந்தச் செயலில் இருக்கும் பாதி {½} பாக  பாவம் அந்த சபைக்குத் தலைமை தாங்குபவனைச் சாரும். கால் {¼} பாக பாவம் கண்டிக்கத்தக்க படி நடந்து கொண்டவனுக்கும், கால் {¼} பாக பாவம் அங்கிருந்த மற்றவர்களையும் சாரும். மறுபுறம், அந்த சபையில், கண்டிக்கப்பட வேண்டியவன் கண்டிக்கப்பட்டால், அந்த சபைக்குத் தலைமை தாங்குபவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாகிறான். மற்ற சபை உறுப்பினர்களுக்கு எந்தப் பாவமும் சேருவதில்லை. குற்றம் புரிந்தவன் மட்டுமே அந்தச் செயலுக்குப் பொறுப்பாளி ஆவான்.

பிரகலாதா, நீதி குறித்துக் கேட்கப்படும்போது தவறாக விடை சொல்பவர்கள், தங்களிலிருந்து ஏழு தலைமுறையினர் மற்றும் தங்களுக்கு முந்தைய ஏழு தலைமுறையினர் செய்த அறச்செயல்களை அழிக்கின்றனர். செல்வத்தை இழந்தவன், மகனை இழந்தவன், கடனாளி, உடனிருந்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டவன், கணவனை இழந்த பெண், மன்னனின் ஆணைக்கேற்ப எல்லாவற்றையும் இழந்தவன், மலட்டுப் பெண், புலியால் விழுங்கப்பட்டவன், சக்காளத்தியாக இருப்பவள், போலி சாட்சியால் சொத்த இழந்தவன் ஆகியோரின் துயரங்கள் அனைத்தும் ஒன்றே என்று தேவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. பொய் பேசுபவன் இந்த பலதரப்பட்ட துயரங்களையும் அனுபவிப்பான்.

ஒரு மனிதன் ஒரு காரியத்தைப் பார்த்தோ அல்லது கேட்டோ புரிந்து கொண்டு அந்த காரியத்தின் சாட்சியாகிறான். ஆகையால், ஒரு சாட்சியானவன் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். உண்மை பேசும் சாட்சி தனது அறத்தகுதிகளையும் உலகம் சார் உடைமைகளையும் இழப்பதில்லை" என்றார் {காசியபர்}.

காசியபரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரகலாதன், தனது மகனிடம் {விரோசனனிடம்}, "சூதன்வான் உன்னைவிடப் பெரியவன், (அவனது தந்தை) அங்கிரஸ் என்னைவிடப் பெரியவர். சூதன்வானின் தாயும், உனது தாயைவிட பெரியவள். ஆகையால், ஓ விரோசனா, இந்த சூதன்வானே உனது வாழ்வின் தலைவனாவான்" என்றான். பிரகலாதனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சூதன்வான், "உனது மகன் மீதிருக்கும் பாசத்தால் மாறி நடக்காமல், நீ அறத்தைக் கைக்கொண்டதால், உனது இந்த மகன் {விரோசனன்} ஆயிரம் வருடங்களுக்கு வாழட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்" என்றான் {சூதன்வான்}.

விதுரன் தொடர்ந்தான், "ஆகையால் இந்தச் சபையில் இருக்கும் அனைவரும் இந்த உயர்ந்த அற உண்மைகளைக் கேட்டு, திரௌபதி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதைச் சிந்திக்கட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருப்பினும், கர்ணன் மட்டும் துச்சாசனனிடம் "இந்தப் பணிப்பெண் கிருஷ்ணையை {திரௌபதியை} உள் அறைகளுக்கு அழைத்துச் செல்" என்றான். இதன் காரணமாக, துச்சாசனன் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவற்று நாணத்துடன், தனது தலைவர்களான பாண்டவர்களைக் கண்டு பாவமாக அழுது கொண்டிருந்த திரௌபதியை இழுக்க ஆரம்பித்தான்.


Sunday, October 20, 2013

மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ

Krishna prevented from humiliation | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனின் கரங்களை எரித்துவிடுவதாக பீமன் சொல்வது; அர்ஜுனன் பீமனைக் கண்டிப்பது; திரௌபதிக்கு ஆதரவாக திருதராஷ்டிரனின் மகன் விகர்ணன் நீதி கேட்பது; கர்ணன் விகர்ணனைக் கண்டிப்பது; கர்ணன் துச்சாசனனிடம் திரௌபதியின் ஆடையைக் களையச் சொல்வது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் திரௌபதியின் மானம் காக்க விரைந்து வருவது...

பீமன் சொன்னான் "யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள். காசி மன்னன் கொடுத்த அத்தனை அற்புதப் பொருட்களையும், செல்வங்களையும், விலங்குகளையும் மற்ற செல்வங்களையும், கவசங்களையும், மற்ற மன்னர்கள் கொடுத்த ஆயுதங்களையும், நமது நாட்டையும், உம்மையும், எங்களையும் எதிரிகள் வென்று விட்டார்கள். நீர் எங்கள் தலைவராக இருப்பதால் நான் இதில் எல்லாம் கோபம் கொள்ளவிலை. 

இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன். இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுதியானவள் கிடையாது. பாண்டவர்களைத் தலைவர்களாக அடைந்து, இந்த தாழ்ந்த, இழிவான, கொடும் தீய மனம் கொண்ட கௌரவர்களால் உம்மால் தானே இப்படித் தண்டிக்கப்படுகிறாள். அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. **நான் அந்த உமது கரங்களை எரித்துவிடுகிறேன். சகாதேவா, கொஞ்சம் நெருப்பைக் கொண்டு வா**" என்றான். {இந்த வரிகளை பாரதியாரின் வார்த்தைகளில் Footnoteல் பாருங்கள்}


இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ பீமசேனா, இதற்கு முன் நீ இதுபோன்ற வார்த்தைகளை உச்சரித்தது கிடையாது. நிச்சயமாக உனது உயர்ந்த அறம் இந்தத் தீய எதிரிகளால் அழிக்கப்பட்டது. நீ எதிரிகளின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடாது. உயர்ந்த அறத்தைப் பயில். அறம் சார்ந்த மூத்த அண்ணனை {யுதிஷ்டிரனை} மீறிப் பேசுவது எவனுக்குத் தகும்? மன்னர் எதிரியால் அழைக்கப்பட்டார், க்ஷத்திரிய ஒழுக்கத்தை நினைவில் கொண்டு, தனது விருப்பத்திற்கு மாறாக பகடை விளையாடினார். அது நிச்சயமாக நமது புகழுக்கு உகந்ததே" என்றான் {அர்ஜுனன்}.

பீமன், "ஓ தனஞ்செயா {அர்ஜுனா}, க்ஷத்திரிய ஒழுக்கத்தை ஏற்று மன்னர் நடந்து கொண்டார் என்பதை நான் அறியாமல் இருந்திருந்தால், அவரது {யுதிஷ்டிரரது} கரங்களை வலுக்கட்டாயமாகப் பற்றி எரியும் நெருப்பில் எரித்திருப்பேன்" என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துயரத்தில் இருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} நிலையையும் கண்ட திருதராஷ்டிரனின் மகனான விகர்ணன், "மன்னர்களே, யக்ஞசேனியால் {திரௌபதியால்} கேட்கப்படும் கேள்விக்கு பதிலளியுங்கள். நமக்குப் பரிந்துரைக்கப்பட்ட விஷயத்தில் நாம் நீதியைத் தீர்மானிக்காமல் இருப்போமானால், நம் அனைவருக்கும் தாமதமில்லாத நரகம் நிச்சயம். குருக்களில் மூத்தவர்களான பீஷ்மரும், திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்று சொல்லாமல் இருப்பது எவ்வாறு? 

எங்களுக்கெல்லாம் குருவான பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, கிருபரும் இங்கே இருக்கின்றனர். ஏன் இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்கள் பதிலளிக்கவில்லை? எல்லாபுறத்தில் இருந்தும் வந்து இங்கு கூடியிருக்கும் மன்னர்கள், லாப மற்றும் கோப நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கி, இந்த கேள்விக்கு பதில் அளிக்கட்டும். மன்னர்களே, மன்னன் துருபதனின் அருளப்பட்ட மகள் {திரௌபதி} கேட்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளியுங்கள். அதன் பிறகு சற்று சிந்தித்து எந்தப் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள்" என்றான்.

இப்படியே விகர்ணன் அந்த சபையின் முன்பு தொடர்ச்சியாகத் தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மன்னர்கள் அவனுக்கு நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. அனைத்து மன்னர்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த விகர்ணன், தனது கரங்களைப் பிசைய ஆரம்பித்து, பாம்பு போல பெருமூச்சுவிட்டான். பிறகு கடைசியாக அந்த இளவரசன் {விகர்ணன்}, "பூமியின் மன்னர்களே, கௌரவர்களே, நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களோ இல்லையோ, நான் நீதி என்றும் சரி என்றும் கருதுவதைச் சொல்வேன். மனிதர்களில் முதன்மையானவர்களே, வேட்டை, குடி, சூது, அதிகப்படியான மாதர் இன்பம் ஆகிய நான்கும் மன்னர்களுக்கான நான்கு தீமைகளாகும். இவற்றுக்கு அடிமையாக இருக்கும் மன்னன் அறத்தை ஏமாற்றி வாழ்கிறான். இப்படி சரியில்லாத நடத்தைகளில் ஈடுபடும் மனிதர்களை எந்த அதிகாரமும் இல்லாதவனாகவே கருதுவார்கள். இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, இந்தத் தீமைகளில் ஒன்றில் ஆழ்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்த ஏமாற்றுக்கார சூதாடிகளால் தூண்டப்பட்டு, திரௌபதியைப் பந்தயமாக வைத்தார். மறுபுறம், இந்த அப்பாவி திரௌபதி பாண்டுவின் அனைத்து மகன்களின் பொது மனைவி. மேலும், மன்னர் {யுதிஷ்டிரர்} முதலில் தன்னை இழந்த பிறகு, இவளை {திரௌபதியை} பந்தயமாக வைத்தார். இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சுபலனே {சகுனியே}, மன்னனை {யுதிஷ்டிரனை} இந்தக் கிருஷ்ணையை {திரௌபதியைப்} பந்தயமாக வைக்கத் தூண்டினான். இச்சூழ்நிலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்த நான், திரௌபதி வெல்லப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறேன்" என்றான் {விகர்ணன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தச் சபையில் இருந்தவர்களால் பெரும் கூச்சல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விகர்ணனைப் பாராட்டி, சுபலனின் மகனைக் {சகுனியைக்} கண்டித்தனர். அந்தச் சத்தத்தால், கோபம் கொண்டு உணர்வுகளை இழந்த ராதையின் மகன் {கர்ணன்}, நல்ல வடிவம் கொண்ட தனது கரங்களை அசைத்து "ஓ விகர்ணா, எதிர் மற்றும் சீரற்ற பல நிலைகளை இந்தச் சபையில் காண முடிகிறது. விறகில் உண்டாகும் நெருப்பு, அந்த விறகையே உட்கொள்வது போல, இந்த உனது சினம் உன்னையே உட்கொள்ளும். திரௌபதியால் தூண்டப்பட்ட பிறகும் இங்கிருக்கும் பிரமுகர்கள் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அவர்கள் அனைவரும், துருபதனின் மகள் {திரௌபதி} சரியாக வெல்லப்பட்டதாகவே கருதுகிறார்கள். ஓ திருதராஷ்டிரர் மகனே {விகர்ணா}, நீ மட்டுமே, வயது முதிராததால், கோபத்தில் வெடிக்கிறாய். சிறுவனாக இருக்கும் நீ முதியவன் போல சபைக்கு மத்தியில் நின்று பேசுகிறாய். ஓ துரியோதனன் தம்பியே {விகர்ணா}, (நீதியாக) வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியை}, அவள் வெல்லப்படவில்லை என்று முட்டாளைப் போல சொல்வதால், உண்மையான அறநெறி எது என்பதை நீ அறிய மாட்டாய் என்று தெரிகிறது. ஓ திருதராஷ்டிரன் மகனே {விகர்ணா}, பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்} இந்தச் சபையின் முன்னால் தனது அனைத்து உடைமைகளையும் பந்தயமாக வைத்த போது, கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ எப்படிச் சொல்கிறாய்? ஓ பாரத குலத்தின் காளையே {விகர்ணா}, {யுதிஷ்டிரனின்} அனைத்து உடைமைகளில் திரௌபதியும் ஒருத்திதான். ஆகையால், நியாயமாக வெல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} எப்படி வெல்லப்படவில்லை என்று சொல்கிறாய்? 

