Showing posts with label விஸ்வாமித்ரர். Show all posts
Showing posts with label விஸ்வாமித்ரர். Show all posts

Friday, December 28, 2018

விஷ்வாமித்ர குலம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 04

The Viswamitra race! | Anusasana-Parva-Section-04 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 04)


பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்ரரின் பிறப்பு; அடைதற்கரிதான பிராமணத் தன்மையை அவர் அடைந்த காரணம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, பழங்காலத்தில் விஷ்வாமித்ரர் எவ்வாறு பிராமணர் மற்றும் பிராமண முனிவர் என்ற நிலைகளை அடைந்தார் என்பதை விளக்கமாகக் கேட்பாயாக.(1) ஓ! பாரத வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, பாரதக் குலத்தில் பல வேள்விகளைச் செய்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான அஜமீடன்[1] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(2) அவனது மகன் ஜன்னு என்ற பெயர் கொண்ட பெரும் மன்னன் ஆவான். உயர்ந்த மனம் கொண்ட இந்த இளவரசனின் மகளாகக் கங்கை இருந்தாள்.(3) பெரும் புகழ்பெற்றவனும், தந்தைக்கு இணையான அறவோனுமான சிந்துத்வீபன் இந்த இளவரசனின் {ஜன்னுவின்} மகனாக இருந்தான். சிந்துத்வீபனிடமிருந்து பெரும் அரசமுனியான பலாகாஸ்வன் உண்டானான்.(4) வல்லபன் என்ற பெயரைக் கொண்ட அவனுடைய மகன் உடல் படைத்த இரண்டாவது தர்மனைப் போல இருந்தான். அவனது மகனான குசிகன், ஆயிரங்கண் இந்திரனைப் போல மகிமையுடன் பிரகாசித்தான்.(5)

Wednesday, December 26, 2018

விஷ்வாமித்ரர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 03

Viswamitra! | Anusasana-Parva-Section-03 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 03)


பதிவின் சுருக்கம் : அடைதற்கரிதான பிராமணத் தன்மையானது க்ஷத்திரியரான விஷ்வாமித்ரரால் எவ்வாறு அடையப்பட்டது என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்...


[1]யுதிஷ்டிரன், "ஓ! இளவரசரே {பீஷ்மரே} பிராமணத்தன்மையானது வேறு மூன்று வர்ணங்களால் (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரால்) அடைவதற்கு மிக அரிதானது என்றால், ஓ! மன்னா, உயர் ஆன்ம விஷ்வாமித்ரர், (பிறவியால்) ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமணத் தன்மையை அடைந்தது எவ்வாறு? ஓ! ஐயா, இதை நான் அறிய விரும்புகிறேன். எனவே இக்காரியம் குறித்த உண்மையை எனக்குச் சொல்வீராக.(1,2) ஓ! ஐயா, அந்தப் பலமிக்க மனிதர் தன் தவத்தகுதிகளின் மூலம் உயர் ஆன்ம வசிஷ்டரின் நூறு மகன்களை ஒரு கணத்தில் அழித்துவிட்டார்.(3) அவர் கோப வசத்தில் இருந்தபோது, எண்ணற்ற தீய ஆவிகளையும், வலிமையும், வீரமும் கொண்டவர்களையும், காலனுக்கு ஒப்பானவர்களுமான ராட்சர்களையும் படைத்தார்.(4) நூற்றுக்கணக்கான மறுபிறப்பாள தவசிகளைக் கொண்டதும், பெருமையும், கல்வித்தகுதியும் கொண்டதும், பிராமணர்களால் போற்றிப் புகழப்படுவதுமான குசிக குலமானது இந்த மனிதர்களின் உலகில் அவராலேயே உண்டானது.(5)

Friday, April 20, 2018

விஷ்வாமித்திரரும், நாய் இறைச்சியும்! - சாந்திபர்வம் பகுதி – 141

Vishwamitra and dog's meat! | Shanti-Parva-Section-141 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : உண்ணத்தகாததை உண்டாவது உயிரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் விஷ்வாமித்திரருக்கும், நாயின் இறைச்சியை உண்ணும் சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Vishwamitra and dog's meat! | Shanti-Parva-Section-141 | Mahabharata

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த அறம் சிதைந்து, அனைவராலும் அது மீறப்படும்போதும், மறமே {அதர்மமே} அறமாகும் {தர்மம்} போதும், அறமானது நேர் எதிரான வடிவத்தை ஏற்கும்போதும்,(1) நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறைந்து, அறம் தொடர்புடைய உண்மைகள் அனைத்தும் கலங்கி குழப்பமடையும்போதும், மன்னர்களாலும், கள்வர்களாலும் மக்கள் ஒடுக்கப்படும்போதும்,(2) நால்வகை வாழ்வுமுறைகளை {ஆசாரங்களைச்} சார்ந்த மனிதர்களின் கடமைகளில் கலக்கமடைந்து, செயல்கள் அனைத்தும் தங்கள் தகுதியை இழக்கும்போதும், காமம், பேராசை, மடமை ஆகியவற்றின் விளைவால் அனைத்துத் திசைகளிலும் மனிதர்கள் அச்சமடையும்போதும்,(3) அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று நம்பாதபோதும், பரஸ்பர காரியங்களில் அவை ஒன்றையொன்று வஞ்சித்து, வஞ்சனை நிறைந்த வழிமுறைகளால் ஒன்றையொன்று கொல்லும்போதும்,(4)

Thursday, August 31, 2017

வசிஷ்டாபவாஹத் தீர்த்தம்! - சல்லிய பர்வம் பகுதி – 42

Vasishthapavaha Tirtha! | Shalya-Parva-Section-42 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையிலான பகை; வசிஷ்டரைக் கொல்ல நினைத்த விஷ்வாமித்திரர் சரஸ்வதியை ஏவியது; விஷ்வாமித்திரரை வஞ்சித்த சரஸ்வதி; சரஸ்வதி பெற்ற சாபம்; வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின் பெயர்க்காரணம்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வசிஷ்டாபவாகத்தின் (என்ற பெயரில் அறியப்பட்ட தீர்த்தத்தின்) ஓட்டம் ஏன் பயங்கரமான வேகம் கொண்டதானது? என்ன காரணத்தினால் அந்த முதன்மையான ஆறு வசிஷ்டரைக் கொண்டு {இழுத்துச்} சென்றது?(1) ஓ! தலைவரே {வைசம்பாயனரே}, வசிஷ்டருக்கும், விஷ்வாமித்திரருக்கும் இடையிலான சச்சரவின் காரணம் என்ன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, என்னால் கேட்கப்படும் இவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வீராக. நீர் சொல்வதைக் கேட்டு என்னால் தணிவை அடையமுடியவில்லை" என்று கேட்டான்.(2)

Monday, August 28, 2017

பிராமணரான க்ஷத்திரியர்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 40

Kshatriyas turned to Brahmanas! | Shalya-Parva-Section-40 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 9)


பதிவின் சுருக்கம் : பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார்? சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்?(1) ஓ! பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர்? ஓ! போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது" என்று சொன்னான்.(2)

Saturday, June 06, 2015

கடனைத் தீர்த்த காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 119

Galava payed his debt! | Udyoga Parva - Section 119 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –48)

பதிவின் சுருக்கம் : காலவரைக் கண்ட கருடன், மேலும் இருநூறு குதிரைகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்று தடுத்தது; குதிரைகள் ஏன் கிடைக்காது என்பதற்கு ஒரு பழங்காலக் கதையைக் கருடன் சொன்னது; காலவர் மாதவியை விஸ்வாமித்ரருக்கு அளிப்பது; விஸ்வாமித்ரர் மாதவியிடம் அஷ்டகனைப் பெறுவது; கடன் தீர்ந்த காலவர் மாதவியை அவளது தந்தையிடம் திரும்ப ஒப்படைப்பது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "காலவரைக் கண்ட வினதையின் மகன் {கருடன்} புன்னகையுடன் அவரிடம் {காலவரிடம்}, "ஓ! அந்தணா, நற்பேறாலேயே, நான் உன்னை வெற்றிகரமானவனாகக் காண்கிறேன்" என்றான். எனினும், கருடன் பேசிய வார்த்தைகளைக் கேட்ட காலவர், காரியத்தின் நான்காவது பகுதி இன்னும் நிறைவேறாமல் இருப்பதை அவனுக்கு {கருடனுகுச்} சுட்டிக் காட்டினார்.

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான கருடன், காலவரிடம், "(மீதம் உள்ள இருநூறு குதிரைகளை அடைய) எந்த முயற்சியும் செய்யாதே. ஏனெனில் அதில் நீ வெல்ல மாட்டாய். பழங்காலத்தில், கான்யகுப்ஜ நாட்டில் காதியின் மகளாகிய சத்தியவதியைத் தனது மனைவியாக்கிக் கொள்ள {விரும்பிய} ரிசீகர் {தனது விருப்பத்தைக் காதியிடம்} கேட்டார். ஓ! காலவா, அதன் பேரில், காதி அந்த முனிவரிடம் {ரிசீகரிடம்}, "ஓ! புனிதமானவரே {ரிசீகரே}, சந்திரப் பிரகாசம் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஆயிரம் குதிரைகள் எனக்கு {சுல்கமாக} வழங்கப்படட்டும்" என்று கேட்டான் {காதி}. இப்படிக் கேட்கப்பட்ட ரிசீகர் {காதியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். பிறகு வருணனின் உறைவிடத்தில் உள்ள மாபெரும் குதிரைகள் அங்காடிக்குச் (அஸ்வதீர்த்தத்திற்குச்) சென்ற அந்த முனிவர் {ரிசீகர்}, அவன் {காதி} கேட்டதை அடைந்து, அவற்றை அந்த மன்னனிடம் {காதியிடம்} கொடுத்தார்.புண்டரீகம் என்ற பெயர் கொண்ட வேள்வி ஒன்றை நடத்திய அந்த ஏகாதிபதி {காதி}, அக்குதிரைகளை (தக்ஷிணையாக) அந்தணர்களுக்குக் கொடுத்துவிட்டான். நீ ஏற்கனவே கோரிக்கை வைத்த அந்த மூன்று மன்னர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு இருநூறு {200} குதிரைகளை அந்த அந்தணர்களிடம் இருந்து கொள்முதல் செய்தார்கள். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, மீதம் நானூறும் {400-நானூறு குதிரைகளும்}, ஆற்றைக் கடக்கும்போது விதஸ்தையால் [1] எடுத்துக் கொள்ளப்பட்டன.

