Tuesday, June 30, 2015

பாண்டவப் படைத்தலைவன்! - உத்யோக பர்வம் பகுதி 151

The Generalissimo of Pandavahost! | Udyoga Parva - Section 151 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 80) {சைனியநிர்யாண பர்வம் - 1}

பதிவின் சுருக்கம் : கௌரவப் படை புறப்பட்டுவிட்டது எனக் கிருஷ்ணன் மூலமாகக் கேட்ட யுதிஷ்டிரன், அக்ஷௌஹிணிகளின் தலைவர்களாக எழுவரை நியமித்து, படைத்தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தனது தம்பிகளிடம் கேட்டது; விராடனின் பெயரைச் சகாதேவனும், துருபதனின் பெயரை நகுலனும், திருஷ்டத்யும்னனின் பெயரை அர்ஜுனனும், சிகண்டியின் பெயரை பீமசேனனும் முன்மொழிவது; படைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் கொடுப்பது; திருஷ்டத்யும்னனைப் படைத்தலைவனாகக் கிருஷ்ணன் தேர்ந்தெடுத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், கேசவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், தனது தம்பிகளிடம், "குருக்கள் கூடியிருந்த சபையில் நடந்தது அத்தனையும் நீங்கள் கேட்டீர்கள். கேசவன் {கிருஷ்ணன்} உதிர்த்த வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, மனிதர்களில் சிறந்தவர்களே, போரிட வேண்டிய வரிசையில் {பிரிவுகளாகப் பிரித்து} எனது துருப்புகளை அணிவகுப்பீராக.


நமது வெற்றிக்காக இங்கே ஏழு {7} அக்ஷௌஹிணி படைகள் கூடியிருக்கின்றன. அந்த ஏழு அக்ஷௌஹிணிகளையும் வழிநடத்தப்போகும் {தலைவர்களான} அந்த ஏழு புகழ்பெற்ற வீரர்களின் பெயர்களைக் கேட்பீராக. துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பெரும் சக்தி கொண்ட பீமசேனன் ஆகியோரே அவர்கள் {அந்த எழுவர்}. இந்த வீரர்களே எனது துருப்புகளின் தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரும், வேதங்களை {தனுர் வேதத்தை} அறிந்தவர்களாவர். பெரும் வீரம் கொண்ட இவர்கள் அனைவரும், அற்புத நோன்புகளைப் பயின்றவர்களாவர் {உடல் வெறுத்தவர்களாவர்}. பணிவு கொண்ட இவர்கள் அனைவரும், கொள்கைகளிலும் மற்றும் போரிலும் சாதனைளை அறிந்தவர்களாவர். ஆயுதங்களிலும், அம்புகளிலும் நன்கு திறம்பெற்ற இவர்கள் அனைவரும், அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தத் தகுந்தவர்களாவர்.

