The end which the fowler attained! | Shanti-Parva-Section-149 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : புறாக்கள் அடைந்த நற்பேற்றைக் கண்ட வேடன், தானும் அதே கதியை அடைய வேண்டும் என்றெண்ணி நெடும்பயணம் மேற்கொண்டான்; இறுதியில் ஒரு பெருங்காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நுழைந்து சொர்க்கத்தை அடைந்தான்; இந்தக் கதையைச் சொல்லி, இதனைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர், "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, ஓ மன்னா, அந்த இணை {புறாக்கள்} தெய்வீகத் தேரில் அமர்ந்திருப்பதை வேடன் கண்டன். அந்த இணையைக் கண்ட அவன், (தன் பேறின்மையை நினைத்துக்) கவலையில் நிறைந்தவனாக, அதே கதியை அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(1) அவன் தனக்குள்ளேயே, "அந்தப் புறாவைப் போன்ற துறவுகளின் மூலம் நான் அத்தகைய உயர்ந்த கதியை அடைய வேண்டும்" என்று நினைத்தான். பறவைகளைக் கொன்று வாழ்ந்த அந்த வேடன் இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, திரும்பி வராத பயணத்திற்குப் புறப்பட்டான்.(2) (உணவை அடைவதற்கு) எந்த முயற்சியும் செய்யாமல், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த அவன், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால் தன் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டான்.(3)