[1] //இந்தச் சுலோகத்தின் பிற்பாதி பலவாறாகப் படிக்கப்படுகிறது. "நியாமனனி சந்தரே ஹ்ருதன்யாசன் விதஸ்தயா {Niyamanani Santare Hritanyasan Vitastaya}" என்பதே சரியான உரை என எனக்குத் தோன்றுகிறது. "கடந்து சென்ற போது, விதஸ்தை (நதியால்) இழுத்துக் கொள்ளப்பட்டன" என்பதே அதன் பொருளாகும். விதஸ்தை, பஞ்சாபின் ஐந்து நதிகளில் ஒன்றாகும்.// என்கிறார் கங்குலி.

எனவே, ஓ! காலவா, பெறமுடியாத ஒன்றை, உன்னால் பெற முடியாது. ஓ! அறம்சார்ந்தவனே {காலவா}, நீ ஏற்கனவே அடைந்திருக்கும் அறுநூறு {600} குதிரைகளையும், மேலும், இருநூறு {200} குதிரைகளுக்கு இணையாக இந்தக் கன்னிகையையும் விஸ்வாமித்ரருக்குக் கொடுத்துவிடு. ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, பிறகு நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு வெற்றியால் மகுடம் சூட்டப்படுவாய்" என்றான் {கருடன்}.

பிறகு காலவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, குதிரைகளையும், அந்தக் கன்னிகையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கருடனையும் தனது துணைக்கு அழைத்துக் கொண்டு விஸ்வாமித்ரரிடம் சென்றார். அவரது {விஸ்வாமித்ரரின்} முன்னிலைக்கு வந்த காலவர், "நீர் கோரிய வகையில் அறுநூறு {600} குதிரைகள் இங்கு இருக்கின்றன. மீதம் உள்ள இருநூறுக்காக {200} இந்தக் கன்னிகையை நான் காணிக்கையாக்குகிறேன். இவை அனைத்தும் உம்மால் ஏற்கப்படட்டும். இந்தக் கன்னிகையிடம் மூன்று அரச முனிகள் அறம்சார்ந்த மகன்கள் மூவரைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவதும், அனைவருக்கும் முதன்மையானவனுமான மகனை நீர் இவளிடம் பெறுவீராக. இப்படியே எண்ணூறு {800} குதிரைகள் என்ற எண்ணிக்கை நிறைவடைந்ததாக உம்மால் கருதப்படட்டும். நானும் கடனில் இருந்து விடுபட்டு, நான் விரும்பும் தவ நோன்புகளைப் பயிலச் செல்ல அனுமதிப்பீராக" என்றார் {காலவர்}.

அந்தப் பறவை {கருடன்} மற்றும் உயர்ந்த அழகுடைய கன்னிகை {மாதவி} ஆகியோரின் துணையுடன் இருக்கும் காலவரைக் கண்ட விஸ்வாமித்ரர், "ஓ! காலவா, நீ ஏன் முன்பே இந்த மங்கையை எனக்குக் கொடுக்கவில்லை? எனது குலத்தை விருத்திச் செய்யும் நான்கு மகன்கள் எனக்கு மட்டுமே இருந்திருப்பார்களே. இவளிடம் ஒரு மகனைப் பெறுவதற்காக நான் இந்த உனது கன்னிகையை {மாதவியை} ஏற்கிறேன். குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றை எனது துறவில்லத்தில் {ஆசிரமத்தில்} மேய விடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இதைச் சொன்ன பெரும் காந்திபடைத்த விஸ்வாமித்ரர் அவளுடன் {மாதவியுடன்} தனது நேரத்தை இன்பமாகக் கழிக்கத் தொடங்கினார். மாதவி, அஷ்டகன் என்ற பெயரில் அவருக்கு {விஸ்வாமித்திரருக்கு} ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அந்த மகன் பிறந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்ரர் அறம் பொருள் ஆகிய இரண்டையும் உரைத்து, அறுநூறு {600} குதிரைகளையும் அவனிடமே {அஷ்டகனிடமே} கொடுத்தார்.

பிறகு, சோமனின் {சந்திரனின்} நகரத்தைப் போன்ற பிரகாசமிக்க நகரத்திற்கு அஷ்டகன் சென்றான். குசிகரின் மகனான விஸ்வாமித்ரர் அந்தக் காரிகையைத் {மாதவியைத்} தனது சீடனிடம் {காலவரிடம்} ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குச் சென்றுவிட்டார். தனது ஆசான் கோரிய கட்டணத்தைக் கொடுப்பதில் வென்ற காலவரும், அவரது நண்பனான சுபர்ணனுடன் {கருடனுடன்} சேர்ந்து மகிழ்ச்சிகரமான இதயத்துடன் அந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்}, "மிகுந்த ஈகை குணம் உள்ள ஒருவனையும், மிகுந்த வீரம் கொண்டவன் ஒருவனையும், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒருவனையும், பெரும் வேள்விகளைச் செய்யும் ஒருவனையும் நீ மகன்களாகப் பெற்றாய். ஓ! அழகிய கன்னிகையே {மாதவி}, நீ இந்த மகன்களால், உனது தந்தையை மட்டுமல்ல, நான்கு மன்னர்களையும், என்னையும் காத்திருக்கிறாய். ஓ! கொடியிடையாளே, இப்போது நீ செல்லலாம்" என்றார். இதைச் சொன்ன காலவர், பாம்புகளை உண்ணும் கருடனுக்கு விடைகொடுத்தனுப்பி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவளது தந்தையிடம் {யயாதியிடம்} ஒப்படைத்துவிட்டு காட்டுச் சென்றுவிட்டார்" என்றார் {நாரதர்}.

Wednesday, May 27, 2015

சாண்டிலி என்ற பெண்! - உத்யோக பர்வம் பகுதி 113

A lady called Sandili! | Udyoga Parva - Section 113 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –42)

பதிவின் சுருக்கம் : கருடனும் காலவரும் ஓய்வெடுக்க ரிஷப மலையில் இறங்குவது; அங்கே தவம் செய்யும் சாண்டிலியைக் கண்டது; சாண்டிலியின் விருந்தோம்பல்; கருடனின் சிறகுகள் பறிபோனது; தூய நடத்தையின் பெருமையைச் சாண்டிலி சொல்வது; கருடன் மீண்டும் சிறகுகளைப் பெற்றது; ரிஷப மலையில் இருந்து அவர்கள் புறப்பட்டதும், வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்தித்தது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு ரிஷப மலையின் சிகரத்தில் இறங்கிய அந்த அந்தணரும் {காலவரும்}, அந்தப் பறவையும் {கருடனும்}, அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாண்டிலி என்ற அந்தணப் பெண்ணைக் கண்டனர். காலவரும், கருடனும் தங்கள் சிரம் தாழ்த்தி அவளை {சாண்டிலியை} வணங்கி வழிபட்டனர். அதன்பேரில், அந்த மங்கை அவர்களது நலன் விசாரித்து அவர்களுக்கு {அமர} இருக்கை கொடுத்தாள். உணவைச் சமைத்த அந்த மங்கை முதலில் மந்திரங்களால் அதைத் தேவர்களுக்குக் காணிக்கையாக்கினாள். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இருவரும் {காலவரும், கருடனும்}, அந்த மங்கையால் {சாண்டிலியால்} தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த உணவை உண்டனர். உணவை உண்ட பிறகு தங்களைத் தரையில் கிடத்திக் கொண்ட அவர்கள் {காலவரும், கருடனும்} இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தனர்.


விழித்ததும் அந்த இடத்தைவிட்டு செல்ல முயன்ற கருடன், தனது சிறகுகள் விழுந்துவிட்டதைக் கண்டான். உண்மையில், அவன் தலையும் கால்களும் மட்டும் உள்ள ஒரு சதைப் பிண்டம் {சதைகளால் ஆன உருண்டை} போல இருந்தான். அவனுக்கு நேர்ந்த இந்த அவலநிலையைக் கண்ட காலவர் மிகுந்த வருத்தத்துடன், "பயணம் மேற்கொண்டு இங்கே வந்ததன் விளைவாகத்தான் இந்த அவல நிலை உனக்கு வந்ததா? ஐயோ, இன்னும் எவ்வளவு காலம் நாம் இங்கே வசிக்க வேண்டியதிருக்கும்? உனது மனதில் தீமையான பாவ சிந்தனையை ஏதும் கொண்டாயா? நீ குற்றமுள்ள மனமுடன் இருப்பதால், அந்தப் பாவம் அற்பமானதாக இராது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார் {காலவர்}.