ஓ! சகாதேவா, ஓ! குரு குலத்தின் மகனே, அனைத்து வகைப் போர்வரிசைகளை {படைகளின் பிரிவுகளை} அறிந்தவரும், இந்த எழுவருக்கும் தலைவராக ஆகக்கூடியவரும், கணைகளைச் சுடராகக் கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற பீஷ்மரைப் போரில் தாக்குப்பிடிக்கக்கூடியவருமான வீரர் யார் என்பதை எங்களுக்கு இப்போது சொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சகாதேவா}, *நமது படைத்தலைவராக ஆகத் தகுந்தவர் யார் என்பதில் உனது கருத்தை எங்களுக்குச் சொல்வாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "உறவில் நமக்கு நெருக்கமானவரும் {சம்பந்தியும்}, துயரத்தில் {அஞ்ஞாதவாசத்தில்} நமக்கு ஆதரவாக இருந்தவரும், பெரும் பலம் கொண்டவரும், அனைத்து அறங்களையும் அறிந்தவரும், போரில் தடுக்கப்பட முடியாதவரும், நாட்டில் உள்ள பங்கை மீட்டுத் தருவதில் நமக்கு நம்பிக்கையானவரும், பலம்பொருந்திய மத்ஸ்ய {மச்ச நாட்டு} மன்னருமான விராடரே, பீஷ்மர் மற்றும் அந்தப் பலமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் தாக்குப்பிடிக்க வல்லவராவார்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகாதேவன் இதைச் சொன்னதும், சொல்திறமிக்க நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "வயது, சாத்திர அறிவு, விடாமுயற்சி, பிறப்பு மற்றும் குலம் ஆகியவற்றினால் மதிக்கத்தகுந்தவரும், பணிவு, பலம் மற்றும் செழிப்பைக் கொண்டவரும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரும், (பரத்வாஜ முனிவரிடம்) ஆயுத அறிவியலைக் கற்றவரும், தடுக்கப்பட முடியாதவரும், உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவரும், துரோணரையும், வலிமைமிக்கப் பீஷ்மரையும் எப்போதும் சவாலுக்கழைப்பவரும், அரச குடும்பங்களில் முதன்மையான ஒன்றில் வந்தவரும், படைகளின் புகழ்பெற்ற தலைவரும், சூழ்ந்திருக்கும் மகன்கள் மற்றும் பேரர்களின் விளைவால் நூறு கிளைகளைக் கொண்ட மரத்திற்கு ஒப்பானவரும், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் மனைவியுடன் சேர்ந்து துரோணரின் அழிவுக்காகக் கடும் தவமிருந்தவரும், சபைகளின் ரத்தினமானவரும், நம்மை எப்போதும் ஒரு தந்தையைப் போல ஆதரிப்பவரும், நமது மாமனாருமான துருபதரே படைத்தலைவராக இருக்க வேண்டும். போருக்கு விரைந்து வரும் துரோணரையும் பீஷ்மரையும் தாக்குப்பிடிக்க இயன்றவர் அவரே {துருபதரே} என்பது எனது கருத்து. ஏனெனில், அங்கிரசின் வழித்தோன்றலான துரோணருக்கு நண்பரான இந்த மன்னர் {துருபதர்}, தெய்வீக ஆயுதங்களையும் அறிந்தவராக இருக்கிறார்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {நகுலன்}.

மாத்ரியின் மகன்கள் இருவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியதும், வாசவனின் {இந்திரனின்} மகனும், அந்த வாசவனுக்கே {இந்திரனுக்கே} நிகரானவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, "தவசிகளை மனநிறைவு செய்து, தவநோன்புகளின் சக்தியால் பிறந்தவனும்; நெருப்பின் நிறம் கொண்டவனும்; சிறந்த சாதியிலான அற்புதக் குதிரைகள் பூட்டப்பட்டதும், பெருந்திரள் மேகங்களின் கர்ஜனையைப் போன்ற ஒலியை எழுப்பவல்ல சக்கரங்களைக் கொண்டதுமான தேருடனும், வில், வாள் மற்றும் இரும்புக் கவசம் ஆகியவற்றுடனும், வேள்வி செய்யும் நெருப்புக் குண்டத்தில் இருந்து உதித்தவனும்; சிங்கத்தைப் போன்ற உடற்கட்டு, வீரம், பலம், சக்தி ஆகியவற்றைக் கொண்ட வீரனும்; சிங்கம் போன்ற தோள்கள், கரங்கள், மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும்; சிங்கத்தின் உறுமல் போன்ற குரலைக் கொண்டவனும்; பெரும் பிரகாசம் கொண்ட வீரனும்; அழகிய புருவங்கள், நல்ல பற்கள், உருண்ட கன்னங்கள், நீண்ட கரங்கள், பருத்த உடல், சிறந்த தொடைகள், அகன்ற பெரிய கண்கள், சிறந்த கால்கள், உறுதியான உடற்கட்டு ஆகியவற்றைக் கொண்டவனும்; எவ்வகை ஆயுதத்தாலும் துளைக்கப்பட முடியாதவனும்; மதம் கொண்ட யானையைப் போல இருப்பவனும், உண்மை நிறைந்த பேச்சு, கட்டுபடுத்தப்பட்ட ஆசைகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான இந்தத் தெய்வீகமான திருஷ்டத்யும்னன் துரோணரின் அழிவுக்காகவே பிறந்தவனாவான்.

இடிபோன்ற கடுமையுடன் அடிக்கப்படுவதும், நெருப்புச்சுடர்விடும் {நெருப்பைக் கக்கும்} வாய்களுடன் கூடிய பாம்புகளைப் போன்றதும், யமனின் தூதர்களுக்கு இணையான வேகம் கொண்டதும், (தொடுவதாலேயே அனைத்தையும் எரித்துவிடும்) நெருப்புச் சுடர்களைப் போன்று விழுவதும், இதற்கு முன்னால் ராமரால் {பரசுராமரால்} மட்டுமே போரில் தாங்கப்பட்டதுமான பீஷ்மரின் கணைகளைத் தாங்கவல்லவன் திருஷ்டத்யும்னன் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தவிர, பெரும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தாக்கப்பிடிக்கவல்ல வேறு எவரையும் நான் காணவில்லை. இதையே நான் நினைக்கிறேன். கரங்களில் பெருவேகம் {பெரும் இலகுத்தன்மை} கொண்டவனும், அனைத்து வகையான போர்முறைகளை அறிந்தவனும், ஆயுதங்களால் துளைக்கப்பட முடியாத கவசம் கொண்டவனும், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போன்றவனுமான இந்த அழகிய வீரனே {திருஷ்டத்யும்னனே), என் கருத்தின்படி, நமது படைத்தலைவனாக இருக்கத் தகுந்தவனாவான்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

பீமன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துருபதனின் மகனும், 'பீஷ்மரின் அழிவுக்காகப் பிறந்தவன்' என்று தவசிகள் மற்றும் சித்தர்களின் கூட்டத்தால் சொல்லப்படுபவனும், போர்க்களத்தில் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தும்போது, ஒப்பற்ற ராமரை {பரசுராமரைப்} போன்றவனுமான சிகண்டியானவன், கவசம் பூண்ட தனது தேரில் நிலைத்திருக்கும்போது, ஆயுதங்களால் அவனை {சிகண்டியைத்} துளைக்கவல்ல ஒருவனையும் நான் காணவில்லை. சிகண்டியைத் தவிர, தனிப்போரில் பீஷ்மரைக் கொல்லவல்ல பிற வீரர்கள் யாரும் இல்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிகண்டியே நமது படைத்தலைவனாக இருக்கத் தகுந்தவன் என இதற்காகவே நான் நினைக்கிறேன்" என்றான் {பீமன்}.

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! ஐயா {பீமா}, அண்டத்தில் உள்ள அனைத்தின் பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் அயர்வு ஆகியவற்றையும், ஒவ்வொருவரின் நோக்கங்களையும், அறம்சார்ந்த கேசவனே {கிருஷ்ணனே} நன்கறிவான். தாசார்ஹ குலத்தின் கிருஷ்ணன் குறிப்பிடும் எவனும் ஆயுதங்களில் திறனுடனோ, திறனில்லாமலோ, இளைஞனாகவோ, முதியவராகவோ இருந்தாலும், அவனே எனது படைகளின் தலைவனாக இருக்கட்டும். இவன்தான் {கிருஷ்ணன்தான்} நமது வெற்றி அல்லது தோல்வியின் வேராக இருக்கிறான். இவனிலேயே நமது உயிர்கள், நமது நாடு, நமது செழிப்பும் வறுமையும், நமது மகிழ்வும் துன்பமும் இருக்கின்றன.

இவனே விதி சமைப்பவனாகவும், படைப்பாளனாகவும் இருக்கிறான். நமது ஆசைகளின் கனிகள் அனைத்தும் இவனிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே, கிருஷ்ணனால் பெயர் சொல்லப்படுபவரே, நமது படையின் தலைவராக இருக்கட்டும். நமது தலைவரை {படைத்தலைவரைத்} தேர்ந்தெடுத்து, மலர்களாலும், வாசனைத் திரவியங்களாலும் நமது ஆயுதங்களை வழிபட்டு, பொழுது புலர்ந்ததும் கிருஷ்ணனின் உத்தரவுப்படி போர்க்களதிற்கு அணிவகுப்போமாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "புத்திசாலி மன்னனும், நீதிமானுமான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட, தாமரைக் கண் கிருஷ்ணன், தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்தபடி, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துருப்புகளின் தலைவர்களாகப் பெயரிடப்பட்ட பலம்நிறைந்த வீரர்கள் அனைவரையும் நான் முழுமையாக அங்கீகரிக்கிறேன். எதிரிகளைத் தாக்குப்பிடிக்க அவர்கள் அனைவரும் தகுந்தவர்களே. உண்மையில், அவர்கள் இந்திரனையே பெரும்போரில் அச்சுறுத்தக்கூடியவர்கள் எனும்போது, பேராசையும், தீய மனமும் கொண்ட திருதராஷ்டிரன் மகன்கள் எம்மாத்திரம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, போரைத் தடுத்துச் சமாதானத்தைக் கொண்டுவர நான் பெரும் முயற்சிகளைச் செய்தது உமது நன்மைக்காவே. அதன் காரணமாக, அறத்தால் நாம் பட்ட கடன்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டோம். குறை கண்டுபிடிக்கும் மனிதர்களால், இனி எதைக் கொண்டும் நம்மை நிந்திக்க முடியாது.

அறிவற்றவனும், மூடனுமான துரியோதனன், ஆயுதங்களில் நிபுணனாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். உண்மையில் அவன் பலவீனனாக இருப்பினும், பலம் கொண்டவனாகவே தன்னை நினைத்துக் கொள்கிறான் [1]. நமது கோரிக்கைகளைப் பெற படுகொலை ஒன்றே {இருப்பதில்} ஒரே வழி என்பதால் விரைவாக உமது துருப்புகளை அணிவகுப்பீராக. உண்மையில், யுயுதானனை {சாத்யகியை} இரண்டாவதாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அபிமன்யு, திரௌபதியின் ஐந்து மகன்கள், விராடன், துருபதன், கடும் பரக்கிரமம் கொண்ட பிற மன்னர்கள் மற்றும் அக்ஷௌஹிணிகளின் தலைவர்கள் அனைவரையும் காணும்போது, திருதராஷ்டிரன் மகன்களால், தங்கள் நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள {நிலத்தில் நிற்க} முடியாது. நமது படை பெரும் வலிமையுடையதும், வெல்லப்பட முடியாததும், தாக்குபிடிக்கப்பட முடியாததுமாகும். திருதராஷ்டிரன் கூட்டத்தை அது {பாண்டவர்கள் படை} கொல்லும் என்பதில் ஐயமில்லை. நமது தலைவரைப் {படைத்தலைவரைப்} பொருத்தவரை, எதிரிகளைத் தண்டிப்பவனான திருஷ்டத்யும்னனை நான் அழைப்பேன்" என்றான் {கிருஷ்ணன்}.

[1] இந்த இடத்தில்.... மூடனும், அறிவில்லாதவனுமான துரியோதனன் விருப்பம் நிறைவேறியவனாகத் தன்னை நினைத்துக் கொள்கிறான். தனத்தில் விருப்பம் கொண்ட அவன், பலத்துடன் இருப்பவனாகத் தன்னைப் பார்க்கிறான் என்று வேறொரு பதிப்பில் வருகிறது.



**நமது படைத்தலைவராக ஆகத் தகுந்தவர் யார்
 என்னும் வாக்கியத்தின் முக்கியத்துவமானது தெய்வப்புலவர் திருவள்ளுவரால், திருக்குறளில் பின்வருமாறு சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறள்-770
பொருட்பால்-அதிகாரம்:படைமாட்சி

குறள்:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

சாலமன் பாப்பையா :
ஒரு படையில் சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.