Arjuna shattered Kuru host! | Bhishma-Parva-Section-059d | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 17)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் செய்த போர்; மகேந்திர ஆயுதத்தைப் பயன்படுத்திய அர்ஜுனன்; களத்தில் இரத்த ஆறைப் பாய வைத்த அர்ஜுனன்; மூன்றாம் நாள் போர் முடிவு...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அப்போது பெரும் படையுடனும், பீஷ்மர் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோருடனும் கூடிய குரு மன்னன் {துரியோதனன்}, கையில் கணையுடன், நட்சத்திரத்தை எரிப்பதற்கு உதித்த எரிகல் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து சென்றான். அர்ஜுனனை நோக்கி பூரிஸ்ரவஸ், தங்கச் சிறகுகள் கொண்ட ஏழு பல்லங்களை {எறிவேல்களை} வீசினான். சல்லியன் ஒரு கதாயுதத்தையும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்} ஓர் ஈட்டியையும் வீசினர். அதன் பேரில், அர்ஜுனன், கணைகளைப் போல வேகத்துடன் வந்தவையும், பூரிஸ்ரவஸால் அடிக்கப்பட்டவையுமான அந்த ஏழு பல்லங்களை ஏழு கணைகளாலும், மற்றொரு கூரிய கணையால் துரியோதனனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட வேலையும் கலங்கடித்தான். சந்தனு மகனால் {பீஷ்மரால்} வீசப்பட்டதும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் ஈட்டியையும், மத்ரர்களின் ஆட்சியாளன் கரத்தால் வீசப்பட்ட கதாயுதத்தையும் (இன்னும்) இருகணைகளால் அந்த வீரன் {அர்ஜுனன்} துண்டித்தான்.
பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட தனது அழகிய வில்லான காண்டீவத்தைப் பெரும் பலத்துடனும், இரு கரங்களாலும் வளைத்து, உரிய மந்திரங்களால் அற்புதம் நிறைந்ததும், பயங்கரமானதுமான மகேந்திர ஆயுதத்தை {மஹேந்திராஸ்திரத்தை} வானத்தில் தோன்றச் செய்தான். உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடம் மற்றும் பொன்மாலை தரித்தவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்}, கணைகளின் பெரும் மழையை உற்பத்தி செய்வதும், சுடர்மிகும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்த வல்லமைமிக்க ஆயுதத்தை {மகேந்திராஸ்திரத்தைக்} கொண்டு மொத்த கௌரவப் படையையும் தடுத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த வந்த அந்தக் கணைகளானது, {எதிரிகளின்} கரங்கள், விற்கள், கொடிமர நுனிகள், தேர்கள் ஆகியவற்றை வெட்டியபடி மன்னர்களின் உடல்களையும், எதிரியின் பெரும் யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் துளைத்தன.
திசைகளையும், துணைத் திசைகளையும் கூர்மையான அந்தப் பயங்கரக் கணைகளால் நிறைத்தவனும், கிரீடம், தங்கமாலை ஆகியவற்றைத் தரித்தவனுமானப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் காண்டீவத்தின் நாணொலியால் எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்தான். அச்சம் நிறைந்த அந்த ஆயுத வழியில் {போர்க்களத்தில்}, சங்கொலிகளும், துந்துபி ஒலிகளும், தேர்களின் ஆழ்ந்த சடசடப்பொலிகளும் காண்டீவத்தின் நாணொலியால் அமைதிப்படுத்தப்பட்டன {பேரொலியால் மறைக்கப்பட்டன}. அந்த நாணொலியைக் காண்டீவத்தின் ஒலி என உறுதிசெய்து கொண்ட மன்னன் விராடன், மனிதர்களில் இன்னும் சில வீரர்கள், துணிவு மிக்கப் பாஞ்சால மன்னன் துருபதன் ஆகிய அனைவரும் கட்டுப்படாத இதயங்களுடன் அந்த இடத்துக்கு முன்னேறினர். உமது போராளிகள் {கௌரவர்கள்} அனைவரும் அச்சத்தால் தாக்குண்டு, காண்டீவத்தின் நாணொலியை எங்கே கேட்டார்களோ அங்கேயே நின்றனர். அவர்களில் எவரும் எங்கிருந்த அந்த ஒலி கேட்டதோ அந்த இடத்திற்குச் செல்லத் துணியவில்லை.
