Wednesday, October 21, 2015

உத்தரனின் மரணமும்! ஸ்வேதனின் வெஞ்சினமும்!! - பீஷ்ம பர்வம் பகுதி - 047ஆ

The death of Uttara and the wrath of Sweta! | Bhishma-Parva-Section-047b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைக் காக்க யானையில் வந்த உத்தரன், சல்லியனை எதிர்த்துப் போரிட்டது; சல்லியனின் குதிரைகளை உத்தரனின் யானை கொன்றது; சல்லியன் ஒரே கணையால் உத்தரனைக் கொன்றது; இதனால் கோபம் கொண்ட உத்தரனின் தம்பி ஸ்வேதன் சல்லியனைக் கொல்ல அவனிடம் விரைந்தது; ஆபத்தில் இருந்த சல்லியனைக் காக்க கௌரவப்படையின் ஏழு பேர் விரைந்தது; அந்த எழுவரையும் திக்கு முக்காட வைத்த ஸ்வேதன்; ஸ்வேதன் சல்லியனின் மகனான ருக்மரதனைக் காயப்படுத்தி மயங்கச் செய்தது; ஸ்வேதனிடம் ஆபத்திலிருந்த சல்லியனைத் துரியோதனன் காத்தது...

விராடனின் மகனான உத்தரனும், துதிக்கை உயர்த்திய நிலையில் தந்தத்தோடு கூடிய யானையில் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான். எனினும், சல்லியன் தன் தேரை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த யானைகளின் இளவசரனை {உத்தரனின் யானையை} இணையற்ற வேகத்துடன் தடுப்பதில் வென்றான். பெரும் கோபம் கொண்ட அந்த யானைகளின் இளவரசன் {யானை}, (சல்லியனின்) தேருடைய நுகத்தில் தனது காலை வைத்து, அற்புத வேகம் கொண்டவையும், பெரியவையுமான அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளைக் கொன்றான் {அந்த யானை கொன்றது}. குதிரைகள் கொல்லப்பட்ட தேரில் நின்ற மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முழுவதும் இரும்பால் செய்யப்பட்டதும், பாம்பு போன்றதுமான ஒரு கணையை எடுத்து, ஒரே அடியாக உத்தரனைக் கொல்வதற்காக அடித்தான். அந்தக் கணையால் கவசம் பிளப்பட்ட அவன் {உத்தரன்}, முற்றிலும் புலன் உணர்வை இழந்து, தனது பிடியில் இருந்து அங்குசத்தையும் ஈட்டியையும் விட்டு, தன் யானையின் கழுத்தில் இருந்து கீழே விழுந்தான்.


பிறகு தன் வாளை எடுத்துக் கொண்ட சல்லியன், தனது அற்புதத் தேரில் இருந்து கீழே குதித்து, தனது ஆற்றல் அனைத்தையும் செலுத்தி, அந்த யானைகளின் இளவரசனுடைய {உத்தரனின் யானையுடைய} பெரிய துதிக்கையைத் துண்டித்தான். கணைமாரியால் தனது கவசமெங்கும் துளைப்பட்டும், தனது துதிக்கை துண்டிக்கப்பட்டும் இருந்த அந்த யானை உரக்க அலறி கீழே விழுந்து இறந்தது. இத்தகு சாதனையை அடைந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனின் அற்புதத் தேரில் ஏறினான்.


தனது சகோதரனான {அண்ணனான} உத்தரன் கொல்லப்பட்டதையும், கிருதவர்மனோடு இருந்த சல்லியனையும் கண்ட விராடனின் மகன் ஸ்வேதன், தெளிந்த நெய்யின் {நெய்யினால் எரியும்) நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை நீட்டி வளைத்து, மத்ர ஆட்சியாளன் சல்லியனைக் கொல்லும் விருப்பத்துடன் விரைந்தான். வலிமைமிக்கத் தேர்களின் படைப்பிரிவுகள் அனைத்துப் புறங்களிலும் சூழ முன்னேறிய அவன் {ஸ்வேதன்}, சல்லியனின் தேர் மீது கணைமாரியைப் பொழிந்தான்.

மதங்கொண்ட யானையின் ஆற்றலுக்கு இணையாகப் போரிட விரைந்த அவனை {ஸ்வேதனைக்} கண்டவர்களும், உமது தரப்பைச் சேர்ந்தவர்களுமான ஏழு {7} தேர்வீரர்கள், ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்குள் இருந்த மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கோசலகர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன், மகதத்தின் ஜயத்சேனன், சல்லியனின் வீரமிக்க மகனான ருக்மரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன், பிருஹத்க்ஷத்ரனின் [1] இரத்தஉறவும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான ஜெயத்ரதன் ஆகியோரே அந்த ஏழு {7} போர்வீரர்களாவர்.

[1] பீஷ்ம பர்வம் பகுதி 45ஆவில் இந்தப் பிருஹத்க்ஷத்திரன் பாண்டவத் தரப்பில் போரிட்ட கைகேய மன்னன் என்றே குறிப்பிடப்படுகிறான். ஜெயத்ரதனின் தந்தை பெயர் விருத்தக்ஷத்ரன் Vriddhakshatra என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேறு பதிப்பில் இந்த இடத்தில் பிருஹத்க்ஷத்திரனின் மகன் ஜெயத்ரதன் என்றே இருக்கிறது. ஆனால் கங்குலி, son of Vrihadkshatra என்று இடாமல் Kinsman of Vrihadkshatra என்று சொல்வதுதான் இங்கே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இங்கே குறிப்பிடப்படுவது யார் என்பதைச் சம்ஸ்க்ருத மூலத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

பல்வேறு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த உயர் ஆன்ம போர்வீரர்களின் நீட்டி வளைக்கப்பட்ட விற்கள், மேகங்களில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. அவர்கள் அனைவரும், கோடை காலம் முடிந்ததும் காற்றால் புரட்டப்படும் மேகங்கள் எப்படி மலையின் மார்பில் மழையைப் பொழியுமோ, அப்படி, ஸ்வேதனின் தலையில் தொடர்ச்சியான கணைமாரியைப் பொழிந்தனர். படைகளின் தலைவனான அந்த வலிமைமிக்க வில்லாளி {ஸ்வேதன்}, இதனால் கோபமடைந்து, அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளைத் தனது வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் அடித்து, தொடர்ச்சியாக அவர்களைக் கலங்கடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களின் {அந்த எழுவரின்} விற்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதை நாம் கண்டோம். அதன் பேரில், கண் இமைப்பதில் பாதி நேரத்திலேயே வேறு விற்களை அவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பிறகு அவர்கள் ஸ்வேதனின் மீது ஏழு கணைகளை அடித்தார்கள். அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {ஸ்வேதன்}, மிக வேகமான ஏழு கணைகளைக் கொண்டு, மீண்டும் அந்த வில்லாளிகளின் (வேறு) விற்களை{யும்} துண்டித்தான்.

தங்கள் பெரும் விற்கள் துண்டிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஏழு ரதசக்திகளை {ஈட்டி போன்ற ஆயுதம்} எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினர். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஏழு ரதசக்திகளைச் ஸ்வேதனின் தேர் மீது அவர்கள் எறிந்தனர். பெரும் விண்கற்களைப் போல, இடியின் ஒலியுடன் (காற்றில்) சென்ற அந்தச் சுடர்மிகும் ரதசக்திகள், அவனைச் {ஸ்வேதனைச்} சென்றடையும் முன்பே, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {ஸ்வேதன்}, ஏழு பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளால்} அவற்றை அறுத்தான்.

