Showing posts with label பிரதிஜ்ஞா பர்வம். Show all posts
Showing posts with label பிரதிஜ்ஞா பர்வம். Show all posts

Monday, June 20, 2016

அர்ஜுனனின் சொற்கள்! - துரோண பர்வம் பகுதி – 084

The words of Arjuna! | Drona-Parva-Section-084 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த அர்ஜுனன் தான் கண்ட கனவைச் சொன்னது; பாண்டவ வீரர்கள் ஆச்சரியமடைந்து உற்சாகம் கொண்டது; அர்ஜுனனுக்குத் தோன்றிய மங்கலச் சகுனங்கள்; சாத்யகிக்கு அர்ஜுனன் இட்ட பணி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "யுதிஷ்டிரன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் பிறர் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, பாரதக் குலத்தின் முதன்மையானவனான அந்த மன்னனையும் {யுதிஷ்டிரனையும்}, தனது நண்பர்களையும், நலன்விரும்பிகளையும் காண விரும்பி தனஞ்சயன் {அர்ஜுனன்} அங்கே வந்தான். அவன் {அர்ஜுனன்}, அந்த மங்கலகரமான அறைக்குள் நுழைந்து, மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, அவனுக்கு முன்பு நின்ற பிறகு, அந்தப் பாண்டவர்களில் காளை (மன்னன் யுதிஷ்டிரன்) தன் இருக்கையில் இருந்து எழுந்து, பெரும் பாசத்துடன் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டான். தன் கரங்களால் அவனை அணைத்துக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அவனை {அர்ஜுனனை} இதயப்பூர்வமாக வாழ்த்தினான்.


பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {அர்ஜுனனிடம்} சிரித்துக் கொண்டே, "ஓ! அர்ஜுனா, (பிரகாசமான, மகிழ்ச்சியான) உன் முகம் மற்றும் உன்னிடம் மிகவும் நிறைவுடன் இருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} என்ற உண்மைச் செய்திகளைக் கொண்டு தீர்மானிக்கையில், போரில் உனக்கு வெற்றியே நிச்சயம் காத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.

அப்போது ஜிஷ்ணு {அர்ஜுனன்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அருளப்பட்டிருப்பீராக. கேசவனின் {கிருஷ்ணனின்} அருளால், மிக ஆச்சரியமான ஒன்றை நான் கண்டேன்" என்று சொல்லி தனக்கு நேர்ந்ததும், மிக உயர்ந்த அற்புதமுமான அந்தச் சம்பவத்தை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, முக்கண் தேவனுடன் {சிவனுடன்} ஏற்பட்ட தனது சந்திப்பைத் தன் நண்பர்களுக்கு உறுதி செய்யும் வகையில், தான் கண்டவாறே அனைத்தையும் சொன்னான். அப்போது அதைக் கேட்டவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்து, தங்கள் தலைகளைத் தரைவரை தாழ்த்தினர். மேலும் காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவனை {சிவனை} வணங்கியபடியே அவர்கள், "நன்று, நன்று!" என்றனர்.

பிறகு (பாண்டவர்களின்) நண்பர்களும், நலன்விரும்பிகள் அனைவரும், தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} ஆணைக்கிணங்க, தங்கள் இதயங்களில் (எதிரிக்கு எதிராக) சினத்தால் நிறைந்து, விரைவுடனும், கவனத்துடனும் போருக்குச் சென்றனர். மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கிய யுயுதானன் {சாத்யகி}, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன் ஆகியோர், மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தை விட்டுப் புறப்பட்டனர். வெல்லப்பட முடியாத இரு வீரர்களான யுயுதானன் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருவரும் ஒரே தேரில் சென்று அர்ஜுனனின் பாசறையை அடைந்தனர். அங்கே வந்த கிருஷ்ணன், (தொழிலால்) ஒரு தேரோட்டியைப் போலவே, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு (அர்ஜுனனுக்குச்) சொந்தமானதும், குரங்குகளின் இளவரசனை {அனுமனை} அடையாளமாகத் தாங்குவதுமான {குரங்குக் கொடியைக் கொண்டதுமான} அந்தத் தேரைத் தயார்ப்படுத்தத் தொடங்கினான். புடம்போட்ட தங்கத்தின் பிரகாசத்தைக் கொண்டதும், மேகங்களுக்கு ஒத்த ஆழமான முழக்கத்துடன் கூடிய சடசடப்பொலியைக் கொண்டதும், (கிருஷ்ணனால்} தயார் நிலையில் நிறுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேர், காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. அப்போது கவசம் பூண்ட அந்த மனிதர்களில் புலி (வாசுதவேன்), காலை வேண்டுதல்களை முடித்திருந்த பாரத்தனிடம், அவனது தேர் முறையாகத் தயாரிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியைச் சொன்னான். பிறகு, இவ்வுலக மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தங்கக் கவசம் பூண்டு, கையில் தன் வில் மற்றும் கணைகளுடன் அந்தத் தேரை வலம் வந்தான்.

தவத்துறவுகள், அறிவு மற்றும் வயது ஆகிவற்றில் முதிர்ந்தோரும், அறச்சடங்குகள் மற்றும் வேள்விகள் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களுமான பிராமணர்களால் வெற்றி குறித்த வாழ்த்தும், அருளும் ஆசிகளுடன் சொல்லப்பட்ட பின்பு, போரில் வெற்றியைத் தரவல்ல மந்திரங்களால் முன்பே தூய்மையாக்கப்பட்டிருந்த அற்புத வாகனமான அந்தத் தேரில், சுடர்மிகும் கதிர்களைக் கொண்ட சூரியன் கிழக்கு மலையில் ஏறுவதைப் போலவே அர்ஜுனன் ஏறினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, தன் தங்க ஆபரணங்களின் விளைவால், மேருவின் சாரலில் சுடர்மிகும் காந்தி கொண்ட சூரியனைப் போலவே அந்தத் தேரில் தெரிந்தான். சர்யாதி வேள்விக்கு இந்திரனுடன் ஒரே தேரில் சென்ற அசுவினி இரட்டையர்களைப் போல, பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பிறகு, யுயுதானனும் {சாத்யகியும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, அந்தத் தேரில் ஏறினர். போரில் விருத்திரனைக் கொல்வதற்காக இந்திரன் சென்ற போது, அவனது தேரின் கடிவாளங்களைப் பிடித்த மாதலியைப் போலவே, தேரோட்டிகளில் சிறந்தவனான கோவிந்தன் (அந்தக் குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடித்தான்.

அந்த இரு நண்பர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் சாத்யகியுடன்} சிறந்த தேரில் ஏறியவனும், எதிரிகளின் பெரும் படைகளைக் கொல்பவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, புதனுடனும், சுக்கிரனுடனும் கூடி இரவின் இருளை அழிப்பதற்காக (ஆகாயத்தில்) எழும் சோமனைப் போலவோ, (பிருஹஸ்பதியின் மனைவியான) தாரகை கடத்தப்பட்ட நிகழ்வின் போது, வருணன் மற்றும் சூரியனுடன் கூடி (அசுரர்களுக்கு எதிராகப்) பெரும்போருக்குச் சென்ற இந்திரனைப் போலவோ சென்றான். அப்படிப் புறப்பட்ட வீர அர்ஜுனனை, இசைக்கருவிகளின் ஒலியாலும், நற்சகுனம் குறித்த மங்கலப் பாடல்களாலும், மாகதர்களும், இசைவல்லுனர்களும் நிறைவு கொள்ளச் செய்தனர். வெற்றிக்கான வாழ்த்தையும், {அந்த நாள்} நல்ல நாளாக அமைவதற்கான வாழ்த்தையும் பாடிய சூதர்கள் மற்றும் மாகதர்களின் குரல்கள் இசைக்கருவிகளின் ஒலியோடு கலந்து அவ்வீரர்களை நிறைவு கொள்ளச் செய்தன.

பார்த்தனை {அர்ஜுனனை} மகிழ்வித்து, அவனது எதிரிகளின் சக்திகளை உறிஞ்சியபடியே நறுமணம் மிக்க மங்கலமான தென்றல் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பின்னால் இருந்து வீசியது. அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் வெற்றியையும், உமது வீரர்களின் தோல்வியையும் குறிக்கும் வகையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான பல மங்கலச் சகுனங்கள் அங்கே தோன்றின. வெற்றியின் அந்தக் குறியீடுகளைக் கண்ட அர்ஜுனன், தன் வலப்பக்கத்தில் இருந்த பெரும் வில்லாளியான யுயுதானனிடம் {சாத்யகியிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! யுயுதானா {சாத்யகி}, (மங்கலகரமான) சகுனங்களாக இவை அனைத்தும் காணப்படுவதால், ஓ! சினி குலத்தின் காளையே {சாத்யகி}, இன்றைய போரில் என் வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது. எனவே, என் சக்திக்காகவும் (என் சக்தி வெளிப்படுவதைப் பார்ப்பதற்காகவும்), யமலோகம் செல்வதற்காகவும் காத்திருக்கும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன்.

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, இன்று மன்னரின் {யுதிஷ்டிரரின்} பாதுகாவலனாக நீ இருப்பாயாக. நான் பாதுகாப்பதைப் போலவே நீயும் அவரைப் பாதுகாப்பாயாக. உன்னை வெல்லக்கூடிய மனிதர் எவரையும் நான் இவ்வுலகில் காணவில்லை. போரில் நீ வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனாவாய். தேவர்களின் தலைவனே {இந்திரனே கூட} உன்னை வீழ்த்த இயலாது. இந்தச் சுமையை உன் மீதோ, வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன் மீதோ வைத்துவிட்டு, ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, கவலையில்லாமல் என்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல முடியும்.

ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, என்னைக் குறித்த எந்தக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை. உன் முழு இதயத்தோடு நீ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கிருக்கிறானோ, நான் எங்கிருக்கிறேனோ, அங்கே அவனுக்கோ, எனக்கோ சிறு ஆபத்தும் ஏற்பட முடியாது என்பதில் ஐயமில்லை" என்றான் {அர்ஜுனன்}. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சாத்யகி, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு, பின்னவன் {சாத்யகி}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.

பிரதிஜ்ஞா பர்வம் முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English

Sunday, June 19, 2016

கிருஷ்ணனின் சொற்கள்! - துரோண பர்வம் பகுதி – 083

The words of Krishna! | Drona-Parva-Section-083 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனையும், மற்றப் பாண்டவவீரர்களையும் வரவேற்ற யுதிஷ்டிரன்; கிருஷ்ணனிடம் தன் கவலையைச் சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேவகியின் மகனான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அவனிடம், "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரவை வசதியாகக் கடத்தினாயா? ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் நோக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கின்றனவா?" என்று கேட்டான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அதே போன்ற விசாரிப்புகளை யுதிஷ்டிரனிடம் செய்தான். அப்போது வாயில் காப்போன் வந்து, பிற க்ஷத்திரியர்கள் {பிரகிருதிகள் = அரசு அங்கத்தினர்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான்.


மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதன் {வாயில்காப்போன்}, {வந்திருந்த} அந்த வீரர்களின் கூட்டத்தில் அடங்கிய விராடன், பீமசேனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, சேதிகளின் ஆட்சியாளர் திருஷ்டகேது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துருபதன் மற்றும் சிகண்டி, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), கேகயர்களின் ஆட்சியாளன் சேகிதானன், குரு குலத்தின் யுயுத்சு, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், யுதாமன்யு, சுபாகு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரை உள்ளே அனுமதித்தான். இவர்களும், க்ஷத்திரியர்கள் பிறரும் க்ஷத்திரியர்களில் காளையான அந்த உயர் ஆன்மாவை {யுதிஷ்டிரனை} அணுகி சிறந்த இருக்கைகளில் அமர்ந்தனர். வலிமைமிக்கவர்களும், பெரும் காந்தி கொண்ட உயர் ஆன்ம வீரர்களுமான கிருஷ்ணன் மற்றும் யுயுதானன் {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, யுதிஷ்டிரன், தாமரைக்கண்ணனான மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்} இனிய வார்த்தைகளில், "ஆயிரங்கண் தேவனான தெய்வீகமானவனை {இந்திரனைப்} போல உன்னை மட்டுமே நம்பி நாங்கள் போரில் வெற்றிக்கும், நித்தியமான மகிழ்ச்சிக்கும் முயற்சி செய்கிறோம். ஓ! கிருஷ்ணா, எங்கள் நாட்டை இழக்கச்செய்து எதிரிகளால் நாங்கள் நாடுகடத்தப்பட்டதையும், எங்களது பல்வேறு துன்பங்களையும் நீ அறிவாய். ஓ! அனைவருக்கும் தலைவனே, ஓ! உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் கருணை கொண்டவனே, ஓ! மதுசூதனா, எங்கள் அனைவரின் மகிழ்ச்சியும், எங்கள் இருப்பும் கூட உன்னிடமே {உன்னை நம்பியே} இருக்கிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் இதயம் உன்னிலேயே நிலைத்திருக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. ஓ! தலைவா, அர்ஜுனன் ஏற்ற உறுதி மொழி எதனால் நிறைவேறுமோ அதையும் செய்வாயாக. ஓ!, துன்பம் மற்றும் சினம் ஆகியவற்றின் இந்தக் கடலில் இருந்து எங்களை இன்று மீட்பாயாக. ஓ! மாதவா, (அந்தக் கடலைக்) கடக்க விரும்பும் எங்களுக்கு இன்று நீ ஒரு படகாவாயாக.

போரில் எதிரியைக் கொல்லவிரும்பும் தேர்வீரர்களுக்கு, ஒரு தேரோட்டியானவன் கவனமாக முயன்றால் என்ன செய்ய முடியுமோ, அஃதை (அவனது நோக்கத்தின் வெற்றிக்காகச்) செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, பேரிடர்கள் அனைத்திலும் இருந்து நீ விருஷ்ணிகளை எப்போதும் காப்பதைப் போலவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இந்தத் துயரில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தாங்குபவனே, அடியற்ற குரு கடலில் படகற்று மூழ்கும் பாண்டுவின் மகன்களுக்கு ஒரு படகாகி, அவர்களை மீட்பாயாக. ஓ! தேவர்களின் தலைவனுக்குத் தேவனே {தேவதேவேசனே}, ஓ! நித்தியமானவனே, ஓ! அழிப்பவர்களில் உயர்ந்தவனே, ஓ! விஷ்ணுவே, ஓ! ஜிஷ்ணுவே, ஓ! ஹரியே, ஓ! கிருஷ்ணா, ஓ! வைகுண்டா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா} உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவரும், சாரங்க வில்லைத்தரிப்பவரும், அனைவரில் முதன்மையானவருமான (நாராயணன் என்று அழைக்கப்படும்) புராதனமான சிறந்த முனிவர் என்று நாரதர் உன்னைச் சொல்லியிருக்கிறார். ஓ! மாதவா, அவ்வார்த்தைகளை மெய்யாக்குவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

அந்தச் சபைக்கு மத்தியில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், பேசுவபவர்களில் முதன்மையானவனுமான கேசவன் {கிருஷ்ணன்} மழை நிறைந்த மேகங்களின் ஆழ்ந்த குரலில் யுதிஷ்டிரனிடம், "ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்களையும் சேர்த்து அடங்கிய உலகங்கள் அனைத்திலும், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான எந்த வில்லாளியும் கிடையாது. மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் சக்தி, ஆயுதங்களில் சாதனை, பெரும் ஆற்றல், பெரும்பலம், போரில் கொண்டாடப்படுதல், எப்போதும் கோபம் நிறைந்திருத்தல், பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டவனாவான். வயதில் இளமையையும், காளையின் கழுத்தையும், நீண்ட கரங்களையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் பலத்தைக் கொண்டவன் ஆவான். சிங்கத்தைப் போலவோ, காளையைப் போலவோ நடப்பவனும், பெரும் அழகனுமான அவன் {அர்ஜுனன்}, உமது எதிரிகள் அனைவரையும் கொல்வான்.

என்னைப் பொறுத்தவரை, பெருகும் காட்டுத்தீயைப் போலக் குந்தியின் மகனான அர்ஜுனன், திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} துருப்புகளை எரிக்கச்செய்யும்படி செய்வேன். பாவச் செயல்களைச் செய்தவனும், சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றவனுமான அந்த இழிந்த ஈனனை (ஜெயத்ரதனை), தன் கணைகளால், எந்தச் சாலையில் இருந்து பயணிகள் எவரும் திரும்புவதில்லையோ அங்கே இந்நாளே அர்ஜுனன் அனுப்புவான். இன்று, கழுகுகளும், பருந்துகளும், மூர்க்கமான நரிகளும், ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனது {ஜெயத்ரதனது} சதையை உண்ணப்போகின்றன.

ஓ! யுதிஷ்டிரரே, அவனது பாதுகாவலர்களாக இந்திரனுடன் கூடிய அனைத்துத் தேவர்களும் வந்தாலும் கூட, நெருக்கமானப் போரில் கொல்லப்படும் ஜெயத்ரதன் யமனின் தலைநகரத்திற்குச் செல்வான். சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பிறகு, (மாலையில்) ஜிஷ்ணு {அர்ஜுனன்} உம்மிடம் வருவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துயரையும் (உமது இதய) நோயையும் கைவிட்டுச் செழிப்பால் அருளப்பட்டிருப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.


ஆங்கிலத்தில் | In English

Saturday, June 18, 2016

யுதிஷ்டிரனின் அலங்காரம்! - துரோண பர்வம் பகுதி – 082

The decoration of Yudhishthira! | Drona-Parva-Section-082 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : சூதர்களால் எழுப்பப்பட்ட யுதிஷ்டிரன் நீராடச் சென்றது; மூலிகைகளாலும், நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்ட யுதிஷ்டிரன்; நன்கு அலங்கரித்துக் கொண்டு, தியானித்த பிறகு நெருப்புக்கு ஆகுதி செலுத்திப் பிராமணர்களைச் சந்தித்துத் தானமளித்தது; வெளியறைக்கு வந்து அமர்ந்த அவனிடம் கிருஷ்ணனின் வரவு அறிவிக்கப்பட்டது; கிருஷ்ணனை வரவேற்ற யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனும் தாருகனும் அப்படிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அந்த இரவு கடந்து போனது. (காலை விடிந்த போது), மன்னன் யுதிஷ்டிரன் தன் படுக்கையில் இருந்து எழுந்தான். பனிஸ்வானிகர்கள் {Paniswanikas}, மாகதர்கள் [1], மதுபர்க்கிகர்கள் {Madhuparkikas}, சூதர்கள் [2] ஆகியோர் (பாடல்களாலும், இசையாலும்) மன்னனை {யுதிஷ்டிரனை} நிறைவு செய்தனர். ஆடற்கலைஞர்கள் தங்கள் ஆடலைத் தொடங்கினர், இனிய குரல் கொண்ட பாடகர்கள் குரு குலத்தின் புகழால் நிறைந்த தங்கள் இனிய பாடல்களைப் பாடினர் [3]. (தங்கள் தங்கள் இசைக்கருவிகளில்) நன்கு பழக்கப்பட்ட திறம்வாய்ந்த இசைக்கலைஞர்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், பேரிகைகள், பணவங்கள், ஆனகங்கள், கோமுகங்கள், அடம்பறங்கள் {சிறு பறைகள்}, சங்குகள், பேரொலியுள்ள துந்துபிகள், பல்வேறு வகையிலான பிற இசைக்கருவிகள் ஆகியவற்றை இசைத்தனர். மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான அந்தப் பேரொலி சொர்க்கங்களையே {வானத்தையே} தொட்டது. மன்னர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை அஃது உறக்கத்தில் இருந்து எழுப்பியது.


[1], [2] மாகதர்கள் = அமர்ந்து ஏத்துவோர், சூதர்கள் = நின்று ஏத்துவோர் என்ற விளக்கம் http://www.tamilvu.org/slet/l5920/l5920sel.jsp?x=322 என்ற சுட்டியில் இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "ஸ்தோத்திரங்களைப் பாடும் மாகதர்கள் கைத்தாளத்தோடும், வைதாளிகர்கள், சூதர்கள் ஆகியோரும் தர்மபுத்திரரை ஸ்தோத்திரஞ்செய்தார்கள். நர்த்தகர்கள் நாட்டியமாடினார்கள். இனிய குரலுள்ள பாடகர்கள் குருவம்சத்தின் ஸ்தோத்திரத்தைப் பொருளாகக் கொண்ட பாட்டுக்களை இனிமையாகப் பாடினார்கள்" என்று இருக்கிறது.

தன் படுக்கையில் இருந்து எழுந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அவசியம் தேவையான செயல்களைச் செய்வதற்காக மஞ்சனசாலைக்கு {குளியலறைக்குச்} சென்றான். நீராடி வெள்ளுடைத் தரித்திருந்த நூற்றியெட்டு இளம் பணியாளர்கள் {ஸ்நாபகர்கள்}, விளிம்பு வரை {நீர்} நிறைந்திருந்த தங்கக் குடங்கள் பலவற்றுடன் மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகினர். மென்துணி உடுத்தித் தன் அரச இருக்கையில் [4] சுகமாக வீற்றிருந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சந்தனம் மற்றும் தூய மந்திரங்களுடன் பல்வேறு வகைகளிலான நீரில் குளித்தான். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பலமான பணியாட்கள், பல்வேறு வகைகளிலான மருத்துவ மூலிகைகளில் ஊறிய நீரைக்கொண்டு அவனது {யுதிஷ்டிரனது} உடலைப் தேய்த்தனர். பின்னர்ப் பல்வேறு நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்ட அதிவாச நீரில் அவன் {யுதிஷ்டிரன்} நீராட்டப்பட்டான். பிறகு அவனுக்காகத் தளர்வாக வைக்கப்பட்டிருந்ததும், அன்னங்களின் இறகுகளைப் போன்ற வெண்மையானதுமான நீண்ட துணியைப் பெற்றுக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, நீர் உலர்வதற்காகத் தன் தலையைச் சுற்றி அதைக் கட்டிக் கொண்டான்.

[4] வேறொரு பதிப்பில் இது, "நான்கு பக்கங்களில் சமமான ஆசனம் என்று இருக்கிறது.

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் உடலில் சிறந்த சந்தனக்குழம்பைப் பூசிக்கொண்டு, மலர்மாலைகளை அணிந்து கொண்டு, தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு தன் கரங்களைக் கூப்பிய படி கிழக்கை நோக்கி அமர்ந்தான். அறவோரின் வழியைப் பின்பற்றுபவனான அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மனப்பூர்வமாகத் தன் வேண்டுதல்களைச் சொன்னான். பிறகு , (வழிபாட்டுக்காகச்) சுடர்மிக்க நெருப்பு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெரும் பணிவுடன் நுழைந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, புனித மரத்தாலான விறகுகளாலும், மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட தெளிந்த நெய்யின் காணிக்கைகளாலும் நெருப்பை வழிபட்ட பிறகு அந்த அறையை விட்டு வெளிவந்தான் [5].

[5] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, "இந்திரியங்களையும் மனத்தையும் ஒருமைப்படுத்தி ஜபிக்கத்தக்க மந்திரத்தை ஜபித்து அச்சமயத்தில் வணக்கமுடையவராகி, ஜ்வலிக்கின்ற அக்நியோடு கூடிய அக்நி கிருஹத்தில் பிரவேசித்துப் பரிசுத்தமான சமித்துக்களாலும், மந்திரங்களால் பரிசுத்தமான ஆஹுதிகளாலும் அக்கினியைப் பூஜித்து அந்தக் கிருஹத்தினின்று வெளியில் வந்தார்" என்றிருக்கிறது.

பிறகு, இரண்டாவது அறைக்குள் நுழைந்த அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, வேதங்களை அறிந்த பிராமணர்களில் காளைகள் பலரை அங்கே கண்டான். அவர்கள் அனைவரும் தன்னொடுக்கம் {புலனடக்கம்} கொண்டவர்களாகவும், வேதகல்வியிலும், நோன்புகளிலும் தூய்மையடைந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களால் செய்யப்பட்ட வேள்விகளின் நிறைவில் நீராடலை {அவபிருத ஸ்நானத்தை} முடித்திருந்தனர். சூரியனை வழிபடுபவர்களான அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாக இருந்தனர். அவர்களைத் தவிர அதே வர்க்கத்தைச் சேர்ந்த {பிராமணர்கள்} எட்டாயிரம் {8000} பேரும் அங்கே இருந்தனர்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்களுக்குத் தேன், தெளிந்த நெய், சிறந்த வகையிலான மங்கலகரமான கனிகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்து, ஏற்புடைய நல்வார்த்தைகளைத் தனித்துவமான குரல்களில் {தெளிவான ஒலியில்} அவர்களைச் சொல்ல வைத்து, அவர்கள் {பிராமணர்கள்} ஒவ்வொருக்கும் ஒரு நிஷ்கம் தங்கத்தையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளையும், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், ஏற்புடைய பிற பரிசுகளையும் கொடுத்தான். மேலும், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீண்டும்போதெல்லாம் பாலைத் தருபவையும், கன்றுகளுடன் கூடியவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளையும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட குழம்புகளையும் கொண்ட காராம்பசுக்களையும் {அவர்களுக்குக்} கொடுத்து அவர்களை வலம் வந்தான்.

பிறகு அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நற்பேற்றை அதிகரிப்பதும் நிறைவானதுமான சுவஸ்திகங்கள் [6], தங்கத்தாலான நந்தியாவர்த்தங்கள் [7], மலர் மாலைகள், நீர்க்குடங்கள், சுடர்மிகும் நெருப்பு, வெயிலில் காய்ந்த அரிசியால் நிறைந்த {அக்ஷதப்} பாத்திரங்கள், பிற மங்கலகரமான பொருட்கள், பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் வண்ணப்பொருள் {கோரோசனை}, மங்கலகரமானவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னியர், தயிர், தெளிந்த நெய், தேன், மங்கலகரமான பறவைகள், புனிதமாகக் கருதப்படும் பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றைக் கண்டும் தொட்டும் வெளியறைக்கு வந்தான்.

[6] சுவஸ்திகங்கள் = பெண்கள் வலக்கையை இடத்தோளிலும், இடக்கையை வலத்தோளிலும் மாற்றிக் கட்டிக்கொள்ளும் மங்கலக் குறி.

[7] மேல்மூடியுள்ள அர்க்கிய பாத்திரங்கள்

அப்போது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, வட்ட வடிவில் தங்கத்தாலான விலைமதிப்புமிக்கச் சிறந்த இருக்கை ஒன்றை, ஊழியர்கள் அந்த அறைக்குக் கொண்டு வந்தனர். முத்துக்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க விரிப்புக்கு மேல் மெல்லிய இழை கொண்ட மற்றொரு துணியாலும் மறைக்கப்பட்ட அந்த இருக்கை தேவதச்சனின் {விஸ்வகர்மாவின்} கைகளால் உருவானதாகவே தெரிந்தது.

அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் இருக்கையில் அமர்ந்ததும், விலைமதிப்புமிக்கதுமானப் பிரகாசமான ஆபரணங்களைப் பணியாட்கள் அவனிடம் கொண்டு வந்தனர். அந்த உயர் ஆன்மக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, ரத்தினங்களாலான அந்த ஆபரணங்களை அணிந்து கொண்டதும், அவனது அழகு, அவனது எதிரிகளின் துயரை அதிகரித்தது. தங்கப் பிடியையும், சந்திரனின் பிரகாசத்தையும் கொண்ட வெண்சாமரங்களைப் பணியாட்கள் வீசிய போது, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மின்னலுடன் கூடிய மேகங்களின் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

சூதர்கள் அவனது புகழைப் பாடவும், வந்திகள் அவனது புகழை உரைக்கவும் தொடங்கினர். பாடகர்கள் அந்தக் குரு குலத்தை மகிழ்ப்பவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாடத் தொடங்கினர். ஒருக்கணத்தில் வந்திகளின் குரல்கள் பேரொலியாகப் பெருகிற்று. அப்போது, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், குதிரைக்குளம்படிகளும் கேட்கப்பட்டன. யானை மணிகளின் கிங்கிணி, சங்குகளின் முழக்கம் மற்றும் மனிதர்கள் நடக்கும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்ததன் விளைவாக அந்த ஒலியால் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது.

அப்போது, கவசம் பூண்டவனும், வயதால் இளைஞனும், காது குண்டலங்களாலும், தன் இடையில் தொங்கும் வாளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான வாயில்காப்போன் ஒருவன், அந்தத் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்து, தரையில் மண்டியிட்டு, அனைத்து வழிபாட்டுக்கும் தகுந்தவனான அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்குத்} தலைவணங்கி, உயர் ஆன்மா கொண்ட அந்தத் தர்மனின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான். அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, "சிறந்த இருக்கை ஒன்றையும், ஆர்க்கியத்தையும் அவனுக்காகத் தயாராக வைப்பீராக" என்று தன் பணியாட்களுக்கு உத்தரவிட்டு, விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை} வரச்செய்து அவனை விலைமதிப்புமிக்க இருக்கையில் அமரச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வழக்கமான விசாரணைகளால் மாதவனை {கிருஷ்ணனை} வரவேற்றுப் பேசி, அந்தக் கேசவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Friday, June 17, 2016

சிவன் அளித்த வரம்! - துரோண பர்வம் பகுதி – 081

The boon granted by Siva! | Drona-Parva-Section-081 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : சிவனும் கிருஷ்ணனும் ஒன்றெனக் கண்டு மலைத்த அர்ஜுனன்; கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் ஒரு தடாகத்திற்கு அனுப்பிய சிவன்; வில்லையும் அம்பையும் சிவனிடம் கொடுத்த கிருஷ்ணார்ஜுனர்கள்; ஆயுதம் பயன்படுத்த வேண்டிய முறையை அறிந்து கொண்ட அர்ஜுனன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சிமிக்க ஆன்மாவுடன் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாக {காளையைக் கொடியாகக்} கொண்டவனும், அனைத்து சக்திகளின் கொள்ளிடமுமான அந்தத் தேவனை (ஆச்சரியத்தில்) கண்களை விரித்துப் பார்த்தான். ஒவ்வொரு இரவும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அவன் செலுத்திய காணிக்கைகளை, அந்த முக்கண் தேவனின் {சிவனின்} அருகில் கண்டான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மனப்பூர்வமாகக் கிருஷ்ணன், சர்வன் {சிவன்} ஆகிய இருவரையும் வணங்கிப் பின்னவனிடம் {சிவனிடம்}, “தெய்வீக ஆயுதத்தை (அடைய) விரும்புகிறேன்” என்றான்.


விரும்பிய வரத்தை வேண்டிய பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவன் சிவன், புன்னகையுடன் வாசுதேவனிடமும், அர்ஜுனனிடமும், "ஓ! மனிதர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் மனத்தின் விருப்பத்தையும், நீங்கள் இங்கே வந்த காரியத்தையும் நான் அறிவேன். நீங்கள் விரும்பியதை நான் தருவேன். ஓ! எதிரிகளைக் கொல்பவர்களே, இந்த இடத்திற்கு வெகு அருகில், அமிர்தம் நிறைந்த தெய்வீகத் தடாகம் ஒன்று இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, அந்த எனது தெய்வீக வில்லும், கணையும் அங்கே வைக்கப்பட்டன. அதைக் கொண்டே தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் நான் கொன்றேன். கிருஷ்ணா, அந்தச் சிறந்த வில்லில் கணையைப் பொருத்தி இங்கே கொண்டு வருவாயாக" என்றான் {சிவன்}. சிவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுடன் சேர்ந்து "அப்படியே ஆகட்டும்" என்றான்.

