Showing posts with label வியாசர். Show all posts
Showing posts with label வியாசர். Show all posts

Sunday, November 26, 2017

கடமையைச் செய்! - சாந்திபர்வம் பகுதி – 33

Do your duty! | Shanti-Parva-Section-33 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 33)


பதிவின் சுருக்கம் : தன் துயரையும், தாங்கள் அடையப் போகும் நிந்தனையையும் நினைத்து துறவே கதி என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; பலரைக் கொன்றது காலமேயன்றி அவனில்லை என்றும், இறந்தவர்கள் தங்கள் செயல்களின் பலனாகவே இறந்தார்கள், கொல்லத்தக்கவர்களே கொல்லப்பட்டார்கள் என்றும், நண்பர்களின் நாடுகளில் அவர்களது வாரிசுகளை அரியணையில் நிறுவச் செய்வதும், தான் அடைந்த நாட்டை ஆள்வதுமே யுதிஷ்டிரனின் கடமை, துறவல்ல என்றும் அவனிடம் சொன்ன வியாசர்...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பாட்டா {வியாசரே}, மகன்கள், பேரப்பிள்ளைகள, சகோதரர்கள், தந்தைமார்கள், மாமன்மார்கள், ஆசான்கள், தாய்மாமன்கள், பாட்டன்கள்,(1) உயர் ஆன்ம க்ஷத்திரியர்கள் பலர், (திருமண உறவால் உண்டான) உறவினர்கள் பலர், நண்பர்கள், தோழர்கள், சகோதரியின் மகன்கள்,(2) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முதன்மையானோர் பலரும் வீழ்ந்துவிட்டனர். ஓ! பாட்டா, நாடு அடையும் ஆசை கொண்ட என்னால் மட்டுமே இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) ஓ! பெரும் தவசியே, அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், வேள்விகளில் சோமம் பருகியவர்களுமான வீர மன்னர்கள் பலரைக் கொல்லச் செய்த நான் இறுதியில் என்ன கதியை அடையப் போகிறேன்?(4) ஓ! பாட்டா, பெருஞ்செழிப்பில் திளைத்த மன்னர்களில் சிங்கங்களான பலரை இந்தப் பூமி இழந்துவிட்டதே என்ற நினைப்பில் இந்த நாள் வரை நான் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறேன்.(5) உறவினர்களும், லட்சக்கணக்கான பல மனிதர்களும் கொல்லப்பட்டதைக் கண்டு துயரத்தில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன்.(6)

Saturday, November 25, 2017

பாவங்கழி! - சாந்திபர்வம் பகுதி – 32

Perform expiation! | Shanti-Parva-Section-32 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 32)


பதிவின் சுருக்கம் : கடமைகள், அறநெறி ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; தன்னை எரிக்கும் காரணங்களைச் சொன்ன யுதிஷ்டிரன்; செயல்களில் பரம்பொருள் மற்றும் மனிதனின் பொறுப்பு, பாவங்கழிக்கும் பிராயச்சித்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்...


வைசம்பாயனர் சொன்னார், "தீவில் பிறந்தவரும், அறவுண்மைகள் அறிந்த பெரும் தவசியுமான வியாசர், பேச்சற்றவனாகவும், துயரில் மூழ்கியவனாகவும் நீடித்திருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)

Thursday, November 16, 2017

காலமெனும் பெருங்கடல்! - சாந்திபர்வம் பகுதி – 28

Time ocean! | Shanti-Parva-Section-28 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 28)


பதிவின் சுருக்கம் : ஞானியான அஸ்மருக்கும், மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; மனத்தின் வீண் செருக்கு, வளமை, வறுமை, மனக்கவலைக்கான காரணம், முதுமை, மரணம், காலத்தின் போக்கு ஆகியவற்றைக் குறித்து ஜனகனிடம் உரையாடிய அஸ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு வியாசர், தன் உறவினர்களின் படுகொலையின் நிமித்தமாகக் கவலையில் எரிந்து, தன் உயிர் மூச்சை விடத் தீர்மானித்திருந்த பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரை அகற்ற முயன்றார்.(1)

Wednesday, November 15, 2017

சாகப் போகிறேன்! - சாந்திபர்வம் பகுதி – 27

I will meet my death! | Shanti-Parva-Section-27 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 27)


பதிவின் சுருக்கம் : அபிமன்யு, பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் படுகொலைகளுக்காக வருந்திய யுதிஷ்டிரன்; திரௌபதியின் துயருக்காக வருந்தியது; அனைத்துக்கும் காரணமான தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து, உணவில்லாமல் சாகப் போவதாகச் சொன்னது; அது நடக்காது என்று சொல்லி, சோம்பலை அகற்றிச் செயல்படுமாறு யுதிஷ்டிரனைத் தூண்டிய வியாசர்...


யுதிஷ்டிரன், "இளம் வயதிலேயே அபிமன்யுவும், திரௌபதி, திருஷ்டத்யும்னன், விராடர், மன்னர் துருபதர்,(1) அனைத்துக் கடமைகளையும் அறிந்த திருஷ்டத்யும்னன், அரசன் திருஷ்டகேது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பிற மன்னர்கள் ஆகியோருடைய மகன்களும் போரில் வீழ்ந்த துயரமானது,(2) உறவினர்களைக் கொன்றவனும், இழிந்தவனுமான என்னைவிட்டு அகலவில்லை. உண்மையில், நான் நாட்டின் மீது இயல்பற்ற பேராசை கொண்டவனும், என் சொந்த குலத்தையே அழித்தவனுமாவேன்.(3)

Friday, November 10, 2017

காலத்தின் வலிமை! - சாந்திபர்வம் பகுதி – 25

The might of time! | Shanti-Parva-Section-25 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 25)


பதிவின் சுருக்கம் : பெண்களின் நிலை கண்டு தன் மனம் அமைதியடையவில்லை என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; காலமே அனைத்திற்கும் காரணம், காலமே வலிமைமிக்கது, காலம் ஒன்றே சாதிக்கும் வழிமுறை என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; இன்பதுன்பங்கள் ஏற்படும் வகையை உணர்த்தி, எவன் மகிழ்ச்சியடைவான் என்பதைச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்டும், கோபமாக இருக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி, பின்வரும் பதிலை அளித்தான்.(1)

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "பூமி சார்ந்த இந்த அரசுரிமை, (அதைத் தொடர்ந்த) பல்வேறு இன்பங்கள் ஆகியன என் இதயத்திற்கு எந்த மகிழ்சியையும் அளிக்கத் தவறுகின்றன. மறுபுறம், (என் சொந்தங்களை இழந்ததன் விளைவால் உண்டான) இந்தக் கடும் துயரம் இதயத்தையின் மையத்தையே உண்கிறது.(2) ஓ! தவசியே, வீரக் கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்த இந்தப் பெண்களின் ஒப்பாரியைக் கேட்டு, நான் அமைதியை அடைவதில் தவறுகிறேன்" என்றான்".(3)

Thursday, November 09, 2017

மன்னன் ஹயக்ரீவன்! - சாந்திபர்வம் பகுதி – 24

King Hayagriva! | Shanti-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : மன்னனின் கடமைகளை யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன வியாசர்; ஹயக்ரீவனின் கதையைச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் தவசியான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, மீண்டும் குந்தியின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்},(1) "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரா, அபரிமிதமான சக்தி கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான உனது தம்பியர் காடுகளில் வசித்திருந்தபோது பேணி வளர்த்த விருப்பங்களை அடையட்டும். ஓ! பிருதையின் மகனே, நகுஷனின் மகனான (மற்றொரு) யயாதியைப் போல இந்தப் பூமியை நீ ஆட்சி செய்வாயாக.(2,3) முன்பு காட்டில் வசித்துத் தவம் செய்து கொண்டிருந்தபோது பேரிடர் உங்களுடையதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பேரிடர் முடிந்துவிட்டது. எனவே, சிலகாலம் இன்புற்றிருப்பாயாக.(4) ஓ! பாரதா, சிலகாலத்திற்கு, அறத்தகுதி, செல்வம் மற்றும் இன்பத்தை உன் தம்பிகளோடு சேர்ந்து ஈட்டிபிறகு நீ காட்டுக்கு ஓயச் செல்லலாம்.(5)

