Wednesday, April 15, 2015

விதுரன் சொன்ன வேடர்கள் கதை! - உத்யோக பர்வம் பகுதி 64

The story of fowlers said by Vidura! | Udyoga Parva - Section 64 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 24) {யானசந்தி பர்வம் - 18}

பதிவின் சுருக்கம் : வேடன் மற்றும் பறவைகளின் கதை; உறவினர்களுடன் பேண வேண்டிய உறவு குறித்து விதுரன் சொன்னது; மலையில் தேனைக் கண்டு, அதை எடுக்கப் போய் இறந்த வேடர்களைக் குறித்து விதுரன் சொன்னது; அர்ஜுனனுடன் துரியோதனன் மோத நினைப்பது விவேகமல்ல என்று விதுரன் சொன்னது...

விதுரன் {திருதராஷ்டிரரிடம்} சொன்னான், “ஓ! ஐயா, ஒருகாலத்தில் காற்றுவாசிகளான இறகு பெற்றவைகளை {பறவைகளைப்} பிடிப்பதற்காக, ஒரு வேடன், தரையில் தனது வலையை விரித்து வைத்தான் என்பதை முதியவர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஒன்றாக வாழ்ந்து வந்த இரு பறவைகள் ஒரே நேரத்தில் அந்த வலையில் சிக்கின. இறகு பெற்ற அந்த உயிரினங்கள் {பறவைகள்} இரண்டும், அந்த வலையைத் தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தன. அவை வானத்தில் பறப்பதைக் கண்ட வேடன், துயரத்திற்கு ஆட்படாமல், அவை பறந்த திசையிலேயே அவற்றைப் பின்தொடர்ந்து {துரத்திச்} சென்றான். அப்போது, அங்கே அருகே வசித்திருந்த ஒரு துறவி, தனது காலை துதிகளை முடித்துக் கொண்டு திரும்பும்போது, பறவைகளைப் பிடிக்க அதன் பின்னே ஓடிக்கொண்டிருந்த வேடனைக் கண்டார்.


அந்தக் காற்றுவாசிகளை {பறவைகளைத்} துரத்திச் செல்லும் பூலோகவாசியைக் {வேடனைக்} கண்ட அந்தத் துறவி, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, ஒரு சுலோகத்தின் மூலம் அவனிடம் பேசினார், "ஓ! வேடா, பூமியில் நடப்பவனான நீ, காற்றுவாசிகளான உயிரினங்கள் இரண்டைத் துரத்திச் செல்வது மிகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் எனக்குத் தோன்றுகிறது" என்றார். அதற்கு அந்த வேடன் {துறவியிடம்}, "ஒன்றாக இருக்கும் இவை இரண்டும் எனது வலையைத் தூக்கிச் செல்கின்றன. எனினும், எப்போது அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனவோ, அப்போது அவை எனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்" என்றான் {வேடன்}.

விதுரன் தொடர்ந்தான், "மரணமடைய விதிக்கப்பட்ட அந்தப் பறவைகள் இரண்டும் விரைவில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டன. அந்த இணை, மடத்தனமாகத் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பூமியில் விழுந்தன. மரண வலைக்குள் சிக்கிய அவை {அந்த பறவைகள்}, தங்களுக்குள் கோபத்துடன் சண்டையிட்டுக் கொண்ட போது, அவை காணாதவகையில் அங்கு வந்த வேடன், அவை இரண்டையும் பிடித்துக் கொண்டான்.

