The rise of a new festival! | Adi Parva - Section 166 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : பகன் கொல்லப்பட்டதும், அவனுடைய சொந்தங்கள் பீமனுடன் உடன்படிக்கை செய்து கொண்டது; ஏகச்சக்கர நகரத்தின் வாயிலில் பகாசுரனின் உடலைக் கிடத்திய பீமன்; பிராமணனின் வீட்டை அடைந்து, நடந்த கதையைச் சொன்ன பீமன்; பகனுடைய மரணத்தைத் திருவிழாவாகக் கொண்டாடிய அந்த நகரத்து மக்கள்...
வைசம்பாயனர் சொன்னார், "பெரும் மலையைப் போன்ற பகன், இப்படி (பீமனின் முட்டியால்) ஒடிக்கப்பட்டு, பயங்கரமாகக் கதறியபடியே இறந்தான்.(1) இச்சத்தங்களால் அச்சமடைந்த ராட்சசனின் உறவினர்கள் தங்கள் பணியாட்களுடன் வெளியே வந்தனர்.(2) உணர்வையிழந்து அச்சமடைந்திருக்கும் அவர்களைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தப் பீமன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை (நரமாமிசம் உண்பதைக் கைவிடுவோம் என்று) உறுதியேற்க வைத்து,(3) "இனி மேல் மனிதர்களைக் கொல்லாதீர்கள். அப்படி மனிதர்களைக் கொன்றீர்கள் என்றால், நீங்களும் பகனைப் போலச் சாக வேண்டியதுதான்." என்றான்.(4)