The warning of Arjuna! | Udyoga Parva - Section 66 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 26) {யானசந்தி பர்வம் - 20}
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மேலும் என்னென்ன சொன்னான் என்று சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்டது; அர்ஜுனன் பேசிய வார்த்தைகளைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படிச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொன்ன பிறகு, உயர்ந்த அருள் கொண்டவனும், ஞானியுமான திருதராஷ்டிரன், மீண்டும் சஞ்சயனிடம், "ஓ! சஞ்சயா, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பேச்சுக்குப் பிறகு பேசிய அர்ஜுனனின் வார்த்தைளில் இன்னும் உன்னால் சொல்லப்படாதவற்றை எனக்குச் சொல்வாயாக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது", என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வாசுதேவனின் பேச்சைக் கேட்டதும், கட்டுப்படுத்த இயலாதவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனக்குச் சந்தர்ப்பம் வாய்த்த போது, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே இவ்வார்த்தைகளைச் சொன்னான். "ஓ! சஞ்சயரே, சந்தனுவின் மகனான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, திருதராஷ்டிரர், துரோணர், கிருபர், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சோமதத்தன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன், சலன், புருமித்ரன், விவிங்சதி, விகர்ணன், சித்திரசேனன், மன்னன் ஜயத்சேனன், அவந்தியின் இரு தலைவர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன், பூரிஸ்ரவஸ், மன்னன் பகதத்தன், மன்னன் ஜராசந்தன் {ஜராசந்தனின் மகனாக இருக்க வேண்டும்} மற்றும் கௌரவர்களின் நன்மைக்காக அங்கே கூடியிருக்கும் பூமியின் இன்னும் பிற ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள்.
சுடர்விடும் பாண்டவ நெருப்பில், நீர்க்காணிக்கைகளாக அளிக்கப்படவே திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} அவர்களைக் கூட்டியிருக்கிறான். சஞ்சயரே, அப்படிக் கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரின் நலத்தையும் எனது பெயரில் விசாரிப்பீராக. அதேவேளையில், அவரவர் தகுதிக்கேற்றபடி அவரவர்களுக்குரிய மரியாதையை {என் சார்பாக} செலுத்துவீராக.
மேலும், ஓ! சஞ்சயரே, கோபக்காரனும், தீயவனும், பாவ ஆன்மா கொண்டவனும், அதீத பேராசை கொண்டவனும், பாவிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தனது ஆலோசகர்களுடன் கூடியவனுமான அந்த முட்டாள் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் சொல்வதனைத்தையும் அவன் {துரியோதனன்} கேட்குமாறு அனைத்து மன்னர்களின் முன்னிலையிலும் சொல்லும்", என்றான் {அர்ஜுனன்}.
இப்படி முன்னுரை கொடுத்தவனும், கடைக்கண்கள் சிவந்த பெரிய விழிகளுடையவனும், பெரும் அறிவுடையவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்தபடியே, அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான். "உயர் ஆன்மா கொண்ட மது குலத்தலைவன் {கிருஷ்ணன்}, அளவான வார்தைகளால் பேசியதை ஏற்கனவே நீர் கேட்டீர். அவ்வார்த்தைகள் என்னுடையவையுமாகும் என்பதை அங்கே கூடியிருக்கும் மன்னர்களிடம் சொல்லும்.
மேலும் அந்த மன்னர்களிடம் என் சார்பாக இதையும் சொல்லும். "தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி மந்திரங்களாகவும், படையணித் தலைவர்களை நிர்மூலமாக்கும் வில் கரண்டியாகவும், செயல்படும் நெருப்பக்கணைகளால் ஆன போர்க்களம் எனும் பெரும் வேள்வியில், நீர்க்காணிக்கைகள் ஊற்றப்பட வேண்டியதில்லை {மனித உயிர்கள் கொல்லப்பட வேண்டியதில்லை} எனும்படி ஒன்று சேர்ந்து முயற்சியுங்கள். பகைவர்களைக் கொல்பவரான யுதிஷ்டிரர் திருப்பிக் கேட்கும் அவரது பங்கான நாட்டை, உண்மையில் நீங்கள் அவருக்குக் கொடுக்கவில்லையெனில், குதிரைப்படை, காலாட்படை யானைகள் ஆகியவற்றோடு கூடிய உங்கள் அனைவரையும், எனது கணைகளின் மூலமாக, {உடல்விட்டுப்} பிரிந்த ஆவிகளின் அமங்கலமான உலகங்களுக்கு அனுப்பி வைப்பேன்" என்றான் {அர்ஜுனன்}.

பின்பு, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, நான்கு கரங்கள் கொண்ட ஹரியிடமும் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் இருவரையும் வணங்கிவிட்டு, தேவர்களுக்கு இணையான பிரகாசம் கொண்ட உமக்கு, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைத் தெரிவிப்பதற்காகப் பெரும் வேகத்துடன் இங்கே வந்தேன்" என்றான் {சஞ்சயன்}.