Showing posts with label விராட பர்வம். Show all posts
Showing posts with label விராட பர்வம். Show all posts

Sunday, December 21, 2014

வடதிசை நோக்கி ஓடிய கர்ணன்! - விராட பர்வம் பகுதி 60

Karna fled in a northernly direction! | Virata Parva - Section 60 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 35)


பதிவின் சுருக்கம் : கர்ணனுக்குச் சவால் விட்ட அர்ஜுனன்; அர்ஜுனனை இகழ்ந்த கர்ணன்; ஏற்கனவே கர்ணன் தன்னிடம் இருந்து தப்பி ஓடியதைச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; அர்ஜுனன் கர்ணனின் மார்பைத் துளைத்தது; கர்ணன் போர்க்களத்தை விட்டு வடதிசை நோக்கி ஓடி மீண்டும் புறமுதுகிடுவது...

அர்ஜுனன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, போரில் உனக்குச் சமமான எவனும் இல்லை என்று சபா மண்டபத்தின் மத்தியில் நீ பேசிய இறுமாப்பான பேச்சுக்கு நல்லது செய்யும் நேரம் {இதோ} வந்துவிட்டது. இன்று, ஓ! கர்ணா, என்னிடம் நீ மோதப் போகும் இந்தப் பயங்கர மோதலால், உனது சொந்த பலத்தை நீ அறிந்து கொள்வாய்; இதற்கு மேலும் யாரையும் நீ அவமதிக்கமாட்டாய். நற்பிறப்பைத் துறந்து, நீ பல கொடுஞ்சொற்களைப் பேசியிருக்கிறாய். ஆனால், இப்போது நீ செய்ய முயலும் இது, மிகக் கடுமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, குருக்களின் {கௌரவர்களின்} பார்வையில் என்னிடம் மோதும் நீ, இதற்கு முன் என்னை அவமதித்ததற்கு நல்லது செய்வாயாக. {அந்த வார்த்தைகளை உண்மையென நிரூபிப்பாயாக}.

அம்பறாத்தூணி தீர்ந்த அஸ்வத்தாமன்! - விராட பர்வம் பகுதி 59

Aswatthama’s quiver exhausted! | Virata Parva - Section 59 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 34)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! வலிமைமிக்க மன்னா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அர்ஜுனனுடன் மோதினான். கணைகளை மழையெனப் பொழிந்து, மோதலுக்கு விரைந்து வந்த அவனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, கணைகளின் மேகத்தால் அவனை {அஸ்வத்தாமனை} வரவேற்றான். தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று, அந்த மோதல், பயங்கரமாக இருந்தது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருத்திரனையும் வாசவனையும் {இந்திரனையும்} போலக் கணைகளை அடித்துக் கொண்டனர். கணைகளைக் கொண்டு ஆகாய விரிவின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்து, சூரியனை முழுமையாக மறைத்து, காற்றே நின்று போகும்படி போரிட்டனர்.

Saturday, December 20, 2014

துரோணர் விலக வாய்ப்பளித்த பார்த்தன்! - விராட பர்வம் பகுதி 58

Partha gave a chance for Drona to leave! | Virata Parva - Section 58 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 33)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த அஸ்வத்தாமன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருபர் இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சிவப்புக் குதிரைகள் கொண்ட ஒப்பற்ற துரோணர், ஏற்கனவே நாணில் கணை பொருத்தப்பட்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு, வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனை நோக்கி விரைந்தார். தனது தங்கத் தேரில் முன்னேறி வரும் ஆசானை சிறிது தொலைவில் கண்ட வெற்றி வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், உத்தரனிடம், “ஓ! நண்பா, நீ அருளப்பட்டிருப்பாயாக. சுடர்விடும் நெடும் நெருப்பைப் போன்ற தங்க பலிப்பீடத்தைத் தனது உயர்ந்த பதாகையின் தலைப்பில் கொண்டவரும், {தேரைச்} சுற்றிலும் நிறையக் கொடிகள் கொண்டவரும், அமைதியான இனிய முகமும், பவளம் மற்றும் தாமிர வண்ணமும், உயர்ந்த பயிற்சியும் கொண்ட, மிக அழகான பெரிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வருபவரான துரோணரிடமே நான் போரிட விரும்புகிறேன்.

Friday, December 19, 2014

தேரொடிந்த கிருபர்! - விராட பர்வம் பகுதி 57

Kripa’s car was broken! | Virata Parva - Section 57 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 32)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்...


வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியும் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.

Thursday, December 18, 2014

இந்திரனின் வருகை! - விராட பர்வம் பகுதி 56

Indra came there! | Virata Parva - Section 56 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 31)


பதிவின் சுருக்கம் :கௌரவர்களுக்கு அர்ஜுனனுக்கும் இடையில் நடக்கும் போரைக் காண வந்திருந்த தேவர்களும் இந்திரனும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மழைக்காலத்தில், மென்மையான காற்றின் முன்னிலையில் செல்லும் மேகத்திரள் போல, அந்தக் கடும் வில்லாளிகளின் படைகள் {காலாட்படைகள்} தெரிந்தன. (அந்தக் காலாட்படையின்) அருகில் பயங்கரமான போர்வீரர்களால் நடத்தப்படும் எதிரிகளின் குதிரைகள் {குதிரைப்படைகள்} நின்றிருந்தன. அங்கே, பயங்கர முகம் கொண்டவையும், அழகிய கவசத்தால் ஒளிருபவையும், திறமையான போராளிகளால் நடத்தப்படுபவையும், இரும்பு அங்குசங்களால் தூண்டப்படுபவையுமான யானைகளும் {யானைப்படைகளும்} இருந்தன.

Wednesday, December 17, 2014

பீஷ்மர் எனக்குத் தடையாக முடியும்! - விராட பர்வம் பகுதி 55

Bhishma may be an obstacle to me! | Virata Parva - Section 55 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 30)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : போரில் அர்ஜுனன் செய்த சாகசம்; அர்ஜுனன் உத்தரனுக்கு எதிரிணியின் படைத்தலைவர்களை அறிமுகப்படுத்தியது; உத்தரன் கிருபரை நோக்கித் தேரை நடத்திச் சென்றது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராதையின் மகன் {கர்ணன்} களத்தை விட்டு ஓடியதும், துரியோதனன் தலைமையிலான பிற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் இருந்து பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். துள்ளும் கடலின் கோபத்தைத் தாங்கும் கரையைப் போல, போர்க்களத்தில் வரிசையாக அணிவகுத்து, தன்னை எதிர்த்து விரைந்தோடி வந்த எண்ணிலடங்கா தலைவர்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, {அவர்கள் மீது} கணைகளின் மேகங்களைப் பொழிந்தான். தேர்வீரர்களில் முதன்மையானவனும், வெள்ளைக் குதிரைகளைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, எந்நேரமும் தெய்வீக ஆயுதங்களை அடித்துக் கொண்டே எதிரியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.


விரைவில், சூரியன் தனது கதிர்களால் முழு உலகத்தையும் மூடுவதைப் போல, பார்த்தன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால், வானத்தின் அனைத்து திக்குகளையும் நிறைத்தான். தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் இருந்து போரிட்டவர்கள் மற்றும் கவசம் பூண்டு தரைப்படையில் போரிட்ட வீரர்கள் ஆகியோரில், கூர்மையான அம்புகளால் காயம்படாதவாறு தங்கள் உடலில் இரண்டு விரல் அகலத்தில் எஞ்சிய இடம் கொண்டவர்கள் எவரும் இல்லை. தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இருந்த திறமையாலும், அந்தக் குதிரைகள் பெற்றிருந்த பயிற்சியாலும், உத்தரனனின் திறமையாலும், அவனது {அர்ஜுனனின்} ஆயுதங்கள் சென்ற விதத்தாலும், அவனது பராக்கிரமத்தாலும், இலகுவான கரங்களாலும், அர்ஜுனனை, படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் அண்ட அழிவின் போது, உட்கொள்ளும் சுடர்மிக்க நெருப்பாக மக்கள் கருதத் தொடங்கினர்.

எதிரிகள் மத்தியில் எவராலும், சுடர்விடும் தீ போலப் பெரும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த அர்ஜுனன் மீது தங்கள் கண்களைச் செலுத்த முடியவில்லை. அர்ஜுனனின் கணைகளால் சிதைக்கப்பட்ட எதிரிப்படை தலைவர்கள், மலையின் மார்பில் புதிதாக உதித்திருக்கும் மேகங்கள் சூரியக் கதிர்களைப் பிரதிபலிப்பதைப் போலவும், அசோக மரங்கள் நிறைந்த தோப்பு, கொத்து கொத்தான மலர்களால் பிரகாசிப்பது போலவும் தோன்றினர். உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற படைவீர்கள் இவற்றைப் போலவே இருந்தனர். அல்லது மலர்கள் படிப்படியாகத் தளர்ந்து விழும் அழகிய பூமாலை போல இருந்தனர். அனைத்திலும் வியாபித்துள்ள காற்று, எதிரிப்படை தலைவர்களுடைய கிழிந்த கொடிகளையும், குடைகளையும் தனது சிறகுகளில் தாங்கிச் சென்றது.

மேலும், தங்கள் அணிகளின் மத்தியில் ஏற்பட்ட அழிவைக் கண்டு பயந்த குதிரைகள், பார்த்தனின் அம்புகளால் {தேர்களின்} நுகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்களின் உடைந்த பாகங்களை இழுத்தபடியே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின. காதுகளிலும், விலாப்புறங்களிலும், தந்தங்களிலும், கடைவாயருகிலும், உடலின் முக்கியப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட யானைகள், அந்தப் போர்க்களத்தில் கீழே விழ ஆரம்பித்தன. மேலும், கௌரவர்களைச் சார்ந்த யானைகளின் சடலங்கள் குறுகிய காலத்தில் பரவலாகச் சிதறுண்டதால், அந்தப் பூமியைக் காண பெருந்திரளான கருமேகங்கள் நிறைந்த மேகமூட்டமான வானம் போல இருந்தது. யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட நெருப்பு, உலகத்தில் அழிந்து போகக்கூடிய அசைவன, அசையாதன ஆகிய அனைத்துப் பொருட்களையும் எரிப்பது போல, அந்தப் போர்க்களத்தில் அனைத்து எதிரிகளையும் பார்த்தனும் {அர்ஜுனனும்} எரித்தான். தனது ஆயுதங்களின் சக்தியாலும், தனது வில்லின் நாணொலியாலும், கொடிக்கம்பத்தில் நிலைத்திருக்கும் உயிரினங்களின் இயல்புக்கு மிக்கக் கதறல்களாலும், அந்தக் குரங்கின் பயங்கரமான கர்ஜனையாலும், சங்கொலியின் வெடிப்பாலும், எதிரிகளைப் பலமாக அடிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, துரியோதனனுடைய துருப்பினரின் இதயங்களில் திகிலை உணரச் செய்தான்.

அர்ஜுனன் பார்வைக்கெதிரிலேயே, எதிரி வீரர்கள் ஒவ்வொருவரின் வலிமையும் தூசிக்குச் சமானமாக மாறுவது தெரிந்தது. பாதுகாப்பற்றவர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்யத் துணிய விரும்பாத அர்ஜுனன், திடீரெனத் திரும்பி, தங்கள் இலக்கைக் கூர்முனை கணை மேகங்களால் தாக்குவதற்காகப் பருந்துகளைத் தப்பவிடும் வேடர்களைப் போல அப்படையைப் பின்னால் இருந்து தாக்கினான். அவன் {அர்ஜுனன்} விரைவில், இரத்தம் குடிக்கும் அம்புகளைக் கொத்துக் கொத்தாக ஆகாயம் முழுவதும் நிரப்பினான். சக்தி மிக்கச் சூரியனின் (முடிவிலியான} கதிர்கள் சிறு பாத்திரத்திற்குள் நுழைந்து, அதை முழுவதுமாக நிரப்புவது போல, அர்ஜுனனின் எண்ணற்ற கணைகள் விரிவடைவதற்கு ஆகாயத்தில் இடம் இல்லாமல் போயிற்று.

அருகில் இருக்கும்போது ஒரே ஒரு முறை மட்டுமே எதிரிகளால் அர்ஜுனனின் தேரைக் காண முடிந்தது. ஏனெனில், அதன் பிறகு {அப்படிப் பார்த்த} உடனேயே அவர்கள் தங்களுடைய குதிரைகளுடன் சேர்த்து அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர் {அடுத்த நொடியிலேயே கொல்லப்பட்டனர்}. அவனது கணைகள் எப்படி எதிரிகளின் உடலைத் தடங்கலற்றுக் கடந்து சென்றனவோ, அதே போல, அவனது தேரும் எதிரி தலைவர்கள் மத்தியில் தடங்கலற்று கடந்து சென்றது. உண்மையில், பெருங்கடலில் விளையாடும் ஆயிரம் தலை கொண்ட வாசுகியைப் போல, அவன் எதிரி துருப்புகளைப் பெரும் வன்முடையுடன் தூக்கியெறிந்து கலங்கடிக்கத் தொடங்கினான். இடையறாது கிரீடி {அர்ஜுனன்} தனது கணைகளை அடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வில்லின் நாணொலி, மற்ற உயிரினங்களால் ஏற்கனவே கேட்கப்படாத அளவுக்கு அனைத்து ஒலிகளையும் விஞ்சி இருந்தது. சூரியக் கதிர்களால் பளிச்சென ஒளிர்ந்த கருமேகங்கள் போல, களத்தை நிரப்பிய யானைக்கூட்டம், தங்கள் உடல்கள் (கொழுந்துவிட்டெரியும்) கணைகளால் துளைக்கப்பட்டு ஒளிவீசின. அனைத்துத் திசைகளிலும் உலவி, வலதிலும் {வலது கையாலும்}, இடதிலும் {இடது கையாலும்} (கணைகளை) அடித்த அர்ஜுனனின் வில் இழுக்கப்பட்டு எப்போதும் சரியான வட்டமாகத் தெரிந்தது. அழகற்ற எதன் மீதும் கண்கள் நிலைக்காததைப் போல, அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} கணைகள் இலக்கைத் தவிர வேறு எதையும் அடையவில்லை. யானைக்கூட்டத்தின் நடையால் பாதை உண்டாவது போல, அந்தக் கிரீடியின் {அர்ஜுனனின்} தேரால் அங்குப் பாதை உண்டாக்கப்பட்டது. பார்த்தனால் அடிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்த எதிரி வீரர்கள், “பார்த்தனின் வெற்றியை விரும்பும் இந்திரனே இறவாதவர்கள் {தேவர்கள்} அனைவரையும் அழைத்து வந்து நம்மைக் கொன்று கொண்டிருக்கிறானோ” என்று எண்ணினார்கள்.

சுற்றிலும் பயங்கரப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த விஜயனை {அர்ஜுனனை} கண்ட அவர்கள், அனைத்து உயிரினங்களையும் கொல்வதற்காக மரணமே அர்ஜுனனின் உருவில் வந்திருப்பதாகவும் கருதினார்கள். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகள், பார்த்தனின் மோதல்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலும், பார்த்தனின் சாதனையை விவரிக்கும் வண்ணமும் சிதைக்கப்பட்டு, சிதறப்பட்டு இருந்தன. {பருவ காலத்தில்} இலையுதிர்க்கும் மூலிகைச் செடிகளின் மேல்புறத்தைத் துண்டிப்பதைப் போல, அவன் {அர்ஜுனன்} பகைவரின் தலைகளை வெட்டிச் சாய்த்தான். அர்ஜுனனால் ஏற்பட்ட பயங்கரத்தைக் கண்ட குருக்களின் சக்தி அனைத்தும் தொலைந்து போயிற்று. அர்ஜுனனின் எதிரிகள் நிரம்பிய காடு, அர்ஜுனன் என்ற புயலால் சிதைக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது போல, ஊதா நிற சுரப்பு நீரால் {purple secretions} பூமியைச் சிவப்பாக்கியது. குருதி கலந்த புழுதி காற்றால் உயர்த்தப்பட்டு, சூரியனின் கதிர்களையே கூட, மேலும் சிவப்பாக்கியது. விரைவில் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட வானம் மாலைவேளை வந்துவிட்டதைப் போல அதிகச் சிவப்பாக இருந்தது. உண்மையில், சூரியன் கூட அஸ்தமித்ததும் தனது கதிர்களை நிறுத்திவிடுவான், ஆனால் பாண்டுவின் மகன் தனது கணையடிப்பை நிறுத்தினானில்லை. எதிரியின் பெரும் வில்லாளிகள் அனைவரும் பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டிருந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத சக்தி கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது அனைத்து தெய்வீக ஆயுதங்களாலும் அவர்களை மூழ்கடித்தான்.

பிறகு அர்ஜுனன், துரோணர் மீது கூர்முனை கொண்ட எழுபத்துமூன்று {73} அம்புகளை அடித்தான். துஸ்ஸஹன் மீது பத்தும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது எட்டும், துச்சாசனன் மீது பனிரெண்டும், சரத்வானின் மகன் கிருபர் மீது மூன்றும் அடித்தான். பிறகு, அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரையும், மன்னன் துரியோதனனையும் நூறு அம்புகளால் துளைத்தான். கடைசியாக, பராசத்தைக் கொண்டு கர்ணனுடைய காதைத் துளைத்தான். அனைத்து ஆயுதங்களிலும் திறமைபெற்ற பெரும் வில்லாளியான கர்ணன் அப்படித் துளைக்கப்பட்ட போது, அவனது குதிரைகளும், தேரும், தேரோட்டியும் என அனைத்தும் அழிக்கப்பட்டன. அவனுக்கு {கர்ணனுக்கு} ஆதரவாக இருந்த துருப்புகள் உடைய ஆரம்பித்தன. அப்படி அந்த வீரர்கள் உடைவதைதக் கண்ட விராடன் மகன் {உத்தரன்}, பார்த்தனின் நோக்கத்தை அறிந்து அவர்களுக்கு வழி கொடுத்தபடியே அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்டு, இந்த அழகிய தேரில் நின்று கொண்டிருக்கும் உம்மை, நான் எந்தப் பிரிவுக்கு {எந்தப் பிரிவின் பக்கம்} அழைத்துச் செல்லட்டும்? நீர் உத்தரவிட்டால், நான் உடனே அங்கு அழைத்துச் செல்வேன்” என்றான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, புலித்தோலைக் கவசமாக அணிந்து, சிவப்பு நிற குதிரைகளால் இழுக்கப்படும் நீலக்கொடி பொருந்திய தேரில் இருக்கும் மங்கலவீரரான கிருபர் அதோ இருக்கிறார். கிருபரின் படைப்பிரிவின் முகப்பு அதோ தெரிகிறது. அங்கே என்னை அழைத்துச் செல். அந்தப் பெரும் வில்லாளிக்கு {கிருபருக்கு}, நான் வில்வித்தையில் எனது வேகமான கரங்களின் திறனைக் காட்ட விரும்புகிறேன்.

தனது கொடியில் தங்க வேலைப்பாடு கொண்ட நேர்த்தியான நீர்க்குடத்தைக் கொண்டிருக்கும் அந்த வீரரே அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையானவரான ஆசான் துரோணராவார். ஆயுதம் தாங்கும் அனைவரைக்காட்டிலும், நான் அவர் மீது எப்போதும் மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். எனவே, நீ உற்சாகமாக அவரை {துரோணரை} வலம் வா. அங்கே நமது சிரம் தாழட்டும். அதுவே நிலைத்த அறமாகும். எனது உடலை துரோணர் முதலில் தாக்கிய பிறகே நான் அவரைத் தாக்குவேன். ஏனெனில், அப்போதுதான் அதற்காக அவரால் சீற்றங்கொள்ள இயலாது.

அதோ, அங்கே துரோணருக்கு அருகில், வில்லைக் கொடியில் தாங்கியிருக்கும் வீரர், ஆசானின் {துரோணரின்} மகனான பெரும் தேர்வீரர் அஸ்வத்தாமன் ஆவார். ஆயுதம் தாங்கும் அனைவரிலும் நான் பெரிதும் மதிப்பவர்களில் அவரும் {அஸ்வத்தாமரும்} ஒருவராவார். எனவே, நீ அவரது தேர் அருகே செல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுத்துவாயாக.

அதோ, தங்கக்கவசம் பூண்டு, {நான்காகப் பிரிக்கப்பட்ட படையின்} மூன்றாவது பிரிவான மிகத் திறமையான துருப்பால் சூழப்பட்டு, தங்கத்தரையில் இருக்கும் யானையைத் தனது கொடியில் கொண்டிருப்பவன், திருதராஷ்டிரரின் மகனான துரியோதனனாவான். ஓ! வீரா {உத்தரா}, எதிரிப்படையின் தேர்களைக் கலங்கடிக்கும் உனது தேரை அவனுக்கு முன்பாக நடத்து. இம்மன்னன் {துரியோதனன்} போர்க்களத்தில் வீழ்த்தப்படக் கடினமானவனும், அனைத்து எதிரிகளையும் கலங்கடிக்க வல்லவனும் ஆவான். கரங்களின் வேகத்தில் இவனே துரோணரின் சீடர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். நான் விற்கலையில் மேன்மையான வேகத்தைப் போர்க்களத்தில் அவனுக்குக் காட்டுவேன்.

அதோ, யானைகளைக் கட்டும் தடித்த கயிறைத் தனது கொடியில் தாங்கியிருப்பவன் விகர்த்தனன் மகனான கர்ணனாவான். அவனை நீ ஏற்கனவே அறிவாய். ராதையின் அந்தத் தீய மகனருகே {கர்ணனருகே} நீ செல்லும் போது, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் என்னிடம் எப்போதும் மோதலுக்குச் சவால் விடுவான்.

அதோ, (நடுவில்) சூரியனையும், ஐந்து நட்சத்திரங்களையும் தனது நீல நிறக் கொடியில் கொண்டவரும், பெரும் சக்தியுடன் தனது தேரில் நிற்பவரும், கையில் பெரும் வில்லுடன் இருப்பவரும், அற்புதமான கையுறைகளை அணிந்திருப்பவரும், சுத்தமான வெள்ளை நிறத்திலான குடையைத் தனது தலைக்கு மேலே கொண்டவரும், பெருந்திரளான கருமேகங்களுக்கு முன்னிலையில் இருக்கும் சூரியனைப் போல, பல்வேறு கொடிகளும் பதாகைகளும் தாங்கி வரிசையாக நிற்கும் பெருந்தேர்களுக்குத் தலைமையாக நிற்பவரும், சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் பிரகாசமிக்கத் தங்க கவசத்தை அணிந்தவரும். தலையில் அணிந்திருக்கும் தங்கக் கவசத்தால் எனது இதயத்தை அச்சமூட்டுபவரும், எங்கள் அனைவருக்கும் பாட்டனுமான சந்தனுவின் மகன் பீஷ்மர் அவரே ஆவார்.

துரியோதனனால், அரசருக்குரிய பிரகாசத்துடன் தான் உற்சாகமூட்டப்படுவதால், அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} அவர் {பீஷ்மர்} பாசம் கொண்டு மிகுந்த பாகுபாட்டுடன்,  இருக்கிறார். அவரை நாம் கடைசியாக அணுகுவோமாக. ஏனெனில், இப்போது கூட அவரால் {பீஷ்மரால்} எனக்குத் தடையாக இருக்க முடியும். என்னோடு {அவர்} போரிடும்போது, குதிரைகளை நீ கவனமாகச் செலுத்துவாயாக” என்றான் {அர்ஜுனன்}. அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் அவசரத்துடன், அந்தச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேரை, போரிட ஆவலாக நின்று கொண்டிருந்த கிருபரிடம் நடத்திச் சென்றான்.”


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, December 16, 2014

புறமுதுகிட்டான் கர்ணன்! - விராட பர்வம் பகுதி 54

Karna quickly took a flight! | Virata Parva - Section 54 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 29)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தனது தேரை கர்ணனிடம் கொண்டு செல்லுமாறு உத்தரனைப் பணித்தது; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எதிரிக் கூட்டத்தைச் சீர்குலைத்து, பசுக்களை மீட்ட பிறகு, மீண்டும் போரிட விரும்பிய அந்த வில்லாளிகளில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரியோதனனை நோக்கி முன்னேறினான். மத்ஸ்யர்களின் நகரத்தை நோக்கி பசுக்கள் முரட்டுத்தனமாகத் திரும்புவதைக் கண்ட குரு வீரர்களில் முதன்மையானவர்கள் {கௌரவர்கள்}, கிரீடி {Kiritin - அர்ஜுனன்} ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டதாகவே கருதினார்கள். பிறகு, துரியோதனனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அர்ஜுனன் மீது, அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் தீடிரெனப் பாய்ந்தனர்.


எண்ணற்ற கொடிகள் பறக்க, அவர்களது எண்ணற்ற பிரிவுகள் போருக்காக வரிசையாக நிற்பதைக் கண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கக் கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த வெள்ளைக் குதிரைகளை, அவற்றால் முடிந்த அளவு சிறப்பாக, இச்சாலையின் வழியே செலுத்துவாயாக. நான் அந்தக் குரு சிங்கங்களின் கூட்டத்தை அணுகும் வகையில் நன்றாக முயற்சி செய். வேறு யானையுடன் மோத விரும்பும் யானை போல அந்தத் தீய ஆன்மாக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, என்னுடன் போரிட ஆவல் கொண்டிருக்கிறான். ஓ! இளவரசே {உத்தரா}, துரியோதனனின் ஆதரவின் கீழ், கர்வத்துடன் வாழும் அவனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்.

இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கக்கவசம் பூண்டிருந்தவையும், காற்றின் வேகம் கொண்டவையுமான அந்தப் பெரிய குதிரைகளைச் செலுத்தி, போர்க்களத்தின் மத்தியில் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} அழைத்துச் சென்றான். இதைக் கண்ட சித்திரசேனன், சங்கிராமஜித்தன் {கர்ணனின் தம்பி}, சத்ருசஹன், மற்றும் ஜயன் ஆகிய தேர்வீரர்கள் கர்ணனுக்கு உதவ விரும்பி, முன்னேறி வந்து கொண்டிருந்த பாரதகுல வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து, தங்கள் நீண்ட கணைகளுடன் விரைந்தார்கள். பிறகு, கோபத்தால் எரிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தனது வில்லில் இருந்து நெருப்பு போன்ற கணைகளை அடித்தான். அங்கே கூடியிருந்த குருக்களில் {கௌரவர்களில்} காளையருக்குச் சொந்தமான தேர்வரிசை காடு எரிவது போல எரிந்தது.

பிறகு, போர் மிகவும் உக்கிரமடையத் தொடங்கியது. பீமனுக்குத் தம்பியும், தேர்வீர்களில் முதன்மையானவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} மீது, தனது தடித்த நீண்ட கணைகளைப் பொழிந்து கொண்டேயிருந்த குரு வீரனான விகர்ணன், தனது தேரில் அவனை {அர்ஜுனனை} அணுகினான். கடினமான நாணால் கட்டப்பட்டிருந்த விகர்ணனின் வில்லை அறுத்த அர்ஜுனன், பிறகு, அவனது கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான். தனது கொடிக்கம்பம் அறுபட்டதைக் கண்ட விகர்ணன், {போர்க்களத்தை விட்டு} விரைவாக ஓடினான்.

விகர்ணன் ஓடிப்போனதும், சினத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத சத்துருந்தபன், எதிரிகளைத் தடுப்பவனும், மனித சாதனைக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்பவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அடிக்கத் தொங்கினான். குரு {கௌரவப்} படை வரிசைக்கு மத்தியில் மூழ்கியவன் போல இருந்த அர்ஜுனன், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சத்ருந்தபனால் துளைக்கப்பட்டான். பிறகு, அவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அவனை {சத்ருந்தபனை} ஐந்து கணையால் தாக்கி, அவனது தேரோட்டியை பத்து கணைகளால் தாக்கினான். பிளக்கக் கடினமான தடித்த கவசம் பூண்டிருந்த சத்ருந்தபனை அந்தப் பாரதக் குலக் காளை {அர்ஜுனன்} அடித்த கணை துளைத்தது. காற்றால் கிழிக்கப்பட்டு மலைமேல் இருந்து விழும் மரம் போல. அந்தப் போர்க்களத்தில் அவன் {சத்ருந்தபன்} இறந்து விழுந்தான்.

மனிதர்களில் துணிச்சல் மிக்கவனால் {அர்ஜுனனால்}, போரில் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் வீரக்காளைகள் {கௌரவர்கள்}, அண்ட அழிவின் போது வீசும் கடும் காற்றால் அசைக்கப்பட்ட பெரும் கானகம் போல, தடுமாற்றத்துடன் நடுங்க ஆரம்பித்தனர். வாசவனின் {இந்திரனின்} மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் தாக்கப்பட்டவர்களும், வாசவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்டவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கரிய கவசம் பூண்டவர்களும், முழுதாய் வளர்ந்த இமாலய யானைகளைப் போன்றவர்களும், பெரும் கொடையாளிகளுமான, அந்த மனிதர்களில் நன்கு உடுத்திய வீரர்கள், {அர்ஜுனனிடம்} தோல்வியுற்று, உயிரிழந்து, தங்கள் {உடலின்} நீளத்தால் தரையை அளக்க ஆரம்பித்தனர்.

கோடைகாலத்தின் நெருக்கத்தில் {முதுவேனிற்காலத்தில்} பொங்கியெழும் தீ, கானகத்தை எரிப்பது போலப் பொங்கியெழுந்த, அந்த மனிதர்களில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனது எதிரிகளை அனைத்துப் புறங்களிலும் கொன்று கொண்டிருந்தான். மேகக்கூட்டங்களைக் கலைக்கும் காற்று, வசந்த காலத்தில், சருகுகளைக் கீழே உதிர்ப்பது போல, தேர்வீரர்களில் முதன்மையானவனான {அதிரதனான} கிரீடி {அர்ஜுனன்}, தனது எதிரிகள் அனைவரையும் உதிர்த்துக் கொண்டு, போர்க்களத்தில் உலவினான்.

கிரீடத்தைத் தரித்தவனான பெருந்தீரமுடையவன் {அர்ஜுனன்}, விரைவில், விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தம்பியான சங்கிராமஜித்தின் தேரில் பூட்டப்பட்டிருந்த சிவப்பு குதிரைகளைக் கொன்றான். பிறகு, ஒரு பிறை வடிவக் கணையால், தனது எதிரியின் {சங்கிராமஜித்தினுடைய} தலையை அறுத்தான். தனது தம்பி கொல்லப்பட்டதும், சூத சாதியைச் சேர்ந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தனது பராக்கிரமம் அனைத்தையும் திரட்டி, தந்தங்களை நீட்டி வரும் பெரிய யானையைப் போலவோ, பெருங்காளையை எதிர்த்து வரும் புலியைப் போலவோ அர்ஜுனனை நோக்கி விரைந்தான்.

பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பனிரெண்டு கணைகளால் அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்} துளைத்தான். அவனது {அர்ஜுனனது} குதிரைகளின் உடம்பில் அனைத்துப் பகுதிகளிலும் அடித்தான். {ஒரு கணையால்} விராடன் மகனைக் {உத்தரனை} அவனது கையில் அடித்தான். தன்னை நோக்கித் திடீரென முன்னேறி வரும் விகர்த்தனன் மகனை {கர்ணனை} நோக்கி அவசரமாக விரைந்த கிரீடி {அர்ஜுனன்}, பலவண்ணத் தோகை கொண்ட கருடன், கீழிருக்கும் பாம்பின் மீது பாய்வது போல, அவனைக் {கர்ணனைக்} கடுமையாகத் தாக்கினான். அவ்வீரர்கள் இருவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாக இருந்தனர்; இருவரும் பெரும் சக்தியுடன் இருந்தனர்; இருவரும் எதிரிகளைக் கொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தனர். அவர்களுக்குள் நடைபெற்ற மோதலைச் சாட்சியாகக் காண, ஆவலுடன் வந்த கௌரவர்கள், வெறும் பார்வையாளர்களாகத் தொலைவிலேயே நின்றுவிட்டனர்.

குற்றவாளியான கர்ணனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் வெகுண்டெழுந்தாலும், அவன் {கர்ணன்} கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்து, விரைவில் எண்ணற்ற கணைகளைப் பயங்கர மழையாகப் பொழிந்து, அவனையும் {கர்ணனையும்}, அவனது குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் {கணை மழையால்} மறைத்தான். பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட வீரர்கள், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவை, கிரீடியால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்டு, அவனது கணைகளால் மறைக்கப்பட்டு, தங்கள் படைகள் சிதறிப் போனதால் உடைந்து போய், துயரத்தில் பெருத்த ஓலமிடத் தொடங்கினார்கள்.

எனினும், அர்ஜுனன் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணைகளைத் தனது எண்ணற்ற கணைகளால் எதிர்கொண்ட ஒப்பற்றவனும், வீரனுமான கர்ணன், விரைவில், தனது அம்புகளையும் வில்லையும் கொண்டு {அவற்றை} வெடிக்கச் செய்து, சுடர்மிகும் நெருப்பெனக் காட்சியில் தோன்றினான். அப்போது, வில்லின் நாண் கையுறைகளில் பட்டதால் ஏற்பட்ட நாணொலியால், அச்சூழலை அந்த விகர்த்தனன் மகன் {கர்ணனை} நிரப்பினான். அவனைப் {கர்ணனைப்} பாராட்டும் வகையில் கௌரவர்கள் எழுப்பிய கரவொலிகளாலும் {கை தட்டல்களாலும்}, சங்கொலிகளாலும், எக்காளம் மற்றும் பேரிகைகளாலும் அங்கே பெருத்தவொலி எழுந்தது.

காண்டீவத்தின் நாணொலியால் காற்றை நிரப்பிய கிரீடியையும் {அர்ஜுனனையும்}, அவனது கொடிக்கம்பத்துக்கு மேல் இருந்த கொடியில் பயங்கரமாகக் கதறிக் கொண்டிருக்கும் உயர்ந்த வாலுடைய குரங்கையும், {அக்கொடியிலிருக்கும்} பயங்கரமான உயிரினங்களையும் கண்ட கர்ணன், உரத்த கர்ஜனையை எழுப்பினான். குதிரைகளோடு இருந்த விகர்த்தனன் மகனைத் {கர்ணனைத்} தனது கணைகளால் துன்புறுத்திய கிரீடி, தனது பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், கிருபர் ஆகியோர் மீது பார்வையைச் செலுத்தியபடியே, துரிதமான கணை மழையை அவன் {கர்ணன்} மீது விரைந்து பொழிந்தான். பதிலுக்கு, விகர்த்தனன் மகனும் {கர்ணனும்}, கணைகளின் அடர்த்தியான மழையைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது, மழைபொருந்திய மேகம் போலப் பொழிந்தான்.

கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அர்ஜுனன், கூரிய முனை கொண்ட தனது கணைகளால் கர்ணனை மூடினான். கூரிய முனை கொண்ட கணைகளின் மேகங்களைத் தங்கள் தேர்களில் இருந்து உற்பத்தி செய்த அந்த இரு வீரர்களும் எண்ணற்ற கணைகளையும், ஆயுதங்களையும் கொண்டு மோதிய போது, அவர்கள், மேகங்களால் மூடப்பட்ட சூரியனும் சந்திரனும் போலப் பார்வையாளர்களுக்குத் தோன்றினார்கள். எதிரியைப் பார்க்க முடியாதவனும், இலகுவான கரங்கள் கொண்டவனுமான கர்ணன், கிரீடம் அணிந்த அந்த வீரனின் {அர்ஜுனனின்} நான்கு குதிரைகளைத் தனது கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு அவனது தேரோட்டியை {உத்தரனை} மூன்று கணைகளாலும், அவனது கொடிக்கம்பத்தை மூன்றாலும் அடித்தான்.

இப்படி அடிக்கப்பட்டவனும், போரில் எதிரிகளை அடிப்பவனும், குரு குலத்தின் காளையுமான காண்டீவத்தைத் தாங்கும் ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துயில் நீத்த சிங்கமென எழுந்து, நேராகச் செல்லும் கணைகளால் கர்ணனைக் கடுமையாகத் தாக்கினான். (கர்ணனால் அடிக்கப்பட்ட) கணைமழையால் துன்புற்றவனும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் சாதிப்பவனுமான அந்த ஒப்பற்றவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். பல்வேறு உலகங்களைத் தனது கதிர்களால் மூடும் சூரியனைப் போல, அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கணைகளால் கர்ணனின் தேரை மறைத்தான். யானையால் தாக்கப்பட்ட சிங்கம் போன்ற அர்ஜுனன், தனது அம்பறாத்தூணியில் இருந்து சில கூரிய பிறைவடிவக் கணைகளை எடுத்து, தனது வில்லைக் காதுவரை இழுத்து, அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலெங்கும் {அந்தப் பிறைவடிவ அம்புகளை} அடித்தான்.

அந்தப்போரில், வஜ்ர வேகம் கொண்ட தனது கூரிய கணைகளால், கர்ணனின் கரங்கள், தொடைகள், தலை, நெற்றி, கழுத்து மற்றும் {அவனது} உடலின் பிற முக்கிய உறுப்புகள் ஆகியவற்றை, அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடித்தான். பாண்டுவின் மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, போர்க்களத்தின் முன்னணியை விட்டு அகன்று, ஒரு யானையால் வீழ்த்தப்பட்ட மற்றொரு யானை போல {அந்தப் போர்க்களத்தைவிட்டு} விரைந்து ஓட்டமெடுத்தான்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, December 14, 2014

துரோணரை வணங்கிய அர்ஜுனன்! - விராட பர்வம் பகுதி 53

Arjuna saluted Drona! | Virata Parva - Section 53 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 28)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : உத்தரனுக்குத் துரோணரையும், பிற கௌரவத் தலைவர்களையும் அர்ஜுனன் காட்டியது; அம்புகள் இரண்டை துரோணரின் பாதத்தில் விழச் செய்து, அர்ஜுனன் துரோணரை வணங்கியது; அங்கே துரியோதனன் இல்லாததைக் கண்டு உத்தரனிடம் தேரைத் திருப்பச் சொன்னது; அர்ஜுனனின் நோக்கத்தை அறிந்த கிருபர் அவனைப் பக்கவாட்டில் தாக்கலாம் என்றது; அர்ஜுனனின் சரமாரி...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, வரிசைப்படி தங்கள் நிலைகளில் கௌரவர்கள் நின்ற பிறகு, அர்ஜுனன் தனது தேர் சடசடப்பின் எதிரொலி காற்றில் நிரம்பும் வகையில் அவர்களை நோக்கி விரைந்து வந்தான். குருக்கள் {கௌரவர்கள்} அவனது கொடியைக் கண்டனர்; தேர் சடசடப்பின் எதிரொலியையும் நீட்டிவிரிக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். இவை யாவையும் கவனித்து, அந்தப் பெரும் தேர்வீரனான காண்டீவந்தாங்கியைக் {அர்ஜுனனைக்} கண்ட துரோணர், “தூரத்தில் ஒளிர்ந்து வருவது பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடியாகும். இஃது அவனது தேரின் ஒலி, பயங்கரமாகக் கர்ஜனை செய்வது {அவனது கொடியிலிருக்கும்} அந்தக் குரங்காகும். உண்மையில் அந்தக் குரங்கு நமது துருப்புகளைப் பயத்தில் பீடிக்கச் செய்கிறது. இடியொலி போல நாணொலியெழுப்பிவரும் விற்களில் சிறந்த வில்லான காண்டீவத்தை இழுக்கும் தேர்வீர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} அந்த அற்புதமான தேரில்தான் இருக்கிறான்.


எனது பாதங்களில் வந்து விழும் இவ்விரு கணைகளை இதோ பாருங்கள். மற்றும் இரண்டு கணைகள் வெறுமனே எனது காதுகளைத் தொட்டுச் செல்கின்றன. வனவாச காலத்தை நிறைவு செய்து, பல அற்புத சாதனைகளை அடைந்திருக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வணங்கி, எனது காதுகளில் மெதுவாகப் பேசுகிறான் [1]. ஞானம் கொண்டவனும், உறவினர்களால் விரும்பப்படுபவனும், நீண்ட காலம் கழித்து நம்மால் பார்க்கப்படுபவனும் பாண்டுவின் மகனுமான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உண்மையில் அழகாலும், அருளாலும் சுடர்விடுகிறான். தேர், கணைகள், கையுறைகள், அம்பறாத்தூணி, சங்கு, கொடி, கவசம், கிரீடம், கூன்வாள், வில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிருதையின் மகன் {son of Pritha - குந்தியின் மகன் அர்ஜுனன்}, வேள்விக்கரண்டிகள் சூழ, தெளிந்த நெய்யை உண்ணும் (ஹோம) நெருப்பு போலச் சுடர்விட்டு ஒளிர்கிறான்.” என்றார் {துரோணர்}.

[1] இம்முறைக்கு அபிவாதனம் என்று சொல்வார்கள். பெயர் முதலியன கூறி பெரியோரை வணங்கும் முறை இஃது. இதையே இங்கு அர்ஜுனன் செய்கிறான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “போருக்குத் தயாராக இருக்கும் குருக்களை {கௌரவர்களைக்} கண்ட அர்ஜுனன், மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} அச்சூழ்நிலைக்கு ஏற்ற சொற்களில், “ஓ! தேரோட்டி {உத்தரா}, எனது கணைகள் எதிரியைச் சென்றடையும் தூரத்தில் குதிரைகளை நிறுத்து. அதேவேளையில், இந்தப் படையின் மத்தியில் அந்தக் குருகுலத்தின் இழிந்த பாவி {துரியோதனன்} எங்கிருக்கிறான் என்பதை நான் காணும்படி செய். இவர்கள் அனைவரையும் கருத்தில் கொள்ளாமல், அந்த இளவரசர்களில் வீணனைத் {துரியோதனனைத்} தனித்திருக்கச் செய்து, அவன் தலையில் விழுவேன். அந்தப் பாவியை {துரியோதனனை} வீழ்த்திவிட்டால், தாங்கள் வீழ்ந்துவிட்டதாகவே பிறர் கருதுவார்கள்.

துரோணர் அதோ நிற்கிறார், அவருக்கு அடுத்து அவரது மகன் {அஸ்வத்தாமன்} நிற்கிறார். அங்கே பெரும் வில்லாளிகளான பீஷ்மர், கிருபர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருக்கின்றனர். எனினும், நான் மன்னனைக் {துரியோதனனைக்} காணவில்லை. தனது உயிரைக் காத்துக்கொள்ள அவன் {துரியோதனன்}, தெற்கு சாலையின் வழியே, கவர்ந்த பசுக்களை அழைத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று சந்தேகிக்கிறேன். இந்தத் தேர்வீரர்களின் வரிசையைத் தவிர்த்து, சுயோதனன் {Suyodhana _ துரியோதனன்} இருக்கும் இடத்திற்குச் செல். போர் பலனற்றதாகிவிடும் என்பதால், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அங்கே அவனிடம் போரிட்டு, அவனை வீழ்த்திய பிறகு, பசுக்களை அழைத்துக் கொண்டு திரும்பி வரலாம்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட விராடனனின் மகன் {உத்தரன்}, சற்று முயன்று குதிரைகளை நிறுத்தி, குரு குல காளையர் இருக்கும் இடத்தில் இருந்து கடிவாளத்தை ஓர் இழு இழுத்து, அவற்றைத் துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான். அப்படி அர்ஜுனன் அந்தப் படையின் அடர்த்தியான வரிசையைத் தவிர்த்து விட்டுச் சென்ற போது, அவனது நோக்கத்தை அறிந்த கிருபர், தனது தோழர்களிடம், “பீபத்சு {அர்ஜுனன்}, மன்னனைத் {துரியோதனனைத்} தவரித்து வேறு யாரிடமும் நிற்க விரும்பமாட்டான். முன்னேறிச் செல்லும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} பக்கவாட்டுப் பகுதியை நாம் தாக்குவோம். கோபத்தால் எரிந்து கொண்டு, எவர் துணையும் அற்று வரும் அவனிடம்{அர்ஜுனனிடம்} ஆயிரம் கண் தெய்வத்தையோ {இந்திரனையோ} அல்லது தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு யாரும் {தனியாக} மோத முடியாது. பார்த்தன் {அர்ஜுனன்} என்ற பெருங்கடலில் வீழும் படகைப் போலத் துரியோதனன் மூழ்கிவிட்டால் இந்தப் பசுக்களாலோ, இந்த அபரிமிதமான செல்வத்தாலோ நமக்கு என்ன பயன்?” என்றார் {கிருபர்}.

அதேவேளையில், அந்தக் குறிப்பிட்ட படைப்பிரிவை நோக்கி முன்னேறிய பீபத்சு {அர்ஜுனன்}, தனது பெயரை விரைந்து அறிவித்துக் கொண்டு, வெட்டுக்கிளிகள் போலத் தடித்திருந்த அவனது அம்புகளால் அத்துருப்புகளை மூடினான். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளால் மூடப்பட்ட எதிரி வீரர்களால் எதையும் காணமுடியவில்லை. பூமியும், வானமும் கூட அதனால் {அம்புகளால்} மறைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. போருக்குத் தயாராக இருந்த வீரர்கள் குழம்பிப் போனதால் யாராலும் களத்தை விட்டு ஓடிப்போகவும் முடியவில்லை. பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் இலகுத்தன்மையைக் கண்ட அவர்கள் {கௌரவப் படையினர்} அனைவரும் மனதுக்குள் {அச்செயலைப்} பாராட்டினார்கள்.

பிறகு அர்ஜுனன், எதிரிகளை எப்போதுமே மயிர்ச்சிலிர்க்கச்செய்யும் தனது சங்கை எடுத்து ஊதினான். விற்களில் சிறந்த தனது வில்லில் நாணொலி எழுப்பி, தனது கொடியில் இருந்து உயிரினங்களை மேலும் பயங்கரமாகக் கர்ஜிக்கச் செய்தான். அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும், கொடியில் இருந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் கர்ஜனையாலும், பூமியே நடுங்கத் தொடங்கியது. பிறகு தெற்கு சாலையில் சென்று கொண்டிருந்த பசுக்கள் உயர்ந்த தங்கள் வால்களை அசைத்து, ஒன்றாக இறங்கித் திரும்பின” என்றார் {வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


நல்லதோ அல்லதோ விரைந்து செய்! - விராட பர்வம் பகுதி 52

Good or not, do it fast! | Virata Parva - Section 52 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 27)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : வனவாசத்தின் குறித்த காலம் சரியாக முடிந்தது என்று பீஷ்மர் உரைப்பது; பாண்டவர்களின் பெருமையைச் சொல்வது; நல்லதோ அல்லதோ அதை விரைந்து செய்யுமாறு துரியோதனனை பீஷ்மர் பணித்தது; பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன் என்று துரியோதனன் சொல்வது; பீஷ்மர் கூறிய ஆலோசனை; பீஷ்மர் படையை அணிவகுக்கத் தொடங்கியது...

பீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் [2] சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.

[1] பக்ஷங்கள் = அமாவாசைக்குப் பிந்தைய சுக்லபக்ஷம், பவுர்ணமிக்குப் பிந்தைய கிருஷ்ணபக்ஷம் ஆகிய இரண்டு அரைமாதங்களும். அதாவது, சொக்கு ஒளிப்பக்கம் (bright fortnight), கருத்த ஒளிப்பக்கம் (dark fortnight) என்ற நிலவின் இருவகையான ஒளிப் பக்கம்.

[2] பழங்காலத்தில், பாரதத்தில் நேரம் கணிக்கப்பட்ட முறையை அறிய http://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time என்ற வலைப்பக்கத்திற்கும் செல்லவும்.

இதை உறுதிப்பட அறிந்ததால்தான் பீபத்சு {Vibhatsu_அர்ஜுனன்} இங்கே தோன்றியிருக்கிறான். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உயர் ஆன்மா கொண்டவர்களும் {மகாத்மாக்களும்}, சாத்திரங்களின் பொருள் அறிந்தவர்களும் ஆவார்கள். யுதிஷ்டிரனைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட அவர்கள் அறத்தில் இருந்து எப்படி விலகுவார்கள்? குந்தியின் மகன்கள் எப்போதும் சலனமடைய {மோகம் கொள்ள} மாட்டார்கள். அரிதான சாதனையை அவர்கள் அடைந்துவிட்டார்கள். நியாயமற்ற முறையில் தங்கள் நாட்டை அடைய வேண்டும் என்று நாட்டங்கொண்டிருந்தால், அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அறத்தின்கண் கட்டுப்பட்டு, க்ஷத்திரிய வகைக்குரிய தங்கள் கடமையில் இருந்து அவர்கள் {அன்று} வழுவாதிருந்தார்கள்.

அவர்கள் பொய்மையுடன் நடந்து கொள்வதாகக் கருதுபவன் நிச்சயம் தோல்வியை அடைவான். பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்}, பொய்மைக்குப் பதில் மரணத்தையே விரும்புவார்கள். {மரணத்தை அடைந்தாலும் அடைவார்களேயொழிய பொய்யை விரும்ப மாட்டார்கள்}. எனினும், நேரம் வரும்போது, சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற சக்தி கொண்ட மனிதர்களில் காளையரான அந்தப் பாண்டவர்கள், தங்களுடையவை எவையும் வஜ்ரதாங்கியால் {இந்திரனால்} பாதுகாக்கப்பட்டாலும், அவற்றை {தங்கள் உடைமைகளை} விடமாட்டார்கள். ஆயுதங்களைத் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களை {பாண்டவர்களை}, நாம் போரில் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

எனவே, நம்முடைய உடைமைகளை எதிரி கையகப்படுத்தமுடியாதவாறு, நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களின் அனுமதியோடு கூடிய சாதகமான ஏற்பாடுகள் செய்யப்படட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! கௌரவா {துரியோதனா}, “நாம் நிச்சயம் வெல்வோம்” என்று இருதரப்பில் எந்தத் தரப்பாலும் சொல்ல முடிந்த எந்தப் போரையும் நான் இதுவரை கண்டதில்லை. ஒரு போர் ஏற்படும்போது, அங்கே {ஒரு தரப்புக்கு} வெற்றியோ தோல்வியோ அல்லது செழுமையோ சிரமமோ {நிச்சயம்} ஏற்படும். போர்க்களத்தில் இருக்கும் ஒரு தரப்பு இவ்விரண்டில் ஒன்றை நிச்சயம் அடைய வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது போர் உகந்ததாக இருப்பினும், அறத்தின்கண் நிலையற்றோ அல்லாமலோ இருப்பினும் {உகந்தது இல்லாவிடினும்}, உனது ஏற்பாடுகளை விரைந்து செய். தனஞ்சயன் {Dhananjaya_அர்ஜுனன்} அருகில் வந்துவிட்டான்” என்றார் {பீஷ்மர்}.

அதற்குத் துரியோதனன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டவர்களுக்கு அவர்களது நாட்டை நான் திரும்பத் தரமாட்டேன். எனவே, போருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தாமதமில்லாமல் நடைபெறட்டும்” என்றான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, “நான் சரியாகக் கருதுவதை, உனக்கு விருப்பமிருந்தால் கேள். உனக்கு எது நன்மையோ அதையே நான் எப்போதும் சொல்ல வேண்டும். ஓ! கௌரவா {துரியோதனா}, நேரத்தை இழக்காமல் {காலவிரையம் செய்யாமல்} படையில் நாலில் ஒரு பங்கை அழைத்துக் கொண்டு தலைநகர் நோக்கி நீ முன்னேறு. படையின் மற்றொரு நாலில் ஒரு பாகம், பசுக்களுக்குக் காவலாக அணிவகுத்துச் செல்லட்டும். {மீதமுள்ள} பாதித் துருப்புகளைக் கொண்டு, நாங்கள் அந்தப் பாண்டவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். நான், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகியோர் சேர்ந்து, நம்மை அணுகிவரும் பீபத்சுவையோ {அர்ஜுனையோ}, மத்ஸ்யர்களின் மன்னனையோ {விராடனையோ}, ஏன் இந்திரனையோ கூட, தீர்மானத்துடன் எதிர்த்து நிற்போம். உண்மையில், துள்ளும் கடலைத் தாக்குப்பிடிக்கும் கரைகளைப் போல, அவர்களில் எவரையும் நாங்கள் எதிர்த்து நிற்போம்” என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் பேசிய இச்சொற்கள் அவர்களுக்கு ஏற்புடையனவாக இருந்தன. கௌரவர்களின் மன்னன் {துரியோதனன்}, அதற்குத் தக்க, தாமதமில்லாமல் செயல்பட்டான். மன்னனையும் {துரியோதனனையும்}, பசுக்களையும் அனுப்பிவிட்ட பிறகு, பீஷ்மர் படைகளை அணிவகுக்கத் தொடங்கினார். ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் வகையில் அவர் {பீஷ்மர்}, “ஓ! ஆசானே {துரோணரே}, நீர் {படைவரிசையின்} நடுவில் நில்லும், அஸ்வத்தாமன் இடது பக்கத்தில் நிற்கட்டும், சரத்வானின் மகனான ஞானமிக்கக் கிருபர் {படையின்} வலது பக்கத்தைப் பாதுகாக்கட்டும். கவசம் பூண்டிருக்கும் சூத குலத்தின் கர்ணன் முன்னணியில் நிற்கட்டும். நான் படையனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு பின்புறத்தில் நிற்பேன்” என்றார் {பீஷ்மர்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


கங்கையின் மகனே உண்மையைச் சொல்லும்! - விராட பர்வம் பகுதி 51

Son of Ganga, say what is true! | Virata Parva - Section 51 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 26)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் துரோணரிடம் அஸ்வத்தாமனிடமும் கோபம் தணியச் சொல்வது; அஸ்வத்தாமன் என்னிடம் சொல்லாதீர் என்பது; துரியோதனன் துரோணரின் கோபத்தைத் தணிப்பது; துரோணர் பாண்டவர்களின் வனவாச காலம் முடிந்து விட்டதா என்பதைப் பீஷ்மரே சொல்ல வேண்டும் என்று சொன்னது...

பீஷ்மர் சொன்னார்,துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நன்றாகக் கவனித்திருக்கிறான், கிருபரும் சரியாகவே கவனித்திருக்கிறார். கர்ணனைப் பொறுத்தவரை, க்ஷத்திரிய வகையின் கடமைகளைக் கருத்தில் கொள்வதால் மட்டுமே அவன் {கர்ணன்} போரிட விரும்புகிறான். ஞானம் கொண்ட எந்த மனிதனும் ஆசானைப் பழிக்கலாகாது. எனினும், காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்ளும் நான், நாம் போரிட வேண்டும் என்றே கருதுகிறேன். தங்கள் சிரமகாலத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஐந்து பிரகாசமிக்கச் சூரியன்களைப் போன்ற, ஐந்து வீரப் போராளிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் {துரியோதனன்} ஏன் குழம்பமாட்டான்? அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களை நீ ஏற்றாலும், ஏற்காவிடினும் அதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.


(தளரும்) நமது வீரம் எழுச்சியடையவே கர்ணன் உன்னிடம் இப்படிச் சொன்னான். ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, உன்னைப் பொறுத்தவரை, அனைத்தையும் மன்னிப்பாயாக. ஆபத்து அருகில் இருக்கிறது. குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்திருக்கும்போது, {நமக்குள்} சண்டையிட இது நேரமில்லை. அனைத்தும் {அஸ்வத்தாமனான} உன்னாலும், ஆசானான கிருபராலும் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும். சூரியனில் இருக்கும் ஒளி போல, உன்னிடம் அனைத்து ஆயுதங்களின் திறமையும் வசிக்கின்றன. சந்திரனில் இருந்து அழகு பிரிக்கப்படாதது போல, வேதங்கள் மற்றும் பிரம்ம ஆயுதம் ஆகிய இரண்டும் உன்னில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பொருளில் {மனிதனில்} நான்கு வேதங்கள் வசிப்பதையும், மற்றொன்றில் க்ஷத்திரிய குணங்கள் வசிப்பதையும் நாம் எப்போதும் காண்கிறோம்.

பாரதக் குல ஆசானிடமும் {துரோணரிடம்}, அவரது மகனிடமும் {அஸ்வத்தாமனான உன்னிடம்} தவிர வேறு எந்த மனிதனுக்குள்ளும் அவ்விரண்டும் ஒன்றாக வசிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதையே நான் நினைக்கிறேன். வேதாந்தங்களிலோ, புராணங்களிலோ, பழம் வரலாறுகளிலோ, ஓ! மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான்? வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, பொறுத்துக்கொள். ஒற்றுமையின்மைக்கு இது நேரமல்ல. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, {எதிர்த்து} வந்து கொண்டிருக்கும், இந்திரனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவோம். ஞானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த ஒரு படைக்கு நேரும் அழிவுகள் அனைத்திலும், தலைவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையே {ஒற்றுமையின்மையால் ஏற்படும் அழிவே} மோசமானதாகும்” என்றார் {பீஷ்மர்}.

அதற்கு அஸ்வத்தாமன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே {பீஷ்மரே}, இந்த உமது அவதானிப்புகள் எங்கள் முன்னிலையில் சொல்லத்தக்கதல்ல; எனினும், கோபத்தில் நிறைந்திருக்கும் ஆசான் {துரோணர்}, அர்ஜுனனின் நற்குணங்களைக் குறித்துப் பேசினார். ஒருவனுடைய ஆசானின் குறைகள் கூடச் சுட்டிக்காட்டப்படலாம் எனும்போது, எதிரியின் நற்குணங்களையும் {நாம்} ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு, ஒருவன் தனது மகன் அல்லது சீடனின் தகுதிகளை அறிவிக்க வேண்டும்” என்றான் {அஸ்வத்தாமன்}.

அதற்குத் துரியோதனன், “ஆசான் தனது மன்னிப்பை அருளட்டும். அமைதி திரும்பட்டும். நம்மில் ஒருவராக ஆசான் {துரோணர்} இருக்கும்போது, (தற்போதையை அவசர நிலையில்) என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கர்ணன், கிருபர், உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் ஆகியோரின் உதவியுடன் துரியோதனன், துரோணரைத் சமாதானப் படுத்தினான் {அவரது கோபத்தைத் தணித்தான்}.”

துரோணர், “சந்தனு மகனான பீஷ்மர் பேசிய முதல் வார்த்தைகளிலேயே நான் சமாதானமடைந்துவிட்டேன். போர்களத்தில் துரியோதனனைப் பார்த்தன் {அர்ஜுனன்} அணுகமுடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டட்டும். துடுக்குத்தனம் மற்றும் தீர்மானமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக, மன்னன் துரியோதனன் எதிரியால் சிறைபிடிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். வனவாசத்தின் குறித்த காலம் முடிவதற்கு முன்னரே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. அதே போலவே, பசுக்களை மட்டும் மீட்டுக் கொண்டு, இன்று (நமது) இந்தச் செயல்களை மன்னித்துவிடமாட்டான். எனவே, நமது துருப்புகளை வீழ்த்தி, திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தாக்குவதில், அவன் {அர்ஜுனன்} வெல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். (குறித்த வனவாச காலத்தின் நிறைவில் உள்ள சந்தேகத்தோடு) என்னைப் போலவே முன்பு துரியோதனனும் சொன்னான். இதை மனதில் கொண்டு, எது உண்மை என்பதைச் சொல்வதே கங்கையின் மகனுக்குத் {பீஷ்மருக்குத்} தகும்” என்றார் {துரோணர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, December 12, 2014

கர்ணனைக் கண்டித்த அஸ்வத்தாமன்! - விராட பர்வம் பகுதி 50

Aswatthama censured Karna! | Virata Parva - Section 50 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 25)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் :தற்பெருமை பேசும் கர்ணனை அஸ்வத்தாமன் கண்டித்தது; துரியோதனன் பாண்டவர்களை ஏமாற்றியதைச் சுட்டிக் காட்டுவது; தான் அர்ஜுனனுடன் போரிட மாட்டேன் என்று சொன்னது...…...

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, இந்தப் பசுக்கள் இன்னும் வெல்லப்படவில்லை. அல்லது அவை (தங்கள் உரிமையாளரின் ஆட்சிக்குட்பட்ட) எல்லையைக் கடக்கவில்லை. அல்லது அவை இன்னும் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை. எனவே, ஏன் நீ தற்பெருமை பேசுகிறாய்? எண்ணிலடங்கா போர்களை வென்று, அபரிமிதமான செல்வத்தை அடைந்து, எதிரிப்படைகளை வீழ்த்திய உண்மையான வீரர்கள் தங்கள் பராக்கிரமம் குறித்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார்கள். நெருப்புப் பேசாமல் எரிகிறது. பேசாமல்தான் சூரியனும் ஒளிர்கிறான். பேசாமல்தான் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை இந்தப் பூமி சுமக்கிறது. கண்டனம் இல்லாமல் ஒவ்வொருவரும் செல்வத்தை அடைய நான்கு வகையினருக்குமான அலுவல்கள் சுயம்புவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

வேதங்களைக் கற்கும் ஓர் அந்தணன், தானே வேள்விகள் செய்து கொண்டு, பிறரது வேள்விகளையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன், தனது வில்லை நம்பி, தனது வேள்விகளை மட்டும் செய்ய வேண்டும். அவன் மற்றவர்களுக்காக வேள்விகளை நடத்தக்கூடாது. செல்வங்களை ஈட்டும் ஒரு வைசியன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளைத் தனக்காக மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு சூத்திரன் பிற மூன்று வகையினருக்கும் சேவை செய்து அவர்களுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். மலர்கள் மற்றும் இறைச்சி விற்பதைத் தொழிலாகக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஏமாற்றியும் மோசடியும் செய்து அவர்கள் தங்கள் செல்வத்தை ஈட்டிக் கொள்ளலாம்.

எப்போதும் சாத்திரங்களின் விதிப்படி நடந்து கொள்ளும் மேன்மிக்கப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த முழு உலகத்தின் ஆட்சியையும் பெற்றார்கள். பெரியவர்கள் அவர்களிடம் பகைகொண்டாலும், அவர்களிடம் {அந்தப் பெரியவர்களிடம்} எப்போதும் மரியாதையுடனே அவர்கள் {பாண்டவர்கள்} நடந்து கொள்கிறார்கள். வெட்கங்கெட்ட இந்தத் தீய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தின் மூலம் அடைந்த நாட்டைப் பார்த்து எந்த க்ஷத்திரியன் மகிழ்ச்சி கொள்வான்? இறைச்சி விற்பவன் போல ஏமாற்றுத்தனத்தாலும், மோசடியாலும் செல்வத்தை அடைந்தால், எந்த விவேகியால் அது குறித்துத் தற்பெருமையாகப் பேசிக் கொள்ள முடியும்? {[அதாவது] நீ விவேகி இல்லை என்று கர்ணனிடம் சொல்கிறான் அஸ்வத்தாமன்}

{இதுவரை அஸ்வத்தாமன் கர்ணனிடம் பேசுவது போல இருந்தாலும், இதன்பிறகு துரியோதனன் மற்றும் கர்ணனிடம் மாறி மாறிப் பேசுவதாகத் தெரிகிறது}

அவர்களது செல்வத்தைத் திருடிக் கொண்டாலும், தனஞ்சயனையோ {அர்ஜுனனையோ}, நகுலனையோ, சகாதேவனையோ எந்தத் தனிப்போரில் {ஒற்றைக்கு ஒற்றையான எந்த மோதலில்} நீ வென்றாய்? யுதிஷ்டிரனையோ, பலசாலிகளில் முதன்மையான பீமனையோ எந்தப் போரில் நீ வென்றாய்? இந்திரப்பிரஸ்தத்தை எந்தப் போரில் நீ வென்றாய்? ஓ! இழிந்த செய்கைகள் செய்பவனே, நீ செய்ததெல்லாம், நோய்வாய்ப்பட்டு ஒற்றையாடையுடன் இருந்த இளவரசியை {திரௌபதியைச்} சபை நடுவே இழுத்து வந்ததுதான். சந்தனம் போன்று மென்மையான பாண்டவ மரத்தின் வேரை நீ வெட்டிவிட்டாய்.

செல்வத்தின் மீது கொண்ட ஆசையால் செயல்பட்டு, பாண்டவர்களை அடிமைகளைப் போல நீ நடத்திய போது, விதுரர் என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பார்! மனதிர்களும் பிறரும், ஏன் பூச்சிகளும் எறும்புகளும் கூடத் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பொறுத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். {[அதாவது] ஒரு கட்டத்திற்கு மேல் அவையும் தங்கள் சக்திக்கேற்ற கோபத்தை வெளிப்படுத்தும் என்பதைப் பார்க்கிறோம்}. எனினும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} திரௌபதியின் துன்பங்களைப் பொறுக்க இயலாது. திருதராஷ்டிரன் மகன்களின் அழிவுக்காகவே தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான் என்பது நிச்சயம். பெருஞானம் பாதிப்படையும் வகையில் உரையாற்றுவதற்கே நீ தகுந்தவன். ஆனால் எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, நம் அனைவரையும் நிர்மூலமாக்கிவிடுவான் என்பதே உண்மை. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராட்சசர்களோ, {வந்திருப்பது} எவராக இருப்பினும் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} பீதியடைந்து போரில் இருந்து விலகிவிடுவானா?

கோபத்துடன் அவன் யார் மீது விழுகிறானோ, கருடனின் பாரத்தில் அழுந்தும் மரத்தைப் போல அவனை வீழச் செய்வான். பராக்கிரமத்தில் உன்னைவிட மேன்மையானவனும், தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான வில்லாளியும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} யார் தான் புகழ மாட்டார்கள்? தெய்வீக ஆயுதங்களை தெய்வீக ஆயுதங்களாலும், மனித ஆயுதங்களை மனித ஆயுதங்களாலும் முறியடிக்கும் அர்ஜுனனுக்கு எந்த மனிதன் இணையாக முடியும்? மகன் என்ற ஸ்தானத்திற்குச் சீடன் எவ்வகையிலும் குறைவில்லாதவன் என்று சாத்திரங்களை அறிந்தவர்கள் தீர்மானிக்கின்றனர். {ஒரு மகனைக் காட்டிலும் சீடன் குறைந்தவனல்ல என்று சாத்திரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்}. அதனால்தான் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} துரோணருக்குப் பிடித்தமானவனாக {மகனைப் போன்று பிடித்தமான சீடனாக} இருக்கிறான்.

பகடையாட்டத்தின் போது கைக்கொண்ட அதே வழிகளை இப்போது கைக்கொள். இந்திரப்பிரஸ்தத்தைக் கவர்ந்ததைப் போல, திரௌபதியை சபைக்கு நீ இழுத்து வந்ததைப் போல அதே வழிகளைக் கைக்கொள்! க்ஷத்திரிய வகைக் கடமைகளை நன்கு அறிந்தவனும் விவேகம் நிறைந்தவனும், காந்தார இளவரசனும், ஏமாற்றுகரச் சூதாடியுமான இந்த உனது மாமன் சகுனி இப்போது போரிடட்டும்! எனினும், காண்டீவம், கிருதம் {பகடைக்காயின் நான்கு எண்ணுள்ள பக்கம்} என்றும், துவாபரம் {பகடைக்காயின் இரண்டு எண்ணுள்ள பக்கம்} என்றும் பகடைக்காய்களை வீசாது. ஆனால் அது {காண்டீவம்} சுடர்விட்டெரியும் கூரிய முனை கொண்ட எண்ணற்ற கணைகளை அடிக்கும்.

காண்டீவத்தில் இருந்து அடிக்கப்படும் கழுகு இறகு கொண்டதும் சக்திமிக்கதுமான கடும் கணைகள் மலைகளைக் கூடத் துளைக்கும். யமன் என்ற பெயரைக் கொண்ட அனைத்தையும் அழிப்பவனும், வாயுவும், குதிரை முகம் கொண்ட அக்னியும் கூடச் சில மிச்சங்களை விட்டுச் செல்வார்கள். ஆனால் கோபம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} அதைக் கூட விடமாட்டான் {மிச்சமில்லாமல் அழிப்பான்}. உனது மாமனின் {சகுனியின்} துணை கொண்டு, எப்படிச் சபையில் பகடை விளையாடினாயோ, அதே போல அந்தச் சுபலனின் மகனால் {சகுனியால்} பாதுகாக்கப்பட்டு இந்தப் போரில் நீ போரிட்டுக் கொள். போரிடுவதாகத் தீர்மானித்தால் ஆசான் {கிருபர்} போரிட்டுக் கொள்ளட்டும். எனினும், நான் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். பசுக்களின் பாதையைப் பற்றிக் கொண்டு மத்ஸ்ய மன்னன் வந்தால், அவனுடன் போர் புரிய வேண்டும் என்பதற்காகவே உண்மையில் நாம் வந்தோம்” என்றான் {அஸ்வத்தாமன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top