Wednesday, November 08, 2017

சங்கர், லிகிதர் மற்றும் சுத்யும்னன்! - சாந்திபர்வம் பகுதி – 23

Sankha, Likhita and Sudyumna! | Shanti-Parva-Section-23 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 23)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அர்ஜுனனின் வார்த்தைகளை ஆதரித்துப் பேசிய வியாசர்; மன்னர்களின் செங்கோலின் சிறப்பைச் சொல்வதற்காகச் சங்கர், லிகிதர் என்ற இரு தவசிகள் மற்றும் மன்னன் சுத்யும்னன் ஆகியோரின் கதையைச் சொன்னது; குற்றத்திற்கான தண்டனை வழங்கும் மன்னன் நன்னிலை அடைவான் என்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சுருட்டை முடி கொண்ட அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குந்திக்குப் பிறந்த அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} பேச்சற்றவனாக அமைதியாக இருந்தான். பிறகு தீவில் பிறந்தவர் (வியாசர்) இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

Sunday, October 15, 2017

கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி! - ஸ்திரீ பர்வம் பகுதி – 16

Gandhari's lamentation unto Krishna! | Stri-Parva-Section-16 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 01) [ஸ்திரீ பர்வம் - 07]


பதிவின் சுருக்கம் : ஞானக்கண்ணால் போர்க்களத்தைக் கண்ட காந்தாரி; காந்தாரிக்கு ஞானக்கண் அளித்த வியாசர்; சோகத்தில் அழும் தன் மருமகள்களைக் கிருஷ்ணனுக்குக் காட்டிய காந்தாரி; களநிலவரத்தைக் கிருஷ்ணனுக்கு வர்ணித்து அழுது புலம்பியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, போர்க்களத்தில் இருந்து தொலைவாக இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு, தன் ஞானக்கண்ணால் குருக்களின் படுகொலையைக் கண்டாள்.(1) தன் தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} அர்ப்பணிப்புடன் இருந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பெண்மணி {காந்தாரி}, எப்போதும் உயர்ந்த நோன்புகளை நோற்று வந்தாள். கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த அவள், எப்போதும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டிருந்தாள்.(2) புனிதச் செயல்களைச் செய்யும் பெருமுனிவர் வியாசரால் கொடுக்கப்பட்ட வரத்தின் விளைவால், அவள் ஆன்ம அறிவையும் சக்தியையும் கொண்டவளானாள். அப்போது அந்தப் பெருமாட்டி பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள்.(3) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தக் குரு குல பெருமாட்டி {காந்தாரி}, அருகில் இருந்து பார்ப்பவளைப் போல, காணப்பயங்கரமானவையும், அற்புதக் காட்சிகள் நிறைந்தவையுமான போராளிகளில் முதன்மையானவர்களுடைய போர்க்களத்தைத் தொலைவிலிருந்தே கண்டாள்.(4) எலும்புகளும், தலைமுடியும் எங்கும் சிதறிக் கிடக்க, குருதியோடையால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் களம், அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரமாயிரம் சடலங்களால் விரவப்பட்டுக் கிடந்தது.(5)

Friday, October 13, 2017

காந்தாரியின் கோபம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 14

The wrath of Gandhari! | Stri-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 14) [ஸ்திரீ பர்வம் - 05]


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)

தேவரகசியம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 08

The secret of gods! | Stri-Parva-Section-08 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 08) [விசோக பர்வம் - 08]


பதிவின் சுருக்கம் : மயக்கமடைந்து கீழே விழுந்த திருதராஷ்டிரன்; போரில் நேர்ந்த படுகொலைக்கான கமுக்கமான வரலாற்றை விளக்கி திருதராஷ்டிரனைத் தேற்றிய வியாசர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், தன் மகன்களின் மரணம் குறித்த துயரத்தால் பீடிக்கப்பட்ட குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்}, உணர்விழந்தவனாகக் கீழே தரையில் விழுந்தான்.(1) அவனது நண்பர்களும், தீவில் பிறந்தவரான {துவைபாயனரான} வியாசரும், விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகியோரும், நலன்விரும்பிகள் பிறரும், வாயில் காப்போரும், அவனது நம்பிக்கையைப் பெற்றோரும், அவன் விழுந்த நிலையைக் கண்டு,(2) அவனது உடலில் குளிர்ந்த நீரைத் தெளித்து, பனை ஓலைகளால் விசிறிவிட்டுத் தங்கள் கரங்களால் அவனை மெல்லத் தடவினர். அந்நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அவர்கள் தேற்றினர்.(3)

Sunday, October 08, 2017

ஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 15

Aswatthama unable to withdraw the weapon! | Sauptika-Parva-Section-15 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 06)


பதிவின் சுருக்கம் : தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், "நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, "(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்" என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்" என்றான்.(4)

நெருப்புகளுக்கிடையில் நாரதரும், வியாசரும்! - சௌப்திக பர்வம் பகுதி – 14

Narada and Vyasa in between those fires! | Sauptika-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தன் பிரம்மாயுதத்தை ஏவியது; இயற்கையில் தோன்றிய இயல்புக்குமீறிய சகுனங்கள்; அவ்விரு ஆயுதங்களின் மூலம் உண்டான இரு நெருப்புகளுக்கிடையில் மூவுலகங்களைக் காப்பதற்காக நின்ற நாரதரும், வியாசரும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, மிகத் தொடக்கத்திலேயே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நோக்கத்தைக் குறிப்புகளால் அறிந்து கொண்டான். அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்},(1) "ஓ! அர்ஜுனா, ஓ! பாண்டுவின் மகனே, உன் நினைவில் இருப்பதும், துரோணரால் உனக்குப் புகட்டப்பட்ட அறிவுமான அந்தத் தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைப்} பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.(2) ஓ! பாரதா {அர்ஜுனா}, உன்னையும், உன் சகோதர்களையும் காப்பதற்காக, அனைத்து ஆயுதங்களையும் தணிக்கவல்லதான அவ்வாயுதத்தை இப்போரில் ஏவுவாயாக" என்றான்.(3) கேசவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கினான்.(4) தனது ஆசானின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, தனக்கும், தன் சகோதரர்களுக்கும் நன்மையை விரும்பிய அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்},(5) தேவர்கள் அனைவரையும் வணங்கி, பெரியோர் அனைவரையும் வணங்கி, உலகங்கள் அனைத்தின் நன்மையைச் சிந்தித்து, "அஸ்வத்தாமரின் ஆயுதம் இவ்வாயுதத்தால் தணிக்கப்படட்டும்" என்ற வார்த்தைகளைச் சொல்லி அவ்வாயுதத்தை ஏவினான்.(6)

பிரம்மசிரமேவிய அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 13

Aswatthama let off brahmashira! | Sauptika-Parva-Section-13 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 04)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)

Monday, December 19, 2016

மகாதேவனான சிவனின் மகிமை - சதருத்ரியம்! - துரோண பர்வம் பகுதி – 203

Sadarudriya - The glory of Siva, the Mahadeva! | Drona-Parva-Section-203 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : வியாசரைச் சந்தித்த அர்ஜுனன், ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் போரில் தனக்கு உதவி செய்த கண்ணுக்குப்புலப்படாத நபரைக் குறித்து அவரிடம் விசாரித்தது; மகாதேவனே அவன் எனச் சொன்ன வியாசர்; மகாதேவனின் தன்மைகள்; தக்ஷனின் வேள்வியை அழித்த மகாதேவன்; முந்நகரத்தை அழித்தது; இந்திரனின் கரத்தை முடக்கியது; இந்திரனுடனோடு சேர்ந்து பிரம்மனிடம் சென்ற தேவர்கள்; பிரம்மனுடன் சேர்ந்து மகாதேவனிடம் வந்த தேவர்கள்; பிரம்மனின் மகாதேவத் துதி; மகாதேவனின் பிற தன்மைகள்; மகாதேவனின் பெயர்கள் சிலவற்றின் விளக்கங்கள்; சதருத்ரியம்…


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அதிரதரான துரோணர், பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட பிறகு, அடுத்ததாக என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தனர்?”(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதிரதரான துரோணர் பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்டு குரு படையும் முறியடிக்கப்பட்ட பிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்},(2) தன் வெற்றியின் தொடர்பாக ஓர் அற்புத தோற்றப்பாட்டை {காரண, காரிய தொடர்பைக்} கண்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் உலவல்களின்போது அங்கே வந்த வியாசரிடம்,(3) “ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, போரில் எதிரியைப் {ஜெயத்ரதனை} பிரகாசமான கணைகளால் நான் கொல்லும் போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டது போன்றவனும், சுடர்மிக்க வண்ணம் கொண்டவனுமான ஒருவன் என் எதிரில், என் தேருக்கும் முன்பாகச் சென்று கொண்டிருப்பதைத் தொடர்ச்சியாக நான் கண்டேன். எங்கெல்லாம் அவன் உயர்த்தப்பட்ட தன் சூலத்துடன் சென்றானோ, அங்கெல்லாம் அவனுக்கு முன்பாகப் பகைவீரர்கள் அனைவரும் பிளக்கப்பட்டனர்.(4,5) உண்மையாக அவனால் பிளக்கப்பட்ட அவர்கள், எதிரி என்னால் பிளக்கப்பட்டதாகவே கருதினர். அவனைப் பின்தொடர்ந்தே, அவனால் ஏற்கனவே அழிக்கப்பட்டோரை நான் அழித்தேன்.(6) ஓ! புனிதமானவரே {வியாசரே}, சூலம் தரித்தவனும், சூரியனின் சக்திக்கு ஒப்பானவனுமாக என்னால் காணப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் யார் என எனக்குச் சொல்வீராக.(7) அவன் தன் காலால் பூமியையும் தொடவில்லை, தன் சூலத்தையும் ஒரு முறையேனும் வீசவில்லை. அவனது சக்தியின் விளைவால், அவன் தாங்கியிருந்த அந்த ஒரு சூலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சூலங்கள் வெளிவந்தன”, என்றான் {அர்ஜுனன்}.(8)


வியாசர் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, பிரஜாபதிகளை உதிக்கச் செய்த முதற்காரணனும், பெரும் சக்தி நிறைந்தவனும், பலமிக்கவனும், சொர்க்கம், பூமி, வானம் ஆகியவற்றின் வடிவமே ஆனவனும், தெய்வீகத் தலைவனும், அண்டத்தைப் பாதுகாப்பவனும், பெரும் ஆசானும், வரங்களை அளிப்பவனும், ஈசானன் என்று அழைக்கப்படுபவனுமான சங்கரனையே நீ கண்டிருக்கிறாய். ஓ!, வரமளிக்கும் தேவனான அந்த அண்டத் தலைவனின் பாதுகாப்பை நீ நாடுவாயாக.(9,10) உயர்ந்த ஆன்மா கொண்ட ஒரே தலைவனும், (தலையில்) சடாமுடி தரித்தவனும், மங்கலத்தின் வசிப்பிடமுமான அவன் (அந்த உயர்ந்த தேவன்) மகாதேவன் {சிவன்} என்றே அழைக்கப்படுகிறான். மூன்று கண்கள் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், மகுடத்தின் {கிரீடத்தின்} வடிவில் சடாமுடி தரித்தவனும், தோலாலான ஆடையைத் தன் மேனியில் தரித்தவனுமான அவன் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறான்.(11) வரமளிக்கும் அண்டத் தலைவனான அந்த உயர்ந்த தேவன், ஹரன் என்றும், ஸ்தாணு என்றும் அழைக்கப்படுகிறான். அண்டத்தில் உள்ள அனைத்திலும் முதன்மையான அவன் {சிவன்}, வெல்லப்பட முடியாதவனாகவும், அண்டத்தின் பேரின்பமாகவும், அதன் உயர்ந்த ஆட்சியாளனாகவும் இருக்கிறான்.(12)

முதற்காரணனாகவும், ஒளியாகவும், அண்டத்தின் புகலிடமாகவும் இருக்கும் அவன் {சிவன்} எப்போதும் வெற்றியாளனாகவே இருக்கிறான். அண்டத்தின் ஆன்மாவாகவும், படைப்பாளனாகவும், அண்டத்தையே தன் வடிவாகவும் கொண்ட அவன் பெரும் புகழைக் கொண்டவனாக இருக்கிறான்.(13) அண்டத்தின் தலைவனும், அதன் பெரும் ஆட்சியாளனுமான அந்தப் பலமிக்கவன், {அண்டத்தில் நடக்கும்} அனைத்துச் செயல்பாடுகளின் ஆசானாகவும் இருக்கிறான். சம்பு என்றும் அழைக்கப்படும் அவன், தான்தோன்றியும் {சுயமாகப் பிறப்பெடுப்பவனும்}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கடந்தகாலம், எதிர்காலம் மற்றும் தற்காலத்தின் பிறப்பிடமும் ஆவான்.(14) யோகமும், யோகத் தலைவனும் அவனே; சர்வன் என்று அழைக்கப்படுபவன் அவனே, உலகங்கள் அனைத்தின் தலைவனுக்கே தலைவனும் அவனே. அனைத்திற்கும் மேன்மையானவன் அவனே. அண்டத்திலுள்ள அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்திலும் உயர்ந்தவனுமான அவன் பரமேஷ்டின் என்று அழைக்கப்படுகிறான்.(15) மூவுலகங்களையும் நிலைப்படுத்துபவனான அவனே மூவுலகங்களின் ஒரே புகலிடமாகவும் இருக்கிறான். வெல்லப்பட முடியாத அவன், அண்டத்தின் பாதுகாவலனாகவும், பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றுக்கு (அதன் தேவைக்கு) அப்பாற்பட்டவனாகவும் இருக்கிறான்.(16)

அறிவின் ஆன்மாவாகவும், அறிவால் அறியப்பட முடியாதவனாகவும், அறிவுகள் அனைத்திலும் உயர்ந்தவனாகவும் இருக்கும் அறியப்பட முடியாதவன் அவனே. தன்னை வழிபடுவோரின் விருப்பங்களை அருள்பவன் அவனே.(17) பல்வேறு வடிவங்களிலான தேவர்களையும், குள்ளர்களான சிலரையும், சடாமுடி தரித்த சிலரையும், வழுக்கைத் தலை கொண்ட சிலரையும், குறுங்கழுத்து கொண்டோர் சிலரையும், பெரும் வயிறு படைத்தோர் சிலரையும்,(18) பெரும் உடல்களைப் படைத்தோர் சிலரையும், பெரும் பலம் கொண்டோர் சிலரையும், நீண்ட காதுகளை உடையோர் சிலரையும் தன் தோழர்களாகக் கொண்ட தலைவன் அவனே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அவர்கள் அனைவரும் சிதைந்த முகங்களையும், வாய்களையும், கால்களையும், விசித்திரமான ஆடைகளையும் கொண்டோராவர்.(18,19) மகாதேவன் என்று அழைக்கப்படும் அந்த உயர்ந்த தேவன் இவ்வாறே தொண்டர்களால் வழிபடப்படுகிறான். ஓ! மகனே {அர்ஜுனா}, இத்தகு சக்தி கொண்ட அந்தச் சிவனே {உன் மீது தான் கொண்ட} அன்பினால் உன் முன்பாகச் செல்கிறான்.(20)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தெய்வீக வடிவங்களைக் கொண்ட தேவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தத் தெய்வீக மகேஸ்வரனைத் தவிர, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போரில், அஸ்வத்தாமன், கர்ணன் மற்றும் கிருபர் ஆகிய அந்தப் பெரும் வில்லாளிகளால் பாதுகாக்கப்படும் அந்தப் படையைக் கற்பனையிலும் வெல்லத்துணிந்தவன், வேறு எவன் இருக்கிறான்?(21,22) தன் முன்னே மகேஸ்வரன் செல்லப்பெற்ற போர்வீரனை எவனும் எதிர்க்கத் துணியமாட்டான். இம்மூவுலகிலும் அவனுக்கு நிகராக வேறு எதுவும் கிடையாது.(23) சினமிக்க மகாதேவனின் மணத்திலேயே {வாசனையிலேயே}, போரில் எதிரிகள் நடுங்கி, உணர்வுகளற்று பெரும் எண்ணிக்கையில் வீழ்வார்கள்.(24) இதற்காகவே சொர்க்கத்தின் தேவர்கள் அவனை வணங்கித் துதிக்கின்றனர். வரமளிப்பவனும், தெய்வீகமானவனும், மங்கலகரமானவனுமான அந்த ருத்ரனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்களான நன்னடத்தைக் கொண்ட இவ்வுலக மனிதர்கள், இங்கேயும், இதற்கு அடுத்து அடையப்போகும் உயர்ந்த நிலைகளிலும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.(25,26)