பிறகு, நூற்றுக்கணக்கான தெய்வீக அற்புதங்களைக் கொண்டதும், அனைத்துப் பொருளையும் அருள வல்லதும், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனால் {சிவனால்} குறிப்பிடப்பட்டதுமான அந்தப் புனிதத் தடாகத்திற்குச் சிவனின் துணைவர்கள் அனைவரின் துணையுடன் அந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். முனிவர்களான நரனும், நாராயணனும் (அஃதாவது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}) அந்தத் தடாகத்திற்கு அச்சமில்லாமல் சென்றனர்.

சூரியவட்டிலைப் போன்றப் பிராகாசமுடன் இருந்த அந்தத் தடாகத்தை அடைந்த அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்}, அதன் நீருக்குள் ஒரு பயங்கரப் பாம்பைக் கண்டனர். மேலும் அங்கே ஆயிரம் {1000} தலைகளைக் கொண்ட மற்றுமொரு பாம்பையும் கண்டனர். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பாம்பு {நெருப்பின்} கடுந்தழல்களைக் கக்கிக் கொண்டிருந்தது. அப்போது, கிருஷ்ணனும், அர்ஜுனனும், நீரைத் தொட்டுத் தங்கள் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனை {சிவனை} வணங்கி அந்தப் பாம்புகளை அணுகினர். வேதங்களை அறிந்தவர்களான அவர்கள் அந்தப் பாம்புகளை அணுகும்போதே, அளவிலா சக்தி கொண்ட பவனை {சிவனைத்} தங்கள் நேர்மையான ஆன்மாக்களால் வணங்கியபடியே, ருத்ரனைப் புகழ்ந்து வேதங்களில் உள்ள {சதருத்ரியம் என்ற} நூறு பத்திகளை {ஸ்லோகங்களை} உரைத்தனர்.

அந்த ருத்ரத் துதிகளுடைய சக்தியின் விளைவால் அந்தப் பயங்கரப் பாம்புகள் இரண்டும், தங்கள் பாம்பு வடிவங்களைத் துறந்து, எதிரிகளைக் கொல்லும் வில் மற்றும் கணையின் வடிவை ஏற்றன. (தாங்கள் கண்டதில்) நிறைவுற்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும் பெரும் பிரகாசம் கொண்ட அந்த வில்லையும் கணையையும் கைப்பற்றினர். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சிறப்புமிக்க மஹாதேவனிடம் {சிவனிடம்} அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். அப்போது சிவனுடைய உடலின் ஒருபகுதியில் இருந்து பழுப்பு நிறக் கண்களைக் கொண்ட ஒரு பிரம்மச்சாரி வெளிவந்தான். தவத்தின் புகலிடமாக அவன் தெரிந்தான். நீலத் தொண்டையும், சிவப்பு குழல்களும் கொண்ட அவன் பெரும் பலம் கொண்டவனாகவும் இருந்தான்.

அந்தச் சிறந்த வில்லை எடுத்த அந்தப் பிரம்மச்சாரி (வில் மற்றும் தனது பாதம் ஆகிய இரண்டையும் முறையாக வைத்துக் கொண்டு) நிலையாக நின்றான் [1]. கணையை வில்லின் நாணில் பொருத்திய அவன், பின்னதை {வில்லை} முறையாக வளைக்கத் தொடங்கினான். நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவன் {அந்த பிரம்மச்சாரி} விற்பிடியைப் பிடித்திருக்கும், நாணை வளைக்கும், பாதங்களை நிலைநிறுத்தும் முறைகளைக் கண்டும், பவனால் {சிவனால்} உச்சரிக்கப்பட்ட மந்திரங்களைக் கேட்டும் அனைத்தையும் முறையாகக் கற்றான். வலிமையும், பலமும் மிக்க அந்தப் பிரம்மச்சாரி அந்தக் கணையை அதே தடாகத்தில் ஏவினான். மேலும் அவன் அந்த வில்லையும் அதே தடாகத்தில் மீண்டும் வீசியெறிந்தான்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "அவர் அந்த உத்தமமான வில்லைக் கையிலெடுத்து ஏகாக்ரசித்தராகி வீரன் நிற்கும் நிலைமையோடு நின்றார்" என்றிருக்கிறது.

நல்ல நினைவுத்திறனைக் கொண்ட அர்ஜுனன், தன்னிடம் பவன் {சிவன்} மனம்நிறைந்தான் என்பதை அறிந்தும், காட்டில் தனக்குப் பின்னவன் {சிவன்} அளித்த வரத்தையும், தனிப்பட்ட முறையில் தனக்குக் காட்சியளித்ததையும் நினைவுகூர்ந்தும், "இவை அனைத்தும் கனியை {பலனை} உண்டாக்குவதாக அமையட்டும்" என்று மனப்பூர்வமாக விரும்பினான். அவனது விருப்பத்தைப் புரிந்து கொண்ட பவன் {சிவன்}, அவனிடம் நிறைவடைந்து அவனுக்கு வரத்தை அளித்தான். மேலும் அந்தத் தேவன் {சிவன்}, பயங்கரப் பாசுபதாயுதத்தையும் [2], உறுதிமொழியின் நிறைவேற்றத்தையும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அருளினான். இப்படியே உயர்ந்த தேவனிடம் {சிவனிடம்} இருந்து மீண்டும் பாசுபதாயுதத்தை அடைந்தவனும், வெல்லப்பட முடியாதவனும், {தான் கண்ட காட்சியால்} மயிர் சிலிர்ப்பை அடைந்தவனுமான அர்ஜுனன், ஏற்கனவே தன் காரியம் சாதிக்கப்பட்டதாகவே கருதினான்.

[2] வனபர்வம் பகுதி 166ல் அர்ஜுனன் சிவனிடம் முதல்முறையாகப் பாசுபதத்தைப் பெற்றது குறிப்பிடப்பட்டுள்ளது. வனபர்வம் 172ல் அர்ஜுனன் பாசுபதத்தை முதல்முறையாகத் தானவர்கள் {பௌலோமர்கள் மற்றும் காலகேயர்கள்} மீது பயன்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கனவில் மீண்டும் சிவனிடம் இருந்து அதே பாசுபத ஆயுதத்தைப் பெறுகிறான்.

பிறகு மகிழ்ச்சியால் நிறைந்த அர்ஜுனனும், கிருஷ்ணனும், தங்கள் தலைகளைத் தாழ்த்தி, அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} தங்கள் வழிபாட்டைச் செலுத்தினர். பவனால் {சிவனால்} அனுமதிக்கப்பட்ட அர்ஜுனன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய வீரர்கள் இருவரும் மகிழ்ச்சியின் வரத்தால் நிறைந்து கிட்டத்தட்ட உடனேயே தங்கள் முகாமுக்குத் திரும்பினர். ஜம்பனைக் கொல்ல விரும்பிய இந்திரன், விஷ்ணு ஆகிய தேவர்கள் இருவரும், பெரும் அசுரர்களைக் கொல்பவனான பவனின் {சிவனின்} அனுமதியைப் பெற்று மகிழ்ச்சியை அடைந்ததைப் போலவே உண்மையில் அவர்களது {கிருஷ்ணார்ஜுனர்களின்} மகிழ்ச்சியும் இருந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Thursday, June 16, 2016

சிவனைத் துதித்த கிருஷ்ணனும்! அர்ஜுனனும்!! - துரோண பர்வம் பகுதி – 080

Arjuna and Krishna adored Siva! | Drona-Parva-Section-080 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் கனவில் கிருஷ்ணன் தோன்றியது; சிவனை நினைக்கச் சொன்ன கிருஷ்ணன் அர்ஜுனனைக் கைலாசத்திற்கு அழைத்துச் சென்றது; சிவனைப் போற்றிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்துச் சிந்தித்து, (வியாசரால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட) மந்திரங்களை நினைவுகூர்ந்தான். விரைவில் அவன் {அர்ஜுனன்} உறக்கத்தின் கரங்களில் அமைதியடைந்தான் [1]. துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், சிந்தனையில் மூழ்கியிருந்தவனுமான அந்தக் குரங்குக் கொடி வீரனின் {அர்ஜுனனின்) கனவில், கருடனைத் தன் கொடியாகக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} தோன்றினான்.


[1] வேறொரு பதிப்பில் மதிமயக்கமடைந்தான் என்று இருக்கிறது.

அற ஆன்மா கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் விளைவால் எப்போதும் எழுந்து நின்று, ஒரு சில எட்டுகள் முன்னேறிச் சென்று கிருஷ்ணனை வரவேற்பதை எந்தச் சூழ்நிலையிலும் தவிர்த்ததில்லை. எனவே, இப்போது அவன் {அர்ஜுனன்}, (தன் கனவிலும்) எழுந்து நின்று கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஓர் இருக்கையைக் கொடுத்தான். எனினும் அவன் {அர்ஜுனன்}, அந்நேரத்தில் இருக்கையில் தானும் அமர்ந்து கொள்ளத் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. வலிமையும் சக்தியும் கொண்ட கிருஷ்ணன், பார்த்தனின் {அர்ஜுனனின்} தீர்மானத்தை அறிந்து, இருக்கையில் அமர்ந்து, பின்னவன் {அர்ஜுனன்} நின்று கொண்டிருக்கையிலேயே அந்தக் குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துயரில் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே.

காலம் வெல்லப்பட முடியாததாகும். காலம், அனைத்து உயிரினங்களையும் தவிர்க்க முடியாத வழியில் பலவந்தமாகத் தள்ளுகிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, {அப்படியிருக்கையில்}, இந்த உனது துயரம் எதற்காக? ஓ! கற்றறிந்தவர்களுள் முதன்மையானவனே {அர்ஜுனா}, துயரில் ஈடுபடக்கூடாது! செயல்பாட்டுக்குத் துயரம் ஒரு தடையாகும். சாதிக்கப்பட வேண்டிய செயலைச் சாதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஒருவனின் முயற்சிகள் அனைத்தையும் துறக்கச்செய்யும் துயரமானது உண்மையில் அவனது எதிரியாகும். துயரில் ஈடுபடும் ஒருவன், தன் எதிரிகளை மகிழ்வித்து, தன் நண்பர்களைக் கவலைகொள்ளச் செய்து, தன்னையும் பலவீனமாக்கிக் கொள்கிறான். எனவே, துயருறாமல் இருப்பதே உனக்குத் தகும்” என்றான் {கிருஷ்ணன்}.

