Monday, December 21, 2015

"கிருஷ்ணனிடம் அன்பு கொள்!" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 068

'Love Krishna!" Bhishma! | Bhishma-Parva-Section-068 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : முனிவர்கள் செய்த கிருஷ்ணத்துதி; கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களான பாண்டவர்களுடன் சமாதானத்துடன் இருக்கும்படி துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர்...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {துரியோதனா}, பிரம்மனாலேயே உச்சரிக்கப்பட்ட இந்தப் பாடலை என்னிடம் கேட்பாயாக. பழங்காலத்தில், இந்தப் பாடல், மறுபிறப்பாள முனிவர்களாலும், தேவர்களாலும் பூமியில் (மனிதர்களுக்குச்) சொல்லப்பட்டதாகும். {அது பின்வருமாறு}...


"தேவர்களின் தேவன் {இந்திரன்}, சாத்யர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் தலைவன் என்றும், உரிமையாளன் {ஈஸ்வரன்} என்றும், உலகங்களைப் படைத்தவனின் இயல்பை அறிந்தவரான நாரதர் உன்னை விளக்குகிறார். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் {முன்பும், இப்போதும், எப்போதும் இருப்பவன்} என்றும், வேள்விகளின் வேள்வி என்றும், தவங்களின் தவம் என்றும் மார்க்கண்டேயர் உன்னைச் சொல்கிறார். தேவர்களின் தேவன் என்றும், உனது வடிவமே விஷ்ணுவின் புராதன {ஆதி [அ] பழங்கால} வடிவம் என்றும் ஒப்பற்ற பிருகு சொல்கிறார். சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனையும், அனைத்து உயிர்களையும் நிலைநிறுத்துபவன் வசுக்களின் வாசுதேவனே என்று துவைபாயனர் {வியாசர்} சொல்கிறார்.

பழங்காலத்தில் உயிரினங்களைப் படைக்கும் நிகழ்வின் போது, படைப்பின் தந்தை தக்ஷன் என்று முனிவர்கள் உன்னைச் சொன்னார்கள். அனைத்து உயிரினங்களையும் படைப்பவன் நீயே என்று அங்கிரஸ் சொல்கிறார். வடிவமில்லா அனைத்தும் உன் உடல் என்றும், வடிவம் படைத்தவை உன் மனம் என்றும், உனது சுவாசத்தின் விளைவே தேவர்கள் அனைவரும் என்றும் தேவலர் சொல்கிறார். ஆகாயம் உனது தலைகளால் படர்ந்திருக்கிறது, உனது கரங்களோ பூமியைத் தாங்குகின்றன. உனது வயிற்றிலே மூன்று உலகங்களும் இருக்கின்றன. தவத்தால் மேன்மையுற்ற மனிதர்கள் உன்னை இப்படியே அறிகிறார்கள்.

ஆன்மாவைத் தரிசித்து மனம் நிறைந்த முனிவர்களுடன் சத்-ன் சத்-ஆக [1] இருப்பவன் நீயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தயாள மனம் கொண்டவர்களும், போரில் புறமுதுகிடாதவர்களும், உயர்வின் எல்லையாக அறநெறியைக் கொண்டவர்களுமான அரச முனிகளின் ஒரே புகலிடமாக இருப்பவன் நீயே." {பிரம்மனின் துதி இங்கு முடிகிறது}.

[1] அனைத்துப் பொருட்களிலும் உண்மையாகவே இருப்பவன் என்று பொருள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

சனத்குமாரராலும், யோகத்துடன் கூடிய பிற தவசிகளாலும் அந்த ஒப்பற்ற பரம்பொருளான ஹரி {கிருஷ்ணன்}, இப்படியே துதிக்கப்பட்டு வழிபடப்படுகிறான். ஓ! ஐயா {துரியோதனா}, கேசவனைக் {கிருஷ்ணனைக்} குறித்த உண்மை அனைத்தும், சுருக்கமாகவும், விபரமாகவும் உனக்கு இப்போது சொல்லப்பட்டது. உனது இதயத்தில் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அன்பு கொள்வாயாக" {என்றார் பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இந்தப் புனிதக் கதையைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனையும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்தப் பாண்டுவின் மகன்களையும் {பாண்டவர்களையும்} உயர்வாகக் கருத ஆரம்பித்தான்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசிய சந்தனுவின் மகன் பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, நீ கேட்டவையும், உயர் ஆன்ம கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் நரனின் மகிமை ஆகியவற்றையும் உள்ளபடியே நீ இப்போது கேட்டாய். நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும்,  மனிதர்கள் மத்தியில் தங்கள் பிறப்பை எடுத்ததின் நோக்கத்தையும் நீ கேட்டாய். அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஏன் வெல்லப்பட முடியாதவர்களாகவும், போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த வீரர்கள் ஏன் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்குமான காரணமும் உனக்குச் சொல்லப்பட்டது.

ஒப்பற்ற பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்}, கிருஷ்ணன் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான். இதற்காகவே நான், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, "பாண்டவர்களிடம் சமாதானமேற்படட்டும்" என்று சொல்கிறேன். உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, (உன்னைச் சுற்றியுள்ள) வலிமைமிக்க உனது சகோதரர்களுடன் பூமியை நீ அனுபவிப்பாயாக. தெய்வீகமான நரனையும், நாராயணனையும் அவமதித்தால், நிச்சயம் நீ அழிவையே அடைவாய்" என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது தந்தை {பீஷ்மர்} அமைதியடைந்தார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனுக்கு {துரியோதனனுக்கு} விடைகொடுத்து அனுப்பிய அவர் {பீஷ்மர்}, தனது பாசறைக்குத் திரும்பினார். ஒப்பற்ற பாட்டனை {பீஷ்மரை} வழிபட்ட மன்னனும் {துரியோதனனும்} தனது பாசறைக்குத் திரும்பினான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த இரவை உறக்கத்தில் கழிக்கத் தன்னைத் தனது வெண்படுக்கையில் கிடத்திக் கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English