Thursday, January 07, 2016

பீமன் மீது திருஷ்டத்யும்னன் கொண்ட பாசம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 077அ

The affection of Dhrishtadyumna on Bhima! | Bhishma-Parva-Section-077a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 35)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனை இடித்துரைத்த சஞ்சயன்; போர் வர்ணனைகளை மீண்டும் சொல்ல ஆரம்பித்த சஞ்சயன்; கௌரவர்களின் வியூகத்தைப் பிளந்த பீமன், தன்னந்தனியாகத் துரியோதனன் தம்பிகளை எதிர்த்து வியூகத்திற்குள் புகுந்தது; அவ்வழி வந்த திருஷ்டத்யும்னன் பீமனின் தேர் வெறுமையாக இருப்பதைக் காண்பது; நடந்ததைத் தேரோட்டி விசோகன் திருஷ்டத்யும்னனுக்குச் சொல்வது; வருத்தமடைந்த திருஷ்டத்யும்னன்; பீமன் சென்ற பாதையிலேயே சென்று பீமனை அடைந்த திருஷ்டத்யும்னன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது தவறுகளின் விளைவாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மை இந்தப் பேரிடர் அண்டியிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பாண்டவர்கள் மீதான) அநீதி வழியான நடத்தையில் நீர் கண்ட தவறுகளைத் துரியோதனன் காணவில்லை.


உமது தவறாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையாட்டம் நடைபெற்றது. மேலும், உமது தவறாலேயே பாண்டவர்களுடனான இந்தப் போரும் நடக்கிறது. பாவம் செய்தது நீர், எனவே, உமது அந்தப் பாவத்தின் கனியை அறுவடை செய்கிறீர். தன்னால் இழைக்கப்பட்ட செயல்களின் கனியை ஒருவன் தானே அறுவடை செய்வான். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இங்கும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} உமது செயல்களின் கனிகளை நீர் அறுவடை செய்வீர். எனவே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தப் பேரிடரை அடைந்த நீர், உறுதியாக இருந்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர் குறித்து நான் உரைப்பதைக் கேட்பீராக.

வீரன் பீமசேனன் தனது கூரிய கணைகளால் வலிமைமிக்க உமது வியூகத்தைப் {அணிவகுப்பைப்} பிளந்து கொண்டு, துரியோதனனின் தம்பிகள் அனைவரையும் அணுகினான். துச்சாசனன், துர்விஷஹன், துஸ்ஸஹன், துர்மதன், ஜயன், ஜெயத்சேனன், விகர்ணன், சித்திரசேனன், சுதர்சனன், சாருசித்திரன், சுவர்மா, துஷ்கர்ணன், கர்ணன் [1] மற்றும் தன் அருகில் இருந்த தார்தராஷ்டிரப் படையின் இன்னும் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கண்டவனான வலிமைமிக்கப் பீமசேனன், அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு,  பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட (உமது) வலிமைமிக்க வியூகத்திற்குள் ஊடுருவினான் {புகுந்தான்}. அவனை {பீமனைத்} தங்கள் மத்தியில் கண்ட அந்த வீரர்கள் அனைவரும், "மன்னர்களே, இவனது உயிரை எடுப்போமாக!" என்றனர். அதன் பேரில், அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, (தன் உயிரை எடுக்க) உறுதியாகத் தீர்மானித்திருந்த தன் சகோதரர்களால் {தன் பெரியப்பன் மகன்களால்} சூழப்பட்டான்.

[1] இவன் துரியோதனனின் தம்பிகளில் ஒருவனாவான். இவன் குந்தியில் மகன் கர்ணன் இல்லை.

அண்ட அழிவின் போது, தீய இயல்பு கொண்ட வலிமைமிக்கக் கோள்களால் சூழப்பட்டவனும் கடும் பிரகாசம் கொண்டவனுமான சூரியனைப் போல, அப்போது அந்தப் பீமன் இருந்தான். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் நடந்த கடும்போரில், தானவர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலவே, (கௌரவ) வியூகத்தின் மத்தியில் இருந்தாலும் கூட அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} இதயத்தில் அச்சம் நுழையவில்லை.