ஒன்றாக உண்பதும், ஒன்றாகப் பேசுவதுமே உறவினர்களின் கடமையாகும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தங்களுக்குள் சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. அன்பு கொண்ட இதயங்களுடன் முதியோருக்காகக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} உறவினர்கள், சிங்கங்களால் பாதுகாக்கப்பட்ட காடு போல வீழ்த்தப்பட முடியாதவர்கள் ஆகிறார்கள். அதே வேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான செல்வத்தை அடையும் மனிதர்கள், கோணல் புத்தியுடன் நடந்து கொள்ளும்போது, தங்கள் எதிரிகளின் செழிப்பிற்கே அவர்கள் பங்களிக்கிறார்கள். ஓ! திருதராஷ்டிரரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உறவினர்கள் என்போர் எரியும் கொள்ளிகளைப் போன்றோராவர். சேர்ந்திருக்கும்போது அந்தக் கொள்ளி சுடர்விட்டு எரியும், பிரிந்தாலோ வெறும் புகைதான் மிஞ்சும். {உறவினர்கள் சேர்ந்திருந்தால் புகழோடு வாழலாம், பிரிந்தால் வெறும் மனப்புகைச்சல்தான் இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்}.

மலையின் மார்பில் நான் கண்ட வேறு ஒன்றை நான் இப்போது உமக்குச் சொல்கிறேன். அதையும் கேட்ட பிறகு, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, உமக்கு நன்மையானது எதுவோ அதைச் செய்யும். நாங்கள் ஒருகாலத்தில், மருத்துவத் தாவரங்கள் மற்றும் குணங்களைக் குறித்து விவாதிக்க விரும்பும் எண்ணற்ற பிராமணர்கள் மற்றும் சில வேடர்களுடன், வடக்கில் இருக்கும் மலைக்கு சென்றோம். வடக்கில் இருக்கும் மலையான கந்தமாதனம் {புதர்களோடு கூடிய} ஒரு தோப்பைப் போலத் தெரிந்தது. தனது மார்பின் அனைத்துப் புறங்களிலும் மரங்களையும், பல்வேறு வகையிலான பிரகாசமான மருத்துவ மூலிகைகளையும் அது {கந்தமாதனம்} கொண்டிருந்ததால், அங்கே சித்தர்களும், கந்தர்வர்களும் வசித்து வந்தனர்.

அங்கே, அந்த மலையில் அணுக முடியாத செங்குத்தான ஒரு பாறையில் ஒரு குடுவையின் அளவில், பிரகாசமான மஞ்சள் நிறத்தில், நிறையத் தேன் இருப்பதை நாங்கள் அனைவரும் கண்டோம். குபேரனுக்குப் பிடித்தமான பானமான அந்தத் தேன், கடும்நஞ்சு கொண்ட பாம்புகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அந்தத் தேனைக் குடித்தால், ஒரு மனிதன் இறவா நிலையை அடையலாம், பார்வையற்ற மனிதன் பார்வையை அடையலாம், முதிர்ந்த மனிதன் இளைஞனாகலாம். மந்திரங்கள் அறிந்த அந்தப் பிராமணர்களால், அந்தத் தேன் குறித்து இவ்வாறே பேசப்பட்டு வந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைக் கண்ட வேடர்கள், அந்தத் தேனை அடைய விரும்பினார்கள். பாம்புகள் நிறைந்த அந்த அணுக முடியாத மலைக்குகையிலேயே அவர்கள் {அந்த வேடர்கள்} அனைவரும் மாண்டுபோனார்கள். அதே வழியில்தான், இந்த உமது மகன் {துரியோதனன்}, போட்டியில்லாமல் இந்த முழு உலகத்தையும் அனுபவிக்க விரும்புகிறான். அவன் தேனைக் காண்கிறான், ஆனால் தனது மடமையால், அந்தப் பயங்கரப் பள்ளத்தை அவன் காணவில்லை.

சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} போரில் மோத துரியோதனன் விரும்புகிறான் என்பது உண்மையே. ஆனால், இவனிடத்தில் பாதுகாப்பாக இருக்கத்தக்க சக்தியையோ ஆற்றலையோ நான் காணவில்லை. அர்ஜுனன், ஒரே தேரில் தனியாகச் சென்று முழு உலகத்தையும் வென்றான். பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரை முன்னணியில் கொண்ட இவனது {துரியோதனனது} படை அர்ஜுனனால் அச்சுறுத்தப்பட்டு, விராட நகரத்தில் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாரும்" என்றான் {விதுரன்}.