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, அமைதியே ஆனவனும், ருத்ரன் என்று அழைக்கப்படுபவனும், நீல மிடறு {நீலத் தொண்டை} கொண்டவனும், மிக நுட்பமானவனும், பெரும் பிரகாசம் கொண்டவனுமான அவனை வணங்குவாயாக;(27) கபர்தின் {சடை கொண்டவன்} என்று அழைக்கப்படுபவனும், பயங்கரனும், பழுப்புக் கண்களைக் கொண்டவனும், வரமளிப்பவனுமான அவனை; பெரும் ஆணையாளனும், செஞ்சடையும், நன்னடத்தையும் கொண்டவனான அவனை; மங்கலச் செயல்களையே எப்போதும் செய்யும் அவனை;(28) விருப்பப் பொருளாய் இருப்பவனும், பழுப்புக் கண்களைக் கொண்டவனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுபவனுமான அவனை; புருஷன்[1] என்று அழைக்கப்படும் அவனை; பழுப்பு முடியுடன் இருப்பவனும், வழுக்கையாக {முடியற்றவனாக} இருப்பவனும்[2], மிக நுட்பமானவனாகவும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனாகவும் இருக்கும் அவனை;(29) ஒளியை அளிப்பவனும், புனித நீர்நிலைகள் அனைத்தின் வடிவானவனும், தேவர்களின் தேவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான அவனை; வெளிப்படும் வடிவில் இருப்பவனும், சர்வன் என்று அழைக்கப்படுபவனும், ஏற்கத்தக்க ஆடை கொண்டவனுமான அவனை;(30) சிறந்த தலைப்பாகை, அழகிய முகம் மற்றும் ஆயிரம் கண்களைக் கொண்டவனும், மழையை அளிப்பவனுமான அவனை; மலைகளை வசிப்பிடமாகக் கொண்டவனும், அமைதியே ஆனவனும், பாதுகாவலனும், மரப்பட்டைகளைத் தன் ஆடையாகக் கொண்டவனுமான அவனை;(31) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களைக் கொண்டவனும், மூர்க்கமானவனும், திசைப்புள்ளிகள் அனைத்தின் தலைவனுமான அவனை; மேகங்கள் மற்றும் படைக்கப்பட்ட அனைத்தின் தலைவனான அவனை;(32) மரங்கள் மற்றும் பசுக்கள் அனைத்தின் தலைவனான அவனை; மரங்களால் தன் உடல் மறைக்கப்பட்டவனான அவனை; தேவர்களின் படைத்தலைவனும், எண்ணங்கள் அனைத்தையும் ஈர்ப்பவனுமான அவனை;(33) வேள்விக் கரண்டியை {யக்ஞப்பாத்திரத்தைத்} தன் கையில் கொண்டவனும், தன்னில் சுடர்விடுபவனும், வில் தரிதவனும், ராமனே ஆனவனுமான அவனை; பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், முஞ்சப் புல்லைத் தன் ஆடையாகக் கொண்டவனுமான அவனை; ஆயிரக்கணக்கான தலைகளையும், ஆயிரக்கணக்கான கண்களையும், ஆயிரக்கணக்கான கரங்களையும், ஆயிரக்கணக்கான கால்களையும் கொண்டவனான அவனை நீ வணங்குவாயாக.(35)

[1] உயிரினங்களின் உடலில், அல்லது இதயத்தில் வசிப்பவன் என்பது பொருள்.

[2] வேறொரு பதிப்பில், “பச்சை நிறமான கேசங்களையுடையவரும், மயிரில்லாத சிரஸையுடைவரும்” என்று இருக்கிறது.

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உமையின் தலைவனும், முக்கண்களைக் கொண்ட தேவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும் வரங்களை அளிப்பவனுமான அந்த அண்டத்தலைவனின் பாதுகாப்பை நாடுவாயாக;(36) படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் பாதுகாவலனும், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அவனிடம்; சடாமுடி தரித்தவனும், மேன்மையான உயிரினங்களை அனைத்தையும் அசைப்பவனும், காளையைப் போன்ற நாபியை {தொப்புளைக்} கொண்டவனும், காளையையே தனது அடையாளமாகக் கொண்டவனுமான அவனிடம்;(37) காளையைப் போலப் பெருமையுடையவனும், காளைகளின் தலைவனும்; தன் கொடியில் காளையின் வடிவைக் கொண்டவனும்; நல்லோர் அனைவருக்கும் தயாளனும், யோகத்தால் மட்டுமே அணுகப்படக்கூடியவனும், காளையைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான அவனிடம்;(38) மிக மேன்மையான ஆயுதங்களைக் கொண்டவனும், விஷ்ணுவையே தன் கணையாகக் கொண்டவனும், அறத்தின் {நீதியின்} வடிவமும், மகேஸ்வரன் என்று அழைக்கப்படுபவனுமான அவனிடம்; பரந்த வயிற்றையும், பரந்த உடலையும் கொண்டவனும், சிறுத்தையின் தோலைத் தன் ஆசனமாகக் கொண்டவனும்,(39) உலகங்களின் தலைவனும், முடியற்றவனும், பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பிராமணர்களிடம் அன்பு கொண்டவனுமான அவனிடம்; திரிசூலம் தரித்தவனும், வரங்களை அளிப்பவனும், வாளையும், கேடயத்தையும் கொண்டவனும், மிகவும் மங்கலகரமானவனுமான அவனிடம்;(40) பினாகை என்று அழைக்கப்படும் வில் தரித்தவனும், போர்க்கோடரியைக் கொண்டவனும்,[3] இந்த அண்டத்தின் பாதுகாவலனும், தலைவனுமான அவனிடம் பாதுகாப்பை நீ நாடுவாயாக.

[3] “இதைத்தான் தன் சீடரான பரசுராமருக்கு அளித்தான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பாதுகாப்பை அளிப்பவனும், மான் தோல் உடுத்திய தேவனுமான அந்தத் தெய்வீகத் தலைவனின் கரங்களிலேயே நான் என்னை நிறுத்துகிறேன். வைஸ்ரவணனை {குபேரனைத்} தன் நண்பனாகக் கொண்ட அந்தத் தேவர்களின் தலைவனுக்கு வணக்கம். அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அற்புத வில்லாளிகளைத் தன் தோழர்களாகக் கொண்டவனும், வில் தரிப்பவனும், விரும்பும் ஆயுதமாக அந்த வில்லையே கொண்ட தேவனும், வில்லால் உந்தப்படும் கணையேயானவனும், வில்லின் நாணும், வில்லும் ஆனவனும், வில்லைப் பயன்படுத்த கற்பித்த ஆசானுமான அவனை எப்போதும் வணங்குகிறேன்.(41-43) மூர்க்கமான ஆயுதங்களைக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தத் தேவனை வணங்குகிறேன். தன்னைச் சுற்றிலும் பல வில்லாளிகளைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களிலானவனுமான அவனை வணங்குகிறேன்.(44) பெரும் எண்ணிக்கையிலான அற்புத வில்லாளிகளைத் தன் தோழர்களாகக் கொண்டவனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுபவனுமான அவனை எப்போதும் வணங்குகிறேன். முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்த அவனை வணங்குகிறேன். (அசுரனனான) பகனைக் கொன்றவனை வணங்குகிறேன்.(45,46) மரங்கள் மற்றும் மனிதர்களின் தலைவனான அவனை வணங்குகிறேன். (தெய்வீகத்) தாய்மாருக்கும், கணங்கள் என்ற பெயரில் அறியப்படும் பூத இனங்களுக்கும் தலைவனான அவனை வணங்குகிறேன். பசுக்கள் மற்றும் வேள்விகளின் தலைவனான அவனை எப்போதும் வணங்குகிறேன். நீர்நிலைகள் மற்றும் தேவர்களின் தலைவனும், சூரியனின் பற்களை அழித்தவனும், முக்கண்களைக் கொண்டவனும், வரங்களை அளிப்பவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், நீல மிடறு {தொண்டை} கொண்டவனும், தங்கச் சடாமுடி கொண்டவனுமான அவனை எப்போதும் வணங்குகிறேன்.(47,48)

