Showing posts with label பலராமன். Show all posts
Showing posts with label பலராமன். Show all posts

Friday, January 02, 2015

பலராமனைக் கண்டித்த சாத்யகி! - உத்யோக பர்வம் பகுதி 3

Satyaki condemned Balarama! | Udyoga Parva - Section 3 | Mahabharata In Tamil(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 3)

பதிவின் சுருக்கம் : சாத்யகி பலராமனின் சொற்களைக் கண்டிப்பது; கௌரவர்கள் செய்த தீமையை எடுத்துரைப்பது; பாண்டவர்கள் உரிமையை மீட்க வேண்டும் என்று சொன்னது; பிச்சையெடுப்பதை விடப் போரே மேலானது என்று சொல்வது...

சாத்யகி {பலராமனிடம்} சொன்னான், “ஒரு மனிதனின் இதயம் எப்படி இருக்கிறதோ, அப்படியே அவன் பேசுகிறான்! நீர் உமது இதயத்தின் இயல்புக்கு ஏற்பக் கடுமையாகப் பேசுகிறீர். வீரர்களும் இருக்கிறார்கள், அதே போலக் கோழைகளும் இருக்கிறார்கள். நன்கு வரையறை செய்யப்பட்ட இந்த {வீரன் மற்றும் கோழை என} இரு பிரிவுகளில் மனிதர்களைப் பிரித்துவிடலாம். இரு கிளைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தில் ஒரு கிளை பழங்கள் தாங்குவதாகவும், மற்றது தாங்காமலும் இருப்பது போல, ஒரே குல வழியைக் கொண்டவர்களில் மனோதிடமற்றவர்களும் பெரும் {மனோ} பலம் வாய்ந்தவர்களும் பிறக்கிறார்கள். ஓ! கொடியில் கலப்பை சின்னத்தைத் தாங்கிக் கொள்பவரே {பலராமரே}, நீர் பேசிய இச்சொற்களை நான் கண்டிக்கவில்லை. ஆனால், ஓ! மதுவின் மகனே {பலராமரே}, உமது சொற்களைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களையே கண்டித்து ஆறுதலடைகிறேன்.


உண்மையில், அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரர் மீது சிறு பழியைக்கூட ஒருவன் வெட்கமில்லாமல் இணைத்தாலும், சபையின் நடுவே பேசுவதற்கு அவனை எப்படி அனுமதிக்கலாம்? பகடையாட்டத்தில் புத்திசாலித்தனம் மிக்க நபர்கள், விளையாட்டில் பயிற்சிபெறாத பரந்த மனப்பான்மை கொண்ட யுதிஷ்டிரரை சவாலுக்கழைத்தனர். அவர்கள் மீது நம்பிக்கை வைத்ததால் இவர் {யுதிஷ்டிரர்} தோற்றார். அப்படிப்பட்ட மனிதர்கள், அறம் கொண்டு, விளையாட்டை {நேர்மையாக} வென்றார்கள் என்று சொல்ல முடியுமா? யுதிஷ்டிரர் இந்த வீட்டில் தனது தம்பிகளுடன் யுதிஷ்டிரர் {பகடை} விளையாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் {கௌரவர்கள்} வந்து வென்றிருந்தால் அவர்கள் நேர்மையாக வென்றார்கள் எனலாம். ஆனால் அவர்கள், போர்ச் சாதியின் {க்ஷத்திரியர்களின்} விதிகளைப் பின்பற்றி, மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட யுதிஷ்டிரரைச் சவாலுக்கு அழைத்தனர். அவர்களது தந்திரமும் வென்றது. அவர்களது இந்த நடத்தைகளில் என்ன நேர்மை இருக்கிறது? விளையாட்டு, பந்தயம் எனச்சொல்லி, பெரும் நிபந்தனைகளை ஏற்று, வாக்குறுதி தந்த கானக வாசத்தில் இருந்து விடுபட்டதால், தனது மூதாதையரின் அரியணைப் பெற உரிமை கொண்ட இந்த யுதிஷ்டிரர் இங்கே தன்னை எப்படித் தாழ்த்திக் கொள்ள முடியும்? {எதிரிகள் முன்பு எப்படிப் பணிந்து போக முடியும்?}

யுதிஷ்டிரர் பிறர் உடைமைகளை இச்சித்திருந்தால் கூட, பிச்சையெடுப்பது அவருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தகாது! பாண்டவர்கள் தங்கள் கண்டறியப்படக்கூடாத வாழ்வை {அஞ்ஞாதவாசத்தை} நிறைவு செய்திருந்தாலும், அவர்கள் கண்டறியப்பட்டார்கள் என்று சொல்பவர்களை, அரியணை பறிக்கும் நோக்கம் இல்லா நேர்மையாளர்களாக எப்படிச் சொல்ல முடியும்? பீஷ்மர் மற்றும் பரந்த மனப்பான்மை கொண்ட துரோணர் ஆகியோர் வேண்டிக் கொண்ட பின்னும், பிறப்பினடிப்படையில் பாண்டவர்களுக்குச் சொந்தமான அரியணையைத் திருப்பித்தர அவர்கள் {கௌரவர்கள்} சம்மதிக்கவில்லை. கூர்மையான அம்புகளின் வாயிலாகவே நான் அவர்களுக்குப் புத்தி புகட்டுவேன். வலிய கரப் பலத்துடன் போரிடும் நான், அவர்களைக் {கௌரவர்களைக்} குந்தியின் ஒப்பற்ற மகனின் {யுதிஷ்டிரரின்} பாதத்தில் விழச் செய்வேன்.

எனினும், அவர்கள் விவேகியான யுதிஷ்டிரரின் பாதம் பணியவில்லையெனில், பின்னர், அவர்களும், அவர்களது கூட்டத்தாரும் யமனுலகே செல்ல வேண்டும். யுயுதானன் {சாத்யகியான நான்}, சீற்றம் கொண்டு, போரிடத் தீர்மானித்தால், இடியின் வேகத்தைத் தாங்க முடியாத மலைகளைப் போல, எனது வேகத்தைத் தாங்க முடியாதவர்களாக அவர்கள் இருப்பார்கள். போரில் அர்ஜுனனிடம் யாரால் நிலைக்க முடியும்? மரணத்தைக் கையாளும் யமனின் புத்திசாலித்தனம் கொண்டவர்களும், தங்களது விற்களை உறுதியாகப் பிடிப்பவர்களுமான இந்த இரட்டையர்கள் {நகுல, சகாதேவர்கள்} முன்னால் தனது உயிரை மதிக்கும் எவன் வரமுடியும்? துருபதனின் மகனான திருஷ்டத்யும்னனையோ, திரௌபதியின் பெயருக்கு காந்தியைக் கொடுத்து, வீரத்தில் தங்கள் தந்தையருக்குப் {பாண்டவர்களுக்குப்} போட்டியாகவும், {பாண்டவர்களுக்கு} எல்லாவகையிலும் இணையாகவும், போர்ப்பெருமையில் நிறைந்திருக்கும் பாண்டவர்களின் ஐந்து மகன்களையோ, தேவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாதவனும், பெரும் வில்லைக் கொண்டவனுமான சுபத்திரையின் மகனையோ {அபிமன்யுவையோ}, யமனுக்கோ, இடிக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கதன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோரையோ யாரால் அணுக முடியும்?

திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சகுனி மற்றும் கர்ணன் ஆகியோரைப் போரில் கொன்று, இந்தப் பாண்டவரை {யுதிஷ்டிரரை}, நாம் அரியணையில் அமர்த்த வேண்டும். நம்மைக் கொல்ல முனையும் அவர்களைக் கொல்வதில் எந்தப் பாவமும் இல்லை. ஆனால், எதிரிகளிடம் பிச்சை எடுப்பது என்பது அநீதியும், இழிவும் ஆகும். யுதிஷ்டிரர் இதயப்பூர்வமாக விரும்பும் காரியத்தைச் செய்து, அவருக்கு {யுதிஷ்டிரருக்கு} ஊக்கமளிக்கும்படி நான் உங்களைக் {உங்கள் அனைவரையும்} கேட்டுக் கொள்கிறேன். பதவியில் இருந்து விலகும் திருதராஷ்டிரரின் நாட்டைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அடையட்டும். இன்றே யுதிஷ்டிரர் தனது நாட்டைத் திரும்பப் பெற வேண்டும், அல்லது என்னால் கொல்லப்பட்ட நமது எதிரிகள் பூமியில் கிடக்க வேண்டும்!” என்றான் {சாத்யகி}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


பலராமன் சொன்ன ஆலோசனை! - உத்யோக பர்வம் பகுதி 2

The counsel of Balarama! | Udyoga Parva - Section 2 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 2)

பதிவின் சுருக்கம் : .கிருஷ்ணனின் சொற்களைப் பலராமன் பாராட்டுவது; யாராவது ஒருவரை கௌரவர்களிடம் தூதுவராக அனுப்பவேண்டும் என்று சொல்வது; அப்படிச் செல்லும் தூதரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது போல யுதிஷ்டிரனை இடித்துரைப்பது; சாத்யகி பலராமனின் பேச்சை இடைமறிப்பது...

பலதேவன் {Baladeva-பலராமன்} சொன்னான், “அறவுணர்வு, மதிநுட்பம், யுதிஷ்டிரனுக்கும் மன்னன் துரியோதனனுக்கும் நன்மை தரும் உணர்வு ஆகிய சொற்களில் அமைந்த, கதனின் அண்ணனுடைய {கிருஷ்ணனுடைய} பேச்சை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். குந்தியின் இந்த வீரமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டில் பாதியைத் தர சித்தமாக இருக்கிறார்கள். இந்தத் தியாகத்தை அவர்கள் {பாண்டவர்கள்} துரியோதனனுக்காகவே செய்கிறார்கள். எனவே, திருதராஷ்டிரன் மகன்களும் பாதி நாட்டைக் கொடுத்து, சச்சரவை நிறைவாகத் தீர்த்து, நம்முடன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, {அவர்களும்} இன்பமாக இருக்க வேண்டும்.


எதிர்த்தரப்பு {கௌரவர் தரப்பு} முறையாக நடந்து கொண்டால், இந்த வலிமைமிக்கவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டை அடைந்து கோபம் தணிந்து இன்பமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களும் {கௌரவர்களும்} மக்கள் நன்மையைக் கருதி அமைதியடைய வேண்டும். குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவரையும் அமைதிப்படுத்தும் நோக்கம் கொண்ட மனிதர்களில் யாராவது ஒருவர், துரியோதனனின் மனதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் {அறிந்து கொள்ளவும்}, யுதிஷ்டிரனின் நோக்கங்களை {அவனுக்கு} விளக்கவும் இங்கிருந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

குருகுலத்தின் வீரக்கொழுந்தான பீஷ்மர், விசித்திரவீரியனின் பெருமைமிக்க மகன் {திருதராஷ்டிரர்}, துரோணர் மற்றும் அவரது மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், கிருபர், சூத மகனுடன் {கர்ணனுடன்} சேர்ந்த காந்தார மன்னன் {சகுனி}, ஆகியோரை அவர் {தூது செல்பவர்} மரியாதையுடன் வணங்கட்டும். காலத்தின் குறிகளை அறிந்தவர்களும், வீரர்களும், முறையான {தங்கள்} கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களும், கல்விக்காகவும், பலத்திற்காகவும் அறியப்பட்டவர்களுமான திருதராஷ்டிரரின் பிற மகன்கள் அனைவருக்கும், அவர் {அத்தூதர்}, தனது மரியாதையைச் செலுத்தட்டும். இந்த {மேற்கண்ட} மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கும்போது, மூத்த குடிமக்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, யுதிஷ்டிரனின் விருப்பங்களைச் சொல்ல விரும்பும் அவர் {அத்தூதர்}, பணிவான வார்த்தைகளால் அவற்றைச் சொல்லட்டும். அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் வசம் அரசைக் கொண்டுள்ளதாலும், அவர்கள் {கௌரவர்கள்} தரப்பு வலுவாக இருப்பதாலும், எச்சந்தர்ப்பத்திலும் அவர்களது கோபம் தூண்டப்படாமல் இருக்கட்டும்.

யுதிஷ்டிரனிடம் அரியணை இருந்தபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்ததால், இவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்த நாட்டை அவர்கள் {கௌரவர்கள்} அபகரித்தனர். அஜமீட குல வழித்தோன்றலும், வீரமிக்கக் குருவுமான இந்த யுதிஷ்டிரன், தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், தனக்குப் பகடையில் திறமை இல்லையென்றாலும், சூதில் நிபுணனான காந்தார மன்னனை {சகுனியை} விளையாட்டில் சவாலுக்கழைத்தான். அப்போது அந்த இடத்தில், விளையாட்டில் {சூதில்} யுதிஷ்டிரன் வெல்லத்தக்க ஆயிரக்கணக்கான பகடையாட்டக்காரர்கள் {சூதாடிகள்} இருந்தனர். எனினும், அவர்களில் யாரையும் கவனிக்காத அவன் {யுதிஷ்டிரன்}, மற்ற ஆட்டக்காரர்களைத் தவிர்த்து சுபலனின் மகனுக்குச் {சகுனிக்குச்} சவால்விட்டான். பகடை அவனுக்கு எதிராக விழுந்தாலும், {பிடிவாதமாக} சகுனியையே தனது போட்டியாளனாகக் கொண்டிருந்தான். சகுனியுடன் விளையாடிய அவன் {யுதிஷ்டிரன்} படுதோல்வியை அடைந்தான். இதில் சகுனியைப் பழி சொல்ல எதுவுமில்லை.

விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சமரசம் நோக்கம் கொண்ட சொற்களையும், பணிவான சொற்களையும் அத்தூதர் பயன்படுத்தட்டும். இப்படியே அத்தூதர் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தனது நோக்கத்தின் பால் கொண்டு வரட்டும். குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிடத் துணியாமல், துரியோதனனிடம் சமாதானமான தொனியிலேயே பேச வேண்டும். போரினால், நோக்கம் நிறைவடையாமல் போகலாம், ஆனால் சமரசத்தால், அது நிறைவடையும். இவ்வழிகளில் சென்றால்தான் நீடித்த நன்மையைப் பெற முடியும்” என்றான் {பலராமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதுகுலத்தின் வீரக்கொழுந்து {பலராமன்}, இப்படித் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்த போதே, சினி குலத்தின் வீர மகன் {சாத்யகி}, திடீரென ஆவேசமாக எழுந்து, முன்னவன் {பலராமன்} சொன்ன சொற்களுக்காக, அவனைக் {பலராமனைக்} கண்டித்தான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, March 10, 2014

பலராமன் வேதனை - வனபர்வம் பகுதி 119

Valarama's agony! | Vana Parva - Section 119 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களுக்கு ஏற்பட்ட நிலையையும், துரியோதனன் பூமி ஆள்வதையும் நினைத்து பலராமன் வருந்துவது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, பாண்டுவின் மகன்களும், விருஷ்ணிகளும் புனிதமான இடமான பிரபாசத்தை அடைந்ததும் என்ன செய்தனர்? அவர்கள் அனைவரும் பலம்பொருந்திய ஆன்மாகக் கொண்டவர்கள். அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் அறிந்த விருஷ்ணிகளும் பாண்டுவின் மகன்களும் நட்பு ரீதியான மதிப்பீட்டின்படியே ஒருவரை ஒருவர் அணுகுவர். ஆகையால், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது?"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கடற்கரையில் இருக்கும் புனிதமான இடமான பிரபாசத்தை விருஷ்ணிகள் அடைந்தபோது, அவர்கள் பாண்டுவின் மகன்களைச் சூழ்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு பசும்பால், குருக்கத்திப்பூ {Kunda Flower}, சந்திரன், வெள்ளி மற்றும் தாமரையின் வேரைப் போன்ற நிறம் கொண்டு, காட்டு மலர்மாலை அணிந்து, கலப்பையை ஆயுதமாகக் கொண்ட தாமரை இதழ்போன்ற கண்களைக் கொண்ட பலராமன், "ஓ! கிருஷ்ணா, "பெருந்தன்மை கொண்ட யுதிஷ்டிரன், ஜடா முடியுடன் வனவாசம் செய்து மரவுரி தரித்து இத்தகு இழி நிலையில் இருப்பதால் அறப்பயிற்சி நன்மைக்கோ அல்லது நேர்மையற்ற செயல்கள் தீமைக்கோ இட்டுச் செல்வதை நான் காணவில்லை. இப்போது துரியோதனன் பூமியை ஆள்கிறான். இருப்பினும் இந்தப் பூமி அவனை இன்னும் விழுங்கவில்லை.


இதனால், குறைந்த அறிவுடைய மனிதன்கூட, அறம் சார்ந்திருப்பதைவிட, தீய வழி வாழ்வே சரியானது என்றே நம்புவான். துரியோதனன் வளமிக்க நிலையிலும், யுதிஷ்டிரன் அரியணை திருடப்பட்டும் இப்படித் துன்புற்றால், இக்காரியத்தில் மக்கள் என்ன செய்வார்கள்? இந்தச் சந்தேகமே அனைத்து மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. நேர்மையான வழியில் சென்று, உண்மையில் கண்டிப்புடன், இதயத்தில் தயாளத்துடன், அறத்தேவன் {தர்மதேவன்_எமதர்மன்} மூலம் உதித்த மக்கள் தலைவன் {யுதிஷ்டிரன்} இங்கே இருக்கிறான். இந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, நாட்டையும் இன்பத்தையும் கொடுப்பானேயொழிய, வாழ்வதற்காக ஒருபோதும் நேர்மையான பாதையில் இருந்து விலக மாட்டான்.

பீஷ்மர், கிருபர், அந்தணரான துரோணர், சபையின் மூத்த உறுப்பினரான வயோதிக மன்னன் {திருதராஷ்டிரன்} ஆகியோர் பிருதையின் மகன்களை வெளியேற்றிய பிறகு எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்? தீயமனம் கொண்ட பாரதக் குலத்தின் தலைவர்களுக்கு ஐயோ. பூமிக்குத் தலைவனான அந்த இழிந்த பாவி {திருதராஷ்டிரன்}, தனது குலத்தின் மூதாதையார்களை வேறு உலகத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் என்ன சொல்வான்? தன்னை மீறி நடக்காத மகன்களை அரியணையில் இருந்து விரட்டிய பிறகு, பழியில்லா வகையில் அவர்களை நடத்தியதாக அவனால் சொல்ல முடியுமா? தன் மனக்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவன் {திருதராஷ்டிரன்} குருடனாகிவிட்டான். அவன் செய்த எந்தச் செயலால் இப்படிப் பூமியில் உள்ள அனைத்து மன்னர்களைக் காட்டிலும் குருடாகிப் போனான்? தனது நாட்டிலிருந்து குந்தியின் மகன்களை வெளியேற்றியதால் அல்லவா அப்படி ஆனான்?

தனது மகன்களுடன் சேர்ந்து மனிதத்தன்மையற்ற இக்குற்றச் செயலைச் செய்திருக்கும் விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்}, இறந்தவர்கள் உடலை எரிக்கும் இடத்தில் மலர்கள் நிறைந்த தங்க மரங்களைக் காண்கிறார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் தோள்களை உயர்த்தி., தங்கள் சிவந்த பெரிய கண்களை உருட்டி முறைத்துப் பார்த்த போது, அவர்களது தீய ஆலோசனையை இவர் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் அச்சமற்ற முறையில் அவர் போருக்குத் தேவையான ஆயுதங்களுடனும், தம்பிகளின் துணையுடனும் இருந்த யுதிஷ்டிரனைக் கானகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

ஓநாயைப் போலப் பெரும்பசியுடனும் உண்ணும் விருப்பத்துடனும் இங்கே இருக்கும் பீமன், போருக்குத் தேவையான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளின் பலத்தாலேயே ஒரு படையணியையே அழிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவன். போர்க்களத்தில் இருக்கும் பெரும் படைகளும் இவனது வெறும் போர்க் கர்ஜனையை மட்டுமே கேட்டு முற்றிலும் காலியாகும். இப்போது அந்தப் பலம் வாய்ந்தவன் பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைப்பு தரும் பயணங்களால் மெலிந்திருக்கிறான். ஆனால் அவன் தன் கைகளில் கணைகளையும், பிற போர் ஆயுதங்களையும் ஏந்தி எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்தால், அவன் தனது கானக வாழ்வின் துயரங்களை நினைவு கூர்ந்து, தனது எதிரிகளைக் கொல்வான். இது நிச்சயமாக நடக்கும் என நான் கருதுகிறேன்.

இந்த முழு உலகத்திலும் இவனது {பீமனது} பலத்துக்கும் வீரத்துக்கும் இணையாக வேறு எந்த ஒரு ஆன்மாவும் பெருமை பேச முடியாதே. ஐயோ, இவனது உடல் குளிராலும், வெப்பத்தாலும் காற்றாலும் மெலிந்து போயிருக்கிறதே. ஆனால், அவன் போரிட எழுந்து நின்றால், எதிரிகளில் ஒரு மனிதனையும் விடமாட்டான். இந்தப் பெரும் போர்வீரனான இந்தப் பலம் நிறைந்த பீமன், தேரில் ஏறி, ஓநாயின் பசி கொண்டு தனி ஒருவனாகக் கிழக்குத் திசையில் இருந்த மனிதர்களின் ஆட்சியாளர்களை மொத்தமாகப் போரில் வென்று காயமில்லாமல் பத்திரமாகத் திரும்பினான். அதே பீமன், மரவுரி தரித்து, கானகத்தில் இழி வாழ்வு வாழ்ந்து துயரத்தில் இருக்கிறான்.