இப்படிச் சொல்லப்பட்ட கருடன், அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "உண்மையில், ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே-காலவா}, தவ வெற்றியால் மகுடம் சூட்டபட்டிருக்கும் இந்தப் பெண்மணியை இந்த இடத்தில் இருந்து, எங்கே படைப்பாளன் இருக்கிறானோ, எங்கே தெய்வீகமான மகாதேவன் {சிவன்} இருக்கிறானோ, எங்கே நித்தியமான விஷ்ணு இருக்கிறானோ, எங்கே அறமும் வேள்வியும் சேர்ந்து இருக்கிறதோ அங்கே தூக்கிச் சென்றுவிட வேண்டும் எனக்கருதினேன். ஏனெனில், இந்தப் பெண்மணி அங்கேயே வாழ வேண்டும் என நான் நினைத்தேன். இப்போது நான், எனக்கு நன்மை வேண்டி, இந்தப் புனிதமான பெண்மணியின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுவேன், என்று சொல்லி பரிதாபம் நிறைந்த இதயத்துடன் அந்தப் பெண்மணியிடம் {சாண்டிலியிடம்}, "உண்மையில் நான் என் மனதில் இப்படியே நினைத்தேன். நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறிழைத்திருந்தாலும், இதுவே எனது விருப்பமாக இருந்தது. அஃது உனது விருப்பத்திற்கு எதிரானது என்பது தெளிவு என்றாலும், உன் மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாகவே நான் அவ்வாறு நினைத்தேன். எனவே, உனது இதயத்தின் உன்னதத் தன்மையால் எனக்கு மன்னிப்பை அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {கருடன்}.

அந்தப் பறவைகளின் இளவரசனிடமும், அந்த அந்தணர்களில் காளையிடமும் அந்தப் பெண்மணி மனநிறைவு கொண்டாள். அவள் {சாண்டிலி}, கருடனிடம், "ஓ! அழகிய இறகுகள் கொண்டவனே {கருடா}, அஞ்சாதே. உனது சிறகுகள் திரும்பும், உனது அச்சங்களை விலக்கு. உன்னால் நான் அவமதிக்கப்பட்டேன் {இகழ்வாகக் கருதப்பட்டேன்}. ஆனால், நான் இகழ்ச்சியை மன்னிப்பதில்லை என்பதை அறிந்து கொள்வாயாக. எந்தப் பாவி என்னை அவமதிப்பானோ, அவன் அருள் உலகங்கள் அனைத்தில் இருந்தும் வேகமாக விழுவான். என் மேல் எந்த ஓர் அமங்கலக் குறியும் இன்றி, முற்றிலும் பழியற்று இருக்கும் நான், எனது நடத்தையில் கொண்ட தூய்மையின் விளைவாக உயர்ந்த தவ வெற்றியை அடைந்திருக்கிறேன்.

தூய நடத்தையானது {ஆசாரமானது}, தனது கனியாக அறத்தைத் தாங்கி வருகிறது. தூய நடத்தையானது, தனது கனியாகச் செல்வத்தைத் தாங்கி வருகிறது. அந்தத் தூய நடத்தையே, செழிப்பையும் கொண்டு வருகிறது. அந்தத் தூய நடத்தையே {ஆசாரமே}, மங்கலமற்ற அனைத்து அறிகுறிகளையும் விரட்டி விடுகிறது. ஓ! பறவைகளின் அருளப்பட்ட இளவரசனே {கருடா}, இந்த இடத்தில் இருந்து நீ எங்கு விரும்புகிறாயோ அங்கே செல். என்னை இகழும் நினைப்பை ஊக்குவிக்காதே. உண்மையில் பழிக்கத்தக்க பெண்களும் இருக்கலாம். அவர்களைக் கூட நீ அவமதிக்காமல் கவனமாக இருப்பாயாக. முன்பைப் போலவே, நீ மீண்டும் பலத்தையும் சக்தியையும் பெறுவாய்" என்றாள் {சாண்டிலி}.

அந்தப் பெண்மணியின் வார்த்தைகளின் பேரில் கருடன் மீண்டும் சிறகுகளை அடைந்து, முன்பை விட அதிகப் பலவான் ஆனான். பிறகு சாண்டிலியிடம் விடைபெற்ற கருடன், காலவரை முதுகில் சுமந்த படி அங்கிருந்து {ரிஷப மலையிலிருந்து} சென்றான். ஆனால் தாங்கள் தேடி வந்த வகைக் குதிரைகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோல்வியுற்றனர். அப்போது வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்திக்க நேர்ந்தது.

வினதையின் மகன் {கருடன்} முன்னிலையிலேயே அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவர் {விஸ்வாமித்ரர்}, காலவரிடம், "ஓ! மறுபிறப்பாளனே {காலவா}, நீ உன் சுயவிருப்பத்தின் படியே வாக்குறுதியளித்திருந்த செல்வத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நீ என்ன செய்வாய் என்பதை நான் அறியவில்லை. நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். நான் இன்னும் சில காலம் காத்திருப்பேன். (வாக்குறுதி கொடுத்த காரியத்தில்) நீ வெற்றியடைத்தக்க வழியைத் தேடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று இருந்த காலவரிடம், "உன்னிடம் விஸ்வாமித்ரர் முன்பே சொன்னதை, இப்போது என் முன்னிலையிலும் சொல்லக் கேட்டேன். எனவே, ஓ காலவா, அந்தணர்களில் சிறந்தவனே, வா, இக்காரியம் குறித்துத் தீர்மானிப்போம். (உன்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி) உனது ஆசானுக்கு முழுச் செல்வத்தையும் அளிக்காமல், நீ அமரவும் கூடாது" என்றான் {கருடன்}.


Thursday, May 21, 2015

காலவரின் பிடிவாதம்! - உத்யோக பர்வம் பகுதி 106

Galava's obstinacy! | Udyoga Parva - Section 106 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –35)

பதிவின் சுருக்கம் : நாரதர் துரியோதனனுக்குக் காலவர் மற்றும் விஸ்வாமித்ரரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தது; தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரருக்கு பணிவிடை செய்த காலவர்; காலவரின் சேவையால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், காலவரை சீடன் நிலையில் இருந்து விடுவித்தது; குருதட்சணை கொடுக்காமல் தான் போகக்கூடாது எனக் காலவர் பிடிவாதம் பிடிப்பது; விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணை...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "ஓயாமல் தீமைகளில் ஈடுபட்டு, பேராசையில் குருடாகி, தீய வழிகளுக்கு அடிமையாகி, தனக்குத் தானே அழிவைத் தீர்மானித்து, உறவினர்களின் இதயங்களில் துன்பத்தை எழுப்பி, நண்பர்களின் துயரங்களை மேம்படுத்தி, தனது நலன் விரும்பிகள் அனைவரையும் வேதனைப்படுத்தி, எதிரிகளின் மகிழ்ச்சியை அதிகரித்து, தவறான வழியில் நடந்து கொண்டிருந்த அவனை {துரியோதனனை}, அவனது நண்பர்கள் ஏன் தடுக்கவில்லை? அமைதியான ஆன்மாக் கொண்டவனும், (குரு குலத்தின்) பெரும் நண்பனுமான அந்தப் புனிதமானவனோ {கிருஷ்ணனோ}, பெரும்பாட்டனோ {பீஷ்மரோ}, பாசத்தினால் அவனிடம் {துரியோதனனிடம்} ஏன் ஏதும் கூறவில்லை?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆம். அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பேசினான். எது நன்மையோ அதைப் பீஷ்மரும் பேசினார். நாரதரும் இன்னும் அதிகம் சொன்னார். இவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்பாயாக"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நாரதர் {துரியோதனனிடம்}, "நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் நபர்கள் அரிது. நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதும் அரிது. (ஆலோசனை தேவைப்படும்) நண்பன் இருக்கும் இடத்தில் (ஆலோசனை கொடுக்கக்கூடிய) நண்பன் இருப்பதில்லை. ஓ! குரு குல மகனே {துரியோதனா}, நண்பர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிடிவாதம் தவிர்க்கப்பட வேண்டும்; ஏனெனில், அது தீமைகள் நிறைந்ததாக இருக்கிறது. இது தொடர்பாக, பழங்காலத்தில், தனது பிடிவாதத்தால் அவமானத்தைச் சந்தித்த காலவரின் கதை மேற்கோளாகச் சொல்லப்படுகிறது.

பழங்காலத்தில், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரைச் சோதிப்பதற்காக, வசிஷ்ட முனிவரின் உருவத்தைத் தாங்கி தர்மனே {தர்ம தேவனான யமனே} அவரிடம் {விஸ்வாமித்திரரிடம்} நேரடியாக வந்தான். ஏழு முனிவர்களில் {சப்தரிஷிகளில்} ஒருவரின் {வசிஷ்டரின்} உருவத்தைத் தரித்த அவன் {தர்மன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போலியாக, தான் பசித்திருப்பது போலவும், உண்ண விரும்பி தான் வந்திருப்பது போலவும்  கௌசிகரின் {விஸ்வாமித்ரரின்} ஆசிரமத்தை அடைந்தான். இதன்காரணமாக, பரபரப்படைந்த விஸ்வாமித்ரர், {பரமான்னத்தின்} (அரிசியும் பாலும் கலந்து தயாரிக்கப்படும்) சருவைச் சமைக்க ஆரம்பித்தார்.

அந்த அற்புத உணவைத் தயாரிக்கக் கவனம் எடுத்துக் கொண்டதன் விளைவாக, அவரால் தனது விருந்தினருக்குச் {வசிஷ்டரின் உருவத்தில் வந்திருந்த தர்மனுக்குச்} சரியான முறையில் பணிவிடை செய்ய முடியவில்லை. அந்த விருந்தினர் {தர்மன்}, மற்ற தவசிகளால் கொடுக்கப்பட்ட உணவை உண்ட பிறகே, விஸ்வாமித்ரர், தான் சமைத்த ஆவி பறக்கும் உணவுடன் அவனை {தர்மனை} அணுகினார். அந்தப் புனிதமானவனோ {தர்மனோ} "நான் ஏற்கனவே உண்டுவிட்டேன். இங்கேயே காத்திரு" என்றான். இப்படிச் சொன்ன அந்தப் புனிதமானவன் தான் வந்த வழியே சென்றுவிட்டான்.

