Tuesday, January 05, 2016

படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 076

Army's skill said by Dhritarashtra! | Bhishma-Parva-Section-076 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 34)

பதிவின் சுருக்கம் : தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.


அதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,

{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுகில் ஏறுதல் மற்றும் இறங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].

[1] அதாவது, யானையேற்றம், குதிரையேற்றம், தேர்பவனி ஆகியவற்றில் பலவாறாக நன்றாகச் சோதிக்கப்படும் நமது படையினர், முறைப்படி சோதிக்கப்பட்டு, தகுந்த ஊதியத்தால் உற்சாகப்படுத்தப்படுகின்றனரே அன்றி, குலத்தாலோ, பற்றாலோ, உறவின்முறையாலோ, நட்பினாலோ, பிறப்பாலோ, இரத்தத்தாலோ இல்லை என்பது இங்கே பொருள்.

அவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ! மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.

உண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவை துடுப்புகளாக இருக்கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.

துரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட நமது படை, ஓ! சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].

[2] வேறு ஒரு பதிப்பில் இன்னும் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: "இப்படிக் கடுமையானதாக இருக்கும் இந்தப் படை, போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இருப்பதால், இது முழுமையும் எனக்கு இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகிறது. நமது படை கொல்லப்படுவதால், பாண்டவர்களுக்காகத் தேவர்களே இங்கு ஒன்று சேர்ந்து போர்புரிகிறார்கள் என்பது நிச்சயம்" என்று திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது.

உண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இரண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ! சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வேறுவிதமாகாது" {என்றான் திருதராஷ்டிரன்}. 


ஆங்கிலத்தில் | In English