Friday, December 11, 2015

சாம்யமணியின் மகனும், திருஷ்டத்யும்னனும்! - பீஷ்ம பர்வம் பகுதி - 061

Son of Samyamani and Dhrishtadyumna! | Bhishma-Parva-Section-061 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஐவர்; அபிமன்யு புரிந்த அற்புதப் போர்; தன் மகனைக் கண்டு பெருமையால் கர்ஜித்த அர்ஜுனன்; அபிமன்யுவுக்கும், அர்ஜுனனுக்கும் உதவி புரிய நடுவில் புகுந்த திருஷ்டத்யும்னன்; சாம்யமணியின் மகனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் மூண்ட போர்; சாம்யமணியின் மகனைக் கொன்ற திருஷ்டத்யும்னனன்; திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்த சாம்யமணியும், சல்யனும்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பூரிஸ்ரவஸ், [1], சித்திரசேனன், சாம்யமணியின் [2] மகன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்} போரிட்டனர். மனிதர்களில் புலிகளான அந்த ஐவருடன் தனியாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, பெரும் சக்தி கொண்ட அவனை {அபிமன்யுவை}, ஐந்து யானைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த ஓர் இளம் சிங்கத்தைப் போல மக்கள் கண்டனர்.

[1] இங்கே சல்லியன் பெயர் விடுபட்டிருக்கிறது. இது வேறு பதிப்பில் காணக் கிடைக்கிறது.

[2] இந்தச் சாம்யமணி என்பவன் மஹாபாரதத்தின் இந்தப் பகுதியில் மட்டுமே குறிப்பிடப்படுகிறான். வேறு சில பதிப்புகளின் சில இடங்களில் சாம்யமணியின் மகன் என்பது சலனின் மகன் என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் சாம்யமணி என்பது சலனின் மற்றுமொரு பெயரா என்பதும், சாம்யமணியின் மகனுடைய பெயர் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் பின் வரும் பத்திகளில் ஓர் இடத்தில் சாம்யமணி, சலன் என்று தொடர்ச்சியாக இருவரது பெயரும் ஒரே வேளையில் குறிப்பிடப்படுகிறது.

இலக்கில் துல்லியம், ஆற்றல், கரத்தின் வேகம், ஆயுத அறிவு ஆகியவற்றில் அவர்களில் ஒருவரும் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகனுக்கு {அபிமன்யுவுக்கு} ஈடாக இல்லை. இப்படிப் போரிடுபவனும், போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான தனது மகனைக் {அபிமன்யுவைக்} கண்ட பார்த்தன் {அர்ஜுனன்} சிம்ம முழக்கம் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பேரன் {அபிமன்யு}, உமது {கௌரவப்} படையைத் துன்புறுத்துவதைக் கண்ட உமது வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டார்கள்.

எதிரிகளைத் தாக்குபவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஆற்றல் மற்றும் பலத்தை மட்டுமே நம்பி, உற்சாகமிழக்காத இதயத்துடன் தார்தராஷ்டிரப் படையை எதிர்த்து முன்னேறினான். அந்த மோதலில் எதிரியுடன் போரிட்ட போது, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அவனது {அபிமன்யுவின்} வலிமையான வில், அடிப்பதற்கான நிலையில் எப்போதும் வளைந்தே காணப்பட்டது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் துளைத்த அவன் {அபிமன்யு}, எட்டு கணைகளால் சாம்யமணியின் மகனுடைய கொடியை வீழ்த்தினான். சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவசால்} தன் மீது வீசப்பட்டதும், பாம்புக்கு ஒப்பானதும், தங்கப்பிடி கொண்டதுமான வலிமைமிக்க ஈட்டியைக் கூர்முனை கொண்ட மற்றொரு கணையால் அடித்தான்.

சல்லியனின் பார்வைக்கு எதிரிலேயே, அவனது நூற்றுக்கணக்கான பயங்கரக் கணைகளையும் கலங்கடித்த அந்த அர்ஜுனனின் வாரிசு {அபிமன்யு}, அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். அதன்பேரில், கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு} வெளிப்படுத்திய கரப் பலத்தின் காரணமாக அச்சத்தால் பீடிக்கப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாம்யமணி மற்றும் சலன் ஆகியோரால் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} முன்பு நிற்க முடியவில்லை.

அப்போது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவர்களும், ஆயுதங்களின் அறிவியலை நன்கு அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவர்களுமான இருப்பத்தைந்தாயிரம் {25,000} எண்ணிக்கையிலான திரிகார்த்தர்கள், மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோர் கிரீடி {அர்ஜுனன்}, அவனது மகன் {அபிமன்யு} ஆகிய இருவரையும் கொல்வதற்காக அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை வீழ்த்துபவனும், பாண்டவப் படையின் தலைவனுமான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, (எதிரிகளால் இப்படிச்) சூழப்பட்ட தந்தை {அர்ஜுனன்} மற்றும் மகன் {அபிமன்யு} ஆகியோரின் தேர்களைக் கண்டான்.

ஆயிரக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும், நூறாயிரம் {இலட்சக்} கணக்கான குதிரைப்படை மற்றும் காலாட்படைகளாலும் ஆதரிக்கப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கோபத்துடன் தனது வில்லை வளைத்தவாறு, மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோரின் படைப்பிரிவுகளை எதிர்த்துத் தனது துருப்புகளைத் தலைமைதாங்கி அழைத்துச் சென்றான். புகழ்பெற்றவனும், உறுதியான வில்லாளியுமான அவனால் {திருஷ்டத்யும்னனால்} பாதுகாக்கப்பட்டதும், தேர்கள், யானைகள், குதிரைப்படை ஆகியவற்றைக் கொண்டதுமான (பாண்டவப் படையின்) அந்தப் படைப்பிரிவு  முன்னேறிச் சென்றபோது பிரகாசமாகத் தெரிந்தது.