திரௌபதி (சுபலனால்) குறிப்பிடப்பட்டு, பாண்டவர்களால் பந்தயப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டவள். என்ன காரணத்திற்காக நீ அவள் {திரௌபதி} வெல்லப்பட வில்லை என்று கருதுகிறாய்? அல்லது, அவள் {திரௌபதி} ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் குறிப்பிட்ட அற்புதமான காரணங்களைக் கேள். ஓ குரு குலத்தின் மகனே {விகர்ணா}, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே தேவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்தத் திரௌபதி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், இவள் {திரௌபதி} கற்பற்ற பெண் என்பது நிச்சயம். ஆகையால், இவளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ ஆச்சரியப்பட வேண்டிய செயல் அல்ல. பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், அவளும், பாண்டவர்கள் அனைவரும் சுபலனின் மகனால் {சகுனியால்} நீதியுடன் வெல்லப்பட்டனர். ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைந்து விடு" என்றான் {கர்ணன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து, கீழே தூக்கி எறிந்து அந்தச் சபையில் அமர்ந்தார்கள். பிறகு துச்சாசனன், ஓ மன்னா {ஜனமேஜயா}, அனைவர் முன்னிலையிலும் திரௌபதியின் ஆடைகளை வலுக்கட்டாயமாகப் பற்றி களைய ஆரம்பித்தான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "திரௌபதியின் உடை அப்படி களையப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரியின் நினைப்பால் அவள் { திரௌபதி சத்தம்போட்டு அழுது}, "ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, துவாரகையில் வசிப்பவனே, ஓ கிருஷ்ணா, ஓ (பிருந்தாவனத்தின்) இடையர் குலப் பெண்களை விரும்புபவனே, ஓ கேசவா, கௌரவர்கள் என்னை அவமானப்படுத்துவதை பார். ஓ தலைவா, ஓ லட்சுமியின் கணவனே, ஓ விராஜத்தின் (பிருந்தாவனத்தின்) தலைவனே, அனைத்துத் துன்பங்களையும் அழிப்பவனே, ஓ ஜனார்த்தனா, இந்தக் கௌரவ சமுத்திரத்தில் மூழ்கும் என்னைக் காப்பாற்று. ஓ கிருஷ்ணா, ஓ கிருஷ்ணா, ஓ பெரும் யோகியே, அண்டத்தின் ஆன்மாவே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவனே, ஓ கோவிந்தா, குருக்களுக்கு மத்தியில் எனது உணர்வுகளை இழந்து துன்பத்தில் இருக்கும் என்னைக் காப்பாற்று" என்று அழுதாள். 

துயரத்தில் இருந்த அந்த அழகான பெண்மணி {திரௌபதி}, தனது முகத்தை மூடி, மூவுலகத்தின் தலைவனான ஹரியான கிருஷ்ணனை நினைத்து சத்தமாக அழுதாள். திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் ஆழமாக உணர்ச்சிக்கு ஆட்பட்டு, இரக்கமுள்ள அவன் {கிருஷ்ணன்} இரக்கத்துடன் தனது ஆசனத்தைவிட்டு எழுந்து, கால்நடையாக அங்கு வந்தான். விஷ்ணு என்றும், ஹரி என்றும் சிறப்பு வாய்ந்த அறத்தின் காப்பாளனான நரன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனிடம், யக்ஞசேனி {திரௌபதி} சத்தமாக அழுது கொண்டிருந்தபோது, யாராலும் கவனிக்கப்படாமல் இருந்து, அவளை {திரௌபதியை} பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் மூடினான். 

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, திரௌபதியின் ஆடை இழுக்கப்பட்டு, ஒரு ஆடை எடுக்கப்பட்ட போது, அதே வகையைச் சார்ந்த மற்றொரு ஆடை அவளை மறைப்பது போலத் தோன்றியது. இப்படியே பல துணிகள் காணப்படும் வரை இது தொடர்ந்து கொண்டு இருந்தது. ஓ மேன்மையானவனே, அறத்தைக் காக்க, பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான ஆடைகள் திரௌபதியின் மேனியில் இருந்து வந்தன. அங்கே பல குரல்களின் ஆழ்ந்த கர்ஜனை அங்கே எழுந்தது. அந்தச் சபையில் இருந்த மன்னர்கள், உலகத்தின் காட்சிகளில் இயல்புக்கு மிக்க காட்சியைக் கண்டு, திரௌபதியைப் பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனைக்} கண்டிக்கத் தொடங்கினர். மேலும், பீமன் தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, கோபத்தில் உதடுகள் நடுங்க, பெருத்த குரலில் மன்னர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரமான சபதத்தை ஏற்றான்.

---------------------------------------------------
மகாகவி பாரதியார்
**கீழ்வருவது பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பீமன் பேச்சு ....

‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.     69


‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே

வாய்ந்த வடிவழகை.     70

‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்

சண்டனப் பாஞ்சாலன்.     71

‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.     72


‘சோரத்திற் கொண்டதில்லை; -- அண்ணே
, சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்;     73

பாரதியாரும் அவரது
மனைவி செல்லம்மாவும்

‘சக்கரவர்த்தி யென்றே -- மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய்.     74

‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்.     75

‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!     76

‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’     77 மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக!
 

சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 66 ஆ

Draupadi was dragged down the assembly | Sabha Parva - Section 66B | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் தனது பணியாளிடம் மீண்டும் திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; அவன் தயங்கி நிற்பதைக் கண்டு துச்சாசனனை அனுப்புவது; துச்சாசனன் சென்று திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே இழுத்து வருவது; திரௌபதி சபை பெரியோர்களிடம் நியாயம் கேட்பது; பீஷ்மர் இது விஷயத்தில் தான் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியாதிருப்பதாகச் சொல்வது; இந்த நிலையில் யுதிஷ்டிரனைக் கண்டு பீமன் கோபப்படுவது....

பிராதிகாமினின் சொல்லைக் கேட்ட துரியோதனன் "ஓ துச்சாசனா {Dussasana}, எனது சூதனின் குறைந்த புத்தியுடைய மகன் {பிராதிகாமின் - Pratikamin} விருகோதரனுக்கு {Vrikodara - பீமனுக்கு} அஞ்சுகிறான். ஆகையால், நீயே சென்று யக்ஞசேனனின் மகளை {daughter of Yajnasena - திரௌபதியை} இங்கு வலுக்கட்டாயமாக இழுத்துவா, தற்போது நமது எதிரிகள் நமது விருப்பத்தை எதிர்பார்த்தே இருக்கின்றனர். அவர்கள் {பாண்டவர்கள்} உன்னை என்ன செய்ய முடியும்?" என்றான்.

தனது அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவைக் கேட்ட துச்சாசனன் ரத்தச்சிவப்பாக இருந்த கண்களுடன் எழுந்து, அந்தப் பெரும் போர்வீரர்களின் {பாண்டவர்களின்} வசிப்பிடத்திற்கு நுழைந்து, அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்}, "ஓ பாஞ்சால இளவரசி கிருஷ்ணா {Krishna - திரௌபதி}, வா... வா... நீ எங்களால் வெல்லப்பட்டாய். ஓ தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவளே {திரௌபதியே}, இப்போதே வந்து குருக்களை உனது தலைவர்களாக ஏற்றுக் கொள். நீ அறம் சார்ந்தே அடையப்பட்டாய், சபைக்கு வா..." என்றான் {துச்சாசனன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரத்துடன் எழுந்த திரௌபதி, தனது மங்கிய முகத்தை தனது கரத்தால் துடைத்துக் கொண்டு, பெரும் துயரத்துடன் திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்கள் இருந்த இடத்திற்கு ஓடிப் போனாள். இதனால் கோபத்துடன் கர்ஜித்த துச்சாசனன், அவள் பின்னே ஓடி, நீல நிறத்தில், அலை அலையாக இருந்த ராணியின் {திரௌபதியின்} அடர்த்தியான கூந்தலைப் பற்றினான். 

அந்தோ! ராஜசூய வேள்வியில் மந்திரங்களுடன் தவசி நீர் தெளிக்கப்பட்ட அந்தக் கூந்தலை பாண்டவர்களின் வீரத்தைக் கருதாமல், இப்போது திருதராஷ்டிரன் மகன் {துச்சாசனன்}, வலுக்கட்டாயமாக பற்றி இழுத்தான். கிருஷ்ணையின் {திரௌபதியின்} நீண்ட கூந்தலைப் பற்றி சபையின் நடுவே இழுத்துச் சென்றான். அவள் {திரௌபதி} பலம் நிறைந்த காப்பாளர்களைப் பெற்றிருந்தும், இப்படி இழுத்து வரப்பட்டதால், புயலில் சிக்கிய வாழை மரம் என நடுங்கினாள்.

அவனால் {துச்சாசனனால்}  இழுத்தவரப்பட்டு, உடல் வளைந்திருந்த அவள் {திரௌபதி}, மயக்கத்துடன் அழுதாள், "பாவி, என்னை இப்படி சபையின் நடுவே கொண்டு செல்வது தவறான நடத்தையாகும். எனது மாதாந்திர காலம் வந்திருக்கிறது. நான் இப்போது ஒற்றை ஆடை உடுத்தியிருக்கிறேன்" என்றாள்.  

மேலும் விஷ்ணுவும், நரனும் நாராயணராகவும் இருந்த கிருஷ்ணனிடம் பாவமாக வேண்டிக் கொண்டிருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} கருங்கூந்தலை வலுக்கட்டையமாக பற்றி இழுத்துச் சென்ற துச்சாசனன், "உனது மாதாந்திர காலம் வந்ததோ இல்லையோ, நீ ஒற்றையாடையுடன் இருக்கிறாயோ அல்லது நிர்வாணமாக இருக்கிறாயோ, பகடையில் நீ வெல்லப்பட்டு பிறகு, எங்களுக்கு நீ அடிமையாக ஆன பிறகு எங்கள் பணிப்பெண்கள் வாழும் இடத்தில் நீ விரும்பியவாறு இருந்து கொள்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துச்சாசனால் இழுத்துச் செல்லப்பட்ட போது, கலைந்த முடிகளுடன், அவளது பாதி ஆடை தளர்ந்து, கோபத்தால் உட்கொள்ளப்பட்ட எளிமையான கிருஷ்ணை {திரௌபதி}, மயக்கத்துடன், "கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த, வேள்விக்கு தங்களை அர்ப்பணித்து, இந்திரனுக்கு சமமான மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்தச் சபையில் சிலர் மேன்மையானவர்களாகவும், மற்றவர்கள் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நான் இந்த நிலையில் நிற்க முடியாது. ஓ பாவி! கொடுஞ்செயல் புரிபவனே {துச்சாசனனே} என்னை இப்படி இழுக்காதே. என்னை இப்படித் திறந்து காட்டாதே {Uncover me not so}. 

நீ தேவர்களையும் இந்திரனையும் கூட்டாளியாக வைத்திருந்தாலும், இந்த இளவரசர்கள் (எனது தலைவர்கள்) உன்னை மன்னிக்க மாட்டார்கள். தர்மனின் சிறப்புவாய்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, இப்போது அறநெறிக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இருப்பினும், அறநெறி மிகவும் நுட்பமானது. தெளிந்த பார்வையுள்ளவர்கள் மட்டுமே அதை உறுதி செய்ய முடியும். எனது தலைவன் {யுதிஷ்டிரன்} அறத்தை மறந்து அணுவளவு குற்றம் செய்தார் என்று என் வாக்கினாலும்கூட சொல்ல நான் விரும்பவில்லை. 

மாதாந்திர காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே. சீ... உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் குருக்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களே! 

ஓ, துரோணரும், பீஷ்மரும், க்ஷத்தரும் {விதுரரும்}, இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குருக்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?" என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே அந்தக் கொடியிடை கிருஷ்ணை {திரௌபதி} அந்தச் சபையில் துக்கத்துடன் அழுதாள். தனது பார்வையைத் தனது கோபம் கொண்ட தலைவர்களான பாண்டவர்களிடம் செலுத்திய அவள் {திரௌபதி}, தனது பார்வையால் மேலும் அவர்களின் {பாண்டவர்களின்} கோபத்தைத் தூண்டினாள். தங்கள் நாட்டையோ, செல்வத்தையோ, விலையுயர்ந்த ரத்தினங்களையோ களவாடியது குறித்து அவர்கள் பெரிதும் துயரம் கொள்ளவில்லை. ஆனால், நாணத்தோடும் கோபத்துடனும் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} பார்வையைக் கண்டு கோபத்தால் பெரும் துயர் அடைந்தனர். 

ஆதரவற்ற தங்கள் தலைவர்களைக் காணும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்ட துச்சாசனன், மேலும் அவளை {திரௌபதியை} வலுக்கட்டாயமாக இழுத்து, அவளிடம், "அடிமையே அடிமையே" {தாசி என்று அழைத்தான் என்கிறது ம.வீ.ரா பதிப்பு} என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து சத்தமாகச் சிரித்தான். அதே போல, சுபலனின் மகனான காந்தார மன்னன் சகுனியும் துச்சாசனனைப் பாராட்டினான். கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சபை நடுவே இழுத்துவரப்பட்டதைக் கண்டு இவர்கள் மூவர் {துச்சாசனன், கர்ணன், சகுனி} மற்றும் துரியோதனனைத் தவிர்த்து அனைவரும் சோகத்தில் நிறைந்திருந்தனர்.

இவையனைத்தையும் கண்ட பீஷ்மர், "ஓ அருளப்பட்டவளே, அறம் மிகவும் நுட்பமானது. ஆகையால், நான் இதுவிஷயத்தில் எந்தத் தீர்மானத்துக்கு வர முடிய வில்லை. ஒரு புறம், செல்வமில்லாதவன் மற்றவர் செல்வத்தைப் பணயம் வைக்க முடியாது என்றாலும், மறுபுறம், மனைவியர் தங்கள் தலைவர்களின் ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள். யுதிஷ்டிரன், இந்த உலகம் முழுதும் நிறைந்த செல்வத்தையும் கைவிடுவான், ஆனால் அவன் {யுதிஷ்டிரன்} அறத்தைத் தியாகம் செய்ய மாட்டான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, "நான் வெல்லப்பட்டேன் என்கிறான்". ஆகையால், நான் இதுவிஷயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை. பகடையில் சகுனி அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சமமானவன் கிடையாது {ஆனால் உயர்ந்தவன்}. இருப்பினும், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} தானே முன்வந்து பந்தயம் வைத்தான். அந்தச் சிறப்பு மிகுந்த யுதிஷ்டிரனே சகுனி ஏமாற்றி விளையாடினான் என்று கருதவில்லை. ஆகையால் இதுவிஷயத்தில் என்னால் எதுவும் தீர்மானிக்க முடியாது" என்றான்.

திரௌபதி, "பகடையில் நிபுணத்துவம் இல்லை என்றாலும், மன்னர் {யுதிஷ்டிரர்} இந்தச் சபைக்கு அழைக்கப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த, தீய, ஏமாற்றுக்கார, பெரும் சூதாடியுடன் {சகுனியுடன்} விளையாட வைக்கப்பட்டார். இப்படியிருக்கையில், அவர் {யுதிஷ்டிரர்} தானாக முன்வந்து பந்தயம் வைத்தார் என்று எப்படிச் சொல்லப்படுகிறது? பாண்டவர்களின் தலைவரை {யுதிஷ்டிரரை} இந்தப் ஏமாற்றுகர நடத்தையும் தவசிமற்ற நோக்கங்களும் கொண்ட பாவிகள் ஒன்றுகூடி மதியிழக்கச் செய்து வீழ்த்தினர். அவர்களின் தந்திரங்களை அவர் {யுதிஷ்டிரர்} அறிய முடியாது, ஆனால் அவர் இப்படிச் செய்துவிட்டார். இங்கு, இந்தச் சபையில், தனது மகன்களுக்கும், மருமகள்களுக்கும் தலைவர்களான குருக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும், எனது வார்த்தைகளை மனதில் கொண்டு, நான் சொல்லியிருக்கும் விஷயத்தைத் தீர்மானியுங்கள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி பாவமாக அழுது கொண்டிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, துச்சாசனன் ஏற்றுக்கொள்ள முடியாத கடும் சொற்களைப் பேசிய போது ஆதரவற்ற தனது தலைவர்களை {பாண்டவர்களை} அடிக்கடி பார்த்தாள். மாதாந்திர காலத்தில் இருந்த அவள் இப்படி இழுத்து வரப்படுவதையும், அவளுக்கு {திரௌபதிக்கு} சற்றும் பொருந்தாத நிலையில், மேலாடை தளர்ந்த நிலையில் அவள் இருப்பதையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தனது உறுதியையும் தாண்டி, கண்களை யுதிஷ்டிரனிடம் நிலைக்க வைத்து, கோபத்துக்கு உள்ளானானான்.


திரௌபதியிடம் சென்ற பிராதிகாமின் | சபா பர்வம் - பகுதி 66 அ

Pratikamin went to Draupadi | Sabha Parva - Section 66A | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் தனது பணியாளை அழைத்து திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; திரௌபதி பணியாளிடம் கேள்வி கேட்டல்; பணியாள் மறுபடியும் சபைக்கு வந்து திரௌபதியின் கேள்வியைக் கேட்டல்; துரியோதனன் மறுபடியும் பணியாளை அனுப்புதல்; திரௌபதி மறுபடியும் பணியாளை திருப்பி அனுப்புதல்; யுதிஷ்டிரன் தனது நம்பிக்கைக்குரிய தூதரை திரௌபதியிடம் அனுப்புதல்...

வைசம்பாயனர் சொன்னார், "கர்வத்தால் போதையுண்ட திருதராஷ்டிரன் மகன் {துரோயோதனன்}, "க்ஷத்தரே! சீ" என்று சொல்லிவிட்டு பணியாளான பிராதிகாமினைப் பார்த்து, மரியாதைக்குரிய மூத்தவர்கள் முன்னிலையில் அவனை {பிராதிகாமினை} அழைத்து, "போ பிராதிகாமின், போய் திரௌபதியை இங்கே கொண்டு வா. பாண்டுவின் மகன்களிடம் அச்சம் கொள்ளாதே. விதுரர் மட்டுமே அப்படி பயத்தால் உளறுகிறார். மேலும், அவர் நமது செழிப்பை எப்போதும் விரும்புவதில்லை" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி கட்டளையிடப்பட்ட சூத சாதியைச் சேர்ந்த பிராதிகாமின், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு விரைவாக சென்று, சிங்கக்குகைக்குள் நாய் நுழைவது போல பாண்டவர்களின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து பாண்டு மகன்களின் ராணியை {திரௌபதியை} அணுகினான். பிறகு அவன் {பிராதிகாமின்}, "பகடையில் போதையுண்ட யுதிஷ்டிரனிடம், ஓ திரௌபதி, துரியோதனன் உன்னை வென்றுவிட்டார். ஆகையால், திருதராஷ்டிரர் வசிப்பிடத்திற்கு இப்போதே வா. ஓ யக்ஞசேனி {திரௌபதி}, நான் உன்னை அழைத்துச் சென்று, வீட்டு ஊழியம் செய்யும் கேவலமான வேலையில் நியமிக்கிறேன்" என்றான்.


திரௌபதி, "ஓ பிராதிகாமின், ஏன் இப்படிப் பேசுகிறாய்? எந்த இளவரசன்தான் தனது மனைவியை பந்தயப் பொருளாக வைத்து விளையாடுவான்? மன்னன் நிச்சயமாக பகடையில் போதையுண்டிருக்கிறார். இல்லையென்றால், அவரால் பந்தயமாக வைத்தாட வேறு பொருளைக் காண முடியாதா?" என்றாள்.

பிராதிகாமின், "அவரிடம் {யுதிஷ்டிரனிடம்} எதுவும் இல்லாத போதே பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} உன்னை வைத்து ஆடினார். மன்னன் {யுதிஷ்டிரன்} முதலில் தனது தம்பிகளையும், பிறகு அவரையும், அதன் பிறகு உன்னையும் பந்தயமாக வைத்து விளையாடினார் ஓ இளவரசி {திரௌபதி}" என்றான்.

திரௌபதி, "ஓ சூத குலத்தின் மகனே {பிராதிகாமினே}, நீ சென்று, அந்தச் சபையில் இருக்கும் சூதாடியிடம் {யுதிஷ்டிரனிடம்}, அவர் யாரை முதலில் இழந்தார், அவரையா அல்லது என்னையா என்று கேள். இதை உறுதி செய்து கொண்டு, இங்கே வா. பிறகு, ஓ சூத குலத்தின் மகனே {பிராதிகாமினே}, நீ என்னை அழைத்துச் செல்லலாம்" என்றாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்தச் சபையில் இருந்த அனைவரிடமும் திரௌபதியின் வார்த்தைகளைச் சொன்னான். பிறகு மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனிடம், "திரௌபதி உம்மிடம், என்னை விளையாட்டில் தோற்ற போது, நீர் யாருக்கு தலைவனாக இருந்தீர்? நீர் உம்மை முதலில் இழந்தீரா அல்லது என்னையா? என்று கேட்டாள்" என்று சொன்னான். யுதிஷ்டிரன் அறிவாற்றலை இழந்து, நினைவிழந்து அமர்ந்திருந்தான். நன்மையாகவோ தீமையாக அந்த சூதனுக்கு அவன் {யுதிஷ்டிரன்} ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தான்.

துரியோதனன், "பாஞ்சால இளவரசி {திரௌபதி} இங்கே வந்து தனது கேள்வியைக் கேட்கட்டும். இந்தச்சபையில் இருக்கும் அனைவரும் அவளும் {திரௌபதியும்} யுதிஷ்டிரனும் பேசிக் கொள்வதைக் கேட்கட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரியோதனனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்த அந்தத் தூதுவன் {பிராதிகாமின்} மறுபடியும் வேகமாக அந்த அரண்மனைக்குச் சென்று, அவனே {பிராதிகாமினே} மிகத் துயர் கொண்டு, திரௌபதியிடம், "ஓ இளவரசி, அந்தச் சபையில் இருப்பவர்கள் உன்னை அழைக்கிறார்கள். கௌரவர்களின் அழிவு உன் கைகளில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஓ இளவரசி, துரியோதனன் உன்னை சபையின் முன்னே அழைக்கும் போது, பலவீனமான மூளை கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்}, தனது செழிப்பை வெகு காலத்திற்குக் காத்துக் கொள்ள முடியாது" என்றான்.

திரௌபதி, "உலகத்தின் பெரும் ஆணையாளரின் {பிரம்மனின்} ஆணை நிச்சயமாக அப்படித்தான் இருக்கிறது. மகிழ்வும் துயரமும் ஞானமுள்ளோரையும் ஞானமற்றோரையும் தொடுக்கின்றன. இருப்பினும் அறமே உலகத்தில் உயர்ந்த பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சரியாக காத்தோமானால், அது நிச்சயம் நமக்கு அருளைக் கொடுக்கும். அறம் கௌரவர்களைக் கைவிடாதிருக்கட்டும். திரும்ப சென்று அந்தச் சபையில் உள்ளோரிடம், அறநெறிகளுக்கு ஏற்ற எனது வார்த்தைகளை மறுபடி சொல். அந்த அறம் சார்ந்த, அறநெறி அறிந்த மூத்தோர் உறுதியாகச் சொல்லும் சொல் கேட்டு நடக்க நான் தயாராக இருக்கிறேன்" என்றாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யக்ஞசேனியின் {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த சூதன் {பிராதிகாமின்}, சபைக்குத் திரும்ப வந்து, திரௌபதியின் வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். ஆனால், அனைவரும் தங்கள் முகத்தை கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனின்} ஆவலையும் தீர்மானத்தையும் அறிந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தனர்.

இருப்பினும், யுதிஷ்டிரன், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனின் நோக்கத்தைக் கேள்விப்பட்டு, ஒரு நம்பிக்கைக்குரிய தூதுவரிடம் 'திரௌபதி தனது மாதாந்திர நோயில் இருப்பதால், தொப்புள் வெளிப்பட ஒற்றையாடையுடன் இருந்தாலும், தனது மாமனார் முன்னிலையில் அழுது கொண்டே வரட்டும்" என்று சொல்லி திரௌபதியிடம் அனுப்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த புத்திசாலித் தூதுவனும் திரௌபதியின் வசிப்பிடத்திற்கு வேகமாக வந்து யுதிஷ்டிரனின் நோக்கங்களைத் தெரிவித்தான். அதே வேளையில் அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள் துயரம் கொண்டு, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய இயலாமல் இருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} மீது பார்வையைச் செலுத்திய மன்னன் துரியோதனன் இதயத்தில் மிகவும் மகிழ்ந்து அந்தச் சூதனிடம், "ஓ பிராதிகாமின், அவளை {திரௌபதியை} இங்கே கொண்டு வா. கௌரவர்கள் அவளது கேள்விக்கு அவள் முகத்துக்கு எதிரேயே பதில் சொல்லடும்" என்றான். அவனது {துரியோதனது} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் அந்தச் சூதன் {பிராதிகாமின்}, துருபதன் மகளின் {திரௌபதியின்} கோபத்துக்குப் {கோபத்துக்கு வாய்ப்பிருப்பதை நினைத்து} பயந்து, நுண்ணறிவுக்கான நற்பெயரைக் கருதாமல், மறுபடியும் அந்தச் சபையில் இருந்தவர்களிடம், "நான் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} என்ன சொல்வது?" என்று கேட்டான்.

தொடர்வது:
சபா பர்வம் - பகுதி 66 ஆ............


Saturday, October 19, 2013

குருக்களின் அழிவு நிச்சயம் | சபா பர்வம் - பகுதி 65

Destruction of Kurus is sure | Sabha Parva - Section 65 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் விதுரரிடம் திரௌபதியை அழைத்து வரச் சொல்வதும்; விதுரர் சொன்ன விளக்கங்களும்

துரியோதனன் சொன்னான், "ஓ க்ஷத்தரே இங்கே வாரும், பாண்டவர்களின் அன்புக்கும் நேசத்திற்கு உரிய மனைவியான திரௌபதியை இங்கே அழைத்து வாரும். அறைகளை அவள் {திரௌபதி} துடைத்து கூட்டட்டும். அவளை அவ்விடத்துக்கு பலவந்தமாக அனுப்பும். நமது பணிப்பெணகள் தங்கும் இடத்தில் அந்த பேறிலியும் தங்கட்டும்."

விதுரன், "ஓ பாவி {துரியோதனா}, இந்த வார்த்தைகளை உச்சரிப்பதால் உன்னை நீயே கயிறுகளில் கட்டிக் கொள்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா? செங்குத்தான பாறையின் விழிம்பில் நீ தொங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள மாட்டாயா? மானாக இருந்து கொண்டு நீ பல புலிகளின் கோபத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா? கொடும் விஷம் கொண்ட பாம்புகள் சினம் தூண்டப்பட்டு உனது தலையில் இருக்கின்றன!


பாவியே, மேலும் அவர்களின் கோபத்தைத் தூண்டினால் நீ எமனுலகு செல்வாய். மன்னன் {யுதிஷ்டிரன்} தன்னையே இழந்து, தனக்கே தலைவனாக இல்லாத போது, அவளைப் பந்தயமாக வைத்ததால் கிருஷ்ணை {திரௌபதியை} அடிமையாக மாட்டாள். சாகும் போது மட்டுமே கனியைக் கொடுக்கும் மூங்கிலைப் போல, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} இந்த விளையாட்டின் மூலம் பொக்கிஷத்தை வென்றான். அதனால் போதையுண்டிருப்பதால், தனது கடைசி காலமான இந்த காலத்தில் பகடையால் உண்டாகும் பகைமையையும், பயங்கரங்களையும் காணாமல் இருக்கிறான்.

எந்த மனிதனும் கடும் வார்த்தைகளை உச்சரித்து மற்றவர்கள் இதயத்தைத் துளைக்கக்கூடாது. எந்த மனிதனும் பகடையாட்டத்தின் மூலமோ அல்லது வேறு நியாயமற்ற வழிகளிலோ தனது எதிரியை வெல்லக்கூடாது. வேதங்கள் அங்கீகரிக்காத, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வார்த்தைகளை அடுத்தவரை வருந்தச் செய்ய எந்த மனிதனும் உச்சரிக்கக்கூடாது. சிலர் தங்கள் உதடுகளில் இருந்து கடும் வார்த்தைகளை உச்சரிக்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்ட மற்ற மனிதன் இரவும் பகலும் துன்பப்படுவான். அந்த வார்த்தைகள் அடுத்தவரின் இதயத்தை துளைத்தெடுக்கும். ஆகையால், கற்றோர் அடுத்தவரைச் சுட்டிக்காட்டும் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் உச்சரிக்கவே கூடாது.

ஒரு சமயம் ஒரு ஆடு ஒரு கொக்கியை விழுங்கிற்று, அது அந்த கொக்கியினால் துளைக்கப்பட்ட போது {சிரமப்பட்ட போது}, ஒரு வேடன் அதன் தலையை தரையில் வைத்து, அதன் தொண்டையைப் பயங்கரமாக அறுத்து, அந்தக் கொக்கியை வெளியே எடுத்தான். ஆகையால், ஓ துரியோதனா, பாண்டவர்களின் செல்வத்தை விழுங்காதே. அவர்களை {பாண்டவர்களை} உனது எதிரிகளாக்கிக் கொள்ளாதே.

பிருதையின் {குந்தியின்} மகன்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரிப்பதில்லை. நாய் போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் மட்டுமே இப்படிப்பட்ட கடும் வார்த்தைகளை எல்லா வகை மக்களிடமும், அதாவது கடைசி காலத்தில் காட்டில் வசிக்கும் மக்களிடமும், இல்லற வாழ்க்கை வாழ்பவர்களிடமும், ஆன்மிக அர்ப்பணிப்பில் இருப்பவர்களிடமும், பெரும் கல்வி கற்றவர்களிடமும் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அந்தோ! திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, நேர்மையற்ற குணம் நரகத்தில் நுழையும் பயங்கரமான கதவுகளில் ஒன்றாகும் என்பதை அறியவில்லை. அந்தோ! பகடை விளையாட்டு விஷயத்தில், பல குருக்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் துச்சாசனனும் அவனது {துரியோதனனது} நேர்மையற்ற பாதையிலேயே தொடர்ந்துள்ளனர்.

சுரைக்காய் மூழ்கலாம் கற்கள் மிதக்கலாம், படகுகள் கூட எப்போதும் நீரில் மூழ்கலாம், ஆனாலும் திருதராஷ்டிரன் மகனான இந்த முட்டாள் மன்னன் {துரியோதனன்}, அவனுக்கு நன்மையான எனது இந்த வார்த்தைகளைக் கேட்க மாட்டான். சந்தேகமே இல்லாமல், இவன்தான் {துரியோதனன் தான்} குருக்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பான். மிகுந்த நன்மையுள்ள நண்பர்களின் நீதிச்சொற்கள் கேட்கப்படாமல், மறுபுறம் சபலம் அதிகரித்து இருப்பதால், பயங்கரமான மொத்த அழிவு குருக்களுக்கு ஏற்படப்போகிறது", என்றான் {விதுரன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top