ஆயுதங்கள் அனைத்தையும் தரித்தவர்களும், போருக்கு முழுமையாகத் தயாராக இருந்தவர்களுமான ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள், தனியனான அவனைப் {பீமனைப்} பீடித்தார்கள். அதன்பேரில் திருதராஷ்டிரன் மகன்களை அலட்சியம் செய்த அந்த வீர பீமன், யானைகள் மற்றும் குதிரைகளின் முதுகிலோ, தேரிலோ இருந்து போரிட்ட (கௌரவப் படையின்) வீரர்களில் முதன்மையான பலரை அந்தப் போரில் கொன்றான். தனது அழிவுக்காக முயன்று கொண்டிருந்த தனது சகோதரர்களின் {திருதராஷ்டிரன் மகன்களின்} நோக்கங்களை உறுதியாக அறிந்து கொண்ட அந்த வலிமைமிக்கப் பீமன், அவர்கள் அனைவரையும் கொல்வதில் தனது இதயத்தை நிலைநிறுத்தினான். தனது தேரை விட்டுவிட்டு, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கடல் போன்ற அந்தத் தார்தராஷ்டிரத் துருப்புகளைத் தாக்கத் தொடங்கினான்.

இப்படித் தார்தராஷ்டிரப் படைக்குள் பீமசேனன் நுழைந்த பிறகு, (தான் போரிட்டுக் கொண்டிருந்த) துரோணரைக் கைவிட்ட பிருஷதனின் மகன் திருஷ்டத்யுமனன், விரைவாகச் சுபலனின் மகன் {சகுனி} இருந்த இடத்திற்கு வந்தான். உமது படையின் எண்ணற்ற வீரர்களைக் கலங்கடித்த அந்த மனிதர்களில் காளை {திருஷ்டத்யும்னன்}, பீமசேனனன் இல்லாத வெறும் தேர் இருந்த இடத்திற்கு வந்தான்.

அந்தப் போரில் பீமசேனனின் தேரோட்டியான விசோகனைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகவும் துயருற்று கிட்டத்தட்ட உணர்வுகளை {நினைவு} இழந்தான். கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரத்தால் பெருமூச்சுவிட்டபடியே விசோகனிடம், "என் உயிரைப் போன்றே அன்புக்குரிய பீமர் எங்கே?" என்று கேட்டான். கூப்பிய கரங்களுடன் திருஷ்டத்யும்னனுக்கு மறுமொழி கூறிய விசோகன், "பெரும் பலத்தையுடைய வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, இங்கேயே தனக்காகக் காத்திருக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, கடல் போன்ற இந்தத் தார்தராஷ்டிரப் படைக்குள் தனியாக ஊடுருவினார். அந்த மனிதர்களில் புலி {பீமன்}, மிக உற்சாகமாக என்னிடம், "ஓ! தேரோட்டியே {சூதா; விசோகா}, என்னை அழிக்கும் நோக்கம் கொண்டவர்களை நான் கொல்லும் அந்தக் குறுகிய காலம் வரை குதிரைகளை நிறுத்தி எனக்காகக் காத்திருப்பாயாக" என்றார். கையில் கதாயுதத்துடன் விரைந்த அந்த வலிமைமிக்கப் பீமரைக் கண்டு, (அவரை ஆதரித்த) நமது துருப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியால் நிறைந்தன. பிறகு, கடுமையானதும், பயங்கரமானதுமான இந்தப் போரில், ஓ! இளவரசே {திருஷ்டத்யும்னரே}, உமது நண்பர் {பீமர்}. (எதிரியின்) வலிமைமிக்க வியூகத்தைப் பிளந்து கொண்டு அதற்குள் ஊடுருவினார் {புகுந்தார்}" என்றான் {விசோகன்}.

விசோகனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் பலம்படைத்தவனும், பிருஷதனின் மகனுமான திருஷ்டத்யும்னன்,  அந்தத் தேரோட்டியிடம் {விசோகனிடம்} அந்தப் போர்க்களத்தில் இவ்வார்த்தைகளை சொன்னான். "பாண்டவர்களிடம் நான் கொண்ட பற்றை மறந்து, பீமரை இந்தப் போரில் நான் கைவிட்டேன் எனில், இன்று இந்த உயிர்தான் எனக்கு எதற்கு? பீமரில்லாமல் இன்று நான் திரும்புவேன் எனில், என்னைக் குறித்து க்ஷத்திரியர்கள் என்ன சொல்வார்கள்? நான் களத்தில் இருக்கும்போதே, பகைவரின் வியூகத்தில் ஒரு திறப்பை ஏற்படுத்தித் தனியாகப் பீமர் ஊடுருவினார் என்று அறியும்போது என்னைக் குறித்து அவர்கள் {க்ஷத்திரியர்கள்} என்ன சொல்வார்கள்? போரில் தன் தோழர்களைக் கைவிட்டு, காயமில்லாமல் வீடு திரும்புவனை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் தீமையோடே அணுகுவார்கள் {அப்படித் திரும்புபவனுக்கு நல்லதைச் செய்யாமல் தீமையையே தேவர்கள் செய்வார்கள்}. வலிமைமிக்கப் பீமர், எனது நண்பரும், உறவினரும் ஆவார். அவர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர், எதிரிகளைக் கொல்லும் அவருக்கு நானும் அர்ப்பணிப்புடையவனே. எனவே, பீமர் எங்கே சென்றிருக்கிறாரோ, அங்கே நானும் செல்வேன். தானவர்களைக் கொல்லும் வாசவனை {இந்திரனைப்} போல, எதிரிகளைக் கொல்லும் என்னைப் பார்ப்பாயாக" {என்றான் திருஷ்டத்யும்னன்}.

இதைச் சொன்ன வீர திருஷ்டத்யும்னன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் தன் கதையால் நசுக்கிய யானைகளால் குறிக்கப்பட்டதும், அவனால் {பீமனால்} திறக்கப்பட்டதுமான பாதையின் வழியாக எதிரியின் மத்தியில் நுழைந்தான். அப்போது, மரங்களின் வரிசைகளை அழிக்கும் புயலைப் போலப் பகையணிகளை எரித்து, க்ஷத்திரிய வீரர்களை வீழ்த்திக் கொண்டிருக்கும் பீமசேனனைப் பார்வையில் {தன் கண்களில்} கண்டான். அவனால் {பீமனால்} இப்படிக் கொல்லப்படும் போது, தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படையினர், யானை வீரர்கள் ஆகியோர் துயரத்தால் உரக்கக் கதறினார்கள். போர்க்கலையின் தன்மைகள் அனைத்தையும் அறிந்த வெற்றியாளன் பீமனால் கொல்லப்படும்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஆயுதங்களை அறிந்தவர்களான கௌரவ வீரர்கள் அனைவரும் விருகோதரனை {பீமனை} அனைத்துப் புறங்களில் சூழ்ந்து கொண்டு, அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} மீது ஒரே நேரத்தில் கணை மாரிகளைப் பொழிந்தார்கள்.

அப்போது, அந்த வலிமைமிக்கப் பிருஷத மகன் {திருஷ்டத்யும்னன்}, எதிரிகளுடைய கடும் படையணிகளின் நெருக்கமான அணிவகுப்பால் அனைத்துப் புறங்களிலும் இருந்து இப்படித் தாக்கப்படவனும், ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கணைகளால் சிதைக்கப்பட்டவனும், களத்தில் நடந்து சென்றவனும், தன் கோபத்தின் நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்தவனும், கையில் கதாயுதம் கொண்டவனும், அண்ட அழிவில் வரும் காலன் போலத் தெரிந்தவனும், கொண்டாடப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைக்} கண்டு, விரைந்து அவனை அணுகி, தன் இருப்பால் அவனுக்கு ஆறுதலளித்தான். பிறகு தன் தேரில் அவனை {பீமனை} ஏற்றிக் கொண்டு, அவனது {பீமனது} அங்கங்கள் அனைத்தில் இருந்தும் கணைகளைப் பிடுங்கி, அவனை ஆரத் தழுவிக் கொண்ட உயர் ஆன்ம பிருஷத மகன் {திருஷ்டத்யும்னன்}, எதிரிகளுக்கு மத்தியிலேயே பீமசேனனுக்கு ஆறுதலை அளித்தான்.


ஆங்கிலத்தில் | In English