Bhima vanquished Salya! | Drona-Parva-Section-015 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 15)
பதிவின் சுருக்கம் : சல்லியனை நோக்கி விரைந்த பீமனும், அபிமன்யுவும்; அபிமன்யுவை விலகி நிற்கச் செய்த பீமன்; பீமனுக்கும் சல்லியனுக்கும் இடையில் நடந்த கடும் கதாயுத்தம்; பீமனின் அடியால் மயக்கமடைந்த சல்லியன்; சல்லியனைத் தூக்கிச் சென்ற கிருதவர்மன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த தனிப்போர்கள் பலவற்றை நீ எனக்கு விவரித்தாய். அவற்றைக் கேட்கும் நான், கண் கொண்டோரிடம் பொறாமை கொள்கிறேன். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் (பழங்காலத்தில்) நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போர் மிக அற்புதமானது என மனிதர்கள் அனைவராலும் பேசப்படும். கிளர்ச்சியூட்டும் இந்தப் போரைக் குறித்த உனது விவரிப்பைக் கேட்பதால் நான் நிறைவடையவில்லை. எனவே, அர்தாயனிக்கும் (சல்லியனுக்கும்), சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனது ஓட்டுனர் {தேரோட்டி} கொல்லப்பட்டதைக் கண்ட சல்லியன், முழுவதும் இரும்பாலான கதாயுதம் ஒன்றை உயர்த்தியபடி, தன் சிறந்த தேரில் இருந்து சினத்துடன் கீழே குதித்தான். பீமன் கனமான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, யுகநெருப்புக்கோ, தண்டாயுதத்துடன் கூடிய காலனுக்கோ ஒப்பாக இருந்த சல்லியனை நோக்கி வேகமாக விரைந்தான். சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} வானத்தின் இடிக்கு {வஜ்ராயுதத்துக்கு} ஒப்பான தன் மகத்தான கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனிடம், “வாரும், வாரும்!” என்று சொன்னான். எனினும், பீமன் மிகவும் முயன்று அவனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்கச் சொல்லித் தடுத்தான். வீர பீமசேனன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்குமாறு தடுத்த பிறகு, போரில் சல்லியனை அணுகி, மலையென அசையாது நின்றான்.
மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்}, பீமசேனனைக் கண்டு, யானையை நோக்கிச் செல்லும் புலியைப் போல அவனை {பீமனை} நோக்கிச் சென்றான். பிறகு, ஆயிரக்கணக்கான எக்காள ஒலிகளும், சங்கு முழக்கங்களும், சிங்க முழக்கங்களும், பேரிகையொலிகளும் அங்கே கேட்டன. ஒருவரையொருவர் நோக்கி விரையும் நூற்றுக்கணக்கான பாண்டவ மற்றும் கௌரவ வீரர்களுக்கு மத்தியில், “நன்று, நன்று” என்ற கூக்குரல்கள் எழுந்தன.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தவிரப் போரில் பீமசேனனின் வலிமையைத் தாங்கத் துணிந்தவன் வேறு எவனும் இல்லை; அவ்வாறே சிறப்புமிக்கச் சல்லியனின் கதாயுத வேகத்தைப் போரில் தாங்கவும், விருகோதரனைத் {பீமனைத்} தவிர இவ்வுலகில் வேறு எவன் துணிவான்? தங்கக் கம்பிகள் கலந்த இழைச்சரங்களால் கட்டப்பட்டதும், தன் அழகால் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வூட்டவல்லதுமான பீமனின் மகத்தான கதாயுதம், அவனால் {பீமனால்} ஏந்தப்பட்டுப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவ்வாறே வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த சல்லியனின் கதாயுதமும், சுடர்மிகும் மின்னலின் கீற்றைப் போலவே தெரிந்தது.
காளைகளைப் போல முழங்கிய அவ்விருவரும் {பீமனும், சல்லியனும்}, வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தனர் {மண்டல கதிகளோடு சஞ்சரித்தனர்}. சற்றே சாய்ந்த தங்கள் கதாயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சல்லியன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கொம்புகள் கொண்ட காளைகளைப் போலவே தெரிந்தனர். வட்டமாகச் சுழல்வதையோ, தங்கள் கதாயுதங்களால் தாக்குவதையோ பொறுத்தவரை மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் அனைத்து வழியிலும் சமமானதாகவே இருந்தது.
பீமசேனன் தன் கதாயுதத்தைக் கொண்டு தாக்கியதால், சல்லியனின் மகத்தான கதாயுதம், கடும் நெருப்புப் பொறிகளை வெளியிட்டுக் கொண்டே விரைவில் துண்டுகளாக உடைந்தது. அதே போலவே, பீமசேனனின் கதாயுதமும், எதிரியால் {சல்லியனால்} தாக்கப்பட்டு, மழைக்காலத்தின் மாலைப்பொழுதில் மின்மினிப்பூச்சிகளால் மறைக்கப்பட்ட அழகிய மரம் போலத் தெரிந்தது.
அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} வீசப்பட்ட கதாயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (சுற்றிப் பறக்கையில்) அடிக்கடி நெருப்புப் பொறிகளை வெளியிட்டபடியே ஆகாயத்தில் ஒளிவீசியது. அதே போலவே, எதிரியை நோக்கி பீமசேனன் வீசிய கதாயுதம், (ஆகாயத்தில் இருந்து) கீழே விழும் கடும் எரிக்கோளைப் போல அவனது {பீமனது} எதிரிப் படையை எரித்தது. கதாயுதங்களில் சிறந்தவையான அவை இரண்டும் ஒன்றையொன்று தாக்கியபடி, பெருமூச்சுவிடும் பெண்பாம்புகளுக்கு ஒப்பாக நெருப்பு கீற்றுகளைக் கக்கின.
வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த வலிமைமிக்க அவ்வீரர்கள் இருவரும், தங்கள் நகங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் பெரும் புலிகள் இரண்டைப் போலவோ, தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொள்ளும் வலிமைமிக்க யானைகள் இரண்டைப் போலவோ கதாயுதங்களில் முதன்மையான அவை இரண்டாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். விரைவில் இரத்தத்தால் மறைக்கப்பட்ட அந்தச் சிறப்புவாய்ந்த வீரர்கள் இருவரும் மலர்ந்திருக்கும் இரண்டு பலாச மரங்களுக்கு ஒப்பாகத் தெரிந்தனர்.
மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தரிக்கப்பட்ட கதாயுதங்களின் அடிகள் {தாக்குதல்களின் ஒலி} இந்திரனின் இடியைப் போன்று அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. கதாயுதத்தைக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் தாக்கப்பட்ட பீமன், இடியால் பிளக்கப்படும் மலையைப் போலக் கிஞ்சிற்றும் அசையாது {நடுங்காது} நின்றான். அதேபோல, கதாயுதம் கொண்டு பீமனால் தாக்கப்பட்ட மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்} இடியால் தாக்கப்படும் மலையைப் போலப் பொறுமையாக நின்றான்.
பெரும் வேகம் கொண்ட அவ்விருவரும் உயர்த்தப்பட்ட தங்கள் கதாயுதங்களுடன் நெருக்கமான வட்டங்களில் சுழன்று ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்தனர். விரைவாக ஒருவரையொருவர் அணுகி, எட்டு எட்டுகள் வைத்து, யானைகள் இரண்டைப் போல ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்த அவர்கள் முழுமையாக இரும்பாலான அந்தத் தங்கள் கதாயுதங்களால் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவ்வீரர்கள் இருவரும், அடுத்தவரின் வேகம் மற்றும் தங்கள் கதாயுதங்களின் தாக்குதல் பலம் ஆகியவற்றின் விளைவால் ஒரே சமயத்தில் இந்திரத்வஜங்கள் இரண்டைப் போலக் கீழே விழுந்தனர்.
பிறகு தன் உணர்வுகளை இழந்து, பெருமூச்சுவிட்டபடி களத்தில் கிடந்த சல்லியனை வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் விரைவாக அணுகினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்டு, பாம்பு போலப் புரண்டு கொண்டு, உணர்வுகளை இழந்து மயக்கத்தில் இருந்த அவனைக் {சல்லியனைக்} கண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் கிருதவர்மன், அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} தன் தேரில் ஏற்றி, களத்தை விட்டு அவனை {சல்லியனை} விரைவாகச் சுமந்து சென்றான். குடிகாரனைப் போலச் சுற்றிக் கொண்டிருந்த வலிய கரங்களைக் கொண்ட வீரப் பீமன், கண் இமைக்கும் நேரத்திற்குள், கையில் கதாயுதத்துடன் எழுந்து நின்றான்.
பிறகு, உமது மகன்கள், போரில் இருந்து விலகிய மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கண்டு தங்கள் யானைகள், காலாட்படைவீரர்கள், குதிரைப்படை மற்றும் தேர்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினர். வெற்றியை விரும்பும் பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட உமது படையின் வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போல அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினர்.
திருதராஷ்டிரர்களை வீழ்த்திய வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர். மகிழ்ச்சியால் குதூகலித்த அவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தபடியே தங்கள் சங்குகளை முழக்கினர். மேலும், அவர்கள் தங்கள் மட்டுகங்கள், பேரிகைகள், மிருதங்கங்கள் {பெரிய முரசங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள், நிர்ஜரிகள்} ஆகியவற்றையும் இன்னும் பிற இசைக்கருவிகளையும் முழக்கினர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |