Wednesday, April 29, 2015

"செல்வமற்றவன் இறந்தவனே" யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 72அ

Yudhisthira said "A man without weath is dead" | Udyoga Parva - Section 72a | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் –1) 

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் இருந்து சஞ்சயன் சென்ற பிறகு, அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள் என்று ஜனமேஜயன் வைசம்பாயனரிடம் கேட்பது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் பேசிய செய்தியை வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொல்வது; ஐந்து கிராமங்களைக் கூடத் திருதராஷ்டிரர் கொடுக்கவில்லையே என யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் வருந்துவது; கிருஷ்ணனின் பாதுகாப்பை யுதிஷ்டிரன் நாடுவது; செல்வமற்றவன் உயிரோடு இருந்தாலும் இறந்தவனே என்றும், தான் அந்த நிலையிலேயே இருப்பதாக யுதிஷ்டிரன் சொல்வது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "(பாண்டவர் இடத்தை விட்டு அகன்ற) நல்ல சஞ்சயன் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்ற போது, எனது பாட்டன்களான பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். எனவே, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சஞ்சயன் சென்ற பிறகு, நீதிமானான யுதிஷ்டிரன், சாத்வதர்கள் அனைவரின் தலைவனும், தாசார்ஹ குலத்தவனுமான கிருஷ்ணனிடம், "ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே {கிருஷ்ணா}, நண்பர்கள் தங்கள் நட்பைக் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தத் துயர் நிறைந்த காலத்தில் எங்களைக் காப்பதற்கு உன்னைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அளவற்ற கர்வத்தால் நிறைந்திருக்கும் துரியோதனன் மற்றும் அவனது ஆலோசகர்களிடம் எங்களுக்குரிய பங்கை உன்னை நம்பியே நாங்கள் அச்சமற்றுத் திரும்பக் கேட்டிருக்கிருக்கிறோம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, விருஷ்ணிகளின் துயரங்கள் அனைத்திலும் நீயே அவர்களைக் காக்கிறாய். இப்போது பெரும் ஆபத்தில் இருக்கும் பாண்டவர்களையும் காப்பாயாக. அவர்களும் {பாண்டவர்களும்} உனது பாதுகாப்பைப் பெறத் தகுந்தவர்களே" என்றான் {யுதிஷ்டிரன்}.

தெய்வீகமான கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இதோ நான் இருக்கிறேன். நீர் சொல்ல விரும்புவதை என்னிடம் சொல்லும். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் எதையெல்லாம் சொல்வீரோ அவற்றை நான் செய்வேன்" என்றான்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "திருதராஷ்டிரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் நோக்கம் என்ன என்பதை நீ கேட்டாய். ஓ! கிருஷ்ணா, சஞ்சயன் சொன்ன யாவும், திருதராஷ்டிரரின் வார்த்தைகள் என்பது உறுதி. திருதராஷ்டிரரின் ஆன்மா போன்ற சஞ்சயன், அவரது {திருதராஷ்டிரரின்} மனதில் இருப்பதையே பேசினார். தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளையே ஒரு தூதன் பேச முடியும், ஏனெனில் மாறாகப் பேசினால் அவன் கொல்லப்படத் தகுந்தவனாகிவிடுவான். தன்னுடையவை அனைத்தையும் சமமாகப் பாராமல், பேராசையால் உந்தப்பட்ட தீய இதயம் கொண்ட திருதராஷ்டிரர், எங்கள் நாட்டைத் திரும்பக் கொடுக்காமலேயே எங்களிடம் சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்.

உண்மையில், திருதராஷ்டிரர் கட்டளையின் பேரில் நாங்கள் காட்டில் பன்னிரெண்டு {12} வருடங்களையும், மேலும் ஒரு வருடத்தைத் தலைமறைவாகவும், ஓ! தலைவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் எங்கள் உறுதிமொழியில் உறுதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே கழித்தோம். எங்களது உறுதிமொழியில் இருந்து நாங்கள் பிறழவில்லை என்பதை எங்களோடு இருந்த அந்தணர்கள் நன்கு அறிவார்கள்.

பேராசை கொண்ட மன்னர் திருதராஷ்டிரர் க்ஷத்திரிய அறங்களை நோற்க இப்போது விரும்பவில்லை. தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் தீய மனிதர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். சுயோதனனின் {துரியோதனனின்} ஆலோசனைகளுக்குக் கட்டுப்படும் மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பேராசையால் இயக்கப்பட்டு, தனது நன்மையை மட்டும் நாடி, எங்களிடம் உண்மையற்று நடந்து கொள்கிறார்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது தாயையும், நண்பர்களையும் பராமரிக்க இயலாதவனாக நான் இருப்பதைவிட எது துயர்நிறைந்ததாக இருக்க முடியும்?

ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, காசி, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்ய நாட்டவர்களை எனது கூட்டாளிகளாகவும், {கிருஷ்ணனான} உன்னை எனது பாதுகாவலனாகவும் கொண்டிருக்கும் நான், அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தீ, வாரணாவதம், மேலும் ஏதாவது ஒன்றை ஐந்தாவதாகவும் என ஐந்து கிராமங்களை மட்டுமே வேண்டினேன். "ஓ! ஐயா, நாங்கள் பாரதர்களின் அழிவை விரும்பவில்லை. நாங்கள் ஒற்றுமையாக வசிக்கத்தக்க வகையில் எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது நகரங்களையாவது கொடும்" என்றே கேட்டேன். எனினும், தீய மனம் படைத்த திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, உலகத்தின் தலைமைத்தன்மையைக் கருதி அதைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இதை விட வேறு எது துயர் நிறைந்ததாக இருக்கக்கூடும்?

ஒரு மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்து, அங்கேயே வளர்க்கப்பட்ட ஒரு மனிதன், பிறரின் உடைமைகளைக் கவர்ந்தால், அந்தப் பேராசையே அவனது புத்திக்கூர்மையை அழிக்கும்; புத்திக்கூர்மை அழிந்தால், நாணம் தொலைந்து போகும்; வெட்கமற்றுப் போனால் அறம் குறைய வழிவகுக்கும்; அறத்தின் இழப்பு, செழிப்பின் இழப்பைக் கொண்டுவரும்; செல்வத்தின் அழிவு ஒரு மனிதனை நிர்மூலமாக்கும். ஏனெனில், வறுமையே ஒரு மனிதனின் மரணமாகும். மலர்களோ, கனிகளோ அற்ற மரத்தைப் பறவைகள் தவிர்ப்பது போல, உறவினர்களும், நண்பர்களும், அந்தணர்களும் ஒரு ஏழையைத் தவிர்க்கிறார்கள்.

இறந்த உடலைவிட்டு விலகும் உயிர்மூச்சைப் போல, என்னை விழுந்தவனாகக் கருதி இப்படி உறவினர்கள் என்னை ஒதுக்குவதும் என்னுடைய மரணத்தைப் போன்றதே. "இன்று எனக்கு இறைச்சி இல்லை, நாளை எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற எண்ணத்துடனேயே எப்போதும் துயர்த்தில் இருக்கும் ஒருவனின் வாழ்நிலையைவிடத் துயர்மிகுந்தது எதுவும் இல்லை என்று சம்பரன் சொன்னான். செல்வமே உயர்ந்த அறம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே உள்ளது. செல்வமுள்ளவரே உயிரோடு இருப்பவராவர். அதேவேளையில் செல்வமற்றவர்களோ உயிரோடிருப்பினும் இறந்தவர்களே ஆவர்" என்றான் {யுதிஷ்டிரன்}.