Dhirtarashtra knows the position of the forces! | Bhishma-Parva-Section-020 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 8)
பதிவின் சுருக்கம் : ஒவ்வொரு தரப்பின் உற்சாகம் மற்றும் மனநிலை ஆகியவற்றையும், எந்தத் திசையை நோக்கி ஒவ்வொறு படையும் நின்றன என்பதையும்; யானையின் மீது பவனி வந்த துரியோதனன், யானைகளைப் பொறுக்காத யானைகள், பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரியோதனாதிகளின் நிலைகள் ஆகியவை குறித்தும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சூரியன் உதித்தபோது, ஓ! சஞ்சயா, பீஷ்மரால் வழிநடத்தப்பட்ட எனது படை, பீமனால் வழிநடத்தப்பட்ட பாண்டவப் படை ஆகியவற்றில் போரிட விரும்பி மற்ற படையை உற்சாகமாக அணுகியது எது {எந்தப் படை}? சூரியன், சந்திரன், பகையான காற்று ஆகியவை எந்தப் பக்கத்தில் {எந்தப் படைக்குப் பின்புறத்தில்} இருந்தன? யாருக்கு எதிராக இரை தேடும் விலங்குகள் அமங்கலமான ஒலிகளை எழுப்பின? எந்த இளைஞர்களின் முகங்கள் உற்காகத்துடனும் நிறத்துடனும் இருந்தன? இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகவும் முறையாகவும் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, அணிவகுக்கப்பட்ட போது அந்த இரு படைகளும் சமமான மகிழ்ச்சியுடனேயே இருந்தன. இரு படைகளும், பூத்துக் குலுங்கும் வனத்தின் தன்மையுடன் சமமான அழகுடனேயே திகழ்ந்தன. இரு படைகளுமே யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளால் நிறைந்திருந்தன. இரு படைகளுமே பயங்கரத் தன்மையுடன் பரந்து இருந்தன; மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவை ஒன்றை ஒன்று பொறுத்துக் கொள்ளாதவையாகவும் இருந்தன. அவை இரண்டும் சொர்க்கத்தையே வெல்லும் பொருட்டு அணிவகுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை இரண்டும் சிறந்தவர்களைக் கொண்டிருந்தன.
திருதராஷ்டிரத் தரப்பைச் சேர்ந்த கௌரவர்கள் மேற்கை நோக்கி {மேற்கு முகமாக} நின்றும், அதே வேளையில், பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கிழக்கை நோக்கி {கிழக்கு முகமாக} நின்றும் போரை எதிர்கொண்டார்கள். கௌரவர்களின் துருப்புகள் தானர்வர்களின் {அசுரர்களின்} தலைவனுடைய படையைப் போலத் தெரிந்தன. அதே வேளையில் பாண்டவர்களின் துருப்புகள் தேவர்களின் படையைப் போலத் தெரிந்தன. பாண்டவர்களின் பின்புறமிருந்து (தார்தராஷ்டிரர்களின் முகங்களுக்கு எதிராக) {கௌரவர்களை நோக்கி} காற்று வீசத் தொடங்கியது. இரை தேடும் விலங்குகள் தார்தராஷ்டிரர்களுக்கு எதிராகக் கத்தத் தொடங்கின.
அருங்காட்சியகத்தில் இரும்புக் கவசத்துடன் வைக்கப்பட்டுள்ள யானை |
காந்தாரர்களின் ஆட்சியாளனான சகுனி, தன்னைச் சுற்றிலும் அமர்த்தப்பட்ட மலைநாட்டு மக்களால் பின்தொடரப்பட்டான். மரியாதைக்குரிய பீஷ்மர், தனது தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, வில் மற்றும் வாள் தரித்தவராக, வெள்ளைத் தலைப்பாகையுடன் {வெண்கிரீடத்துடன்}, (தனது தேரில்) வெள்ளைக் கொடியுடன், (அதில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளுடன், மொத்தத்தில் ஒரு வெண்மலையைப் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தலைமையில் இருந்தார்.
பீஷ்மரின் படைப்பிரிவிலேயே திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் இருந்தனர். அவர்களுடன் பாஹ்லீக நாட்டவரில் ஒருவனான சலனும், அம்பஷ்டர்கள் என்று அழைக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், சிந்துக்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், சௌவீரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், ஐந்து நதிகள் பாயும் நாட்டில் [1] வசிக்கும் வீரர்களும் இருந்தனர். சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தங்கத் தேரில், கையில் வில்லுடனும், என்றும் தோற்காத இதயத்துடனும் {கம்பீரத்துடனும்} இருந்தவரும், கிட்டத்தட்ட மன்னர்கள் அனைவருக்கும் ஆசானானவருமான உயர் ஆன்ம துரோணர், துருப்புகள் அனைத்துக்கும் பின்புறத்தில் இருந்து அவற்றை இந்திரனைப் போலப் பாதுகாத்தார்.
[1] இன்றைய பஞ்சாப் மாநிலம். மூலத்தில் "பஞ்சநதா:" என்றிருக்கிறது.
படையின் முன்னணியில் போரிடுபவரும் [2], உயர் ஆன்மா கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும், கௌதமர் என்று அழைக்கப்படுபவரும், அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, சகர்கள், கிராதர்கள், யவனர்கள், பஹ்லவர்கள் {ஒரு வேளை பல்லவர்களாக இருக்கலாம்} ஆகியோருடன் அந்தப் படையின் வடக்கு எல்லையில் தனது நிலையை ஏற்றுக் கொண்டார். அந்தப் பெரும்படை, விருஷ்ணி மற்றும் போஜ குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், நல்ல ஆயுதங்களைத் தாங்கியவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், கிருதவர்மனால் வழிநடத்தப்பட்டவர்களுமான சூராஷ்டிர வீரர்களாலும் நன்கு பாதுகாக்கப்பட்டது. {அப்படிப் பாதுகாக்கப்பட்டபடியே} அந்தப் படை தெற்கு நோக்கி முன்னேறியது.
[2] மூலத்தில் இங்கே Uttaradhus என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் அது மிகவும் சந்தேகத்திற்கிடமானது என்கிறார் கங்குலி. இந்த இடத்தில் வேறு பதிப்பில் சிறந்த முறையில் போரின் சுமையைத் தாங்குபவரும் என்று கிருபரைக் குறித்து இருக்கிறது. பின்னதே சரியானதாகத் தெரிகிறது.
அர்ஜுனனின் மரணத்திற்காகவோ, புகழுக்காகவோ {வாழ்வுக்காகவோ} உண்டாக்கப்பட்டவர்களும், ஆயுதங்களில் திறம் பெற்றவர்களுமான சம்சப்தகர்களின் பத்தாயிரம் {10,000} தேர்கள், வீரமிக்கத் திரிகார்த்தர்களுடன் அர்ஜுனனின் பாதங்களைப் பின்பற்றும் நோக்குடன் [3] வெளியே சென்றன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையில், போரிடும் சக்திகளில் முதன்மையானவையான ஆயிரம் {1000} யானைகள் இருந்தன.
ஒவ்வொரு யானைக்கும், நூறு {100} தேர்களும்;
ஒவ்வொரு தேருக்கும் நூறு {100} குதிரைப்படை வீரர்களும்;
ஒவ்வொரு குதிரைப்படை வீரனுக்கும், பத்து {10} வில்லாளிகளும்;
ஒவ்வொரு வில்லாளிக்கும் வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய பத்து {10} போராளிகளும் ஒதுக்கப்பட்டனர்.
ஒவ்வொரு யானைக்கும், நூறு {100} தேர்களும்;
ஒவ்வொரு தேருக்கும் நூறு {100} குதிரைப்படை வீரர்களும்;
ஒவ்வொரு குதிரைப்படை வீரனுக்கும், பத்து {10} வில்லாளிகளும்;
ஒவ்வொரு வில்லாளிக்கும் வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய பத்து {10} போராளிகளும் ஒதுக்கப்பட்டனர்.
[3] "இங்கே இருக்கும் மூலச் சொல் Yenarjunastena ஆகும். இங்கு Yena என்பது yatra, அல்லது "யாத்திரை", அல்லது "பயணம்" என்றும், tena என்பது tatra அல்லது "அந்த இடத்தில்" என்ற பொருளும் கொண்ட சொற்களாகும் என்று நீலகண்டர் விளக்குகிறார். இதன் மொத்தப் பொருள், "எங்கு அர்ஜுனன் எங்கிருப்பானோ, அங்கிருப்பவர்கள்" என்பதாகும்" என்கிறார் கங்குலி.
இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படைப்பிரிவுகள் பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டன. சந்தனுவின் மகனான உமது படைத்தலைவர் பீஷ்மர், ஒவ்வொரு நாளின் விடியலின் போதும், சில நேரங்களில் மனித முறையிலும், சில நேரங்களில் தேவ முறையிலும், சில நேரங்களில் கந்தரவ முறையிலும், சில நேரங்களில் அசுர முறையிலும் உமது துருப்புகளை அணிவகுத்தார். பெரும் எண்ணிக்கையிலான மகாரதர்கள் திரண்டிருந்ததும், கடலைப் போல முழங்கியதுமான அந்தத் தார்தராஷ்டிரப் படை, பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டு, போருக்காக மேற்கு நோக்கி நின்றது. வரம்பற்ற உமது படை, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பயங்கரமாகக் காட்சியளித்தது; ஆனால் பாண்டவர்களின் படையோ, (எண்ணிக்கையில்) அப்படியில்லையென்றாலும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் அதன் தலைவர்களாக இருந்ததால் மிகப் பெரியதாகவும், ஒப்பற்றதாகவும் தோன்றியது" என்றான் {சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |