Wednesday, May 28, 2014

கண்டேன் கங்கையை - 3 - வியாச தரிசனம்

துளசி காட் -  நான் சொல்லும் மரம் அதோ தெரிகிறது பாருங்கள். அங்குதான் 
ஹனுமான் காட் இருக்கிறது - இப்படம் இண்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்டது
அந்த வெளிநாட்டுக்காரர் தனது வேலையை முடித்ததும். அவரிடம் நாங்கள் விசாரிக்க ஆரம்பித்தோம். அப்போது ஒரு இளைஞன், வயது 25க்குள் தான் இருக்கும். துறவி போல இருந்தான். அடர்த்தியான கருகரு தாடியும் நீண்ட கேசமும் கொண்டிருந்தான். கண்கள் தெளிவுடன் வெண்மையாக, கூரான பார்வை கொண்டவனாக இருந்தான்.

நாங்கள் அந்த வெளிநாட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "நீங்க தமிழா?" என்றார். "ஆம்" என்றார் விக்ரம் சீனிவாசன். "தமிழ்நாட்டுல எங்கேர்ந்து?" என்றான். "திருவொற்றியூர்" என்றேன் நான் பெருமிதமாக. "நான் தண்டையார்ப்பேட்டைதாங்க! தமிழ்நாடு எப்படி இருக்குது. நல்லா இருக்க மாட்டானுகளே. எல்லா வேசி பெத்த மகனுங்க {வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கின்றன}. நான் அசிங்கமா பேசுறேனு நெனக்காதீங்க. நான் எங்கம்மாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்" என்றான்.

தமிழ்நாட்டுக்காரர்களை வேசிமக்கள் என்று சொன்ன அவன் நாவை அறுக்க வேண்டும் என்று ஏற்பட்ட கொலைவெறி, அவன் 'என் தாயையும் சேர்த்துச் சொல்கிறேன்' என்றதும், 'ஏதோ மனம் பாதிக்கப்பட்டிருக்கிறான் போல' என்று அவன் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டது. அவன் மீது ஏற்பட்ட கோபத்தாலோ என்னவோ திரு.ஜெகதீஷ் அவர்களும், திரு.ஜெவேலன் அவர்களும், "நாங்க ரூமுக்குப் போறாம்" என்று சொல்லி கிளம்பிவிட்டனர். "கல்யாணலாம் ஆயிடுச்சா? அதுக்குள்ள இப்படி ஆகி இங்க வந்துட்டீங்க? இல்ல…" என்று அந்த இளைஞனிடம் கேட்டார் சீனிவாசன். அவன், அந்த வெளிநாட்டுக்காரரிடம் இருந்து சில்லத்தை வாங்கி, ஆழமாக இழுத்து புகையை வெளியிட்டபடி, "தமிழ்நாட்டுல எல்லாம் வேசிங்க. என் கேர்ல் பிரண்ட் ஒரு ரஷ்யாக்காரி, ஒரு வாரத்துக்கு முன்னாடி ஏதோ பேசிட்டிருக்கும்போது அவள அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டேன். இங்க சும்மாதான் வந்தேன். மனசே கேக்கல. இப்போ அவ டில்லில ஏதோ ஒரு ஆஸ்பிட்டல்ல படுத்துருக்காளாம். அவளப்போய்ப் பாத்து, அவளையும் கூப்பிட்டுக்கு நேபால் போகணும்" என்றான்.

