Kala and Karma! | Anusasana-Parva-Section-01 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 01)
பதிவின் சுருக்கம் : அழிவுக்குத் தானே காரணமாக அமைந்ததை எண்ணி வருந்திய யுதிஷ்டிரன்; கௌதமி என்ற கிழவி, அர்ஜுனகன் என்ற வேடன், மிருத்யு மற்றும் யமன் ஆகியோருக்கிடையில் மரணம் குறித்து நிகழ்ந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பிதாமஹரே}, மன அமைதி என்பது நுட்பமானதென்றும், பல்வேறு வடிவங்களைக் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. நான் உமது உரையாடல்கள் அனைத்தையும் கேட்டேன், ஆனாலும் மன அமைதி எனதாகவில்லை. ஓ! ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும்?(2) ஓ! வீரரே உமது உடல் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதையும், கடுங்காயங்களால் அவதியுறுவதையும் கண்டு, நான் ஏற்படுத்தியிருக்கும் தீமைகளைக் குறித்த எண்ணத்தால் நான் மன அமைதியை அடையத் தவறுகிறேன் {எனக்கு ஆறுதல் உண்டாகவில்லை}.(3) ஓ! மனிதர்களில் பெரும் வீரரே, அருவிகளில் நீர் பெருகியிருக்கும் ஒரு மலையைப் போலக் குருதியால் குளித்திருக்கும் உமது உடலைக் கண்டு, மழைகாலத்துத் தாமரையைப் போல நான் துயருறுகிறேன்.(4)