The sorrow of Kunti | Udyoga Parva - Section 90b | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –19)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் கைகளில் திரௌபதி அடைந்த அவமானத்தைக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது; அதைவிடப் பெரிய துயரம் தனக்கு வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டது; சூதும் வேட்டையும் பாண்டவர்களுக்குத் தகுமா என்று கேட்டது; தர்மத்தின் நிமித்தமாகப் பாண்டவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்று சொன்னனது; அர்ஜுனன் பிறந்தபோது அசரீரி செய்த அறிவிப்பைச் சொன்னது; நீண்ட நாளாகக் காணாதிருப்பதால் தனக்குத் தன் பிள்ளைகளும், தன் பிள்ளைகளுக்குத் தானும் இறந்ததற்குச் சமமாக இருப்பதாகக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது...
{குந்தி தொடர்ந்தாள்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது மகன்களுக்கு மேலாக, துருபதனின் மகள் {திரௌபதி} எனது அன்புக்குரியவள் ஆவாள். உயர்குலப் பிறப்பும், பெரும் அழகும் கொண்ட அவள் {திரௌபதி} அனைத்து சாதனைகளையும் கொண்டவளாவாள். உண்மை நிறைந்த பேச்சுடன் கூடிய அவள் {திரௌபதி}, தனது மகன்களின் துணையை விட்டு, தனது தலைவர்களின் துணையைத் தேர்ந்தெடுத்தாள். உண்மையில், தனது அன்புக்குரிய மகன்களை விட்டுவிட்டு, பாண்டுவின் மகன்களைப் பின்தொடர்ந்து சென்றாள். ஒரு காலத்தில் பணியாட்களின் பெரிய வரிசையால் காக்கப்பட்டவளும் {பணிவிடை செய்யப்பட்டவளும்}, இன்ப நோக்கம் அனைத்திலும் தனது கணவர்களால் புகழப்பட்டவளும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, மங்கலக்குறிகள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் கொண்டவளுமான அந்தத் திரௌபதி இப்போது எப்படி இருக்கிறாள்?
அக்னிக்கு நிகரான சக்தியைக் கொண்டவர்களும், எதிரிகளை அடிப்பவர்களும், வலிய வில்லாளிகளுமான ஐந்து வீரக் கணவர்களைக் கொண்டிருந்தும், ஐயோ, துருபதன் மகள் {திரௌபதி} அடைந்த துன்பம் பெரியதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பதினான்கு {14} நீண்ட வருடங்களாகப் பாஞ்சால இளவரசியான எனது மருமகளை {திரௌபதியை} நான் காணவில்லை. தொடர் இடர்களுக்கு இரையான அவளும், அவ்வளவு காலம் தன் மகன்களைக் காணவில்லை. இப்படிப்பட்ட நிலையைக் கொண்ட துருபதனின் மகளே {திரௌபதியே}, தடங்கலில்லா இன்பத்தை அனுபவிக்க இயலாத போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, ஒருவன் அனுபவிக்கும் மகிழ்ச்சி, அவனது செயல்களின் கனி அல்ல என்றே தோன்றுகிறது.
வலுக்கட்டாயமாகச் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்ட திரௌபதியை நினைக்கும்போது, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, யுதிஷ்டிரனோ, பீமனோ, நகுலனோ, சகாதேவனோ என் பற்றுக்கு ஆட்படவில்லை. கோபமும், பேராசையும் கொண்ட இழிந்த துச்சாசனன், மாதவிலக்கான காலத்தில் ஒற்றையாடையுடுத்தியிருந்த திரௌபதியை, அவளது மாமனார் {திருதராஷ்டிரரின்} முன்னிலையிலேயே இழுத்துவந்து, குருக்கள் அனைவரின் பார்வைக்கும் அவளை {திரௌபதியை} வெளிப்படுத்தியபோது ஏற்பட்டதைவிடக் கனமான துயரம் எனக்கு வேறு எதுவும் கிடையாது.
அங்கே இருந்தவர்களில் மன்னன் பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன் ஆகியோர் இந்தக் காட்சியால் துளைக்கப்பட்டனர் என்பது அறியப்பட்டதே. ஆனால், அந்தச் சபையில் இருந்தோர் அனைவரைக்காட்டிலும் நான் விதுரனையே வழிபடுகிறேன். கல்வியாலோ, செல்வத்தாலோ ஒருவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவனாகமாட்டான். ஒருவன் தனது மனநிலையாலேயே மதிப்புக்குரியவன் ஆகிறான். ஓ! கிருஷ்ணா, பெரும் புத்திசாலித்தனமும், ஆழ்ந்த ஞானமும் கொண்ட ஒப்பற்ற விதுரனின் குணம், இந்த முழு உலகத்தையும் (அவன் அணிந்திருக்கும்) ஆபரணம் போல அலங்கரிக்கிறது" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வரவால் மகிழ்ச்சியையும், (தனது மகன்கள் நிமித்தமான) சோகத்தாலும் பாதிக்கப்பட்ட பிருதை {குந்தி}, தனது பல்வேறு துயரங்களுக்குமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள். அவள் {குந்தி}, "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பழங்காலத்துத் தீய மன்னர்கள் அனைவரின் தொழிலான சூதும், மான்வேட்டையும், பாண்டவர்களின் மகிழ்ச்சிக்குகந்த தொழிலாகுமா? ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகன்களால் தங்கள் சபையில் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் முன்னிலையில் இழுத்துவரப்பட்டு, மரணத்தைவிடக் கொடுமையான அவமானங்கள் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மீது குவிக்கப்பட்டதையும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது மகன்கள் தங்கள் தலைநகரில் இருந்து விரட்டப்பட்டுக் காட்டில் உலவியதையும், இன்னும் எனது பல்வேறு துயரங்களையும் நினைக்கும்போதெல்லாம் எனக்கு {எனது மனம்} எரிகிறது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு அந்நியரின் வீட்டில் அடைந்து கிடந்து, தங்கள் காலத்தை மறைந்திருந்து கழிக்க வேண்டிய நிலையைக் காட்டிலும் எனக்கோ, எனது மகன்களுக்கோ வேறு எதுவும் அதிக வலியைத் தராது.
என் மகன்களைத் துரியோதனன் துரத்தியது முதல் பதினான்கு {14} வருடங்கள் முழுமையாக முடிந்திருக்கிறது. பாவங்களின் கனிகளை {பலன்களை} துன்பம் அழிக்கும், அறத்தகுதியைச் சார்ந்தே மகிழ்ச்சி இருக்கும் என்றால், இவ்வளவு துன்பங்களுக்குப் பிறகு, மகிழ்ச்சி என்பது எங்களுடையதே ஆகும். (தாய்ப்பாசத்தைப் பொறுத்தவரை) நான் திருதராஷ்டிரர் மகன்களிடமும் எனது மகன்களிடமும் எந்தப் பாகுபாட்டையும் காட்டவில்லை. அந்த உண்மையின் காரணமாகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களது எதிரிகள் கொல்லப்பட்டு, அவர்களால் நாடும் மீட்கப்பட்டு, தற்போதைய கலவர நிலையில் இருந்து வெளியே பாதுகாப்பாக வரும் அவர்களோடு {பாண்டவர்களோடு} உன்னையும் நான் நிச்சயம் காண்பேன். அறத்தை ஒட்டியிருக்கும் உண்மைநிறைந்த நோன்பை நோற்றப் பாண்டவர்கள், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
எனினும், தற்போதைய எனது சோகங்களின் காரியத்தில் நான் என்னையோ, சுயோதனனையோ {துரியோதனனையோ} பழி கூறாமல் எனது தந்தையை {சூரசேனரை} மட்டுமே கூறுவேன். செல்வந்தன் ஒருவன் பணத்தைக் கொடையாகக் கொடுப்பது போல, என் தந்தை {சூரசேனர்}, என்னைக் குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். சிறுபிள்ளையாகக் கைகளில் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த என்னை, உனது பாட்டன் {சூரசேனர்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, தனது நண்பரான ஒப்பற்ற குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். எனது தந்தையாலும், எனது மாமனாராலும் கைவிடப்பட்ட நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, ஓ! மாதவா, தாங்கமுடியாத துயரங்களால் பீடிக்கப்பட்டு, வாழ்வதில்தான் என்ன பயன் இருக்க முடியும்? {பிறந்த இடத்திலும் கைவிடப்பட்டேன், புகுந்த இடத்திலும் கைவிடப்பட்டேன். அப்படிப்பட்ட நான் வாழ்ந்துதான் என்ன பயன்?}.
சவ்யசச்சின் {அர்ஜுனன்} பிறந்த அன்றிரவு, பிரசவ அறையில், உருவமற்ற ஒரு குரல், "இந்த உனது மகன் உலகம் முழுதையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே எட்டும். பெரும் போரில் குருக்களைக் கொன்று, நாட்டை மீட்கும் உனது மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் சேர்ந்து, மூன்று பெரிய வேள்விகளை நடத்துவான்" என்றது. நான் அந்த அறிவிப்பை சந்தேகிக்கவில்லை. படைப்பைத் தாங்கிப்பிடிக்கும் தர்மத்தை {அறத்தை} நான் வணங்குகிறேன். தர்மம் {அறம்} என்பது கட்டுக்கதை {தொன்மம்} அல்ல என்றால், ஓ! கிருஷ்ணா, அந்த உருவமற்ற குரல் சொன்ன அனைத்தையும் நீ சாதிப்பாய்.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனது பிள்ளைகளின் பிரிவைப் போன்ற வலிநிறைந்த துயரை, எனது கணவரின் இழப்போ, செல்வத்தின் இழப்போ, குருக்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட பகையோகூட எனக்கு அளிக்கவில்லை. ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை}, அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை} என் முன்னே காணாமல், என் இதயம் என்ன சமாதானத்தை அடையும்? ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, யுதிஷ்டிரன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} ஆகியோரை பதினான்கு {14} வருடங்களாக நான் காணவில்லை. நீண்ட நாட்கள் காணாமல் போனவர்களை [1] இறந்ததாகக் கருதி மனிதர்கள் ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். நடைமுறைப்படி, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனக்கு எனது பிள்ளைகள் அனைவரும் இறந்தவராவர். அதே போல, நானும் அவர்களுக்கு இறந்தவளாவேன்" {என்றாள் குந்தி}
[1] பழங்காலத்தில் பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக ஒருவரைக் காணவில்லையென்றால், அவரை இறந்தவராகக் கருதுவார்களாம்.