"மீசை, தாடி, காவி வேட்டியெல்லாம் பாத்துட்டு சாமியாரோனு நினைச்சோம்" என்றார் சீனிவாசன். "அது சும்மா வச்சிருக்கேங்க. இப்ப டில்லி போகும்போது எடுத்துடுவேன். ஷேவ் பண்ணனும்" என்றான். "இவர் எந்த நாட்டுக்காரர்னு கேட்டுட்டிருந்தோம். அதுக்குள்ள நீங்க வந்தீங்க" என்றார் சீனிவாசன். அவன் அந்த வெளிநாட்டுக்காரரிடம் நல்ல நுனிநாக்கு ஆங்கிலம் பேசினான். அந்த வெளிநாட்டுக்காரர் "இஸ்ரேல்" என்றார். "எதுக்கு இங்க வந்தாராம்?" என்று கேட்டார் சீனிவாசன், "சும்மா நம்ம நாட்ட சுத்திப்பாக்க வந்தானாம். இப்ப இங்க இவனுக்கு ரொம்பப் புடுச்சிப் போச்சாம். அவன் நாட்டுக்குப் போக மாட்டானாம்" என்றான் அந்த இளைஞன். சிறிது நேரத்தில் அந்த வெளிநாட்டுக்காரர் கிளம்பினார்.

இன்னும் ஒருவன் வந்து சாமியாரிடம் பவ்யமாக நின்றான். அவன் காலில் செருப்பு அணிந்திருப்பதைக் கண்ட அந்தச் சாமியார் கோபத்துடன் அவனை முறைத்துச் சைகை காட்டினார். அவன், தனது காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு, அந்தச் சாமியாரின் முன்பு அடக்கமாக அமர்ந்தான். அந்தச் சாமியார் கஞ்சாவை ஏதோ புனிதமான பொருள் போல, சுற்றி எதையோ தெளித்து, மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே சில்லத்தில் அடைத்தார். மீண்டும் அதே போல மூன்று முறை இழுத்துவிட்டு, பின்பு வந்தவனிடம் அதைக் கொடுத்தார்.

இணையத்தில் இருந்து எடுத்த படம்
"என்ன இப்படிப் பப்ளிக்கக் கஞ்சா அடிக்கிறீங்களே" என்று நான் அந்தத் தமிழ்ந்நாட்டுக்காரனிடம் கேட்டேன். "இது இங்க {காசியில்} லீகல்ங்க. பாருங்க எந்தப் போலீசும் புடிக்கமாட்டான். ஆனா காசி விட்டுத் தாண்டுனீங்கனா இது இல்லீகல்" என்றான். "இதோ இருக்கானே இந்தச் சாமி. இவன்லாம் சாப்பிடவே மாட்டான். கஞ்சா மட்டுந்தான்" என்றான். இருமிக்கொண்டிருந்த அந்தச் சாமியார், உடனே தனது வயிற்றை உள்ளிழுத்துக் காட்டினார். அவருக்குத் தமிழ் தெரியவில்லை. ஆனால் குறிப்புகளை வைத்துப் புரிந்து கொண்டார் போல.

"எப்போ தமிழ்நாட்டுக்கு?" என்று கேட்டோம். "அங்க நான் எதுக்குங்க வரணும். நான் அங்க வரவே மாட்டேன்" என்று சொன்ன அந்த இளைஞன் அங்கிருந்து வேகமாக நடையைக் கட்டினான்.

அதற்கு மேல் அங்கிருக்கச் சலிப்புத்தட்டவே, மீதம் இருந்த நாங்கள் மூவரும் {நான், சீனிவாசன் மற்றும் பிரதீஷ்} எங்களுக்குள் பேசியபடியே மெதுவாக மடம் இருக்கும் திக்கு நோக்கி நடந்தோம். மடத்தில் மதிய உணவு தயாராக இருந்தது. உண்டு முடித்ததும் கைக்கழுவ வெளியே வந்த போது நடிகர் எஸ்.வீ.சேகர் வந்திருப்பதாக எங்களுக்கு உணவளித்த அந்த மடத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் சொன்னார். அவர் இருந்ததாகச் சொன்ன இடத்தை நோக்கினேன். அவரது பின்புறம் தெரிந்தது. அப்படியே மேலே அறைக்குச் சென்று சற்றுச் சாய்ந்தேன். எனக்கு முன்பே திரு.ஜெகதீஷ், திரு.ஜெயவேலன், திரு.ஆர்.கே. ஆகியோர் படுத்திருந்தனர். "அடுத்து இன்னைக்கு எங்கங்க போறோம்" என்று ஜெயவேலன் அவர்களிடம் கேட்டேன். "வியாசர் கோவிலுக்குங்க" என்றார். என்முகத்தில் பரவசக்கோடுகள் விரிவதை நிச்சயம் அவர் கண்டிருப்பார் என நினைக்கிறேன்.


எஸ்.வீ.சேகருடன் திரு.சீனிவாசன்
ஆர்.கே. அவர்கள் படுத்தபடியே முழுமஹாபாரதத்தின் ஆதிபர்வத்தைப் படித்துக் கொண்டிருந்தார். "ஏங்க கோயிலுக்கு வரும்போது அத {ஆதிபர்வம் புத்தகத்தை} நிச்சயம் எடுத்துட்டு வந்துடுங்க" என்றார் திரு.ஜெயவேலன். சரி என்று தலையாட்டினார் ஆர்.கே. அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கீழே சென்ற எங்கள் குழுவின் பெண்கள் மேலே வந்து "எஸ்.வீ.சேகர் வந்திருக்கிறார். அவரோட ஒரு போட்டோ எடுத்துட்டு வந்தோம்" என்றனர். "அப்படியா" என்று கேட்ட திரு.சீனிவாசன் அவர்கள் கீழே சென்று அவருடன் புகைப்படம் எடுத்து வந்தார். எனக்குச் சிறு வயது முதலே பிரபலமானவர்கள் என்றால் அவர்களை அணுக ஒரு தயக்கம்தான். அது இப்போதும் தொடர்கிறது. எஸ்.வீ.சேகரிடம் பேச வேண்டும் என்ற ஆவல்தான். இருந்த போதிலும் ஏதோ என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தது. கடைசி வரை நான் போகவே இல்லை. அப்படியே சற்று நேரம் கண் அயர்ந்தோம். 4 மணி இருக்கும். "படகோட்டி வந்துட்டான்" என்ற குரல் கேட்டு எழுந்தோம். வெளியே சென்று ஆளுக்கொரு காபியைக் குடித்துவிட்டு விரைவாக மீண்டும் அறைக்கு வந்தோம்.
திரு.ஜெயவேலன், நான் மற்றும் திரு.ஜெகதீஷ்
அனைவரும் தயாராக இருந்தனர். ஹனுமான் காட்டில் {Hanuman Ghat} இருந்து மீண்டும் ஒரு கங்கைப் பயணம். காலையில் தெற்கில் இருந்து வடக்காக மற்றுமொரு மேற்கு கரைக்கே சென்றோம். ஆனால் இப்போதோ வடக்கில் இருந்து தெற்காகக் கிழக்கு கரையை நோக்கிச் சென்றோம். அதாவது முழுக் கங்கையின் அகலத்தை அப்போது கடந்தோம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கங்கை புதியவளாகவே தெரிந்தாள். தொடத் தொட ஆனந்தம் தான். பருகப்பருக தேவாமிர்தம் பருகிய மனக்களிப்புதான். தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த திருப்தி. இம்முறை கங்கை நீரை ஒரு செவனப் பாட்டிலில் பிடித்து வைத்தார் திரு.சீனிவாசன். இதைப் பார்த்ததும், நானும் ஆர்கேவும் மற்றும் இரண்டு பாட்டில்களில் பிடித்துக் கொண்டோம்.

பாலத்தைப் படகு கட ந்து கொண்டிருக்கிறது
படகு ஒரு பேண்டூன் பாலத்தை அடைந்தது. அப்பாலத்தைத் தற்காலிகமாக அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பல இரும்பு டேங்குகளுக்கு மேல் பாலத்தை அமைத்திருந்தார்கள். படகோட்டி அந்த டேங்குகளுக்கு இடையில் படகை எடுத்துச் செல்ல முயற்சித்தார். படகு சற்றுப் பெரியதாக இருந்ததால் பயந்தார். ஆகையால், அந்தப் பாலத்தின் அருகிலேயே கிழக்குக் கரையில் படகை நிறுத்தினார். படித்துறை ஏதும் இல்லையாகையால், படகில் இருந்து தரைக்குக் குதிக்கும் உயரம் அதிகமாக இருந்தது. மேலும் படகு நீருக்குள் நின்றதால் கால் நனையாமல் வர அனைவரும் சிரமப்பட்டோம். ஒவ்வொருவராகப் பொறுமையாகக் கரையேறி, கரைக்கு மேலே இருந்த சாலையை அடைந்தோம்.

சாலையோரம் தர்ப்பூசணி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அங்கே நின்று தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு நடக்க ஆரம்பித்தோம். அது ராம் நகர். சாலையில் வலது பக்கத்தில் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். கங்கையில் பிடித்த மீன்கள். நிறைய மீன்கள் அங்கிருந்தன. ஒவ்வொன்றும் உயிருள்ளவை. பாத்திரங்களில் நீர் நிரப்பி, அதில் உயிருடன் மீனை வைத்திருக்கிறார்கள். அனைத்தும் பெரிய பெரிய மீன்கள். அதைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் ராம் நகர் கோட்டை வந்தது. அக்கோட்டை 1750ல் கட்டியதாம். ஸ்படிகப் பாறைகள் கொண்டு முகலாய கட்டடக் கலையில் அது கட்டப்பட்டிருந்தது.

ராம் நகர் கோட்டை
கிழக்கு வாயில் கொண்ட அந்தக் கோட்டைக்குள் நுழைந்தோம். அங்கிருந்த மியூசியத்தைக் கண்டுவிட்டு, வெறு வழியாக வந்த போது விட்டத்தில் இருந்த வவ்வால்கள் எங்களை வரவேற்றன. சத்தமிடாமல் கோட்டையைக் கடந்து சென்றோம். வெளியில் கங்கை காட்சியளித்தாள். அங்கிருந்து வலப்புறத்தில் வியாசரின் கோவில் இருந்தது. அங்கு வந்ததும் தான் ஞாபகம் வந்தது, ஆர்கே "புத்தகத்தை எடுத்தது போல நினைவில்லையே". சரி நமக்குக் கொடுப்பனை இல்லை. இதைக் கேட்டு அவரை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நினைக்கும்போதே, "ஐயோ, புக்க எடுத்துட்டு வரலீங்களா" என்று ஜெயவேலன் அவர்கள் கேட்டார். "ஐயோ மறந்துட்டேங்க" என்றார் ஆர்கே. இதில் முதல் குற்றவாளி நான்தான். சென்னையில் இருந்தே புத்தகத்தை எடுத்துச் செல்ல மறந்தேன். இப்போது கிளம்புவதற்குச் சற்று முன் சொன்னதையும் மறந்து இங்கு வந்துவிட்டேன். இப்போதெல்லாம் மறதி எனக்கு ஒரு நோயாகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. இப்படி நேரும் போதுதான் மறதியைச் சபிக்கத் தோன்றுகிறது. நினைத்துப் பார்த்தால் நாங்கள் அப்போது நின்று கொண்டிருந்த இடமே சபிக்கப்பட்ட இடம்தான்.

இந்த இடத்திற்கு ஏற்பட்ட சாபத்தைக் குறித்துச் சொல்லியாக வேண்டும். ஒரு காலத்தில், வேதங்களைப் பகுத்து, பிரம்மசூத்திரம், புராணங்கள் மற்றும் பெரும் இதிகாசமான மஹாபாரதத்தை எழுதிய வியாசர் காசிக்குத் தனது சீடர்களுடன் வந்தார். அக்காலத்தில் அவர் பெரும் புகழ்வாய்ந்தவராக இருந்தார். காசி விஸ்வநாதர் அவரது குணத்தைச் சோதிக்க எண்ணங்கொண்டார். வியாசரும் அவரது சீடர்களும் உணவை இரந்து பெற சென்றனர். யாரும் அவர்களுக்குப் பிச்சையிடவில்லை. அந்த அண்ணப்பூரணியின் நகரத்தில் அவர்கள் பசியுடன் உறங்கினர். இதே நிலை ஏழு நாட்களுக்குத் தொடர்ந்தது. வியாசர் மிகுந்த கோபம் கொண்டு காசியைச் சபிக்க எண்ணங்கொண்டார்.

அவ்வேளையில் தேவி அண்ணப்பூரணி முதிர்ந்த இல்லத்தரசியாக அவர் முன்பு தோன்றினாள். சுவைமிகுந்த உணவை அவர்களுக்குப் பிச்சையாக இட்டாள். அவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவ்வேளையில் விஸ்வநாதர் அங்குத் தோன்றினார். காசியைச் சபிக்க எண்ணங்கொண்ட வியாசரை காசிக்குள் நுழைய தடைவிதித்தார். வியாசர் மிகவும் பணிந்து வேண்டிக் கேட்டார். அதற்குச் சிவன், அவர் {வியாசர்} கங்கையின் மறுகரையில் வாழலாம் என்று அருள் கூர்ந்தார். தேவி அண்ணப்பூரணி தனது மகன் மேல் கருணை கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள். அதற்கிணங்கிய காசி விஸ்வநாதர் மங்களகரமான நேரங்களில் மட்டும் வியாசர் காசிக்குள் நுழையலாம் என்று தடையைத் தளர்த்தினார். இது கந்த புராணத்தின் 95வது பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. கங்கையின் கிழக்குக் கரையும் சபிக்கப்பட்டே இருந்தது. அங்கே மக்கள் யாரும் குடியமரவில்லை. இப்போதும் கிழக்குக் கரையில் அதிக மக்கள் நெருக்கம் கிடையாது.

வியாசர் கோயில் பின்னணியில் நான்
ஏமாற்றம், கவலை அனைத்தும் அந்த ஒரு நொடி மட்டும் தான் எனக்கு ஏற்படும். பிறகு சமாதானமாகிவிடுவேன். இக்குணம் எனக்கும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான் வளர்ந்த விதம் அதற்கு முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். அடுத்த நொடியே புத்தகத்தை எடுத்து வரவில்லையே என்ற கவலை பறந்தோடியது. வியாச தரிசனம் கிட்டப்போகிறது என்ற ஆவலில் இருந்த நான் நண்பர்களுடன் அக்கோவிலை நோக்கி நடந்தேன். அது ஒரு சிறு கோவில்தான். படிகள் ஏறி கோவிலுக்குள் சென்றதும் வடக்கு நோக்கிய மூன்று லிங்கங்கள் காட்சியளித்தன. ஒருவர் விஸ்வேஸ்வரர், ஒருவர் வியாசர், ஒருவர் சுகர் என்று அங்கிருந்த பூசாரி சொன்னார். மூன்று லிங்கங்களில் நடு லிங்கத்தின் அருகில் அமரக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பூசாரி இந்தியிலேயே பேசினார். அவர் பேசியது ஒன்றும் விளங்கவில்லை. பணம் வைக்கச் சொன்னார் பூசாரி. நாங்கள் வைத்த பணம் போதாது அதிகம் வேண்டும் என்றார். "நீ வாங்கினால் வாங்கிக் கொள். வாங்காவிட்டால் போ" என்று சொல்லிய திரு.ஜெகதீஷ் அவர்கள், லிங்கத்தின் அருகில் பணத்தை வைத்துவிட்டு, "ஓம் நமச்சிவாய" என்று சொல்லி எழுந்தார். நானும் பணம் வைத்து மனதார வேண்டிக் கொண்டு, வெளியே வந்து கோவிலை வலம் வந்தேன்.

கோவிலைவிட்டு வெளியே வந்து கோட்டைவாயிலின் முன்பு நின்றபடி கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். சிறிது நேரம் வியாசரைப் பற்றியும் மஹாபாரதத்தைப் பற்றியும் பேசினோம். மாலை மங்கியது. கங்கையின் கரையில் இருந்த கட்டிடங்களைத் தொட்டுவிடுவதைப் போலக் கதிரவன் கீழே இறங்கினான். அங்கிருந்து அனைவரும் புறப்பட்டோம்.


கங்கைக்கரைக்கு வந்து படகில் ஏறினோம். தூரத்தில் விளக்குகள் எரிந்தன. அடுத்ததாக நாங்கள் கங்கா ஆரத்தியைக் காணச் சென்றோம். படகிலிருந்தே பார்க்கலாம் என்று படகோட்டி சொன்னார். காசியில் தினமும் மாலை 6.30 மணிக்கு மேல் கங்கையை வழிபடும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாங்கள் சென்ற 8.5.2014 அன்று ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கங்கா ஆரத்தியில் கலந்து கொள்வதாக இருந்தது. கங்கா ஆரத்தி நடைபெறும் தசாஸ்வமேத காட்டை அடைந்தோம். அவ்வாயிலை நெருங்க நெருங்க தீபங்கள் ஒவ்வொன்றாக ஏற்றப்படுதவது தெளிவாகத் தெரிந்தது. ஆங்காங்கே சில ஆம் ஆத்மி குல்லாக்கள் தெரிந்தன. கேஜ்ரிவால் வந்து விட்டாரா என்ன என்று தெரியவில்லை. எங்கள் படகு முன்பு ஐம்பது படகுகள் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

கங்கா ஆரத்தி
நிறைய பேர் கங்கா ஆரத்தியை படகில் இருந்தபடியே பார்த்தனர். தீபங்களின் வரிசையும், அதை நேர்த்திக் கடன் செய்பவர்கள் விளக்கை வலமாகக் கொண்டு செல்லும் விதமும் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒரு படகில் இருந்து மறு படகுக்குத் தாவி வியாபாரிகள் அருந்துவதற்கான நீரும் விளக்குகளும் விற்றனர். தீபமேற்றி கங்கையில் விட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம். எங்கள் குழுவில் இருந்த பெண்களும் விளக்கு வாங்கி, அதில் சுடரேற்றி கங்கையில் விட்டார்கள். எங்கள் பெண்கள் விளக்கேற்றுவதைப் பார்த்தவிட்டு கங்கையில் கரையில் செய்யப்படும் சடங்குகளைக் காணத் திரும்பினேன். ஒரு பகுதியில் நிறைய ஆம் ஆத்மி குல்லாக்கள் தெரிந்தன. அங்கு பரபரப்பாக இருந்தது. "கேஜ்ரிவால் வந்துவிட்டார் போல" என நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் அங்கிருந்து பார்த்த பிறகு, மீண்டும் படகு ஹனுமான் காட்டை அடைந்தது. அங்கிருந்து மடத்துக்குச் சென்றோம். சாமியார் இருந்த மரத்தடியைப் பார்த்தேன். சிலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் சாமியாரைக் காணோம்.


அறைக்குத் திரும்பி உணவு உண்ட பிறகு, திரு.ஜெயவேலன் அவர்கள் உத்தரபிரதேசத்தின் வரைபடத்தை வைத்துக் கொண்டு, "நாளைக்கு ஒரு நாள் இருக்குங்க. நைட் 11 மணிக்கு டிரெய்ன். வியாச காசி பாத்தாச்சு. நைமிசாரண்யம் பார்த்துட்டா நல்லா இருக்கும். இங்க எல்லாரும் சாரநாத் வழியில இருக்கிற கோயில்களப் பார்க்கப்போறாங்க. நீங்க மட்டும் லக்னோ போய் அங்கிருந்து நைமிசாரண்யத்தப் பாத்துட்டு, நேரா மொகல் சராய் ஸ்டேஷனுக்கு வந்துடுறீங்களா?" என்று கேட்டார். நான், "அப்படியா சொல்றீங்க, சரி!" என்றேன்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!