Indra marched against Skanda! | Vana Parva - Section 226 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஸ்கந்தனை எதிர்த்து இந்திரன் படை நடத்துவது; தேவர்கள் ஸ்கந்தனைப் பணிவது; இந்திரன் ஸ்கந்தன் மீது வஜ்ரத்தை ஏவுவது; வஜ்ரம் துளைத்ததால் விசாகன் உண்டானது; இருவரைக் கண்டது இந்திரன் அஞ்சி ஸ்கந்தனைப் பணிந்தது; இந்திரனின் அச்சத்தை ஸ்கந்தன் போக்கியது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உப கோள்களுடன் கூடிய கோள்களும், முனிவர்களும், தாய்மாரும், அக்னியும், எண்ணற்ற பிற ஒளிவீசும் சேவகர்களும், கொடூர முகத்தோற்றம் கொண்ட இன்னும் பல தேவலோகவாசிகளும், அன்னையருடன் இருந்த மஹாசேனனுக்காகக் {ஸ்கந்தனுக்காகக்} காத்திருந்தனர். சிறப்புமிக்கத் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வெற்றியை விரும்பினாலும், அதை அடைவதில் சந்தேகங்கொண்டு தனது யானையான ஐராவதத்தில் ஏறினான். பிறகு, பிற தேவர்களுடன் சேர்ந்து ஸ்கந்தனை நோக்கி முன்னேறினான். அனைத்து தேவர்களும் தன்னைத் தொடரச் சென்ற அந்தப் பலமிக்கவன் {இந்திரன்}, வஜ்ராயுதத்தை ஏந்தியிருந்தான். மஹாசேனனைக் {ஸ்கந்தனைக்} கொல்லும் நோக்கோடு, பெரும் பிரகாசத்துடன், போர்க்குரல் கொடுத்தப்படி செல்லும் தேவ படையுடன் சென்றான். பலவகையான கொடிகளுடனும், பல்வேறு கவசங்கள் பூட்டிய போர்வீரர்களுடனும், பல விற்களுடனும், பல்வேறு விலங்குகளில் பயணித்தவாறும் அந்தப் {தேவ} படையினர் சென்றனர்.