அப்போது, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எவராலும் வெல்லப்படாதவனும், பெரும் கல்வியைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, இந்தப் பயங்கர வார்த்தைகளைச் சொன்னான்: “ஜெயத்ரதன் படுகொலையைக் குறித்து நான் செய்த உறுதிமொழி பயங்கரமானது. ஓ கேசவா {கிருஷ்ணா}, நாளையே என் மகனைக் கொன்ற அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனை} நான் கொல்வேன் என்பதே எனது உறுதிமொழியாகும். என் உறுதிமொழியில் என்னைச் சலிக்கச் செய்வதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனைத் தார்தராஷ்டிரர்கள் தங்கள் பின்னால் நிறுத்திக் கொள்வார்கள்.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளில், படுகொலைக்குப் பிறகு எஞ்சியவர்களைத் தன் எண்ணிக்கையாகக் கொண்டுள்ள அவர்களது படை வீழ்த்துவதற்குக் கடினமானதே ஆகும். பெரும் தேர்வீரர்கள் அனைவராலும் சூழப்பட்ட சிந்துக்களின் தீய ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நாம் எவ்வாறு காண்போம்? ஓ! கேசவா, என் உறுதிமொழி நிறைவேறப் போவதில்லை. உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தோற்ற என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு உயிர்வாழ முடியும்? ஓ! வீரா {கிருஷ்ணா}, இது (இந்த என் உறுதி மொழி) சாதிக்கப்பட முடியாதது என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவே (என்) பெரும் துயரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. (வருடத்தின் இந்தப் பருவக் காலத்தில்) சூரியன் விரைவாக மறைகிறான் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

பறவை {கருடக்} கொடி கொண்ட கிருஷ்ணன், பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} துயரின் காரணத்தைக் கேட்டு, நீரைத் தொட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} படுகொலையைத் தீர்மானித்துப் பாண்டுவின் மகனுடைய {அர்ஜுனனுடைய} நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது. அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான். அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும். அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} மனத்தில் அந்தத் தேவனைச் சிந்தித்து, அவனை {சிவனை} நினைவுகூர்வாயாக. நீ அவனது பக்தனாவாய். அவனது {சிவனின்} அருளால் நீ அந்த மகிமையான உடைமையை {பாசுபதத்தை} அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீரைத் தொட்டுக் குவிந்த மனத்தோடு பூமியில் அமர்ந்து, பவ தேவனை {சிவனை} நினைத்தான். அப்படி அவன் குவிந்த மனத்துடன் அமர்ந்ததும், மங்கலக் குறியீடுகளைக் கொண்ட பிரம்மம் என்று அழைக்கப்படும் காலத்தில் {பிரம்மமுகூர்த்தத்தில்}, அர்ஜுனன், தானும் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} வானத்தில் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மனோவேகத்தைக் கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} தானும் சேர்ந்து புனிதமான இமயமலையின் அடிவாரத்தையும், பல பிரகாசமான ரத்தினங்கள் நிறைந்ததும், சித்தர்கள் மற்றும் சாரணர்களால் அடிக்கடி அடையப்பட்டதுமான மணிமான் மலையையும் அடைந்ததாகத் தெரிந்தது. தலைவன் கேசவன் அவனது {அர்ஜுனனது} இடது கையைப் பற்றியிருந்ததாகவும் [2] தெரிந்தது. (அந்த இடத்தை அடைகையில்) பல அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.

[2] ஆனால், மேலுள்ள படத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனின் வலக்கையைப் பிடித்திருக்கிறான். வேறொரு பதிப்பில், "சர்வவியாபியான கேசவரால் வலக்கையில் பிடிக்கப்பட்டு அந்தப் பார்த்தன் அவரோடு வாயுவேகம் போன்ற வேகத்துடைய கதியுடையவனாக ஆகாயத்தை அடைந்தான்" என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும் கிருஷ்ணன் அர்ஜுனனின் வலக்கையைப் பிடித்திருந்ததாகவே இருக்கிறது.

பிறகு, அற ஆன்மா கொண்ட அர்ஜுனனுக்குத் தான் வடக்கின் வெண்மலையை அடைந்ததாகத் தெரிந்தது. பிறகு அவன் {அர்ஜுனன்}, குபேரனின் மகிழ்ச்சியான நந்தவனங்களில் {சைத்ரரதத்தில்} தாமரைகள் நிறந்த அழகிய தடாகத்தைக் கண்டான். மேலும் அவன் நதிகளில் முதன்மையான கங்கை முழுமையான நீருடன் செல்வதையும் கண்டான். பிறகு அவன் {அர்ஜுனன்} மந்தர மலைகளின் பகுதிகளை அடைந்தான். அந்தப் பகுதிகள் எப்போதும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்களால் நிறைந்திருந்தது. அவற்றில் ஸ்படிகக் கற்கள் எங்கும் விரவிக் கிடந்தன. அவற்றில் சிங்கங்களும், புலிகளும் வசித்தன, பல்வேறு வகைகளிலான விலங்குகளும் நிறைந்திருந்தன. அவை, மகிழ்ச்சிமிக்கப் பறவைகளின் இனிய சுரங்களை எதிரொலித்தபடி முனிவர்களின் அழகிய ஆசிரமங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கின்னரர்களின் பாடல்களும் அங்கே எதிரொலித்தன. தங்க மற்றும் வெள்ளி முகடுகளால் அருளப்பட்ட அவை, பல்வேறு மூலிகை செடிகளாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. மந்தர மரங்கள் பல அபரிமிதமான மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

பிறகு அரஜுனன், மைக்குவியல்களைப் போலத் தெரியும், காலம் என்றழைக்கப்படும் மலைகளை {காலபர்வதத்தை} அடைந்தான். பிறகு அவன் பிரம்மதுங்கம் என்றழைக்கப்படும் கொடுமுடியையும், பிறகு பல நதிகளையும், வசிப்போரற்ற பல மாகாணங்களையும் அடைந்தான். சதசிருங்கத்தை அடைந்த அவன், சர்யாதி என்ற பெயரில் அறியப்படும் காடுகளையும் {சர்யாதி வனத்தையும்} அடைந்தான். பிறகு குதிரைத் தலை {அஸ்வசிரஸ்} என்று அறியப்படும் ஒரு புனிதமான இடத்தையும், பிறகு அதர்வணம் என்ற பகுதியையும் அவன் கண்டான். விருதம்சம் என்றழைக்கப்படும் மலைகளின் இளவரசனையும், அப்சரசுகளால் நிறைந்ததும், கின்னரர்களின் இருப்பால் அருளப்பட்டதுமான பெரும் மந்தரத்தையும் {மகாமந்தரத்தையும்} அவன் கண்டான். அந்த மலையில் கிருஷ்ணனுடன் உலவிய பார்த்தன், சிறந்த நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டும், தங்கத் தாது நிரம்பியதும், சந்திரக் கதிர்களின் காந்தியைக் கொண்டதும், பல பெருநகரங்களையும், நகரங்களையும் கொண்டதுமான பூமியின் ஒரு பகுதியைக் கண்டான். பல அற்புத வடிவங்களையும் பல செல்வச்சுரங்கங்களையும் கொண்ட பல கடல்களையும் அவன் கண்டான். வானம், ஆகாயம் மற்றும் பூமியில் இப்படிச் சென்று கொண்டிருந்த அவன் விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் இடத்தை அடைந்தான். கிருஷ்ணனின் துணையுடன் உலவிய அவன் (வில்லில் இருந்து) ஏவப்பட்ட கணையைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான். விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கோள்கள், நட்சத்திரங்கள் அல்லது நெருப்புக்கு இணையான காந்தியைக் கொண்ட சுடர் மிகும் மலையொன்றை {கைலாசத்தைக்} கண்டான்.

அந்த மலையை அடைந்த அவன் {அர்ஜுனன்}, அதன் உச்சியில், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்டவனும், தவத்துறவுகளில் {தபோநிஷ்டையில்} எப்போதும் ஈடுபடுபவனும், ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல இருப்பவனும், தன்னொளியாலேயே சுடர்விடுபவனுமான அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனைக்} கண்டான். கையில் திரிசூலமும், தலையில் சடா முடியும், வெண்பனியின் நிறமும் கொண்ட அவன் {சிவன்}, மரப்பட்டை மற்றும் தோலாலான ஆடையை அணிந்திருந்தான். பெரும் சக்தியைக் கொண்ட அவனது உடல் ஆயிரம் கண்களுடன் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது. அவன் {சிவன்} (தன்னைச் சுற்றி) பல வடிவங்களிலான உயிரினங்களால் சூழப்பட்டுப் பார்வதியுடன் அமர்ந்திருந்தான். அவனுடன் இருப்போர் பாடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும், சிரிப்பதிலும், ஆடுவதிலும், அசைவதிலும், தங்கள் கைகளை நீட்டுவதிலும், உரத்த முழக்கங்களைச் செய்வதிலும் ஈடபட்டிருந்தனர். நறுமணச் சுகந்தங்களால் அந்த இடம் மணமூட்டப்பட்டிருந்தது. பிரம்மத்தை வழிபடும் {பிரம்மவாதிகளான தெய்வீக} முனிவர்கள், அனைத்து உயிர்களைக் காப்பவனும், (பினாகை என்றழைக்கப்படும் பெரும்) வில்லைக் கொண்டவனுமான அந்தத் தேவனை மங்கா மகிமை கொண்ட அற்புதப் பாடல்களால் துதித்தனர்.

அற ஆன்மா கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து அவனைக் {சிவனைக்} கண்டு, தன் தலையால் பூமியைத் தொட்டு, வேதங்களின் அழியாச் சொற்களை உரைத்தான் [3]. அண்டத்தின் மூல முதல்வனும், சுயம்புவும், மங்காப்புகழ் கொண்டவனும், உயர்ந்தத் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனைக்} கிருஷ்ணன், தன் பேச்சாலும், மனத்தாலும், அறிவாலும், செயல்களாலும் துதித்தான். மனத்தின் உயர்ந்த காரணனும், வெளியும், காற்றும், (ஆகாயத்திலுள்ள) ஒளிக்கோள்கள் அனைத்தின் காரணனும், மழையை உண்டாக்குபவனும், உயர்ந்தவனும், பூமியின் மூலப் பொருளும், தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் ஆகியோரின் துதிக்குத் தகுந்தவனும், யோகியரால் காணப்படும் உயர்ந்த பிரம்மமும், சாத்திரங்கள் அறிந்தோரின் புகலிடமும், உயிரினங்களில் அசைவன, அசையாத ஆகியவை அனைத்தையும் படைத்தவனும், அவர்களை அழிப்பவனும், யுக முடிவில் கோபத்துடன் அனைத்தையும் அழிப்பவனும், உயர்ந்த ஆன்மாவும், சக்ரனாகவும், சூரியனாகவும் இருப்பவனும், குணங்கள் அனைத்தின் மூலமும் ஆன அவனைக் கிருஷ்ணன் துதித்தான்.