பிறகு, உடலின் அனைத்துப் பகுதியையும் துளைக்கவல்ல கணையொன்றை எடுத்த அவன் {ஸ்வேதன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதை ருக்மரதன் {சல்லியனின் மகன்} மீது எறிந்தான். வஜ்ரத்தின் சக்தியை விஞ்சிய அந்த வலிமைமிக்கக் கணை பின்னவனின் {ருக்மரதனின்} உடலைத் துளைத்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் பலமாகத் தாக்கப்பட்ட ருக்மரதன், தனது தேரில் கீழே அமர்ந்தபடி மரண மயக்கத்தில் விழுந்தான். பிறகு அவனுடைய {ருக்மரதனின்} தேரோட்டி, உணர்வற்று மயக்கத்தில் இருந்த அவனை அனைவரின் பார்வையிலேயே அச்சத்துடன் தூக்கிச் சென்றான்.

பிறகு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேறு ஆறு கணைகளைக் கொண்டு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஸ்வேதன், தனது ஆறு எதிரிகளின் கொடிக்கம்பங்களையும் வெட்டினான். அவர்களது குதிரைகளையும், தேரோட்டிகளையும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {ஸ்வேதன்}, தடையற்ற கணைகளால் அந்த ஆறு வீரர்களையும் மூழ்கடித்து, சல்லியனின் தேரை நோக்கி முன்னேறினான். சல்லியனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறிய அந்தப் (பாண்டவப்) படைகளின் தலைவனை {ஸ்வேதனைக்} கண்ட உமது படையினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, "ஓ!" என்றும் "ஐயா!" என்றும் உரக்க ஒலி எழுப்பினர்.

அங்கே, பீஷ்மரின் தலைமையில் வந்த உமது மகன் {துரியோதனன்}, துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள் மற்றும் பல துருப்புகளின் ஆதரவுடன், ஸ்வேதனின் தேரை நோக்கி முன்னேறினான். ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் நுழைந்திருந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} (இப்படியே) அவன் {துரியோதனன்} மீட்டான். அதன் பிறகு, உமது துருப்புகளுக்கும், எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதும், பயங்கரமானதும், தேர்களும் யானைகளும் கலந்து குழம்பிப் போனதுமான ஒரு போர் தொடங்கியது.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகய ஆட்சியாளன் {பிருஹத்க்ஷத்திரன்}, விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி துருப்புகள் ஆகியோர் மீது குருக்களின் முதிர்ந்த பாட்டன் {பீஷ்மர்} கணைமாரியைப் பொழிந்தார் [2]" {என்றான் சஞ்சயன்}.

[2] "சம்ஸ்க்ருத மூலத்தில் 43வது வரியில் இருந்து 52வது வரை உள்ள (மேற்கண்ட கருத்துகள்) வங்க உரைகளில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. எனினும், அவை அவற்றில் 46வது பகுதியில் சொல்லப்பட்டுள்ளன. உண்மை என்னவென்றால், மேற்குறிப்பிட்ட முழு வரிகளும், வரப்போகும் பகுதியில் {48வது பகுதியில்} 116 வரிகளும், பகுதி 49ல் வரப்போகும் முதல் 24 வரிகளும் இடைச்செருகல் என்று கருதப்படுகிறது. ரதர்கள் மற்றும் அதிரதர்கள் என்று பீஷ்மரால் எண்ணப்பட்ட உத்யோக பர்வப் பகுதிகளில், ஸ்வேதன் என்ற பெயரில் எந்தப் போர்வீரனும் குறிப்பிடப்படவில்லை. பர்த்துவான் பண்டிதர்களும் இந்தப் பத்திகளை முழுவதுமாகத் தவிர்க்கின்றனர். நானே கூட இதை இடைச் செருகலாகத் தான் பார்க்கிறேன். எனினும், வங்க உரைகளிலும், பம்பாய் உரைகளிலும் ஏதோ ஒரு வகையில் இவை இருப்பதால் எனது ஆங்கில உரையில் இதை என்னால் தவிர்க்க முடியாது. எனவேதான் அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English