இப்போது நான், என் அறிவுக்குத் தக்கபடியும், நான் கேள்விப்பட்டபடியும் உயர்ந்த ஞானியான மகாதேவனின் தெய்வீகச் செயல்கள் அனைத்தையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(49) அந்த மகாதேவன் கோபம்கொண்டால், தேவர்களோ, அசுரர்களோ, கந்தர்வர்களோ, ராட்சசர்களோ எவராயிருப்பினும், அவர்கள் ஆழ்ந்த குகைகளுக்குள்ளேயே தங்களை மறைத்துக் கொண்டாலும் அமைதியை அடையமாட்டார்கள்.(50) பழங்காலத்தில் ஒரு வேள்வி செய்வதற்குத் தேவையான பொருட்களைத் தக்ஷன் சேகரித்தான். மகாதேவனோ கோபத்தால் அந்த வேள்வியை அழித்தான். உண்மையில், அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {சிவன்} மிகக் கடுமையானவனாக ஆனான்.(51) அவன், தனது வில்லில் இருந்து ஒரு கணையை ஏவிபடியே பயங்கர முழக்கங்களைச் செய்தான். அப்போது தேவர்கள் கவலையாலும், அச்சத்தாலும் நிறைந்தனர்.(52) உண்மையில், மகாதேவன் கோபமடைந்தபோது, (உடலுடன் கூடிய) வேள்வியே {அங்கிருந்து} தப்பி ஓடியது. மகாதேவனுடைய வில்லின் நாணொலியாலும், உள்ளங்கை ஒலிகளாலும் தேவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.(53) தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் வீழ்ந்து, மகாதேவனிடம் பணிந்தனர். நீர்நிலைகள் அனைத்தும் கலக்கமடைந்து பொங்கின, பூமி நடுங்கியது.(54) மலைகள் பிளந்தன, திசைப்புள்ளிகள் அனைத்தும், நாகர்களும் மலைப்பை அடைந்தனர். அண்டமே அடர்த்தியான இருளில் மூழ்கி அதற்கு மேல் கண்ணுக்குப் புலப்படாமல் போனது.(55)

சூரியனோடு கூடிய ஒளிக்கோள்கள் அனைத்தின் காந்தியும் அழிக்கப்பட்டன. அச்சத்தால் நிறைந்த முனிவர்கள் கலக்கத்தையடைந்து, தங்களுக்கும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையை விரும்பி, சினம் ஆற்றும் சடங்குகளைச் செய்தனர். அப்போது சூரியன் அந்த வேள்வியின் முக்கியக் காணிக்கையை {புரோடாசத்தை} உண்டான். சிரித்துக் கொண்டே அவனை {சூரியனை} அணுகிய சங்கரன், அவனது பற்களைக் கிழித்தெறிந்தான். அவனிடம் பணிந்த தேவர்கள், நடுக்கத்துடனே {அங்கிருந்து} தப்பி ஓடினார்கள்.(56-58) அப்போது மகாதேவன், சுடர்மிக்கவையும், கூரியவையும், புகையோடு கலந்த நெருப்பின் தழல்களுக்கோ, மின்னலோடு கூடிய மேகங்களுக்கோ ஒப்பான கணைமாரிகளை அந்தத் தேவர்களின் மேல் குறி வைத்தான்.(59) அந்தக் கணைமாரியைக் கண்ட தேவர்கள் அனைவரும் அந்த மகேஸ்வரனிடம் பணிந்து, வேள்விகளின் கணிசமான பங்கை அந்த ருத்திரனுக்கு ஒதுக்கினார்கள்.(60) ஓ! இளவரசே {அர்ஜுனா}, அச்சத்தால் தேவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள். கோபம் தணிந்த அந்தப் பெருந்தேவன், வேள்வியை மீண்டும் நிறுவினான்.(61) தப்பி ஓடிய தேவர்கள் திரும்பி வந்தனர். உண்மையில் இன்று வரை அவர்கள் {தேவர்கள்} மகேஸ்வரனிடம் அச்சம் கொண்டே இருக்கின்றனர்.

அதற்கும் முன்பு, வீர அசுரர்கள் சொர்க்கத்தில் மூன்று நகரங்களைக் கொண்டிருந்தனர்.(62) அந்த நகரங்கள் ஒவ்வொன்றும், சிறப்பானதாகவும், பெரியதாகவும் இருந்தன. ஒன்று இரும்பாலானதாகவும், மற்றது வெள்ளியாலானதாகவும், மூன்றாவது தங்கத்தாலனாதாகவும் இருந்தது. தங்க நகரம் கமலாக்ஷனையும், வெள்ளி நகரம் தாரகாக்ஷனையும்,(63) இரும்பாலானது வித்யுன்மாலியையும் அதனதன் தலைவர்களாகக் கொண்டிருந்தன. தன் ஆயுதங்கள் அனைத்துடன் கூடிய மகவத்தால் (இந்திரனால்) அந்நகரங்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.(64) (அந்த அசுரர்களால்) பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் ருத்ரனின் {சிவனின்} பாதுகாப்பை நாடினார்கள். வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு அவனை {சிவனை} அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம்,(65) “முந்நகரத்தில் வசிக்கும் பயங்கரர்கள் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள், அவ்வரங்களின் விளைவால், செருக்கால் நிறைந்து, அண்டத்தையே பெரிதும் பீடிக்கிறார்கள்.(66) தேவதேவனின் தலைவா, உம்மைத் தவிர அவர்களைக் கொல்லத் தகுந்தவர் எவரும் இல்லை. எனவே, ஓ! மகாதேவா, தேவர்களின் இந்த எதிரிகளைக் கொல்வீராக.(67) அப்போது, ஓ! ருத்ரரே, வேள்விகள் ஒவ்வொன்றிலும் கொல்லப்படும் உயிரனிங்கள் உமதே ஆகும்” என்றனர். இப்படிச் சொன்ன தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற மகாதேவன், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி “ஓ! அண்டத்தில் தலைவா {இந்திரா}, நான் இந்த அசுரர்களை வீழ்த்துவேன்” என்று சொன்னான்.

மேலும் அந்த ஹரன் {சிவன்}, கந்தமாதனம் மற்றும் விந்தியம் ஆகிய இரு மலைகளையும் தன் தேருக்கான மூங்கில்கழிகளாக்கிக் கொண்டான்.(68,69) அந்தச் சங்கரன், பெருங்கடல்கள், மலைகளுடன் கூடிய பூமாதேவியையே போருக்கான தன் தேராக ஆக்கிக் கொண்டான். பிறகு அந்த முக்கண் தேவன் {சிவன்}, பாம்புகளின் இளவரசனான சேஷனையே அந்தத் தேரின் அக்ஷமாக்கிக் கொண்டான்.(70) பினாகைதாரியான அந்தத் தேவர்களுக்குத் தேவன், சந்திரனையும், சூரியனையும் அந்த வாகனத்தின் இரு சக்கரங்களாக்கிக் கொண்டான். இந்த முக்கண் தலைவன், {பாம்புகளான} எலாபத்திரன் மற்றும் புஷ்பதந்தன் ஆகியோரை {அந்தத் தேருடைய} நுகங்களின் அச்சாணிகளாக்கிக் கொண்டான்.(71) மேலும் அந்த வீர மகாதேவன், மலய மலைகளை நுகமாகவும், பெரும் தக்ஷகனை, அந்த நுகத்தைக் {மலய மலைகளை} கழிகளோடு {கந்தமாதனம் மற்றும் விந்தியத்தோடு சேர்த்துக்} கட்டும் நாணாகவும், மற்ற உயிரினங்களைக் குதிரைகளின் பூட்டாங்கயிறுகளாகவும் ஆக்கிக் கொண்டான்.(72) அந்த மகேஸ்வரன், நான்கு வேதங்களையே நான்கு குதிரைகளாக்கிக் கொண்டான். மேலும் மூவுலகங்களின் அந்தத் தலைவன், துணை வேதங்களை அதன் கடிவாளங்களாக்கிக் கொண்டான்.(73) அந்த மகாதேவன், காயத்ரி மற்றும் சாவித்ரியை கடிவாளக் கயிறுகளாகவும், ஓம் என்ற ஓரசையை {ஓங்காரத்தைச்} சாட்டையாகவும் {குறடாவாகவும்}, பிரம்மனைச் சாரதியாகவும் ஆக்கிக் கொண்டான்.(74) மந்தர மலைகளை வில்லாகவும், வாசுகியை நாண்கயிறாகவும், விஷ்ணுவைத் தன் அற்புதக் கணையாகவும், அக்னியை அந்தக் கணையின் தலையாகவும்,(75) வாயுவை அந்தக் கணையின் இரு சிறகுகளாகவும், யமனை அதன் வாலின் இறகுகளாகவும், மின்னலைச் சாணைக்கல்லாகவும், மேருவைக் கொடிமரமாகவும் ஆக்கிக் கொண்ட சிவன்,(76) தெய்வீக சக்திகள் அனைத்தாலுமான அந்த அற்புதத் தேரில் ஏறி முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்கப் புறப்பட்டான்.

உண்மையில், தாக்குபவர்களில் முதன்மையானவனும், அசுரர்களை அழிப்பவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனும், அழகிய போர்வீரனுமான அந்த ஸ்தாணு, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தேவர்களாலும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களாலும் துதிக்கப்பட்டு,(77,78) தன் பெயரிலேயே அழைக்கப்பட்ட சிறப்பான, ஒப்பற்ற {மஹேஸ்வரம் என்ற} வியூகத்தை அமைத்துக் கொண்டு, ஆயிரம் வருடங்கள் அசையாமல் நின்றிருந்தான்.(79) எனினும், அந்த முந்நகரங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆகாயத்தில் வந்த போது, தலைவனான அந்த மகாதேவன், மூன்று முடிச்சுகளை {கணுக்களைக்} கொண்ட அந்தப் பயங்கரக் கணையால் அவற்றைத் துளைத்தான்.(80) யுகநெருப்பால் ஈர்க்கப்பட்டதும், விஷ்ணு மற்றும் சோமனால் ஆனதுமான அந்தக் கணையைத் தானவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(81)

அந்த முந்நகரம் {திரிபுரம்} எரிந்தபோது, தேவி பார்வதி அதைக் காண அங்கே வந்தாள். அப்போது வழுக்கைத் தலையில் ஐந்து கொத்து முடியுடன் கூடிய பிள்ளை ஒருவன் அவளது {பார்வதி தேவி} மடியில் அமர்ந்தான்.(82) அந்தப் பிள்ளை யார் எனத் தேவர்களிடம் அந்தத் தேவி {பார்வதி} கேட்டாள். அப்போது பொறாமையினால் சக்ரன் {இந்திரன்} அந்தப் பிள்ளையைத் தனது வஜ்ரத்தால் தாக்க முயன்றான்.(83) (பிள்ளையாக இருந்த) அந்தத் தெய்வீகத் தலைவனான மகாதேவன், சிரித்துக் கொண்டே, சினத்துடன் கூடிய அந்தச் சக்ரனின் கரத்தை விரைவாக முடக்கினான்.(84) அப்போது, தேவன் சக்ரன் {இந்திரன்}, முடங்கிய தன் கரத்துடனும், தேவர்கள் அனைவரின் துணையுடனும் மங்கா மகிமை கொண்ட தலைவன் பிரம்மனிடம் வேகமாகச் சென்றான்.(85) அந்தப் பிரம்மனைத் தங்கள் தலையால் வணங்கிய அவர்கள், கூப்பிய கரங்களுடன் அவனிடம் {பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மரே, ஏதோ ஓர் அற்புத உயிரினம், பார்வதியின் மடியில் பிள்ளையின் வடிவில் எங்களால் காணப்பட்டான். ஆனால் அவனால் நாங்கள் வணங்கப்படவில்லை. நாங்கள் அனைவரும் அவனால் வெல்லப்பட்டோம். எனவே, அவன் யாராக இருக்கக்கூடும் என்பதைத் தங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.(86,87) உண்மையில் அந்தச் சிறுவன், போரிடாமலேயே புரந்தரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட எங்கள் அனைவரையும் மிக எளிதாக வென்றான்” என்றனர்.

அவர்களது இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான பிரம்மன்,(88) ஒரு கணம் சிந்தித்து, அளவிலா சக்தி கொண்ட அந்தச் சிறுவன், தெய்வீகச் சம்புவையன்றி {சிவனின்றி} வேறு யாரும் அல்ல என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட அந்தத் தேவர்களில் முதன்மையானோரிடம் பேசிய பிரம்மன்,(89) “அந்தப் பிள்ளை, அசைவன மற்றும் அசையாதன அடங்கிய மொத்த அண்டத்தின் தலைவனான தெய்வீக ஹரனாவான் {சிவனாவான்} . மஹேஸ்வரனுக்கு {சிவனுக்கு} மேன்மையாக வேறு எதுவும் இல்லை.(90) உங்கள் அனைவராலும் உமையுடன் காணப்பட்ட அந்த அளவிலா காந்தி கொண்டவன், அந்தத் தெய்வீகத் தலைவன், உமையின் நிமித்தமாகவே அந்தப் பிள்ளையின் வடிவை ஏற்றிருக்கிறான்.(91) நாம் அனைவரும் அவனிடம் {சிவனிடம்} செல்வோமாக. தெய்வீகமானவனும், சிறப்புமிக்கவனுமான அவனே மொத்த உலகத்தின் உயர்ந்த தலைவனாவான்.(92) தேவர்களே, உங்களால் அண்டத்தின் ஆசானை {சிவனை} அறிந்து கொள்ள முடியவில்லை” என்றான் {பிரம்மன்}.

பிறகு, பாட்டனுடன் {பிரம்மனுடன்} கூடிய தேவர்கள் அனைவரும் காலைச் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய அந்தப் பிள்ளையிடம் சென்றனர். மஹேஸ்வரனைக் கண்டு, உயர்ந்தவன் அவனே என்பதை உணர்ந்தவனான பாட்டன் பிரம்மன் இவ்வாறு அவனைத் துதித்தான்:(93,94) “ஓ! தலைவா, வேள்வி நீயே, அண்டத்தின் இருப்பிடமும் வசிப்பிடமும் நீயே. பவன் நீயே, மகாதேவன் நீயே, (அனைத்தின்) வசிப்பிடமும் நீயே, உயர்ந்த புகலிடமும் நீயே.(95) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய இந்த மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுருவியிருப்பவன் நீயே. ஓ! புனிதமானவனே, ஓ கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தின் தலைவா, ஓ! உலகத்தின் தலைவா, ஓ! அண்டத்தின் பாதுகாவலா, உன் கோபத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} உன் அருள் கிட்டக்கட்டும்” என்றான் {பிரம்மன்}.(96)

வியாசர் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தார், “தாமரையில் பிறந்த பிரம்மனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மகேஸ்வரன் நிறைவை அடைந்தான். தனது அருளைத் தர விரும்பிய அவன் உரக்கச் சிரித்தான்.(97) பிறகு உமை மற்றும் ருத்ரன் ஆகிய இருவரையும் தேவர்கள் (துதியால்) நிறைவு செய்தனர். வஜ்ரதாரியான சக்ரனின் கரம் இயல்பு நிலையை அடைந்தது.(98) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், காளையைத் தன் அடையாளமாகக் கொண்டவனுமான அந்தத் தெய்வீகத் தலைவன் தேவர்களிடம் நிறைவை அடைந்தான்.(99) ருத்ரன் அவனே, சிவன் அவனே, அக்னி அவனே, அனைத்தும் அவனே, அனைத்தின் அறிவையும் கொண்டவன் அவனே. இந்திரன் அவனே, காற்றும் அவனே, அசுவினி இரட்டையர்களும் அவனே, மின்னலும் அவனே.(100) பவன் அவனே, பர்ஜன்யம் அவனே, மகாதேவனும் அவனே, பாவமற்றவனும் அவனே. சந்திரன் அவனே, ஈசானன் அவனே, சூரியன் அவனே, வருணன் அவனே.(101) காலன் அவனே, அந்தகன் அவனே, மிருத்யு அவனே, யமனும் அவனே[4]. பகலும் அவனே, இரவும் அவனே. அரைத்திங்கள் {பக்ஷம்} அவனே, மாதம் அவனே, பருவங்களும் {ருதுக்களும்} அவனே. காலை, மாலை, சந்திப் பொழுதுகள் அவனே, வருடம் அவனே.(102) தாத்ரி அவனே, விதாத்ரியும் அவனே, அண்டத்தின் ஆன்மா அவனே, அண்டத்தில் நடைபெறும் அனைத்துச் செயல்களைச் செய்பவனும் அவனே. உடலற்றவனாக இருப்பினும்,  தேவர்களின் உடல்களாக இருப்பவன் அவனே.(103)

[4] "இந்தச் சொற்களனைத்தும் மரணம் அல்லது அழிப்பவனையே குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தேவர்கள் அனைவராலும் துதித்துப் போற்றப்படும் பெருங்காந்தி கொண்டவன் அவனே. ஒருவனாகவும், பலராகவும், நூறாயிரம் பேராகவும் இருப்பவன் அவனே.(104) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அவன் எனச் சொல்கின்றனர்.  பயங்கரனும், மங்கலனும் அவனே. இந்த இரு வடிவங்களும் கூடப் பலவகைப்பட்டதாகும்.(105) அக்னி {நெருப்பு}, விஷ்ணு மற்றும் சூரியன் ஆகியோர் அவனது பயங்கர வடிவங்களாவர். நீரும், ஒளியும், சந்திரனும் அவனது மங்கல வடிங்களாகும்.(106) வேதங்களின் பல்வேறு அங்கங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், ஆன்மாவைக் குறித்த அறிவியல்கள் ஆகியவற்றின் உயர்ந்த புதிரே {ரகசியமே} இந்தத் தேவன் மகேஸ்வரனாவான்.(107) மகாதேவன் அப்படிப்பட்டவனே. மேலும் அந்தத் தேவன் பிறப்பற்றவனாவான். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அந்தத் தேவனின் குணங்கள் அனைத்தையும், ஆயிரம் வருடங்கள் நான் தொடர்ந்து சொன்னாலும், என்னால் அவற்றைப் பட்டியலிட முடியாது. தீய கோள்கள் அனைத்தாலும் பீடிக்கப்பட்டிருந்தாலும், பாவங்கள் அனைத்தின் கறைபடிந்திருந்தாலும்,(108-110) அந்தப் பெரும் பாதுகாவலனை நாடினால், வேண்டுவதில் நிறைவைக் கொடுத்து, அவர்களுக்கு முக்தியையும் அவன் அருள்வான். உயிர், உடல்நலம், செழுமை, செல்வம், மற்றும் பல்வேறு வகையான ஆசைப் பொருட்கள் அனைத்தையும் அருளி {அவற்றை} மீண்டும் அவனே எடுத்துக் கொள்கிறான். இந்திரனிலும், பிற தேவர்களிலும் காணப்படும் செழிப்பு அவனுடையதே.(111)

எப்போதும் இவ்வுலகில், மனிதர்களின் நன்மை மற்றும் தீமையிலேயே அவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவனது மேன்மையின் விளைவால், அவன் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அவனால் அடைய முடியும்.(112) மகேஸ்வரன் என்று அழைக்கப்படும் அவன், உயர்ந்தவர்களின் தலைவனாகவும் இருக்கிறான். பல வகைகளிலான பல வடிவங்களில் அவனே அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கிறான்.(113) அந்தத் தேவனின் வாய் {வடவாமுகம்} பெருங்கடலில் இருக்கிறது. அந்த வாயானது {வடவாமுகமானது} பெண் குதிரையுடைய தலையின் வடிவை ஏற்று, நீரின் வடிவில் வேள்விக்காணிக்கைகளைக் குடிக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே.(114) இந்தத் தேவன் எப்போதும் சுடலைகளிலேயே {சுடுகாடுகளிலேயே} வசிக்கிறான். துணிவுமிக்கவர்களைத் தவிர வேறு யாராலும் செல்ல முடியாத இடங்களிலேயே அந்த உயர்ந்த தலைவனை {ஈஸ்வரனை} மனிதர்கள் வழிபடுகின்றனர்.(115)

இவ்வுலகில் மனிதர்களால் பேசப்பட்டு, வழிபடப்படும் இந்தத் தேவனின் சுடர்மிக்கப் பயங்கர வடிவங்கள் பலவாகும்.(116) உலகங்கள் அனைத்திலும் இந்தத் தேவனின் உண்மையான பெயர்களும் பலவாகும். அவனது மேலாதிக்கம், அவனது எல்லையற்ற ஆற்றல் மற்றும் அவனது செயல்பாடுகளால் நிறுவப்பட்டனவே அப்பெயர்கள் ஆகும்.(117) முடிவிலியான ருத்திரன் என்று அழைக்கப்படும் அந்தப் பெரும் தேவனை மதிக்கும் விதமாகச் சதருத்ரியம் என்று அழைக்கப்படும் பாடலானது வேதங்களில் பாடப்பட்டுள்ளது.(118) அந்தத் தேவன், மனித மற்றும் தெய்வீக விருப்பங்கள் அனைத்துக்கும் தலைவனாவான். அவன் எல்லையற்ற ஆற்றல் கொண்டவனும், உயர்ந்த ஆசானுமாவான். உண்மையில் அந்தத் தேவனே பரந்த அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கிறான்.(119) பிராமணர்களும், முனிவர்களும் அவனை உயிரினங்கள் அனைத்தின் முதற்பேறாகச் சொல்கின்றனர். அவனே தேவர்களில் முதன்மையானவன்; அவனது வாயிலிருந்தே காற்று உண்டானது.(120)

(அண்டத்தின்) உயிரினங்களை எப்போதும் பாதுகாப்பதாலும், அவற்றோடு விளையாடுவதாலும், அவனே உயிரினங்கள் அனைத்தின் தலைவன் என்பதாலும், அவன் பசுபதி {பசு – உயிரினம், பதி – தலைவன் = பசுபதி – உயிரினங்களின் தலைவன்} என்று அழைக்கப்படுகிறான்.(121)

லிங்கச் சின்னமானது எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதாகக் கருதப்படுவதாலும், அவன் எப்போதும் உலகத்தை மகிழ்விப்பவன் என்பதாலும், அவன் மகேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறான்.(122) நிமிர்ந்து நிற்பதாகக் கருதப்படும் அவனது லிங்கச் சின்னத்தையே முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும் எப்போதும் வழிபடுகின்றனர்.(123) அவ்வழிபாடே மகேஸ்வரனை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. உண்மையில் சங்கரன் (அப்படிப்பட்ட வழிபாட்டால்) மகிழ்ச்சியும், அன்பும், பேரின்பமும் கொள்கிறான்.(124)

கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகியவற்றைப் பொறுத்து அந்தத் தேவன் அசையும் மற்றும் அசையாத தன் வடிங்கள் பலவற்றை அடைவதால் அவன் பஹுரூபன் (பல வடிவங்களைக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறான்.(125)

ஒரே கண்ணைக் கொண்ட அவன் பிரகாசத்தால் சுடர்விட்டு எரிகிறான், அல்லது தன் உடலின் அனைத்துப் பக்கங்களிலும் பல கண்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறான். மேலும் கோபத்தால் அவன் உலகங்களைக் கொள்வதன் காரணத்தால் அவன் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.(126)

புகையைப் போன்ற வடிவத்தைக் கொண்டவன் அவன் என்ற காரணத்தால் {அவன் தூமர வண்ணத்தில் இருப்பதால்} அவன் தூர்ஜடி என்று அழைக்கப்படுகிறான். தேவர்களான அந்த விஸ்வேதேவர்கள் அவனில் இருக்கும் காரணத்தால் அவன் விஸ்வரூபன் என்றும் அழைக்கப்படுகிறான்.(127)

ஆகாயம், நீர் மற்றும் பூமி ஆகிய மூன்று தேவியரும் அந்த அண்டத்தலைவனைப் புகழ்ந்து அவனை நாடும் காரணத்தால் அவன் திரியம்பகன் என்று அழைக்கப்படுகிறான்.(128)

அனைத்து வகைச் செல்வங்களையும் எப்போதும் அதிகரிப்பதாலும், மனிதர்களின் செயல்பாடுகளில் அவர்களின் நன்மையை விரும்புபவன் என்ற காரணத்தாலும் அவன் சிவன் என்று அழைக்கப்படுகிறான்.(129)

ஆயிரம் கண்களை, அல்லது பத்தாயிரம் கண்களை, அல்லது அனைத்துப் பக்கங்களிம் அவற்றை அவன் கொண்டிருக்கிறான். பரந்த இந்த அண்டத்தைக் காக்கும் காரணத்தால் அவன் மகாதேவன் என்று அழைக்கப்படுகிறான்.(130)

அவன் பெரியவன், பழமையானவன், உயிரின் பிறப்பிடமாகவும், அதன் தொடர்ச்சியாகவும் இருப்பவன் என்பதாலும், அவனது லிங்கச் சின்னம் எப்போதும் நீடித்திருக்கும் என்ற காரணத்தாலும் அவன் ஸ்தாணு என்று அழைக்கப்படுகிறான்.(131)

உலகில் தோன்றும் சூரிய மற்றும் சந்திர ஒளிக் கதிர்கள் அந்த முக்கண்ணனில் நிலைபெற்ற கேசமாகப் பேசப்படும் காரணத்தால் அவன் வியோமகேசன் என்று அழைக்கப்படுகிறான்.(132)

பிரம்மன், இந்திரன், வருணன், யமன் மற்றும் குபேரன் ஆகியோரைப் பீடித்து அவர்களை முற்றாக அழித்த காரணத்தால் அவன் ஹரன் என்று அழைக்கப்படுகிறான்.(133)

அவனே கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்பதாலும், உண்மையில் அனைத்தும் அவனே என்பதாலும், கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகியவற்றின் பிறப்பிடம் அவனே என்ற காரணத்தாலும் அவன் பவன் என்று அழைக்கப்படுகிறான்.(134)

கபி என்ற சொல் தலைசிறந்தது என்ற பொருளைக் கொண்டது என்றும், விருஷம் என்பது அறம் என்ற பொருளைக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. எனவே தேவர்களின் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் விருஷாகபி என்று அழைக்கப்படுகிறான்.(135)

அந்த மகேஸ்வரன், (தியானத்தில்) இரண்டு கண்களையும் மூடி, சுத்தமான சித்த சக்தியால் தன் நெற்றில் மூன்றாவது கண்ணை உண்டாக்கிக் கொண்ட காரணத்தால் அவன் முக்கண்ணன் என்று அழைக்கப்படுகிறான்.(136)

வாழும் உயிரினங்களின் உடல்களில் என்னவெல்லாம் நோயிருக்குமோ, அவற்றில் என்னவெல்லாம் நோயின்மை இருக்குமோ அவை அந்தத் தேவனையே பிரதிபலிக்கின்றன. உயிரினங்களில் நோயுற்றவற்றையும் சேர்த்து அனைத்தின் உடல்களிலும் உள்ள பிராணன், அபானன் (மற்றும் வேறு பிறவாக) அழைக்கப்படும் முக்கிய வாயுக்களான காற்றும் அவனே[5].(137) அந்த உயர் ஆன்ம தேவனின் எந்த வடிவத்தையோ, லிங்கச் சின்னத்தையோ எப்போதும் வழிபடும் ஒருவன், அச்செயலால் பெரும் செழிப்பை அடைகிறான்.(138) அவனது இரண்டு தொடைகளில் இருந்து கீழ்நோக்கி இருப்பவை நெருப்புமயமானவை {அக்னிமயமானவை}, மங்கலகரமாக இருக்கும் அந்த உடலில் பாதிச் சந்திரமயமானவை. எனவே அவனது பாதி ஆன்மா நெருப்பாகவும், மறுபாதி சந்திரனாகவும் இருக்கிறது.(139) சக்தி நிறைந்த அவனது மங்கல வடிவமானது, மற்ற தேவர்களின் வடிவங்களைவிட அதிகம் சுடர்மிக்கதாகும். மனிதர்களுக்கு மத்தியில் அவனது சுடர்மிக்கப் பயங்கர வடிவமே நெருப்பு {அக்னி} என்று அழைக்கப்படுகிறது.(140) அந்த மங்கல வடிவிலேயே அவன் பிரம்மச்சரியம் பயில்கிறான். அவன் கொண்டிருக்கும் வேறு பயங்கர வடிவத்தால் அந்த உயர்ந்த தலைவன் அனைத்தையும் விழுங்குகிறான்.(141) அவன் எரிப்பவன் என்பதாலும், அவன் ஆர்வமிகுந்தவன் என்பதாலும், அவன் மூர்க்கமானவன் என்பதாலும், அவன் பெரும் ஆற்றலைக் கொண்டவன் என்பதாலும், சதை, குருதி, ஊனீர் ஆகியவற்றை அவன் விழுங்குகிறான் என்பதாலும் அவன் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறான்.(142)

[5] வேறொரு பதிப்பில், “இவ்வுலகில் பிராணிகளுடைய சரீரங்களில் வெவ்வேறு விதமான பத்துரூபங்களோடிருந்து கொண்டு சமமாயிருப்பவரும், புண்யபாப முதலியவற்றால் வெவ்வேறு விதமாயிருக்கும் பிராணிகளிடத்தில் பிராணன் அபானனென்னும் வாயு ரூபமாயிருப்பவரும் இவரே” என்றிருக்கிறது.

மகாதேவன் என்று அழைக்கப்படுபவனும், பினாகைதாரியுமான இந்தத் தேவனையே, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனது எதிரிகளைக் கொன்றபடி உன் தேருக்கு முன்பாகச் செல்லும்போது நீ கண்டிருக்கிறாய்.(143) ஓ! பாவமற்றவனே, சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொல்லப்போவதாக நீ சபதமேற்றதும், முதன்மையான மலைகளின் உச்சியில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவனையே உனது கனவில் கிருஷ்ணன் உனக்குக் காட்டினான்.(144) அந்தச் சிறப்புமிக்கத் தேவனே போரில் உனக்கு முன்பாகச் செல்கிறான். நீ எந்த ஆயுதங்களைக் கொண்டு தானவர்களைக் கொன்றாயோ அவற்றை உனக்குக் கொடுத்தவன் அவனே.(145)

சிறப்பானதும், புகழ்மிக்கதும், வாழ்வை மேம்படுத்துவதும், புனிதமானதும், தேவர்களின் தேவனைப் பெருமைப்படுத்துவதும், வேதங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாடலுமான சதருத்ரியமே இப்போது உனக்கு விளக்கப்பட்டது[6].(146) நான்கு பிரிவுகளைக் கொண்ட இந்தப் பாடலானது {துதியானது}, அனைத்து நோக்கங்களையும் சாதிக்கவல்லதும், புனிதமானதும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பதும், களங்கள் அனைத்தையும் விரட்டத்தகுந்ததும், கவலைகள் அனைத்தையும், அச்சங்கள் அனைத்தையும் கொல்லத்தகுந்ததுமாகும். இதை எப்போதும் கேட்கும் ஒரு மனிதன், தன் எதிரிகள் அனைவரையும் வெல்வதிலும், உயர்ந்த மதிப்பைக் கொண்ட ருத்ரனின் உலகை அடைவதிலும் வெல்வான்.(147,148) சிறந்ததும், மங்கலகரமானதும், சிறப்புமிக்க அந்தத் தேவனின் போர் தொடர்பானதுமான இந்த விவரிப்பைப் படிப்பவனும், அல்லது உரைக்கும்போது கேட்பவனும், அண்டத்தின் அந்தச் சிறப்புமிக்கத் தலைவனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவனும் தேவனான முக்கண்ணன் அவனிடம் கொள்ளும் நிறைவின் விளைவால், தான் விரும்பும் உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் அடைவான்.(149,150) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன்தரப்பில் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} ஆலோசகனாகவும், பாதுகாவலனாகவும் கொண்டிருக்கும் உனக்குத் தோல்வியே கிடையாது. சென்று போரிடுவாயாக” என்றார் வியாசர்.(151)

[6] வேறொரு பதிப்பில், “செல்வத்தைப் பெருக்குவதும், புகழை உண்டுபண்ணுவதும், ஆயுளை விருத்தி பண்ணுவதும், பரிசுத்தமானதும், வேதங்களோடு ஒப்பிடப்பட்டதுமான தேவதேவரான ஈஸ்வரருடைய சதருத்ரியமானது உனக்கு விரித்துரைக்கப்பட்டது” என்றிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசிய அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார்” {என்றான் சஞ்சயன்}[7].(152)

[7] வேறொரு பதிப்பில், இதன் பிறகு "சூத குலத்திற்பிறந்தவனான சஞ்சயன், அரசனுக்கு இவை அனைத்தையும் உரைத்துவிட்டுக் கர்ணனுடைய வதத்தைப் பார்ப்பதற்காகச் சேனை தங்கியிருக்கும் இடத்தைக் குறித்தே சென்றான்" என்று இந்தப் பகுதி முடிகிறது.
---------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 203-ல் உள்ள சுலோகங்கள் : 152

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top