Wednesday, July 01, 2015

பாளையமிறங்கிய பாண்டவப்படை! - உத்யோக பர்வம் பகுதி 153

The encampment of Pandava army! | Udyoga Parva - Section 153 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 82) {சைனியநிர்யாண பர்வம் -3}

பதிவின் சுருக்கம் : விலங்குகளுக்கு ஓய்வு கொடுத்து, குருக்ஷேத்திரத்தை நோக்கி பாண்டவப் படை முன்னேறிச் சென்றது; இறுதியாகக் குருக்ஷேத்திரத்தின் வழியாக ஓடும் ஹிரண்வதீ நதியை அடைந்து, அதன் அருகே பெரிய அகழியை வெட்டி, திருஷ்டத்யும்னன் மற்றும் சாத்யகியைக் கொண்டு முகாமுக்கான இடத்தை அளந்து பாசறைகளை அமைத்தது; பாண்டவர்கள் பெற்றிருந்த இராணுவத்தளவாடங்கள் மற்றும் உணவு, நீருக்கான ஏற்பாடுகள் குறித்த குறிப்பு...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, மன்னன் *யுதிஷ்டிரன், சமமானதும், குளுமையானதும், புற்களும், விறகுகளும் நிறைந்ததுமான ஒரு பகுதியில் தனது துருப்புகளை முகாமிடச்செய்தான் {தங்கச் செய்தான்}. சுடுகாடுகள், கோவில்கள், தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்கள், தவசிகளின் ஆசிரமங்கள், புண்ணியத்தீர்த்தங்கள் மற்றும் பிற புனிதமான இடங்கள் ஆகியவற்றைத் தவிர்த்த குந்தியின் உயர் ஆன்ம மகன் யுதிஷ்டிரன், இனிமையான, வளமான, திறந்தவெளியில் தனது துருப்புகளைத் தங்கச் செய்தான். தனது விலங்குகளுக்குப் போதுமான ஓய்வைக் கொடுத்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் எழுந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏகாதிபதிகள் சூழ இன்பமாகப் புறப்பட்டான்.


பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்திருந்த கேசவன் {கிருஷ்ணன்}, {வழியில்} (புறக்காவலர்களாக வைக்கப்பட்டிருந்த) திருதராஷ்டிரனின் படைவீரர்களில் எண்ணற்றவர்களைச் சிதறடித்தபடி நகர ஆரம்பித்தான். சாத்யகி என்றும் அழைக்கப்படுபவனும், பெரும் சக்தி கொண்ட பலமிக்கத் தேர்வீரனுமான யுயுதானனும், பிரஷத குல திருஷ்டத்யும்னனும் முகாமுக்கான {பாசறை அமைப்பதற்கான} இடத்தை அளந்தனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, குருக்ஷேத்திரத்ததின் வழியே ஓடுவதும், புனித நீர் நிறைந்ததும், கூரான கற்களும் சேறும் இல்லாத படுகைகொண்டதும், அற்புதமான தீர்த்தமாகக் கருதப்பட்டதுமான புனிதமான ஹிரண்வதீ நதியை அடைந்த கேசவன் {கிருஷ்ணன்}, அங்கு ஓர் அகழியைத் தோண்டச் செய்து, அதன் பாதுகாப்புக்காகப் போதுமான எண்ணிக்கையிலான துருப்புகளை முறையான கட்டளைகளுடன் நிறுத்தினான். உயர் ஆன்ம பாண்டவர்களின் பாசறைகளை நிறுவுவதில் எந்த ஏற்பாடுகளைச் செய்தானோ, அதையே (அவர்களின் கூட்டாளிகளான} பிற மன்னர்களின் பாசறைகளுக்கும் கேசவன் {கிருஷ்ணன்} பின்பற்றினான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மன்னர்க்களுக்காக, பூமியின் மேற்பரப்பில் ஒன்றுக்கொன்று இடைவெளி கொண்டவையும், தாக்கப்பட முடியாதவையும், விலையுயர்ந்தவையுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாசறைகளை நிறுவினான். பானகங்கள், உணவு வகைகள் மற்றும் விறகுகள் நிறைந்த அவை {பாசறைகள் [அ] கூடாரங்கள்} அரண்மனைகளைப் போன்றிருந்தன. ஒழுங்கான ஊதியம் பெற்ற இயந்திரக் கைவினைஞர்கள் {Mechanics}, நூறு நூறாக அங்கே கூடினர். சுய அறிவியலில் நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் {Physicians} மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் {Surgeons} ஆகியோர், தேவையான அனைத்து மூலப் பொருட்களுடனும் அங்கு இருந்தனர்.

மன்னன் யுதிஷ்டிரன், ஒவ்வொரு பாசறையிலும் அதிக அளவிலானவையும், மலைகளைப் போன்று உயரமாக இருந்தவையுமான, நாண்கள், விற்கள், கவசங்கள், ஆயுதங்கள், தேன் மற்றும் தெளிந்த நெய், ரசப்பொடிகள், நீர், கால்நடைகளுக்கான தீவனங்கள், வைக்கோல் மற்றும் நிலக்கரி {உமிக் காந்தல்கள், கனரக இயந்திரங்கள், நாராசங்கள் {நீண்ட அம்புகளைப் போன்றவை}, தோமரங்கள் {ஈட்டிகளைப் போன்றவை}, போர்க்கோடரிகள், விற்தண்டுகள் {நாணற்ற விற்கள்}, மார்புக்கவசங்கள், ரிஷ்டிகள் {குறுவாள்கள்} மற்றும் அம்பறாத்தூணிகள் ஆகியவை நிறைந்திருக்கச் செய்தான்.

இரும்பு முள்ளுள்ள கவசம் பூண்டவையும், மலைகளைப் போன்று பெரியவையும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவரோடு {நூறாயிரம் பேருடன்} போர்புரியவல்ல எண்ணிலடங்கா யானைகளும் அங்குக் காணப்பட்டன. அந்தக் களத்தில் பாண்டவர்கள் பாளையமிறங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்த அவர்களது கூட்டாளிகள் {கூட்டணியில் உள்ள மன்னர்கள்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, தங்கள் படைகள், விலங்குகளோடு அங்கே அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர். பிரம்மச்சரிய நோன்புகள் பயின்றவர்களும், (புனிதமாக்கப்பட்ட = consecrated) சோமத்தைக் குடித்தவர்களும், வேள்விகளில் அந்தணர்களுக்குப் பெரும் கொடைகளை அளித்தவர்களுமான பல மன்னர்கள், பாண்டு மகன்களின் வெற்றிக்காக அங்கே வந்தனர்."




*யுதிஷ்டிரன், சமமானதும், குளுமையானதும், புற்களும், விறகுகளும் நிறைந்த ஒரு பகுதியில் தனது துருப்புகளை முகாமிடச்செய்தான்.....

திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்:அரண்/ குறள்:742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 
காடும் உடைய தரண்.

தமிழ் விளக்கவுரை-மு.வரதராசன் (மு.வ.) :
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.