Saturday, June 13, 2015

"பேராசையைக் கைவிடு" என்ற காந்தாரி! - உத்யோக பர்வம் பகுதி 129

"Give up thy avarice" said Gandhari! | Udyoga Parva - Section 129 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –58)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் விதுரனிடம் காந்தாரியை அழைத்துவருமாறு பணித்தது; அங்கே வந்த காந்தாரி, துரியோதனனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கேட்டது; தாயின் சொல்லைக் கேட்க வந்த துரியோதனனிடம் காந்தாரி நன்மொழிகளைச் சொல்வது; பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு, பாதி நாட்டைக் கொண்டு மகிழ்ச்சியாக ஆளும்படி காந்தாரி துரியோதனனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நேரத்தைக் கடத்தாமல், அறவிதிகள் அனைத்தையும் அறிந்த விதுரனிடம் பேசினான். அந்த மன்னன் {திருதராஷ்டிரன் விதுரனிடம்}, "ஓ! குழந்தாய், பெரும் அறிவும், முன்னறிதிறனும் கொண்ட காந்தாரியிடம் சென்று, அவளை இங்கே அழைத்து வா. அவளை {காந்தாரியைக்} கொண்டு நான் இந்தத் தீய இதயம் படைத்தவனிடம் (எனது மகனிடம்) {துரியோதனனிடம்} கோரிக்கை வைப்பேன் {பேசிப் பார்க்கிறேன்}. அவளால் {காந்தாரியால்} அந்தத் தீய இதயம் கொண்ட இழிந்த பாவியைத் தணிக்க முடியுமென்றால், நம்மால் இன்னும்கூட நம் நண்பன் கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியும்.


சமாதானத்தைப் பரிந்துரைத்துப் பேசுவதன் மூலம், பேராசையால் பாதிக்கப்பட்டவனும், தீய கூட்டாளிகளை {நண்பர்களைக்} கொண்டவனுமான இந்த மூடனுக்கு {துரியோதனனுக்குச்} சரியான பாதையைச் சுட்டிக் காட்டுவதில், ஒருவேளை அவள் {காந்தாரி} வெல்லக்கூடும். துரியோதனனால் நடைபெற இருக்கும் இந்தப் படுபயங்கர ஆபத்தை அவளால் விலக்க முடியுமென்றால், மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் பாதுகாக்கப்படவும், சாதிக்கப்படவும் அது {அம்முயற்சி} துணைநிற்கும்", என்றான் {திருதராஷ்டிரன்}.

மன்னனின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விதுரன், திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில், பெரும் முன்னறிதிறன் கொண்ட காந்தாரியை அங்கே அழைத்து வந்தான். பிறகு திருதராஷ்டிரன் காந்தாரியிடம், "ஓ, காந்தாரி, தீய ஆன்மா கொண்ட உனது மகன் {துரியோதனன்}, எனது கட்டளைகள் அனைத்தையும் மீறி, ஆட்சியுரிமையின் மீது தான் கொண்ட ஆசையின் விளைவாக, ஆட்சியுரிமை மற்றும் உயிர் ஆகிய இரண்டையும் தியாகம் செய்யப் போவதைப் பார். தீய ஆன்மாவும், சிறு மதியும் கொண்ட அவன் {துரியோதனன்}, பாவிகளான தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்}, தன்னைவிட மேன்மையானோரை அவமதித்து, தன் நலன்விரும்பிகளின் வார்த்தைகளை மீறி, பண்படாத மனத்தைக் கொண்டவன் போலச் சபையைவிட்டு வெளியேறினான்", என்றான் {திருதராஷ்டிரன்}."