மன்னர்களின் அந்த மோசமான படுகொலையில், வீரப் போராளிகளும், தேர்வீரர்களும், தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். பிரகாசமான பொற்கூடுகளைக் கொண்டவையும், (தங்கள் முதுகில்) மிக அழகிய கொடிகளைக் கொண்டவையுமான யானைகள், தங்கள் மேல் விழுந்த நாராசங்களால் பீடிக்கப்பட்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு உயிரிழந்து திடீரெனக் கீழே விழுந்தன. சிறகு படைத்த பெரும் கணைகள் மற்றும் கூரிய முனைகளைக் கொண்ட பல்லங்களால், யந்திரங்கள் மற்றும் இந்திரஜாலங்களின் [1] தலைமையில் நின்றிருந்த எண்ணிலடங்கா மன்னர்களின் கொடிமரங்கள், வேகமாகவும், பலமாகவும் அர்ஜுனனால் தாக்கப்பட்டு வெட்டிவீழ்த்தப்பட்டன.
[1] இவைகள் என்னவென்று தீர்மானிப்பது கடினமாக இருந்தது. பம்பாய் உரை வேறு மாதிரியாக இருக்கிறது. அதில் இந்திரஜாலம் என்பதற்குப் பதில் இந்திரகிலம் என்று இருக்கிறது. அதன் பொருளும் முன்னது போலவே விளங்கவில்லை என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு பதிப்பில் இந்த வரியே வேறு விதமாக இருக்கிறது. அது பின்வருமாறு: படைமுகங்களில் பெரிய த்வஜங்கள் {கொடிமரங்கள்}, யந்திரங்கள் அறுக்கப்பட்டுப் பேர்த்துத் தள்ளப்பட்ட இந்திரத்வஜங்கள் போலக் கீழே விழுந்தன.
காலாட்படை கூட்டங்களும், தேர்வீரர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து களத்தில் வேகமாக விழ்ந்தன, அல்லது, விரைவாகத் தங்கள் உயிரை விட்டன. அந்தப் பயங்கரச் சண்டையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் பெயரைக் கொண்ட அந்த வலிமைமிக்க ஆயுதத்தால் {மகேந்திராஸ்திரத்தால்}, தங்கள் கவசங்களும் உடல்களும் பிளக்கப்பட்ட வீரர்கள் பலராவர். பயங்கரமாவையும், கூர்மையானவையுமான அந்தத் தனது கணைகளால், கிரீடி {அர்ஜுனன்}, போராளிகளின் சிதைந்த உடல்களில் இருந்து பாய்ந்த இரத்தத்தை நீராகவும், அவற்றின் கொழுப்பை நுரையாகவும் கொண்ட ஒரு பயங்கர ஆறை அங்குத் தோன்றச் செய்தான். அதன் ஓடை அகலமானதாகவும் மூர்க்கமானதாகவும் பாய்ந்தது.
அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்கள் அதன் கரைகளாயின. மனிதர்களின் மஜ்ஜைகளும், சதைகளும் கரையோரத்தின் சேறாகின. இயல்புக்கு மாறான பெரும் ராட்சசர்கள் (அதன் கரைகளில் நிற்கும் உயர்ந்த) மரங்களானார்கள். அதிக அளவில் இருந்த மயிர் நிறைந்த மண்டையோடுகளை அதில் மிதக்கும் கழிவுகளாகவும், குவியல்களாகக் கிடந்த மனித உடல்கள் அதன் மணற்கரைகளாகவும் கொண்ட அந்த ஓடை ஆயிரம் திசைகளில் பாய்ந்தன. எங்கும் பரவி கிடந்த கவசங்கள் அதன் கடினமான கூழாங்கற்களாயின. அதன் கரைகள் பெரும் எண்ணிக்கையிலான நரிகள், ஓநாய்கள், நாரைகள், கழுகுகள், ராட்சசக் கூட்டங்களாலும், கழுதைப் புலிகளாலும் மொய்க்கப்பட்டன. அர்ஜுனனின் கணைமாரியால் உண்டான அந்த ஆற்றை, எவரெல்லாம் உயிரோடு இருந்தார்களோ, அவர்கள், கொழுப்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவற்றால் ஆனதும், கொடூரத்தின் உருவமுமான அந்தப் பயங்கர நதியைப் பெரும் வைதரணீயைப் [2] போல (தம் மனதில்) கண்டார்கள்.