இதனால், ஓ! மன்னா {துரியோதனா}, ஒப்பற்றவரான அந்த விஸ்வாமித்ரர் அங்கேயே காத்திருந்தார். அந்த உணவைத் தனது தலையில் வைத்து, தன் கரங்களால் அதைத் தாங்கிப் பிடித்தவாறே, காற்றை மட்டுமே உண்டு வந்த அந்தக் கடும் நோன்பு கொண்ட தவசி {விஸ்வாமித்ரர்}, கட்டையைப் போலத் தனது ஆசிரமத்திலேயே நின்றார். அப்படி அவர் {விஸ்வாமித்திரர்} அங்கே நின்று கொண்டிருந்தபோது, மரியாதை, பெரும் மதிப்பு, பாசம் மற்றும் இனியன செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட காலவர் என்ற பெயருடைய தவசி, அவருக்கு {விஸ்வாமித்ரருக்குப்} பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.

இப்படியே நூறு {100} வருடம் கடந்ததும், மீண்டும் வசிஷ்டரின் உருவை ஏற்ற தர்மன், உண்ணும் விருப்பத்துடன் கௌசிகரிடம் {விஸ்வாமித்ரரிடம்} வந்தான். அவ்வளவு நாளும் காற்றை மட்டுமே உண்டு, தலையில் உணவுடன் நின்று கொண்டிருந்தவரும், பெரும் ஞானம் கொண்டப் பெரும் முனிவருமான விஸ்வாமித்ரரைக் கண்ட தர்மன், இன்னும் சூடாகவும், புதியதாகவும் இருந்த அந்த உணவை ஏற்றான். அந்த உணவை உண்ட அந்தத் தேவன் {தர்மன் - விஸ்வாமித்திரரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே {O regenerate rishi}, நான் மனநிறைவு கொண்டேன்" என்று சொல்லிச் சென்றுவிட்டான். தர்மனின் அந்த வார்த்தைகளால், க்ஷத்திரியத் தன்மையை விட்டு நீங்கி, அந்தண நிலையை அடைந்ததன் காரணமாக விஸ்வாமித்ரர் மகிழ்ச்சியில் நிறைந்தார். [1]

[1] விஸ்வாமித்ரர் அந்தண நிலைக்கு உயர்ந்த கதை தனிச்சிறப்புடையதாகும். (குசிகனின் மகனான) க்ஷத்திரிய மன்னன் விஸ்வாமித்ரர், அந்தண முனிவரான வசிஷ்டரிடம் சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு கசந்த அனுபவத்தைப் பெற்றார். அந்தண சக்தியின் முன்பு ஆயுதங்களின் அறிவியலால் தாங்கப்பட்ட க்ஷத்திரிய சக்தியும் பலமும் பலனளிக்கவில்லை. தனது தவசக்திகளால் வசிஷ்டர் ஆயிரமாயிரம் துருப்புகளை உண்டாக்கி அந்த க்ஷத்திரிய மன்னனை {விஸ்வாமித்ரரை} வீழ்த்தினார். இப்படிக் கலங்கடிக்கப்பட்ட விஸ்வாமித்ரர், இமயத்திற்குச் சென்று சிவனைத் துதித்தார். அந்தப் பெருந்தேவன் {சிவன்} அங்கே தோன்றினான். விஸ்வாமித்ரர் அவனிடம் {சிவனிடம்} ஆயுதங்களின் முழு அறிவியலில் தனக்குத் திறனேற்பட வேண்டும் என இரந்து கேட்டார். விஸ்வாமித்ரரின் வேண்டுதலுக்கு அந்தத் தேவன் {சிவன்} செவிசாய்த்தான். பிறகு திரும்பி வந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டரிடம் மோத முயன்றார். ஆனால் வசிஷ்டரோ, தனது தண்டத்தை மட்டுமே கொண்டு விஸ்வாமித்ரரின் கடும் ஆயுதங்கள் அனைத்தையும், ஏன் தெய்வீக ஆயுதங்களைக் கூடக் கலங்கடித்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் ஏமாற்றத்தால், விஸ்வாமித்ரர் அந்தணராவதில் தனது இதயத்தை நிலைக்க வைத்தார். தனது நாட்டைத் துறந்து, தனது ராணியுடன் காட்டுக்குள் சென்று கடும் தவங்களை இயற்றினார். பத்தாயிரம் {10000} வருடங்கள் கடந்ததும், படைப்பாளனான பிரம்மா அவர் முன் தோன்றி, அவரை அரசமுனி {ராஜரிஷி} என்று அழைதார். இதனால் மனமுடைந்த அவர், மேலும் கடுமையான தவங்களை அர்ப்பணிப்புடன் செய்தார். இறுதியாக, (மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில்) தர்மனின் உத்தரவால் அந்தப் பெரும் க்ஷத்திரிய மன்னன் {விஸ்வாமித்ரர்} அந்தணரானார். இந்து சாத்திரங்களில், தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன் கடுந்தவங்களால் அந்தணனாவதாகச் சொல்லப்படும் ஒரே நிகழ்வு இதுவே என்கிறார் கங்குலி.

தனது சீடனான தவசி காலவரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், அவரிடம் {காலவரிடம்}, "ஓ! காலவா, நான் உனக்கு விடைகொடுக்கிறேன். நீ விரும்பிய இடத்திற்குச் செல்" என்றார். இப்படித் தனது ஆசானால் கட்டளையிடப்பட்ட காலவர், மிகவும் மகிழ்ந்து, பெரும் பிரகாசம் கொண்ட விஸ்வாமித்ரரிடம் இனிமையான குரலில், "ஆசானாக இருந்த உமது சேவைக்கு நான் இறுதிக்கொடையாக {தக்ஷிணையாக} என்ன கொடுக்க வேண்டும்? ஓ! மதிப்பை அளிப்பவரே {விஸ்வாமித்ரரே}, இந்த இறுதிக் கொடையின் {தக்ஷிணையின்} விளைவாலேயே ஒரு வேள்விகள் வெற்றியடையும். இது போன்று கொடையளிப்பவன் முக்தியை அடைகிறான். உண்மையில், இந்தக் கொடைகளே (ஒருவன் சொர்க்கத்தில் அனுபவிக்கும்) கனிகளாகும் {பலன்களாகும்}. அமைதி குடிகொண்டவனாக அவன் கருதப்படுவான். எனவே, நான் எனது ஆசானுக்கு என்ன கொண்டு வரவேண்டும்? ஓ, அதைச் சொல்லும்" என்று கேட்டார்.

தனது சேவைகளின் மூலமாகக் காலவர் ஏற்கனவே தன்னை வென்றுவிட்டதாக அறிந்த ஒப்பற்ற விஸ்வாமித்ரர் {காலவரிடம்}, "போ, போ" என மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனால், விஸ்வாமித்ரரால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டும், காலவர் மீண்டும் அவரிடம், "நான் என்ன கொடுக்கட்டும்" என்று கேட்டார். காலவர் தரப்பில் இருக்கும் பிடிவாதத்தைக் கண்ட விஸ்வாமித்ரர் சற்றே கோபமடைந்து, இறுதியில், "எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. அவை ஒவ்வொன்றும் சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையாக இருக்க வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு காது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஓ! காலவா, தாமதிக்காதே, போ" என்றார் {விஸ்வாமித்திரர்}.


Sunday, August 03, 2014

கந்தனுக்கு அமுதூட்டிய அன்னையர்! - வனபர்வம் பகுதி 225

The mothers who nursed Skanda!  | Vana Parva - Section 225 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுவாகா ஸ்கந்தனிடம் தானே அவனது தாய் என்பதைச் சொன்னது; ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியரைத் தள்ளிவைத்தது; அனைத்தையும் அறிந்த விஸ்வாமித்திர் ஸ்கந்தனைத் தஞ்சமடைந்து பிறப்புச் சடங்குகளைச் செய்து வைத்தது; தேவர்கள் இந்திரனிடம் ஸ்கந்தனைக் கொல்லும்படி சொல்வது; இந்திரன் அஞ்சுவது; லோகமாதாக்கள் ஸ்கந்தனிடம் சென்றது; அவனைத் தங்களது பிள்ளையாகச் சுவீகரித்து அமுதூட்டியது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பலமிக்க, உயர்ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} பிறந்த போது, பல்வேறு வகையான அச்சம் தரும் நிகழ்வுகள் நடந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புள், வெப்பம் மற்றும் குளிர், மேலும் இதுபோன்ற முரண்பட்ட ஜோடிகளின் இயல்புகள் தலைகீழாக மாறின. கோள்கள், திசைப்புள்ளிகள், ஆகாயம் ஆகியன வெளிச்சத்தால் ஒளிர்ந்தன. பூமியும் கதறத் தொடங்கியது. உலக நன்மையை விரும்பும் முனிவர்களும் கூட இந்தப் பயங்கர அதிசயங்களை எல்லாப் புறமும் கண்டு, அண்டத்தின் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இதயப்பூர்வமாக முனைந்தனர். சைத்திரரத வனத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும், "ஏழு முனிவர்களின் ஆறு மனைவிகளுடன் கூடிய அக்னியினால் நமக்கு இந்த மிக மோசமான நிலை ஏற்பட்டது" என்றனர்.


அந்தத் தேவி {சுவாகா} பறவை உருவை அடைந்ததைக் கண்ட பிறர், "இந்தத் தீமை ஒரு பறவையால் ஏற்பட்டது" என்றனர். எவருமே சுவாகாதான் இந்தத் தீங்குக்குக் காரணமானவள் என்பதை நினைக்கவில்லை. ஆனால் (புதிதாகப் பிறந்த) ஆண்பிள்ளை தனதென்று கேள்விப்பட்ட அவள் {சுவாகா} ஸ்கந்தனிடம் சென்றாள். படிப்படியாக அவனிடம் அவளே அவனது {ஸ்கந்தனின்} அன்னை என்ற உண்மையை வெளிப்படுத்தினாள். அந்த ஏழு முனிவர்களும், (அவர்களுக்கு) ஒரு பலமிக்க மகன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டனர். அந்தக் காட்டில் வசிக்கும் அனைவரும் {முனிவர்களின் மனைவியரான} அறுவரும்தான், அந்தப் பிள்ளை பிறக்கக் காரணம் என்று சொல்லி எதிர்த்ததால், அம்முனிவர்கள், வழிபடத்தகுந்த அருந்ததியைத் தவிர்த்துத் தங்கள் ஆறு மனைவியரையும் தள்ளி வைத்தார்கள் {divorced என்கிறார் கங்குலி}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு முனிவர்களிடம் சுவாகா, "துறவிகளே {சப்தரிஷிகளே}, இந்தப் பிள்ளை என்னுடையவன். உங்கள் மனைவியர் இவனுக்குத் தாயில்லை" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

அந்த ஏழு முனிவர்களின் வேள்விகள் முடிந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்திரர், அக்னி தேவன் காமத்தால் துன்பப்பட்டபோது, அவனை {அக்னியை} அவனறியாது பின்தொடர்ந்து சென்றார். எனவே, நடந்தது என்ன என்பது அனைத்தையும் அவர் {விஸ்வாமித்திரர்} அறிவார். மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பாதுகாப்புக் கோரியவர்களில் முதல் மனிதன் அவரே. மஹாசேனனுக்கு தெய்வீக துதிகளைக் காணிக்கையாக்கிய பிறகு, பிள்ளைப்பருவத்திற்குரிய, பிறப்பு சார்ந்த பதிமூன்று மங்களச் சடங்குகளும் அந்தப் பெருமுனிவரால் {விஸ்வாமித்திரரால்} அந்தப் பிள்ளைக்குச் {ஸ்கந்தனுக்குச்} செய்யப்பட்டன. பிறகு உலகத்தின் நன்மைக்காக அவர், ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனுக்குரிய நற்பண்புகளை {அவனுக்கு} அறிவித்தார். சேவல், சக்தி தேவி மற்றும் ஸ்கந்தனின் தொண்டர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகளை நடத்தி வைத்தார். {சேவலைக் கொடியாகவும், சக்தியை வேலாகவும், தொண்டர்களைப் பரிவாரங்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சடங்குகளைச் செய்வித்தார்}. இந்தக் காரணத்திற்காக அவர் அந்தத் தெய்வீக இளைஞனுக்கு மிகவும் பிடித்தமானவராக ஆனார். அந்தப் பெரும் முனிவர் {விஸ்வாமித்திரர்}, அந்த ஏழு முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்}, சுவாகா மாற்றுரு கொண்டதைச் சொல்லி, அவர்களது மனைவியர் அப்பாவிகள் என்பதையும் சொன்னார். ஆனால், அந்த ஏழு முனிவர்களும் இதை அறிந்து கொண்ட பிறகும் கூடத் தங்கள் துணைகளை நிபந்தனையற்ற முறையில் கைவிட்டனர்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தனின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட தேவர்கள் வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, "ஓ! சக்ரா {இந்திரா}, தாமதமின்றி அந்த ஸ்கந்தனைக் கொல், அவனது பராக்கிரமம் தாங்க முடியாததாக இருக்கிறது. அவனை நீ அழிக்கவில்லையென்றால், அவன் நம்முடன் கூடிய மூவுலகங்களையும் வென்று, உன்னை வீழ்த்தி, தானே தேவர்கள் தலைவன் ஆகிவிடுவான்" என்றனர். மனதால் குழம்பிய சக்ரன், அவர்களிடம், "இந்தப் பிள்ளை பெரும் பராக்கிரமத்தைக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் தனது பலத்தைக் கொண்டு அண்டத்தைப் படைத்தவனையே {பிரம்மாவையே} இவன் அழித்துவிடுவான். எனவே, அவனிடம் செல்லத் துணிய மாட்டேன்" என்றான். அதற்குத் தேவர்கள் {இந்திரனிடம்}, "உன்னிடம் ஆண்மையில்லாததால் நீ இவ்வகையில் பேசுகிறாய். இந்த அண்டத்தின் பெரும் அன்னையர் {லோகமாதாக்கள்} இன்று ஸ்கந்தனிடம் செல்லட்டும். அவர்கள் எப்படிப்பட்ட சக்தியையும் அடக்குவார்கள். அதன் பிறகு இந்தப் பிள்ளைக் கொல்லப்படட்டும்" என்றனர். அந்தத் தாய்மாரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் {லோகமாதாக்கள்} சென்றுவிட்டனர். ஆனால் அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஊக்கமிழந்து, அவன் வெல்லப்பட முடியாதவன் என்று கருதி, அவனை {ஸ்கந்தனை} தஞ்சம் அடைந்து, அவனிடம் {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே, நீ எங்கள் (வளர்ப்பு) மகனாவாய். நாங்கள் உன்னிடம் பாசத்தால் நிறைந்திருக்கிறோம். உனக்குப் பால் கொடுக்க விரும்புகிறோம் {desirous of giving thee suck}. இதோ எங்கள் மார்புகளில் பால் சுரக்கிறது" என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, அவர்களது முலையுண்ண விரும்பி, அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களது கோரிக்கைகளை ஏற்றான். பிறகு அந்தப் பலசாலிகளில் பலசாலியானவன் {ஸ்கந்தன்} தனது தந்தையான அக்னி தன்னை நோக்கி வருவதைக் கண்டான். நல்லது அனைத்தையும் செய்யும் அந்தத் தேவன், அவனது தாயார்களுடன் இருந்த தனது மகனால் உரிய முறையில் மதிக்கப்பட்டு, அவனை {ஸ்கந்தனை} வளர்க்க அவனது பக்கத்திலேயே தங்கினான். அந்தத் தாய்மாரில் கோபத்துக்குப் பிறந்தவள் [1], {குரோதசமுத்பவை} கைகளில் சூலத்தை ஏந்தி, தனது சொந்த வாரிசைக் காப்பது போலவே ஸ்கந்தனைக் கண்காணித்தாள். {லோஹிதம் என்கிற} கடலின் மகளானவள் {கரூரை}, சிவப்பு நிறத்துடன், எளிதில் கோபம் கொள்பவளாக இருந்தாள். இரத்தத்தை உண்டு வாழும் அவள், மஹாசேனனை {கந்தனை} மார்போடு அணைத்து தாயைப் போல அவனுக்குப் பாலூட்டினாள். அக்னி, பல பிள்ளைகள் தன்னைத் தொடர, ஆட்டுவாய்க் கொண்ட ஒரு வணிகனைப் போலத் தன்னை மாற்றிக் கொண்டான். தன் வசிப்பிடமான அந்த மலையில் பொம்மைகளைக் கொண்டு அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனைத்} திருப்தி செய்யத்தொடங்கினான்.

[1] தெய்வமாக உருவகப்படுத்தப்பட்ட கோபம் = குரோதசமுத்பவை
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, August 12, 2013

மன்னன் கல்மாஷபாதன்! - ஆதிபர்வம் பகுதி 178

Kalmashapada! | Adi Parva - Section 178 | Mahabharata In Tamil

(சைத்ரரத பர்வத் தொடர்ச்சி)

கந்தர்வன் தொடர்ந்தான், "ஓ பார்த்தா, இக்ஷவாகு குலத்தில் பிறந்த கல்மாஷபாதன் என்றொரு மன்னன் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லாத வீரத்துக்குச் சொந்தக்காரனாக இருந்தான். ஒரு நாள் அம்மன்னன், வேட்டையாட விரும்பி தனது தலைநகரைவிட்டுக் கானகத்திற்குச் சென்று பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும் (தனது கணைகளால்) துளைத்தான். அந்த ஆழ்ந்த கானகத்தில், அந்த மன்னன் பல காண்டாமிருகங்களையும் வீழ்த்தினான். இந்த விளையாட்டில் நெடுநேரம் ஈடுபட்டு மிகவும் களைப்படைந்த அந்த ஏகாதிபதி, கடைசியாக தனது துரத்தலைக் கைவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.


சக்தி கொண்ட பெரும் விசுவாமித்ரர், சிறிது காலத்திற்கு முன் இந்த ஏகாதிபதியைத் தனது சீடனாக ஏற்க விரும்பினார். அப்படிப்பட்ட அந்த ஏகாதிபதி, பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து கானகத்தில் முன்னேறி வரும்போது, சிறப்பு மிகுந்த வசிஷ்டரின் மகனான, முனிவர்களில் சிறந்தவர் ஒருவர் அதே வழியில் அவனுக்கு எதிர்பட்டார். போரில் எப்போதும் வெற்றிவாகையே சூடிவந்த அந்த மன்னன், வசிஷ்ட குலத்தை வளரச் செய்யும் சக்திரி என்ற பெயர் கொண்ட வசிஷ்டரின் நூறு மகன்களில் மூத்த மகனைக் கண்டான். அம்மன்னன் அவரைக் கண்டு, "எங்கள் வழியில் இருந்து விலகி நில்லும்" என்றான். முனிவர் அந்த ஏகாதிபதியிடம் இணக்கமான சமாதானமான முறையில் இனிமையாக, "ஓ மன்னா, இது எனது வழி. மன்னர்கள் எப்போதும் அந்தணர்களுக்கு வழி உண்டாக்க வேண்டும் என்பதே அற நெறியின் நிலைத்த விதியாகும். இதுவே தர்மம் மற்றும் கடமைக்கான அனைத்து நீதிகளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது" என்றார். இப்படி அந்த இருவரும் மாறிமாறி தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, "விலகி நில்லும், விலகி நில்லும்" என்றே சொல்லிக் கொண்டிருந்தனர். தர்மத்தின் வழியைத் தனது வழியாகக் கொண்ட அந்த முனிவரும் வழிகொடுக்கவில்லை. பெருமையும் கோபமும் கொண்ட அந்த அரசனும் வழி கொடுக்கவில்லை. இதனால் அந்த முனிவரின் மீது கோபம் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், வழியும் கொடுக்காமல், அவரை கசையால் அடித்து ராட்சசன் போல நடந்து கொண்டான். இப்படி அந்த ஏகாதிபதியால் கசையால் அடிக்கப்பட்ட அந்த வசிஷ்டரின் மகனான{சக்திரி} முனிவர்களில் சிறந்தவர், கோபத்தால் தனது உணர்வை இழந்து, விரைவாக அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனை {கல்மாஷபாதனை} "ஓ மன்னர்களில் இழிந்தவனே, நீ ஒரு துறவியிடம் ராட்சசனைப் போல நடந்து கொண்டதால், இந்நாள் முதல் நீ மனித சதையை உண்டு வாழும் ராட்சசனாக மாறுவாய். மன்னர்களில் இழிந்தவனே, ஆகையால் நீ இந்த மனித உருவம் பாதிக்குமாறு உலகம் முழுவதும் சுற்றித் திரிவாய்" என்று சபித்தார், இப்படி சக்திரி என்ற அந்த பெரும் வீரம் கொண்ட முனிவர், மன்னன் கல்மாஷபாதனிடம் பேசினார்.

இந்நேரத்தில், அந்த ஏகாதிபதியும், வசிஷ்டரின் மகனும் இருந்த அந்த இடத்திற்கு விசுவாமித்ரர் வந்தார். ஏற்கனவே கல்மாஷபாதனைச் சீடனாக ஏற்பதில் விசுவாமித்ரருக்கும் வசிஷ்டருக்கும் இடையில் ஒரு பிணக்கு இருந்தது. ஓ பார்த்தா {அர்ஜுனா}, கடும் விரதங்கள் இருந்த, பெரும் சக்தி கொண்ட விசுவாமித்ரர் அவ்விருவரையும் (அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தனது ஆன்ம பார்வையால் கண்டு) அணுகினார். ஓ பாரதா {அர்ஜுனா}, விசுவாமித்ரர் தனது நன்மையை விரும்பி, அந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அரூபமாக {Invisible} இருந்து நடக்கும் சம்பவங்களைக் கவனித்து வந்தார். அந்த சாபம் உச்சரிக்கப்பட்டவுடன், அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுக்கு இவர் வசிஷ்டரின் மகன் என்பதும், வசிஷ்டருக்கு இணையான சக்தி கொண்டவர் இவர் என்பதையும் அறிந்து கொண்டான். சக்திரியால் சபிக்கப்பட்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், அந்த முனிவரைச் சாந்தப்படுத்த எண்ணி அவரிடம் தாழ்மையாக வேண்ட ஆரம்பித்தான்.

ஓ குருக்களின் தலைவா, விஸ்வாமித்திரர், மன்னனின் மனநிலையை அறிந்து கொண்டு (தான் நினைத்த காரியம் மாறிப் போகுமே என்றெண்ணி) அந்த மன்னனின் உடலில் புகும்படி, ஒரு ராட்சசனை ஏவினார். கிங்கரன் என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசன், சக்திரியின் சாபத்திற்குக் கட்டுப்பட்டும், விசுவாமித்ரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் அந்த ஏகாதிபதியின் உடலில் இறங்கினான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் அந்த ஏகாதிபதி வந்துவிட்டான் என்பதை அறிந்த அந்த முனிவர்களில் சிறந்தவரான விஸ்வாமித்திரர், அந்த இடத்தை விட்டு அகன்று அங்கிருந்து சென்று விட்டார்.

"சிறிது நேரம் கழித்து, ஓ பார்த்தா, அந்த ஏகாதிபதி, அந்த ராட்சசனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அவனது முழு கட்டுப்பாட்டிற்குள் சென்று, தனது உணர்வுகளை இழந்தான். அந்த நேரத்தில், ஒரு அந்தணன் அம்மன்னனை கானகத்தில் கண்டார். மிகுந்த பசியோடு இருந்த அந்த அந்தணர், அந்த மன்னனிடம் இறைச்சியுடன் கூடிய உணவை இரந்து கேட்டார். நண்பர்களை மகிழ்விக்கும் அந்த அரசமுனி கல்மாஷபாதன், அந்த அந்தணரிடம், "இங்கேயே இரும், ஓ அந்தணா, சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன். நான் அப்படி வரும்போது நீர் விரும்பும் உணவை நான் கொடுக்கிறேன்" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு அந்த ஏகாதிபதி சென்றுவிட்டான். ஆனால் அந்த அந்தணர் அங்கேயே இருந்தார். அந்த உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னன் சில மணி நேரங்களுக்கு தன் விருப்பப்படி மகிழ்ச்சியாக உலவிவிட்டு, கடைசியாகத் தனது உள்ளறைக்குள் நுழைந்துவிட்டான்.

நடு இரவில் விழித்த அந்த மன்னன், தான் கொடுத்த உறுதி நினைவுக்கு வந்து, தனது சமையற்காரனை அழைத்து, கானகத்தில் தங்கியிருக்கும் அந்தணரிடம் தான் கொடுத்த உறுதியைச் சொல்லி, "அங்கே சென்று அவருக்கு உணவும் இறைச்சியும் கொடுத்து உபசரி" என்றான்.

கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படிக் கட்டளையிடப்பட்ட அந்தச் சமையற்காரன் இறைச்சி தேடி வெளியே சென்றான். இறைச்சி கிடைக்காமல் வருத்தப்பட்டு, மன்னனிடம் திரும்பி வந்து, தனது தோல்வியைச் சொன்னான். ராட்சசனின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஏகாதிபதி, எந்த மனவுறுத்தலும் இல்லாமல் மறுபடியும் மறுபடியும், "மனித இறைச்சியை அவருக்கு உணவாகக் கொடும்" என்றான். அதற்கு அந்த சமையற்காரனும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, (மன்னனுக்குக் கட்டுப்பட்ட) மரண தண்டனை கொடுப்பவர்களிடம் சென்று மனித இறைச்சியை வாங்கி, அதைக் கழுவி, முறையாகச் சமைத்து, வேக வைத்த அரிசி சோறால் அதை மூடி, ஆன்ம நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த அந்தணருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். ஆனால், அந்த அந்தணர்களில் சிறந்தவர், தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டு, உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்து, கோபத்தால் கண்கள் சிவக்க, "மன்னர்களில் இழிந்த இவன் எனக்கு புனிதமற்ற, உண்ணத் தகுதியற்ற உணவைக் கொடுத்ததால், அந்தப் பாவி, இதே போன்ற உணவை விரும்புபவனாக ஆகட்டும். சக்திரி சபித்தது போல இவன் மனித இறைச்சியில் விருப்பம் கொண்டு, பாவியாக இந்த உலகம் முழுவதும் சுற்றி, அனைத்து உயிர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பான்" என்று சொன்னார். ஆகையால், அச்சாபம் இரண்டாவது முறையாக அந்த மன்னன் மீது விழுந்து, மிகவும் பலமிக்கச் சாபமாகியது. இதனால், உடனே அந்த மன்னன் ராட்சச மனநிலை கொண்டு, தனது உணர்வுகளை விரைவாக இழந்தான்.

சிறிது காலம் கழித்து, ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், தனக்குள் இருக்கும் ராட்சசனால் தனது மொத்த உணர்வுகளையும் இழந்து, தனக்குச் சாபமிட்ட சக்திரியைக் கண்டு, "இந்த இயல்புக்குமிக்க சாபத்தை நீர் எனக்கு உச்சரித்தமையால், உம்மைக் கொன்றே நான் மனித இறைச்சியை உண்பதை ஆரம்பிக்கிறேன்" என்று சொன்னான்.

இப்படிச் சொன்ன அந்த மன்னன், ஒரு புலி தனக்குப் பிடித்த இரையை அடித்துத் உண்பது போல உடனடியாக சக்திரியைக் கொன்று தின்றான். சக்திரி இப்படிக் கொல்லப்பட்டு உண்ணப்பட்டதைக் கண்ட விசுவாமித்திரர், வசிஷ்டரின் மற்ற மகன்களுக்கு எதிராகவும் அந்த ராட்சசனைத் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தார். கோபம் கொண்ட சிங்கம், சிறு மிருகங்களை அடித்து உண்பது போல, அந்த ராட்சசன் சக்திரிக்கு இளையவர்களான, சிறப்புவாய்ந்த வசிஷ்டரின் மற்ற மகன்களையும் விழுங்கினான். தனது மகன்கள் தொடர்ச்சியாக இறந்ததற்குக் காரணம் விசுவாமித்ரர்தான் என்பதை அறிந்த வசிஷ்டர், ஒரு பெரும் மலை பூமியைத் தாங்குவது போல, பொறுமையாக அனைத்துத் துயரத்தையும் தாங்கிக் கொண்டார். அந்த முனிவர்களில் சிறந்தவர், அந்த புத்திசாலிகளில் முதன்மையானவர், (கோபம் கொண்டு) குசிக இனத்தை {விசுவாமித்ரரின் இனம்} அழிக்க எண்ணாமல், தனது உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்த, அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், மேரு மலையின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் அந்த கற்பாறைகள் நிறைந்த தரை, பஞ்சுப் பொதி போல அவரைத் தாங்கியது. ஓ பாண்டுவின் மைந்தனே {அர்ஜுனா}, தான் கீழே விழுந்ததனால் இறக்க வில்லை என்பதை அறிந்த அந்த சிறப்புமிகுந்தவர், நெருப்பை வளர்த்து, அதற்குள் இறங்கினார். ஆனால், அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததே தவிர, அவரைப் பொசுக்கவில்லை. ஓ எதிரிகளை அழிப்பவனே, அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு அவருக்கு குளிர்ச்சியாக இருந்தது.