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது கணவனின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் புகழ் வாய்ந்தவளுமான காந்தாரி {திருதராஷ்டிரனிடம்}, உயர்ந்த நன்மையை விரும்பி, "காலந்தாழ்த்தாமல், நாட்டின் மீது பேராசை கொண்டு நோயுற்றிருக்கும் எனது மகனை {துரியோதனனை} இங்கே அழைத்து வாருங்கள். பண்படாத இதயம் கொண்டவனும், அறம் மற்றும் பொருளைத் தியாகம் செய்தவனுமான அவன் {துரியோதனன்}, ஒரு நாட்டை நிர்வகிக்கும் தகுதி இல்லாதவனாவான். இப்படி இவை அனைத்தும் இருந்தாலும், பணிவற்ற அவன் {துரியோதனன்}, அனைத்து வகையிலும் நாட்டை அடைந்தான்.

உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, உம் மகனின் மீது கொண்ட பெரும் பாசத்தாலும், அவன் {துரியோதனன்} பாவியாய் இருப்பதை அறிந்தும், அவனது ஆலோசனைகளைப் பின்தொடர்ந்து வருவதாலும், நீரே இதற்காகப் பெரிதும் பழிசொல்லத் தக்கவர். அந்த உமது மகன் {துரியோதனன்}, ஆசைக்கும், கோபத்திற்கும் முழுமையாக ஆட்பட்டு, இப்போது மாயையின் அடிமையாக இருக்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனவேதான் உம்மால் இப்போது அவனை {துரியோதனனை} வலுக்கட்டாயமாகத் திருப்ப முடியவில்லை.

ஓ! திருதராஷ்டிரரே, பேராசைக்கு ஆட்பட்டவனும், தீய ஆலோசகர்களைக் கொண்டவனும், தீய ஆன்மா கொண்டவனுமான அந்த அறிவில்லாத மூடனிடம் {துரியோதனனிடம்} நாட்டைக் கொடுத்ததன் {மூலம் உண்டான} கனியையே {பலனையே} இப்போது நீர் அறுவடை செய்து கொண்டிருக்கிறீர். இவ்வளவு நெருக்கமான சொந்தங்களுக்கிடையில் ஏற்படப்போகும் பிளவை மன்னர் {திருதராஷ்டிரர்} (இன்று) ஏன் அலட்சியம் செய்கிறார்? என , உமது சொந்தங்களுக்குள்ளே பிளவு கொண்டிருக்கும் உம்மைக் கண்டு, உண்மையில் உமது எதிரிகள் நகைப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, *சமரசத்தினாலோ {சமாதானத்தினாலோ}, பரிசு மூலமோ {தானத்தினாலோ} கடக்க வேண்டிய அந்த ஆபத்துகளை, பலத்தைப் பயன்படுத்தி {தண்டத்தினால்} எவன் கடப்பான்?" என்றாள் {காந்தாரி}".

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரிலும், அவனது {துரியோதனனின்} தாயுடைய {காந்தாரியின்} கட்டளையின் பேரிலும், பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனை மீண்டும் ஒருமுறை சபைக்குள் நுழையச் செய்தான் க்ஷத்திரி {விதுரன்}. கோபத்தால் தாமிரம் போலச் சிவந்திருந்த கண்களுடன், பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தனது தாயின் வார்த்தைகளை எதிர்பார்த்து அந்தச் சபைக்குள் மீண்டும் நுழைந்தான். தவறான பாதையில் நடந்து கொண்டிருந்த தனது மகன் {துரியோதனன்}, சபைக்குள் நுழைவதைக் கண்ட காந்தாரி, அவனைக் {துரியோதனனைக்} கடுமையாகக் கண்டித்து, சமாதானத்தை ஏற்படுத்த இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.

காந்தாரி {துரியோதனனிடம்} சொன்னாள், "ஓ! துரியோதனா, ஓ! அன்பு மகனே, உனக்கும் உனது தொண்டர்கள் {உன்னைப் பின்பற்றுபவர்கள்} அனைவருக்கும் நன்மையைத் தருபவையும், உன்னால் கீழ்ப்படியத் தக்கவையும், உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருபவையுமான எனது வார்த்தைகளைக் கவனிப்பாயாக. ஓ! துரியோதனா, உனது நலன்விரும்பிகள் சொல்லும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. பாரதர்களில் சிறந்தவர்களான உனது தந்தை {திருதராஷ்டிரர்}, பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்} ஆகியோர் சொல்லும் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவாயாக. நீ சமாதானம் செய்து கொண்டால், பீஷ்மர், உனது தந்தை {திருதராஷ்டிரர்}, {காந்தாரியாகிய} நான் மற்றும் துரோணரின் தலைமையிலான உனது நலன் விரும்பிகள் அனைவருக்கும் நீ மரியாதை செய்தவனுமாவாய். {மேற்கண்டவர்களை மதித்தவனுமாவாய்}.

ஓ! பெரும் அறிவு கொண்டவனே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஒரு நாட்டை அடைந்து, அதைப் பாதுகாத்து அனுபவிப்பதைத் தனது சொந்த விருப்பம் ஒன்றால் மட்டுமே எவனாலும் வெல்ல முடியாது. புலன்களைக் கட்டுக்குள் வைக்காதவனால் நீண்ட காலம் அரசுரிமையைத் தக்க வைத்துக் கொள்ள இயலாது. தனது ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டு, பெரும் புத்திக்கூர்மையும் கொண்டவனால் மட்டுமே ஒரு நாட்டை ஆள முடியும். ஆசை மற்றும் கோபம் ஆகியவை ஒரு மனிதனிடம் உள்ள செல்வங்கள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

{ஆசை, கோபம் என்ற} இந்த எதிரிகளை முதலில் வென்ற பிறகே, ஒரு மன்னனால், பூமியைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். மனிதர்களை ஆள்வது பெரிய காரியமாகும். தீய ஆன்மா கொண்டோர்தான், ஒரு நாட்டை எளிதாக வெல்ல விரும்புவார்கள். ஆனால், (அது வெல்லப்பட்ட பிறகு), அவர்களால் அந்த நாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய பேரரசை அடைய விரும்பும் ஒருவன், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் நிச்சயம் கட்டுப்பட வேண்டும். ஏனெனில், விறகை உண்ணும் நெருப்பு வளர்வதைப் போல, புலன்கள் ஒடுக்கப்பட்டால்தான், புத்திக்கூர்மை அதிகரிக்கும். அவை {புலன்கள்} கட்டுப்படுத்தப்படவில்லையெனில், பழக்கப்படாதவையும், அடங்காதவையுமான குதிரைகள், திறனற்ற ஓட்டுநரைக் கொன்று விடுவதைப்போல, {அந்தப் புலன்களை} உரியவர்களையேகூட அவற்றால் {புலன்களால்} கொன்றுவிட இயலும்.

தன்னை வெல்லாமல், தனது ஆலோசகர்களை வெல்ல முனைபவனும், தனது ஆலோசகர்களை வெல்லாமல், தனது எதிரைகளை வெல்ல முனைபவனும் விரைவில் வீழ்த்தப்பட்டு நிர்மூலமடைகிறார்கள். தனது சுயத்தையே எதிரியாக எடுத்துக் கொண்டு, அதை முதலில் வெல்பவன், தனது ஆலோசகர்களையும், அதன்பின்பு தனது எதிரிகளையும் வீணாக வெல்ல முயல மாட்டான். தன் புலன்களையும், தனது ஆலோசகர்களையும் வென்று, வரம்புமீறுபவர்களைத் தண்டித்து, ஆலோசித்தபிறகு செயல்பட்டு, அறிவுடன் இருக்கும் ஒரு மனிதனையே செழிப்பு வழிபடுகிறது. நெருங்கிய துளைகள் கொண்ட வலையில் இரு மீன்கள் அகப்படுவதைப் போல, உடலில் குடியிருக்கும் ஆசை {காமம்} மற்றும் கோபம் {குரோதம்} ஆகியவை {மனிதனின்} அறிவினால் {ஞானத்தினால்} பலத்தை இழக்கின்றன.

சொர்க்கத்திற்குச் செல்லும் விருப்பத்தால், உலக ஈர்ப்புகளில் இருந்து விடுபடும் ஒருவன், ஆசை {காமம்} மற்றும் கோபத்தால் {குரோதத்தால்} உற்சாகம் அடைந்தால், அந்த இரண்டின் விளைவாக, சொர்க்கத்தின் வாசல்களைத் தேவர்களே அவனுக்கு எதிராக {அவன் உள்ளே செல்லமுடியாதபடி} அடைப்பார்கள். ஆசை, கோபம், பேராசை, தற்பெருமை, செருக்கு ஆகியவற்றை நன்கு அடக்கத்தெரிந்த மன்னனால், முழுப் பூமியின் ஆட்சியதிகாரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

செல்வம் மற்றும் அறம் ஆகியவற்றை ஈட்டவும், எதிரிகளை வீழ்த்தவும் விரும்பும் ஒரு மன்னன், தனது ஆசைகளைக் கட்டுப்படுத்துவதிலேயே எப்போதும் ஈடுபட வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ தன் சொந்தங்களிடமோ, பிறரிடமோ வஞ்சகமாக நடந்து கொள்ளும் ஒருவனால், பல கூட்டாளிகளைப் {நண்பர்களைப்} பெறுவதில் வெற்றி அடைய முடியாது.

ஓ! மகனே {துரியோதனா}, பெரும் அறிவுபடைத்தவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான பாண்டுவின் வீர மகன்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்ந்து மகிழ்ச்சியுடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக. சந்தனுவின் மகனான பீஷ்மர், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோர் சொன்னவையெல்லாம், ஓ! மகனே {துரியோதனா}, நிச்சயம் உண்மையே. கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெல்லப்பட முடியாதவர்கள் ஆவர். எனவே, உழைக்க வருந்தாதவனான இந்த வலிமைமிக்கவனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடுவாயாக. ஏனெனில், கேசவன் {கிருஷ்ணன்} கருணை இருந்தால், இரு தரப்பும் மகிழ்ச்சியடைவார்கள்.

தனது செழிப்பை மட்டுமே எப்போதும் தேடி, அறிவுடைய கல்விமான்களான தன் நண்பர்களின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியாத ஒரு மனிதன், தனது எதிரிகளையே மகிழ்ச்சிப்படுத்துகிறான். ஓ! மகனே {துரியோதனா}, போரினால் எந்த நன்மையுமில்லை, எந்த அறமும் பொருளும் இல்லை. பிறகு, அதனால் {போரினால்} மகிழ்ச்சியை எப்படிக் கொண்டு வர முடியும்? வெற்றியும் கூட எப்போதும் நிச்சயமானதல்ல. எனவே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே.

ஓ! பெரும் அறிவு கொண்டவனே {துரியோதனா}, பீஷ்மர், உனது தந்தை {திருதராஷ்டிரர்}, பாஹ்லீகர் ஆகியோர் பாண்டவர்களுக்கு அவர்களுடைய {நாட்டின்} பங்கை {பகைவர்கள் மீது கொண்ட} அச்சத்தின் காரணமாகவே (முன்பு) கொடுத்தார்கள். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவர்களுடன் {பாண்டவர்களுடன்} பிளவை விரும்பாதே. அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} மூலம், முட்கள் {பகைவர்கள்} அற்றதாகச் செய்யப்பட்ட பூமி முழுவதிலும் நீ அரசுரிமை புரிகிறாய். உண்மையில், அப்படி {பீஷ்மர், திருதராஷ்டிரர் மற்றும் பாஹ்லீகர் ஆகியோர்} (அமைதியாக) விட்டுக்கொடுத்ததன் விளைவில் உண்டான கனியையே {பயனையே} நீ இன்று காண்கிறாய்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} உரியதைப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} கொடுத்துவிடு. உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} (இந்தப் பேரரசில்) பாதியை நீ அனுபவிக்க விரும்பினாலும், அவர்களுடைய {பாண்டவர்களுடைய} பங்கை அவர்களுக்குக் கொடுத்துவிடு. உன்னையும், உனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} ஆதாரமாகத் தாங்கிக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானதாகும். உனது நலன்விரும்பிகளின் சொற்களின்படி செயல்பட்டு, ஓ! பாரதா {துரியோதனா}, பெரும் புகழை வெல்வாயாக.

