Siva adoration of Tandi rishi! | Anusasana-Parva-Section-16 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 16)
பதிவின் சுருக்கம் : தண்டி முனிவர் பரமசிவனைப் புகழ்ந்து செய்த துதியை கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு...
உபமன்யு {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஐயா, கிருத யுகத்தில் தண்டி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட முனிவர் ஒருவர் இருந்தார். இதயத்தில் பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய அவர், தியான யோகத்தின் துணையுடன் பத்தாயிரம் {10000} வருடங்கள் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார். அத்தகைய இயல்புக்கு மீறிய அர்ப்பணிப்பின் மூலம் அவர் பெற்ற கனி அல்லது வெகுமதியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக. மஹாதேவனைக் காண்பதில் வென்ற அவர், சில பாடல்களைப் பாடி அவனைப் புகழ்ந்தார்.(1,2) மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனுமான அந்தப் பரமாத்மாவை தவங்களின் துணையுடன் சிந்தித்து, ஆச்சரியத்தில் நிறைந்த தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(3) "உயர்ந்தவனாகச் சாங்கியர்களால் விளக்கப்படுபவனும், யோகியரால் நினைக்கப்படுபவனும், முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், இருப்பிலுள்ளவை அனைத்தின் ஆசானும், அண்டத்தின் படைப்புக்கும், அழிவுக்கும் காரணன் என்று கல்விமான்களால் சொல்லப்படுபவனும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவனும், அனைத்தையும் விட உயர்ந்தவனும், பிறப்பற்றவனும், அனைத்துப் பொருட்களின் தலைவனும், தொடக்கமும், முடிவும் அற்றவனும், உயரந்த பலத்தைக் கொண்டவனும், உயர்ந்த இன்பநிலையில் இருப்பவனும், பிரகாசமானவனும், பாவமற்றவனுமான புருஷனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்" என்றார்.(4-6)