The funeral of the kings! | Stri-Parva-Section-26 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 11) [ஸ்ராத்த பர்வம் - 01]
பதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பதிலுரைத்த கிருஷ்ணன்; போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும்; அவர்கள் அடைந்த கதியையும் யுதிஷ்டிரனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; போரில் வீழ்ந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ஆணையிட்ட யுதிஷ்டிரன்; ஈமக் காரியங்களைச் செய்த விதுரன்...
"அப்போது அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "எழு, ஓ! காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய்?(3) இறந்தவனுக்காகவோ, தொலைந்தவனுக்காகவோ, ஏற்கனவே நேர்ந்துவிட்ட எதற்காகவோ வருந்தும் ஒருவன் மேலும் துயரத்தையே அடைகிறான். துயரத்தில் ஈடுபடுவதால் அஃது இருமடங்காகப் பெருகுகிறது.(4) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சேர்ந்த ஒரு பெண், தவப்பயிற்சிகளுக்கான வாரிசைப் பெறுகிறாள்; மாடு சுமையைக் சுமப்பதற்கான {காளையை} வாரிசைப் பெறுகிறது. பெண்குதிரையானது வேகமாக ஓடும் வாரிசை {குதிரையைப்} பெறுகிறது, சூத்திரப் பெண்ணானவள், பணிவிடை செய்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள், வைசியப் பெண்ணானவள், கால்நடை காப்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள். எனினும், உன்னைப் போன்ற இளவரசியோ, கொல்லப்படுவதற்காகவே மகன்களைப் பெறுகிறாள் {மரணத்தை விரும்பும் க்ஷத்திரியனை வாரிசாகப் பெறுகிறாள்}" என்றான் {கிருஷ்ணன்}".(5)