[2] வைதரணீ என்பது இவ்வுலகத்தையும், அடுத்த உலகத்தையும் {இம்மையையும், மறுமையையும்} பிரிக்கும் ஓர் அற்புதமான நதியாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட குருக்கள் படையின் முதன்மை வீரர்களைக் கண்டவர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கரூஷர்கள், மத்ஸ்யர்கள், பாண்டவத் தரப்பின் போராளிகள் அனைவருமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் வெற்றியால் உற்சாகமடைந்து கௌரவ வீரர்களை அச்சுறுத்தும் வகையில் உரக்க முழக்கமிட்டார்கள். சிறு விலங்குகளின் கூட்டங்களை அச்சுறுத்தும் சிங்கத்தைப் போல (குரு) படையின் முதன்மையான போராளிகளை அச்சுறித்தியவனும், எதிரிகளுக்குப் பயங்கரமானவனுமான கிரீடி {அர்ஜுனன்}, {கௌரவப்} படைப்பிரிவின் வலிமைமிக்கத் தலைவர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தத் துருப்புகளைக் கொன்றதைக் கண்டு வெற்றியைக் குறிக்கும் வகையில் முழக்கமிட்டார்கள். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் கூட மிகவும் மகிழ்ந்து சிங்க முழக்கம் செய்தார்கள்.
(அர்ஜுனனின்) ஆயுதங்களால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களான பீஷ்மர், துரோணர், துரியோதனன், பாஹ்லீகன் ஆகியோருடன் கூடிய குருக்கள், சூரியன் தனது கதிர்களை நிறுத்துவதைக் கண்டும், இந்திரனின் பெயரால் அழைக்கப்பட்டதும், தடுக்கப்பட முடியாததும், அச்சத்தைத் தரவல்லவதும், யுகத்தின் முடிவல் தோன்றும் விளைவுகளை உண்டாக்குவதுமான அந்த ஆயுதத்தைக் கண்டும், இரவு ஓய்வுக்காகத் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். பெரும் சாதனையை அடைந்தவனும், தனது எதிரிகளை நசுக்குவதால் புகழ்பெற்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சூரியன் சிவப்பு நிறம் கொள்வதையும், மாலை சந்தி தொடங்கியதையும் கண்டு, தனது வேலையை முடித்துக் கொண்டு, இரவு ஓய்வுக்காகத் தன் சகோதரர்களுடன் பாசறைக்குச் சென்றான்.
இருள் தொடங்குவதற்குச் சற்று முன்னர், குரு துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஒலி பெரியதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அனைவரும், "இன்றைய போரில் மட்டும் அர்ஜுனன் பத்தாயிரம் {10000} தேர்வீரர்களையும், எழுநூறு {700} யானைகளையும் கொன்றிருக்கிறான். மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகிய அனைவரும் கொல்லப்பட்டவிட்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்} அடைந்திருக்கும் சாதனையானது மகத்தானதாகும். அதை அடைய யாராலும் முடியாது" என்றனர்.
உலகின் வல்லமைமிக்கத் தேர்வீரனும், கோபம் நிறைந்த பிருதையின் மகனுமான கிரீடி {குந்தியின் மகனுமான அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான பெரும் பிற வீரர்களுடன் கூடிய சுருதாயுஸ், அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், துர்மர்ஷணன், சித்ரசேனன், துரோணர், கிருபர், சிந்துக்களின் ஆட்சியாளன், பாஹ்லீகன், பூரிஸ்ரவஸ், சல்லியன், சலன் ஆகியோர் மற்றும் பீஷ்மரையும் சேர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தனிப்பட்ட கரங்களின் ஆற்றலால் இன்று வீழ்த்தியிருக்கிறான்" என்றனர்.
இப்படிப் பேசிய உமது தரப்பின் வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் இருந்து தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர். கிரீடியிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட குரு படையின் போராளிகள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொள்ளிகளால் ஒளியூட்டப்பட்டவையும், எண்ணிலடங்கா தீவட்டிகளால் அழகூட்டப்பட்டவையுமான தங்கள் பாசறைக்குள் நுழைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |