"You're not the son of a king" said Dhritarashtra! | Udyoga Parva - Section 149 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –78)
பதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, "ஓ! துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ! மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.
உயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ! ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.
அவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.
இதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ! ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.
பெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.
அவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.
எனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, "உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.
உறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.
இவ்வழியிலும், ஓ! பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம்? பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.
உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.
நீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ! இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும்? இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ! மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]" என்றார் {திருதராஷ்டிரர்}."
[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.