பாஞ்சாலக் குலத்தைத் தழைக்க வைப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்} அர்ஜுனனை நோக்கி முன்னேறிச் சென்ற போது, மூன்று கணைகளால் சரத்வானின் மகனுடைய {கிருபரின்} தோள் பூட்டில் தாக்கினான். பத்து கூரிய கணைகளால் மத்ரர்களைத் துளைத்த {கொன்ற} அவன் {திருஷ்டத்யும்னன்}, கிருதவர்மனின் பின்புறத்தைக் காத்தவனையும் விரைவாகக் கொன்றான். எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்}, நாராசம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால், உயர் ஆன்ம பௌரவனுடைய வாரிசான தமனனையும் கொன்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாம்யமணியின் மகன்,  போரில் வீழ்த்தப்பட முடியாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} பத்து கணைகளால் துளைத்து, மேலும் பத்து கணைகளால் அவனது {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியையும் துளைத்தான். (இப்படி) கடுமையாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கடைவாயை நாவால் நக்கியபடித் தன் எதிரியின் {சாம்யமணியின் மகனுடைய} வில்லை மிகக்கூரிய ஒரு பல்லத்தைக் {அகன்ற தலை கொண்ட கணை} கொண்டு அறுத்தான்.

விரைவில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தனது எதிரியை {சாம்யமணியின் மகனை} இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது குதிரைகளையும், அவனது சிறகுகளை {இருபக்கங்களைக்} காக்கும் இருவரையும் கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரைகளை இழந்த அந்தத் தேரில் நின்று கொண்டிருந்த சாம்யமணியின் மகன், புகழ்பெற்ற பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். அப்போது, எஃகினால் ஆன சிறந்த வகையிலானதும், வாள் ஒன்றை எடுத்துக் கொண்ட சாம்யமணியின் மகன் நடந்தே சென்று, தேரில் இருக்கும் துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அணுகினான்.

வானத்தில் இருந்து விழுந்த பாம்பைப் போலவும், தன்னை நோக்கி வரும் ஓர் அலையைப் போலவும் வந்து கொண்டிருந்த அவனை {சாம்யமணியின் மகனை} அந்தப் பிருஷத குலத் திருஷ்டத்யும்னனும் கண்டான்; பாண்டவர்களும், படைவீரர்களும் கண்டார்கள். சூரியனைப் போலத் தெரிந்த அவன் {சாம்யமணியின் மகன்} தனது வாளைச் சுழற்றியபடி, ஒரு மதங்கொண்ட யானையைப் போல நடந்து சென்றான். சினத்தால் தூண்டப்பட்ட பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கி முன்னேறி வருபவனும், கூர்முனை கொண்ட வாளையும், கேடயத்தையும் தரித்திருப்பவனும், தன் எதிரியுடைய தேரின் மிக அருகே வந்தவனுமான சாம்யமணியின் மகனுடைய தலையை நொறுக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் {சாம்யணியின் மகன்} உயிரற்று கீழே விழும்போது சுடர்மிகும் வாள் மற்றும் கேடயத்தில் கொண்டிருந்த பிடி தளர பூமியில் தன் உடலைச் சாய்த்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு தனது எதிரியைக் கொன்ற பாஞ்சால மன்னனின் உயர் ஆன்ம மகன் {திருஷ்டத்யும்னன்} பெரும்புகழை வென்றான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த இளவரசன் {சாம்யமணியின் மகன்} (இப்படிக்) கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து "ஓ" என்றும், "ஐயோ" என்றும் அலறல்கள் எழுந்தன.

தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்டு சினம் தூண்டப்பட்ட சாம்யமணி, போரில் வீழ்த்தப்பட இயலாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். குரு மற்றும் பாண்டவப் படைகளைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்த இளவரசர்கள் இருவரும் போரில் ஈடுபடுவதைக் கண்டார்கள்.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சாம்யமணி, வலிமைமிக்க யானையை அங்குசங்களால் துளைப்பது போல, மூன்று கணைகளைக் கொண்டு, அந்தப் பிருஷத மகனை {திருஷ்டத்யும்னனைத்} தாக்கினான். அதே போல, சபைகளின் ரத்தினமான சல்யனும் சினத்தால் தூண்டப்பட்டு, பிருஷதனின் வீரமகனை {திருஷ்டத்யும்னனை} மார்பில் தாக்கினான். பிறகு (மற்றுமொரு) போர் (அங்கே) தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.
------------------------------------------------------------------------------------------------------------------------
*கிருஷ்ணனின் {அர்ஜுனனின்}: அர்ஜுனன் கருப்பானவன் என்பதால் அவனுக்கான பத்து {10} பெயர்களில் கிருஷ்ணன் என்ற ஒரு பெயரும் உண்டு. http://mahabharatham.arasan.info/2010/03/Arjuna.html. இந்தப் பெயர்க்குறிப்பைத் தவிர்த்து, இங்கே கிருஷ்ணையின் மகன், அதாவது திரௌபதியின் மகன் என்றுதான் அபிமன்யு குறிப்பிடப்படுகிறான் என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.


ஆங்கிலத்தில் | In English