[3] வேறொரு பதிப்பில், “தர்மாத்மாவான வாசுதேவரோ பாத்தனோடு கூட அவரைப் பார்த்து, சாஸ்வதமான வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிரசினால் வணங்கினார்.

நுட்பமானது, ஆன்மிகமானது என்று அழைக்கப்படுவதை {முக்தியை} [4] அடைய விரும்பும் ஞானியரால் காணப்படுபவனும், அனைத்துக் காரணங்களுக்கு ஆன்மாவான சுயம்புவான அந்தப் பவனின் {சிவனின்} பாதுகாப்பைக் கிருஷ்ணன் வேண்டினான். அந்தத் தேவனே {சிவனே} அனைத்து உயிர்களின் மூலம் என்றும், கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்திற்குக் காரணம் என்றும் அறிந்த அர்ஜுனன் அவனை மீண்டும் மீண்டும் துதித்தான்.

[4] வேறொரு பதிப்பில் இவ்வரி “சூக்ஷ்மமான அத்யாத்மஸ்தானத்தை விரும்பும் ஞானிகள் எவரைச் சரணமடைகிறார்களோ, பிறப்பில்லாதவரும், காரணஸ்வரூபியுமான அந்தச் சங்கரரை அவ்விருவரும் சரணமடைந்தனர்” என்று இருக்கிறது.

நரனும், நாராயணனும் வந்திருப்பதைக் கண்ட பவன் {சிவன்} உற்சாக ஆன்மாவுடன் {மகிழ்ச்சியுடன்} புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம், “மனிதரில் முதன்மையானோரே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் பயணக் களைப்பு நீங்கி எழுவீராக. ஓ வீரர்களே, உங்கள் இதய விருப்பம் என்ன? அதை விரைவாகச் சொல்லுங்கள். எக்காரியம் உங்களை இங்கே அழைத்து வந்தது? அதை அடையும் நான் உங்களுக்கு எது நன்மையோ அதைச் செய்கிறேன். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நான் அருள்வேன்” என்றான் {சிவன்}.

பிறகு கூப்பிய கரங்களுடன், களங்கமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய பெரும் விவேகிகள் இருவரும் அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனை} ஒரு சிறந்த பாடலால் நிறைவடையச் செய்யத் தொடங்கினர். கிருஷ்ணனும், அர்ஜுனனும், “பவனை {உலகங்கள் அனைத்தின் தலைவனை}, சர்வனை {உயிரினங்களைக் கொல்பவனை}, ருத்ரனை {அழச் செய்பவனை}, வரமளிக்கும் தேவனை நாங்கள் வணங்குகிறோம். உயிருடன் கூடிய உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனை {பசுபதியை}, எப்போதும் கடுமையாக இருக்கும் தேவனை, கபார்தின் {கபார்தி – சடை கொண்டவன்} என்று அழக்கப்படுபவனை நாங்கள் வணங்குகிறோம். மகாதேவனை {தேவர்களுள் சிறந்தவனை}, பீமனை {பயங்கரமானவனை}, முக்கண்ணனை, அமைதியும் சமாதமுமானவனை நாங்கள் வணங்குகிறோம். (தக்ஷனின்) வேள்வியை அழித்த ஈசானனை நாங்கள் வணங்குகிறோம்.

அந்தகனை {அந்தகாசுரனை} அழித்தவனுக்கு, குமரனின் {முருகனின்} தந்தைக்கு, நீலகண்டனுக்கு, படைப்பாளனுக்கு எங்கள் வணக்கங்கள். பினாகைதாரிக்கு, தெளிந்த நெய்யினாலான காணிக்கையை {ஹவிஸைப்} பெறத் தகுந்தவனுக்கு, உண்மையானவனுக்கு, அனைத்திலும் இருப்பவனுக்கு வணக்கம். வெல்லப்படாதவனை, எப்போதும் நீலக் குழல்களைக் கொண்டவனை, திரிசூலம் தரித்தவனை, தெய்வீகப் பார்வை கொண்டவனை, அனைவரையும் பாதுகாக்கும் ஹோத்ரியை, முக்கண்ணனை, நோயாக இருப்பவனை [5], உயிர்வித்தை நெருப்பில் விட்டவனை, நினைத்துப் பார்க்க முடியாதவனை, அம்பிகையின் தலைவனை, தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனை, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்டவனை, தைரியமானவனை, சடாமுடி தரித்தவனை, பிரம்மச்சாரியை, நீரில் தவம் செய்து நிற்பவனை, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனை, வெல்லப்பட முடியாதவனை, அண்டத்தின் ஆன்மாவை, அண்டத்தைப் படைத்தவனை, அண்டம் முழுமையும் வியாபித்திருப்பவனை, அனைத்து உயிர்களின் உண்மைக் காரணனை, அனைவரின் மரியாதைக்குத் தகுந்தவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். பிரம்மச்சக்கரம் என்றழைக்கப்படும் உன்னை, சர்வன், சங்கரன், சிவன் என்று அழைக்கப்படும் உன்னை, பேருயிர்கள் அனைத்தின் தலைவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் சிரங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்ட உன்னை, மரணம் என்று அழைக்கப்படும் {மிருத்யு ஸ்வரூபியான} உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் கண்கள் மற்றும் ஆயிரம் கால்கள் கொண்ட உன்னை, எண்ணிலா செயல்களைச் செய்யும் உன்னை, தங்க நிறம் கொண்ட உன்னை, தங்கக் கவசம் பூண்ட உன்னை, பக்தர்களிடம் எப்போதும் கருணை கொண்ட உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஓ! தலைவா, எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்” என்றனர் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்}.

[5] கங்குலியில் இங்கே Disease என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கிறது, வேறொரு பதிப்பிலோ இதையொட்டிய வரிகள், “மங்கலான காந்தியுடையவரும், வேட வடிவம் பூண்டவரும், பிறரால் ஜயிக்கப்படாதவரும், எப்போதும் கறுத்த சிகையுடையவரும், சூலத்தையுடைவரும், ஞானக்கண்ணையுடையவரும், தீக்ஷையுடையவரும், ரக்ஷகரும், மூன்று கண்களையுடையவரும், அக்னியிடத்தில் இந்திரியத்தை விட்டவரும்” என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் நோய் என்ற பொருள் கொண்ட சொல் வருவதற்கான காரணம் யாதென்று தெரியவில்லை.

சஞ்சயன் தொடர்ந்தான், “இம்முறையில் மகாதேவனை வழிபட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் (பாசுபதம் என்றழைக்கப்படும் பெரும்) ஆயுதத்தை அடைவதற்காக அவனை {சிவனை} நிறைவு செய்யத் தொடங்கினர்” என்றான் {சஞ்சயன்}.ஆங்கிலத்தில் | In English

Wednesday, June 15, 2016

தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 079

The speech of Krishna to Daruka! | Drona-Parva-Section-079 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 08)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் படுக்கையைத் தயாரித்து, சிவனுக்கான அவனது இரவுப்பலியை முடிக்கச் செய்த கிருஷ்ணன்; நடு இரவில் தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் ஒப்பற்ற மாளிகைக்குள் நுழைந்து நீரைத் தொட்டு {ஆசமனம் செய்து} [1], மங்கலகரமான சம தரையில், வைடூரியத்திற்கு ஒப்பான குச {தர்ப்பைப்} புற்களைப் படுக்கையாகப் பரப்பினான். அந்தப் படுக்கையைச் சுற்றிலும் சிறந்த ஆயுதங்களை வைத்த அவன் {கிருஷ்ணன்}, மேலும் அதை மலர்மாலைகள், அவல் {fried paddy}, நறுமணத் திரவியங்கள், பிற மங்கலப் பொருட்கள் ஆகியவற்றால் முறையாக அலங்கரித்தான். பார்த்தனும் நீரைத் தொட்ட {ஆசமனம் செய்த} [1] பிறகு, அமைதியும், பணிவும் கொண்ட பணியாட்கள் முக்கண்ணனுக்கு (மஹாதேவனுக்கு) உரிய வழக்கமான இரவு பலியைக் கொண்டு வந்தனர். அப்போது, மகிழ்ச்சியான ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நறுமணப்பொருட்களை மாதவன் {கிருஷ்ணன்} மேல் பூசி, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகாதேவனுக்கு இரவுப்பலியைச் செய்தான் [2]. பிறகு, கோவிந்தன் {கிருஷ்ணன்} மங்கிய புன்னகையுடன் பார்த்தனிடம், “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, படுத்துக் கொள்வாயாக, நான் உன்னிடம் விடைபெறுகிறேன்” என்றான். பிறகு நன்கு ஆயுதம் தரித்த வாயில் காப்போரையும், காவலாளிகளையும் நிறுத்திய அந்த அருளப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்} (தன் தேரோட்டியான) தாருகன் பின் தொடரத் தன் பாசறைக்குச் சென்றான்.


[1] ஆசமனம்: மந்திரப்பூர்வமாக வலது உள்ளங்கையால் {குடம்போலக் கையைக் குவித்து} மும்முறை நீரை உட்கொள்தல்.

[2] இந்த வரியில் tasmai என்று குறிப்பிடப்படுவது முக்கண்ணனைத்தானே ஒழிய கிருஷ்ணனை அல்ல என்று நீலகண்டர் சொல்வதாகவும், அது சரியாகவே படுவதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, “பார்த்தன் சந்தோஷமடைந்து, மாதவரைக் கந்தங்களாலும், பூமாலைகளாலும் அலங்காரஞ்செய்து, இராத்திரியில் செய்வதான அந்தப் பலியை அந்தத் திரியம்பகருக்கு நிவேதனஞ்செய்தான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கிட்டத்தட்ட இதே போன்ற வரிதான் இருக்கிறது.

வெண்படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களைக் குறித்து ஆலோசித்தான். பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் (கேசவன்), (பார்த்தனின்) துயரையும், கவலையையும் களைவதற்காகவும், அவனது {அர்ஜுனனின்} ஆற்றலையும் காந்தியையும் அதிகரிப்பதற்காகவும் பல்வேறு வழிகளைக் குறித்துப் பார்த்தனுக்காக {அர்ஜுனனுக்காகச்} சிந்தித்தான். யோகத்தில் பொதிந்த ஆன்மா கொண்டவனும், அனைவரின் உயர்ந்த தலைவனும், பரந்த புகழைக் கொண்டவனும், ஜிஷ்ணுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவனுமான அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, (அர்ஜுனனுக்கு) நன்மை செய்ய விரும்பி, யோகத்திலும், தியானத்திலும் லயித்தான்.

பாண்டவ முகாமில் அவ்விரவில் உறங்கியவர் எவரும் இல்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விழிப்புணர்வே அனைவரையும் ஆட்கொண்டது. (பாண்டவ முகாமில்) அனைவரும் இதையே சிந்தித்தனர், “தன் மகனின் மரணத்தால் துயரில் எரியும் உயர் ஆன்ம காண்டீவதாரி {அர்ஜுனன்}, சிந்துவை {ஜெயத்ரதனைக்} கொல்வதாகத் திடீரென உறுதிமொழி ஏற்றுவிட்டான். உண்மையில், பகைவீரர்களைக் கொல்பவனும், வாசவனின் {அர்ஜுனனின்} மகனும், வலிமைமிக்க வீரனுமான அவன் எவ்வாறு தனது உறுதி மொழியைச் சாதிக்கப் போகிறான்? உயர் ஆன்மப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உண்மையில் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்திருக்கிறான்.

மன்னன் ஜெயத்ரதன் வலிமையும் சக்தியும் கொண்டவனாவான். ஓ!, அர்ஜுனன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுவதில் வெல்லட்டும். தன் மகனின் {அபிமன்யுவின்} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அந்தக் கடின உறுதிமொழியை ஏற்றுவிட்டான். துரியோதனனின் தம்பியர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவனது படைகளும் எண்ணற்றவையாக இருக்கின்றன. திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, இவர்கள் அனைவரையும் ஜெயத்ரதனுக்கு (அவனது பாதுகாவர்களாக) ஒதுக்கியிருக்கிறான். ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று, தனஞ்சயன் {அர்ஜுனன்} (முகாமுக்குத்) திரும்பட்டும். தன் எதிரிகளை வீழ்த்தி அர்ஜுனன் தனது உறுதிமொழியைச் சாதிக்கட்டும்.

நாளை சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் அவன் {அர்ஜுனன்} தோற்றால், சுடர்மிகும் நெருப்புக்குள் நிச்சயம் அவன் நுழைவான். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியைப் பொய்யாக்க மாட்டான். அர்ஜுனன் இறந்தால், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு தன் நாட்டை மீட்பான்? உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் (யுதிஷ்டிரன்), (தன் நம்பிக்கைகள் அனைத்திலும்) அர்ஜுனனின் வெற்றியையே சார்ந்திருக்கிறான். நாம் ஏதாவது (அறத்) தகுதியை அடைந்திருந்தால், நாம் நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக எப்போதாவது ஊற்றியிருந்தால், அவற்றின் கனிகளின் துணையோடு சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தட்டும்” {என்றே பாண்டவ முகாமில் உள்ள அனைவரும் சிந்தித்தனர்}. ஓ! தலைவா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இவ்வாறு (நாளைய) வெற்றி குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவர்களது நீண்ட இரவு கடந்து போனது.

நடு இரவில் விழித்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனின் {அர்ஜுனனின்} உறுதிமொழியை நினைவுகூர்ந்து, (தன் தேரோட்டியான) தாருகனிடம், “அர்ஜுனன், தன் மகனின் மரணத்தால் ஏற்பட்ட துயரால் உறுதிமொழி செய்தான். இதைக் கேட்ட துரியோதனன், பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு தன் நோக்கத்தை அடைவதில் தோல்வியுறுவான் என்று தன் அமைச்சர்களிடம் நிச்சயம் ஆலோசித்திருப்பான். அவனது {துரியோதனனின்} பல அக்ஷௌஹிணி துருப்புகள் ஜெயத்ரதனைப் பாதுகாக்கும். ஆயுதங்கள் அனைத்தையும் ஏவும் வழிகளை முழுமையாக அறிந்த துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்} அவனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பார்கள். ஒப்பற்ற வீரனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் செருக்கை அழித்தவனுமான ஆயிரம் கண்ணனே {இந்திரனே} கூட, போரில் துரோணரால் பாதுகாக்கப்படும் ஒருவனைக் கொல்லத் துணியமாட்டான்.

எனவே, குந்தியின் மகனான அர்ஜுனன், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்ல என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். என் மனைவியர், என் சொந்தங்கள், என் உறவினர்கள் ஆகியோரிலும் கூட அர்ஜுனனை விட மிகுந்த அன்புக்குரியவர் எவருமில்லை. ஓ! தாருகா, அர்ஜுனன் இல்லாத பூமியில் ஒரு கணமும் நான் என் கண்களைச் செலுத்த மாட்டேன். பூமி அர்ஜுனன் அற்றதாகாது என நான் உனக்குச் சொல்கிறேன். குதிரைகளோடும், யானைகளோடும், யானைகளோடும் கூடியவர்கள அனைவரையும், அர்ஜுனனுக்காக நானே என் பலத்தைப் பயன்படுத்தி வீழ்த்தி, அவர்களோடு சேர்த்து கர்ணனையும், சுயோதனனையும் {துரியோதனனையும்} கொல்வேன்.

ஓ! தாருகா, பெரும்போரில் தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} நாளை என் வீரத்தை நான் வெளிப்படுத்தும்போது, என் ஆற்றாலை மூன்று உலகங்களும் காணட்டும். ஓ! தாருகா, நாளை ஆயிரக்கணக்கான மன்னர்களும், நூற்றுகணக்கான இளவரசர்களும், தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் போரில் இருந்து ஓடப் போகின்றனர். ஓ! தாருகா, பாண்டுவின் மகனுக்காகக் கோபத்துடன் உள்ள நான், நாளை மன்னர்களின் படையை வீழ்த்தி, என் சக்கரத்தால் அவற்றை நசுக்கப் போவதைக் காண்பாய். ஓ! தாருகா, தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியவர்களுடன் கூடிய (மூன்று) உலகங்கள் என்னைச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} (உண்மை) நண்பனாக நாளை அறியும். எவன் அவனை {அர்ஜுனனை} வெறுக்கிறானோ, அவன் {கிருஷ்ணனாகிய} என்னை வெறுக்கிறான். எவன் அவனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னைப் பின்பற்றுகிறான். புத்திக்கூர்மை கொண்ட நீ, அர்ஜுனன் என்னில் பாதியானவன் என்பதை அறிவாயாக.

ஓ! தாருகா, இரவு கழிந்து காலை வந்ததும், என் சிறந்த தேரில் கௌமோதகி என்றழைக்கப்படும் என் தெய்வீகக் கதாயுதத்தையும், என் ஈட்டி மற்றும் சக்கரத்தையும், என் வில் மற்றும் கணைகளையும், இன்னும் தேவையான பிற அனைத்தையும் படை அறிவியலின் படி தரிக்கச் செய்து, கவனத்துடன் என்னிடம் கொண்டு வருவாயாக. ஓ! சூதா {தாருகா}, என் தேர்த்தட்டில் எனது குடையை அலங்கரிக்கும் என் கொடிமரத்துக்கும், அதில் இருக்கும் கருடனுக்குமான இடத்தை ஒதுக்கி, வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்று அழைக்கப்படும் என் முதன்மையான குதிரைகளை அதில் பூட்டி, சூரியன் மற்றும் நெருப்பின் காந்தியுடன் கூடிய தங்கக் கவசத்தால் அவற்றை அலங்கரித்து, நீயும் உன் கவசத்தை அணிந்து கொண்டு, கவனமாக அதில் நிற்பாயாக. ரிஷப சுரத்தின் [3] ஒலியை உமிழும் என் சங்கான பாஞ்சஜன்யத்தின் உரத்த, பயங்கரமான வெடிப்பொலியைக் கேட்டதும் விரைவாக நீ என்னிடம் வருவாயாக.

[3] இஃது, இந்து வண்ணத்தில் இரண்டாவது இசைச்சுரம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! தாருகா, ஒரே நாளில் என் தந்தைவழி அத்தையின் {வசுதேவர் தங்கை குந்தியின்} மகனான என் மைத்துனனின் {அர்ஜுனனின்} பல்வேறு துயரங்களையும் கோபத்தையும் நான் விலக்கப் போகிறேன். திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீபத்சு {அர்ஜுனன்} போரில் ஜெயத்ரதனைக் கொல்வதற்காக அனைத்து வழிகளிலும் நான் முயல்வேன். ஓ! தேரோட்டியே {தாருகா}, பீபத்சு இவர்களில் யாரையெல்லாம் கொல்ல முயல்வானோ, அவர்களைக் கொல்வதில் நிச்சயம் வெல்வான் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

தாருகன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நீ யாருடைய தேரைச் செலுத்துகிறாயோ, அவனது வெற்றி உறுதியே. உண்மையில், அவனுக்கு எவ்விடத்தில் இருந்து தோல்வி வரும்? என்னைப் பொறுத்தவரை, நீ என்ன உத்தரவிடுகிறாயோ, அதையே நான் செய்வேன். இந்த இரவு (அதன் தொடர்ச்சியாக) அர்ஜுனனின் வெற்றிக்காக மங்கலமான காலைப் பொழுதைக் கொண்டுவரும்” என்றான் {தாருகன்}.


ஆங்கிலத்தில் | In English

Tuesday, June 14, 2016

சுபத்திரையின் புலம்பல்! - துரோண பர்வம் பகுதி – 078

The lament of Subhadra! | Drona-Parva-Section-078 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் புலம்பத் தொடங்கிய சுபத்திரை; சுபத்திரை, திரௌபதி, உத்தரை ஆகியோர் அழுது புலம்பி மயங்கி விழுந்தது; நீர் தெளித்து அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்த கிருஷ்ணன் மீண்டும் அர்ஜுனனிடம் வந்தது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரை, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினாள்: “ஓ! பேறற்றவளான என் மகனே, ஓ! உன் தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} இணையான ஆற்றல் கொண்டவனே, ஓ! குழந்தாய் {அபிமன்யு}, போருக்குச் சென்ற நீ எவ்வாறு அழிந்தாய்? ஓ! குழந்தாய் {அபிமன்யு}, அழகான பற்கள் மற்றும் சிறந்த கண்களால் அருளப்பட்டதும், நீலத் தாமரைக்கு {கருநெய்தலுக்கு} [1] ஒப்பானதுமான உன் முகம், ஐயோ, போர்க்களத்தின் புழுதியால் மறைக்கப்பட்டு இப்போது எவ்வாறு காணப்படும்?