பிறகும் துன்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீளாத அந்தப் பெரும் முனிவர், கடலைக் கண்டு, தனது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு, அதன் நீரில் விழுந்தார். ஆனால், அலைகள் அவரை விரைவாகக் கரையில் சேர்த்தன. கடைசியாக, கடும் நோன்புகள் நோற்ற அந்த அந்தணர் {வசிஷ்டர்} தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் எவ்வகையிலும் வெற்றிபெறாமல், இதயத்தில் துயர் நிறைந்து, தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

Sunday, August 11, 2013

விஸ்வாமித்திரர் அந்தணரா? - ஆதிபர்வம் பகுதி 177

Is Viswamitra a Brahmana | Adi Parva - Section 177 | Mahabharata In Tamil

(சைத்ரரத பர்வத் தொடர்ச்சி)

வைசம்பாயனர் சொன்னார், "பாரதர்களில் காளையான அர்ஜுனன், கந்தர்வனின் இவ்வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டான். கந்தர்வன் தொடர்ந்தான், "ஒரு காலத்தில், மன்னர் விஸ்வாமித்திரர் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது, களைப்பாலும், தாகத்தாலும் மிகவும் பலவீனமானார். களைப்படைந்த அந்த ஏகாதிபதி, வசிஷ்டரின் ஆசிரமத்தை வந்தடைந்தார். அந்த அருளப்பட்ட சிறப்பு வாய்ந்த முனிவர் மன்னர் விஸ்வாமித்திரர் வருவதைக் கண்டு, அந்த மனிதர்களில் சிறந்தவரை {விஸ்வாமித்ரரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டார். ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு, முகத்தையும், கால்களையும் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியாவும், வனத்தில் விளையும் கனிகளையும், தெளிந்த நெய்யையும் கொடுத்து வணங்கினார். அந்த சிறப்புவாய்ந்த முனிவரிடம் {வசிஷ்டரிடம்} விரும்பியதைக் கொடுக்கும் ஒரு பசு இருந்தது. அந்தப் பசுவிடம், "இதைக் கொடு" என்று கேட்டதும், அவரிடம் கேட்டதை உடனே கொடுத்துவிடுவாள்.அவள் கானகத்தில் விளையும் பல பழங்களையும், தானியங்களையும், பாலையும், ஆறு வகை {சுவைகளில்} ரசங்களையும், அமுதத்தைப் போன்ற பல பொருட்களையும் கொடுத்தாள். ஓ அர்ஜுனா, குடிக்கும் வகையிலும், சாப்பிடும் வகையிலும், நக்கிச் சாப்பிடும் வகையிலும், உறிஞ்சிச் சாப்பிடும் வகையிலும் பல பண்டங்களையும், பலதரப்பட்ட மதிப்புமிக்க ரத்தினங்களையும், பலதரப்பட்ட ஆடைகளையும் கொடுத்தாள். இந்த விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டு, அந்த ஏகாதிபதி பெரிதும் வழிபடப்பட்டார். இதனால், தனது அமைச்சர்களுடனும்,  சேனைகளுடனும் கூடிய அந்த மன்னர், மிகவும் திருப்தியடைந்தார். ஆறு உயர்ந்த {மேலெழுந்த} உறுப்புகளையும், அழகான விலா மற்றும் தொடைகளையும், ஐந்து அகலமான உறுப்புகளையும், தவளையைப் போன்ற கண்களையும், அழகான உருவத்தையும், பருத்த {பால் சுரக்கும்} மடிகளையும், குற்றமற்ற நேர்த்தியான உயர்ந்த காதுகளையும், அழகான கொம்புகளையும், நன்றாக வளர்ந்த தலையையும் கழுத்தையும் கொண்டிருத அந்தப் பசுவைக் கண்டு அந்த ஏகாதிபதி {விஸ்வாமித்திரர்} மிகவும் வியந்தார்.

ஓ இளவரசனே {அர்ஜுனா}, அந்த காதியின் மகன் {விஸ்வாமித்திரர்}, அனைத்தையும் கண்டு திருப்தியடைந்து, நந்தினி என்ற அந்தப் பசுவை வெகுவாகப் புகழ்ந்து அந்த முனிவரிடம், "ஓ அந்தணரே, ஓ பெரும் முனிவரே, பத்தாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டோ அல்லது எனது நாட்டைப் பெற்றுக் கொண்டோ, இந்த நந்தினியை எனக்குக் கொடும். {இப்பசுவைக் கொடுத்துவிட்டு} எனது நாட்டை அடைந்து மகிழ்ச்சியடையும்" என்றார்.

விஸ்வாமித்ரரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்டர், "ஓ பாவங்களற்றவரே, தேவர்கள், விருந்தினர்கள், பித்ருகள் மற்றும் எனது வேள்விகளின் காரியத்திற்காகவே நான் இந்தப் பசுவை என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். உமது நாட்டையே நீர் கொடுத்தாலும், அதற்கு மாற்றாக நான் நந்தினியைக் கொடுக்க மாட்டேன்" என்றார். அதற்கு விஸ்வாமித்திரர், "நானோ க்ஷத்திரியன், நீரோ கல்விக்கு ஆன்மிகத்திற்கும் உம்மை அர்ப்பணித்திருக்கும் ஒரு அந்தணர். ஆன்மாவைத் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைதியான அந்தணர்களுக்கு பெரிதான சக்தி ஏதாவது இருக்குமா? பத்தாயிரம் பசுக்களை நான் உமக்குக் கொடுக்க முன் வரும்போதும், நான் விரும்பியதை நீர் எனக்குக் கொடுக்காவிட்டால், நான் எனது வர்ணத்தின் பழக்கத்தைக் கைவிட்டு, இப்பசுவை பலவந்தமாக எடுத்துச் செல்வேன்" என்றார்.

அதற்கு வசிஷ்டர், "நீர் பெரும்பலம் கொண்ட க்ஷத்திரியனும் பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியும் ஆவீர். நீர் விரும்பியதை விரைவாகச் செய்யும். அதன் உரிமை குறித்துக் கருதாதீர்" என்றார்.

கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படி வசிஷ்டரால் சொல்லப்பட்ட விசுவாமித்ரர், ஓ பார்த்தா, பிறகு, அன்னத்தைப் போன்றும், நிலவைப் போன்றும் வெண்ணிறம் கொண்ட அந்தப் பசுவான நந்தினியை கசையால் அடித்து, மேலும் பலவாறாகத் துன்புறுத்தி பலவந்தமாக இழுக்க முயன்றார். ஓ பார்த்தா, அந்த அப்பாவி நந்தினி, சிறப்புமிகுந்த வசிஷ்டரை அணுகி தனது முகத்தை உயர்த்தி பாவமாகப் பார்த்தாள். கடுமையாகத் துன்புறுத்தப்பட்டும், அவள் அந்த முனிவரின் ஆசிரமத்தைவிட்டு அகல மறுத்தாள்."

"அவளது துன்பத்தைக் கண்ட வசிஷ்டர், "ஓ இனிமையானவளே, நீ தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறாய். நான் உனது கதறலைக் கேட்கிறேன். ஆனால், ஓ நந்தினி, விஸ்வாமித்திரர் உன்னை பலவந்தமாக இழுத்துச் செல்லும்போது, சதா மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு அந்தணனான நான் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்.

கந்தர்வன் தொடர்ந்தான், "பிறகு, ஓ பாரத குலத்தின் காளையே, விஸ்வாமித்ரரையும், அவரது படைகளின் காட்சியையும் கண்டு பயந்து போன நந்தினி, அந்த முனிவரை {வசிஷ்டரை} இன்னும் அருகில் சென்று அணுகி, "ஓ சிறப்பானவரே, அப்பாவியான என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர். விஸ்வாமித்ரரின் படையினரால் கடுமையாகக் கசைகளால் அடிபடும் என்னை தலைவன் இல்லாதவள் {முதலாளி இல்லாதவள்} போலப் பரிதாபகரமாக ஏன் கதறவிடுகிறீர்?" என்று கேட்டாள். அழுது கொண்டு, துன்பத்திலிருக்கும் நந்தினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர், தனது பொறுமையை இழக்காமல், தனது மன்னிக்கும் நோன்பிலிருந்தும் விலகாமல், "ஒரு க்ஷத்திரியனின் பலம் உடலில் இருக்கிறது. ஒரு அந்தணனின் பலம் அவனது மன்னிக்கும் தன்மையிலிருக்கிறது. நான் எனது மன்னிக்கும் தன்மையை விட முடியாத காரணத்தால், ஓ நந்தினி, நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அங்கு செல்" என்றார். அதற்கு நந்தினி, "ஓ சிறப்பு மிகுந்தவரே, நீ என்னைக் கைவிடுகிறீரா என்ன? நீர் என்னைக் கைவிடாமல், ஓ அந்தணரே, என்னை பலவந்தத்தின் காரணமாக எங்கும் அழைத்துச் செல்ல முடியாது" என்றாள்.

வசிஷ்டர், "ஓ அருளப்பட்டவளே, நான் உன்னைக் கைவிடவில்லை! உன்னால் முடியுமென்றால், நீ இங்கேயே இரு! தடிமனான கயிறுகளால் கட்டப்பட்டு, அதனால் பெரிதும் பலவீனமடைந்து, உனது இளம் கன்று இழுத்துச் செல்லப்படுகிறது! அதோ பார்" என்றார்.

கந்தர்வன் தொடர்ந்தான், "பிறகு வசிஷ்டரின் பசு, அவ்வார்த்தையைக் கேட்டு,  கழுத்தை மேல்நோக்கி அசைத்து, தனது தலையை உயர்த்தி, பார்க்க பயங்கரமாக மாறியது.

தொடர்ந்து அடிக்கப்பட்ட அந்தப் பசு கோபத்தால் கண்கள் சிவக்க, விசுவாமித்ரரின் படைகளை எல்லா பக்கங்களிலும் தாக்கிற்று. கசையடியால் துன்புறுத்தப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடி, கண்கள் சிவக்க அவளுக்கு கோபம் அதிகமாகியது. கோபத்தால் எரிந்த அந்த நந்தினி, மதிய நேர சூரியன் போல உக்கிரமாகக் காணப்பட்டாள். அவள் எரியும் நிலக்கரியாலான பெரும் நெருப்பை தனது வாலிலிருந்து மழையெனப் பொழிந்தாள். சில நேரம் கழித்து, அவளது வாலிலிருந்து, பல்ஹவர்களின் படையை உற்பத்தி செய்தாள்.. அவளது {பால் கொடுக்கும்} மடியிலிருந்து திராவிடர்கள் மற்றும் சகர்கள் படையை உற்பத்தி செய்தாள். தனது கருப்பையிலிருந்து யவனர்கள் படையையும், சாணத்திலிருந்து சபரர்களையும், சிறுநீரிலிருந்து காஞ்சிப் படைகளையும் {காஞ்சிபுர அரசர்களைச்{பல்லவ அரசை} சொல்கிறார்களோ!}, தனது எல்லா புறங்களிலிருந்தும் மற்ற சபரர்களையும், தனது வாயின் உமிழ்நீரிலிருந்து பௌந்தரர்களையும், கிராதர்களையும், மற்ற யவனர்களையும், சின்ஹலர்களையும் {சிங்களர்களா?}, மிலேச்ச குடிகளான, கசர்கள், சிபுகர்கள், சீனர்கள் {சீன தேசத்தவர்}, ஹூனர்கள், கேரளர்கள் {சேரர்களா?} மற்றும் பல மிலேச்ச படைகளையும் உற்பத்தி செய்தாள்.

பல தரப்பட்ட சீருடைகளில் இருந்த அந்த மிலேச்சர்களின் படைகளிடம், அவர்கள் பிறக்கும்போதே பலதரப்பட்ட ஆயுதங்களும் உண்டாயிற்று. இவை யாவும் விசுவாமித்ரரின் கண் முன்பே அரங்கேறி, அந்த ஏகாதிபதியின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த மிலேச்சர்களின் படை எவ்வளவு பெரியது என்றால், விசுவாமித்ரரின் ஒரு சிப்பாயைத் தாக்க அந்த மிலேச்ச படையிலிருந்து அறுவரோ, எழுவரோ பாய்ந்தனர். அடர்த்தியான ஆயுதங்களின் மழையால் விசுவாமித்ரரின் படை சிதுறுண்டு பல திக்குகளுக்கும் ஓடியது. இவை யாவும் விஸ்வாமித்ரரின் கண்ணெதிரிலேயே நடைபெற்றது. ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனன்}, வசிஷ்டரின் படை கோபத்தால் உந்தப்பட்டு இருந்தாலும், விஸ்வாமித்திரர் படையினரில் ஒருவரின் உயிரையும் எடுக்கவில்லை. அந்த ஏகாதிபதியின் படையை நந்தினி சாதாரணாமாக ஓட விட்டாள். அந்தப் படை இப்படியே எந்தப் பாதுகாப்பையும் காணாமல் இருபத்தியேழு மைல்களுக்கு {மூன்று யோஜனை தூரம் என்று வேறு ஒரு பதிப்பு {கங்குலி அல்ல} சொல்கிறது} ஓடின. விஸ்வாமித்திரர் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, அந்தணர்களின் சக்தியை உணர்ந்து, க்ஷத்திரிய சக்தியை வெறுத்து, "ச்சீ... ச்சீ... க்ஷத்திரிய சக்தி சிறுமை கொண்டது. அந்தண சக்தியே உண்மையான சக்தி! பலத்தையும், பலவீனத்தையும் ஆராய்ந்து, ஆன்மீகமே உண்மையான பலம் என்பதை உணர்ந்தேன்" என்று சொன்னார். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {விஸ்வாமித்திரர்}, தனது பெரிய நாட்டைக் கைவிட்டு, அனைத்து இன்பங்களுக்கும் தனது முதுகைக் காட்டி {அனைத்து இன்பங்களையும் துறந்து}, தனது மனதை ஆன்மிகத்தில் நிலைக்க வைத்தார். ஆன்மிகத்தில் வெற்றிமுடிசூடி, மூவுலகங்களையும் தனது ஆன்ம நோன்புகளின் வெப்பத்தால் எரித்து, அனைத்து உயிர்களையும் அதனால் துன்பத்துக்குள்ளாக்கினார். இப்படியே அந்த விஸ்வாமித்திரர் அந்தணன் ஆனார். கடைசியில், குசிகனின் மைந்தன் {விசுவாமித்ரர்}, இந்திரனுடன் சேர்ந்து (தேவலோகத்தில்) சோம பானம் அருந்தினார்.

****************************************************************
இக்கட்டத்தில் பல பதிப்புகளில் வசிஷ்டரும் விஸ்வாமித்திர்ரும் நேரடியாகப் போர் செய்ததாகப் படித்திருக்கிறேன். ஆனால், கங்குலியின் The Mahabharataவில் அப்படி வரவில்லை. 

Saturday, August 10, 2013

ஒரு துளி பனி கூட வானிலிருந்து விழவில்லை! - ஆதிபர்வம் பகுதி 176

Not even a drop of dew fell from the sky | Adi Parva - Section 176 | Mahabharata In Tamil

(சைத்ரரத பர்வத் தொடர்ச்சி)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ கந்தர்வா, தெய்வீக ஆசிரமங்களில் வசித்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகிய இருவருக்குமிடையில் எப்போது பகை ஏற்பட்டது? இதைக்குறித்து எங்களுக்கு அனைத்தையும் சொல்." என்று கேட்டான்.

அதற்கு கந்தர்வன் மறுமொழியாக, "ஓ பார்த்தா {அர்ஜுனா}, வசிஷ்டரின் கதை மூவுலகங்களாலும் புராணமாக மதிக்கப்படுகிறது. நான் அதை முழுமையாக உரைக்கும்போது கேட்டுக் கொள். ஓ பாரத குலத்தின் காளையே, கன்யாகுப்ஜத்தில், குசிகரின் மகனாகிய உலகப் புகழ் கொண்ட பெரும் மன்னன் காதி என்று ஒருவன் இருந்தான். அந்த அறம்சார்ந்த காதிக்கு எதிரிகளை அழிக்கும் விஸ்வாமித்திரர் என்ற மகன் இருந்தார். அவர் பெரிய படையையும், பல மிருகங்களையும், பல வாகனங்களையும் வைத்திருந்தார். ஆழ்ந்த காடுகளின் வழியாக மான் வேட்டைக்காக  தனது அமைச்சர்களுடன் சேர்ந்து விஸ்வாமித்திரர் உலவுவது வழக்கம்.  அந்த அழகிய இடத்தில் (தவச் சக்தி கொண்ட) வசிஷ்டரின் துணையுடன் அனுகூலமான தேவன் விவஸ்வத் {சூரியன்} தவமியற்றிக்கொண்டிருந்தான்.


Thursday, April 04, 2013

விஷ்வாமித்திரரும் மேனகையும் | ஆதிபர்வம் - பகுதி 72

Viswamitra and Menaka! | Adi Parva - Section 72 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 8)

பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்ரரை மயக்கிய மேனகை; மேனகை பெற்றெடுத்த மகள்; சகுந்தலையைக் கண்ட கண்வர்; சகுந்தலையின் பெயர்க்காரணம்; துஷ்யந்தனிடம் தன் கதையைச் சொல்லி முடித்த சகுந்தலை...

கண்வர் தொடர்ந்தார், "அவளால் {மேனகையால்} இப்படிச் சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்து இடங்களையும் அணுக வல்லவனிடம் (காற்று தேவன் வாயுவிடம்), முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன் மேனகை இருக்கும் நேரத்தில், அவளோடு இருக்குமாறு ஆணையிட்டான்.(1) பிறகு, மருட்சியுடையவளும், அழகானவளுமான மேனகை, அந்த ஓய்வில்லத்தில் நுழைந்து, தன் தவங்களால் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்தவரான விஷ்வாமித்திரர் இன்னும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அங்கே கண்டாள்.(2) முனிவரை {விஷ்வாமித்திரரை} வணங்கிய அவள் {மேனகை}, அவர் முன்பாக விளையாடத் தொடங்கினாள். சரியாக அதே நேரத்தில் மாருதன் {வாயு தேவன்}, சந்திரனைப் போன்ற வெண்மையுடன் கூடிய அவளது {மேனகையினது} ஆடைகளைக் களவாடிச் சென்றான்.(3) அதன்பேரில் பெரும் நாணத்தில் நிறைந்த அவள் {மேனகை}, ஏதோ தான் மாருதனிடம் {வாயு தேவனிடம்} மிகவும் எரிச்சல் அடைந்ததைப் போலவும் தன் ஆடையைப் பிடிக்க ஓடினாள்.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top