இந்தப் பலமிக்கச் சகாதேவன் தெற்கில் உள்ள மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தியவன். கடற்கரையில் கூடியிருக்கும் அந்த மனிதர்களின் தலைவர்கள் துறவியின் கோலத்தில் இவனைக் காண்கிறார்கள். போர்க்களத்தில் வீரமிக்க நகுலன் தனி ஒருவனாக மேற்குத் திசை ஆண்ட மன்னர்களை வீழ்த்தியவன். அவன் இப்போது கனிகளையும் கிழங்குகளையும் உண்டு ஜடாமுடி தரித்து, உடலெல்லாம் அழுக்கடைந்து கானகத்தில் திரிகிறான். தேரில் ஏறினால் ஒருபெரும் போர்வீராங்கனையும் ஒரு மன்னனின் {துருபதனின்} மகளுமான இவள் {திரௌபதி}, வேள்விச் சடங்கின் போது வேள்விப் பீடத்தில் இருந்து உதித்தவளாவாள். எப்போதும் மகிழ்ச்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவள், கானகத்தில் துயர்நிறைந்த வாழ்வை எப்படி வாழ்கிறாள்? வாழ்வின் இன்பங்களுக்கு அறமே தலைமையானது. இனபத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அறத்தேவன் மகன் {யுதிஷ்டிரன்}, வாயுத்தேவன் மகன் {பீமன்}, தேவர்களின் தலைவன் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்}, தேவ மருத்துவர்கள் {அசுவினி தேவர்கள்} மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தேவர்களின் மகன்களாக இருந்தும் எப்படி அனைத்து வசதிகளையும் இழந்து கானகத்தில் துயர்வாழ்வு வாழுகின்றனர்? அறத்தின் மகன் வீழ்ந்த போது, அவனது மனைவியும், தம்பிமாரும், தொடர்பவர்களும், அவனும் விரட்டப்பட்ட போது துரியோதனன் எப்படி வளம்பெறத் துவங்கினான்? ஏன் இந்தப் பூமி தனது அனைத்து மலைகளுடன் அடங்கிப் போகவில்லை?" என்று கேட்டான் {பலராமன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, March 09, 2014

பாண்டவர்களைச் சந்தித்த கிருஷ்ணன் - வனபர்வம் பகுதி 118

Krishna met the Pandavas! | Vana Parva - Section 118 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கிருஷ்ணன், பலராமன் மற்றும் பல விருஷ்ணி குலத்தோர் பாண்டவர்களைச் சந்திப்பது; அவர்களிடம் பாண்டவர்கள் தங்கள் நிலையை விளக்குவது; பாண்டவர்கள் நிலை கண்டு அவர்கள் வருந்துவது…


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பெருமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது பயணத்தைத் தொடர்ந்து, கடற்கரையோரமாகப் பல வித்தியாசமான இடங்களுக்குச் சென்று, புரோகித சாதியைச் சேர்ந்த மனிதர்கள் அடிக்கடி செல்லும் புனிதமான காண்பதற்கினிய பல இடங்களில் நீராடினான். ஓ பரிக்ஷித்தின் மகனே {ஜனமேஜயா}, அவன் {யுதிஷ்டிரன்} உரிய முறையில் தனது தம்பிகளுடன் நீராடி அனைத்திலும் புனிதமான ஒரு அற்புதமான நதிக்குச் {பிரசஸ்தை} சென்றான். அங்கேயும் அந்தப் பெருமை மிக்க மன்னன் மூழ்கி, தனது மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் கொடுத்து, இருபிறப்பாளர் வர்க்கத்தின் {அந்தணர்களின்} தலைவர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தான்.


பிறகு அவன் {யுதிஷ்டிரன்} கடலில் நேரடியாக விழும் கோதாவரி நதிக்குச் சென்றான். அங்கே அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபட்டான். பிறகு அவன் திராவிட நிலத்தில் உள்ள கடலை அடைந்து, அகஸ்தியரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு புனிதமான இடத்திற்குச் சென்று, அதையும் கடந்து புண்ணியமிக்கப் பரிசுத்தமான இடங்களுக்கும் சென்றான். பிறகு அந்த வீரம் மிகுந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்தன்மையுடைய புனித இடங்களுக்கும் {நாரீ தீர்த்தங்களுக்கும்} சென்றான். அங்கே அவன், வில்தாங்குபவர்களில் தலைவனான அர்ஜுனனின் நன்கு அறியப்பட்ட, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைக் கதைகளைக் கேட்டான். அங்கே புரோகித வர்க்கத்தின் உயர்ந்த உறுப்பினர்களின் {அந்தணர்களின்} பாராட்டுகளைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.

ஓ! பூமியின் பாதுகாவலா! அந்த உலகத்தின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து அந்தப் புனிதமான இடங்களில் நீராடினான். அர்ஜுனனின் வீரத்தைப் புகழ்ந்து அந்த இடத்தில் மகிழ்ச்சியாகத் தனது நேரத்தைக் கடத்தினான். பிறகு அவன், அந்தக் கடற்கரையை ஒட்டிய புனிதமான இடங்களில் ஆயிரம் {1000} பசுக்களைக் கொடுத்தான். பிறகு, தனது தம்பிகளிடம் அர்ஜுனன் எப்படிப் பசுக்களைத் தானம் கொடுத்தான் என்று மகிழ்ந்து சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒன்றன்பின் ஒன்றாகக் கடற்கரையோரமுள்ள சூர்ப்பாரகம் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்திலும் புனிதமான இடத்தை அடையும் வரை, பல புனிதமான இடங்களையும், மற்றப் பல புனிதமான இடங்களையும் இதய விருப்பம் நிறைவேறி தரிசித்தான்.

பிறகு கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கடந்து உலகத்தில் கொண்டாடப்படும் ஒரு கானகத்தை அடைந்தான். பழங்காலத்தில் அங்கே தேவர்கள் தவம்பயின்றனர். அறம்சார்ந்தவர்களான மனிதர்களின் ஆட்சியாளர்கள் பலர் பல வேள்விச் சடங்குகளை அங்கே செய்திருந்தனர். நீண்டு பருத்து அழகான கரங்களைக் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அங்கே வில்லேந்துபவர்களில் முதன்மையான ரிசீகரின் மகனது கொண்டாடப்படும் பலிப்பீடத்தைக் கண்டான். அப்பீடம் தவசிகளாலும், வழிபடத்தக்க அறம்சார்ந்தவர்களாலும் சூழப்பட்டிருந்தது. பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைத்துத் தேவர்கள், வசுக்கள், வாயு, மற்றும் இரண்டு தெய்வீக மருத்துவர்கள், சூரியன் மகனான யமன், செல்வத்தின் தலைவன், இந்திரன், விஷ்ணு, படைப்புத் தலைவன் {பிரம்மன்}, சிவன், சந்திரன், நாளின் ஆசிரியர் {சூரியன்}, நீர்த்தலைவன், சத்யஸ்கள் கூட்டம், மூதாதையர்கள், தொடர்பவர்களுடன் கூடிய ருத்திரர், கல்வித் தேவதை {சரஸ்வதி}, சித்தர்கள் கூட்டம் மற்றும் பல இறவாத தேவர்களின் புனிதமான காண்பதற்கினிய சன்னதிகளை {கோவில்களை} கண்டான்.

அக்கோவில்களில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல உண்ணாநோன்புகள் நோற்று, பெருமளவில் ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். தனது உடலுடன் அனைத்து புண்ணிய இடங்களிலும் மூழ்கி, மீண்டும் சூர்ப்பாரகத்திற்கு வந்தான். அவனது தனது தம்பிகளுடன் அதே கடற்கரைக்கு வந்து, உலகம் முழுவதும் அந்தணர்களால் புகழ் பரப்பப்பட்ட புனிதமான இடமான பிரபாசத்துக்கு வந்தான். இரு பெரிய சிவந்த கண்களைக் கொண்டவன், அங்கே தனது தம்பிகளுடன் நீராடி, மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தினான். மற்ற அந்தணர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, லோமசருடன் சேர்ந்த அதையே செய்தனர்.

பனிரெண்டு நாட்களுக்குக் காற்று மட்டும் நீர் மட்டுமே உண்டு வாழ்ந்தான். பிறகு எல்லாப்புறமும் நெருப்பு சூழ இரவும் பகலும் {ஆன்ம} சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்தான். இப்படியே அறம் சார்ந்த மனிதர்களில் பெரியவன் {யுதிஷ்டிரன்} தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். இப்படி அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மன்னன் {யுதிஷ்டிரன்} கடும் தவமிருக்கிறான் என்ற செய்தி பலராமனையும், கிருஷ்ணனையும் எட்டியது. விருஷ்ணி குலத்தில் இரு தலைவர்களும் தங்கள் படைகளுடன் அஜமீட குலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிரனிடம் வந்தனர். உடலெல்லாம் அழுக்குடன் தரையில் படுத்துக் கிடந்த பாண்டுவின் மகன்களையும், துன்ப நிலையில் இருந்த துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கண்ட அவர்களது துயரம் பெரிதாக இருந்தது. கதறி அழுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.

பிறகு, துரதிர்ஷ்டத்தால் வீழ்த்த முடியாத வீரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும், சாம்பனையும், கிருஷ்ணனின் மகனையும் {பிரத்தியும்னனையும்}, சினியின் பேரனையும் {சாத்யகியையும்}, மற்ற விருஷ்ணிகளையும் சந்தித்து உரிய வகையில் மரியாதை செலுத்தினார். பிறகு அவர்கள் அனைவரும் பதிலுக்குப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} அதே போல மரியாதை செலுத்தினர். பிறகு அவர்கள் அனைவரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்திரனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். மிகவும் திருப்தியடைந்த அவன் {யுதிஷ்டிரன்}, தனது எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளையும், தாங்கள் காட்டில் எப்படி வசித்தனர் என்பதையும், அர்ஜுனன் ஆயுத அறிவியலைக் கற்க எப்படி இந்திரனின் வசிப்பிடம் சென்றான் என்பதையும் விவரித்து, இதயத்தால் மகிழ்ந்தான். அவர்களும் அவனிடம் இருந்து அனைத்து செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர். ஆனால் பாண்டவர்கள் மிகவும் மெலிந்திருப்பதைக் கண்ட பெருந்தன்மையுடைய கம்பீரமான விருஷ்ணிகளால் கண்ணீர் சிந்துவதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் உணர்ந்த வேதனையால், அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் தடையற வழிந்து கொண்டிருந்தது" என்றார் {வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, September 01, 2013

பாண்டவர்களின் பிள்ளைகள் - ஆதிபர்வம் பகுதி 223

The children of Pandavas | Adi Parva - Section 223 | Mahabharata In Tamil

(ஹரணா ஹரணப் பர்வம்)

யாதவர்கள் பரிசுகளுடனும் சீர்வரிசைகளுடனும் இந்திரப்பிரஸ்தம் வருதல், பிறகு யாதவர்கள் அனைவரும் திரும்பிப் போதல்; கிருஷ்ணன் மட்டும் இந்திப்பிரஸ்தத்திலேயே தங்குதல்; அபிமன்யு பிறந்தது; திரௌபதியிடம் பாண்டவர்களுக்கு ஐந்து மகன்கள் பிறத்தல்; பிள்ளைகள் வளர்ந்து ஆயுதங்களில் தேர்ச்சி பெற்று வீரர்களாக விளங்குவதைக் கண்டு பாண்டவர்கள் மகிழ்தல்…

சுபத்திரையுடன் இந்திரப்பிரஸ்தம்
திரும்பிய அர்ஜுனன்
வைசம்பாயனர் சொன்னார், "இதுபோலவே விருஷ்ணி குலத்தவர் {யாதவ குலத்தவர்} அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது, வாசுதேவன், அறத்துக்கு இணையான ஆழ்ந்த பொருள் கொண்ட சொற்களைச் சொன்னான். குடகேசன் (உறக்கத்தை வென்றவன் (அ) சுருள் முடி கொண்டவன்) {அர்ஜுனன்}, தான் செய்த செயலால், நமது குடும்பத்தை அவமதிக்கவில்லை. அவன் சந்தேகமற நமது மரியாதையை அதிகரித்திருக்கிறான். 


சத்வத குலத்தைச் சார்ந்த நாம் {பொருளாசை கொண்ட} கூலிப்படையினர் இல்லை என்பதைப் பார்த்தன் {அர்ஜுனன்} அறிந்திருக்கிறான். அந்தப் பாண்டுவின் மகன்  {அர்ஜுனன்} சுயம்வரத்தின் முடிவில் சந்தேகம் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு மிருகத்தைப் பரிசாக ஏற்பது போல மணப்பெண்ணை தானமாக {கன்னிகா தானம்} கொடுத்தால் எவன் ஏற்றுக் கொள்வான்? தனது வாரிசை விற்கும் மனிதன் என்று யார்தான் உலகத்தில் இருக்கிறான்? மேற்கண்ட முறைகளில் உள்ள இந்தக் குறைகளை எல்லாம் கண்ட அர்ஜுனன் விதிப்படியே மங்கையைக் கடத்தியிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். இது சரியான சம்பந்தம்தான். சுபத்திரை புகழ்பெற்றவள் ஆவாள். பார்த்தனும் {அர்ஜுனனும்} புகழ் பெற்றவனே ஆவான். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, அர்ஜுனன் அவளைக் கடத்திச் சென்றதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். பரத குலத்திலும், புகழ்பெற்ற சந்தனுவின் குலத்திலும் பிறந்து, குந்திபோஜனின் மகளுக்கு {குந்திக்கு} மகனுமான அர்ஜுனனை நண்பனாக ஏற்க யார் தான் விரும்ப மாட்டார்கள்? முக்கண் மகாதேவனைத் தவிர, இந்திரனையும் ருத்திரர்களையும் கொண்ட எல்லா உலகத்திலும் பார்த்தனைப் {அர்ஜுனனைப்} போரில் வீழ்த்தவல்ல ஒருவனை நான் காணவில்லை. அவனது ரதம் புகழ்பெற்றது. அந்த ரதத்தில் பூட்டப்பட்டிருப்பவை என்னுடைய குதிரைகளாகும். போர்வீரனாக பார்த்தன் {அர்ஜுனன்} புகழ்பெற்றவன்; தனது கையின் லாவகத்திற்காகவும் அவன் {அர்ஜுனன்} புகழ்பெற்றவன். அவனுக்கு நிகராக யார் இருக்கிறான்? நீங்கள் மகிழ்ச்சியுடன் தனஞ்செயனைப் {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்று அவனிடம் {அர்ஜுனனிடம்} அமைதியாக சிறந்த நல்ல வார்த்தைகளுடன் பேசி அவனைத் திருப்பி அழைத்து வருவதுதான் சிறந்தது. இது எனது கருத்து. நம்மை அவனுடைய பலத்தால் வீழ்த்தி அவனது நகரத்திற்குச் சென்றுவிட்டான் என்றால், நமது புகழ் ஒழிந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அமைதியாகச் செல்வதில் எந்த அவமதிப்பும் கிடையாது" என்றான் {கிருஷ்ணன்}.

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {யாதவ குலத்தவர்கள்}, அவன் வழிகாட்டியபடியே நடந்தனர். அவர்களால் தடுக்கப்பட்ட அர்ஜுனன் துவாரகைக்குத் திரும்பி, சுபத்திரையுடன் திருமணத்தில் இணைத்து வைக்கப்பட்டான். விருஷ்ணி குல மைந்தர்களால் கொண்டாடப்பட்ட அர்ஜுனன், ஒரு முழு வருடம் மகிழ்ச்சியாக துவாரகையில் இருந்தான். அவனது வனவாச காலத்தின் கடைசி வருடத்தை அவன் {அர்ஜுனன்} புஷ்கரா என்ற புனிதமான இடத்தில் கழித்தான். வனவாச காலமான பனிரெண்டு வருட காலமும் முடிந்ததும் அவன் காண்டவப்பிரஸ்தம் திரும்பினான். அவன் {அர்ஜுனன்} முதல் மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகி, பின்பு அந்தணர்களை மரியாதையுடனும் கவனத்துடனும் வணங்கினான். கடைசியாக அந்த வீரன் {அர்ஜுனன்} திரௌபதியிடம் சென்றான்.

பொறாமை கொண்ட திரௌபதி அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஏன் இங்கு தாமதிக்கிறீர் ஓ குந்தியின் மகனே? சத்வத குல மகள் எங்கிருக்கிறாளோ அங்கு செல்லும்! கட்டிலிருக்கும் இரண்டாவது முடிச்சு எப்போதும் முதல் முடிச்சைத் தளர்த்தும்" என்றாள். பிறகு கிருஷ்ணை {திரௌபதி} இந்தத் துன்பத்தால் மிகவும் புலம்பினாள். ஆனால் தனஞ்சயன் அவளைத் தொடர்ச்சியாகச் சமாதானம் செய்து, அவளிடம் {திரௌபதியிடம்} மன்னிப்பு கோரினான். சிவப்புப் பட்டு உடுத்தி இருந்த சுபத்திரை இருந்த இடத்திற்கு அர்ஜுனன் சென்று, அவளை {சுபத்திரையை} ராணியைப் போல அல்லாமல் இடையர் பெண் போல ஆடை மாற்றச் செய்து, உள் அறைக்குள் அனுப்பிவைத்தான். ஆனால் அந்த அரண்மனைக்குள் வந்த அந்த புகழ்பெற்ற சுபத்திரை அந்த ஆடையில் முன்பை விட அழகாக இருந்தாள். கொண்டாடப்பட்ட நீண்ட சிவந்த கண்களைக் கொண்ட அந்த பத்திரா {சுபத்திரை} முதலில் பிருதையை {குந்தியை} வழிபட்டாள். குந்தி அதிக பாசத்துடன் குற்றங்குறையற்ற அவளது {சுபத்திரையின்} உச்சியை முகர்ந்து, அளவற்ற அருளை அவளுக்கு அருளினாள்.  பிறகு நிலவைப் போன்ற முகம் கொண்ட அந்தப் பெண் {சுபத்திரை}, விரைவாக திரௌபதியிடம் சென்று அவளை வழிபட்டு, அவளிடம், "நான் உனது வேலைக்காரி" என்றாள். கிருஷ்ணை {திரௌபதி} விரைவாக எழுந்து, மாதவனின் தங்கையைப் {சுபத்திரையை} பாசத்துடன் அணைத்துக் கொண்டு, "உனது கணவர் {அர்ஜுனன்} எதிரிகள் இல்லாமல் இருக்கட்டும்!" என்று வாழ்த்தினாள். பிறகு பத்திரா {சுபத்திரை} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், "அப்படியே ஆகட்டும்!" என்றாள். அந்த நேரத்திலிருந்து, ஓ ஜனமேஜயா, அந்த பெரும் போர்வீரர்களான பாண்டவர்கள், இன்பமாக வாழ ஆரம்பித்தனர். குந்தியும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "தூய ஆன்மாவும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்ட பகைவர்களைப் பொசுக்கும் கேசவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களில் முதன்மையான அர்ஜுனன் தனது அற்புதமான நகரமான இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான் என்று கேள்விப்பட்டான். உடனே அவன் {கிருஷ்ணன்} ராமனுடனும் {பலராமனுடனும்}, மற்ற விருஷ்ணி குல, அந்தக குல வீரர்களுடனும், சகோதரர்கள், மகன்கள் மற்றும் வீரம் மிகுந்த மற்ற வீரர்களுடனும் அங்கே வந்தான். அங்கே வந்த எதிரிகளை ஒடுக்கும் {Saurin} சௌரினுடன் {கிருஷ்ணனுடன்}, மிகுந்த புத்திசாலியும், மிகுந்த தாராளவாதியுமான புகழ்பெற்ற விருஷ்ணி குல வீரருமான விருஷ்ணிகளின் தலைமைத் தளபதியுமான அக்ரூரரும் வந்திருந்தார். அங்கே பெரும் வீரம் கொண்ட அனாதிருஷ்டியும், புகழ்பெற்ற, பெரும் புத்திசாலியான, உயர்ந்த ஆன்மாவும் பிருஹஸ்பதியின் சீடருமான உத்தவரும் அங்கே வந்தனர். அங்கே சத்யகன், சல்யகன், கிருதவர்மன், சத்வதன், பிரத்யும்னன், சம்பன், நிசதன், சங்கு, சாருதேஷ்னன், பெரும் வீரம் கொண்ட ஜில்லி, விப்ருது, பெரும் பலம் வாய்ந்த சரணன், கற்றறிந்தவரில் முதன்மையான கதன் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் தவிர அங்கே வேறு பல விருஷ்ணிகளும், போஜர்களும், அந்தகர்களும் இந்திரப்பிரஸ்தத்திற்கு திருமணப் பரிசுகளுடன் வந்திருந்தனர். மாதவன் {கிருஷ்ணன்} வந்ததை அறிந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனை எதிர்கொண்டு அழைக்க இரட்டையர்களை {நகுல சகாதவனை} அனுப்பினான். அவர்களால் வரவேற்கப்பட்ட பெரும் வளமை கொண்ட அந்த விருஷ்ணி குலத்தவர் கொடிகளாலும் விருதுக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட காண்டவப் பிரஸ்தத்திற்குள் நுழைந்தனர். தெருக்கள் நன்கு கூட்டப்பட்டு, நீர் தெளித்து, மலர்களால் இரைத்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதன் மேல் சந்தன நீரும் தெளித்து அந்த இடமே நறுமணத்துடனும் குளிர்ச்சியாகவும் இருந்தது. நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எரியும் கற்றாழைகளால் {burning aloes} இனிமையான நறுமணம் சூழ்ந்து இருந்தது. நகரம் முழுவதும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமான மனிதர்களாலும், வியாபரிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மனிதர்களில் சிறந்த பலம்வாய்ந்த கரம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, ராமனுடனும் {பலராமனுடனும்} வேறுபல விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் போஜர்களுடனும் நகரத்திற்குள் நுழைந்து, குடிமக்களாலும் ஆயிரக்கணக்கான அந்தணர்களாலும் வழிபடப்பட்டனர். இறுதியாக கேசவன் {கிருஷ்ணன்}, இந்திரனின் மாளிகையைப் போல இருந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான். ராமனைக் {பலராமனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனை உரிய சடங்குகளுடன் வரவேற்றான்.

மன்னன் {யுதிஷ்டிரன்} கேசவனின் {கிருஷ்ணனின்} தலையை முகர்ந்து பார்த்து அவனை அணைத்துக் கொண்டான். வரவேற்பால் திருப்தியடைந்த கோவிந்தன் {கிருஷ்ணன்} தாழ்மையுடன் யுதிஷ்டிரனை வழிபட்டான். அவன் மனிதர்களில் புலியான பீமனுக்கும் மரியாதை செலுத்துனான். குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பிறகு விருஷ்ணி குல, அந்தக குல முக்கிய மனிதர்களை உரிய சடங்குகளுடன் வரவேற்றான். யுதிஷ்டிரன் தனக்கு மூத்தோரை மரியாதையுடன் வணங்கி, சமமானவர்களை வரவேற்றான். சிலரைப் பாசத்துடனும், சிலரை மரியாதையுடனும் வரவேற்றான். பிறகு பெரும் புகழ்பெற்ற ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, மணமகன் {அர்ஜுனன்}உறவினர்களுக்கு பெரும் செல்வத்தைக் கொடுத்தான். பிறகு சுபத்திரையிடம், அவளது உறவினர்கள் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களைக் கொடுத்தான். கிருஷ்ணன் பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் மணிகளால் வரிசையாக அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் தங்க ரதங்களையும், ஒவ்வொரு ரதத்துடனும் நான்கு குதிரைகளையும், நன்கு பழக்கப்பட்ட ரதசாரதியையும் கொடுத்தான். மேலும் அவன் {கிருஷ்ணன்} மதுரா நாட்டின் அழகிய வண்ணங்களில் இருந்த, பால் கொழுத்திருக்கும்,  பத்தாயிரம் பசுக்களையும் கொடுத்தான். மிகவும் திருப்தி கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தங்க சேணத்துடன் கூடிய சந்திரனைப் போன்ற வெண் நிறத்தாலான ஆயிரம் பெண் குதிரைகளையும் கொடுத்தான்.

மேலும் அவன் {கிருஷ்ணன்} நன்கு பழக்கப்பட்ட, காற்றின் வேகம் கொண்ட ஆயிரம் கோவேறு கழுதைகளையும் கொடுத்தான். அவை வெள்ளைநிறத்துடன் கருப்பு பிடரிமயிர் கொண்டதாக இருந்தன. தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அவன், குளியலுக்கு துணை புரியவும், குடிப்பதற்கு துணை புரியவும் நிபுணத்துவம் கொண்ட வயதால் இளமையான முதல் பருவத்தில் இருந்த கன்னிகளைக் { virgins all before their first-season }கொடுத்தான். அவர்கள் அனைவரும் அருமையான நிறத்துடன் இருந்தனர். அவர்கள் நன்கு உடுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் கழுத்தில் மட்டும் நூறு வகைகளில் தங்கம் அணிந்திருந்தனர். அவர்களது தோல் மினுமினுப்பாக இருந்தது. அவர்கள் அனைத்து ஆபரணங்களும் பூண்டு, அனைத்து தனிப்பட்ட சேவைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். பால்ஹிக {Valhikas} நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} ஏறத்தக்க குதிரைகளை {தனி சவாரிக்கு எற்ற} சுபத்திரைக்கு வரதட்சணையாகக் கொடுத்தான். அந்த தாசார்ஹ குலத்தில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} சுபத்திரைக்கு நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் தாது நிலையில் இருந்த முதல்தரமான தங்கத்தை விசேஷ குணம் கொண்ட பத்து பொதிகளில் கொடுத்தான். எப்போதும் வீரத்தையே விரும்பும் கலப்பையை ஆயுதமாகக் கொண்ட ராமன் {பலராமன்} அர்ஜுனனுக்குத் திருமணப் பரிசாக, மதக் கண் (நெற்றிப்பொட்டுகள், காதுகள், மலவாய்) திறந்து {நீர் வெளிப்பட்டு} மும்மதமும் பெருகுகின்ற மலைக்குன்றுகள் போன்ற போரில் வெல்லப்பட முடியாத ஆயிரம் யானைகளை, தங்க ஆபரணங்களாலும் மணிகளாலும் அலங்கரித்து, அதனதன் முதுகுகளில் ஒரு அரியணையையும் இணைத்துக் கொடுத்தான். யாதவர்கள் பரிசாக அளித்த வெள்ளாடைகளையும் சால்வைகளையும் வெண் நுரைகளாகவும், யானைகளை பெரிய முதலைகளாகவும், வெற்றிக் கொடிகளை பாசிக்கொடிகளாகவும் அந்தப் பெரும் தனக்குவியல் எனும் பெரும்புனல், ஆகியன முன்பு நிரம்பியிருந்த பாண்டவர்கள் என்ற கடலில் வேகமாகப் பிரவேசித்து அவர்களின் பகைவர்களுக்குக் கிலியை உண்டாக்கிற்று. யுதிஷ்டிரன் அந்தப் பரிசுகள் அனைத்தையும் ஏற்று, அந்த விருஷ்ணி குல, அந்தக குல பெரும் வீரர்கள் அனைவரையும் வழிபட்டான்.

அந்தச் சிறப்பு மிகுந்த குரு குல வீரர்களும், விருஷ்ணி குல அந்தக குல வீரர்களும் தங்கள் நாட்களை விண்ணுலகில் இருக்கும் (இறந்த பிறகு சென்ற) அறம் சார்ந்த மனிதர்கள் போல இன்பமாகக் கடத்தினர். குருக்களும் விருஷ்ணிகளும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சத்தமிட்டும் கைதட்டியும் இன்பமாக இருந்தனர். இப்படி இன்பமாகவும் விளையாடிக்கொண்டும் பல நாட்களை குருக்களுடன் கழித்த பெரும் சக்தி கொண்ட அந்த விருஷ்ணி குல வீரர்கள், பிறகு தங்கள் நகரான துவாரவதிக்குத் {துவாரகைக்குத்} திரும்பினர்.

அந்த விருஷ்ணி குல, அந்தக குல வீரர்கள் {Vrishni and the Andhaka races} ராமனுடன் {பலராமனுடன்} ரதங்களில் குரு குலத்தின் முதன்மையானவர்கள் கொடுத்த தூய கதிர்களை வெளியிடும் ரத்தினக் குவியல்களுடன் சென்றனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்} அந்த மகிழ்ச்சிகரமான நகரமான இந்திரப்பிரஸ்தத்தில் அர்ஜுனனுடன் தங்கினான். அந்தச் சிறப்பு மிகுந்தவன் {கிருஷ்ணன்}, யமுனைக் கரையில் மான்களைத் தேடி அலைந்தான். பறகு அர்ஜுனனுடன் சேர்ந்து மான்களையும் காட்டுப் பன்றிகளையும் தனது கணைகளால் துளைத்து விளையாடினான். பிறகு கேசவனின் {கிருஷ்ணனின்} பிரியமான தங்கையான சுபத்திரை, புலோமாவின் மகள் (விண்ணுலகின் ராணி) ஜெயந்தனைப் பெற்றது போல ஒரு சிறப்பு மிகுந்த மகனைப் பெற்றெடுத்தாள். சுபத்திரையின் அந்த மகன், நீண்ட கரங்களுடனும், அகலமான மார்புடனும், காளையைப் போன்ற அகலமான கண்களுடனும் இருந்தான். எதிரிகளை ஒடுக்கும் அந்த வீரன் அபிமன்யு என்று அழைக்கப்பட்டான். அந்த அர்ஜுனனின் மகன், அந்த எதிரிகளை அழிப்பவன், அந்த மனிதர்களில் காளை, பயமற்று கோபம் கொண்டவனாக இருந்ததால் அபிமன்யு என்று அழைக்கப்பட்டான் {அபி = பயமற்றவன், மன்யு = கோபமானவன்}. அந்தப் பெரும் வீரன் தனஞ்செயனால் சத்வத குல மகளிடம் சமி பலகையை {அரணிக்கட்டையை} உரசி, வேள்வி நெருப்பை உண்டாக்குவது போல பெறப்பட்டான். இந்தக் குழந்தை பிறந்ததும், குந்தியின் பலம் வாய்ந்த மகனான யுதிஷ்டிரன், அந்தணர்களை அழைத்து பத்தாயிரம் பசுக்களையும், தங்கத்தால் ஆன நாணயங்களையும் கொடுத்தான். அந்தக் குழந்தை {அபிமன்யு} பிறந்ததிலிருந்து வாசுதவேனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, தந்தைக்கும் {அர்ஜுனனுக்கும்}, தந்தையின் சகோதரர்களுக்கும் {பெரியப்பா சித்தப்பாக்களுக்கும்} உலகத்தின் அனைத்து மக்களுக்குமான சந்திரனைப் போல பிடித்தமானவனாக இருந்தான். அந்தக் குழந்தை {அபிமன்யு} பிறந்ததும், அந்தக் குழந்தைக்கான அனைத்து முதல் சடங்குகளையும் கிருஷ்ணனே செய்தான்.

அந்தக் குழந்தை {அபிமன்யு} வளர்பிறைச் சந்திரனைப் போல வளர்ந்து வந்தான். அந்த எதிரிகளை அழிப்பவன் வேதங்களை அறிந்த, நான்கு கிளைகளுடனும் பத்து பிரிவுகளுடனும் தெய்வீக மற்றும் மனித ஆயுத அறவியலை அவனது தந்தையிடம் {அர்ஜுனனிடம்} இருந்து அறிந்தான்.

பெரும் பலம் வாய்ந்த அந்தப் பிள்ளை {அபிமன்யு} தன்னை நோக்கி செலுத்தப்பட்ட ஆயுதத்துக்கு பதில் தாக்குதல் செய்யும் ஆயுதங்களையும் கற்றான். அவன் கை லகுவுடனும், முன்பும் பின்பும் நகர்வதில் லகுவுடனும் இருந்தான். சாத்திரம் மற்றும் சடங்குகளில் அபிமன்யு தனது தந்தை அர்ஜுனனைப் போலவே இருந்தான். தனது மகனைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். அர்ஜுனனைக் காணும் மகவத்தைப் {இந்திரனைப்} போல, அபிமன்யுவைக் கண்டு அர்ஜுனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். அனைத்து எதிரிகளையும் கொல்லும் தகுதி கொண்ட அபிமன்யு, தன்னிடம் அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் கொண்டிருந்தான். அவன் போரில் தன்னிகரற்று அகன்ற தோள் கொண்ட காளையைப் போல இருந்தான். பாம்பைப் (அதன் தலையைப்) போன்ற அகன்ற முகம் {நெற்றி} கொண்ட அவன் சிங்கத்தைப் போன்ற பெருமையுடன் இருந்தான். பெரும் வில்லைத்தாங்கிய அவன் வீரத்தால் மதங்கொண்ட யானையைப் போல இருந்தான்.


முழு நிலவைப் போன்ற அழகான முகம் கொண்ட அவன் {அபிமன்யு}, மேகம் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்டிருந்தான். அவன் {அபிமன்யு} வீரத்திலும், அழகிலும், சக்தியிலும் மற்ற குணங்களிலும் கிருஷ்ணனைப் போல இருந்தான். அதிர்ஷ்டம் கொண்ட பாஞ்சாலியும் {திரௌபதியும்} தனது ஐந்து கணவர்கள் மூலம், ஐந்து வீர மகன்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் அனைவரும் தகுதியில் முதன்மையானவர்களாகவும், போரில் மலை போன்ற அசைவற்றவர்களாகவும் இருந்தார்கள். பிரதிவிந்தியன் யுதிஷ்டிரனுக்கும், சூதசோமன் விருகோதரனுக்கும் {பீமனுக்கும்}, சுரூதகர்மன் அர்ஜுனனுக்கும், சதானீகன் நகுலனுக்கும், சுரூதசேனன் சகாதேவனுக்கும் பிறந்தார்கள். ஆதித்யர்களைப் பெற்ற அதிதி போல பாஞ்சாலி {திரௌபதி} அந்த ஐந்து வீரர்களிடம் ஐந்து வீரர்களைப் பெற்றெடுத்தாள். யுதிஷ்டிரனிடம் சில அந்தணர்கள் தங்கள் வருநலப் {தீர்க்கத்தரிசனப்} பார்வையால், இந்த மகன் விந்திய மலையைப் போல போர்க்களத்தில் ஆயுதங்களைத் தாங்கும் வல்லமை பெற்றுள்ளதால் பிரதிவிந்தியன் என்று அழைக்கப்பட வேண்டும். பீமசேனனால் திரௌபதி பெற்ற இந்தப் பிள்ளை, பீமன் ஆயிரம் சோம வேள்விகளைச் செய்த பிறகு பிறந்ததால் இவன் சூத சோமன் என்று அழைக்கப்படுவான்.  அர்ஜுனன் வனவாசத்திலிருந்து திரும்பி கடும் சாதனைகளை அடைந்ததால் இந்தப் பிள்ளை சுரூதகர்மன் என்று அழைக்கப்படுவான். நகுலன் தனது மகனுக்கு சிறப்பு மிகுந்த குரு குலத்தில் வந்த அரச முனியான சதானிகனின் பெயரைச் சூட்டிவிட்டான். திரௌபதியிடம் பிறந்த சகாதேவனின் பிள்ளை வாஹினி தேவதையின் {கிருத்திகை} நட்சத்திரத்தில் பிறந்ததால், தேவர்களுக்குத் தளபதியான சுரூதசேனனின் (கார்த்திகேயனின்) {முருகனின்} பெயரால் அழைக்கப்படுவான். திரௌபதியின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு வருட இடைவெளியில் பிறந்தனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா} அவர்களது முதற் சடங்குகளான சூதகரணமும், உபநயமும்  (முதல் மொட்டை மற்றும் பூணூல் சூடுதலும்) விதிப்படி தௌமியரால் நடத்தப்பட்டது. அற்புதமான குணங்களும் உறுதிகளும் கொண்ட அந்த அனைத்துப் பிள்ளைகளும் வேதங்களைக் கற்று, அர்ஜுனனிடம் தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களின் அறிவைப் பெற்றனர். ஓ மன்னர்களில் புலி போன்றவனே {ஜனமேஜனனே}, தேவர்களைப் போன்ற அகன்ற மார்புகளுடன் கூடிய பிள்ளைகளைப் பெற்ற பாண்டவர்கள், அவர்கள் வீரர்களாக வளர்ந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222

Arjuna Kidnapped Subhadra | Adi Parva - Section 222 | Mahabharata In Tamil

(சுபத்திரா ஹரண பர்வத் தொடர்ச்சி)

ரைவதக மலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சுபத்திரை அர்ஜுனன் கடத்திக் கொண்டு செல்வது; இதை அறிந்த யாதவர்கள் கோபம் கொள்வது; பலராமன் கிருஷ்ணனைக் கேட்பது; அர்ஜுனன் குறித்த தனது எண்ணத்தை பலராமன் சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, யுதிஷ்டிரனின் சம்மதத்தைக் கேள்விப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த மங்கை ரைவதக மலைக்குச் சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டு, வாசுதேவனின் சம்மதத்தையும், அனைத்து ஆலோசனைகளையும் செய்து ஒரு தீர்மானத்திற்கு வந்தான். பிறகு அந்த பாரத குலத்தின் காளை {அர்ஜுனன்}, அந்த மனிதர்களில் முதன்மையானவன், கிருஷ்ணனின் சம்மதத்துடன், நன்றாக உருவாக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் பயணித்தான். 

அந்த ரததில் சிறு மணிகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. அனைத்து வித ஆயுதங்களும் அதற்குள் இருந்தன. அந்த ரதத்தின் சக்கரங்களின் ஓசை மேகத்தின் உறுமலை ஒத்திருந்தது. அந்த ரதம் சுடர்விட்டு எரியும் நெருப்பு போல பிரகாசமாக இருந்தது. பகைவர்கள் கண்டால் அஞ்சி நடுங்கும் அந்த ரதத்தில் சைவியம் மற்றும் சுக்ரீவம் என்ற இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அர்ஜுனன் கவசம் பூண்டு, கையில் வாள் தாங்கி, விரல்களுக்கு தோல் கையுறை அணிந்து, வேட்டைக்குக் கிளம்புவது போல சென்று கொண்டிருந்தான். அதே வேளையில் சுபத்திரை, மலைகளின் இளவரசனான ரைவதகத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்த தெய்வங்களை வணங்கி, அந்தணர்கள் வாழ்த்துகளைப் பெற்று, மலையைச் சுற்றி நடந்து, துவாரவதியை {துவாரகையை} நோக்கிச் செல்லும் பாதையில் வந்து கொண்டிருந்தாள். காமனின் கணைகளால் தாக்குண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, திடீரென அந்தக் குற்றங்குறையற்ற யாதவப் பெண் மேல் பாய்ந்து, அவளை {சுபத்திரையை} வலுக்கட்டாயமாகத் தனது ரதத்தில் ஏற்றினான். இனிமையான புன்னகை கொண்ட அந்த மங்கையைக் கைப்பற்றிய பிறகு, அந்த மனிதர்களில் புலியானவன், அந்தத் தங்க ரதத்தை தனது நகரத்தை (இந்திரப்பிரஸ்தத்தை) நோக்கிச் செலுத்தினான்.

அதேவேளையில் ஆயுதம் தரித்த சுபத்திரையின் பணியாட்கள், அவள் இப்படி அபகரித்து செல்லப்பட்டதைக் கண்டு, துவாரகை நகரத்தை நோக்கி அழுது கொண்டே ஓடினர். சுதர்மா என்று அழைக்கப்பட்ட அந்த யாதவ சபைக்கு அனைவரும் சென்று, பார்த்தனின் {அர்ஜுனனின்} வீரம் குறித்து அந்த சபையின் தலைவனிடம் தெரிவித்தனர். பணியாட்களிடம் இருந்து இவை அனைத்தையும் கேட்ட சபைத்தலைவன், தனது தங்கத்தாலான எக்காளத்தை {trumpet} எடுத்து உரத்து முழக்கமிட்டு படைகளை அழைத்தான். அந்த ஒலியால் உந்தப்பட்ட போஜர்களும், விருஷ்ணிகளும், அந்தகர்களும் எல்லா புறங்களிலிருந்து ஓடி வந்தனர். உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் அதை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தனர். குடித்துக் கொண்டிருந்தவர்கள் குடியை விட்டு ஓடி வந்தனர். மனிதர்களில் புலிகளான அந்த விருஷ்ணி மற்றும் அந்தக குல வீரர்கள், அற்புதமான விரிப்புகளால் மூடப்பட்டு, பலவண்ண ரத்தினங்கள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டு எரியும் நெருப்பு போல பிரகாசமாய் இருந்த ஆயிரம் தங்க அரியணைகளில் ஏறி அமர்ந்தனர். உண்மையில் எரியும் நெருப்பின் மேல், மேலும் அதன் பிரகாசத்தினை அதிகரிக்க அவர்கள் ஏறி அமர்ந்தது போல இருந்தது. அப்படி அவர்கள் அனைவரும் வந்த அந்த சபையில் தங்கள் அரியணைகளில் தேவர்களைப் போல அமர்ந்த பிறகு, சபைத்தலைவன், அவனது பின் இருந்தவர்களின் துணை கொண்டு, ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} நடத்தையைக் குறித்துப் பேசினான்.

துவாரகை
மதுவால் சிவந்த கண்களுடன் இருந்த அந்த கர்வம் கொண்ட விருஷ்ணி வீரர்கள், இதைக் கேட்டதும், அர்ஜுனன் செய்கையைத் தாங்க முடியாமல் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். அவர்களில் சிலர், "ரதங்களைத் தயார் செய்யுங்கள் {Yoke our cars = எங்கள் ரதங்களில் நுகத்தடி பூட்டுங்கள்} என்றனர். சிலர், "ஆயுதங்களை எடுங்கள்" என்றனர். சிலர் "நமது விலை உயர்ந்த வில்லையும், உறுதியான கவசங்களையும் கொண்டு வாருங்கள்" என்றனர். சிலர் சத்தமாக தங்கள் சாரதிகளை ரதத்தை எடுக்கச் சொல்லினர். சிலர் பொறுமையிழந்து, அவர்களாகவே தங்கள் குதிரைகளுக்கு நுகத்தடி பூட்டி, அவற்றைத் தங்கள் தங்க ரதங்களில் பூட்டினர். அவர்களது ரதங்களும், ஆயுதங்களும், மற்ற பொருட்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வீரர்களிடம் பெரும் கர்ஜனைகள் எழுந்தன. பிறகு வெண்மையாகவும் கைலாச மலையைப் போல உயரமாகவும் இருந்த பலதேவன் {பலராமன்}, காட்டுப் பூக்களாலும், நீல ஆடைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, மது கொடுத்த போதையுடன், "புத்தியற்றவர்களே, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அமைதியாக அமர்ந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் வீணாக கோபத்தில் கர்ஜிக்காதீர்கள்! சொல்ல வேண்டியதை இந்த உயர் ஆன்ம கிருஷ்ணன் சொல்லட்டும். அவன் செய்ய விரும்புவதை உடனடியாக நிறைவேற்றுங்கள்" என்றான். ஹலாயுதனின் {பலராமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு, "அற்புதம்! அற்புதம்!" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் அமைதி அடைந்தனர். புத்திசாலியான பலதேவனின் {பலராமனின்} வார்த்தைகளால் அங்கு அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. பிறகு அவர்கள் அனைவரும் சபையில் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர்.

பிறகு, எதிரிகளை ஒடுக்கும் ராமன் {பலராமன்} வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இங்கே அமர்ந்து கொண்டு, நீ ஏன் அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? ஓ அச்யுதா {கிருஷ்ணா}, உன் நிமித்தமாகவே, பிருதையின் மகன் {அர்ஜுனன்} இங்கு அழைக்கப்பட்டு நம்மால் கௌரவிக்கப்பட்டான். இருப்பினும், நமது மரியாதைக்கு அந்தப் பாவி {அர்ஜுனன்} உகந்தவனல்ல என்று படுகிறது. மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த எந்த மனிதன், தான் உணவு உண்ட தட்டை உடைத்துப் போடுவான்? முன்பு ஒரு சம்மந்தத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று, பிறகும் அதில் விருப்பம் கொண்டிருப்பவன் எவன்தான் இப்படிப்பட்ட கொடுஞ்செயலைச் செய்வான்? அவன் {அர்ஜுனன்} நம்மை எல்லாம் அவமதித்து, இன்று சுபத்திரையைத் தூக்கிச் சென்றதால் அவன் தனது மரணத்தை விரும்புகிறான் என்றே படுகிறது. அவன் {அர்ஜுனன்} அவனது காலை எனது முடி தரித்த தலையில் வைத்துவிட்டான். ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, நான் இதை எப்படிப் பழக்கப்பட்டதைப் போலப் பொறுத்துக் கொள்வது? மிதிக்கப்பட்ட பாம்பு அதைத் தாங்கிக் கொள்ளாது சீறுவது போல நானும் சீற வேண்டாமா? இன்று நான் தனியாக சென்று உலகத்திலிருந்து கௌரவர்களை அழித்து ஒழிக்கிறேன்! நான் அர்ஜுனனின் இந்த வரம்பு மீறிய செயலை என்னால் பொறுக்க முடியாது" என்றான். பிறகு அங்கிருந்த அனைத்து போஜர்களும், விருஷ்ணிகளும், அந்தகர்களும், பலதேவன் {பலராமன்} சொன்னது அனைத்தையும் ஏற்று மேக முழக்கம் போலவும் துந்துபி வாத்தியம் போலவும் கர்ஜனை செய்தனர்.

Saturday, August 17, 2013

பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 191

Krishna traced Pandavas | Adi Parva - Section 191 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வத் தொடர்ச்சி)

மன்னர்கள் கோபம் கொண்டு துருபதனைக் கொல்லத் துணிவதும்; பீமனும், அர்ஜுனனும் போருக்குத் துணிந்து நிற்பதை அறிந்து, கிருஷ்ணனும் பலராமனும் பேசிக் கொள்வதும்.....

வைசம்பாயனர் சொன்னார், "(குறியை அடித்த) அந்தணனுக்குத் தனது மகளை அளிப்பதற்கு மன்னன் (துருபதன்) தனது விருப்பத்தை வெளியிட்ட போது, அந்தச் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, திடீரெனப் பெரும் கோபம் கொண்டனர். அவர்கள், "நம்மைக் கடந்து, நம் கூட்டத்தைப் புல்லென மதித்து, பெண்களின் முதன்மையான அவனது மகளை {திரௌபதியை} இந்த அந்தணனுக்கு அளிக்க விரும்புகிறான் இந்தத் துருபதன்! ஒரு மரத்தை நட்டு வைத்து, அது கனி கொடுக்கும் சமயத்தில் அதை வெட்டுகிறான். அந்தப் பாவி நம்மை மதிக்கவில்லை; ஆகையால் அவனை நாம் கொன்று விடுவோம். அவனது வயதின் காரணமாக நாம் கொடுக்கும் பெரு மதிப்பையோ, வணக்கத்தையோ பெறும் தகுதி அவனுக்கில்லை. இப்படிப்பட்ட தீய குணங்களுக்காக, அனைத்து மன்னர்களையும் அவமதித்த அந்தப் பாவியை, அவனுடைய மகனுடன் சேர்த்துக் கொல்வோம்.
அனைத்து ஏகாதிபதிகளையும் அழைத்து, அவர்களுக்கு அற்புதமான உணவு கொடுத்து உபசரித்து, கடைசியில் நம்மை மதிக்கமாட்டேன் என்கிறான். தேவ சபை போன்ற இந்த மன்னர்கள் கூட்டத்தில், தனக்கு இணையான ஒரு ஏகாதிபதியைக் கூடவா அவன் காணவில்லை? சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கானது என்ற வேதத்தின் முடிவு நன்கு அறியப்பட்டது. ஒரு க்ஷத்திரியப் பெண்ணால் கணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட ஒரு அந்தணனுக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னர்களே, நம்மில் ஒருவரைக் கணவனாக இந்த மாது தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், இவளை நெருப்பில் தூக்கிப் போட்டுவிட்டு நமது தேசங்களுக்கு நாம் திரும்பலாம். இந்த அந்தணனைப் பொறுத்தவரை, அவன் விரும்பப்படாமலோ, பேராசையாலோ {விரும்பியோ விரும்பாமலோ} ஏகாதிபதிகளான நமக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டான். இருப்பினும் அவனைக் கொல்லக்கூடாது. நமது நாட்டின் உயிர்கள், செல்வங்கள், மகன்கள், பேரன்கள் இன்னும் என்னென்ன செல்வமெல்லாம் உண்டோ அவை எல்லாம் இந்த அந்தணர்களுக்காகவே. இருப்பினும் (இவனுக்கு) ஏதாவது செய்தாக வேண்டும். பழிக்கு அஞ்சியோ, ஒவ்வொரு வர்ணத்திற்கும் சொந்தமானதை சரியாகப் பராமரிக்க எண்ணியோ, இனி நடக்கப் போகும் சுயம்வரங்களில் இது போன்ற முடிவு ஏற்பட கூடாது" என்றனர்.

ஒருவருக்கு ஒருவர் இப்படிச் சொல்லிக் கொண்டு, அந்த ஏகாதிபதிகளில் புலிகள் போன்றவர்கள், இரும்பு கதைகள், போன்ற பெரும் ஆயுதங்களுடன் துருபதனைக் கொல்ல அவனை நோக்கி அங்கும் இங்குமாக விரைந்தனர். அனைத்து ஏகாதிபதிகளும் வில்லம்புகளுடன் தன்னை நோக்கிக் கோபத்துடன் வருவதைக் கண்ட துருபதன், பயம் கொண்டு அந்தணர்களிடம் பாதுகாப்பு வேண்டினான். ஆனால், எதிரிகளைத் தண்டிக்கும் தகுதி கொண்ட அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகளான பாண்டவர்கள் (பீமனும் அர்ஜுனனும்), மதம் பிடித்த மூர்க்கமான யானைகளைப் போல அந்த விரைந்து வரும் ஏகாதிபதிகளை நோக்கி முன்னேறினர். விரல்களுக்குக் கையுறை அணிந்த அந்த ஏகாதிபதிகள், அந்த குரு வம்ச இளவரசர்களிடம் பெரும் கோபம் கொண்டு, பீமனையும், அர்ஜுனனையும் கொல்ல தங்கள் ஆயுதங்களை உயர்த்தினர்.

செயற்கரிய சாதனைகள் புரிந்த பலம் வாய்ந்த பீமன், இடியைப் போன்ற பலத்துடன், பெரும் யானையைப் போல அருகிலிருந்த ஒரு மரத்தைப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான். பிறகு பிருதையின் {குந்தியின்} மகனான அந்த பலம் வாய்ந்த கரங்களைக் கொண்ட பீமன், அந்த எதிரிகளை அழிப்பவன், கதையுடன் நிற்கும் யமதேவன் போல அங்கே மனிதக் காளையான அர்ஜுனன் அருகில் கையில் மரத்தைக் கொண்டு நின்றான். தானே பெரும் சாதனைகளைச் செய்தவனாக இருந்தாலும் பெரும் புத்திசாலியான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தனது அண்ணனின் {பீமனின்} சாதனையைக் கண்டு பெரிதும் வியந்தான். சாதனைகளில் இந்திரனுக்கு நிகரான அவன், அச்சங்களை உதறித் தள்ளி, தாக்குபவர்களை ஆவலுடன் எதிர்பார்த்து கையில் வில்லுடன் தயாராக நின்றான்.

ஜிஷ்ணு {அர்ஜுனன்} மற்றும் அவனது அண்ணன் {பீமன்} ஆகியோரின் அருஞ்செயலைக் கண்ட தெய்வீக புத்திகூர்மையும், புத்திக்கெட்டாத அருஞ்செயல்களையும் செய்த தாமோதரன் (கிருஷ்ணன்}, தனது அண்ணனான பெரும் சக்தி கொண்ட ஹலாயுதனிடம் (Halayudha = Valadeva = பலதேவனிடம்) {பலராமனிடம்}, "பெரும்பலம் வாய்ந்த சிங்கத்தின் நடையைக் கொண்டு, கையில் நான்கு முழு முழ {four full Cubit} நீளத்திற்கு பெரும் வில்லை வைத்திருக்கும்  அந்த வீரனே அர்ஜுனன்! ஓ சங்கர்ஷணா {பலராமா} நான் வாசுதேவனாக இருந்தால் இந்த எனது கணிப்பில் சந்தேகமேமில்லை, வேகமாக மரத்தைப் பிடுங்கி ஏகாதிபதிகளைத் துரத்தத் தயாராயிருக்கும் மற்றொரு வீரனே விருகோதரன் {பீமன்}! இன்று, இவ்வுலகில் விருகோதரனைத் தவிர வேறு யாரும் போரில் இது போன்ற அருஞ்செயலைச் செய்ய முடியாது.

முழு நான்கு முழ உயரமும், சிங்க நடையும், அடக்கமான நடத்தையும், அழகான நிறமும், பளபளக்கும் நீண்ட மூக்கும் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்த மற்றொரு இளைஞன், சற்று நேரத்திற்கு முன் அரங்கத்தை விட்டுச் சென்றானே, அவன் தான் தர்மனின் மகன் {தர்ம்புத்திரன் = அறமைந்தன் = யுதிஷ்டிரன்}. கார்த்திகேயனைப் {முருகனைப்} போன்று இருந்த மற்ற இரு இளைஞர்களும் அஸ்வினி இரட்டையர்களின் மகன்கள் என்று நினைக்கிறேன். பாண்டுவின் மகன்கள் தங்கள் தாய் பிருதையுடன் {குந்தியுடன்}, அந்த அரக்கு மாளிகையில் இருந்து தப்பி விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்," என்றான். பின்பு, நீரில்லா மேகம் போன்ற நிறம் கொண்ட ஹலாயுதன் {பலராமன்}, தனது தம்பியிடம் {கிருஷ்ணனிடம்}, "இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குக் கிட்டிய நற்பேறினாலேயே, நமது தந்தையின்* {வசுதேவரின்} தங்கையான பிருதை {குந்தி}, கௌரவ இளவரசர்களில் முதன்மையானவர்களுடன் (மரணத்திலிருந்து) தப்பினாள்," என்றான்.

*****************************************************************

*பிறந்தான் கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 111
யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாக சூரன் என்று ஒருவன் இருந்தான். அவன் வசுதேவரின் (கிருஷ்ணனின் தந்தை) தந்தையாவான். அவனுக்கு பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் இந்த பூமியில் உள்ளவர்களுடன் ஒப்பிடமுடியாத அளவு அழகுடையவளாக இருந்தாள். ஓ பரதகுலத்தில் வந்தவனே, சூரன் எப்போதும் உண்மை பேசுபவனாக இருந்தான். அவன், தான் முன்பே வாக்கு கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும் மைத்துனனுமான (தந்தையின் சகோதரி பெற்ற மகன் = அத்தை மகன்) குந்திபோஜனுக்குத் தனது மகளை சுவீகாரமாகக் கொடுத்தான்......

Friday, August 16, 2013

காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189

The Entry scene of the hero (Krishna) | Adi Parva - Section 189 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள், அந்தணர்களுக்கு மத்தியில் இருப்பதை அறிந்த கிருஷ்ணன், பலராமருக்கு அதைச் சுட்டிக் காட்டியதும்; வில்லைப் பார்த்து சில அரசர்களின் ஆசை ஒழிந்ததும்; பல அரசர்கள் வில்லில் நாணேற்ற முடியாமல் பங்கமடைந்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்ற எழுந்ததும்.....

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு காதுகளில் வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த இளமையான இளவரசர்கள், ஒருவருக்கொருவர் மேலோங்கும் வகையில் தங்களை, ஆயுத சாதனை செய்தவர்களாகவும், பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டு, தங்கள் ஆயுதங்களைச் சுழற்றிக் கொண்டு எழுந்தனர். அவர்கள் தங்கள் அழகிலும், வீரத்திலும், குலவழியிலும், அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் கர்வம் கொண்டு, இமயத்தின் மதம் பிடித்த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரை ஒருவர் பொறாமையுடன் பார்த்து, காமதேவனின் வசப்பட்டு, "கிருஷ்ணை {திரௌபதி} எனதே" என்று சொல்லிக்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர். க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகளை {திரௌபதியை} வெல்லும் விருப்பத்தோடு, மலைகளின் அரசன் மகள் உமாவைச் சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர். மலர்களால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்கப்பட்டு, கிருஷ்ணையின் நினைவால் இதயத்தைத் தொலைத்த அந்த அரங்கத்திலிருந்த இளவரசர்கள், அந்தப் பாஞ்சால மங்கையை {திரௌபதியை} வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர்களைக் கூட பொறாமையுடன் கண்டனர். ருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள், ஸ்வதர்கள், மருதர்கள் கூடி வர, குபேரனும் யமனும் முன்னணியில் நடக்க, தேவர்கள் தங்கள் ரதங்களில் அந்த இடத்திற்கு வந்தனர். அங்கே தைத்தியர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், தெய்வீக முனிவர்கள், குஹ்யர்கள், சாரணர்கள், விஸ்வவசுக்கள், நாரதர், பர்வதர், அப்சரஸ்களுடன் கூடிய முக்கிய கந்தர்வர்களும் அங்கே வந்தனர். 

ஹலாயுதன் (Valadeva_பலதேவன்) {பலராமன்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மற்றும் மற்ற விருஷ்ணி குல {யாதவ குல} தலைவர்கள், அந்தகர்கள் மற்றும் கிருஷ்ணனின் தலைமையை ஏற்ற மற்ற யாதவ குடிகளும் அந்தக் காட்சியைக் கண்டு அங்கே இருந்தனர். திரௌபதியால் ஈர்க்கப்பட்ட ஐந்து பாண்டவர்களும் மதம் பிடித்த யானைகளைப் போல அமர்ந்திருந்தனர். தாமரைகளால் நிறைந்த தடாகம் போலவும், சாம்பலால் மூடப்பட்ட நெருப்பு போலவும் இருந்த அந்தப் பாண்டவர்களைக் கண்ட யது குல வீரர்களில் முதன்மையான கிருஷ்ணன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு ராமனிடம் (Valadeva_பலதேவனிடம்) {பலராமன்}, "அது யுதிஷ்டிரன், அது பீமன், அது ஜிஷ்ணு (அர்ஜுனன்); அது அந்த இரட்டையர்கள்," என்று கிருஷ்ணன் சொன்னான். ராமன் {பலராமன்} மெதுவாக அவர்கள் அனைவரையும் ஆய்ந்து, திருப்தியான கண்ணோட்டத்துடன் கிருஷ்ணனைக் கண்டான். மற்ற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், கோபத்தில் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு, கண்களும், இதயங்களும், நினைவுகளும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மேல் நிலைத்திருக்க, அங்கிருந்த பாண்டவர்களைக் கவனியாமல், தங்கள் கண்களை அகல விரித்து திரௌபதியை மட்டும் கண்டனர். பலம் பொருந்திய கரங்களுடைய பிருதையின் மகன்களும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்}, அந்த சிறப்பு மிகுந்த இரட்டை வீரர்களும் {நகுலன், சகாதேவன்}, திரௌபதியைக் கண்டு, காமனின் கணையால் அடிக்கப்பட்டிருந்தனர். தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள் கூடியிருக்க, தெய்வீக மலர்கள் தூவி, தெய்வீக நறுமணம் வீச, மேளத்தின் ஓசையும், கணக்கற்ற மனிதக் குலர்களும் ஒலிக்க, புல்லாங்குழலின் அமைதியான இசை எதிரொலிக்க, வீணை மற்றும் சிறு முரசின் இசை அந்த சுற்றுவட்டாரத்தையே நிரப்ப தேவர்களின் ரதம் உள்ளே நுழைவதற்கு இடமில்லாமல் இருந்தது. பிறகு, கர்ணன், துரியோதனன், சால்வன், சல்யன், அஸ்வத்தாமன், கிரதன், சுனிதன், வக்ரன், கலிங்க மன்னன், பங்கன், பாண்டியன் {பாண்டிய மன்னன்}, பௌந்தரன், விதேக மன்னன், யவனர்கள் தலைவன், மற்றும் மற்ற மன்னர்களின் மகன்களும் பேரன்களுமான தாமரைக் கண் கொண்ட அந்த அரசுரிமை பெற்ற இளவரசர்கள், ஒருவர் பின் ஒருவராக, அந்த ஒப்பற்ற அழகுடைய மங்கையை அடைய தங்கள் வீரத்தைக் காண்பிக்கத் துவங்கினர். கிரீடங்களாலும், மாலைகளாலும், கை வளையங்களாலும், மற்ற ஆபரணங்களாலும், அலங்கரிக்கப்பட்டு, பெரும் பலத்துடனும், பெரும் வீரத்துடனும் இருந்த அந்த இளவரசர்கள், தங்கள் பலமும் சக்தியும் வெடித்துச் சிதற முயற்சித்தாலும், கற்பனையில் கூட அந்த இயல்புக்கு மிக்க உறுதியுடைய வில்லுக்கு நாணேற்ற முடியவில்லை. "அந்த மன்னர்களில் சிலர், தங்கள் பலம், கல்வி, நிபுணத்துவம், சக்தி ஆகியவற்றை உபயோகப்படுத்தி தங்கள் உதடுகள் வீங்க அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால், அப்படிச் செய்த அவர்கள் தரையில் தூக்கி வீசப்பட்டு, சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தனர். தங்கள் சக்தி விரையமாகியதால், தங்கள் கிரீடங்களும் மாலைகளும் நழுவ, பெரு மூச்சு வாங்கி, இனி தங்களால் அந்த அழகான மங்கையை வெல்ல முடியாது என்று சாந்தமடைந்தனர். அந்த கடினமான வில்லால் தூக்கி விசப்பட்டு, மாலைகளும், கை வளையங்களும் கலைந்து அவர்கள் பெரும் துயர் கொண்டனர். அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணையை {திரௌபதியை} அடையும் நம்பிக்கை இல்லாமல், துக்கத்துடன் இருந்தனர். அந்த ஏகாதிபதிகளின் துயரைக் கண்ட வில்லைச் சுமப்பவர்களில் முதன்மையான கர்ணன், அந்த வில்லிருக்கும் இடத்திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி, நாணேற்றி, அந்த நாணில் கணைகளைப் பொருத்தினான். சூரியனின் மகனும், சூத குலத்தைச் சேர்ந்தவனுமான கர்ணன் நெருப்பைப் போல அல்லது சோமனைப் போல அல்லது சூரியனே வந்தது போல, அந்தக் குறியை அடிக்கத் தீர்மானித்ததைக் கண்ட வில்லாளிகளில் முதன்மையானவர்களான பாண்டுவின் மகன்கள், அந்தக் குறி அடிக்கப்பட்டு, தரையில் விழுந்ததாகவே நினைத்தனர். ஆனால், கர்ணனைக் கண்ட திரௌபதி சத்தமாக, "நான் ஒரு சூதனை எனது தலைவனாகக் கொள்ள மாட்டேன்." என்றாள். இதைக்கேட்ட கர்ணன், எரிச்சலுடன் சிரித்து, மேல்நோக்கிச் சூரியனைப் பார்த்து, வட்டமாக வளைக்கப்பட்ட வில்லை ஒருபுறமாகத் தூக்கி ஏறிந்தான். பிறகு பல க்ஷத்திரியர்களும் அந்த சாதனையைக் கைவிட்ட பிறகு, தமகோசனின் மகனான, யமனுக்கு ஒப்பான அந்த சிறப்பு மிகுந்த சேதி நாட்டு மன்னன் சிசுபாலன், வீரத்துடன் உறுதி பூண்டு, அந்த வில்லுக்கு நாணேற்றும் பெருமுயற்சியில், முழங்கால் மடிந்து பூமியில் விழுந்தான். பெரும் பலமும் சக்தியும் கொண்ட மன்னன் ஜராசந்தன், அந்த வில்லை அணுகி அங்கே சிறிது நேரம் அசைவற்ற மலைபோல நின்றான். அவனும் அந்த வில்லால் தூக்கியெறியப்பட்டு, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான். அப்படி விழுந்த அவன், விரைவாக எழுந்து அந்த அரங்கத்தை விட்டு வெளியேறி தனது நாட்டுக்கு சென்றுவிட்டான். பிறகு மத்ர மன்னனான பெரும் வீரன் சல்யன், பெரும் பலத்தைக் கொண்டு, அந்த வில்லின் நாணையேற்ற பெரும் முயற்சி செய்து முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான். கடைசியாக, உயர்ந்த மதிப்பிற்குரிய பலர் கூடியிருந்த அந்த சபையில், வீரர்களில் முதன்மையான அனைத்து மன்னர்களும் ஏளனப் பேச்சுக்கு உள்ளான போது, குந்தியின் மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வில்லில் நாணேற்ற விரும்பி, நாணேற்றி, கணைகளை அந்த வில்லின் நாணில் பொருத்தினான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top