செழிப்பைக் கொண்டவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களும், பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், தங்கள் ஆசைகளை வென்றவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ பூசல் கொண்டால், அஃது உனது பெரும் செழிப்பை அழிக்க மட்டுமே செய்யும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது நலன்விரும்பிகள் அனைவரின் கோபத்தையும் அகற்றி, பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமான பங்கை அவர்களிடம் கொடுத்து, உனது நாட்டை நீ மகிழ்ச்சியாக ஆள்வாயாக.

ஓ! மகனே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} முழுமையாகப் பதிமூன்று {13} வருடங்கள் அனுபவித்த தண்டனை போதும். ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, ஆசையாலும், கோபத்தாலும் வளரும் (அந்த நெருப்பை) இப்போதே தணிப்பாயாக {அடக்குவாயாக}. பாண்டவர்களின் செல்வத்தில் பேராசை கொண்டிருக்கும் நீ அவர்களுக்கு இணையாக மாட்டாய்; பெரும் கோபம் கொண்ட இந்தச் சூதனின் மகனும் {கர்ணனும்}, உனது தம்பியான துச்சாசனனும் {பாண்டவர்களுக்கு} இணையாகமாட்டார்கள்.

உண்மையில், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, திருஷ்டத்யும்னன் ஆகியோர் கோபமுற்றால், பூமியில் வாழ்வோர் அனைவரும் அழிவடைவார்கள். ஓ! மகனே {துரியோதனா}, கோபத்தின் ஆளுகைக்குள் சென்று குருக்களை {கௌரவர்களை} அழித்துவிடாதே. உன் நிமித்தமாக இந்தப் பரந்த பூமி அழியாதிருக்கட்டும்.

பீஷ்மரும், துரோணரும், கிருபரும், மற்றும் அனைவரும் முழு வலிமையுடன் (உனக்காகப்) போரிடுவார்கள் என்றே சிறுமதி படைத்த நீ நினைக்காய். அஃது எப்போதும் நிகழாது. ஏனெனில், தன்னறிவைக் கொண்ட இவர்களைப் பொறுத்தவரை, {கௌரவர்களான} உங்களுக்குச் சமமாகப் பாண்டவர்களிடமும் இவர்கள் பாசம் கொண்டுள்ளனர். மன்னரிடம் (திருதராஷ்டிரரிடம்) தாங்கள் பெற்ற வாழ்வாதாரத்தின் பொருட்டு [1], அவர்கள் தங்கள் உயிரையே கொடுக்கச் சம்மதித்தாலும், மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி அவர்களால் தங்கள் கோபப் பார்வையைச் செலுத்த முடியாது.

[1], ராஜ பிண்டத்தில் உண்டான பயத்தின் {மன்னன் திருதராஷ்டிரன் அளித்த உணவை உண்ட நன்றியின்} பொருட்டு என்பது இங்கே பொருள்.

பேராசை மூலம், மனிதர்கள் செல்வத்தை அடைவது இந்த உலகில் காணப்படுவதில்லை. ஓ! மகனே, உனது பேராசையைக் கைவிடுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நில்" என்றாள் {காந்தாரி}".
........................................................................................................................................
*சமரசத்தினாலோ
{சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றைக் கைகொண்டு எதிரிகளை வழிக்கு கொண்டுவருதல் வேண்டும் என்பதையே இங்கு காந்தாரி குறிக்கிறாள்}