[1] அபிமன்யுவும் கரிய நிறம் கொண்டவனாக இருந்திருக்கலாம். வேறொரு பதிப்பில் இவ்வரி, "கருநெய்தல் போலக் கறுப்பு நிறமுள்ள அழகான முகம்” என்று இருக்கிறது.

ஐயமில்லாத துணிவுடன் புறமுதுகிடாத உன்னை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தலை, கழுத்து, கரங்கள், மார்பு, அடிவயிறு மற்றும் அங்கங்களுடன் களத்தில் விழுந்த உன்னை, அழகிய கண்களைக் கொண்ட உன்னை, ஆயுதக் காயங்களுடன் சிதைந்து போயிருக்கும் உன்னை உதிக்கும் சந்திரனைப் போலவே அனைத்து உயிரினங்களும் காண்கின்றன. ஐயோ, விலையுயர்ந்த மிக வெண்மையான படுக்கையில் கிடப்பவனான நீ, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவனான நீ, ஐயோ, கணைகளால் துளைக்கப்பட்ட உன் உடலுடன் வெறும் பூமியில் {தரையில்} எவ்வாறு இன்று உறங்குகிறாய்?

முன்னர், அழகிகளில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {அபிமன்யு}, ஐயோ, போர்க்களத்தில் விழுந்து, நரிகளின் துணையுடன் தன் காலத்தை எவ்வாறு கழிக்கிறான்? முன்னர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோரால் பாடிப் புகழப்பட்டவன், ஐயோ, கோரமாக ஊளையிடும் ஊனுண்ணும் விலங்குகளால் இன்று வரவேற்கப்படுவானே. ஓ! தலைவா {அபிமன்யு}, பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் உன் பாதுகாவலர்களாகக் கொண்டும், ஐயோ, ஆதரவற்ற நிலையில் நீ யாரால் கொல்லப்பட்டாய்?

ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே {அபிமன்யு}, உன்னைக் கண்டு நான் இன்னும் நிறைவு கொள்ளவில்லையே. பேறற்றவளான நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்வேன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பெரிய கண்கள் மற்றும் அழகிய குழல்களைக் கொண்டதும், இனிய வார்த்தைகள், களிப்புமிக்க நறுமணம் ஆகியவற்றை வெளியிடுவதுமான பருக்களற்ற உன் மிருதுவான முகத்தை என் கண்களால் மீண்டும் எப்போது நான் காணப் போகிறேன்? பீமசேனரின் பலத்திற்கும், பார்த்தரின் {அர்ஜுனரின்} வில்வித்தகத்திற்கும், விருஷ்ணி வீரர்களின் ஆற்றலுக்கும், பாஞ்சாலர்களின் பலத்திற்கும் ஜயோ {இஃது இழிவே}! ஓ! வீரா {அபிமன்யு}, போரில் ஈடுபடுகையில் உன்னைப் பாதுகாக்க இயலாத கைகேயர்கள், சேதிகள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும் ஐயோ {இஃது இழிவே}!

நான் இந்தப் பூமியை வெறுமையானதாகவும், உற்சாகமற்றதாகவும் இன்று காண்கிறேன். என் அபிமன்யுவைக் காணாது என் கண்கள் துயரால் அல்லலுறுகின்றன. நீ வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரையின்} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனும், வீரனும், அதிரதனும் ஆவாய். ஐயோ, கொல்லப்பட்ட உன்னை நான் எவ்வாறு காண்பேன்? ஐயோ ஓ! வீரா {அபிமன்யு}, கனவில் காணப்பட்ட பொக்கிஷமாகத் தோன்றி மறைந்தாயே. மனிதரைச் சேர்ந்த அனைத்தும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றனவே.

உனக்கு நேர்ந்த தீங்கால் இந்த உன் இளம் மனைவி {உத்தரை} துயரில் மூழ்கியிருக்கிறாள். ஐயோ, கன்றில்லா பசுவைப் போல இருக்கும் அவளை நான் எவ்வாறு தேற்றுவேன்? ஐயோ, ஓ! மகனே {அபிமன்யு}, உன்னைக் காண ஏங்கி, பெருமையின் கனியைத் தாங்கப் போகும் சமயத்தில், குறித்த காலத்திற்கு முன்பே என்னிடம் இருந்து சென்றுவிட்டாயே. கேசவரை {கிருஷ்ணரை} உன் பாதுகாவலராகக் கொண்டும், ஆதரவற்றவனைப் போல நீ கொல்லப்பட்டதால், ஞானியராலும் யமனின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை.

ஓ! மகனே {அபிமன்யு}, வேள்விகள் செய்வோர், தூய்மையடைந்த ஆன்மா கொண்ட பிராமணர்கள், பிரம்மச்சரியம் பயின்றோர், புனித நீர்நிலைகளில் நீராடியோர், நன்றிமிக்கோர், தொண்டாற்றுவோர், தங்கள் ஆசான்களுக்குச் சேவை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர், அபரிமிதமான வேள்விக் கொடை அளித்தோர் ஆகியோரின் உலகங்கள் உனதாகட்டும்.

போரிடுகையில் துணிச்சலுடன் புறமுதுகிடாதவர்கள், தங்கள் எதிரிகளைக் கொன்றுவிட்டுப் போரில் வீழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

ஆயிரம் பசுக்களைத் தானமளித்தவர்கள், வேள்விகளில் தானமளித்தவர்கள், தகுந்தோருக்கு வீடுகள் மற்றும் மாளிகைகளைத் தானமளித்தவர்கள் ஆகியோர் எந்த மங்கல முடிவை அடைவார்களோ, ரத்தினங்களையும், நகைகளையும் தகுந்த பிராமணர்களுக்குத் தானமளித்தோர், குற்றவாளிகளைத் தண்டிப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

பிரம்மச்சரியத்துடன் கடும் நோன்புகளை நோற்ற முனிவர்கள், ஒரே கணவனுடன் வாழ்ந்த பெண்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நன்னடத்தைக் கொண்ட மன்னர்கள், கடமைகளை முறையாக நோற்று, ஒன்றன்பின் ஒன்றாக வாழ்வின் நான்கு நிலைகளையும் வாழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, ஏழைகளிடமும், துயருற்றோரிடமும் கருணை கொண்டோர், தங்களிடமும், தங்களை அண்டியிருப்போரிடமும் எந்தப் பாகுபாடுமின்றிச் சமமாக இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வோர், வஞ்சகம் மற்றும் கொடுமை ஆகியவற்றை எப்போதும் செய்யாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நோன்புகள் நோற்பவர்கள், அறம் சார்ந்தோர், ஆசான்களின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், விருந்தோம்பாமல் எவ்விருந்தினரையும் அனுப்பாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, துன்பத்திலும், மிகக் கடுமையான இக்கட்டான சூழல்களிலும் துன்பத்தீயில் எவ்வளவு அதிகமாக எரிக்கப்பட்டாலும், தங்கள் ஆன்மாக்களின் சமநிலையை {மன அமைதியை} இழக்காதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ மகனே {அபிமன்யு}, தங்கள் தந்தைமார், தாய்மார் மற்றும் பிறரின் சேவைக்கு எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், தங்கள் மனைவியரிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, பிறர் மனைவியரிடம் தங்களைத் தாங்களே தடுத்துக் கொள்வோர், பருவ காலங்களில் தங்கள் மனைவியரிடம் மட்டும் தோழமையை நாடுவோர் ஆகிய ஞானியர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, அனைத்து உயிரினங்களையும் சமாதானக் கண்ணுடன் நோக்குவோர், பிறருக்கு எப்போதும் துன்பத்தை அளிக்காதோர், எப்போதும் மன்னிப்போர் {பொறுமையுடன் இருப்போர்} ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, தேன், இறைச்சி, மது, செருக்கு, பொய்மை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்போர், பிறருக்குத் துன்பம் தருவதைத் தவிர்ப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

அடக்கமுடையோர், அனைத்து சாத்திரங்களின் அறிவு கொண்டோர், அறிவில் நிறைவு கொண்டோர், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தோர் ஆகியோர் அடையும் இலக்கை நீயும் அடைவாயாக” என்றாள் {சுபத்திரை}.

{இப்படி சுபத்திரை} துயரத்தில் பீடிக்கப்பட்டு இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாஞ்சால இளவரசி (திரௌபதி), விராடன் மகளுடன் {உத்தரையுடன்} உற்சாகமற்ற  அந்தச் சுபத்திரையிடம் வந்தாள். பெரும் துன்பத்தால் அவர்கள் அனைவரும், இதயத்தைப் பிளக்கும் புலம்பல்களில் ஈடுபட்டு அதிகமாக அழுதனர். சோகத்தால் நினைவிழந்த மனிதர்களைப் போல, அவர்கள் அனைவரும் மயங்கிப் பூமியில் விழுந்தனர்.

நீருடன் தயாராக நின்ற கிருஷ்ணன், இதயம் துளைக்கப்பட்டவளும், அழுது, சுயநினைவை இழந்து, நடுங்கிக் கொண்டிருந்தவளுமான தன் தங்கையின் {சுபத்திரையின்} மேல் நீரைத் தெளித்து, ஆழமாகத் துன்புற்று, அத்தகு சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான். அந்தத் தாமரைக் கண்ணன் {கிருஷ்ணன்}, "ஓ! சுபத்திரையே, துன்புறாதே! ஓ! பாஞ்சாலி {திரௌபதியே}, உத்தரையைத் தேற்றுவாயாக! க்ஷத்திரியரில் காளையான அபிமன்யு மெச்சத்தகுந்த இலக்கையே அடைந்திருக்கிறான்.

ஓ! அழகிய முகம் கொண்டவளே {சுபத்திரையே}, பெரும்புகழ் கொண்ட அபிமன்யு அடைந்த இலக்கையே நம் குலத்தில் உயிருடன் இருப்போர் அனைவரும் அடையட்டும். ஓ! பெண்ணே {சுபத்திரையே}, எவருடைய உதவியுமில்லாமல் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு} அடைந்த சாதனையையே, எங்கள் நண்பர்களுடன் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்தப் போரில் அடைய விரும்புகிறோம்” என்றான் {கிருஷ்ணன்}.

தன் தங்கையையும் {சுபத்திரையையும்}, திரௌபதியையும், உத்தரையையும் இப்படித் தேற்றிய பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வலிமைமிக்கக் கரத்தைக் கொண்டோன் (கிருஷ்ணன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான். அப்போது, கிருஷ்ணன், அங்கிருந்த மன்னர்கள், நண்பர்கள் மற்றும் அர்ஜுனனை வணங்கியபடியே (பின்னவனின் {அர்ஜுனனின்}) அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top